இரவுச் சாப்பாட்டை முற்றிலும் தவிர்ப்பதென்று இந்த வருடம் புத்தாண்டு தினத்தன்று உறுதியெடுத்தேன்.
இதுவரை இரண்டு நாள் தவிர்த்திருக்கிறேன். (அதற்கு மேல் முடியவில்லை :)
புதிதாக எதுவும் வேண்டாம். போன வருடம் செய்தத் தவறுகளைச் செய்யாதிருந்தாலே போதும் என்றுத் தீர்மானித்து விட்டேன். new year resolutions for the infernally dumb என்று யாராவது புத்தகம் எழுதினால் கும்பிடுவேன்.
    சமீபத்தில் படித்தச் சுவையானப் புத்தகம்.
போர், காமம், உணவு - மனித வாழ்க்கை நெறிகளையும், சமீப நூற்றாண்டுகளின் தொழில்நுட்ப வளர்ச்சியையும், இந்த மூன்று தேவைகளும் எப்படித் தூண்டி வளர்த்திருக்கின்றன என்பதைப் பற்றியப் புத்தகம்.
மனிதனின் அடிப்படைத் தேவை உணவு மட்டுமே. அந்தத் தேவையே பரிணாம வளர்ச்சியில் பலவிதமாக வெளிப்பபட்டிருக்கின்றன என்கிறார் ஆசிரியர் பீடர் நோவேக்.
நாலு கால் பிராணியாகத் திரிந்து கொண்டிருந்தவர்கள் இரண்டு கால் பிராணியாக எழுந்து நின்றதன் அடிப்படையில் போர், காமம், உணவு மூன்றும் உண்டு என்று எழுதியிருப்பது சுவாரசியம். பெண் துணைக்காக ஆண் குரங்கினம் அடித்துக் கொண்ட காலத்தில், சில பலவீன புத்திசாலிக் குரங்குகள், சாப்பாடு தேடி எடுத்துக் கொடுத்து பெண் குரங்குகளைக் கவரத் தொடங்கின. சாப்பாட்டைச் சுமந்து கொண்டு பயணிக்க இரண்டு கைகள் இரண்டு கால்கள் தேவைப்பட்டன. பரிணாம வளர்ச்சி தொடங்கியது. விவரங்களில் இருக்கிறது விவகாரம். நம்ப முடிகிற ஆச்சரியம்.
விடியோ கேமரா தொழில்நுட்பம் இன்று சிரிப்பாய்ச் சிரிக்கக் காரணம் நீலப்படங்கள் என்கிறார். தொழில் நுட்ப வளர்ச்சிக்குப் போர் உதவியது போல் போர்னாக்ரபி உதவுகிறது என்று சொல்வதுடன் நிற்காமல் நிறைய விவரங்கள் தந்திருக்கிறார். interesting.
உணவில் biotechnologyன் influenceஐப் படிக்கும் பொழுது கொஞ்சம் பக் என்று இருக்கிறது. ஏறக்குறைய 90% உணவு வகைகளில் genetic modification ஏதோ ஒரு விதத்தில் நடைபெறுகிறது என்கிறார். அடுத்த இருபது வருடங்களில் fully synthetic தானியங்கள் காய்கறிகள் கிடைக்குமாம். [ஹ்ம்ம். 2100க்குள் இப்படி நடக்கலாம். estrogen கலந்த பால் குடித்துப் பழகி அநேகமாக homosexual ஆண்கள் அதிகமாகப் புழங்கும் வீடு. தொழில் நுட்பம் இருப்பதால் கல்வி, வேலை, வணிகம் எல்லாம் வீட்டில் இருந்தபடியே. சமையல் உரையாடல்: 'அந்த ப்லேஸ்டிக் வெண்டைக்காயைப் போட்டு modified தண்ணீர் கலந்து உப்பில்லாம சாம்பார் வைடா தங்கம்'.]
அமெரிக்க ராணுவம், pornography (தமிழ்ச்சொல் தெரிந்தால் சொல்லுங்கள்), மற்றும் McDonalds - இவை மூன்றும் சிக்கலானத் தொழில்நுட்பம் உலக அளவில் சாதாரணமாகப் புழங்குவதற்கு எப்படிக் காரணமாகின்றன என்று நிறைய உதாரணங்கள், விவரங்களுடன் விளக்கும் புத்தகம் Sex, Bombs and Burgers. ஆசிரியர்: Peter Nowak. (இது போன்ற தலைப்புகள் குறைந்தபட்சம் புத்தகத்தை எடுத்து நாலு பக்கமாவது புரட்ட வைக்கின்றன :)
    வருங்காலத்தில் சமூக, கல்வி, இன, பொருளாதார, சட்ட, தொழில்நுட்ப மாற்றங்கள் குறித்து வருட இறுதியில் சிகாகோவில் ஒரு வாரக் கருத்தரங்கு நடக்கும். நிறைய forward, lateral, oob thinking ஆசாமிகளைச் சந்திக்கலாம். அளவளாவலாம். (வெட்டிப் பேச்சுக்குச் சரியானத் தமிழ்ச்சொல் என்று நினைக்கிறேன். வார்த்தையிலேயே வளவளா. அக்மார்க் onomatopoeia).
இலவசமாக intellectual கும்மி அடிக்கலாம் என்றாலும், சாப்பாட்டைக் குறை சொல்ல முடியாது. 'வருங்காலத் திருமணப் பத்திரங்கள் ஐந்து வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். புதுப்பிக்கவில்லையெனில் தானாகவே காலாவதியாகும்' என்ற கருத்தில் நான்கு வருடங்களுக்கு முன் கருத்தரங்கில் பேசியிருந்தேன். தொடர்ந்து அழைப்பு விடுத்தார்கள். 2011ல் இடம் கிடைக்கவில்லை. ஓசிச் சாப்பாட்டை நிறையத் தின்றுவிட்டு உருப்படியாக எதுவும் கருத்து சொல்லாதது காரணமோ என்னவோ, யார் கண்டார்கள்?!
இடம் கிடைக்கவில்லையே என்று நினைத்த போது, இன்னொரு ஜன்னல் திறந்தது.
மெக்சிகோ நகரில் ஒரு கருத்தரங்கத்துக்கு அழைப்பு அனுப்பியிருக்கிறார்கள். ஆச்சரியம் என்னவென்றால், அங்கே திருமணக் காலவரம்புச் சட்டம் கொண்டுவரப் போகிறார்களாம்! பரிசோதனை முறையில் ஏற்கனவே கொண்டு வந்துவிட்டார்கள். தொடர்ந்து பரவ சமூக ரீதியில் என்னென்ன செய்யவேண்டும் என்று ஒரு நிபுணர் கருத்தரங்கம். என்னை(யும்) மதித்து ஒரு கருத்தரங்க அழைப்பு. சும்மா விடலாமா? வருகிறேன் என்று சொல்லியிருக்கிறேன்.
மெக்சிகோவில் மாட்டுக்கறி நன்றாக இருக்கும். நம்மத் தலைவியே மாட்டுக்கறி சாப்பிட்டு சுவாகா பண்றப்ப, நாம சும்மா இருப்போமா? அதனால இந்த மாதிரி.. இந்த விதத்திலே.. சமைக்க வேண்டும் என்றுத் தெளிவாகச் சொல்லிவிட்டேன். "வெண்ணை மாதிரி பண்ணி வைக்கிறேன், வாங்கோண்ணா" என்று சொல்லியிருக்கிறார் chef. கருத்தரங்கம் எப்படிப் போகிறதோ, கறியை ஒரு பிடி பிடித்துவிட வேண்டும் என்று கங்கணம்.
    ஹிஹ்ஹிஹ்ஹி... இந்த கோல்கீப்பர் அன்றைக்கு எப்படி நொந்திருப்பார் என்று நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. |
    வம்சி பதிப்பகம் நடத்தியச் சிறுகதைப் போட்டியில் யுகபுருஷன் கதைக்குப் பரிசு கிடைத்திருக்கிறது. திடீரென்று கிடைத்த அங்கீகாரம். நான் எழுதியதையும் படித்து மதித்து அங்கீகரித்தார்களே என்று நன்றி. நன்றி. நன்றி.
திடீரென்று வந்த மின்னஞ்சல்களையும் சந்திப்புக்களையும் எதிர்பார்க்கவில்லை. பிராமண குலத்தை மட்டம் தட்டி எழுதியிருப்பதாக வந்த இமெயில்கள் உறுத்தின. சிகாகோ பாலாஜி கோவிலுக்கு வந்த இரண்டு பேர் எப்படியோ என் வீட்டைத் தேடிப் பிடித்து வந்து விட்டார்கள். இனி இது போல எழுத வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொண்டு, கோவில் பிரசாதம் வேறு கொடுத்துவிட்டுப் போனார்கள்.
இணையம் ரொம்ப டேஞ்சருங்க. இனிமேல் profileல் பாலராஜன்கீதா படத்தையும், பின்னூட்டம் இடும்பொழுது மோகன்ஜியின் படத்தையும் பயன்படுத்தலாம் என்று எண்ணியிருக்கிறேன்.
seriously, ஏதோ எழுதினேன், அவ்வளவு தான். அதற்கு மேல் துருவிப்பார்க்க செய்தி எல்லாம் எதுவுமே இல்லை என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எழுத்தில் இருப்பதற்கு மேல் எதையும் தேடிப்பார்க்க வேண்டாம்.
on that note, ஒரு சின்னப் பின்புலம். வர்ணாசிரமங்களின் அடிப்படையில் ஒவ்வொரு யுகத்தின் பின்னணியிலும் ஒரு கதை என்று நாலு கதைகள் எழுதி வைத்தேன். கி, தி யுகங்களை வைத்துப் புனைந்த கதைகளை முடிக்கவில்லை. மற்ற யுகங்களின் பின்னணியில் புனைந்த யுகபுருஷன், லிக என்ற இரண்டு கதைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. தனித்தனியாகப் படிக்கலாம் என்றாலும் சேர்த்துப் படிப்பவர்கள், கதையில் வரும் தம்பதிகளின் சமூக, தர்ம, ஒழுக்கச் சிக்கல்களின் ஒற்றுமையைப் பிடித்துக் கொள்வார்கள்.
யுக வரிசை மாற்றி எழுதியிருந்தேன். லிகவை எழுதி ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து யுகபுருஷனை எழுதி முடித்தேன். எதற்குச் சொல்கிறேன் என்றால் லிகவைப் படித்துவிட்டு, 'பிராமணன் ஒரு நாளும் பீ அள்ள மாட்டான்' என்று அதற்கும் கண்டனம் தெரிவித்தார்கள்.
கதை எழுதுவது எப்படி என்று ஓரளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறேன். அடி வாங்காமல் கதை எழுதுவது எப்படி என்று இனிமேல் தெரிந்து கொள்ளவேண்டும்.
    தேவ் ஆனந்த் மரணம் கொஞ்ச நாள் கழித்து உறைத்தது. சில மரணங்கள் நம்மில் ஒரு பகுதியைப் பிய்த்துக் கிழித்துக் கொண்டு போவது போல் உணர்வேன். திடீரென்று நினைவு வந்து ஒரு வார இறுதியில் என்னிடமிருந்த நாலைந்து தேவ் படங்களைப் பார்த்த போது, குரோம்பேட்டை பம்மல் நினைவுகள் வந்து வெந்தேன். தேவ்-மதுபாலா ஜோடி மிகவும் பிடிக்கும். இந்தப் பாடல், ஆங்கோன் மே க்யா ஜி, எனக்கு மிகவும் பிடித்தப் பத்து இந்திப் பாடல்களில் ஒன்று. உடன் நடித்திருப்பது தேவின் அசல் மனைவி. பெயர் மறந்து விட்டது. இருவருமே பாடலில் கண்களால் புன்னகை செய்வதைப் பாருங்கள். there's romance for you. |
முதலாவது, அவள் பர்கா அணியவில்லை. இரண்டாவது, அவளுடைய முடி முக அலங்காரங்கள் அவளை மேற்கத்திய நாகரீகக்காரி என்று விளக்கின. மூன்றாவது, அவள் ஜீன்ஸும் முழுக்கைச் சட்டையும் அதன் மேல் டோல்சே கபானா டிசைனர் மேலங்கியும் அணிந்திருந்தாள். ஷ்! நான்காவது எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை, மேலங்கிக்குள் கைபடும் அவசரத்தில் ஒரு இத்தாலிய பெரட்டா கைத்துப்பாக்கி மறைத்து வைத்திருந்தாள்.
நான் எழுதியதைப் படித்து மதிக்கும் இன்னொரு குழு அதீதம் இணைய இதழ். பொங்கலுக்கு ஒரு கதை வந்திருக்கிறது. மேலே மேற்கோள் காட்டியிருக்கும் சஸ்பென்ஸ் கதை. அம்ருதவல்லி.
அடுத்த மாதமும் ஒரு கதை வெளியிடுவதாகச் சொல்லியிருக்கிறார்கள். சரித்திரப் பின்புலத்துடன் எழுதிய முதல் காதல் சிறுகதை.
அதீதம் குழுவுக்கும், படிக்கப் போகும் உங்களுக்கும் (!), என் மனமார்ந்த நன்றி.
    இதுவும் காதல்! என்று ஹேமா தன் உப்புமடச் சந்தியில் தொடர்பதிவைத் தொடர்ந்து விட்டு, சும்மா இராமல், என் போல் சிலரைத் தொடர இழுத்து விட்டார் :). ஹேமா எழுதியக் கதை, பாடல் தேர்வுகளுடன் கோர்வையாகச் செல்கிறது. நானும் நாலைந்து விடியோக்களை வைத்துக் கொண்டு யோசிக்கிறேனே தவிர, கதைக்கரு ஒன்றும் தோன்றக்காணோம். 'ஹீரோ ஹீரோயின் ம்யூசிக் லொகேஷன் எல்லாம் தயார். இந்தக் கதை ஒண்ணு தான் கெடக்கலே..' கதை எழுதுகிறேனோ இல்லையோ, எடுத்து வைத்த விடியோக்களில் நிச்சயம் கதைக்குப் பயன்படுத்தப் போவதில்லை என்று தீர்மானித்த விடியோ இது. பிடித்தப் பழைய பாடல்களில் ஒன்று. துள்ளும் துடிப்பான இசையும் போதையில் துவளும் குரல்களும், தூங்குமூஞ்சி நடிகர்கள் மற்றும் படப்பிடிப்பில் தொலைந்து போன துக்கத்தை என்னவென்பது! இருந்தாலும் பாடலை ரசிக்க முடிவது உலக மகா ஆச்சரியம்! |
    ஏறக்குறைய நான்கு வருடங்களுக்கு முன் எழுதிய இந்தப் பதிவை அவ்வப்போது யாராவது தேடிப் படிக்கிறார்கள். அன்று எழுதியபோதும் நிறைய கருத்துக்கள் வந்தன. நான்கு வருடங்களாக அடிக்கடிப் படிக்கப்படும் இடுகை. படித்துவிட்டுப் பின்னூட்டமும், நல விசாரிப்பு இமெயிலும் அனுப்பியவர்களுக்கும் அனுப்புகிறவர்களுக்கும் நன்றி.
இதை விடப் படுகுழியான நாள் இருக்கமுடியாதென்று எண்ணிய நாள் அது - அதனால் பதிவிட்டேன். சில கடுமையான நாட்களைச் சந்தித்திருந்தாலும், அன்றைப் போல் சோர்வூட்டிய நாளை அதற்குப் பிறகு சந்திக்கவில்லையென்றே சொல்லவேண்டும். தொக்கி நின்ற சிலவற்றைத் தொடர்ந்து எழுதி முடிக்கலாமா என்று அவ்வப்போது தோன்றும். மூன்றாம் சுழியின் போக்கும் அடையாளமும் மாறிவிட்டதால் எழுதவில்லை.
அந்தப் பதிவில் எழுதியிருந்த எங்கள் நாய் spot இறந்துவிட்டது. சிகிச்சைக்குப் பிறகு மூன்று வருடங்களுக்கு மேல் இழுத்துப் பிடித்த spotஐ, சென்ற நவம்பர் மாதம் ஒரு சுமாரான குளிர் நாளில் கண்மூட வைக்க நேரிட்டது.
மூப்பின் கொடுமை அதிகமாகித் திண்டாடிய நாயை இன்னும் இழுத்து வாழ வைக்க வீட்டில் போராட்டம். எத்தனை சொல்லியும் கேட்காமல் அடம் பிடித்தார்கள். நல்ல வேளையாக மருத்துவர் உதவியுடன் அனைவரையும் convince செய்ய முடிந்தது. என் பெண்ணின் முதிர்ச்சி வியக்க வைத்தது. spotன் மரணத் தேவையைத் தெளிவோடு ஏற்றுக் கொண்டாள். அவள் குழந்தையாக இருந்த போது எடுத்து வந்த குட்டி நாய் spot. ஒரு வாரக் குட்டியாக இருந்ததிலிருந்து உடன் வளர்ந்தவள். அவளுக்கு spotடம் அதிக நெருக்கம். spot என்று பெயர் வைத்ததும் அவள் தான். (நாய்க்குட்டிக்குப் பெயர் சூட்டியக் குட்டிப்பெண் இன்று என்னிடம், 'don't live my life for me, you bald man' என்கிறாள். ஹ்ம்ம்).
மரணப்படுக்கையில் இருந்த spotடன் என் பெண் முதலில் பத்து நிமிடங்கள் தனிமை கோரினாள். நாங்களெல்லாம் வெளியில் வந்துக் காத்திருந்தோம். வெளியே வந்தவள், நேரே காரில் உட்கார்ந்து விட்டாள். குடும்பத்தில் ஒவ்வொருவராக நாயுடன் ஏதோ பேசிவிட்டு நகர்ந்தனர். பக்கத்து வீட்டிலிருந்து இருவர். போதாக்குறைக்கு இன்னொரு மாநிலத்துக்கு தொலைபேசி அங்கிருந்த உறவினர்கள் வேறு spotடன் பேசினார்கள். நாய் என்ற நினைப்பில் யாரும் இருக்கவில்லை. என்னுடைய இறுதிக் கணம் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.
நாயைக் கண்மூட வைக்கும் அந்தக் கணத்தில் உடன் இருக்க யாருக்கும் மனமில்லை. நானும் மருத்துவரும் மட்டுமே. ட்யூப் கட்டி முதலில் மயக்க மருந்து செலுத்தினார்கள். என் உள்ளங்கையை நாக்கினால் தடவிக் கொண்டிருந்த spot, என்னையே பார்ப்பது போலிருந்தது. நிச்சயமாக ஏதோ சொன்னது. என்னவென்று புரியவில்லை. மயக்க மருந்து வேலை செய்யத் தொடங்கியதும் இன்னொரு hi-dose மருந்து செலுத்தினார்கள்.
ஒன்று. இரண்டு. மூன்று. spot கண்மூடியது. 'he had a peaceful exit' என்றார் மருத்துவர். ஒரு பழகிய உயிர் என் கைபடப் பிரிந்தது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன். spotன் கழுத்தைத் தடவிக் கொடுத்துவிட்டு வெளியேறினேன்.
"என்ன ஆச்சு?" என்று ஒரே கேள்விமழை காரில். "what did spot say? was he scared?" என்றான் மகன்.
"don't know.. but he seemed to say something for sure" என்றேன்.
நீண்ட அமைதிக்குப் பின், "he said thank you, dad" என்றாள் பெண்.
எனக்கும் சட்டென்று புரிந்தது. 'பதினைந்து வருடங்கள் என்னைப் பார்த்துக் கொண்ட புண்ணியவான்களே, நன்றி, போய் வருகிறேன்' என்றே சொல்லியிருக்க வேண்டும். சற்று நிம்மதியாக இருந்தது.