2010/11/27

மெல்லிசை நினைவுகள்
கொஞ்சம் மெல்லிசை; கொஞ்சம் நினைவுகள்.

வளரும் பருவத்தில் பி.சுசீலா பாடியத் தனிப்பாடல்களை ரசிக்கவில்லை. பிறகு திடீரென்று பி.சுசீலா தனிப்பாடல்கள் நிறைய கேட்கத் தொடங்கினேன். சுசீலா போல் குரல் வண்மை கொண்டவர்களை ஒரு விரலில் எண்ணி விடலாம் என்று இப்போது நினைக்கிறேன். எழுபத்தைந்து வயதாம் இவருக்கு. வயதுக்கு மேற்பட்ட சாதனையாளர். எனக்கு முந்தைய தலைமுறை, என் தலைமுறை, பாசிப்லி எனக்குப் பிறகு ஒரு தலைமுறை... என்று தலைமுறைகள் இவர் குரல் கேட்டு வளர்ந்திருப்பதை நினைத்தால் கொஞ்சம் புல்லரிக்கிறது. சிலருக்கு வாழ்வில் அப்படி ஒரு தவப்பயன். சுசீலா வாழ்க. சுசீலா குரலில் மயங்கிய ஒருவரின் நினைவில் இந்தப் பதிவு - அவரைப் பற்றிக் கொஞ்சம் பொறுத்து சொல்கிறேன்.

குரோம்பேட்டை நாட்களில் என் தங்கையும் அவளுடைய தோழிகளும் ('விஜி' என்று இரண்டு பெண்கள் - ஒருவரை நன்றாக நினைவிருக்கிறது :) பி.சுசீலா என்றால் விழுந்தடித்துக் கொண்டு கேட்பார்கள். 'இப்படி உருகுகிறார்களே!' என்று தோன்றும் அப்போதெல்லாம்.

ரகசியப் போலீஸ் படம் பம்மல் ஷண்முகா கொட்டகையில் பார்த்துக் கொண்டிருந்தோம். தரை டிகெட். 'சந்தனம் குங்குமம் கொண்ட தாம்ரைப்பூ' பாட்டின் போது கூட்டத்திலிருந்து இரண்டு பெண்கள் குஷாலாக ஆடியது நினைவுக்கு வருகிறது. கூட்டம் ஜெயலலிதாவை விட்டு இவர்களைக் கவனிக்கத் தொடங்கியதென்றால் பாருங்கள்! பாட்டு நடுவில் எம்ஜிஆர் நாக்கைச் சுழித்து கையை வீசும்போது பதிலுக்கு இந்தப் பெண்கள் செய்த சைகையில் கொட்டகையே அதிர்ந்தது. அதனால் நினைவிருக்கிறது. குரோம்பேட்டை ஜெயந்தி (?) கொட்டகையில் திருவிளையாடல் படம் பார்த்த போது 'நீலச்சேலை' பாட்டில் வெளியே வந்து விட்டேன். டிகெட் கிழிசலைத் தொலைத்து விட்டதால், வெளியே இடைவேளை வரை நிற்க வேண்டி வந்தது. என்ன சொல்லி அழைத்தும் உள்ளே இருந்த உடன்பிறப்புகள் உதவிக்கு வரவில்லை. 'நீலச்சேலை' பாட்டுக்காகவே பின்னாளில் படத்தைப் பலமுறை பார்த்திருக்கிறேன். 'உனக்கு வந்த அனுபவத்தைச் சொல்லடி மெல்ல..' வரிகளில் சாவித்ரியும் சுசீலாவும் ஜாலம் செய்வதை நிறைய ரசித்திருக்கிறேன். 'வசந்தத்தில் ஓர் நாள்' பாடல், எனக்குப் பிரியமான எங்கள் வட்டப் பழவந்தாங்கல் பெண்ணின் விருப்பமான முணுமுணுப்பு. "உனக்கு வேறே பாட்டே தெரியாதா?" என்று நாங்கள் சலிக்கும் அளவுக்கு முணுப்பாள். 'அத்தானின் முத்தங்கள்' பாடலை என் உறவினர் ஒருவர் ரகசியக் குரலில் அடிக்கடி பாடுவதை நானும் ரகசியமாகக் கேட்டிருக்கிறேன். கொஞ்சம் பழ்ழ்ழைய பாட்டென்றாலும் சுசீலாவின் குரல் வளத்துக்கும் வெரைடிக்கும் ஒரு உதாரணம் 'நிலையாக என் நெஞ்சில்' பாட்டு. 'எத்தனை ஜென்மம் நான் எடுத்தாலும் நீங்காது உன் நினைவு' வரிகளை சுசீலா குரலில் கேட்க வேண்டும் - காதலின் ஆதங்கம் நெஞ்சை உருவும். 'ஆலயமென்பது வீடாகும்' பாட்டு என் டாப் 10 பாடல்களில் ஒன்று.

பி.சுசீலா குரலில் மயங்கியவர் என் நண்பர் அரசன். ஒவ்வொரு நாளையும் அனுபவித்து வாழ்ந்த எனக்குத் தெரிந்த சிலரில் ஒருவர். சின்னச் சின்ன சுகங்களில் வாழ்க்கையைக் கண்டவர். மெரீனா பீச் உப்பு-மிளகாய் தடவிய மாங்காய் பத்தைகளில் கிறங்கிப் போவார். வறுத்த வேர்கடலை இரவின் குளிரில் கையைச் சுடுவதில் கவிதை உண்டு தெரியுமா என்பார். மீனம்பாக்கம் - சைதாப்பேட்டை மின்சார ரயில் நெரிசல் பயணத்தை ரசிப்பார். அதைவிடக் கொடுமை - கிண்டி ரயில் நிலையக் கேன்டீன் 'டபுள் ஸ்ட்ராங் - டபுள் சுகர்' காபியை சப்புக்கொட்டிக் குடித்து 'ஆகா! இது வாழ்க்கை!' என்பார். தூத்துகுடி வானொலி நிலையத்தில் வேலை செய்த அவர் நண்பரிடம் சொல்லி 'சுசீலா நேரம்' என்று வியாழன் வெள்ளி இரவுகளில் அவருக்காக அரை மணி நேரம் ஒலிபரப்ப வைப்பாராம் - அதைத் தன்னுடைய சாதனையென்று பெருமையடித்துக் கொள்வார்.

அரசனிடம் தமிழைத் தவிரவும் நான் நிறையப் பயின்றிருக்கிறேன். அவர் சொன்னப் பின்னணிக் கதையிலிருந்து 'மூங்கிலிலை மேலே' பாடலை ரசிக்கத் தெரிந்து கொண்டேன். 'மூங்கிலிலை மேலே' பாட்டின் பல்லவி கம்பன் காலத்தது தெரியுமோ? கம்பனை அசத்தியப் பாமரன் கதை சுவையானது. அரசனுக்குப் பிடித்த இன்னொரு குரல் எஸ்.பி.பாலசுப்ரமணியம். எனக்கு டிஎம்எஸ் பிடிக்கும் என்பது அவருக்குத் தெரியும். சினிமா பாடல்கள் பற்றி விவாதிக்கும் பொழுது "எஸ்பிபி போல் வராது, சுசீலாவினால் தான் டிஎம்எஸ்சுக்கு பெருமை" என்பார். "என்னங்க இது, தமிழனா இருந்துகிட்டு கொல்டி பாடகர்கள் தான் பிடிக்கும்ன்றீங்களே?" என்பேன். "போமய்யா, ரசனை கெட்டவரே" என்பார். எழுபதுகளின் முடிவில் நங்கநல்லூர் ரங்கா தியேடருக்கு என்னையும் சில மாணவர்களையும் அவரே செலவழித்து சினிமா அழைத்துச் செல்வார். தியேடர்காரனுக்கு ஒரு ரூபாய் கொடுத்து 'கண்ணன் எங்கே' பாட்டை இடைவேளையில் போடச்சொல்லி ரசித்துக் கேட்பார். 'என்ன ரசனையோ?!' என்று நாங்கள் முணுமுணுப்போம். இன்றைக்கு இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது லேசாகத் தொண்டை அடைக்கிறது.

அவர் நினைவில் இந்தப் பதிவின் மெல்லிசைத் தேர்வுகள். சுசீலாவுக்கு நன்றி. நீங்களும் ரசிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
மெல்லிசை நினைவுகள் | 2010/11/27

2010/11/18

தமிழ் வேட்டி            'ரசமன்பு பற்றி விளக்குவதாகச் சொல்லிவிட்டு எஸ்கேப் ஆயிட்டீங்களே?' என்று இதுவரை வந்த ஏழு மின்னஞ்சல்களின் நெருக்கடி காரணமாக, இதோ ரசமன்பு விளக்கம். (அனுப்பியது ஒரே நபர் என்றாலும் ஏழு மின்னஞ்சல் என்று சொல்லும் பொழுது ஆயிரக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தில், படுத்துக் கொண்டே ஜெயித்த திருப்தி)

என் தந்தைவழிப் பாட்டனார் அதிகம் பேச மாட்டார். ஆனால் பேசினால் ஜாலியாக நிறைய ரீல் விடுவார். பி.யூ.சின்னப்பா, தியாகராஜ பாகவதர், கே.பி.சுந்தராம்பாள் பாடல்கள் அவருக்குப் பிடிக்கும். எங்களுடைய ஓட்டை மர்பி ரேடியோவில் எப்போதாவது வரும் இவர்களின் பாடல்களை, "ஏலே.. இதாம் பாட்டுலே. அம்புட்டும் ஃபஷ்டாக்கும்" என்று ரசித்தபடியே அவர் மட்டும் கேட்பார். எனக்குப் பாவமாக இருக்கும். ஒரு முறை சுந்தராம்பாளின் 'ஞானப்பழத்தைப் பிழிந்து' பாடல் ஒலிபரப்பானது. சும்மா பேசுவோமே என்று, "தாத்தா, ரசமம்புனா என்ன?" என்றேன். 'ஞானப் பழத்தைப் பிழித்து ரசமம்பினால்' என்று பாடியதாக நான் நினைத்தேன்.

"ரசமம்பு இல்லேடா, ரசமன்பு" என்றார் தாத்தா. "எதோ ஒண்ணு, அப்படினா என்ன தாத்தா?" என்றேன் விடாமல். "ஞானப் பழத்தை பிழிஞ்சா அன்பு ரசமா வரும், அதான் ரசமன்பு" என்றார். தாத்தாவின் ஞானத்தை வியந்து ரசித்தேன். சில வருடங்கள் கழித்து அந்தப் பாடலைப் பொறுமையாகக் கேட்டபின் தான் கே.பி.சுந்தராம்பாள் பாடிய அசல் 'ரசமன்பு' என்னவென்றே தெரிந்தது! 'தவறான பதில் என்று தெரிந்தும் சரியான பதில் போல் சொல்வது - எல்லாம் தெரிந்தவர் போல் பேசுவது' அன்றிலிருந்து ரசமன்பாகிவிட்டது. என் தாத்தா போலவே நானும் ரசமன்பு விவகாரத்தில் முனைவர் பட்டம் பெறத் தகுதி வாய்ந்தவன்.

'ஞானப்பழத்தைப் பிழிந்து...' அற்புதமான கவிதை. எழுதியவர் எங்க ஊர்க்காரர் தெரியுமோ? சங்கரதாஸ் சுவாமிகள். (ரசமன்பு?)

            ந்த இடுகைக்கு நானும் ஒரு கவிதை எழுதுவது என்று தீர்மானித்திருந்தேன். இயற்கை, காதல் என்று மாவு திரிக்காமல் இலக்கியத்தரமாக எழுத நினைத்தேன்.
        லீப் வருட முதல் தேதி
        உலகெங்கும் தற்கொலைத் தினம்.

சொன்னால் நம்ப வேண்டும், இந்த இரண்டு வரிகளை வைத்துக்கொண்டு இரண்டு நாள் விழித்தது தான் மிச்சம். நம் இலக்கியத்தரம் இவ்வளவுதான் என்று சலித்தேன். சவால் கவிதைப் போட்டி வைக்கலாமென்று கூடத் தோன்றியது. சிவகுமாரன் எப்படி ஹைகூ, மரபுக்கவிதை என்று இந்தப் பின்னல் பின்னுகிறார்? எனக்கும் கவிதை வந்த காலம் உண்டு. ஹ்ம்!

உ.வே.சாமிநாதய்யர் 1940ல் தன் சுயசரிதையில் இப்படி எழுதியிருக்கிறார்:

        'இந்தக் காலத்தில் உள்ள பல சௌகரியமான அமைப்புகள் அந்தக் காலத்தில் இல்லை. ஆனாலும் அழகு இருந்தது. அமைதி இருந்தது. ஜனங்களிடத்தில் திருப்தி இருந்தது. அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி நிலவியது. அவர்களுடைய வாழ்க்கையில் வேகம் காணவில்லை; அதனால் ஒரு குறைவும் வந்து விடவில்லை. அவர்கள் உள்ளத்தில் சாந்தி இருந்தது. இப்போதோ அந்த சாந்தியை எங்கேயோ போக்கிவிட்டு வெகு வேகமாக ஓடிக்கொண்டே இருக்கிறோம்.
        அந்தக் காலத்தில் பெண்களுடைய நிலைதான் மிகவும் கஷ்டமானதாக இருந்தது. மாமனார், மாமியார், நாத்தனார் முதலியவர்களால் அவர்கள் படுங்கஷ்டங்கள் பெரும்பாலான வீடுகளில் உண்டு. மற்ற எல்லா விஷயங்களிலும் அக்கால வாழ்க்கை சிறந்ததாக இருந்தாலும் இந்த ஒரு விஷயத்தில் மாத்திரம் குறைபாடாகவே இருந்தது.'

எழுபது வருடங்கள் கழித்து இதைப் படிக்கும் பொழுது இன்று காலையில் எழுதினாற் போலிருக்கிறது எனக்கு. ('என் சரித்திரம்' படிக்கத் தொடங்கியிருக்கிறேன். சுவையான புத்தகம். அறிமுகத்துக்கு நன்றி, மோகன்ஜி)

            பெண்களுடைய கஷ்டத்தைப் படித்ததும், பாருங்கள், அப்படியே மனமுருகிவிட்டது. நான் நட்புடன் பழகும் தம்பதிகளில் ஒரு பெண்மணி 'வேலை வேலை' என்று புலம்பிக்கொண்டே இருப்பார். மூணு பேருக்கு சமையல், இத்தனை பாத்திரம் விழுது, துணி தோய்க்கணும், வீட்டைச் சுத்தம் செய்யணும், கடைக்குப் போகணும் அப்படி இப்படி என்று சொல்லிக்கொண்டே இருப்பார். ஒரு நாள் கேட்டு விட்டேன். "அம்மணி... பத்து பாத்திரம் எங்கே தேய்க்கிறீங்க? பாத்திரத்தை டிஷ் வாஷருல அடுக்குறீங்க. துணியை வாஷர் டிரையருல போடுறீங்க. கடைக்கு, கார்ல போய்ட்டு கார்ல வரீங்க. வீட்டுல என்ன சாணி போட்டா முழுகுறீங்க? வேகூம் க்ளீனரை வச்சு அப்படி இப்படி வாகிங்க் போறீங்க.. எவ்வளவு வேலை, நியாயம் தான்" என்ற என் நக்கல் புரிந்ததோ இல்லையோ, புலம்புவதை நிறுத்தி விட்டார். வளரும் பருவத்தில் நாங்கள் அழுக்குத் துணிகளை வாளியில் நனைத்து, லைன் கட்டி நின்று கல்லில் கசக்கித் தோய்த்தோம். என் சகோதரிகள், அம்மா எல்லோரும் 'விம்'மில் தோய்த்த தேங்காய் நாரினால் பத்து பாத்திரம் சுத்தம் செய்தார்கள். இன்றைக்கு எனக்கு ரோபாடிக் வேகூம் க்ளீனரின் விசையைத் தட்ட மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறது. வளர்ச்சியின் வலிகள்.
விஞ்ஞானத்தை வளக்கப் போறண்டி | 2010/11/18


            ணின் கஷ்டத்தை யாரிடம் சொல்லி அழுவது? ஆணின் கஷ்டம் பெரும்பாலும் பணம் அல்லது புணர்ச்சி இரண்டில் ஏதாவதொன்றாக இருக்கிறது, ஏனென்று தெரியவில்லை.

இன்னொரு நட்புக் குடும்பம் இந்தியா திரும்புகிறது. இரண்டு பெண்களையும் படிக்க வைத்து முறையே வெள்ளைக்காரனுக்கும் சைனாக்காரனுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டு, கடமை முடிந்த களிப்பில் இந்தியா திரும்புகிறார்கள். அவர்களையும் இன்னும் சில நட்புக் குடும்பங்களையும் சமீபத்தில் என் வீட்டிற்கு அழைத்திருந்தேன். இந்தியா திரும்பும் மனநிலையில், நண்பர் அமெரிக்கா வந்த இருபது வருடங்களில் தான் சாதித்த பெருமைகளையெல்லாம் பேசிக்கொண்டிருந்தார். "அமெரிக்கா வந்து நடக்கணும்னு நெனச்சது, எதுனா நடக்காம போச்சா?" என்று கேட்டேன்.

கொஞ்சம் யோசித்து விட்டு, "பர்சனலா எதிர்பார்த்தது நடக்காம போயிருச்சு, ஆனாலும் பாதகமில்லே...பெரிசு படுத்த விரும்பலை.. இங்க வந்து மேற்கத்திய நாகரீகப்படி நடந்துக்குவானு நெனச்சேன்" என்றார், தன் மனைவியின் பெயரைச் சொல்லி. செக்ஸ் விஷயம் என்று அவருடைய தயக்கத்திலேயே தெரிந்து விட்டது. "இது வரைக்கும் என் மனைவி என் உதட்டுல முத்தமே கொடுத்ததில்லை துரை" என்றார். "கல்யாணமாகி முப்பது வருசமாச்சு. தானா ஒரு முத்தம் கொடுத்ததில்லை. நானா கொடுத்தாலும் கன்னத்துலதான்" என்றார். உண்மையிலேயே வருத்தப்பட்டார்.

நான் இதை எதிர்பார்க்கவில்லை. உதட்டில் முத்தம் கொடுக்காமல் ஒரு திருமண வாழ்க்கையா? அதுவும் முப்பது வருடங்களா?! முத்தமில்லாத இடத்திலே அன்பில்லை என்பார்கள் (மாற்றிச் சொல்கிறேனோ?). இவர்களைப் பார்த்தால் அப்படித் தெரியாது. நண்பரும் அவர் மனைவியும் ஒருவரையொருவர் மதித்து நடப்பவர்கள். தங்களுக்குள் தாய்மொழியில் பேசிக்கொள்ளும் பொழுது சுமுகமாகவும் அன்பாகவும் பேசுவது போலத்தான் இருக்கும். தன் எதிர்பார்ப்பை மனைவியிடமே சொல்லியிருக்கலாமே அவர்? நண்பரின் மனைவி நல்ல அழகு. உதடுகள் ஒவ்வொன்றும் பலாச்சுளை போல இருக்கும். 'இப்படி வேஸ்ட் பண்றாங்களே?!' என்று தோன்றியது. அவர்கள் சென்றதும், மற்ற நண்பர்கள் இதைப் பற்றிப் பேசினோம். இன்னொரு நெருங்கிய நண்பர் என்னிடம், "அவள் உதட்டில் முத்தம் கொடுப்பாள்; கொடுக்கையில் நாவையும் புரட்டி எடுப்பாள்" என்றார் ரகசியமாக. நான் ஏறிட்டதும் பொருளுடன் புன்னகைத்தார். "பத்து வருச நெருக்கம். இனிக் கிடைக்காது" என்றார். இவரும் உண்மையிலேயே வருத்தப்பட்டார்.

அடப்பாவி! பலாச்சுளையை இவனா ருசித்துக் கொண்டிருக்கிறான்? இவரையும் அவர் மனைவியையும் இணைத்த போது தோன்றிய சரோஜாதேவிச் செய்யுள்:
        இதழினி லிதழிடென் இடைகலந் திடையினில்
        மதகளி றெனப்புகு மன்மதரே - விதவிதப்
        புணருத லறுபது வகையொடு பொறுத்திடென்
        கணவரும் பெறவிடு நான்கு.


            ண்பரின் ரகசியக் களியாட்டத்தைப் பற்றிப் பதிவெழுத வந்தால், 'ப்ளாக் பற்றிய புள்ளிவிவரங்கள்' கிடைப்பதைப் பார்த்தேன். எத்தனையோ நாளாக இந்த வசதி இருந்திருக்கலாம், நான் இப்பொழுது தான் கவனிக்கிறேன். க்ளிக்கிப் பார்த்தால், எந்தப் பதிவை எங்கிருந்து எத்தனை பேர் வந்து பார்த்தார்கள் என்று விவரம் கிடைக்கிறது. போதாக்குறைக்கு எந்தெந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தினார்கள் என்று ஒரு பட்டியல் வேறு. பார்த்தேன். ஹார்ட் அட்டேக் வராத குறை தான். 'இனிமையான ஆண்கள், கசம், குளியலறை ஓட்டை, தகாத புணர்ச்சி கதைகள், மாமா, காமம், ஆப்பிள் மஃபின், விலங்குகளுடன் கில்மா' என்றெல்லாம் மக்கள் இணையத்தில் தேடிய பொழுது, 'மூன்றாம் சுழி'ப் பதிவுகளைச் சுட்டியதாக கூகுல் சொல்கிறது. மற்றச் சொற்கள் சரி, குளியலறை ஓட்டை? விலங்குகளுடன் கில்மா? கில்மா என்ற சொல்லையே நான் இப்போது தான் கேள்விப்படுகிறேன். கூகுல் சொல்வது நிஜம் தானா என்று சரிபார்க்க இந்தச் சொற்களை இணையத்தில் தேடிப் பார்த்தேன். அதை ஏன் கேட்கிறீர்கள்! நகைச்சுவைக் கதையில் 'ப்ளூபெரி மபின்' சாப்பிடுவதாக எழுதினேன். ப்ளூபெரி மபினுக்கு நிழலான அர்த்தமா?! தேடலில் கண்டது: 'மஜா மல்லிகா' என்று ஒருவர் கலவியாலோசனை தருகிறார் - முன்பின் அறிந்திராத மகத்துவமெல்லாம் அறிந்தேன். இணையத்தில் பதிவெழுதிப் பலர் தமிழ்த்தொண்டு புரிகிறார்கள்; நான் தமிழ் வேட்டி உருவுகிறேன் போலிருக்கிறது.

            'மூன்றாம் சுழி'யைத் தேடி இத்தனை பேர் வருகிறார்களே, வலைப்பூவுக்கு நிறைய வரவேற்பு இருக்கும் என்ற எண்ணத்தில் - இப்பொழுதெல்லாம் 'இணைய தள மதிப்பு' என்று போடுகிறார்களே - இந்தக் குளியலறை ஓட்டை எவ்வளவு பெறும் என்று அறிய ஆசை வந்தது. பத்தொன்பது டாலர் என்று தெரிந்து கொண்டேன்.
Yes, I have arrived!

2010/11/09

கிராக்கி

சிறுகதை


    ழைப்பு மணி தொடர்ச்சியாக மூன்று முறை அடித்ததும் எழுந்தேன். கிராக்கி வந்ததற்கு அடையாளம். காலை ஆறு மணி கூட ஆகவில்லை, அதற்குள்ளா? பாத்ரூம் சென்று பல் விளக்கினேன். உதட்டருகே காயம் வலித்தது.

வெறித்துவிட்டு,
"வெட்டி நாறாக்கிடுவேன் நாயே. எங்கிட்டயா வெளயாடிப் பாக்கறே?"
என்று அவள் கன்னத்தில் அறைந்தான்.
"சத்தியமா தெரியாதுண்ணே"
என்று தடுமாறி விழுந்தவளை இடுப்பிலிருந்த பெல்ட்டைக் கழற்றி விளாசினான்.
எழ முயற்சித்தவளை நெற்றியில் அடித்துக் கீழே தள்ளினான்.
"இடம், சோறு, மருந்து எல்லாம் கொடுத்து சும்மா படுத்து சம்பாதினு விட்டா, வேலையா காட்டறே?"
என்று அவளை எட்டி உதைத்தான்.
செருப்புக் கால் அவள் பெண்குறியில் பட, வலியில் அலறிப் புரண்டாள்.
மறுபடி செருப்புக் காலால் அவள் பிட்டத்தில் ஓங்கி உதைத்து அழுத்தினான். துடித்தாள்.
முகத்தையும் இடுப்புக்குக் கீழேயும், வலியைப் பொருட்படுத்தாமல் சுத்தம் செய்துகொண்டு அறைக்குத் திரும்பினேன். ஒற்றை ஊதுபத்தி ஏற்றினேன். தலையணைக்கு உறை மாற்றி, கண்ணுக்குத் தெரிந்த சில்லறை நோட்டுக்களை பொறுக்கி மறைத்தேன். பீரோவிலிருந்து இரண்டு ஆணுறைகளை எடுத்து வைத்தேன். உள்ளாடை தெரியும்படி மெலிதான மேலாடை அணிந்தேன். மார்பை இரண்டு கைகளாலும் உயர்த்தி, தூக்கலாகத் தெரியும்படி சரி செய்து கொண்டேன். அனேகமாகத் தீர்ந்து போயிருந்த உதட்டுச் சாயக்கட்டியை எச்சிலால் நனைத்து உதட்டில் பூசினேன். தலைமுடியை சரி செய்து கொண்டு வாயிலருகே சென்றேன். கதவை முழுவதும் திறக்காமல், உள்ளிருந்தபடியே, வந்தவனைப் பார்த்துப் புன்னகை செய்தேன். வயதானவன். இம்மாதிரி ஆட்களிடம் கவனமாக இருக்க வேண்டும். "கத்தி, துப்பாக்கி எதுனா வச்சிருக்கியா? சட்டை, பேன்ட் எல்லாம் அவுத்துக்காட்டு" என்றேன்.

சட்டையைக் கழற்றினான். மாநிறம் என்றாலும், அவன் உடலெங்கும் பளபளப்பு. பேன்ட்டைக் கழற்றிவிட்டு நின்றான். "அதையும் கழட்டு" என்றேன். ஆடையின்றி நின்றவன் மேல் சற்றே பரிதாபப்பட்டேன். "என்னய்யா இப்படி வத்தலா போயிருக்குது? நிக்குமா?" என்றேன். வசீகரமாகச் சிரித்தான். "வியாதி ஏதாவது இருந்தா சொல்லிடுயா" என்றேன். இல்லையென்று தலையசைத்து மறுபடி வசீகரமாகச் சிரித்தான். இவனிடம் பயப்படத் தேவையில்லை என்று தோன்றியது. "முன்னே பின்னே தெரியாத வாடிக்கைய சோதனை பண்ணாம எடுக்குறதில்லை, தப்பா நினைக்காதயா. சரி, அப்படியே உள்ளே வரதுனா வா, இல்லை எல்லாத்தையும் மாட்டிக்கிட்டு வா" என்றேன். கதவைத் திறந்தேன்.

"உள்ளே வேண்டாம், வெளியே போகலாம் வா" என்றான்.

"வெளியவா?" முதல் நெருடல். "பணம் வச்சிருக்கியா? முதல்லயே கொடுத்துடணும்" என்றேன்.

"எவ்வளவு?" என்றான்.

"வேலையையும் நேரத்தையும் பொறுத்து. கைவேலை போதும்னா இருபது ரூவா, வாய்வேலை அறுபது ரூவா, படுக்கணும்னா தடவைக்கு நூத்தம்பது, ராத்திரிக்கு ஐநூறு. ரப்பர் வச்சிருக்கியா? இல்லைனா, ரப்பர் காசு தனி. ஒண்ணு பத்து ரூவா."

"ஒரு நாளைக்கு எவ்வளவு?" என்றான்.

வியந்தேன். அதிர்ஷ்டமா இல்லை விவகாரமா? பதில் சொல்லாமல், "உன்னை யாரு அனுப்பிச்சது?" என்றேன்.

"நீ தான்" என்றான்.

இரண்டாவது நெருடல். "நானா? இதுக்கு முன்னே உன்னைப் பாத்ததே இல்லை. ப்ரோகர் யாரு? அவங்களுக்கும் கமிசன் தரணும். உன்னை யாரு இங்கே அனுப்பிச்சது? பொன்சாமியா?" என்றேன் மறுபடி.

"நீ தான்" என்றான்.

மரியாதையைத் தொலைத்தேன். "யாருயா நீ? காலங்காலைல சாவுகிராக்கி?". உள்ளுக்குள் பயந்தாலும் வெளிக்காட்டவில்லை. கண்கள் பொன்சாமியைத் தேடின.

"சாவாத கிராக்கி" என்று சிரித்தான். அச்சமூட்டாத அமைதியான சிரிப்பு. "நாள் முழுக்க என் கூட இருக்க எவ்வளவு?. வேணாம்னா சொல்லு, போயிடறேன்" என்றான் அழுத்தமாக.

"இருயா. ரெண்டாயிரம் ரூவா, சரியா?" என்றேன்.

"நான் சொல்றதை மறு பேச்சில்லாமல் கேட்கணும், சம்மதமா?" என்றான்.

"ரொம்ப ஆபாசமா போகமாட்டேன். ஒரு ஆளுக்கு மேலே இருந்தா வாபசாந்துருவேன். கத்தி வச்சிருக்கேன்" என்றேன்.

"இந்தா முன்பணம்" என்றுச் சிரித்தான்.

இந்தச் சிரிப்பு சிரிக்கிறானே? "இருயா" என்று கையசைத்து விட்டு உள்ளே சென்றேன். இரண்டாயிரம் ரூபாய்க்கு எத்தனை கடன் அடைக்க முடியுமென்று திட்டம் போட்டபடியே தயாரானேன்.

கீழே இறங்கி வந்தோம். வீட்டு வாசலில் ஆட்டோவில் தூங்கிக் கொண்டிருந்த பொன்சாமியை எழுப்பினேன். "எங்கே போவணும்னு பொன்னாண்ட சொல்லுயா" என்றேன்.

"உனக்குப் பிடிச்ச இடமாப் போவலாம்" என்றான்.

எனக்கு எரிச்சல் வந்தது. பணம் வாங்கியாகிவிட்டதே? "பொன், வண்டியெடு. ஏறி உக்காருயா. மொதல்ல காபி சாப்பிடலாம்" என்றேன்.

சரவணாபவன் காபியில் தொடங்கி இட்லி, வடை, பொங்கல், பூரி மசாலா என்று வரிசையாகச் சாப்பிட்டோம். பசி. அத்தனை வலியிலும் பசி பிடுங்கியது.


"இந்தாடி, ரெண்டு ரொட்டித்துண்டை வச்சுக்க. பசி எடுத்தா சாப்டு" என்றாள்.
"வேணாங்க்கா. அதான் காசு வேறே குடுத்திருக்கியே?"
"அத சாப்பாட்டுல செலவழிக்காதடி. ஊருக்குப் போய் வீட்ல குடு. ஓடு"
"அக்கா. நீ தெய்வங்க்கா" என்று கட்டிப்பிடித்தவளின்
கண்ணீரைத் துடைத்து "நல்லாரு, ஓடு" என்றாள்.
தன் கண்ணீரைத் தடுக்க முடியாமல் அழுதாள்.

"என்னுடைய சாப்பாட்டுச் செலவைக் கணக்கிலிருந்து கழிச்சிக்கயா" என்றேன்.

"பரவாயில்லை" என்றான்.

"சரி, எங்கே போகலாம்? பொன் கிட்டே சொல்லி ரூம் போடவா?"

"கொஞ்சம் பேசிக்கிட்டிருப்போமே?"

"பேசினாலும் படுத்தாலும் ரேட் ஒண்ணுதான்யா".

என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். என் கிராக்கிகளுக்கெல்லாம் பணத்தைக் கொடுத்தவுடனே படுத்தாக வேண்டும். இவன் தாமதம் எனக்கு விபரீதமாகத் தோன்றியது. "சரி, பேசுயா".

"நீ தான் பேசேன்?" என்றான்.

"என்னய்யா ரோதனை?". எரிச்சல் வந்தாலும் அமைதியானேன். "சரி, உன்னை யாரு அனுப்பிச்சது? அதாவது சொல்லுயா"

"நீ தான்"

"யோவ்" என்ற என்னைத் தடுத்துச் சிரித்தான். "சொல்றேன்.. நேத்து ராத்திரி உன் வீட்டுக்கு பொன்சாமி கூட்டி வந்தான். போதையில் மறந்துட்டானு தோணுது" என்றான். என்னை உற்றுப் பார்த்தான்.


"எங்கடி சின்னவ? எங்க அவ?"
"எனக்குத் தெரியாதுணே"
"முண்டை" என்று அவளைப் பிடித்துத் தள்ளினான்.
"தொழில் கத்துக்க உங்கிட்ட ரெண்டு நாள் விட்டா, எங்கடி காணாம போயிடுவா?"
கீழே விழுந்தவளின் தலைமுடியைப் பிடித்தெழுப்பி,
"உயிரோட கொளுத்திருவேன். உண்மைய சொல்லு. எங்க போனா?" என்றான்.
"உண்மையிலயே எனக்குத் தெரியாதுணே"
இரண்டு கைகளையும் அவள் முகத்தில் இடித்துத் தள்ளினான்.
அவளுக்கு மூக்கிலடிபட்டு விண்ணென்று பொறி தட்டியது. அழுதாள்.
"எம்எல்ஏ வராரு இன்னிக்கு. பிஞ்சுவயசுப் பொண்ணுக்கு அஞ்சாயிரம் பேசி வச்சிருந்தேன்.
இப்ப என்னடி சொல்வேன்? எங்க அவ?"
உறுமினான். புகைத்துக் கொண்டிருந்த சிகரெட்டை எடுத்து அவள் விரல் நகத்தில் வைத்து அழுத்தினான்.
"எங்கடி அவ? சொல்லாம விடமாட்டேன். எங்க அவ?"
விரலின் சதையுடன்
சிகரெட் நெருப்பு கலந்து புகைந்து கரைந்து கொண்டிருந்தது.
அவள் அலறினாள். "விட்டுறுணே, விட்டுறுணே".

திடுக்கிட்டுக் கைகளைத் திருப்பிப் பார்த்துக் கொண்டேன். பர்னால் அப்பியிருந்த புண்ணின் வலி இன்னும் குறையவில்லை. "அத்தினியும் பாத்தியா?"

"நீ அலறினதை கேட்டேன். இப்ப வேணாம் சார்னு என்னைத் தடுத்துட்டான் பொன்" என்றான் அவன் அமைதியாக.

"தொழில்னு வந்துட்டா இதெல்லாம் சகஜம்யா. கவலைப்படாதே, நீ குடுக்குற காசுக்கு உனக்கு திருப்தியா நடந்துக்குவேன். போலாம் வாயா" என்று எழுந்தேன். கிழிந்த புடவையில் தெரிந்தவற்றை மறைத்தவாறு நடந்தேன்.

"உன் புடவை ஏன் இப்படிக் கிழிஞ்சிருக்குது?"

"யோவ், கழட்டுறதுக்குத்தான்யா நாங்கள்ளாம் புடவை கட்டுறதே! இதுல புடவை எப்படி இருந்தா என்னய்யா?"

"உனக்கு ஒரு புடவை வாங்கித்தரவா?" என்றான்.

"என்னய்யா நீ, உன் பேச்சே அலாதியா இருக்குதே? எனக்கு நீ ஏன் புடவை வாங்கித்தரணும்?"

"வெளியெடத்துல என் கூட இந்த மாதிரி வந்தா எனக்கு நல்லா இல்லைனு வச்சுக்கயேன்?"

முருகன் கோவில் எதிரே புடவைக்கடையில் இறங்கினோம். கடையில் இரண்டு புடவைகள் பார்த்தேன். என்ன தோன்றியதோ, இரண்டையுமே வாங்கிக் கொண்டேன். "யோவ், ரெண்டு புடவை எடுத்தேன்யா. நீ கண்டிப்பா கணக்குல கழிச்சுக்கயா, அப்பத்தான் எடுத்துக்குவேன். இருயா, ஒரு புடவைய இங்கயே மாத்திக்கிட்டு வரேன்"

"சரி"

புதுப்புடவையில் வெளிவந்த எனக்குப் புத்துயிர் பிறந்தது போலிருந்தது. பொன்சாமியின் ஆட்டோ அருகில் ஒரு சிறுவன் லாட்டரிச்சீட்டு விற்றுக்கொண்டிருந்தான். "யக்கா, ஒரு சீட்டு வாங்குக்கா. முதல் பரிசு பத்து கோடிக்கா." "வேணாம் போடா" என்று வண்டியில் ஏறி உட்கார்ந்தேன். "எப்டியா இருக்கு புடவை?" என்றேன். புன்னகைத்தான்.

"போணி பண்ணுக்கா" என்று விடாமல் கெஞ்சினான் சிறுவன்.

"டேய், கைல சில்லறை இல்லடா" என்று நான் சொல்லச்சொல்லக் கேட்காமல், "சார், நீ வாங்கிக்க சார். உனக்குத்தான் விழப்போவுது" என்று கெஞ்சினான் சிறுவன்.

"ஒரு சீட்டு வாங்குயா, என்னவோ சின்ன பையன்.. கேடித்தனம் செய்யாம பொழக்கிறான் இல்ல?" என்றேன்.

"சரி. அஞ்சு சீட்டு எடுக்கிறேன், நீயே உன் கையால எடுத்துக் கொடு" என்றான், என்னிடம்.

எடுத்துக் கொடுத்தேன். என்னிடமே கொடுத்து விட்டு, "நீயே வச்சுக்க" என்றான்.

"லாட்டரியாவது மண்ணாவது, எனக்கேதுயா அத்தனை அதிர்ஷ்டம்?"

"பரிசு விழுந்தா எனக்கு பாதி கொடுத்துரணும், சரியா?" என்றான்.

"சத்தியமா குடுத்துறுவேன்யா" என்றபடி லாட்டரிச்சீட்டுக்களைச் சுருட்டி என் இடுப்பில் செருகினேன்.

"பரிசுப்பணத்தை வச்சுக்கிட்டு என்ன செய்யப்போறே?"

"சுதந்திரம் வாங்கப் போறேன்"

"சுதந்திரமா?"

"பத்தினியானாலும் பஜாரியானாலும், பொண்ணுக்கு சுதந்திரம் வேணும்யா. அதுக்கெல்லாம் எத்தினி காந்தி வந்தாலும் பத்தாது. பஜாரிக்காவது பணம் கொடுத்தா விடுதலை. ம்...இதெல்லாம் உனக்கு என்ன தெரியப்போகுது?"

"சரி, இப்ப எங்கே போகலாம் சொல்லு" என்றான்.

நீண்ட நேரம் யோசித்து விட்டு, "தப்பா நினக்காதயா. ஆறு வருசம் கழிச்சு இப்பத்தான் புதுப்புடவை கட்றேன். பத்து நிமிசம் முருகன் கோயிலுக்கு போலாம்னு தோணுதுயா, பரவாயில்லயா? அதுக்கும் கணக்குல அம்பது ரூவா கழிச்சுக்க" என்றேன்.

"அதெல்லாம் வேண்டாம்" என்று சிரித்தான். "நீ போயிட்டு வா. நான் இங்க வண்டில இருக்கேன்" என்றவன், "இந்தா இதை அப்படியே உண்டியல்ல போட்டுரு, தானம் செஞ்சுடு, இல்ல ஏதாவது பண்ணிரு" என்று ஒரு காகித உறையைக் கொடுத்தான். உறைக்குள் ரூபாய்க் கற்றை தெரிந்தது. அவன் முகத்தில் பொருள் செறிந்த புன்னகை. என்ன சொல்கிறான் இவன்?

"காசுடி. காசு.
ஒரு பொண்ணை தொழில்ல இறக்க முடியலைனா எத்தனை நஷ்டம் தெரியுமா?
சின்னவளுக்கு பதிலா நீ தான் என் முதலைத் திருப்பித் தரணும்". விகாரமாகச் சிரித்தான்.
"நீ என்ன சொன்னாலும் கேட்டுக்குறேன், என்னை அடிக்காதேணே.
இருக்குற காசெல்லாம் நீயே எடுத்துக்கண்ணே"
"பொறம்போக்கு. சின்னவளுக்கு முப்பதாயிரம் ரூபாய். நீதான் தரணும். எப்படிறீ குடுப்பே?"
என்று அவள் நெஞ்சில் மூச்சைப் பிழிவது போல் அழுத்தினான்.
அதிர்ந்தாள். இங்கே விடுதலைக்கு விலை முப்பதாயிரமா?
"உன் கிட்டே எங்கடி தேறும்? நீயே கிழிஞ்சு போன நாறு, உனக்கு எவன் குடுப்பான் அத்தனை காசு?
அதான், உன்னை உறுப்பு மார்கெட்ல வித்துரலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
உன்னோட உறுப்புங்களுக்கு நாப்பது அம்பதாயிரம் கிடைக்கும்.
உனக்கும் சின்னவளுக்கும் சேத்து நீயே கடனை அடச்சிட்ட மாதிரி இருக்கும்"
என்றபடி அவள் கண்களைக் கத்தியால் நோண்ட வந்தான்.
"வேண்டாம்ணே, என்னைக் கொன்னுறாதண்ணே.. கடவுளே கடவுளே.."
என்று முகத்தைப் மறைத்துக்கொண்டு அழுதாள்.
பயத்தில் உடல் நடுங்கி சொட்டு ஒன்றுக்குப் போனாள்.
"ரெண்டு நாள் டயம் தரேன், அதுக்குள்ளாற சின்னவளை கொணந்து சேத்துரு.
இல்ல, உன்னை கூறு போட்டு வித்துறுவேன்".
அவள் முகத்தில் கத்தியால் அறைந்தான்.
"அவ எங்கிருக்கான்னு எனக்கு சத்தியமா தெரியாதுண்ணே"
என்றவளை வெறித்துப் பார்த்தான்.

"சரி, பத்து நிமிசத்துல வந்துருவன்யா. ரொம்ப நன்றியா". என் கண்ணில் வெளிப்பட்டக் கண்ணீரை அவன் கவனிக்குமுன் சொந்த ஊருக்கு அடுத்த பஸ் எப்போது என்று நினைத்தபடி கோயிலுக்குள் நுழைந்தேன். உண்டியலில் போடலாமென்று உறையைப் பிரித்துப் பணத்தை எண்ணிப் பார்த்தேன். முப்பதாயிரம் ரூபாய் இருந்தது. சட்டென்று திரும்பிப் பணத்துடன் ஆட்டோவுக்கு ஓடினேன். பொன்சாமி ஆட்டோவைத் துடைத்துக் கொண்டிருந்தான். "பொன், எங்கேடா அந்த கிராக்கி?".

2010/11/06

சீவகசிந்தாமணி    ள்ளி நாட்களில் பெயரளவில் அறிந்த நூலைச் சமீபத்தில் முழுமையாகப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. காப்பியக்கதை அறியாத என் போன்ற ஞானஒளிகளுக்காக, இதோ மையக்கதை.

பெரும் மதில்களும், கோட்டைகளும், மண்ணில் பரவிய வானவில் போல் வண்ணச்சாந்து தெளிக்கப்பட்டத் தெருக்களும் சூழ்ந்த இராசமாபுரம் எனும் மாநகரைத் தலைநகராகக் கொண்டு, சரயு நதி பாயும் ஏமாங்கத நாட்டை ஆண்டான் சச்சந்தன். மாமன் மகள் விசயா என்பவளை மணந்து, அவளுடன் கூடிக் களிக்கவே பிறவியெடுத்ததாக நினைத்து அரசாளும் கடமையை மறந்தான். சச்சந்தனின் தலையமைச்சர் மூவருள் கட்டியங்காரன் என்பான் பக்கத்திருந்து பழுதெண்ணும் பதர். எனினும், சச்சந்தன் அவனை நம்பி ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்து, விசயாவுடன் களித்திருந்தான்.

கருவுற்ற விசயா, தான் கண்ட தீய கனவின் விவரம் சொன்னாள். கனவின் பொருளறிந்த சச்சந்தன், தனக்கு நேரப்போகும் தீமையை முன்குறிப்பாக உணர்ந்து கொண்டான்.

அனைவரையும் தன்வசப்படுத்திய கட்டியங்காரன், சச்சந்தனுடன் போர் தொடுத்தான். அதையறிந்த சச்சந்தன் விசயாவிடம், "காதலி, நின் கனவு பலிக்கத் தொடங்கியது. கருவிலிருக்கும் மகவைக் காக்க நீ இக்கணமே மறைக. செயலற்று நின்றால் சேய்க்கு ஆபத்து. அஞ்சாதே. உனக்கு எடுப்பான மகன் பிறப்பான். அவன் எட்டுப் பெண்களை மணந்து சிறப்பான்" என்று ஆசிகள் சொல்லி, அவளை முத்தமிட்டு, மயிற்பொறியிலேற்றி அனுப்பினான்.

அழுதுகொண்டே மயிற்பொறியின் விசையை இயக்கிய விசயை, அது பறந்து செல்கையில், மன்னன் கொலையுண்டதை அறிவித்த முரசொலி கேட்டு மனங்கலங்கி விசை மாற்றாது மயங்கி விழுந்தாள். மயிற்பொறி இடுகாட்டில் இறங்கி நின்றது. சுற்றிலும் பிணங்கள் எரியக்கண்டு அஞ்சிய அஞ்சுகம், ஆங்கே ஒரு ஆண்மகனைப் பெற்றாள். மகனழகில் மயங்கிய மாதரசி, 'கோட்டை சூழ் கோபுரத்தில் இருக்க வல்லான் கோட்டான் சூழ் காட்டிலே இருக்கக்கண்டு என்னுயிர் பிரியாதிருக்கிறதே, உலக நாயகன் உனை வளர்க்கும் விதம் அறியேனே! துணையில்லையே!' என, கீழ்க்காணும் விருத்தப்பா வடித்துத் துடித்தாள்.
    மற்றிஞ் ஞாலம் உடையாய் நீ வளருமாறு மறியேனால்
    எற்றே இதுகண் டேகாதே இருத்தி யாலென் இன்னுயிரே!

கணவனின் மறைவை எண்ணிப் புலம்பியவள் மேல் கருணை கொண்ட ஒரு காட்டுத்தெய்வம் அவள் முன் தோன்றி, "மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விசயா" என்றது. திடுக்கிட்ட விசயாவிடம், "கலங்காதே. இறந்த குழந்தையை எரிக்க இங்கே கந்துக்கடன் எனும் வணிகன் வருவான். உன் மகனை அவன் கண்பட விட்டு ஒளிவோம். உன் மகன் நாடாளப் பிறந்தவன். வணிகன் வீட்டில் சிறப்பாக வளர்ந்து ஒரு நாள் நாடாள்வான். பின்னொரு நாள் நானே உன்னை அவனிடம் சேர்ப்பேன்" என்று ஆறுதல் சொன்னது.

கடுந்தரையில் கதிரவனாய் ஒளிவீசும் குழவியைக் கண்டுத் திகைத்தான் கந்துக்கடன். சுற்றும் பார்த்துக் கையிலெடுத்தான். குழந்தை தும்ம, "சீவ" என்றொலித்தது. அதையே தெய்வத்தின் குரலாகக் கொண்டு, "இனி, நீ என் மகன். உன்னைச் சீவகன் என்பேன்" என்று பெயரிட்டு உடனெடுத்துச் சென்றான். சில நாட்களில் கந்துக்கடனுக்கு இன்னொரு மகன் பிறந்தான். அந்தக் குழந்தைக்கு நந்தட்டன் என்று பெயரிட்டு, சீவகனையும் நந்தட்டனையும் இரு கண்கள் போல் வளர்த்தான். சீவகனும் நந்தட்டனும் இணைபிரியாதிருந்தனர்.

இயல் இசை நாடகம் நடனம் வாதம் என்ற கலைகளையும், மல் வில் வாள் என்ற போர்முறைகளையும், அறம் பொருள் இன்பம் வீடு என்ற நெறிகளையும் கற்று, அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து வளர்ந்த சீவகன், வீடு பற்றிய சிந்தனையிலே உழன்று துறவறம் தழுவ எண்ணினான். அதையறிந்த அவனுடைய ஆசிரியர், சீவகனை அழைத்து அவன் பிறந்த வரலாற்றைக் கூறினார். வாளெடுத்தச் சீவகனைத் தடுத்து, "நான் ரகசியமாகக் காத்து வந்த செய்தியைச் சொன்னேன். உனக்கும் உன் தாய்க்கும் பெருமை சேர, கட்டியங்காரனைக் கொன்று நாட்டைக் கைப்பற்று. அதை நல்ல தருணத்தில் நிறைவேற்றுக" என்று சொல்லித் தவமேற்க மறைந்தார்.

காட்டுத்தெய்வம், விசயாவை வணிகன் வீட்டில் விட்டுச்சென்றது. தாயுடன் இணைந்த தனயன், கட்டியங்காரனை வீழ்த்தித் தாயின் கண்ணீர் துடைக்கக் காத்திருந்தான். இடைவேளையில் எட்டுப் பெண்களைப் பின்வருமாறு மணந்தான்.

1. கோவிந்தை: வேடுவர் கொள்ளையடித்த ராசமாபுர ஆனிரையை மீட்டு வரச் சென்ற மன்னன் கட்டியங்காரனின் சேனை புறமுதுகிட்டு ஓட, ஆயன் நந்தகோன் மனந்தளராமல் ஆனிரையை மீட்டு வருவோனுக்கு பணமும் மணமும் பரிசளிப்பதாக அறிவித்தான். செய்தி கேட்ட சீவகன் சிலையும் அம்புமெடுத்து தேரேறிச் சென்றான். சீவகனின் போர் வேகங்கண்டு கலங்கிய வேடுவர் ஆனிரையை விட்டோடினர். தன் கன்னிப்போரில் உயிர்க்கொலை தவிர்த்து ஆனிரையும் மீட்டு வந்த சீவகனைப் பாராட்டிய நந்தகோன், "நீ கட்டியங்காரனை வெல்லும் நாளை எதிர்பார்க்கிறேன். இனி என் மகளுடன் மகிழ்ந்திரு" என்று தன் மகள் கோவிந்தையை மணமுடித்து வைத்தான். நகரமெங்கும் விழா எடுத்தனர். கற்புடை மங்கையர் அவனை வாழ்த்தினர். ஈராயிரம் பசுக்களைச் சீதனமாகப் பெற்ற சீவகன், கோவிந்தையுடன் கூடிக் களித்தான்.

2. காந்தருவதத்தை: சீதத்தன் என்ற ராசமாபுர வணிகன், கடும்புயலில் எல்லாமிழந்து ஒரு தீவில் ஒதுக்கப்பட்டான். பொன்னும் ஒரு பெரிய கப்பலும் பரிசளித்து அவனிடம் தன் மகளை ஒப்படைத்தத் தீவின் மன்னன், "இசையில் தன்னை வென்றவரையே மணப்பதாக உறுதியோடுள்ளாள் என் மகள் காந்தருவதத்தை. தோற்றுப் பொலிவிழந்த மன்னர் ஏராளம். இசையால் ராசமாபுர வீரன் எவனும் இவளை வென்றால், அவனுக்கே மணமுடித்து வையுங்கள்" என்று வைரம் நிறைந்த ஐநூறு பெட்டிகளும் இளம் பேடிகள் மூன்றும் சீதனம் கொடுத்தான். வீடு திரும்பிய சீதத்தன், வல்லோரையும் வானோரையும் தத்தையுடன் போட்டியிட அழைத்தான். தத்தையை வெல்லத் துணிந்த சீவகனைத் தடுத்தக் கந்துக்கடன், "கட்டியங்காரன் கேடு செய்வான்" என்றான். அஞ்சாத சீவகன், விலைவரம்பறிதலில்லா வெண்டுகிலுடுத்து வெளிப்போந்தான். அவனைக் கண்ட அளவிலே காதல் கொண்ட தத்தை, கலையறிவைச் சோதிக்கப் பல்வகை யாழினை முன்வைத்தாள். ஒவ்வொன்றன் திறம் சொல்லி மறுவற்ற யாழெடுத்து விரலாற்றாடவி விரவப்பாடினான் சீவகன். அவன் இசையில் மயங்கி, பாடுவாளாய்த் தொடங்கிய தத்தை பாடாது தோற்றாள். அலையன்ன காதலொடு மலையன்ன மாலையொடு வந்தாளை விழுங்குவானாய் நோக்கினான் சீவகன். பெரும் காமத்தீயால் அவசமுற்ற தத்தை, சீவகனே வென்றானென்றாள். கட்டியங்காரன் புழுங்கிப் போர்தொடுத்தான். சிங்கமென வெகுண்டான் சீவகன். "என் பொருட்டு இத்துன்பமோ?" என்று பதறிய தத்தையை அணைத்து, "கலங்காதே, ஒரு கையால் உனையணைத்து மறு கையால் பகை வெல்வேன்" என்றான். தம்பி நந்தட்டனுடன் இணைந்துப் பகைவரை விரட்டியடித்தான். பின்னர் நெய் சொரிந்த வேள்வித்தீ முன் தத்தையை மணந்தான்.

3. குணமாலை: வணிகன் குபேரமித்திரனின் அழகு மகளிர் குணமாலை, சுரமஞ்சரி இருவரும் நறுமணச் சுண்ணமிடிப்பதில் வல்லவர்கள். எவர் சுண்ணம் சிறந்ததென்று போட்டி வர, இதைத் தீர்க்க வல்லானென்ற தோழியர் சொற்படிச் சீவகனிடம் சென்றனர். கண்டவுடனே காதல் கொண்டனர். குணமாலையின் சுண்ணம் சாலச் சிறப்புடைத்து என்ற சீவகனிடம், அதை மெய்ப்பிக்கச் சொன்னார்கள். சோலைச் சுரும்புகள், தேனீக்கள், வண்டுகள் மற்றும் ஞிமிறுகளை அழைத்து இருவரின் சுண்ணப்பொடிகளையும் காற்றில் தூவினான் சீவகன். உடனே அவை குணமாலையின் சுண்ணத்தைத் தேடி மொய்த்தன. சுரமையின் சுண்ணத்தில் மகரந்தக்குறை புலப்பட்டது. தோற்ற சுரமை, இனி ஆடவரே தேவையில்லை என்று பெண்களுடன் வாழ்ந்தாள். வெட்கத்தால் ஓடிய குணமாலையை ஒரு மதயானை துரத்த, மலைமேற் பாயும் மின்போற் பாய்ந்து யானையை அடக்கினான் சீவகன். அவனது வீரம் கண்ட குணமாலையின் மனதில் கடல்நீர் போல் பெருகியது காதல். தன் எண்ணத்தை ஒரு கிளியிடம் சொல்லித் தூதனுப்பினாள். சீவகனும் கிளியிடம் தன் சம்மதத்தைத் தெரிவித்தான். மணமுடித்த சீவகனும் குணமாலையும் ஊடிக்கூடி குறையா இன்பக்கடலுள் அழுந்தினர். இடையில் மதயானை அரசயானை என்று தெரியவந்து, சீவகன் மேல் அரசகுற்றம் சுமத்தினான் கட்டியங்காரன். கட்டியங்காரனைக் கொல்ல வெகுண்ட சீவகனை அவனுடைய தாய் தடுத்தாள். ஒரு விஞ்சகன் சீவகனை எடுத்துச்சென்று விண்ணகத்தே மறைத்தான். சீவகனைக் காணாத கட்டியங்காரனின் ஆட்கள், இறந்து கிடந்த ஒருவனுக்கு சீவகன் போல் அலங்காரமிட்டு, சீவகனைக் கொன்றதாகச் சொன்னார்கள்.

4. பதுமை: விஞ்சையுலக அரசவையில் தேசிகப்பாவை எனும் நாடகப்பெண் சீவகனைக் கண்டதும் மையல் கொண்டாள். இவனை அடையவேண்டுமே என்று புலம்பினாள். ஆனால் சீவகன் பிடிப்பில்லாது மண்ணுலக நினைவில் வாழ்ந்திருந்தான். மன்னன் மகள் பதுமையை, தோழியரோடு சோலையில் விளையாடிய வேளையில், பாம்பொன்று தீண்டியது. மயங்கி விழுந்த பதுமையைக் கண்டு அலறிய தோழிகள் மன்னரிடம் செய்தி சொல்லிப் பதறினார்கள். மருந்து பல கொடுத்தும் நஞ்சிறங்காதது கண்டு கலங்கிய மன்னன் சீவகனை அழைத்து, "என் மகள் பால் அருள் செய்தி" என்றான். பதுமையின் முடியில் மருந்தைத் தேய்த்து நஞ்சை இறங்கச் செய்தான் சீவகன். உறங்கினார் எழுமாப்போல எழுந்த பதுமை, முன் நின்ற சீவகனைக் கண்டு நாணி ஓடினாள். சோலையில் அன்று மாலை பதுமையைக் கண்ட சீவகன், 'தேவமகளோ இயக்கியோ இவள் யார்தாமென்று' மயங்கி அவள் கூந்தலில் மலர் தைத்தான். காதல் வெள்ளத்தில் நாணம் புல்லாய்ச் சாய, பதுமையும் உடல் சிலிர்த்து அவனைத் தழுவினாள். உடனே அரசன் இருவருக்கும் மணமுடித்தான். பதுமையுடன் உறவாடித் திளைத்த சீவகன் ஒரு நாள் சோலையில் இளைப்பாறுகையில், தேசிகப்பாவையைக் கண்டு மயங்கினான். முன் கொண்ட ஆவலால் தேசிகப்பாவையும் மயங்க, இருவரும் கூடிக் களித்தார்கள். பிறகு யாரிடமும் சொல்லாமல் வேறு நாடு சென்றான் சீவகன். அவன் புணர்ந்த பெண்கள் கலங்கினார்கள். பின், மருவுங்காலத்து மகிழ்ந்தார் பிரியுங்காலத்து பேதுறுதல் மடமையென்று தெளிந்தார்கள்.

5. கேமசரி: வழியிலொரு தவப்பள்ளியைக் கண்ட சீவகன், ஆங்கிருந்தோரிடம் தன் கதையைச் சொன்னான். "குருதியாற் கறைபட்ட வெண்துகிற் குருதியாற் தூய்மையாமோ? புலனடக்க நெறி அறி" என்று அவர்கள் வல்லினம் மிக மொழிந்தனர். "அப்படியே செய்தாற் போனது" என்ற சீவகன் அவசரமாக அங்கிருந்து நகர்ந்து எதிரே தென்பட்ட ஒரு தெய்வத்தைக் கண்டு,
    காதலா லெண்வினையும் கழிபவென்றி அக்காதல்
    ஆதலா லெண்வினையும் கழியாவென்றும் அறைதியாற்
    போதுலா தேன்றுளித்துப் பொழிந்துவண்டு திவண்டுலாம்
    கோதைதாழ் பூம்பிண்டிக் கோமானின்னைத் தொழுதேனே!
என்று அழகு தமிழில் புலம்பி, தக்கநாடு சேர்ந்தான். அந்நாட்டில் சுபத்திரன் மகள் கேமசரி பேரழகி எனும் கர்வமுடையாள். "யாரைக் கண்டு நாணுகிறாளோ அவனையே மணப்பாள்" என்று நிமித்தகர் சொன்னதால், மகளுக்கேற்ற மணமகனுக்காகக் காத்திருந்தான் சுபத்திரன். அவ்வழி வந்த சீவகனைக் கண்ட கேமசரி, நாணமுற்றாள். சீவகனும் தன் உள்ளத்தே பெருகியக் காதல் வெள்ளத்தைக் கண்ணிற் கொட்டினான். உடனே சுபத்திரன் இருவருக்கும் மணமுடித்தான். சீவகனும் கேமசரியும் வேறு வழியிலாதுக் கூடி மகிழ்ந்தனர். துயில் விழித்த கேமசரி, சீவகனைக் காணாது பதறினாள். அவளைப் பிரிந்த சீவகன், வழியில் கண்ட ஏழைக்குத் தன் பொருளையெல்லாம் வழங்கி, "கள்ளும் ஊனும் காமமும் தீங்கு; தானமும் ஈரமும் தவமும் பாங்கு" என்று சொல்லிப் போந்தான்.

6. கனகமாலை: காட்டு வழியே நடந்த சீவகன் ஏமமாபுர நாட்டையடைந்தான். மன்னன் தடமித்தன் தன் மகன்களுக்கு கல்வி கேள்வி வழங்க, சீவகனைப் பணித்தான். மன்னர் மகள் கனகமாலை சீவகனைக் கண்டு காமவேட்கைப் பெருகி மெலிந்தாள். நிலையறிந்த மன்னன் சீவகனையழைத்து, "களிறனைய தோன்றலே, என் மகளை ஏற்றுக்கொள்ளுதி" என்று கனகமாலையை அவனுக்கு மணமுடித்த்தான். சீவகனும் கனகமாலையுடன் வழக்கமெனக் கூடிக்களித்தான்.

    இவ்வண்ணம் சீவகன் இடர்பட்டிருக்க, ராசமாபுரத்தில் தனித்திருந்த காந்தருவதத்தை, தான் முன்பு கற்ற மதிமுகமென்னும் வித்தை வழியாக, 'கவலையின்றி சீவகன் அலையவும் நான் கைவளை தொலையவும் இஃதென்ன பேதமை!' என, சீவகனின் திருவிளையாடல்களைத் தொடர்ந்து வந்தாள். ராசமாபுரக் காவலர்கள் சீவகன் இறந்தானென அறிவித்தது கேட்டு சீவகனின் தம்பி நந்தட்டன் தத்தையை அணுகி, மூன்று வில் தொலைவில் நின்று வணங்கினான். "கணவன் இறந்தானேல் எரிகின்ற தழலுள் மூழ்குதல் கற்புடை மகளிர் கடனன்றோ? இவ்வாறு அலங்காரம் அணிவது முறையோ?" என்று பணிவுடன் கேட்டான். "அண்ணல் இன்னல் காணுதி! கணத்தொரு கன்னியொடு மணவின்பம் துய்க்கையில் யாம் வாடுவதெற்றுக்கு?" என்ற காந்தருவதத்தை, மதிமுக வித்தையினால் சீவகன் கனகமாலையைக் கூடிக் கொண்டிருப்பதைக் காட்டினாள். இலவசக் காட்சி கண்ட தம்பி நந்தட்டன் குறுகி, அண்ணலைக் காண்பேன் என்றான். தத்தையும் தன் வித்தையினால் அவனை ஏமமாபுரம் புகச் செய்தாள். சீவகனைக் கண்டதும் பாசம் பொங்க கண்ணீருகுத்துக் கைகூப்பித் தொழுது விழுந்தான் நந்தட்டன். வீழ்ந்தவனை நிறுத்தி மும்முறை மார்புடன் தழுவிப் பிரிவுநோய் தீர்த்தான் சீவகன். மன்னனிடமும் கனகமாலையிடமும் தன் கதையைச் சொல்லி, கட்டியங்காரனை அழிக்க வேண்டிய அவசியத்தைச் சொன்னான். மன்னன் வழங்கிய நால்வகைச் சேனையுடன் சகோதரர்கள் ராசமாபுரத்துக்குத் திரும்பினார்கள். தெய்வத்தாற் பிழைத்தான் சீவகன் எனப் பறைசாற்றினார்கள். தெய்வம் தவறியதைத் தான் முடிப்பதாகச் சூளூரைத்தான் கட்டியங்காரன்.

7. விமலை: கட்டியங்காரனைக் கொல்ல இதுவே தருணமென வீராவேசமூட்டினாள் விசயா. அன்னையின் துயர் அறுக்கவும் மக்களின் நலம் பெருக்கவும் கட்டியங்காரனைக் கொல்லச் சபதமிட்ட சீவகன், போராடும் தோழர் தேடி நகரத்துள் போந்தான். அங்கே ஒரு அழகி முத்து வடங்கள் கொங்கையைப் புடைப்ப மேகலையும் சிலம்பும் புலம்பப் பந்தாடிக் கொண்டிருந்தாள். பந்து தெருவில் விழுந்தோடியது. நெற்றிச்சந்தனமும் மார்பின் குங்குமமும் பந்தாடிய வியர்வையிற் கரையும் வானவில் போலுருக, துகில் நெகிழ்ந்து மேகலை தோன்ற, வீழ்ந்த பந்தின் விழி தொடர்ந்தாள். வீதியில் வந்த சீவகன் தோற்றம் கண்டு காமுற்றாள். அவள் தோற்றம் கண்டு சீவகனும் வேட்கை தலைக்கேற்பட்டு, "இவளைக் கூடியன்றிக் கணப்பொழுதேனும் வாழ்வேனோ?" என்று புலம்பினான். விமலையின் தந்தை சாகரதத்தன் அன்று ஆறு கோடிப்பொன் வணிகம் செய்தான். 'நின் மகளுக்குரியவர் தோன்றும் நாளில் நின் பொருளெல்லாம் விற்கும்' என்று முன்னர் அசரீரி சொன்னது நினைவுக்கு வந்து, சீவகனைக் கண்டு மருகன் வந்தானென்றே மகிழ்ந்தான். விமலையை மணமுடித்து வைத்தான். விமலையுடன் கூடி மகிழ்ந்திருந்த சீவகன், தான் நகர் வந்த காரணம் நினைவுக்கு வர, 'அட, மறந்தேனே!' என்று மீண்டும் தோழர் தேடிப் போந்தான்.

8. சுரமஞ்சரி: சோலையிற் பதுங்கியிருந்த தோழரைச் சந்தித்து, மணவினை விவரம் சொன்னான் சீவகன். தோழர்கள் வியந்து, "புக்கவிடமெலாம் புதுமணம் செய்தவா, இங்கே சுரமை என்றொரு அழகி ஆண்களைக் காணவும் ஒருப்படாது உள்ளாள். உன் வல்லபம் அவளை வெல்லுமோ?" என்று சீண்டினர். "சுரமையை வயப்படுத்தத் தவறினால் அன்பில்லா மங்கையரைத் தீண்டிய தீயோனாவேன்" என்று சூளுரைத்து, ஒரு முதிய அந்தணன் வேடத்தில் சுரமையகம் ஏகினான் சீவகன். முதிய அந்தணர் மேல் இரக்கங்கொண்டு சுரமையைக் காண அனுமதித்தனர் தோழியர். மயிலன்ன சுரமையும் முதியோன் வேடத்திலிருந்த சீவகனும் சந்தநடையில், 'தன்ன-நன தன்ன-நன தான-நன தான' என்ற மெட்டுக்கேற்ப, பின்வருமாறு உரையாடினர்:
    வந்தவர வென்னையென வாட்கண்மட வாய்கேள்
    சிந்தைநலி கின்றதிரு நீர்க்குமரி யாட
    அந்தில்லதி னாயபயன் என்னைமொழி கென்றாள்.
    முந்திநலி கின்றமுது மூப்பொழியும் என்றான்.

இதற்கிடையில் தோழியர் வீணையிசைக்க, தன்னை மறந்த சீவகன் தமிழ்ப்பண் பாடினான். அவன் குரலில் மயங்கி, "சீவகன் ஒருவனே இவ்வண்ணம் புவி நிற்கவும் அசையவும் பாட முடியும். முதியவரே, நீவிர் யார்?" என்று சுரமையும் தோழியரும் வினவினர். "நான் சிரித்துப் பழகிக் கருத்தைக் கவரும் ரசிகன்" என்று புன்னகையுடன் அகன்றான் சீவகன். மறுநாள் காமன் கோட்டத்திற்குச் சென்ற சுரமை, "என் மனங்கவர்ந்தவன் சீவகன் மட்டுமே. சுண்ணத்திற் குறை கண்டதாற் கோபத்தில் நான் ஒதுங்கினாலும், அவனே என் காதலன். அவனை என்னிடம் சேர்த்தால் என் செல்வமெல்லாம் தருவேன் காமனாரே" என்று உளமாற வேண்டினாள். முன்னேற்பாட்டின்படி அங்கே ஒளிந்திருந்த சீவகனின் தோழன், "கன்னிகையே, நீ சீவகனைக் காண்பாய். அவன் உன்னவன்" என்று குரல்கூட்டிச் சொன்னான். காமன் வரம் கொடுத்த களிப்பில் திரும்பிய சுரமஞ்சரி, வழியில் சீவகனைக் கண்டாள். உடனே இருவரும் கூடிக்களித்தனர். பின் சீவகன் அவளையணைத்து, "நின்னை மணப்பேன்" என்றான். மறுநாள் சுரமையின் பெற்றோர் ஒப்ப இருவரும் மணந்தார்கள்.

    சுரமையும் சீவகனும் களித்திருக்கையில் தோழர்கள் அண்டை நாடுகளின் நட்பைப் பெற்றுத் திரும்பினர். கட்டியங்காரனைப் போருக்கழைத்தான் சீவகன். முரசங்களும் சங்குகளும் கொம்புகளும் பம்பைகளும் ஒலிக்க, கடல்முழக்கத்தை ஒத்திருந்தது போர்க்கள ஓசை. கட்டியங்காரன் தாமரை வடிவில படை வகுத்து வந்தான். சீவகனும் தோழர்களும் நந்தட்டனும் நட்புநாட்டுச் சேனைகளுடன் கட்டியங்காரன் சேனையைக் கொன்றொழித்தனர். சீவகனும் கட்டியங்காரனும் நீண்டு பொருதார்கள். முடிவில் சீவகன் வென்றான். கட்டியங்காரன் மாண்டான். விசயாவின் மனம் குளிர்ந்தது.

தோழரும் தம்பியும் தாயும் சூழ, நன்னாளில் மன்னனாய் முடிசூடிக் கொண்ட சீவகன், நந்தட்டனிடம் தன் மனைவியர் எண்மரையும் அழைத்து வரச் சொன்னான். பிரிவினால் துன்புற்றிருந்த எண்மரும் மன்னர் கோலத்தில் சீவகனைக் கண்டு மகிழ்ச்சி கொண்டனர். நட்பு நாட்டரசன் கோவிந்தன் தன் மகள் இலக்கணையை சீவகனுக்கு நன்னாளில் மணமுடித்து வைத்தான். தான் மணந்தவரையெல்லாம் அரசியராக்கினான் சீவகன். சீவகன் ஆட்சியில் மாதம் மும்மாரிப் பொழிந்தது. மக்கள் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தார்கள். கல்வியும் செல்வமும் கொழித்தது.

விசயா சீவகன் பிறந்த இடுகாட்டை அறச்சாலையாக்கினாள். அங்கே தனக்குதவி செய்த காட்டுத் தெய்வத்துக்கொரு கோட்டம் கட்டினாள். "எல்லோரும் இன்புற்றிருங்கள்" என்று வாழ்த்தித் துறவறம் பூண்டாள்.

பல ஆண்டுகள் ஆட்சி புரிந்து மக்களன்பைப் பெற்ற சீவகன், மெய்ப்பொருள் எதுவென ஞானத்தாலுணர்ந்தான். கந்துக்கடனை அரசனாக்கி, நந்தட்டனை இளவரசாக்கினான். தன் கடமை முடிந்ததெனக் கருதித் துறவறம் பூண்டான். சீவகனைத் தொடர்ந்து மனைவியரும் துறவறம் பூண்டனர். சீவகனும் தேவியரும் சமணப்பெருமானைத் துதித்து வீடு பெற்றனர்.

சீவகனின் சாகசங்களைச் செம்மொழியில் படித்ததும் சில கேள்விகள் தோன்றின:

1. தமிழ்நாட்டுக்கும் இந்தக் கதைக்கும் துளிக்கூடத் தொடர்பில்லை. இதை எப்படித் தமிழ்க்காப்பியமாக ஏற்றார்கள்? காவிரி பாயும் ஏமாங்கத நாடு என்று ஒரு ஆறுதலுக்காக எழுதியிருக்கலாமே? ஐந்தில் தொன்மையான சீசி மட்டுமே கிளைக்கதைகள், சாகசங்கள், மர்மங்கள், போர், மனித அமனித நிலைகள், இடுகாடு, காதல், சோகம், ஏமாற்று, அநீதி, அறந்தேடல் என்று பலவகைக் காப்பியச் சாதனங்கள் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. இதை ஏன் பாட நூல்களில் எளிமைப்படுத்தி முன்வைக்கவில்லை? தேரா மன்னாவுக்கு அளித்த சலுகைகள் தேவர் மொழிக்குத் தரவில்லையே? சுவாரசியமாக இருந்திருக்குமே?

2. கணவன் சிதையில் கற்புடை மனைவி சேரும் அவசியத்தை நைசாகச் சேர்த்திருக்கிறாரே திருத்தக்கதேவர்? கற்பின் சின்னம் சொன்ன அதே வீச்சில், அசந்தால் 'கூடிக்களிப்புறு' சீவகனை, ஒரு காப்பிய நாயகனை, ஏன் அப்படிச் சித்தரித்தார் தேவர்? அந்தக் காலப் பெண்கள் என்ன லேசா? சீவகன் கற்புடையவனா? ஒழுக்கம் கெட்டவனா? தத்தையின் மதிமுக (கட்சிப் பெயர் போல இல்லை?) வித்தை பற்றி விரிவாக வருமென்று எதிர்பார்த்தேன். கால/பரிமாணப் பயணம் பற்றிக் கோடிட்டு மறந்துவிட்டாரே? காமக்களியாட்ட முறைகளும், போர் முறைகளும், தகவல் தொடர்பு முறைகளும், மத இன மரபு நெறிகளும் (பாப்பாரப் பாம்பு என்கிறார் ஒரு இடத்தில்), அரசியல் தந்திரங்களும் விவரமாகச் சொல்லியிருக்கும் திருத்தக்கதேவரின் பின்னணி என்ன? யாரிவர்? மெத்தப் படித்தவரா? அரச பரம்பரையா? காப்பியப் புலவர்கள் தங்களைப் பற்றி ஏன் விரிவாகச் சொல்வதில்லை? தேவரின் கற்பனையும் உவமைகளும் சொல்லாட்சியும், அவரைக் கட்டித்தழுவச் சொல்கிறது. 'விலைவரம்பறிதலில்லா வெண்டுகிலுடுத்து வெளிப்போந்தான், விரலாற்றாடவி விரவப்பாடினான்' என்று வேகமாகப் பிழையில்லாமல் சொல்ல முடியுமா?

3. 'எட்டுக்கு மேல் எட்டாதிருப்பான்' சீவகன் என்று நினைத்தால், ஒன்பதாவது திருமணமும் செய்து வைத்திருக்கிறாரே? தேவர் படித்தது சுருளிராஜக் கணக்கா? இதில் பாருங்கள், கோவிந்தை திருமணத்தில் கொஞ்சம் சிக்கல் இருக்கிறது. அரச மரபில் வந்தவர்கள் முதல் திருமணத்தை அரச குடும்பத்தில் தான் முடிக்க வேண்டுமாம். கோவிந்தை வணிக மரபு, சீவகனோ அரச மரபு. அதனால் சீவகன் 1) தன் நண்பன் பதுமுகக் குமரனிடம் கோவிந்தையைத் திருமணம் மட்டும் செய்யச் சொல்லிவிட்டு, தான் அவளுடன் கூடிக்களித்தான்; அல்லது, 2) பதுமுகக் குமரன் என்ற வணிக மரபுப் பெயரை மாற்றிக் கொண்டு கோவிந்தையை மணந்தான். பெயர் மாற்றமென்று முதலில் நினைத்தேன். எட்டுத் திருமண ஆசி பலித்தது என்று கொண்டால், முதல் திருமணம் தில்லுமுல்லா? பின் கதையில் பதுமுகக் குமரனும் வருவதால், சீவகன் கோவிந்தை திருமணச் சிக்கல் எப்படித் தீர்வானதென்று என்னால் கோனாருரை இல்லாமல் புரிந்து கொள்ள முடியவில்லை. சரியான விவரம் தெரிந்தால் சொல்வீர்களா?

4. மாயாஜாலம், மங்கைகள் நடனம், எட்டு காதலிகள், ஒன்பது மனைவிகள், போதாத குறைக்கு இரண்டு கூடல் பெண்கள், வீர வசனம், கற்பழிப்பு, மதயானை அடக்கம், வாட்போர், மாறுவேடம், தாய்ப்பாசம், குடும்பப்பாசம், கனவு, இசை - இந்த அரசக்கதை மசாலாவை எம்ஜிஆர் எப்படி விட்டுவைத்தார்? இது ஏன் திரைப்படமாகவில்லை? (ஒரு வேளை எனக்குத் தெரியாமல் இந்தப் படம் வந்திருந்தால் சொல்லுங்கள். உடனே பார்த்தாக வேண்டும்). எந்திரனைப் பீச்சாங்கையில் மடக்குமளவுக்குப் பிரம்மாண்டமாகப் படமெடுக்க வேண்டும் என்று கமலகாசன் துடிப்பதாகப் படித்தேன். யாராவது சீசி என்று அவர் காதில் ஓதுவார்களா? கமலகாசனுக்கு ராஜபார்ட் பொருந்தும். மன்மதலீலை பார்ட் 2 பண்ணவும் ஒரு வாய்ப்பு. சூபர் ஹிட்டுக்கான அத்தனை அம்சங்களும் கொண்ட இந்த இலவசக் கதையை யாராவது கமலகாசனை வைத்துத் திரைப்படமாக எடுப்பார்களா? கதை கூட முப்பது வருடங்களுக்கு முன், தானே எழுதியதாகக் கமலகாசன் சொல்லிக்கொள்ளலாம். தட்டிக்கேட்க நாதியில்லை.(படம் எடுத்தால் எனக்கொரு ஓசிப் பாஸ் கொடுக்க வேண்டுகிறேன்)

5. இந்தக் காப்பியமெல்லாம் இந்நாளில் யாராவது படிக்கிறார்களோ? பொறுமையாக இதுவரை படித்த உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்? வேண்டுமானால் குண்டலகேசி பற்றி எழுதட்டுமா?