2010/01/09

விரல் வரம்பு



   ன்று மாலையும் அதே விவாதம். புணரலாமா கூடாதா என்று.

பளிங்குக் கோப்பையை மேசையில் ஊன்றி, இடமிருந்து வலமாக மெள்ளச் சுற்றினாள். கோப்பையிலிருந்த '94ம் வருட அறுவடையின் இத்தாலிய திராட்சை மது அதற்கேற்ப சுழன்று, கோப்பையின் விளிம்பைத் தொட்டுத் தொட்டு அடங்கியது. "என்ன பார்க்கிறாய்?" என்றாள், எதிரே உட்கார்ந்திருந்த அவனிடம்.

"உன் கோப்பையில் இருக்கும் மதுவின் நிலையை" என்றான் அவன். தன் வலது கையை மேசை மேலிருந்த அவள் இடது கையுடன் பிணைத்தான். விரல்களால் மெள்ள அவள் விரல்களை வருடினான். "மேலும் கீழும் இடமும் வலமும் ஆவலுடன் உன் உதட்டைத் தேடித் தேடி விளிம்பு வரை வந்து அலைபாய்கிறதே தவிர, மது உன் உதடுகளில் மட்டும் படாமலிருப்பதைப் பார்க்கிறேன். ஒரு வகையில் அது நம் தவிப்பையும் உளைச்சலையும் நினைவுப் படுத்துகிறது" என்றான்.

அவள் கோப்பையைக் கையிலெடுத்துக் கொண்டு, மதுவைப் பார்த்து விளையாட்டாகப் பேசினாள். "என்னுடன் கலக்க அத்தனை ஆவலா? வா" என்று அருந்தினாள்.

அவளுடைய நேர்த்தியான சிவந்த உதடுகளில் மது படுவதையும், பருகும் போது பளிங்குக் கோப்பை மேல் விழுந்த விளக்கின் ஒளி அவள் கண்களில் பிரதிபலிப்பதையும், ரசித்தான். ஒரு சிறு மதுத்துளி அவள் உதட்டோரம் தவிப்புடன் காத்திருந்ததைக் கவனித்தான். தன் உதடுகளைத் துடைக்கப் போனவளை அவசரமாய்த் தடுத்தான். அவள் மறுமொழி பேசுமுன் எழுந்து, அவள் உதட்டோரம் விரல் வைத்து, விழப் போன மதுத்துளியைத் தாங்கினான். அவள் உதட்டில் விரல் வைத்து ஊட்டினான். "பிழைத்துப் போகட்டும், அந்த ஒரு துளிக்கும் விமோசனம் தந்து விடு. உன்னுடன் கலப்பதற்கு முன், உன் உதட்டிலும் கொஞ்சம் உரசிப் பார்க்க நினைத்தது அதன் தவறல்ல" என்றான்.

"மதுவுக்குத் தூதா, இல்லை உள்மனதின் முத்தாய்ப்பா?" என்றாள்.

அவள் கேள்வியில் தொனித்த கேலியை அவன் கவனிக்கவில்லை. அவள் உதட்டின் சூடும் நாவின் ஈரமும் ஒரே நேரத்தில் தன் விரலில் பட்டதில் கிட்டிய இனிமையான முரண்பாட்டில் இன்னும் மயங்கியிருந்தான்.

தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவனிடம் "இன்றைக்குத் தானா அந்த நாள்?" என்றாள்.

"இருக்கலாம். நீ என்ன நினைக்கிறாய்?" என்றான்.

"ம்.... நீ சொல்வதைப் போல், செயலை விட செயலைப் பற்றிய எதிர்பார்ப்பை நாம் அதிகம் அனுபவிக்கிறோமோ என்று" என்றாள்.

"எதிர்பார்ப்பு வளர்ச்சியையும், செயல் முடிவையும் வெளிப்படுத்துவதாலா?". அவன் தூண்டினான்.

"மனதையும் அறிவையும் ஒதுக்கிவிட்டு, ஒரு எளிய விளக்கத்தைத் தேடுவோமே?". அவள் தாண்டினாள்.

"பூவா தலையா போடலாம் என்கிறாயா?" என்றான்.

"ஏய்..நல்ல யோசனை. பூ விழுந்தால் இன்றைக்கு" என்றாள்.

அவன் சட்டைப்பையில் தேடிவிட்டு, "இன்றைக்குப் பார்த்து என்னிடம் சில்லறையே இல்லை. உன்னிடம் இருக்கிறதா?" என்றான்.

அவள் கைப்பையில் தேடிவிட்டு "என்னிடமும் இல்லை" என்றாள்.

அந்த வழி வந்த வரவேற்பறைப் பணியாள் இவர்களைப் பார்த்து முகமன் சொல்லிவிட்டு, "எல்லாம் திருப்திகரமாக இருக்கிறதா? ஏதாவது வேண்டுமா?" என்றான்.

"ஒரு கணம்" என்றான் அவன். தயங்கிய பணியாளிடம் "உங்களிடம் சில்லறை இருக்கிறதா? எந்த நாணயமானாலும் பரவாயில்லை, சுண்டிப் பார்க்கத்தான்" என்றான்.

தன் சட்டைப்பையில் தேடிவிட்டு "என்னிடம் இல்லையே. வேண்டுமானால் கீழே வரவேற்பறையிலிருந்து..." என்ற பணியாளை நிறுத்தி, "வேண்டாம்" என்றனர்.

பணியாள் விலகியதும் சில நொடிகள் அமைதி காத்துவிட்டு, இருவரும் அந்தக் கணத்தின் ஏமாற்றத்தில் அடங்கியிருந்த நகைச்சுவையை ரசித்துச் சிரித்தனர். அவன் தன் மதுக்கோப்பையை உயர்த்தி, "சுவையான ஏமாற்றங்களுக்கு" என்றான்.

சற்றுப் பொறுத்து, "சீட்டு போட்டுப் பார்க்கலாமா?" என்றாள்.

   மேரியாட் ஹோட்டலின் மாடி நடைகளிலும், கார் நிறுத்தத்திலும் நடுத்தளத்திலிருந்த மதுக் கூடத்திலும் பதினெட்டாவது மாடியில் பிலேடினம் உறுப்ப்பினர்களுக்கான தனிப்பட்ட ஓய்வறையிலும் அவ்வபோது தற்செயலாகப் பார்த்துக் கொண்டாலும், முறையாகச் சந்தித்தது கொலம்பஸ் தினத்துக்கு முதல் நாள் மாலை தான். அங்கே இங்கே பார்த்த போதெல்லாம் அவளுடைய உயரமும் உடையும் நடையும் நளினமும் அவனைக் கவர்ந்தாலும், ஒருவரையொருவர் நன்றாகக் கவனித்தது அன்றைக்குத் தான். ஓய்வறையில் அவர்கள் இருவரையும் தவிர வேறு வாடிக்கையாளர்கள் இல்லை. பணியாளிடம் தான் வழக்கமாகப் பருகும் மதுவை எடுத்துவரச் சொல்லிவிட்டு, அவளுக்கு எதிர் மூலையில் உட்கார்ந்திருந்தான்.

அளவாக வெட்டப்பட்டிருந்த முடியை நேர்த்தியாக ஒதுக்கியிருந்ததால், அவள் காதுகளில் மின்னியது வைரம் என்பது புரிந்ததது. அவள் அணிந்திருந்த கறுப்பு நிற காக்டெயில் உடை அவளுடைய செழிப்பான தோள்களைகளையும் கழுத்தையும் தெளிவாகக் காட்டியது. உடை லா-பெம் அல்லது நிகோல் மில்லர் என்று நினைத்தான். கழுத்தை அணைத்த இளஞ்சிவப்பு முத்து மாலை அவள் மார்பில் பெருமையாக இறங்கியது தெரிந்தது. கண்களைச் சுற்றி மிதமான மை. இமைகளின் மஸ்கேரா விளக்கொளியில் மின்னியது. கன்னங்களில் தெரிந்த மிதமான ரோஜாப்பூ இயற்கையா செயற்கையா என்று தானிருந்த இடத்திலிருந்து அவனால் தீர்மானிக்க முடியவில்லை. எங்கேயோ காணாமல் போன நவீன தேவதை இங்கே வந்தது என்று நினைத்தான்.

பணியாள் கொண்டு வைத்த மதுவை எடுத்து அவள் ஒரு வாய் அருந்தியதில் தெரிந்த அடக்கமான நாகரீகத்தைக் கவனித்தான். மடி மேல் மடித்து வைத்திருந்த ஒரு சிவப்பு நிற புத்தகத்தை எடுத்து அவள் படிக்கத் தொடங்கியதும் வியந்தான். குறுந்தொகை என்ற தங்க எழுத்துக்கள் தொலைவிலிருந்து தாரகையாய் மின்னின. அவன் மனதில் எதிர்பாராத மத்தாப்பு.

தமிழா?

எழுந்து, அவளருகே சென்றான். "எது அழகு, புரியவில்லையே?" என்றான்.

"என்ன?" என்றாள் அவள், ஆங்கிலத்தில்.

"தமிழ் படிப்பது உங்களுக்கு அழகா, இல்லை, நீங்கள் படிப்பது தமிழுக்கு அழகா?" என்ற அவன் பேச்சிலும் புன்னகையிலும் தன்னம்பிக்கை தூக்கியிருந்தது. "மறந்து போன என் காதலி வடிவத்தை உங்கள் மடியில் வைத்துப் பார்த்ததும் எனக்கே பொறுக்காமல், உங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வந்தேனே தவிர, உங்கள் தனிமையைக் குலைக்க எண்ணவில்லை" என்றான். நின்றான்.

"பெண்களை இப்படிப் பேசிக் கவர முயல்வது, கை வந்த கலையோ?" என்றாள்.

"பழக்கம் தான். ஆனால் நீங்கள் பெண்ணா தேவதையா என்று புரியாமல் பேசியபோது, 'என்ன?' என்று ஆங்கிலத்தில் வாட்டி, என்னைத் தரையிறக்கியதற்கு நன்றி" என்றான்.

என்றவனை ஏற இறங்கப் பார்த்தாள்.

கண்ணாடிப் பளபளப்பில் ராக்போர்ட் காலணியுடன் விலங்குகளும் அஞ்சி விலகும்படி கம்பீரமாக நின்று கொண்டிருந்தவன் அணிந்திருந்த மண் நிற அர்மானி சூட் உடையைக் கவனித்தாள். பொறுத்தமான இளநீல சட்டை பிளாக்-போட்டாக இருக்க வேண்டும் என்று நினைத்தாள். பருத்த கழுத்தைச் சுற்றி பருக்காத வயிறு வரை இறங்கியிருந்த கருநீலப் புள்ளிகள் தெறித்த இளமஞ்சள் கழுத்தணியில் எவ்-சென்-லோரன் அடையாளம் தெரிந்தது. அவனுடைய வலது கையில் டேக் ஹௌர் கடிகாரம். முழுச்சவர முகத்தில், நம்பிக்கை தரும் புன்னகையின் வசீகரம்.

பதிலுக்குப் புன்னகைத்தாள். "மறந்து போன காதலி மேலிருக்கும் கோபத்தில், எங்கே என்னைக் காயப்படுத்த வந்தீர்களோ என்று பயந்தேன்" என்றாள், பொய்க்கோபத்துடன். பிறகு, "உங்கள் காதலியை உங்களிடமே திருப்பிவிட்டால் போகிறது" என்று புத்தகத்தை அவனிடம் கொடுக்க முனைந்தவள் சிரித்த போது, அவன் கண்கள் கணநேரம் கூசின. கொடுக்க வந்த புத்தகத்தை அவனிடம் தராமல் தன் நெஞ்சில் நிறுத்திக் கொண்டு, "உங்களைப் பற்றி ஒன்றும் தெரியாமல் எப்படி இவளைத் திருப்புவது? மறுபடியும் மறந்து விட்டால்?" என்று மீண்டும் சிரித்தாள்.

சிரித்த போது விம்மியது அவளின் அளவான அங்கங்களா, எதிர்பாராமல் கிடைத்த அணைப்பில் வெளிப்பட்ட புத்தகத்தின் உற்சாகமா, அதைக் கண்டதும் அவளைப் பட்டும் படாமல் தொட்டுக் கொண்டிருந்த முத்து மாலையின் பொறாமைப் பெருமூச்சா, எது என்று தீர்மானிக்க முடியாமல் நின்று கொண்டிருந்தவனிடம், "உட்காருங்கள்" என்றாள்.

தன் பெயரைச் சொல்லி, நட்புடன் கை நீட்டினான். அவள் தன் வலது கையிலிருந்த கறுப்புக் கையுறையை நீக்கிவிட்டு, அவன் கையை உறுதியாகப் பற்றி அசைத்தாள். "மதுவினாலா?" என்றாள்.

"என்ன?"

"தனியாக அமர்ந்து மது அருந்தும் பெண்களைச் சுலபம் என்று நினைக்கிறார்கள் பெரும்பாலான ஆண்கள்" என்றாள்.

"அப்படியானால், நான் சிறுபான்மையைச் சேர்ந்தவன்" என்றான்.

"உண்மையாகவா?"

"தனியாகவோ துணையுடனோ மது அருந்தாத பெண்களைப் பற்றிச் சுலப எண்ணங்களை வளர்த்துக் கொள்ளும் சராசரி ஆண்" என்றான், மாறாத புன்னகையுடன்.

முன்பு உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து அவன் தரவழைத்திருந்த பனிக்கட்டி கலக்காத லா-போய்க் மதுவை எடுத்து வந்து கொடுத்த பணியாளுக்கு நன்றி சொன்னான். தன் கோப்பையை உயர்த்தி, "சுலப எண்ணங்களுக்கு" என்றபடி பருகினான். "எங்கே பிடித்தீர்கள் புத்தகத்தை?" என்றான்.

"தமிழ்ப் பேராசிரியையாக யூவில் வாரத்தில் இரண்டு நாள் வேலை பார்க்கிறேன். வகுப்பில் தமிழை ஆங்கிலத்தில் சொல்லித் தர வேண்டியிருப்பதால் தமிழே மறந்து விடுகிறது" என்று புன்னகைத்தாள். நிதானித்து, "தனிமையில் படிக்கும் போது தமிழின் இனிமை இதமாக இருக்கிறது".

"மது அருந்தியபடி படித்தால் போதையேறிவிடப் போகிறது, கவனம்!" என்றான்.

"தமிழுக்கும் மதுவென்று பேர்" என்றாள்.

"புரட்சிக் கவிஞருக்கு நன்றி" என்றான். "ஐந்து நிமிடங்களாகப் பழகிக் கொண்டிருக்கிறோம், இன்னும் உங்கள் பெயரைச் சொல்லவில்லையே?"

"ஏன்? பெயரைச் சொல்லாவிட்டால் பழக மாட்டீர்களா?" என்றாள். பொறுத்தமான பதிலைத் தேடிக்கொண்டிருந்தவனின் தவிப்பை ரசித்தாள். "கண்டுபிடியுங்களேன் பார்ப்போம்" என்றாள்.

"பத்துக் கேள்விகள்?" என்றான்.

"ஐந்து கேள்விகளில் கண்டுபிடித்து என்னை ஆச்சரியப்படுத்துங்களேன்"

"தமிழ்ப் பெயரா?"

"ஆ... மோசமான கேள்வி" என்று மலர் உயர்த்தி, மான் விரித்து, கனி பிரியக் கனிவாய்ச் சிரித்தாள். "ஆமாம், தமிழ்ப் பெயர்".

குடியிருந்த குறுந்தொகை மடியிலிருந்து நழுவாதபடி சீராகக் கால் மேல் கால் போட்டு, கையில் மதுக்கோப்பையுடனும், முகத்தில் பொலிவுடனும், கண்களில் எதிர்பார்ப்புடனும் அவன் தவிப்பை ரசித்தவளை ரசித்தான். அழகி, இளவரசி, கண்ணகி, மேகலை, மாதவி, தேன்மொழி, மலர், மது, நிலா என்று தமிழ்ப் பெயரலைகள் வரிசையாக அவன் மனக்கரையில் மோதின.

உரக்கச் சிரித்தாள். "ஊமைச் சிந்தனையா? பாவம். என் தமிழ்ப்பெயரை ஆங்கிலப்படுத்தியிருக்கிறேன் என்றால் உதவியாக இருக்குமா? கண்டுபிடிப்பீர்களா?" என்றாள்.

சில நிமிடச் சிந்தனைக்குப் பின், "இந்த ஊருக்காக உங்கள் பெயரை ஆங்கிலப் படுத்தியிருந்தால் ஒலி வடிவையொத்து ஆங்கிலப்படுத்தினீர்களா, தனியாக வேறு ஆங்கிலப் பெயர் வைத்துக்கொண்டீர்களா?" என்றான்.

"தமிழ்ப் பெயர் என்றேனே? தமிழ்ப் பெயரின் ஒலிவடிவை வைத்து என் பெயரை ஆங்கிலப்படுத்தியிருக்கிறேன். சாமிநாதன் சேம் நேதன் ஆன கதை. இன்னும் விவரம் வேண்டுமா? என் பெயரையே சொல்லியிருக்கலாம் போலிருக்கிறதே?"

"அந்த ஆங்கிலப் பெயரைக் கொஞ்சம் சொல்லுங்களேன்"

"இது... கேள்வியா கெஞ்சலா?"

அவன் இரண்டு கைகளையும் உயர விரித்தான். "ஆ..இரக்கமில்லாத பெண். கேள்வி தான், கேள்வி தான்".

"கேபி. கேபிரியல்" என்றாள்.

சற்று யோசித்து விட்டு, "தமிழ் முனிவன் தொடர்பு உண்டா?" என்றான்.

அவளும் சற்று சிந்தித்துவிட்டு, "கழுகு போல் பாய்ந்துவிட்டீர்களே?" என்றாள்.

"உங்கள் உதவிக்கு நன்றி, கேபி. நான்கே கேள்விகளில் உங்கள் இயற்பெயரைக் கண்டுபிடித்து விட்டேன், நினைவிருக்கட்டும்" என்றான்.

"ஐந்து. கணக்குடன் என்ன பிணக்கோ உங்களுக்கு?"

"எண்ணத் தெரிந்தவருக்கு எண்ணத் தெரியவில்லையே? ஐந்து இல்லை, நான்கு தான்" என்றான் விடாமல்.

"இரண்டு கேள்விகளை ஒன்றாக்கி ஒலி வடிவம் பற்றிக் கேட்டீர்கள், நான் தான் கவனிக்காதது போல் கருணை காட்டினேன்"

"அம்மாடி...உங்களிடம் கடன் மட்டும் வாங்கக் கூடாது" என்று சிரித்தான்.

"சரி, என் பெயர் தெரிந்துவிட்டதென்றால் சொல்லுங்களேன்"

"இது... கேள்வியா கெஞ்சலா?"

"சீப் ஷாட். சொல்லாவிட்டால் விடுங்கள்"

"ஏன்? பெயரைச் சொல்லாவிட்டால் பழக மாட்டீர்களா?" என்றான்.

"இரக்கமில்லாத ஆண்" என்றாள்.

"ஆண் என்ற சொல்லுக்கே இரக்கமில்லாதவர் என்ற பொருளிருப்பதாய்ப் படித்திருக்கிறேன். நாம் தமிழர் என்பதை வெளிக்காட்ட வேறு வழிகள் இருக்கும்போது, பழகிப் பத்து நிமிடங்களுக்குள் ஏன் வாக்குவாதம்? வேண்டாம், சொல்லிவிடுகிறேன். அவள் முகத்தைப் பார்த்தபடி அவள் கண்களை நேராகச் சந்தித்து, "சொல்லாவிட்டால்..." என்று தயங்கி, "தீராத பிரச்னையாகி விடும் போலிருக்கிறதே?" என்றான். அவளைப் பார்த்துக் கண்களையும் தோள்களையும் உயர்த்திச் சிரித்தான். "என் யூகம் சரி தானே?" என்றான்.

"இம்ப்ரசிவ்" என்றாள்.

சிறிது நேர அமைதிக்குப் பின், "அடுத்த கேள்வி வருவதற்கு முன்னால் நானே சொல்லி விடுகிறேன். எனக்குத் திருமணமாகி விட்டது" என்றாள்.

"கேட்க நினைக்கவில்லை, இருந்தாலும் நன்றி. நானும் தான்.." என்று கை விரல்களைக் காட்டினான்.

"எதிர்பார்ப்புகளை வரம்பில் வைக்க விரும்புவதில் தவறில்லையே?" என்றாள்.

"எண்ணங்களை வேண்டுமானால் வரம்பில் வைக்க முடியும். எதிர்பார்ப்புகளாய் மாறிவிட்டால், வரம்புகள் என்ன செய்ய முடியம்?" என்று தன் கோப்பையை உயர்த்தினான்.

"வரம்பு மீறாத எண்ணங்களுக்கா, வரம்பு காணாத எதிர்பார்ப்புகளுக்கா?". குறும்பாகக் கேட்டபடி, தன் கோப்பையினால் அவன் கோப்பையை மெள்ள உரசிவிட்டு மிஞ்சியிருந்த மதுவை அருந்தினாள்.

    ன்று தொடங்கிய நட்பு வளர்ந்து, மாலையில் சந்தித்த நாட்களில் இலக்கியத்திலிருந்து ஈராக் போர் வரை எல்லாவற்றையும் விவாதித்தார்கள். இரண்டு பேருக்குமே பொதுவான ஆசைகள், புத்தகங்கள், மது, விளையாட்டு, திரைப்படங்கள், பிரச்னைகள். இசைக் கச்சேரி, திரைப்படம், கூடைப்பந்தாட்டம் என்று பல நிகழ்ச்சிகளுக்கு இணைந்து போனார்கள். ஒன்றாகச் சிரித்தார்கள், வருந்தினார்கள். பழக்கத்தின் நெருக்கம் பல விதங்களில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. புணர்ச்சியில் நாட்டம், நெருங்கிய பழக்கத்தின் இயற்கையான நீடிப்பு தானே என்று நினைத்தார்கள்.

அவர்களுக்குப் புரியாத புதிய விவரமில்லை என்றாலும், திருமணத்துக்கு வெளியே நெருங்கிய நட்பு ஏற்படும் போது புணர்வது, உணர்ச்சி என்கிற புரிந்துகொள்ள முடிந்த உடற்கூறு விதிகளைத் தழுவிய இயற்கையான செயலா இல்லை பண்பாடு என்கிற புரிந்து கொள்ள முடியாத ஒழுக்க விதிகளுக்கு முரண்பாடான செயலா என்பதில் தான் விவாதம். அது அனாவசிய நெருக்கமா, நட்பைக் கெடுக்குமா, வீண் தொந்தரவா என்று சர்ச்சை. பழகுவதில் இல்லாத சுகம், புணர்வதிலா வந்து விடப்போகிறது என்று தர்க்கம்.

   விசையைத் தொட்டதும் மென்மையான விளக்கொளி பரவ, அறையில் அமைதி கூச்சலிட்டது.

மூன்றடி உயர மரக்கட்டில் மேல் முக்காலடி உயரத்திற்கு டெம்பர்பெடிக் மெத்தை. அதன் மேல் இரண்டு படுக்கை விரிப்புகள். அதன் மேல் மிருதுவான அரையங்குல வெண் கம்பளி. அதன் மேல் பட்டுச் சால்வை. தலைமுனையில் நான்கு வெள்ளைத் தலையணைகள். அருகே தங்க உறையிட்ட சின்னஞ்சிறிய சாக்லெட் துண்டுகள்.

சாக்லெட் துண்டுகளை எடுத்து அருகிலிருந்த மேசைக்குள் வைத்தாள். மேசை மேலிருந்த குடும்பப் புகைப்படத்தைத் திருப்பி வைத்தாள். காலணிகளைக் கழற்றினாள். உள்ளே வந்தும் இன்னும் நின்று கொண்டிருந்தவனிடம் "ஐந்து நிமிடத்தில் வருகிறேன், உட்காரேன்" என்று குளியலறைக்குள் சென்றாள்.

அவள் திரும்பி வரும் வரை நகராமல் நின்று கொண்டிருந்தான். "என்ன, பயமா?" என்ற குரல் கேட்டுத் திரும்பினான்.

உடல் வளைவுகள் புரியும்படி பட்டில் இரவு உடையணிந்து வந்தவளைப் பார்த்தான். "இல்லை. உன் அறை இத்தனை சுத்தமாக இருக்கிறதே, ஒரு வேளை பக்கத்து அறையில் தங்குகிறாயோ என்று நினைத்தேன்" என்றான். “இதோ வந்து விடுகிறேன்" என்று குளியலறைக்குள் சென்றான்.

அவன் திரும்பியபோது அவள் படுக்கையில் அமர்ந்தபடி படித்துக் கொண்டிருந்தாள். படுக்கையில் நுழைந்து அவளை நெருங்கினான். அவளுடைய பட்டு மேலாடை மேல் அவன் பட்டதும், "என்ன?" என்றாள் கண்களால்.

அவனை ஒரு கணம் அமைதியாகப் பார்த்தாள். புத்தகத்தை மூடி, மடி மேல் வைத்தாள். நெருங்கியவனை நெருங்கினாள். அவனுடைய சூடான மூச்சு, அவள் காதருகே பரவி தோள்களில் விழுந்து குளிர்ந்தது.

"என்ன படிக்கிறாய்?" என்றான்.

பதில் சொல்லாமல் பக்கம் திரும்பி, அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள். அவன் மார்பில் அளவாகக் குவிந்திருந்த முடிக்கற்றையில் விரல்களால் அளைந்தாள். "இனிமேல் தான் படிக்க வேண்டும்"

"உனக்கு படிக்க விருப்பம் தானே?" என்றான் தயங்கி.

"விருப்பமில்லாவிட்டால் புத்தகத்தைப் படுக்கைக்கு எடுத்து வந்திருப்பேனா?" என்றாள்.

"மன்னித்து விடு. ஏன் கேட்டேனென்று தெரியவில்லை. ஏன் தயக்கமென்றும் புரியவில்லை. உனக்குத் தெரிந்தால் சொல்லேன்" என்று அவளை மார்புடன் சேர்த்துக் கொண்டான்.

"நோம் என் நெஞ்சே, நோம் என் நெஞ்சே" என்று அவனைப் பார்த்து இமைகளை மூடித்திறந்தாள். இடையருகே கிடந்த புத்தகத்தை எடுத்து படுக்கையின் விளிம்போரம் தள்ளினாள்.

சற்றே எழும்பி அவன் உதடுகளைச் சந்தித்தாள். அவளை முத்தமிட்டபோது தன் மேல் பட்ட அவள் மார்பின் திண்மையை உணர்ந்தான். உதட்டிலிருந்து விலகி, கழுத்து, மார்பு என்று முத்தமிட்டாள். அவள் உதடுகள் அவன் உடலில் பதியப் பதிய மேகத்தில் கால் வைத்துப் பறந்தான். பட்டிலும் மிருதுவான அவளுடைய திறந்த முதுகையும் இடையையும் தன் கை விரல்களால் பிடித்துத் தேடிக் கீழிறங்கினான். அவளைத் திருப்பி, நொடிகளில் அவள் உடையை விலக்கியபோது வெளிப்பட்ட மிதமான முரட்டுத்தனத்தை அவள் ரசித்தாள். தன் மார்பையும் வயிற்றையும் அவன் உதடுகளால் தொட்டபோது, மென்மையாக முனகினாள். இருவர் மூச்சிலும் வேகம் வளர, அவன் தலைமுடியை உறுதியாகப் பற்றினாள். அவன் முகத்தை உயர்த்தினாள்.

"என்ன?" என்றான்.

தயங்கி, "வேண்டாம். என்னால் முடியவில்லை" என்றாள்.

"அதனாலென்ன, பரவாயில்லை" என்று விலகினான். சற்றுப் பொறுத்து, எழுந்து உடை மாற்றிக் கொண்டான். வெளியேறினான்.

தன்னுடைய அறைக்குத் திரும்பி வந்தவன், தூக்கம் வராமல் தவித்தான். நடந்த நிகழ்ச்சிகள் அவனைப் பாதித்தன. எழுந்து உடை மாற்றிக் கொண்டு கீழே சென்றான். வரவேற்பரையில் நின்றபடி அவனைப் பார்த்துக் கையசைத்தப் பணியாளுக்கு பதில் கையசைத்துவிட்டு, எதிரே இருந்த ஓய்வறைக்குள் சென்று அமர்ந்தான். சொகுசு நாற்காலி உறுத்தியது. நடந்ததை நினைத்துப் பார்த்தவன், குற்ற உணர்வு தோன்றாததை எண்ணி வியந்தான். குற்ற உணர்வில்லையென்றால் தன்னைப் பாதித்துக் கொண்டிருப்பது என்னவென்று இனம் புரியாமல், அருகில் கிடந்த வாரப் பத்திரிகையொன்றை எடுத்துப் புரட்டினான். ஆங்கிலப் பத்திரிகையில் சீன எழுத்துக்கள். பத்திரிகையை எறிந்து விட்டு, எதிரே சுவரில் தொலைக்காட்சியில் வாயசைத்துக் கொண்டிருந்தவருடைய ஒலியைக் கூட்டினான். நிலைக்காமல், பிடிக்காமல், அலைவரிசைகளை மாற்றிக் கொண்டிருந்தான். பிறகு பழைய திரைப்படம் ஒன்றில் நிறுத்தி, பார்க்கத் தொடங்கினான்.

அரை மணியோ ஒரு மணியோ நேரம் கடந்ததைக் கவனிக்காமலிருந்தவன், வந்தவளைக் கவனித்தான். மாற்று உடையணிந்து ஓய்வறைக்குள் நுழைந்தாள் அவள். அவனைப் பார்த்து புன்னகை செய்தாள்.

"தூக்கம் வரவில்லை, அதான்" என்றான்.

"எனக்கும்" என்றாள்.

மன்னிப்பு கேட்டான்.

அவள் பதில் பேசாமல் அவனருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

அவன் மீண்டும் மன்னிப்பு கேட்டான். "என்ன, பதிலே காணோம்?" என்றான்.

"வேண்டுமென்றால் நானும் மன்னிப்பு கேட்கிறேன், போதுமா?" என்றாள்.

அவள் குரலில் தொனித்த எரிச்சலைக் கவனித்தான். பதில் சொல்லாமல் அவளைப் பார்த்தான்.

"நீ மன்னிப்பு கேட்கும் போதெல்லாம் என் அறிவைக் கேலி செய்வது போல் உணர்கிறேன். விளையாட்டாகச் சீட்டு போட்டுப் பார்த்தாலும், புணர்வதென்று உன்னுடன் நானும் சேர்ந்து தானே முடிவெடுத்தேன்? இரண்டு பேருமே அறிவிலும் வயதிலும் முதிர்ந்தவர்கள் தானே? இதில் நீ மட்டும் என்னவோ குற்றம் செய்தது போல் நொடிக்கொரு மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தால், எனக்கு எரிச்சல் வருகிறது. எனக்கு விருப்பமில்லையென்றால் உன்னை என் பக்கம் கூட நெருங்க விட்டிருக்க மாட்டேன். விருப்பம் மாறியது ஏனென்று புரியவில்லை. நான் தயாராயில்லையோ என்னவோ? நம் நட்பு தொடர்ந்து, அடுத்த நிமிடமோ நாளோ வாரமோ நான் தயாராயிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருப்பாயோ? வயதிற்கும் அறிவிற்கும் ஒவ்வாமல் நீ நடந்து கொள்கிறாயோ என்று தோன்றுகிறது. நடந்ததைப் பற்றி நினைக்காமல் விடுவது தான் விவேகம்" என்றாள்.

"மன்" என்று தொடங்கியவன், நிறுத்திக் கொண்டான்.

சிறிது நேர அமைதிக்குப் பிறகு அவள் மெள்ளச் சிரித்தாள். தாமதித்து அவனும் சிரித்தான். சில நொடிகளில் இருவரும் பலமாகச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அறைக்குள் நுழைந்த வரவேற்பறைப் பணியாளைப் பார்த்ததும் அமைதியானார்கள். "என்ன?" என்றனர்.

உள்ளே வந்தப் பணியாள், "சில்லறை வேண்டுமென்றீர்களே. இதோ இருக்கிறது. வேண்டுமா?" என்று சில நாணயங்களை ஒரு தட்டில் இட்டு அவர்கள் எதிரில் வைத்தான். மறுபடியும் சிரிக்கத் தொடங்கியவர்களுடன், மரியாதைக்குச் சிரித்துவிட்டு விலகினான். நிமிடங்களில் சிரிப்பு நின்று அமைதியானதைக் கவனித்தான்.


அரசன் ஆதரவில் கலைமுகில் பதிப்பகம் வெளியிட்ட 'விரல் வரம்பு' சிறுகதைத் தொகுப்பில் வெளிவந்தது.

2010/01/07

ட்டிக் ட்டிக் விதை




மோகத்தை ஒடுக்கச்சொன்ன
முனிவன் மனைவிக்கு
மூன்று சக்களத்தி.

அகம் பிரம்மாஸ்மி. இனி
அடுத்தக் கோவிலில்
அங்கப்பிரதட்சிணம்.

தடுக்கி விழுந்து நெற்றியிலடிபட்ட
கல்லை எறியப் போனால்
ஐயோ, சிவலிங்கம்.

ஆசை கோபத்தைக் கட்டச்சொல்லும் காவிவேட்டிக்காரனுக்கு
கடனில்லை குடும்பம் வாடகை வயோதிகப் பெற்றோரில்லை
வேளைக்குச் சோறு பாதபூசை ஆமாஞ்சாமிக் கூட்டம்.
ஓத்தா டேய்!

கொலைகாரப் பாவிக்கு மரண தண்டனை
ஆயுள் தண்டனை
குடும்பஸ்தனுக்கு.

இறந்துபோன
மனைவியின் நினைவில்
சிறையிலிருக்கும் கொலைகாரக் கணவன்.

அம்மா வீடு எங்கே?
இன்னும் கொஞ்ச தூரம்.
அம்மா வீடு, என்றும் அமைதி.

அனுபவத்துக்கும்
தத்துவத்துக்கும்
இரண்டு தலைமுறை இடைவெளி.

எல்லோரும் விழித்திருக்க
அயர்ந்து உறங்குகிறான்
குறட்டை மகான்.

அம்மா அப்பா சம்மதிக்க வேண்டும், இல்லை
கணவன் மனைவி சம்மதிக்க வேண்டும் - இந்தக்
காதல் பெருந்தொல்லை.

சந்தக்காரி அறியாமல் விட்ட
ட்டிக் ட்டிக் விதை
என் காதல்.

2010/01/01

புத்தாண்டில் முதுகு சொறியலாம்

வெத்து வேலை

:வாய்யா கொல்டி, எங்கே ஒதுங்கிப் போயிட்டிருக்கே?

:இந்தப் பக்கம் அரவமுன்னதனி சொன்னாங்கோ, அதான். மீரு பாகுன்னாரா?

:பாகா இருக்கேன். பாகா இருக்கேன். ரோடின் சிலையாட்டம் யோசிச்சிட்டிருக்கியே, என்ன விசயம்? உன் பேரு மறந்து போச்சா?

:லேது, கொத்த வருசம் ஒச்சிந்தி காதா?..

:புத்தாண்டுக்கு என்ன உறுதி எடுக்கனு யோசிக்கிறியா? யோசி, யோசி.

:மீகேமோ ஐடியா உந்தா?

:நாலஞ்சு நாளா இணையத்திலும் தொலைக்காட்சியிலும் இதே கேள்வி தான்யா. உடற்பயிற்சி, யோகா, எடைகுறைப்பு, மேற்படிப்பு, திருமணம்னு பலவகை ஆலோசனைகள குடுத்திட்டிருக்காங்க.

:ஒக மஞ்சி ஐடியா உந்தி நா தகிர..

:சொல்லு, கேப்போம்

:ரிசீகேசம் போவணும்னு கொன்னி ரோஜா...

:நல்ல ஐடியா தான்... திரும்பி வர மாதிரியும் ரோஜா வச்சிருக்கியா இல்லை போவ மட்டும் தானா?

:மீரேனு சேஸ்தாரு?

:நானும் பத்து வருசமா ஒவ்வொரு வருசமும் நிறைய உறுதிகள் எடுத்துட்டிருக்கேன். நல்ல செட்டிநாட்டுச் சாப்பாடு சாப்பிடணும்னு போன வருசம் எடுத்தேன், நிறைவேறிடுச்சு. இந்த வருசமும் இரண்டு உறுதிகள் எடுத்துட்டிருக்கேன்..

:ஆந்த்ரா போஜனமா?

:கிண்டலா?

:குஜராத்தி?

:நக்கல விடுயா. சொல்றத கேளு. புது வருசம் முழுக்க நான் யார் கிட்டயும் கோவமா பேசறதில்லேனு உறுதி எடுத்திட்டிருக்கேன்யா..

:அதி ரொம்ப கஷ்டம் காதா?

:யோவ், சும்மா குறுக்கே பேசினா பல்ல உடைப்பேன். மனுசனப் பேச விடுறீங்களா நீங்க? அதான் டக்குபுக்குனு தெலுங்கானா பண்ணிடறீங்க.

:நேனேனு செப்பனு..மீரே செப்பண்டி.

:எங்க அம்மாவைக் கூட்டிக்கிட்டு திருவையாறு ஆராதனைக்கு போவணும்னு ரொம்ப வருசமா நினைச்சிட்டிருக்கேன்... இந்த வருசம் முடியாது போலிருக்கு.

:போனி

:எங்கே போகச் சொல்லுறே? புத்தாண்டு உறுதி விவகாரமே பெரிய விவகாரமா போச்சுயா. புது வருசம்னா உறுதி எடுனு கழுத்தறுக்குறாங்க. அடுத்த நாளே எல்லாம் காத்துல போயிடுது, இதுல உறுதி எடுத்தா என்னா, எடுக்காட்டி என்னா?

:நம்மள மாத்திக்க கொத்த வருசமன்டே ஒக சான்சு தொரகததி காதா?

:அதுவும் சரிதான். ஆனா என்னைப் போல எத்தனையோ பேரு உறுதி எடுக்க முடியாம கஷ்டப்படுறாங்கயா. அதுக்காகத்தான் ஒரு லிஸ்டு போட்டிருக்கேன். இதப் பாரு, ஐம்பது போடோ காபி எடுத்து வச்சிருக்கேன். இங்கே நின்னுகிட்டு வரவங்களுக்கெல்லாம் கொடுக்கப் போறேன்.

:இவ்வண்டி சூஸ்தானு..

:இருயா, நானே படிக்கிறேன் கேளு. ஐடியா குடுக்குறதோட, அதை எப்படி நிறைவேத்துறதுனும் வழி சொல்லப் போறேன்.

1. வாரத்தில் இரண்டு நாள் யாரிடமும் கோபமாகப் பேசாதீர்கள். ஆளே இல்லாத இடத்திற்கு சென்றால் இதை நிறைவேற்றுவது மிகச் சுலபம்.
2. குழந்தைகளிடம் பொய் சொல்லாதீர்கள். அடுத்த முறை கடவுள் உண்டா என்று குழந்தை கேட்கும் போது அம்மையப்பன் டயலாக் அடியுங்கள்.
3. முப்பது வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், பத்து பவுண்டு எடை குறையுங்கள். என்றைக்கும் இருபத்தொன்பது என்று நினைத்துக் கொண்டால் கவலையே இல்லை.
4. தினம் பத்து நிமிடம் உடற்பயிற்சி செய்யுங்கள். அல்லது உடற்பயிற்சி செய்பவரைப் பார்த்துக் கொண்டிருங்கள்.
5. புகை பிடிப்பதை நிறுத்துங்கள். பிடித்தே ஆகவேண்டுமென்றால் உங்கள் குழந்தைக்கும் தாய்க்கும் ஒன்று கொடுத்து உடன் புகைக்கச் சொல்லுங்கள்.
6. ஒரு இசைக்கருவி வாசிக்கப் பழகிக் கொள்ளுங்கள். குறைந்தது இசைக்கருவி என்று எழுதி வாசிக்கப் பழகிக் கொள்ளுங்கள்.
7. பணம் சேருங்கள். நோட்டு அடித்துச் சேர்ப்பதாக இருந்தால், மூணு ரூபாய் ஏழு ரூபாய் நோட்டைத் தவிருங்கள்.
8. காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். ஆண் பெண் என்று இல்லை; நல்ல கவிதை, இலக்கியம், மழலை, மலையருவி, செவ்வானம், இரவின் அமைதி, விண்வெளி... கடவுளைத் தவிர எதை வேண்டுமானாலும் காதலிக்கலாம், அதுவும் உங்கள் விருப்பம், உங்கள் வசதி.
9. எதையும் பொருட்டாக எண்ணாமலிருக்கப் பழகிக் கொள்ளுங்கள். குளிருக்கு மட்டும் ஸ்வெட்டர் போட்டுக் கொள்ளுங்கள்.
10. சாப்பாட்டில் மூன்றில் ஒரு பங்கைக் குறையுங்கள். அருகில் யாராவது இன்னும் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அவரையே பார்த்தபடி இருங்கள். அவரும் சாப்பிடுவதைக் குறைத்துக் கொண்டுவிடுவார், உங்களுக்கும் நிறைவு கிடைக்கும்.

:என்னய்யா, எப்படி நம்ம ஐடியா?

:எவுரண்டி மீரு?

புத்தாண்டு லொள் | 2010/01/01

வளம் நலம் அறிவுடன் வாழ்க.