2016/04/30

பல்கொட்டிப் பேய்

11


10◄


        முப்பது வருட கொசுவர்த்தி எரிந்து தீர.. தற்சமயத்துக்கு வந்தேன்.

பல்கொட்டி இன்னும் இஸ்திரிப் பெட்டி மேலிருந்து தலைகீழாக என்னைக் கேமராப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தது. விளக்கை இயக்க எண்ணித் தவிர்த்தேன். குடும்பம், வட்டம் பற்றிச் சொல்லவில்லை.. பொதுவாகச் சொல்கிறேன்.. மூப்பை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் நான் பேய் பிசாசு பற்றி இத்தனை வருட அனுபவத்தில் உணர்ந்தது ஒன்று உண்டு என்றால் அது பேய் பிசாசு அறைக்குள் இருப்பது தெரிந்தால் உடனே விளைக்கை ஏற்றகூடாது என்பதே. விளக்கு வெளிச்சத்தில் நம் கண்ணுக்குப் பேய் தெரியாதே தவிர, பேய்க்கு நம்மை நன்றாகத் தெரியும். எதற்கு வீணாக பேய்க்கு உதவ வேண்டும்?

என் கூட்டாளிகள் பற்றி நினைத்தேன். பிரம்மபுத்ரா நதிக்கரை பக்கம் ஏதோ ஒரு இடத்தில் புத்தபிட்சுக்களுடன் இருப்பதாக ஒரு முறை கேள்விப்பட்டதைத் தவிர ரகுவைப் பற்றி அதிகம் தெரியாது. அதனால் அவனைக் கூப்பிட முடியாது. ரமேஷ் சில வருடங்களுக்கு முன் மாரடைப்பால் இறந்ததாகவும் அவனை மாம்பலம் அகோபில மடம் பக்கம் சிலர் பேயாகப் பார்த்ததாகவும் கேள்விப்பட்டேன். ஒருவேளை அவன் பல்கொட்டியாக இருந்து இந்த சமயத்தில் நட்புக்காக உதவலாம் என்றாலும் எப்படித் தொடர்பு கொள்வது என்று தெரியாமல் என்ன செய்ய? அவனையும் தவிர்த்தேன். ஆக, இருப்பது அங்கதன் மட்டும். அவனைத்தான் கூப்பிட வேண்டும்.

ஸ்ரீராம் இப்போது மைசூர் பக்கம் அயோக்கியப் பரதேசி மால்யாவின் பழைய பீர் கம்பெனி ஒன்றை வாங்கி சாராய விருத்தியில் இறங்கி அமோகமாகக் கொழிக்கிறான். அதைத் தவிர உபரி வியாபாரங்கள் செய்வதாகவும் சொல்லியிருக்கிறான். இப்ப கூப்பிட்டா போதையில் இருப்பானோ? இருந்தாலும் போனை எடுப்பானா தெரியாதே? நான் மும்பை வந்ததே அவனுக்குத் தெரியாது.. இப்போ பல்கொட்டி விவரத்தை வேறே சொல்லணுமா? சொல்லித்தான் ஆகவேண்டும்.

பல்கொட்டியைப் பார்த்தேன். திறந்த வாயில் குட்டித்தலை இல்லாமல் பல்கொட்டி களையே போய்விட்டது போல் தோன்றியது. என்ன செய்வது? பேச்சு கொடுக்கலாமா? 'என்ன சௌக்கியமா? முப்பது வருஷமிருக்குமா பாத்து?' என்று ஏதாவது கேட்டு வைப்போமா? நினைக்கும் போது பல்கொட்டியின் கை பேசியது. அதாவது கைவாய். "வந்திருக்கேன்.. தலையை வாங்க வந்திருக்கேன்.." என்றது.

'என் தலையையா குட்டித் தலையையா?' என்று கேட்கத் தீர்மானித்து தவிர்த்தேன், குட்டித் தலையை வாங்க வந்திருந்தால் .. அப்புறம் என் தலையையும் சேர்த்துக் கேட்டு.. நாமாக சூன்யம் வைத்துக் கொள்வானேன்?

"ஒ..ஒ.. ஒரு போன் பண்ணிக்கட்டுமா?" என்றேன்.

ஸ்ரீராமை அழைத்தேன். ஐந்தாவது தடவை கூப்பிட்ட போது போனை எடுத்து "எவண்டா அது?" என்றான். நான் என்று சொல்லியும் நம்பவில்லை. "பொறம்போக்கு நாயே.. சேல்ஸ் கால் பண்றதுக்கு வரைமுறை கிடையாதா? குடும்பத்துல ஒருத்தன்னு சொல்லிட்டு ராத்திரி மூணு மணிக்கு போன் பண்றியே? எருமைக்குப் பொறந்தவனே, உனக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதாடா? போனை வைடா பன்னி". பயந்து வைத்து விட்டேன். எனக்கும் சேல்ஸ் தான் தொழில் என்பதால் பழக்க தோஷம் வேறே.

மறுபடி அழைத்தேன். அவன் அன்பைப் பொழியுமுன் தடுத்து நிலைமையைச் சொன்னேன். சில நிமிடங்கள் மௌனம் காத்துவிட்டு சிரித்தான். "கரெக்டா வந்துடுச்சேடா! நியாயமா பாத்தா நீயும் ரகுவும் தான் கவலைப் படணும். எனக்கென்ன.. பல்கொட்டி முடியாச்சுனு இருக்கலாம்.. ஏற்கனவே உங்களுக்கு உதவி பண்ணி உயிர் பிச்சை போட்டாச்சு..". என் வாழ்நாளில் ஸ்ரீராம் இதை எழுநூற்று நாற்பத்து இரண்டாவது முறையாகச் சொன்னாலும் முதல் தடவை போல் ஒலித்தது. அது ஸ்ரீராம் சுபாவம். தொடர்ந்தான். "கவலைப்படாதே.. எல்லாமே டீல் மேகிங்ல இருக்கு.. குட்டித்தலை உன்கிட்ட இல்லே.. கொண்டு வந்து தர பத்து வாரம் ஆகும்னு சொல்லு.. அது வரைக்கும் சும்மா வந்து தொந்தரவு தரக் கூடாதுன்னு சொல்லு."

"இப்பவே வேணும்" என்ற கர்ஜனை கேட்டு போனைத் தவற விட்டேன்.

பல்கொட்டியின் கைவாய் நீ...ண்டு என் காதருகே வந்து கர்ஜித்தது. "இப்பவே.. வேணும்னு சொல்லு ". அந்தரத்தில் தொங்கிய அதன் மற்ற கை, கீழே கிடந்த போனை எடுத்துக் கொடுத்தது.

ஸ்ரீராம் போனில் அதட்டியது கேட்டது. "ஏய்.. பல்கொட்டிப் புடுங்கி.. உனக்கு தில் இருந்தா எங்கிட்ட வா. எங்கண்ணனை விட்டுரு. நான்தானே உன் பல்தலையைப் பிடுங்கினேன்? நியாயமா பார்த்தா நீதான் எனக்கு நஷ்ட ஈடு தரணும். எத்தனை யுகமா பல் தேய்க்காம நாறிக் கிடந்த பல்லைத் தொட்டு என் கையெல்லாம் இன்னும் நாறுது.. ரொம்ப மிரட்டுனா தலை கிடைக்கவே கிடைக்காது.. தலையில்லாத வாயா நீ சுத்திட்டிருக்க வேண்டியது தான்.. தெரிதா?". போனை வைத்து விட்டான்.

எனக்கு சங்கடமானது. பொறுமையா இருந்த பேயை உசுப்பி விட்டானே லட்சுமணன்? இப்ப நான் இல்லே மாட்டிக்கணும்? பல்கொட்டியைப் பார்த்து வழிந்தேன்.. "சின்னப் பையன் தெரியாம சொல்லிட்டான்.. தூக்கக் கலக்கம் இல்லியா? ஹிஹி.. வந்து.. இந்த தலை இருக்கே தலை.."

அடுத்த கணம் பல்கொட்டி செய்ததை நான் எந்தப் பிறவியிலும் எதிர்பார்த்திருக்க முடியாது.

10◄ ►12



2016/04/28

பல்கொட்டிப் பேய்

10

9◄

        குவைத் தொடர்ந்து ரமேஷும் நானும் இழுக்கப்பட்டோம். பூசாரி சொன்னதையெல்லாம் ஸ்ரீராம் நினைவில் வைத்திருக்க வேண்டுமே! "சின்னத்தம்பி.. இப்ப நீதான் ஹீரோ. ரஜினிகாந்த். தெரிதா?" என்று பூசாரி அவனை உசுப்பேற்றியிருந்தார். ஸ்டைல் பண்ணுகிறேன் பேர்வழி என்று இவன் சொதப்பாமல் இருக்கணுமே!

எங்கள் வீட்டு வாசல் கதவைத் தாண்டியதும் மற்ற மூவரில் எவருமே என் கண்களுக்குத் தெரியவில்லை. "தம்பிங்களா.. பேய் ஒருத்தரை ஒருத்தர் காட்டாது.. மயக்கி மறைச்சுறும். ஆனா நீங்க பேசுறத ஒருத்தரை ஒருத்தர் கேக்க முடியும்.. மறந்துறாதீங்க. நான் உங்களை பாத்துட்டே இருப்பேன். என் குரலை நீங்க கேட்க முடியும்.. எப்படியாவது சமாளிச்சு பல்கொட்டியை ஏமாத்திறலாம்.. பயந்துறாதீங்க. நான் சொன்னதையெல்லாம் மறந்துறாதீங்க.." என்று எங்கள் பின்னால் அவர் இரைவது கேட்டது.

'இத்தனை நேரம் பேய் என் முகத்தருகே வந்திருக்கணுமே? வரலியே?' என்று எண்ணிக்கொண்டிருந்த போதே பல்கொட்டி என் முகத்தருகே வந்து உற்றுப் பார்த்தது.. என்னைச் சுற்றியது.. "தம்பி.. எச்சில் அடையாளம் இருக்குதானு பாத்துக்குது!".

"ஹ்ஹா!" என்ற பல்கொட்டியின் ஆவேசம் எங்களை பயமுறுத்தியது. கயிற்றை அறுக்கப் பார்த்து முடியாமல் ஜிவ்வென்று உயரே ஏறியது. "தம்பிங்களா.. கயிறு முனையில அம்மனுக்கு வெட்டின ஆட்டு ரத்தம் கொட்டி கயிறு முச்சும் பூசியிருக்கேன்.. பல்கொட்டியால வெட்ட முடியாது. நீங்க கயித்தை மட்டும் விட்டுராதிங்க"

"ரொம்ப ஸ்ரேஷ்டம்.. துரை, உங்கம்மா பக்தியா துளசிமாடம் எல்லாம் வச்சா ஆணியடிச்சு மாமிசம் தடவிட்டாரு தணிகாசலம்.. என்ன்ன்னவோ நாறுதேனு பாத்தேன்.. ரகு வேறே கன்னாபின்னானு சாப்பிட்டிருந்தானா, சரியா சொல்ல முடியலே.. ஆட்டு ரத்தமா? சரிதான்.. துளசியும் ஆட்டு ரத்தமும் கலந்து.. பலே பலே""

"சும்மா இருடா ரமேஷ்.." என்றான் ரகு.

திடீரென்று எங்களைக் கட்டியிருந்த கயிறு தாறுமாறாக ஆடியது. "தம்பிங்களா.. கயிற விட்டுறாதீங்க. பல்கொட்டி வெள்ளாடத் தொடங்கிடுச்சு.." பூசாரியின் குரல்.

"ஸ்ரீராம்! பிடியை விட்டுறாதே!" என்று அலறினேன். "ரகு.. அவனைப் பாத்துக்கடா"

"எங்கடா? அவன் என் கண்ணுக்குத் தெரிஞ்சா தானே?"

கயிறு ஆவேசமாக ஆடி எங்களை சுழற்றியடித்தது. "மந்திரக்கயித்த வெட்ட முடியாம பேய் உங்களை தூக்கியாட்டி வெளில கொணாரப் பாக்குது.. பேயாத்தா சொன்னாபுலயே"

"ஸ்ரீராம்.. பிடிச்சுக்கடா" என்றேன் மறுபடி.

"ஐயோ! சின்னதம்பி பிடியை விட்டுருச்சுபா!" என்று பூசாரி கூவுவது கேட்டது.

"ஸ்ரீராம்!" என்று அலறினோம். அவனிடமிருந்து பதில் இல்லை. விர்ரென்று பல்கொட்டி எங்களைச் சுற்றி வந்தது. அடுத்த நிமிடங்களில் நாங்களும் எங்களை பிடிப்பைத் தளர்த்தினோம். பூசாரி சொன்னது போலவே பல்கொட்டி தன் வாயருகே இருந்த புகைக் கயிற்றினால் எங்களைக் கட்டித் தலைகீழாகத் தொங்கவிட்டது.

""வவ்வாலாயாச்சுரா.. வாழ்க்கைல வவ்வாலா மாறுவேன்னு நினைக்கவேயில்லே"

"சும்மா இருடா ரமேஷ்.." என்றேன். "ஸ்ரீராம்!" என்று கூவினேன். பதிலே இல்லை. எனக்குப் பயம் வந்தது.

பூசாரி சொன்னது போல் பல்கொட்டி உப்பென்று ஊதிய வேகத்தில் அதன் பற்கள் அத்தனையும், வாய் நடுவில் இருந்த குட்டித் தலையைத் தவிர, கீழே விழுந்து தெறித்து எங்களைச் சுற்றிப் பறந்தன. ஊதிய வேகத்தில் எங்கள் தலைமுடி உதிர்ந்தது. உச்சந்தலையில் கொசு கடிப்பது போல் ஒரு உணர்வு. ஏதும் செய்ய இயலாத நிலையில் தலையைத் தடவிக்கொண்டேன். இனி ரத்தம் சொட்டத் தொடங்கிவிடும். எரிச்சலோடு கைகளைக் காற்றில் துழாவிப் பேயைப் பிடிக்கப் பார்த்தேன்.. பேயின் கழுத்தை நெறித்து என்ன பலன் என்றெல்லாம் தோன்றவில்லை. பயத்தில் எங்கள் இஷ்டத்துக்கு என்னென்னவோ செய்தோம் என்பது பூசாரியின் ரன்னிங் கமென்டரியினால் புரிந்து கொண்டோம்.

"ஸ்ரீராமை காவு குடுத்தப்புறம் தானேடா நம்பளைப் பிடிக்கும்னான் பூசாரி? அதுக்குள்ளே என் தலைல ஓட்டை போட்டுருச்சேடா" என்று அலறினான் ரமேஷ். என் தலையைத் தடவிக்கொண்டேன். நிச்சயம் ஈரமாக இருந்தது.

"ஸ்ரீராம்!" என்று நான் கூவ.. தொடர்ந்து மற்றவரும் கூவ.. அவனிடமிருந்து பதிலே இல்லை. பூசாரி சொன்னபடி பல்கொட்டி எங்களைச் சுற்றி ஆடி வந்தது. திறந்த வாயில் சிறிய தலை இன்னும் கோரமாகத் தெரிந்தது. ஒவ்வொரு சுற்றிலும் அதன் வாயில் தெரிந்த தலையைப் பார்த்து திடுக்கிட்டேன். ஸ்ரீராம் நிச்சயம் மயங்கி இருக்க வேண்டும். ஒரு வேளை.. "தணிகாசலம்!" என்று கூவினேன். "தம்பி எப்படி இருக்கான் பாருங்க.. பாத்து சொல்லுங்க..!"

"ரகு தம்பி மயங்கிருச்சு.. ரமேஷ் தம்பி செத்துருச்சா மயங்கிருச்சா தெரியலே"

"யோவ் குடிகாரப் பூசாரி.. நான் இன்னும் சாவலயா.. நான் மட்டும் செத்தா மவனே உன் மேலே பேயாட்டம் ஆடறேனா இல்லையா பாரு"

"தணிகாசலம்.. என் தம்பியைச் சொன்னேன்.. ஸ்ரீராமைப் பாருங்க! ரமேஷ், சும்மா இருடா! நாம செத்தா எல்லாருமே சேந்து பல்கொட்டியை ஒரு வழி பண்ணிறலாம்.. இப்போதைக்கு பூசாரி திட்டப்படி நடப்போம்.."

திடீரென்று பல்கொட்டி உக்கிரமானது.. புஸ் புஸ் என்று தீப்பொறி.. கோபமும் ஆத்திரமும் பொங்க எங்கள் மீது பாய்ந்து பாய்ந்து விலகியது.. எங்களைச் சுற்றி வெப்பம்.. புகைக்கயிறு எங்களை இறுக்கத் தொடங்கியது..

"ஆகா! பலே பலே! சூப்பருபா" என்ற பூசாரியின் குரல் கேட்டது..

"யோவ்.. பேய் எங்க கழுத்தை இறுக்கி தணல்ல போடப் போவுது.. நீ ரஜினிகாந்த் படமாட்டம் விசிலடிக்கிறியா?"

"ஆமா தம்பிங்களா.. சின்னத்தம்பி சூப்பர் ஸ்டாரு. பல்கொட்டி இந்தப்ப சுத்தி வந்துச்சா.. தம்பி தொங்கிட்டிருந்தபடியே உல்டாவா ஒரு பல்டியடிச்சு காலால பல்கொட்டி வாயில இருந்த குட்டித் தலையை உதைச்சு தட்டி விட்டிருச்சு.. பறந்து விழப்போன தலையை அலாக்கா எம்பிப் பிடிச்சிருச்சு.. சூப்பர்"

எனக்குப் பெருமையாக இருந்தது.. பிழைத்து விடுவோம் என்ற நம்பிக்கை. இனி பூசாரி சொன்ன எதையும் ஸ்ரீராம் மறக்காமல் செய்தால் சரி. தம்பியுடையான் பேய்க்கு அஞ்சான்.

பல்கொட்டி ஆவேசமாக ஸ்ரீராமையே சுற்றி வருவது பூசாரி சொல்லச் சொல்லப் புரிந்தது. "பயந்துராத ஸ்ரீராம், தலையை மட்டும் திருப்பிக் குடுத்துடாத.. ஏறக்குறைய விடியத் தொடங்கிடுச்சுடா.." என்ற ரகுவின் குரலைக் கேட்டதும் நிம்மதியானது. "ரகு.. நீ பூட்டகேஸ்னு நினைச்சுட்டேன்.. சாரிடா" என்றேன்.

ஒரு மணி நேரம் போல் எங்களைக் கொடுமைப்படுத்திய பேய் விடியலில் சட்டென்று காணாமல் போனது. கீழே விழுந்த எங்களை பூசாரி ஓடி வந்து மறுபடி ஆட்டு ரத்தக் கயிற்றினால் கட்டி வீட்டுக்குள் இழுத்து வந்தார். எங்கள் தலைக்காயங்களைத் துடைத்து விபூதி பூசினார். எல்லோரும் ஸ்ரீராமைக் கட்டிப் பிடித்துப் பாராட்டினோம். நன்றி சொன்னோம்.

"தணிகாசலம்.. நீங்க சொன்னபடி பல்கொட்டி என்னைச் சுத்தி சுத்தி வந்தப்போ தலையை எடுக்கத் தாவினேன்.. ஆனா அது விலகி விலகி சிரிக்குது.. அதான் அடுத்த தடவை வந்தப்ப ரஜினி ஸ்டைல்ல ஒரு பல்டி அடிச்சு தலையை தூக்கியடிச்சு இடது கையால ஒரு கேச் பிடிச்சேன்.."

"ரொம்ப ஓவரா போவாதடா டேய்.. தலையை பத்திரமா வச்சிருக்க இல்லே?"

"இதோ" என்று காட்டினான். ஒரு பெரிய கோலி உருண்டை போல் வழவழப்பாக இருந்த எலும்பு உருண்டையின் நடுவே கரும்பொட்டு. இப்போது பார்ப்பதற்கு சாதுவாக இருந்தது. பூசாரி அதை வாங்கிக் கொண்டார். "அம்மனுக்கு மாலை கட்டிப் போட்டுர்றேன் தம்பிங்களா. பல்கொட்டி பயமே வராது இனி.. சின்னத்தம்பி.. நான் சொன்னபடி பேயாண்ட கேட்டில்ல?"

"தலையைக் குடு.. உன்னை மட்டும் விட்டுடறேனனு சொல்லிச்சு பேய் மொதல்ல. தலையைக் குடுக்காட்டி உங்க அத்தனை பேரையும் ரத்தம் உறிஞ்சு சாவடிக்குறதா பயமுறுத்திச்சு.. சுத்தி சுத்தி வந்து அதட்டலும் மிரட்டலும்.. நான் எதுக்குமே பதில் சொல்லாம அமைதியா இருந்தேன்.. கடைசில பேய் கெஞ்ச ஆரம்பிச்சு.... தலையை குடுத்துரு அத்தனை பேரையும் விட்டுறதா சொல்லிச்சு.. அப்பத்தான் பூசாரி சொன்னாப்புல பேய் கிட்டே சொன்னேன்.."

"என்ன?"

"முப்பது வருஷம் கழிச்சு வானு"

"அடப்பாவி.. டேய்.. தணிகாசலம் முன்னூறுனு இல்லே சொன்னாரு?"

"ஆமா தம்பி.. நான் கூட முன்னூறு மில்லி மாதிரினு எத்தினி தபா சொன்னேன்?"

"தெரிலடா.. பயத்துலயும் அவசரத்துலயும்.." என்ற ஸ்ரீராமை முறைத்தோம். பூசாரி சொன்ன முக்கியமான விஷயத்தைக் கோட்டை விட்டுவிட்டான். முன்னூறில் ஒரு சைபர் குறைத்துவிட்டான் "ஏண்டா.. இதென்ன உன் கணக்கு பரீட்சையா? முப்பது வாங்க? வாழ்க்கை பரீட்சைடா" என்றான் ரகு.

"முப்பது வருசத்துல திரும்பி வந்தா என்ன பண்றது?"

"போனாப் போகுது" என்றார் பூசாரி. "சின்னத்தம்பியை கோவிக்காதீங்க.. அதாலதானே இன்னிக்கு பிழைச்சு வந்தீங்க.." என்ற பூசாரி பேச்சைக் கேட்டு அடங்கினோம். அவர் தொடர்ந்தார். "தம்பிங்களா..இன்னும் முப்பது வருசத்துல பல்கொட்டியே காணாமப் போயிறலாம்.. அப்படி இல்லின்னா கூட உங்க அத்தினி பேருக்கும் கல்யாணம் கட்டிக் குடும்பமாயிரும்.. பொஞ்சாதி பிள்ளைக் குட்டிங்க தொல்லையைப் பாத்து.. இருக்குற பேய் பிசாசுங்களே போதும்னு பல்கொட்டி வராமலே இருந்துரும்"

"கண்டிப்பா வரும்" என்றான் ரகு. "நீ வேணா பாரு துரை. முப்பது வருஷம் கழிச்சு தனியா இருக்குறப்ப ஒரு நாள் ராத்திரி நிச்சயம் வரும்".

9◄ ►11

2016/04/27

பல்கொட்டிப் பேய்

9


8◄

        "அதில்லே தம்பி.. பல்கொட்டி ஆளுங்களைப் பிடிக்குற விதம் எப்படினா.. காவுங்களை மொதல்ல முடியால மூடும்.. ராவுல தான் வருமா.. காவுங்க தூங்கிட்டிருந்தா எதுவும் தெரியாது.. போர்வைனு நெனச்சுட்டு சொவமா முடியை இழுத்துப் போர்த்துத் தூங்கிடுவாங்க.. முடியத் தொட்டா எச்சிலாயிரும்"

"தணிகாசலம்" என்று அதிர்ந்தேன்.. "என் கையைப் பாருங்க" என்றேன். மேலும் சில முடி நாற்றுகள் தோன்றியிருந்தன. "இதானா எச்சில்?"

ரகுவுக்கு கழுத்திலும் ரமேஷுக்கு பாதங்களிலும் பரவியிருந்தன முடிக்கீற்றுகள். "பாருங்க தணிகாசலம்.. மூணு பேரும் எச்சிலா?"

"ஆமா தம்பி.. அட.. பேயாத்தா உண்மையைத்தான் சொல்லியிருக்குது.. டுபாகூர்னு நெனச்சுனேன்பா.. பாவம் பேயாத்தா"

"யோவ்.. நாங்கதான் பாவம்.." என்றான் ரமேஷ்.

"அப்போ சின்னத்தம்பி போணிப் பொணம்" என்ற தணிகாசலம் அவரசப் படுத்தினார். "டயமில்லே.. அந்தரத்துல கயிறு தொங்கிருச்சுனா எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு அர்த்தம்.. காவு வாங்க பல் கொட்டி தயாராயிடுச்சுனு அர்த்தம்"

"அப்பாடா.. ஸ்கூலுக்கே போவேணாம் இனிமே.. அருஞ்சொற்பொருள் எதுவும் அறிய வேணாம்.. ஒழிஞ்சுது.. நிமமதி.. ஸ்கூலை எவன் கண்டுபிடிச்சான்.. சனியன்.."

"உடனே ஆரம்பிச்சுடாதடா ஸ்ரீராம்" என்று அவனை அடக்கினேன். "தணிகாசலம்.. என் தம்பியை அனுப்ப முடியாது.. நான் வேணும்னா போறேன்.. இல்லே எல்லாருமே ஒண்ணா.." என்ற என்னை நிறுத்திய ரகு, ஜன்னல் வழியாக வாசலைக் காட்டினான்.

தெருவிளக்கின் சோம்பலான வெளிச்சத்தில் எங்கள் வீட்டு வாசல் முழுதும் புகை மண்டலம் போல்.. துளசிமாடத்தின் மேலே பல்கொட்டியின் வாய் மட்டும் சினிமாஸ்கோப் போல் விரிந்து, அடுக்கி வைத்த எலும்புகள் போல் பற்கள் தெரிந்தன.. வாயின் நடுவே ஒரு குட்டித் தலை. எங்களையே உற்றுப் பார்க்கும் கண்களுடனும் திறந்த வாயுடனும்.. நாங்கள் முன்பு பார்த்த அதே தலை.. வாயருகே அந்தரத்தில் போல் நாலு புகைக் கயிறுகள் தொங்குவது துல்லியமாகத் தெரிந்தது.

பேயின் தயார் நிலை புரிந்து உறைந்தோம். எனில் அது மிகையல்ல.

"கவனமா கேளுங்க தம்பி.. இனி நேரமில்லே.. ஏற்கனவே முடி போத்துனதால பல்கொட்டி உங்களை வரிசையா இஸ்த்துக்கும்.. போணியை போவ விடுங்க.. எல்லாரும் சொல்றாப்புல நடக்கணும்.. சொல்ற பேச்சு கேட்டிங்கனா வெளில் வந்துறலாம்.. சின்னத்தம்பி.. பயப்படாத.. எல்லாரும் கவனமா கேளுங்க, சரியா?".

பல் கொட்டியிடமிருந்து தப்பிக்கும் விவரம் சொன்னார் தணிகாசலம்.

"முடியாது, அவன் என் தம்பி" என்றேன் ஆறாமல்.

"நாம எல்லாருமே அவனுக்கு அண்ணாடா" என்று சிவாஜிகணேசன் டயலாக் விட்ட ரகு, என் தோளைத் தட்டினான். "ஆனா.. இப்ப பூசாரி சொல்றதைக் கேட்டாகணுமேஏஏ?"

தணிகாசலம் துரிதமாக ஸ்ரீராமைக் கயிற்றினால் சுற்றி மிச்சமிருந்த நீளத்தில்.. "ஒரே ரத்தம் பக்கத்துல நிக்கக் கூடாதுபா" என்று என்னை ஒதுக்கினார்... ரகு, ரமேஷ், நான் என்று வரிசையாக ஒவ்வொருவராகச் சுற்றி எஞ்சியிருந்த நீளத்தை... "இரும்பு இருக்குதாப்பா உங்கூட்டுல.. எங்கே.. அவசரத்துக்கு ஒரு இரும்புத்தடி வக்க மாட்டீங்களா ஐருட்டுங்கள்ள?" எரிச்சல் பட்டார்.. அருகிலிருந்த எங்கள் அம்மாவின் சைக்கிள் பாரில் சுற்றி, இழுத்துப் பிடித்துக் கொண்டார்.

"இழுக்குதுடா" என்று அலறினான் ஸ்ரீராம். அவன் வெளியில் இழுக்கப்படுவது தெரிந்து பதைத்தேன். "ரகு அவனைப் பாத்துக்கடா" என்ற என் கண்கள் கலங்கிவிட்டன.

"மறந்துறாத தம்பி.. சொன்னபடி செய்யு.." நினைவூட்டினார் தணிகாசலம்.. சில நொடிகளில் எங்கள் கண்ணெதிரே புகையில் மறைந்து போனான் ஸ்ரீராம்.

ஸ்ரீராமைத் தொலைத்த அதிர்ச்சியில் நான்.. ரகு நகரத் தொடங்கியதைக் கவனிக்கவில்லை.

8◄ ►10

2016/04/26

பல்கொட்டிப் பேய்

8



7◄

        தவைத் தாளிட முடியாமல் கயிறு தடுத்தது. "கயிறு இருக்குற வரைக்கும் நாம பிழைச்சுக்கலாம் தம்பிங்களா" என்றார் தணிகாசலம். "நல்ல வேளை.. கதவைத் தொறந்து என்னை உள்ளே விட்டீங்க.. இல்லைன்னா இன்னிக்கு உங்க அத்தினி பேர் கதியும் அதோகதி தான்"

"இதை சொல்லத்தான் ஓடி வந்தீங்களா? எங்க கதி அதோகதின்றதுல அப்படி ஒரு சந்தோசமா?" என்றான் ரமேஷ்.

"இல்ல தம்பி.. குடிச்சுட்டு படுத்திருந்தனா? திடீர்னு.. எந்திரிடா வந்திருச்சு.. எந்திரிடா வந்திருச்சுனு ஒரு குரல்.. ஏதோ எம்பொஞ்சாதி அதுக்கு ஒண்ணுக்கு வந்திருச்சு, எந்திரிக்க சொல்லுதுனு நான் கண்டுக்காம படுத்தினுருந்தனா.. தடால்னு எம்மூஞ்சில ஒரு அறை விட்டுச்சு.."

"யாரு, பொஞ்சாதியா?"

"சேசே.. எம்பொஞ்சாதி செருப்பெடுத்து வீசுமே தவிர என் மேலே கை வக்காதுபா.. தங்கம். நான் சொல்றது எங்க பேயாத்தாபா"

அருகிலிருந்த மர நாற்காலிகளை வேகமாக இழுத்துக் கதவின் பின்னே பாரமாக அடுக்கிய ரகுவும் நானும் "தணிகாசலம்.. விஷயத்தைச் சொல்லுங்க" என்றோம்.

"பேயாத்தா என்னை எயுப்பி உங்களைக் காப்பாத்தச் சொல்லிச்சுபா.. அதுக்கு உங்க வீடுனா ரொம்ப இஷ்டம்.. உங்கம்மாவும் தங்கச்சிங்களும் வெள்ளிக்கெயமை மாவெளக்கு போடுவாங்கள்ள? அத்த துன்னது துர்கையம்மன்னு உங்கூட்டுல நெனச்சினுகிறாங்க.. துன்னதெல்லாம் எங்க பேயாத்தாபா! இப்பதான் சொல்லுது.. அதனால உங்களை காப்பாத்த சொல்லி ஐடியா குடுத்து என்னை அனுப்பிச்சு.. ஒரு பேயைப் பத்தி இன்னொரு பேய்க்குத்தானே தெரியும்?"

"கரெக்டு.. பேயின் கால் பேயறியும்னு ஔவையாரே சொல்லியிருக்காங்க" என்றான் ஸ்ரீராம்.

"பேயின் பல் பேயறியுமா? இது பல்கொட்டியாச்சே?" கடித்தான் ரமேஷ்.

"சொம்மா இருங்கப்பா. இதப்பாருங்க.. வெள்ளாட்டா இருந்தா வினையாயிரும். பல்கொட்டி உச்ச நிலைக்கு வர ஒரு மணியாவுமாம்.. அதனால தயாராவுங்க. உச்ச நிலை வந்துச்சுனா அத்தனை பேரையும் தலைகீழா தொங்கவச்சு நடுமண்டைல பல்லால கொத்தி விட்டுருமாம்.. ரத்தம் அத்தினியும் கொட்டி வடிஞ்ச பிறவு.. இதா இப்பப் பாத்தமே.. அது போல காட்டேறிப் பல்லுங்களை அப்படி மொத்தமா துப்பி ஊதி உடம்பு அத்தினியும் கூறு போட்டு கிழிச்சுருமாம்.. பிறவு சாவுற மட்டும் சுத்தி சுத்தி வருமாம்.. செத்த பிறவு எலும்புங்களை பல்லுங்களா மாத்தி வாயுல போட்டுகினு போயிருமாம்"

வவ்வாலாய்த் தொங்கிச் செத்தாலும் சரி, பேய்க்குப் பல்செட்டாவதில்லை என்றுத் தீர்மானித்தோம். "என்ன செய்யணும் பூசாரி?" என்றான் ரகு.

"உங்கள்ள யாரு போணிப் பொணம்?" என்று தணிகாசலம் கேட்டதும் திடுக்கிட்டோம். "என்னங்க இது.. என்ன சாவுக் கடையா வச்சிருக்கோம்? போணிப் பொணம் போட?"

"அதுக்கில்லே தம்பிங்களா.. போணிப் பொணத்தை வச்சுதான் உங்களைக் காப்பாத்த முடியும்.. பேயாத்தா திட்டமா சொல்லியிருக்கு.."

"அப்ப ரமேஷ் தான் போணி" என்றான் ரகு.

"ஏண்டா? எங்கம்மாவுக்கு நான் ரெண்டாவது பையன்.. எங்கப்பாம்மா இரண்டுக்குப் பிறகு வேண்டவே வேண்டாம் கட்சி.. நீ இரேன் போணி? உங்க வீட்டுல உன்னை எதுக்கும் லாயக்கில்லாத அராத்துனு சொல்றதா நீயே சொல்லியிருக்கே?"

"தம்பிங்களா.. உங்கள்ள ஒருத்தர்தான் போணிப் பொணம் ஆவ முடியும். பல்கொட்டி எச்சில் பட்டவங்க நிச்சயமா தொங்கல் கேஸ்.. எச்சல் படாதவங்கதான் போணி.. போணிப் பொணம்ன்றது பல்கொட்டி குடுக்குற காவாட்டம்.. போணியோட எலும்புங்களை பல்கொட்டி எதுவும் செய்யாது.. ஆனா போணி சுறுவா இருந்தா அத்தினி பேரையும் காப்பாத்திறலாம்.. உங்கள்ள யாரு பல்கொட்டி எச்சில்?"

"எச்சிலா? சேசே, நாங்கலாம் பாப்பார பசங்க தணிகாசலம்.. ரொம்ப ஆசாரம்.. உனக்கு தெரியாதா?" என்றான் ரமேஷ்.

7◄ ►9

2016/04/25

பல்கொட்டிப் பேய்

7


6◄

        சாமி அலமாரியிலிருந்த விபூதி குங்குமப் பொட்டலங்களை எடுத்தான் ரகு. அவ்வப்போது யாராவது தந்த அர்ச்சனை பிரசாத பொட்டலங்கள், மகாலக்ஷ்மி விக்ரகம் எதிரே ஒரு குப்பியில் கிடக்கும். நாங்கள் பரீட்சைக்குப் போகும்பொழுது ஸ்பெஷலாக எங்கள் நெற்றியில் ஒரு சின்ன கீற்றாக இட்டு விடுவார் அம்மா. என்னமோ அதனால் மட்டும் கேள்விகள் சுலபமாகி விடும் என்ற நம்பிக்கையில் நாங்களும் "எக்சாமுக்கு இட்டு விடுமா" என்போம்.

பொட்டலங்களைப் பிரித்துக் குப்பியில் கொட்டினான் ரகு. ஒவ்வொரு கதவு ஜன்னலாகப் போய் விபூதிக்குங்குமம் தேய்த்தான். என்னவோ ஜெபித்தான்.

"என்னடா சொல்றே?" என்றேன்.

"காயத்ரி"

எங்களுக்கு ஸ்ரீதேவியைத் தவிர ஒரு காயத்ரியையும் தெரியாது. அதைக்கூட பார்க்க விடாமல் தடை போட்டுவிட்டார்கள் அம்மா. "என்னடா கதை இது? சுஜாதா கிஜாதலாம் படிக்காதனு சொன்னா கேக்குறியா? எப்பப் பாத்தாலும் மாரைத் தொட்டான்னு ஒரு கதை.. கண்றாவி.. இதையெல்லாம் சினிமா வேறே எடுத்து வச்சிருக்கானா? தோலை உரிக்கணும்".

ரகு மட்டுமே எங்கள் வட்டத்தில் பூணல் அணிந்தவன். அந்தப் பந்தாவில் விபூதிக்குங்குமத்துடன் வீடு முழுதும் ஓடி மந்திரம் போல் ஓதிக் கொண்டிருந்தான். "காயத்ரி மந்திரம் சொல்றேண்டா"

"சொன்னா பேய் ஓடிருமா?" என்றான் ஸ்ரீராம்.

"யார் கண்டா? பேய் மட்டும் போலனு வை.. மவனே.. நான் பூணலே போடமாட்டேன்" என்றான் ரமேஷ்.

"சும்மா இருங்கடா.." என்று அவர்களை அடக்கினான் ரகு. "இனிமே பேய் வராது. வந்துச்சுனா பாத்துக்க வேண்டியது தான்" என்று அவன் சொல்லி முடிக்கவும். பின்கதவு படபடவென்று விட்டுவிட்டுத் தட்டியது. சில நிமிடங்களில் வாசல் கதவருகே ணங் ணங் ணங் என்று சத்தம். கருங்கல்லில் ஆணி அறைவது போல. வாசல் கதவு மற்றும் ஜன்னல்களின் விரிசல்கள் வழியாக வெளியே பார்த்தோம். இரண்டரை அடி மனிதர் ஒருவர் எங்கள் வீட்டு வாசல் துளசிமாடத்தைச் சுற்றியிருந்த கோலத்தரையில் ஒரு ஆணி அடித்துக் கொண்டிருந்தார். திடுக்கிட்டோம் என்றால் அது மிகையல்ல.

"டேய்.. இது குள்ளப் பிசாசுடா. பால்கார தாமு சொல்லியிருக்கான் ஞாபகமிருக்கா? நைட்டு ஒரு மணிக்கு பால் கறக்குறாபுல சத்தம் கேட்டுச்சேனு தொழுவத்துக்குப் போனா அங்கே மூணு காலோட குள்ளமா ஒரு உருவம் மாட்டைச் சுத்தி தரையில ஆணி தேச்சிட்டிருந்துச்சாம். ரெண்டே நாள்ல கறவை மாடு செத்துடுச்சுனு சொல்லி நமக்கு ஒரு வாரம் பால்லே எக்ஸ்ட்ரா தண்ணி கலந்து கொண்டு வந்தான் ஞாபகம் இருக்கா?" என்றேன்.

"சே.. இது தணிகாசலம்டா.. சரியா பாரு"

ஆணி அறைந்து அதில் ஒரு கயிற்றின் முனையைக் கட்டி, நிமிர்ந்து மிச்சக் கயிற்றை இழுத்தபடி எங்கள் வாசற்கதவை நோக்கி எழுந்து நடந்து வந்த உருவம் தணிகாசலம் தான். கதவை வேகமாகத் தட்டி "தம்பிங்களா" என்றார்.

நாங்கள் திகைத்தோம். கதவைத் திறக்கப் போன என்னைத் தடுத்தான் ரமேஷ். "டே.. யோசிச்சு பாருடா.. இது தணிகாசலமா இருக்காது. குடிச்சிருந்தான்ல? பாத்தோம்ல? இப்ப எதுக்கு எழுந்து வந்து வீட்டு வாசல்ல ஆணி அடிக்கிறான்? இதுவும் பேய் தாண்டா. எத்தனை படம் பாத்திருக்கோம்? இது கூட தெரியலேனா எப்படி? கதவைத் தொறந்து உள்ளே விட்டேனு வை. பளார்னு ஒரே அறை.. நம்ம பல்லெல்லாம் கொட்டிடும்.. பல்கொட்டிப் பேய்னு சொன்னாரில்லே?"

"எனக்கு ஏற்கனவே முன்பல் விழுந்து அசிங்கமா இருக்கு.. எல்லா பல்லும் கொட்டிப் போச்சுனா ஸ்கூல் போக மாட்டேன்" என்றான் ஸ்ரீராம்.

"இதான் சாக்குனு ஸ்கூலை நிறுத்துறியா.. பேய் உன் ரெண்டு காலை வெட்டி எடுத்தா கூட உருண்டாவது ஸ்கூல் போகச் சொல்வா அம்மா.."

"தம்பிங்களா.. கதவைத் தொறங்கப்பா சீக்கிரம்.. நீங்க அந்தப்புல நிக்குது தெரியுது.. வெட்டியா பேசாம பல்கொட்டி என்னை விழுங்குறதுக்குள்ளாற தொறங்கப்பா.. மந்திரக் கயிறு கொணாந்திருக்கேன்" என்று கையில் கயிற்றுடன் மீண்டும் கதவைத தட்டினார் தணிகாசலம். "தொறங்கப்பா.. பல்கொட்டிக்கு தெரிஞ்சிடுச்சு.. இந்தால வந்துரும்.. தொறங்கப்பா". பரபரத்தார்.

"வேணாம் தொறக்காதே" என்றான் ரமேஷ். "யோசிங்கடா.. கழுத்துல கயிறு கட்டுன கொப்புளம் இருந்துச்சானு கேட்டு இப்ப இந்தாளே கயிறோட வந்திருக்கான்.. சத்தியமா இது பேய் தான்.. சாமி மட்டும்லடா.. பேய் கூட அவதாரம் எடுக்கும்.. தணிகாசல அவதாரம்"

அதற்குள் விஷ் விஷ் என்று புயல் காற்றடிப்பது போல் பெருத்த ஓசை வாசலில் கேட்க, தணிகாசலம் பதறினார். துளசிமாடம் அருகே பல்கொட்டி உயர்ந்து நின்றது அரைகுறையாகத் தெரிந்தது. உரக்கச் சிரித்தது கேட்டது. "என்ன ஆனாலும் ஆகட்டும்டா" என்றபடி ரகு கதவைத் திறக்க, தணிகாசலம் பதறி உள்ளே வந்தார். திறந்த கதவின் வழியே முதன் முறையாக நாங்கள் எல்லாரும் பல்கொட்டியைப் பார்த்தோம்.

துளசி மாடத்தை ஒட்டி நின்றிருந்தது. தலைகீழான தலை. கிட்டத்தட்ட நாலடி அகலத்துக்கு வாய். நிறைய பற்கள். காதருகே அகஸ்மாத்தாக அந்தரத்தில் தொங்கிய கைகள். ஒரு கையில் மட்டும் விரல்களுக்கு பதிலாக இன்னொரு வாய். ப்ளக் ப்ளக் ப்ளக் என்று திறந்து மூடியபடி இருந்தது. உய்ய்ய்ஹஹ் என்று விசித்திரமான ஓசையுடன் சிரித்து, கோபத்துடன் துப்பியது. முகவாயின் அத்தனை பற்களும் கொட்டி துளசிமாடத்தை மூடின. எத்தனை பற்கள்!

மின்னல் வேகத்தில் இரண்டு கைகளையும் எங்களை நோக்கி வீசியது. ஏறக்குறைய ஸ்ரீராமைப் பிடித்துவிட்டது கையிருந்த வாய். அதாவது வாய் இருந்த கை.

"கதவை மூடிரு தம்பி" என்று தணிகாசலம் அரண்டு மிரண்டு ஸ்ரீராமைக் கயிற்றினால் சுற்றிப் பிடித்துக் கொண்டார்.. பின் வாங்கிய பல்கொட்டி ஹூவென்று அலறி இன்னும் உயர்ந்து... உப்ப்ப்ப் என்று ஊத.. அத்தனை துளசிமாடப் பற்களும் எங்களை நோக்கிக் கத்தி போல் பறந்து வரவும் ரகு வாசல் கதவை மூடவும் சரியாக இருந்தது.

6◄ ►8

2016/04/24

பல்கொட்டிப் பேய்

6


5◄

        "அசந்து தூங்கிட்டேண்டா" என்றான் ரகு. "நல்ல வேளை, கூச்சல் போட்டு எழுப்பினே"

"அவன் பேசுறதே கூச்சல் போடுறாப்புல தான்" என்றான் ரமேஷ், அரைகுறையாக விழித்தபடி.. "சுபாவம் அப்படி.. போன வாரம் பம்பாய் பக்கமா திரும்பி நின்னு டிரங்க்கால் போடாமலே அவன் மாமா கிட்டே பேசினான் தெரியுமோ?"

"நீ எழுப்பாட்டா பேய் தூக்கிட்டுப் போயிருக்கும்". ஸ்ரீராமுக்கு பயத்தில் அழுகை வரும் போலிருந்தது. "போலீசைக் கூப்பிடு" என்றான்.

"எப்படிரா கூப்பிடறது? பல்கொட்டி கிட்டே பர்மிஷன் வாங்கி வேணா போய் கூட்டுரவா?"

"அதான் எழுப்பிட்டேல்ல.. மறுபடி எதுக்குடா கூவுறே?" என்றான் ரமேஷ் என்னிடம்.

"இத பாருடா.." என்று என் உள்ளங்கைகளைக் காட்டினேன். அத்தனை பேர் முகத்திலும், பாதி ராத்திரி என்றாலும், ஈயாடவில்லை. என் உள்ளங்கைகளில், விட்டு விட்டு நாற்று நட்டாற்போல், ஆங்காங்கே ஒன்றரை இஞ்ச் நீளத்துக்கு முடி. இழுத்துப் பார்த்தேன். வலித்தது. உடனே மூவரும் தங்களைத் தொட்டும் தடவியும் பார்த்துக் கொண்டனர். ரகுவின் கழுத்திலும், ரமேஷின் பாதங்களிலும் என்னைப் போலவே...

"சத்தியமா இது பேய் முடி தாண்டா" என்றான் ரகு. திடீரென்று "நில்டா" என்றான். "கவனிங்கடா. சத்தம் கேக்குதா?"

பின் கதவு விட்டு விட்டு ஓசையிட்டது. மென்மையான ஓசைதான். எனினும் தெளிவாகக் கேட்டது. யாரோ பந்தை எறிந்து விளையாடுவது போல. கிடுகிடுவென்று சமையலறை ஜன்னலுக்குச் சென்று பார்த்தோம். கிணற்றடி மேட்டிலிருந்து மேலே உருண்டு வந்து கதவில் மோதிக் கொண்டிருந்தது, பந்து சைஸில் நாங்கள் முன்பு பார்த்த தலை. இப்போது தீச்சிவப்பாக இருந்தது. யாரோ தணலை உருட்டி விடுவது போல் வந்து வந்து கதவில் மோதிப் போனது.

நாங்கள் பார்ப்பதை கவனித்து விட்டது போல் கதவருகே வந்ததும் நின்றது. விர்ரென்று எழும்பி எங்கள் முன் ஜன்னல் முழுதும் வியாபித்த அதே மஞ்சள் முகம்! இடுங்கிப் போன கண்கள்.. ஏறக்குறைய முகம் முழுதும் வாய். அத்தனை பெரிய கூரிய பற்களை நாங்கள் பார்த்ததேயில்லை. எல்லையம்மன் கோவில் சாமிக்குக் கூட இத்தனை கோரைப் பற்கள் கொடுத்தார்களா தெரியவில்லை. ஆனால் அந்த ஆராய்ச்சிக்கெல்லாம் நேரமில்லாமல் நடுங்கிக் கொண்டிருந்தோம். "வா" என்றது ஆழமான குரலில். ஜன்னலுக்குள் முகத்தை நுழைக்கப் பார்த்தது.

ரகு டக்கென்று ஜன்னலை இழுத்து மூடினான். சமையலறை ஜன்னல் ஏற்கனவே சரியாக மூடாது சனியன். இப்பொழுது மூட முடியாமல் கொக்கியருகே தட்டி நிறுத்தியதோ பேயின் இரண்டு பற்கள். ரகு ஜன்னல் கதவை இன்னும் அழுத்த, பல் விலகிக் கொண்டது. கொக்கி போட்டாலும் ஜன்னல் கதவின் பல விரிசல்களில் பேய் தெளிவாகத் தெரிந்தது.

"இதுக்கு ஜன்னலைத் தொறந்தே வச்சுடலாம். அட்லீஸ்ட் பயங்கரம் கம்மியா தெரியும்" என்றான் ரமேஷ்.

"டே.. ஓடுங்கடா. எல்லா ஜன்னலையும் சாத்துங்கடா" என்று ஆர்டர் போட்டான் ரகு.

எங்கள் வீட்டில் ஏழு மர ஜன்னல்கள். ராமர் அம்பு துளைத்த கதையாய் ஏழிலும் ஆங்காங்கே ஓட்டைகள். சிலவற்றை அறைந்து மூட வேண்டும். ரொம்ப அறைந்தாலும் உடைந்துவிடும் சாத்தியம். ஜன்னல் கதவுகளை மூட ஓடினோம். "ஸ்ரீராம்.. நீ என் கூடவே இருடா" என்றான் ரகு ஏறக்குறைய அதட்டலில்.

5◄ ►7

2016/04/21

பல்கொட்டிப் பேய்

5


4◄

        "காஞ்சிபுரம் போயிடலாம்" என்று கிளம்பிய ஸ்ரீராமை என்னருகே இழுத்தபடி பூசாரியிடம் கேட்டேன். "டேஞ்சர்னா என்ன மாதிரி சொல்றீங்க?"

"எனக்கு அவ்வளவா தெரியாதுப்பா... எங்க ஆத்தா சொல்லும் .. பல்கொட்டி ரொம்ப அபூர்கமுனு.. அதுகிட்டே கேக்கலாம்"

"உங்களுக்கே ரெண்டு ஆத்தா வயசு இருக்கும் போலிருக்குதே? உங்க ஆத்தா சொன்னாங்களா?" என்றான் ரகு.

"எங்க ஆத்தா இறந்து அம்பது வருசமாச்சு தம்பி"

"என்னாது? அம்பது வருசமாச்சா? அவங்ககிட்டே எப்படி கேப்பீங்க?"

"தம்பி.. எல்லா பேயும் ஒண்ணா நினைச்சுறாதே.. எங்க ஆத்தாவும் பேய் தான். பேயாத்தானு கூப்பிடுவோம்"

"பேயாத்தா.. நல்ல பேரு. யாரு, நீங்க வச்சதா?"

"அடக் கேளு தம்பி.. பேயுன்னாலும் குடும்பத்துல ஒண்ணாச்சே..?"

"குடும்பப் பேய்னு சொல்லுங்க"

"வெளயாட்டில்ல தம்பி. எல்லார் வூட்லயும் நடக்குறது தான்.. உங்க ஐரூட்டுங்கள்ள வருசா வருசம் திதினு செத்தவங்களைக் கூப்பிட்டு கொண்டாடலியா? செத்தவங்க திரும்புனா பேயில்லாம என்னாவாம்? அத்த விடு தம்பி.. எங்க பேயாத்தா இருக்குதுல்ல? அதாண்ட குடும்ப விசயங்களுக்கு அடிக்கடி குறி கேப்போம்.. ஒரு கல்யாணம் கருமாதினா கூப்டா வரும்.. அதான் சொல்லியிருக்குது பல்கொட்டி பேய் பத்தி புள்ளயா இருக்குறப்ப.. பேயுங்க உலாத்துறப்ப எப்பனாச்சும் தான் பல்கொட்டி வருமாம்.. கருநாகப்பாம்பு மாதிரி.. பல்கொட்டியப் பாத்தா உடனே அத்தனை பேயுங்களும்.. காட்டேரி கூட.. சட்டுன்னு ஓரங்கட்டிக்குமாம்.."

"உங்க ஆத்தா பல்கொட்டியா? காட்டேரியா?"

"பேயாத்தா சாதுபா. ஆனா அதுக்கு பேயுங்க பத்தின வெவரம் அத்தினியும் தெரியும்.. அப்பப்ப எம்மேலே வந்து சாமியாடுறாப்புல ஆடும்.. அதுகிட்ட கேட்டு சொல்றேன்.. ராத்திரி ஒம்பது மணிக்கு மேலே வா.. காப்பு கட்டறதுனா கட்டித் தாரேன்.." என்று தணிகாசலம் கருங்கல் பெஞ்சிலிருந்த துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு கிளம்பினார்.

ஒன்பது மணியடித்ததும் எல்லோரும் பூசாரி வீட்டுக்குப் போனோம். துர்கையம்மன் கோவிலை ஒட்டியே அவர் வீடு. சரியாகக் குடித்திருந்தார். "அடப்பாவி.. இவன் சாதாரணமாவே ரீல் விடுவான்.. இப்ப குடிச்சிருக்கான்.. என்ன சொல்லப் போறானோ?" என்று முணுத்தபடி நான் பூசாரியருகே சென்று "தணிகாசலம்.. எங்களை வரச்சொன்னீங்களே.. இப்படி குடிச்சிருந்தா எப்படி ?" என்றேன்.

"தம்பி.. எனக்கு பயம் வந்தா குடிச்சிருவேன். அதான்"

"என்ன சொல்றீங்க?"

"ஆத்தா கிட்டே பேசினேன்.. பல்கொட்டி பிடிச்சா பொஞ்சாதி மாதிரியாம். சாவுற வரைக்கும் விடாதாம்.. அதும் யார் கை கண் பட்டுச்சோ அவங்களை விடவே விடாதாம்.. உங்கள்ள யார் பாத்தாங்க? யாருனா தொட்டாங்களா?"

"எல்லாரும் பார்த்தோம்.. ரகு மட்டுந்தான் தொட்டது "

"விடாதுபா.. உங்களை நினைச்சு எனக்கே பயமாயிருச்சு.. அதான் குடிச்சுட்டேன்" என்றபடி பட்டென்று கீழே படுத்து உடனே தூங்கிவிட்டார்.

"என்னடா செய்யுறது?" என்றான் ரமேஷ்.

"சும்மா இருங்கடா" என்றேன். என்னவோ தெரியவில்லை. தைரியம் பொங்கி வந்தது. "பம்மல்ல இருந்துகிட்டு பேய்க்கு பயந்தா எப்படி?" என்றேன்.

"அதானே?" என்ற ரகு எங்களைத் தள்ளியபடி வீட்டுக்குள் நடந்தான்.

ஹாலில் படுத்தோம். அரட்டையடித்தபடி தூங்கிவிட்டோம்.

பின் கதவு கடகடவென்று தட்டப்படும் ஓசை லேசாகக் கேட்க சட்டென்று விழித்தேன். என் போர்வையைக் காணோம். பக்கத்தில் படுத்திருந்த ரகு இழுத்திருக்க வேண்டும் என்று நான் அவன் மேலிருந்த போர்வையை இழுத்தேன். அத்தனை மென்மையான போர்வை எங்கள் வீட்டிலே கிடையாதே என்று தோன்ற, எழுந்து விளக்கைப் போட்டேன்.

ரகு, ஸ்ரீராம், ரமேஷ்.. வரிசையாகப் படுத்திருந்த யார் மீதும் போர்வையைக் காணோம். மாறாக போர்வை போல் அடர்ந்து படர்ந்திருந்த கருகருவென்று முடி.. தொடர்ந்து பின் கதவு வரை போனது. இவர்களோ அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

அப்போதுதான் கவனித்தேன். போர்வை போல் படர்ந்திருந்த முடி இவர்களை மெள்ள மெள்ள கதவை நோக்கி இழுக்கத் தொடங்கியதை.

"எழுந்திருங்கடா டேய்!" என்று கூச்சல் போட்டேன். ரகு எழுந்து உடனே நடப்பதைக் கவனித்து விட்டான். சடாரென்று ஸ்ரீராமையும் ரமேஷையும் முடிப் போர்வையிலிருந்து வெளியே இழுத்துப் போட்டான்.

புசுக்கென்று அத்தனை முடியும் பின் கதவு வழியாக மறைந்தது.

4◄ ►6

2016/04/20

பல்கொட்டிப் பேய்

4


3◄

        விபரீத அனுபவங்கள் ரகுவுக்கு ஒன்றும் புதிதல்ல என்றாலும் அவன் உறைந்து போனான் என்பது தெரிந்தது. பம்மல் வாசிகளான எனக்கும் ரமேஷுக்கும் பேய் சமாசாரம் பெரிய விஷயமில்லை என்றாலும்.. ஒரு பேய் தலையை இத்தனை அருகில் பார்ப்பது இதுவே முதல் தடவை.

முதலில் தயங்கிய ரகு மெள்ள முன்னேறி, தலையை ஒரு குச்சியால் தொடப்போக.. அது விர்ரென்று எழுந்து வேகமாக கிணற்றுச் சுவற்றில் மோதித் தெறித்து எங்கள் பின்கட்டுக் கதவில் மோதி சட்டென்று எங்கள் முன் வந்து புவ்வென்று விரிந்தது.. டெனிஸ் பந்து தரையில் விழ, எங்கள் முகத்தருகே ஒரு உருவம்.. அத்தனை பற்களும் ஆடச் சிரித்தது. "வரேண்டா!" என்று கூவி சண்முகா கொட்டகை பக்கம் காணாமல் போனது.

எத்தனை நேரம் வெலவெலத்திருந்தோம் என்பது நினைவில்லை. "தணிகாசலம் இருக்கார்டா.. அவர்கிட்டே சொல்லலாம்" என்றான் ரமேஷ்.

அதற்குள் ஸ்ரீராமைக் காணாமல் அரண்டோம். முப்பதடி தொலைவில் பம்மல் மெயின் ரோடில் நின்று கொண்டிருந்தான். "இங்க வாடா" என்று கூவினேன். அவன் அங்கிருந்தே, "காஞ்சிபுரத்துக்கு எந்தப் பக்கமா போவணும்? நடந்தாவது அங்க போவேனே தவிர சத்தியமா இங்க இருக்க மாட்டேன்" என்றான். ஒரு வழியாக அவனை அடக்கி எங்களுடன் அழைத்து வந்தோம். "பயப்படாத.. நாங்க இருக்கோம்ல?".

எங்கள் வீட்டு வாசலில் இருக்கும் துர்கையம்மன் கோவிலைப் பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன். கோவில் எதிரே இருக்கும் ஒற்றைப் பனைமரத்தடியில் இருந்த கருங்கல் பெஞ்சில் படுத்துக் கொண்டிருந்த பூசாரி தணிகாசலத்தை எழுப்பி விவரம் சொன்னோம்.

"கால் தெரிஞ்சுச்சா? கொலுசு சத்தம் கேட்டுச்சா? சிரிச்சப்ப எக்காளமா இருந்துச்சா? இல்லே சத்தமில்லாம தும்முறாப்புல இருந்துச்சா? பல்லுலந்து ரத்தம் வந்துச்சா? கண்ணுலந்து முடி வந்துச்சா? தலைல கருமுடியா நரையா? உச்சந்தலைல ஆணி அடிச்சிருந்துச்சா? காது அறுந்திருந்துச்சா? கண்ணு ரெண்டும் சுத்துச்சா? கழுத்துல கயிறு கட்டுன கொப்புளம் தெரிஞ்சுச்சா?...." என்று கேள்விகளை அடுக்கினார் தணிகாசலம்.

"இந்தாளு இப்படி க்விஸ் வைப்பாருன்னு தெரியாம போச்சே?" என்று முணுத்தான் ரமேஷ்.

"எதுவும் கவனிக்கலியா தம்பி?" என்று என்னை நெருங்கினார் பூசாரி. "இத பாருப்பா. பேயுங்க பல வகை. இன்ன வகைனு தெரிஞ்சா... அதுக்கு ஏத்தாப்புல குறியடிச்சு ஓட்டலாம்.. பலி போட்டு ஓட்டலாம்.. வேப்பெல அடிக்கலாம்.. ஆணி அடிச்சு முடி கட்டலாம்.. பச்சைக்கோழி ரத்தம் குடிச்சு மோளம் கொட்டலாம்.. எதுவுமில்லேனு வை.. ஓடி ஒளியலாம்" என்றார். "என்ன பேய்னு தெரியாம இப்போ என்ன செய்ய?"

"தணிகாசலம்.. ஒரு குச்சியால ரகு தலையை நோண்டுனப்ப.. அது பிகுன்னு எங்க முன்ன விரிஞ்சு வந்துச்சு.. வரேண்டானு கூவிச் சிரிச்சு காணாம போயிருச்சு.." என்றேன்.

"சிரிச்சப்போ பல்லு மொத்தமும் ஆடிச்சு" சேர்ந்து கொண்டான் ரகு.

கொஞ்சம் யோசித்த பூசாரி, "தம்பி.. இது ரொம்ப டேஞ்சருபா.. பல்கொட்டியா இருக்கும் போலிருக்குதே? ரொம்ப ரொம்ப டேஞ்சரான பேய்பா" என்றார்.

3◄ ►5

2016/04/19

பல்கொட்டிப் பேய்

3



2◄

        காஞ்சிபுரம் சங்கர மடத்தில் என்னவோ ஹோமம் நடத்தி இலவசமாக புண்ணியதானம் செய்கிறார்கள் என்று எங்கள் வீட்டிலும் வெங்கடராமன் என்கிற ரமேஷ் வீட்டிலும் குடும்பத்துடன் கிளம்பிவிட்டார்கள். வீட்டில் நாங்கள் மட்டுமே. துணைக்கு எங்களுக்காக அம்மா விட்டுச் சென்ற மூன்று அடுக்குகள் நிறைய தோசை, தயிர்சாதம், வீட்டு வாழைக்காய் வறுவல். ரமேஷ் வீட்டிலிருந்து வந்த ஒரு ஜாடி காரமாவடு.

பாதிச் சாப்பாட்டை காலி செய்த களைப்பில் மதியம் ஒரு மணி போல் பகல்தூக்கம் கலைந்து கிரிகெட் விளையாடத் தீர்மானித்தோம். டெனிஸ் பந்து கிரிகெட். எங்கள் வீட்டுச் சுவற்றில் செங்கலால் மூன்று செங்குத்துக் கோடுகள் கீறி இலவச விக்கெட் கீப்பருடன் ஆளுக்கொரு டீம் எடுத்துக்கொண்டு பதினோரு பேர் ஆட்டம். கிணற்றடியிலிருந்து மிதமாக இறங்கிச் சரியும் மேடு தான் பிட்ச். எதிரே சுமார் நூறடி தொலைவில் இருந்த சண்முகா கீற்றுக்கொட்டகை பவுண்டரி. சுற்றிவர இருந்த நிறைய புதர்களில் திக்குக்கொன்றாய் பவுண்டரி எல்லை தீர்மானித்து விளையாடத் தொடங்கினோம்.

நானும் ரமேஷும் ஒரு கட்சி. ஸ்ரீராமும் ரகுவும் ஒரு கட்சி. நாங்கள் வெஸ்ட் இண்டீஸ். ரகு எப்போதும் இந்தியா டீம் எடுத்துக்கொண்டு விடுவான். வழக்கம் போல் ஒபனிங் ஓவர் கர்சன் காவ்ரி, அடுத்த ஓவர் பிஷன் சிங் பேடி என்று பந்தை உயரச் சுழற்றி வீச வந்துவிட்டான்.

அன்றைக்கு ராய் ப்ரெட்ரிக்கில் தொடங்கி கிடுகிடுவென்று நானும் ரமேஷும் விக்கெட் இழந்து கொண்டிருந்தோம். இருபது ரன் கூட தேறவில்லை, ஏழு விக்கெட்டோ என்னவோ காலி. ரகுவும் ஸ்ரீராமும் வெறித்தனமாக குதித்துக் கொண்டிருந்தார்கள். நான் டெரிக் மரேயாக ஆடிக்கொண்டிருந்தேன். ஸ்ரீராம் வீசிய ஒரு பந்தை மிடான் பக்கமாக அடிக்க, அது ஏதோ ஒரு புதரில் சிக்கிக் கொண்டது. எல்லோரும் பந்தைத் தேடிப் போனோம். ரமேஷ் கண்ணில் பந்து பட, "இதோ இருக்குடா" என்றபடி பந்தை எடுத்து ரகுவிடம் வீசி எறிந்தான்.

ரமேஷ் வீசிய மஞ்சள் டெனிஸ் பந்தைக் கண்ணால் பார்த்தோம். இருந்தாலும் அதை ரகு பிடித்த போது அவன் கையில் விழுந்தது பந்தல்ல. ஒரு குட்டித் தலை. மூக்கு கண் காது எல்லாம் வைத்து பெரிய சாத்துக்குடி சைஸில் தலை. முகமெல்லாம் மஞ்சள் பூசிய, ரத்தக்காயம் எதுவும் இல்லாத தலை. வாய் பிளந்து பல் காட்டிய தலை.

பதறித் தூக்கி எறிந்தான் ரகு. கிணற்றடி அருகே எங்கள் வீட்டுப் பின்வாசலுக்கு நேர் எதிராக விழுந்து உருண்டு தலைகீழாக நின்ற தலையைப் பார்த்துத் திடுக்கிட்டோம். கிணற்றடித் தரைமேல் படிந்திருந்த ஈரத்தில் அரைகுறையாகத் தெரிந்த தலையின் நேர் பிம்பம் இன்னும் திகிலூட்டியது.

2◄ ►4

2016/04/18

பல்கொட்டிப் பேய்

2


1◄

        ழாம் வகுப்பு படிக்கையில் ஒரு நாள் தமிழாசிரியர் என்னிடம் 'எனில் அது மிகையல்ல' என்று ஒரு தொடரைக் கொடுத்து வாக்கியத்தில் அமைக்கச் சொன்னதும், ஐந்து நிமிடம் போல் விழித்த என்னிடம் 'ஏண்டா பேயாட்டம் முழிக்கிறே?' என்றதும் நினைவுக்கு வந்தது.

பல்கொட்டிப் பேயின் முழி கிடக்கட்டும். 'பல ஆண்டுகளுக்குப் பிறகு பல்கொட்டிப் பேயைப் பார்த்து என் உடல் சிலிர்த்து உயிரும் ஒரு கணம் உறைந்து போனது எனில் அது மிகையல்ல' என்ற அருமையான பத்துக்கு பத்து மார்க் வாக்கியம் சடுதியில் நினைவுக்கு வந்தது என்று சொல்ல வந்தேன்.

பேய்த் தலையை மறுபடி பார்த்தேன்.

ரகு கேட்டுக்கொண்டபடி சரியாக வந்து விட்டதே?! முப்பது வருடங்களில் அப்படியே இருக்கிறதே பேய்! அந்த இளமையின் ரகசியம் என்ன என்று கேட்கத் தோன்றியது. அடுத்த சில நிமிடங்களில் பல்கொட்டிப் பேய் என்ன செய்யும் என்பதும் உடனே அனுபவத்திலிருந்து நினைவுக்கு வந்தது. பயத்தில் ஒன்றுக்கும் வரவில்லை. அப்பொழுது தான் பாத்ரூம் போய் வந்த காரணமாக இருக்கலாம் என்று தோன்றியது. படுபாவி ரகுவை இப்போ எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்பேனோ?

ரகுவைப் பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன். பல்கொட்டியைப் பற்றிச் சொல்லியிருக்கிறேனா தெரியவில்லை. சொல்கிறேன்.

என் பெரியம்மா பையன் ரகு, எதிர் வீட்டு நண்பன் வெங்கடராமன் என்கிற ரமேஷ், நான், அப்புறம் என் தம்பி ஸ்ரீராம்.. நால்வரும் ஒரு சமயம் தனியாக எங்கள் பம்மல் வீட்டில் தங்க வேண்டியிருந்தது.

அன்றுதான் பல்கொட்டிப் பேயுடன் எங்கள் முதலிரவு.

1◄ ►3

2016/04/17

பல்கொட்டிப் பேய்






        திகாலை இரண்டரை இருக்கும்.

எதிர்பாராமல் விழித்த கடுப்புடன் ஒன்றுக்கிருந்துவிட்டு அவசரமாகக் கை கழுவி ஹோட்டல் பாத்ரூம் கதவை அறைந்து சார்த்தி விளக்கணைத்து, படுக்கையில் மீண்டும் விழத் தயாரான போது கவனித்தேன். அறைமூலையில்.. இஸ்திரிப் பலகை மேல்.. இஸ்திரிப் பெட்டியின் மிதமான ரேடியம் ஒளியில் தெளிவாகத் தெரிந்தது... அதானா?

தரை வரை பரந்து கிடந்த முடிக்கற்றை. நுனியில் வாய் பிளந்தபடி தலைகீழாகத் தலை. தலையருகே அந்தரத்தில் போல் தொங்கிய இரண்டு கைகள். ஒரு கையில் மட்டும் விரல்களுக்குப் பதிலாக..

சந்தேகமேயில்லை.. இது.. இது.. பல்கொட்டிப் பேயே தான்.

அடக் கஷ்டமே! அதற்குள் முப்பது வருடங்களாகிவிட்டதா? இந்த நேரத்தில் ரகு, ஸ்ரீராம், வெங்கடராமன் என்கிற ரமேஷ்,... எல்லாரும் எங்கிருக்கிறார்கள் என்பது கூடத் தெரியாதே?

தனியாக வேறே சிக்கிக் கொண்டேனே?

►2