2011/08/29

ஒருமனம்
    பிரபலத் தேயிலைக் கம்பெனியில் விற்பனை நிர்வாகி நான். கோவையிலிருந்து சேலம் வரையிலான பெரிய கல்லூரி, ஹோட்டல், தொழிற்சாலைகளில் தேயிலை விற்பது எனக்கும் என் குழுவைச் சார்ந்த மூவருக்கும் வேலை. எங்களில் யாருக்குமே இன்னும் திருமணமாகவில்லையாதலால் நாங்களும், எங்களைப்போல் குடும்பக் கவலை இல்லாத மற்றவரும், வேலை முடிந்து மாலை நான்கு ஐந்து மணிக்கெல்லாம் காந்தி தெரு சாம்ராட் ஹோட்டலில் கூடுவோம். நிதானமாய் மது, அரட்டை, சில சமயம் மாது என்று நள்ளிரவு தாண்டி...விடுங்கள், கதைக்கும் இதற்கும் தொடர்பில்லை.

இரண்டு மாதத்திற்கு ஒருமுறை சென்னையிலிருந்து மேலதிகாரி பொன் ராமசாமி என்னுடன் 'மார்கெட் விசிட்' வருவார். பொன் சாருக்கு ஐம்பது வயதிருக்கலாம். இன்னும் திருமணம் செய்து கொள்ளாததற்குப் பல காரணங்களை அவரவருக்குத் தோன்றியபடி அளப்பார்களே தவிர, யாருக்கும் உண்மை தெரியாது. அவரிடம் கேட்கவும் தைரியம் கிடையாது. மனிதரோ பெயருக்கேற்ற மாதிரி உடலும் உள்ளமும் தங்கமான தங்கம். உள்ளுரில் தங்கினால், மாலையில் எங்களுடன் சாம்ராட் லாட்ஜில் சேர்ந்து கொள்வார். பனிக்கட்டியோ தண்ணீரோ சோடாவோ கலக்காமல் உயர்ந்த ரக விஸ்கி சாப்பிடுவார். நாங்கள் தான் முறை போட்டு வாங்கிக் கொடுக்க வேண்டும். விஸ்கி, வறுத்த முந்திரி, சாம்ராட் ஸ்பெஷல் நீளவெண்டைக்காய் வறுவல் என்று உள்ளே போகப்போக வெளியே கதை கதையாய் வரும். பொன் சார் கதை சொல்லத் தொடங்கினால் அந்தக்கால பாக்யராஜ் கூட பாடம் கேட்கலாம். நேரம் போவது தெரிந்தும், போக மனமில்லாமல் கேட்டுக் கொண்டிருப்போம். இந்த முறை ஏனோ உள்ளூரில் தங்கவில்லை. மறுநாள் யாரையோ பார்க்கப் போவதாகச் சொன்னார். கோயம்புத்தூர் வரை பஸ்ஸில் சென்று அங்கே மெடிகல் காலேஜ் நண்பர் ஒருவரோடு காரில் எங்கேயோ போவதாய் ஏற்பாடு. விடுங்கள், கதைக்கும் இதற்கும் தொடர்பில்லை.

மாலை ஆறு பத்து பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருந்தோம். ஈரோடிலிருந்து வர வேண்டிய பஸ் இன்னும் வரவில்லை. கூட்டமான கூட்டம். ஒரு வாலிபன் இங்கேயும் அங்கேயும் அலைந்து கொண்டிருந்தான். ஒன்றிரண்டு பேருடன் பேசிவிட்டு ஏமாற்றத்துடன் நகர்ந்து கொண்டிருந்தான். நாகரீகப் பிச்சை எடுக்கிறானா? வெகு அழகாக இருந்தான். சீரான உடையணிந்திருந்தான். அதிகம் படித்தவன் போலிருந்தான். பொருந்தவில்லையே என்று நினைத்து கொண்டிருக்கையில், எங்களை நோக்கி வருவதைப் பார்த்தேன். இருங்கள், கதைக்கும் இதற்கும் தொடர்பிருக்கிறது.

என்னை ஒதுக்கிவிட்டு நேராகப் பொன் சாரிடம் பேசினான். "சார்...என் பெயர் மனோகரன். சொந்த ஊர் பொள்ளாச்சி, இங்கே தங்கி பி.ஈ படிக்கிறேன் சார். அவசரமாக நான் பெங்களூர் போகணும் சார். கோவையிலிருந்து ப்ளேன்ல போகலாம்னு இருக்கேன். டிக்கட் வாங்க காசில்லை. உதவி பண்ண முடியுமா சார்? பணத்தைக் கண்டிப்பா திருப்பிடுவேன். உங்களைப் பாத்தா உதவி செய்வீங்கனு தோணுது சார்"

நானும் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறேன், ப்ளேன் டிகெட் வாங்கப் பிச்சை எடுத்துப் பார்ப்பது இதுதான் முதல். பேசத்துணிந்த என்னைத் தடுத்தார் பொன். "நீ எதுக்குபா பெங்களூர் போகணும்?" என்று கேட்டார்.

"உண்மையைச் சொல்றேன் சார். நான் ஒரு பெண்ணை உயிருக்கு மேலா விரும்பறேன். அவளும் என்னைவிட மேலாக என்னைக் காதலிக்கிறாள் சார். ஆனா எங்க ரெண்டு பேரோட அப்பா அம்மாவுக்கும் எங்கள் காதல் சம்மதமில்லை. அவள் விருப்பத்துக்கு மாறா பெங்களூர்ல யாரையோ மணம் செய்துவைக்கப் போறாங்க சார். நாளை மறுநாள் கல்யாணம். நான் உடனே போயாகணும் சார். ஒரே நாளில் அவளை எப்படியாவது பெங்களூரில் கண்டுபிடிச்சு இதை நிறுத்தணும் சார். முடிஞ்சா அதே பந்தலில் எங்க இரண்டு பேருக்கும் திருமணம், இல்லாவிட்டால் சேர்ந்து மரணம். இங்கே பாருங்க சார், என் காதலியோட இமெயில். வேணும்னா படிங்க... ஒவ்வொரு வரியிலும் அவளோட இதயம் எப்படித் துடிக்குதுனு தெரியும் சார்"

இப்படி டயலாக் விடுகிறானே என்று வியந்தேன். பொன் சார் அமைதியாக இருந்தார். ப்ளேன் டிகெட் பிச்சை தொடர்ந்தான். "நான் சொல்றதை நீங்க நம்பல போலிருக்கு...பரவாயில்லை சார். ஆனா கிண்டல் மட்டும் பண்ணாதீங்க சார், மத்தவங்க மாதிரி" என்றபடி எங்களிடமிருந்து விலகினான்.

"உண்மையான காதலா?" என்றார் பொன், உரக்க.

எனக்கோ கடுப்பு. "எல்லாம் சுண்டல் சார், சும்மா இருங்க" என்றேன், மெதுவாக அவருக்கு மட்டும் கேட்கும்படி.

பொன் சார் குரல் கேட்டு மனோகரன் நின்றான். ஒரு கணம் யோசித்துவிட்டு, "எங்கள் காதல் கலைந்து போனால் உலகத்தாருக்கு இனி காதலே கிடையாது; இதுதான் கடைசிக் காதல்" என்றான் தமிழ்க்கவி போல். 'ஐயோ' என்றேன் மனதுள். ஆனால் அவன் கண்களிலோ அத்தனை ஒளி.

"நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கும் போது பாக்கணும் சார் நீங்க. உலகத்து அத்தனை ஜீவராசிகளுக்கும் எங்கள் காதலின் சக்தியால உயிர் மூச்சும் ஊட்ட சக்தியும் வருவதைப் புரிஞ்சுக்குவீங்க. அவள் கை பிடிச்சுக்கிட்டு நடந்தா போதும், உலகத்தின் எல்லா பிரச்னையும் மாயமா மறைந்து விடும் சார். அவகூட இருக்கும் போது, எங்கே என் உயிர் எங்கே அவள் உயிர்னு தெரியாதபடி, மூச்சு கூட ஒண்ணாதான் விடுவோம் சார். நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கும் போது உலகத்தின் அத்தனை அமர காதலர்களும் கண்ணெதிரே வானவெளியில் வந்து எங்களையே பார்த்துக் கொண்டிருப்பார்கள் சார், சத்தியமான வார்த்தை. செத்தவங்களையும் பிழைக்கவைக்கும் சக்தி எங்கள் காதலுக்கு உண்டு" என்றான்.

'அடேய், அடேய்' என்று எனக்குள் எண்ணிக்கொண்டிருக்கும்போதே பொன் சார் ஒரு காரியம் செய்தார். தன்னிடம் இருந்த அத்தனை பணத்தையும் அவனிடம் கொடுத்தார். "இந்தா, என் கிட்டே இவ்வளவுதான் இருக்கு. இந்தக் கோயமுத்தூர் பஸ் டிக்கெட்டை எடுத்துக்கிட்டுப் பீளமேடு போ. அங்கே என் நண்பர் நீலக்கலர் இன்டிகா காருடன் எனக்காகக் காத்துகிட்டிருப்பார். அவர்கிட்ட இந்த சீட்டைக் கொடு. உன்னைக் காரில் பெங்களுர் கூட்டிகிட்டுப் போவார். அவருக்கு பெங்களூரும், அங்கே நிறைய ஆளுங்களையும் தெரியும். எப்படியாவது உன் காதலியைக் கண்டுபிடிச்சுக் கொடுப்பார்" என்றார்.

பிறகு நான் சற்றும் எதிர்பாராவிதமாக என்னையே பிக்பாகெட் அடித்தார். என்னிடமிருந்த சொச்சப் பணத்தையும் அவன் கையில் கொடுத்துவிட்டு, "சாக வேண்டாம். சேரப் பாருங்கய்யா.. இந்த உலகத்துக்கு காதல் இன்னும் பல கோடிக் காலம் தேவை. பஸ் வந்துடுச்சு பார். டைம் வேஸ்ட் பண்ணாதே, போ" என்றார்.

"சார், சார், சார்" என்று நான் அலறிக்கொண்டிருக்கையில் அந்த வாலிபன் பஸ்ஸில் ஏறிக் காணாமல் போனான்.

எனக்கோ பெருங்கோபம். "என்ன சார் நீங்க, இதையெல்லாம் நம்பறீங்க? அவன் அடுத்த ஊர்ல இறங்கி உங்களையும் என்னையும் நல்ல இளிச்சவாயிங்கனு சொல்லி நம்மப் பணத்தை நல்லா அனுபவிச்சுகிட்டு இருப்பான். இவன் என்ன உங்க உறவா முறையா, இப்படியா பைத்தியக்காரத்தனமா நடப்பீங்க, முன்ன பின்ன தெரியாதவங்க கிட்டே?" கொதிக்கும் எண்ணையிலிட்ட தண்ணீரானேன். "இப்ப என்ன பண்ணப் போறீங்க?"

பொன் சார் அமைதியாக "சாம்ராட் போகலாம், வா" என்றார். இருவரும் ஹோட்டலுக்கு நடந்தோம். இன்னும் கோபம் தணியாத என்னை முதுகில் தட்டி, "எனக்கு வேற ஒரு மனோகரனைத் தெரியும்" என்றார்.

"ரொம்பத் தேவை சார்... பெர்சு தொல்லைன்றது சரியா இருக்கு" என்று முணுமுணுத்தபடி அவருடன் நடந்தேன்.

    சாம்ராட் மதுக்கூடத்தில் பொன் சாரைச் சுற்றி அமர்ந்திருந்தோம். பஸ் நிலையத்தில் மாலை நடந்ததை அருகில் இருந்தவர்களிடம் புலம்பி முடித்து விட்டேன். இரண்டு ரவுண்டு விஸ்கியும் வாட்காவும் அவரவர் விருப்பத்துக்கேற்ப உள்ளே போனபின் எல்லாரும் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். என் கோபமும் தணிந்து விட்டிருந்தது. பொழுது போகவில்லை. பொன் சாரிடம் "உங்க மனோகரனப் பத்தி சொல்லுங்க... துட்டுதான் போச்சு, கதையாவது கேட்கலாம். நல்ல கதையா இருந்தா சரி" என்றேன்.

"அப்ப இன்னும் ரெண்டு ஸ்காச் கொண்டுவரச் சொல்லு" என்றபடி காலிக் கோப்பையை உயரே நீட்டி, "காதல் வாழ்க" என்றார் பொன்.

குழுவைச் சேர்ந்த மற்ற வெத்துவேலைகளும் கோப்பையை உயர்த்தி அவரவர் போதைக்கேற்ப, "வால்க, வாள்க, வழ்க, வய்க" என்றனர். கை நிறைய முந்திரிப்பருப்பை அள்ளி, ஒவ்வொன்றாய் வாய்க்குள் எறிந்தபடி சொல்லத் தொடங்கினார் பொன்.

இருங்கள், இருங்கள், கதையே இங்குதான் ஆரம்பம்.


தொடரும் ►►

2011/08/27

கோமதீ
1 2 ◀◀ முன் கதை

    சப்தம் கேட்டு நினைவுக்கு வந்தாள், அரைத் தூக்கத்திலிருந்த ஹோட்டல் ரிசெப்ஷன் பெண். நாற்காலியிலிருந்து எழுந்து "ஸுமி மாஸென்" என்று மன்னிப்பு கேட்டவள், எதிரே இருந்த காவல்துறை ஆட்கள் இருவரையும் பார்த்தாள். "கேசத்தெஸ்" என்றபடி போலீஸ் அடையாளச்சீட்டைக் காட்டிய இருவரும், "ஒகயநு கென்சகு" என்றனர். இறந்து போனவனுடைய புகைப்படத்தைக் காட்டினர். பலமாகத் தலையாட்டிய ரிசெப்ஷன் பெண், உடனே அறைச் சாவியை எடுத்து வந்தாள்.

இரண்டாவது மாடியின் வடக்கு மூலையிலிருந்த அறை வாசலில் நின்று தயங்கி, போலீஸ்காரர்களைப் பார்த்தாள். கதவை மூன்று முறை தட்டிவிட்டு பல வினாடிகள் பொறுத்து, கொண்டுவந்த சாவியால் கதவைத் திறந்தாள்.

உள்ளே யாருமில்லை. டோக்யோவின் பெரும்பான்மையான ஹோட்டல்களைப் போல் சிறிய அறை. இரண்டு படுக்கைகளும் சீராக இருந்தன. மூலையில் பூட்டியிருந்த ஒரு பெட்டி. உள்ளே வந்த காவல்துறை ஆட்கள் படுக்கையறையிலும் ஒட்டியிருந்த குளியலறையிலும் தேட, ரிசெப்ஷன் பெண் வெளியே நின்று கொண்டிருந்தாள்.

படுக்கையறையில் தேடிக் கொண்டிருந்தவன், துணைக்கு வந்தவனை அவசரமாக அழைத்து தலையணைக்கடியில் இருந்ததைச் சுட்டினான், "நொஷோகு". சிறிய பொட்டலம். "ஹவ்" என்று தலையசைத்தார்கள். படுக்கையைச் சுற்றித் தீவிரமாகத் தேடினார்கள்.

அடுத்த நான்கு மணி நேரத்தில் அறையில் தங்கியிருந்தவனைத் தேடிப்பிடித்து ஷிஞ்சுகு காவல்துறை மையத்திற்குக் கொண்டுவந்தனர். ஆங்கில மொழிபெயர்ப்புத் துணையுடன் இன்ஸ்பெக்டர் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். "உங்கள் பெயர்?"

"மிகேல்"

"டோக்யோ வந்த விஷயம்?"

"சுற்றுலா" என்றவனிடம், ஷிஞ்சுகு ஹோட்டல் அறையிலிருந்து எடுத்துவந்தப் பொட்டலத்தையும் பெட்டியையும் காட்டினார். பெட்டி நிறைய பணம். பொட்டலத்தில் கோகெய்ன்.

"கோகன டட்சுதன்" என்றார் இன்ஸ்பெக்டர். மொழிபெயர்ப்பாளர் விழித்துவிட்டு, கொட்டையை நசுக்குவது போல் சைகை காட்டினார்.

எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் சொல்லத் தொடங்கினான் மிகேல்.
**

    விமான நிலையத்திலிருந்து மருத்துவ உதவிக்குழு கிளம்பியது. என்ன செய்கிறோமென்று தெரியாமல் நானும் பின் தொடர்ந்தேன். அந்தப் பெண்ணிடமிருந்து விலகினால் போதுமென்று தோன்றியது. ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் சற்று அருகில் வருவது போல் உணர்ந்தேன். நிச்சயமாக என்னை விடாது பின்தொடர்கிறாள்.

காலையிலிருந்து எல்லாம் கனவு போல் நடப்பதால் ஒரு வேளை பிரமையோ? வாயிலிருந்து சிலந்தி வருவதாவது? பிரேதக்கிடங்கு வந்ததும் நின்றார்கள். நான் உள்ளே போக மனமில்லாமல் அங்கேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

முழுக்க முழுக்க கண்ணாடிக் கட்டிடத்தின் தானியங்கிக் கதவுகள் திறந்து அவர்கள் உள்ளே போனபோது, பக்கத்திலே சுழல் கதவின் பின்னால் அவளைப் பார்த்தேன். ஐந்தடி தூரம் கூடக் கிடையாது. அவளேதான். என்னதான் செய்வாள் பார்த்துவிடலாம் என்று ஆத்திரத்துடன் உள்ளே போனேன்.

அவளைக் காணவில்லை.

அவள் நின்றிருந்த இடத்தில் மஞ்சளும் சிவப்புமாய் பொடி. தொட்டுப் பார்த்தவன் அலறினேன். தொட்டவுடனே என் கை விரல்கள் அறுந்து விழுந்தது போல் இனம் புரியாத வலி. கையை விலக்கிக் கொண்டு அதிர்ச்சியில் மேலே பார்த்து, மயிர்க்கூச்செறிந்தேன்.

உத்தரத்தில், இந்த முனையிலிருந்து அந்த முனை வரை, அறுபதடி நீளத்துக்குப் பரந்து படுத்திருந்தாள். அவள் தலைமுடிக்கற்றை விழுது போல் தொங்கியாடியது. அவளுடைய கண்கள் அகண்டிருந்தன. வாயில் இப்பொழுது பற்கள் இருந்தன. ஓனாய்ப் பற்கள்.
**

    இறந்து போயிருந்த வைத்தியைப் புதைத்துவிட்டு, இரண்டு மூன்று வாரமாய் கோக், எல்எஸ்டி, எக்ஸ்டசி என்று கோமதிக்கு தினமொரு போதை மருந்தேற்றி அவனும் மிகேலும் இன்னும் மற்றவர்களும் அவள் உடலையும் மனதையும் நாசம் செய்துவிட்டிருந்தார்கள்.

"இவள் வந்து ஒரு மாதமாகப் போகிறது துரேபன். ஐ வில் கெட் ரிட் ஆப் ஹர். ரிஸ்க் அதிகம்" என்றான் மிகேல்.

"நா" என்றான் அவன். ""ஒரு அபாயமும் இல்லை. இந்தியாவின் கிராமத்துக்காரி. வெளி மொழி எதுவும் தெரியாது. போதைக்கு அடிமை. இவளால் நம்மை அடையாளம் காட்டவே முடியாது. இவளை நம் ஏஜன்டுக்கு விற்றால் நிறைய பணமும் கிடைக்கும். அடுத்த வாரம் மாவியிலிருந்து வரும் ஜேக் மசாகி இவளை வாங்கிக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறான். டேஸ்ட் பார்த்து சொல்வதாய்ச் சொன்னான். ஒகினாவா மரீன் பேஸுக்கு இப்ப முழு சப்ளை அவன்தான். அவர்களுக்குப் பிடிக்கும் இந்த மாதிரி ஜூசி கட். பேச வேண்டாம். படுத்தா போதும்" என்றான். "சாம்பிள் பார்த்து, பிடிச்சிருந்தா எல்லா ஏற்பாடும் அவனே செய்துடுவான். வழக்கம் போல நாம போய் பணம் மட்டும் எடுத்துகிட்டு வந்தா போதும். கேஷ் டீல்".

கோமதி "இன்னும் கொஞ்சம் மருந்து குடுண்ணே" என்று கெஞ்சினாள். அவன் கோகெய்ன் பொட்டலத்தை அவள் முன் ஆட்டினான். "இப்ப யாருடி தெய்வம்?" என்றான். "நீதான்ணே, குடுண்ணே" என்று அவனைச் சுற்றி வந்தாள்.

நடந்து போன கொடூரத்தை மறக்கவும் அவர்களுக்கு இணங்கி நடக்கும் போது உண்டாகும் பயம் போகவும் அவளுக்குப் போதை மருந்து தேவைப்பட்டது. அவனிடம் தினம் கெஞ்சுவாள் "ஒரே ஒரு ஊசி தாயேன்". உள்மனத்தில் மட்டும் காயம் ஆறவில்லை. காயம் ஆறாமலிருக்க வேண்டுமென்று தெய்வத்தைத் வேண்டிக்கொள்வாள். 'மறத்துப் போனாலும் மறந்து போகவிடாதே, கடவுளே. எப்ப இதை முடித்து வைக்கப் போகிறாய், முருகா?'.

முடித்து வைக்கும் வாய்ப்பு வந்தது. ஒகினாவாவில்.

சிகாகோவிலிருந்து மாவிக்குப் போய், அங்கிருந்து அமெரிக்கக் கப்பற்படை சார்ந்த மரீன் கார்கோ தனியார் சப்ளை விமானத்தில் கடத்தப்பட்டு ஒகினாவா வந்தாள்.

கோமதியுடன் சேர்த்து மொத்தம் ஆறு பெண்களைக் கடத்தி வந்திருந்தார்கள். ஓகினாவா மரீன் பேஸ் டாபரிடம் அவர்களைப் ஒப்படைத்தார்கள். அவன் அவர்களின் முகம், உதடு, பல், மார்பு, பிட்டம், அல்குல் என்று ஒவ்வொரு இடமாய்த் தொட்டுப் பார்த்துச் சோதனை செய்தான். பிறகு தலையாட்டி, "கார்கோ ஓகே" என்றான். ஒரு சீட்டெழுதிக் கொடுத்தான்.

"என்ன இது?" என்றான் மிகேல்.

"ஷிஞ்சுகு ஹோட்டல் அட்ரெஸ். அங்கே போய்க் காத்திருங்க. ஒரு பொண்ணுக்கு இருபதாயிரம் டாலர். ஆறுக்கும் சேத்து நூத்திருபது. பவுடருக்கு இருநூறு. மொத்தப் பணத்தையும் அங்கே கொண்டு வந்து கொடுப்பாங்க" என்றான் டாபர்.

சீட்டை வாங்கிப் பையில் திணித்துக் கொண்ட மிகேல், கூட்டாளியை அழைத்தான். "வா போவலாம்".

ஷிஞ்சுகுவில் காத்திருந்த இருவருக்கும் பணப்பெட்டி வந்தது. பண விஷயம் மிகேலின் பொறுப்பு என்பதால், அவன் அடுத்த விமானத்தில் சிகாகோ செல்லத் தீர்மானமானது.

ஒகினாவாவின் சிவப்பு விளக்குப் பகுதியில் கோமதியைப் புதுச்சரக்கு என்று அதிக டாலருக்கு டாபர் வாடகை பேச, இரண்டு அமெரிக்கச் சிப்பாய்கள் வந்தனர். ஆடைகளைக் களைந்துவிட்டு, "டூ இன் ஒன்" என்றனர். கோமதி, ஆடையில்லாமல் நின்றுகொண்டிருந்த இருவரையும் பார்த்துச் சிரித்தாள். அவர்கள் கழற்றிப் போட்ட பேன்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து ஆட்டிச் சிரித்தாள். பதிலுக்கு அவர்களும் இடுப்பை ஒடித்து, "லுக் அட் அவர் கன்ஸ்" என்று சிரித்தனர். கோமதியை நெருங்கினர். அவள் இருவரையும் சுட்டாள்.

முதல் குறி தவறி எங்கோ தெறிக்க, அவர்கள் இருவரும் அப்படியே வெளியே ஓட முயற்சித்தனர். மறுமுறை வைத்த குறி தவறாமல் சுட்டாள். தன் நெற்றியில். "கோமதி, நீ செய்ய வேண்டியதெல்லாம் இனிமேல் தானடி".
**

    ஷிஞ்சுகு காவல் மையத்தின் உயரதிகாரி, மிகேல் சொல்வதையெல்லாம் கேட்டபடி ஒரு சிகரெட் எடுத்துப் பற்றவைத்துக் கொண்டார். எல்லாவற்றையும் சொல்லிவிட்டு அவன் உட்கார்ந்திருந்தான். கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த போதைப்பொருள் தடுப்பிலாகா அதிகாரி, அப்பொழுது வந்த செய்தியைக் காண்பித்தார். ஒரு புகைப்படத்தை அவனிடம் காட்டினார்.

"இவள்தானா அந்தப் பெண்?" என்றார்.

"ஆமாம்" என்று தலையாட்டினான்.

"உங்கள் கூட்டாளி எங்கே?" என்று கேட்டார், போதைப்பொருள் தடுப்பிலாகா அதிகாரி.

"அவன் நேற்றே சிகாகோ..".

அவனை மறித்த போலீஸ்காரர், "அவன் நேற்று இரவு நகோயா விமான நிலையத்தில் விபரீதமாய்க் கொல்லப்பட்டான்" என்றார். அதிகாரியிடம் ஏர்போர்ட் விவரங்களைச் சொன்னார்.

அதிகாரி எழுந்து, "மிஸ்டர் மிகேல், நீங்க எங்ககூட வந்துப் பிணத்தை அடையாளம் காட்டுங்க. முழு குற்றச்சாட்டு தீர்மானமாகும் வரை உங்களை போதைப்பொருள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைத்திருக்கிறோம்" என்றார்.
**

    அங்கிருந்து நகர்ந்தேன். எதிரே இருந்த அறைக்குள் சில காவல்துறை ஆட்கள் நிற்பதைப் பார்த்து நிதானமும் தைரியமும் வந்து உள்ளே போனேன். அந்தப் பெண் இத்தனை காவல் இருக்குமிடத்துக்கு வரமாட்டாள்.

வந்து சேர்ந்த தேதி, நேரம், பதிவெண் வாரியாகப் பிணங்களைக் கிடங்குள் வைத்திருந்தார்கள். நான் அருகே சென்றபோது ஏதோ ஒரு பிணத்தை அடையாளம் காட்டுவதற்காக வெளியே எடுத்து வந்தார்கள். அடையாளம் காட்ட வந்தவனோ எனக்கு நன்றாகத் தெரிந்தவன். மிகேலா?

அப்படியானால் பிணம்? அதிர்ச்சியுடன் பிணத்தைப் பார்த்தேன். என் முகமா அது? யானைக்கால் வியாதி போல் வீங்கி, சீ ஒழுகிக் காய்ந்து போன கண்றாவி. இருந்தாலும் அடையாளம் தெரிந்தது.

என் கையை யாரோ பிடிக்க, திடுக்கிட்டேன். அந்தப் பெண்தான்.

ஒரு சில நொடிகளுக்கு மசாஜ் செய்த பெண்ணாகத் தோன்றினாள். என் கையை உதற நினைத்தேன், முடியவில்லை. இப்பொழுது கோமதியாக மாறி என் கையை அழுத்தினாள். அவள் கை விரலகள் ஐந்தும் தேள் கொடுக்காய் மாறி என்னை ஒரே நேரத்தில் கொட்ட, துடித்தேன். கொட்டிய இடத்தில் உடனே நூற்றுக்கணக்கில் கம்பளிப்புழு. அடுத்த நொடியில் அவள் கண்களிலிருந்த வந்த தீப்பொறி பட்டு, எரிந்துகொண்டே ஓடியக் கம்பளிப்புழுக்கள் என் கைகளைக் குடைந்து உள்ளே சென்றன.

அலறினேன். நான் இறந்திருந்திருந்தால் வலிப்பானேன்? துடிப்பானேன்?

"இந்தச் சாவு என் பழிக்கு ஆரம்பம். இன்னும் ஏழு பிறவி இருக்குடா, சண்டாளா.. உன்னை என்ன பாடு படுத்துகிறேன் பார். உனக்கு நரகம் கிடையாது" என்று என் காதில் சொன்னாள். சொல்லும்போதே அவள் நாக்கிலிருந்த விஷமுள் என் கன்னமெல்லாம் கீறியது. பிறகு "வாடா துரையப்பன், இனி முதல் பிறவி" என்றாள்.
⚫⚫2011/08/25

கோமதீ
1 ◀◀ முன் கதை

    வீங்கியிருந்த முகத்தின் கோரத்தைக் கண்டு ஒரு கணம் திடுக்கிட்ட மருத்துவர், இறந்தவன் கண்களை இமை விலக்கிப் பார்த்தார். நாடி பிடித்தார். பிறகு உதட்டைப் பிதுக்கி, "சுதேனி சிந்தே" என்றார். ஏர்போர்ட் தொலைக்காட்சி கேமராவைப் பார்த்ததும் சுதாரித்து, 'ஐகோ' என்றபடி ஆங்கிலத்துக்குத் தாவினார். "அல்ரெடி டெட். க்ளினிகலி அண்ட் பிசிகலி டெட்" என்றார். மரணச்சான்றிதழில் கையெழுத்திட்டு அருகிலிருந்த சிப்பந்தியிடம் கொடுத்து, "மோர்க்" என்றார்.

அதுவரைப் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்த ஏர்போர்ட் போலீஸ்காரர், "இவர் தங்கியிருந்த ஷிஞ்சுகு ஹோட்டலில் இவருடன் இன்னொரு நபரும் பதிவு செய்திருக்கிறார். அவரை விசாரணை செய்யப் போகிறோம்" என்றார்.

"ம்ம்..என் வேலை முடிந்துவிட்டது. அடாப்சி, பேதாலஜி ரிபோர்ட் வந்ததும் சொல்லுங்க" என்றபடி நகர்ந்தார் மருத்துவர். எஞ்சியிருந்த மருத்துவ உதவிக்குழு, இறந்து கிடந்தவனைப் பிணக்கிடங்கிற்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யத் தொடங்கியது.
**

    'எதற்காக இத்தனை கூட்டம்?' என்று நான் விசாரிக்க முனையும் போது, அவளை மறுபடி பார்த்தேன். இப்போது எனக்கு பத்தடி தூரத்தில் வந்துவிட்டாள். அவளைக் கவனிப்பதில்லை என்று தீர்மானித்து நகர்ந்தேன். நான் பார்ப்பதைத் தெரிந்து கொண்டவள் போல் சிரித்தாள்.

சிரிப்பு என்றால் அடக்கமான புன்னகையில்லை. எக்காளச் சிரிப்பு. எக்காளம் விடாமல் எதிரொலிக்கவே, அவளைப் பார்த்தேன். அவள் வாய் வழியாகக் குபுகுபுவெனச் சிலந்திகள் வெளிவர, நாக்கு இருக்குமிடத்தில் கருங்குழியைப் பார்த்து வெலவெலத்தேன்.
**

    "உள்ளே போங்க" என்று இருவரையும் தள்ளாத குறையாகத் தள்ளினான். "நான் உங்க பெட்டியை எடுத்துட்டு வரேன்".

"வீடு வசதியா இருக்குது, நல்ல வியாபாரம்னு சொல்லுங்க" என்றார் வைத்தி.

"அக்கா எங்கே?" என்றாள் கோமதி, முதல் வேலையாக.

பெட்டிகளை உள்ளே கொண்டு வந்து வைத்தவன், "இங்கதான் கடைக்குப் போயிருக்கும், வந்துரும். நீங்க மாடில போய் குளிச்சுட்டு வாங்க" என்றான். அவன் சொல்லும் போதே உள்ளறையொன்றின் கதவைத் திறந்துகொண்டு வெறும் ஜட்டியுடன் வந்த ஒரு வெள்ளைக்காரி அவனருகில் நின்று, திறந்த மார்பைக் குலுக்கி, டிம்பர்லேக் பாணியில் 'ஐம் ப்ரிங்கிங் செக்சி பேக்' என்று அவன் கன்னத்தைத் தட்டிவிட்டுப் போனாள்.

"இவங்க உங்க அக்காவா?" என்றாள் கோமதி, அதிர்ந்து போய்.

"இல்லமா.. என் கூட்டாளியோட பெண்டாட்டி. இதெல்லாம் இந்த ஊர்ல அப்படித்தான் இருக்கும், நீங்க போய் குளிச்சுட்டு வாங்க, போங்க" என்றான் சிரித்துக் கொண்டே.

அவர்களுடன் மாடியேறி ஒரு தனி அறையில் பெட்டிகளைப் போட்டுவிட்டு "பத்து பதினஞ்சு நிமிஷத்துல வந்துருங்க... எனக்குப் பசிக்குது, சேர்ந்து சாப்பிடலாம்" என்றான். வைத்தியிடம், "சார், அவங்க குளிச்சு வந்துரட்டும், ஒரு கை குடுக்கறீங்களா? இந்த மெத்தையைத் திருப்பிப் போட்டுறலாம்" என்றான்.

கோமதி குளிக்கப் போனதும் இருவரும் கட்டிலிலிருந்து மெத்தையை எடுத்துத் திருப்பிப் போட்டனர்.

"நாங்க தரையிலேயே படுத்துக்குவோங்க, எதுக்கு.." என்றபடித் திரும்பிய வைத்தியைக் கீழே கிடந்த கட்டையால் ஓங்கி அடித்தான்.

ஓசையின்றிக் கீழே விழுந்த வைத்தியை இழுத்துப் போய் இன்னொரு தனியறையில் அடைத்தான். சட்டைப் பையிலிருந்து ஒரு சாக்லெட் பொட்டலத்தைப் பிரித்து ஒரு சிட்டிகை கோக் எடுத்து உள்ளங்கையில் கோடு போல் பரப்பி அவசரமாக மூச்சிலிழுத்தான். தலையைச் சிலுப்பிக் கொண்டே இன்னொரு சிட்டிகை எடுத்து, கீழே மயங்கி விழுந்து கிடந்த வைத்தியின் வாயைத்திறந்து பற்களில் தேய்த்தான். கைகளைக் கழுவிக்கொண்டு கதவை அடைத்துவிட்டுக் கீழே இறங்கினான்.

படியிறங்கியவன், ஏதோ வேகம் வந்து மறுபடி மாடியேறி, குளியலறைக் கதவை ஆவேசமாக உதைத்துத் திறந்து உள்ளே போனான். "கடவுளே" என்று அலறி உடம்பை அடக்கி ஒடுக்கிக் கொண்டாலும் கோமதியால் தன் உடலை மறைக்க முடியவில்லை. மஞ்சள் சிலையாய் இருந்த அவள் உடலில் நீர்த்துளிகள் வேகமாகத் தெறித்து விழுந்ததை ஒரு நிமிடம் வெறித்துப் பார்த்துவிட்டு, சிவந்த கண்களுடன் வெளியே வந்தான். படிகளில் தாவி இறங்கிக் கீழே இறங்கி வெளிக்கதவை அடைத்தான். சோபாவில் சாய்ந்து படுத்து, மேல்சட்டையைக் கழற்றி எறிந்தான். சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துப் பிடித்தான்.

வெகு நேரமாகக் கீழே இறங்கி வராமல் இருந்தவள் மீது கோபம் வந்து மாடிக்கு விரைந்தான். அறைக்குள்ளே சுவற்றில் சாய்ந்தபடி அழுது கொண்டிருந்தாள் கோமதி. அவனைப் பார்த்ததும், "எங்களை தயவு செய்து ஏதாவது கோவில்ல கொண்டு விட்டுருங்க, இந்த இடம் எங்களுக்குப் பிடிக்கலை. அவர் எங்கே?" என்றாள் அழுவதை நிறுத்தாமல்.

"சரிதான், எழுந்திருடி" என்று அவள் கைகளைப் பிடித்திழுத்தான். அதிர்ச்சியுடன் நகராமல் இருந்தவளின் முடியைப் பிடித்தெழுப்பி நிறுத்தினான்.

உதட்டில் முத்தமிட வந்தவனைத் தள்ளினாள் கோமதி. "வேண்டாம்.. நீங்க அண்ணன் மாதிரி. இந்தப் பாவம் வேண்டாம். நாங்க போயிடறோம்".

அவள் மேல் பாய்ந்துக் கட்டிப் பிடித்தான். வெறியோடு அவளை மெத்தையில் தள்ளினான். அவள் இடுப்பில் ஒரு கை வைத்து, புடவைக்குள் மறு கை நுழைத்த்தான். ஆத்திரத்தோடு இரண்டு கைகளாலும் அவன் முகத்தைப் பிடித்துத் தள்ளி, வேகமாகப் புரண்டு எதிர்புறம் போய் விழுந்த கோமதி, கட்டிலைச் சுற்றி ஒடினாள். அவன் கைகளில் சிக்காமல், ஏதாவது ஆயுதம் தென்படுகிறதாவென்று பார்த்தாள். "என்னங்க, இங்கே வாங்க..." என்று கணவனைக் கூவியழைத்து அலறினாள்.

போதையேறியவனுக்கு இது விளையாட்டாயிருந்தது. கோமதி அங்கே இங்கே ஓடுவதையும் தேடுவதையும் அலறுவதையும் பார்த்துச் சிரித்தான். திடீரென்று தன் கால்சட்டையை அவிழ்த்து அவள் மேல் எறிந்தான். வேகமாக அவள் மேல் தாவி அவள் மார்பில் இரண்டு கைகளையும் வைத்து, "வா" என்றான். திமிறி, அவன் முகத்தில் நகத்தால் கீறினாள்.

கோமதியின் கைகளை உதறி விலகியவன், அவள் முந்தானையைப் பற்றியிழுத்தான். கீழே தடுமாறி விழுந்தவளுடைய புடவையை, குனிந்து அவள் வயிற்றிலிருந்து கணத்தில் நீக்கினான். தன் வயிற்றருகே குனிந்தவனுடைய தலையைத் தன் முழங்காலால் பலம் வந்தமட்டும் இடித்தாள். தலையில் அடி வாங்கியவன் இன்னும் சிரித்தான். அவள் அலறினாள். "ஐயோ.. யாராவது என்னைக் காப்பாத்துங்க... கடவுளே... முருகா... பராசக்தி... பரமேஸ்வரி.. என்னை விட்டுறுங்கண்ணே.... உங்களுக்கு இந்தப் பாவம் வேண்டாம்". கைகூப்பிக் கதறினாள்.

கோமதியைச் சுவரோரம் தள்ளி, அவள் கைகளைப் பிணைத்து உடலோடு உடல் வைத்து அழுத்தினான். பிறகு அவள் கால்களில் தன் முழங்கால்களை வைத்து மண்டியிட்டு அழுத்தி, அவள் தொப்புளில் வாய் வைத்தான். அவள் நகர முடியாமல் கதறினாள். "யாராவது என்னைக் காப்பாத்துங்களேன்... என்னங்க..எங்கே இருக்கீங்க? என்னைக் காப்பாத்துங்க... முருகா.. முருகா".

    "அவளை விடுறா, நாயே" என்று கதறியபடி அறைக்குள் வந்தார் வைத்தி. நிற்க முடியாமல் தடுமாறினார். கையில் கொண்டு வந்திருந்த கட்டையால் அவன் தலையில் அடிக்கப் போய், குறி தவறி அவன் கைகளில் அடித்தார். அவளை விட்டு நகர்ந்தவன் சுதாரிக்குமுன், சுவற்றில் மாட்டியிருந்த ஒரு படத்தை எடுத்து அவன் முகத்தில் அடித்தார். "என் தங்கமே கோமதி..." என்று அவள் கைகளைத் தொட்டார். பிறகு ஆத்திரத்துடன் அவனை உதைத்தார்.

உதைத்த வைத்தியின் கால்களைப் பற்றித் தூக்கியடித்தான். வைத்தி சுவரோரமாக விழுந்தார். அவன் உடனே எழுந்து கட்டிலருகே இருந்த மேஜையைத் திறந்து ஒரு கைத்துப்பாக்கியை எடுத்து, இன்னும் தடுமாறி எழுந்து கொண்டிருந்த வைத்தியை நெற்றியில் சுட்டான்.

"ஐயோ" என்று அலறிய வைத்தியைக் கைத்தாங்கலாகப் பிடித்த கோமதி, அவருடன் சேர்ந்து கீழே விழுந்தாள். கண்களில் வருத்தத்துடன் தன் மனைவியையே பார்த்தபடி, சில நொடிகளில் இறந்து போனார் வைத்தி.

அவள் விடாமல் அலறிக்கொண்டிருந்தாள், "ஐயோ".

    அலறிக் கொண்டிருந்தவளை அப்படியே தூக்கிக்கொண்டு அடுத்த அறைக்கு நடந்தான். "ஐயா என்னை விட்டுடு, புண்ணியமா போகும்" என்று அவள் கெஞ்சக் கெஞ்ச, அவன் அவளைப் படுக்கையில் தள்ளினான்.

கீழேயிருந்து கோக் கலந்த விஸ்கியை எடுத்து வந்தக் கூட்டாளி மிகேலும் வெள்ளைக்காரியும் அவனுடன் சேர்ந்து கொண்டனர். வெள்ளைக்காரி கோமதியை அழுத்திப் பிடித்துக்கொள்ள, அவன் கொஞ்சம் கோக் எடுத்து கோமதியின் உதட்டில் ஒற்றி முத்தம் கொடுத்தான்.

காறித்துப்பினாள். "இந்தப் பாவம் உன்னை விடாது. ஏழு பிறவியிலும் உன்னை விடாது. உன்னை என்ன பாடு படுத்துகிறேன் பார்" என்றாள்.

மிகேல் கோமதி மேல் கோகெய்னை அள்ளி வீசினான். வெள்ளைக்காரி கோமதியின் இடுப்பைக் கட்டிப் பிடித்தாள். அவன் கோமதியின் வாயில், அவள் கதறக்கதற, கோக் கலந்த விஸ்கியை ஊற்றினான்.

சக்தியில்லாமல், "தெய்வமே தெய்வமே" என்று தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்த கோமதியை மூவரும் மாற்றி மாற்றி அனுபவித்துக் களைத்துப் போய் ஓய்ந்தபோது, அதிகாலை மணி மூன்றுக்கு மேலானது.

அவர்கள் ஓய்ந்து விலகியதும், உடலெங்கும் விஸ்கியும் போதைப்பொருளும் பரவி அருவருப்பூட்ட, முரட்டுத்தனத்தினால் ஏற்பட்ட காயங்களிலிருந்து ரத்தம் கசிய, உடல் வலியால் நகர முடியாமல் "முருகா முருகா" என்று அழுதாள். சிறிது நேரம் பொறுத்து மெள்ள அடி மேல் அடியாகத் தவழ்ந்து, பக்கத்து அறையில் நான்கைந்து மணி நேரமாக இறந்து கிடந்த கணவனருகே வந்து அவர் கைகளைப் பற்றினாள். சில நொடிகளில் நினைவிழந்தாள்.
**

►►

2011/08/24

கோமதீ    "அரிகாதொ". வாட்கா கலந்த மூலிகைத் தேநீர் கொண்டு வந்து கொடுத்த மசாஜ் செய்யும் அரை நிஜார் பெண்ணுக்குத் தலைபணிந்து நன்றி சொல்லிவிட்டு, பதில் நன்றி சொல்ல அவள் குனிந்த போது மார்பு தெரிகிறதா என்று பார்த்தான்.

"மடா இகிமாசு". திரும்பி வருவதாகச் சொல்லி அவள் நடந்தபோது, நடைக்கேற்றபடி அசைந்த இறுக்கி உயர்ந்த அளவான பிட்டங்களின் கவர்ச்சியில் கண்ணையும் மனதையும் செலுத்தியபடி, விசாலமான சொகுசு நாற்காலியில் சாய்ந்து கொண்டான். இவளை இங்கேயிருந்து கடத்திக் கொண்டு போனால் நன்றாக இருக்குமேயென்று நினைத்துக் கொண்டான்.

அமெரிகாவிலிருந்து பெண்களைக் கடத்திக் கொண்டு வந்து இங்கே விற்பது போல், எதிர்த்திசையிலும் செய்யலாமென்று கூட்டாளியிடம் சொல்லவேண்டும் என்று தீர்மானித்தான். மசாஜ் பெண் திரும்பி வரும்போது எப்படியும் அவளைத் தொட்டுவிட வேண்டும் என்று காத்திருந்தான்.

கைகளில் ரப்பர் கட்டை போல் ஏதோ எடுத்துக்கொண்டு திரும்பி வந்தவள், புன்னகைத்துவிட்டு, அவன் முகத்தில் நறுமணம் வீசும் துண்டைப் போர்த்தினாள். பின்னர் தலையைச் சிலிர்த்துக்கொண்டு சற்றும் எதிர்பாராவிதமாக ரப்பர் கட்டையினால் அவன் முகத்திலும் மண்டையிலும், மாற்றி மண்டையிலும் முகத்திலும், அறுபது மைல் வேகத்தில் அடித்தாள். வலியால் துடித்தாலும், அவன் வாய் திறக்க முடியாதபடி அசுரவேகம். கைகால்கள் பொம்மலாட்டம் ஆட, அரை நிமிடத்துக்குள் முகமெல்லாம் வீங்கி மூச்சு நின்றுபோய் இறந்தான், சொட்டு ரத்தம் சிந்தாமல். கத்தியினிறி ரத்தமின்றி யுத்தம்.

செப்டம்பர் 11க்கு பிறகு உலகின் பெரும்பாலான விமான நிலையங்களில் உயிர் போகிற நெருக்கடி என்றால் கூட அவசரமாக ஒன்றும் செய்ய முடியாது. நகோயா விமான நிலையத்திலும் இதே தொல்லை தான். போதாக்குறைக்கு அவன் இருந்ததோ முதல் வகுப்புப் பிரயாணிகளுக்கான தனி ஓய்வறை. இறந்து போயிருந்தால் கூட உண்மை தெரியவர நேரமாகும். அதுவும் பார்ப்பதற்கு வெளியூர் போல் தெரிந்தால் பக்கமே வரமாட்டார்கள்.

ஒரு மணி நேரம் கழித்து யாரோ ஒரு பயணி சந்தேகத் தகவல் சொல்லி விவரம் தெரிந்ததும், நெரிசலாய் கூட்டம். விமான நிலையக் காவல்துறை, விமானப் பணியாளர், மருத்துவ உதவிக்குழு என்று எல்லோரும் ஓடி வந்தனர். இறந்தவன் ஜப்பானியனோ, அமெரிக்கனோ, அதுவுமில்லாத வெள்ளைக்காரனோ இல்லை என்று தெரிந்ததும் சற்றுத் தயங்கினர். "இன்டியன் தெசு" என்று இழுத்தாள் ஒருத்தி. இன்னொருத்தி டி-பிப் கொண்டு வந்து உனக்காச்சு எனக்காச்சு என்று அவன் மார்பில் அடி மேல் அடியாய் அடித்தாள். அவன் நகராத அம்மியாய் இருந்தான். தற்போதைக்கு யாரென்றுத் தீர்மானமாகாத, அனாதைப்பிண அம்மி.
**

    விமான நிலையத்துக்குள் ஒன்றும் புரியாமல் சுற்றிக் கொண்டிருந்தேன். எப்படி இங்கே வந்தேன் என்று மறந்து விட்டது. ஏதோ உருப்படாமல் யோசித்துக் கொண்டிருக்கையில் சுமார் முப்பதடி தூரத்தில் அவளைப் பார்த்தேன். முகம் சரியாக விளங்காத ஒரு பெண். கூட்டத்தில் தனியாகத் தெரிந்தாள். நான் அவளைப் பார்த்தது தெரிந்தும் பார்வை விலக்காமல், என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். நான் நகர்ந்தேன். எங்கேயாவது பார்த்திருக்கிறேனா? ஏன் என்னை வெறிப்பது போல் பார்க்கிறாள்?

என்னருகே கலவரம். போலீஸ்காரர்களும் நர்ஸ், மருத்துவர் என்று பலரும் ஓடிக் கொண்டிருந்தார்கள். என்னவென்று பார்க்க நினைத்துப் பின்தொடர்ந்தேன். மறுபடி அவளைப் பார்த்தேன். எனக்கு இருபதடி தூரத்தில், என்னையே பார்த்தபடி நின்றிருந்தாள். கோபம் வந்தது. 'ஏன் இப்படி என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாய்?' என்று கேட்கலாமென அவளை நோக்கி நகரத் தொடங்கியபோது, நான் திடுக்கிடும்படி அவள் வலது கண்ணிலிருந்து ரத்தம் கொட்டியது.
**

    வெளிநாட்டுப் பயணிகள் வந்திறங்கும் ஒஹேர் விமான நிலையத்தின் ஐந்தாவது நிறுத்தம். லன்டன், ப்ரேங்பர்ட், ஆம்ஸ்டர்டேம், ரோம் என்று ஐரோப்பிய நகரங்களிலிருந்து நேரத்துடனும் நேரம் கடந்தும் சொல்லிவைத்தாற்போல் ஒன்றாக வந்துத் தரைதொட்ட விமானங்களில் வந்த பயணிகள், பரிசோதனைகளை முடித்துக் கொண்டு உள்ளூர் விமானமேறவோ, சிகாகோவில் சுற்றுலாவவோ, வாடகை வண்டி பிடித்து வீடு போய்ச்சேரவோ, எலிகள் போல் கூட்டம் கூட்டமாய் வெளிவந்தனர். சூட்கேஸ் சுமக்கும் எலிகளை வரவேற்கக் காத்திருந்தது இன்னொரு எலிக் கூட்டம். இந்த நெருக்கடியில் தகாத செயல் செய்யத்துணியும் சிறுநரிக் கூட்டம். அவன் அந்தச் சிறுபான்மைச் சிறுநரிகளில் ஒருவன்.

ப்ரேங்க்பர்டிலிருந்து வந்திருந்த விமானப் பணிக்குழு வெளிவரக் காத்திருந்தான். கையில் கால் கிலோ போதைப்பொருளுடன். விக்டோரியா பவுன்டன், மிசிகன் வழி, சியர்ஸ் டவர் என்று பலவித வண்ணப்பட முகப்புடன், 'ஸ்வீட் சிகாகோ' என்ற வார்த்தைகள் செதுக்கப்பட்ட, அட்டைப்பெட்டியினுள் சிறு சாக்லெட் பொட்டலங்களில் கோகெய்ன்.

விமானப் பணிக்குழுவிலிருந்து வரும் இரண்டாவது பைலட்டிடம் பெட்டிகளைக் கொடுக்க வேண்டியது அவன் வேலை. முதல் பைலட்டிடமிருந்து பணம் வாங்கிக்கொண்டு வருவது கூட்டாளி மிகேலின் வேலை. தொலைவில் இரண்டாவது பைலட் வருவது தெரிந்ததும் மெள்ள நடந்து, அன்னியச் செலாவணி விற்பனைக்கூடத்தைக் கடந்து, மெக்டானல்ட்ஸ் எதிரே இருந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்தான். பைலட் வந்து சேர பத்து நிமிடமாவது ஆகும். அமரும்போது அண்மையில் நின்றிருந்த இருவரையும் பார்த்தான்.

பட்டுக்கரை வேட்டி சட்டையணிந்து நெற்றியில் விபூதி குங்குமத்துடன் கொஞ்சம் வயதானவன் போலிருந்தான் ஆண். ஓரளவுக்கு நேர்த்தியான சின்னாளப்பட்டு புடவையும், கழுத்தில் மணித்தங்கம் சேர்த்தப் புத்தம் புதிய பளிச் மஞ்சள் கயிறும், நெற்றியில் நல்ல சிவப்பில் குங்குமப்பொட்டும் அணிந்து அவனுடன் ஒட்டிக்கொண்டு, இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டிருந்தாள் பெண். இருபது கூட சொல்லமுடியாத வயதில் இத்தனை வாளிப்புடன் சாதுவாக இருக்கும் அந்தப் பெண்ணை இன்றைக்குப் போட்டால் நன்றாக இருக்குமே என்று விகாரமாய் நினைத்தான்.

அவர்களிருவரையும் இங்கிருந்தே கவனித்தவன், சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் கண்கள் தற்செயலாய் இவன் பக்கம் வந்தபோது, தேடிக்கலந்து புன்னகைத்தான். மருண்டு போய் முகம் திருப்பிக்கொண்டவளின் சற்றே விலகிய முந்தானையில் தெரிந்த செழிப்பான மார்பையும் பிளவையும், கண்ணால் பார்த்து மனதால் தொட்டான். அவன் கவனிப்பது தெரிந்தோ இயல்பாகவோ மார், தலை, முகம் என்று எல்லாவற்றையும் புடவைத் தலைப்பால் சுற்றிக்கொண்டவளின் கண்களில் தெளிவான அச்சத்தைப் பார்த்தான். இரையின் மருட்சி. 'எங்கே இந்த சோதாப்பய?' என்று நினைத்தபோது எதிரில் வந்து உட்கார்ந்தான் பைலட்.

"என்ன சாப்பிடுகிறாய்?" என்று கேட்டான் பைலட்டிடம். 'பிக் மேக் அன்ட் கோக்' என்று பதில் வந்தால் பணம் சரியாக இருக்கிறது, சரக்கு தரலாம் என்று பொருள். 'பிக் மேக் அன்ட் வாடர்' என்றால் சரக்கு தர வேண்டாம் என்று பொருள். பணத்தைச் சரிபார்த்துவிட்டு மிகேல் பதில் சொல்லிக் கொடுத்து அனுப்பியிருப்பான்.

"பிக் மேக் அன்ட் கோக்" என்றான் பைலட்.

தன்னிடமிருந்த மூன்று அட்டைப்பெட்டிகளை அந்தப் பைலட்டுக்கு அருகேயிருந்த நாற்காலியில் வைத்துவிட்டு சாதாரணமாய் நடந்தான்.

திரும்பிப் போகலாமென்று நினைத்தவன், அந்தப் பெண்ணின் கபடமில்லாத அபரிமித வளைவுகளையும் விறைத்த மார்பையும் மறக்க முடியாமல் உடம்பெல்லாம் பாதரசமாய்ச் சூடேறி, துரிதமாக அவர்கள் எதிரே சென்று நின்றான். அவளைப் பார்த்து, வேண்டுமென்றே வளமான ஆங்கிலத்தில், "ஏதாவது உதவி தேவையா?" என்றான்.

"ஏங்க, ஏதோ கேக்கறாரு பாருங்க" என்றாள் அந்தப் பெண், அருகிலிருந்த ஏங்கவிடம். தேனில் தோய்த்த குரல். அவளை அப்படியே நக்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. பொறுமை என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, "நீங்க தமிழா?" என்றான் செயற்கை நட்புடன்.

"ஆமாம், அண்ணே" என்றாள். தமிழ்க்குரல் கேட்டதும் அவள் மருட்சி அகன்றது போல் பட்டாலும் 'அண்ணே'யில் அழுத்தம் அதிகமாகத் தொனித்தது.

"உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா?" என்றான் ஆணிடம்.

"அவருக்குக் காது கொஞ்சம் செவிடுங்க; உரக்கப் பேசுங்க" என்றவள், ஒலி கூட்டி "ஏங்க.. ஏதாவது உதவி வேணுமானு கேக்கறாரு பாருங்க" என்றாள் ஆணின் காதருகே.

ஆண் சுதாரித்து,"ரொம்ப நன்றிங்க.. நான் இந்த ஊர்ல ராமர் கோவில் கும்பாபிஷேக வேலைக்கு வந்திருக்கங்க. சிலை செதுக்கி, வண்ணம் பூசறதுங்க. தச்சு வேலையும் செய்வேன். எங்க ப்ளைட்டு ஜர்மனிலே யாரோ தீவிரவாதிங்க வந்துட்டாங்கன்னு ரொம்ப தகராறு பண்ணி அந்தப் ப்ளேன்லந்து எங்க எல்லாரையும் இறக்கிவிட்டாங்க. அடுத்த பிளைட்டுனு தினம் தினம் போய் மூணு நாளைக்கு இடம் இல்லேன்னுட்டு, இன்னிக்குத்தான் எங்களை ஏத்திவிட்டாங்க. பாசையும் தெரியாம, கைல காசும் இல்லாம ரொம்ப சிக்கலாயிருச்சுங்க. எங்களைக் கூட்டிப்போக வரவேண்டியவங்களுக்கு சேதி சொல்லவும் வழியில்லை. ப்ளேனு மாறிடுச்சுனு அனேகமா அவங்களே சேதி தெரிஞ்சுகிட்டு வருவாங்கனு பாத்துக்கிட்டு இருக்கோம். இல்லைனா ஏதாவது டாக்ஸி எடுத்துகிட்டு ராமர் கோயில் தெரியுமானு கேட்டுகிட்டே போவணும்" என்றான்.

"அரோராவா, லெமான்டா, மேற்கு சிகாகோவா? எந்தக் கோவில் சார்?"

"விலாசம் இருந்துச்சு.. இங்கே இப்படி எடுக்குறப்ப நெரிசல்லே எவனோ படுபாவி தட்டி விட்டுட்டான்"

"ஏன் சார், இது என்ன மாம்பலமா, ராமர் கோவில் எங்கேனு கேட்டுகிட்டே போக? உங்களுக்குப் பரவாயில்லைனா என் கூட கார்ல வாங்க. எங்க வீட்ல இன்னிக்கு தங்கிட்டு, நாளை ஒவ்வொரு கோவிலா காட்டி உங்களைக்கொண்டு விடறேன். இருட்டிடுச்சு பாருங்க, குளிர் காலம் வேறே"

"உங்களுக்கு ஏன் அண்ணே வீண் கஷ்டம்?" என்றாள் பெண், சந்தேகத்தைச் சாதுரியமாக மறைத்தபடி.

"அதெல்லாம் ஒண்ணும் இல்ல, தங்கச்சி" என்றான் அழுத்தமாக. "பயப்படாம வாங்க. வீட்ல எங்க அக்கா இருக்கு, எல்லாம் பாத்துக்குவா. வீட்லந்து கோயிலுக்கு போன் பண்ணி விவரமெல்லாம் கேட்டுக்கலாம்" என்றான். "வாங்க சார்" என்றான், ஆணிடம் உரக்க.

அக்கா என்றதும் சற்று அமைதியானாள். இருவரும் அவன் காரில் ஏறிக்கொண்டனர். ஏறக்குறைய உடைந்து போயிருந்த அவர்களுடைய இரண்டு பெட்டிகளையும் காரின் பின்பெட்டியில் போட்டுவிட்டு வந்தான். பின்னால் உட்கார்ந்திருந்தவர்களைக் கண்ணாடியில் பார்த்துச் சிரித்தபடி காரைக் கிளப்பினான். "எந்த ஊர் நீங்க?" என்றான் உரக்க.

"சீர்காழி. என் பேர் வைத்திங்க. இவ என் பெண்டாட்டி கோமதி. ஊர் சுவாமிமலை. இப்பத்தான் கல்யாணமாச்சு..ரெண்டாம் தாரம். நீங்க எந்த ஊர்? உங்க பேரென்ன, அண்ணே?"

"நான் மெட்ராஸ் பக்கம், பொழிச்சலூர். பேரு துரையப்பன்" என்றான்.

"என்ன வேலை பண்றீங்க?"

"சாக்லேட்" என்றான். "ஸ்கூல், காலேஜ்ல போய் சாக்லேட் வியாபாரம். வீட்டுக்கு வந்ததும் உங்களுக்கும் கொஞ்சம் தரேன்".

"இவளுக்குக் குடுங்க, எனக்கு சாக்லேட் எல்லாம் பிடிக்காது. இவளுக்குத்தான் சாக்லெட் பால் எல்லாம் பிடிக்கும். எனக்கு எல்லாம் பேதியாயிரும்" என்றார் வைத்தி.

"அதனாலதான் அப்படி தளதளனு இருக்காங்க, தக்காளி மாதிரி" என்றான், வேண்டுமென்றே மெதுவாக.

"என்ன சொன்னீங்க?" என்று திரும்பக் கேட்ட வைத்திக்கு பதில் சொல்லாமல் காரைச் செலுத்தினான்.

அரைசெவிட்டுக் கணவன் தலையாட்டுவதைக் கண்ட கோமதி, இனம் புரியாமல் கலவரப்பட்டாள். 'நவசக்தி வினாயகா, உனக்கு ஒரு தேங்கா உடைக்கிறேன், இக்கட்டு இல்லாம காப்பாத்து. அங்காள பரமேஸ்வரி, உனக்கு மாவிளக்கு ஏத்துறேன் தாயே' என்று மனதுக்குள் சொல்லத் தொடங்கினாள்.

அவனோ, 'தக்காளியை ராத்திரியே ஜூஸ் பிழிஞ்சிடறேன்' என்று மனதுள் திட்டம் போட்டுக்கொண்டிருந்தான்.
**

►►


2011/08/19

படித்தால் மட்டும் போதும்

போக்கற்ற சிந்தனை


சமீபத்தில் படித்த சில பழைய, சில புதிய, புத்தகங்கள்.


'i awoke friday, and because the universe is expanding it took me longer than usual to find my robe'
- 'strung out' சிறுகதையின் துவக்கத்தில்.

நான் பெரிதும் மதிக்கும் கலைஞன் உடி ஆலன். கட்டுரை, கதை, நாடகம், திரைப்படம், பாடல் என்று எதையும் விட்டு வைக்காத உன்னத எழுத்தாளர்.

ஆங்கில அகராதியின் உதவியில்லாமல் என்னால் இவர் எழுத்தைப் படித்துப் புரிந்து கொள்ள முடியாது என்றாலும், ரசிக்க முடியாமல் போனதே இல்லை. இந்தத் தொகுப்பில் சிறுகதைகள் மட்டுமே என்பது இன்னும் சிறப்பு. பரபரப்பான உலகச் செய்திகளை அடிப்படையாக வைத்து எழுதியிருக்கும் பதினெட்டு சிறுகதைளில் சில,வயிற்றைப் பிடித்துக் கொண்டு மூச்சு முட்டும் வரை சிரிக்க வைத்தன. வீரப்பன்-ராஜ்குமார் விவகாரத்தை ஒட்டி ஒரு கதை எழுதியிருக்கிறார்.

இதைவிட அருமையான புத்தகங்கள் சில எழுதியிருக்கிறார். சிறுகதைகள் பிடிக்குமென்றால் இந்தப் புத்தகம் படிக்கவும்.

★★★

"இது என்ன பட்டன், தங்கமா?" என்று அவள் சட்டைப் பட்டனைத் தொட்டான்.
வசந்துக்கு விமோசனமே கிடையாது.

- நாவலின் முடிவில்.

தமிழில் சரளமாகப் படிக்கத் தொடங்கியதும் அறிமுகம் செய்து கொண்ட முதல் எழுத்தாளர் சுஜாதா என்று நினைக்கிறேன். பாக்கியம் ராமசாமியாகவும் இருக்கலாம். அனிதா இளம் மனைவி என்ற புத்தகமே முதலில் படித்த சுஜாதா கதை. அதிகம் படித்த தமிழ் எழுத்து சுஜாதாவினது தான்.

இந்தக் கதை மாலைமதியில் வந்தபோது படித்துவிட்டுச் சிலிர்த்தது நன்றாக நினைவிருக்கிறது. கதையை விட, கதை முடிவின் குறும்பை 'ஆகா, சுஜாதா சுஜாதா தான்!' என்று போற்றி விவாதித்த நாட்களுண்டு.

எஸ்ஏபியின் சொதப்பல் முடிவை ஏற்காமல், சுஜாதாவே துணிந்து எழுதி முடித்திருக்கலாம் என்று அன்றைக்கும் நினைத்ததுண்டு. இத்தனை வருடங்களுக்குப் பிறகாவது சுஜாதா எழுதிய அசல் முடிவையும் சேர்த்து வெளியிட்டிருக்கலாம்.

★★★

'one of the torments inflicted on junius was the strappado.. in this cruel act, the victim's arms are tied behind him, the torturer then pulls him up by his tied hands to a height above the floor and lets him drop..'
- புத்தகத்தின் துவக்கத்தில்.

பேய், பிசாசு, மந்திரம், சூனியம் இவை உங்கள் பிள்ளைகளுக்குப் பிடிக்குமா? அவர்களுக்கான புத்தகம். அந்த சாக்கில் நாமும் படிக்கலாம். பிரமிக்கலாம். இத்தகைய நம்பிக்கைகள் வெகுவாகப் புழங்கிய, கத்தோலிக்க மதத்தின் அடக்குமுறைக் கொடுமைகளுக்குள்ளான, பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தைப் பற்றிக் கதைகள், குறிப்புகளுடன் எழுதப்பட்டிருக்கும் அருமையான புத்தகம்.

தூங்கவைக்க வாய்ப்பு கிடைக்கும் நாட்களில் பிள்ளைகளுக்குப் புத்தகம் அவசியம் படிப்பேன். இந்தப் புத்தகத்திலிருந்து சில பக்கங்களைப் படித்த அன்று நள்ளிரவுக்கு மேல், 'daddy, can i sleep in your room?' என்று என் பதிலுக்குக் காத்திராமல், அருகில் ஒட்டிப் படுத்துக்கொண்டான் மகன். பிள்ளைகளின் நெருக்கத்தை இப்படியும் பெறலாம்.

★★★★

it's boilable, poachable, fryable;
    it scrambles, it makes a sauce thicken.
it's also the only reliable
    device for producing a chicken.
- முட்டையைப் பற்றி ஒரு கவிதை.

limerick பிடிக்குமா? இந்தப் பாணி நகைச்சுவைக் கவிதைகளை அள்ளி அள்ளித் தந்தவர் பெலிசியா லேம்போர். கவிதை மட்டுமல்ல, ஒரு சொல்லை அதன் பொருளின் வடிவத்தில் 1940களில் எழுதிய முதல் எழுத்தாளர் இவர். உதாரணமாக,
      ப
          டி
              யி
                  ல் இறங்கி நடந்தான்
என்று நிறைய பிரபலங்கள் இவரைப் பின்பற்றி எழுதியிருக்கிறார்கள்.

ஆழ்ந்த உளவியல் விவகாரங்களையும் அசாதாரணமாக limerick செய்திருக்கிறார்.
the aftereffects of a mother's neglects
   may spoil her boy's orientation to sex
but the converse is worse; if she overprotects
   the patter of oedipus wrecks

நான் அடிக்கடி படிக்கும் புத்தகங்களுள் ஒன்று. திருவாளர் சென்னைப்பித்தனுக்கு இந்தப் புத்தகம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

★★★★

india, the land where heart is king!
- புத்தகத்தின் நடுவில்.

ஆஸ்திரேலியக் குற்றவாளி ஒருவன் கடுங்காவல் சிறையிலிருந்து பட்டப்பகலில் தப்பித்து, மும்பை வருகிறான்; மும்பையில் இன்னும் சில குற்றங்கள், கடத்தல், mafia என்று தொடர்கையில், மும்பையின் சேரிப்பகுதியில் இலவச மருத்துவமனை திறந்து மனம் வருந்துகிறான். தன்னறிவு பெறுகிறான். இது தான் கதை. உண்மைக் கதை.

தன் கதையைப் புத்தகமாக எழுதியிருக்கும் ராபர்ட்ஸ் அதை சுவாரசியமாக எழுதியிருக்கலாம்.

இந்தியாவைப் பற்றி ராபர்ட்ஸ் எழுதியதைப் படித்ததும், இந்தியாவின் நெரிசலும் புழுதியும் சாக்கடையும் சச்சரவும் சகிக்கக்கூடியதாகத் தோன்றியது. வெளிநாட்டவர் கண்ணில் எப்படிப்பட்ட பார்வை!

ஆங்காங்கே பிரமித்தாலும், சமீபத்தில் படித்த சுமாரான புத்தகம்.

★★


'வாராவாரம் கோவிலுக்குப் போகும் உணர்வோடு மக்கள் இதை உட்கார்ந்து ரசித்தார்கள்'
- பாலுமகேந்திரா

தமிழின் சிறந்த சிறுகதைகள் எனப் பதினைந்து சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து, குறும்படமாக எடுத்து, சின்னதிரையில் தொடர்ந்து ஒரு வருடம் வெளியிட்டாராம் பாலுமகேந்திரா. அதைக் கோவிலுக்குப் போகும் உணர்வோடு பொதுமக்கள் பார்த்தார்கள் என்கிறார். ஸ்ரீராமைக் கேட்டால் உண்மை தெரியும்.

அந்தக் குறும்படங்களின் மூலச் சிறுகதைகளையும், அவைகளுக்கு பாலுமகேந்திரா குழு எழுதிக்கெடுத்த, i mean எழுதிக் கொடுத்த, திரைக்கதைகளையும் தொகுத்து இரண்டு பாகப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். குறும்பட டிவிடியும் சேர்த்து.

பாலுமகேந்திரா மோசமான திரைக்கதாசிரியர் என்பதற்கு இதைவிட வேறு அத்தாட்சி தேவையில்லை என்று நினைக்கிறேன். திரைக்கதைகளைப் படித்துவிட்டு பயந்து, இன்னும் குறும்படங்களைப் பார்க்கவே இல்லை. சிவசங்கரி, மாலன் சிறுகதைகளைச் சிதைத்த பாவம் பாலுமகேந்திராவைச் சுற்றட்டும்.

பாலுமகேந்திராவின் கலையை நான் ரசித்ததேயில்லை என்ற full disclosureடன்:
நான் சமீபத்தில் படித்த மோசமான புத்தகம்.


கொலை நடந்தது என்று தகவல் கிடைத்ததும் போலீசார் முதலில் செய்வது என்ன? திருடனைக் கண்டு பிடிக்க திருட்டு நடந்த இடத்துக்குப் போகுமுன்னரே போலீசார் என்ன செய்வார்கள்? ரத்தக்கறையை வைத்துக் கொண்டு இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் என்ன செய்வார்? கணேஷ்-வசந்த் பென்சில் அடித்துப் பார்க்கும் தத்துவம் எப்படி வந்தது? அரெஸ்ட் வாரன்ட் இல்லாவிட்டால் என்ன செய்யலாம்? குற்றவாளி என்று சந்தேகம் வந்தவுடன் என்ன செய்ய வேண்டும்? குற்றவாளிகளின் மனநிலை என்ன? கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தொடர்கொலை... இவற்றின் பின்னணி என்ன? ஒரு நல்ல துப்பறிவாளருக்கு எத்தகையத் தற்காப்புகள் தேவை?

இன்னும் நிறைய சுவாரசியமான விவரங்கள். பொழுது போவது தெரியாமல் படிக்க முடிகிற புத்தகம்.

கொலைக்கதை, துப்பறியும் கதை எழுத விரும்புவோர்கள் படிக்க வேண்டிய புத்தகம். எழுத விரும்பாதவர்கள், அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

இந்தப் புத்தகத்தைப் படித்தபோது சில கதைக்கருக்கள் கிடைத்தன. சுவைபட எழுத வரவில்லை.

★★★
இன்னும் படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்.

நாடகம் என்றால் அது மேடை ஏறுவதில் தான் முழுமை பெறுகிறது என்பது என் கருத்து. ஆனால் என் பல நாடகங்கள் தமிழ்நாட்டில், நான் எழுதிய மொழியில், மேடையேறவில்லை என்ற குறை எனக்கு உண்டு
- இந்திரா பார்த்தசாரதி.


முதன் முதலாக இவரது நாடகம் ஒன்றை கல்லூரி நாட்களில் படித்தேன். இவர் எழுத்தில் ஒரு ஈர்ப்பு இருந்ததை உணர்ந்தேன். நாடக உரையாடல்களிலும் நாடகக் கதையமைப்பிலும் நவீனத்தைக் கொண்டு வந்தவர் இந்திரா பார்த்தசாரதி என்று நம்புகிறேன்.

இவரது மொத்த நாடகத் தொகுப்பும் புத்தகமாகக் கிடைக்கிறது. கிட்டத்தட்ட ஆறு மாதங்களாகப் படித்துக் கொண்டிருக்கிறேன்.

கொங்கைத்தீ (சிலப்பதிகாரக் கதை - என்னமாக எழுதியிருக்கிறார்!), காலயந்திரங்கள், புனரபி ஜனனம் புனரபி மரணம் என்று சில நாடகங்களைப் படித்து முடித்திருக்கிறேன். ஒரு நாடகத்தைப் படித்து விட்டு அடுத்த நாடகத்துக்குப் போக முடியவில்லை. படித்ததையே திரும்பப் படிக்கத் தோன்றுகிறது. beautiful.

புத்தகத்தின் விலை நானூறு ரூபாய். அதிகமா குறைவா தெரியவில்லை. நிறைய பேர் வாங்குவார்களா? வாங்கிப் படிக்க வேண்டும்.

இந்திரா பார்த்தசாரதி சென்னையில் வசிக்கிறாராம். அடுத்த சென்னைப் பயணத்தில் இவரைச் சந்திக்க முடிந்தால் மிகவும் சந்தோஷப்படுவேன்.

நாடகம் படித்து ரசிக்க நிறைய பொறுமையும் கற்பனையும் தேவை என்பார்கள். பொறுமை போதும் என்று நான் நினைக்கிறேன். ஒவ்வொரு வரியையும் ரசிக்க முடிகிறது.

புனரபி நாடகக் கதை:
கிராமத்தில் மரணம் நிகழப்போவதாகக் கேள்விப்பட்டு மரணத்தை ஒட்டிய சடங்குகளைப் படம் பிடித்து அமெரிகாவுக்கு வினியோகிக்கும் எண்ணத்தோடு வருகிறார் ஒரு தயாரிப்பாளர். இரண்டு சங்கடங்கள். 1. மரணம் இன்னும் நிகழவில்லை. 2. மரணப்படுக்கையில் இருக்கும் கிழவரோ பகுத்தறிவுத் தலைவர், ஈமச் சடங்கெல்லாம் கூடாது என்று தீர்மானமாகச் சொன்னவர். கிராமத்து ஆள் ஒருவரைப் பணம் கொடுத்துக் கையில் போட்டுக் கொண்டத் தயாரிப்பாளர், கிழவரின் குடும்பத்தைச் சரிக்கட்டி படம்பிடிக்க வசதி செய்து கொடுத்தால், இன்னும் நிறைய பணம் தருவதாக ஆசைகாட்டுகிறார். பணத்தைப் பார்த்து ஆசை கொண்ட கிராமத்தாள், கிழவரின் குடும்பத்தாரை ஆளுக்கு லட்சம் தருவதாகச் சொல்லிக் சரிக்கட்டுகிறார். கிழவரும் இறக்கிறார். 'கிழவர் இறக்கும் தறுவாயில், ஐயரைக் கூப்பிட்டு சடங்கெல்லாம் செய்யச் சொன்னதாக'த் திரித்து விடுகிறார்கள் குடும்பத்தார். வைதிகர் வந்து சடங்குகளைத் தொடங்குகிறார். படத்தில் முகம் காட்டும் அத்தனை பேருக்கும் பணம் கிடைக்கும் என்றதும், கிராமமே திரைப்பட ஆர்வத்தில் சாவைக் கொண்டாடத் தயாராக இருக்க்கிறது. பணம் பகுத்தறிவை வென்றுவிட்ட நிலையில், கிழவரின் பேத்தி, "அப்பா! தாத்தா இன்னும் சாவலப்பா! கண்ணைத் தொறந்து பாத்தாரு!" என்று கூவியபடி ஓடிவருகிறாள். கிழவர் இன்னும் இறக்காதது புரிந்து எல்லோரும் திடுக்கிடுகிறார்கள்.

நாடகம் இங்கே முடிந்து விட்டது என்று தோன்றியது. இன்னும் சில பக்கங்கள் இருந்தன. 'அடடா, இழுக்கிறாரே!' என்று நினைத்தபடி தொடர்ந்துப் படித்தேன்.

தயாரிப்பாளருக்கு பணமும் நேரமும் செலவாகிறதே என்று கவலை. வாங்கிய பணத்தைத் திருப்ப நேருமோ என்று கிராமத்தினருக்குக் கவலை. பேசிய தொகை கைதவறுமோ என்று கிழவரின் குடும்பத்தாருக்குக் கவலை. தயாரிப்பாளர் கிராமத்தாளை நெருக்க, சற்று யோசிக்கிறார்கள். "இதெல்லாம் மரணமயக்கம். இப்ப போயிடுவாரு பெரியவரு, கவலைப்படாதீங்க. எதுக்கும் நம்ம வைத்தியர் வந்து பாத்துட்டுப் போவட்டும்" என்று கிராம வைத்தியரை அழைத்து வரப் புறப்படுகிறார்கள் கிராமத்தாளும் வைதிகரும்.

நாடகம் இங்கே முடிகிறது. திடுக்கிட்டு பிரமிக்க வைத்த முடிவு. அவசரப்பட்டதை எண்ணி நொந்தேன். நிறைய கேள்விகளைக் கேட்டு பகுத்தறிவுக் கிழவரின் நிலையை அசைபோட வைக்கிறது நாடகம்.

..படித்த வரையில்
★★★★

மறந்து விட்டதே? தமிழ்ப் புத்தகங்களை வாங்கிய கடை: New World Book Center.

தி.நகர் பனகல் பார்க் தாண்டி மேம்பால முடிவை ஒட்டிய இடத்தில் புதைந்திருக்கிறது. கண்டுபிடிக்க சிரமமாக இருந்தது. நல்ல கடை. நன்றாகப் பழகுகிறார்கள். மறுபடியும் போகவேண்டும் என்று எண்ண வைத்தார்கள். வெளியே வந்ததும், கடையை அறிமுகம் செய்து வைத்த ஸ்ரீராம் பெயரைச் சொல்லி சரவணபவனில் காபி சாப்பிட்டேன்.

2011/08/14

காதல் கண்ணியம்

வெத்து வேலை


திரையிசை, குறிப்பாகக் காதல் பாடல்கள், வளர்ந்த விதம் சுவையான ஆய்வுக்கான கரு.

'எனையாளும் ஈசரே!' என்று கடவுளைப் பாடினார்கள். பிறகு அதே வரிகளால் காதலனைப் பாடினார்கள். கொஞ்சம் துணிச்சல் வந்ததும், பத்தடிக்கும் குறைவான இடைவெளியில் நின்று கொண்டு கைகளைப் பிசைந்தபடி, 'உம்முடன் கலந்த ஏகாந்தமே' என்றார்கள். ஏதோ ஒரு காலக்கட்டத்தில் ஒருவரை ஒருவர் தொடுவதைக் காட்டுவது ஏற்கப்பட்டதும், உடல் பகுதிகளையும் உணர்வுகளையும் பாடி ஆடினார்கள். அதற்குப் பிறகு எம்.ஜி.ஆர் தயவால் இருபொருள், காமவிகார உட்பொருளுடன் கூடிய, கொச்சையான, பாடல்களும் குலுக்கலாட்டமும் வரத்தொடங்கின. அந்தச் சரிவு(?) தொடர்கிறது என்று நினைக்கிறேன்.

தொட்டுத்தடவிக் கட்டிப்புரண்டுப் பாடுவது இயல்பான நிரந்தரமாகிக் கொண்டிருந்தக் கட்டத்தில் வந்தக் கண்ணியமான பாடல் இது. இதற்குப் பின் ஒருபாடல் கூட இதன் தரத்தைத் தொடவில்லை என்பது என் கருத்து. ஆணாதிக்கமா, என்ன காரணமென்று தெரியவில்லை, கவிஞர் தொடர்ந்து எழுதாதது தமிழ்த் திரையிசையின் இழப்பு.

அமைதியான அழகான வரிகளுக்கு, ஆர்ப்பாட்டமில்லாத இசை. இனிமையான மெட்டை இன்னும் மேம்படுத்தும் குரல்கள். கண்ணியம் குறையாத காதல் நயம் துள்ளும் படமாக்கம். எம்ஜிஆர் பாடல் என்பது தான் முரணான வியப்பு. நான் அதிகமாகக் கேட்ட/பார்த்தப் பாடல்களுள் ஒன்று.

சற்று சிக்கலான கேள்வி. தமிழ்ச் சினிமாவின் தலை சிறந்தக் காதல் டூயட் பாடலுக்கான உங்கள் தேர்வு எது, சொல்லுங்களேன்?

மிகச் சிறந்தக் காதல் டூயட் என்று நான் கருதும் பாடலை இன்னொரு சமயம் பதிவு செய்கிறேன். இரண்டாம் இடத்துக்கான இந்த முதல்தரப் பாடலுடன் இப்போதைக்கு விடை பெறுகிறேன்.

ஒரு வாரமாக என் தொகுப்பை ரசித்த அனைவருக்கும் நன்றி.

சினிமா-11 | 2011/08/14 | குங்குமப்பொட்டின் மங்கலம்2011/08/13

மூன்றாம் பால்

வெத்து வேலை


இரண்டாம் புலிகேசி ஐந்தாம் ஜார்ஜ் கணக்கில், மூன்றாம் பால் என்று சொல்ல வந்தேன் - நீங்கள் என்ன நினைத்தீர்களோ தெரியாது.

சரி, போகிறது. பதினைந்து வருடங்களுக்கும் முன்னால் இந்தப் பாடலின் ஒலிப்பதிவை அவருக்குக் கொடுத்ததை நினைவில் வைத்திருந்து, 'உனக்குப் பிடிச்ச பாட்டாச்சே?' என்று விடியோவை எனக்குச் சமீபத்தில் அனுப்பியிருந்தார் என் பாகிஸ்தான் தமிழ் நணபர் பால். (பாலச்சந்திரனின் சுருக்.)

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. இந்தப் பாடலுக்கான மெட்டும் இசையும் எப்பொழுது கேட்டாலும் தாளம் போட்டு ரசிக்க வைக்கும். டிஎம்எஸ்-சுசீலா இருவரும் இந்தப் பாடலுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

இந்தப் பாடல் காட்சியில் முத்து-மஞ்சுளாவின் 'சுவாஹா சுவாஹா' நடனத்தை அடிக்கடி பார்த்துச் சிரித்திருக்கிறேன். தனிக்காமெடி தேவையில்லை. விடியோவைப் பார்க்கும் பொழுதெல்லாம் இரண்டு சந்தேகங்கள் தோன்றும்:
1. இப்படி இளிக்கிறாரே முகமு, கவிஞர் 'முத்துப் பல்' என்று பாடியது தன் பல்லைப் பற்றியென்று நினைத்தாரோ ?
2. பாடலின் நடுவில் தரையில் சிவப்பு நிறத்தில் கிடக்கிறதே, அதான் முல்லைப்பூ விரிப்பா? அல்லது, காசித்துண்டுச் சுருணையா?

சினிமா-10 | 2011/08/13 | முத்துப்பல் சிரிப்பென்னவோ?


2011/08/12

மாலை மயக்கம்

வெத்து வேலைஸ்ரீதரின் பாடல் படப்பிடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். பெரும்பாலான பாடல் காட்சிகளை ரசிக்கும்படி படம் பிடித்தவர். இந்தப் பாடலின் psychedelic setting பாட்டுக்கு மிகப் பொருத்தமாகப் பட்டது. துள்ளும் இசை. உரசிப் பார்த்துப் பொருள் கொள்ள வேண்டிய பாடல் வரிகள். சிவாஜி, விஜயாவின் திரை ஆக்கிரமிப்பு. எல்லாமே ரசிக்க வைத்தன.

கண்ணதாசன்-விஸ்வநாதன். அடுக்குமா பாவிகளா? இப்படியா இனிமையின் மொத்த விளைநிலமாக இருப்பது?

விஜயா.. அந்தப் pendant ஒரு இடத்தில் தங்குகிறதா பாருங்களேன்? ஆகா! என்ன டான்ஸ்!! இதைப் பார்த்தபிறகு மற்றதெல்லாம் உடான்ஸ் போலத் தோன்றுவதேன்?

சினிமா-9 | 2011/08/12 | அங்கே மாலை மயக்கம்2011/08/11

காதல் புன்னகை

வெத்து வேலைசமகால நடிகர்களில் உடலைக் கட்டோடு வைத்திருந்தவர் முத்துராமன் மட்டும் தானோ? ஓசைப்படாமல் பல இனிய காதல் பாடல்களைத் தந்திருக்கிறார். காதல் புன்னகை செய்யும் முயற்சியில், அசட்டு இளிப்பைத் தவிர்த்திருக்கலாம். காதல் புன்னகை எம்ஜிஆருக்கு நன்றாக வந்ததாக நினைவு; பட்டம் மட்டும் சாம்பாருக்குப் போனது.

விஸ்வநாதனுக்கு வெளியேயும் சில சமயம் இனிமை உண்டு. வாழ்க்கை விந்தையானது.

சரி, இந்தப் பாடலில் உடனிருக்கும் மாதின் பெயர் யாது?


சினிமா-8 | 2011/08/11 | கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம்

2011/08/10

டப்பாவரிக் காதல்

வெத்து வேலை


அவசரமாகப் பயணம் போக வேண்டியிருந்தது. ஏதோ குளறுபடியில் உடன் எடுத்துச் சென்ற பாடல்களில் இது மட்டுமே தமிழ்ப் பாடல். அதனால் திரும்பத் திரும்பக் கேட்டேன்.

உயர்நிலைப் பள்ளி நாட்கள் என்று நினைக்கிறேன். "என்னய்யா பாட்டு எழுதியிருக்கான் கண்ணதாசன்? அர்த்தமேயில்லையே? ஒருவன் காதலன்.. ஒருத்தி காதலி.. என்றதோ.. என்றது.. என்ன பாட்டு இது? ஒரு நயம் வேண்டாமா?" என்று கிண்டல் செய்த என் மாமா தூங்கும் பொழுது அவருடைய போர்வைக்குள் கணிசமான அளவும் எடையும் கொண்ட ஒரு தவளையை விட்டிருக்கிறேன். இப்பொழுது பயணத்தில் பாட்டைத் திரும்பத் திரும்பக் கேட்டபோது, மாமா சொன்னது உண்மையென்று தோன்றியது.

கண்ணதாசனின் டப்பா வரிகளில் ஒன்று. (பக்கத்தில் தவளையுடன் யாருமில்லையே?)

விஸ்வநாதன். வாழ்வின் இனிமைக்கு ஒரு காரணம். சில சமயங்களில், ஒரே காரணம்.

சினிமா-7 | 2011/08/10 | ஒருவன் காதலன் ஒருத்தி..

2011/08/09

காலமென்றும் உண்டு

வெத்து வேலை


தேடியபோது கிடைக்காத விடியோ. 'இங்கே தானே வச்சேன்?' என்று சுலபமாகத் தேட முடிகிறதா?

சிவாஜி நன்றாக நடிக்கக் கூடியவர் (க்க்ம்ம்ம்). சேக்சபோன் வாசிக்கிறார். வாயில் காட்டிய நரம்பு புடைக்கும் நடிப்பை சற்று விரலிலும் காட்டியிருக்க வேண்டாமோ? சேக்சபோனின் ஒலிநயம் ஊதுவதால் மட்டுமே வருவது என்று நினைத்தாரோ? (ரஜினிகாந்த் எப்படி வாசித்திருப்பார்? காற்றில் தூக்கிப் போட்டு ஒலியெழுப்புவாரோ என்னவோ? நினைத்தாலே நடுங்கும்.)

நடனமாடும் கோஷ்டியினரிடம் ஒன்றைக் கவனித்தேன். எத்தனை விதவிதமான தொப்பிகள்! யாருடைய ஐடியா?

சரோஜாதேவியின் நளினம். அன்பு கொண்ட நெஞ்சில் அனுபவம் இல்லை - சக்கை போடு போடுகிறார். அபிநய சரஸ்வதி என்றால் சும்மாவா? இவருக்கு சிவப்பு சேலை கட்டிய ஒப்பனையாளருக்கு நல்ல ரசனை.

விஸ்வநாதன்-கண்ணதாசன்-சுசீலா-சரோஜாதேவி. வாழ்க்கை இனிப்பதற்கு ஒரு காரணம்.

சினிமா-6 | 2011/08/09 | உன்னை ஒன்று கேட்பேன்

2011/08/06

ததாஸ்துக் களிம்பு1 2 ◀◀முன்கதை

   ப்யாரம்பத்திலே, என்னோட தாமசத்துக்கு ரொம்ப மன்னிப்புக் கேட்டுக்கறேன்.

'என்னடா அசுவத்தாமா இத்தனைத் தாமசம்?'னு கேட்டேள்னா, பத்து நாள் மிந்தி என் ஷட்டகர் ஆத்துக் கல்யாணத்துக்குப் போயிருந்தேன். ஆத்து மனுஷா நெறைய வரலே. சமிதாதானம் செஞ்ச பரம்பரைல வந்த பொண்ணு, பாருங்கோ, இப்போ அமெரிக்கால ஒரு வெள்ளைக்காரக் கிறுஸ்தவப் பையனோட பழகிட்டு, பண்ணிண்டா அவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு கூத்துக்கட்டியடிச்சு, பையனாத்துகாராளையும் சேத்து இங்கயே கூட்டிண்டு வந்துட்டா. இந்தக் காலத்துப் பொண்ணோல்லியோ, ஸ்த்ரீ ஸ்வதந்திரத்தைத் தோள்ல போட்டுண்டுத் திரியறா. அதுக்காக, நம்மாத்துப் பொண்ணாச்சே? விட்டுக் குடுக்க முடியுமோ? "ஷட்டகரே! பையனுக்கு ஒம்ம பொண் மேலே ரொம்பத்தான் ஆசை, பாருங்கோ நம்ம எதிர்க்கயே அவ இடுப்ல தடவறான். போறது விடுங்கோ"னேன். "அசுவத்தாமா, அவாள்ளாம் கோமாம்சம் சாப்டுவாளே?"னார் ஷட்டகர். "அதுக்கென்ன, நாமளும் பிள்ளைக்கறினு நரமாம்சம் சாப்பிட்ட வம்சாவளி தானே, கெடக்கறது விடுங்கோ"னுட்டு கல்யாணத்தை ரசிச்சேன். வெள்ளைக்காரக் கிறுஸ்தவா குடும்பத்தை இப்பத்தான் நேரா இத்தனைப் பக்கத்துல பாத்தேன்.

'இதுக்கா அசுவத்தாமா தாமசம்?'னா, நடந்ததைக் கேளுங்கோ. த்ருஷ்டி மாதிரி ஆயிடுத்து. ரிசப்ஷனுக்கு ஜகஜ்ஜோதியா அலங்காரம் பண்ணியிருந்தா. விஸ்கி லுஸ்கினு மத்யசார பானகம் வெள்ளமா ஓடிண்டிருந்துது. அவாவா ரெண்டு கப்பு எடுத்துக் குடிச்சுட்டு, சிரிச்சுண்டே தையா தையானு டான்சாடறாளா, நான் தேமேனு ஓரமா நின்னு பாத்துண்டிருந்தேன். திடீர்னு சாம்பு சாம்பு சாம்புனு ஒரே சத்தம். யாருடா சாம்புனு பாத்தா, சாம்பும் இல்லே, வேம்பும் இல்லே, இன்னொரு மத்யசார பானகம். சாம்பேனு பேரு, அவ்ளோதான். அந்த சாம்பே பாட்டிலைத் தொறக்கறதே பெரிய வித்யைனு பேசிண்டா. எல்லாமே அதீதமா இருந்துதா, அப்படி என்னதான் விஸ்வகர்மா கலைனு பாப்போமேனுட்டு, பக்கத்துல போய் நின்னுண்டேன். சாம்பே பாட்டிலைத் தொறந்ததும் அதுல காக்குங்கறா பாருங்கோ, அது ஆர்யபட்டா மாதிரி ஆகாசத்துல பறந்து, என்னோட ப்ராரப்தம், அர்ஜுனாஸ்த்ரமா குறிதவறாம என் கண்ணுக்குள்ளே இடிச்சு குத்தி விழுந்து தொலச்சுது. பொன்னுக்கு வீங்கியாட்டம் நேக்கு கண்ணு மூஞ்சியெல்லாம் வீங்கி... அப்புறம் ஆஸ்பத்திரி அவரோகணம்னு போய்... கண்ணைக் கட்டி எங்காத்துல விட்டாப்ல ஆயிடுத்து. நெஜமாத்தான். இந்தச் சாம்பே சங்காத்தமெல்லாம் போறுண்டா சங்கரானு கெடந்தேன். ரெண்டு நாளாச்சு, இப்பத்தான் சித்தத் தேவலை.

ஆத்துல அகர்மன்னா மந்தமா ஒக்காந்துண்டிருக்கச்சே நெறைய பேர் போன் பண்ணா. கதைய முடிக்கலியோன்னா. செலபேர் இந்த மாதிரி நடக்குமானு அசந்து போனா. செலபேர் ரஜினிகாந்த் சினிமாவாட்டம் பேத்தலா இருக்கேன்னா. இருந்தாலும், களிம்பு எங்கே கெடைக்கும்னு கேட்டவா எத்தனை பேருங்கறேள்? அனேகம். அமேரிக்காலேந்து ஒரு மாமி பாருங்கோ, நேக்கு விடாமப் போன் பண்ணி, ரொம்பப் புலம்பி, இந்தக் க்ஷணமே ததாஸ்து களிம்பு வேணும், என்ன செலவானாலும் பரவாயில்லைனு கேட்டா. அவாம்படையானுக்கு வேணும்னு அழுதா. "என்னடீம்மா பண்றது, ஒங்காத்துக்காரருக்கு?"னு சாரிச்சேன்.

"எங்காத்துகாரருக்கு மறை கழண்டுருத்து இல்லேன்னா யாரோ வெனை வச்சுட்டா மாமா. பாருங்கோ, வெவரம் தெரியாத மனுஷரா இருக்கார். தானும் ஒண்ணும் தெரிஞ்சுக்க மாட்டேங்கறார், அடுத்தவாள் பேச்சையும் கேக்கறது கிடையாது. எதுகெடுத்தாலும் தாட் பூட் நாட்டாமைனு எதையோ பெனாத்தி வைக்கறார். தாந்தோணியா கார்யம் பண்ணிட்டு அடுத்தவா மேல பழி போடறார். கேட்டா, எனக்கெல்லாம் தெரியும்னு டம்பம் வேறே. இப்ப ஒண்ணு சொல்லிட்டு அடுத்த நாளே அதுக்கெதுத்தா மாதிரி சொல்றார். பெரிய உத்யோகத்ல வேறே இருக்கார். ஆத்துலயும் ஆபீஸ்லயும் அக்கம்பக்கத்துல இருக்கறவாளையும் கன்னாபின்னானு பேசிட்டு இப்ப ஒருத்தர் கூட இவரை மதிக்கறதில்லே. எங்க ஸ்நேகிதாள்ளாம் என்னைப் பாவமா பாக்கறா. இவரை நம்பி ஒரு பெரிய குடும்பமே இருக்கேனு தெரிய மாட்டேங்கறது. ஆத்துலயும் ஆபீஸ்லயும் அவரை நம்பின எல்லாரும் அல்லாடிண்டிருக்காளாம். ஆத்து மனுஷாளுக்குப் பத்து காசு செலவழிக்கணும்னா பத்தாயிரம் பொலம்பல்... ஆயிரம் தடவை சொல்லிக் காட்டுவார். மனசு வராது. ஆனா, தண்டத்துக்கு நூறு காசு கோவில் உண்டியல்லயும் தெருவுலயும் தானம் பண்ணிட்டு வருவார். பொறுப்பு கிடையாது. ஒரு வெவஸ்தை கிடையாது. எதுக்கெடுத்தாலும் வரட்டு கௌரவம். கோபம். உருப்படியா ஏதாவது பண்ணுனுங்கோன்னா மழுக் மழுக்னு என்னமோ சொல்லிட்டு எங்கயோ காணாம போயிடறார். விட்டிருந்த சிகரெட் இப்போ பிடிக்க ஆரமிச்சுட்டார். போறாததுக்கு இப்போ எங்கப் பாத்தாலும் கடன். தாங்க முடியாத கஷ்டம் ஆத்துல. கேட்டா, யாரும் வாங்காத கடனையா நான் வாங்கிட்டேன்? என்னோட பூர்வீகக் கடன் என் மேலே விழலையா? என்னோட கடனை அடுத்த தலைமுறை கட்டிப்பானு உளறிண்டிருக்கார். தனக்கு எல்லாம் தெரியும்னு நெனச்சுண்டிருக்கே தவிர, அம்பது வயசானாலும் இது மகா அசத்து மாமா. மக்குப் பிளாஸ்திரி. மரமண்டை. மண்டூகம். அஜாமேளம். எக்கச்சக்கமா மாட்டிண்டு நாளைக்கு எங்க எல்லாரையும் ஒட்டுமொத்தமா நடுத்தெருவுல நிக்கவச்சுடுமோனு ரொம்பப் பயமா இருக்கு. ததாஸ்துக் களிம்பு தடவினா சரியாய்டும்ங்கறாளே? வாங்கித் தருவேளா? எங்க கிடைக்கும்? பெரிய மனசு பண்ணி ஒத்தாசை பண்ணுங்கோ"னு ரொம்ப நொடிச்சுப் போய்க் கேட்டா பாருங்கோ, நேக்கே தாங்கலை.

ததாஸ்துக் களிம்பை நானா கைல வச்சிண்டுருக்கேன்? "மக்குபிளாஸ்திரி மானங்கெட்டவன்னு நன்னா லக்ஷார்ச்சனை பண்றடிம்மா. ஆத்துக்காரானா சித்தே இப்படி அப்படி இருப்பா. அழாதேடீம்மா கொழந்தே. அப்படி வாச்சது ஒன்னோட அதிர்ஷ்டம்னு நெனச்சுக்கோ. நோக்கென்ன கொறை சொல்லு? வெள்ளை வெளேர்னு பெரீய வீடு, மாளிகையா மின்றது. தும்மலைப் பிடிச்சுக்க ஆள் சேவகம். நன்னா அங்கே இருந்துக்கோ. ஊரைச் சுத்து. அடுத்தவா ஏச்சுலயும் ஆத்துக்காரர் அசட்டுத்தனத்துலயும் நோக்கென்ன ஆச்சு? நாய்க்கு நிக்க ஒழியலேனு நீ உன் பாட்டைக் கவனிச்சுண்டு சந்தோஷமா இரு. நீ பொலம்பறதுலே தர்ம ஞாயமே கிடையாதுடிம்மா. ஏன்னு கேளு. நோக்கு அவனைப் பிடிக்கலேன்னா அடுத்த க்ஷணமே, 'உதவாக்கரை படவா, போய்க்கோடா, டாடா'னு நீ வெளில கெளம்பிப் போய்டலாம். ஆனா ஒங்காத்துகாரரை வச்சுண்டு இன்னும் ஒண்ணரை வருஷம் மேய்க்கணுமே மத்தவாள்ளாம்? அவா படப்போற கஷ்டத்தையெல்லாம் பாத்து நீ சந்தோஷப் பட்டுக்கோடிம்மா. ஒன் பேரென்னடீம்மா சொன்னே? மிசலா? இதுக்கெல்லாம் களிம்பு வேண்டாம் கேட்டியோ? நன்னாருடி கொழந்தே"னு சமாதனமாச் சொல்லிப் போனை வைச்சுட்டேன்.

நன்னா களிம்பு கேட்டா போங்கோ. நீங்க என்ன கேட்டேள்? ..வந்தாச்சு.. ராமலிங்கம் கதைக்குக்கு வந்தாச்சு. சித்தே இருங்கோ, கால் சிட்டிகை... பொடிப் பழக்கத்த விட முடியலை மாமி.

வக்ரதுண்டரைப் பிடிக்கப் போய் வானரமாயிடுத்தேனு ராமலிங்கம் வருத்தப்பட்டார். அவர் இப்படி நெனக்கறச்சே, அந்த சதாசிவம் மனசுல என்ன ஓடித்து? அவருக்கும் இந்த களிம்புனால ஆப்த ஸ்னேகம் அழிஞ்சு போறதேனு இருந்துது. ஆனா அது வேற மாதிரி ஆதங்கம்.

'ஒரு லெவலுக்கு மேலே போயாச்சு'னு சொல்வா பாருங்கோ, அதுமாதிரி ஆயிடுத்து இங்கே. பால்ய ஸ்னேகிதத்தினால கெடச்ச உசிதமான பலன்களை விட, அனுசிதமான பயங்கள் ஜாஸ்தியாய்டுத்து சதாசிவத்துக்கு. தன்னோட பூர்வீகம் எல்லாம் தெரிஞ்ச ராமலிங்கம், எங்கே தன்னை காமிச்சுக் கொடுத்துவானோனு ஒரு பயம் நாகசர்ப்பமாட்டம் அவர் மனசுல படமெடுத்து ஆடித்து. அதுக்கு மேலே சபலம். 'களிம்புனால இன்னும் பலனுண்டோ? எங்கே தான் மட்டும் அனுபவிப்பானோ?'ங்கற சந்தேகம். விசாரம். பொறாமை. லோபம். வித்தேகம். பேராசை.

ஒரு வியாபாரத்துனால இத்தனை நாசம் தோணுமா? தோணும். இது விசித்ர வியாபாரம் இல்லையோ?

களிம்பை வச்சுண்டு அவா என்ன வியாபாரம் பண்ணினா? பழைய பாத்ரத்துக்கு பேரீச்சம் பழமா கொடுத்தா? இல்லையே? புதுப் பாத்ரம்னா கொடுத்தா? சுத்தாசயம், அதாவது தெளிவான மனசாட்சினா கொடுத்தா? வெள்ளைக் காகிதத்துல கன்னா பின்னானு கிறுக்கிட்டு, ஜீபூம்பானு சொன்ன உடனே வெள்ளைக் காகிதமாயிட்டா எவ்ளோ நன்னாயிருக்கும்? ஒரு திருட்டோ புரட்டோ அழிச்சாட்டியமோ பண்ணிட்டோம்; அதனால லாபம் வந்தாக் கூட மனசாட்சினு ஒண்ணு உறுத்தறதோன்னோ? சாதாரண சில்லறைத் திருடனா... பிக் பாக்கெட்டுக்காரனா இருந்தாலும் சரி, பெரிய ஸ்பெக்ட்ரம் திருடனா... புரட்டல்காரனா இருந்தாலும் சரி, அவாவா செஞ்ச நீச கார்யங்களை, பாவம் புண்ணியங்கற நம்பிக்கை இரண்டாம் பட்சம் கெடக்கு விடுங்கோ, செஞ்ச நீச கார்யத்தோட எண்ணமே வேரோட அடியப் பிடிரா பாரதபட்டானு மறந்து போயிடுத்துன்னா... அது எத்தனை நிம்மதி பாருங்கோ! மனசாட்சியோட தொந்தரவே இல்லேன்னா எத்தனை ச்ரேஷ்டம்! இல்லையா பின்னே? அதுவும் தகாத கார்யம் பண்ணினோங்கற எண்ணமே இல்லாம போனா, அந்த நிம்மதிக்கு என்ன வெலை? அதுக்கு வெலைதான் உண்டா?

அதைத்தானே வியாபாரம் பண்ணினா சதாசிவமும் ராமலிங்கமும்? அடுத்தவாளோட கச்சரமான மனசை வாங்கிண்டு பதிலுக்கு நிர்மால்யத்தை வித்தா என்னாச்சு? வித்தவாளோட நிம்மதி போயிடுத்து. கச்மலத்தைக் கழட்டித்தானு கேட்டு வாங்கிண்டவா கைல என்ன இருக்கும்? யோசிச்சுப் பாருங்கோ. இது சாதாரணமா தோணினாலும் மகா வேதாந்தமாக்கும். ஆசைக்கு விலை நிம்மதிங்கறதை நன்னாப் புரிஞ்சுண்டோம்னா, ஆண்டவனே வேண்டாம் தெரியுமோ?

ராமலிங்கத்தோட நிம்மதி எப்போ குறைய ஆரம்பிச்சுது? ஒரு பாவகார்யம் மறந்து போகணுங்கறதுக்காக மொதல் தடவையா அந்தக் களிம்பை ஆப்தனுக்குத் தடவிக்க கொடுத்தாரே, அந்தக் க்ஷணத்துல நிம்மதி தொலஞ்சு போக ஆரம்பிச்சுது. இவா ரெண்டு பேரும் லோகத்துக்கு களிம்பு தரேன் பேர்வழின்னுட்டு தங்களோட நிம்மதியையாக்கும் கூறு கூறாப் போட்டு, பணங்காசு கொடுத்தவாளுக்கு வித்தா.

ராமலிங்கமாவது பூர்வீகமா யோக்யமா இருந்தார், அமெரிகா மிசல் மாமியோட ஆத்துக்காரர் மாதிரி மூளை கெட்டுப் போய் இந்தத் திப்பிசத்துல மாட்டிண்டு முழி பிதுங்கினார்னு சொல்லலாம். சதாசிவத்தோட நிம்மதிக்கென்ன கொறச்சல்? அவர்தான் களிம்பைப் பூசிண்டு, சாயந்த்ரம் ஆபீஸ்லந்து வரச்சே சக்கரையும் ரவாவும் வாங்கிண்டு வாங்கோன்னு சொன்னா ஆத்துக்காரர் அதை மட்டும் மறந்துட்டு வரதில்லையா அதுமாதிரி, நீச கார்யத்தை மட்டும் மறந்து சந்தோஷமாத்தானே இருந்தார்? சதாசிவம் எதுக்காக பயந்தார்? உள்ளுக்குள்ள இருக்குற அழுக்கை வேணும்னா களிம்பு மறைக்கலாம். ஆனா அந்த அழுக்கு வெளிலயும் நாறுமே? அந்த நாத்தம் எங்கேந்து வரதுன்னு ராமலிங்கத்துக்குத் தெரியுமே? அதான் பயம்.

ராமலிங்கத்துக் கிட்ட பயந்த சதாசிவம், அன்னிக்கு ராத்திரி ஊருக்குப் போறதுக்கு முன்னாடி ராமலிங்கத்தை ஆத்துல பாத்துட்டு போயிடறதுன்னுட்டு முடிவு பண்ணிண்டார்.

ராமலிங்கத்துக்கோ தன்னோட ஆப்தன் இப்படி மாறிட்டானேன்னு ரொம்ப விசாரம். என்ன பண்றது? வானரத்துக் கைலந்து மாலையை எப்படியாவது வாங்கியாகணுமே? வருத்தமாவும் யோசனையாவும் வெளில வந்தார். பேசாம சதாசிவத்தைக் குத்திக் கொன்னுடலாமானு தோணித்து. எப்பேற்பட்ட அதிபாப சித்தம்? சட்னு மனசைக் குலுக்கி மேலே பார்த்தார். கடம்பவனேஸ்வரர் கோவில் கோபுரம் தெரிஞ்சுது. முருகன் சன்னதிக்குப் போய் எத்தனை நாளாச்சுனு நெனச்சுப் பார்த்தார். தெனம் கோவிலுக்குப் போயிண்டிருந்தவன், இப்பல்லாம் மாசத்துல ஒரு தடவை கூட போறதில்லியேனு நெனச்சுண்டார். எல்லாம் களிம்புனால வந்த சாபம்னு தலைல அடிச்சுண்டார். 'முருகா! தோ வரேன்'னுட்டு கோவிலைப் பாக்க நடந்தார். மணி நாலு கூட ஆகலை. வழில ஆத்துல கால் கை அலம்பிண்டு, நன்னா விபூதியைக் குழைச்சு மூணு வரி நெத்திலே திட்டில்லாம தீர்க்கமா இட்டுண்டார். திருப்புகழ் புஸ்தகத்தை எடுத்துண்டு வெளில வரச்சே சுலைமானைப் பாத்தார்.

"என்ன பாய்?"

"ஒண்ணுமில்லே ராம்சாயிபு. என் கடைசிப் பொண்ணு ஆலியாவுக்கு நிக்காஹ் அமைஞ்சிருக்கு தெரியுமில்லியா? நாளைக்கு காலைல பத்து மணிக்கு நிக்காஹ், பொறவு விருந்து, இன்ஷா அல்லா. அவசியம் நீங்க வந்து ஆசி வச்சுட்டுப் போவணும்"

"அதுக்கென்ன பாய், வந்தாப் போச்சு! கூப்டதுக்கு ரொம்ப சந்தோஷம்."

"சதாசாயிபு இல்லியா?"

"இல்லியே பாய்... அவன் இன்னிக்கு மெட்ராஸ் போறதா சொன்னானே? ஏதாவது உதவி வேணுமா?"

"ஒண்ணுமில்லே. இன்னிக்கு விருந்தாளிங்க வராங்க. அவர் வீட்ல இடம் தரதா சொன்னாரு அதான்.. "

"அப்படியா? மறந்து போயிருப்பான். நம்மாத்துல வேண இடம் இருக்கேப்பா? வந்துத் தங்கிக்கச் சொல்லு.. தாராளமா?"

"ரொம்ப நல்லது. இப்படித் திண்ணைல படுக்கச் சொல்றேன்"

சுலைமான் கெளம்பிப் போனதும் ராமலிங்கம் வேகு வேகுனு கோவிலுக்கு நடந்தார். 'முருகா முருகா'னு நெத்தில பொடேல்னு அடிச்சுண்டார். கொலை பாதகத்தை மனசால நெனச்சுட்டேனே? நெனச்சாலே பிரம்மஹத்திதானோ? கோவிலுக்குள்ளே நுழையறப்பவே தொவண்டு போனார். சன்னதிலே முருகன் சிரிச்சுண்டிருக்கான். ராமலிங்கம் முருகனைப் பாத்ததும் அப்படியே உருகிப் போய் அழுதார். மறுபடியும் கன்னத்துல நன்னா மடேல் மடேல்னு நாலு அறை விட்டுண்டார். 'முருகா, முருகா என்னை இந்தக்ஷணமே கூட்டிண்டிருடா. உன்னோட சேவல் கொத்தற மாதிரி ஒரு புழுவா இருந்துட்டுப் போறேன். என்னை ஏத்துக்கோ'னு கதறினார். உருக உருகத் திருப்புகழ் சொன்னார்.
   'நினதுதிருவடி சத்திமயிற்கொடி நினைவு கருதிடு புத்திகொடுத்திட'
   'திறற்கருங் குழலுமையவ ளருளுறு புழைக்கை தண்கட கயமுக மிகவுள'
   'பஞ்சபாதக முறுபிறை யெயிறெரி குஞ்சிகூர்விட மதர்விழி பிலவக'
   'கூராவன் பிற்சோராநின் றக்கோயாநின் றுட்குலையாதே கோடார்செம் பொற்றோளா'

அவர் சொல்லச் சொல்ல உடம்பெல்லாம் துடிக்கறது. முகத்துல உலை கொதிக்கற மாதிரி இருக்கு. கொதிக்கற எண்ணைச்சட்டில தண்ணி பட்டுத் தெளிக்கற மாதிரி, வேர்வை அவர் முகத்துல பரபரனு பொறிக்கறது. பக்கத்துல இருந்தவாள்ளாம் பாத்துட்டு ஒதுங்கி ஒதுங்கிப் போனா. அவர் பாட்டுக்கு ஒரு ஓரமா நின்னு முருகனைப் பாத்துண்டே, சப்தமில்லாம, அக்கம்பக்கத்துல யாரையும் கவனிக்காம, திரும்பத் திரும்பத் திருப்புகழ் சொன்னார்.

எத்தனை நேரம் ஆச்சுனு தெரியலை, ராமலிங்கத்துக்கு உணர்ச்சி வந்து பாத்தப்போ யாருமே இல்லே. மேல்சட்டையெல்லாம் வேத்துக் கொட்டி தெப்பமா இருக்கு. சுத்துமுத்தும் பாத்தார். சன்னதி கூட கதவடச்சுட்டுப் போயாச்சு. அவர் பக்கத்துல தரைல ஒரு விபூதிப் பொட்டலத்தை வச்சுட்டுப் போயிருந்தார் குருக்கள். அதை எடுத்துப் பைல போட்டுண்டார். தெருவுல இறங்கி நடந்தார். ரொம்ப இருட்டிடுத்து. 'பன்னண்டு மணியிருக்கும் போலருக்கே'னு நெனச்சுண்டே நடந்து வரச்சே, எதிர்க்க டாஸ்மாக் தெருலந்து தள்ளாடிண்டே வந்த சுலைமானைப் பாத்தார்.

"என்ன சுலைமான்? இப்படிப் போட்டிருக்கே? நாளைக்கு பொண்ணு கல்யாணம்.. விருந்தாளியெல்லாம் இருப்பாங்க.. நீ என்ன பாய் இப்படி?"

ராமலிங்கத்தை உத்துப் பாத்தார் சுலைமான். அடையாளம் தெரிஞ்ச உடனே,"ராம்சாயிபு"னு அவர் கையைப் பிடிச்சுண்டு அழுதார். "ராம்சாயிபு. ஆலியா யாரோ ஒரு சிலுவைக்காரனோட ஓடிப்போயிட்டா"னுட்டு ஒரேயடியா அழுதார். நடுத்தெருவுல குந்திண்டு தலைல அடிச்சுண்டு அழுதார்.

"எழுந்திரு பாய். என்ன ஆச்சு? வா என்னோட. சித்தே நிதானமா நட பாய்"னுட்டு சுலைமானைக் கைத்தாங்கலாப் பிடிச்சுண்டு நடந்தார் ராமலிங்கம்.

"நைட்டு சாப்பிட வரலியே பொண்ணுனு உள்ளே போனா, ஒரு லெட்டர் எழுதி வச்சுட்டு ஓடிப்போயிட்டா ராம்சாயிபு. திருச்சில யாரையோ உயிரா காதலிக்குதாம். இந்த நிக்காஹ்ல விருப்பம் இல்லேனு ஓடிப் போயிடுச்சு. நேரா போலீஸ்ல போய் அந்தப் பையனும் பொண்ணும் பாதுகாப்பு தேடிக்கிட்டாங்க"னு கதை கதையா சொன்னார் சுலைமான்.

"தப்பா நெனக்காத பாய். இந்த நாள் குழந்தைகள் இப்படித்தான். அவா மனசுக்குப் பிடிச்ச மாதிரி நடந்துக்க வேண்டியது தான் பெரியவங்க நம்ம பொறுப்பு. என்ன ஆனாலும் எல்லாம் நல்லத்துக்குத்தான்"னார் ராமலிங்கம்.

சுலைமானுக்கு இன்னும் துக்கம் ஏறிடுத்து. "அதெப்படி ராம்சாயிபு? அதெல்லாம் சொல்றதுக்கு சரி. யாரை வேணா கட்டிக்கனு விட்டா, நாளைக்கு அவங்க குழந்தைங்க கொழம்பிப் போய் வளருவாங்க, அதுக்கு யார் பொறுப்பு? ஒரு கலாசாரம் இல்லாமலே வளருமே அடுத்த தலைமுறை? பிள்ளைங்க மனசுக்குப் பிடிச்ச மாதிரி நடந்துகிட்ட நாமதானே அதுக்குப் பொறுப்பு? ஜாதிமத பேதம் இல்லாம கருணை காட்டலாம்; கல்யாணம் கட்ட முடியாது. கல்யாணமும் கருமாதியும் மட்டும் ஜாதிக்குள்ளதான் முடிக்கணும். எல்லாம் நல்லதுக்குத்தான்னு விட்டா நல்லதுன்னே எதுவுமில்லாமப் போயிரும்"

ராமலிங்கம் ஒண்ணும் சொல்லாம, "சரி, பாய். என் வீடு வந்தாச்சு. பேசாம ராத்திரி இங்க படு. காலம்பற எழுந்து போயிக்கலாம். நிக்கக்கூட முடியாம குடிச்சிருக்கியே பாய்?"

கதவைத் தொறந்து ரேழி நாற்காலியை இழுத்து போட்டார். "உக்காரு பாய்"னு சொல்லி அவரை ஒக்காரச் சொன்னார். மூலைல ஜமுக்காளம் விரிச்சு ஒரு தலைகாணியைத் தட்டிப் போட்டார். "படுத்து நல்லாத் தூங்கு பாய், காலைல எழுப்பறேன்"னு அவரை மொள்ளப் படுக்க வச்சார். "என்னோட போர்வை"னு சொல்லி ஒரு போர்வையை எடுத்துப் போத்தினார். சுலைமான் ரொம்ப நன்றியோட தலையாட்டிண்டே படுத்துண்டார். "நானும் படுக்க வேண்டியது தான். சட்டையைக் கழட்டிட்டு வரேன்"னுட்டு பைல இருந்த விபூதிப் பொட்டலத்தைப் பிரிச்சார். சுலைமான் கிட்டே நீட்டினார். "இட்டுக்கோ பாய். நிம்மதியைத் தேடறவா அத்தனை பேருக்கும் ஜாதி கிடையாது"னார். மனசுக்குள்ளே நாம எல்லாருமே ஒண்ணு தானே? சுலைமானும் முருகன் கோவில் விபூதியை லேசா இட்டுண்டு, "நீங்களும் படுங்க ராம்சாயிபு"னுட்டுப் போர்வையை தலை வரைக்கும் இழுத்துப் போத்திண்டார்.

ராமலிங்கம் சட்டையைக் கழட்டினாலும் கசகசன்னுத்து. ஒரு குளியல் போட்டா எதமா இருக்கும்னு தோணித்து. கிணத்தடிலே சாயந்திரம் பிடிச்சு வச்ச தண்ணி இருந்தது ஞாபகம் வந்து கொல்லப்புறம் போனார். நன்னா பச்சத் தண்ணி ஸ்னானம் பண்ணிட்டு வேஷ்டி துண்டு மாத்திண்டு, சமையல்கட்டுல வெட்டிவேர் வாசனையோட பானை ஜலம் ஒரு டம்ளர் குடிச்சார். ஒரு பாய் தலைகாணி எடுக்கறச்சே பாத்தா சுலைமான் அசந்து தூங்கின மாதிரி இருந்துது. ஆனா, பக்கத்துல யாரோ இருக்காளே?

கிட்டே வந்து பாத்து, திடுக்கிட்டுப் போனார். சதாசிவம்! பக்கத்துல தூங்கறார்னு நெனச்ச சுலைமான் செத்துக் கிடந்தார்!

"சண்டாளப்பாவி!"னு கூச்சல் போட்டார் ராமலிங்கம். "என்ன கார்யம்டா பண்ணினே? பாய் என்னடா பாவம் பண்ணினார்? துஷ்டா! துஷ்டா!"னு சதாசிவத்தை மாத்தி மாத்தி மண்டைல குத்தினார். "நன்னாருப்பியா? நன்னாருப்பியா?"னுட்டு தன்னோட முகத்துலயும் அடிச்சுண்டு அழுதார்.

அடியெல்லாம் வாங்கிண்டு சதாசிவம் ராமலிங்கத்தைப் பார்த்தார். ரொம்ப நெக்குறுகிப் போய், "ராமா! நீதான் தூங்கறேனு நெனச்சு இந்தக் கொலையப் பண்ணிட்டேண்டா. நான் மகாபாவிடா! என்னைக் கொன்னு போட்டுறு ராமா!"னு குரலே வராம அழுதார்.

ராமலிங்கத்துக்கோ கோவம் தீரவே இல்லை. "நோக்கு விமோசனமே கிடையாதுடா. ஒன்னோட பாவங்களை கரைக்க ஆகாசதுலந்து பாகீரதி வந்தாலும் போறாதுடா. உன்னைத் தொட்டு அடிச்ச பாவம் எனக்கும் வந்துடுத்து. துன்மார்க்க ராஜான்னா நீ? தூ! உன்னைக் கொன்னா கொலைக்கே அடுக்காதுடா"

"அதை விட மோசமா சொல்லு, திட்டுரா. என்னைக் கொன்னுடுறா. ராமா. என்னைக் கொன்னுடுறா"னுட்டு தன் கழுத்தைத் தானே நெறிச்சுண்டார். முழி பிதுங்க சதாசிவம் தானே நெறிச்சுண்டாலும், ராமலிங்கம் பாத்துண்டிருந்தாரே தவிர ஒண்ணும் பண்ணலை. சட்னு சதாசிவமே கையை எடுத்துட்டு, "நான் கோழைடா. நேக்கு ட்ராமா போடத்தான் வரும்"னு ராமலிங்கம் கால்ல விழுந்தார்.

என்னதான் இருந்தாலும் ஆப்தனில்லையா? ராமலிங்கம் மெள்ள அவனைச் சமாதானம் பண்ணினார். சதாசிவம் களிம்பைத் திருப்பிக் கொடுத்தார். ராமலிங்கத்தைப் பாத்து, "நேக்கு வெக்கமே கிடையாதுடா ராமா. கொலை பண்ணிட்டு உடனே களிம்பை எடுத்துத் தடவிண்டேன் பாத்துக்கோ. ஒரு எபக்டும் இல்லே. அப்புறம்தான் போர்வையை எடுத்துட்டுப் பாத்தேன். சுலைமான்! இந்தக் களிம்பு இப்போ எனக்கு வேலை செய்யலேடா. அதுவும் நல்லதுக்குத்தான். என்னை மாதிரி மிருகமெல்லாம் இப்படிக் களிம்பு தடவித் தப்பிச்சுடக் கூடாதுடா"னு அழுதார்.

"போறுண்டா களிம்பு விவகாரம். விடிஞ்சதும் கோவில்ல சேத்துடறேன். சதா, உன்னை இந்தப் பாவ மார்க்கத்துல அனுப்பினது நான்தான்டா. ஒண்ணும் அறியாத சுலைமான் சாகறதுக்கு நான் தானேடா காரணம்? அதும்லாமே நான் உன்னை விட ஒண்ணும் மோசமில்லேடா. உன்னைக் கொல்லணும்னு நானும் நெனச்சேன். ஒன்னக்காட்டிலும் துஷ்ட மிருகம் நான்தான்டா"னார் ராமலிங்கம்.

ரெண்டு பேரும் ஒத்தரை ஒத்தர் கட்டிண்டு அழுதா. தரைல களிம்புக் குப்பி தேமேனு கெடந்துது.

இதி ததாஸ்துக் களிம்பு புராணம்.

என்ன சொல்றேள் ஆர்வீஎஸ்ணா? மிச்சக் கதையை சொல்லாம டபாய்க்கறேனா? என்னமோ பாஷையெல்லாம் பேசறேள், நன்னாத்தான் இருக்கு. ம்ம்..பகவான் சங்கல்பம், சுருக்கமாச் சொல்லிடறேன்.

ராமலிங்கம் போலீசை வரவழைச்சார்.

ஆக வேண்டிய கார்யம் எல்லாம் நடந்துது. ரெண்டு பேரும் சேத்த பணத்தை எல்லாம் அனாதை ஆசிரமத்துக்கும் முருகன் கோவிலுக்கும் கொடுத்தார்.

சதாசிவம் கேஸ் நடந்திண்டுருக்கச்சே அப்பப்போ போய் ஆப்தனைப் பாத்துட்டு வந்தார். சதாசிவம் ஊமையாட்டம் இருந்தார். வாய் திறந்து பேசவேயில்லை. இப்பல்லாம் டிஎன்ஏனு என்னென்னவோ வச்சிருக்காளே, அதனால எல்லாத்தையும் நோண்ட ஆரம்பிச்சுட்டா. சதாசிவத்துக்கு ஆயுள் தண்டனை கெடைக்கும்னு சொல்றா.

ராமலிங்கம் நிலமை கொஞ்சம் வேற மாதிரி. உடம்பெல்லாம் நமநமனு பெருகி சதா அரிக்க ஆரமிச்சுடுத்து. முருகன் சன்னிதில அவாவா கொட்டற விபூதியைத் தடவினா கொஞ்சம் ஆறிப்போகும், ஆனா உடனே அரிக்க ஆரம்பிச்சுடும். எல்லாத்தையும் விட்டுட்டு முருகன் சன்னிதிக்கு வந்துண்டிருந்தார். ஆனா இப்போ அவரைப் பாத்து ஜனங்கள்ளாம் பயப்படறானுட்டு அவரை உள்ளே விடறதில்லை. அதனால, கோவில்லேந்து வரவா குடுக்கற விபூதியை கை நீட்டி வாங்கிண்டு அப்படியே பூசிண்டு திருப்புகழ் சொல்லிண்டிருக்கார். கடம்பவனேஸ்வரர் கோவில் வாசல்ல அடிக்கடி அவரை இன்னிக்கும் பாக்கலாம்.

என்ன கேட்டேள் ஸ்ரீராம்ணா? களிம்பு என்னாச்சா? ஒரு வெவரம் விடமாட்டேள் போலருக்கே?

சுலைமானோட ப்ரேதத்தையும், சதாசிவத்தையும் போலீஸ் எடுத்துண்டு போனப்புறம் ரொம்ப நாழி இடிஞ்சு போய் ஒக்காந்திருந்த ராமலிங்கம், விடிஞ்சதும் குளிச்சார். வேஷ்டி துண்டு மாத்திண்டார். களிம்பை எடுத்துண்டு போய் முருகன் சன்னிதில போட்டுட்டு வந்துடலாம்னு தொட்டு எடுத்தார் பாருங்கோ, கைல அப்படியே ஒட்டிண்டிடுத்து. பிச்சிப் பாத்தார், வீசிப் பாத்தார், வளைச்சுப் பாத்தார்..ஊஹூம்.. அப்படியே மச்சம் மாதிரி ஒட்டிண்டு குப்பி கீழே விழவே இல்லை. ஓடிப்போய் கோவில் சன்னிதில எடுத்துப் பாத்தார். குப்பி ஒட்டிண்டு வரவேயில்லை. முருகா முருகானு எத்தனை கூவினாலும் களிம்புக் குப்பி அசையக்கூட இல்லை.

ரெண்டு நாள் பாத்தார். மூணு நாள் பாத்தார். இதே கதைதான். ஆத்தை விட்டு வெளிலயே வரலை. அப்புறம் மெதுவா கழுத்துகிட்டே அரிக்க ஆரம்பிச்சுது. கை கால்னு பரவ ஆரம்பிச்சுது. மறுபடியும் முருகன் கிட்டயே ஓடினார். அங்க சிந்திக்கிடந்த விபூதில கால் பட்டதும் கொஞ்சம் இதமா இருந்தது. உடனே இடது கையால எடுத்து முகம் கை கால் கைனு வெறி வந்தாப்ல பூசிண்டார். தரைல உருண்டார்.

அப்போ கோவில்ல வைதீக கார்யமா ஒரு கோஷ்டி வந்திருந்தது. மூலவருக்கும் தாயாருக்கும் லக்ஷார்ச்சனை அபிஷேகம்னு பண்ணிண்டிருந்தா. அந்த கோஷ்டில ஒருத்தர் சுப்ரமணிய சன்னதிக்கு அகஸ்மாத்தா வந்தார். ராமலிங்கத்தை விசித்ரமா பார்த்தார். "உங்களுக்கு விபூதி வேணுமா? நான் தரேனே?"னு சொல்லிட்டு சன்னதிக்குள்ள இருந்த தட்டை எடுத்துண்டு வந்து கொடுத்தார். "அந்தக் குப்பியைக் கீழே வையுங்கோ. விபூதியை வாங்கிக்கோங்கோ"

ராமலிங்கத்துக்கு அழுகையா வந்துது. எல்லாக் கதையையும் சொன்னார். "ஐயா, எனக்கு உடம்பு அரிப்பு பரவாயில்லை. மனசு அரிப்பு இருக்கு பாருங்கோ, அந்தக் கொடுமையைத் தாங்க முடியலை. என் ஆப்த நண்பன் செஞ்ச பாவத்தை மறைச்சேன், இன்னொரு பாவத்தை செய்யத் தூண்டினேன், ஒண்ணுமே அறியாத இன்னொரு உயிர் என்னால பலியான பாவத்தையும் செஞ்சேன்... எனக்கு விமோசனமே கிடையாது.. எனக்கு அருள் பண்ணி தயவு செஞ்சு இந்தக் குப்பியை என் கைலேந்து பிடுங்கினேள்னா ரொம்ப ஒத்தாசையா இருக்கும். இது ஒட்டிண்டு இருக்கற வரைக்கும் என்னால பாவத்தை சுமந்துண்டிருக்கற மாதிரியே இருக்கு"னுட்டு அழுதார்.

வைதீகர், "முருகனை மனசுல நெனச்சுண்டு குப்பியை இங்கே வையுங்கோ"னார். ராமலிங்கமும் அவர் சொன்ன மாதிரி உண்டியல் கிட்டே குப்பியை வச்சுட்டு கையை எடுத்தார். கை மட்டும் வந்துது! ராமலிங்கத்துக்கு ஒரே சந்தோஷம். பரவசம். "ஐயா! நீங்க முருகன் தான்"னுட்டு வைதீகருக்கு சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணினார்.

வைதீகருக்கோ ஒண்ணும் புரியலை. "இல்லேல்லே. ஒரு பேச்சுக்காக அப்படி சொன்னேனே தவிர நீங்க வேறே. எல்லாம் முருகன் செயல்!"னுட்டு நைசா அங்கேந்து கழண்டுக்கப் பாத்தார்.

"என்னோட பாவம் போக ஒரு வழி உண்டா?"னு விடாம அவரைப் பிடிச்சுண்டார் ராமலிங்கம்.

"யாமிருக்க பயமேன்னு நின்னுண்டிருக்கான் பாருங்கோ, அவன் கிட்டே கேளுங்கோ. அவனே சூரபத்மனைக் கொன்னுட்டு பாவம் போகணும்னு இங்க வந்தவனாக்கும்"னு சொன்னார் வைதீகர்.

ராமலிங்கம் சிரிக்க ஆரம்பிச்சார். அதுக்கப்புறம் கீழே கிடந்த விபூதியையெல்லாம் எடுத்து எடுத்துத் தேச்சுண்டே நடக்க ஆரம்பிச்சார். வைதீகருக்கே பயம் வந்துடுத்து. அதுக்குள்ளே அவரைத் தேடிண்டு கோஷ்டிக்காரா வந்ததுனால, தம்பிரான் புண்ணியம்னு முருகனைப் பாத்து அரோகரானு கன்னத்துல போட்டுண்டார். ராமலிங்கம் இன்னும் சிரிச்சுண்டு அங்கயும் இங்கயும் நடந்துண்டிருந்தார்.

களிம்பு அங்கேயே இருக்கு. உண்டியலுக்கு முன்னாலே கண்படறாப்லயே இருக்கு. குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலுக்குப் போறவா முருகன் சன்னதிலே இன்னைக்கும் பார்க்கலாம். தைவ அனுக்ரகம் தேவைப்படறவா கண்ணுக்கு நிச்சயமா தெரியும்.

ஒடனே அப்பாதுரையாட்டம், 'அப்படின்னா களிம்பு கண்ணுக்கு தெரியாதவாளுக்கு தைவ அனுக்ரகம் தேவையில்லையா?'னு குதர்க்கமா கேக்காதீங்கோ. சபைல ஒண்ணு சொல்றேன் கேளுங்கோ. தைவ அனுக்ரகம், தைவ அனுக்ரகம்னு எல்லாரும் வாய் கிழியப் பேசறா. சொல்லுங்கோ, யாருக்கு வேணும் தைவ அனுக்ரகம்? நன்னா மூணு வேளையும் தின்னுட்டு தெனப்படிக்கு ஒரு டிரஸ், சினிமா, டிராமா, பாரின், கார், நகைனு நன்னா இருந்துண்டு, ஒரு பேஷனுக்காக.. ஒடம்புக்கு சோப்பு போடற மாதிரி.. சட்டை மாத்திக்கற மாதிரி.. ஒரு சாதாரண ஸ்மரணையில்லாத செய்கையா சாமி கும்பிடறா பாருங்கோ? அவாளுக்கு தைவ அனுக்ரகம் எதுக்கு? இருக்குற வசதியை வச்சுண்டு விவேகமா வாழ்ந்தாலே போறுமே? என்ன சொல்றேள்?

ஆனா பாருங்கோ, ஒண்ணுமே இல்லாதவா எத்தனை பேர் இருக்கா? ஒண்ணுமே இல்லாதவான்னா சாப்பாடு துணிமணியைச் சொல்லலை. வக்கே இல்லாதவா எத்தனை பேர்? எல்லாத்தையும் தொலைச்சுட்டு, நாளைக்கு பொழுது விடிஞ்சா இன்னும் புதுசா என்ன சோகம் வரப்போறதுன்னு இருக்கறவா எத்தனை பேர் இருக்கா லோகத்துல? இவாதான் தைவ அனுக்ரகம இல்லாம ஒரு க்ஷணமும் இருக்க முடியாத கூட்டம். இவாளுக்குத்தான் தைவ அனுக்ரகம் வேணும். இவாளுக்குத்தான் களிம்பு வேணும். இவா கண்ல களிம்பு நிச்சயம் படும்னு நான் சொல்றேன்.

ஒரே ஒரு விஞ்ஞாபனம். வேண்டுகோள். களிம்பை எடுத்துண்டா நல்லது நெனச்சுட்டு மறுபடியும் அங்கயே வச்சுடுங்கோ. ரேவதி மாமி அடிக்கடி சொல்ற மாதிரி எல்லாரும் நல்லாருக்கட்டும். ததாஸ்து.

"என்ன கேட்டேள் கீதா சந்தானம்? இதெல்லாம் நேக்கெப்படித் தெரியுமா?". எப்படி நறுக்னு கேக்கறா பாருங்கோ கீதா மாமி. சொல்றேன்.

வைதீகர் திரும்பிப் பாத்தார்.

"அசுவத்தாமா! எங்க போயிட்டே? ஒன்னைத் தேடிண்டு வரதுக்கே ஆள் வைக்கணும் போலருக்கு. வா, வா"னார் இன்னொரு வயசான வைதீகர். அவருக்குப் பின்னால இன்னும் ரெண்டு பேர். "வாங்கோ மாமா. எல்லாரும் காத்துண்டிருக்கா"னு வைதீகரை இழுத்துண்டு போனா. ராமலிங்கம் இன்னும் சிரிச்சுண்டே விபூதியைப் பொட்லம் மடிச்சுண்டிருந்தார்.

கதை சமாப்தம். இது அசுவத்தாமன் வாக்கு. அசத்யம் இல்லாத வாக்கு. போய்ட்டு வாங்கோ.