"இருவது வருஷத்துல நான் இப்படி எதையுமே பார்த்ததில்லை"
"அட நான் நாப்பது வருஷமா சிசரோவுல இருக்கேன்.. நானே பார்த்ததில்லை.."
"அட.. நான் பொறந்து வளந்தது டேரியன்ல.. என் ஆயுசுல நான் கண்டதில்லை"
இப்படி ஆளுக்கு ஆள் கடவுளைப் பற்றிக் கணக்கு சொல்வதாக ஒரு கணம் தோன்றலாம், தப்பில்லை. ப்லாக் அப்படி. ஆனால் அவர்கள் சொல்லும் கணக்கு சிகாகோவைப் பிடித்துலுக்கிய பனி மற்றும் குளிரைப் பற்றியது என்ற உண்மையைச் சொல்லிவிடுகிறேன்.
பனி, குளிர், கடுங்குளிர் காற்று - இவை சிகாகோவுக்குப் புதிதல்ல என்றாலும் இந்தப் பனிக்காலம் தொடக்கத்திலேயே களை கட்டி விட்டது. நானறிந்த வரையில் இப்படி ஒரு குளிரை தொடர்ந்து ஒரு சில நாட்களுக்கு மேல் அனுபவித்ததில்லை. 31 டிசம்பர் 1999ல் சிகாகோ ஓட்டல் மிலெனியம் விழாவில் ஒரே ஒரு குழுமக் கஞ்சா இழுப்புக்காக வெளியே வந்தபோது டெம்பரேசர் -52°F (-46°C). மறக்கவில்லை. அப்படி ஒன்றிரண்டு நாட்களில் ஒரு சில மணி நேரங்கள் மைனஸ் ஐம்பதுக்கும் கீழே போகும், மற்றபடி குளிர் விறைப்பு எல்லாம் எப்படியோ சமாளித்துவிடலாம். ஆனால் தொடர்ந்து இரண்டு வாரமாக மைனஸ் இருபது இருபத்தைந்து பேரந்ஹைட் தட்பத்துடன் கடுமையான காற்றும் சேர்ந்து நான் இதுவரை கண்டதில்லை. குறிப்பாக இந்த வாரம் ஜனவரி 4-7 தேதிகளின் குளிர்! நரகம் அய்யா நரகம்.. நரகம் அம்மா நரகம்.. நரகம் பிள்ளாய் நரகம். 6ம் தேதி இரவில் சில நிமிடங்களுக்கு -69°F (-56°C) தொட்டது. circumcise செய்து கொள்ளாத ஆடவர்கள் சிறுநீர் கழிக்கக் கூட கடுமையாகச் சிரமப்பட்ட அந்த நான்கு நாட்கள்! பிள்ளாய், சற்றுமுன் படித்த வரியை மறந்துவிடு. சரியான துணையுடன் இந்த நரகத்தை சொர்க்கமாக்கியவர்கள் இருப்பார்கள்.. இருக்கிறார்கள். அவர்கள் பேச்சு டூ.
மார்ச் 5-6 தேதிகளில் chicago chiberia ஆனதன் அடையாளமாகச் சில படங்கள்.
சிகாகோ என்றில்லை, வடகிழக்கு அமெரிக்கா முழுதுமே பனியில் சிக்கித் தவித்தது. திருமதி பக்கங்கள் பதிவில் பனீஸ்வரர் இறங்கி வந்திருப்பதைப் பார்த்திருக்கலாம்.
பனிக்கட்டி நயாகராவைப் பார்த்திருக்கிறீர்களா?
இது நயாகரா நீர்வீழ்ச்சியை ஒட்டியப் பூங்கா.
இது பால்டிமோர் தெருவில் ஒரு வண்டி.
இது ந்யூயோர்கின் ஹட்சன் நதி.
இது நெப்ராஸ்கா சிற்றூர் ஒன்றின் கடைவீதி. முதல் நாளிரவு தீப்பிடித்த கடையும் தீயணைப்பு வண்டியும்.
குளிர் தாங்கலியேனு ப்லோரிடா போனா.. இப்படியா? ஆரஞ்சு சாகுபடி இந்த வருஷம் அம்போ.
நானறிந்த சிகாகோ வாசிகள் எல்லோரும் வீட்டுக்குள் அடைந்து கிடக்கையில், இந்தக் கடும் பனிக்குளிரில் நானும் என் குடும்பமும் இடைவிடாமல் வெளியே சுற்ற நேரிட்டது எங்கள் முன்வினைப் பயனாக இருக்கலாம்.
செய்தியாளர்: நாடு தழுவிய கடும் பனி குளிருக்கு global warming காரணம் என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள். |
கமல்: விஞ்ஞானிங்களா? முட்டாப்பயலுங்க. கடும் பனி குளிருக்கு global cooling தானே காரணமாவும்? |
படங்கள்: இணையம்.