2014/10/11

உளமளவாமுலகளவும்


    ருக்குப் போயிருந்தேன்.

முதல் நாள், வழக்கம் போல் பொழுது போனதே தெரியவில்லை. இரண்டாம் நாள், வழக்கம் போல் பொழுதே போகவில்லை. "ஏண்டா இப்டி இருப்பு கொள்ளாம அடைபட்ட மூஞ்சூராட்டம் சுத்தி சுத்தி வரே?" என்றார் பாட்டி.

பாட்டியைப் பார்த்தேன். அவரும் அடைபட்ட மூஞ்சூரு போலத்தான். அவருக்கு நூறு வயதாகிறது. ஆறு தலைமுறை சந்ததிகளைப் பார்த்திருக்கிறார். எத்தனை ஜனனம் எத்தனை மரணம் எத்தனை விவாகம் எத்தனை துக்கம் எத்தனை கேலி எத்தனை குதூகலம் எத்தனை இன்பம் எத்தனை துன்பம் எத்தனை நோய் எத்தனை இழப்பு எத்தனை மழலை எத்தனை மூப்பு எத்தனை வெற்றி எத்தனை ஏமாற்றம்... "எல்லாரும் போயிண்டிருக்கா.. நான் இன்னும் குத்துக்கல்லாட்டம் உக்காந்துண்டு... போக மாட்டேங்கறேனே?!" என்று ஆயாச மூச்சு விட்டபடி, தளர்ந்து போன உடற்கூட்டுக்குள் அடங்காத அனுபவச் சுமையுடன் தடுமாறிச் சுற்றி வரும் எலி, என் பாட்டி. பாட்டியைப் நினைத்தால் இறுக்கமாகவும் வருத்தமாகவும் இருந்தது. எத்தனை கோடி துன்பம் வைத்தாய் இறைவா!

"போரடிக்குதே.." என்றிழுத்தேன் பொதுவாக.

"ஏண்டா.. உன் ப்ரண்டு யாரோ ஒருத்தர் இங்கே எங்கியோ இருக்கார்னு சொல்வியே? அவரைப் பாத்துட்டு வாயேன்?"என்ற குரல் கேட்டுத் திரும்பினேன்.

இது போன்ற மிகத் தெளிவான கருத்துக்களைத் தாராளமாகவும் ஏராளமாகவும் அள்ளி வீசக்கூடிய நானறிந்த இருவரில் ஒருவர், என் அம்மா.

"எப்படிம்மா உன்னால் முடியுது?" என்றேன்.

"அதாண்டா.. சமூக உபன்யாசம் பண்றேன் பேர்வழினு அசடாட்டம் எதையாவது சொல்வாரே.. உன் ப்லாக்ல கூட எழுதுவாரே.. அசுவத்தாமன்? அவர் ஒப்பிலியப்பன் கோவில் கிட்டே இருக்கார்னு சொல்வியே? பாத்துட்டு வரதுதானேனு கேட்டேன், இது கூட புரியலையா?"

போலியாக வியந்து, "ப்ச.. அவரா..?" என்றேன். சொல்லும் பொழுதே அவரைச் சந்திக்க எண்ணினேன்.

"உனக்குத் தெரியுமோ? அவரை யாரோ நாலஞ்சு பேர் சேர்ந்து நன்னா அடிச்சுப் போட்டுட்டாளாம். பேப்பர்ல எல்லாம் வந்துது" என்றார் அம்மா.

"என்னமா சொல்றே? என்னாச்சு?"

"சரியா தெரியலடா. சும்மா இருக்காம எந்த வம்பை விலைக்கு வாங்கினாரோ யார் கண்டா? உன் ப்ரண்டு தானே?"

"சரி.. நான் போய் பார்த்துட்டு வரேன்" என்று ஆயத்தமானேன். என் வட்டம் எல்லாம் வம்பிழுக்கும் காந்தம் போலப் பார்த்த அம்மாவிடம் வேறேதும் சொல்லத் தோன்றவில்லை.

"வரப்போ கும்மோணத்துல கொஞ்சம் காய்கறியும் உதிரிப்பூவும் வாங்கிண்டு வரியா?. ப்ரண்டைப் பாக்கறச்சே அப்படியே கோவிலுக்குள்ளே அடி வச்சுட்டு வா, ஒண்ணும் குறைஞ்சு போயிடமாட்டே"

"ரைட்டு" என்று விலகினேன்.

கும்பகோணம் பஸ் பிடிக்க ஆடுதுறை கலைஞர் பேருந்து நிலையத்துக்கு வந்தேன். எதிரே 'அம்மா'வின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்த சுமார் முப்பது பேரில் பலர், பக்கத்து ரகுராம விலாசிலிருந்து வந்த இட்லி மசால்வடை பொட்டலங்களைக் கவர்ந்து கொண்டு பின் வரிசைக்கு மறைவாக நகர்ந்து கொண்டிருந்தனர். "நீதி தேவதைக்கு தண்டனை தர நீ யார் என்று நான் கேட்கிறேன்?" என்று யாரையோ கேட்டுக் கொண்டிருந்த சில்லறைப் பேச்சாளரின் கண்கள், பொட்டலத்துக்குத் தாவித் திரும்பின. பஸ் வர, ஏறிக்கொண்டேன்.

ஒப்பிலியப்பன் கோவில் பக்கம் போய் வருடக்கணக்காகிறது. எல்லாமே கல்லென்று தீர்மானமாகத் தெளிந்துவிட்ட நிலையில் கோவில்களின் அமைதி, அதிலும் சில கோவில்களின் அமைதி மட்டுமே எனக்குப் பிடிக்கிறது இப்பொழுதெல்லாம்.

திருநாகேசுரத்தில் ஈயடிக்கும், போவேன். திருவிண்ணகரத்தில் கொஞ்சம் கூட்டம் இருக்கும். அதனால் போவதில்லை. ஒப்பிலியப்பன் கோவில் அசுவத்தாமருக்குப் பிடிக்கும். அவரைப் பார்க்கப் போனால் கோவில் ட்ரிப் நிச்சயம். அத்தோடு போகிற வழியில், "ஆஸ்திகன் நாஸ்திகன் எல்லாம் நமக்காக்கும். ஜகன்மாதாவுக்கும் ஜகப்பிதாவுக்கும் தேவையில்லைணா. மிஸ்டர் ஒப்பிலியப்பனுக்கு இதெல்லாம் டோன்ட் கேர் தெரியுமோ? ஆஸ்திகமாவது நாஸ்திகமாவது? இதெல்லாம் தர்க்கத்துக்கான அந்தஸ்து முத்ரைகள். ஸ்டேடஸ் ஸிம்பல்ஸ் பார் இன்டெலெக்சுவல் வேனிடி யு நோ? சர்வேஸ்வரனுக்கு இதெல்லாம் சின்னக்குழந்தை மூச்சா மாதிரி. அசூயையே பட மாட்டான். யு நோ ஸம்திங்? நீங்க அவனைப் பார்க்க வேண்டியதில்லை. அவனுக்கு உம்மைப் பார்க்கணும்னா ஹி வில் சம்மன் யு. தெனம் கோவிலுக்குப் போறவா லட்சக்கணக்குல இருக்கா. அதுல எல்லாரையும் அவனால பார்க்க முடியுமோ? முடியாது. ஹி டஸ் நாட் ஸீ எவரிபடி விஸிடிங் ஹிம். இவா என்னமோ க்யூல நின்னு அர்ச்சனை பண்ணிப் பாத்துட்டு வந்து, 'ஆகா திவ்ய தரிசனம் கிடைச்சது'னு கூத்தாடுவா. கஷ்மல ஸாகரம். இவா பாக்க வராங்கறதுக்காகவும் பெரிய பணத்துல சீட்டு வாங்கி அர்ச்சனை பண்றாங்கறதுக்காகவும் வொய் ஷுட் ஹி ஸீ தெம்? இந்த க்விட் ப்ரொ க்வோவெல்லாம் பகவானிடத்துல பலிக்குமோ? என்னத்தை சொல்றது?! இப்டி கண்மூடிப் போய்ட்டு வர லட்சத்துல பதினாயிரம் பேராவது உம்மை மாதிரி ஸ்கெப்டிகல் டைப்பு. நாலு அட்சரம் படிச்சு நாலு தேசம் பார்த்த கெத்துல கடவுள் கிடையாதுனு பாபுலர் டயலாக் விடறவா.. யு ஸீ.. இவாள்ல சில பேரை அவன் வரவழைக்கறான். ஹி வான்ட்ஸ் டு ஸீ, அவ்ளோ தான். இல்லேன்னா நீங்க சொன்னேளே போனவாட்டி காலேஜ்ல ஆள் எடுக்கப் போனப்போ அப்படியே அயோத்யா போய் ஸ்ரீராம பகவான் பாதம் பட்ட இடங்கள்ள நின்னதாச் சொன்னேளே..அதெல்லாம் உம்மைப் போல ஆசாமிகளுக்கு வாய்க்குமா? வாட் ஐ மீன் இஸ் சில குழந்தைகள் அப்பாம்மாவைப் பாக்க வரா. சில குழந்தைகளை அப்பாம்மா வரவழைச்சுப் பாக்கறா. ஹீப் ஆப் ஸ்டோன்னு நீங்க நெனச்சுண்டு வருவேள். லீப் ஆப் ஓன்னு அவன் நெனச்சுப்பான். நாமா போய் பார்த்தாலும், நம்மை வரவழைச்சு அவன் பார்த்தாலும் என்ன வித்தியாசம்? சர்வம் ஏகம்ணா" என்று ஒரு பிரசங்கம் செய்வார். பிரசங்கம் செய்யட்டும். பரவாயில்லை. என்னை ணா போட்டு பேசுவது எனக்குச் சங்கடமாக இருக்கும். என்னவோ இவர் என்னை விட இளையவர் போல.

கும்பகோணம் டவுன் பஸ் நிலையத்திலிருந்து அநியாயத்துக்குக் கேட்ட ஒரு ஆட்டோக்காரனிடம் பேரம் பேசி ஒருவழியாக அசுவத்தாமன் வீட்டுக்கு வந்தேன். செவ்வாய் கிரகத்துக்குப் போக ஒரு கிலோமீட்டருக்கு ஏழு ரூபாய் மட்டுமே ஆகும் இந்நாளில், ஆறு கிலோமீட்டருக்கு நூற்றைம்பது ரூபாயை அழுதேன். செவ்வாய் கிரகத்துக்குப் போனால் ஆட்டோவில் போகக் கூடாது என்றுத் தீர்மானித்தேன்.

"வாங்கோ வாங்கோ, வரணும்ணா" என்று வரவேற்றார் அசுவத்தாமன். மெலிந்திருந்தார். கண்களில் ஒரு அச்சம். உடலில் ஒரு தளர்ச்சி. வரவேற்றதற்கே வாயைப் பிடித்துக் கொண்டார். உட்காரச் சொன்னார். "காபி சாப்டறேளா? சன்ரைஸ் காபி. இல்லேன்னா பக்கத்துல பீமாஸ்லந்து மைசூர் போண்டா பைனாப்பிள் அல்வா எடுத்துண்டு வரச்சொல்லட்டுமா? பில்டர் காபியும் கொண்டு வருவான்" என்றார்.

"பீமாஸா? நான் பாக்கவேயில்லையே?"

"பக்கத்தாத்துக்காரர். ரிடையர்டு பப்லிக் வொர்க்ஸ் எஞ்சினியர். விடோயர். மாமி வைகுந்தலோகம் போனப்புறம், போன சந்தோஷமோ என்னமோ தெரியலே, நன்னாவே சமைக்கறார். நளபாகம் நாலு பேர் அனுபவிக்கட்டுமேனு, கேஷ் ஒன்லி டேக் அவே மீல்ஸ் டிபன்னு தெனம் ஆத்துலந்து சப்ளை பண்றார். ஏழெட்டு வாடிக்கை என்னை மாதிரி. பீமாஸ்னு நான் பேர் வச்சிருக்கேன். சித்த இருங்கோ" என்று செல்பேசி டிபன் காபி வரவழைத்தார்.

"ரொம்ப நாளாச்சு பாத்து.. இப்பல்லாம் ப்ரசங்கம் பண்றதில்லையா?" என்றேன்.

இல்லையென்று தலையாட்டினார். "ப்ரஸங்கம் பண்றதிலே. ப்லாக்ல எழுதறதில்லே. எதுவுமே பண்றதில்லே. எங்கயும் போறதில்லே. யதாஸ்தானம்னு இருக்கேன்"

"ஏன் சார்? உங்களுக்கு அடி பட்டுதுனு சொல்றாளே? அதனாலயா?"

"அடி படலைணா. இதென்ன மடியா விழுப்பா படறதுக்கு? அடிச்சு நொறுக்கிட்டா. நாலஞ்சு காலிப் பசங்க சேர்ந்துண்டு மொச்சு எடுத்துட்டா. திருடைமருதூர்ல ப்ரஸங்கம் பண்ணிட்டு ஆத்துக்கு வந்தேனா? பசியில்லை. முழுசா லங்கணம் வேண்டாம்னுட்டு ஒரு சுருள் காஞ்ச நாத்தங்கா ரெண்டு மோர் மொளகாவோட நாலு கரண்டி ததியன்னம் போட்டு சாப்டுட்டு, விஸ்ராந்தியா திண்ணைல படுத்துத் தூங்கிண்டிருந்தேன். திடீர்னு நாலு பேர் பரசுராமனாட்டம் வந்து என்னைத் தூக்கத்துல ரணப்படுத்திட்டுப் போய்ட்டா. உக்கார முடியலே. நிக்க முடியலே. அழ முடியலே. சிரிக்க முடியலே. ஆஸ்பத்திரில இருந்த அத்தனை பேண்டேஜும் தீந்து போற அளவுக்குக் கட்டுப் போட்டு, ஏழெட்டு மாசமா தெனம் தெரபினு வந்து, என்னை இந்த நிலமைல விட்டிருக்கா. இன்னிக்கு கை கால் அசஞ்சு கொஞ்சம் பேசறேன்னா ஏதோ ஒரு ஜென்மாந்த்ர புண்யம். ஹ்ம். என்னை மொத்தியெடுத்துட்டானா மொத்தியெடுத்துட்டாணா" என்று இரு சுழிகளை ஒரே வாக்கியத்தில் பயன்படுத்திப் பேசினார்.

"யார் செஞ்சா? என்ன ஆச்சு? போலீசுக்குப் போனேளா?" என்றேன்.

"போலீஸ்ல வந்து கேட்டா. ஆஸ்பத்திரிலே படுத்துண்டிருக்கச்சே வந்தா. அங்க வந்த ஒரு மீசைக்காரப் போலீஸ் கிட்டே இந்த மாதிரிடாப்பானு சொன்னேன்.. நேக்கு சத்ருக்கள் யாரும் கிடையாதுன்னேன்... ஆனா அவா என்னைப் பார்த்த பார்வை இருக்கு பாருங்கோ.."

"ஏன்?"

"ஓய் பெரியவரே..'வாயையும் சூத்தையும் வச்சுகினு சும்மா கெடக்கலாம்ல? உனுகின்னா லொள்ளு வேண்டிகிது இந்த வயசுல? பெர்சுனா இன்னா வேணா பேசுறதா? நீ பேதியாவுறதை நாங்கள்ளாம் பாத்துகிணு இருக்கவா? இன்னும் ரெண்டு தட்டாம விட்டானுவளே..'னு நாக்கூசாம நாராசமா பேசிட்டுப் போறான்! என்ன பண்றதுணா.. இதெல்லாம் ப்ராரப்தம்னு விட்டுட்டேன்"

சுவாரசியமான விஷயம் போலிருந்தது. "என்ன ஆச்சு சொல்லுங்களேன்?" என்றேன்.

"சொல்றதுக்கு என்ன? சொல்றேன் சொல்றேன். இதையெல்லாம் ப்லாக்ல எழுதவேண்டாம்ணா..புரியறதா?"

"சொல்லுங்க"

"திருடைமருதூர்ல ப்ரசங்கம்னேன் இல்லையா? நம்ம கோவில் ஸ்தல புராணங்கள் பத்தின உபன்யாசம். நேக்குத் தெரிஞ்சதைச் சொல்வோம்னு போயிருந்தேன்" என்றபடி கால்களை நீட்டிக் கொண்டார்.

"திருடைமருதூர்க்குள்ளே சமீபத்துல போயிருக்கேள் இல்லையா? இங்கனு இல்லே பொதுவாவே மாயரம் கும்மோணத்தைச் சுத்தி எல்லா இடத்துலயும் பாத்தேள்னா இப்படிக் கொஞ்ச காலமாவே நடந்துண்டிருக்கு. திட்டம் போட்டுப் பண்றானு சொல்லலே.. ஆனா தற்செயலா நடக்கறாப்ல நடக்கறதுனு சொல்றேன்.. வித்யாசம் புரியறதோ?"

"புரியற மாதிரி சொல்லுங்க சார்"

"சொல்றேன். மொதல்ல ப்ரசங்கத்தை ஸங்க்ஷேபமா சுருக்கமா சொல்றேன்"

"ஐராவதேஸ்வரம் புராதனக் கோவில். ஐராவதேஸ்வரம் கதை தெரியுமோ? பிரம்மா கொடுத்த மாலையைத் அலட்சியமா தூக்கியெறிஞ்சதும் இந்த்ரனுக்கும் ஐராவதத்துக்கும் சாபம் குடுத்துடறார் துர்வாசர். இந்த்ரனுக்குப் பதவி போயிடறது, ஐராவதம் கறுப்பாயிடறது. வெளுப்பா இருந்தாத்தான் யானைக்கும் பிடிக்கும் போலருக்கு - சிவபெருமான் கிட்டே ஐராவதம் தவமிருந்து சாப விமோசனம் கிடச்ச இடமாக்கும். அங்க இருக்குற விநாயகருக்குத் தும்பிக்கைப் பாத்தேள்னா விருச்சிகமாட்டம் இருக்கும். தேள் மாதிரி துதிக்கைங்கறதாலே விநாயகருக்கு மருந்தேஸ்வரன்னும் பேருண்டு. லோகத்து அத்தனை பூச்சிக்கடிக்கெல்லாம் இந்த மூஷிகவாகனன் தான் மூலிகை. அப்பனே பிள்ளையாரப்பானு அழுதா அத்தனை கடியும் கரைஞ்சு போயிடும். சத்யம்..

..திருடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் எத்தனை புராதனமான தேவஸ்தானம்! பாடல் பெற்ற ஸ்தலம். கோவிலுக்குள்ளே போனேள்னா சுவர் சித்ரங்கள்ளாம் கண்ணைப் பறிக்கும். ரெண்டாயிரம் வருஷத்துக்கும் புராதனமான கோவில்! அத்தனை கடவுள்களும் இங்கே மகாலிங்கஸ்வாமியை ப்ரார்த்தனை பண்ணியிருக்கா. தபஸ் பன்ணியிருக்கா.. கோவிலுக்குள்ள அம்பாள் சன்னதிலே ரெண்டு நிமிஷம் நின்னேள்னா கண்ல தண்ணி ஊத்தெடுக்கும்.. அப்படிப்பட்ட லக்ஷணம். அப்பர், சுந்தரர், சம்பந்தர் மூணு பேரும் உருகி உருகிப் பாடின ஸ்தலம். ஆதி சங்கரர் ஆராதனை பண்ணின ஸ்தலம். இங்கேதான் அவருக்கு அத்வைத ஞானப்பிரகாசம் கிடைச்சது. வில்வக்காடா இருந்த இடத்துல விஸ்வநாதன் சுயம்புவா வந்த இடம். சுவாரசியமான கதை தெரியுமோ? தபஸ் பண்ணின அகஸ்தியருக்கு ப்ரத்யக்ஷமான உமையாம்பிகை, 'ஓய் அகஸ்தியரே! என்னய்யா வேணும்?'னு கேக்கறார். அகஸ்தியர் உமையாளைத் தரிசனம் பண்ணினதுல திக்குமுக்காடிப் போய், 'ஜகதாம்பிகே! உமா! எனக்கு ஈஸ்வரனை இங்கே தரிசிச்சு தினப்படிக்கு ஆராதனை பண்ணணும் தாயே!'னு கேக்கறார். சரின்னுட்டு பரமேஸ்வரனை வேண்டிக்கறா பார்வதி. அவரோட ஹ்ருதயத்துலந்து ஜோதிர்மயமா வெளிவரார் லோகேஸ்வரன். அந்த அக்னியையும் ப்ரகாசத்தையும் அகஸ்தியரால தாங்க முடியலே. அம்பாள் யாரு? சும்மாவா? அப்படியே ஜோதிர்மயமா வந்த ஈஸ்வரனைச் செல்லமா அடக்கி வழி பண்றா. ஜோதிஸ்வரூபமான ஈஸ்வரன் சுவயம்பு லிங்கமா வரார். லிங்கம்னா அப்பேற்கொத்த மகோன்னத லிங்கம். மகாலிங்கமா வந்த மகேஸ்வரன் முன்னால 'உண்முத்தாட உவகை தந்தாய் தண்முத்தாடத் தடமூன்றுடையாய், உனையுண்ணிக் கண்முத்தாடக் கழற்சேவடி புரிவேன்'னுட்டு ஆனந்தக் கூத்தாடறார் அகஸ்தியர். இதையெல்லாம் பாத்த ஈஸ்வரர், 'என்னடா இந்தாளு, கூத்தாடி கிட்டயே கூத்தாடுறானே? இவனை நம்பி நாளைக்கு காவேரியை எப்படி ஒப்படைக்கறது?'னு கலங்கறார். உமை அப்படியிப்படி பாக்கறா. நேக்கொண்ணும் தெரியாதுங்கறா. சட்னு ஸ்வாமி ஒரு காரியம் பண்றார். மகாலிங்கத்துக்கு முன்னாடி உக்காந்து ஆராதனை பண்ண ஆரம்பிக்கறார் மகாலிங்கம். உமையாம்பிகை ஆச்சரியப்படறா. 'என்ன ஸ்வாமி இது? உங்களை நாங்கள்ளாம் ப்ராத்தனை பண்றோம். நீங்களே உங்களைப் ப்ரார்த்தனை பண்ணிக்கறேளே? இதென்ன சமாசாரம்?'னு, இப்படி இடுப்புல ஒரு கையும் அப்படி கன்னத்துல இன்னொரு கையும் வச்சுண்டு ஆஸ்சர்யத்துல மூழ்கிப் போய்க் கேக்கறா. அதுக்கு அந்த ஒரிஜினல் அசல் உலகநாயகன் என்ன சொல்றார் தெரியுமோ? 'இல்லேடி கண்மணி. இந்த இடம் வில்வக்காடு. உன்னதமான மருதமரம் சூழ்ந்த இந்த இடத்துல என்னைப் ப்ரார்த்தனை பண்றவாளுக்கு சர்வ பாப நாசமும் சர்வ சாப விமோசனமும் உடனடியா கிடைக்கும். அது ரொம்ப சாதாரணமான பலன். அதுக்கு மேலே அஸ்வமேத யாகம் பண்ணின புண்யம் கிடைக்கும். அது போறாதுன்னா அதுக்கு மேலே கைலாசத்துல என்னை தரிசனம் பண்ணின பலன். அதுக்கும் மேலே வேணும்னா மோக்ஷமும் கிடைக்கும். இந்த ஒரு இடத்துல என்னைக் கும்பிட்டா போறும். ஆனா முறையா கும்பிடணும். சாஸ்த்ரோத்ரமா ப்ரார்த்தனை பண்ணினா இத்தனை பலனும் உண்டு.. அதான் நேக்கே.. ஆசை வந்திருச்சு, ஆகையால் ஓடி வந்தேன்'னுட்டு பல்லைக் காட்டறார். அவர் எப்படி சாஸ்த்ரோத்ரமா பண்றார்னு படிச்சுண்ட அகஸ்தியர் நமக்கெல்லாம் அதைக் கத்துக்க வழி பண்ணினார். இப்படி பகவானை எப்படிக் கும்பிடணும்னு பகவானே சொல்லிக் கொடுத்த ஸ்தலம்..

..உப்பிலியப்பன் கதை கேட்டேள்னா ப்ரம்மானந்த புராணத்துல இருக்கு - என்னமோ இன்னிக்கு நேத்திக்கு கட்டிவிட்டதில்லைணா. ஆழ்வாரெல்லாம் இழை இழைனு இழைஞ்சு பாடியிருக்கா, சும்மாயில்லே. மகாலக்ஷ்மி இங்க ஒரு துளசிமாடத்துல பொறந்த இடம். துளசிச் செடி அப்படி ஒரு வரம் கேக்கறது பகவான்ட்ட. ஒரு செடியோட வேண்டுதலை மதிச்சு பிராட்டி பொறக்கறா. கண்மூடித்தனம்னு சொல்லுங்கோ இல்லே க்ரீன் அவேர்னஸ்னும் சொல்லுங்கோ.. எல்லாம் சிம்பாலிக் தானேணா? கதையைக் கேளுங்கோ. என்னமோ துளசிமாடத்துல சப்தம் கேக்கறதேனு மார்க்கண்டேய முனிவர் வரார். துளசி மடிலே குழந்தையைப் பாத்துட்டு பரவசமாயிடறார். மகாலக்ஷ்மி மார்க்கண்டேயரைப் பாத்து லேசா சிரிக்கறா. மழலைச் சிரிப்புக்கு பத்து மோகனத்தைக் கட்டியடிக்கலாம் இல்லையோ? எக்ஸ்ட்ரா பரவசமாயிடறார் மார்க்கண்டேயர். அடடா.. லோகத்துல இப்பேற்பட்ட பெண் குழந்தை பொறக்கறது சாத்யமோ? இதென்ன மனுஷக் குழந்தை மாதிரியே இல்லையே? தெய்வீகத்துக்கு ஒரு படிமேலன்னா இருக்கு இந்தப் பொண்ணோட மந்தகாசம்? உள்ளே எடுத்துண்டு போய் வளக்கறார். வருஷமாறது. சிங்கில் மேனா இருந்த மகாவிஷ்ணு ரொம்ப லோன்லியா பீல் பண்றார். 'போறும்டி என் பட்டு.. நீயும் நானும் தனியா இருந்தது'னு சொல்லிண்டு ஒரு வயோதிகரா வேஷம் போட்டுண்டு வந்து மார்க்கண்டேயர்ட்ட பொண்ணு கேக்கறார். மார்க்கண்டேயர் நாசூக்கா 'ஐயா பெரியவரே. என் பொண்ணு ரொம்ப சின்னவள். அவளுக்கு உப்பு போட்டுக்கூட சமைக்கத் தெரியாது'னுட்டு எதையோ சொல்லி மழுப்பப் பார்க்கறார். மகாவிஷ்ணு விடாம, 'அதனாலென்ன? நேக்கு ரத்த அழுத்தம், யூரியா பிரச்னையெல்லாம் உண்டு.. வயசாறதோன்னோ? உப்பில்லாமலே சமைச்சுப் போடட்டும்.. உங்க பொண்ணு ஜலம் சுட வச்சுக் குடுத்தா கூட அது நேக்கு தேவாம்ருதமா இருக்கும்'னுட்டு படு ரொமான்டிக்கா டயலாக் விடறார். 'இதென்ன கூத்தா இருக்கே?'னுட்டு தவிக்கறார் மார்க்கண்டேயர். 'சித்தே இருங்கோ பெரியவரே'னுட்டு உள்ளே போய் நேரா பெருமாள்ட்டயே உதவி கேக்கறார். அப்பத்தான் சட்னு புரியறது அவருக்கு. ஓடோடி வெளில வந்து பார்க்கறார். சங்கு சக்ரதாரியா ஆகாசத்துக்கும் பூமிக்குமா நின்னுண்டிருக்கார் உலகளந்த பெருமான். மார்க்கண்டேயரைப் பார்த்து பவழமல்லிப்பூவா சிரிக்கறார். 'என்னைத் தெரியுமா.. நான் சிரித்துப் பழகி கருத்தைக் கவரும் ரசிகன் என்னைத் தெரியுமா?'ங்கறார். 'ஆகா தெரிஞ்சுண்டேனே. ஆகாகா! பல்லுருவையெல்லாம் படர்வித்த வித்தா! உன் தொல்லுருவைத் தெரிந்து கொண்டேன். சொல்லித் தெரிவதா உன் சுந்தர ரூபம்? அள்ள முடியாதென்னிரு கண்கள் இருந்தென்ன? கொள்ள முடியாதென்னிரு கைகள் இருந்தென்ன? மனமெலாம் மயங்கித் தவிக்கிறேனே! என் ஞானப்பிரானை அல்லால் இல்லை இனி நான் கண்ட நல்லதுவே'னுட்டு உருகிப்போயிடறார். ஓடோடிப் போய் பிராட்டியைக் கூட்டிண்டு வந்து மகாவிஷ்ணு கைல சேர்த்து 'உப்பிலாத போழ்தும் ஒப்பென்று ஏற்ற ஒப்பிலியப்பா'னுட்டு சாஷ்டாங்கமா தரை தேய தண்டம் பண்றார். இதான் ஒப்பிலியப்பன் சரித்ரமாக்கும். கேட்டவாளுக்குக் கேட்ட க்ஷணத்துல மோக்ஷம் தர புண்ய சரித்ரம். வைகுந்த நகரம்னு பேராக்கும் இந்த க்ஷேத்ரத்துக்கு..

..திருனாகேசுரப் புராணம் இதெல்லாத்துக்கும் ஒரு படி மேலே.."

விருப்பமில்லாமல் அவரை மறித்தேன். "இதுக்காகவா உங்களை அடிச்சுப் போட்டா? புரியலியே?"

"சொல்றேன். வாய்க் கொழுப்புனு இல்லே. நடைமுறைல நிதர்சனமா இருக்குறதைச் சொன்னேன். நான் சொன்ன ஸ்தலபுராணாதிகாசக் கதைகள் ஆயிரக்கணக்கான வருஷத்துக்கு முன்னால நடந்ததா சந்ததி விட்டு சந்ததி கேட்டு அறிஞ்சுண்டது. சத்யம்னு நினைக்கறேளோ ப்ருடானு நினைக்கறேளோ எப்படி எடுத்துண்டாலும் இதுக்கெல்லாம் ஒரு வேர்.. ஒரு மூலம்.. ஒரு ம்ருணாளம் இருக்குங்கறதை ஒத்துப்பேள் இல்லையாணா? இதையெல்லாம் நம்ம கலாசாரத்தோட அணு.. டிஎன்ஏ.. விப்ருஷம்னு சொன்னா ஒத்துப்பேள் இல்லையாணா?"

"சரி..." இழுத்தேன்.

"திருடைமருதூர் கோவிலைச் சுத்திப் பாத்தேள்னா இப்போ அங்கேலாம் நிறைய முஸ்லிம்கள் வீடு வாங்கறானு தெரிஞ்சு போகும். ஐராவதேஸ்வரக் கோவில் தெப்பக்கொளத்துக்குப் பக்கத்துல கிறுஸ்தவ வீடுகள். திருநாகேசுரத்துல அக்ரகாரமே காணோம். இதெல்லாம் தப்பா ரைட்டானு நேக்கு தெரியாது. ஆனா நான் சொல்ல வரது என்னன்னா இதெல்லாம் இந்தப் புராதன இடங்களின் அடையாளங்களை மாத்திண்டிருக்கு. இந்த மாத்தம் உசிதமானு சந்தேகமா இருக்கு. பாருங்கோணா.. இப்பல்லாம் இந்துக் கோவிலுக்கே கூட்டம் வரது குறைஞ்சிண்டிருக்கு இல்லையா? அரசாங்கமோ அறநிலையத்துறை அது இதுனு சொல்றாளே தவிர, பாதிக் காசை எடுத்துண்டுடறா. மீதிக் காசுலயும் பாதியை அப்பப்போ அன்னதானம்னு சொல்லி ஓட்டு வாங்கறதுக்காக இலவச சாப்பாட்டுக் கூடமாக்கிண்டிருக்கா கோவிலையெல்லாம். அறநிலயத்துறைக்காரா சர்ச் தர்கா எல்லாத்தையும் எடுத்துக்கறாளா? இல்லையே, ஏன்? நம்ம கோவிலை மட்டும்தான். கேட்டா இந்து அறநிலையத்துறைங்கறா. விடுங்கோ எடுத்துக்கறா எடுக்காம இருக்கா போயிட்டு போறது. ஆனா நம்ம கோவில் வருமானத்தையும் எடுத்துண்டு, மிச்சமிருக்குறதையும் சுருட்டிண்டு, அக்கம்பக்கத்துலயும் இப்படி சர்ச் தர்கானு வர விட்டு.. ஒரு கேடான சூழல் உண்டாறப்ல இருக்கு. நம்ம மனுஷாளும் கோவிலுக்குப் போறதில்லே.. அப்படியிருக்கச்சே கோவிலை நம்பின அக்கிரகாரக் குடும்பங்கள்.. வைதீகக் காரியங்களையும் தெய்வீகக் கைங்கர்யங்களையும் வயத்துப் பொழப்பா நம்பி வந்தக் குடும்பங்கள் எல்லாம்.. சிதைஞ்சுண்டே போறது. இருந்த ப்ராமணக் குடும்பங்கள் எல்லாம் கடல் தாண்டிப் பரதேசம் போயிட்டா, இல்லேன்னா போயிண்டிருக்கா. இந்த லாஸ்ட் ட்வன்டி பைவ் இயர்ஸுல இந்த மாதிரி கலைஞ்சு போன ப்ராமணக் குடும்ப சந்ததிகள் யாரும் ஊருக்குத் திரும்பி வரப் பிடிக்காம அமெரிக்கா துபாய் ஜெர்மனினு இருக்கா. பணம் பேயாட்டம் ஆடறது. பெரிய பெரிய சிடில பங்களாவும் ப்லாட்டுமா வாங்கிப் போடறா. கிராமத்து வீடும் வேரும் யாருக்கு வேண்டியிருக்கு? அப்பாம்மாவை ஏகாந்தத்துலந்து விட்டுப் புரட்டியெடுத்து பெரிய நகரத்துலயோ இல்லேன்னா இப்பல்லாம் சொல்றாளே சீனியர் ஹோம்னுட்டு.. முதியோர் இல்லத்துல விட்டுட்டு போயிடறா. இங்கே இவா பிதாமகர் பிரபிதாமகர் கட்டின பூர்வீக வீடெல்லாம் நலிஞ்சு போய்.. இதெயெல்லாம் மீறி அப்படியும் இங்கதான் இருப்பேன்னு வைராக்யத்தோட இருக்குற குடும்பங்கள் கோவில் கைங்கர்யத்துல பிழைச்சுண்டிருக்கு..

..இதுல கோவிலைச் சுத்தி இருந்த வீடுகளையெல்லாம் பாத்தா, ஒண்ணொண்ணா வாங்கறவா எல்லாம் துபாய் சவுதினு போன நம்ம் ஊர் முஸ்லிம்கள். இல்லேன்னா கிறுஸ்தவா. கோவில் வருவாயும் குறைஞ்சு, பசங்களையும் பிரிஞ்சு, அரசாங்க உதவியும் கொறஞ்ச நிலைமைலே.. வந்த வரைக்கும் லாபம்னு வீட்டை வித்துட்டுப் போயிடறா அக்ரகார பிராமணா"

"நஷ்டத்துக்கு விக்கலியே.. லாபத்துக்குத்தானே விக்கிறாங்க?"

"லாபம் நஷ்டம்னு எதைச் சொல்றதுணா? நூத்திமூணு வருஷமா அக்ராகரத்துல இருந்த தேக்குமரம் இழைச்ச பெரிய வீட்டை இப்போ இவா வறுமைக்காக வித்துட்டு... வாங்கின கையோட அவா இடிச்சு கலர் கலரா கண்ணை உறுத்துற பெயிண்ட் அடிச்சு ரெண்டு மாடி அடுக்கு வீடு கட்டி.. இதுல யாருக்கு நஷ்டம்னு சொல்றது.. யாருக்கு லாபம்னு சொல்றது?"

நெளிந்தேன். இவர் அடி வாங்கிய ரகசியம் புரியத் தொடங்கியது போலிருந்தது.

"அதான் ப்ரசங்கத்துல கேட்டேன். நம்ம ஜனங்களைத்தான் கேட்டேன். ஐயா.. இந்துத்வம், ப்ராமண சங்கம்னு பேசிண்டிருக்கேளே.. இந்த மாதிரி நம்ம இந்துக் கோவில்களை ஒட்டின வீடுகள் இப்படி மதம் மாறாம பாத்துங்கோ. ஐயா.. முஸ்லிம் சகோதரர்களே.. கிறுஸ்தவ சகோதரர்களே.. உங்களுக்கு இருக்கற வசதிக்கு சிவன் கோவிலுக்கு அடுத்த வீட்டைத்தான் வாங்கணுமா? பெருமாள் கோவில் பக்கத்துல வீடு வாங்கி என்ன பண்ணப் போறேள்? சித்த தள்ளி வாங்கப்டாதானு ப்ரஸங்கத்துல பேசினேன். இது இப்படியே போனா நாளைக்கு என்னாகும்னா... நாளைக்கு இந்துக் கோவில்களைச் சுத்தி மத்த மத வீடுகளும்.. அப்றம் அவா வழிபட இடம் வேணுமே.. அந்த ஆலயங்களும் வந்துடும். அப்புறம் கோவில் இருந்து என்ன பிரயோஜனம்? அவாளாவது கோவிலை எதுக்காவது உபயோகிச்சுக்கட்டும்னு இந்துக்கள் நாம விடமாட்டோம். நாப்பது அம்பது வருஷம் கழிச்சு 'இது எங்க கோவில் நிலம்.. இதுக்குள்ள நீங்க எப்படி வரலாம்?'னு, சப்ஜாடா வித்துட்டு ஊரை விட்டு ஓடின நாமளே கொடி பிடிப்போம். இதையெல்லாம் தவிர்க்கலாம்னு பேசினேன். இந்துப் புராதன கோவில்களை ஒட்டின அக்ரகார வீடுகளை இந்துக்கள் நாமதான் பராமரிக்கணும்னு பேசினேன்.. இல்லேன்னா நம்ம கோவில்களைச் சுத்தி பள்ளிவாசலோ சர்ச்சோ வந்தா நாம வருத்தப்படக்கூடாதுனு பேசினேன்.. நம்ம கோவில் அக்ரகார வீடுகளை வாங்கி உதவி பண்றது வெளி நாட்டுல சம்பாதிக்கற இந்துக் குடும்பங்கள் அத்தனை பேருடைய கடமைனு பேசினேன். ஒரு ஆதர்சமான ஸ்பட த்ருஷ்டியோட பேசின பேச்சு.." என்றார்.

"அதிசயம்" என்றேன்.

"என்ன சொல்றேள்ணா?"

"உங்களை உயிரோட விட்டது அதிசயம்"

"மிச்ச காரியமும் ஆகட்டும்னு ஆளைக் கூட்டிண்டு வந்துடுவேள் போலிருக்கே? ஏன் அப்படிச் சொல்றேள்?"

"ஜாதி மதம் ஒழியணும்னு சொல்ற நாள்ல நீங்க இப்படி பேசினது ரொம்ப விஷமத்தனமா தோணுது. யார் கிட்டே வசதியிருக்குதோ அவங்க வீடு வாங்றதுல என்ன தப்பு இருக்கு? எங்க வாங்கினா என்ன? ராமர் கோவில் பக்கத்துல சர்ச் இருந்தா என்ன? விஷ்ணு கோவில் பக்கத்துல ஒரு தர்கா இருந்தா என்ன? நீங்க சொல்றது ஜாதிவெறியோட உச்சம் இல்லையா?"

"உச்சமாவது மச்சமாவது? செல சமயம் நீங்க அமெரிக்கா போய் படிச்சேளா விடிச்சேளானு சம்சயமாறது. பக்கத்து பக்கத்துல இருந்தா யாருக்கு என்ன பலன்? இவாளுக்கும் நிம்மதியில்லே அவாளுக்கும் சந்தோஷமில்லே. ஒவ்வொத்தருக்கும் கல்சர் ஹெரிடெஜ்னு இருக்குணா. பள்ளிவாசலை ஒட்டி ஒரு பிராமணன் வீடு வாங்குவானா? மாட்டான். ஆனா பெருமாள் கோவிலை ஒட்டின தன்னோட வீட்டை மட்டும் ரெண்டு காசு ஜாஸ்தியா வரதுன்னுட்டு எதுக்கு இன்னொரு மதக்காரனுக்கு அதே ப்ராமணன் விக்கணும்னேன்? அவ்வளவுதான். எ ரிக்வெஸ்ட் பார் எதிகல் இந்ட்ராஸ்பெக்‌ஷன். இதுல ஜாதி வெறி எங்க இருக்குணா?"

அவருடைய வாதம் என்னைச் சற்றே மயக்கினாலும், அதன் அடிப்படை என்னை அச்சுறுத்தியது.

"இட்ஸ் எ பிடி" என்றார். "நான் சொன்னதுல ஜாதி மத ஆதாரம் பாத்து என்னை அடிச்சுப் போட்டவா எல்லாம் இந்துவா முஸ்லிமா யாருனே தெரியாது. என்னை மாதிரி அவாளுக்கும் ரெண்டு கால் கை. என்னை அடிச்சுப் போட்ட வலி அப்பவே போயிடுத்து. ஆனா இவா அறியாமை..அஞ்ஞானமும் அசம்போதமும் தான் எனக்கு ரொம்ப ப்ராண சங்கடமா இருக்கு. தீராத பீடை. ஒரு ரோகம் மாதிரி. என்னமோ கிராமத்துல இருக்கறவா நேரோ மைன்ட் மாதிரியும், பட்ணம் விதேசம் போய்ட்டு வந்தவா ரொம்ப முற்போக்கு மாதிரியும் பேசிண்டு திரியறவாளைப் பார்த்தா சிரிப்பா இருக்கு".

நிச்சயம் கொக்கி போடுகிறார் என்பது புரிந்தது. அவரையே பார்த்தேன்.

"விடுங்கோ. எனக்குத் தோணிதை நான் சொன்னேன். அவாளுக்குத் தோணினதை அவா செஞ்சா. உமக்கொண்ணு தெரியுமோ? இந்த வட்டாரத்துல இருக்கற அனேக ப்ராமணர்க்குள்ள ஒரு முஸ்லிம் ரத்தம் ஓடறது. இந்த வட்டாரத்துக்குள்ள இருக்கற அனேக முஸ்லிம்கள் ஒரு ப்ராமண அம்மணியைத்தான் ரொம்ப நாளைக்கு ரகஸ்யமா ஆராதிச்சுண்டு வந்தா"

"என்ன சார் கதை விடறீங்க?"

"கொஞ்சம் உள்ளே போய் ஊர்ல பழந்தின்னு கொட்டை போட்டவாளைக் கேட்டா விவரம் தெரியும்..எல்லாம் இந்தப் பக்கதுல தான் நடந்துது. கபிஸ்தலம் போற வழியிலே வைதீஸ்வர அக்ரகாரம்னு இருந்தது, நூறு இருநூறு வர்ஷங்களுக்கு மின்னாலே பிரசித்தம்னு எங்க பெரிய பாட்டி சொல்வா. இப்போ ஊரையே காணோம். ஊர் காணாமப் போனாலும் அங்க நடந்த சமாசாரம் காணாம போகலே, இந்தப் ப்ரதேச ரத்தத்துல கலந்துடுத்து" என்றபடி என்னைப் பார்த்தார். "நேக்கும் பொழுது போகலே. ஆர அமறக் கேளுங்கோணா".

இவரைப் பார்க்க வந்து ஒரு நாள் பொழுது கழியும் என்று நான் நம்பியது வீணாகவில்லை. தொடர்ந்து நான்கு நாட்கள் அவரைத் தினம் சந்திக்க வேண்டியிருந்தது. அத்தனை சுவாரசியமான சமாசாரம். ஜாதி மதம் கடந்த விவகாரம்.

காதல் விவகாரம்.


[தொடரும் சாத்தியம்: 60-75%]

45 கருத்துகள்:

 1. ஒரு இடத்லே தடுமாறலே; தயங்கலே. அணை உடைச்சிண்ட மாதிரி அப்படியொரு குபு..குபு... எக்ஸ்லண்ட்...

  பதிலளிநீக்கு
 2. திருவாவடுதுறையில் உள்ளே மடத்திற்குள் சுற்றிப் பார்த்து வந்த பின்பு பலரும் ஆதங்கப்பட்ட விசயம் என்னவென்றால் காசுக்கு ஆசைப்பட்டு மடத்திற்குச் சொந்தமான பலரும் தானமாய் கொடுத்த இடங்களை வெளிநாட்டு சம்பாத்தியத்தில் பணம் அதிகமாக உள்ள இஸ்லாமியர்களுக்கு வந்த விலைக்கு விற்பது.

  பெரும்பாலான இடங்கள் முஸ்லீம் மக்கள் தான் வாங்கியுள்ளனர்.

  பதிலளிநீக்கு
 3. கண்மூடித்தனம்னு சொல்லுங்கோ இல்லே க்ரீன் அவேர்னஸ்னும் சொல்லுங்கோ.. எல்லாம் சிம்பாலிக் தானேணா?

  பதிலளிநீக்கு
 4. அசத்தலான நடையில் ஒவ்வொரு வரிகளையும் செதுக்கி எழுதி இருக்கீங்க. நிறுத்த முடியாமல் விறுவிறுவென படித்து முடித்தேன்.

  பதிலளிநீக்கு
 5. விளையாட்டாய்ச் சொன்னாலும் விபரீதம் புரிகிறது.

  பதிலளிநீக்கு
 6. ஸ்ரீராம் அவர்களின் கருத்தே என் கருத்தும்..

  பதிலளிநீக்கு
 7. அப்பா என்ன ஒரு நடை. மொழிப்பிரவாகம்.
  அப்படியே உங்க கூடவே கும்பகோணம், திரு நாகேஸ்வரம் என்று உலா வந்ததைப் போன்ற உணர்வு.
  பிரமாதம் போங்கோ.

  பதிலளிநீக்கு

 8. "இதையெல்லாம் ப்லாக்ல எழுதவேண்டாம்ணா..புரியறதா?"

  -நம்பிக்கைத் துரோகம்ணா

  பதிலளிநீக்கு
 9. சொந்தக் கருத்துக்களையும் முழுதும் விட்டுக் கொடுக்காமல் மாற்றுக்கருத்தையும் எழுதும் ஜாலம் ரசிக்க வைக்கிறது. அண்மையில் இந்தியா வந்திருந்தீர்களா.?

  பதிலளிநீக்கு
 10. என் பின்னூட்டத்தை யாரேனும் பார்த்தீர்களா?

  பதிலளிநீக்கு

 11. நீங்கள் சொல்லும் விவகாரத்தின் திவீரம், பதிவின் நடையழகை மீறி பூதாகாரமாய் நிற்பதால் இப்போதைக்கு உங்களை சிலாகிக்க மாட்டேன்.
  உங்கள் நண்பரின் கூற்றில் உள்ள உண்மைக்கு வேறொரு கோணமும் உண்டு. அந்த இடங்களை வாங்கும் பிற மதத்தினர்க்கு அது பெரும்பாலும் ஒரு முதலீட்டு முடிவேயன்றி ஜாதி பிரச்னையை உண்டாக்க அல்ல . அக்ரஹாரம் ,சதுர்வேதிமங்கலம் போன்றவை பெரும்பாலும் கலைந்து விட்டன. அந்த வீடுகளுமே தேவைக்கென விற்கபடுவதைவிட, இனி தேவையில்லை என்று விற்கபடுவதே அதிகம் .இதில் யாரை நொந்து என்ன பயன்? மேலும்,கோயில்கள் அக்ரஹார இந்துக்களுக்கே மட்டும் சொந்தமுமல்லவே? மேலும் பேசுவோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேவையில்லை என்று விற்கிறார்களா? ஓஹோ வீடு தேவையில்லை ஆனால் அதிக பணம் தேவை என்ற பொருளில் சொல்கிறீர்களோ? தேவையில்லை என்றதும் ஒரு வேளை சட்டி சுட்ட அனுபவம் வந்து விட்டதாகச் சொல்கிறீர்கள் என்று எண்ணிவிட்டேன். ஹிஹி.

   இந்துக்களுக்கு மட்டும் சொந்தமல்லவே? ம்ம்ம். சொல்வதற்கும் கேட்பதற்கும் நன்றாக இருக்கிறது. எனக்கும் முப்பது வயதுக்கு மேலாகிறது. இது வரை ஒரு இந்துக் கோவிலிலும் ஒரு இஸ்லாமியர தொழுதோ அல்லது பாதிரி ஞானஸ்நானம் செய்தோ பார்த்ததில்லை. ஒருவேளை அவர்கள் எல்லாம் இந்துக்கோவில் இந்துக்களுக்கு மட்டும் என்று நினைத்திருக்கலாம். அடுத்தவர்களை விடுங்கள். எனக்குக் கடவுள் நம்பிக்கை இருந்த நாட்களில் ஒரு முறை கூட தர்காவிலோ மாதா கோவிலிலோ போய் ஒரு சின்ன அர்ச்சனை கூட செய்ததில்லை. ஹிஹி.. இந்துக்கோவில் இந்துக்களுக்கு மட்டும் சொந்தமில்லை என்பது சரியென்றே வைத்துக் கொள்வோம். கொள்கையளவில் அது சரியே. இதைச் சொன்ன நீங்கள் தர்காக்களும் சர்ச்சுகளும் இஸ்லாமியர் கிறுஸ்துவர்களுக்கே மட்டும் சொந்தமல்ல என்ற கருத்தை முன் வைப்பீர்களா? முன் வைத்தாலும் சோபிக்குமா?

   ஒன்று புரிகிறது. இந்துக்களின் பலமும் பலவீனமும் வாய்.

   நீக்கு
 12. படித்தமைக்கும் பாராட்டியமைக்கும் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 13. இந்துக்கள் பலரும் சர்ச்சுகளுக்கும் தர்காக்களுக்கும் செல்வது கண்டிருக்கிறேன் ஏன், நானே சென்றிருக்கிறேன். தென் இந்தியாவில் ஒருவேளை கிருத்தவர்கள் கோவில்களுக்கு வரலாம். ஆனால் இஸ்லாமியர் வருகிறார்களா..? தெரியவில்லையே......,எனக்குத் தெரிந்து பாலக்காட்டில் எங்கள் அக்கிரகாரத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கே அனுமதி இல்லாத காலம் இருந்தது. ஆனால் இப்போது அநேகமாக எல்லா சமூகத்தவரும் வசிக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ( ஒரு வேளை ஜாதி இந்துக்கள் மட்டும்தானோ தெரியவில்லை.)

  பதிலளிநீக்கு
 14. பெயரில்லாஅக்டோபர் 14, 2014

  இதையெல்லாம் ப்லாக்ல எழுதவேண்டாம்ணா..புரியறதா?"//

  Sec.151 A I.P.C. ??????

  பதிலளிநீக்கு
 15. சாமர்த்தியமான பதிவு. பரிதாபமும் கூடுகிறது. இந்த எக்ஸோடஸ் எப்படி முடியப் போகிறதோ. உப்பிலிஅப்பனைப் பார்க்க அவர் மட்டும் இருப்பாரோ வேற யாரும் வந்துவிடுவார்களோ.நன்றி துரை.

  பதிலளிநீக்கு
 16. Omnia in pace anxii, templa kallenru concluderet, si modo in paucis temporibus maxime placet quiet///

  Sola cognitio quod lapis non est sana mente requiescit !!

  Vade pacifice in domum videre !!

  Mirum non est contradictio ???

  subbu thatha
  www.subbuthatha72.blogspot.com

  பதிலளிநீக்கு
 17. நீங்கள் எழுதியது கதை இல்லை, அப்பாதுரை, நூற்றுக்கு நூறு நிதர்சனம். குறிப்பாக, திருவிடைமருதூரின் சன்னதி தெரு இப்போது அடையாளத்தை இழந்து விட்டது. அடுத்த தலைமுறையினருக்கு நாம் என்ன விட்டு வைத்தோம் என்று சிந்திக்க தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 18. சமூக உபன்யாசம் பண்றேன் பேர்வழினு அசடாட்டம் எதையாவது சொல்வாரே.. //

  சும்மா இருக்காம எந்த வம்பை விலைக்கு வாங்கினாரோ யார் கண்டா? உன் ப்ரண்டு தானே?"// ஓட்டத்தில் நின்று ரசித்தவை.

  செவ்வாய் கிரகத்துக்குப் போக ஒரு கிலோமீட்டருக்கு ஏழு ரூபாய் மட்டுமே ஆகும் இந்நாளில், // என்ன ஒரு அப் டேட் !!

  மாமி வைகுந்தலோகம் போனப்புறம், போன சந்தோஷமோ என்னமோ தெரியலே//

  அட! மாமா போனால் மாமிக்கு; மாமி போனால் மாமாவுக்கா?!

  இதென்ன மடியா விழுப்பா படறதுக்கு? //

  ஹாஹாஹா.....

  கூத்தாடி கிட்டயே கூத்தாடுறானே? இவனை நம்பி நாளைக்கு காவேரியை எப்படி ஒப்படைக்கறது?//

  அசல் உலகநாயகன்//

  பகவானை எப்படிக் கும்பிடணும்னு பகவானே சொல்லிக் கொடுத்த//

  'என்னைத் தெரியுமா.. நான் சிரித்துப் பழகி கருத்தைக் கவரும் ரசிகன் என்னைத் தெரியுமா?'ங்கறார். 'ஆகா தெரிஞ்சுண்டேனே. ஆகாகா! பல்லுருவையெல்லாம் படர்வித்த வித்தா! உன் தொல்லுருவைத் தெரிந்து கொண்டேன். சொல்லித் தெரிவதா உன் சுந்தர ரூபம்? அள்ள முடியாதென்னிரு கண்கள் இருந்தென்ன? கொள்ள முடியாதென்னிரு கைகள் இருந்தென்ன? மனமெலாம் மயங்கித் தவிக்கிறேனே! என் ஞானப்பிரானை அல்லால் இல்லை இனி நான் கண்ட நல்லதுவே'னுட்டு உருகிப்போயிடறார். // பிரசங்கம் வெகு சுவை.

  உபன்யாசி சொல்வதனைத்தும் யோசிக்க வேண்டிய ஒன்று தான்.

  பதிலளிநீக்கு
 19. இதான் ஒப்பிலியப்பன் சரித்ரமாக்கும். கேட்டவாளுக்குக் கேட்ட க்ஷணத்துல மோக்ஷம் தர புண்ய சரித்ரம். வைகுந்த நகரம்னு பேராக்கும் இந்த க்ஷேத்ரத்துக்கு..
  //
  புண்ய சரித்ரம் கேட்டு மகிழ்ந்தேன்.

  பதிலளிநீக்கு
 20. விபரீதம் தான். :( அது சரி, சூரி சார் என்ன சொல்லி இருக்கார்? புரியலை! :(

  இந்தியா வந்திருக்கீங்க. கோவிந்தபுரமும் வந்திருக்கீங்க. ஒரு தொலைபேசி அழைப்புக் கூட இல்லை. :(

  பதிலளிநீக்கு
 21. //அது சரி, சூரி சார் என்ன சொல்லி இருக்கார்? புரியலை! :(//

  //எல்லாமே கல்லென்று தீர்மானமாகத் தெளிந்துவிட்ட நிலையில் கோவில்களின் அமைதி, அதிலும் சில கோவில்களின் அமைதி மட்டுமே எனக்குப் பிடிக்கிறது////


  கல் தான் எனத் தெரிந்த பின்னும்,தெளிந்த பின்னும் மனதில் அமைதி இல்லை !!

  ஏன் ?? !!!
  அந்த அமைதி காண கோவிலுக்கு சென்றீர்கள் !!

  விந்தையாக இல்லை, ஒரு முரண்பாடு ஆக இல்லை ???

  எனது முந்தைய பின்னூட்டம் இதுவே. (கூகிள் எப்படி லத்தீன் மொழி பெயர்க்கிறது என்ற ஆர்வத்தில் பார்த்தேன். அதையே எழுதினேன்.)

  comment re written for information of Ms.Geetha Sambasivam.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹிஹி.. புரட்டப் பாக்கறீங்களே சுப்பு சார்?

   அமைதி இல்லைன்னு சொல்லவே இல்லையே? கோவிலின் அமைதி பிடித்திருக்கிறதுநு தானே சொன்னேன்?
   கோவிலின் கூட்டமும் சச்சரவும் பிடிக்காதுன்னு அர்த்தம். கோவிலின் அமைதி பிடித்திருக்குனு அர்த்தம். கோவில்ல கல்லு இருக்குற இடம் அமைதியா அழகா இருந்தா பிடிச்சிருக்குன்னு அர்த்தம். எண்ணெய் பிசுக்கோட கல்லுக்கு கன்னாபின்னான்னு துணி கட்டி பத்தாயிரம் பேர் கூவுற இடம் பிடிக்கலேநு அர்த்தம். கோவிலின் அழகு அமைதி இரண்டுக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் தொடர்பே இல்லைன்னு நம்பறேன். அமைதி தேடி நிச்சயமா கோவிலுக்கு போறதில்லை. கோவிலுக்குப் போனா அமைதியா இருக்குற கோவிலுக்கு போவேன். அதான் அர்த்தம். tenets of syllogism.

   நல்ல வேளை புத்திசாலியா இருக்கேனோ பிழைச்சேனோ.. இல்லினா தலைல மிளகாய் தான். :-)

   நீக்கு
 22. ப்ரளயம்! அப்ப அப்ப வந்து பார்ப்பேன், அப்பா சார் ஏதாவது போஸ்ட் போட்டு இருக்காரா என்று - போட்டு தாக்கி இருக்கீர்கள் இன்று. அப்பப்பா எவ்வளவு உண்மைகள். அசுவத்தாமன் அய்யாவின் கூற்றில் சாதியை மற்றும் காணவேண்டாம் - அதில் உறைந்துள்ளது நிறைய நீதி. ஒவ்வொரு வருடமும் இந்தியா சென்று வரும்போது இதை கண்கூடாக கண்டு வருகின்றேன். மயிலாடுதுறை மணிக்கூண்டில் நின்று ஒருமுறை சுற்றிப் பார்த்தேன், பாரம்பரிய இந்து கடைகள் எல்லாம் போய்விட்டன - சில கடைகளை தவிர்த்து - மனதில் ஆடையிழந்து அம்மணமாய் நிற்பதாய் ஒர் உணர்வு - அதை சொல்லவும், பகிரவும் நமக்கு உரிமை உண்டு. அதைத்தான் அவர் செய்திருக்கிறார், கைக்கூளிகள் கைமேல் பலன்பெருவர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அரசூரான். அடையாளங்கள் தொலைந்து போகும் பொழுது மிஞ்சுவது வருத்தம் தான்.

   நீக்கு
 23. Dear Appadurai,
  I read the entire post and noted the gist of the same at the end of the post. The entire post is written in a Bagavathar Style. Very good flow. Very very surprising how you remembered his entire story and converted the same in words in this post.
  Eagerly waiting (?) for your romantic post soon.

  பதிலளிநீக்கு
 24. One more point : Blood Pressure leads to diabetic problem which is related to urinal problem BUT NOT URIYA problem.

  பதிலளிநீக்கு
 25. Dear Appadurai sir,
  I am from Tiruvaiyaru of Thanjavour District which is also becoming another Thirunageswaram slowly.

  பதிலளிநீக்கு
 26. Sir,
  If you want peace only why do you go to temples; instead you can go to dargahs where there is no deities sorry - no stone made statues (in your language). If you feel my comment is ATHIGAPRASANGITHANAMANATHU, please excuse me.
  Somehow or other I am unable to get out of this post and hence whenever my mind conveys the messages, instantly I put them in this comment box; hence more comments from me in piecemeal basis.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புரியுற கோவில்களே அமைதியில்லைனு நினைக்கறேன்... நீங்க வேறே.

   எனக்கு அமைதி தேவைப்பட்டா அது ஆண்டவன் கிட்டே கிடைப்பதில்லேனு தீர்மானமா தெரிஞ்சசைத் சொல்றேன், அவ்வளவு தான்.

   நீக்கு
  2. அப்படியெல்லாம் எதுவும் இல்லை மோகன். நீங்க சொன்னதைத் தான் சூரி சார் வேறே மாதிரி சொல்லியிருக்கார். நிற்க, எனக்கு மனுஷத் தோலும் இருக்கு, மகிஷத் தோலும் இருக்கு. கவலையே படாதீங்க.

   அதை விடுங்க, ரொம்ப நாளா ஆளையே காணோம். நலமா?

   நீக்கு
 27. During Diwali holidays, I move out of Baroda. This Diwali, I went to Varanasi, Allahabad, Gaya, Gangtok (Sikkim) and Darjeeling with family and enjoyed 20 days. Hence, found no time to read the blogs.
  When is your next trip to India?
  Kamalhasan once said (your favourite hero?) that I do not say God is not there; What I said is, if He is there it would be well and good. Sometimes (not all times) I also made to feel that way.

  பதிலளிநீக்கு
 28. ஹலோ... மைக் டெஸ்டிங்... இந்த போஸ்ட் இன்னும் ஆக்டிவா இருக்கா? நான் கொஞ்சமில்ல... ரொம்ம்ம்ம்ம்பவே லேட்டா வந்துருக்கேன் போல....

  சில கருத்துகள் எழுதலாம்னு நினைக்கிறேன். ஆனா, இந்த போஸ்ட் இன்னும் உயிரோட இருக்கான்னு தெரிஞ்சுகிட்டு..... :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஹூஸைனம்மா.. காணோமேனு பார்த்தேன். உங்க கருத்துக்களை நிச்சயம் எதிர்பார்த்தேன் :-).

   நீக்கு
 29. அடடே... ”ஒப்புதலுக்கு பின்னர் உங்கள் கருத்துரை காண்பிக்கப்படும்.” ... இது எப்போலருந்து.... :-)

  பதிலளிநீக்கு
 30. ஸாரி... ஏற்கனவே லேட்.. இப்ப இன்னும் லேட்டாகிடுச்சு... அதுவும் நல்லதே :-)

  முதலில் பதிவு பற்றி... பாஷை காரணமா மறுபடி மறுபடி வாசிக்க வேண்டியிருந்து. இப்பவும் புராணக் கதைகளை முழுசா வாசிக்கலை. மெயின் மேட்டர் மட்டும் வாசிச்சுகிட்டேன்.

  கோவில்களின் அருகில் இருக்கும் வீடுகளை முஸ்லிம்கள் வாங்குவது பற்றிய பதிவு. இதில் எனக்கு என்ன ஆச்சரியம்னா... குஜராத்ல இதேபோல இந்துக்கள் பகுதியில் வீட்டை வாங்கிய முஸ்லிமைத்தான் மிரட்டினார்கள் - பிரவீன் தொகாடியா தலைமையில்; இங்கே பாவம், வாங்கவும் இல்லாத, விற்கவும் இல்லாத அந்த வயசானவரைப் போய் அடிச்சிருக்காங்களே....

  வீடுகளை விற்பது குறித்த பெரியவரின் கருத்து சரியே. இஸ்லாமும் அதையே அறிவுறுத்துகிறது. அதாவது, வீட்டை விற்கும்போது அண்டை வீட்டினருக்கே அதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்கிறது. கவனிக்க, அண்டை வீட்டினர் என்பதுதான் அறிவுறுத்தலே தவிர, அவர் முஸ்லிமா இல்லையா என்பதற்கல்ல முன்னுரிமை.

  நபிகாலத்தில் வாழ்ந்த ஒருவர், பிற்காலத்தில் தன் வீட்டை விற்கும்போது கூறுவதாவது: “ "அண்டை வீட்டில் இருப்பவரே அதிகம் உரிமை படைத்தவர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுறாவிட்டால் ஐநூறு தங்கக் காசுக்கு கேட்கப்பட்ட என் வீட்டை நாலாயிரம் வெள்ளிக்காசுக்கு உமக்கு விற்க மாட்டேன்.”

  இதுவும் அக்கம்பக்கத்தினரைக் குறித்த மற்றொரு அறிவுரை: ”அண்டை வீட்டாரை (சொத்துரிமை பெறத்தக்க) வாரிசு ஆக்கிவிடுவாரோ என்று நாங்கள் சந்தேகம் கொள்ளுமளவிற்கு அண்டை வீட்டாருக்கு உதவி செய்வதன் அவசியம் பற்றி ஜிப்ரயீல் (the angel - who brings messages and instructions from God to Prophet) எனக்கு உபதேசித்துக் கொண்டே இருந்தார் என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.

  பதிலளிநீக்கு
 31. அடுத்து, //கோயில்கள் அக்ரஹார இந்துக்களுக்கே மட்டும் சொந்தமுமல்லவே? // என்று மோகன்ஜி அவர்கள் கேட்ட கேள்விக்கு //இது வரை ஒரு இந்துக் கோவிலிலும் ஒரு இஸ்லாமியர தொழுதோ அல்லது பாதிரி ஞானஸ்நானம் செய்தோ பார்த்ததில்லை// என்ற உங்களின் பதில் பொருத்தமானதாக எனக்குத் தெரியவில்லை. //அக்ரஹார இந்துக்களுக்கே மட்டும் சொந்தமுமல்லவே// என்று அவர் கேட்பது அக்ரஹாரத்தில் வசிக்காத மற்ற இந்துக்களைக் குறித்து என்பது எனது புரிதல்.

  இருப்பினும் கீழேயுள்ள எனது விளக்கம், //இது வரை ஒரு இந்துக் கோவிலிலும் ஒரு இஸ்லாமியர் தொழுதோ...... பார்த்ததில்லை// என்ற கேள்விக்கானது மட்டுமே.

  இஸ்லாம் "ஒரே இறைவன்" என்ற கொள்கை கொண்டது. அல்லாஹ் என்கிற ஒருவனைத் தவிர, மற்றவர்களால் கடவுளாகக் கருதப்படும் வேறு யாரையும் அல்லது எதையும் அல்லது புதிதாகக் கற்பித்த ஒன்றையோ, அவனுக்கு இணையான இடத்தில் வைக்கக்கூடாது என்கிற மிகக்கண்டிப்பான விதிமுறை உடையது. அந்த விதிமுறைக்கு உடன்படுபவர்தான் முஸ்லிம். உடன்படுபவர் மட்டுமே முஸ்லிம். “லா இலாஹ இல்லல்லாஹூ” என்பதன் அர்த்தம் “அல்லாஹ்வைத் தவிர வேறு தெய்வம் இல்லை” என்பதாகும்.

  எனவேதான் முஸ்லிம்கள் கோவிலுக்கோ சர்ச்சுக்கோ ஏன் தர்ஹாவுக்கோ கூட சென்று வழிபடுவதில்லை. (ஆம், தர்ஹாவுக்கும்தான். அது குறித்து பின்னர் பார்ப்போம்)

  பதிலளிநீக்கு
 32. அதற்காக கோவிலும் சர்ச்சும் முஸ்லிமுக்கு பிடிக்காத இடங்கள் என்றில்லை. ஒரு முஸ்லிம் அவற்றிற்குரிய மதிப்பைத் தர மறுப்பதில்லை. மறுக்கக் கூடாது. சர்ச், கோவில்கள் மட்டுமல்ல அங்கிருக்கும் எல்லா தெய்வங்களுக்கும் உரிய மதிப்பு தரவேண்டும்.

  மதிப்பு தருவதென்றால் அவற்றை வணங்க வேண்டும் என்று அர்த்தமல்ல. இகழாதிருத்தல், அவமதிக்காதிருத்தல் என்பதே இங்கு மதிப்பது என்பதாகும்.

  “என் மார்க்கம் எனக்கு; உன் மார்க்கம் உனக்கு”;
  ”மற்றவர்களின் தெய்வங்களை தூற்றாதே”

  என்கிற கொள்கைகளையும் இஸ்லாம் சொல்லித் தருகிறது.

  பதிலளிநீக்கு
 33. சரி, தர்ஹாவுக்கு வருவோம். தர்ஹாவில் இருப்பது என்ன அல்லது யார்? தர்ஹா என்பது (யாராவது) ஒரு பெரியவரின் சமாதி இருக்கும் இடம். இஸ்லாமிய வழிபாட்டு முறைகளை அறிவதற்கு இன்றிருப்பதைப் போல, புத்தகங்கள், இணையம் என்று எந்த வசதியும் இல்லாத முன்காலத்தில், இஸ்லாமிய வழிமுறைகளை நன்கு கற்றறிந்த ஒருவர், தானறிந்ததை மற்றவருக்கும் சொல்லிக் கொடுத்து வழிநடத்தியிருப்பார். அவர் மீது கொண்ட மதிப்பு-மரியாதை காரணமாக, அவர் இறந்ததும் அவரது சமாதியை அழகுபடுத்தி, அதன்மீது ஒரு நினைவில்லம் கட்டிவிட்டார்கள். அதுதான் “தர்ஹா” என்றழைக்கப்படுகிறது.

  கட்டியவர்கள் அதோடு நில்லாமல், அந்த சமாதிக்கு போர்வை போர்த்துவது, பூக்கள் சொறிவது, பூமாலை போடுவது, விளக்கேற்றுவது, சமாதியின் முன் நின்று இறந்தவரிடம் பிரார்த்திப்பது போன்றவை செய்கின்றர். முதலாவது, சமாதி என்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதல்ல. மீன்ஸ், இறந்தவர் புதைக்கப்பட்ட இடத்தை மண் தரையைவிட உயரமாக ஆக்குதல் கூடாது. இரண்டாவது, இறந்தவர் ஒரு சாதாரண மனிதரே. அவரை “தெய்வமாகக்” கருதி அவரிடம் பிரார்த்திப்பது மன்னிப்பே இல்லாத ”இறைவனுக்கு இணைவைக்கும்” குற்றம். அதனால்தான் தர்ஹா செல்வது கூடாது.

  எனில், இறந்தவர்களை மதிக்கவே கூடாதா என்றால், நல்லவர்களை மதிக்காமல் இருக்க முடியுமா? அவர்களை நல்ல முறையில் நினைவுகூற வேண்டும். அவர்களின் நற்போதனைகளை, நற்செய்திகளை, நற்செயல்களைப் பரப்ப வேண்டும். அவர்களின் பெயரால் தானதர்மங்கள் நல்ல காரியங்கள் செய்யலாம். ஆனால், ஒருபோதும் அவர்களை தெய்வத்துக்கு ஒப்பாக்கக் கூடாது.

  பதிலளிநீக்கு
 34. மன்னிக்கவும், பெரிய்ய்ய்ய பின்னூட்டமாகப் போய்விட்டது. சலிப்பு தராதிருக்கும் என நம்புகிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 35. வலைப்பக்கம் விருப்பம் போல் வரமுடியாததால் பின்னூட்டங்கள் தேங்கி விட்டன. மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
 36. என் பதிவு அளவுக்கு பின்னூட்டம் எழுதியிருக்கீங்க ஹுஸைனம்மா.. நன்றி. முழுதும் படிச்சுட்டு வரேன்.

  பிப்ரவரி 04, 2015

  பதிலளிநீக்கு