2009/12/15

தடங்களுக்கு வருந்தவில்லை

போக்கற்ற சிந்தனை


என் உயிர் என்று சொல்லும் வகையில் பழகிய தோழி, புதன்கிழமை இறக்கப் போகிறாள். சென்ற வருடக் காலக் கணக்கில்.

இத்தகைய காலக்கணக்கு செயற்கையாகவும் முட்டாள்தனமாகவும் தோன்றினாலும், அவள் இறந்த தினம் வருகிறது என்பதை நினைக்கையில் இது போல் சென்ற வருடம் தோன்றியிருந்தால் ஏதாவது செய்திருக்க முடியுமா என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. பொன் போனது; புதன் இருக்கிறது. சரியாகத் தான் சொன்னார்கள்.

அவளுடைய பிறந்த தினங்கள் சிலவற்றை அவளுடன் கொண்டாடி இருக்கிறேன். அவளுடைய இறந்த தினங்கள் சிலவற்றை எஞ்சியிருக்கும் நண்பர்களுடன் கொண்டாட நினைக்கிறேன்.

சாவி. பாதை வகுத்துக் கொண்டே பயணம் செய்த விசித்திரமான பெண். இடையே தொலைந்து போனாலும் கலைந்து போகாத நட்பு எங்களுடையது. இத்தகைய நட்புகளில் தான் என் வாழ்வின் நிறைவை உணர்கிறேன்.

சாவியின் நினைவில் ஏதாவது எழுத வேண்டும் என்று தோன்றியது. பிறகு அவள் எழுதியதைப் பொதுவாகப் பகிர்வதே ஒரு வித அஞ்சலி என்று பட்டது. சாவியின் நினைவில் இரண்டு கவிதைகளைக் கொடுத்திருக்கிறேன்.

முதல் கவிதை, சாவி எழுதியது. தள்ளாத முதுமையில் ஓய்ந்து கிடந்த தன் பெற்றோருக்குத் திருமண தினப்பரிசாக சாவி எழுதி வழங்கிய கவிதை. கலைமுகில் பதிப்பகம் வெளியிட்ட 'கண்ணைப் பார் சிரி' என்ற சாவியின் கவிதைத் தொகுப்பிலும், அரசன் ஆதரவில் வெளிவந்த பூத்தூரிகை வலைப்பூவிலும் வெளிவந்தது.

அடுத்த கவிதை - அரைவேக்காடு முயற்சி - சாவியின் நினைவில் பூத்தூரிகை வலைப்பூவில் நான் எழுதியது. அடுத்த வாரம் அவளை மறந்து விட்டால்? நினைவிருக்கும் போதே நினைத்து விடுகிறேன்.


கண்ணைப் பார், சிரி

கரைபுரண்ட காவிரி,
  இன்று
வறண்டுபோன ஓடை.

ஒளிதந்த விளக்கு,
  இன்று
சுடரிழந்த திரி.

மலர் தந்த வனம்,
  இன்று
கருகான பூங்கா.

வழி காட்டிய மண்,
  இன்று
புதரான பாதை.

பாடல் சொன்ன குயில்,
  இன்று
பேச்சில்லாத சிலை.

ஆட்டுவித்த சிம்மம்,
  இன்று
அசையாத பொம்மை.

உடல் தந்து உயிர் தந்து
    உணவோடு உணர்வீந்து
      கடல் வற்றும் கனிவோடு
        எனை வளர்த்த அம்மா,
        இன்று நீ
      காய்ந்து போன கனி.
    ஆனால் என்றும்
தேய்ந்து போகாத நிலவு.

கடவுளுக்குப் பொருள் சொன்ன
    என்னருமை அப்பா,
      இன்று நீ
      ஆட்சி இல்லா அரசன்.
    ஆனால் என்றும்
மாட்சி குறையா மகான்.

வந்த வழி மறந்துவிட்டு
  போகும் வழி தெரியாமல்
    பரிதவிக்கும் பயணிகள்.
    ஆனாலும் நீங்கள்
  போகும் இடம்
எனக்குத் தெரியும்.

புறப்படும் நேரம்
  புலப்படும் வரை
துணை இருப்பேன்.

வாழ்க்கைப்
  பயண வலி
    வாட்டும் போது,
  மெள்ளக் கால் பிடிப்பேன் அம்மா,
நல்லக் கவி படிப்பேன் அப்பா.

முதுமைத் துயரம்
  மறந்து போக
    உன் இளமைப் பிம்பம்
    என்னைப் பார்.
  வருத்தம் தீர,
என் கண்ணைப் பார், சிரி.


தொலையட்டும்

வானத்துக் காவிரி
கடலில் விழும்,
கூவத்திலும்.
  விடு,
  உன் கூவம்
  இனிக் கடல்.

காட்டுத் தீ வடிந்தால்
கரி உண்டு,
பொன்னும்.
  விடு,
  உன் கரி
  இனிப் பொன்.

சுவாசக் காற்றிலே
மணம் உண்டு,
கிருமியும்.
  விடு,
  உன் கிருமி
  இனிப் பூமணம்.

அழுதபின் சிரிக்க
பின் அழ, இருத்தும்
வாழ்க்கை வட்டம்.
  விடு,
  உன் வட்டம்
  இனி வெளி.

ஏனோ
காலப் புத்தகத்தின்
கடைசிப் பக்கத்தைப்
புரட்டி விட்டாய்.
முடிவறியும் அவசரமா?
  விடு,
  நீ படித்ததால்
  காலப் புத்தகத்துக்கு
  கௌரவம்.

2009/12/02

நினைத்தாலே நடுங்கும்


ஞாயிற்றுக்கிழமைக் காலை. வழக்கமான சோம்பலுடன் மனைவி குழந்தைகளுக்கான அன்றைய காலை dose கொஞ்சலோ திட்டோ கொடுத்துவிட்டு, கணினி எதிரே அமர்ந்து இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கிறீர்கள். சில நொடிகளில் வாசல் கதவை யாரோ தட்ட, குழந்தைகளை ஏவித் திறக்க வைக்கிறீர்கள். FBI மற்றும் உள்ளூர் காவல்துறையினர் துப்பாக்கியைச் சுட்டியபடி உள்ளே நுழைகிறார்கள். சிறுவர் தொடர்பான ஆபாசப் புகைப்படம் மற்றும் திரைப்படங்களைச் சேகரித்ததாகவும் இணையத்தில் பரப்பியதாகவும் குற்றம் சாட்டி உங்களைக் கைது செய்கிறார்கள். பிள்ளைகளும் மனைவியும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க, நீங்கள் [அதிர்ச்சி * 2]வுடன் அதிகாரிகளைப் பார்க்கிறீர்கள்.

உங்கள் எதிரிலேயே உங்கள் கணினியிலிருந்து மெகாபைட் மெகாபைட்டாக பலான ஆபாசப் படங்களையும் விடியோக்களையும் எடுத்துக் காட்டுகிறார்கள் அதிகாரிகள். எது எங்கே எப்படி வந்தது என்று தெரியாமல் விழிக்கிறீர்கள். அதிர்ச்சியில், எப்போதோ யூட்யூபில் நமிதாவோ குமிதாவோ "ஈரமான காட்சி"யை ஒரு கணம் சலனப்பட்டுப் பார்த்து ஏமாந்தது நினைவுக்கு வருகிறது. 'அதற்காக இப்படியா?' என்று நினைக்கிறீர்கள். 'மனைவியா மக்களா யார் செய்த வேலை?' என்று பதறுகிறது மனம். எதோ சொல்ல வாயெடுக்கிறீர்கள்.

அதற்குள், "என் புருசன் உத்தமன். கந்தசஷ்டிக் கவசம் தவிர எதுவும் படிக்க மாட்டார். பக்திப்படங்கள், மலேசியா சுப்ரமணியஸ்வாமி கோவில், உள்ளூர் சாய்பாபா கோவில் பற்றி அப்பப்போ இணையத்துல படிப்பார். அதைத் தவிர இந்த குமுதம்... தினமலர்.. தமிழ் ஓவியா.. எங்கள் பிளாக்... இமெயில் அவ்வளவு தான் படிப்பார். எப்பவாவது ஒண்ணு ரெண்டு திருட்டு சன் டிவி, இங்லிஷ் தமிழ் சினிமா படங்கள் பார்ப்போம். குடும்பப் படங்கள் தான். அதுலயும் கூட இங்லிஷ்காரி டிரசை அவுத்தா உடனே டக்குனு கண்ணை மூடிப்போம். இது என்ன விபரீதமா போச்சே? யாரோ சதி பண்ணியிருக்காங்க" என்று உங்கள் மனைவி உங்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார்.

"சூ, கம்னிருமா" என்ற அதிகாரி, உங்களுக்கு மிரான்டா உரிமைகளை அறிவித்துவிட்டு விலங்கு மாட்டி வெளியே அழைத்துச் சென்று, காவல் வண்டியில் ஏறச் சொல்கிறார்.

"அவரை ஒண்ணும் செய்யாதீங்க. என் புருசன் அரிச்சந்திரன், காந்தி.... அவங்க யாருனு உங்களுக்குத் தெரியாதோ? என்ன கண்றாவி, உள்ளூர் ஆளுங்க எதுவும் நினைவுக்கு வரலையே? யேசுன்னு சொன்னா அடிக்க வருவானோ? அமெரிக்காலே யோக்யனா ஒரு பய நினைவுக்கு வரமாட்றானே.. ம்ம்ம்... ஆம்பிளை மதர் தெரசா மாதிரி... இல்லே, மேன்டேலா மாதிரி... அய்யயோ...அவரை விட்டுறுங்க" என்று புலம்பிக் கொண்டு உங்கள் மனைவி பின்னாலேயே ஓடி வருகிறார்.

கணினியையும் கைக்குக் கிடைத்த ஒன்றிரண்டு டிவிடிக்களையும் எடுத்துக் கொண்டு தொடர்ந்த மற்ற அதிகாரிகள், உங்கள் மனைவி பிள்ளைகளை தடுத்து வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு, வண்டியில் ஏறுகிறார்கள். என்ன ஆகப்போகிறதோ என்று தெரியாமல் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் திகிலுடன் திகைக்கிறீர்கள்.

உங்கள் நிலையை நினைத்துப் பார்க்க முடிகிறதா?

நண்பர் மைகெலுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் அப்படித்தான் ஒரு ஞாயிற்றுக்கிழமை படு சாதாரணமாக விடிந்து பெருஞ்சிக்கலில் முடிந்தது.

ஆபாசப் போக்குவரத்தே பெருங்குற்றம். அதிலும் சிறுவர் தொடர்பான ஆபாசமென்றால் மாபெருங்குற்றம். தான் நிரபராதியென்று நம்பியதால் மைகெல் வக்கீல் உதவியுடன் அரசாங்கத்தை எதிர்த்துப் போராட முடிவு செய்தார். குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடங்கியதும் மைகெலை வீட்டுக் காவல் என்ற ஜாமீனில் விட்டார்கள். வழக்கு முடியும் வரை எப்பொழுதும் அவருடன் ஒரு காவல்காரர் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை.

மைகெலுக்கு அடுத்த வாரமே வேலை பறிபோனது. எல்லாவற்றுக்கும் மேலாகக் குடும்ப, சுற்றுவட்டார அவமானம். பள்ளிக்கூடத்தில் விவரம் தெரிந்து, இரண்டு பிள்ளைகளும் அவமானம் தாங்க முடியாமல் பள்ளிக்குப் போவதையே நிறுத்தி விட்டார்கள். சுற்றுவட்டக் குடும்பங்கள் பொதுவாகவே விலகியிருந்தாலும் இப்பொழுது இன்னும் மோசமாகி விட்டது. மைகெல் வீட்டில் அடிக்கடி கல்லெறி நடக்கத் தொடங்கியது. "வெளியேறு" என்று சீட்டு ஒட்டத் தொடங்கினார்கள். தொலைபேசியில் மிரட்டல்கள் வரத் தொடங்கின. விவாகரத்து கோரிய மனைவியிடம் வழக்கு முடியும் வரை தன்னை நம்புமாறும் உதவி செய்யுமாறும் கெஞ்சி, உறவுத்தவணை வாங்கினார். பிள்ளைகளின் நலனைக் கருதி மைகெலின் மனைவி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு வழக்கு முடிந்ததும் பார்க்கலாம் என்று அவருடைய தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். ஒன்றிரண்டு நண்பர்கள் தவிர மற்ற எவருமே ஆறுதலுக்குக் கூடப் பேச்சு வார்த்தை வேண்டாமென்று ஒதுங்கி விட்டனர்.

வக்கீலோ தன்னால் இதற்கு மேல் ஒன்றும் இயலாது என்றும், குற்றத்தை ஒப்புக்கொண்டு குறைந்தபட்ச சிறைத்தண்டனையைப் பெறுமாறும், வற்புறுத்தத் தொடங்கினார். மைகெல் தன் பக்கம் உண்மை இருப்பதாக நம்பியதால் வேறு வக்கீலை வைத்துப் போராட முடிவு செய்தார். புது வக்கீல் இதற்குச் செலவு அதிகமாகும் என்றும் வழக்கு முடிய இரண்டு மூன்று வருடங்கள் ஆகக்கூடுமென்றும், ஒரு லட்சம் டாலர் முன்பணமாகத் தரவேண்டும் என்றும் நிபந்தனை போட்டார்.

உடைந்து போனாலும், மைகெல் செலவைச் சமாளிக்க வீட்டை அடகு வைத்தார். மெர்சடீஸ் காரை அடிமாட்டு விலைக்கு விற்றார். தன்னுடைய வங்கி மற்றும் 401கே சேமிப்புகளை எடுத்தார். ஒரு பெரும்பகுதியை மனைவிக்கு அனுப்பினார். மிச்சப் பணத்திலிருந்து நூறாயிரம் டாலரை வக்கீலிடம் கொடுத்தார். தன்னம்பிக்கையை இழக்காமல் வழக்குத் தொடர்ந்தார்.

அரசுத் தரப்பிலிருந்து சாட்சி மேல் சாட்சியாகக் கொண்டு வந்தார்கள். மைகெல் வீட்டு இணைய இணைப்பிலிருந்து மற்ற அண்மை வீட்டு இணைப்புகளை விட நாற்பது மடங்கு அதிகமாகத் தரவுப்பறிமாற்றம், தொடர்ச்சியாகப் பல நாட்கள் நிகழ்ந்ததற்கான ஒரு வருடத் தொலைபேசி விவரங்களை ஆதாரமாகக் காட்டியதும், வழக்கு ஏறக்குறைய முடிந்து விட்டது. மைகெலுக்கு ஐந்தாண்டுக் கடுங்காவலும் பெரும் அபராதமும் தண்டனையாக விதிக்கப் பட்டது.

சிறையிலடைபட்ட மைகெல் விடவில்லை. தீர்ப்பை எதிர்த்து முறையிடலாமென்ற வக்கீலிடம் எப்படியாவது பணம் புரட்டித் தருவதாகச் சொல்லி அப்பீல் செய்யச் சொன்னார். வீட்டை விற்றார். தன்னுடைய ரோலக்ஸ் கடிகாரங்களிலிருந்து சட்டி பானை வரை எல்லாவற்றையும் விற்றார்.

ஐந்து வருடங்களுக்கான க்ரெடிட் கார்ட் விவரங்கள், மற்ற செலவு விவரங்கள், தொலைபேசி நிறுவனத்திலிருந்து அவர் வீட்டு இணைய இணைப்பு உபயோக விவரங்கள், இன்னும் பல விவரங்கள் தேவையென்றும் அவற்றைப் பெற மைகெலின் அனுமதி வேண்டும் என்றும், அவ்வப்போது வக்கீல் வருவாரே தவிர மைகெல் நிலையில் முன்னேற்றம் எதுவும் இல்லை. அப்பீல் செய்து மூன்று மாதங்களுக்குப் பிறகு தொடங்க வேண்டிய வழக்கு, இப்பொழுது ஏழு மாதங்களுக்குப் பிறகு தொடருமென்று அறிவிக்கப்பட்டது. அடுத்த நான்கு மாதங்களுக்கு வக்கீலிடமிருந்து தகவலே இல்லை.

அப்பீல் வழக்கு தொடங்கிய முதல் நாளிரவு மைகெல் இருந்த சிறைக்கு வந்தார் வக்கீல். மறுநாள் அவருக்கு நிச்சயம் விடுதலை கிடைக்கும் என்றார். விவரம் எதுவும் சொல்லவில்லை.

மறுநாள் நீதிமன்றத்தில் மைகெலின் ஐந்து வருடத் தொலைபேசி மற்றும் இணைய உபயோக விவரங்களையும் மற்ற க்ரெடிட் கார்ட் விவரங்களையும் சுட்டிக் காட்டினார் வக்கீல். "அண்மை வீட்டுக்காரர்களை விட அதிகத் தரவுப்பறிமாற்றம் செய்ததாகச் சொல்லப்படும் நாட்களில், பத்து நாட்கள் மைகெலும் அவர் குடும்பமும் வீட்டிலோ ஊரிலோ இல்லை. அதற்கு ஆதாரமாக இந்தக் க்ரெடிட் கார்ட் விவரங்களைப் பாருங்கள்" என்று நாள் பட்டியலிட்டு விவரங்களை எடுத்துக் காட்டினார். அவர் எடுத்துக் காட்டிய நாட்களிலும் நேரங்களிலும் மைகெலும் அவர் குடும்பமும் வெளியே சாப்பிடவோ, சினிமா போகவோ, டிஸ்னிலேன்ட், கொலராடோ என்று சுற்றுலா செல்லவோ உபயோகித்த க்ரெடிட் கார்ட் விவரங்களைக் காட்டினார். ஒரு முறை மைகெல் தொழில் தொடர்பாக இங்கிலாந்து சென்றிருந்ததையும் சுட்டிக் காட்டினார். அதே நேரங்களில் மைகெல் வீட்டு இணைய இணைப்பில் அசாதாரண தரவுப்பறிமாற்றம் நடந்ததையும் சுட்டிக்காட்டி, "ஊரிலோ வீட்டிலோ இல்லாதவர் எப்படி இந்த இணைப்பை உபயோகித்திருக்க முடியும்? இப்படிப்பட்ட விவரங்களின் பின்னணியிலும், மைகெல் கணினியின் அருகே இருந்திருக்கவே முடியாத நிலைமையின் அடிப்படையிலும், அவரை விடுதலை செய்ய வேண்டும்" என்று வாதாடினார்.

"அப்படியென்றால் அவருடைய கணினியைப் பயன்படுத்தியது யார்?" என்றார் அரசுத் தரப்பு வக்கீல். "அதானே?" என்றார் FBIக் காரர். "அதானே, நானும் கேட்கிறேன்?" என்றார் உள்ளூர்க் காவலர்.

"அதைக் கண்டுபிடிக்க வேண்டியது உங்கள் வேலை. நிரபராதிக்குத் தண்டனை வழங்க நேர்ந்ததற்கு வருந்துகிறேன்" என்றபடி வழக்கை ரத்து செய்து மைகெலை விடுதலை செய்தார் நீதிபதி.

மைகெலுக்கு பெரும் மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைத்தாலும், பழைய வேலையும் உறவுகளும் திரும்பக் கிடைக்கவில்லை. அரசை எதிர்த்து வழக்கு போட்டு பணம் பெற வேண்டும் என்றார். வக்கீலோ "அது சுலபத்தில் நடக்காத காரியம். விடுதலை கிடைத்த வரைக்கும் லாபம் என்று ஊர் போய்ச் சேர். புது வாழ்வு தொடங்கு" என்று மிச்சப்பணத்தை மைகெலிடம் கொடுத்து விட்டு விலகினார்.

மைகெல் நிரபராதியாக வெளியே வந்து மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. சென்றவார விடுமுறை நாட்களில் அவருடன் ஒரு மாலைப் பொழுதைக் கழித்தேன். நூறு பவுண்டுகளாவது எடை குறைந்திருப்பார் போல் பட்டது. முகமெங்கும் தேமல். கண்களை அடிக்கடிச் சுருக்கிக் கொண்டு பேசினார். மனைவி மக்கள் திரும்பி வந்துவிட்டாலும் உறவு முறையில் விரிசல் இருப்பதைப் பற்றிப் பேசினார். வாடகை வீட்டில் இருப்பதாகச் சொன்னார். குற்ற நிழலில் இருக்கும் அவருக்கு இப்போதைக்கு வேலை கிடைப்பது அரிதென்பதால் வீட்டு நிலமை மோசமாகியிருப்பதைப் பற்றிப் பேசினார். விடுதலைக்குப் பின்னரும் FBIகாரர்களுடன் ஒத்துழைப்பது பற்றிப் பேசினார். ஸ்ட்ரெஸ் பற்றிப் புலம்பினார். ஹேமாவின் பதிவைப் பற்றிச் சொன்னேன். கணினிப் பக்கமே இனித் தலைகாட்டப் போவதில்லை என்றார். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். நிச்சயம் அரசாங்கத்துக்கு எதிராக மானநஷ்ட வழக்கு போடப்போவதாகச் சொன்னார். அவருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு இரவு பனிரெண்டு மணிக்கு மேல் கிளம்பினேன்.

மைகெல் சொன்ன விவரங்களிலிருந்து:
  • இணையத்தில் இன்றைக்கு நிறைய தானியங்கி மென்கள் (bots) கிடைக்கின்றன. சரியான பாதுகாப்பில்லாமல் இணையத்தில் கலந்திருக்கும் கணினிகளை இந்தத் தானியங்கி மென்கள் அடையாளம் கண்டு, அவற்றை ஆபாசப் படங்களின் சேமிப்புக் கிடங்குகளாக உபயோக்கின்றன.
  • நம்மில் பெரும்பாலானவர்கள், கணினியில் என்ன இருக்கிறது என்று சோதனை செய்வதில்லை. முன்னூறு கிகாபைட் இருக்கிறது என்ற நினைப்பில் சுத்தம் செய்வதும் இல்லை. அதனால் இந்தத் தானியங்கிகள் இருபது முப்பது கிகாபைட் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு இணைய இணைப்பு கிடைக்கும் போதெல்லாம் "இங்கிருக்கிறேன்" என்று அடையாளம் காட்டிச் செயல்படுவதை நாம் கவனிக்கத் தவறுகிறோம்.
  • இப்படி நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான கணினிகள் இணையத்தில் கலந்திருக்கும் போது, கணினிக்கு ஐந்து பத்து கிகாபைட் என்ற கணக்கில் பிரித்துச் சேமிக்கப்பட்ட ஆபாசப் படங்களை வினியோகம் செய்வதில் எந்தவிதச் சிக்கலும் இல்லை.
  • அகப்பட்டுக் கொண்டால், கணினியின் சொந்தக்காரர்கள் தான் சிக்குவார்களே தவிர, இந்தப் படங்களைப் பரப்பும் அசல் குற்றவாளிகளுக்கு எந்தக் கெடுதலும் நேருவதில்லை.

அப்படிப் பார்த்தால் kggம் மீனாட்சியும் முருங்கையும் நீங்களும் நானும் அகப்பட்டுக் கொள்ள வாய்ப்பிருக்கிறதே? அய்யய்யோ! என்ன செய்வது?

சில அடிப்படைச் சுகாதாரங்களையும் பாதுகாப்பு விதிவகைகளையும் கடைபிடிக்கலாம்.

0. நிச்சயமாக கடவுச்சொல் உபயோகிக்க வேண்டும். பாஸ்வேர்ட் இல்லாமல் கணியை உபயோகிக்கவே கூடாது. கடவுச்சொல்லும் சுலபமாகத் திருட முடியாததாக இருக்க வேண்டும்.
1. வீட்டில் இருப்பவர்கள் பொதுவான கணியை உபயோகித்தால், தனித்தனி கடவுச்சொல் உபயோகியுங்கள். ஒவ்வொருவருக்கும் தனிப்பகுதி (folder or some partition) ஒதுக்குங்கள்
2. வாரம் ஒரு முறை (முடியாவிட்டால் மாதம் ஒரு முறையாவது) கணினியில் இருப்பதைக் கவனியுங்கள். மேலோட்டமாகப் பார்த்தால் கூடப் போதும். disc properties சோதனை செய்து மிகுந்திருக்கும் வெற்றிடங்களை ஒப்பிடுங்கள். திடீரென்று வெற்றிடம் வெகுவாகக் குறைந்திருந்தாலோ அதிகரித்திருந்தாலோ கவனியுங்கள்.
3. இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரர் உபயோகிப்பதை முடிந்தவரைத் தவிருங்கள். பைர்பாக்ஸ் அல்லது க்ரோம் உலாவிகளை உபயோகியுங்கள்.
4. இணைய இணைப்புக்கென்றுத் தனியாக வைரஸ் தடுப்புகளை உபயோகியுங்கள்
5. இணையப் போக்குவரத்தை விவரிக்கும் மென்பொருள் ஒன்றை உபயோகித்து, உங்கள் கணினியின் இணையப் போக்குவரத்தைக் கண்காணியுங்கள்.
6. தேவையில்லாத பொழுது, இணைய இணைப்பை நிறுத்தி விடுங்கள்
7. எந்தவிதக் கோப்பிணைப்பையும் (file attachment) முற்றும் நம்பினாலொழியத் திறக்காதீர்கள். நண்பர் பாட்டு அனுப்பினால் கூட, 'ஆகா, கேட்டேனே, நன்றாக இருக்கிறது' என்று பொய் சொல்லி பதில் போடுங்கள். சகோதரி புகைப்படம் அனுப்பினால் கூட"அடடா, என்ன அழகு" என்று கூசாமல் பொய் சொல்லுங்கள். தொடவே தொடாதீர்கள். டிலீட். டஸ்ட்பின்!
8. USB விசைகள் பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள். வின்டோஸ் இன்றைக்கு USB குச்சிகள் வழியாக வரும் வைரஸ்களைத் தடுக்க எந்தப் பாதுக்காப்பும் அளிப்பதில்லை.
9. பிள்ளைகளின் கணினி உபயோகத்திற்கு வரைமுறையும் விதிகளும் கடைபிடியுங்கள்
10. இணையதள அடையாளச்சீட்டுகளை (cookies) முடிந்தவரை ஏற்காதீர்கள்
11. தரவிறக்கங்களைக் கண்காணியுங்கள்; சோதனையிடுங்கள்
12. தானியங்கித் தளமாற்றங்களை அனுமதிக்காதீர்கள் (automatic reloading, routing or opening of additional popups or sites)
13. வீட்டுக் கணினியிலும் வைரஸ் தடுப்பு மென்பொருட்களை உபயோகியுங்கள். இணையத்தில் இலவசமாக நிறைய கிடைத்தாலும் நோர்டன் போன்ற மென்பொருட்களை நிறுவுங்கள். கூகுள் இலவசமாக சாதா நோர்டன் வழங்குகிறது. நெய் மசாலா ஸ்பெசல் நோர்டன் கொஞ்சம் செலவுதான் என்றாலும் முடிந்தவரை நிறுவி உபயோகியுங்கள்
14. திடீரென்று கணினி வேகம் குறைந்தது போலவோ, அல்லது ஏதாவது தேடுவது போலவோ காரணமில்லாமல கரகர என்றால் கொஞ்சம் கவனியுங்கள்
15. பேஸ்புக், லிங்க்டின், மைஸ்பேஸ் உபயோகிக்கும் பொழுது கவனமாக இருங்கள். குறிப்பாக, யூட்யூபில் நூதன் நடித்த படத்தைத் தேடும் போது 'மலையாள மங்கை' என்று ஏதாவது தோன்றினால் விலகுங்கள். நூதன் மலையாளப் படத்தில் நடிக்கவில்லை.