2014/08/23

அரைவாளி சிந்தனைகள்


    மீபத்தில் "அனியாயத்துக்கு திமிர் பிடிச்சவரு நீங்க" என்றார் என்னிடம் ஒருவர். பழக்கமானவர் என்றாலும் நெருங்கியவர் அல்ல. நான் அவரைப் பொருட்படுத்தாமல் என் வேலையில் கவனமாக இருந்தேன்.

"ஏன் அப்படி சொல்றீங்க?" என்று நான் பதிலுக்குக் கேட்காததால் அவருக்கு இன்னும் கோபம் வந்துவிட்டது. "பாத்தீங்களா, திமிர் பிடிச்சவன்னு சொன்னது சரியா இருக்கு. ஏன் அப்படி சொல்றேன்னு தெரிஞ்சுக்கக் கூட உங்களுக்கு இஷ்டமில்லை" என்றார் மறுபடி.

"தெரிஞ்சுகிட்டு நான் என்னங்க செய்யப் போறேன்? என்னைத் திமிர் பிடிச்சவன்னோ வேறு விதமாவோ நினைக்க உங்களுக்கு இருக்குற உரிமையை நீங்க பயன்படுத்திக்கிறீங்க அவ்வளவு தானே?" என்றேன். "என்னைப் பத்தி நீங்க ஏன் அப்படி நினைக்கறீங்கனு நான் தெரிஞ்சுகிட்டா பிறகு அப்படித்தான் அல்லது அப்படியில்லைனு ஒரு வாதம் செய்யணும். மறுபடி திமிர் பிடிச்சவன்னு தொடங்கிடுவீங்க. அதுக்குப் பதிலா உங்க அபிப்பிராயத்துக்கான உங்க உரிமையை நான் மதிக்கிறேன்னு வச்சுக்குங்க. உங்க மட்டுல திமிர் பிடிச்சவனாகவே இருந்துட்டுப் போறேன். அதனால தப்பில்லையே?"

"அதெப்படி? உங்க திமிர்னால எனக்கும் என் மாதிரி மத்த பேருங்களுக்கும் கஷ்டமா இருக்கே?"

"எப்படினு கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா?" என்று கேட்டுச் சில வாரங்களாகின்றன. "என்னமோ நீங்க தான் புத்திசாலி மாதிரியும் நாங்கள்ளாம் ஆட்டு மந்தைங்க போலவும்.." என்று ஏதோ முணுத்துவிட்டுப் போனாரே தவிர, இதுவரை அவர் விளக்கம் சொல்லவில்லை. நான் கவலைப்படவும் இல்லை. நான் கவலைப்படுவதில்லை என்பதில் அவருக்கு இன்னும் கடுப்பு. விடுங்கள்.

அறிவாளி என்ற கர்வம் எனக்குண்டு. அந்தக் கர்வம் அவசியமும் கூட என்று நினைக்கிறேன்.

அறிவாளி கர்வம் என்பது வெளிப்பார்வைக்கு ஒரு பாசாங்கான தோற்றம் தானே தவிர, இதன் உள் வீச்சையும் பயனையும் அறிவாளிகளே அறிவர். கர்வம் இல்லையெனில் என் கதி அதோகதியாகியிருக்கும். 'வாழ்க்கையில் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க எது தேவை?' என்ற கேள்வி என்னிடம் (என் போல் பலரிடம்) பலமுறை கேட்கப்பட்டிருக்கிறது. படிப்பு, பணம், நல்ல கணவன்/மனைவி, நல்ல பிள்ளைகள், குடும்பம், போதும் என்ற மனம், உழைத்துப் பிழைக்கும் பக்குவம், மனசாட்சி, நேர்மை என்று நிறைய பதில்கள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. என்னைக் கேட்டால் இவையெதுவும் வாழ்வில் மகிழ்ச்சியைத் தராது என்று சொல்வேன். மகிழ்ச்சியும் நிம்மதியும் உள்நோக்கியவை. உள்ளிருந்து பெறவேண்டியவற்றை வெளியில் தேடினால் பலனிலாது போகலாம்..

மகிழ்ச்சி நிம்மதி இவையில்லையென்றால் நாமும் துன்பபடுகிறோம், நம்மைச் சுற்றியிருப்பவரையும் துன்பப்படுத்துகிறோம். எத்தனை பேரை நான் துன்பப்படுத்தியிருக்கிறேன் என்பதை விட, என் செயல்களால் என்னை நான் எத்தனை துன்பங்களுக்கு ஆளாக்கியிருக்கிறேன் என்பது இன்னும் முக்கியமானதாகிறது. இதைச் சுயநலம் என்று சிலர் சொல்வார்கள். சற்று சிந்திப்போம். உங்களைத் துன்பப்படுத்தினால் நான் உடனடியாகவோ தாமதித்தோ மன்னிப்பு கேட்கலாம்; நீங்கள் என்னை மன்னிக்கலாம், மன்னிக்காது போகலாம். மண்டையில் ரெண்டு போடலாம். over. ஆனால் உங்களைத் துன்பப்படுத்திய நினைவை நான் சாகும் வரை சுமக்க வேண்டும். மன்னிப்பு கிடைத்தாலும் மண்டையில் கிடைத்தாலும் இதே கதை, இல்லையா? எத்தனை சுமக்கிறோம் என்பது நமக்கு மட்டுமே தெரியும் என்ற நிலையில் இதன் தீவிர பாதிப்பு விளக்கங்களுக்குட்பட்டதென என்னால் கருதமுடியவில்லை.

நான் மகிழ்ச்சியாக இருக்க இரண்டு நம்பிக்கைகள் அல்லது காரணங்கள் - நான் அறிவாளி என்பது முதலாவது. எதையும் நேசிப்பவன் என்பது இரண்டாவது. இரண்டையும் கலந்தால் ஒருவித சுயதர்மம் வெளிப்படும் என்பது எனக்குப் புரிந்த போது இருபத்தைந்து வயதைக் கடந்திருந்தேன்.

அறிவாளி என்று உணர்வில் உண்மையில் ஆணவம் கிடையாது என்று நம்புகிறேன். உணர்வதால் உண்டாகக் கூடிய வெளித்தீமைகளை விட, உணரத் தவறுவதால் விளையும் உட்தீமைகள் கொடூரமானவை, பயம், தன்னம்பிக்கையின்மை, தாழ்வு மனப்பாங்கு, எதற்கும் பணிந்து போகும் கொடூரம், பேதமை - இவை தவிர கண்மூடித்தனம், என்ன சொல்கிறோம் செய்கிறோம் என்று தெரியாமல் நடப்பது, அடுத்தவர்களின் மதிப்பை இழப்பது, தினசரி சோகம், வருத்தம், அழுத்தம், தற்கொலை மனப்பாங்கு - யாராவது என்னைத் தடுங்களேன், இல்லையெனில் இந்த வரிசை தொடரும் ஆபத்து இருக்கிறது.

நமக்கு அறிவு இருக்கிறது என்ற ஒரு சிறிய உணர்வினால் மேற்சொன்ன அத்தனை தீங்குகளும் மறையுமா? மறையும். மறையும். நிச்சயம் மறையும். அறிவுள்ளவராக நடந்து கொள்கிறோமா என்பது வேறு விஷயம். 'அறிவில்லாமல் நடந்து கொண்டதேயில்லையா?' என்று கேட்காதீர்கள். அடிக்கடி நடந்து கொள்கிறேன். இப்போதும் சில நேரம் 'நானா அப்படி செய்தேன்?' என்று என் முட்டாள்தனத்தை எண்ணி வருந்துவதுண்டு. ஆனால் ஒட்டு மொத்தப் பார்வையில் என் நேர்மைக்கும் நிம்மதிக்கும் மிக முக்கியமான காரணம் என் அறிவு என்பதை என்னால் மறுக்க முடியாது. என்னை விடச் சிறந்த அறிவாளிகள் உண்டு என்ற அங்கீகாரமும் அந்த அறிவில் அடக்கம்.

நேசிப்பதால் நாம் குறைந்து விடுவதில்லை. நமக்கு ஒரு இழப்பும் இல்லை. அன்பும் நேசமும் சுலபமாக வரக்கூடியது. 'யாரையும் எதையும் நேசிக்கப் பழகு' என்பதன் சூட்சுமம் புரிய அறிவு வேண்டும். ஹி. அதான் சிக்கல். நான் இயல்பில் நேசிப்பவன். அதற்காக எதிரிகள் இல்லையா என்று கேட்காதீர்கள். இருக்கிறார்கள். இருப்பார்கள். இருந்துவிட்டுப் போகட்டுமே? எதிரி என்பது கூட்டுறவு என்பார் என் ஆசிரிய நண்பர். 'என்னங்க இது, கூட்டுறவுனா ஒற்றுமையில்லையா?' என்பாள் என் தோழி. இருவருமே செத்து வருடங்களாகின்றன, விடுங்கள். எனக்கே ஆணவம் என்றால் என் ஆசிரியருக்குக் கேட்க வேண்டுமா? 'கூட்டுறவுனா கூட்டுறவின் விளைவு. இது கூடத் தெரியலின்னா நீங்கள்ளாம் அறிவாளிங்கனு சொல்லிக்கிட்டு என்ன பலன்?' என்று எங்கள் காலை வாரிவிடுவார்.

எனக்கொன்றும் புரியாமல் இல்லை. எதிரி என்பது இரு தரப்பினரும் சேர்ந்து எண்ணுவதால் உருவாவது. நான் உங்கள் எதிரியல்ல என்று நான் நினைக்கலாம். ஆனால் நான் உங்கள் எதிரி என்று நீங்கள் நினைத்தால் என்ன செய்வது? சொல்லிப் பார்க்கலாம். சற்று புரிய வைக்க முயற்சிக்கலாம். ஆனால் உங்கள் எண்ணைத்தை என்னால் எப்படி மாற்ற முடியும்? உங்கள் பார்வையில் நான் எதிரியாகவே இருந்துவிட்டுப் போகிறேன் என்று விடவேண்டியது தான். என் மட்டில் உங்களை நேசிப்பதோடு அல்லது நேசிப்பதை நிறுத்திக் கொள்வதோடு ஒதுங்க வேண்டியது தான். இதில் திமிர் இல்லை. உங்களுக்கு என்னைப் பிடிக்க வேண்டும் என்ற வட்டத்தைச் சுற்றிச் சுற்றி வருவதால் எனக்கும் பலனில்லை. உங்களுக்கும் பலனில்லை. வெவ்வேறு orbitகளில் பயணம் செய்யும் கோள்கள் நாம். that's it. அதை உணர்ந்து கொண்டால் உடனடித் தெளிவு.

ஆக, அறிவும் நேயமும் இருந்தால் நிம்மதியும் மகிழ்ச்சியும் உத்தரவாதம்.

எதற்கு இப்படி இழுக்கிறேன்?

போன வாரம் ஒரு முக்கியமான கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியிருந்தது. கேட்டவள் என் மகள். கேட்ட கேள்வி: how to find happiness in life?

தோளுக்கு மேல் வளர்ந்த தோழி என்பதால் மகளுடன் நிறைய விஷயங்களைப் பேச முடிகிறது. என் பெண் சற்று intellectual type. socratesலிருந்து jason mraz ஒபாமா jimmie fallon வரை நிறைய பேசினோம். திடீரென்று மேற் சொன்ன கேள்வியைக் கேட்டாள். அவளுக்குத் தெரிய வேண்டும் என்று அறிவிக்க ஒரு பதிலைச் சொல்வதா, எனக்குத் தெரியும் என்பதை அறிவிக்க ஒரு பதிலைச் சொல்வதா? சற்றுத் தயங்கி, 'be smart. be kind. you will find out' என்றேன், பதிலுக்கு.

'what does being smart got to do with happiness? i don't get it' என்றாள்.

'you will. sooner than you think' என்றேன்.

வீடு திரும்பியதும் "எனக்கு ஒரு mac வேணும்" என்றான் மகன்.

"இப்ப வாங்கித் தர முடியாது" என்றேன்.

"அக்காவுக்கு மட்டும் ஹை ஸ்கூல் போறப்ப தனி லேப்டாப் வாங்கிக் கொடுத்தியே?"

"ஒரு தடவை செஞ்ச தப்பை இன்னொரு தடவை செய்யணுமா என்ன?"

மகன் உடனே மகளைக் கூப்பிட்டு, "dad says you are the first mistake he made!" என்றான்.

"ஹேய்.. நான் எங்கடா அப்படிச் சொன்னேன்?". ..hmm. இவன் என்னை விட அறிவாளி என்று ஒதுங்கிவிட வேண்டியது தான்.

பொழுது போகவில்லை. அறிவாளி சிந்தனைகள் போதும் சிறிது அரைவாளிக்கும் ஈயவெண்ணி எந்தப் பூனையைப் பிடிக்கலாமென்ற கேள்வியுடன் கணினி முன் அமர்ந்தேன். வெளியே இடி மின்னல் மழை. நாய் இரண்டும் இடிக்குப் பயந்து என் காலைச் சுற்றி உட்கார்ந்தன. நகரவில்லை. சரி, யுட்யூபில் வாத்யார் படம் பார்க்கலாம் என்று தட்டினேன். திறந்தது. கேளாமலே கிடைத்தது... ஆச்சரியம்.2014/08/09

லுக்ரீசின் சாபம்[அறிமுகம்]     [1]     [2-5]     [6-15]     [16-18]     [19-25]    லுக்ரீசின் சாபம் [19-25]

19
தடுத்தான் கொலாடின்.
'நில்லுங்கள் ராஜாவே!13 என்றன்
சொல் கேளுங்கள் சற்று!' என்றான்.

மனைவியரைக் காணும் மயக்கம் பலருக்கு. அவரை
மறைவினில் காணும் தயக்கம் சிலருக்கு.
ஊர்நிலம் திரும்பும் உவகை பலருக்கு. கொலாடின் போல்
போர்நிலம் மறக்கும் கலக்கம் சிலருக்கு.

'அரசே! ஆழ்ந்த நட்பின் இலக்கணமே!' என
முரசொலிக்கும் குரல் தணித்து அழைத்தான் கொலாடின்.
'சுற்றிவந்த பகைவர் சோர்ந்தடங்கி நாம் தேடும்
வெற்றிக்கனி கையில் விழும் நேரம். விரைவில்
தங்கநகர்14 வென்றச் சிங்கமென வேடமின்றி
மங்கையரை காண முகங்காட்டிப் போகலாமே?'.

'கலங்காதே கொலாடின்' என்றான் செஸ்டஸ்.
'வெற்றிப்பெண் இடையினில் என் கைகள்
சுற்றித்தான் நாட்கள் பலவானதே? வெற்றுக்
கலவரம் இவையடங்க நாளாகும். அதுவரையில்
புலனடக்கும் கவலையில் முடங்கிப் பயனில்லை.
உம்மகளிர் அனைவரும் உம்மைப் போல் நன்கு
தம்புலன் அடக்கினரா தெரிய வேண்டாம்? நீர் சொன்ன
ஒழுக்கமும் அழகும் உண்மையா அறிய வேண்டாம்?
விழுப்பத்தின் விவரத்தை நேரில் காண வேண்டாம்?
கற்புக்கு அரசிகளா அவர்கள் காமத்தின் அரசிகளா?
சொற்குற்றம் காணாது பொருள் மட்டும் தெளிந்து வருவோம்'.

மனைவியரை நேசித்த மாந்தரும் மன்னன் சொல் கேட்டு
வினையானதோ தனிமை என்று வேண்டாத சந்தேகம் கொண்டு
ஆமென்றனர். அரசர் சொல்படி கொலாடினை வேடம் பூண்டுப்
போமென்றனர். தாமும் புறப்பட்டனர்.

மனங்கலங்கினான் கொலாடின்.
மன்னனோ விடவில்லை.
'புலம்பெயர்ந்தார் படைத்தலைவர் என்பதை
அரிதியா சேனை அறியாது. நாமும்
இரவோடிருளினில் திரும்பிடுவோம்.
மாறு வேடத்தில் நாம் போவது
வேறு யாருக்குத் தெரியப் போகிறது?'
தேவையின்றிக் குரலுயர்த்திக் கூறியதைக் கேட்டுச்
சேவைக்குழுச் சிற்றாள் ஒற்றன் ஒருவன்
மெள்ள விலகியதைக் கண்டு மனதுள்
கள்ளமாய்ச் சிரித்துக் கொண்டான் செஸ்டஸ்.

மறுத்தான் கொலாடின்.
'மன்னியுங்கள் மன்னா!' என்றான்.
'பகைவர் எழும் பயமில்லை எனக்கு. எம் வீரர்
பகையழிக்கவென்றே பிறந்தவராம்.
ஊர் செல்லும் காரணம் தான் எனக்குப்
பேர் சொல்லும் காரணியாய்த் தோன்றவில்லை.
என் மனைவியின் மேல் எனக்கு நேசம் உண்டு. அதைவிட
என் மனைவியின் மேல் எனக்கு நம்பிக்கை உண்டு.
லுக்ரீசின் அழகு உண்மை. எனில்
லுக்ரீசின் ஒழுக்கம் உண்மைக்கும் மேல்.
இனியவள் அகத்தை சந்தேகித்தால்
இனியவள் முகத்தை எப்படிக் காண்பேன்?
நெஞ்சில் என்னை வைத்திருக்கு மட்டும் என் லுக்ரீஸ்
கொஞ்சமும் தயங்காமல் சொல்வேன் என் லுக்ரீஸ்
வஞ்சிக்கமாட்டாள் என்னை. அவளைக்
கிஞ்சித்தும் சந்தேகித்தால் நான் அன்றோ துரோகி? எனவே
வீரருடன் தங்க அனுமதியுங்கள் என்னை. லுக்ரீஸைக் கண்டால்
தீராத என்னன்பைச் சொல்லுங்கள். நகருள் நீர் துணிந்து
பேருவகை பெற்றுப் பொழுதோடு வாருங்கள்' என்றான் பணிந்து.

உளமாற விடைகொடுத்த வீரத்
தளபதியை விட்டு செஸ்டசுடன்
பகை வென்றப் படைவீரர் பன்னிருவர்
நகை வியாபாரி போல் வேடம் பூண்டு
அரிதியா எல்லை கடந்தனர்
ரோம் நகருள் நடந்தனர்.

20
இரவின் போர்வையில் எத்தனை மூடல்கள்!
விழிப்பு அங்கே உறங்கினாலும்
உறக்கம் அங்கே விழித்துக் கொண்டிருந்தது.
உறங்கும் போது நரகமாகிறதா நகரம்?
விழிக்கும் போது நகரமாகிறதா நரகம்?
இயற்கை ஒளியில் மறைக்கப்படும் பாவம்
செயற்கை ஒளியில் நியாயமாகும் மாயம்.
பொது விளக்குகளின் ஜாலம். மதுக் கடைகளில்
எது ஒளி என்று இனம் அறியாக் கோலம்.
மதுவா?
மங்கையா?
பொய்யறிவா?
மெய்யறிவா?
அனுபவமா?
அறிவா?
சுகமா?
ஞானமா?
தட்டுங்கள் திறக்கப்படும். இங்கே எதுவும்
கேளுங்கள் தரப்படும்.
விற்கக் கூடாதவை விற்கப்படும்
வாங்கக் கூடாதவை வாங்கப்படும்
விற்கக் கூடாதவை வாங்கப்படும்
வாங்கக் கூடாதவை விற்கப்படும்.
ஒளிவிளக்குகளின் நிழல் சந்தையில்
களிப்பும் காணலாம். கவனித்தால்
கண்ணீரும் காணலாம்.

21
நகை வியாபாரிகள் நால்வரின் மனைவியர்
தகை மறந்து தங்களை மறந்து
இன்னொரு ஆண் இன்னொரு பெண் என
மின்னலாய்ப் புதுத்துணை தேடி
பொதுச் சந்தையிலே
மதுப் போதையில் இருந்தனர்.

இன்னும் சிலர் தம் மனைவியர்
தன்னை மறந்து தம்முடைய வீட்டுள் தம்முடைய கட்டிலில்
தனிமைக்குத் தனிமை வழங்கிக் கொண்டிருந்தது கண்டு
மனைவியைத் தழுவியக் கைகளை நொந்தனர்.

மாறுவேட வீரர்கள் வரிசையில் ஒவ்வொரு மனைவியின்
மீறல்களையும் துரோகங்களையும் கண்டனர்.
இறுதியில் லுக்ரீஸின் இல்லம் வந்தனர்.

22
இரவின் ஒளியில் லுக்ரீஸ் அங்கே
இன்னொரு நிலவாய் உலவிக் கொண்டிருந்தாள்.
இங்கொரு ஓவியம் அங்கொரு ஓவியம் எல்லாம்
தங்கமகன் காதலன் கணவன் கொலாடினின் முகம்.
நந்தவனத்தின் நடுவே அன்றரைத்த புதுச்
சந்தனத்தின் மணமும் பொலிவும் கூடி
வந்தமர்ந்த லுக்ரீஸ் அருகிருந்த
கொலாடினின் ஓவியத்தைப் பார்த்தபடி
பேசினாள் பாடினாள் பின்னர் அறைக்குள் ஓடினாள்.
வெள்ளை நிறத்தொரு ஆடை பின்
கிள்ளை நிறத்தொரு ஆடை பின்
சென்னிறத்தொரு ஆடை பின்
பொன்னிறத்தொரு ஆடை பின்
லேவன்டர் நிறத்தில் ஆடை பின்
லில்லி மலர் நிறத்திலுமொன்று.
'இது பிடிக்குமா? கண்ணாளா உனக்கு
இது பிடிக்குமா?' என்று ஓவியத்திடம்
மதுவின் குரலில் கேட்டுக் கொண்டிருந்தாள்
மணாளன் பதில் சொன்ன பாவனையில்
மாற்றுடையில் வந்தாள்.
'போர் முடிந்து வெற்றியுடன்
நீர் வரும் வேளையில் நான்
உடையணிந்தால் உமக்குக் கோபம் வருமோ?
தடையாகுமென்றால் வேண்டாம்' என்று
கையிலிருந்த உடையை எறிந்துப்
பொய்யாகச் சீண்டினாள் படத்தில் முகத்தை.
வண்ணப் பந்து போல் இங்குமங்கும் தாவி
கண்ணன் காதலன் கொலாடினின் முகம் தடவினாள்.
முத்தமிட்டாள். சிரித்தாள். அழுதாள்.
பித்தானாற்போல் பேதை.

23
திடுக்கிட்டான் செஸ்டஸ்.
போர்க்களத்திலிருந்து வந்தவன் இங்கொரு
போர்க்களத்தை எதிர்பார்க்கவில்லை.
சீர்க்களமாய் ஓர்க்களம் கண்டும்
போர்க்களமாகும் பார்வையின் காட்சி!
மிரண்டவன் மனதுக்குப் பறப்பதெல்லாம் பருந்து.
பசித்தவன் நாவுக்கு புசிப்பதெல்லாம் விருந்து.
சிரித்தான் செஸ்டஸ்.
என் பிரமையா? இல்லை உண்மை!
லுக்ரீஸ்!
இவள் ஒரு போர்க்களம்.15
இவள் முகம் ஒரு போர்க்களம்.
இவள் இடை ஒரு போர்க்களம்.
இவள் நடை ஒரு போர்க்களம்.
இவள் குரல் ஒரு போர்க்களம்.
இவள் முகத்தில் ரோஜாவுக்கும் லில்லிக்கும் போர்.
இவள் இடையில் மின்னலுக்கும் மலர்க்கொடிக்கும் போர்.
இவள் நடையில் அன்னத்துக்கும் தென்றலுக்கும் போர்.
இவள் குரலில் கன்னலுக்கும் கள்ளுக்கும் போர்.
அழகின் செம்மை.
அடக்கத்தின் வெண்மை.
இவள் உடலில் செம்மைக்கும் வெண்மைக்கும் போர்.
இவள் முகத்தின் செந்தீற்றுக்கள் போரின் ரணம்.
அழகின் ஆணவம்.
ஒழுங்கின் அடக்கம்.
இவள் பொலிவில் ஆணவத்துக்கும் அடக்கத்துக்கும் போர்.
இவளால் அழகுக்கும் ஒழுங்குக்கும் இடைவிடாதப் போர்.
இவளுக்குள் போரிடும் அழகும் ஒழுங்கும்
இவளுக்கே பாதுகாப்பா! பெரிய முரண்!
பலவாறு சிந்தித்த செஸ்டஸ்
நிலைமாறி நின்றிருந்தான்.

24
படைவீரர் பன்னிருவர் பொறாமையில் வெந்தாலும்
தடையின்றிப் போற்றினார்கள் லுக்ரீஸை.
சாகலாம் அவமானத்தால் அல்லது அரிதியா
போகலாம் என்றனர். இங்கிருந்தால் வேதனையில்
வேகலாம் என்றனர்.

விரசலாக அங்குவந்த ஒற்றனொருவன்
அரசனிடம் ஓலை தந்து ஒதுங்கினான்.
கொலாடின் கொடுத்தனுப்பிய செய்தி!
'நேசமிகு அரசே! அருமை நண்பரே!
மோசம் போனோம்.
மாறுவேடம் பூண்டு நீங்கள் போன செய்தி
கூறுகெட்டோர் கேட்டறிந்து சீறிவர
சேறானது நம் வெற்றி. உம் உயிருக்கு
ஊறானது. வஞ்சம் வேண்டித்
திரும்பும் வழியில் உம்மைக் கொல்ல
விரும்பி நிற்கிறார்கள் வில்லர்கள்.
அஞ்ச வேண்டாம். அரிதியாச்
சிறு நரிகளின் சீற்றம் நம்
சிங்கங்களுக்கு சிறு விளையாட்டு.
வீரர்களை அனுப்பிவிட்டு
அரசர் மட்டும் அங்கிருக்கட்டும்.
என் வீட்டில் தங்கி நிற்கட்டும்'.

25
பன்னிரு வீரரும் ஒவ்வொருவராய்த்
தன்னந்தனியே அரிதியா திரும்ப
மன்னன் மட்டும் மாறாப் புன்னகையுடன்
நின்றான், லுக்ரீஸ் இல்லத்து வண்ண வாயிலில்.
திட்டப்படி எல்லாம் நடந்தினித் தொடரும்
கட்டம் யாதென்ற எண்ண வாயிலில்.


[வளரும்]


13 ஹிஹி.. சுஜாதாவுக்கு என் மதிப்படங்கிய அங்கீகாரத்தின் ஒரு சிறிய அடையாளம்.

14 அரிதியா ஒரு துறைமுக நகர். மேற்கு நோக்கிய துறைமுகமானதால் ஸ்பெயின் ப்ரெஞ்சு (குறிப்பாக அந்தக்கால க்ரேக்க) நாடுகளிலிருந்து வணிகம் காரணமாக செல்வமும் நாகரீகமும் மிகுந்த பகுதியாக இருந்தது. ரோம் சற்று உள்தங்கிய (இன்றைய கணக்கில் சுமார் முப்பது கிலோமீடர்) நகரமாயிருந்ததால் அரிதியாவின் செல்வமும் செழிப்பும் ஒரு உறுத்தலாகவே இருந்தது ரோம் அரசர்களுக்கு. மேற்கத்திய கலாசாரமும் பகுத்தறிவும் ஊடுருவத் தொடங்கியிருந்ததால் அரிதியா புரட்சிக்காரர்களின் முகாமாகவும் இருந்தது. ஜூனியஸ் புரட்சிக்காரர்களுடன் தங்க நகரில் தங்கியிருந்தான். பேரரசன் லூசியசின் சேனை அரிதியாவைக் கைப்பற்ற எண்ணியதற்கு அதுவும் ஒரு காரணம். இன்றைய அரிதியா பற்றி விகியில் தேடி அறியலாம் (city of Ardea, Rome)

15 லுக்ரீசின் முகத்தில் தெரிந்த சிவப்புத்தீற்றுகள் செம்மைக்கும் வெண்மைக்கும் இடையிலான போரின் ரணம் என்பதை சேக்ஸ்பியர் மிக எளிமையாகச் சொல்லியிருக்கிறார். 'the silent war of lilies and roses' 'this heradlry in Lucrece's face was seen, argued by beauty's red and virtue's white' என்று எளிமையாக எழுத முடிகிற ஆங்கிலத்தின் அழகா அல்லது என் தமிழின் குறையா தெரியவில்லை, அங்கே கிடைத்த உணர்வை இங்கே கொண்டு வரத் திணறுகிறேன்.

2014/08/02

லுக்ரீசின் சாபம்[அறிமுகம்]     [1]     [2-5]     [6-15]     [16-18]     [19-25]    லுக்ரீசின் சாபம் [16-18]

16
'லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
என் காதலி என் மனைவி
என் மகள் என் அன்னை
என் உறவு என் சுற்றம்
என் சொத்து என் சுகம்.

லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
ஒரு சொல்லில் என்
உலகம் அடங்கும் எனினும்
சொல்லியடங்காச் சொல்
அல்லவா உன் பெயர்?
சிறப்பிலடங்கா உன் பெயர் சொல்லி
பிறக்கிறேன் தினமும்
இறக்கிறேன் தினமும்.
வாழ்கிறேன் கணமும்.

லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
எங்கோ தொலைவில் இருந்தபடி
இங்கே என்னை இயக்கி வரும்
மங்கையுன் பெயருக்கு மட்டும் எத்தனை சக்தி?
கனியே, உன்னால்
மனிதனானேன் எனினும் மிருகமானேன்
தனவானானேன் எனினும் திருடனானேன்
கணவனானேன் எனினும் காதலனானேன்
வீரனானேன் எனினும் கோழையானேன்
பேரறிஞனானேன் எனினும் பேதையானேன்.

லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
அன்னைக்கு மனையாளும் பெருமை
அரசனுக்கு உலகாளும் பெருமை
செல்வனுக்குப் பொன்னாளும் பெருமை
கவிஞனுக்குச் சொல்லாளும் பெருமை
நல்லோர் இவருக்கும் இன்னும்
எல்லாம் வல்ல இறைவனுக்கும்
இல்லாத பெருமை ஒன்று
செல்லாக்காசான
எனக்கு மட்டுமே உண்டு.
உன்னால் தினம் அன்னையானேன்
உன்னால் தினம் அரசனானேன்
உன்னால் தினம் செல்வனானேன்
உன்னால் தினம் கவிஞனானேன்.
குறையிலா உன் துணைதரும் தகுதியில்
இறைவனாகும் தேவை எனக்கில்லை.

லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
நீ பேரழகி. உன்
முகம் பளிங்கு
கண்கள் வைரம்
செவிகள் வெள்ளி
மூக்கு மரகதம்
கன்னம் பொன்
உதடுகள் பவழம்.
கூந்தல் சுரங்கத்தில்
நித்தம் நான் தேடும்
ரத்தினச் சுரங்கம் நீ.
கழுத்து வாழைக்கனி
தோளிரண்டும் பலாச்சுளை.
முலைகள் முழுமாங்கனி
மேற்காம்பிரண்டும் முழு திராட்சை.
இளவயிறு வெண் ஆப்பிள்
இடைத்தொப்புள் நாவல்கனி.
இருகை தாங்கி வரும்
அரும் பழக்கூடை நீ.
இடையோ கடவுள் போல
இனிய ஆத்திக நாத்திகக் குழப்பம்.
கனிந்தப் பேரின்ப ஞானம் தரும்
தனிப் பல்கலைக்கழகம் நீ.
தொடைகள் பெரும்பாறை
அடைபட்ட அல்குல் அருஞ்சோலை
முழங்கால் நாகப்படம்
கால்கள் கள்ளிப்பாளை
பாதமெனும் புதைமணல் தாங்கும்
போதைப் பாலைவனம் நீ.

லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
உன்
கூந்தல் கார்டினியா
முகமெங்கும் முல்லைமலர்
கன்னமிரண்டும் டெரகோடா
உதடுகள் மட்டும் ரோஜா இனம்.
கழுத்து சங்குமலர்
தோளிரண்டும் லேவன்டர்
கைகள் மக்னோலியா
கைவிரல் கனகாம்பரம்
முலையிரண்டும் வனிலா
மேற்காம்புகள் மட்டும் விஸ்டரியா வனம்.
இடை செம்பருத்தி
இளவயிறு நாகலிங்கம்
தொப்புள் டயேந்தஸ்
முதுகோ முழுத் தாமரை
பிட்டமேடு செவ்வந்தி
வல் தொடையிரண்டும் தாழம்பூ
அல்குல் மட்டும் மல்லிகை வனம்.
முழங்கால் லில்லிமலர்
காலிரண்டும் வயலட்
கால் விரல்கள் ஆலிசம்
பாதங்கள் மட்டும் பவழமல்லி இனம்.
லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
எனக்காகவென்றே நீ
தினம் மணக்கும் மலர்வனம்!9.

லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
உன்னைப் பனிக் காலமென்பதா?
பனியினும் வெண்மையன்றோ உன் தூய்மை?
நடுக்கத்தை உன் அன்பில் நான் நொடியும் கண்டதில்லை.
நீ பனிக் காலமல்ல.
உன்னை வசந்த காலமென்பதா?
வசந்தப் பூக்களை விட மென்மையன்றோ உன் மனம்?
சீற்றத்தை உன் அன்பில் நான் சிறிதும் கண்டதில்லை.
நீ வசந்தமல்ல.
உன்னைக் கோடையென்பதா?
கோடையின் கதிரைவிட ஒளியானதன்றோ உன் முகம்?
கடுமையை உன் அன்பில் நான் கணமும் கண்டதில்லை.
நீ கோடையல்ல.
உன்னை உதிர் காலமென்பதா?
உதிர்காலக் காற்றைவிட இதமல்லவா உன் அணைப்பு?
சரிவை உன் அன்பில் நான் சத்தியமாய்க் கண்டதில்லை.
நீ உதிர் காலமல்ல.
உன்னை மழைக் காலமென்பதா?
மழைச்சாரலை விட மயக்கவல்லதே உன் முத்தம்?
அழிவை உன் அன்பில் நான் அணுவும் கண்டதில்லை.
நீ மழைக் காலமல்ல.
காலங்களுடன் உன்னை ஒப்பிடுவது என் தவறே.10
காலங்களுக்கு தொடக்கமும் முடிவும் உண்டு.
உன் அழகுக்கு ஏது தொடக்கம்?
உன் அன்புக்கு ஏது முடிவு?
காலத்தைக் கடந்தவள் நீ.
அளக்கவியலும் காலத்தை
அளக்கவா முடியும் உன் அழகை?
அளக்கவியலும் காலத்தை
அளக்கவா முடியும் உன் அன்பை?
அளக்கவியலும் காலத்தை
அளக்கவா முடியும் உன் காதலை?
காலம் பிறந்தழியும் உன்
மேலான கற்பின் வலிமைக்கு அழிவில்லை..
கண்ணே லுக்ரீஸ்!
நீ காலத்தைக் கடந்தவள்.
மூப்பு உன்னை அண்டாது
மரணமும் ஒதுங்கி வழிவிடும்.
மனிதத்தின் இறுதி மூச்சு ஓயும் வரை
இனியாள் உன்னழகு பொலிவுடன் நிற்கும்.

லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
என் காதலி என் கண்மணி.
உன்னைக் கவிதையில் வடிக்க முயலும்
கவிஞரின் கர்வம் அடங்கும்.
உன்னை ஓவியமாகத் தீட்ட முயலும்
ஓவியரின் திறமை முடங்கும்.
கற்பனைகளுக்கு
புசிக்கத் தீனி தந்து
பசியால் வாடவும் வைக்கும்
உன் அழகும் கற்பும்
எனக்கு விளங்காப் புதிர்.
அரசு அழியும்
செல்வம் அழியும்
கவியும் அழியும்
உலகம் அழியும்
மரங்கள் அழியும்
காற்று அடங்கும்
காலம் முடியும்.
கண்ணே லுக்ரீஸ்!
உன் அழகுக்கு மட்டும் அழிவில்லை.
உன் கற்பின் பெருமைக்கு அழிவில்லை.
காலம் என்பதே உன் முன் கருத்தில்லாச் சொல்.11

லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
உன் அழகைக் கண்டால் என் கண்களுக்கு விருந்து.
உன்னை முத்தமிட்டாலோ என் உயிருக்கு மருந்து.
அதனால் நான் என்றும்
அழகை விட முத்தத்தை ஆராதிக்கிறேன்.
உன் பழுத்த உதட்டில் முத்தமிடும் பொழுது உண்டாகும் சிலிர்ப்பில்
அன்பே நான் மிருகமாகிறேன்.
உன்னைக் குதறி வெறிதணிக்க உன்மத்தம் கூடுகிறது.
உன் பருத்த மார்பில் முத்தமிடும் பொழுது உண்டாகும் சிலிர்ப்பில்
பெண்ணே, நான் மனிதனாகிறேன்.
உன் மென்மையும் வனப்புமென் மனதைக் கட்ட அமைதி மேவுகிறது.
உன் பரந்த வயிற்றில் முத்தமிடும் பொழுது உண்டாகும் சிலிர்ப்பில்
கண்ணே, நான் அரசனாகிறேன்.
எந்த அரசனுக்கும் கிடைக்காத இராஜ்ஜியம் நீ.
உன்னை முழுமையாக ஆளும் பேற்றினை பெறும் நான் பேரரசர்களின் அரசன்.
உன் செழித்த அல்குலில் முத்தமிடும் பொழுது உண்டாகும் சிலிர்ப்பில்
உயிரே, நான் இறைவனாகிறேன்.
உன் மாண்பை முன்னிறுத்தி மேலுமிதை விளக்காமல்
இத்தோடு அமைகிறேன் பித்தன் நான் உன் நினைவில்'.

17
கொலாடின் அமைந்ததும் அவையில் கண அமைதி.
தொடர்ந்து பெரும் ஆரவாரம்.

'இறைவனாகும் இரகசியமதை எனக்கு மட்டும்
மறைக்காது சொல்லப்பா' என்று அவையினர்
இடித்தனர், இமைத்தனர்.
துடிப்புடன் பாராட்டினர் கொலாடினை.
'உன் பேச்சைக் கேட்டு
என் மனைவி எனை விட்டு
உன்னோடு ஓடாதிருக்க உபாயமொன்று காண்பேனோ?'
விளையாட்டாய் சிரித்தான் சிற்றரசன் ஒருவன்.
இரகசியம் இரகசியம் என்று விரல் மடக்கி முகம் விரித்து
உரக்கச் சிரித்தனர் வீரர்கள்.
'இதன்றோ மெய்க்காதல்! இவனன்றோ பேறுடையவன்!'
குறையில்லா காதலைக் கேட்டு
மறைவாய் ஏங்கியது அவை.

ஆரவாரத்தின் இடையே
ஓரரவம் இல்லாது
சீராக வீற்றிருந்த செஸ்டசின் மனம்
பேரரசக் கனவா?
பேரரவம் புகுந்த வீடா?12

அமைதியாக இருந்த அரசனை
இமையாது பார்த்தான் கொலாடின்.

18
மெள்ள எழுந்தான் செஸ்டஸ்.
உள்ளமெல்லாம் கள்ளம் பொங்க
அள்ளினான் நண்பனை உவகையோடு.
'உன் பெருமை என் பெருமை' என்றான்
கள்ளம் விளங்கா மொழியில்.
'ஆ! கொலாடின். காதல் பேரரசன்!
இங்கே இறைவனுண்டு. ஏதோ நாடாளும் பேரரசன் உண்டு. அரசனும் உண்டு.
எங்களுக்குப் போட்டியாகத் தங்களை உருவாக்கினாளோ லுக்ரீஸ்?'
சிங்கம் போல் சிரிப்பாய்ச் சிரித்தான் செஸ்டஸ்.

நண்பனின் சிரிப்பில் பெருமை
கொண்டான் கொலாடின்.
மறை பொருள் ஏதும் காணாத
கறை படியா மனதுடையான்.

'உற்சாகம் மிகுந்த உங்கள் பேச்சில்
கற்காசேனும் உண்மை இல்லை'
என்றான் செஸ்டஸ்
முன்னின்ற மக்களிடம்.
'பெண்மையின் உண்மையினை
கண் முன்னே காணவேண்டும்.
வேறுமுகம் பூண்டு
ஊருக்குள் சொல்வோம்.
யாருடைய மனைவி அழகரசி?
யாருடைய துணைவி கற்பரசி?
துணை பிரிந்து
தனிமையில் வாடுவோர் யார்?
துணை மறந்து
இனிமையில் ஆடுவோர் யார்?
பேர் விளங்கும் பாவையர் யாரெனப்
பார்த்து வருவோம்.
சிறிதாக ஒரு கூட்டம்
புறப்படட்டும் என்னுடன்'.

மறைவிலேனும் மனைவியைக் காணும் ஆசையிலும்
குறை காணவியலா மன்னன் சொல் என்பதாலும்
மாறு வேடம் பூண்டு புறப்பட்டது குழு.
வேறு நோக்கம் கொண்டு புறப்பட்டான் செஸ்டஸ்.

லுக்ரீசின் சாபம் [19-25]


9 மயக்கும் அழகுடன் மிகவும் மணமுடைய இந்த மலர்கள் பற்றிய விவரங்களை இணையத்தில் காணலாம்.

10 நடுக்கம், சீற்றம், கடுமை, சரிவு, அழிவு முறையே குளிர், காற்று, வெயில், உதிர், புயல் இவற்றைக் குறிக்கின்றன.

11 சேக்ஸ்பியர் எழுதிய வேறு சில பாடல்களின் (sonnets) கருத்துக்களை, பொருத்தம் கருதி ஆங்காங்கே சேர்த்திருக்கிறேன்.

12 ஓரரவம்: சிறிய ஓசை | பேரரவம்: பெரிய நாகம்.