2011/08/29

ஒருமனம்
    பிரபலத் தேயிலைக் கம்பெனியில் விற்பனை நிர்வாகி நான். கோவையிலிருந்து சேலம் வரையிலான பெரிய கல்லூரி, ஹோட்டல், தொழிற்சாலைகளில் தேயிலை விற்பது எனக்கும் என் குழுவைச் சார்ந்த மூவருக்கும் வேலை. எங்களில் யாருக்குமே இன்னும் திருமணமாகவில்லையாதலால் நாங்களும், எங்களைப்போல் குடும்பக் கவலை இல்லாத மற்றவரும், வேலை முடிந்து மாலை நான்கு ஐந்து மணிக்கெல்லாம் காந்தி தெரு சாம்ராட் ஹோட்டலில் கூடுவோம். நிதானமாய் மது, அரட்டை, சில சமயம் மாது என்று நள்ளிரவு தாண்டி...விடுங்கள், கதைக்கும் இதற்கும் தொடர்பில்லை.

இரண்டு மாதத்திற்கு ஒருமுறை சென்னையிலிருந்து மேலதிகாரி பொன் ராமசாமி என்னுடன் 'மார்கெட் விசிட்' வருவார். பொன் சாருக்கு ஐம்பது வயதிருக்கலாம். இன்னும் திருமணம் செய்து கொள்ளாததற்குப் பல காரணங்களை அவரவருக்குத் தோன்றியபடி அளப்பார்களே தவிர, யாருக்கும் உண்மை தெரியாது. அவரிடம் கேட்கவும் தைரியம் கிடையாது. மனிதரோ பெயருக்கேற்ற மாதிரி உடலும் உள்ளமும் தங்கமான தங்கம். உள்ளுரில் தங்கினால், மாலையில் எங்களுடன் சாம்ராட் லாட்ஜில் சேர்ந்து கொள்வார். பனிக்கட்டியோ தண்ணீரோ சோடாவோ கலக்காமல் உயர்ந்த ரக விஸ்கி சாப்பிடுவார். நாங்கள் தான் முறை போட்டு வாங்கிக் கொடுக்க வேண்டும். விஸ்கி, வறுத்த முந்திரி, சாம்ராட் ஸ்பெஷல் நீளவெண்டைக்காய் வறுவல் என்று உள்ளே போகப்போக வெளியே கதை கதையாய் வரும். பொன் சார் கதை சொல்லத் தொடங்கினால் அந்தக்கால பாக்யராஜ் கூட பாடம் கேட்கலாம். நேரம் போவது தெரிந்தும், போக மனமில்லாமல் கேட்டுக் கொண்டிருப்போம். இந்த முறை ஏனோ உள்ளூரில் தங்கவில்லை. மறுநாள் யாரையோ பார்க்கப் போவதாகச் சொன்னார். கோயம்புத்தூர் வரை பஸ்ஸில் சென்று அங்கே மெடிகல் காலேஜ் நண்பர் ஒருவரோடு காரில் எங்கேயோ போவதாய் ஏற்பாடு. விடுங்கள், கதைக்கும் இதற்கும் தொடர்பில்லை.

மாலை ஆறு பத்து பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருந்தோம். ஈரோடிலிருந்து வர வேண்டிய பஸ் இன்னும் வரவில்லை. கூட்டமான கூட்டம். ஒரு வாலிபன் இங்கேயும் அங்கேயும் அலைந்து கொண்டிருந்தான். ஒன்றிரண்டு பேருடன் பேசிவிட்டு ஏமாற்றத்துடன் நகர்ந்து கொண்டிருந்தான். நாகரீகப் பிச்சை எடுக்கிறானா? வெகு அழகாக இருந்தான். சீரான உடையணிந்திருந்தான். அதிகம் படித்தவன் போலிருந்தான். பொருந்தவில்லையே என்று நினைத்து கொண்டிருக்கையில், எங்களை நோக்கி வருவதைப் பார்த்தேன். இருங்கள், கதைக்கும் இதற்கும் தொடர்பிருக்கிறது.

என்னை ஒதுக்கிவிட்டு நேராகப் பொன் சாரிடம் பேசினான். "சார்...என் பெயர் மனோகரன். சொந்த ஊர் பொள்ளாச்சி, இங்கே தங்கி பி.ஈ படிக்கிறேன் சார். அவசரமாக நான் பெங்களூர் போகணும் சார். கோவையிலிருந்து ப்ளேன்ல போகலாம்னு இருக்கேன். டிக்கட் வாங்க காசில்லை. உதவி பண்ண முடியுமா சார்? பணத்தைக் கண்டிப்பா திருப்பிடுவேன். உங்களைப் பாத்தா உதவி செய்வீங்கனு தோணுது சார்"

நானும் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறேன், ப்ளேன் டிகெட் வாங்கப் பிச்சை எடுத்துப் பார்ப்பது இதுதான் முதல். பேசத்துணிந்த என்னைத் தடுத்தார் பொன். "நீ எதுக்குபா பெங்களூர் போகணும்?" என்று கேட்டார்.

"உண்மையைச் சொல்றேன் சார். நான் ஒரு பெண்ணை உயிருக்கு மேலா விரும்பறேன். அவளும் என்னைவிட மேலாக என்னைக் காதலிக்கிறாள் சார். ஆனா எங்க ரெண்டு பேரோட அப்பா அம்மாவுக்கும் எங்கள் காதல் சம்மதமில்லை. அவள் விருப்பத்துக்கு மாறா பெங்களூர்ல யாரையோ மணம் செய்துவைக்கப் போறாங்க சார். நாளை மறுநாள் கல்யாணம். நான் உடனே போயாகணும் சார். ஒரே நாளில் அவளை எப்படியாவது பெங்களூரில் கண்டுபிடிச்சு இதை நிறுத்தணும் சார். முடிஞ்சா அதே பந்தலில் எங்க இரண்டு பேருக்கும் திருமணம், இல்லாவிட்டால் சேர்ந்து மரணம். இங்கே பாருங்க சார், என் காதலியோட இமெயில். வேணும்னா படிங்க... ஒவ்வொரு வரியிலும் அவளோட இதயம் எப்படித் துடிக்குதுனு தெரியும் சார்"

இப்படி டயலாக் விடுகிறானே என்று வியந்தேன். பொன் சார் அமைதியாக இருந்தார். ப்ளேன் டிகெட் பிச்சை தொடர்ந்தான். "நான் சொல்றதை நீங்க நம்பல போலிருக்கு...பரவாயில்லை சார். ஆனா கிண்டல் மட்டும் பண்ணாதீங்க சார், மத்தவங்க மாதிரி" என்றபடி எங்களிடமிருந்து விலகினான்.

"உண்மையான காதலா?" என்றார் பொன், உரக்க.

எனக்கோ கடுப்பு. "எல்லாம் சுண்டல் சார், சும்மா இருங்க" என்றேன், மெதுவாக அவருக்கு மட்டும் கேட்கும்படி.

பொன் சார் குரல் கேட்டு மனோகரன் நின்றான். ஒரு கணம் யோசித்துவிட்டு, "எங்கள் காதல் கலைந்து போனால் உலகத்தாருக்கு இனி காதலே கிடையாது; இதுதான் கடைசிக் காதல்" என்றான் தமிழ்க்கவி போல். 'ஐயோ' என்றேன் மனதுள். ஆனால் அவன் கண்களிலோ அத்தனை ஒளி.

"நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கும் போது பாக்கணும் சார் நீங்க. உலகத்து அத்தனை ஜீவராசிகளுக்கும் எங்கள் காதலின் சக்தியால உயிர் மூச்சும் ஊட்ட சக்தியும் வருவதைப் புரிஞ்சுக்குவீங்க. அவள் கை பிடிச்சுக்கிட்டு நடந்தா போதும், உலகத்தின் எல்லா பிரச்னையும் மாயமா மறைந்து விடும் சார். அவகூட இருக்கும் போது, எங்கே என் உயிர் எங்கே அவள் உயிர்னு தெரியாதபடி, மூச்சு கூட ஒண்ணாதான் விடுவோம் சார். நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கும் போது உலகத்தின் அத்தனை அமர காதலர்களும் கண்ணெதிரே வானவெளியில் வந்து எங்களையே பார்த்துக் கொண்டிருப்பார்கள் சார், சத்தியமான வார்த்தை. செத்தவங்களையும் பிழைக்கவைக்கும் சக்தி எங்கள் காதலுக்கு உண்டு" என்றான்.

'அடேய், அடேய்' என்று எனக்குள் எண்ணிக்கொண்டிருக்கும்போதே பொன் சார் ஒரு காரியம் செய்தார். தன்னிடம் இருந்த அத்தனை பணத்தையும் அவனிடம் கொடுத்தார். "இந்தா, என் கிட்டே இவ்வளவுதான் இருக்கு. இந்தக் கோயமுத்தூர் பஸ் டிக்கெட்டை எடுத்துக்கிட்டுப் பீளமேடு போ. அங்கே என் நண்பர் நீலக்கலர் இன்டிகா காருடன் எனக்காகக் காத்துகிட்டிருப்பார். அவர்கிட்ட இந்த சீட்டைக் கொடு. உன்னைக் காரில் பெங்களுர் கூட்டிகிட்டுப் போவார். அவருக்கு பெங்களூரும், அங்கே நிறைய ஆளுங்களையும் தெரியும். எப்படியாவது உன் காதலியைக் கண்டுபிடிச்சுக் கொடுப்பார்" என்றார்.

பிறகு நான் சற்றும் எதிர்பாராவிதமாக என்னையே பிக்பாகெட் அடித்தார். என்னிடமிருந்த சொச்சப் பணத்தையும் அவன் கையில் கொடுத்துவிட்டு, "சாக வேண்டாம். சேரப் பாருங்கய்யா.. இந்த உலகத்துக்கு காதல் இன்னும் பல கோடிக் காலம் தேவை. பஸ் வந்துடுச்சு பார். டைம் வேஸ்ட் பண்ணாதே, போ" என்றார்.

"சார், சார், சார்" என்று நான் அலறிக்கொண்டிருக்கையில் அந்த வாலிபன் பஸ்ஸில் ஏறிக் காணாமல் போனான்.

எனக்கோ பெருங்கோபம். "என்ன சார் நீங்க, இதையெல்லாம் நம்பறீங்க? அவன் அடுத்த ஊர்ல இறங்கி உங்களையும் என்னையும் நல்ல இளிச்சவாயிங்கனு சொல்லி நம்மப் பணத்தை நல்லா அனுபவிச்சுகிட்டு இருப்பான். இவன் என்ன உங்க உறவா முறையா, இப்படியா பைத்தியக்காரத்தனமா நடப்பீங்க, முன்ன பின்ன தெரியாதவங்க கிட்டே?" கொதிக்கும் எண்ணையிலிட்ட தண்ணீரானேன். "இப்ப என்ன பண்ணப் போறீங்க?"

பொன் சார் அமைதியாக "சாம்ராட் போகலாம், வா" என்றார். இருவரும் ஹோட்டலுக்கு நடந்தோம். இன்னும் கோபம் தணியாத என்னை முதுகில் தட்டி, "எனக்கு வேற ஒரு மனோகரனைத் தெரியும்" என்றார்.

"ரொம்பத் தேவை சார்... பெர்சு தொல்லைன்றது சரியா இருக்கு" என்று முணுமுணுத்தபடி அவருடன் நடந்தேன்.

    சாம்ராட் மதுக்கூடத்தில் பொன் சாரைச் சுற்றி அமர்ந்திருந்தோம். பஸ் நிலையத்தில் மாலை நடந்ததை அருகில் இருந்தவர்களிடம் புலம்பி முடித்து விட்டேன். இரண்டு ரவுண்டு விஸ்கியும் வாட்காவும் அவரவர் விருப்பத்துக்கேற்ப உள்ளே போனபின் எல்லாரும் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். என் கோபமும் தணிந்து விட்டிருந்தது. பொழுது போகவில்லை. பொன் சாரிடம் "உங்க மனோகரனப் பத்தி சொல்லுங்க... துட்டுதான் போச்சு, கதையாவது கேட்கலாம். நல்ல கதையா இருந்தா சரி" என்றேன்.

"அப்ப இன்னும் ரெண்டு ஸ்காச் கொண்டுவரச் சொல்லு" என்றபடி காலிக் கோப்பையை உயரே நீட்டி, "காதல் வாழ்க" என்றார் பொன்.

குழுவைச் சேர்ந்த மற்ற வெத்துவேலைகளும் கோப்பையை உயர்த்தி அவரவர் போதைக்கேற்ப, "வால்க, வாள்க, வழ்க, வய்க" என்றனர். கை நிறைய முந்திரிப்பருப்பை அள்ளி, ஒவ்வொன்றாய் வாய்க்குள் எறிந்தபடி சொல்லத் தொடங்கினார் பொன்.

இருங்கள், இருங்கள், கதையே இங்குதான் ஆரம்பம்.


தொடரும் ►►

16 கருத்துகள்:

 1. நல்லா இருக்கு தொடக்கம், பாட்டோட! தொடருங்கள்!

  பதிலளிநீக்கு
 2. நல்லா எழுதறிங்க சார் - ஆவலை தூண்டி விட்டு.

  பதிலளிநீக்கு
 3. அருமையான ஆரம்பம்.தொடர்ந்து படிக்கும் ஆவலைத் தூண்டி விடுகிறது!

  பதிலளிநீக்கு
 4. பொன் சாருக்கு பெரிய காதல் பின்னனி இருக்கும் போலிருக்கு....

  பதிலளிநீக்கு
 5. 'காம தீ' படித்து அதிர்ந்தவர்களுக்கு ஒரு மனம் மிகுந்த ஆறுதல். நன்றாயிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 6. பொன் சாரிடம் 'அன்புமல்லி' சாயல் தெரிகிறதே.

  பதிலளிநீக்கு
 7. பெயரில்லாஆகஸ்ட் 30, 2011

  நல்லாயிருந்தது...தொடரட்டும் ...தொடர்கிறேன்

  பதிலளிநீக்கு
 8. அப்டியே பஸ் ஸ்டாண்ட்லேர்ந்து கையைப் பிடிச்சு சாம்ராட் ஹோட்டலுக்கு கூட்டிகிட்டு வந்துட்டீங்க...

  இப்படித்தான் ஊர்ல ஒரு முறை ஒரு கயவாளிப் பய மெட்ராஸ் போக காசில்லை.. எங்கப்பா மாருதி உத்யோக்ல ஜெனரல் மேனேஜர்னு சொல்லி எங்ககிட்ட காசைக் கறந்துகிட்டு போய்ட்டான்...

  மறுவாரம் தஞ்சாவூர் பஸ்ஸ்டாண்ட்ல இதையே சொல்லி நாலு பேர்கிட்ட கையேந்திக்கிட்டு இருந்தான்.

  துரத்தினோம்... பாவிப்பய ஓடிப் போய்ட்டான்..

  அப்ப தப்பிச்சவன் இப்ப உங்க கதையில மாட்டிக்கிட்டான்...

  மேல சொல்லுங்க... :-))

  பதிலளிநீக்கு
 9. பத்து சாருக்கு வேலைப் பளு அதிகம் போல..

  இரத்தினச் சுருக்கமா ரெண்டு வார்த்தையில கருத்துக்களை சொல்றாரு..:-)

  பதிலளிநீக்கு
 10. வலை வந்து கருத்துரை வழங்
  கினிர் நன்றி
  கடுமையான முதுகுவலி
  காரணமாக அமர்ந்து கருத்துரை
  வழங்க இயலவில்லை மன்னிக்க!

  பின்னர் எழுதுகிறேன்
  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 11. சுஜாதா பிரிவோம் சிந்திப்போம் கதை இரண்டு பாகமாக எழுதினார். முதல் பாகம் கசிந்துருகும் காதல். நேர் மாறாக இரண்டாம் பாகம் ப்ராக்டிகல் வாழ்க்கை. இங்கு என்ன சொல்கிறீர்கள் என்று காத்திருக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 12. நன்றி meenakshi, தமிழ் உதயம், சென்னை பித்தன், பத்மநாபன், geetha santhanam, ரெவெரி, RVS, புலவர் சா இராமாநுசம், ஸ்ரீராம், ...

  பிரிவோம் சந்திப்போம் அடிக்கடி அடிபடுகிறது. படித்துவிட வேண்டும். ரொம்ப எழுதும் அளவுக்கு சரக்கில்லை ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 13. பிச்சையளித்து ஏமாந்த அனுபவம் உண்டா RVS? பஸ் ஸ்டேன்ட் பிச்சைகள் பலவிதம். இந்தக் கதையின் சம்பவம் போல பிச்சை கேஸ்களை எடைபோடுவது கஷ்டம். டிகெட் பணம் தொலைந்து போய் ஒருமுறை நானும் இப்படி கௌரவக் கடன் பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் வந்தது. வித்தியாசமான அனுபவம்.

  பதிலளிநீக்கு
 14. //வேலைப் பளு அதிகம் போல.//

  கொஞ்சம் பிசி தான் ஆர்.வி . எஸ் ... நேரமின்மை என்பதைவிட நேர மேலாண்மை யின்மை என்று தான் சொல்ல வேண்டும் ... கொஞ்சம் பெரிய கதை என்றால் பிடித்து படிக்க நேரம் ஆகும் ... இந்த கதை ரசித்து படித்தவுடன் தோன்றியதை உடனே தட்டிவிட்டு அலுவலகம் சென்றேன் ...

  பதிலளிநீக்கு
 15. என்னாமா கதை விட்டிருக்கான் அந்த இளைஞன்.
  தங்கள் அனுபவம் அழகாக கதையாகி உள்ளது அப்பாதுரை..
  காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 16. மூன்றாம் பகுதி படிச்சிட்டு முதல் பகுதி படிக்கிறேன்... எப்படி சொல்றதுன்னே தெரியலை.... அத்தனை அருமையா இருக்கு...

  இனி உங்கள் கதைகள் எல்லாம் ஒன்னு விடாம வாசிச்சே ஆகனும்...


  தொடக்கமே அசத்தலா தான் இருக்கு...

  அந்த இளைஞனின் கண்ணில் உண்மை இருந்திருக்கலாம்...

  அல்லது பொன் சாரின் மனம் அவன் சொன்ன காதல் கதையில் கரைந்திருக்கலாம்.. உண்மை என நம்பி இருந்திருக்கலாம்...

  ஆமாம் கதையே இங்க தான் ஆரம்பிக்குது...

  அடுத்த பகுதி படிக்க போய்க்கிட்டு இருக்கேன்பா...

  அன்பு வாழ்த்துகள் அருமையா அசத்தினதுக்கு அப்பாதுரை...

  பதிலளிநீக்கு