2012/06/15

தைவாதர்சனம்
◄◄   1     2     3    தை கேக்கத் திரும்பி வந்தவாளுக்கு ஒரு ஆத்மார்த்த வெல்கம் போட்டுடறேன்.

பொடி டப்பாவை கால் டேக்சில தொலைச்சுட்டேன்னு சொன்னேனில்லையா? மகராஜன், வீடு தேடிக் கொண்டு வந்து கொடுத்தான். காசு கூட வாங்கிக்கலை. இவாள்ளாம் இருக்கறதுனால தான் மழை பெய்யறது.

மழைன்னதும் பாருங்கோ, அன்னைக்கு சரியான மழை. பின்னால இருக்கற எங்காத்துப் போர்ஷன்லந்து வாசல் கேட்டுக்குக் குறுகலான மண்பாதை. கொட்ற மழைக்குக் கேக்கணுமா? ந்ருஜலம் கோமியத்துலந்து பக்கத்து பில்டிங் சாக்கடை எல்லாம் கலந்து சேறும் சகதியுமா சர்வமூத்ர சாகரமா ஓடிண்டிருக்கு. வாசல்லந்து பீங் பீங்னு ஹாரன் அடிக்கறது. யாருடாதுனு எந்தப் போர்ஷன்காராளும் பார்க்கலை. யாரோ இறங்கி வந்து "ஐரே! ஐரே!"னு கூவறான். நான் ஒரு குடையைப் பிடிச்சுண்டு வாசல்ல வந்தேன். அதுக்குள்ள கால் சேத்துல புதைஞ்சுடுத்து. சபிச்சுண்டே காலை தண்ணில அளஞ்சுண்டே பாத்தேன், கால் டேக்சிக்காரன் தான். மூக்கை மூடிண்டு அங்கயும் இங்கயும் அருவருப்போட தாவித்தாவி நான் சிரமப்பட்டு நடக்க ஆரம்பிச்சதைப் பாத்ததும் அவன் அங்கருந்து, "நின்னுக்க ஐரே.. நான் வரேன்"னு சொல்லி, கன அலட்சியமா சீட்டியடிச்சுண்டே புண்யநதியில இறங்கிவர மாதிரி எங்கிட்ட வந்தான். பொடி டப்பாவைத் தந்தான். நான் ஏதாவது அவனுக்குத் தரதுக்குள்ளே, "ஒண்ணும் வேணாம் ஐரே, வர்ட்டா?"னுட்டு மறுபடியும் சீட்டியடிச்சுண்டே சந்தோஷமா நடந்து போயிட்டான். பொடி டப்பா அந்த மூத்ரசகதியில மூழ்கிடப் போறதுன்னுட்டு சர்வ ஜாக்கிரதையா அடி மேல அடி வச்சு ஆத்து வாசலுக்கு வந்து காலையலம்பிண்டு உள்ளே போனேன்.

எனக்கும் அந்த டேக்சிக்காரனுக்கும் எவ்வளவு வித்தியாசம் பார்த்தேளா? நேக்கு உதவி செய்ய வந்திருக்கான். என்னால சந்தோஷமா அந்த சகதியில இறங்கி அந்த உபகாரத்தை வாங்கிக்க முடியலே. ஆனா அவன் சீட்டியடிச்சுண்டே வந்து சந்தோஷமா குடுத்துட்டு நன்றி கூட எதிர்ப்பார்க்காம அதே சகதியிலே நடந்து போயிட்டான். நான் உடம்பு சுத்தம் பார்த்ததாலே எல்லாத்துக்கும் கவலைப்பட்டு எதையும் செய்ய முடியலே. அவனுக்கு மனசு சுத்தமா இருக்குறதால எதைப் பத்தியுமே கவலையில்லாம எல்லாத்தையும் செய்ய முடிஞ்சுது. இதான் வித்தியாசம்.

இதே மாதிரி பாருங்கோ.. பிரதாப ராஜா, பிரம்மா ரெண்டு பேருமே அவாந்த்ர லோகப் பாதையிலே போயிண்டிருக்கா. ஆனா ஒருத்தருக்கு அசூயை, இன்னொருத்தருக்கு ஆனந்தம். அவாந்த்ர லோகத்துக் கிட்டே வரப்போ ரசகந்தம் அடிக்கிறது. இங்லிஷ்ல சல்பர்னு சொல்லுவாளோனோ.. எரியற வாடை அடிக்கறது. என்னென்னவோ சப்தம் எல்லாம் கேக்கறது. பிரம்மா மனசுக்குள்ளே திட்டிண்டே வரார். பிரதாப ராஜாவோ ஒரு சந்தோஷ எதிர்பார்ப்போடயும் தேவாளுக்கு உபகாரம் பண்ணப்போற நிறைவிலயும் வரார். மனசுல பாருங்கோ.. மார்க்கம் உண்டு, மூர்க்கமும் உண்டு.

அவாந்த்ர லோகம் வந்ததும் ப்ரம்மா, "பிரதாபா, நீ போய் அழைச்சுண்டு வா, நான் இங்கயே இருக்கேன்"னு சொல்றார். பிரம்மாவுக்கு உள்ளே போகப் பிடிக்கலைங்கறது பிரதாபனுக்குப் புரியறது.

ராஜா தனியா உள்ளே போறார். அங்கே ம்ருத்யுவான ஜன்மாக்களெல்லாம் ஓலமிட்டிண்டுருக்கு. உருவமெல்லாம் இல்லை. ஆனா தன்னைச் சுத்தி நடமாட்டம் இருக்கறதை உணர முடியறது. தன்னோட குமாரனைத் தேடறார். "பிரதாப குமாரா, குமரா"னு கதறிண்டே போறார். சப்தமே காணோம். இந்த டைம் பார்த்து ஒரு குடும்பப் பாட்டு கூட இல்லாமப் போனது அவருக்கு வருத்தமா இருக்கு. அவாந்த்ர லோகத்துக் கடைசி வரைக்கும் பாத்துட்டு திரும்பறார். பிள்ளையோட ஜீவன் குரல் கொடுக்கக் காணோம். இவ்ளோ தூரம் வந்தும் கண்டுபிடிக்க முடியலையேனு ரொம்ப வருத்தமா போய், "குமரா, குமரா"னு துடிச்சு அழறார்.

மனசுவிட்டு அழறோம் பாருங்கோ, அதுக்கு எப்பவுமே அதீத சக்தி உண்டு. ஜீவனோட ஜீவனை சேக்கற சக்தி. தெய்வத்தையும் மனுஷாளையும் சேக்கற சக்தி. 'ஆருளர் களைகண்?'னு எதுக்கு அழணும்? சகலத்தையும் துறந்து, 'ரங்கா! நீ எனக்கு அம்மாயில்லையா? பிள்ளைக்கு அம்மாவை விட்டா வேற யார் இருக்கா? உன்னை விட்டா நேக்கு வேறு யாரு இருக்கா, என் அம்மா?!'னு ஆத்மா கரைய அழறப்போ, அங்கே அடிப்பொடிக்கும் அனந்தனுக்கும் ஹாட்லைன் கனெக்ஷன் கிடைக்கறது பாருங்கோ.. அந்தச் சக்தி. அமானுஷ்யத்துக்கும் அப்பாற்பட்ட சக்தி.

ராஜா அப்படி மனசு வெம்பி அழ ஆரம்பிச்ச சித்த நாழிக்கெல்லாம், "அப்பா!"னு ஒரு குரல் கேக்கறது.

திக்குமுக்காடிப் போறார் ராஜா. "குமரா!"ங்கறார். "அப்பா!"ங்கறது ஒரு ஜீவன். "குமரா!"ங்கறார் மறுபடி. "அப்பா!"ங்கறது அதே ஜீவன். குரலை வச்சுத் தேடிக் கண்டுபிடிச்சுடறார் ராஜா. அவர் கண்லேந்து தாரை தாரையா ஆனந்தஜலம். நடந்ததையெல்லாம் சொல்றார்.

உள்ளே இப்படி இருக்கச்சே, வெளில பிரம்மா பொறுமையில்லாம காத்துண்டிருக்கார். 'என்னடாது, உள்ள போன ராஜாவை இன்னும் காணோமே?'னு அவருக்கு ஒரே அமாதி. 'சரி, இனிமே ராஜா திரும்பி வரப் போறதில்லை'னு நினைக்கறப்போ, ராஜாவோட குரல் கேக்கறது. "பிரம்ம தேவரே! என் பையனைக் கண்டுபிடிச்சுட்டேன்"னு குரல் கேக்கறது. பிரம்மாவுக்கு பரம சந்தோஷம். "என்ன பிரதாபரே, உம்ம பையனைக் கூட்டிண்டு வந்தீரா?"னு கேக்கறார்.

"அவன் வர மாட்டேன்னுட்டான்"கறார் பிரதாப ராஜா.

"என்ன? வர மாட்டானாமா? என்னய்யா இது?"னு பதட்டப்படறார் பிரம்மா.

"நான் என்ன பண்றது. எவ்வளவு கெஞ்சியும் வரமுடியாதுன்னுட்டான். நீங்களே வேணும்னாலும் கேட்டுப் பாருங்கோ"னுட்டு நடக்க ஆரம்பிக்கறார் ராஜா.

"நான் எப்படிய்யா உள்ளே போறது?"னு எரிஞ்சு விழறார் பிரம்மா.

"அவாந்த்ர லோகத்து வாசல்லயே தான் நிக்கறான். நீங்க இங்கருந்தே பேசுங்கோ"னு சொல்றார் பிரதாப ராஜா.

"பிரதாப குமாரா.. என்னய்யா கூத்தடிக்கிறே? என் வரமாட்டேங்கறே?"னு நாலு வாயாலயும் கத்தறார் பிரம்மா.

குமார ஜீவன் கொஞ்சம் நிதானமா பதில் சொல்றது. கிணத்துக்குள்ளேந்து வர மாதிரி இருக்கு சப்தம். ஆனா நிதானமா, தெளிவாக் கேக்கறது.

பதிலைக் கேட்டதும் பிரம்மாவுக்கு ரொம்பக் கோவம் வரது. அவர் மொகத்துல எள்ளும் கொள்ளும் வெடிக்கறது. "பிரதாப ராஜா, உம்ம புத்தியைக் காமிச்சுட்டீரே?"னு கோவமா பேசறார்.

"நான் என்னய்யா செய்யறது? எல்லாம் என் பையனோட ஜீவன் சொன்னதைத் திருப்பிச் சொன்னேன்! இப்ப நீங்களே அதன் வாயால கேட்டாச்சு. நீங்க பண்ணின கூத்துக்கு நான் எப்படி ஜவாப்தாரியாறது?"ங்கறார் பிரதாப ராஜா. "என் பிள்ளை சொன்னதை கேட்டேள் இல்லையா? இப்ப என்ன செய்யணுமோ செய்யுங்கோ"னு சொல்லிட்டு அங்கருந்து நடக்க ஆரம்பிச்சார்.

"இரும் ஓய்.. மும்மூர்த்திகளும் சேந்து எடுக்க வேண்டிய முடிவாச்சே?"னுட்டு நேரா ராஜாவை இழுத்துண்டு விஷ்ணு லோகத்துக்குப் போறார்.

அங்க தேவர்கள் கூட்டம் நின்னுண்டிருக்கு. சிவனும் விஷ்ணுவும் காத்துண்டிருக்கா. பிரம்மா வேக வேகமா வர்றதைப் பாக்கறா. "என்னய்யா? அந்த உதவாக்கரை என்ன பண்ணினான்?"னு கேக்கறா.

"ஷ்!"ங்கறார் பிரம்மா. "இதோ என் பக்கத்துல தான் இருக்கான்"னு சைகை காட்டறார் பிரம்மா.

"பிரதாபனை யாரு என்னய்யா சொன்னா? அவர் மகாபுருஷனாச்சே. நாங்க அந்த உருப்படாத தேவ தோப்பனாரைச் சொன்னோம், இல்லையா பரமசிவம்?"னு வழிஞ்சுண்டே சொல்றார் மகாவிஷ்ணு. அசடாட்டம் தலையாட்டறார் சிவன்.

பிரம்மா எல்லாத்தையும் சொல்றார். "அந்தப் பையனோட ஜீவன் கிட்டே பேசிட்டு வந்தேன். ஒரு நிர்ப்பந்தம் போடறான். தன்னோட அப்பாவை, அதாவது பிரதாப ராஜாவை, நாலாவது மூர்த்தியா ம்ருத்யுலோக மேனேஜரா போட்டாத்தான் திரும்பி வருவேன்னு சொல்லிட்டான். இல்லைன்னா இப்படியே ஜீவனாவே இருந்துட்டுப் போறேன்னு சொல்லிட்டான்"கறார்.

"என்னய்யா இது? அக்கிரமமா இருக்கே?"ங்கறார் நமச்சிவாயர்.

"நான் என்ன செய்யறது? என் பையனோட ஜீவன் வேணும்னா இதான் கண்டிஷன்"கறார் பிரதாப ராஜா.

"அத்தனையும் சொல்லிக் குடுத்துட்டு, நான் என்ன செய்யட்டுங்கறார். என்ன ஒரு அழிச்சாட்டியம் பாருங்கோ!"ங்கறார் பிரம்மா.

மகாவிஷ்ணு எல்லாத்தையும் பாத்துட்டு சிவன் காதுல ஏதோ சொல்றார்.

தலையாட்டிட்டு சிவன் சொன்னார். "சரி. நேரமாயிண்டே போறது. எப்படி இருந்தாலும் ம்ருத்யு மேனேஜ் பண்ண ஆள் தேவைன்னு போட்டிருக்கோமே. அமரத்வமான நமக்கு ம்ருத்யு லோகத்தை மேனேஜ் பண்ண வரலை. பிரதாப ராஜாவுக்கு அந்த வேலையைக் கொடுத்துடுவோம். அவரும் ரொம்ப நாளா தேவ வம்சத்துல சேந்துடணும்னு சொல்லிண்டிருக்கார். சீக்கிரம் அந்த ஜீவனைத் திருப்பலைன்னா நம்ம கதி ரொம்ப மோசமாயிடும். நம்ம சௌகரியத்துக்காகவாவது பிரதாப ராஜாவுக்கு இந்த வேலையைக் குடுத்துட வேண்டியது தான். என்ன, பிரதாபரே, உம்மை நாலாவது மூர்த்தியா செஞ்சுட்டா, உம்ம பையன் ஜீவனைத் திருப்பிக் கொண்டு வந்து சேக்க சம்மதமா?"ங்கறார்.

"மொதல்ல என்னை தேவ வம்சமாக்கி, ம்ருத்யுலோகாதிபதி ஆக்குங்கோ"ங்கறார் பிரதாப ராஜா.

"பிரதாபராஜா இந்தக் க்ஷணத்துலந்து தேவ வம்சம். இந்தக் க்ஷணத்துலந்து ம்ருத்யுலோகாதிபதி. இந்தக் க்ஷணத்துலந்து நாலாவது மூர்த்தி. தர்மலோக பரிபாலனம் பண்றதுனால அவர் பெயர் இன்னைலேந்து தர்மராஜன். ம்ருத்யுலோகாதிபதியா இருக்கறதால யமன். இந்தக் க்ஷணத்துலந்து யமதர்மராஜன்"னு நீலகண்டர் பிரதாப ராஜாவோட கையைப் பிடிச்சு அர்க்கயம் விட்டு சொல்றார்.

பிரதாப ராஜனுக்கு சந்தோஷம். மும்மூர்த்திகளைக் காத்தோடக் கட்டிண்டு தேங்க்ஸ் சொன்னார். குமாரனோட ஜீவனைப் பாத்துக் கூட்டிண்டு வர ஓடினார்.

யமதர்மராஜன் தான் தேவ வம்சத்துல சேர்ந்த மொதல் மனுஷன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கலாம், ஆனா இதான் யமதர்மராஜன் உதயமான கதை. உண்டான கதை. நிலைச்ச கதை. அன்னைலேந்து ஸ்ரத்தையா தர்மலோகம் பரிபாலனம், ம்ருத்யுலோக பரிபாலனம் பண்ணிண்டு அமரத்வத்தோட இருக்கார் பிரதாப ராஜன் அலியெஸ் எமதர்மராஜன்.

சாபத்துக்கு அப்புறம் உண்டானதாலே, மனுஷனா இருந்து தேவனா மாறினதாலே, யமன் மட்டுமே மனுஷாள் கண்ணுக்குத் தெரியறான். இதான் கதை. இதி சமாப்தம். எல்லாரும் போய்ட்டு வாங்கோ.

என்ன? துளசி மாமி அடிக்க வராப்ல மொறச்சுண்டு நிக்கறாரே? ஓ! பிரதாபகுமாரன்-ப்ரியதர்சனி பத்தின மிச்ச காதல் கதையா? மறந்து போயிருப்பேள்னு நினைச்சேன். சரி, அதையும் சொல்லி, சுப சமாப்தமா பண்ணிட்டா போச்சு.

யமதர்மராஜன், அதான் நம்ம பிரதாப ராஜன், வேக வேகமா போய் குமாரனோட ஜீவனைக் கூட்டிண்டு வந்து ஒடம்போட சேத்ததும், பிள்ளையாண்டான் பழையபடி புருஷோத்தமனா எழுந்துக்கறான்.

மூச்சு வந்த முகூர்த்தம், "ப்ரியதர்சனி, எங்க நீ, கண்ணே?"னு தேடறான்.

"இங்கே இருக்கேன் கண்ணா.. இதோ வந்துட்டேன் என் ராஜா"னு குரல் மட்டும் கேக்கறது.

'என்னடாது.. குரலைக் காதலிக்கவா இத்தனைக் கஷ்டப்பட்டோம்?'னு நெனக்கறான் குமாரன்.

"இந்தாடி.. தடிச்செருக்கி, சித்த நில்லுடி"னு அதட்டறார் பிரம்மா. "உம்பாட்டுக்கு சாபத்தைக் குடுத்துட்டு கண்ணா ராஜானு சுத்திண்டிருக்கே? எங்க கதி என்னாறது? சாபத்தை மொதல்ல வாபஸ் வாங்கிக்கோ"னு கோவமாச் சொல்றார்.

"மறந்தே போச்சு!"னுட்டு சாபத்தை திருப்பி எடுத்துக்கறா ப்ரியதர்சனி. "சாபம் வாபஸ்"ங்கறா.

ஒரு க்ஷணமாறது, ரெண்டு நாழியாறது, மூணு முகூர்த்தமாறது. ஒரு மாத்தமும் காணோம். தேவாளும் மனுஷாளும் ஒருத்தருக்கொருத்தர் கண்ணுக்குத் தெரியாம இருக்கா.

"கக்கக்க்கும்"னு யாரோ கனைக்கறது கேக்கறது. எல்லா தேவாளும் திரும்பிப் பாக்கறா. அங்கே விஷமமா இளிச்சுண்டே நிக்கறார் தேவகுரு, பிரகஸ்பதி.

"என்னய்யா?"னு எரிச்சலோட கேக்கறா விஷ்ணுவும் சிவனும்.

"ஒண்ணுமில்லே. 'தேவசாபம் சாஸ்வதம்'னு நீங்க ரெண்டு பேரும் தான் தீர்மானிச்சேள். தேவாளுக்கு அம்ருதம் கடைஞ்சு கொடுக்கறச்சே. ஞாபகமில்லையோ?"ங்கறார் பிரகஸ்பதி.

எல்லா தேவாளுக்கும் திக்குங்கறது. எல்லா தேவாளும் சிவாவிஷ்ணு கிட்டே "இப்ப என்ன செய்யறது?"னு கேக்கறா. "கொடுத்த சாபத்தை எடுக்க முடியாது. ஆனா நிவர்த்தி பண்ணலாம்னு நாம சொன்னது நம்மளையே பழி வாங்கறதே? நீயே பரிகாரம் சொல்லுமா"னு கெஞ்சறா ரெண்டு மூர்த்திகளும் ப்ரியத்ரசினி கிட்டே.

ப்ரியதர்சனி பொம்னாட்டியாச்சே? முன் பின் எப்பவும் புத்திசாலியோன்னோ? யோசிச்சு சொல்றா: "தப்பு நடந்து போச்சு. சாபம் குடுத்தாச்சு. சரி, அரூபமா தெரியமாட்டேள். ஆனா லோகத்துல காதலிக்கற மனுஷா யாராயிருந்தாலும் கோவிலுக்கு வர வரைக்கும் இனிமே கோவில்ல விக்ரகம், சிலைனு பல வடிவங்கள்ல கண்ணுக்குத் தெரிவேள். மனுஷாளும் விக்ரகம்னு நினைக்காம தெய்வம்னு நினைச்சு பழைய மாதிரியே நேசமா நம்பிக்கையா இருப்பா. ஒவ்வொரு கோவில் கட்டும் போதும் மூல உற்சவர் வடிவத்துலயும், கோபுர சிலா வடிவத்துலயும் எல்லா தேவர்களும் கொஞ்சம் கொஞ்சமா ரூபத்துக்கு வருவேள். முப்பத்து முக்கோடி தேவர்களும் இப்படி ஒத்தொத்தரா கோவில் கட்டி வந்ததும், பழையபடி தேவா மனுஷா சகஜீவிதம் பரிணாமிக்கும்".

சிவா விஷ்ணுவுக்கு ஒரே ஆனந்தம். "நல்ல காரியம்.."னு சொல்றா.

"சரிதான்... முப்பத்து முக்கோடி தேவாளும் ஒத்தொத்தரா கோவில விக்ரகம், கோபுரச் சிலாரூபம்னு வர்றதுக்குள்ளே நிறைய யுகாந்தரமாகுமே?"ங்கறார் தேவ தோப்பனார்.

டக்குனு அவர் வாயைப் பொத்தறார் பிரம்மா. "உமக்கு வேறே ஏதாவது ஐடியா இருந்தா சொல்லும், இல்லை இனி வாயைத் திறந்தீரோ, நீர் தான் கடைசிச் சிலா ரூபம்"னு கோவமா சொல்றார். கப்சிப் காராபூந்தின்னு ஆயிடறார் தேவ தோப்பனார்.

எதனால கோவில் கட்டி கும்பாபிஷேகம் பண்றோம்னு இப்பப் புரியறதோ? சாமி கும்பிடறதுக்காகனு சிலபேர் நினைக்கறா. ஆனா அது லோகத்துல காதலை வளக்கறதுக்காக. அதே நேரம் ஒவ்வொரு தடவையும் நூத்துக் கணக்குல தேவாளுக்கு ரூபம் கொடுக்கறோம். அப்படி வந்த தேவாள் நம்மோடதான் இருக்கா. எல்லா தேவாளுக்கும் ரூபம் வந்தோடனே, எல்லார் கண்லயும் படும்படி ஒண்ணா இருப்பா. தேவா மனுஷா எல்லாரும் ஒண்ணா இருப்போம். அது வரைக்கும் அங்க இங்கனு சில பேர் கண்ணுக்கு மட்டும் தெரியறா.

ஆச்சு. கதை முடிஞ்சுது.

என்ன? கைல கல்லு வச்சுண்டு நிக்கறாரே வெங்கட்? இன்னும் மொறைக்கலாப்ல இருக்கே? மிச்சத்தையும் சொல்லிடறேன். கல்லைக் கீழே போடுங்கோ.

சாபத்தை தணிக்கும்படியான யோசனை பண்ணியும், தான் இன்னும் தன்னோட காதலனோட சேர முடியலையேனு வருத்தமா இருக்கு ப்ரியதர்சனிக்கு.

அப்போ மகாவிஷ்ணு அவகிட்டே சொல்றார். "அம்மா, ப்ரியதர்சனி. தேவ எண்ணிக்கை அபிக்ஷணமா.. நிரந்தரமா இருக்கணும். இப்ப ஒண்ணு ஜாஸ்தியாயிடுத்து. உனக்கோ உன் காதலனோட சேந்து இருக்கணும்னு ஆசை. ஆனா, அது மனுஷ்ய வம்சத்துல தான் சாத்யப்படும். உனக்குக் காதல் அவ்ளோ பெரிசுன்னா, முக்யம்னா, நீ தேவ வம்சத்தை விட்டு மனுஷ்ய வம்சத்துல சேந்துடு. உன் மனசுக்குப் பிடிச்சவனோட சந்தோசஷமா இருக்கலாம். நான் ஒரு வரம் குடுக்கறேன். காதல்னாலே உங்க ரெண்டு பேர் ஞாபகம் தான் எல்லாருக்கு வரும், காதலிக்கறவா எல்லாருமே உங்க ரெண்டு பேரையும் கொண்டாடுவா. உங்க நினைவா காதலைத் தேடி லோகத்துல ஸ்த்ரீ புருஷாள்ளாம் கோவிலுக்கு வருவா"னு சொல்றார்.

சொல்லிட்டு அவளை ஒரு அர்த்தபுஷ்டியான புன்னகையோடப் பாக்கறார். இவ சாமானியமான பொண்ணில்லை, கார்யத்தை சாதிக்கச் தெரிஞ்சவள்னு சொல்றது அந்தப் புன்னகை.

"வேண்டாம், போகாதே. எங்களை விட்டுப் போயிடாதே"னு தடுக்கறா, ப்ரியதர்சனியோட தோப்பனார் தாயார் பங்காளிகள் எல்லாரும்.

ப்ரியதர்சனி யோசிக்கறா. ஒரு முடிவுக்கு வந்துடறா. "பெத்த பெண்ணோட மனசைப் புரிஞ்சுக்காம நடந்துக்கற அப்பா அம்மா நேக்கு இருந்து என்ன ப்ரயோஜனம்? தன்னோட ஆடம்பரத்துக்கும் ஆசாரத்துக்கும் என்னை பலி கொடுக்கத் தயாரா இருக்குற அப்பா அம்மாவை விட, எனக்காக எதையும் விட்டுக் கொடுக்கற மனுஷ்ய ராஜனே மேல்"னு சொல்லிட்டு தேவரூபத்தைக் களையறா. மனுஷ்ய ரூபம் எடுத்துக்கறா.

பிரதாப குமாரனுக்கு சந்தோஷம். ப்ரியதர்சனி கண்ணுக்குத் தெரிஞ்சதும் அவளை அப்படியே கட்டிண்டு அழறான். "என்னை மீட்டுண்டு வந்தியே!"னு முத்தமா பொழியறான். அவளுக்கோ அவனோட தேக ஸ்பர்சம், வாத்சல்யம், எல்லாம் சொர்க்க லோகத்தை விட மகோன்னதமா இருக்கு.

ரெண்டு பேரும் அப்பவே கல்யாணம் பண்ணிண்டா. அந்தக் க்ஷணத்துலந்து சந்தோஷமா இருந்தா.

அந்த ஜன்மத்துக்கப்புறம் சத்யவான்-சாவித்ரியா பொறந்தா. அப்றம் நள-தமயந்தி, ரோமியோ-ஜூலியட், அம்பிகாபதி-அமராவதின்னு காதல் ஜோடியா ஜன்மம் எடுத்துண்டே இருக்கா. எத்தனை ஜன்மம் எடுத்தாலும் அவாளோட காதல் கொறையவே இல்லை. இது தான் அவாளோட கதை.

இவ்ளோ தூரம் கேட்டேள், இன்னும் சமாசாரம் பாக்கி, அதையும் கேட்டுட்டுப் போங்கோ.

யமதர்மராஜனானதும் திடீர்னு பிரதாப ராஜா எதிர்ல சர்வாலங்காரத்தோட ஒரு மகிஷம், எருமை மாடு.. நிக்கறது. "இனிமே நீ இதுல தான் போகணும்"னு சொல்றா தேவாள்ளாம்.

ஒரு நாள் போறான், ரெண்டு நாள் போறான். ஊர்ல எல்லாரும் சிரிக்கறா மாதிரி இருக்கு. ராஜாவோன்னோ? "இன்னைலந்து எருமை மாடு சாஸ்வதம். எல்லாரும் பசும்பாலுக்குப் பதில் எருமைப்பால் சாப்பிடணும். வீட்டுக்கு ரெண்டு எருமை வளக்கணும்"னு ஆணை போடறான். 'தேவனான உடனேயே அக்கிரமம் பண்றானே!'னுட்டு புலம்பிண்டே எல்லாரும் எருமை மாட்டை வளக்க ஆரம்பிச்சா. எருமைப்பால் காபி இன்னிக்குச் சாப்பிடறோம்னா அதுக்கு பிரதாபகுமாரன்-ப்ரியதர்சனி காதல் தான் காரணமாக்கும்.

கோவில் கட்டிக் கும்பாபிஷேகம் பண்ணப் பண்ண, தேவாள்ளாம் சாப விமோசனம் கெடைச்சு, ஒத்தொத்தரா ரூபத்துக்கு வருவானு சொன்னேனில்லையா? அந்தக் கணக்குப்படி பாத்தா, அனேகம் தேவாளுக்கு ஏற்கனவே சாப விமோசனம் கிடைச்சாச்சு. நாமதான் தெருவுக்குத் தெரு கோவில் கட்டிண்டிருக்கோமே? ஒரு பக்கம் கோவில் பாழடைஞ்சாலும் இன்னொரு பக்கம் புதுசா கட்டறோமே? அந்தக் கணக்குப்படி, இதே வேகத்தில கோவில் கும்பாபிஷேகம்னு பண்ணிண்டிருந்தா, இன்னும் முப்பத்து மூணு வருஷத்திலே, 2045ல, எல்லா தேவாளுக்கும் சாப விமோசனம் கிடைச்சுடும். அன்னைலேந்து தேவா-மனுஷா சகஜீவனம் தான். அதைப் பாக்க எல்லாரும் தீர்க்காயுசா இருக்கணும்னு வேண்டி கதையை முடிச்சுக்கறேன். சுபஸ்ய சுபம்.

இது அசுவத்தாமன் வாக்கு. அசத்யம் இல்லாத வாக்கு. ப்ரசங்கம் சமாப்தம். போய்ட்டு வாங்கோ.

2012/06/13

தைவாதர்சனம்

◄◄   1     2
    தை கேக்கத் திரும்பி வந்தவாளுக்கு ஒரு ஆத்மார்த்த வெல்கம் போட்டுடறேன்.

சினேகிதர் ஒத்தராத்துக்கு சாப்பிடக் கூப்பிட்டிருந்தாளேன்னு இன்னைக்குப் போயிருந்தேன். தேங்காய்த் தொகையல், மோர்க்கொழம்பு, மைசூர் ரசம், எண்ணைக் கத்திரிக்காய் கறி, கொத்தவரங்காய் கூட்டு, பால்போளினு விருந்து பண்ணிட்டா. நமக்கோ வயசாயிடுத்து, எங்கேந்து இத்தனையும் சாப்பிடறது சொல்லுங்கோ? இருந்தாலும் வரச்சொல்லி ஆசையா பண்ணியிருக்காளேன்னு, சாப்ட ஒக்காந்தேன். கொத்தவரங்காய் கூட்டுன்னா நேக்கு பிடிக்கும். ஆனா பாருங்கோ, ஒரு வாய் போட்டுண்டா அன்னத்வேஷம் மாதிரி வந்துடுத்து. கூட்டு சகிக்கலை. மாமிக்கு ரொம்ப வருத்தம். அதனாலென்ன, போனாப் போறது, மிச்ச எல்லாம் நன்னாருக்கேன்னு சொல்லி, "ரொம்ப சாப்பிட்டா இன்னிக்குப் கதோபாக்யானம் பண்ணமுடியாது"னு சாக்கு சொல்லிட்டு ஒரே ஓட்டமா ஓடி வந்துட்டேன்.

சமையல் நன்னா வரது ஒரு புண்யமாக்கும். செல பேர் விபாகமா சமைப்பா, செல பேர் அபாகமா சமைப்பா. மாமி சமையல் அபாக ரகம், என்ன பண்றது சொல்லுங்கோ? அனேகம் பேருக்கு கொத்தவரங்காய் கூட்டு பண்ண வராது. அது பிரம்ம வித்யையாக்கும். பாருங்கோ, கொத்தவரங்காய்க் கூட்டுலே கொழம்புக் கருடாம் போட்டா அதீத ருசி. தேங்காய் மிளகாவத்தல் கொத்தமல்லி விரை அரைச்சு விடறா மாதிரி, நன்னா நெய்ல வறுத்த கைப்பிடி கொழம்புக் கருடாமும் போடணும். அதான் கொத்தவரங்காயை அலாதியான கூட்டா ட்ரேன்ஸ்பார்ம் பண்ணறது. மாமி கொழம்புக் கருடாம் சேர்க்க மறந்துட்டா. கூட்டுல தேங்காய் அரைச்சுவிடவும் மறந்துட்டா. உப்பு மாத்துக் கம்மியாப் போட்டுட்டா. கொத்தவரங்கா கூட இன்னும் சித்தே வெந்திருக்கலாம். என் சினேகிதருக்கு கோபம் வந்து, பாருங்கோ, என் முன்னாலேயே பார்யாளை கோச்சுண்டுட்டார். 'நல்ல காய்கறியை நாசம் பண்ணிட்டியேடி..'னு என் எதிர்லயே நன்னா வைய ஆரம்பிச்சுட்டார். "கர்மம்!"னு என்னெதிர்லயே சாப்பாட்டுத் தட்டை அப்படி நெட்டித் தள்றார். நேக்கே ஒரு மாதிரியா ஆய்டுத்துன்னா, அந்த மாமிக்கு எத்தனை அவாத்யம் பாவம், நினைச்சுப் பாருங்கோ.

எதுக்குச் சொல்றேன்னா, இப்ப அம்ருதமாச் சாப்பிட்டாலும் எட்டுமணி நேரத்துல மலமாற மகா அல்ப வஸ்து.. கொத்தவரங்காய், அதைச் சரியா தன்னிஷ்டப்படி பண்ணாததுக்கே கொலைக் குத்தம் பண்ண மாதிரி கோவம் வந்தா... தேவ தோப்பனார் வாஸ்தவமாவே கொலை பண்ணிட்டார். ப்ரியதர்சனிக்குப் பொத்துண்டு வராதோ?

ப்ராணனில்லாம கெடக்கற பிரதாபகுமாரனைப் பாக்கறா ப்ரியதர்சனி. தான் கொத்தவரங்கா, பிரதாபகுமாரன் கொழம்புக் கருடாம்னு இருக்கச்சே, பிரிச்சுப் போட்டா ருசி கெட்டுப்போகாதோ? அழுகையும் கோவமும் சேந்து வர்றது. சம்க்ஷோபத்துல, தாங்க முடியாத அதிர்ச்சில, "அப்பா, என்ன காரியம் பண்ணிட்டேள்!"னு கதறித் துடிக்கறா ப்ரியதர்சனி.

பிரதாப ராஜாவோ கீழே விழறப் புத்ரனோட தலையை அந்தக்கால ஏக்நாத் சோல்கர் மாதிரி டைவடிச்சுக் கேச் பிடிக்கப் பார்த்தார். அது மிஸ் ஆகி உருண்டோடறது. ராஜா, "குமரா குமரா!"னுண்டே துரத்தி அதை எடுத்துண்டு வந்து அலற ஆரம்பிச்சார்.

தேவ தோப்பனாருக்கு இப்பத்தான் மண்டைல அறைஞ்ச மாதிரி, தான் பண்ணின தப்பு தெரிஞ்சு போறது. பிராணஹத்யை மகா தோஷமில்லையோ? மும்மூர்த்திகளெல்லாம் தான் பண்ணின பிராணஹத்யைக்கு சாக்கு வச்சுண்டிருந்தா. பக்தாளும் அதை நம்பி அவாளோட பாதகமான உயிர்க்கொலைகளை மறந்துட்டு பூஜை பண்ணினா. இவர் யாரு? நேத்து சாம்பார் மாதிரி சாதாரண தேவனில்லையோ? பிசாத்தில்லையோ? இவரை யார் மன்னிப்பா? தேவ ஜோட்டாலயே அடிக்க மாட்டாளோ?

என்ன பண்றதுன்னு பாக்கறார். மிச்ச தேவாள் பண்ற மாதிரி மனுஷா மேலே பழி போடறார். "பிரதாபா.. என்னை என்ன கார்யம் பண்ண வச்சுட்டே பார்.. இந்தப் பாவம் உன்னை சும்மா விடாது"ங்கறார்.

பிரதாப ராஜா இன்னும் "குமரா குமரா"னு அலறிண்டிருக்கார்.

அதிர்ச்சிலே ஸ்தம்பிச்சுப் போன ப்ரியதர்சனி, பிரதாப ராஜாட்டேருந்து தன் ப்ரியனோட தலையை வாங்கி உடம்போட சேத்து வைக்கறா. என்னென்னமோ பண்ணிப் பாக்கறா. ம்ஹூம். அசைவில்லை. கூட்டை விட்டுப் பறந்து போன கிளி எங்கயாவது திரும்பி வந்திருக்கா? தலை வெட்டினதுமே உசிர் காத்துல கலந்தாச்சு. ப்ரியதர்சினி கலக்கத்துலயும் கோவத்துலயும் அவனை சேர்த்து வைக்க ட்ரை பண்றா.

தேவ தோப்பனாரோ காருண்யமே இல்லாம, "போறும். எழுந்து வா. இவன் மனுஷ்யன், நாம தேவ குலம். என் பேச்சைக் கேக்காம நீ இவனோட எப்படி சேந்திருக்கலாம்? ஜாதி வித்யாசம் கிடையாதா? நம்ம அந்தஸ்து என்ன, இவன் உனக்கு தகுதி கெடயாது. அதுவும், என் கண் முன்னாலயே இப்படிக் கொஞ்சி விளையாடறேளே, உங்களுக்கு வெக்கமா இல்லை?"னு பொண்ணைக் கத்தறார்.

அது வரைக்கும் புலம்பிண்டிருந்த பிரதாபன், சட்டுனு வாளை உருவிண்டு "என் பையனைக் கொன்னுட்டீரே ஐயா, இது என்ன நியாயம்?"னு ஆக்ரோஷத்தோட தேவ தோப்பனார் மேல பாயறார்.

பிரதாபன் தன் மேலே பாயறதைப் பார்த்ததும் டக்குனு கண் மறைவாயிடறார் தேவ தோப்பனார். "தேவஸ்த்ரீயைத் தொட்டதனால, இது உம்ம புத்ரனுக்குத் தண்டனை"னு குரல் மட்டும் கேக்கறது.

திரும்பித் திரும்பிப் பாக்கறார் பிரதாப ராஜா. "கோழை! வீரமிருந்தா வெளில வா. நியாயமான முறைல என்னோட சண்டை போடு. உன்னை உருத்தெரியாம அழிச்சுடறேன்"னு கத்தறார். அதுக்கு தேவர், "இப்ப மட்டுமென்ன? உருத் தெரியறதா?"னு கிண்டல் பண்றார்.

பிரதாப ராஜா கீழே விழுந்து கெடக்கற சீமந்தபுத்ரனைப் பாத்துக் கதறி அழறார். "அக்கிரமம்.. அக்கிரமம்.."னுட்டு தலைலயும் மார்லயும் அடிச்சுக்கறார். பட்டாபிஷேகம் பண்ணி மகராஜாவா இருக்க வேண்டியவன் இப்படி பார்ட் பார்டா கழண்டிருக்கானேனு அவர் மனசு துடிக்கறது.

ப்ரியதர்சனியைப் பார்த்ததும் இன்னும் அழுகையா வரது. "அம்மா.. சௌபாக்யவதி.. என் பிள்ளை பண்ணின தப்பு என்னனு சொல்லும்மா... உன்னைக் காதலிச்சான்.. நீயும் தானே அவனைப் பதிலுக்குக் காதலிச்சே? ரெண்டு பேரும் வேறே வேறே ஜாதி தான், குலம் தான், இல்லங்கலே.. ஜாதிவிட்டுக் காதலிச்சா வெட்டிக் கொல்றதா? ஈனத்தனமில்லையா? இந்தப் பாவத்தை மனுஷா கூட செய்ய மாட்டாளே? இனிமே உங்களைப் பாத்து இந்தப் பழக்கம் மனுஷாளுக்கு வந்துடுமே!"னுட்டு தலைல தலைல அடிச்சுக்கறார். "நீயே சொல்லும்மா.. ஆத்மார்த்த காதலைத் தவிர இவன் செஞ்ச பாவம் என்னனு சொல்லுமா.. இதுக்காகவா இவனை சீரும் சிறப்புமா வளர்த்தேன்.."னு பாசமலர் சிவாஜிகணேசன் மாதிரி அழறார். "கொலையப் பண்ணிட்டு காணாமப் போறதுதான் தேவ நியமமா! கேப்பாரில்லையா?"னு விடாமப் புலம்பறார்.

இதையெல்லாம் பாத்துண்டிருந்த ப்ரியதர்சனிக்கு அசாத்ய கோபம் வர்றது. "எனக்கு அப்பாவான ப்ராணஹத்தி! மகாபாவி! எங்க ரெண்டு பேரையும் மறைஞ்சு நின்னுப் பாத்தேள். என்னோட காதலனைக் கொன்னுட்டு மறுபடியும் மாயமா மறஞ்சுட்டேள். கேவலம், கோழைத்தனம்.."னு கத்தறா.

கொஞ்சம் கூட யோசிக்காம, சாபம் குடுக்கறா. "உருத்தெரியலேனு கிண்டலா பண்றேள்? நேருக்கு நேர் நின்னு பேச தைர்யமில்லாத தேவகூட்டம் இந்த க்ஷணத்துலேந்து கண்ணுக்கே தெரியாம மறஞ்சு போகட்டும். உங்க கண் முன்னாடி இப்படி நடந்ததுன்னு தானே கோபம்? இனிமே மனுஷ்யாளும், மனுஷ்யாள் சம்பந்தப்பட்ட எதுவுமே, தேவாள் கண்ணுக்குத் தெரியாம போகட்டும். ஒண்ணா இருந்தாத்தானே மனுஷ்ய ஜாதி, தேவ ஜாதின்னு பேதம் பேசறேள்? இனிமே மனுஷாள் இருக்கற லோகத்துல உங்களுக்கு இடம் இல்லாமப் போகட்டும். ஆத்மார்த்தமான நேசமும் காதலும் பக்தியும் தேவாள் மேலே இருக்கணும், ஆனா தேவாளோட கலந்து இருக்க மட்டும் மனுஷாளுக்கு பாத்யதை கிடையாதுன்னு சொல்றேளே? இனிமே ஜீவராசிகள் யார் கண்ணுக்கும் தெரியாம தேவாள்ளாம் மறஞ்சு போகட்டும்"னு சீரியல் சாபம் குடுத்துடறா. சாபம் குடுத்துண்டே பிரதாபர் கொண்டு வந்திருந்த நாலு கிலோ குங்குமத்தை கோவத்துல அங்கயும் இங்கயும் வாரி இறைக்கறா ஆக்ரோஷமா. அப்புறம் குலுங்கி அழறா. மகா ஆக்ரோஷமான காட்சியைப் பாத்துட்டு பிரதாப ராஜாவே பையனை மறந்துட்டு பயந்து நடுங்க ஆரம்பிச்சார்.

காதலனை பறி கொடுத்த வேகத்துலயும் துக்கத்துலயும் ஆத்ரத்துலயும் என்ன சொல்றோம்னு தெரியாம சாபம் குடுத்துட்டா. பொல்லாத சாபமில்லையோ? அடுத்த க்ஷணம் எல்லாம் மாறிப் போக ஆரம்பிச்சுது.

கரண்ட் போனதும் லைட் அணையற மாதிரி பொட்டு பொட்டுனு தேவாள்ளாம் காணாம போயிண்டிருக்கா. சிவசபை, பிரம்ம கூட்டம், விஷ்ணு பரிவாரம் எல்லாம் ஒத்தொத்தரா அஞ்ஞாத பெவிலியனுக்குப் போயிண்டிருக்கா.

சாபம் தனக்கும் பலிக்கும்னு தெரியாம கொடுத்தாளோன்னோ நம்ம ஹீரோயின் ப்ரியதர்சனி? கொஞ்ச நாழில அவளும் காணாமப் போயிட்டா.

"இதேதுடா வம்பா போச்சே!"னுட்டு கலங்கிப் போயிருக்கார் பிரதாப ராஜா. தான் இருக்கோம், தன் புத்ரனோட ப்ரேதம் இருக்கு. கோவில் சுத்துப்புறம் எங்கயும் யாரையும் காணோம். இதென்ன விபரீதம்னு ஆடிப்போயிட்டார். இனிமே தேவர்கள் யாரையுமே பார்க்க முடியாதா? பிள்ளையார் பிடிக்க வந்து உள்ளதையும் போக்கிட்டோமேனு நினைச்சார்.

இதுல பாருங்கோ, தேவர்கள் எல்லாரும் ஜீவராசிகளோட கண்ணுக்குத் தெரியாம போகட்டும்னுதான் சாபம் குடுத்தா ப்ரியதர்சனி. கண்ணுக்கே தெரியாமப் போகட்டும்னு குடுத்திருந்தா, இந்தக் கதைக்கு சமாபனமே இல்லாமப் போயிருக்கும். ஏன்னா, இப்பப் பாருங்கோ அட்லீஸ்டு தேவர்களுக்குள்ளேயாவது ஒருத்தருக்கொருத்தர் தெரிஞ்சுண்டா. அதனால, கதையைக் கொஞ்சம் முடிவுக்குக் கொண்டு போக முடியறது.

தேவக் கூட்டத்துல அலாதி கலவரம்.

நம்மாத்துல கரண்ட் கட்டாகி லைட்டெல்லாம் போனா, என்ன பண்றோம்? மொதல் வேலையா அடுத்தாத்துல லைட் எரியறதான்னு பாக்கறோம். அங்க எரியலைனா ஒரு அல்பத் திருப்தியோட, தெருவுல வேற யார் வீட்லயாவது லைட் எரியறாதான்னு பாக்கறோம். தெருவுலயும் எரியலைனா எதிர் தெரு, பக்கத்துத் தெருன்னு பாக்கறோம். அப்புறம் புலம்ப ஆரம்பிக்கிறோம். அந்த மாதிரி தேவாள்ளாம் சிவ லோகம், விஷ்ணு லோகம், பிரம்ம லோகம்னு ஒத்தொத்தரையா பாத்துக்கறா கேட்டுக்கறா. அவாள மட்டும் ஒத்தருக்கொத்தர் பாத்துக்க முடியறது, மத்தது எல்லாம் கண்ணுக்குத் தெரியலை. எல்லாருக்கும் ஒரே கலவரமாப் போறது. என்னடாது கண்ணுக்குத் தெரிஞ்சுண்டிருந்த ஜீவராசியெல்லாம் மறைஞ்சு போச்சேன்னு பிரமிப்பு போய், பயம் வர ஆரம்பிச்சுது.

எமர்ஜன்சின்னுட்டு மும்மூர்த்திகளும் கலந்து பேசறா. என்ன ஆச்சுனு இங்க்வைரி பண்றப்போ, எல்லா விஷயமும் தெரிஞ்சுபோறது. நேரா ப்ரியதர்சனியண்டை போறா. "என்ன கார்யம் பண்ணிட்டேமா?"னு கதறிட்டு, "சாபத்தைத் திருப்பி வாங்கிக்கோ"னு சொல்றா.

சாபத்தை எங்கேந்து திருப்பிக்கறது? "மொதல்ல என் நாயகனை, பிரதாபகுமாரனை, உயிரோட திருப்புங்கோ. நான் சாபத்தைத் திருப்பறதைப் பத்தி அப்புறம் யோசிக்கறேன்"னு அவ சொல்றா. இன்னும் ஆத்திரம் அடங்கலை. எப்படி அடங்கும்? ஆத்மார்த்தக் காதலை அடாவடியாப் பிரிச்சுட்டா ஜன்மத்துக்கும் இருக்குமே துவேஷம்?

"அவன் மானுடன், அவனோட ம்ருத்யுவை மேனேஜ் பண்ண உபகாரி யாரும் இல்லை. அவன் இப்போ அவாந்த்ரத்துல இருக்கான். சொர்க்கமோ, நரகமோ அவன் பிராப்தத்துக்கு ஏத்த மாதிரி நடக்கும்"னு மும்மூர்த்திகளும் கை விரிச்சுடறா.

"அப்படின்னா, என் சாபத்தை நான் மாத்திக்க மாட்டேன். நீங்கள்ளாம் கண்ணுக்குத் தெரியாம இருக்க வேண்டியது தான்"னு தீர்மானமா சொல்லிடறா ப்ரியதர்சனி.

"இதேதுடா வம்பா போச்சே!"னுட்டு தேவாளும் கலங்கிப் போயிடறா. என்ன சொல்லியும் ப்ரியதர்சனி கேக்க மாட்டேங்கறா.

என்னதான் மும்மூர்த்திகள் ஆனாலும், தேவசாபம்னு வந்துட்டா அவாளும் அனுபவிச்சுத் தானே ஆகணும்? இதுக்குப் பிராயசித்தம் எதுவும் அவாளுக்குத் தோணலை. குமாரனோட ஜீவன் பிரிஞ்சு அவாந்த்ரத்துக்கு போயாச்சு. மீட்டுண்டு வரவும் முடியலை. ஏதாவது அவுட்-ஆப்-கோர்ட் செட்டில்மென்ட் பண்ணலாம்னு நிர்ணயம் பண்றா.

ப்ரியதர்சனியண்டை வந்து, "என் கண்ணோல்லியோ, சொல்றதைக் கேளுமா"ன்னார் விஷ்ணு. உஷாரானப் பார்ட்டியோன்னோ? இன்னும் எக்கச்சக்கமா சாபம் கொடுத்துடப் போறாளேனுட்டு சர்வ ஜாக்ரதையா பேசறார்.

"என்ன?"ங்கறா எரிச்சலோட.

"நான் நெலமையைச் சொல்றேன், கோவிச்சுக்காதே. பிரதாபகுமாரனோட ஜீவனை அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. ம்ருத்யுவானப்புறம் மனுஷ்ய ஜீவனெல்லாம் ஒண்ணுக் கொண்ணு வித்தியாசமில்லாம அடுத்த ஜன்மம் தீர்மானமாற வரைக்கும் அவாந்த்ரத்துல அலஞ்சிண்டிருக்கும். உன்னாலயும் சரி, என்னாலயும் சரி அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. அப்படி இருக்கச்சே, திருப்பணும்னு நினைச்சாலும் அந்த ஜீவனை எப்படி திருப்பிக் கொண்டு வர முடியும்? நீயே கொஞ்சம் யோசிச்சுப் பாருமா"

"ஆமாம்.. யோசிச்சுப் பாருமா"னு அஞ்சு தடவை தலையாட்டறா சிவனும், பிரம்மாவும்.

சத்யமான காதல் இருக்கு பாருங்கோ, அது கல்லை விட நெருக்கமா உடைக்க முடியாம சாஸ்வதமா இருக்கும்பா. ப்ரியதர்சனி பிரதாபகுமாரன் காதல் அந்த மாதிரி சாலிட் ராக்கில்லையோ?

ப்ரியதர்சனி விடறதாயில்லை. "அது மனுஷ்ய ஜீவன் தானே? பிரதாப ராஜாவாலே கண்டுபிடிக்க முடியும். தோப்பனார் கூப்பிட்டா, பிள்ளையோட ஜீவன் வராமலா போகும்? அவரை அனுப்பி அந்த ஜீவனைக் கூட்டிண்டு வந்து, இந்த ஒடம்போட மறுபடி சேத்து வையுங்கோ"னு அடம் பிடிக்கறா.

எல்லா தேவாளும் பிரதாப ராஜா கிட்டே வந்து கெஞ்சறா.

யாருமே கண்ணுக்கு தெரியலை, ஆனா தினுசு தினுசா குரல் மட்டும் கேக்கறது, ராஜாவுக்கு ஒண்ணும் புரியலை. கலங்கிப் போறார். பிள்ளையையும் பறி கொடுத்துட்டு, இப்படி பைத்தியம் மாதிரி காத்துல சத்தம் கேக்க ஆரம்பிச்சுதுன்னா, யாருக்குத் தான் கலக்கமா இருக்காது?

எல்லாத்தையும் பாத்துட்டு, சிவன் சொல்றார். "தேவாள்ளாம் சித்த சாந்தமா இருங்கோ. பிரதாப ராஜா கொழம்பி பயந்து போயிருக்கார். பிரதாபா, நான் மகாதேவன் பேசறேன். ப்ரியதர்சனி போட்ட சாபத்துனால நாங்க எல்லாரும் மனுஷா கண்ணுக்குத் தெரியாம போய்ட்டோம். பழைய நிலைக்கு வரணும்னா, உன் பையனைத் திருப்பிக் கொண்டு வந்தாத்தான் முடியும். எங்களால மனுஷ்ய ஜீவன்களைக் கண்டு பிடிக்க முடியாது. நீதான் அவாந்த்ர லோகத்துக்குப் போய் உன் பிள்ளை ஜீவனோட குரலை வச்சுக் கண்டுபிடிச்சுத் திருப்பிக் கூட்டிண்டு வரணும். உடனே போ, உன் பிள்ளையோட ஜீவன் சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ மறு ஜென்மத்துக்கோ போயிட்டா திருப்பிக்கொண்டு வரவே முடியாது. தயவு செஞ்சு உன் பிள்ளையைக் கண்டுபிடிச்சு எங்களையும் காப்பாத்துப்பா"னு வேண்டிக்கறார் நடராஜர்.

பிரதாப ராஜாவுக்கோ கோவம் கோவமா வர்றது. "தேவாள்ளாம் சேந்து இப்படிக் கூத்தடிக்கறேளே?"னு கத்தறார். ப்ரியதர்சனியைக் கூப்பிடறார். "அம்மா, இதெல்லாம் சத்யமான வார்த்தை தானா?"னு கேக்கறார். "ஆமாம்.. தயவுசெஞ்சு உடனே போங்கோ"னு அவளோட அழுகையானக் குரல் மட்டும் கேக்கறது.

"சரி, அவாந்த்ரத்துக்கு எப்படிப் போறது? யார் என் கூட வருவா? நேக்கு வழி தெரியாதே?"னு கேக்கறார் பிரதாப ராஜா.

சிவனும் விஷ்ணுவும் பிரம்மாவைப் பாக்கறா. பிரம்மா வேற வழியில்லாம, "நான் கூட்டிண்டு போறேன்.. பிரதாப ராஜா.. உம்ம வலது கையைக் கொடும்"னு சொல்றார். தட்டித் தடவி பிரதாபனோட வலது கையைப் பிடிச்சுண்டார் பிரம்மா.

"பொண்ணே.. எங்க இருக்கே? நான் திரும்பி வரவரைக்கும் இவன் உடம்பைப் பத்திரமா பாத்துக்கோ, உன்னை நம்பித்தான் போறேனாக்கும்"னு சொல்லிட்டு, தன் கையைப் பிடிச்ச பிரம்மாவோட அவாந்த்ரத்துக்கு கிளம்பினார் பிரதாப ராஜா.

இந்த ஆள் கையை விட்டு ஓடிறாம இருக்கணுமேனு யோசிக்கறார் பிரம்மா. நிலமை கையை விட்டுப் ஓடிடும் போலருக்கேனு சிவனும் விஷ்ணுவும் ரொம்ப யோசிக்கறா. நிலமையை எப்படிக் கைக்குள்ளே போட்டுக்கறதுனு நிதானமா யோசிக்கறார் பிரதாப ராஜா.

மிச்ச கதையை அடுத்தப் பரசங்கத்துல சொல்றேன்.

மிச்ச கதை

2012/06/11

தைவாதர்சனம்
◄◄   1
    தை கேக்கத் திரும்பி வந்தவாளுக்கு ஒரு ஆத்மார்த்த வெல்கம் போட்டுடறேன்.

கார்த்தால வடபழனி கோவிலுக்குப் போக வேண்டியிருந்தது. இன்னைக்குப் பாத்து என்னோட பழைய எடர்னோ வேலை செய்யலை. கால் டேக்சி பிடிச்சு கோவிலுக்குப் போய்ட்டு வந்தேன். அசோக் நகர் பக்கம் ரோடு மகா மோசம். தூக்கித் தூக்கிப் போட்டுதா, இந்தப் பொடி டப்பா எங்கயோ விழுந்து காணாம போயிடுத்து. என்னோட மாமனார் உபயோகிச்ச வெள்ளி டப்பா. நித்யம் பொடி டப்பாவைப் பாத்தாலே அழகான முகத்தை அஷ்டகோணலா பண்ணிக்கிற எங்காத்துக்காரி, இன்னிக்கு டப்பா காணோம்னதும், பொறந்தாத்து சொத்தாச்சே, கங்களாஞ்சேரி பிராமணரைக் கல்யாணம் பண்ணிண்டா இப்படித்தான் சகலத்தையும் தொலைச்சுட்டு வந்து நிப்பார்னு இடிக்கறா. பொடி இல்லாம நேக்கு கையும் ஓடமாட்டேங்கறது, கதையும் ஓடமாட்டேங்கறது. ஜிடாக்ஷம்னு சொல்வா பாருங்கோ, துறந்த நிலை, பொடி போட்டா நேக்கு ஜிடாக்ஷம் எட்டு ஊருக்கு வரும். கால் டேக்சிக்காரா நல்லவானு சொல்றா. கொண்டு வந்து குடுத்தாலும் கொடுப்பான் தீர்க்காயுசுக்காரன். திரும்பக் கெடச்சா அந்த வைத்தீஸ்வரபுத்ரன் அனுக்ரகம். கிடைக்கலேன்னா என்னோட கர்மபலன். எல்லாமே அப்படித்தான். விடுங்கோ, கதைக்கு வரேன்.

ந்ருத்யசாலைலே பிரதாபகுமாரனும் தேவகன்னிகையும் ஒருத்தரையொருத்தர் பாத்து மெய் மறந்துட்டானு சொன்னேனில்லையா? வாஸ்தவமாத்தான். இவனோட கண்லேந்து அவளோட கண்ணுக்குப் பாலம் கட்டினா மாதிரி ரெண்டு பேர் மனசும் ஸ்ருங்கார சவாரி போய்ட்டு வரது. 'கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே'னு சினிமால ஆடுவாளே அந்த மாதிரி. இவனோட கண்ல அவ நெறஞ்சிருக்கா. அவ கண்ல இவனை விட்டா வேறே தர்சனமே இல்லை.

எத்தனை நாழி இப்படி நின்னுண்டிருந்தாளோ, அவாளுக்கே தெரியாது. சட்டுனு முழிச்சுக்கறா ரெண்டு பேரும். பிரதாபகுமாரன் சிம்ம நடை நடந்து, அவ கிட்டே ரொம்பப் பக்கத்துல போய் நின்னு, அவளோட மேலணியை எடுத்துக் குடுக்கறான். அவ வெக்கத்தோட வாங்கி இடுப்பையும் மாரையும் போத்திக்கறா. வாங்கும் போது, அவன் கை விரல் அவ உள்ளங்கைல படறது. ஊசி குத்தின மாதிரி வலிக்கிறது அவளுக்கு, அதே சமயம், சந்தனம் தடவின மாதிரி இதமாவும் இருக்கு.

"யார் நீங்கள்?"னு கேக்கறா. கோகிலம் பாடறா மாதிரி இருக்கு.

பதில் சொல்லிட்டு, அதே கேள்விய திருப்பிக் கேக்கறான் பிரதாபகுமாரன்.

"நான் தேவகுலம். ஊர்வசி தெரிந்திருக்குமே, அவள் என் மாமன் மகள்". கொம்புத் தேனாக் கொட்டறா.

"ஊர்வசி உன் உறவென்றால், ஏன் உன்னைப் போல அழகாக இல்லை?"னு ஒரு போடு போடறான் பிரதாபகுமாரன்.

அவ அப்படியே வெக்கத்துலயும் பெருமைலயும் உருகிப் போயிடறா. அழகான பொண்ணு வெக்கப்படறதைப் பாத்துட்டா அந்தக் க்ஷணமே குருடனாயிடலாம்பேன். லோகத்துல அப்புறம் பாக்கறதுக்கு கண்கொள்ளாக் காட்சி வேறே என்ன இருக்குங்கறேன்? பாருங்கோ, லஜ்ஜை அவளோட லாவண்யத்தை இன்னும் ப்ரகாசப்படுத்தறது. அந்தப் ப்ரகாசத்துல அவனோட மனசு உருகிப் போயிடறது. அவ ஏதோ சொல்ல நெனச்சு அவனை ஏறிட்டுப் பாக்கறா.

வாசல்ல டக் டக்னு பாதுகை தட்டற சப்தம் கேக்கறது.. ரெண்டு பேரும் திரும்பிப் பாக்கறா.

பிரதாப ராஜா நின்னுண்டிருக்கார். "குமரா, விநாயகரோட மீடிங்க் முடிஞ்சு போச்சு. வா, போகலாம்"னார். அந்தப் பொண்ணைப் பாத்துட்டு மரியாதையோட லேசா சிரிச்சார். அவ குடுகுடுனு ஓரமா ஓடி ஜவனியை இழுத்து மூடி மறைஞ்சுக்கறா.

அவ அந்தண்டை போனதும், ராஜா கேக்கறார்: "நான் இங்கயே நின்னுண்டிருக்கேன். ரெண்டு பேரும் என்னைக் கவனிக்கலையா?". ராஜகுமாரன் வெக்கப்படறான்.

கொஞ்சம் தயங்கி அவன் கிட்டே வரார் ராஜா. "குமரா, அவ தேவகுலம். நாம மனுஷகுலம். சேராது கண்ணா. மறந்துடு. வா, போலாம்"னு சத்தமா, கர்டனுக்குப் பின்னாடி இருந்தவ காதுல விழும்படி சொல்லிட்டு புத்திரனை இழுத்துண்டு போறார்.

வாசல் கிட்டே போறப்போ, அவன் திரும்பிப் பாக்கறான். ஒரு பட்டுத்துணியை உடம்புல போர்த்திண்டு வெளில வந்து அவனையே பாத்துண்டிருக்கா. அவ கண் கலங்கியிருக்கு. அவனைத் துளைக்கறது. 'நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா?'னு பாடறாப்ல மாதிரி இருக்கு. அவன் நிக்கறான்.

அப்பா அவனைத் தள்ளி, "ம்..ம்"ங்கறார். அவரோட நடந்துண்டே, அவள் பக்கம் திரும்பி, கைய மட்டும் காட்டறான். 'சொந்தமான உள்ளம் போடும் கணக்குப் புரியுமே'னு பாடற மாதிரி இருக்கு. அவ கண்ணைத் தொடச்சுக்கறா.

ராஜாவுக்கு வலிக்கறது. இருந்தாலும், "குமரா, சொன்னாக் கேளு, வா போகலாம்"னு அவனை வலுக்கட்டாயமா இழுத்துண்டு போயிடறார்.

    லோகத்ல பாருங்கோ, பகுசாதாரணமான குணம் ஒண்ணு உண்டு. பால்யராகட்டும், போற வயசாகட்டும், சாமான்ய லக்ஷணம் என்னனு கேட்டேள்னா இதான்: எதைச் செய்யக் கூடாதுனு சொல்றமோ, அதைச் செய்யத் தோணும். எதை மறந்து போகணும்னு சொல்றோமோ, அதை சதா சர்வகாலமும் நினைக்கத் தோணும்.

அப்பா அவளை மறந்துடுன்னார். பையனோ அவளைத் தவிர, மிச்ச எல்லாத்தையும் மறந்துட்டான். சாப்பாடில்லே, தூக்கமில்லே. 'துளியாவது சாப்பிடேன்'னு வற்புறுத்தரா வேலைக்காரா. சாப்பாட்ல மாம்பழம் போட்டிருக்கா, அவளோட முகம் ஞாபகம் வரது. தேன்ல பலாச்சுளை கலந்து போட்டிருக்கா, அவளோட ரெண்டு உதடும் ஞாபகம் வரது. கேசரிப்பூ கலந்து சாதம் வடிச்சுப் போட்டிருக்கா, அவளோட சிரிப்பு ஞாபகம் வரது.

ஒண்ணும் பிடிக்காம வெளில போய் நடக்கறான். தோட்டத்து விருக்ஷமெல்லாம் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு, அவளை மாதிரி. பக்ஷிக் கூட்டம் பாடறது, அவ குரலை ஞாபகப் படுத்தறது. ஆகாசம், அவளோட உடம்பை ஞாபகப் படுத்தறது. வட்ட நிலா அவளோட குசத்தை ஞாபகப் படுத்தறது. நெளிஞ்சு ஓடற சின்ன சரசெல்லாம் அவளோட இடுப்பை ஞாபகப் படுத்தறது. அங்கே இருக்கற ஜந்து, வஸ்து ஒண்ணொண்லயும் அவதான் வியாபிச்சிருக்காப்ல இருக்கு. நின்னா, நடந்தா,மூச்சு விட்டா அவதான் அவனுக்குத் தெரியறா.

அவ என்னடான்னா, அவனை விட பரமமா உருகிண்டிருக்கா. அமரத்வம் தேவ லக்ஷணமாச்சா, அதனால சாப்பாடு, தூக்கம் இல்லாதது பாதிக்கலை. ஆனா, அவனைப் பாத்தப்புறம் வேற எதையும் பாக்கப் பிடிக்காம கண்ணை மூடிண்டு அந்த்ர நயனமா, கண்ல ஜலத்தோட, அவனையே நினைச்சுண்டு இருக்கா. காதல், பக்தி ஆதங்கத்தோட வர்ற அழுகையை ப்ரசாக்தம்னு சொல்லுவா, அவனையே ஸ்லாகிச்சுண்டு அப்படி வந்த நேத்ரஜலத்தை, கீழே விழுந்துடப் போறதேன்னுட்டு ஒரு தங்கப் பாத்திரத்துல பிடிச்சு வச்சுக்கறா. அவ கண்ணீர்லயும் நெறஞ்சிருக்கானாம் அவன்.

அப்பா அம்மா தோழிகள்ளாம் சொல்லிப் பாக்கறா, அவன் சாதாரண மனுஷன் தானே, என்ன பெரிய விஷயம், மறந்துடுங்கறா. ஆனா, அவளால முடியலை. அவனையே நினைச்சுண்டு இருக்கா. அவனைப் பாத்தே ஆகணும், அவனைத் தொட்டே ஆகணும், அவனோட கையைப் பிடிச்சே ஆகணும், அவனோட முகத்தைக் கையால வருடியே ஆகணும், அவனோட தோள்ல சாஞ்சே ஆகணும், அவனோட மார்ல முகம் புதைச்சே ஆகணும், அவனோட முத்தம் தன் மேலே பட்டே ஆகணும், அவனோட கை தன் மார்ல தொட்டே ஆகணும், அவனோட ஸ்வாசம் தன்னோட முகத்துல விட்டே ஆகணும், அவனோட தேகம் ஸ்பர்சம் பண்ணியே ஆகணும், அவனோட சேந்தே ஆகணும்னு... ஏகத்துக்கு நினைக்கறா.

இது காதல் இல்லைன்னா, வேறே எது காதல் சொல்லுங்கோ? லோகாயதமான பொடி டப்பா திரும்பக் கிடைக்குமாங்கற கவலையே என்னால தாங்க முடியலே. ஆத்மார்த்தமான காதலை இழந்துட்டோமோனு ரெண்டு பேரும் எப்படித் துடிச்சிருப்பா! யோசிச்சுப் பாக்கக் கூட முடியலே.

அத்யந்த ப்ரேமை இருக்கு பாருங்கோ. விசித்ரமானது. இழந்துட்டா அப்புறம் வராது. அந்தக் கணம் தாண்டிட்டா ப்ரேமைக்கும் புடலங்காய்க்கும் வித்தியாசம் கிடையாது. இது ப்ரேமை, இது உயிரைச் செதுக்குற காதல்னு உணர்ந்து உடனே அதைத் தேடிப் போய்ப் பிடிச்சு உசிருக்குள்ள சேத்துடணும். இல்லேனா புடலங்கா வாசனையோட சாகற வரைக்கும் பெருமூச்சு விடவேண்டியது தான். இது நிறைய பேருக்குத் தெரியறதில்லே. தெரிஞ்ச சில பேர் செயல்ல இறங்குறதில்லே. ஆனா நம்ம ஹூரோயின் அப்படியில்லை. தேவப் பொண்ணுன்னாலும் புத்திசாலிப் பொண்ணாச்சே?

தன்னை மாதிரியே அவனும் இருக்கானா, மறந்துட்டானான்னு நினைச்சுக்கறா. ஏன் இன்னும் தன்னைத் தேடிப் பாக்க வல்லைனு நினைச்சுக்கறா. ஒரு வேளை தேவகுலம்னால வரலையோனு அவளுக்குத் தோணறது.

ஒரு முடிவுக்கு வரா. தேவாளுக்கு மனுஷாளை விடப் பவர் ஜாஸ்தியாச்சே, அதனால அதீத வித்தையெல்லாம் தெரிஞ்சிண்டிருக்கா. டக்குனு அவனோட அந்தப்புறத்துல வந்து நிக்கறா. அவளை மறந்து போயிருப்பான்னு நினைச்சு அங்க வந்தவ, அவனோட பரிதாப நிலைமையப் பாக்கறா. அங்கே அவனைத் தவிர வேற யாருமில்லையா.. டக்குனு அவன் கண் முன்னாடி தெரியறா.

அதிர்ந்து போன பிரதாபகுமாரன், அவளைப் பாத்ததும் பிரசன்ன குமாரனாயிடறான். ஓடிப் போய் கட்டிக்கறான். எப்படி இருக்கேனு கேக்கறான். 'இளைய கன்னியின் இடை மெலிந்ததோ'னு பாடறான். அவள் தலைல ஆரம்பிச்சு ஒரு இடம் பாக்கியில்லாம முத்தம் குடுக்கறான். அவளும் அவனோட வேகத்துக்கு ஏத்த மாதிரி வளஞ்சு குடுத்து வாஞ்சையா இருக்கா. போது போறது தெரியாம அன்யோன்யமா இருக்கா ரெண்டு பேரும்.

"இத்தனை நெருக்கமாயிட்டோம், உன் பேர் கூடத் தெரிஞ்சுக்கலையே, உன் பேர் என்ன?"னு கேக்கறான்.

"இப்பத்தான் கேக்கத் தோணித்தா?"னுட்டு சலீலமா அவனோட கன்னத்தைத் தட்டறா. "உனக்கு எப்படி கூப்பிடணுமோ அப்படி கூப்பிடேன்?"னு கொஞ்சறா.

அவனும் விடாம, "உன்னைப் பார்க்கறது இனிமை, உன் பேச்சைக் கேக்கறது மதுரம்"னுட்டு என்னென்னமோ பாஷ்யம் சொல்றான். அவ கலகலனு நவரத்னம் கொட்ன மாதிரி சிரிக்கறா. "உன்னைப் பார்த்துண்டே இருக்கணும் போலருக்கு"னுட்டு, "அதனால உன்னை ப்ரியதர்சனின்னு கூப்பிடறேன்"ங்கறான்.

"ப்ரியதர்சனி, எனக்கும் பிடிச்சிருக்கு"ங்கறா அவ.

உடனே அவன் அவளோட ரெண்டு கையையும் கோர்த்துண்டு தன்னோட இழுத்துக்கறான். முகத்தோட முகம் ஒரசிண்டு, "ப்ரியதர்சனி, நாம கல்யாணம் பண்ணி காலா காலத்துக்கும் ஒண்ணா இருப்போமா?"ங்கறான்.

"நாம் எப்படி கல்யாணம் பண்ணி ஒண்ணா இருக்க முடியும்? ரெண்டு பேரும் வேறே ஜாதியாச்சே?"னு கேக்கறா அவ.

அவன் ரொம்ப வருத்தமாயிடறான். அப்போ அவ லேசா சிரிச்சுக்கறா. "என் மேலே அவ்ளோ ஆசையா?"ங்கறா.

"உன்னை விட்டா, எனக்கு யார் மேலயும் ஆசையில்லே. என்னோட ஹ்ருதயத்துல நீதான் நெறைஞ்சுருக்கே"ங்கறான் அவன்.

"எங்கே காமி பாக்கலாம்?"னு வெளயாடறா அவ.

இவன் பித்துக்குளியாட்டம் உடனே ஒரு கத்தியை எடுத்து நெஞ்சைப் பொளந்து காட்டறான். ரத்தமா கொட்டறது. ஹ்ருதயம் அடிச்சுக்கறது. அவ பதறிப் போயிடறா. நல்ல காலம், தேவகன்னியா இருக்கறது வசதியா இருக்கு. அவனோட காயத்தைத் தொட்ட உடனே அது சரியாயிடறது. "விளையாட்டுக்குச் சொன்னா இப்படித்தான் முட்டாள்தனமா நடந்துப்பியா? பிராணன் போயிருந்தா என்னாகும்? நீ மனுஷகுலம்னு மறந்து போச்சா?"னு கோபத்தோட கேக்கறா அவ. கோபம் அடங்கி அவனோட தலைய வருடிக் குடுத்துண்டே அவன் முகத்தை மார்ல வச்சுக்கறா. ரெண்டு பேரும் சித்த நாழி பேசாம இருக்கா.

அவ சொல்றா: "இன்னிக்கு வெள்ளிக்கிழமை. கோவிலுக்கு வராப்ல வா. நீ என்னைப் பாக்கணும்னா இனிமே ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்னிக்கும் சாயரட்சைல கோவில் நிருத்யசாலைக்குப் பின்னால இருக்கற சிற்பக் கூடத்துக்கு யாருக்கும் தெரியாம வா, நாம் சேந்து இருக்கலாம்".

அவன் சரிங்கறான். சந்தோஷமா அவனைக் கட்டிக்கறா. பட்டுனு காணாமப் போயிடறா. சாயந்திரம் அவா ரெண்டு பேரும் அபிசாரகமா சிற்பக் கூடத்துல மீட் பண்றா. சந்தோஷமா இருந்துட்டு, மறு நாள் அவா அவா இடத்துக்குப் போயிடறா.

இப்படியாகத்தானே யாருக்கும் தெரியாம வெள்ளிக்கிழமை சாயந்திரத்துலந்து சனிக்கிழமை கார்த்தால வரைக்கும் அவா சந்தோஷமா இருந்துண்டிருக்கா. வெள்ளிக்கிழமை சாயந்திரம் கோவிலுக்குப் போற பழக்கம் அப்படி வந்ததாக்கும்.

    இது இப்படி இருக்கச்சே, பிரதாபராஜா சபைல இன்னொரு விசேஷம் நடக்கறது. நாலஞ்சு வாரமா ஒரே களேபரம்.

நோட்டீஸ் போர்ட்ல வேகன்சி என்ன போட்டிருக்கா, என்னென்ன உபாதிதம், க்வாலிவிகேஷன், போட்டிருக்கானு பாக்க தேவாள்ளாம் ஓடினப்போ, ஒரு மனுஷ்யனும் அவா பின்னாடி ஓடினான்னு சொன்னேனில்லையா?

அவன் அதெல்லாம் படிச்சுட்டு, நேரா பிரதாப ராஜனண்டை போய் சேவிதம் பண்ணிட்டு, "மகராஜா, மகாபிரபு, தேவசபைல என்ன நடந்ததுன்னு தெரியலை, ஆனா நாலாவது மூர்த்தி ஒருத்தரத் தேடி விளம்பரம் பண்ணியிருக்கா"னு சப்ஜாடா விவரம் சொன்னான்.

பிரதாப ராஜாவுக்கு இது நல்ல சான்சு, ஆனா எப்படி தேவனாறதுனு தெரியலையேன்னு வருத்தமா இருக்கு. ம்ருத்யுன்னாலே மனுஷ்ய ஜாதிக்குத் தான். தேவாள்ளாம் அமரத்வம் கொண்டவாளாச்சே, அவாளுக்கு எப்படி ம்ருத்யுவ மேனேஜ் பண்ணத் தெரியும், மானுட ஜன்மமாயிருந்ததாலே தனக்கத்தனை தெரியும், தானில்லையோ இந்த வேலைக்கு உசிதம்னு நினைக்கறார்.

உடனே தனக்குண்டான அத்தனை பௌருஷத்தையும் பயன்படுத்த நினைக்கிறார். அத்தனை செல்வாக்கையும் பயன்படுத்தப் பார்த்தார்.

பழைய தர்மராஜாவண்டையே போய் கேக்கறார். அவரோ "தார்மீகமா பாத்தா தேவாள் மட்டுந்தான் அப்ளை பண்ணனுங்கறது சரியில்லே. ஆனா என்னால் எதும் பண்ணமுடியாது"னு சொல்றார். "ஏன் வேலையை வேண்டாம்னீர்?"னு கேட்டார் பிரதாபன். "பின்னே என்ன ஓய்? அவாவா நல்ல நல்ல வாகனமா வச்சுண்டிருக்கா. நேக்கு மட்டும் எருமைமாட்டைக் கொடுத்திருக்கா"னு புலம்பறார். "தெனம் எருமைமாட்டுல ஏறிப் போனாத்தான் அந்த அவமானம் புரியும்"னுட்டு ஓனு அழறார். 'ஏது, இவர்ட்ட ஐடியா கேக்க வந்தோமே'னுட்டு ராஜா அந்த இடத்தை விட்டு ஜகா வாங்கினார்.

இந்த்ரன் கிட்டே பேசினார். இந்த்ரனுக்கு பொறாமை ஜாஸ்தியோன்னோ? தன்னைவிட ஸ்டேடஸ்ல பெரிய போஸ்டுக்கு கேவலம் ஒரு மனுஷ்யன் வந்துடுவானேங்கறது பிடிக்கலை. 'நரகத்துல குவார்டர்ஸ் எடுத்துண்டு தங்கணும், தினம் எண்ணெய் ஸ்டாக் எடுத்து கொப்பறைல விடணும்'னு இல்லாத ரீலெல்லாம் விடறார். பிரதாபன் அதைக் கேட்டு இன்னும் ஆசை ஜாஸ்தியானதைத் பாத்ததும் இந்த்ரன், "நான் போகணும், யாரோ மகரிஷியோட சாபம் என்னைத் துரத்திண்டு வரா மாதிரி இருக்கு.. வரட்டா?"னு பிச்சிண்டுட்டார்.

மகாவிஷ்ணு கிட்டே மனு போட்டார். நைசா நழுவுறதை மீனுக்கே கத்துக் கொடுத்தவராச்சே விஷ்ணு? "யப்பா பிரதாபா.. நான் அவசரமா ஒரு அவதாரம் எடுக்கணும்.. வந்தப்புறம் மொதல் வேலையா உனக்கு உதவி பண்றேன்"னுட்டு மாயமா மறைஞ்சுட்டார்.

சிவன் கிட்டே பேசினார். "ஐயா.. நீர் தானே செலக்சன் கமிட்டி சீஃப்? எனக்கு அந்த வேலையைக் குடும்னு" கேக்கறார். சிவனோ, "பிரதாபா... இது தேவாள் மட்டுமே அப்ளை பண்ண முடியும்.. வேறே ஏதாவது வரம் வேணும்னா கேளேன்? கொஞ்ச நாளா யாருமே என் கிட்டே வரம் கேக்கலை.. கை நம நமங்கறது"னுட்டு போயிடறார்.

பிரம்மா கிட்டே போனார். ஒரு தலை ஆசாமி கிட்ட பேசறதே கஷ்டமில்லையோ? இந்தாளுக்கு நாலு சிரசாச்சே? வேணும்னே, "யாரு... பிரதாபனா? குரல் பிரதாபன் மாதிரி இருக்கே? எங்கேப்பா இருக்கே?"னு ஒவ்வொரு தலையா மாத்தி மாத்திக் கேக்கறார். பிரதாபனும் சுத்தி சுத்தி வந்து அலுத்து போய்த் திரும்பிட்டார்.

பிள்ளையார்ட்ட போனார். நேரா விஷயத்துக்கு வந்தார். "ஓய் கணேசரே.. உமக்கு எத்தனை வண்டி வாழைப்பழம், கொழக்கட்டை வேணும் சொல்லும்.. லைஃப் டைம் சப்ளை பண்ணிடறேன்.. இந்த வேலையை எனக்குக் கிடைக்கும்படி செய்யும். மனுஷ்யனான எனக்குத்தான் மரணத்தைப் பத்தித் தெரியும். நான் சூபர் குவாலிஃபைடு, இருந்தாலும் இந்த வேலைக்கு அப்ளை பண்ண முடியலே.. நீர் மனசு வச்சா நடக்கும்.. நானும் உம்மை கவனிச்சுக்கறேன்"னுட்டு அட்வான்சா எட்டு சீர் ரஸ்தாளி, மூணு சீர் மொந்தன், நூத்தியெட்டு வெந்த கொழுக்கட்டை, நூத்தியெட்டு பொறிச்சதுனு சம்திங் தள்ளினார். பிள்ளையார் எல்லாத்தையும் வாங்கிண்டு, "உம்ம கர்மபலன் போலவே நடக்கும்"னுட்டு மூஞ்சூர் வேகத்துல காணாமப் போயிடறார். லஞ்சம் கொடுக்கறதுல இதான் சங்கடம். கார்யம் ஜெயமாகுமானு தெரியாது.

இப்படி நாலஞ்சு வாரமா பிரதாபன் அல்லாடறார். ஒவ்வோரு தேவாளாப் பாத்து அட்ஜஸ்ட் பண்ண நெனச்சு எதுவுமே நடக்கலே. அப்ளை பண்ண கடைசி நாளோ நெருங்கிண்டு இருக்கு. இந்த வேலையை எப்படியும் வாங்கியே தீரணும்னு வைராக்கியமா இருக்கார். அப்படித்தான் இருக்கணும் தெரியுமோ? ஒரு லட்சியம்னு ஒரு கோல்னு இருந்தா அதை அடைஞ்சே தீரணும்னு செயல்ல இறங்கணும். சும்மா ஆசைப்பட்டா போறாது. என்ன தடை வந்தாலும் அதை சுக்கலாப் பண்ணி, தான் விரும்பியதை அடையறவா தான் மனுஷா. மிச்சவாள்ளாம் ப்ராணனுள்ள ஜடமாக்கும்.

இத்தனை நாளா நேரடியா ருஜ்யுத்வமா முயற்சி பண்ணி எதுவுமே நடக்கலே. இனிமே, இன்டைரக்ட் அப்ரோச்ம்பா பாருங்கோ, அப்படி அதிபலமா ட்ரை பண்ணத் தீர்மானிச்சார். தேவாள் மட்டுந்தான் அப்ளை பண்ணமுடியுங்கறது பெரிய சிக்கல். இதை மீற ஏதாவது அடாவடி பண்ணினாத்தான் உண்டுனு தீர்மானமாத் தெரியறது பிரதாப ராஜாவுக்கு. அடாவடிச் சக்ரவர்த்தி யாருன்னு யோசிக்கறார். கிங் ஆஃப் தில்லுமுல்லுனா ஒருத்தர் தான் இருக்க முடியும். மகாவிஷ்ணுவைப் பார்க்கிலும் அழிச்சாட்டியக்காரர் உண்டோ? எத்தனை ப்ராடு பண்ணினாலும் பக்தாள் மனமுருகிப் போகலியோ? எப்படியாவது மகாவிஷ்ணுவை மடக்கிப் போட நினைச்சார் ராஜா. மகாலக்ஷ்மியைப் பிடிச்சா கார்யம் ஜெயமாகும்னு தோணறது. மகாலக்ஷ்மிக்கு ரெண்டு கிலோ குங்குமம் வாங்கிக் கொடுத்தா போறும், வசப்படுத்திடலாம்னு தெரியும்.

அன்னைய பஞ்சாங்கத்தைப் பாக்கறார். உருப்படாத தினப்பலன் ஏதோ எழுதியிருக்கு. அதுக்குக் கீழே கிழமையைப் பாக்கறார். வெள்ளிக்கிழமை. சாயந்தரம் வெளக்கேத்தி வச்ச எல்லார் ஆத்துக்கும் மகாலக்ஷ்மி ஃப்லையிங் விசிட் அடிப்பார்னு தெரியும். அப்புறம் விஷ்ணுவோட சேந்து கோவில்ல இருப்பார்னும் தெரியும். இன்னிக்கு மகாலக்ஷ்மி மூலமா விஷ்ணுவை மடக்கிட வேண்டியதுனுட்டு சேவகாளைக் கூப்பிட்டு உசந்த குங்குமமா நாலு கிலோ பார்சல் பண்ணச் சொல்றார்.

    இங்க இப்படி இருக்கச்சே, தேவ ஜாகைலயும் ஒரு அமர்க்களம் நடக்கறது. தேவ ஜாதின்னாலும் அவாளுக்கு கைக்காரியம் எல்லாம் பண்ண மனுஷ்ய ஜாதி ஆட்கள் தான். மனுஷ ஜாதியோன்னோ, அடுத்தவா சந்தோஷமா இருந்தா பிடிக்கலை. "பொண்ணு வெள்ளிக்கிழமை வந்தா காணாமப் போயிடறா, சிற்பக் கூடத்துல இன்னொரு மனுஷ்ய ஜாதி யுவனோட பாத்தேன்"னுட்டு ஒரு மனுஷ ஜாதி சேடிப் பொண்ணு கம்ப்லெயின் பண்ணிடறா.

நம்ம ஹீரோயினோட அப்பா தேவருக்குக் கோபம் பொத்துண்டு வர்றது. "யாரது?"ன்னு கேக்கறார். சேடிப் பொண்ணு பிரதாபகுமாரனைப் பத்தி எல்லாம் சொல்லிடறா. "இன்னிக்கு வெள்ளிக்கிழமை, இன்னிக்குப் போனேள்னா கையும் களவுமா பிடிச்சுடலாம்"னு சொல்லிடறா. ஒடனே அந்த தேவ தகப்பனாரும் கிளம்பறார்.

    கோவிலுக்கு வந்த பிரதாப ராஜா மகாலக்ஷ்மிக்காக வெயிட் பண்றார். அப்போ தன்னோட குமாரன் நைசா நழுவுறதைப் பாத்துட்டு, அவன் பின்னாடியே சிற்பக் கூடத்துக்கு வரார்.

அவன் என்ன பண்றான்னுட்டு ஒளிஞ்சு கவனிக்கறதுக்காக எடம் தேடறச்சே, அங்கே இன்னொரு ஆசாமி ஒளிஞ்சுண்டிருக்கறதைப் பாக்கறார். யாருன்னு பாத்தா, நம்ம ஹீரோயினோட அப்பா. "என்னய்யா, உன் பையன் அடிக்கற கூத்து!"னுட்டு எரைச்சல் போடறார், தேவப்பொண்ணோட தேவத்தோப்பனார்.

"எல்லாம் உம்ம பொண்ணோட வேலை, என் பையன் பரம சாதுவாக்கும்"ங்கறார் பிரதாப ராஜா.

"பரம சாது பண்ற வேலையை பாரும்"ங்கறார் தேவ தோப்பனார். ரெண்டு பேரும் உள்ளே பாக்கறா.

அங்கே பிரதாப குமாரன் ப்ரியதர்சனியோட வஸ்த்ரத்தையெல்லாம் அச்சிதம் பண்ணிண்டிருக்கான். அவஸ்த்ரமா, பிறந்த மேனியா, இருந்தாலும் ப்ரியதர்சனி அவனோட கை படற போதெல்லாம் வெக்கத்துல சொக்கிப் போறா. 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்'னு அவன் பாடறான். அவ முனகல்லே ம்யூசிக் போடறா. சித்த நாழிலே ரெண்டு பேரும், அப்ர்யம்னு சொல்வா, அதாவது காத்தை மட்டும் உடுத்திண்டு இருக்கறதுக்கு பேரு அப்ர்யம், அப்படி இருக்கா. பிரதாபகுமாரன் மடில, அவ கந்தர்வ வீணையா மாறிடறா. இன்னொரு க்ஷணம், ரெண்டு பேரும் மானா மாறி ஒத்தரை ஒத்தர் துரத்திண்டு ம்ருக காமம் கொண்டாடறா. இன்னொரு க்ஷணம் ப்ரியதர்சனி கைல பிரதாபகுமாரன் களிமண்ணா மாற, அவ சிற்பம் செதுக்கறா. இன்னொரு க்ஷணம் அங்கயே ஒரு சின்ன தடாகம் ஏற்பாடு பண்ணி, ரெண்டு பேரும் அன்னப் பக்ஷியா மாறி கூடிக்கறா. அடுத்த க்ஷணம், மறுபடி சாதாரணமா மாறி அவ மடில இவன் தலை வச்சுக் கொஞ்சறான். இப்படி க்ஷணத்துக்குக் க்ஷணம் ரெண்டு பேரும் அதியத்புத காமக்ரியைல இருக்கா.

முதிர்ந்த ரசிகருக்கான காட்சி ஆங்காங்கே தெரியறதைப் பாத்துட்டு கண்ணை மூடிக்கறார் பிரதாப ராஜா.

தேவ தோப்பனாருக்கோ ஆத்திரம் வந்து அவா ரெண்டு பேர் முன்னாலயும் கோபாவேசத்தோடு பிரசன்னமானார். "எம்பொண்ணையா இப்படிக் கலைக்கறே பாதகா!"னுட்டு, என்ன பண்றோம்னு தெரியாம பிரதாபகுமாரனை தலையைச் சீவிக் கொன்னுட்டார்.

நாழியாயிடுத்து பாருங்கோ. மிச்ச கதையை அடுத்தப் பரசங்கத்துல சொல்றேன்.

மிச்ச கதை

2012/06/09

தைவாதர்சனம்


    கதஃப் பிதரௌ, வந்தே பார்வதீ பரமேஸ்வரம்னு ஸ்துதியும், முடிஞ்ச வரைக்கும் பாத்துக்கோடா மூஷிகவாகனானு சங்கல்பமும், மனசாரப் பண்ணிண்டுப் பிரதாபத்தை ஆரம்பிக்கிறேன். வியாக்யானமும் சம்பாஷணையும் ஏ சர்டிபிகேட்டா எசகுபிசகா இருக்கலாம், பால்யருக்கு உசிதமில்லேனு பெரியவாள்ளாம் பவ்யமா எடுத்துச் சொல்லுங்கோ. கேக்கலேனா, செவிட்டுல ரெண்டு சாத்துங்கோ, குத்தமில்லை, பகவான் ரக்ஷிப்பார்.

இந்த காலத்து குழந்தைகளுக்கெல்லாம் தெய்வ நம்பிக்கை பக்தி எதுவுமில்லே, கோவிலுக்குப் போச்சொன்னா வக்ரம் பேசறானு சொல்றோமே தவிர, பாருங்கோ, பதினஞ்சு பதினாறு வயசானாப் போறும், பொண்களும் சரி, பையன்களும் சரி, பக்தி வந்து துடிச்சுப் போயிடறா. வாரத்துல நாலு நாள் கோவிலுக்குப் போறான்னா, விஷயமிருக்கணுமே? ஒரு விக்கிரகம் விடாம பிரதக்ஷணம் பண்ணி, பக்தியோட அவா இருக்கறதப் பாத்தா, இவாளப் போய் குத்தம் சொன்னோமேன்னு நமக்கே அத்யானமா போயிடறது.

போன மாசம் பாருங்கோ, சைதாப்பேட்டைல காரணீஸ்வரர் கோவிலுக்கு போயிருந்தேன். சித்திரை மாசம் பிரம்மோத்சவம், நாலு நாள் தெய்வ சந்தேசம் சொல்லிட்டு போங்கோன்னா. அதுக்காகப் போயிருந்தேன். ஆதிகாரண மூர்த்தியும் ஸ்வர்ணாம்பிகையும் ஜகப் பிரசித்தியாச்சே, அப்படியே அவாளையும் பாத்துட்டு வருவோம்னு போனேன். போனா, கோவில்ல நிக்கக்கூட இடமில்லை. வயசுப் பொண்களும் பையன்களும் கோவிலைச் சுத்தி சுத்தி வரா, அவாளப் பாத்தே நேக்கு ஜன்ம சாபல்யமான மாதிரி ஆயிடுத்துன்னா பாருங்கோ.

பக்கத்துல நின்னுண்டிருந்தவர்ட்ட கேட்டேன்: "இந்த மாதிரி யுவக்கூட்டம் எல்லாம் தெய்வ பக்தியோட இருக்கறதனால தானே, லோகத்துல சன்மார்க்க சித்தம் நெலச்சு நிக்கறது?"

அதுக்கு அவர் சொன்னார்: "நீங்க வேறே, இவாள்ளாம் சாமி கும்பிடவா வந்திருக்கா? பையன்கள்ளாம் பொண்களை சைட் அடிக்க வந்திருக்கா. பொண்களோ சைட் அடிக்கறத அனுபவிக்கறதுக்கு வந்திருக்கா"

பக்கத்துல நின்னுண்டிருந்த அவாத்து மாமி சேந்துண்டா: "சரிதான். இவாளுக்கெல்லாம் உண்மைலயே பக்தி இருந்தா, நாட்டுல கரன்டு கஷ்டம் தீந்து போயிருக்காதோ?".

"தைவாதர்சனம்"னேன்.

"என்ன சொல்றேள், எங்க தெய்வ தரிசனம்?"னா மாமி.

"தர்சனமில்லே, அதர்சனம். சம்ஸ்க்ருதம். தைவ அதர்சனம்னு பிரிக்கணும். அத்ர்ஸ்யம்னா கண்ணுக்குத் தெரியாததுன்னு அர்த்தம். இவாள்ளாம் பாக்கறது, கண்ணுக்குத் தெரியாத தெய்வத்தை"னு சொன்னேன்.

"தைவாதர்சனமா, என்ன கூத்துடாது!"னு நெனச்சாளோ என்னவோ, ரெண்டு பேரும் என்னை ஒரு தினுசா பாத்துண்டே, டாக்கு டாக்குனு நடராஜா சர்வீஸ்ல கிளம்பிட்டா.

கோவில்ங்கறது எதுக்கு இருக்கு? கீதா மாமியைக் கேட்டா சிலாகிச்சு சொல்லுவார். கிராமத்துக் கோவிலையெல்லாம் எடுத்து நடத்தணும்னு ரொம்ப ஸ்ரத்தையா எழுதுறா மாமி. பக்திமார்க்கம் ஒரு பக்கம் இருக்கட்டும். கோவில்னு இருக்கறதே, நாலு பேர் சேர்ந்து பழகறதுக்குத் தானே? சித்தம் ஸ்ரேஷ்ட தேவஸ்தானம்னு சொல்லியிருக்காளே? பகவானை மட்டும் பிரார்த்தனை பண்ணனும்னா, மனசுலயே பண்ணலாமில்லையோ? கோவிலுக்கு பின்ன எதுக்கு வருவா? அப்படி இப்படி பாத்துக்கத்தான். நாம்ப மட்டுமில்ல, நாமள்ளாம் கும்பிடுற முப்பத்து முக்கோடி தேவதாங்கறாளே, அவாளும் இப்படித்தான்.

இதுக்குப் பூர்வீகம் உண்டு, தெரியுமோ?

    தி நாள்ல இப்ப மாதிரி இல்லை, ரெண்டே ஜாதி தான். தேவ ஜாதி, மனுஷ ஜாதி. அப்படின்னா அசுர ஜாதி எங்கனு கேக்கலாம். அசுர ஜாதியும் தேவ ஜாதிதான். எல்லாருமே காஸ்யபர் கொழந்தைகள் தானே?

கதையைக் கேளுங்கோ, தேவ ஜாதியும் மனுஷ ஜாதியும் ஒண்ணா இருந்தா. அப்பல்லாம் தேவாள் கண்ணுக்குத் தெரிஞ்சுண்டிருந்தா.

கடைத்தெருவுல "என்ன ஓய், சுப்ரமண்யரே, எப்படி இருக்கீர்? ஆத்துல செகந்ட் ஒய்ஃப் சௌக்கியமா? என்ன தளிகை?"னு குசலம் சாரிக்கலாம். "ஒம்ம ப்ராதா.. அதான் கஜமுகன் கணேசன்.. யாருக்காவது எதாவது விக்னம் உண்டாக்கறதே ஸ்வபாவமா போயிடுத்துங்காணும் அவருக்கு. அப்புறம் மோதகம் கொண்டா கதலிபலம் கொண்டானு லஞ்சம் வாங்கிண்டு நிவர்த்தி பண்றாராமே? யாருக்கு என்ன கார்யம் ஆகணும்னாலும் இவருக்கு மொதல்ல சம்திங் வெட்டணுமாமே? கேப்பாரில்லையோ? ஜ்யேஷ்டரா இருந்துண்டு பொறுப்பா இருக்க வேண்டாமோ? பகவானே லஞ்சம் வாங்கினா, பாமரன் என்ன பண்றது?"னு சப்ஜாடா கேக்கலாம். தேவாளும் நம்மளோட சுமுகமா பேசிண்டிருந்தா. தோப்பனார் பார்யாள் ஸ்த்ரீலோலப் ப்ரச்னையெல்லாம் நம்பகிட்டே சொல்லியழுவா.

தேவாளும் மனுஷாளும் பழகிண்டாலும் பேசிண்டாலும், பேதம் இருக்கத்தான் செஞ்சுது. தேவாளுக்கும் மனுஷாளுக்கும் தனித்தனி ஜாகை. ஆனா, கோவில்ல மட்டும் நிஜமாவே க்ருஷ்ணரையும், ராமரையும், மணிகண்டனையும், மகேஸ்வரனையும் பாக்கலாம். ராஜராஜேஸ்வரியையும், மீனாக்ஷியையும், சரஸ்வதியையும் சாக்ஷாத்தா பாக்கலாம். சாயந்தரத்துல தேவாளும் மனுஷாளும் கோவில்லக் கூடிப் பேசுவா. கோலாட்டம் ஆடுவா. பாட்டு பாடுவா. தேவ தேஜஸ் படட்டுமேனு மனுஷா அத்தனைபேரும் வருவா.

"என்ன ஓய், எரனூறு மில்லி மெக்டாவல் அடிச்சுட்டு வந்திருக்கீரா?"னு நீங்க கேக்கலாம்.

அப்படியெல்லாம் இல்லைண்ணா. சபைல பொய் சொன்னா, நாக்கழிஞ்சு போகாதோ? நான் சொல்றதெல்லாம் அந்த சரஸ்வதி சாட்சியா சத்ய வாக்காக்கும். அம்பது மில்லிக்கே ஆட்டம் போடறதுண்ணா.

"அப்றம் எப்படி எல்லாம் கல்லா மாறிப் போச்சு?"ன்னு கேக்கறேளா?

வாஸ்தவமான கேள்வி. தேவா மனுஷா சகபாவம், சகஜீவிதம் எல்லாம்... ஒரு நாள் சடால்னு மாறிப் போச்சு.

ஏன் மாறிப் போச்சுன்னா? அதுக்குக் காரணம் இருக்கு. அனுராகம். மதனசந்தேசம். ப்ரேமை. அதாண்ணா லவ்வுங்கறாளே, அதே தான். அழகா காதல்னு சொல்லலாம், லவ்வு ஜிவ்வுன்னு இழுத்துண்டும் சொல்லலாம். அந்தக் கதையத்தான் சொல்லப் போறேன். சித்தே இருங்கோ, ஒரு சிட்டிகை. நல்ல பட்டணம் பொடில்லாம் இப்ப கெடைக்கறதே இல்லை...நன்னா விர்ர்ர்னு ஏர்றது...சரி, கதைக்கு வரேன்.

இப்பல்லாம் பார்லிமென்ட்ரி கமிட்டி பொருளங்கா உருண்டை ஆபரேடிங்க் கமிட்டி ஆமவடைனு என்னென்னமோ சொல்றாளே, அதே மாதிரி ஆதி நாள்லயும் உண்டு.

    ரு நாள் சதஸ்ல தேவாள்ளாம் ஒக்காந்துண்டு இருக்கா. சதஸ் எல்லாம் கோவில்ல தான். இதானே தேவ ஜாகை? சிவ சபை, விஷ்ணு சபை, பிரம்ம சபை மூணும் சேந்து கூடியிருக்கு. லோகத்து விஷயமெல்லாம் விசாரிக்கப் போறா. என்ன நடக்கப்போறது, அதுக்கு எப்படி எதிர் நடவடிக்கை எடுக்கலாம், யாருக்கு எப்படி சங்கடம் கொடுக்கலாம், எவ்வளவு பரிகாரம் வசூல்னு பைவ் இயர் ப்ளான் போடறா. லோக பராமரிப்புக்கு, தேவாளோட ஐந்தாண்டு திட்டம்.

"அப்பா, நமஸ்காரம்"னு விஷ்ணுவுக்கு ஒரு கும்பிடு போட்டு பேச ஆரம்பிக்கறார் பிரம்மா. அவர்தான் த்ரிசபை சதசுக்கு ஸ்பீக்கர். நம்ம ஊர் ஜெயகுமார் மெய்ராகுமார் மாதிரி. சதசை ஆரம்பிச்சு வச்சுட்டு பிரம்மா சொல்றார்:

"இன்னிக்கு ஒரு முக்ய விவாதம் நடக்கப்போறது. என்னோட ஆபீஸ்ல, ஸ்ருஷ்டிக்கே எல்லாருக்கும் டயம் சரியா இருக்கு. விஷ்ணு சபைலயோ, திரிலோக பரிபாலனத்துக்கே டயம் சரியா இருக்கு. சிவ சதஸ்லயோ சம்காரம், ரக்ஷணம்னு ஓயாம வேல பாத்துண்டு இருக்கா.

மனுஷாள் என்னடான்னா நாளுக்கு நாள் பெத்துண்டே போறா. அது போறாம ஒத்தருக்கொருத்தர் அடிச்சுண்டு சாகறா. இந்தப்பக்கம் பெத்துண்டே போறா. அந்தப்பக்கம் செத்துண்டே போறா.

என்னோட டிபார்ட்மென்டுல எல்லாரும் ஒவர் டைம் பாக்கறா. எனக்கு ஓஞ்சு போறது. ஒரு நாள் லீவ் போட்டுட்டு கல்யாணியோட ஜாலியா இருக்கலாம்னா முடியல. இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவு வேணும்"

"பிரம்மா சொல்றது ரொம்ப சரி. நீங்க மூணு பேரும் பிசியா இருக்கேள். நாங்கள்ளாம் உங்களுக்கு ஸ்ருஷ்டி, சம்ரக்ஷணம், நாசம்னு எல்லா வேலைலயும் உதவியா இருக்கோம், எங்களுக்கும் டயமில்லை"னு கோரசா சொல்றா பஞ்ச பூதங்களும், மத்த தேவாளும். "இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கண்டாகணும் இன்னைக்கு".

"பிரச்னை என்ன, சொல்லுங்கோ"ங்கறார் மகாதேவர்.

'தன்னாட்டம் துடுக்கில்லை, சிவன் சித்தே மெதுக்கு'னு விஷ்ணுவுக்குக் கொஞ்சம் அகங்காரம் உண்டு. "அதாகப்பட்டது, நமசிவாய.."னு விஷ்ணு பேசறார். "நாம்ப ஏற்கனவே ஒழச்சு ஓடாப் போயிண்டிருக்கோம். மத்த தேவாளும் தேஞ்சு போயிண்டிருக்கா. வேலையை பாக்க வேண்டியது தான், இல்லைங்கல, ஆனா பாருங்கோ, நம்ம மூணு பேர் வேலையை முடிச்சப்புறமும் நிறைய வேலை இருக்கே? நம்ம லோக பரிபாலன ஸ்ட்ரேடஜில ஒண்ண மறந்துட்டோம். செத்துப் போனவாளை யார் கவனிக்கறது? அவாளையெல்லாம் வகை வகையா பிரிச்சு ஸ்வர்க்கம், நரகம், அவாந்த்ரம்னு ஒவ்வொரு இடத்துக்கா அனுப்பிச்சு, தர்ம பரிபாலனம், தண்டகம் கொடுத்து எல்லாம் மேனேஜ் பண்ண ஆளில்லை."

"இருக்கிற தேவ கூட்டத்துல ஒத்தருக்கு குடுக்க வேண்டியது தானே?"ங்கறார் நடராஜர்.

"ஒத்தருக்கும் இந்த வேலைல இஷ்டமில்லை. தர்மராஜனுக்கு இந்த உத்யோகம் பிடிக்கலே. நோட்டீஸ் குடுத்து யுகமாப்போறது. நரக லோகத்லயும், அவாந்த்ர லோகத்லயும், ஆபீஸ் வச்சுண்டிருக்கணுமே? ஒத்தருக்கும் பிடிக்கலை"னார் பிரம்மா.

"பாயிண்டு"ங்கறார் சிவபெருமான்.

"அதான் பிரச்னை!"ங்கறார் தசாவதாரப் பெருமாள்.

"இது வெறும் லேபர் பிராப்ளம்"னுட்டு தொண்டைய கனச்சுண்டார் நீலகண்டர். "இனிமே இது நாலாவது தேவதொழிலா இன்னிலேந்து முக்யத்வம் கொடுத்தாக வேண்டியது. இந்த வேலையைச் செய்யறவருக்கு மும்மூர்த்திகளுக்கு ஈடான பவரும் ரைட்டும் உண்டு. ம்ருத்யூ பத்தின முழு பிராபிட் அன்ட் லாஸ் பொறுப்புண்டு. த்ரிலோக பரிபாலன எக்சகியூடிவ் மேனேஜ்மென்ட்ல அவா ஒத்தர். இப்படி ஒரு வேகன்சி நோட்டீஸ் போடுங்கோ"னு பிரம்மாகிட்டே சொல்றார். "ஆம்பிளை தேவாள்ளாம் அப்ளை பண்ணலாம்".

"அருமையான ஐடியா"னார் விஷ்ணு. அவருக்கு ஆத்துக்குப் போகணும்.

"சரி, இப்பவாவது யாராவது எடுத்துக்கறாளான்னு பாப்போம்"னு சொல்லிட்டு பிரம்மா எழுந்துண்டார். "சபை இன்னிக்கு முடிஞ்சுது"னு அவர் சொன்னதும், முப்பது முக்கோடி தேவர்கள்ள ரெண்டு கோடி பேர், ஆபீஸ் நோட்டீஸ் போர்டுக்கு ஓடறா. புது வேகன்சிக்கு அப்ளை பண்ணலாம்னு. மும்மூர்த்திக்கு இணையான ஜோலின்னா ஆசை வராதா?

அப்படி ஓடிப் போய் பாத்தவாள்ள, என்னடாது தேவாள்ளாம் எங்க ஓடறானு பாத்து ஸ்தம்பிச்சுப் போன மனுஷ்யன் ஒருத்தனும் இருந்தான். அவனைப் பத்தி சொல்றதுக்கு நெறய இல்லைன்னாலும், அப்புறம் சொல்றேன். கோவில்ல வெயிலுக்காக ஒதுங்கினவன், 'என்னடா எல்லா தேவாளும் எங்கே ஓடறானு போய் பாத்துட்டு வருவோம்'னு அவா பின்னாடியே ஓடினான்.

தேவராஜ்ய சபைல இப்படி இருக்கறச்சே, மனுஷ்ய ராஜ்யத்துக்கு வருவோம்.

    பிரதாபன், பிரதாபன்னு ஒரு ராஜா. மனுஷ்ய ராஜா. அவனோட வீரமும் தீரமும் இந்திரனுக்கு இணையாக்கும். புத்திலயோ மகாவிஷ்ணு. தர்ம பரிபாலனம் பண்றதுல சிவ சமானம். நாட்டு மனுஷாள்ளாம் பிரதாபன் மாதிரி ஒரு ராஜா, ரகு குலத்துல கூட இல்லம்பா. அத்தனை பிரசித்தம், அத்தனை ராஜவ்ருதம்.

இந்த பிரதாப மகாராஜாவுக்கு ஒரே ஒரு குறை. தானும் ஒரு தேவனா இல்லையேன்னு.

கோவில்ல தேவர்களோட பேசும்போதும் விளையாடும் போதும், அவா தேஜஸப் பாத்துட்டு மனுஷ ராஜனுக்கு ரொம்ப நாளா ஆதங்கம். தான் ஏன் ஒரு தேவனாகக் கூடாதுன்னு. வயசும் ஏறிண்டே போறது, ஆனா தேவாள மாதிரி நித்யத்வமில்லைன்னு தெரிஞ்சு, நொந்து போயிடறான். டயம் கிடைச்சப்பல்லாம் தேவாள் கிட்டயும், ஒரு சமயம் மகாவிஷ்ணு கிட்டயும், கேட்டுப் பாத்துட்டான். அவா என்னடான்னா, "தேவனாறது, மனுஷ ஜன்மத்துலந்து ப்ரொமோஷன் மாதிரி கிடையாதுப்பா.. உனக்கு வாச்சது அவ்ளோதான்!"னுட்டா.

இந்தப் பிரதாபனுக்கு, பிரதாபகுமாரன் பிரதாபகுமாரன்னு ஒரு புத்ரன். யுவராஜன். அவனுக்கு இருபது வயசாறது. பாக்கறதுக்கு மும்மூர்த்திகளையும் சேத்து வச்சா மாதிரி அப்படி ஒரு களை. நல்ல ஒயரம், தோள் ரெண்டும் மேரு மலை மாதிரி இருக்கு. கண்ணில தீட்சண்யம், பாக்கறவாளையெல்லாம் கட்டிப் போடறது. பேசினா அத்தனை ம்ருது, அத்தனை ஞானம். வீரம்னா, தேவாள் கூட அவன் பக்கம் வர மாட்டா, அத்தனை வீரம்.

வயசாயிடுத்து, பையனை ராஜாவாக்கிட்டு வீஆர்எஸ் வாங்கிப்போம்னு பிரதாபராஜா நினைக்கறார். மந்திரிகளையெல்லாம் கூப்பிட்டுக் கேக்கறார். எல்லாருக்கும் ஒரே சந்தோஷம். "மொதல்ல பிள்ளையாரைப் பாத்துப் பேசிட்டு வந்துடுங்கோ, பட்டாபிஷேகத்தை ஆரம்பிச்சுடலாம்"னு எல்லாரும் சொல்றா.

உடனே பிரதாப ராஜா, பிள்ளையாரோட செகரடரிக்கு அபாயின்ட்மென்ட் கேட்டு ஒரு சந்தேசம் அனுப்பிச்சுட்டு குமாரனோடயும், தன்னோட பரிவாரத்தோடயும், கோவிலைப் பாக்கக் கிளம்பினார்.

கோவில்ல வந்து இறங்கினா, பிள்ளையார் ஏதோ மீட்டிங்க்ல இருக்கார். சொன்ன டயத்தைத் தாண்டி பிரதாபராஜா காத்துண்டிருக்கார்.

பொறுமை போன பிரதாபகுமாரன், "அப்பா, நான் சுத்திப் பாத்துட்டு வரேன்"னு கிளம்பறான். ஒவ்வொரு பிராகாரமா சுத்திண்டிருக்கான். பர்ணசாலை, யாகசாலையெல்லாம் தாண்டி ந்ருத்யசாலைல சப்தம் கேக்கறது. ஜல், ஜல்னு சலங்கை சத்தம். யாரோ ஆடறா மாதிரி தோணறது அவனுக்கு. மொள்ள நுழைஞ்சு பாக்கறான். அங்க ஒரு தேவ பொண்ணு தன்ன மறந்து நாட்யமாடிண்டிருக்கா.

அவளைப் பாத்ததும் அவன் மனசு, எலக்ட்ரிக் ட்ரெயின் ஓடற மாதிரி அடிச்சுக்கறது. அத்தனை அப்சரஸ்களையும் அவ கால்ல கட்டிப் போடலாம், அத்தனை அழகா இருக்கா. அவளோட கண் ரெண்டும் அஸ்திரம் மாதிரி அங்கேயும் இங்கேயும் பாயறது. பாயறச்சே இவனைப் பாத்துட்டு சிலையா நிக்கறது.

பிரதாபகுமாரன் ஒண்ணும் நோஞ்சானோ நொள்ளையோ இல்லையே? அவனும் அவளுக்கேத்த புருஷோத்தமன் மாதிரி கம்பீரமா சிம்மராஜனாட்டம் நின்னுண்டிருக்கான்.

அவ என்னடான்னா, இடுப்பில செருகிண்டிருந்த கச்சையும், தாவணியும் விழுந்தது தெரியாம, இவனைப் பாத்துட்டு எல்லாத்தையும் மறந்துட்டு நிக்கறா. ஒண்ணும் பேச்சே காணோம்.

கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய் சொற்கள் என்ன பயனும் இலனு தாடிக்காரப் பொலவர் சொல்லலியோ?

நேரம் போனதே தெரியலே... நாழியாயிடுத்து பாருங்கோ. மிச்ச கதையை அடுத்தப் பரசங்கத்துல சொல்றேன்.

மிச்ச கதை2012/06/08

உரையாடும் முறை


    ன் இமெயில் கிணற்றில் பழைய கதை ஒன்றைத் தேடிக்கொண்டிருந்த போது சிக்கிய நகைப்பெட்டி. ஆசிரிய நண்பர் அரசன் 2007 வாக்கில் அனுப்பிய மின்னஞ்சல்கள்.

நினைவுகளைக் கிளறிய இமெயில் ஒன்று.


பாளையங்கோட்டை புனித ஜான் பள்ளியில் இலக்கியம் பேச அழைத்திருந்தார்கள். அப்படியே பழைய நட்புகள் சிலவற்றின் நலம் கண்டு வரலாம் என்று சற்று முன்னதாகவே சென்றேன். நான் வருவதறிந்தோ என்னவோ உம்மைப் போலவே உள்ளூர் நட்புகளும் ஊரை விட்டு ஓடியதறிந்தேன்.

ஒன்றை அறிவீரோ? காலம் என்பது, கடந்த பின்னரே பொன்னாகிறது. கையிலிருக்கையில் செல்லாக் காசு. எப்படிச் செலவழிப்பது என்று புரிவதில்லை.

என்ன பேசுவது என்று தீர்மானிக்காத மனம், மண்ணில் வட்டமிடும் மணப் பெண்ணின் கால்விரல் போல் எதிர்பார்ப்புகளுடன் இலக்கின்றிச் சுற்றியது. அருகே நூலகத்தில், பண்பைப் பற்றிய வ.உ.சி பெருந்தகையாரின் தமிழ்ப் புத்தகக் குறிப்பொன்றைப் படித்தது பெரும் உதவியாக இருந்தது. 'உரையாடும் முறைகள்' பற்றிய அவருடையக் கருத்துக்களிலிருந்து என் அறிவிற்கு எட்டிய விளக்கம் ஒன்றை அவசரமாகக் குறித்துக் கொண்டு, ஏதோ பேசி முடித்தேன்.

சிதம்பரனாரின் சிந்தனைகளைப் படித்தபோது மனதில் பதிந்தவற்றை உம்முடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

முகம் நோக்கிக் கண் கலந்து நேரில் உரைக்க வேண்டியவை:
    அன்பு, பாசம், நேசம், காதல்
    வாழ்த்து, ஆசி, பாராட்டு
    எழுச்சி, ஊக்கம்
    நன்றி
    துக்கம், வருத்தம்

குறிப்பால் மறைவில் உணர்த்த வேண்டியவை:
    திருத்தம், வருத்தம்
    காமம், கோபம், ஏமாற்றம்
    ஈகை, பசி

மௌனம் காக்க வேண்டியவை:
    ஆத்திரம், வெறி
    வாதம்
    அவசரம்

நாமறியாத கருத்து ஒன்றுமில்லை, அடிக்கடி மறந்து விடுகிறோம் என்பதே சாட்டை முனையாகச் சுட்டெறிக்கிறது.

உரையாடும் முறைகளுக்கான சொற்களைப் பாருங்கள்: உரைக்க, உணர்த்த, காக்க.
சிந்திக்க வைக்கும் தேர்வு அல்லவா? உணர்த்த முடிவதை உரைப்பதனால் பலன் குறைவே. நம்முடைய நட்பை நினைத்துக் கொண்டேன்.

'என்ன சொல்ல?' என்பதே கேள்வியாக இருக்கையில், 'எப்படிச் சொல்ல?' எனும் விடையறிந்து என்ன பயன்? இது என்னுடைய வலி நண்பரே.


அரசன் குறிப்பிட்டிருக்கும் 'உரையாடும் முறை'களை எப்போதாவது பின்பற்றியிருக்கிறேனா என்று யோசிக்கிறேன். அரசன் என்னைத் தன் நட்பு வட்டத்தில் சேர்த்துக் கொண்டார் என்பது, எனக்கு இன்னும் அடங்காத ஆச்சரியம்.

2012/06/07

மகிழ்ச்சி எந்திரம்


    மாடியிலிருந்து லியோ அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தான். உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் என்று பலர் பண்ணை வீட்டில் குழுமியிருந்தார்கள். தெரிந்த முகங்களிடையே புரிந்த அன்பின் அடையாளம் விரவியிருக்கும் என்று எண்ணிய லியோவுக்கு அவர்கள் ஒருவருக்கொருவர் ஏசிக்கொண்டும் அடித்துக் கொண்டும் இருந்தது வருத்தமாக இருந்தது. வலித்தது. "நிறுத்துங்க! போதும்!" என்று கூவிக்கொண்டே அவர்களை நோக்கிச் சென்றான்.

லியோ ஓடி வருவதைக் கண்ட பெரிய பாட்டன் சிரித்தார். "டேய்.. நீ ஏன் இங்க வரே? போய் ஏதாவது கண்டுபிடி போ! இதெல்லாம் ஆம்பிளைங்க புழங்குற இடம்" என்றார். லியோவின் மாமா அவனை எச்சரித்தார். "லியோ.. உள்ளே போ.. படாத இடத்துல பட்டுறப்போவுது". பிறகு எக்காளமாகச் சிரித்தார். லியோ தயங்காமல் உரக்கக் கூச்சலிட்டான். "ஏன் இப்படி சண்டை போடுறீங்க? சந்தோஷமா இருக்கக் கூடாதா? எல்லோரும் சேர்ந்திருக்குற நேரத்தை ஏன் சண்டை போட்டு வீணடிக்கிறீங்க?" என்றான்.

"டேய்.. போக்கத்தப்பயலே.. போடா.. போய் சமையல்கட்டுல சமையல் மெஷின் ஏதாவது வேணுமானு கேட்டு செஞ்சு கொடு போ.." என்றார் சித்தப்பா.

"மாமா.. சந்தோஷ மிஷின் ஒண்ணு கண்டுபிடிச்சாலும் ஆச்சரியமில்லே.. இல்லே மாமா?" என்று சேர்ந்து கொண்டான் கூட்டத்தில் இளையவன். எல்லோரும் சிரித்தார்கள். "கண்டுபிடிப்பான்... போக்கத்தவன்..".

லியோவுக்கு உறைத்தது. இவர்களுக்கு என்ன தேவையென்று புரிந்து விட்டது. சந்தோஷ மிஷின்! இவர்களுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே தேவையான ஒன்று. மகிழ்ச்சி எந்திரம்! வீட்டுக்குள் ஓடினான்.

"ஏன் இப்படி தலைதெறிக்க ஓடி வரீங்க? படியேறும் போது தடுக்கி விழப்போறீங்க... ஒவ்வொரு படியா ஏறி வரக்கூடாதா?" என்று கலங்கிய மனைவியை ஒரு கணம் பார்த்தான். "லீனா, இந்த உலகத்துக்குத் தேவையானது எதுனு தெரிஞ்சுகிட்டேன்.. கண்டுபிடிக்கப் போறேன்.. மகிழ்ச்சி எந்திரம்!" என்று குதூகலித்தான்.

தோளைக் குலுக்கிய லீனா, "இப்போ யாருக்கு என்ன சோகம்? எங்கே என்ன கெட்டு போச்சு?" என்றாள்.

"என்னைத் தொந்தரவு செய்யாதே" என்று தன் அறைக்குள் ஓடும் கணவனைப் பார்த்த லீனா பெருமூச்சு விட்டாள். திருமணமாகி நாலு குழந்தைகளுக்குத் தகப்பன் போலவா நடந்து கொள்கிறான் லியோ? அவனையொத்தவர்கள் விவசாயம், வேலை, படிப்பு, வியாபாரம் என்று பலவகையிலும் முன்னேறி சமூக ஏணியில் உயர உயர ஏறுகையில் லியோ ஏன் இப்படி கிறுக்கனாக இருக்கிறான்? சைக்கிள் மணி, தானியங்கி ரொட்டி எந்திரம், காய்கறி வெட்டும் மிஷின், தயிர் கடையும் மெஷின் என்று ஏதாவது செய்து கொண்டு அனைவர் ஏளனத்தின் மையமாக இருக்கிறானே? உள்ளுக்குள் தேங்கிய ஏக்கங்களும் கனவுகளும் அவ்வப்போது அவளுடைய பெருமூச்சுகளில் கரைந்தன என்றாலும் லியோவை நேசித்தாள். லியோ அருகில் இருக்கையில் அவளுக்கு பூக்களின் வாசம் தேவைப்படவில்லை. சிறு மழைத்துளிகளில் நனையவேண்டும் என்ற வேகம் பிறக்கவில்லை. "இதோ இருக்கனே..?" என்று கைக்குட்டை விலக்கி முகம் சிரிக்கும் குழந்தை போல் தோன்றி மறையும் வானவில் கூட இரண்டாம் பட்சம். எனினும்.. லியோ ஏன் மற்றவர்கள் போலில்லை என்று அவ்வப்போது நினைப்பாள். அறைக்குள் சென்ற கணவன், மகிழ்ச்சி எந்திரம் கண்டுபிடிக்கும் முயற்சியில் அடுத்த சில நாட்களுக்கு அருகிலிருந்தும் தொலைவிலிருப்பான் என்று எண்ணியபடி ஒவ்வொரு படியாகக் கீழிறங்கினாள்.

    ரே வாரத்தில் மகிழ்ச்சி எந்திரத்தை உருவாக்கிவிட்டான் லியோ. கண்ணாடிக் கதவுக்கு உள்ளும் வெளியும் சிறு பெட்டிகளும், விளக்குகளும், அவற்றுள் புகுந்து வெளிவந்த வண்ணக் கம்பிகளும் பார்ப்பதற்கு லேசான அச்சத்தைக் கொடுத்தாலும், உள்ளே ஒரு நபர் அமரும் வசதிகொண்ட விளையாட்டு மணிக்கூண்டு போல் இருந்தது எந்திரம். அவ்வப்போது வந்த மனைவி பிள்ளைகளைக் கவனிக்காமல் தயாரிப்பிலே குறியாக இருந்த லியோ, எந்திரத்தில் மகிழ்ச்சிக்குத் தேவையானதென்று நினைத்த அத்தனையும் சேர்த்திருந்தான். உலகப் பயணம், இசை, நகைச்சுவை, இளம்பிராய நினைவுகள், காதல் நினைவுகள், மழலைப் பேச்சு என்று நிறையக் கலந்திருந்தான். எந்திரத்தை இயக்கிய ஒரு நிமிடத்துக்குள் மனம் மகிழ்ச்சியடையும் என்று நம்பினான். ஞாயிற்றுக் கிழமை காலை முதல் வேலையாக தன் குடும்பத்திற்கு மகிழ்ச்சி எந்திரத்தை அறிமுகம் செய்யத் தீர்மானித்தான். சனிக்கிழமை முழுதும் எந்திரத்தை சோதனை செய்வதிலும், கூண்டுக்கு வண்ணம் பூசுவதிலும் கழித்தான். இடையிடையே வந்து போன மூத்த மகன் சால், மிஷினில் குறியாக இருப்பதைக் கவனித்தான். வேண்டுமென்றே எந்திரத்தின் கதவை லேசாகத் திறந்து வைத்துவிட்டு உறங்கப் போனான்.

ஞாயிறு காலை. லீனா, மூன்று குழந்தைகள், வீட்டின் இரண்டு நாய்கள், பூனைகள் என்று குடும்பச் சாப்பாட்டு அறை நிரம்பியிருந்தது. சாப்பாட்டு மேஜை மேல் "லீனாவுக்காக" என்று எழுதி ஒட்டியிருந்த ஒரு பெரிய காட்டுமலர்க் கொத்தைப் பார்த்து லீனா புன்னகைத்தாள். மெள்ள இறங்கி வந்த லியோ எல்லோரையும் பார்த்தான். "மகிழ்ச்சி எந்திரத்தில் பயணம் போகத் தயாரா?" என்றான் லீனாவிடம்.

"அப்பா! நான் தான் முதல்.." என்றான் கடைக்குட்டி. சுற்றும் பார்த்த லியோ, "சால் எங்கே?" என்றான்.

"அப்பா! அண்ணா காலைலயே எழுந்து நைசா எந்திரத்துக்குள்ள போறதைப் பார்த்தேன்.. வேணாம்னு என்ன சொல்லியும் கேக்காம... உள்ளே போய்.." என்று வத்தி வைத்த இரண்டாமவளை மறித்த கடைக்குட்டி, "ஆமா.. நான் வரேன்னு சொன்னேன்.. அண்ணா என்னைத் தள்ளி விட்டாம்பா!" என்று வத்தி வைத்து முடித்தான். "சால் விழுந்து சிரிச்சிட்டிருந்தான்" என்றாள் லீனா.

சாலைப் பலமுறை அழைத்தபின் லியோ உற்சாகத்துடன், "சரி.. லீனா.. நீதான் மகிழ்ச்சி எந்திரத்தை அரங்கேற்றம் செய்யணும்" என்றபடி மேஜையிலிருந்த பூங்கொத்தை அவளிடம் கொடுத்தான். "முதல் வாடிக்கையாளருக்கு மகிழ்ச்சி எந்திரத்தின் அன்பளிப்பு" என்றான்.

"சரி" என்று மகிழ்ச்சி எந்திரத்துள் ஏறி அமர்ந்தாள் லீனா. கதவை அடைத்தாள். மாடியிலிருந்து இறங்கி வந்த சால், "வேணாம், அதுல போகாதே அம்மா!" என்று மென்மையாக வேண்டியதை லீனாவோ லியோவோ கவனிக்கவில்லை. சால் முகத்தில் வருத்தம் அப்பியிருந்தது. கண்ணீர் வற்றியக் கிணறாய் இருண்ட கண்கள்.

ஒரு நிமிடம். கூண்டுக்குள் லீனா சிரித்துக் கொண்டிருந்தாள். மூன்று நிமிடங்கள். சிறு குழந்தை போல் குதூகலித்தாள். ஐந்து நிமிடங்கள். அவள் முகத்தில் அவ்வப்போது மகிழ்ச்சி மின்னியது. எட்டு நிமிடங்கள். லீனாவின் முகம் வாடத் தொடங்கியது. பத்து நிமிடங்கள். அவள் கண்களில் நீர் உருளத் தொடங்கியது. கேவிக் கேவி அழத் தொடங்கினாள்.

லியோ அவசரமாக எந்திரத்தை அணைத்துக் கதவை உடைத்துத் திறந்தான். "என்ன ஆச்சு? எந்திரம் மகிழ்ச்சி தருவதை நிறுத்தி விட்டதா? எந்திரத்தில் ஏதாவது கோளாறா?" என்று கலங்கினான்.

அவனை இறுக அணைத்துக் கொண்ட லீனா விசும்பத் தொடங்கினாள். விசும்பல்களுக்கிடையே பேசினாள். "இல்லை லியோ. எந்திரம் வேலை செய்கிறது. மகிழ்ச்சி என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள முடிந்தது. அதில் நான் பார்த்த கேட்ட நகைச்சுவை இசை, கலாசாரம், உலகப்பயணம், ஓவியம், கவிதை, மழலை, இயற்கை, காதல்... எல்லாமே மகிழ்ச்சியைத் தந்தன. ஆனால் அனுபவிக்க முடியாமல் சோகம் புரண்டுவரத் தொடங்கியது. இவற்றைப் பார்த்த பொழுது மகிழ்ச்சி எழத்தொடங்கினாலும் உடன் நீயில்லை என்ற நினைவின் சோகம் மகிழ்ச்சியை அடக்கிவிட்டது. உடன் என் பிள்ளைகள் இல்லையே என்ற ஏக்கம் மகிழ்ச்சியை அடைத்துவிட்டது" என்றாள். சால் முகத்தில் தோன்றியப் புன்னகைக் கீற்றை கண்டு அவனை அணைத்துக் கொண்டாள்.

"....இதற்காகவா இத்தனை உழைத்தேன்?" என்றான் லியோ.

"புரியவில்லையா லியோ? மகிழ்ச்சி எந்திரம் எதுவென்று இன்னுமா புரியவில்லை?" என்றுக் குலுங்கி அழுதாள் லீனா.[-]
    னி, சரிந்த மரத்துக்காகச் சிறிதுக் கண்ணீர்.

நீங்கள் மேலே படித்தது ரே ப்ரேட்பரி எழுதிய 'The Happiness Machine' என்ற அருமையான சிறுகதையின் சுமாரானத் தமிழ்ச் சுருக்கம். மையக்கருவும் விவரங்களும் ரேயின் எழுத்து. வர்ணணைகளும் சம்பவத் தொகுப்பும் என்னுடையது. தமிழாக்கத்தில் கதையின் கருவை என் பாணியில் சொல்லியிருக்கிறேன். ஆங்கிலத்தை அப்படியே தமிழில் வார்ப்பது பொருந்தவில்லை என்று நினைத்தேன். (ஆங்கிலத்தையும் அனுபவிக்க முடியாமல் போய்விடுமே என்ற அச்சமும் காரணம்). பிழைகளுக்கு நானே பொறுப்பு. நேரமும் வசதியும் கிடைத்தால் அசல் கதையைப் படியுங்கள். படம்: சிறுகதை வெளிவந்த 1957ம் வருட Saturday Evening Post இதழிலிருந்து.

என்னுடைய பதின்ம வயதில் அறிமுகமான எழுத்தாளர் Ray Bradbury. என்னுடைய மெத்தப் படித்த மாமா வீட்டில் பழைய 'Saturday Evening Post' பிரதிகளைப் படம் பார்த்துக் கொண்டிருந்த போது சட்டென்று attention grabber போல் படமும் தலைப்பும் என்னை இழுத்தது. கதை அப்போது புரியவில்லை. மாமாவிடம் கதை விளக்கம் கேட்ட போது, அவர் சொன்னது ஓரளவுக்குப் புரிந்தது. "இதுக்கு ஒரு கதை தேவையா?" என்று அவரிடம் கேட்டதும், அவர் புன்னகை செய்ததும் நினைவிருக்கிறது. கதையின் தாக்கத்தை இருபது வருடங்களுக்குப் பிறகு உணர்ந்தேன் என்பதே உண்மை.

பதிவெழுதுகையில் குறுக்கிட்ட என் மகன், "இது என்ன படம்?" என்றான். படத்தையும் மகிழ்ச்சி எந்திரம் கதையையும் சொன்னேன். பொறுமையாகக் கேட்டுவிட்டு, "that's it? boring" என்றான். "இன்னும் இருபது வருடம் கழித்துப் புரியும்" என்றேன். "i get it.. but still BORING!" என்றான்.

சரி, மகிழ்ச்சி எந்திரம் உங்களுக்குப் புரிந்ததா?

நாமே மகிழ்ச்சி எந்திரம். நாம் வெளிப்படுத்தும்.. பகிர்ந்து கொள்ளும்.. பெறும்.. வழங்கும்.. நேசம் அன்பு காதல் ஈகை தான் மகிழ்ச்சி. நாம் மகிழ்ச்சியோடு வாழவில்லையெனில் இயந்திரத்தினால் ஒரு பயனும் இல்லை. மகிழ்ச்சி எந்திரத்தை வைத்துக் கொண்டு எதையோ தேடி அலைந்து எத்தனையோ சாக்கு சொல்லி கடைசியில் எந்திரம் துருப்பிடித்து நாசமானதே என்று புலம்புவதில் பொருளே இல்லை. எது உண்மையான மகிழ்ச்சி என்று தெரிந்தும் அதை மதிக்காமல் உணராமல் செயல்படுத்தாமல்.. சபிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கிறோம்.

விஞ்ஞானப் புனைவின் வியாசரான ரே, எக்கச்சக்கமாக எழுதியிருக்கிறார். நானே இதுவரை நூறு கதைகள் போல் படித்திருப்பேன்! ரேயின் கதைக் கருக்கள், பிறரின் நவீனத் தமிழில் பிரபலச் சிறுகதைகளாகியுள்ளன. ரேயின் பல கதைகள் இன்று பிரபல விடியோ கேம்களாகத் தயாரிக்கப்படுகின்றன.

நான் தினம் நடக்கும் பாதையில் அசாத்திய இதம் தந்த ரே மரம், சென்ற செவ்வாய்க்கிழமை காணாமல் போய்விட்டது. just like that. மரத்தைக் காணோம். மரத்தடி மட்டுமே இருக்கிறது. மாய மரத்துக்கு நன்றி சொல்லி மரத்தடியில் சிறிது இளைப்பாறினேன். நிழலும் பூக்களும் சிந்திய பூதமரத்துக்காகக் கொஞ்சம் உருக விரும்பியது என் மனம். அறிவை வளர்த்த அற்புத எழுத்துக்கு இது என் அஞ்சலி.

சரிந்த மரத்துக்காகச் சிறிது கண்ணீர் உங்கள் கண்களிலும் தளும்புமென்று நினைக்கிறேன்.

goodbye, ray bradbury! we love you.

2012/06/06

நாட்படவிழித்ததும் அவள் உடனிருப்பதை உணர்ந்தேன்.
எழ முயன்ற என்னை அழுந்தப் பிடித்தாள்.
"ஆ! வலிக்கிறது" என்றேன்.
உதறி எழுந்தேன்.
என்னுடன் கழிவறைக்குள் வந்தாள்.
"ஏய்.. வெளியே இரு" என்று அதட்டியபோது சிரித்தாற் போல் தோன்றியது.
காபி அருந்துகையில் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். முதுகை இறுக்கினாள்.
"என்ன இது? விலகு. நேரமாகிறது. போக வேண்டும்" என்றேன்.
அவள் இணங்கவில்லை.
"நானும் வருவேன்" என்றாள்.
பிறகு ஹெல்த்ப்லெக்சில் ஓடத் தொடங்கியதும் திடீரென்று காணாமல் போனாள்.
ஒழிந்தாள் என்று எண்ணினேன்.
இரண்டாவது மைலில் அவளைக் கவனித்தேன்.
உருவம் சுருங்கிக் கண்ணுக்கு எளிதில் புலப்படாமல், என் காலருகே ஓடிக் கொண்டிருந்தாள்.
"எந்த உருவிலும் வருவேன்" என்றுச் சிரித்துச் சட்டென்று என் காலைக் கடித்தாள்.
துடித்தேன்.
கிக்பாக்சிங் பயிற்சியின் போது விரல்களைக் கடித்தாள்.
தினப்பழக்க நீச்சலின் போது, கூடவே வந்து என் கால்களை நீருள் இழுத்தாள்.
வீடு திரும்புகையில் தொல்லை பொறுக்காமல், "யார் நீ? ஏன் என்னைத் தொடர்கிறாய்?" என்றேன்.
"எப்போதும் உன்னைத் தொடர்ந்தே வருகிறேன், நீ தான் என்னைக் கவனிக்கவில்லை" என்றாள்.
"ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?" என்றேன்.
"அப்போது தானே கவனிக்கிறாய்?" என்றாள்.

2012/06/05

எடிபஸ்


மிக அழகாக இருந்தாள்.
கச்சிதமாக வெட்டியக் கூந்தல். களையான முகம். நீண்ட கண்கள். செதுக்கிய மூக்கு. ஏந்தச் சொன்ன முகவாய். புதுக்கனி உதடுகள். அடக்கமான கழுத்து. அடங்காத மார்பு. முத்தாய்ப்பாய் முலை. வழுக்கும் இளவயிறு. பரந்த பிட்டம்.
என்று என் பார்வை இறங்கி வந்தது.
"யார் நீ?" என்றேன்.
"உன்னுடன் இருப்பவளை இப்போது தான் கவனிக்கிறாயா?" என்றாள்.
"தொடவா?"
"நான் உனக்குத் தாய்"
தயங்கினேன். "பொதுவாகச் சகோதரியில் தொடங்குவார்கள். நீ நேரே தாய்க்குத் தாவுகிறாயே?" என்றேன்.
"நீதானே என்னைத் தாயென்று சொல்லி வருகிறாய்?" என்று என்னைச் சீண்டினாள்.
"நானா? உன்னைக் கட்டி முத்தமிடத் தோன்றுகிறதே? உன் மார்பில் என் உதடுகளைப் பதிக்கத் தோன்றுகிறதே? உன் மடியில்.."
"சீ.. பொல்லாது.. தாயிடம் இப்படியா பேசுவது?" என்று இமை படக்கச் சிரித்தாள்.

ஹ்ம்ம்ம்.
ஒரு மாதமாக ப்ரயனுடன் சுற்றிக் கொண்டிருக்கிறாள்.
எனக்கு எரிச்சலாக வருகிறது.
"லவ் திஸ் டேமில் ஷிட்.." என்கிறான் ப்ரயன்.
"எக்சைடிங்.." என்று உருகி உருகிப் போகிறான்.

இனி ப்ரயன் எனக்கு நண்பனல்ல.
அவள் எனக்குத் தாயுமல்ல.


2012/06/03

சுபம்


    “நெனச்ச காரியம் நடக்கலே ராணி” என்று சலித்தபடி உள்ளே நுழைந்தக் கணவரை வருத்தத்துடன் பார்த்தாள் காவிரி.

“பாத்துங்க.. தலை இடிச்சுக்கும்.. கவனிங்க” என்று நிலைப்படிக்கு விரைந்து சென்று, கைத்தாங்கலாக அவரை உள்ளே அழைத்து வந்தாள். “ரெண்டு நிமிசம் உக்காருங்க..” என்று அவரை வீட்டின் ஒரே நாற்காலியில் உட்கார வைத்தாள். சுவரோரமாக இருந்த நைந்தத் திண்டுத் தலையணைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி எடுத்து வந்தாள். கணவரின் கால்களை உயர்த்தி, “.. ஒரு நல்ல செருப்பு வாங்கிக்கங்கனா கேக்குறீங்களா? வெறுங்காலோட இப்படி வெயில்ல நடக்காதீங்கனு சொன்னா கேக்கணும்..” என்றாள்.

“நீ நல்லாருக்கணும் ராணி” என்று சாய்ந்து வசதியாக உட்கார்ந்து கொண்டவரின் தலைமுடியை லேசாகக் கோதி விட்டாள். சுவரலமாரியில் இருந்த அம்ருதாஞ்சன் புட்டியைத் திறந்து ஓட்டிக்கொண்டிருந்த களிம்பை விரலால் சுரண்டி எடுத்து அவர் நெற்றியில் இடம் வலமாகத் தடவினாள். முந்தானையைக் கயிறு போல திரித்து தலையைச் சுற்றி இறுக்கிப் பிடித்தாள்.

“ம்ம்ம்.. ரொம்ப இதமா இருக்கு ராணி.. உன் கைல இதோ இந்த நேரத்துல இப்படியே போயிடலாமானு தோணுது ராணி” என்றவரின் கண்களில் உருண்ட கண்ணீர்த் துளிகளைக் குனிந்து உதட்டால் முத்தமிட்டுத் துடைத்தாள். முந்தானைச் சுற்றை விலக்கினாள். “போறதும் வாறதும் நம்ம கைலயா இருக்கு?” என்று அவர் நெற்றியில் இன்னொரு முத்தமிட்டாள். “டீ போட்டுக் கொண்டாறேன்.. கொஞ்ச நேரம் கண்ணை மூடுங்க” என்றபடி சமையலறைக்குள் சென்றாள்.


மீதிக் கதை: அதீதம் மின்னிதழில்.
நன்றி அதீதம்.