2010/08/27

சாதல் மீறும்



    "ஒரு மணி நேரத்துல எங்கம்மாவை கூட்டிக்கிட்டு வரேன் டாக்டர்" என்றவள், தொலைபேசி இணைப்பை நிறுத்திய கையோடு வீட்டு எண்ணைத் தட்டி "அம்மா, ப்ரேமா பேசறேன். ஆஸ்பத்திர்லந்து போன் வந்தது. இதோ வந்துடறேன், தயாரா இருமா, போகலாம்" என்றாள்.

    "வா, வா, எப்படி இருக்கே?" என்றேன்.

தயங்கி, "நீ எப்படி இருக்கே?" என்று அவள் கேட்டதும் புதிதாய் ரத்ததானம் பெற்றுப் பிழைத்தாற்போல் இருந்தது. அந்தக் குரலுக்குத்தானே வாழ்நாள் முழுதும் காத்திருந்தேன்? அவள் என் பழைய காதலி. பழைய என்றால் இந்தப் பிறவி மட்டுமில்லை, எத்தனையோ பிறவிகளாய் அவள்தான் என் காதலி. "எப்படி இருக்கே?" என்றாள் மீண்டும். என் கைவிரல் நுனியைத் தொட்டாள்.

"வெளியே குணம்; உள்ளே ரணம்" என்றேன். அவள் அமைதியாக இருந்ததைக் கவனித்துவிட்டு "உன்னைப் போல் தான்" என்று நான் சேர்த்துச் சொன்னதும், நிமிர்ந்து என்னைப் பார்த்தாள். அவள் ஈரக்கண்வலையில் சிக்கின என் நினைவு மீன்கள்.

என் பெற்றோர் விபத்தில் காலமாதும் சென்னையிலிருந்த என்னைப் புளியங்குடி பக்கத்தில் கிராமத்திற்கு அழைத்துக் கொண்டுபோனார் என் தாத்தா. தாத்தாவும் நானும் தான். சாப்பாட்டுக்கோ பணத்துக்கோ பஞ்சமே இல்லை. எதற்கெடுத்தாலும் ஆள். தேவலோகத்திலிருந்து இறங்கிவந்த அரசகுமாரன் போல் எல்லோரும் என்னை மதிக்க, நான் சென்னையை மறந்தேன். வனஜா என்றால் ஏனென்று கண் வெட்டும் பதினான்கு வயதுப் பூந்தோட்டம் இரண்டு வீடு தள்ளி இருந்தது முக்கியக் காரணம்.

"நீ நல்லா இருக்கியா?" என்றேன். புன்னகையுடன் தலையசைத்தாள். அவள் புன்னகையின் காலடியில் கலீல் கிப்ரன் கவிதைகளைக் கட்டிப்போடத் தோன்றியது. "உன்னை இத்தனை வருஷம் கழிச்சு இங்கே கிராமத்திலே சந்திப்பேன்னு எதிர்பார்க்கவேயில்லை" என்றேன்.

"நீ ஊருக்குத் திரும்பி வந்திருக்கேனு தெரிஞ்சுதான் நான் உன்னைப் பார்க்க வந்தேன். எக்கச்சக்கமா நிலம் வாங்கியிருக்கியாமே, என்ன செய்யப் போறே?" என்றாள்.

"நம்ம காதலுக்கு நினைவாலயம் கட்டப்போறேன்". நான் வரைந்திருந்த திட்டப்படத்தைக் காட்டினேன்.

"இந்த கிராமத்திலயா.. என்ன, தாஜ்மகாலா?" என்றாள்.

"அதுக்கும் மேலே. தாஜ்மகாலில் தேங்கியிருப்பது மிதமிஞ்சிய சோகம். காதலர்களாக எப்படி வாழ்ந்தாங்கனு புரிந்து கொள்ளமுடியாத, முடிவை நினைவுபடுத்தும் ஒரு மகத்தான கட்டிடம் தாஜ்மஹால். நான் கட்டப்போறது எனக்காக இல்லை, உனக்காகவும் இல்லை. காதலுக்காக. நீயும் நானும் துடிச்சதை இங்கே வரவங்க அனுபவிக்கலாம். ஒவ்வொரு அறையும் நீயும் நானும் காதலர்களாக இருந்த போது கிடைத்த அனுபவத்தைத் துல்லியமாகத் தெரியப்படுத்தும்."

"எல்லா அனுபவத்தையுமா?"

"ஏன் கூடாதா? மனிதருக்கிடையிலான காதலும் ஒரு ஞானசாதனம் தானே? கடவுள் கிட்டே காதல் கொண்டால் தான் மோட்சமா? இது காதலர் விமோசனம் பெறும் இடம்"

"சரி..சரி... என்ன செய்..யப்போறி..யாம்?". இழுத்து ஸ்வரங்களுக்கு விமோசனம் தந்தாள்.

"இதுதான் வாசல். காதலர்கள் ஒரே குடையின் கீழே சேர்ந்து, மழையில் நனையாமல் நனைகிற அனுபவம் இங்கே கிடைக்கும். நாம முதல் முதலா சந்திச்ச மாதிரி. நினைவிருக்கா?"

"ஏன் இல்லாம? மழையாட்டம் அழுதுகிட்டே உங்க தாத்தாவோட வந்து இறங்கினே... கிராமம் வேண்டாம், மெட்ராஸ் போகலாம்னு புலம்பிக்கிட்டே இருந்ததைப் பாத்து நாங்கள்ளாம் சிரிச்சோம்"

"கிடையாது. நாம முதலில் சந்திச்சது உங்க வீட்டுல"

எனக்குச் சென்னையை விட்டுவர மனமே இல்லை. இறந்து போன பெற்றோர்களை வழியெல்லாம் திட்டிக்கொண்டிருந்தேன். சங்கரன்கோவில் ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து ஒற்றை மாட்டு வண்டியில் பயணம் செய்து கிராமம் வந்து சேர்ந்தபோது நள்ளிரவானாலும் எங்களை வரவேற்று உபசரிக்க ஆடகள் காத்திருந்தனர்.

ராத்திரியில் புது வெள்ளைச்சட்டை போட்டிருந்தவர் என் தாத்தாவைக் கட்டிப்பிடித்து, “க்ருஷ்ண க்ருஷ்ணா... நீ ஒண்ணும் கவலைப்படாதே மாமா, எல்லாம் சரியாகிவிடும்" என்றார். கண்களைத் துடைத்துக் கொண்டு என்னைப் பார்த்து, "க்ருஷ்ணா... உனக்கு ஏண்டா இப்படி?" என்றார். எனக்கு எரிச்சல் வந்தது.

மறுநாள் காலை தாத்தாவுடன் வெளியே போனேன். மிதமாகத் துர்நாற்றமடித்த பக்கத்து வீட்டு மாமியிடம் கொஞ்ச நேரம் பேசிவிட்டு வெளியே வந்தோம். அடுத்த வீடு வந்ததும் "இது ரமணி மாமா வீடு. நேத்து ராத்திரி பாத்தியே..க்ருஷ்ண க்ருஷ்ணா?" என்று கண் சிமிட்டினார் தாத்தா. "வா, சாப்பிடலாம். வசந்தா பொங்கல் பண்ணியிருக்கா, எப்படி மணக்குது பார்".

நான், "க்ருஷ்ணா... எனக்குப் பிடிக்கலைனா நான் மெட்ராஸ் போயிடுவேன்" என்றேன் கிண்டலாய்.

"வாங்கோ மாமா, வாடா கண்ணா" என்று எங்களை உள்ளேயழைத்த வசந்தா மாமி, என்னைக் கட்டிப்பிடித்து அழுதாள். "இந்த வயசுல உனக்கு என்ன கொடுமை எழுதியிருக்கான் பார்!" என்று கண்களைத் துடைத்துக்கொண்டாள். "நீ கவலைப்படாதேடா தங்கம்.. நாங்க இருக்கோம்" என்றாள். பிறகு, "வனஜா, இங்கே வா. யாரு வந்திருக்கா பாரு. டம்ளர் ஜலம் கொண்டா, களைச்சுப்போய் வந்திருப்பான்" என்றாள், முப்பதடிக்கும் குறைவாக நடந்து வந்த என்னைச் சுட்டிக்காட்டி.

தண்ணீர் கொண்டு வந்த வனஜாவைப் பார்த்த உடனே சென்னையை மறந்தேன். வெள்ளையும் சிவப்புமாய் சுங்கிடிப் பட்டுப்பாவாடையும், இளமஞ்சள் சட்டையும், சிவப்பு வைரஊசித் தாவணியும் அணிந்து என்னைப் பார்த்துப் புன்னகை செய்தாள். கண்களின் வீச்சில் கோடிப் பிறவிகளெடுத்தேன். கண்களால் எனக்கு மட்டும் புரிந்த செய்தி சொன்னாள்: "போன பிறவியில் பார்த்தது, எப்படி இருக்கே?".

"இந்தா" என்று என் கைகளில் பட்டும் படாமல் வெள்ளி டம்ளரைத் திணித்துவிட்டு, சாதாரணமாக என்னருகில் உட்கார்ந்தாள் வனஜா. கை நடுங்கி டம்ளரைத் தவறவிட்டேன். இரண்டு பேர் மீதும் தண்ணீர் தெறித்தது. 'ஸ்' என்று ஒதுங்கியவள் என் மேல் பட்டாள். நான் நிரந்தர கிராமவாசியானேன்.

"இங்கே வா" என்று அவள் விரல்களைப் பிடித்துத் திட்டப்படத்தில் அடுத்த அறைக்கு அழைத்துப் போனேன். "கையெல்லாம் வரண்டு போயிருக்கு பார்" என்று வருத்தப்பட்டேன்.

"வயசாகலையா? எப்பவும் பதினெட்டா இருக்க முடியுமா? ரொம்ப இழுக்காதே, வலிக்குது, ஆர்த்ரைடிஸ்" என்றாள்.

"உனக்கு வலி கொடுத்த இந்த உலகத்தை என்ன பண்ணுகிறேன் பார்" என்றேன்.

"உலகத்தை விடு... போனா போறது. இங்கே என்ன செய்யப் போறே?" என்றாள், என் விரல் நின்ற இடத்தைக் காட்டி.

"நாம் முத முதலா தொட்ட அனுபவத்தை இந்த அறையில் பெறலாம்" என்றேன். மறுபடியும் அவள் விரல்களைப் பிடித்தபடி, "தொட்டா உனக்கு கை வலிக்குது, விட்டா எனக்கு நெஞ்சு வலிக்குது. நாம எப்போ முதல் முதலா தொட்டோம் சொல்லு?" என்றேன்.

"உனக்குத்தான் இதெல்லாம் ஞாபகம். நீயே சொல்லு" என்றாள், கைகளை விலக்காமல்.

கிராமத்தில் இரண்டாவது வாரம். காலை எழுந்து வந்தபோது தாழ்வாரம் தாண்டி வெளியறையில் புத்தம் புது சைக்கிள் மின்னியது. பக்கத்தில் கையைக் கட்டியடி நின்ற என்னைவிடச் சற்றே வயதான ஒருவன் என்னைப் பார்த்ததும் "சின்னய்யா" என்றான்.

"க்ருஷ்ணா... உனக்குத்தான் புது சைக்கிள் மாப்பிளே" என்றார், சாய்வு நாற்காலியில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த ரமணி மாமா.

"எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது.." என்றேன் தயங்கி.

"க்ருஷ்ணா... அதுக்குத்தான் குப்புசாமியை வரச் சொன்னேன். குப்பா, இங்கே வா. சின்னய்யாவுக்கு அடிபடாம கத்துக்கொடு" என்றார்.

அடுத்த ஒரு மாதத்தில் குப்புசாமி எனக்கு ஆஸ்தான குரு, நண்பன், அடியாள் எல்லாமாகி விட்டான். ஸ்கூல் திறப்பதற்குள் என்னென்னவோ சொல்லிக்கொடுத்தான். குறிப்பாக, சைக்கிள் ஓடிக்கொண்டிருக்கும்போதே ஹேன்டில்பார் மேல் தாவி உட்கார்ந்து மறுபடி சீட்டுக்கு வரும் உத்தியைச் சொல்லிக் கொடுத்தான். மகா ஞானி என்று வியந்து அவனுக்கு எட்டணா கொடுத்தேன். சைக்கிள் வித்தை பழகிய மறுநாள் வனஜாவைக் கூப்பிட்டு, "சைக்கிள் சவாரி வரியா?" என்றேன்.

"கீழே தள்ளி கைகால் உடைஞ்சு போச்சுனா அப்புறம் நீ தான் என்னை வாழ்நாள் பூரா காப்பாத்தணும், செய்வியா?" என்றாள்.

"சரி,சரி. வா,வா" என்று அவளைப் பின் சீட்டில் உட்காரவைத்து, கால்களைத் தேய்த்துப் பெடல் செய்து ஏறி உட்கார்ந்தேன். தெருக்கோடி விளையாட்டுத்திடல் வந்ததும் நிறுத்தினேன். அவள் இறங்கி, "நல்லா ஓட்டுறியே?" என்றாள்.

"பாரு" என்று நான் வேகமாக ஒரு சுற்று வந்து குப்புசாமி சொல்லிக்கொடுத்த வித்தையைக் காட்டினேன். ஹேன்டில்பாரில் உட்கார்ந்தபடியே அருகே பூத்துக்கிடந்த வண்ணப்பூக்களைப் பறித்து வந்து அவளிடம் கொடுத்து நிறுத்தினேன். அவள் கை தட்டி "இன்னொருக்கா" என்றாள். நாலைந்து முறை அதே போல் பூ பறித்துக் கொண்டு வந்து நிறுத்தினேன். இப்போது மொட்டைச்செடி அருகில் பூவைச் சுமந்து நின்ற பூவை, வனஜாச் செடி.

"நீ சைக்கிள் ஓட்டுறியா?" என்றேன்.

என்னை ஒரு கணம் தலைசாய்த்துப் பார்த்து யோசித்துவிட்டு, "வேணாம்பா" என்றாள்.

"நான் சொல்லித் தரேன். சுலபம்..வா" என்று அவள் கைகளைப் பிடித்து இழுத்ததும் சைக்கிளில் வந்து அமர்ந்தாள். நான் சீட்டைப் பிடித்தபடியே அவளுடன் பத்தடி ஓடினேன்.

"அங்கேயெல்லாம் வேணும்னே படாதே" என்றாள்.

அவள் தானாகவே ஓட்டுவாள் போல் தோன்றியதால் கைகளை எடுத்தேன். அடுத்த பத்தடிக்குள் கீழே விழுந்தாள். முழங்கையில் சிராய்ப்பு. ஆண்களுக்கான பார் வைத்த சைக்கிளானதால் கீழே விழுந்தபோது முழங்காலுக்கு மேல் உள் காயம். கன்னத்தில் வேறு கல் குத்தி லேசாய் ரத்த காயம்.

நான் பயந்து நடுங்கி விட்டேன். "வனஜா.." என்று படபடத்து ஓடினேன். மஞ்சள் பூசிய முழங்கால் தெரிய சைக்கிள் மேல் பட்டுப்பாவாடை பரவி விழுந்திருந்தவள், "நீ பிடிச்சுப்பாய்னுதான் நான் வந்தேன்..." என்று அழுதபடி என்னைப் பார்த்தபோது, கண்களின் மை கரைய ஓடும் கண்ணீர்த் துளிகளில் மாலைச் சூரியன் மின்னி ஆயிரம் வானவில் துண்டுகள்.

"சாரி வனஜா...சாரி" என்று பலமுறை மன்னிப்பு கேட்டுவிட்டு "இரு, இரு. நான் உன்னை வீட்டில் கொண்டு விடுறேன்" என்றேன்.

"எப்டி? என்னால எழுந்திருக்கக் கூட முடியலியே?" என்றாள்.

அவளை இரு கைகளாலும் ஆட்டுக்குட்டி போல் நெஞ்சோடு தாங்கியபடி தூக்கியெடுத்து பக்கத்திலிருந்த மேட்டில் உட்காரவைத்தேன். சைக்கிளை எடுத்து நிறுத்தி மறுபடி அவளை இடுப்போடு தூக்கிக் கேரியரில் உட்காரவைத்தேன். என் தோள்களில் கைகளை வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டாள். அவள் இடுப்பைப் பிடித்தபடியே சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடந்தேன். "என்னை நீ எல்லா எடத்துலயும் தொட்டிருக்கே.." என்றாள்.

எனக்கோ ரமணி மாமா திட்டப்போகிறாரே என்று பயம். வீடு வந்ததும் தானாகவே என் தோளைப்பிடித்துக் கீழே இறங்கியவள், "எங்கப்பா அம்மா வரதுக்குள்ள நீ போயிடு.. நான் ஏதாவது சொல்லிக்கறேன்" என்றாள். நாய் கூட அத்தனை நன்றியுடன் பார்த்திருக்க முடியாது. அவளைப் பார்த்து "நிஜமாவே சாரி, வனஜா" என்று சொல்லிவிட்டு மறைந்தேன்.

மறுநாள் எழுந்து வந்தபோது தாத்தா, ரமணி மாமா, வசந்தா மாமி எல்லோரும் என்னைப் பார்த்துவிட்டு பேச்சை நிறுத்திக் கொண்டனர். ரமணி மாமா என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் முகத்தில் கோபம் தெரிந்தது. "... வனஜாவுக்கு எப்படி இருக்கு?" என்றேன்.

"க்ருஷ்ணா... பெண் குழந்தை மாப்பிளே... பலமா அடி பட்டிருக்கா.. என்ன பண்றது? இடுப்பு ஒடிஞ்சிருக்கும் போலிருக்கு.. இனிமே பொண்ணுக்கு கல்யாணம் நடக்குமா? இப்படிப் பண்ணிட்டியே க்ருஷ்ணா.."

"நிஜமாவே சாரி மாமா... நான் அவ பின்னாடியே பிடிச்சிட்டு ஓடியிருக்கணும்... சாரி மாமி". அழுது விடுவேன் போலிருந்தது.

"போறும்.. என்னக் கிண்டல் வேண்டியிருக்கு? தாய் தகப்பனில்லாத பிள்ளை.." என்றாள் வசந்தா மாமி.

அதற்கு மேல் அவர்களுக்கே பொறுக்காமல் சிரிக்கத் தொடங்கிவிட்டனர். "க்ருஷ்ணா... வனஜாவுக்கு நல்லா சைக்கிள் ஓட்டத் தெரியும் மாப்பிளே. ஸ்கூலுக்கு எப்படிப் போறானு நினைச்சே? உன்னைக் கிண்டல் பண்றதுக்காக.. அம்ம்ம்புட்டும் கள்ளத்தனம்.. நீயும் அவளைத் தூக்கி வீடு வரைக்கும் கொண்டு விட்டிருக்கே" என்று ரமணி மாமா சொல்ல, தாத்தாவும் சேர்ந்து சிரித்தார். "குழந்தையைக் கிண்டல் பண்ணாதீங்கோ" என்று மாமி சொல்வது என் காதில் விழுந்தாலும் கோபத்துடன் அங்கிருந்து நகர்ந்தேன்.

அதற்குப் பிறகு வனஜாவுடன் பேசவில்லை. தினம் சர்க்கரைப் பொங்கல், மாலாடு என்று ஏதாவது கொண்டு வந்து கொடுத்து, "இன்னும் கோவம் போகலையா?" என்பாள். நான் உடனே அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவேன். நாலாம் நாள் அதிரசம் கொண்டு வந்தவள் நான் நகரத் தொடங்கியதும், குறுக்கே மறித்து நின்றாள். "உனக்காகத்தான் கொண்டு வந்தேன், கொஞ்சமாவது சாப்டக் கூடாதா? ஏன் இவ்வளவு கோவம்?" என்றாள்.

"கோபமும் இல்லை, மண்ணும் இல்லை" என்றேன்.

"அப்ப அது என்ன?" என்று என் மூக்கு நுனியைத் தொட்டாள். "கோபம் மாதிரிலா இருக்கு?"

சிரிப்பை அடக்கிக்கொண்டு "நிஜமாவே காயம் பட்டிருந்தா? ஏன் அப்படி விழுந்தே?" என்றேன்.

ஒரு வினாடி என் கண்களுடன் கலந்து, "கீழே தள்ளி கை கால் உடைஞ்சு போச்சுனா அப்புறம் நீ தான் என்னை வாழ்நாள் பூரா காப்பாத்தணும் சொன்னப்போ, சரி சரி வா வானு கூப்பிட்டியே, அதுக்கு ஆசைப்பட்டு தான். இப்படிக் கோபப்படுவேனு தெரியாது" என்று சொன்னபோது வந்த கண்ணீரை நான் பார்க்காமலிருக்கத் தலை குனிந்து கொண்டாள்.

ஒன்றும் சொல்லத் தோன்றாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். முழங்கையில் தெரிந்த சிராய்ப்பைத் தொட்டபோது "ஸ்" என்றாள். "நிஜமாத்தான் காயம்", என்று என் கையைத் தன் காயத்தின் மேல் வைத்து இதமாக அழுத்திக் கொண்டாள். முந்தைய பிறவிகளில் நாங்கள் கலந்தது நினைவுக்கு வர, இந்தப் பிறவியிலும் இதயம் மாற்றிக் கொண்டோம்.

"ஏன் இந்த அறையில் ஒரே கோடு கோடா போட்டிருக்கே?" என்றாள்.

"இது தான் கடைசி அறை. உள்ளே பிரிவின் சோகம், வலி. வெளியே வந்தால் நிம்மதி, விடுதலை. எல்லாம் புரிகிற மாதிரி அமைக்கப் போகிறேன். உள்ளே இந்தத் தூணிலிருந்து அந்தத் தூண் வரை சுவர் முழுக்க உன்னோட முகத்தின் பெரிய ஓவியம். நான் பிரிவது தெரியாமல் திரும்பி வருவேன்னு நம்பிக்கையா பார்த்த அந்த முகம். அப்பத்தான் வெளியே இருக்கற பூக்களுக்கு உன் முகத்தைப் பார்த்துட்டு தினம் பூக்கணும்னு ஊக்கம் கிடைக்கும். எப்படி?" என்று கேட்டேன்.

"அப்ப மாதிரியே இப்பவும் சரியான லூசு காரியம் ஏதாவது பண்றே. இவ்வளவு பணம் இருந்தா அனாதை, ஏழை குழந்தைகளுக்கு உதவி ஏதாவது பண்ணக்கூடாதா? அதை விட்டுட்டு ஏதோ..."

"அதுவும் நல்ல யோசனை தான். உதவியில்லாத காதலர்களும் அனாதைக் குழந்தைகள் மாதிரி தானே? அவங்களுக்கான காப்பிடமா செஞ்சுடலாம்" என்று நான் சொல்ல, வெளிக்கதவு திறந்து முன்பின் பார்த்திராத யாரோ மூன்று பேர் வந்தார்கள்.

    "மிஸ் ப்ரேமா, மிசஸ் வரலக்ஷ்மி, வாங்க" என்று இருவரையும் உள்ளே அழைத்து வந்த டாக்டர், மற்ற இருவரும் அந்த அறையின் நிலவரத்தைக் கிரகிக்க அவகாசம் கொடுத்தார்.

சிறிய அறையானாலும் படுக்கை, அலமாரியில் அடுக்கிவைத்த புத்தகங்கள், சுவற்றில் பிணைத்த ப்ளாஸ்மா டிவி என்று சீராகவும் வசதியாகவும் இருந்தது. கட்டிலில் உட்கார்ந்திருந்த வயதான மனிதர் எதிரில் சுவரையே பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டிடத்தின் வரை படம் போல் அங்கங்கே ஏதோ எழுதி, கோடிட்டு, பெயரிட்டு... சுவர் முழுவதும் கிறுக்கல்.

"இதைப் பாருங்க”. டாக்டர் ஒரு விடியோ கேசட்டை ஓட விட்டார். டேப் ஓடத் தொடங்கி சில வினாடிகளில் அதே வயதான மனிதர் திரையில் தெரிந்தார். "வா, வா, எப்படி இருக்கே?" என்றார் திரையில். அரை மணிக்கு மேலாக ஓடிய டேப்பில் அவர் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். உடலில் சோர்விருந்தாலும் கண்களில் அத்தனை புத்துணர்ச்சி. சுவற்றின் கிறுக்கல்களில் ஒவ்வொன்றையும் விளக்கிக் கொண்டிருந்தார்.

டேப்பை நிறுத்தி, "ப்ரேமா, உங்க அப்பாவோட அல்சைமர் முத்திக்கிட்டு வருதுனு என் அபிப்பிராயம். ஸ்டாடின் மெடிகேஷன் கொஞ்சம் கன்டெய்ன் பண்ணுது. அதிகம் பலன் எதிர்பார்க்க முடியாது. நெர்வஸ் ப்ரேக்டவுன் அடிக்கடி ஏற்படுது" என்றார் டாக்டர்.

டேப் ஓடியதோ நின்றதோ தெரியாமல் சுவற்றையும் அறைக்குள் வந்தவர்களையும் பார்த்துக் கொண்டிருந்தார் வயதான மனிதர். அவர் இடது தோளை மெல்லத் தொட்ட டாக்டர், "பெண்டாட்டியையும் பெத்த பெண்ணையும் நினைவில்லை, இதில் ஆச்சரியம் என்னனு பார்த்தீங்கன்னா சின்ன வயசில காதலிச்ச பெண்ணைப் பத்தி நினைவு வச்சிருக்கார். யாரோ வனஜா வனஜானு சொல்லிக்கிட்டே இருக்காரு பாருங்க. ரொம்ப சந்தோஷமா இருக்காரு, அதான் உங்க கிட்டே இந்த டேப்பைப் போட்டுக் காட்டக் கூப்பிட்டேன். தப்பா நினைக்காதீங்க, அவருக்கு ஏதாவது காதல் தோல்வியா? உங்களுக்கு அது யாருனு தெரியுமா மிசஸ் வரலக்ஷ்மி?" என்றார்.

"கஷ்டம் டாக்டர்" என்று தலையில் அடித்துக்கொண்டார் வரலக்ஷ்மி. "காதல் தோல்வியாவது, மண்ணாவது? நான்தான் அந்த வனஜா. முழுப் பேரு வரலக்ஷ்மி. இந்தக் கூத்தெல்லாம் நாங்கதான் அடிச்சோம். ஓடிப் போய் கல்யாணம் செஞ்சுகிட்டாத்தான் ரொமென்டிக்னு சொல்லிக்கிட்டிருப்பார். காலேஜ் விட்டு வந்து ஒரு நாள் என்னிடம் தரச்சொல்லி ஒரு சீட்டை வேலைக்காரி கிட்டே கொடுத்தனுப்பினார். ஓடிப்போய் இன்னிக்கு ராத்திரியே கல்யாணம் பண்ணிக்கலாம்னு எழுதியிருந்தார். அவ அதை நேரா எங்கப்பா கிட்டே கொடுத்துட்டா. அப்பா பிரிச்சுப் பாத்துட்டு க்ருஷ்ணா..என்ன இது, ஓடிப்போகப் போறீங்களா, ஏன்? வேண்டாம் மாப்பிளேனு இவரோட தாத்தாவிடம் சொல்லி அடுத்த மாசமே கல்யாணம் நடந்தாச்சு".

முத்துதிரச் சிரித்தாள் ப்ரேமா. சுவரை வெறித்துக் கொண்டிருந்தவரின் தோளை மென்மையாக அணைத்தபடி "எல்லாம் உன்னைப் பத்திதான் பேசறோம், ரோமியோ" என்றாள்.

வரலக்ஷ்மி தொடர்ந்து, "அப்பப்போ சொல்லிக்கிட்டிருப்பார். நம்ம காதல் தோல்வியடைஞ்சு நாம் பிரிஞ்சிருக்கணும். நம்ம காதல் அமர காதலா இருந்திருக்கும். காதலுக்குத் தோல்வியே கல்யாணம் தான். இப்படி ஏதாவது உளறிக்கிட்டே இருப்பார். கஷ்டம்." அவர் அருகில் உட்கார்ந்து அழத் தொடங்கினார். "பாரேன் ப்ரேமா.. என்னை அடையாளம் கூடத் தெரியலை பார் உங்கப்பாவுக்கு. பதினஞ்சு வயசுலேந்து இதுக்கு நான்தான் எல்லாம், இப்ப நான் யாருனே சொல்லத் தெரியலை. சாகற வரைக்கும் காப்பாதுடானு சொல்லித்தானே அன்னிக்கு சைக்கிள்ளே விழுந்தேன்?".

"இவங்க எதுக்காக அழறாங்க?" என்று ப்ரேமாவிடம் கேட்டார் வயதானவர் மெதுவாக.


2010/08/20

லிக

சிறுகதை


    சுகாதாரப் பிரிவில், பூமிக்குள்ளே நூறடி ஆழத்தில் வேலை பார்த்தான் ருத்ரமூர்த்தி. பெருமை சேர்க்கவில்லை என்றாலும் முக்கியமான வேலை. கழிவு திரட்டும் வேலை. 'ஆச்சு, இந்த ஒரு பீ மூட்டையைத் தூக்கி எறிஞ்சதும் இடம் சுத்தமாயிடும்' என்று தனக்குள் சொல்லிக்கொண்டு, பயோடிக்ரெடபில் கழிவுத்தொட்டியை நிரப்பி, தானியங்கி ஹெர்மாசீலரைப் பொருத்தி, இறுக்கி மூடினான். கட்டுப்பாட்டுக் கருவியின் பச்சைநிறப் பித்தானை அழுத்தினான். தொட்டியின் அடிப்பகுதியில் சக்கரக்கால்கள் வெளிப்பட்டு இயங்க, நகர்ந்து மற்ற கழிவுத்தொட்டிகளுடன் சேர்ந்து கொண்டது. பச்சைநிறப் பித்தானை மறுபடி அழுத்தினான். எலக்ட்ரோஸ்டேடிக் பூட்டுகள், தொட்டிகளைப் பிணைத்தன. மூன்றாவது முறை பித்தானை அழுத்தினதும், கழிவுத்தொட்டிகள் நகரத் தொடங்கின. மெள்ள பூமிக்கடியில் சேரும் சுரங்கப்பாதையின் குறுகியப் பயண இடைவெளியில், கழிவெல்லாம் தீவிர இன்ப்ராரெட்-அல்ட்ராவைலட் ஒளிவீச்சில் தொட்டியோடு பஸ்பமாகி, வாயுவாகி விடும்.

ருத்ரமூர்த்திக்கு இதெல்லாம் புரியாது. புரியத் தேவையும் இல்லை. அவனைப் பொறுத்தவரை மூன்றாவது முறையாகப் பித்தானை அழுத்துவதோடு வேலை முடிந்தது. ஒரு வேளை கழிவுத்தொட்டிகள் நகரவில்லையென்றால், சிவப்புப் பித்தானை அழுத்த வேண்டும் என்கிற வரையில் அவனுக்கு அறிவு இருக்கிறது. அது போதும். அவ்வளவுதான் படிக்க அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.

பெட்டிகள் நகரத் தொடங்கியதும் கட்டுப்பாட்டுக் கருவியைச் சுவற்றில் பதித்து விட்டு, மேலே செல்வதற்கான வாகனத்துள் ஏறினான். கதவைப் பூட்டியதும் மூச்சுக்குழாயைக் கழற்றினான். வாகனத்தின் உள்ளறை, மூச்சுக் காற்றுக்குப் பதப்பட்டு இருந்தது. அணிந்திருந்த பாதுகாப்பு மேலணியைக் களைந்து ஓரமாக இருந்த வட்டப்பெட்டிக்குள் எறிந்ததும் எரிந்தது. மடித்து வைத்திருந்த சாதாரண உடையை எடுத்து அணிந்து கொண்ட நேரத்தில், பூமியின் நிலநிலைக்கு வந்து விட்டான். வெளிவந்து வீட்டிற்குச் செல்லும் இரெய்னில் ஏறினான்.

"என்னய்யா இது, இன்னொரு வண்டில வரக்கூடாதா? எங்களை மாதிரி மேட்டுக்குடி ஜனங்க மத்தியில நீ வரணுமா?" என்று அவசரமாக எழுந்து ஒதுங்கியவர் சொன்னதைப் பொருட்படுத்தாமல், தலைகுனிந்தபடி தனிமையான ஓரத்துக்குச் சென்று நின்றான். அருகில் இருந்த நீலப்பட்டியில், தன் விலாச அட்டையைப் பொருத்தி எடுத்தான். சாலைகளின் வாகன நெருக்கத்தை ஆராய்ந்து, இலவசப் பயணத்திற்கான உத்தேச நேரத்தை இரெய்ன் கணக்கிட்டுச் சொன்னது. ஆறு நிமிடங்களில் தன் வீட்டு வாசலில் நிற்கும் என்பது தெரிந்து, அது வரை கண் மூடினான்.

வீட்டில் மனைவி காத்துக் கொண்டிருந்தாள். "ஏன்னா, பீ மூட்டையை எல்லாம் பூமாதேவிக்கு அனுப்பிச்சுட்டேளா? ரொம்ப களைச்சுப் போய் வந்திருக்கேள், ஒரு வா கஞ்சி போட்டு எடுத்துண்டு வரேன்" என்றவள், திடீரென்று அழுதாள். அவள் அடுத்து என்ன சொல்லப் போகிறாள் என்று அவனுக்குத் தெரியும். இருந்தாலும், "ஏன் அழறே, என்ன ஆச்சு?" என்றான். கேள்வித் தொனியில் ஆதரவு இல்லை.

"ஒங்களுக்குத் தெரியாததா? இந்தப் பக்கத்தாத்துக்காரன் சள்ளை தாங்க முடியலை. கேப்பாரில்லை. என்னை ரொம்பக் கேவலமாப் பாக்கறான் சண்டாளன். நேக்கு நாக்கைப் பிடுங்கிண்டு பிராணனை விடலாமானு இருக்கு. ஏதாவது அவதாரம் எடுத்து இவனை சம்காரம் பண்ண வரக்கூடாதானு தெனம் வேண்டிக்கறேன்... கண்ணைத் தொறந்து பாக்க மாட்டேங்கறாரே பகவான்? அவனை நீங்க கொஞ்சம் தட்டிக் கேக்க மாட்டேளா?"

'யாரை? பகவானையா, பக்கத்து வீட்டுக்காரனையா?' என்று கேட்க நினைத்தான். பகவானைச் சட்டபூர்வமாக மறந்து எத்தனையோ நூற்றாண்டுகளாகிறது. பக்கத்து வீட்டுக்காரனோ படித்தவன், பலசாலி, சலுகையுள்ளவன், மேட்டுக்குடி. ஏதாவது கேட்டால் ஏளனம் செய்து முகத்தில் ஒரு குத்து விடுவான். பல்லைப் பிடித்துக் கொண்டு அவமானத்துடன் திரும்ப வேண்டும். கரிசனத்துடன், "சாமி கும்பிடறது சட்ட விரோதம்னு நோக்கு தெரியாதா? எங்கயாவது வம்புல மாட்டிக்கப் போறே.." என்றான் பொறுமையாக.

"எல்லாம் மனசுக்குள்ள தான்... அத விடுங்கோ.. கட்டேலபோறவன் இன்னிக்கு என்ன பண்ணினான் தெரியுமோ? என் கையை மறுபடியும் பிடிச்சு இழுத்தான். வாடி வாடினு எக்காளமா சிரிச்சான்" என்றாள். அவனுக்குப் பசித்தது. இவள் கஞ்சி எடுத்து வருவாளா, இல்லை புலம்பிக் கொண்டிருக்கப் போகிறாளா?

"நேக்குக் கோவம் வந்தாலும் ஒண்ணும் சொல்லலைனா. இந்த ஜாதில பொறந்தன்னிக்கே மானம் ரோஷம் எல்லாத்தையும் தர்ப்பணம் பண்ணியாச்சே? பொண்ணாப் பொறந்தா கேக்கணுமா? ஆனா வாக்கப்பட்டு கொஞ்சம் பாதுகாப்பா இருக்கும்னு பாத்தா, அதுகூட இல்லை.. நமக்கு ஒரு கொழந்தை இருந்தா இப்படியெல்லாம் நடக்குமா?"

'அப்புறம் படிக்க முடியாம வேற வேலை செய்ய முடியாம அந்தக் கொழந்தையும் நமக்குப் பொறந்த குத்தத்துக்காகப் பீ வாரணுமாக்கும்... நம்ப எனம் நம்மளோட ஒழியட்டும்னு தானே கொழந்தை வேண்டாம்னு முடிவு பண்ணினோம்?' என்று கேட்க நினைத்தான். நிதானித்து, "என்ன பண்ணினான் சண்டாளன்?" என்று கேட்டான், கேட்டு வைத்தால் சீக்கிரம் பதில் சொல்லி, பசிக்கு ஏதாவது கொண்டு வருவாள் எனும் எதிர்பார்ப்புடன்.

"இன்னிக்கு என் பின்னாடியே ஆத்துக்குள்ள வந்துட்டான்.. ஒங்க பேரைச் சொல்லி, அவனை விட்டுட்டு வந்துடு. அவனால உனக்கு ஒரு சுகமும் இல்லை. என் சாமானைப் பாரு. அப்படியே இந்திரியமாக்கும்னு நெஜாரைக் கழட்டிட்டுச் சிரிக்கறான்னா. ரோஷமா ஒரு வார்த்தை கேக்கப்படாதா?" என்றாள். "..பின்னாடி இப்படி ரெண்டு கையாலயும் தொட்டுத் தடவி சிரிக்கறான்". அவனருகே வந்து கலங்கினாள்.

ருத்ரமூர்த்திக்கு ரோஷம் வரவில்லை. கோபம் கூடவில்லை. ஆத்திரம் ஏறவில்லை. பக்கத்து வீட்டுக்காரன் தலைமுடியை ரத்தம் கசியக் கொத்தாகப் பிடித்திழுத்து, 'என் மனைவி முன்பா நிஜாரை அவிழ்க்கிறாய், மானங்கெட்ட நாயே?' என்று கொக்கரிக்கத் தோன்றவில்லை. தலையைக் கொய்து மனைவி காலில் எறிந்து மறு காரியம் பார்க்கத் தெரியவில்லை. 'நாங்கள் எளியவர்கள். தயவு செய்து என் மனைவியிடம் தகாத முறையில் நடக்காதீர்கள் ஐயா' என்று காலில் விழுந்து கெஞ்சவும் தோன்றவில்லை. 'போறதுடி கண்ணம்மா, எல்லாம் பிராரப்தம்' என்று மனைவியை அணைத்து ஆதரவாகப் பேசக் கூடத் தோன்றவில்லை. மௌனமாக நின்றான்.

"இதுக்கு பதிலா நேக்கு ரெண்டு அரளி அரைச்சுக் குடுத்துடுங்கோ. நெதம் இவன் அராஜகம் தாங்கலை. நாளைக்கு என்னைப் பலாத்காரமா எடுத்துக்கப் போறதா சத்யம் பண்ணிட்டுப் போயிருக்கான். ஏதாவது பண்ணுங்கோ"

அமைதியாக இருந்தான்.

"பேரு மட்டும் நன்னா வச்சுண்டிருக்கேள்" என்று தோளை முகவாயில் கேலியாக இடித்துக் கொண்டாள். "நாளைக்கு ஏதாவது நடந்துடுத்துன்னா நா உயிரோட இருக்க மாட்டேன்". அழுதாள்.

"நாளைக்கு ஒண்ணும் நடக்காது, கவலைப்படாதே" என்றான்.

"எப்படிச் சொல்றேள்?"

"இன்னிக்கே லோகம் அழியப் போறது"

"ஆமா, தெனம் இதையே சொல்றேள்.." என்றவள், கண்களைத் துடைத்துக் கொண்டாள். உலகம் அழிய வேண்டும் என்று கணவன் நினைப்பதே தனக்கு ஆதரவு தருவதற்காகத்தான் என்று புரிந்திருந்தும் வருத்தப்பட்டாள். "சரி, சரி, சீக்கிரம் ஆத்துல குளிச்சுட்டு சாப்பிட வாங்கோ. லோகம் அழியறப்போ அழியட்டும். கரிநாக்கா சொல்லிண்டிருக்காதீங்கோ... என்னதான் நாகரீகம் வளந்தாலும் ஜனங்களுக்கு அறிவு வளரலையே... முப்பாட்டனாருக்கு மூணு கோடி பித்ருன்னாலும் நம்மள போட்டு வதக்கிண்டிருக்கு லோகம்.. நீங்களும் நானும் என்ன பண்ண முடியும்? பசியா இருப்பேள், நான் புலம்பிண்டிருக்கேன்.. போய்க் குளிச்சுட்டு வாங்கோ".

வீட்டின் நடுவறைக்கு வந்து, தரைவிசையைக் காலால் அழுத்தினான். எட்டடி நீளம் ஆறடி அகலத்துக்குத் தரை விலகித் தொட்டி போல் தெரிந்த பள்ளத்தில், வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் பொதுமக்களுக்காக அரசாங்கச் செலவில் விடப்பட்ட ஆற்றுநீர் நிறையத் தொடங்கியது. நீர் நிரம்பி செயற்கை அலைகள் இதமாகப் பாய, அவன் உடை களைந்து நீரில் இறங்கினான். நீரில் அளையத் தொடங்கியதும் மனம் எல்லாவற்றையும் மறந்தது. வெளியில் ஆரவாரம் கேட்பது போலிருந்தது. மனைவி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். பொருட்படுத்தாமல், தண்ணீரில் மூழ்கிக் குளித்தான். இந்தப் பிறவியில் இந்த நிமிடத்தின் இந்தக் குளியல் தான் நிச்சய வரம் என்ற எண்ணத்தில் குளித்தான். வழக்கம் போல் மனமும் அளைந்தது. சமுதாயத்தின் கீழ்த்தட்டு வர்க்கத்தில் பிறந்துவிட்டால் சுயமரியாதையிலிருந்து தன்மானம் வரைத் துறக்கவேண்டிய நிலையை நினைத்தான். வேத காலத்திலிருந்து அவன் மூதாதையர்கள் சமுதாயத்தின் உச்சத்தட்டில் இருந்தவர்கள் எனும் பழம்பெருமை நினைவுக்கு வர...

...நினைவுகளை ஒதுக்கிக் குளித்தான். இந்த வர்க்கத்தில் பிறந்து விட்டோமே என்ற விபத்தின் வலியில் குளித்தான். அழகான மனைவியைப் பாதுகாக்க முடியவில்லையே என்ற கையாலாகாத்தன வேகத்தில் குளித்தான். சந்ததி வளராமல் செய்துவிட்டோம் என்ற சோணங்கித் தியாக வெற்றியில் குளித்தான். வெளியே ஆரவாரம் அதிகமாகக் கேட்டது. மனைவி குரலின் அதிர்ச்சி உரைத்தது. ஒரு வேளை பக்கத்து வீட்டுக்காரன் ஏதாவது அக்கிரமம் செய்கிறானா?

'நான் கையலாகாதவன். என்னிடம் வீரத்தையோ விவேகத்தையோ எதிர்பார்க்காதீர்கள். நான் பாமரன். எனக்கு புரட்சி தெரியாது. உலகம் அழியும் போது எல்லாவற்றுக்கும் தீர்வு கிடைத்து விடும். இப்போதைக்கு என் உடல் சுத்தமாகட்டும். வேதம் சொல்லித் தீ வளர்த்த பரம்பரையில் வந்தவன், இப்போது பேதம் பாராமல் பீ துடைக்கிறேன். ஆத்திரமும் வெறியும் சேராமல் என் மனம் சுத்தமாகட்டும், என்னை விடுங்கள்' என்று ஆழமாக மூழ்கினான். தினமும் தரையைத் தொட்டதும், பத்மாசனத்தில் உட்கார்ந்து தியானம் செய்வான். அன்றைக்கும் மூழ்கித் தரையைத் தொட விரைந்தான். 'இதென்ன, இன்றைக்கு மட்டும் இத்தனை ஆழமாகப் போய்க்கொண்டே இருக்கிறதே?' என்று வியந்தான். தரையைத் தேடி நீந்தினான்.

வெளியே சூரியன் வெடித்துச் சிதறியது ருத்ரமூர்த்திக்குத் தெரியாது.

2010/08/12

ரஜினியின் Bloodstone

வெத்து வேலை


கோடை விடுமுறையில் பரணைச் சுத்தம் செய்யும் பொழுது டிவிடியைப் பார்த்தேன்; தூசி கூடப் படியாமல் சுத்தமாக இருந்தது.

இருபது வருசமிருக்குமா இந்தப் படம் பார்த்து (பரங்கிமலை ஜோதி தியேடர் என்று ஞாபகம்)? தகர டப்பா படமென்றாலும், ரஜினி பேசி நடித்த ஆங்கிலப் படமென்பதால் ஸ்பெசல். படத்தின் கதாநாயகனும் நாயகியும் முகவரி இல்லாமல் போய்விட்டார்கள். சிகரெட் எறிந்துக் கவ்வும் டேக்சி டிரைவர் இன்றைக்கும் சூப்பர் ஸ்டார். ரஜினி இல்லாமலிருந்தால் இந்தப் படம் அட்டை டப்பா.

ஒன்றரை மணி நேரப் படத்தை அரை மணிக்குள் சுருக்கியிருக்கிறேன். நூறு மெகாபைட்டிற்கு மிகுந்திருப்பதால் சற்று மெள்ளத் தளமிறங்கும்; பொறுமையும் விருப்பமும் வசதியும் (இணைய வசதி, வேகம்) இருந்தால் பார்க்கவும் - ரஜனிக்காக ஒருதரம். (tip:பாதிப்படம் இறங்கவிட்டு பிறகு பார்க்கத் தொடங்கவும்)


சினிமா-1 | 2010/08/12 | Bloodstone, ரஜனிகாந்த்

2010/08/05

ஆறுதல்



லோ... | எப்படி இருக்கே? | நல்லா இருக்கேன்? நீ எப்படி? | எனக்கென்ன குறை? என்னை விடு.. உன் மனைவி, பிள்ளைங்க நலமா?| நலம் | கால்வலி இப்போ போயிடுச்சா? | ம் | தலைவலி? | ம் | அதிகமா ஓடாதே, அடிக்கடி ஓய்வெடு, உழைச்சு ஓடாயிடாதே | ம், ம், ம் | ஒழுங்கா சாப்பிடுறியா? | சாப்பிடுறேன் | உடம்பைப் பாத்துக்க | சரி, உனக்கு உடம்பு சரியில்லாம இருந்துச்சே? | அதெல்லாம் சரியாயிடுச்சு.. என்னைப் பத்திக் கவலைப்படாதே, போற கட்டை | என்னைப் பத்தியும் கவலைப்படாதே | கவலைப்படாம எப்படி இருக்க முடியும்? அடிக்கடி போனாவது செய், சரியா? | சரி | முடியுறப்ப என்னை வந்து பாரு போதும், கஷ்டபடாம இரு | ம் | வச்சுடவா? | ம் | வச்சுடவா? | ம்.

அலோ... | எப்படி இருக்கே? | நல்லா இருக்கேன்? நீ எப்படி? | எனக்கென்ன குறை? என்னை விடு.. உன் மனைவி, பிள்ளைங்க நலமா?| நலம் | கால்வலி இப்போ போயிடுச்சா? | ம் | தலைவலி? | ம் | அதிகமா ஓடாதே, அடிக்கடி ஓய்வெடு, உழைச்சு ஓடாயிடாதே | ம், ம், ம் | ஒழுங்கா சாப்பிடுறியா? | சாப்பிடுறேன் | உடம்பைப் பாத்துக்க | சரி, உனக்கு உடம்பு சரியில்லாம இருந்துச்சே? | அதெல்லாம் சரியாயிடுச்சு.. என்னைப் பத்திக் கவலைப்படாதே, போற கட்டை | என்னைப் பத்தியும் கவலைப்படாதே | கவலைப்படாம எப்படி இருக்க முடியும்? அடிக்கடி போனாவது செய், சரியா? | சரி | முடியுறப்ப என்னை வந்து பாரு போதும், கஷ்டபடாம இரு | ம் | வச்சுடவா? | ம் | வச்சுடவா? | ம்.

அலோ... | எப்படி இருக்கே? | நல்லா இருக்கேன்? நீ எப்படி? | எனக்கென்ன குறை? என்னை விடு.. உன் மனைவி, பிள்ளைங்க நலமா?| நலம் | கால்வலி இப்போ போயிடுச்சா? | ம் | தலைவலி? | ம் | அதிகமா ஓடாதே, அடிக்கடி ஓய்வெடு, உழைச்சு ஓடாயிடாதே | ம், ம், ம் | ஒழுங்கா சாப்பிடுறியா? | சாப்பிடுறேன் | உடம்பைப் பாத்துக்க | சரி, உனக்கு உடம்பு சரியில்லாம இருந்துச்சே? | அதெல்லாம் சரியாயிடுச்சு.. என்னைப் பத்திக் கவலைப்படாதே, போற கட்டை | என்னைப் பத்தியும் கவலைப்படாதே | கவலைப்படாம எப்படி இருக்க முடியும்? அடிக்கடி போனாவது செய், சரியா? | சரி | முடியுறப்ப என்னை வந்து பாரு போதும், கஷ்டபடாம இரு | ம் | வச்சுடவா? | ம் | வச்சுடவா? | ம்.

சுழன்று சுழன்று | காரணமும் கருவும் கிடைக்காமல் சுழன்று சுழன்று சுழன்று சுழன்று இதே உரையாடல் | ஒவ்வொரு முறையும் தொலைபேசச் சலிக்கும் எனக்கு | சிலிர்க்கும் அம்மாவுக்கு.

மூன்று நிமிட ஆறுதல், பத்தே ரூபாய்.