2009/08/29

தேவை: ஒரு 'நோ பால்', ப்ளீஸ்!



எழுபதுகளின் தொடக்கத்தில் குரோம்பேட்டை நியூகாலனியில் குடியிருந்த ஏறக்குறைய நாலைந்து கோடை விடுமுறைகளில் உடலும் மனமும் பல மடங்கு வளர்ந்தது. க்ரிகெட் விளையாடுகிறேன் பேர்வழி என்று நியூகாலனி அணியிலிருந்த நாங்கள் அருகிலிருந்த லட்சுமிபுரம், ராதாநகர், அஸ்தினாபுரம் என்று ஒரு இடம் விடாமல் வெயிலை வடித்து க்ரிகெட் விளையாடி இருக்கிறோம். எத்தனையோ வெற்றிகள், எத்தனையோ தோல்விகள் - அந்த நாள் க்ரிகெட் நட்புகள் மட்டும் வெற்றி தோல்விக்கப்பாற்பட்டவையாய் காலத்தை வென்று நிற்கின்றன.

குரோம்பேட்டையில் தான் க்ரிகெட் கற்றுக் கொண்டேன். குடிவந்த புதிதில் பக்கத்து எதிர் வீட்டுப் பிள்ளைகள் 'வா க்ரிகெட் விளையாடலாம்' என்று அழைத்த போது, 'க்ரிகெட் தெரியாது' என்று ஒப்புக்கொள்ள வெட்கப்பட்டு 'ஆகா, தெரியுமே' என்று களத்தில் இறங்கியதும், மட்டை பிடிக்கத் தெரியாமல் முதல் பந்திலேயே அவுட். வகுப்பில் என்னுடன் படித்த சின்னி மட்டும் இது தான் வாய்ப்பு என்று, 'இதோ பார்டா, லன்டன் தொரை... க்ரிகெட் பேட் கூடப் பிடிக்கத் தெரியலை. ஐயாவுக்குத் தமிழ் தான் வராதுன்னா விளையாடக் கூட வராதா?' என்று மிகையாகக் கிண்டல் செய்யத் தொடங்கிவிட்டான். 'முன்னே பின்னே க்ரிகெட் விளையாடியிருக்கிறியா லன்டன் தொரை?' என்ற அவன் நக்கல் கேள்விகள் என்னை அவமானப் படுத்தியது இன்னும் நினைவிலிருக்கிறது. ஆறாம் வகுப்பில் தான் தமிழில் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டேன். வீட்டில் தமிழில் பேசினாலும், அதுவரை முறையாகத் தமிழ் கற்கவில்லை. ஆறாம் வகுப்பில் எப்படியோ தேறி, எட்டாம் வகுப்பு வாக்கில் தமிழ் என் எழுத்திலும் பேச்சிலும் வெண்ணையாக உருகத் தொடங்கியது வேறு கதை. வகுப்பில் எனக்குப் பின்னால் உட்கார்ந்திருந்த சின்னியின் கிண்டல்கள் (மூன்று சுழி 'ண' புரிவதற்குள் நான் பட்ட அல்லல் இருக்கிறது பாருங்கள் - மூன்றாம் சுழியின் மகத்துவம் இப்போது புரிந்திருக்கும்) போதாதென்று இப்போது க்ரிகெட் மைதானத்தில் தொடரத் தொடங்கின. சின்னி என்னை விட அரை அடி உயரமும் இரண்டடி அகலமும் கூடுதலாக இருந்ததால் நான் வாயைத் திறக்கவில்லை. சின்னியை உளமாற வெறுத்தாலும் க்ரிகெட் விளையாடிப் பேரெடுக்க வேண்டும் என்ற ஆசையில் (வெறி) எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டேன்.

சின்னியும் அசோக்கும் நெருங்கிய நண்பர்கள். சிறு வயதிலிருந்தே அருகிலிருந்த சர்வோதயா தொடக்கப் பள்ளியில் படித்தவர்கள். அசோக் முன்மொழிந்தால் சின்னி வழிமொழி்வான். பிறகு நாங்களெல்லாம் ஆட்டு மந்தை போல் பின்னால் போவோம். எங்கள் க்ரிகெட் அணியின் தலைவன் அசோக். யாருடன் மோதுகிறோம் என்று தெரியாமல், எதிரணியின் வலிமையைப் புரிந்து கொள்ளாமல் போட்டி போடுவதில் அசோகன் சித்தன். கவலையே படமாட்டான். 'என்னடா இப்ப? கொட்டையை மறச்சிக்கிட்டு விளையாடுங்கடா. அடிபட்டா, அடி தானே?' என்பான். நாங்கள் பயிற்சி செய்வதோ ட்யூப் துண்டுகளை ஒன்றன் மேல் ஒன்றாக இட்டுத் தயார் செய்த பந்தில். டென்னிஸ் பந்து கிடைத்தால் அதிசயம். இதில் மேட்ச் விளையாட மட்டும் டென்னிஸ் பந்திலோ, பின்னாளில் அசல் க்ரிகெட் பந்திலோ, ஒப்புக் கொண்டு விடுவான். 'ஏண்டா, முதலிலேயே அவங்களிடம் சொல்லிட வேண்டியது தானே? டென்னிஸ் பந்துனு நினைச்சுக்கிட்டு வந்தா இப்போ என்னடா செய்யுறது? இந்த மட்டையை வச்சுக்கிட்டு டென்னிஸ் பந்தில் விளையாடுறதே கஷ்டம்' என்போம். அசர மாட்டான். 'டேய், அவங்க கிட்டயே பேட் கடன் வாங்கிடலாம்டா' என்று சொல்லிவிட்டு அவர்களிடம் சென்று எப்படியோ பழைய பேட் பந்து என்று கடன் வாங்கிக் கொண்டு வந்துவிடுவான். மட்டை பந்தை விடுங்கள். சில சமயம் எங்கள் அணியில் பதினொரு பேர் தேற மாட்டார்கள். எதிரணியிலிருந்து ஆட்களையும் கடன் வாங்கிக் கொண்டு வந்து விடுவான்.

இரண்டாவது மாதமோ என்னவோ, லட்சுமிபுரத்துடன் மேட்ச் வைத்துவிட்டான் அசோக். முதல் இன்னிங்சில் டாஸ் வென்று அவர்கள் விளையாடத் தொடங்கினார்கள். நாயடி பேயடி என்று அடித்தார்கள். ஆறு விகெட்டுக்கு எண்பது ரன்னோ என்னவோ எடுத்து விட்டு, எங்களைப் பார்த்துப் பரிதாபப் பட்டு டிக்ளேர் செய்தார்கள். முதல் இன்னிங்க்சில் நாங்கள் பதினைந்தோ இருபதோ ரன்கள் (அதில் பாதிக்கு மேல் விகெட் கீபர் விட்டுக் கொடுத்த பை ரன்கள்) எடுத்து எல்லோரும் அவுட்டாகி விட்டோம். இரண்டாவது இன்னிங் பாலோ-ஆன் தருவார்கள் என்று நினைத்தால் விடாமல் பேட்டிங் செய்ய இறங்கினார்கள் லட்சுமிபுர அரக்கர்கள். மறுபடியும் நாயடி பேயடி அடித்து ஒரு விகெட் கூட இழக்காமல் ஐம்பது ரன் எடுத்தார்கள். அசோகன், சின்னி இருவரும் மாற்றி மாற்றி போலிங் செய்து களைத்துப் போயிருந்தார்கள். விகெட் கீபராக இருந்த சாய் கூட போலிங் செய்தான். கடைசியில் என்னிடம் கொடுத்தார்கள். விடுவானேன் என்று பந்தை எடுத்துக் கொண்டு போலிங் செய்யத் தயாரானேன். முதல் ஐந்து பந்துகளில் மூன்று பவுண்டரிகள் அடித்தார்கள். ஆறாவது பந்திலும் பவுண்டரி. சரி, ஓவர் முடிந்தது என்று ஒதுங்க நினைத்தால் 'நோ பால்' என்றான் லட்சுமிபுரம் அம்பயர். ஓசியில் இன்னொரு பால் கிடைத்தால் இன்னொரு பவுண்டரி அடிக்கலாமே என்ற நப்பாசை. 'நோ பால் இல்லை' என்று முறைத்தேன். அம்பயர் பெயருக்கு க்ரீசைச் சுட்டிக்காட்டி, நான் அதைத் தாண்டி வந்ததாகப் பொய் சொன்னான். என்ன செய்ய? அம்பயராச்சே? மிட்-ஆனில் பீல்டிங் செய்ய நின்றிருந்த சின்னி என்னருகே வந்து 'அம்பயரை முறைக்காதே' என்றான். 'சின்னி, இது நோ பாலே இல்லை' என்றேன். 'என்ன இப்போ? ஆறு பால் போட்டுக் கொடுத்தே, இன்னொரு பால் போட்டுக் கொடு போ' என்று கிண்டலாகச் சொன்னான். மறுபடி பந்து வீசினேன். லெக் ஸ்டம்ப் தெரிய நின்று கொண்டிருந்த பேட்ஸ்மேனை மடக்கலாமென்று வீசினால் லெக் ஸ்டம்பிலிருந்து விலகி புல் டாசாகிப் போனது பந்து. 'வைட்' என்று சிரித்தான் அம்பயர். அந்தப் பந்தை 'புல்' செய்ய முயற்சி செய்துத் தோற்ற வெறுப்பில் பேட்ஸ்மேன் தன்னைத் தானே திட்டிக் கொள்ள, அடுத்தப் பந்தைக் கவனமாக வீசினேன். என்னுடைய குருட்டு அதிர்ஷ்டமா என்னவென்று தெரியவில்லை, பேட்ஸ்மேன் க்ளீன் போல்ட். ஓவர்பிட்சாக விழுந்த பந்தை ஹூக் செய்யப் போய் பந்தை விட்டு காற்றை அடிக்க, க்ளீன் போல்ட்! நடு ஸ்டம்ப் புரண்டு கீழே விழுந்து விட்டிருந்தது. என்னுடைய முதல் விகெட்! எனக்குப் பெருமை தாளவில்லை. அருகிலிருந்தது சின்னி என்பதைக் கூட மறந்து ஓடிப் போய் கை தட்டினேன். 'டேய், முதல் விகெட்டுடா சின்னி!' என்ற என்னுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வானென்று எதிர்பார்த்தேன். சின்னி முகத்தில் கடுமை தெரிய நின்றான்.

'என்னடா?'

அம்பயரைச் சுட்டிக் காட்டினான். 'நோ பால்' என்று சைகை காட்டிக் கொண்டிருந்தான் அம்பயர். எனக்கு வந்த ஆத்திரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் கத்தினேன். அம்பயர் வழக்கம் போல் க்ரீசைக் காட்டி 'இங்கே வா, காட்டுகிறேன்' என்றான். 'பொய், பொய், மகத்தான பொய்' என்றேன். அம்பயர் என் சட்டையைப் பிடித்து விட்டான். மிட்-ஆன் நிலையில் நிற்க வேண்டி இருந்தாலும் போலிங் செய்யும் இடத்தினருகே நின்றுகொண்டிருந்த சின்னி ஓடி வந்து அம்பயரை பளாரென்று முகத்தில் அறைந்தான். 'பொறுக்கி டேய், துரை போலிங்க் செஞ்சதை நானும் பாத்தேன். ஏமாத்துறது போதாதுன்னு யார் சட்டையைப் பிடிக்குறே? வீக்கா இருந்தா என்ன வேணா செய்யுறதா?' என்று மூன்று ஸ்டம்புகளையும் கையிலெடுத்துக் கொண்டு 'வாங்கடா டேய்!' என்று சிலம்பாட்டம் ஆடத் தொடங்கி விட்டான். பிறகு ஒரே அடி தடி. ஆளுக்கு ஆள் அடித்துக் கொண்டோம். இடையில் அசோக் அவர்களுடைய அசல் க்ரிகெட் மட்டையை, பரூக் இஞ்சினியர் கையெழுத்திட்ட மட்டை, எடுத்து ஒளித்து விட்டான். அடி தடி ஓய்ந்து அவர்கள் சென்ற பின்னர் எங்கள் காயங்களைக் கணக்குப் போட்ட படி நாங்கள் வீடு திரும்ப நினைத்த போது, அசோக் 'மச்சி, பாருங்கடா' என்று மட்டையை எடுத்துக் கொண்டு வந்து அரைக்கூத்து ஒன்று ஆடிக் காட்டினான். காயமும் வலியும் மாயமாய் மறைந்தன. 'ஓடலாம் வாங்கடா' என்று எல்லோரும் ஒரே ஓட்டமாக ஓடத் தொடங்கினோம். (திருட்டு மட்டைக்கு கறுப்பு நிற க்ரிப் மாற்றி நிறைய நாள் விளையாடினோம் என்று நினைக்கிறேன்).

வீட்டருகே வந்ததும் நின்றோம். அப்போது நியூகாலனியில் புதிதாகப் பொதுத் தண்ணீர் தொட்டி கட்டிக் கொட்டிருந்தார்கள். வாடர் டேங் அடிவாரத்தில் நின்று ஆசுவாசப் படுத்திக் கொண்டோம். சின்னி என்னருகே வந்து என்னைப் பாராட்டினான். 'துரை, குட் போலிங்டா. நோ பத்தி கவலைப் படாதே. நீ போட்டது சூபர்' என்றான். பிறகு கண்ணன் கடைக்குச் சென்று பத்து கடலை உருண்டைகள் வாங்கிச் சாப்பிட்ட போது எனக்கு இரண்டு கொடுத்தான். 'டேய், நீ மட்டும் போல்டு செஞ்சு தகராறைத் துவக்கல்லின்னா இன்னிக்கும் பேட்டிங் செஞ்சிட்டிருப்பாங்க, காஜிகாரப் பசங்க' என்றான். அப்போது சின்னி எனக்கு நெருங்கிய நண்பனாகத் தெரிந்தான்.

உண்மையில் எங்கள் நட்பு அந்த நிமிடத்தில் தொடங்கியது என்று நினைக்கிறேன். அதற்குப் பிறகு சின்னியும் நானும் ஒன்றாக க்ரிகெட், மரக்குரங்கு, கில்லி என்று நிறைய விளையாடி இருக்கிறோம். எனக்காக நிறைய சண்டை போட்டிருக்கிறான். எங்கள் டீமில் நானும் அவனும் ஓபனிங் பேட் செய்திருக்கிறோம். பின்னொரு நாளில் அதே லட்சுமிபுர அணியுடன் மோதி அவர்களை நாயடி பேயடி என்று அடித்ததும் நினைவுக்கு வருகிறது. என்னுடைய முதல் 'செஞ்சுரி பார்ட்னர்சிப்' அவனுடன் லட்சுமிபுர மேட்சில் தான் நடந்தது. முதன் முதலாக 'சிக்சர்' அடித்துப் பார்த்ததும் அந்த மேட்சில் தான். அதுவரை சிக்சர் எல்லாம் தேசிய மேட்சுகளில் தான் நடக்கும் என்று நினைத்திருந்தேன். மிடில் ஸ்டம்பில் விழுந்த லெக் ஸ்பின் பந்தை கொஞ்சம் ஆப் ஸ்டம்ப் பக்கம் நகர்ந்து சின்னி காட்டுத் தனமாக அடிக்க, பந்து டீப் ஸ்கொயர் லெக் தாண்டி ஆகாயத்தில் சென்று இறங்கிய போது எனக்கேற்பட்ட பிரமிப்பை மறக்கவில்லை. கண்ணண் கடைக்குப் பின்னால் குடியிருந்த மாலதி (மால் என்போம், லட்டு போல் இருப்பாள்) அன்றைக்கு போட்டி பார்க்க வந்திருந்தது காரணமா தெரியாது, சின்னியின் விளையாட்டு அபாரமாக இருந்தது. நாங்கள் இருவரும் செஞ்சுரி பார்ட்னர்ஷிப் முடித்ததும் என்னைத் தோளோடு அணைத்தான் சின்னி. 'டேய், நீ தேறிட்டே' என்றான். லட்சுமிபுர அணியினர் கூட பாராட்டினார்கள். மால் ஓடி வந்து சின்னிக்கு மட்டும் ஒரு சாக்லெட் கொடுக்க, அவன் அதைப் பிரித்து என்னுடன் பகிர்ந்து கொண்டான். சரியாக நினைவில்லை, நான் முப்பத்தெட்டும் சின்னி நாற்பத்தொன்பது ரன்களும் எடுத்திருந்தோம் என்று நினைக்கிறேன். சின்னி நாற்பத்தொன்பது ரன் எடுத்து ஆடிக்கொண்டிருந்தது மட்டும் நன்றாக நினைவிருக்கிறது. ஐம்பது அடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தான். அடுத்த பந்தில் அவன் அவுட். ஷார்ட் பிட்சாக வந்த பந்தை அடிக்காமல் தடுக்கப் போய், மட்டையின் நுனியில் பட்டு பார்வர்ட் ஷார்ட் லெக்கில் சுலபமான கேட்ச். ஏமாற்றத்தை அடக்க முடியாமல் சோர்ந்து போய் நடந்தான். அன்று மாலை அதைப் பற்றி நிறைய புலம்பிக் கொண்டிருந்தோம்.

அடுத்த சில மாதங்களில் நான் பம்மலுக்குக் குடிபெயர்ந்து விட்டேன். சின்னியுடன் அவ்வப்போது தொடர்பிருந்தாலும் நட்பின் நெருக்கம் குறைந்து விட்டது. கல்லூரிப் படிப்பு முடித்து எண்பதுகளில் ஒரு நாள் சின்னியிடமிருந்து தகவல் வந்தது. மாலைத் திருமணம் செய்து கொள்வதாகவும் அவசியம் வரவேண்டுமென்றும் சொன்னான். திருமணத்துக்குச் சென்றிருந்தேன். என்னிடமிருந்த யெஸ்டி பைக்கில் நாலு பேர் குரோம்பேட்டையிலிருந்து தி.நகர் வரை சென்றோம். லட்டு போலிருந்த மால் இப்போது தக்காளியும் லட்டும் கலந்தது போல் இருந்தாள். மால் எங்களுடன் அவ்வப்போது வெட்கப்பட்டு பழகியிருந்தாலும், சின்னியும் மாலும் ஐட்டமென்பது எனக்குத் தெரியாது. சத்திரத்தில் கொட்டமடித்தோம்.

அதற்குப் பிறகு சின்னியை நான் சந்தித்தது டோக்யோவில். இரண்டாயிரத்து இரண்டோ மூன்றோ, சரியாக நினைவில்லை. விமான நிலையத்தில் என்னை அடையாளம் கண்டு பிடித்துப் பேசினான். அவனுடன் மால் இருந்தாள். உடன் பதினெட்டு வயதில் போல் ஜொலித்துக் கொண்டிருந்தது அவர்களுடைய ஒரே பெண். சொந்தமாக ரியல் எஸ்டேட் கம்பெனி நடத்துவதாகவும், சென்னையில் நிறைய குடியிருப்புகள் கட்டி விற்பதாகவும் சொன்னான். நிறைய பேசிக் கொண்டிருந்தோம். ஒருவரையொருவர் வெறுத்ததையும் பிறகு நெருங்கிய நண்பர்களானதைப் பற்றியும் பேசினோம். நிறையப் பேசிக் கொண்டிருந்து விட்டு விலகினோம். அதற்குப் பிறகு சமீபத்தில் லிங்ட்-இன் வழியாகத் தொடர்பு மீண்டும் புதுப்பிக்கப் பட்டதென்றாலும், சின்னியுடன் ஒன்றிரண்டு முறை தொலைபேசியதோடு சரி.

இரண்டு வாரங்களுக்கு முன் சின்னியின் லிங்ட்-இன் முகவரியிலிருந்து, எனக்கு மாலிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. 'சின்னி உன்னுடன் பேச விரும்புகிறான்' என்று தொலைபேசி எண்ணுடன், முறுப்பாக ஒரு செய்தி.

இரண்டு நாள் பொறுத்து, சனிக்கிழமை இரவு அவனுடன் பேசினேன். ஒரு மணி நேரத்துக்கு மிகுந்து பேசினோம். மெதுவாகப் பேசினான். என்னுடன் பேசக் கிடைத்ததில் மகிழ்ச்சியென்றான். அவனுடைய பெண்ணுக்குத் திருமணமாகி இருப்பதாகப் பெருமையுடன் சொன்னான். 'போவதற்கு முன்' நண்பர்களைப் பார்க்கவோ பேசவோ தோன்றியது என்றான்.

சின்னிக்குத் தொண்டையில் கேன்சர். மூன்றாம் நிலைத் தீவிரம். இரண்டு மாதம் போல் உயிர் வாழும் அவகாசம் கொடுத்திருக்கிறார்கள்.
தேவை: ஒரு'நோ பால்', ப்ளீஸ்! | 2009/08/29

சின்னி அருமையாகப் பாடுவான். சிறு வயதில் இந்தப் பாடலைப் பாடும் போது கிண்டல் செய்வோம். 'பாட்டு பாடுறா' என்றால் உடனே இந்தப் பாட்டைப் பாடத் தொடங்கி விடுவான். எனக்கென்னவோ இப்போது பொருத்தமாகத் தோன்றுகிறது.