2011/01/07
மோஸ்கி மாமா
வஜ்ரதம்ஷ்ட்ரன் கதை தெரியுமோ? அதைச் சொல்லவேண்டுமென்றால் மோஸ்கி மாமா பற்றிச் சொல்ல வேண்டும். மோஸ்கி மாமா என்றால் வஜ்ரதம்ஷ்ட்ரன் நினைவுக்கு வரும். இன்னும் சிலதும் வரும், ஆனால் வஜ்ர தான் முதல். (புராணம் மறந்த/அறியாதவர்களுக்கு அவசர அறிமுகம்: ராமாயணத்தில் ராமனுக்கு ராவணன், லட்சுமணனுக்கு இந்திரஜித், அங்கதனுக்கு வஜ்ரதம்ஷ்ட்ரன்).
என் குரோம்பேட்டை நாட்களில் மோஸ்கி மாமா ஒரு ஆஸ்தான கேரக்டர். நியூகாலனியின் சர்வோதயா, போர்ட் ஹை ஸ்கூல், கோவில், ராபர்ட் நர்சரி, வாடர் டேங்க், கண்ணன் கடை என்ற பரந்த வட்டாரத்தில் எழுபதுகளின் தொடக்கத்தில் வளர்ந்தவர்களுக்கு மோஸ்கி மாமா தெரிந்திருக்க அதிகச் சாத்தியம் உண்டு. மோஸ்கி மாமா வீட்டுக்கு அடிக்கடி போவோம். குறிப்பாக மழை நாளில் வெளியே பொறுக்கவோ க்ரிகெட் விளையாடவோ லக்ஷ்மிபுரம் வரை ஓடவோ முடியாவிட்டால், மோஸ்கி மாமாதான் கதி.
ஒரு மழைநாளில் அவர் வீட்டில் ஒதுங்கிய போது, "உங்களை ஏன் மாமா மோஸ்கினு கூப்பிடறாங்க?" என்று கேட்டோம். அவர் பதில் சொல்வதற்குள், "நீங்க ரொம்ப மோசமான ஆளுங்கறதனால மோஸ்கினு கூப்பிடறதா எங்கப்பா சொன்னாரு" என்றான் சுந்தர். "உங்கப்பன் தாண்டா மகாதுஷ்டன்" என்பார் மோஸ்கி மாமா.
மோஸ்கி மாமாவுக்கு வேலை வெட்டி கிடையாது. சுந்தர் வீட்டின் போர்ஷனில் தன் மகன் வனமாலியுடன் குடியிருந்தார். சுந்தர் வீட்டிலேயே சாப்பாடு எல்லாம். சுந்தருடைய அப்பாவுக்குச் சொந்த அண்ணா என்றாலும் ஏதோ குடும்பத் தகராறு காரணமாக மோஸ்கி மாமாவை அவருக்குப் பிடிக்காது. அடிக்கடி சண்டை வரும். கன்னா பின்னாவென்று தெருவிலிறங்கிச் சண்டை போடுவார்கள். ஆளுக்காள் முறை மாற்றி அக்குளில் கைவைத்து அழுத்தி 'ப்ற்ப்' என்று ஒலி ஏற்படுத்தி "இந்தாடா இதைக்குடி" என்பார்கள். மோஸ்கி மாமாவை அடிக்கடி வீட்டை விட்டுத் துரத்தப் பார்ப்பார் சுந்தரின் அப்பா. "டேய், இது எங்கப்பன் கட்டின வீடு, எனக்கு பாத்தியதை உண்டு" என்று மோஸ்கி மாமா நகரமாட்டார். நல்ல நாள் பார்த்து மோஸ்கி மாமா ஒரு காரியம் செய்தார். சட்டை வேட்டி எல்லாம் களைந்து விட்டு நடுரோட்டில் நின்றார். சுந்தர் அப்பா ஓடிச்சென்று அவர் காலில் விழுந்து, "மோஸ்கி, வீட்டிலேயே இரு, இனி உன்னைத் தொந்தரவு செய்யவில்லை" என்றுக் கெஞ்சி உள்ளே அழைத்து வந்தார். இது நடந்தது, '71 தீபாவளி என்று நினைக்கிறேன்; கோவிலுக்கு வந்தவர்கள் எல்லாருமே மோஸ்கி தரிசனம் பற்றி ரொம்ப நாள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
மோஸ்கி மாமா அருமையாக வால்மீகி ராமாயணம் கதை சொல்வார். உட்கார வைத்து உபன்யாசம் போல அல்ல. நடித்துக் காட்டுவார். ஒரு கணம் தசரதன் போல் துடிப்பார். அடுத்தது ராமர் போல் மிடுக்காக நடப்பார். மார்பில் காசித்துண்டை போர்த்திக்கொண்டு சீதை போல் நளினமாக நடிப்பார். அனுமன், விஸ்வாமித்ரன், குகன், சூர்ப்பனகை, வாலி, விபீஷணன், ராவணன் என்று அத்தனை கேரக்டர்களையும் மோனோ ஏக்டிங் செய்துகாட்டிக் கதை சொல்வார். நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு ரசிப்போம். நேரம் போவதே தெரியாது. நடிப்பதோடு நிறுத்தாமல் வித்தைகள் செய்வார். ஒரு பொய்க்கத்தியும் சுந்தர் அம்மாவுடைய நெற்றிச்சாந்தையும் வைத்து சூர்ப்பனகை மூக்கு வெட்டுப்படுவதை நடத்துவார். அங்கதன் ரொம்ப பிரபலம் அவரிடம். இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி இரட்டைப் பல்டி அடிப்பார். வஜ்ரதம்ஷ்ட்ரன் தான் பெஸ்ட். மாமாவை டச் பண்ணிக்க முடியாது. ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து வாய்க்குள் அடக்கிக் கொள்வார். பிறகு உதடுகளை விலக்கி 'குஹ்' என்று வாயால் மூச்சு விடுவார். சிகரெட் தணல் அவர் பல்லிடுக்குகளில் இருந்து பரபரவென்று ஜொலிக்கும். நாங்களெல்லாம் பயந்து நடுங்குவோம் என்றாலும் மெய் மறந்து ரசிப்போம். அதனால் வஜ்ரத்ம்ஷ்ட்ர வதம் எங்களுக்கு மிகவும் பிடித்த கதை.
அசோக், மகேந்திரன், நான் மூவரும் போவோம். மகேந்திரனுக்கு சாமி புராணத்தில் எல்லாம் இஷ்டம் இல்லையென்றாலும் சிகரெட் வித்தைகளுக்காக வருவான். சில சமயம் நரசிம்மன் வருவான். மணிவண்ணன் வருவான். எங்களுடன் மோஸ்கி மாமா பையன் மாலியும் அடிக்கடி உட்கார்ந்து கேட்பான்.
மாலி எங்கள் எல்லாரையும் விடப் பெரியவன் என்றாலும் மன வளர்ச்சி குறைவால் சின்னப் பிள்ளை போல் நடந்து கொள்வான். "டேய்! அந்த அசமிஞ்சத்தோட ஏண்டா இப்படி ஒட்டறேள்?" என்று மணிவண்ணணின் அம்மா அடிக்கடி எங்களைத் தட்டிக் கேட்பார். "அப்புறம் நல்ல மார்க் எடுக்குற உனக்கு படிப்பு வராம போயிடும்டா தொரை" என்று பயமுறுத்துவார். எங்களுக்கு மாலி ஒரு பொழுதுபோக்கு, அவ்வளவு தான். அவனுடைய ரிடார்டட் நடத்தை அந்த நாளில் பொழுதுபோக்கு சாதனமாகப் பட்டது. "டேய் மாலி, அந்த மாமியோட பின்னலைப் பிடிச்சு இழுத்துட்டு வா, உனக்கு ரெண்டு கமர்கட் வாங்கித்தரேன்" என்பான் அசோக். அடுத்த கணம் மாமியுடைய கூச்சல் கேட்கும், மாலி அவ்வளவு வேகம். உருப்படாத காரியங்கள் எல்லாவற்றுக்கும் எங்களுக்கு மாலி தேவைப்படுவான். பதிலுக்கு க்ரிகெட் ஆட்ட முடிவில் ஒரே ஒரு ஓவர் பேடிங் பௌலிங் செய்ய அனுமதிப்போம். நன்றியோடு நடப்பான். மாலி எங்களைப் போட்டுக் கொடுத்து விடுவானோ என்று பயந்து, அவனை வீட்டில் விடும் போது மட்டும், ஐந்து பைசாவுக்கு 'காபி டாபி' என்று காபி சுவையோடு ஒரு சாக்லெட் கிடைக்கும், அதை வாங்கிக் கொடுப்போம். எல்லாவற்றையும் மறந்து விடுவான். சாக்லெட் மட்டும்தான் அவனுக்கு நினைவிருக்கும்.
காரணம், மோஸ்கி மாமாவுக்கு மாலியென்றால் உயிர். "என் பிள்ளை சாக்ஷாத் மகாவிஷ்ணுடா. அவனை யாராவது ஏதாவது சொன்னா நானே வதம் பண்ணிடுவேன்" என்பார். மாலியை அப்படிக் கவனிப்பார் மோஸ்கி. கண்ணன் கடையில் கடன் வாங்கிக் கடலை உருண்டை பாகெட் பாகெட்டாக வாங்கிக் கொடுப்பார். சுந்தர் அம்மாவிடம் திட்டு வாங்கிக் கொண்டு தினமும் மாலிக்கு ஒன்றிரண்டு ஸ்பூன் நெய் அதிகமாக ஊற்றி சாப்பாட்டை ஊட்டி விடுவார். வளர்ந்தப் பிள்ளையைத் தாலாட்டுப் பாடித் தூங்க வைப்பார். எங்களுக்குச் சிரிப்பாக வரும்.மாலி பள்ளிக்கூடம் போகவில்லை. சர்வோதயாவில் சேர்த்தார்களாம். நடு வகுப்பில் ஒன்றுக்கு போய் அந்த நீரில் குதித்து விளையாடினான் என்று அவனை வீட்டுக்குத் துரத்திவிட்டார்களாம். மோஸ்கி மாமா அவனுக்கு எழுதப் படிக்கச் சொல்லிக்கொடுப்பார். சிலசமயம் என்னிடம் வருவார். "டேய், ஏதோ பொழைப்புக்கு அவனுக்குக் கொஞ்சம் கூட்டல் கழித்தல் இங்க்லிஷ் சொல்லிக் கொடுறா. புண்ணியமா போகும்" என்று கெஞ்சிக் கேட்பார். மாலி எங்கள் வீட்டுக்குள் வர அனுமதியில்லை. "பொண்கள் இருக்குற வீடு, இந்த மாதிரி பிச்சுலுவையெல்லாம் உள்ளே கூட்டிண்டு வராதே, சொல்லிட்டேன்" என்று கறார். என் அம்மாவுக்குத் தெரியாமல் மாலிக்கு அவ்வப்போது கணக்கும் ஆங்கிலமும் பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். மாலிக்குப் பிறகு வருகிறேன்.
ராம-ராவண யுத்தத்தில் வஜ்ரதம்ஷ்ட்ர வதம் சுவையானது (என்பார் மோஸ்கி). எங்களைப் பொறுத்தவரை அதுதான் ராம-ராவண யுத்தம். வஜ்ர வதம் முடிந்ததும் எல்லாம் சுபம். ராவணன் சார்பில் வஜ்ரதம்ஷ்ட்ரன் ராம சேனையை நாசம் செய்யும் பொழுது அங்கதன் ஆவேசம் வந்து, வஜ்ரதம்ஷ்ட்ரனின் கழுத்தில் ராவணன் போட்ட சக்தி மாலையை அறுத்தெறிந்தது வதம் செய்தான் என்பது சுருக்கம். அதை மோஸ்கி மாமா சொல்வது அபாரமாக இருக்கும். புரண்டும் ஒருவர் மேல் ஒருவர் ஏறியும் மார்பைத் தலையால் முட்டியும் கழுத்தைத் திருகியும் பலவிதமாகச் சண்டை போட்டார்கள் என்று நடித்துக் காட்டுவார்.
அரைவருடப் பரீட்சைகள் ரத்தாகின. பள்ளிக்கூடம் இல்லை. ராஜாஜி இறந்த வாரம் என்று துக்கம். என்ன செய்வதென்று தோன்றாமல் மோஸ்கி மாமா வீட்டுக்குப் போனோம். நான், அசோக், சுந்தர் மூன்று பேர். கதவருகே போனோம், உள்ளிருந்து ஒரே ஓசை. ஒருவரையொருவர் அடித்துக் கொள்வது போலவோ அழுவது போலவோ முனகலும் உறுமலும் கேட்டது. மாலி வெளியே உட்கார்ந்திருந்தான். "என்னடா?" என்றோம். "அப்பா வேலையா இருக்கார்" என்றான். "உங்கப்பாவை யாரோ உதைக்கறாங்கடா, வாடா போய் காப்பாத்தலாம்" என்று அசோக் சொன்னதும், கடகடவென்று கதவைத் திறந்துவிட்டான் மாலி. உள்ளே மோஸ்கி மாமாவும் சுந்தர் வீட்டு வேலைக்காரியும் ஆடையில்லாமல் கிடந்தார்கள். மோஸ்கி மாமா நெஞ்சில் அவள் உட்கார்ந்திருந்தாள். அவள் கழுத்தில் பளபளவென்று சங்கிலி. மோஸ்கி மாமா எங்களைப் பார்த்து, "வாங்கடா பசங்களா... வஜ்ரதம்ஷ்ட்ர வதம் பண்ணிக்காட்டறேன். நான் அங்கதன், இவ வஜ்ரதம்ஷ்ட்ரன்" என்றார் சாதாரணமாக. அந்தப் பெண் ஓடிவிட்டாள்.
அந்தச் சம்பவம் பற்றி மோஸ்கி மாமா கவலைப்படவேயில்லை. நாங்கள் மட்டும் தனியாகக் கிசுகிசுப்போம். மாலியைக் கிண்டல் செய்வோம். அவன் புரியாமல் விழிப்பான். அடுத்த மாதங்களில் ஒரு நாள் சுந்தர் வீட்டுக்குப் போலீஸ் வந்தது. மோஸ்கி மாமா நகை திருடினார் என்று பிடித்துவிட்டார்கள். நாங்கள் வேடிக்கை பார்க்கப் போயிருந்தோம். சுந்தர் அப்பா ஒரு நகையைக் காட்டிப் பேசிக்கொண்டிருந்தார். திடீரென்று எங்களிடம் வந்து, "டேய் பசங்களா! இந்த நகையை மோஸ்கி கைல பாத்தீங்க இல்லே? உண்மையச் சொல்லுங்கடா" என்று அதட்டினார். வேலைக்காரி கழுத்தில் பார்த்த அதே சங்கிலி. நாங்கள் போலீசுக்குப் பயந்து தலையசைத்தோம்.
பிறகு என்ன ஆனதென்று தெரியாது, மோஸ்கி மாமா ஜெயிலுக்கெல்லாம் போகவில்லை. ஆனால் வீட்டைக் காலி செய்து கொண்டு மாலியுடன் போய்விட்டார். "எங்கப்பா வஞ்சம் வச்சுப் பழி வாங்கிட்டார்டா" என்பான் சுந்தர். மோஸ்கி மாமாவை அதற்குப் பிறகு பார்க்கவில்லை. எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இது நடந்தது '72 அல்லது '73 என்று நினைக்கிறேன்.
    சென்ற வருடத் தொடக்கத்தில் கோவிந்தபுரத்தில் என் அம்மாவுடன் பத்து நாள் தங்கிவிட்டு அதிகாலையில் குரோம்பேட்டை பஸ் ஸ்டேன்டில் இறங்கினேன். அந்த நாளில் ஒரு பெரிய மரம் இருக்கும், ரயில்வே ஸ்டேசன் எதிரில். அதனடியில் நிற்போம். அதான் பஸ் ஸ்டேன்ட். வெயிலோ மழையோ அதிகமானால் பின்னால் இருந்த தபாலாபீஸ் கட்டிடத்துக்குள் தஞ்சமாவோம். இப்போது குரோம்பேட்டை பஸ் ஸ்டேன்ட் அடையாளமே தெரியவில்லை. கூரையும் விளக்கும் அமோகமாக இருக்கிறது. காலை நாலரை மணிக்கே கணிசமானக் கூட்டம். பஸ்சிலிருந்து இறங்கியதுமே வரிசையாக ஆட்டோ. அமர்க்கள வசதி! அசந்து போனேன். நடந்து போகலாம் என்று நினைத்து முதல் ஆட்டோவை ஒதுங்கி வழி விட்டபோது, "ஏறுங்க சார், மொதல் வாடிக்கை" என்றார், சுத்தமாக இருந்த டிரைவர். பளிச்சென்ற பேன்ட் ஷர்ட். வெளியில் தெரிந்த தங்கம் பதித்த ருத்திராட்ச மாலை. நெற்றியில் குங்குமப் பொட்டு.
போகட்டும் என்று ஏறி அமர்ந்தேன். சுத்தமாக இருந்தது ஆட்டோ. 'நாக்கிலே நந்தவனம், நெஞ்சிலே நெருஞ்சி முள்', 'கடவுள் காதலித்தால் புராணம், மனிதன் காதலித்தால் மயானம்' போன்ற ஆழ்ந்தத் தத்துவ வாசகங்கள் எதுவும் இல்லை. பின்புற ஸ்பீக்கரில் காதிலேயே விழாது போல் மென்மையாக ஏதோ பாட்டு. கவனித்துக் கேட்டால் எம்.எஸ்! மிதமான ஊதுபத்தி மணம். ஒரே ஒரு போட்டோ. போட்டோவைப் பார்த்ததும் வயிற்றைக் கயிறு போட்டுச் சுருக்கி இழுத்தது போல் உணர்ந்தேன். போட்டோவின் கீழே ஒரு வாசகம். டிரைவரைப் பார்த்தேன். அமைதியாக இருந்தார். "போட்டோல யாருங்க?" என்றேன். "எங்கப்பா சார்" என்றார். இறங்கும் பொழுது, ஏனோ தெரியவில்லை, அதிகமாக டிப் செய்தேன். "ரொம்ப தேங்க்ஸ்" என்றவரிடம், "என்னைத் தெரியுதா?" என்றேன். "இல்லிங்களே.." என்று இழுத்தார். சொல்ல வாயெடுத்து, பேச்சு மாற்றினேன். "இல்ல, உங்களை எங்கியோ பாத்த மாதிரி இருந்துச்சு, அதான்" என்றேன்.
வீட்டுக்குள் வந்து, தங்கையிடம் விவரம் சொன்னேன். "ஆமாண்டா, அதையெல்லாம் இன்னும் யார் ஞாபகம் வச்சிருக்கப் போறா.. வேறே வேலையில்லே, அதுக்காக இவ்ளோ டிப்பா கொடுப்பாங்க? அமெரிகாலந்து வந்தாலே உங்களுக்கெல்லாம் தலைகால் புரியல.. காசைக் கன்னாபின்னானு கொடுக்கறீங்க, எங்க கிட்டயும் அதையே எதிர்பார்க்கறாங்க.." என்று புலம்பத் தொடங்கினாள்.
அவளுக்குப் புரியாது. எனக்கே இருபது வருடமோ என்னவோ கழித்துத்தான் புரிந்தது.
ஒரு வேண்டுகோள்: குரோம்பேட்டையில் அந்த ஆட்டோவில் பயணம் செய்தால் ஒரு ரூபாயோ பத்து ரூபாயோ முடிந்ததைக் கூடுதலாகக் கொடுங்களேன். அடையாளம் சொல்லத் தெரியவில்லை. சுத்தமான ஆட்டோ. "தந்தை சொல் மிக்க மந்திரமில்லை" என்று, ஒரு பழுப்பேறிய தந்தை-மகன் போட்டோவின் கீழே எழுதியிருக்கும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அப்படியா...அட...பார்க்கிறேன்...
பதிலளிநீக்குவஜ்ரத்ம்ஷ்டரன் யாரு? கேள்விப்பட்டதில்லையே. மோஸ்கி மாமாவும், வனமாலியும் நினைவில் நிற்பார்கள்.
பதிலளிநீக்குமோஸ்கி மாமா ....கேரக்டர் கதை -நிச்சயமான உண்மைக் கதையாகவே படவைக்கிறது.... உங்கள் நினைவாற்றலுக்கு நன்றி ( சுஜாதா சொல்வது போல் ``ஜகத்தலப் பிரதாபன் பார்த்தது நன்றாக நினைவிருக்கிறது...நேற்று பார்த்த படையப்பா விரல் சொடுக்கும் நாயகியின் பெயர் மறந்துவிடுகிறது)
பதிலளிநீக்குமோஸ்கி- மாலி பாசம் உருக வைக்கிறது...அவனுக்கு கணக்கு சொல்லிக் குடுத்த புண்ணியம் உங்களோடு ரொம்ப நாளைக்கு இருக்கும்...
சமிபத்தில் ஒரு வருடம் குரோம்பேட்டைஅருகில் சிட்லபாக்கத்தில் இருந்தேன் ...அதனால குரோம்பேட்டை விவரங்கள் கூடுதல் இனிமையை தந்தது
நிச்சயம் அந்த ஆட்டோ டிரைவரை பார்க்க பார்க்கிறேன் மாலி தானே அது....
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குவஜ்ரதம்ஸ்ட்ர வதம் கேள்விப்படாதது. ரொம்ப அழகாய் இருக்கிறது நீங்கள் கதை சொல்லும்பாங்கு.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம், geetha santhanam, பத்மநாபன், சிவகுமாரன், ...
பதிலளிநீக்குவ்ஜரதம்ஷ்ட்ரன் சினிமா எக்ஸ்ட்ரா போல. ராமாயணத்தில் ராமனுக்கு ராவணன், லட்சுமணனுக்கு இந்திரஜித், இந்த இரண்டும் சரி. அனுமார் எடுபிடி என்றாலும் அப்படி இப்படி பாலம் கட்டினேன், மலையைப் பிடுங்கினேன் என்று அவருக்கும் நிலையான இடம். இதர வானரங்களுக்கு ஏதாவது பயனுள்ள சண்டைக்காட்சி வேண்டாமா? அதனால் டைடில் கார்ட் கிடைக்கும் வானரங்களுக்கெல்லாம் ஒரு மேட்சிங்க் ராட்சச வதம் இருக்கிறது - வால்மீகி ராமாயணத்தில். ராஜாஜி எழுதியதில் இருக்கிறதா மறந்து விட்டது. வஜ்ர வதம் வால்மீகி ராமாயணத்தில் இருக்கிறது அசலாய். மோஸ்கி மாமா பூ சுற்றவில்லை. அங்கதனும் வஜ்ரனும் காட்டுத்தனமாகச் சண்டை போட்ட விவரங்கள் வா.ராவில் படிக்கலாம். பெரியவங்களுக்கே பயமா இருக்கும் விவரெமெல்லாம்.
பதிலளிநீக்குரிடார்டட் குழந்தையை வளர்த்த அந்தப் பெரியவருக்கு நமஸ்காரங்கள்.
பதிலளிநீக்கு70களில் அந்தக் குழந்தைகளுக்கு வழிவகைகள் இல்லாமல் போய்விட்டதோ என்னவோ:(
அப்போ கணக்குப்படி இப்ப மாலிக்கு 50 வயதாவ்து இருக்குமில்லையா.
இதற்காகவது குரோம்பேட்டை போக நினைக்கிறேன். எங்க அம்மாவின் ஒன்றுவிட்ட சகோதரர் குரோம்பேட்டையில் வீடு கட்டி வசித்து வருகிறார் என்று நினைக்கிறேன். ஹிண்டுவில் வேலையாக இருந்தார்.கிச்சன் என்னும் கிருஷ்ணசாமி. 70 வயது இருக்கலாம்.
வாங்க வல்லிசிம்ஹன்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது சரி. மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு அந்நாளில் வழிவகைகள் இருந்தாலும் மோஸ்கி மாமாவுக்கு தெரிந்திருக்க வழியில்லை; மருத்துவம் தர வசதியுமில்லை என்று நினைக்கிறேன். வளர்ந்த பெரியவர்கள் கூட அசமிஞ்சம் அரைலூசு என்று சொல்லும் பொழுது பிள்ளைகளும் அதையே எடுத்துக்கொள்கிறார்கள். பெரியவர்களைக் குற்றம் சொல்லவில்லை, மாலியை நாங்கள் செய்த abuseகளுக்கு; இருந்தாலும் மோஸ்கி மாமாவைத் தவிர எவருமே எங்களைத் தடுத்த நினைவில்லை. எனக்கென்னவோ எங்களை விட மூத்தவர்கள், மாலியை இன்னும் வக்கிரமாக abuse செய்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது.
இன்றைய மாலியின் முகத்தில் ஒளியில்லா விட்டாலும் களை இருப்பது ஆறுதலாக இருந்தது.
வல்லிசிம்ஹன்.. குரோம்பேட்டை கனெக்சன் இல்லாதவங்க யாருமில்லை (!). உங்கள் ஒன்றுவிட்ட சகோதரர் எழுபதுகளில் நியூகாலனியில் இருந்தார் என்றால் எனக்குத் தெரிந்திருக்கும் வாய்ப்புண்டு. எங்கள் பிளாக் kggக்கும் தெரிந்திருக்கலாம்.
பதிலளிநீக்குஉங்கள் எண்ணமே உதவி தான்.
குரோம்பேட்டை போனீங்கன்னா அங்கே ஒரு புது சைவ உணவகம் வந்திருக்குனு ஜவஹர் அவரோட பிலாக்ல பிரமாதமா எழுதியிருந்தார்.. அதையும் கவனிச்சுட்டு வாங்க. (இட்லி வடை பொங்கலை என்ன வித்தியாசமா செஞ்சுட முடியும்னு தோணும் - sometimes i am surprised)
அருமையான கதை எழுதிய பாங்கும்!!!
பதிலளிநீக்குதமிழ் மணம் நட்சத்திரப் பதிவு மனதை என்னவோ செய்துவிட்டது. மோஸ்கி மாமாவும் மாலியும் நினைவில் என்றும் இருப்பார்கள்!
பதிலளிநீக்குNiiiiice.
பதிலளிநீக்கு