2014/10/31

இன்று போல் என்றும்



    நீண்ட நாட்களாகவே இதை எழுதியாக வேண்டும் என்ற வேகம் இருந்து வந்தது. நானறிந்த பெரும்பாலோர் எழுதிவிட்டார்கள். great mind கீதா சாம்பசிவம் அவர்களும் எழுதிவிட்டார்கள் என்றதும் 'அடடா, நம்மை முந்திக்கொண்டார்களே! உடனே எழுத வேண்டும்' என்று எண்ணினேன். கீதா அவர்கள் எழுதி சில மாதங்களாகிவிட்டன.

மேற்கண்ட வரிகளை எழுதி ஒரு மாதமாவது இருக்கும் :-).

எழுத வேண்டியக் கட்டாயம் எதுவுமில்லை. அவசியம் சிறிது உண்டு. தேவை மிக உண்டு. கட்டாயம் அவசியம் தேவைக்குமான வேறுபாடுகளை ஒட்டி வம்படிக்க ஜீவி அவர்களின் பூவனத்துக்குப் பின்னூட்டமிட வாருங்கள். சொல் விளையாடலாம்.

அப்படி எதைப் பற்றி யாரைப் பற்றி எழுத வேண்டிய தேவை? என்ன அவசியம்?

வை.கோபாலகிருஷ்ணன் அவர்களைப் பற்றித்தான். தேவைக்குப் பிறகு வருகிறேன். முதலில் அவசியம்.

ஒரு வருடம் போல் சிறுகதை விமரிசனப் போட்டி நடத்தி வருகிறார் கோபாலகிருஷ்ணர். விமரிசனப் போட்டி என்று எண்ணினால்... எங்கள் பிளாக் தவளைக்கதைப் போட்டி விதிகள் போல... இடையிடையே அடிக்கடி நினைத்த மாத்திரத்தில் உபரி போட்டிகள் விதிகள் பரிசுகள் என்று அமர்க்களப்படுத்தி விட்டார். பரிசுகளிலும் ஒரு இனியக் குழப்படி. ஒரு அளவைக்கு ஒரு பரிசு என்று இல்லை - மூன்று இடங்களுக்கு எட்டு பரிசுகள் தருவார் சில நேரம். [லாட்டரிச்சீட்டுக் காரர்கள் இவரிடம் கொஞ்சம் கற்றால் எனக்கும் ஏதாவது பரிசு கிடைக்கலாம்]. முத்தான பரிசு, இனிப்பான பரிசு என்று அடைமொழியோடு வழங்குவது போதாமல் ஹேட் ட்ரிக், டபுல் ஹேட் ட்ரிக், ட்ரிபில் ஹேட் ட்ரிக் என்று ட்ரிக் மேல் ட்ரிக் செய்து பரிசு வழங்கி வருகிறார்.

போட்டி, பரிசு என்று அமர்க்களப்படுத்தியது ஒரு புறம் இருக்கட்டும். இதன் பின்னே புலப்படாது புலப்படும் ஒழுங்கும் சீரும் கவனிக்கப்பட வேண்டியவை. பாராட்டுக்குரியவை.

நடுவர் போல் ஓரிருவர் பின்னணியில் இருந்தும், இது தனி மனித உழைப்பு, சாதனையென்றே கொள்கிறேன். தனி மனிதராக வை.கோவின் உழைப்பு மலைக்க வைத்தது. வைக்கிறது. விமரிசனப் போட்டிக்கான அறிவிப்பு, உறுத்தாத தொடர் நினைவூட்டல், விமரிசனம் வரப் பெற்றதற்கான உடனடி அஞ்சல், பரிசு கிடைப்பதாக இருந்தால் மர்மமான முன்னறிவிப்பு, பரிசு விமரிசனங்களை ஒவ்வொன்றாகப் பிரம்மாண்டமான முறையில் பதிவிடல் (இராஜராஜேஸ்வரி அவர்கள் மட்டுமே படம் அனிமேஷன் என்றுத் தேடித்தேடிச் சரமாகத் தொகுத்துக் கொண்டிருந்தார் - அதற்கே அவருக்கு எங்கிருந்து நேரம் கிடைக்கிறது என்று நினைத்ததுண்டு. கோபாலகிருஷ்ணர் நாலு படி மேலே போய்விட்டார்), பதிவுகளைத் தொடர்ந்து 'காணத் தவறாதீர்' அறிவிப்புகள், பரிசுக்கணக்கு விவரங்கள்... இவை எல்லாம் பிறழாதிருக்க ஒரு நாளைக்கு பத்து மணி நேரமாவது உழைக்க வேண்டியிருக்கும்.. இவற்றுக்கும் மேலாக பரிசுகளைக் கிரமமாக வழங்குவதற்கான விதிகள், ஒழுங்குகள் பற்றிய விடாத் தொடர்பு...

முடிந்ததா என்று பார்த்தால் விமரிசனப் போட்டி நிறைவு விழா என்று வரிசையாக அறிவிப்புகள்.

எங்கிருந்து வருகிறது இவருக்கு இத்தனை உற்சாகம்? அவர் வீட்டு ஜன்னல் பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன் - அதற்கு இத்தனை சக்தி கிடையாது என்று எனக்குத் தெரியும். இத்தனை உழைப்புக்கும் முனைப்புக்கும் இவருக்கு எங்கிருந்து நேரமும் தெம்பும் கிடைக்கிறது என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.

இந்த போட்டியினால் இவர் உழைப்புக்கும் முனைப்புக்கும் மீறிய மிக மிகுந்த மாபெரும் நிறைவு, கோபாலகிருஷ்ணருக்குக் கிடைக்கட்டும்.

தேவைக்கு வருகிறேன்.

விமரிசனப் போட்டி பற்றிப் படித்ததும், 'இது என்ன இவருடைய கதையைப் படிக்க வைக்க இப்படி ஒரு தந்திரமா?' என்று தான் நினைத்தேன். முதல் சில கதைகளின் விமரிசனங்களைப் படித்ததும் அவை கதையைப் படிக்கத் தூண்டியதும் நிஜம். கதை தக்கூண்டு என்றால் விமரிசனங்கள் எல்லாம் பி.எச்டி பட்டத்துக்கான தீஸிஸ் போல எழுதப்படுவதைப் பார்த்து நடுங்கிப் போனேன். இந்த விமரிசனங்களினால் வை.கோவுக்கு என்ன பலன்? இவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறார்? இது போன்ற கேள்விகள் தோன்ற, அவரையே கேட்டும் விட்டேன். அவர் சொன்ன சுவாரசியமான பதிலை அவர் பதிவிலேயே படியுங்களேன்?

சில கதைகளுக்கான விமரிசனங்களை எழுதத் தொடங்கி, பாதியிலேயே நிறுத்தியிருக்கிறேன். எழுதிய சிலவற்றை கெடுவுக்குள் அனுப்ப மறந்திருக்க்கிறேன். சமீப விமரிசனம் ஒன்றை பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் பரீட்சை போல அவசர அவசரமாக எழுதி பிழை திருதத்மால் அவருக்கு அனுப்பி வைத்தால், கெடுவுக்கு ஒரு நாள் முன்பே அனுப்பி வைத்ததாகச் சிரித்தார் கோபாலகிருஷ்ணர். அப்படி என்னை மாற்றிய போட்டி என்பேன்.

வை.கோவுக்கு என்ன பலன் கிடைத்தது என்ற கேள்வி இருக்கட்டும். நான் என்ன கற்றேன்?
  1. கதை எழுத ஆழமான கருவோ திருப்பங்களோ தேவையில்லை.
  2. அரை வரி கருவை வைத்துக்கொண்டு எளிமையாகவும் சுவாரசியமாகவும் கதை எழுத முடியும்.
  3. கதை எழுதுவதை விட விமரிசனம் எழுதுவது கடினம்.

இந்த அனுபவத்துக்கு வித்திட்ட வித்தகர் கோபாலகிருஷ்ணருக்கு நன்றி.

இடையில் வந்த நடுவர் யாரென்ற போட்டி சுவை கூட்டியது. க்ரேட் மைன்ட் கீதா அவர்கள் சட்டென்று கண்டுபிடித்து விட்டார். எனக்கு ஒரு சொல் தேவைப்பட்டது - உறுதிப் படுத்திக் கொள்ள. ஜீவி அவர்களால் அந்தச் சொல்லைப் பயன் படுத்தாமல் இருக்க முடியாது என்ற கணிப்புக்கு வந்திருக்கிறேன். ஒரு வருடமாக இந்தப் போட்டிக்கு நடுவராக, அத்தனை விமரிசனங்களையும் படித்து அவ்வப்போது பின்னூட்டங்களும் எழுதி வந்தமைக்கு அவருக்கும் ஒரு சிறிய நன்றி.

விமரிசனம் எழுதியும் பின்னூட்டங்கள் எழுதியும் பங்கு பெற்ற அத்தனை பேருக்கும் நன்றி. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அடுத்து வை.கோ அவர்கள் நடத்தப் போகும் போட்டி என்னவாக இருக்கும்?

முதலில் அவர் விமரிசனம் எழுதிவிடுவார். அவர் எழுதிய விமரிசனத்துக்கேற்ப பிறர் சிறுகதை எழுத வேண்டும். இதுவே போட்டி.

சொல்ல முடியாது, செய்தாலும் செய்வார் கோபாலகிருஷ்ணர். நடுவர் பாவம்.

2014/10/18

அப்பாதுரைக்கு வந்த நகசுத்தி


    நான் என் பாட்டுக்கு இமெயில் பாத்துட்டிருக்கேன். திடீர்னு 'நலந்தானா?'னு தில்லானா மோகனாங்கி ஸ்டைல்ல ஒரு இமெயில். யார் அனுப்பினாங்கனு பார்த்தா மோகன்ஜினு இருக்குது!

மோகன்ஜியை தெரியாதவங்க இருந்தா ஒரு இன்ட்ரோ. மோகன்ஜி இருக்காரே மோகன்ஜி... அதான் இருக்காருனு தெரிஞ்சு போயிடுச்சே பிறகென்ன இழுப்பு... இவரு வருஷத்துக்கு ஒரு பதிவு எழுதுவாரு. அதுக்கே அவருடைய ரசிகக் கூட்டம், 'தலைவர் ஒரு பதிவு எழுதுனா ஆயிரம் பதிவு எழுதின மாதிரி'னு பிகிலடிப்பாங்க. (என்னை மாதிரி ஆளுங்க மாஞ்சு மாஞ்சு எழுதினா இபிகோனு மிரட்டுறாங்க. தலைவிதி பாருங்க).

எனக்கு அனுப்பின இமெயில் மோகன்ஜி எழுதினதுதான்னு எப்படி கண்டுபிடிக்கிறது? சமீபத்தில் வவ்வால் அவர்கள் இன்னொருத்தர் பெயரில் பின்னூட்டமிட முடியும்னு நிரூபிச்சுக் காட்டினாரு. (என் பெயரில் பின்னூட்டம் போட்டு அசத்திட்டாரு). அந்த அனுபவத்துக்குப் பிறகு எல்லாத்தையுமே சந்தேக மூக்குடன் மோப்பம் பிடிக்கிறேன். என் பின்னூட்டமே நான் எழுதியது தானானு சந்தேகம் வருது. அந்த நடுக்கத்துல இவர் மோகன்ஜி தானா இல்லே வேறு யாராவது இவர் பெயரில் இமெயில் அனுப்புறாங்களானு சந்தேகம் வந்திடுச்சு. கொஞ்சம் விட்டு, கூடவே ஒரு கவிதை அனுப்புனாரு (கவிதைனு அவர் சொல்றாருங்க).

கவிதையை படிச்சதும் கொஞ்சம் தெஹிரியம். நிச்சயம் மோகன்ஜியாகத்தான் இருக்கணும்னு தோணிச்சு. பின்னே இப்படியெல்லாம் சிவகுமாரனா எழுதப் போறாரு?

'அண்ணாத்தே? என்ன ஆளையே காணோம்? ஒரு இமெயில் அனுப்பிட்டு வழக்கப்படி காணாமப் போய்டுவீங்களா? உங்களைக் காணாமப் பசலைப் பட்டது போதாதா? ஏன் திரும்பி வந்தீங்க?'னு சங்கமங்கை போல பதில் இமெயில் அனுப்பினேன். 'இல்லை இல்லை.. இனிமே காணாமப் போகமாட்டேன்'னு கீபோர்ட் அடிச்சு சத்தியம் செய்யாத குறையாச் சொன்னாரு.

எதுக்குச் சொல்றேன்னா... நல்லா எழுதுறவங்க, எழுதுறதை நிறுத்திக்கிட்டாங்கனா அது எழுத்துக்கு நஷ்டம்னு நான் நினைக்கறதுண்டு. மோகன்ஜி நல்லா எழுதுறவரு. அவரு திரும்ப எழுத வந்தா அதுவே தீபாவளி தான். வாங்க வாங்கனு சொல்லிக் கம்பளம் விரிப்போம், என்ன சொல்றீங்க? இதுக்கு பேரு மோஸ்தர் கவிதையாம். ஜோரா கை தட்டுவோம், என்ன சொல்றீங்க? மறுபடி இந்த மாதிரி கவிதை எழுதுனாருனா இலக்கிய போலீசு பாத்துக்கட்டும், நாம பத்தடி தள்ளீயே நின்னுக்குவோம், என்ன சொல்றீங்க?

இதோ, மோகன்ஜி எழுதியனுப்பின மோஸ்தர் கவிதை:

அப்பாதுரைக்கு வந்த நகசுத்தி




மோடி அமெரிக்கா வந்த நாளன்றே
அப்பாதுரைக்கு நகசுத்தி வந்திருந்தது.

வலது கை மோதிரவிரலில் அது குத்தலோடு குந்தியிருந்தது
அது வரும்வரை தனக்கு மோதிரவிரல்
ஒன்றிருப்பதே அவருக்கு தெரியாது.

அவரின் வலைப்பூவில் திங்களன்று
'கொக்கோக குமுறல்கள்' தொடங்க இயலாதது குறித்து
அவரிட்ட சிறுபதிவினாலேயே தான்
அனைவருக்கும் அது தெரிய வந்தது.

முதல்கருத்தாய் திண்டுக்கல் தனபாலனின்
'வாழ்த்துக்கள்' வந்தது

'நகசுத்தியும் நாகசக்தியும்' என்ற
ஆர்.வி.எஸ்ஸின் பேஸ்புக் பதிவுக்கு
ஆறாவது நிமிடமே 286 லைக்கும் 7 கமெண்டும் வந்தன.
அதற்கு பத்மநாபன் லைக் போட முனைந்த போது
ஐபாட் ஷட்டவுன் ஆகி முடியாமல் போனது.

நகசுத்தி குறித்து பதிவுபோட ஆதிரா உறுதிபூண்டார்

எலுமிச்சம்பழம் விரலில் சொருக
கீதாசந்தானம்,கோமதி அரசு மற்றும் ஶ்ரீராம்
யோசனை சொன்னார்கள்

கூரியரில் நிலாமகள் அனுப்பி வைத்த எலுமிச்சம்பழம்,
முப்பாத்தம்மன் கோவில் பிரஸாதம் எனத் தெரியாமல்
அதை அப்பாதுரை சொருகிக்கொண்டார்.

அகத்திக்கீரை சூப் ஆறுநாள் சாப்பிடச்சொன்ன சுந்தர்ஜி,
'நகஸ்ய கருணா நாஸ்தி நாகஸ்ய பயானகம் ' என்று
ஏதோ சொன்னது சற்று கலவரமாய் இருந்தது.

நகசுத்தியை 'படுவம்' என்பார்களென்றும்
தாங்கமுடியாத்து தான் 'படுவ வலி' என்றும்
அறிவன் பகிர்ந்தார்.
அதை 'பருவ வலி' என்று படித்துக்கொண்டபோது
அப்பாதுரைக்கு வலியே தெரியவில்லை.

மர்லின்மன்றோவுக்கும் நகசுத்தி வந்த கதையை
மோகன்ஜி சொன்னதன் கவர்ச்சி,
அப்பாதுரையின் அயர்ச்சிக்கு ஆறுதலானது

'கொக்கோக குமுறல்கள்' ஏதேனும்
தெய்வக்குத்தமாக இருக்குமோ என்ற
சுப்புத்தாத்தாவின் பின்னூட்டத்தை
பத்து பதிவர்கள் ஆமோதித்தார்கள்

'விரலுக்கு அதிகவேலை கொடுக்காதீர்கள்' என்ற
அனானியின் கரிசனத்தில்
டபுள்மீனிங் சாத்தியக்கூறுகள் இருப்பதாய்
அப்பாதுரைக்கு பட்டது

நகசுத்திக்கு 'நாக காந்தாரி'அல்லது 'காமவர்தினி' ராக
கீர்த்தனங்கள் சுகம் தருமே என்றார் மூவார்முத்து.
அதற்கு
'உண்மை' 'இருக்கலாம்' 'எதற்கும் கேட்டுப்பார்த்து விடுங்களேன்'
என்று முறையே
ரிஷபன்,வை.கோ,வெங்கட்நாகராஜ் தெரிவித்தார்கள்.

'நகசுத்திக்கு இலக்கியத்தில் சான்று உண்டா அண்ணா?' என்ற
சிவகுமாரன் கேள்விக்கும்,
'ஏன் அண்ணா நகசுத்தி நகத்திலேயே வருது?' என்ற
ஹேமாவின் கேள்விக்கும் பதிலை,
தனிஅஞ்சலில் அனுப்புவதாய் மோகன்ஜி சொன்னார்.

மருந்து போட்டாலும் மாங்காய் சொருகினாலும்
ஆறுநாள் இருந்துவிட்டு தன்னால் போகும் என்று
காஸ்யபன்சார் பின்னூட்டம் வந்தநாளில் வலிகுறைந்து
எலுமிச்சம்பழத்தை எடுத்து விட்டார் அப்பாதுரை.

வெட்கி சிவந்து குன்றியிருந்த விரலைப்பார்த்து
'ரிலாக்ஸ் மேன்' என்றார் வாஞ்சையோடு.
கையோடு அந்த விரலுக்கு
'அமெதிஸ்ட் சுகந்தி' கல் பதித்த
மோதிரம் போடுவதாய்
அதிவீர ராம பாண்டியருக்கு**
வேண்டிக்கொண்டார்

(**ஆண்ட்ரூ கார்னகி என்றும் பாடம்)

2014/10/11

உளமளவாமுலகளவும்


    ருக்குப் போயிருந்தேன்.

முதல் நாள், வழக்கம் போல் பொழுது போனதே தெரியவில்லை. இரண்டாம் நாள், வழக்கம் போல் பொழுதே போகவில்லை. "ஏண்டா இப்டி இருப்பு கொள்ளாம அடைபட்ட மூஞ்சூராட்டம் சுத்தி சுத்தி வரே?" என்றார் பாட்டி.

பாட்டியைப் பார்த்தேன். அவரும் அடைபட்ட மூஞ்சூரு போலத்தான். அவருக்கு நூறு வயதாகிறது. ஆறு தலைமுறை சந்ததிகளைப் பார்த்திருக்கிறார். எத்தனை ஜனனம் எத்தனை மரணம் எத்தனை விவாகம் எத்தனை துக்கம் எத்தனை கேலி எத்தனை குதூகலம் எத்தனை இன்பம் எத்தனை துன்பம் எத்தனை நோய் எத்தனை இழப்பு எத்தனை மழலை எத்தனை மூப்பு எத்தனை வெற்றி எத்தனை ஏமாற்றம்... "எல்லாரும் போயிண்டிருக்கா.. நான் இன்னும் குத்துக்கல்லாட்டம் உக்காந்துண்டு... போக மாட்டேங்கறேனே?!" என்று ஆயாச மூச்சு விட்டபடி, தளர்ந்து போன உடற்கூட்டுக்குள் அடங்காத அனுபவச் சுமையுடன் தடுமாறிச் சுற்றி வரும் எலி, என் பாட்டி. பாட்டியைப் நினைத்தால் இறுக்கமாகவும் வருத்தமாகவும் இருந்தது. எத்தனை கோடி துன்பம் வைத்தாய் இறைவா!

"போரடிக்குதே.." என்றிழுத்தேன் பொதுவாக.

"ஏண்டா.. உன் ப்ரண்டு யாரோ ஒருத்தர் இங்கே எங்கியோ இருக்கார்னு சொல்வியே? அவரைப் பாத்துட்டு வாயேன்?"என்ற குரல் கேட்டுத் திரும்பினேன்.

இது போன்ற மிகத் தெளிவான கருத்துக்களைத் தாராளமாகவும் ஏராளமாகவும் அள்ளி வீசக்கூடிய நானறிந்த இருவரில் ஒருவர், என் அம்மா.

"எப்படிம்மா உன்னால் முடியுது?" என்றேன்.

"அதாண்டா.. சமூக உபன்யாசம் பண்றேன் பேர்வழினு அசடாட்டம் எதையாவது சொல்வாரே.. உன் ப்லாக்ல கூட எழுதுவாரே.. அசுவத்தாமன்? அவர் ஒப்பிலியப்பன் கோவில் கிட்டே இருக்கார்னு சொல்வியே? பாத்துட்டு வரதுதானேனு கேட்டேன், இது கூட புரியலையா?"

போலியாக வியந்து, "ப்ச.. அவரா..?" என்றேன். சொல்லும் பொழுதே அவரைச் சந்திக்க எண்ணினேன்.

"உனக்குத் தெரியுமோ? அவரை யாரோ நாலஞ்சு பேர் சேர்ந்து நன்னா அடிச்சுப் போட்டுட்டாளாம். பேப்பர்ல எல்லாம் வந்துது" என்றார் அம்மா.

"என்னமா சொல்றே? என்னாச்சு?"

"சரியா தெரியலடா. சும்மா இருக்காம எந்த வம்பை விலைக்கு வாங்கினாரோ யார் கண்டா? உன் ப்ரண்டு தானே?"

"சரி.. நான் போய் பார்த்துட்டு வரேன்" என்று ஆயத்தமானேன். என் வட்டம் எல்லாம் வம்பிழுக்கும் காந்தம் போலப் பார்த்த அம்மாவிடம் வேறேதும் சொல்லத் தோன்றவில்லை.

"வரப்போ கும்மோணத்துல கொஞ்சம் காய்கறியும் உதிரிப்பூவும் வாங்கிண்டு வரியா?. ப்ரண்டைப் பாக்கறச்சே அப்படியே கோவிலுக்குள்ளே அடி வச்சுட்டு வா, ஒண்ணும் குறைஞ்சு போயிடமாட்டே"

"ரைட்டு" என்று விலகினேன்.

கும்பகோணம் பஸ் பிடிக்க ஆடுதுறை கலைஞர் பேருந்து நிலையத்துக்கு வந்தேன். எதிரே 'அம்மா'வின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்த சுமார் முப்பது பேரில் பலர், பக்கத்து ரகுராம விலாசிலிருந்து வந்த இட்லி மசால்வடை பொட்டலங்களைக் கவர்ந்து கொண்டு பின் வரிசைக்கு மறைவாக நகர்ந்து கொண்டிருந்தனர். "நீதி தேவதைக்கு தண்டனை தர நீ யார் என்று நான் கேட்கிறேன்?" என்று யாரையோ கேட்டுக் கொண்டிருந்த சில்லறைப் பேச்சாளரின் கண்கள், பொட்டலத்துக்குத் தாவித் திரும்பின. பஸ் வர, ஏறிக்கொண்டேன்.

ஒப்பிலியப்பன் கோவில் பக்கம் போய் வருடக்கணக்காகிறது. எல்லாமே கல்லென்று தீர்மானமாகத் தெளிந்துவிட்ட நிலையில் கோவில்களின் அமைதி, அதிலும் சில கோவில்களின் அமைதி மட்டுமே எனக்குப் பிடிக்கிறது இப்பொழுதெல்லாம்.

திருநாகேசுரத்தில் ஈயடிக்கும், போவேன். திருவிண்ணகரத்தில் கொஞ்சம் கூட்டம் இருக்கும். அதனால் போவதில்லை. ஒப்பிலியப்பன் கோவில் அசுவத்தாமருக்குப் பிடிக்கும். அவரைப் பார்க்கப் போனால் கோவில் ட்ரிப் நிச்சயம். அத்தோடு போகிற வழியில், "ஆஸ்திகன் நாஸ்திகன் எல்லாம் நமக்காக்கும். ஜகன்மாதாவுக்கும் ஜகப்பிதாவுக்கும் தேவையில்லைணா. மிஸ்டர் ஒப்பிலியப்பனுக்கு இதெல்லாம் டோன்ட் கேர் தெரியுமோ? ஆஸ்திகமாவது நாஸ்திகமாவது? இதெல்லாம் தர்க்கத்துக்கான அந்தஸ்து முத்ரைகள். ஸ்டேடஸ் ஸிம்பல்ஸ் பார் இன்டெலெக்சுவல் வேனிடி யு நோ? சர்வேஸ்வரனுக்கு இதெல்லாம் சின்னக்குழந்தை மூச்சா மாதிரி. அசூயையே பட மாட்டான். யு நோ ஸம்திங்? நீங்க அவனைப் பார்க்க வேண்டியதில்லை. அவனுக்கு உம்மைப் பார்க்கணும்னா ஹி வில் சம்மன் யு. தெனம் கோவிலுக்குப் போறவா லட்சக்கணக்குல இருக்கா. அதுல எல்லாரையும் அவனால பார்க்க முடியுமோ? முடியாது. ஹி டஸ் நாட் ஸீ எவரிபடி விஸிடிங் ஹிம். இவா என்னமோ க்யூல நின்னு அர்ச்சனை பண்ணிப் பாத்துட்டு வந்து, 'ஆகா திவ்ய தரிசனம் கிடைச்சது'னு கூத்தாடுவா. கஷ்மல ஸாகரம். இவா பாக்க வராங்கறதுக்காகவும் பெரிய பணத்துல சீட்டு வாங்கி அர்ச்சனை பண்றாங்கறதுக்காகவும் வொய் ஷுட் ஹி ஸீ தெம்? இந்த க்விட் ப்ரொ க்வோவெல்லாம் பகவானிடத்துல பலிக்குமோ? என்னத்தை சொல்றது?! இப்டி கண்மூடிப் போய்ட்டு வர லட்சத்துல பதினாயிரம் பேராவது உம்மை மாதிரி ஸ்கெப்டிகல் டைப்பு. நாலு அட்சரம் படிச்சு நாலு தேசம் பார்த்த கெத்துல கடவுள் கிடையாதுனு பாபுலர் டயலாக் விடறவா.. யு ஸீ.. இவாள்ல சில பேரை அவன் வரவழைக்கறான். ஹி வான்ட்ஸ் டு ஸீ, அவ்ளோ தான். இல்லேன்னா நீங்க சொன்னேளே போனவாட்டி காலேஜ்ல ஆள் எடுக்கப் போனப்போ அப்படியே அயோத்யா போய் ஸ்ரீராம பகவான் பாதம் பட்ட இடங்கள்ள நின்னதாச் சொன்னேளே..அதெல்லாம் உம்மைப் போல ஆசாமிகளுக்கு வாய்க்குமா? வாட் ஐ மீன் இஸ் சில குழந்தைகள் அப்பாம்மாவைப் பாக்க வரா. சில குழந்தைகளை அப்பாம்மா வரவழைச்சுப் பாக்கறா. ஹீப் ஆப் ஸ்டோன்னு நீங்க நெனச்சுண்டு வருவேள். லீப் ஆப் ஓன்னு அவன் நெனச்சுப்பான். நாமா போய் பார்த்தாலும், நம்மை வரவழைச்சு அவன் பார்த்தாலும் என்ன வித்தியாசம்? சர்வம் ஏகம்ணா" என்று ஒரு பிரசங்கம் செய்வார். பிரசங்கம் செய்யட்டும். பரவாயில்லை. என்னை ணா போட்டு பேசுவது எனக்குச் சங்கடமாக இருக்கும். என்னவோ இவர் என்னை விட இளையவர் போல.

கும்பகோணம் டவுன் பஸ் நிலையத்திலிருந்து அநியாயத்துக்குக் கேட்ட ஒரு ஆட்டோக்காரனிடம் பேரம் பேசி ஒருவழியாக அசுவத்தாமன் வீட்டுக்கு வந்தேன். செவ்வாய் கிரகத்துக்குப் போக ஒரு கிலோமீட்டருக்கு ஏழு ரூபாய் மட்டுமே ஆகும் இந்நாளில், ஆறு கிலோமீட்டருக்கு நூற்றைம்பது ரூபாயை அழுதேன். செவ்வாய் கிரகத்துக்குப் போனால் ஆட்டோவில் போகக் கூடாது என்றுத் தீர்மானித்தேன்.

"வாங்கோ வாங்கோ, வரணும்ணா" என்று வரவேற்றார் அசுவத்தாமன். மெலிந்திருந்தார். கண்களில் ஒரு அச்சம். உடலில் ஒரு தளர்ச்சி. வரவேற்றதற்கே வாயைப் பிடித்துக் கொண்டார். உட்காரச் சொன்னார். "காபி சாப்டறேளா? சன்ரைஸ் காபி. இல்லேன்னா பக்கத்துல பீமாஸ்லந்து மைசூர் போண்டா பைனாப்பிள் அல்வா எடுத்துண்டு வரச்சொல்லட்டுமா? பில்டர் காபியும் கொண்டு வருவான்" என்றார்.

"பீமாஸா? நான் பாக்கவேயில்லையே?"

"பக்கத்தாத்துக்காரர். ரிடையர்டு பப்லிக் வொர்க்ஸ் எஞ்சினியர். விடோயர். மாமி வைகுந்தலோகம் போனப்புறம், போன சந்தோஷமோ என்னமோ தெரியலே, நன்னாவே சமைக்கறார். நளபாகம் நாலு பேர் அனுபவிக்கட்டுமேனு, கேஷ் ஒன்லி டேக் அவே மீல்ஸ் டிபன்னு தெனம் ஆத்துலந்து சப்ளை பண்றார். ஏழெட்டு வாடிக்கை என்னை மாதிரி. பீமாஸ்னு நான் பேர் வச்சிருக்கேன். சித்த இருங்கோ" என்று செல்பேசி டிபன் காபி வரவழைத்தார்.

"ரொம்ப நாளாச்சு பாத்து.. இப்பல்லாம் ப்ரசங்கம் பண்றதில்லையா?" என்றேன்.

இல்லையென்று தலையாட்டினார். "ப்ரஸங்கம் பண்றதிலே. ப்லாக்ல எழுதறதில்லே. எதுவுமே பண்றதில்லே. எங்கயும் போறதில்லே. யதாஸ்தானம்னு இருக்கேன்"

"ஏன் சார்? உங்களுக்கு அடி பட்டுதுனு சொல்றாளே? அதனாலயா?"

"அடி படலைணா. இதென்ன மடியா விழுப்பா படறதுக்கு? அடிச்சு நொறுக்கிட்டா. நாலஞ்சு காலிப் பசங்க சேர்ந்துண்டு மொச்சு எடுத்துட்டா. திருடைமருதூர்ல ப்ரஸங்கம் பண்ணிட்டு ஆத்துக்கு வந்தேனா? பசியில்லை. முழுசா லங்கணம் வேண்டாம்னுட்டு ஒரு சுருள் காஞ்ச நாத்தங்கா ரெண்டு மோர் மொளகாவோட நாலு கரண்டி ததியன்னம் போட்டு சாப்டுட்டு, விஸ்ராந்தியா திண்ணைல படுத்துத் தூங்கிண்டிருந்தேன். திடீர்னு நாலு பேர் பரசுராமனாட்டம் வந்து என்னைத் தூக்கத்துல ரணப்படுத்திட்டுப் போய்ட்டா. உக்கார முடியலே. நிக்க முடியலே. அழ முடியலே. சிரிக்க முடியலே. ஆஸ்பத்திரில இருந்த அத்தனை பேண்டேஜும் தீந்து போற அளவுக்குக் கட்டுப் போட்டு, ஏழெட்டு மாசமா தெனம் தெரபினு வந்து, என்னை இந்த நிலமைல விட்டிருக்கா. இன்னிக்கு கை கால் அசஞ்சு கொஞ்சம் பேசறேன்னா ஏதோ ஒரு ஜென்மாந்த்ர புண்யம். ஹ்ம். என்னை மொத்தியெடுத்துட்டானா மொத்தியெடுத்துட்டாணா" என்று இரு சுழிகளை ஒரே வாக்கியத்தில் பயன்படுத்திப் பேசினார்.

"யார் செஞ்சா? என்ன ஆச்சு? போலீசுக்குப் போனேளா?" என்றேன்.

"போலீஸ்ல வந்து கேட்டா. ஆஸ்பத்திரிலே படுத்துண்டிருக்கச்சே வந்தா. அங்க வந்த ஒரு மீசைக்காரப் போலீஸ் கிட்டே இந்த மாதிரிடாப்பானு சொன்னேன்.. நேக்கு சத்ருக்கள் யாரும் கிடையாதுன்னேன்... ஆனா அவா என்னைப் பார்த்த பார்வை இருக்கு பாருங்கோ.."

"ஏன்?"

"ஓய் பெரியவரே..'வாயையும் சூத்தையும் வச்சுகினு சும்மா கெடக்கலாம்ல? உனுகின்னா லொள்ளு வேண்டிகிது இந்த வயசுல? பெர்சுனா இன்னா வேணா பேசுறதா? நீ பேதியாவுறதை நாங்கள்ளாம் பாத்துகிணு இருக்கவா? இன்னும் ரெண்டு தட்டாம விட்டானுவளே..'னு நாக்கூசாம நாராசமா பேசிட்டுப் போறான்! என்ன பண்றதுணா.. இதெல்லாம் ப்ராரப்தம்னு விட்டுட்டேன்"

சுவாரசியமான விஷயம் போலிருந்தது. "என்ன ஆச்சு சொல்லுங்களேன்?" என்றேன்.

"சொல்றதுக்கு என்ன? சொல்றேன் சொல்றேன். இதையெல்லாம் ப்லாக்ல எழுதவேண்டாம்ணா..புரியறதா?"

"சொல்லுங்க"

"திருடைமருதூர்ல ப்ரசங்கம்னேன் இல்லையா? நம்ம கோவில் ஸ்தல புராணங்கள் பத்தின உபன்யாசம். நேக்குத் தெரிஞ்சதைச் சொல்வோம்னு போயிருந்தேன்" என்றபடி கால்களை நீட்டிக் கொண்டார்.

"திருடைமருதூர்க்குள்ளே சமீபத்துல போயிருக்கேள் இல்லையா? இங்கனு இல்லே பொதுவாவே மாயரம் கும்மோணத்தைச் சுத்தி எல்லா இடத்துலயும் பாத்தேள்னா இப்படிக் கொஞ்ச காலமாவே நடந்துண்டிருக்கு. திட்டம் போட்டுப் பண்றானு சொல்லலே.. ஆனா தற்செயலா நடக்கறாப்ல நடக்கறதுனு சொல்றேன்.. வித்யாசம் புரியறதோ?"

"புரியற மாதிரி சொல்லுங்க சார்"

"சொல்றேன். மொதல்ல ப்ரசங்கத்தை ஸங்க்ஷேபமா சுருக்கமா சொல்றேன்"

"ஐராவதேஸ்வரம் புராதனக் கோவில். ஐராவதேஸ்வரம் கதை தெரியுமோ? பிரம்மா கொடுத்த மாலையைத் அலட்சியமா தூக்கியெறிஞ்சதும் இந்த்ரனுக்கும் ஐராவதத்துக்கும் சாபம் குடுத்துடறார் துர்வாசர். இந்த்ரனுக்குப் பதவி போயிடறது, ஐராவதம் கறுப்பாயிடறது. வெளுப்பா இருந்தாத்தான் யானைக்கும் பிடிக்கும் போலருக்கு - சிவபெருமான் கிட்டே ஐராவதம் தவமிருந்து சாப விமோசனம் கிடச்ச இடமாக்கும். அங்க இருக்குற விநாயகருக்குத் தும்பிக்கைப் பாத்தேள்னா விருச்சிகமாட்டம் இருக்கும். தேள் மாதிரி துதிக்கைங்கறதாலே விநாயகருக்கு மருந்தேஸ்வரன்னும் பேருண்டு. லோகத்து அத்தனை பூச்சிக்கடிக்கெல்லாம் இந்த மூஷிகவாகனன் தான் மூலிகை. அப்பனே பிள்ளையாரப்பானு அழுதா அத்தனை கடியும் கரைஞ்சு போயிடும். சத்யம்..

..திருடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் எத்தனை புராதனமான தேவஸ்தானம்! பாடல் பெற்ற ஸ்தலம். கோவிலுக்குள்ளே போனேள்னா சுவர் சித்ரங்கள்ளாம் கண்ணைப் பறிக்கும். ரெண்டாயிரம் வருஷத்துக்கும் புராதனமான கோவில்! அத்தனை கடவுள்களும் இங்கே மகாலிங்கஸ்வாமியை ப்ரார்த்தனை பண்ணியிருக்கா. தபஸ் பன்ணியிருக்கா.. கோவிலுக்குள்ள அம்பாள் சன்னதிலே ரெண்டு நிமிஷம் நின்னேள்னா கண்ல தண்ணி ஊத்தெடுக்கும்.. அப்படிப்பட்ட லக்ஷணம். அப்பர், சுந்தரர், சம்பந்தர் மூணு பேரும் உருகி உருகிப் பாடின ஸ்தலம். ஆதி சங்கரர் ஆராதனை பண்ணின ஸ்தலம். இங்கேதான் அவருக்கு அத்வைத ஞானப்பிரகாசம் கிடைச்சது. வில்வக்காடா இருந்த இடத்துல விஸ்வநாதன் சுயம்புவா வந்த இடம். சுவாரசியமான கதை தெரியுமோ? தபஸ் பண்ணின அகஸ்தியருக்கு ப்ரத்யக்ஷமான உமையாம்பிகை, 'ஓய் அகஸ்தியரே! என்னய்யா வேணும்?'னு கேக்கறார். அகஸ்தியர் உமையாளைத் தரிசனம் பண்ணினதுல திக்குமுக்காடிப் போய், 'ஜகதாம்பிகே! உமா! எனக்கு ஈஸ்வரனை இங்கே தரிசிச்சு தினப்படிக்கு ஆராதனை பண்ணணும் தாயே!'னு கேக்கறார். சரின்னுட்டு பரமேஸ்வரனை வேண்டிக்கறா பார்வதி. அவரோட ஹ்ருதயத்துலந்து ஜோதிர்மயமா வெளிவரார் லோகேஸ்வரன். அந்த அக்னியையும் ப்ரகாசத்தையும் அகஸ்தியரால தாங்க முடியலே. அம்பாள் யாரு? சும்மாவா? அப்படியே ஜோதிர்மயமா வந்த ஈஸ்வரனைச் செல்லமா அடக்கி வழி பண்றா. ஜோதிஸ்வரூபமான ஈஸ்வரன் சுவயம்பு லிங்கமா வரார். லிங்கம்னா அப்பேற்கொத்த மகோன்னத லிங்கம். மகாலிங்கமா வந்த மகேஸ்வரன் முன்னால 'உண்முத்தாட உவகை தந்தாய் தண்முத்தாடத் தடமூன்றுடையாய், உனையுண்ணிக் கண்முத்தாடக் கழற்சேவடி புரிவேன்'னுட்டு ஆனந்தக் கூத்தாடறார் அகஸ்தியர். இதையெல்லாம் பாத்த ஈஸ்வரர், 'என்னடா இந்தாளு, கூத்தாடி கிட்டயே கூத்தாடுறானே? இவனை நம்பி நாளைக்கு காவேரியை எப்படி ஒப்படைக்கறது?'னு கலங்கறார். உமை அப்படியிப்படி பாக்கறா. நேக்கொண்ணும் தெரியாதுங்கறா. சட்னு ஸ்வாமி ஒரு காரியம் பண்றார். மகாலிங்கத்துக்கு முன்னாடி உக்காந்து ஆராதனை பண்ண ஆரம்பிக்கறார் மகாலிங்கம். உமையாம்பிகை ஆச்சரியப்படறா. 'என்ன ஸ்வாமி இது? உங்களை நாங்கள்ளாம் ப்ராத்தனை பண்றோம். நீங்களே உங்களைப் ப்ரார்த்தனை பண்ணிக்கறேளே? இதென்ன சமாசாரம்?'னு, இப்படி இடுப்புல ஒரு கையும் அப்படி கன்னத்துல இன்னொரு கையும் வச்சுண்டு ஆஸ்சர்யத்துல மூழ்கிப் போய்க் கேக்கறா. அதுக்கு அந்த ஒரிஜினல் அசல் உலகநாயகன் என்ன சொல்றார் தெரியுமோ? 'இல்லேடி கண்மணி. இந்த இடம் வில்வக்காடு. உன்னதமான மருதமரம் சூழ்ந்த இந்த இடத்துல என்னைப் ப்ரார்த்தனை பண்றவாளுக்கு சர்வ பாப நாசமும் சர்வ சாப விமோசனமும் உடனடியா கிடைக்கும். அது ரொம்ப சாதாரணமான பலன். அதுக்கு மேலே அஸ்வமேத யாகம் பண்ணின புண்யம் கிடைக்கும். அது போறாதுன்னா அதுக்கு மேலே கைலாசத்துல என்னை தரிசனம் பண்ணின பலன். அதுக்கும் மேலே வேணும்னா மோக்ஷமும் கிடைக்கும். இந்த ஒரு இடத்துல என்னைக் கும்பிட்டா போறும். ஆனா முறையா கும்பிடணும். சாஸ்த்ரோத்ரமா ப்ரார்த்தனை பண்ணினா இத்தனை பலனும் உண்டு.. அதான் நேக்கே.. ஆசை வந்திருச்சு, ஆகையால் ஓடி வந்தேன்'னுட்டு பல்லைக் காட்டறார். அவர் எப்படி சாஸ்த்ரோத்ரமா பண்றார்னு படிச்சுண்ட அகஸ்தியர் நமக்கெல்லாம் அதைக் கத்துக்க வழி பண்ணினார். இப்படி பகவானை எப்படிக் கும்பிடணும்னு பகவானே சொல்லிக் கொடுத்த ஸ்தலம்..

..உப்பிலியப்பன் கதை கேட்டேள்னா ப்ரம்மானந்த புராணத்துல இருக்கு - என்னமோ இன்னிக்கு நேத்திக்கு கட்டிவிட்டதில்லைணா. ஆழ்வாரெல்லாம் இழை இழைனு இழைஞ்சு பாடியிருக்கா, சும்மாயில்லே. மகாலக்ஷ்மி இங்க ஒரு துளசிமாடத்துல பொறந்த இடம். துளசிச் செடி அப்படி ஒரு வரம் கேக்கறது பகவான்ட்ட. ஒரு செடியோட வேண்டுதலை மதிச்சு பிராட்டி பொறக்கறா. கண்மூடித்தனம்னு சொல்லுங்கோ இல்லே க்ரீன் அவேர்னஸ்னும் சொல்லுங்கோ.. எல்லாம் சிம்பாலிக் தானேணா? கதையைக் கேளுங்கோ. என்னமோ துளசிமாடத்துல சப்தம் கேக்கறதேனு மார்க்கண்டேய முனிவர் வரார். துளசி மடிலே குழந்தையைப் பாத்துட்டு பரவசமாயிடறார். மகாலக்ஷ்மி மார்க்கண்டேயரைப் பாத்து லேசா சிரிக்கறா. மழலைச் சிரிப்புக்கு பத்து மோகனத்தைக் கட்டியடிக்கலாம் இல்லையோ? எக்ஸ்ட்ரா பரவசமாயிடறார் மார்க்கண்டேயர். அடடா.. லோகத்துல இப்பேற்பட்ட பெண் குழந்தை பொறக்கறது சாத்யமோ? இதென்ன மனுஷக் குழந்தை மாதிரியே இல்லையே? தெய்வீகத்துக்கு ஒரு படிமேலன்னா இருக்கு இந்தப் பொண்ணோட மந்தகாசம்? உள்ளே எடுத்துண்டு போய் வளக்கறார். வருஷமாறது. சிங்கில் மேனா இருந்த மகாவிஷ்ணு ரொம்ப லோன்லியா பீல் பண்றார். 'போறும்டி என் பட்டு.. நீயும் நானும் தனியா இருந்தது'னு சொல்லிண்டு ஒரு வயோதிகரா வேஷம் போட்டுண்டு வந்து மார்க்கண்டேயர்ட்ட பொண்ணு கேக்கறார். மார்க்கண்டேயர் நாசூக்கா 'ஐயா பெரியவரே. என் பொண்ணு ரொம்ப சின்னவள். அவளுக்கு உப்பு போட்டுக்கூட சமைக்கத் தெரியாது'னுட்டு எதையோ சொல்லி மழுப்பப் பார்க்கறார். மகாவிஷ்ணு விடாம, 'அதனாலென்ன? நேக்கு ரத்த அழுத்தம், யூரியா பிரச்னையெல்லாம் உண்டு.. வயசாறதோன்னோ? உப்பில்லாமலே சமைச்சுப் போடட்டும்.. உங்க பொண்ணு ஜலம் சுட வச்சுக் குடுத்தா கூட அது நேக்கு தேவாம்ருதமா இருக்கும்'னுட்டு படு ரொமான்டிக்கா டயலாக் விடறார். 'இதென்ன கூத்தா இருக்கே?'னுட்டு தவிக்கறார் மார்க்கண்டேயர். 'சித்தே இருங்கோ பெரியவரே'னுட்டு உள்ளே போய் நேரா பெருமாள்ட்டயே உதவி கேக்கறார். அப்பத்தான் சட்னு புரியறது அவருக்கு. ஓடோடி வெளில வந்து பார்க்கறார். சங்கு சக்ரதாரியா ஆகாசத்துக்கும் பூமிக்குமா நின்னுண்டிருக்கார் உலகளந்த பெருமான். மார்க்கண்டேயரைப் பார்த்து பவழமல்லிப்பூவா சிரிக்கறார். 'என்னைத் தெரியுமா.. நான் சிரித்துப் பழகி கருத்தைக் கவரும் ரசிகன் என்னைத் தெரியுமா?'ங்கறார். 'ஆகா தெரிஞ்சுண்டேனே. ஆகாகா! பல்லுருவையெல்லாம் படர்வித்த வித்தா! உன் தொல்லுருவைத் தெரிந்து கொண்டேன். சொல்லித் தெரிவதா உன் சுந்தர ரூபம்? அள்ள முடியாதென்னிரு கண்கள் இருந்தென்ன? கொள்ள முடியாதென்னிரு கைகள் இருந்தென்ன? மனமெலாம் மயங்கித் தவிக்கிறேனே! என் ஞானப்பிரானை அல்லால் இல்லை இனி நான் கண்ட நல்லதுவே'னுட்டு உருகிப்போயிடறார். ஓடோடிப் போய் பிராட்டியைக் கூட்டிண்டு வந்து மகாவிஷ்ணு கைல சேர்த்து 'உப்பிலாத போழ்தும் ஒப்பென்று ஏற்ற ஒப்பிலியப்பா'னுட்டு சாஷ்டாங்கமா தரை தேய தண்டம் பண்றார். இதான் ஒப்பிலியப்பன் சரித்ரமாக்கும். கேட்டவாளுக்குக் கேட்ட க்ஷணத்துல மோக்ஷம் தர புண்ய சரித்ரம். வைகுந்த நகரம்னு பேராக்கும் இந்த க்ஷேத்ரத்துக்கு..

..திருனாகேசுரப் புராணம் இதெல்லாத்துக்கும் ஒரு படி மேலே.."

விருப்பமில்லாமல் அவரை மறித்தேன். "இதுக்காகவா உங்களை அடிச்சுப் போட்டா? புரியலியே?"

"சொல்றேன். வாய்க் கொழுப்புனு இல்லே. நடைமுறைல நிதர்சனமா இருக்குறதைச் சொன்னேன். நான் சொன்ன ஸ்தலபுராணாதிகாசக் கதைகள் ஆயிரக்கணக்கான வருஷத்துக்கு முன்னால நடந்ததா சந்ததி விட்டு சந்ததி கேட்டு அறிஞ்சுண்டது. சத்யம்னு நினைக்கறேளோ ப்ருடானு நினைக்கறேளோ எப்படி எடுத்துண்டாலும் இதுக்கெல்லாம் ஒரு வேர்.. ஒரு மூலம்.. ஒரு ம்ருணாளம் இருக்குங்கறதை ஒத்துப்பேள் இல்லையாணா? இதையெல்லாம் நம்ம கலாசாரத்தோட அணு.. டிஎன்ஏ.. விப்ருஷம்னு சொன்னா ஒத்துப்பேள் இல்லையாணா?"

"சரி..." இழுத்தேன்.

"திருடைமருதூர் கோவிலைச் சுத்திப் பாத்தேள்னா இப்போ அங்கேலாம் நிறைய முஸ்லிம்கள் வீடு வாங்கறானு தெரிஞ்சு போகும். ஐராவதேஸ்வரக் கோவில் தெப்பக்கொளத்துக்குப் பக்கத்துல கிறுஸ்தவ வீடுகள். திருநாகேசுரத்துல அக்ரகாரமே காணோம். இதெல்லாம் தப்பா ரைட்டானு நேக்கு தெரியாது. ஆனா நான் சொல்ல வரது என்னன்னா இதெல்லாம் இந்தப் புராதன இடங்களின் அடையாளங்களை மாத்திண்டிருக்கு. இந்த மாத்தம் உசிதமானு சந்தேகமா இருக்கு. பாருங்கோணா.. இப்பல்லாம் இந்துக் கோவிலுக்கே கூட்டம் வரது குறைஞ்சிண்டிருக்கு இல்லையா? அரசாங்கமோ அறநிலையத்துறை அது இதுனு சொல்றாளே தவிர, பாதிக் காசை எடுத்துண்டுடறா. மீதிக் காசுலயும் பாதியை அப்பப்போ அன்னதானம்னு சொல்லி ஓட்டு வாங்கறதுக்காக இலவச சாப்பாட்டுக் கூடமாக்கிண்டிருக்கா கோவிலையெல்லாம். அறநிலயத்துறைக்காரா சர்ச் தர்கா எல்லாத்தையும் எடுத்துக்கறாளா? இல்லையே, ஏன்? நம்ம கோவிலை மட்டும்தான். கேட்டா இந்து அறநிலையத்துறைங்கறா. விடுங்கோ எடுத்துக்கறா எடுக்காம இருக்கா போயிட்டு போறது. ஆனா நம்ம கோவில் வருமானத்தையும் எடுத்துண்டு, மிச்சமிருக்குறதையும் சுருட்டிண்டு, அக்கம்பக்கத்துலயும் இப்படி சர்ச் தர்கானு வர விட்டு.. ஒரு கேடான சூழல் உண்டாறப்ல இருக்கு. நம்ம மனுஷாளும் கோவிலுக்குப் போறதில்லே.. அப்படியிருக்கச்சே கோவிலை நம்பின அக்கிரகாரக் குடும்பங்கள்.. வைதீகக் காரியங்களையும் தெய்வீகக் கைங்கர்யங்களையும் வயத்துப் பொழப்பா நம்பி வந்தக் குடும்பங்கள் எல்லாம்.. சிதைஞ்சுண்டே போறது. இருந்த ப்ராமணக் குடும்பங்கள் எல்லாம் கடல் தாண்டிப் பரதேசம் போயிட்டா, இல்லேன்னா போயிண்டிருக்கா. இந்த லாஸ்ட் ட்வன்டி பைவ் இயர்ஸுல இந்த மாதிரி கலைஞ்சு போன ப்ராமணக் குடும்ப சந்ததிகள் யாரும் ஊருக்குத் திரும்பி வரப் பிடிக்காம அமெரிக்கா துபாய் ஜெர்மனினு இருக்கா. பணம் பேயாட்டம் ஆடறது. பெரிய பெரிய சிடில பங்களாவும் ப்லாட்டுமா வாங்கிப் போடறா. கிராமத்து வீடும் வேரும் யாருக்கு வேண்டியிருக்கு? அப்பாம்மாவை ஏகாந்தத்துலந்து விட்டுப் புரட்டியெடுத்து பெரிய நகரத்துலயோ இல்லேன்னா இப்பல்லாம் சொல்றாளே சீனியர் ஹோம்னுட்டு.. முதியோர் இல்லத்துல விட்டுட்டு போயிடறா. இங்கே இவா பிதாமகர் பிரபிதாமகர் கட்டின பூர்வீக வீடெல்லாம் நலிஞ்சு போய்.. இதெயெல்லாம் மீறி அப்படியும் இங்கதான் இருப்பேன்னு வைராக்யத்தோட இருக்குற குடும்பங்கள் கோவில் கைங்கர்யத்துல பிழைச்சுண்டிருக்கு..

..இதுல கோவிலைச் சுத்தி இருந்த வீடுகளையெல்லாம் பாத்தா, ஒண்ணொண்ணா வாங்கறவா எல்லாம் துபாய் சவுதினு போன நம்ம் ஊர் முஸ்லிம்கள். இல்லேன்னா கிறுஸ்தவா. கோவில் வருவாயும் குறைஞ்சு, பசங்களையும் பிரிஞ்சு, அரசாங்க உதவியும் கொறஞ்ச நிலைமைலே.. வந்த வரைக்கும் லாபம்னு வீட்டை வித்துட்டுப் போயிடறா அக்ரகார பிராமணா"

"நஷ்டத்துக்கு விக்கலியே.. லாபத்துக்குத்தானே விக்கிறாங்க?"

"லாபம் நஷ்டம்னு எதைச் சொல்றதுணா? நூத்திமூணு வருஷமா அக்ராகரத்துல இருந்த தேக்குமரம் இழைச்ச பெரிய வீட்டை இப்போ இவா வறுமைக்காக வித்துட்டு... வாங்கின கையோட அவா இடிச்சு கலர் கலரா கண்ணை உறுத்துற பெயிண்ட் அடிச்சு ரெண்டு மாடி அடுக்கு வீடு கட்டி.. இதுல யாருக்கு நஷ்டம்னு சொல்றது.. யாருக்கு லாபம்னு சொல்றது?"

நெளிந்தேன். இவர் அடி வாங்கிய ரகசியம் புரியத் தொடங்கியது போலிருந்தது.

"அதான் ப்ரசங்கத்துல கேட்டேன். நம்ம ஜனங்களைத்தான் கேட்டேன். ஐயா.. இந்துத்வம், ப்ராமண சங்கம்னு பேசிண்டிருக்கேளே.. இந்த மாதிரி நம்ம இந்துக் கோவில்களை ஒட்டின வீடுகள் இப்படி மதம் மாறாம பாத்துங்கோ. ஐயா.. முஸ்லிம் சகோதரர்களே.. கிறுஸ்தவ சகோதரர்களே.. உங்களுக்கு இருக்கற வசதிக்கு சிவன் கோவிலுக்கு அடுத்த வீட்டைத்தான் வாங்கணுமா? பெருமாள் கோவில் பக்கத்துல வீடு வாங்கி என்ன பண்ணப் போறேள்? சித்த தள்ளி வாங்கப்டாதானு ப்ரஸங்கத்துல பேசினேன். இது இப்படியே போனா நாளைக்கு என்னாகும்னா... நாளைக்கு இந்துக் கோவில்களைச் சுத்தி மத்த மத வீடுகளும்.. அப்றம் அவா வழிபட இடம் வேணுமே.. அந்த ஆலயங்களும் வந்துடும். அப்புறம் கோவில் இருந்து என்ன பிரயோஜனம்? அவாளாவது கோவிலை எதுக்காவது உபயோகிச்சுக்கட்டும்னு இந்துக்கள் நாம விடமாட்டோம். நாப்பது அம்பது வருஷம் கழிச்சு 'இது எங்க கோவில் நிலம்.. இதுக்குள்ள நீங்க எப்படி வரலாம்?'னு, சப்ஜாடா வித்துட்டு ஊரை விட்டு ஓடின நாமளே கொடி பிடிப்போம். இதையெல்லாம் தவிர்க்கலாம்னு பேசினேன். இந்துப் புராதன கோவில்களை ஒட்டின அக்ரகார வீடுகளை இந்துக்கள் நாமதான் பராமரிக்கணும்னு பேசினேன்.. இல்லேன்னா நம்ம கோவில்களைச் சுத்தி பள்ளிவாசலோ சர்ச்சோ வந்தா நாம வருத்தப்படக்கூடாதுனு பேசினேன்.. நம்ம கோவில் அக்ரகார வீடுகளை வாங்கி உதவி பண்றது வெளி நாட்டுல சம்பாதிக்கற இந்துக் குடும்பங்கள் அத்தனை பேருடைய கடமைனு பேசினேன். ஒரு ஆதர்சமான ஸ்பட த்ருஷ்டியோட பேசின பேச்சு.." என்றார்.

"அதிசயம்" என்றேன்.

"என்ன சொல்றேள்ணா?"

"உங்களை உயிரோட விட்டது அதிசயம்"

"மிச்ச காரியமும் ஆகட்டும்னு ஆளைக் கூட்டிண்டு வந்துடுவேள் போலிருக்கே? ஏன் அப்படிச் சொல்றேள்?"

"ஜாதி மதம் ஒழியணும்னு சொல்ற நாள்ல நீங்க இப்படி பேசினது ரொம்ப விஷமத்தனமா தோணுது. யார் கிட்டே வசதியிருக்குதோ அவங்க வீடு வாங்றதுல என்ன தப்பு இருக்கு? எங்க வாங்கினா என்ன? ராமர் கோவில் பக்கத்துல சர்ச் இருந்தா என்ன? விஷ்ணு கோவில் பக்கத்துல ஒரு தர்கா இருந்தா என்ன? நீங்க சொல்றது ஜாதிவெறியோட உச்சம் இல்லையா?"

"உச்சமாவது மச்சமாவது? செல சமயம் நீங்க அமெரிக்கா போய் படிச்சேளா விடிச்சேளானு சம்சயமாறது. பக்கத்து பக்கத்துல இருந்தா யாருக்கு என்ன பலன்? இவாளுக்கும் நிம்மதியில்லே அவாளுக்கும் சந்தோஷமில்லே. ஒவ்வொத்தருக்கும் கல்சர் ஹெரிடெஜ்னு இருக்குணா. பள்ளிவாசலை ஒட்டி ஒரு பிராமணன் வீடு வாங்குவானா? மாட்டான். ஆனா பெருமாள் கோவிலை ஒட்டின தன்னோட வீட்டை மட்டும் ரெண்டு காசு ஜாஸ்தியா வரதுன்னுட்டு எதுக்கு இன்னொரு மதக்காரனுக்கு அதே ப்ராமணன் விக்கணும்னேன்? அவ்வளவுதான். எ ரிக்வெஸ்ட் பார் எதிகல் இந்ட்ராஸ்பெக்‌ஷன். இதுல ஜாதி வெறி எங்க இருக்குணா?"

அவருடைய வாதம் என்னைச் சற்றே மயக்கினாலும், அதன் அடிப்படை என்னை அச்சுறுத்தியது.

"இட்ஸ் எ பிடி" என்றார். "நான் சொன்னதுல ஜாதி மத ஆதாரம் பாத்து என்னை அடிச்சுப் போட்டவா எல்லாம் இந்துவா முஸ்லிமா யாருனே தெரியாது. என்னை மாதிரி அவாளுக்கும் ரெண்டு கால் கை. என்னை அடிச்சுப் போட்ட வலி அப்பவே போயிடுத்து. ஆனா இவா அறியாமை..அஞ்ஞானமும் அசம்போதமும் தான் எனக்கு ரொம்ப ப்ராண சங்கடமா இருக்கு. தீராத பீடை. ஒரு ரோகம் மாதிரி. என்னமோ கிராமத்துல இருக்கறவா நேரோ மைன்ட் மாதிரியும், பட்ணம் விதேசம் போய்ட்டு வந்தவா ரொம்ப முற்போக்கு மாதிரியும் பேசிண்டு திரியறவாளைப் பார்த்தா சிரிப்பா இருக்கு".

நிச்சயம் கொக்கி போடுகிறார் என்பது புரிந்தது. அவரையே பார்த்தேன்.

"விடுங்கோ. எனக்குத் தோணிதை நான் சொன்னேன். அவாளுக்குத் தோணினதை அவா செஞ்சா. உமக்கொண்ணு தெரியுமோ? இந்த வட்டாரத்துல இருக்கற அனேக ப்ராமணர்க்குள்ள ஒரு முஸ்லிம் ரத்தம் ஓடறது. இந்த வட்டாரத்துக்குள்ள இருக்கற அனேக முஸ்லிம்கள் ஒரு ப்ராமண அம்மணியைத்தான் ரொம்ப நாளைக்கு ரகஸ்யமா ஆராதிச்சுண்டு வந்தா"

"என்ன சார் கதை விடறீங்க?"

"கொஞ்சம் உள்ளே போய் ஊர்ல பழந்தின்னு கொட்டை போட்டவாளைக் கேட்டா விவரம் தெரியும்..எல்லாம் இந்தப் பக்கதுல தான் நடந்துது. கபிஸ்தலம் போற வழியிலே வைதீஸ்வர அக்ரகாரம்னு இருந்தது, நூறு இருநூறு வர்ஷங்களுக்கு மின்னாலே பிரசித்தம்னு எங்க பெரிய பாட்டி சொல்வா. இப்போ ஊரையே காணோம். ஊர் காணாமப் போனாலும் அங்க நடந்த சமாசாரம் காணாம போகலே, இந்தப் ப்ரதேச ரத்தத்துல கலந்துடுத்து" என்றபடி என்னைப் பார்த்தார். "நேக்கும் பொழுது போகலே. ஆர அமறக் கேளுங்கோணா".

இவரைப் பார்க்க வந்து ஒரு நாள் பொழுது கழியும் என்று நான் நம்பியது வீணாகவில்லை. தொடர்ந்து நான்கு நாட்கள் அவரைத் தினம் சந்திக்க வேண்டியிருந்தது. அத்தனை சுவாரசியமான சமாசாரம். ஜாதி மதம் கடந்த விவகாரம்.

காதல் விவகாரம்.


[தொடரும் சாத்தியம்: 60-75%]