2013/02/27
அஷ்டலட்சுமி காவியம்
    விக்கிரமாதித்தன், நாரதன், சிவன், இந்திரன் என்று பலர் சொன்னதாகவும், அசலாக நடந்ததாகவும், சொல்லப்பட்டு வரும் அஷ்டலட்சுமிகள் பற்றியக் கதையை எத்தனை பேர் அறிவார்களோ அறியேன்.
கதைச் சுருக்கம்: அரசன் போஜராஜன், அஷ்டலட்சுமிகளை குலதெய்வங்களாக வணங்கி வழிபடுபவன். ஒரு நாள், எட்டு லட்சுமிகளும் வெளிநடப்பு செய்வதாக அறிவிக்கிறார்கள். அரசன் விரும்பினால் எண்மரில் ஒரு லட்சுமியை மட்டும் அவனுடன் தங்க அனுமதிக்கிறார்கள். போஜராஜன் தைரிய லட்சுமியை தங்கச் சொல்கிறான். இணங்கி அவனைப் பிரிந்த ஏழு லட்சுமிகளும், "தைரிய லட்சுமி இல்லாமல் எங்களால் இயங்க முடியவில்லை" என்று சொல்லி ஒவ்வொருவராக அரசனிடமே திரும்புகிறார்கள். அரசன் மகிழ்ச்சியோடு வாழ்கிறான். சுபம்.
'தைரியத்துடன் இருந்தால், எதை இழந்தாலும் மீட்கலாம்' என்ற ஆழமான கருத்தை வலியுறுத்தச் சொல்லப்பட்டு வரும் எளிமையான மரபுக்கதை.
லட்சுமிகளைப் பிரிந்த போஜராஜன் அதனால் ஏற்பட்ட இன்னல்களை வென்று இழந்தவை அனைத்தையும் திரும்பிப் பெற்றதை, அரசனின் ஆஸ்தான கவியாகக் கருதப்படும் மகாகவி காளிதாசன் ஒரு காவியமாகப் புனைந்ததாகச் சொல்லப்படுகிறது.
அதைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனதில் வருத்தமில்லை. காரணம், அஷ்டலட்சுமி காவியத்தை நயமான எளிமையான நல்ல தமிழ்க்கவிதைகள் வழியாகப் படிக்கும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது.
    'மகாகவி' வயலூர் கோ. சண்முகம் எழுதிய 'அஷ்டலட்சுமி காவியம்' படித்தேன்.
போஜராஜன், அரசி மங்களமயி, முதலமைச்சர் தயாசமுத்திரன், அவர் பெண் வில்லி சந்திரகலா, ஆஸ்தான கவி காளிதாசன், ஊழல் மருத்துவர் லிங்கர், வில்லன் இராஜகேது, இளவரசன் திலீபன், தளபதி மார்த்தாண்டன், பகையரசர் என்று கதைமாந்தர் பலரைச் சேர்த்து அஷ்டலட்சுமி வரவு பிரிவுகளின் விளைவுகளை - இழந்த செல்வங்களை ஒவ்வொன்றாக மீட்கும் அரசனின் வீரத்தை - விறுவிறுப்பான கதையாக, காவியமாக, திகட்டாதத் தமிழ்க் கவிதைகளால் சொல்லியிருக்கிறார் மகாகவி.
சென்ற இரண்டு மாதங்களில் முழுப் புத்தகத்தை இரண்டு முறையும், மடக்கி வைத்தப் பக்கங்களைப் பலமுறையும் படித்தேன்.
படித்தேன் குடித்தேன் என்பதெல்லாம் இந்தப் புத்தகத்துக்குப் பொருத்தமாகத் தோன்றுகிறது.
போஜராஜனின் வளமான நாட்டிலே ஆறு இப்படி ஓடுகிறது:
    வற்றியோர் துயர் துடைக்கும்
    வள்ளலின் கைபோல் நீண்டே..
நாட்டுச் சோலைகளிலே நறுமணம் இப்படி வீசுகிறது:
    அருள்பழுத் தொருவன் செய்யும்
    ஆவிநேர்க் கவிதை போலே..
அரசனுக்கு எந்த விதத்திலும் அரசி இளைத்தவளல்ல என்பதை ஒரே வரியில் சொல்லியிருக்கும் விதம், துணிவும் குறும்பும் கலந்தத் தமிழம்பு. மிகவும் ரசித்தேன்:
    ..சரிநிகர் மஞ்சம் காத்தாள்..
அரசன் பூஜைகளை முடித்து நெடு நேரமாகியும் அஷ்டலட்சுமிகளைக் காணோம். இப்படிப் புலம்புகிறான்:
    காய்களைப் படைத்திட்டேனா?
    காம்புள்ள மலரைத்தானா?
    வாய்குழறி ஒருசொல் தீதாய்
    வழிபாட்டில் உளறினேனா?
    பேய்மனக்குரங்கு வேறோர்
    மேதினி குதித்ததேயோ?
லட்சுமிகள் பிரிகிறார்கள். தன் துயரம், காரணமின்றி மகன் திலீபனையும் தொடப்போவதை இப்படிப் பாடுகிறான் அரசன்:
    சர்க்கரை இருந்த கிண்ணம்
    தட்டினில் ஏறிவந்தே
    மொய்க்கின்ற எறும்பாயீயாய்
    மூளும்விதி நம்மோடிணைந்தே
    மொக்குநிகர் திலீபனையும்
    மோதுதல் உண்மை...
தன் விதி பிறரையும் வாட்டும் என்பதற்கான உவமையை மிகவும் ரசித்தேன்.
எட்டிலே எந்த லட்சுமி வேண்டும் என்பதை மன்னன் இன்னும் இரண்டு நாட்களுக்குள் தேர்ந்தெடுக்க வேண்டும். மன்னன் தவிப்பைக் காளிதாசன் அறிந்ததை இப்படிச் சொல்கிறார் மகாகவி.
    இன்னலும் இழப்பும் கவிஞன்
    இதயத்தின் விதைகள் அன்றோ?
(ஏனோ தெரியவில்லை. கவிவேல் சிவகுமாரன் நினைவுக்கு வந்தார்:-)
லட்சுமிகள் விலகியதும் அரசன் இப்படித் தத்துவம் பேசுகிறான்:
    எய்தலும் இழப்பும் வாழ்வில்
    இயல்பதாம் யார்க்கும் உண்டாம்
    நெய்யதால் பாலால் தேனால்
    நிரம்பியே வழிந்த கிண்ணம்
    பொய்யதாய் வெறுமையாகப்
    போதலும் உண்டே ஓர்நாள்..
லட்சுமிகள் விலகியதும் அரச குடும்பத்தில் பல துயரங்கள், இன்னல்கள். தீச் சகுனங்கள். மன்னன் நோயில் வீழ்கிறான். அரசிக்குத் துயரம் தாளவில்லை. ஆனால் அரசி என்பதால் துயரத்தை வெளிக்காட்ட முடியாதே? பாசத்தைக் கடமை கட்டும் என்பது மட்டுமல்ல, தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் தனிப்பட்டத் துயரங்களை பொதுநலம் கருதி அடக்க வேண்டியத் தேவை, இங்கே அருமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது:
    பொங்கிவரும் கண்ணீருக்குப்
    புடவையால் அணையெழுப்பி
    பூத்துவரும் செருமல் துயரின்
    புலம்பலை ஊமையாக்கி..
    ..பாமர மக்களைப் போலே
    பதறினால் கதறினாலோ..
    ..பூமகள்போல் வீற்றிருப்பாள்
    புலம்பினால் நாடே புலம்பும்..
நோயில் வாடும் கணவன். நலம் வேண்டிக் குமைகிறாள் அரசி. சரளமாகத் துள்ளுகிறது பாடல்:
    மஞ்சத்தில் சாய்ந்தாரென்றால்
    மான்குட்டியாய்த் துயில்வார் என்றன்
    நெஞ்சத்தில் சாய்ந்தாரென்றால்
    நேர்காணும் மதனேயாவார்..
    ..மஞ்சளைக் காப்பாய் தாயே
    மாங்கல்யம் காப்பாய் தாயே
    பிஞ்சன்னோன் நீயே தந்தப்
    பிள்ளையைக் காப்பாய் தாயே..
அரசனின் நிலையால் அரசாங்கம் தடுமாறுகிறது. அவைக்கவிஞன் காளிதாசன் குமுறுகிறான். 'தொடையழகும் நடையழகும் மிதக்கும் எழுத்துக் கடை நடத்தும் காளிதாசன்' அரசாங்க நடைமுறையில் நுழையலாமா? கவிஞனுக்கு அங்கே என்ன வேலை? ஒரு மகாகவிக்கு வக்காலத்து வாங்குகிறார் இன்னொரு மகாகவி:
    ..கவிஞன் என்போல்
    அரசியல் எல்லைக்கப்பால்
    போனாலும்.. அவனின்
    தேனாறு போன்ற ஞானச்
    சிந்தனையில் ஆட்சிபீடம்
    நானாவித ஆக்கம் காணும்..
(நாட்டு அரசியலில் காளிதாசன் ஈடுபட்டாலும், இந்தக் காவியம் எழுதிய மகாகவி சண்முகம் அப்படியல்ல. கலைஞர் கருணாநிதியுடன் ஒன்றாகப் படித்தவர். பழகியவர். திருவாரூரில் சிறுவனாக உடன் கொட்டமடித்தவர். எந்தவித நட்புச் சலுகையும் எதிர்பாராமல் வாழ்ந்தவர், இறுதி வரை அரசியல் பக்கமே போகவில்லையாம்).
இடையே நிறைய நடக்கிறது. ஊழல் மருத்துவர் அரசனுக்குப் பைத்திய வைத்தியம் பார்க்கிறார் ('ஊழல் டாக்டர்' தற்செயல் என்று நம்புகிறேன்). இராஜகேது உதவியுடன் வில்லி சந்திரலேகா அரசியாகிறாள். மங்களமயி சிறையில் வாடுகிறாள். திலீபன் தொலைகிறான். அரசன் அரைகுறைத் தெளிவடைகிறான். தெளிவடைந்ததும் அரசியை வெறுக்கிறான் (காரணம் சஸ்பென்ஸ். புத்தகத்தில் படித்தறியலாம்). சந்திரகலாவுடன் குலாவுகிறான். காளிதாசனை இகழ்கிறான்:
    துருப்பிடித்த மனிதர் நீர்
    சொப்பனத்தை அசைபோடுவீர்
    செரிப்பதற்கே முடியாச் சொத்தைத்
    தத்துவத்தின் அழுக்கு மூட்டை..
காளிதாசனுக்குக் கோபம் வந்தாலும் பொறுக்கிறான். அரசியை அவதூறு செய்யலாகாது என்கிறான்:
    கற்றவனே, வாழ்க்கையெனும்
    கதைப்போக்கை அறிந்த வேந்தே..
    ..நிழலுக்கும் தானே இயங்கும்
    பொறுப்புகள் உண்டா? தங்கப்
    பொன்கட்டிக் கரையான் கடித்தே
    நொறுங்கியதாய்க் கேட்டதும் உண்டா?
நிழலுக்கும் தானே இயங்கும் பொறுப்புகள் உண்டா? பிரமாதம்! பிரமாதம்! அரசனுக்கு ஒரு பிரமாதம் கூடப் புரியவில்லை.
திலீபனைக் கொல்வதற்காக அவனைக் கடத்திச் சென்ற தளபதி மார்த்தாண்டன், மனம் மாறி இளவலின் குருவாக அத்தனைப் போர்க்கலைகளையும் சொல்லித் தருகிறான். (அருமையான கதாபாத்திரம். ஏன் மனம் மாறினான் என்பதையும் சஸ்பென்சாக வைக்கிறேனே?) பகைவர்களின் கொடுங்கோலால் வாடும் மாளவத்தை மீட்கத் துடிக்கிறான் திலீபன்:
    தாயகமே மாளவமே என்றன் அன்புத்
    தங்கமணித் திருநாடே! உனக்கா வீழ்ச்சி?
    நாய்களுக்கா பூமகுடம்? ஐயோ என்றன்
    நாடிகளில் ஓடுவது ரத்தம் தானா..
ஜிவ்வென்கிறது படிக்கையில்.
நாடு பகையரசர் வசம். துரத்தப்பட்ட, உண்மையறிந்த போஜனும் அரசியும் இப்போது இணைந்து மாறுவேடத்தில் வாழ்கின்றனர். காளிதாசனை வெறுத்த போஜன், இப்போது பவானிசரண் என்ற பெயரில் சாமியாராகக் கவிபாடி எளிமையாக வாழ்கிறான். 'போதும் இந்த வேடம்' என்று அவனும் சினந்தெழுகிறான்:
    கல்லுக்குள் தேரையென என்றன் நெஞ்சக்
    கசப்புக்குள் வெறுப்புக்குள் ஒரேயோர் எண்ணம்..
ஆனால் தனக்காக அல்ல:
    மன்னவனாய் இனிநானே செங்கோலேந்தி
    மாளவத்தை ஆண்டிடவே ஆசையில்லை
    சின்னவனாய்க் கண்மணியாய் இருந்தபிள்ளை
    திலீபனவன் எங்கேனும் உயிருடன்தான்
    தன்னையுண ராவாறிருப்பான்..
கயவர்கள் ஆட்சி. நாட்டிலே வறட்சி:
    பூக்குலத்து வர்ணவாசப்
    புன்னகை இருட்டிப் போக
    ஈக்குலத்துச் சிறகும் கூட
    ஈரத்தின் நைப்பு காணா
    ஏக்கத்தில் சுருளலாமா?
(ஆகா!)
கிளைமேக்சில் சிலை திறப்பு விழா. புரட்சி வெடிக்கிறது. பிரிந்தவர் கூடுகிறார்கள். ஆதிலட்சுமி, தனலட்சுமி, விஜயலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, வித்யாலட்சுமி, தான்யலட்சுமி எனும் ஏழு லட்சுமிகளின் பிரிவினால் வாழ்வில் மகிழ்ச்சி, செல்வம் (வசதி), வெற்றி (அரசு), வலிமை, பிள்ளை, நெறி (கல்வி) எல்லாவற்றையும் இழந்து, பசியில் வாடித் திரிந்து கவிபாடி, இன்னலுற்ற மன்னனும் மன உறுதி (தைரியலட்சுமி) குன்றாதிருந்து அனைத்துச் செல்வங்களையும் மீட்கிறான். பெரும் பாடம் கற்கிறான்.
    இந்தக் கதையை, கவிதைக் காவியமாக நான்கு பாகங்களில் பாடியிருக்கிறார் மகாகவி சண்முகம். சமீபத்தில் மிகவும் ரசித்து லயித்துப் படித்தப் புத்தகம். தமிழில் பாடமாக வைக்க வேண்டிய புத்தகம். சந்தேகமேயில்லை.
இறைப்புலமை மிக்கவர் என்று மகாகவி சண்முகத்தைப் பற்றிப் பலர் சொல்லியிருக்கிறார்கள். 'அஷ்டலட்சுமி காவியம்' புத்தகமாக வெளிவரு முன்பே மறைந்துவிட்ட மகாகவி, தன் படைப்பைப் பற்றிச் சொன்னது:
"இந்தக்க் காவியத்தை நான் எழுதவில்லை. இதைப் படைத்தது, எனது அன்னை வைத்தீஸ்வரன் கோயில் தையல்நாயகியே! இது காலங்கடந்தே வெளியாகும்!"
மேலும் சொன்னது:
"இந்நூல் பூஜை அறையில் இடம் பெற்ற இல்லங்களில் அஷ்டலட்சுமிகளின் அருள் சுரக்கும்.. அனைத்து ஐஸ்வர்யங்களும் பொங்கும்!".
இந்த அருமையானப் புத்தகத்தை எனக்குப் பரிசளித்த நண்பர் நேசமிகு ராஜகுமாரன், மகாகவி வ.கோ.சண்முகத்தைத் தந்தையாக அடையும் பேறு பெற்றவர். பொறாமையாக இருக்கிறது.
மகன் தந்தைக்காற்றும் உதவி, அவர்தமிழை அவனிக்கு அளித்துவிடல். சிறப்பாகச் செய்திருக்கிறார் ராஜகுமாரன்.
மனமார்ந்தப் பாராட்டுக்களும் நன்றியும்.
    பரிமளா[வின்] ராஜகுமாரன்
    பொங்கல் நாளில்
    பரிசாய் எனக்களித்தப் பாமுடி.
    வரியெங்கும்
    சொற்தேன் பொருள்மணம்,
    இளைப்பாறக்
    கவிமலராய்த் தமிழ்க்கன்னிப் பூமடி.
அஷ்டலட்சுமி காவியம் | 'மகாகவி' வ.கோ.சண்முகம்
தமிழ்க்கூடம் 2009ம் ஆண்டுப் பதிப்பு, விலை ரூ.150
2013/02/14
ஓருயிர் சீருடல்
    என்னுடன் வளர்ந்தவர்கள் சிலரை, வழக்கம் போல், இந்த முறையும் சந்தித்தேன். இருந்திருந்து ஆஸ்திரேலியா ரமேஷை சந்திப்பேன் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆஸ்திரேலியா ரமேஷ் என்னுடன் பம்மலில் வளர்ந்தவன். அவன் பெயர்க்காரணம் அவனுக்கே தெரியாது. ஆஸ்திரேலியா எங்கே இருக்கிறது என்று கூட அறியாதவன். இன்றைக்கும் அப்படியே.
பம்மல் பஸ் நிலையம் அருகே மசாலா பால் அருந்தியபடி, நாங்கள் செய்த சில சுவாரசியமான சேட்டைகளைப் பற்றி அளவளாவினோம் (சுவாரசியமான சொல், starkly onomatopoeic).
க்ரிகெட் மேச் ஒன்றில் தகராறு வந்து அதற்குப் பழி வாங்க எண்ணி வசியம் வைத்தது.. பொழிச்சலூர் தர்மனை அழைத்து வந்து ஏவல் வைத்தது... எல்லாம் பேசினோம். "ஒரு கண்ணு வெளில வந்துரும் போலிருந்துச்சு.. நைட்டு முழுக்க ரத்தம் கக்னாண்டா பேமானி.. நானும் காட்டான் சுரேசும் ஜன்னல் வழியா பாத்தோம்டா.." என்று இத்தனை வருடம் கழித்தும் அடித்துச் சொல்கிறான் ரமேஷ். 'அத்தனை ரத்தம் கக்கினால் உயிருடன் இருந்திருக்கமாட்டான், இப்போது கேனடாவில் வசிக்கும் எங்கள் அந்நாள் வில்லன்' என்பது இப்போது எனக்குப் புரிகிறது. ரமேஷ் இன்றைக்கும் ஏவல் பில்லி என்று நம்பத் தயாராக இருக்கிறான். புரிதல்களைத் தவிர்த்ததே ரமேஷின் எளிமையான வாழ்வுக்குக் காரணமோ?
அப்போதெல்லாம் ரமேஷ் வெடவெடவென்று கொத்தவரங்காய் போலிருப்பான். இப்போது எடை கூடியிருக்கிறான். மசாலா பால் குடித்தாலே மூச்சு வாங்குகிறது அவனுக்கு. "மச்சி.. நீ அப்படியேக்றடா.. எனக்கு உடம்பெல்லாம் வெயிட் போட்ருச்சு" என்றான்.
"உடம்புல தாண்டா வெயிட் போடும்.. அது சுபாவம்" என்றேன்.
    என் பழைய நண்பர்கள், தொடர்புகளில் பலர் எடை மிகுந்திருக்கிறார்கள். in fact, சென்னையில் போன முறை சந்தித்தவர்களில் பலர் இந்த முறை எடை கூடியிருக்கிறார்களோ என்றுத் தோன்றியது. 'சத்துள்ள சாப்பாடு தான் சாப்பிடுறேன், இருந்தாலும்.." என்றார் ஒரு நண்பர். "தினம் பச்சைக் காய்கறி சேக்குறேன், உப்புக் காரம் இல்லாமே சாப்பிடுறேன்.. ஸ்வீட் சாப்பிடுறதில்லே.. இருந்தாலும்" என்றார் இன்னொரு நண்பர். "நீ வெயிட் கியிட் போடாம அப்படியே இருக்கியே? வேளா வேளைக்கு ஒழுங்கா சாப்பிடுறியா?" என்றார் கரிசனத்துடன் ஒரு உறவினர்.
    உணவை மையமாகக் கொண்டது நம் கலாசாரம். யார் வந்தாலும் "என்ன சாப்பிடுறே? காபியாவது சாப்பிடு" என்பதே நம் விருந்தோம்பலின் ஆதாரம். யாரைப் பார்த்தாலும் "ஒரு நாள் வீட்டுக்குச் சாப்பிட வாங்க" என்பது involuntary அழைப்பு. வீட்டிலோ அம்மா அப்பா பிற உறவுகளின் நெருக்கடி. ஒன்று "சாப்பிட்டியா?" என்பார்கள். அல்லது "சாப்பிடுறியா?" என்பார்கள். "உக்காரு, எப்படி இருக்கே, வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?" all come later. முதலில், "என்ன சாப்பிடுறே?". see what i mean? அப்படி இருக்கையில் சத்துள்ள உணவாக இருந்தால் என்ன, எதுவாக இருந்தால் என்ன?
சத்துள்ள உணவு வகைகளைச் சாப்பிடுவதால் எடை குறையும் என்பது, ஏறக்குறைய 'விஸ்வரூபம் உலகத்தரப் படம்' என்பது போல.. 'எல்லாவற்றையும் படைத்து காத்து ரட்சிக்கும் ஒருவர் ஒளிந்திருக்கிறார்' என்பது மாதிரி. உண்மைப் பொட்டலத்தில் வழங்கப்படும் அப்பட்டமான பொய்.
எதைச் சாப்பிட்டாலும்... சத்துள்ளதோ இல்லையோ, சுவையுள்ளதோ இல்லையோ... எடை குறையாது. எதையாவது சாப்பிடுவதால் எடை குறையும் என்றால், எனக்குத் தெரிந்த வரை, அது பேதி மருந்து மட்டுமே.
இன்றைய இளைஞர்கள் பலர் எடை கூடுவது பற்றி கவலைப்பட்டோ படாமலோ செய்வதறியாது இருப்பது வருத்தமாக இருக்கிறது. இன்றைய சூழல் ஒரு காரணம் என்றாலும், 'எடையைக் குறைப்பேன்' என்றக் குறிக்கோளும் செயல் தீவிரமும் முனைப்பும் இல்லாததே இவர்களில் பெரும்பாலோரின் சிக்கலுக்குக் காரணம் என்று நினைக்கிறேன்.
    எடைக் கட்டுப்பாடு என்பது உணவு, உடல், உள்ளம் என மூன்று பரிமாணங்கள் கொண்டது. எடை கூடுவதும், நிற்பதும், குறைவதும் இந்த மூன்று பரிமாணங்கள் நம்மைக் கட்டி ஆள்வதிலோ அல்லது நாம் இந்த மூன்று பரிமாணங்களை அறிந்து ஆள்வதிலோ இருக்கிறது.
எடை கூடியிருந்தால் குறைக்க முடியும். எந்த வயதிலும். இதற்குத் தன்னம்பிக்கையும், சில புரிதல்களும் அவசியம்.
1. எடை ஒரு நாளில் கூடவில்லை; ஒரு நாளில் குறையப் போவதுமில்லை
2. எடை குறையவேண்டும் என்று உளமார விரும்பிச் செயலில் இறங்க வேண்டும்; ஆறு மாதங்களாவது தீவிரமாக இருக்க வேண்டும்
இருபது ஆண்டுகளுக்கு மேலாக, இடையில் ஆறு ஆண்டுகள் தவிர்த்து, இதுவரையில் என் எடையைத் தக்க வைத்திருக்கிறேன். குறைத்திருக்கிறேன். '98 வாக்கின் இடைப்பட்ட ஆறு ஆண்டுகள் எனக்கு ஒரு பாடம். எடை மிகக் கூடியிருந்தேன். உப்பியிருந்தேன் எனலாம். 'எடை கூட மாட்டேன்' என்பது மட்டுமல்ல, 'உடலைச் சீராக வைத்துக் கொள்வேன்' என்பது என் தினசரிச் சபதம். இந்தப் பின்புலத்தோடு, இனி நானறிந்த சில எடை குறைப்பு, தக்கவைப்பு ஆலோசனைகளை அவ்வப்போது இங்கே எழுதப் போவதாக இப்போதே எச்சரித்து விடுகிறேன்.
அறிவுரையோ ஆலோசனையோ வழங்க எனக்கு ஒரு தகுதியும் கிடையாது. இருந்தாலும் அதை நான் என்றைக்கும் ஒரு பொருட்டாக நினைத்ததே இல்லை. தகுதியில்லாமல் ஆலோசனை வழங்கி வருடக்கணக்கில் பிழைத்துக் கொண்டிருக்கிறேன் என்றத் தகுதியுடன், சில ஆலோசனைகளை முன்வைக்கிறேன். எடை குறைக்க விரும்புவோர் இதைப் பின்பற்றி எடை குறைந்தால் சந்தோஷப்படுங்கள். எடை குறையாவிட்டால் வருத்தப்படாதீர்கள். எடை கூடினால் மட்டும் சுந்தர்ஜி மேல் வழக்கு தொடருங்கள்.
என்ன ஆனாலும் சரி, எடை மிகுந்தவர்களைக் கிண்டலோ கேலியோ செய்யாதிருப்போம்; பரிகசிக்கும் எண்ணத்தைக் கூடத் தவிர்ப்போம்.
எடை மிகுந்தவர்களைக் கண்டால், "இங்க பக்கத்துல நல்ல ஹோட்டல் என்ன இருக்கு?" என்று கேட்காதிருப்போம்.
        'அவன் எப்பவும் ரெண்டு டிகெட் வாங்குவான்பா',
        'அவளை இப்பல்லாம் ப்ளேன்ல செக்-இன் பண்ண அலோ பண்றதில்லே, பேகேஜ் தான்',
        'அவன் எங்க ஜட்டி வாங்குறான்னு தெரியலியே?'
        'இப்பல்லாம் பெண்டாட்டியைச் சுத்தி வாக்கிங் போய்ட்டு வரதே எனக்கு எக்சர்சைஸ்'
போன்றக் கேலிகளை, வேண்டுமானால் ஒரு முறை மனதார சிரித்துவிட்டு, நிஜ வாழ்வில் யார் மீதும் பயன்படுத்தாதிருப்போம். seriously.
    யாரையாவது கேலி செய்தே ஆக வேண்டுமென்றால், இருக்கவே இருக்கிறார்கள் வக்கீல்கள்.. மருத்துவர்கள்.. கமல்ஹாசன்.
- வக்கீல் படிப்பை பத்து வருடங்களாக்க வேண்டும். இப்போதிருக்கும் வேகத்தில் போனால் கூடிய சீக்கிரம் உலகில் மனிதர்களை விட வக்கீல்கள் அதிகமாகி விடுவார்கள்
- ஒரு வக்கீல் உண்மை சொல்கிறார் என்பது அவருடைய அசையாத உதடுகளைப் பார்த்துப் புரிந்து கொள்ளலாம்
- தன் வக்கீலுக்கு தொலைபேசினான் நம்மாள். வக்கீல் ஆபீஸ் உதவியாளர், "அவரு போன வாரம் இறந்துட்டாரு" என்றார். மறு நாள் தொலைபேசினான். மறுபடியும் உதவியாளர், "அவரு போன வாரம் இறந்துட்டாருங்க" என்றார். நம்மாள் தினம் விடாமல் தொலைபேசினான். பத்து நாட்களுக்கு இதே பதிலைச் சொன்ன உதவியாளர் எரிச்சலுடன், "ஏன் தினம் போன் பண்றீங்க? அவரு இறந்துட்டாருனு தினம் சொல்றேனில்லே?" என்றார். "இல்லிங்க, தினம் ஒரு நல்ல செய்தி கேட்கணும்னு என்னோட கொள்கை" என்றான் நம்மாள்.
- க்ருஷ்ணா ப்ரெயின்ஸ் மூளைக் கடையில் வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.தமிழ்ப் பதிவர்கள் மூளை கிலோ எட்டணா, தச்சன் மூளை கிலோ மூன்று ரூபாய், சார்டர்ட் அகவுன்டன்ட் மூளை கிலோ எட்டு ரூபாய், மருத்துவன் மூளை கிலோ இருநூறு ரூபாய், வக்கீல் மூளை கிலோ ஐநூறு ரூபாய் என்ற விலைப்பட்டியலைப் பார்த்த வாடிக்கையாளர் கடைக்காரரிடம், "என்னங்க இது வக்கீல் மூளை விலை ரொம்ப அதிகமா இருக்கே?" என்றார். "ஆமாங்க.. ஒரு கிலோ மூளை எடுக்க எத்தினி ஆயிரம் வக்கீலுங்க ஆவுதுனு உங்களுக்குத் தெரிஞ்சா இப்படி கேக்க மாட்டீங்க" என்றார் கடைக்காரர்.
- அட்டைப்புழுவுக்கும் வக்கீலுக்கும் என்ன வித்தியாசம்? ஒன்று அழுக்கில் திரியும் அருவருப்பான ரத்தம் உறிஞ்சும் பிராணி. இன்னொன்று ஒருவகை நீரினம்.
- ஒரு வக்கீல் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டால் pollution. ஆயிரம் வக்கீல் அப்படிச் செய்தால் அது solution (விசுவுக்குக் காணிக்கை).
- ஒரு வக்கீல் உண்மை சொல்கிறார் என்பது அவருடைய அசையாத உதடுகளைப் பார்த்துப் புரிந்து கொள்ளலாம்
- தன் வக்கீலுக்கு தொலைபேசினான் நம்மாள். வக்கீல் ஆபீஸ் உதவியாளர், "அவரு போன வாரம் இறந்துட்டாரு" என்றார். மறு நாள் தொலைபேசினான். மறுபடியும் உதவியாளர், "அவரு போன வாரம் இறந்துட்டாருங்க" என்றார். நம்மாள் தினம் விடாமல் தொலைபேசினான். பத்து நாட்களுக்கு இதே பதிலைச் சொன்ன உதவியாளர் எரிச்சலுடன், "ஏன் தினம் போன் பண்றீங்க? அவரு இறந்துட்டாருனு தினம் சொல்றேனில்லே?" என்றார். "இல்லிங்க, தினம் ஒரு நல்ல செய்தி கேட்கணும்னு என்னோட கொள்கை" என்றான் நம்மாள்.
- க்ருஷ்ணா ப்ரெயின்ஸ் மூளைக் கடையில் வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.தமிழ்ப் பதிவர்கள் மூளை கிலோ எட்டணா, தச்சன் மூளை கிலோ மூன்று ரூபாய், சார்டர்ட் அகவுன்டன்ட் மூளை கிலோ எட்டு ரூபாய், மருத்துவன் மூளை கிலோ இருநூறு ரூபாய், வக்கீல் மூளை கிலோ ஐநூறு ரூபாய் என்ற விலைப்பட்டியலைப் பார்த்த வாடிக்கையாளர் கடைக்காரரிடம், "என்னங்க இது வக்கீல் மூளை விலை ரொம்ப அதிகமா இருக்கே?" என்றார். "ஆமாங்க.. ஒரு கிலோ மூளை எடுக்க எத்தினி ஆயிரம் வக்கீலுங்க ஆவுதுனு உங்களுக்குத் தெரிஞ்சா இப்படி கேக்க மாட்டீங்க" என்றார் கடைக்காரர்.
- அட்டைப்புழுவுக்கும் வக்கீலுக்கும் என்ன வித்தியாசம்? ஒன்று அழுக்கில் திரியும் அருவருப்பான ரத்தம் உறிஞ்சும் பிராணி. இன்னொன்று ஒருவகை நீரினம்.
- ஒரு வக்கீல் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டால் pollution. ஆயிரம் வக்கீல் அப்படிச் செய்தால் அது solution (விசுவுக்குக் காணிக்கை).
மருத்துவர்களை... என்ன? ஓகே.. இன்னும் ஒன்றே ஒன்று.
சாகக் கிடந்த ஒரு கழக அரசியல்வாதி தன் நண்பர்களான வக்கீல், மருத்துவர், கமல்ஹாசன் மூவரையும் அழைத்தார். ஆளுக்கு ஒரு சிறு பெட்டியைக் கொடுத்து, "இதில் லட்ச ரூபாய் பணமும் பத்து பவுன் தங்கமும் இருக்கிறது. நான் இறந்ததும் என்னுடன் இதைப் புதைத்து விடுங்கள். ஒரு வேளை நான் நரகத்துக்குப் போனால் வெளியே வர எனக்குத் தேவைப்படும்" என்றார். அரசியல்வாதி இறந்து சில மாதங்கள் பொறுத்து மூவரும் சந்தித்துக் கொண்டார்கள்.
"உண்மையைச் சொல்லணும்னா.. பெட்டியைப் பாத்ததும்.. மேலை நாடுகள்ல episodic rationalism பத்தி எடுத்துச் சொன்ன கருத்துக்களின் அடிப்படையில இருபது வருசமா நான் என்னுடைய சொந்த ஆழ்மனதுல உருட்டிக்கிட்டிருந்த சுயமறுப்பு சிந்தனைகள ஒட்டிப் பிறந்த ஒரு எண்ணக்கதிர்.." என்று கமல்ஹாசன் தொடங்கியதும் வக்கீலும் மருத்துவரும் குறுக்கிட்டனர். "நிறுத்துபா.. அப்ப பணம் தங்கம் எல்லாத்தியும் நீயே எடுத்துக்கிட்டியா?" என்றனர்.
"இல்லை. யாருனா கேஸ் போட்டுறப் போறாங்களேனு ரெண்டு ரூவா நோட்டுல, 'ஆனைக்கு ஆரிங்குத்த் தீனி போடுவார்?' என்று ஒரு கவிதை எழுதி வச்சேன்" என்றார் கமல்ஹாசன்.
சற்றுப் பொறுத்து மருத்துவர், "நானும் ஐநூறு ரூபாய் தவிர மிச்ச எல்லாத்தியும் எடுத்துக்கிட்டேன்.." என்று தலைகுனிந்தபடி சொன்னார்,
வக்கீல் சீறினார். "அடப்பாவிகளா! நான் மட்டுந்தான் இங்கே சொன்னபடி செஞ்சவன் போலிருக்கு..."
கமல்ஹாசனும் மருத்துவரும் வியந்தனர். "ஆமாய்யா! சவப்பெட்டி வெயிட்டாயிரும்னு மொத்தத் தொகைக்கும் என் சொந்த செக் ஒண்ணை எழுதி வச்சேன்" என்றார் வக்கீல்.
"உண்மையைச் சொல்லணும்னா.. பெட்டியைப் பாத்ததும்.. மேலை நாடுகள்ல episodic rationalism பத்தி எடுத்துச் சொன்ன கருத்துக்களின் அடிப்படையில இருபது வருசமா நான் என்னுடைய சொந்த ஆழ்மனதுல உருட்டிக்கிட்டிருந்த சுயமறுப்பு சிந்தனைகள ஒட்டிப் பிறந்த ஒரு எண்ணக்கதிர்.." என்று கமல்ஹாசன் தொடங்கியதும் வக்கீலும் மருத்துவரும் குறுக்கிட்டனர். "நிறுத்துபா.. அப்ப பணம் தங்கம் எல்லாத்தியும் நீயே எடுத்துக்கிட்டியா?" என்றனர்.
"இல்லை. யாருனா கேஸ் போட்டுறப் போறாங்களேனு ரெண்டு ரூவா நோட்டுல, 'ஆனைக்கு ஆரிங்குத்த் தீனி போடுவார்?' என்று ஒரு கவிதை எழுதி வச்சேன்" என்றார் கமல்ஹாசன்.
சற்றுப் பொறுத்து மருத்துவர், "நானும் ஐநூறு ரூபாய் தவிர மிச்ச எல்லாத்தியும் எடுத்துக்கிட்டேன்.." என்று தலைகுனிந்தபடி சொன்னார்,
வக்கீல் சீறினார். "அடப்பாவிகளா! நான் மட்டுந்தான் இங்கே சொன்னபடி செஞ்சவன் போலிருக்கு..."
கமல்ஹாசனும் மருத்துவரும் வியந்தனர். "ஆமாய்யா! சவப்பெட்டி வெயிட்டாயிரும்னு மொத்தத் தொகைக்கும் என் சொந்த செக் ஒண்ணை எழுதி வச்சேன்" என்றார் வக்கீல்.
2013/02/09
போகிற வழியில்...
     குடும்ப முன்னோர்/மூத்தோர் புகைப்படம் ஒன்றைச் சுட்டேன். இந்தக் கூட்டத்தில், as a gene, ஏதோ ஒரு கட்புலனாகா அணுவாக - ஏறக்குறைய கடவுள் மாதிரி - நானும் இருக்கிறேன் என்பது, கொஞ்சம் சொத்தையாக இருந்தாலும் நிறைவாகவே இருக்கிறது. சுதந்திரம் வருவதற்கு முன் படம் எடுத்தார்களாம். விடியலில் பிடித்தது. விடியலாகவே தொடரட்டும். நன்று.
                   வல்லிசிம்ஹன் தம்பதிகளை முன்பே சந்தித்திருக்கிறேன். இந்த முறை சந்தித்த போது 'இவர்களால் வீட்டை எப்படி இத்தனை சுத்தமாக வைத்திருக்க முடிகிறது?' என்று வியந்தேன். இத்தனைக்கும் தெரு முனையிலிருந்து தொலைபேசி 'இதோ வருகிறேன்' என்று சொல்லி, இதோவுக்கு அரை நிமிடம் முன்பாகவே வந்தேன். என்னைத் தேடி அப்படி யாராவது வந்தால் சட்டென்று பக்கத்து வீட்டு முகவரியைக் கொடுத்து அங்கே சந்திப்பேன். என் வீட்டு இலக்கணம் அப்படி! கணவரை 'சிங்கம்' என்று அழைக்கிறார் (how romantic!). சிங்கத்துக்கு hot rod constructionல் விருப்பம். எனக்கும். எப்போதாவது இரண்டு வாரம் ஒழிந்தால் சிங்கத்துடன் சேர்ந்து பழைய அம்பேசடர் அல்லது ஜாவாவைப் பிரித்துப் போட்டு உரமேறிய hot rod உருவாக்கலாம் என்ற ஆசை வந்தது. சென்னையின் செழிப்பில் custom hot rodல் கணிசமான காசு பார்க்கலாம். அண்மை வீடு ஒன்று அரவமின்றிக் கிடந்தது. விசாரித்தேன். 'சொத்துத் தகராறில் முடங்கியிருக்கிறது, நாற்பது ரூபாய் கேட்கிறார்கள்' என்று சொன்னார் சிங்கம். 'சீப்பா இருக்கே, தட்டிடுவோமா?' என்று கேட்டவுடன், 'ஹிஹி..' என்று நாற்பதுக்கு நெருக்கமாக பத்துப் பதினஞ்சு சைபர் போட்டார். ஆடிப்போய் வெளியே வந்து மூச்சைப் பிடிக்கக் கொஞ்சம் காம்பவுன்ட் சுவரில் சாய்ந்து நின்றேன். திருச்சி ஜன்னலைப் போல இந்தத் திருமயிலை காம்பவுன்ட் சுவரும் பல வகையில் சுவாரசியம். போய்ப் பாருங்கள் புரியும்.
         தமிழகத்தில் விஸ்வரூபக் காய்ச்சல். 'ஆயிரம் ரூபாய் டிடிஎச் கட்டலாமா வேண்டாமா?' என்று இருக்கிற/இல்லாத முடியைப் பிய்த்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் குழப்பத்தை நீக்க, கமல்ஹாசனே வழக்கம் போல் இன்னொரு குழப்பத்தைக் கொடுத்தார். பிறகு அதை நீக்க இன்னொன்று. பிறகு அதைப் போக்க... 'creating a problem to solve it' என்று அருமையான மேலாண்மைத் தந்திரம் ஒன்று உண்டு. இதைச் சரியாகச் செய்யவில்லையென்றால் முட்டாள்தனமான முடிவுகள் விளையும். கமல்ஹாசன் என்ன நினைத்து குட்டையைக் கிளறினாறோ தெரியவில்லை. deflection and damage control முறைகளும் சரியில்லாமல் போனது வருத்தம். இந்தப் படத்துக்காக இன்னும் எத்தனை வழக்குகளைச் சந்திக்கப் போகிறாரோ தெரியவில்லை. சந்தடி சாக்கில் ஹுசேன் போல் ஹாசன் என்று leg bye சிக்ஸர் அடிக்கப் பார்த்தார். stupidity begets. ஹிஹ்ஹிஹ்ஹி. இவர் படத்துக்கு மட்டும் அடிக்கடி எதிர்ப்புகள் வருவதேன்? இவர் சொல்வது போல் சமூக அமைப்புகள் ஒன்று விடாமல் இவரை இளிச்சவாயன் என்று நினைக்கின்றனவா? அல்லது கலை என்ற பெயரில் எதையாவது கண்றாவியாக வேண்டுமென்றே செய்கிறாரா? ஒரு கலைஞனை முடக்குவதால், பாதிக்கப்பட்டக் கலைஞனைத் தவிர, யாருக்கும் எந்தப் பலனும் கிட்டியதாக வரலாற்றில் செய்தியில்லை. nevertheless, இந்தப் படத்தினால் இவர் நொடித்துப் போவதைப் பொறுக்க முடியவில்லை. இதைப் பதிவிடும் நேரம் படம் வந்திருக்கும் - அதாவது தமிழக தியேடர்களில். ஜனவரி 26 முதல் இணையத்தில் விஸ்வரூபம் HD பிரதிகள் கிடைப்பதாகத் தகவல்கள் புழங்கினாலும், ஹு i mean ஹாசனுக்காக, இந்தப் படத்தை அடுத்த சென்னைப் பயணத்தில் பணம் கொடுத்து டிகெட் வாங்கிப் பார்க்க முடிவு செய்திருக்கிறேன். (ஹிஹி..பேசுவது கிலியா?)
         முன்பே சந்தித்த மற்றொரு பதிவர் ஜவஹர். புத்தகப் புண்காட்சியில் லேசாக உரசிய பின்னர் பொங்கல் நாட்கள் ஒன்றில் சந்தித்தோம். புத்தகம், இலக்கியம், சினிமா என்று மேற்சொன்ன தலைப்புகள் ஒவ்வொன்றிலும் நேரம் போனது தெரியாமல் அரட்டை. தொடர்ந்து ISO 6sigma என்று கணிசமான அரட்டை. அதற்குப் பிறகு பஸ் நிலையம் வரை நடந்து அங்கே கொஞ்சம் படு சுவாரசியமான சமூக அரட்டை (டாபிக் பற்றிச் சொல்லவே கூடாது என்று உறுதி வாங்கிக் கொண்டதால், உறுதி வாங்கிக் கொண்டாரென்பதை மட்டும் சொல்கிறேன்). இவரைச் சந்தித்த பின்னர் ஸ்ரீராமை சந்திக்க பிளான். பேச்சு சுவாரசியத்தில் நேரம் தொலைந்து போனதும், 'நம்ம ஸ்ரீராம் தானே?' என்று சாக்கு சொல்லிக் கொண்டோம். மறுபடி கொசுறுக்காகப் பேசினோம். புத்தகம் எழுத விரும்பும் பதிவர்களுக்கு நிறைய டிப்ஸ் வைத்திருக்கிறார். இதைப் பற்றி ஒரு பதிவு எழுதலாம் இவர். விடையுடன் விலகி, பரவிக்கிடந்த ஆட்டோக்கிருமியிடம் ஒட்டிக்கொண்ட போது இந்த சந்திப்பில் நாங்கள் நிறைய நெருங்கியிருக்கிறோம் என்பதை உணர்ந்தேன்.
         நாக்பூருக்கு போகிற பஸ்சில் OMG என்ற பெயரில் ஒரு இந்திப்படம் - அரைப்படம் பார்த்தேன். டூரிஸ்டுகளிடம் அனியாய விலைக்கு அபத்தமான பின்புலம் சொல்லி கடவுள் சிலைகளை விற்கும் நாத்திகர் ஒருவரின் கடை மட்டும் புயலில் சின்னாபின்னமாகிறது. இன்சூரன்சு கம்பெனிக்காரர்கள் 'act of god' என்று சின்ன எழுத்துக் காரணம் காட்டி அவருக்கு நஷ்ட ஈடு கிடையாது என்கிறார்கள். நிரூபியுங்கள் என்று வழக்கு போடுகிறார். சுவாரசியமான கரு. பாதியில் நிறுத்திவிட்டார்களே என்று கடுத்தேன்.
     பஸ்ஸில் வந்து இறங்கியதும் சாலையோர மர இலைகள் காலைச் சூரியனின் சிவப்பில் கொஞ்சம் தகிப்பது போல் தெரிந்தது. நாக்பூர் அதிகாலையைப் பாடாவதி ப்லேபுக்கில் பிடித்தேன். மீள்சந்திப்பு காஸ்யபன் அவர்களுடன். வயிற்றுக்கும் அறிவுக்கும் விருந்தாய்க் கழிந்தது நாட்பொழுது. எனக்கு வந்த சில சங்கடமான இமெயில்கள் பற்றி அவரிடம் அறிவுரை கேட்டேன். அரசியல் கலை இலக்கிய பதிவுலக கிசுகிசுக்கள் பேசினோம். படுஜாலி. இன்னும் நிறையப் புத்தகங்கள் பரிசாகக் கொடுத்தார். (இந்த முறை புண்காட்சியில் வாங்கியதையும் நண்பர்களிடம் பெற்றதையும் தொலைக்காமல் ஊருக்கு எடுத்துச் செல்லவேண்டும் பராபரமே!) வரும் கோடையில் இவருக்குப் பாராட்டு விழாவாம். தமிழ்நாட்டில் நடைபெறுகிறதாம். விவரங்களை அறிவிப்பார் என்று நம்புகிறேன். இப்பொழுதே வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
         புலம்பக்கூடாது. புலம்பி என்ன பயன்? ஹைதராவிலிருந்து எழும்பூர் வர முப்பத்தாறு மணி நேரத்துக்கு மேல் எடுத்துக்கொண்ட சண்டாள காசிகுடா எக்ஸ்பிரஸ் பற்றி புலம்பினால் போன காலம் திரும்பக் கிடைக்கவா போகிறது? வேண்டாம். ஐயையோ, புலம்புகிறேனே!
         இந்தியாவை விட்டுக் கிளம்புகையில் மும்பை விமானத்தை, பேசின் பிரிட்ஜ் போல் அவுட்டரில் நிறுத்தி வைத்திருந்தார்கள். அப்பொழுது அவசரமாகப் பிடித்த மாலைப் பொழுதின் touchdown மயக்கம்.
         special 26 என்று ஒரு இந்திப்படம் பார்த்தேன். இறுதியில் ocean's eleven நினைவுக்கு வந்தாலும் mostly சுவாரசியமான படம். சில இடங்களில் நகைச்சுவை அட்டகாசம். intelligent humor என்பது போனஸ். அருமையான திரைக்கதையில் பாடல்கள் தொய்வுடன் செவிவலியும் கூட. தவிர்த்திருக்கலாம். பெயர் தெரியவில்லை - போலீஸ் சிபிஐ காரர்களாக வரும் இரண்டு மீசைக்காரர்களும் பிரமாதமாக நடித்திருக்கிறார்கள். அனுபம் கெர் ஒரு ஜாம்பவான். பின்னணி இசை, எடிடிங் பிரமாதம்.
எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு நான் தியேடரில் பார்த்த முதல் படம் கடல். மூச்சைக்கட்டும் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு. மற்றபடி "மணிரத்னத்தையும் ஜெயமோகனையும் படத்தில் வர்ராப்ல கவுறு கட்டி தலைகீழாத் தொங்கவிடணும்லே" என்ற exit chatter காதில் விழ அவசரமாக வெளியே வந்தேன். in violent agreement.
விஸ்வ பார்த்தேன்.. (பதிவை எழுதி முடிப்பதற்குள் படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது, என்ன செய்ய?) கமல்ஹாசன் தமிழ்ப்படத் தரத்தை உயர்த்துகிறார் என்று சொல்லிக்கொள்வது கேலியாக இருக்கிறது. ந்யூயோர்க் நகரில் பிராமண வழக்கில் பேசும் எவரையும் நான் சந்தித்ததில்லை (nuclear oncologists that too, wtf!). effiminate expressions இவருக்கு வரவேயில்லை. ஆச்சரியமாகவும் கஷ்டமாகவும் இருந்தது பார்ப்பதற்கு. i always thought acting was his forte. பாடல்களும் இசையும் நாராசம். சிக்கன் சமைத்துவிட்டு அடுப்பிலிருந்து எடுக்கிறார் - எல்லாப் பெண்களும் எனக்கு எனக்கு என்று சுவைக்க முன்வர, கமல் கேரக்டர் சொல்லும் வசனம்: "இருங்கருங்க.. பாப்பாத்திம்மா.. நீ மொதல்ல சாப்டுப் பாத்துச் சொல்லு. உனக்குத்தான் சிக்கன் ருசில்லாம் தெரியும்". what? தமிழ்நாடு பிராமண சங்கம், தமிழ் ஹிந்துகாரர்கள் எப்படி சும்மா விட்டார்கள்? (and oh, get this. microwaveல் எலும்புடன் சிக்கன் சமைப்பார்களா யாராவது? இது கூட தெரியவேண்டாம்? காட்சி அமைக்கிறார்களாம் உலகத் தரத்துக்கு!).
ஒன்று தெளிவானது. தமிழ்ப்படம் இந்திப்படத் தரத்துக்கு வரவே இன்னும் நாளாகும். உலகத்தரத்துக்கு இட்லி வடை பொங்கல் பரோட்டா சாப்ஸ் செய்கிறோமே, போதாதா?
     சென்ற வாரம் படித்த இரண்டு புத்தகங்களும் அற்புதம். முதலாவது மகாகவி சண்முகத்தின் 'அஷ்டலட்சுமி காவியம்' பற்றித் தனிப்பதிவாக எழுத விரும்புகிறேன். இரண்டாவது, ராகிரவின் 'புரபசர் மித்ரா'. ரசித்தேன். க்ருஷ்ணகுமார் என்ற பெயரில் எழுதி வெளிவந்தத் தொடர்கதை. பிரபல மேஜிக் நிபுணர் மித்ரா தன் மனைவியைச் சந்தேகிக்கிறார். தன் சந்தேகம் தொட்ட விவரங்களை அறிய தன் மனைவியை ஒரு காலக்கட்டத்துக்கு ஹிப்னோசிஸ் வழியாக அழைத்துச் செல்ல விரும்புகிறார். ஆனால் அதற்கான ஆற்றல் அவரிடம் இல்லை. பெண்ணை வளர்த்து கலை கற்றுத் தருகிறார் - இந்தக் காரியத்துக்காக. மித்ராவின் கொடூர நடத்தைகள் இன்றைக்குப் படித்தாலும் திடுக்கிட வைக்கின்றன. மித்ரா, மித்ராவின் மனைவி ஜெகதா - இரண்டும் அருமையானப் பாத்திரங்கள். நிஜ வாழ்வில் சில மனைவிகள் இப்படிப்பட்டக் கணவர்களிடம் வாழ்கிறார்கள் என்பது தெரிந்தாலும், 'ஐயோ வேண்டாமே!' என்று இரங்க வைக்கும்படியான பாத்திரம். லேசான காதலும் இழைந்த, சுவாரசியமான, பக்கத்துக்குப் பக்கம் விறுவிறுப்பான கதை. விறுவிறுப்பான திரைப்படமாக வரவேண்டிய கதை.
புரபசர் மித்ரா: அல்லயன்ஸ் பதிப்பகம், 2009 ஆண்டுப் பதிப்பு, விலை ரூ105.
         எண்பதுகளின் தொடக்கத்தில் பெங்களூரின் ஹொசஹள்ளி பகுதியில் விடலை நண்பர்களுடன் இருபத்தேழு இஞ்ச் பெல்பாட்டம் அணிந்து, ராஜாஜி நகர் பெண்களை சைட் அடிக்கையில் ஹம் செய்துத் திரிந்த கன்னட சினிமாப் பாடல். எங்கள் கலெக்டிவ் ஜொள்ளுக்குக் காரணமான சுகுணா என்றொரு பெண், எங்கே எப்படி இருக்கிறாளோ! இசை இளையராஜா என்று இந்தப் பயணத்தில் தான் தெரிந்து கொண்டேன். பெங்களூர் நண்பனிடம் அவசரமாகச் சுட்ட பாடலுடன், இப்போதைக்கு விடை.
2013/02/02
நாற்சந்தி அடிமைகள்
    "வாங்கணே.. நீங்க எதுக்கு வந்தீக.. வட்டாரத்தலை யாரையானும் அனுப்பியிருக்கலாம்ல?"
"நல்லாயிருக்கியாம்மா.. ஏளெட்டு வருசருக்குல்லா பாத்து?"
"பத்து வருசாச்சணே"
"செல்வா.. நெனவிருக்குல்லே? இப்ப அவந்தான் இங்க வட்டாரத்தலை. ஒனக்கு மூணு பிள்ளைங்கனான்... ஆமா.. பய எங்க? நல்லா வளத்திருக்கியா?"
"வந்துருவான்.. காப்பி குடிக்கிறெளா? கொண்டாறேன்.."
"ர்க்ட்டு.. நா வந்த விசயம்.." என்று முத்தண்ணன் கனைத்துத் தொடங்குவதற்குள் ராணி காபி எடுத்து வர உள்ளே சென்றுவிட்டாள்.
    தி.நகரின் மிகப்பெரிய வணிகக் குழுமத்துக்கு உள்முகம் வெளிமுகம் இரண்டும் உண்டு. வெளிமுகத்துக்கு அறிமுகம் தேவையில்லை. உள்முகம் சற்றுச் சிக்கலானது.
வடபழனி - மாம்பல வட்டாரத்தில் சுமார் அறுபது வருடங்களுக்கு முன் வீடு வீடாக சைக்கிளில் பாத்திர வியாபாரம் செய்த ஐயாவின் உழைப்பில் இன்றைய குழுமப் பிரம்மாண்டத்தின் பின்புலத்தைத் தேடிப் புரிந்து கொள்வது எளிதல்ல. எனினும், அப்படித்தான் தொடங்கியது ஐயாவின் குடும்ப வணிகம். மெள்ள வளர்ந்து பாத்திரக்கடை, துணிக்கடை, பட்டாசுக்கடை, பழக்கடை, உணவகம் என்று விரிந்து இன்றைக்கு க்ரேனைட், மின்சார சாதனங்கள், வீட்டு மனை என்றுப் பரந்திருக்கும் குழும வேர்களில், வேர்களின் பராமரிப்பில், பராமரிப்பின் நிழல் நாடகங்களில்... உள்முகம் புலப்படும்.
முத்தண்ணன், பதினாறு வயதில் ஐயாவுடன் சேர்ந்து அவர் நிழலில் வளர்ந்து நிலையானவர். அறுபது வயதில், இன்றைக்கும் குழும வியாபாரங்களுக்கான ஆள்படைத் தலைவர், காவலர். இன்றைக்கு மேற்பார்வை பார்த்தாலும், தொடக்கத்தில் வேலையாட்களை சேர்த்து, வளர்த்து, விரட்டுவதே முத்தண்ணனின் வேலையாக இருந்தது.
படிக்காத ஏழைப் பெற்றோரின் பிள்ளைகளை முத்தண்ணன் சில விதிகளுக்குட்பட்டு 'விலைக்கு' வாங்கி வருவார். பிள்ளைகளின் விலை, அவர்கள் வயதையும் பெற்றோர்களின் ஏழ்மையையும் குடும்பத்தின் படிப்பறிவையும் ஒட்டி நிர்ணயிக்கப்படும். பத்து வருடங்களுக்குச் சென்னையில் குழுமக் கடைகளில் வேலை. சம்பளமாக வருடத்துக்கு துணி, தினம் சாப்பாடு, தங்குமிடம், மாதம் ஐந்து ரூபாய் கைச்செலவுக் காசு தவிர... வருடத்துக்கு ஒரு பிள்ளைக்கு நூறு ரூபாய் என்றக் கணக்கில் பெற்றோருக்கு வழங்குவதாக முத்தண்ணன் விளக்கியதும், அனேகப் பெற்றோர்கள் சம்மதித்து விடுவார்கள்.
தனியாகச் செயல்பட்ட முத்தண்ணன் நாளடைவில் நெல்லை, நாகர்கோவில், தூத்துகுடி, விருதுநகர், சிவகாசி என்று ஐந்து வட்டாரங்களில் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு ஆட்படைத் தலைவரை நியமித்தார். எட்டு முதல் பதினொரு வயது வரையிலான பிள்ளைகளைத் தேடிப் பிடித்துக் குழுமப் பணியில் சேர்ப்பதே வட்டாரத்தலைகளின் வேலை. ஒவ்வொரு வட்டாரத்தலைக்கும் வருடத்துக்கு இன்னின்ன வயதில் இத்தனை ஆண், இத்தனை பெண் பிள்ளைகளைப் பிடித்துக் குழுமத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோட்டாக் கணக்கின் படியே அவர்களின் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. (இன்றைக்கும் பழுதில்லாமல் இயங்கும் முத்தண்ணனின் 'மனிதவள' முறை, மிகச் சிறிய மாற்றங்களுடன் பிற குழுமங்களிலும் பயன்படுத்தப்படுவதை, தி.நகரைச் சுற்றி வந்தால் சுலபமாகப் புரிந்து கொள்ளலாம். இதை எந்த இயக்கமும் 'கண்டு கொண்ட'தாகத் தெரியவில்லை.).
    இருபது வருடங்களுக்கு முன்பு முத்தண்ணனே நேரில் பார்த்து சேர்த்தவர்கள் ராணியும் சிவாவும். ராணிக்கு பத்து வயது. சிவாவுக்கு ஒன்பது. "நா பாத்துக்குறேன்" என்று ராணியின் அப்பாவிடம் உபரியாக இருநூறு ரூபாய் கொடுத்து அழைத்து வந்தார். "லே சிவா.. இவளை உன் அக்காவாட்டம் பாத்துக்க" என்று வழியெங்கும் ராணியைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வந்தார்.
சென்னை வந்த பிறகு, சிவா பாத்திரக்கடை பகுதியிலும் ராணி துணிக்கடை பகுதியிலும் வேலை பார்த்தார்கள். அசோக் நகரில் கடைக்குச் சொந்தமான பெரிய வீட்டில் ஆண் பெண்களுக்கானத் தனிப் பகுதிகளில் தங்கினாலும் புதன், சனி மாலைகளில் வேலையாட்களுக்கான அடிப்படை எழுத்தறிவு-கணித வகுப்பில் பார்த்துக் கொள்வார்கள், படிப்பார்கள். பேசிக்கொள்வார்கள். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை செவ்வாய் மாலை கிடைக்கும் அரை நாள் விடுப்பில் சில மணி நேரம் பேசிச் செலவழிப்பார்கள். கடையிலோ வெளியிலோ யாரேனும் ராணியிடம் விளையாட்டாக வம்பு செய்தால் கூட சிவா பாதுகாப்புக்கு ஓடி வருவான். நாளடைவில் வேலைச் சுமை, உடல் வளர்ச்சி என்று பல காரணங்களால் இருவரும் அடிக்கடி சந்திக்காவிட்டாலும் மனதளவில் நெருக்கம் குறையவில்லை.
    ஒரு திங்கட்கிழமை மாலை, ராணியின் துணிக்கடை தோழி சிவா வேலை செய்த பாத்திரக் கடைக்கு வந்து "சிவா.. ராணி விவரமில்லாம நடக்குறா.. விசயம் சொல்ல மாட்டேங்குறா.. சின்ன முதலாளி செந்தில் கூட ரா சுத்துறா.. யாருக்கும் தெரியாம அந்தாளு கூட பைக்கில எங்கனா போயிட்டு வரா.. நேத்து குடிச்சிருந்தா.. எனக்கென்னவோ பயமா இருக்கு.. நீ கவனிக்கிறியா சிவா?" என்று அவசரமாகச் சொல்லிவிட்டுப் போனாள்.
செவ்வாய் மாலை ராணியைச் சந்தித்துக் கேட்டபோது அவள் மழுப்பினாள். சிவா விடாமல் துருவ, விவரங்களைச் சொன்னாள். "என்னைக் கட்டிக்கறதா சொல்லியிருக்காரு" என்றாள்.
சிவாவுக்கு ஆத்திரம் வந்தது. "லூசுப் பொண்ணா இருக்கியே? நீ யாரு? செந்தில் யாரு? உன் அந்தஸ்து என்னானு தெரிஞ்சு தான் பேசுறியா? அவரு சின்ன முதலாளியில்லா? உன்னைக் கட்டிக்குவாரா? உன் கிட்டே எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? பொண்ணா கவனமா இருக்க வேணாமா? இப்ப என்ன பண்ணுறது?" என்று எரிந்து விழுந்தான்.
"நீ ஒண்ணும் செய்ய வேணாம்.. செந்தில் என்னைக் கட்டிக்குவாரு. உன் வேலையைப் பாத்துக்கிட்டுப் போ! நீ கூடப் பொறந்தவனா அப்பனா கேள்வி கேட்க?" என்று பதிலுக்கு எரிந்து விழுந்த ராணி, "நான் மொதலாளியாவுறது உனக்குத் தாங்கலே.. கிடந்து வேகுறே... இனி என்னைப் பாக்க வராதே" என்று விருட்டென்று எழுந்து போனாள்.
    சில மாதங்கள் பொறுத்து ராணியின் தோழி மறுபடி வந்தாள். "சிவா.. உடனே வரியா.. ராணி உங்கூடப் பேசணுங்கறா".
ராணியைப் பார்க்கப் போனான். பத்து நிமிடம் போல் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதாள் ராணி. பிறகு அழுவதை நிறுத்தி அவனை நேராகப் பார்த்தாள். "என்னை ஏமாத்திட்டாரு.. நான் மூணு மாசம் கர்ப்பம்" என்றாள்.
சிவா ஆத்திரத்தோடு வாய் திறக்க, ராணி தடுத்து நிறுத்தினாள். "வேணாம் சிவா.. என்னைத் திட்டுறதால உனக்கு என்ன லாபம்? என் கஷ்டம் குறையப்போகுதா? நான் உன்னை வரச்சொன்னதுக்குக் காரணம் இருக்கு" என்றாள்.
"என்ன?"
"சிவா.. நான் எத்தினியோ கனவுகளை வச்சிருந்தேன்.. பஞ்சுக்காயாட்டம் வெடிச்சு சிதறிடுச்சு..."
"ராணி.. அதுக்காவ எதுனா குடிச்சி செத்து கித்து வக்காதே.."
"சாவுறதும் வாழுறதும் என் உரிமை இல்லியா சிவா? சாவ விரும்பினா யாராலயும் தடுக்க முடியுமா? எப்படி வாழணும்னு நீ சொன்ன பேச்சையே கேக்காதப்ப, இப்படி சாவாதனு தடுக்குறதயா கேக்கப் போறேன்?"
"லூசு.. "
"இரு" என்று ஒரு சிறு மூட்டையைக் கொடுத்தாள். "நான் ஓடிப்போறதா இருக்கேன் சிவா. வாழுறனோ சாவுறனோ அதை இப்போ தீர்மானிக்கப் போறதில்லே. ஆனா இங்க இருக்க விருப்பமில்லே. இந்த மூட்டைல நான் சேத்த பணம் இருக்கு.. நீ இதை எடுத்துட்டுப் போய் எங்கப்பாம்மா கிட்டே கொடுத்துரு.. தயவு செஞ்சு இந்த உதவியை மட்டும் செய்வியா?" என்று அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினாள்.
"நீ எங்கயும் போக வேண்டாம்.. இரு வரேன்" என்று கிளம்பிய சிவா, நேராக முதலாளியிடம் போனான். விவரங்களைச் சொல்லி ராணியை வீட்டு மருமகளாக ஏற்கும்படி சொன்னான்.
அவனுடைய கோபத்தையும் ஆத்திரத்தையும் கண்ட ஐயா முத்தண்ணனை அழைத்து, "டேய் முத்து.. யார்ல இந்தப் பையன்.. என்னென்னவோ சொல்றான்?" என்றார்.
முத்தண்ணன் அவனைத் தனியாக அழைத்து எல்லா விவரங்களையும் கேட்டார். "சிவா.. இதுல தலையிடாதே.. நம்மப் பொண்ணுங்க தான் கவனமா இருக்கணும்.. முதலாளி குடும்பத்து பசங்க அப்படி இப்படி நடந்துக்குவாங்க.. அவங்க முதலாளி, நாம தொழிலாளி.. இப்ப ஏடாகூடமா எதுனா பண்ணிறாதே.. உனக்கும் வேலை போயிரும்.. நீ நல்லா பேரெடுத்திருக்குறே.. இது சாதாரண விசயம்.. புதுசு ஒண்ணுமில்லே.. ஒழுங்கா வேலையைப் பாத்துட்டிருந்தா ராணிக்கு இப்படி நேர்ந்திருக்குமா? அவளா ஏற்படுத்திக்கிட்டது.. நீ குறுக்க வராம உன் வேலையைப் பாத்துட்டு போ.. சொல்றது புரியுதா?" என்றார்.
"முத்தண்ணே.. அவளை என் அக்காவாட்டம் பாத்துக்கனு நீங்க அடிக்கடி சொல்வீங்களே ஞாபகமிருக்கா? என் அக்காவுக்கு இந்த நிலமைனா அதைப் பாத்துட்டு பூப்பறிக்க சொல்றீங்களா? வெட்டிற வேணாம்?"
"நல்லாப் பேசுற.. மீசை வளந்துடுச்சுல்லா? டேய் போக்கத்தப் பயலே.. நீ என்ன செய்ய முடியும்னு நினைக்கறே? கட்டி வைனு சொன்னா அந்த புள்ளையக் கட்டி வப்பாரா ஐயா? சின்ன முதலாளிதான் கட்டிக்குவாரா? ஏதோ வயசு விடப்புல ரெண்டு பேத்துமா சேந்து அடிச்ச கூத்து.. வயசுக்கு வந்த பொண்ணு.. தெரியாமலா செஞ்சா? தேவையில்லாம நீ வந்து மாட்டிக்காதே.. சொன்னாக் கேளு"
"உண்மைதான்.. இதுல அவ பேத்துலயும் பாதி தப்பிருக்கு.. ஆனா தண்டனை மட்டும் முழுக்க அவ வாங்கணும்னா எப்படிண்ணே? படிக்காத, நாதியில்லாத, ஏழை அன்னாடங்காச்சிங்க எங்களுக்கு இருக்குற சொத்து... எப்பனா நல்லது நடக்கும்ன்ற நம்பிக்கையும் கனவு காணுற உரிமையும் தானே அண்ணே? அதைத் தெரிஞ்சுகிட்டு இப்படிக் கீழ்த்தரமா நடந்துகிட்டா தப்பில்லியா? இனி ராணிக்கு நம்பிக்கையும் கனவும் கூட இல்லாம செய்யுறது எப்பேற்பட்ட கொடுமை! பாத்துட்டு சும்மா இருக்க முடியாதண்ணே.."
"என்னா செய்யப் போறே?"
"நியாயமா என்ன செய்யணுமோ அதைச் செய்யப் போறேன். எங்களுக்கு என்ன வசதியிருக்கு முத்தண்ணே? எங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கு? எதுவுமில்லேனு தெரிஞ்சு தானே சின்ன முதலாளி ராணியை ஏமாத்துறாரு? ஏழை.. பட்டிக்காடு.. அதுவும் பொண்ணுங்கற நினைப்பு தானே? நியாயமா பாத்தா நீங்க தலையிடணும்.. எங்களைக் கூட்டிட்டு வந்தது நீங்க தானே? பள்ளிக்கூடத்துக்குப் போக வேண்டிய எங்களை.. கதியில்லாத காரணத்துனால.. பணம் குடுத்து பெத்தவங்க கிட்டயே எங்களை விலைக்கு வாங்கி இங்க கூட்டியாந்து அடிமையா.." சிவாவின் குரல் உடைந்தது. சற்றுத் தெளிந்து, "அண்ணே.. முதல் வேலையா நான் போலீஸ்ல புகார் குடுக்கப் போறேன்" என்றான்.
"போலீஸ்ல கண்டுக்கக் கூட மாட்டாங்க. மீறி நீ எதுனா செஞ்சா நெலமை இன்னும் மோசமாயிடும்.. ஒரு வாரம் பொறுத்துக்க, நான் பேசிப் பாக்குறேன்.. இப்ப உன் வேலையப் பாரு போ.."
மறு நாள் மாலை ராணியின் தோழி சிவாவைத் தேடி அவசரமாக வந்தாள். "சிவா.. ஊர்லந்து ராணிப்பா வந்திருக்காரு.. விசயம் விபரீதமாயிடுச்சு.. ராணி உன்னை உடனே ஓடிறச்சொன்னா.. இந்தா நூறு ரூவா.." என்றாள்.
"நானா? நான் ஏன் ஓடணும்? சரி. நீ போ" என்ற சிவா, நேரே ராணி வேலை செய்த துணிக்கடையின் ஐந்தாவது மாடியில் உள்ளடங்கியிருந்த குழும ஆபீசுக்கு விரைந்தான். முதலாளி அறைக்குள் நுழைந்தான். முதலாளி இல்லை. முத்தண்ணாவும், ராணியும் அவளுடைய அப்பா அம்மாவும் இருந்தார்கள்.
"வாலே.." என்றார் முத்தண்ணன் கடுப்புடன்.
"ராணி.. நீ பயப்படாதே.. ரெண்டுல ஒண்ணு பாத்துரலாம்" என்றான் சிவா.
"புடுங்குனே.. வாயை மூடிக்கிட்டு போவலின்னா நீதான் இவளைக் கெடுத்தனு உம்பேர்ல புகார் கொடுக்க தயாரா இருக்காங்கலே.. இதா இவளே புகார் குடுக்கேங்குதா.. இப்போ என்னா பண்ணுவே?" என்று மறித்தார் முத்தண்ணன்.
"இவன் கெடக்கான் விடுங்கண்ணே... பெத்தவன் நான் சொல்லுதேன்.. ரெண்டு வருசம் இருக்குதுனாலும் எம்பொண்ணுக்கு பதினெட்டு வயசுல குடுக்குற பவுன் நகையாவது குடுத்து அனுப்புங்க.. இப்படி அஞ்சாயிரம் ரொக்கம் குடுத்து அனுப்புறீங்களே?" என்றார் ராணியின் அப்பா.
"ஒன் வேலையப் பாத்துகிட்டு போ தம்பி.. விவகாரமாயிரும்.. இனி எங்க குடும்ப பொண்ணுங்களை யார் கட்டிக்குவாங்க.. முதலாளி ஐயா விரோதம் எங்களுக்கு வேணாங்கண்ணே.. ஏதோ அஞ்சு பத்து மேலே கொடுத்து அனுப்புங்க.. நாங்க போயிடறோம்" என்று தொடர்ந்து புலம்பிக் கொண்டிருந்தார் ராணியின் அம்மா.
ராணி நடுங்கினாள். "..தலையிடாதே சிவா.." என்று அழுதாளே தவிர அவளால் அதிகம் பேச முடியவில்லை.
சிவாவுக்கு எரிச்சல் வந்தது. நியாயத்துக்குப் புறம்பாக எதுவும் நடவாதது போலிருந்த முத்தண்ணாவைப் பார்த்தான். இயலாமை வெளிப்பட அழுது கொண்டிருந்த ராணியைப் பார்த்தான். இந்த நிலையிலும் நகை பணம் என்று பேரம் பேசிய ராணியின் பெற்றோர்களைப் பார்த்தான்.. "நீங்கள்ளாம் மனுசங்க தானா?" என்று தாள முடியாத வெறுப்புடன் கத்தினான்.
    "காபி நல்லாருக்கு" என்றார் முத்தண்ணன். உள்ளே ஓடிவந்த இரண்டு பெண்களைப் பார்த்தார்.
"எம் பொண்ணுங்க. இது ஸ்ரீதேவி, அது ஐஸ்வர்யா"
"பேரு நல்லா வச்சுருக்கே.. என்ன வயசாவுது?"
"இவளுக்கு ஆறு, அவளுக்கு எட்டு"
"பையன்?"
"பேரு சிவா. பத்து வயசாவுது"
"ச்..ச்.. புருசன் இறந்துட்டதா செல்வா சொன்னான்.."
"செத்து வருசம் நாலாச்சு. நகை பணம் எல்லாத்தையும் கொடுத்து கட்டி வச்சாரு ங்கப்பாரு.. ஆனா அந்தாளு என்னை தினம் தேவடியானு கூப்பிட்டு குடும்பம் நடத்துனான்.. சிவாவை எட்டி எட்டி உதைப்பான்.. ரொம்பக் குடிப்பான்.. குடிபோதைல ஒரு நா தெருல விழுந்து கிடந்தான்.. பஸ் ஏறி.."
"ஸ்.. எல்லாத்தியும் செல்வா சொன்னாம்மா. அதான் நானே கெளம்பி வந்தேன். இத பாரு.. நடந்தது நடந்துடுச்சு.. உனக்கு ரெண்டு பொண்ணுங்க.. சிவாவை எங்கூட அனுப்பு. ரெண்டு வருசத்துக்குப் பிறவு உன் பொண்ணுங்களையும் நானே கூட்டிட்டுப் போறேன்.. பதிமூணு வயசு ஆவணும்னு சட்டம் கொணாந்திருக்காங்க.. ஆனா யாரு பாக்காங்க அதெல்லாம்... பத்து வருசம் கடைங்கள்ள வேலை பாக்கட்டும்... உனக்கும் அங்க எதுனா வீட்டு வேலை கிடைக்கும்.. சென்னைல இப்பல்லாம் வீட்டு வேலை ஆளுங்களுக்கு கிராக்கி.."
"என்னா கொடுப்பீங்கணே?"
"எல்லா வழக்கமா தரதுதாம்மா, உனக்குத் தெரியாதா? மூணு வேளை சாப்பாடு, வருசத்துக்கு ரெண்டு செட்டு துணி, பண்டிகை போனஸ் இப்ப ஐனூறு ரூவா, பொண்ணுங்களுக்கு பதினெட்டு வயசுல இப்ப மூணு பவுன் தராங்க.. ஒரு புள்ளக்கி மூவாயிரம் ரூவா கணக்குல கைல ரொக்கம்.. என்ன சொல்றே?" என்ற முத்தண்ணன் ராணியை நேராகப் பார்த்தார். "ம்ம்ம்.. எப்படியோ சுத்தி எங்கயோ வந்து.. உன்னை மாதிரி உன் பசங்களுக்கு ஆயிடக் கூடாது பாரு.. அதான் உனக்கு உதவி செய்ய நானே நேர்ல வந்தேன்.. இப்ப சிவாவை கூட்டிட்டுப் போறேன்.. இந்தா மூவாயிரம் ரூவா.. இதுல ஒரு கையெழுத்து போடு.."
"வேணாம்ணே.. லச்ச ரூவா குடுத்தா கூட வேணாம்ணே.."
"திடீர்னு கிறுக்கு பிடிச்சுருச்சா? என்ன பேச்சு பேசுதே? பசங்களை வழிக்கு கொண்டு வர வேணாமா?"
"இல்லணே.. நான் பேச்சு பேசலிங்கணே.. எங்க பரம்பரைல நாங்க எல்லாருமே ஊமையாத்தான்.. நாங்க மட்டுமில்லே.. என்னை மாதிரி எத்தினியோ பரம்பரைங்க.. ஊமையாப் பொறந்து ஊமையா வாழுதொம்.. ரெண்டு வயசுல பேச்சு வந்திடுச்சுனு பெத்தவங்க எங்களைக் கொண்டாடுதாங்க.. வார்த்தை வந்துச்சானு யாருமே கவலைப்படுறதில்லீங்க.. பேச்சு வந்தும் ஊமையாத்தான் வாழுதொம்.. எனக்கு வார்த்தையைக் கொடுத்தது சிவா..பெரிய மனுசன். அவன் பேரு வச்ச என் பிள்ளையை மறுபடி ஊமையா உங்ககிட்டே குடுக்க மனசு வர்லிங்கணே.."
"சாப்பாட்டுக்கு வழியில்லாம திண்டாடுதேனு பாத்தா.. மப்பா?"
"மப்பில்லிங்கணே.. எனக்குப் பிறவு என் குடும்பத்துல யாரும் ஊமையா வாழக்கூடாதுணே.. சாப்பாட்டுக்குத் திண்டாடினா பரவாயில்லிங்க.. என்னைப் போல வாழ வழியில்லாம திண்டாடக் கூடாது பாருங்க? என் பிள்ளைங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.. படிக்கப் போறாங்க.. தப்பா நினைக்காம பணத்தை எடுத்துக்கிட்டுப் போய்ட்டு வாங்கணே"
"நல்லா யோசிச்சுக்க ராணி.."
"இந்த ரெண்டு பொண்ணுங்களைப் பாருங்கணே.. நீங்க சொல்லுதாப்புல பாத்திரக்கடையிலயும் துணிக்கடையிலயும் அல்லாடிக்கிட்டு.. கண்டவங்களையும் சகிச்சுக்கிட்டு வாழணும்னு இவங்க தலையில எழுதியிருக்கலாம்.. ஆனா என்னா செருக்குப் பாருங்க பாவி மவளுங்களுக்கு.. ரெண்டும் வக்கீலாவணும்னு துடியா துடிக்குதுங்க.. யாரு சொல்லிக் கொடுத்தாங்களோ தெரியலே.. சிவா ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டராவணும்னு சொல்லுதான்.."
"அறியாப்பிள்ளைங்க அப்படித்தான்.." என்ற முத்தண்ணனை மறித்தாள் ராணி. "உங்க கண்ணுக்கு இவங்க அறியாப்பிள்ளைங்க. என் கண்ணுக்கு..? அதான்.. லச்ச ரூவா கூட வேணாம்னேன். நம்பிக்கையை விக்கறதா இல்லிங்கண்ணே.. போய்ட்டு வாங்கண்ணே" என்றாள்.
அச்சம் ஆற்றாமை இயலாமையுடன் வேகமும் கலந்த நாற்சந்திப் பயணத்தில் தவறாகத் திரும்பித் திரும்பி, முன்னேறவும் முடியாமல் வெளியேறவும் இயலாமல், இறுதியில் ஏதோ ஒரு இலக்கின் ஏதோ ஒரு முனை நாடி ஆயாசமாக ஒதுங்கும், பயணத்தின் தொடக்கமும் முடிவும் தீர்மானிக்க முடியாத சபிக்கப்பட்ட நிலையிலும் அடுத்த நாற்சந்தியே வாழ்வின் இலக்கென நம்பித் தொடரும் கோடிக்கணக்கான நாற்சந்தி வாசிகளுக்கு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)