2012/10/27

மைத் மை டியர்

3


◄◄   1   2    கோவில் வாசலில் நின்று கொண்டிருந்தவர்களை சிங்காரமும் ரகுவும் தொலைவிலிருந்து அளந்தனர். மைத்தைப் பார்த்ததும் ரகுவின் இதயத்துடிப்பு எழுநூறைத் தொட்டது. ஆரவாரித்த ரகுவை அடக்கினான் சிங்காரம். "தம்பி.. நீங்க இப்ப என் கூட வரக்கூடாது, நீங்க செய்ய வேண்டியது கவனமிருக்கட்டும்.. நானே போய் அந்தப் பொண்ணோட பேசுறேன்.."

"பாத்து பேசுங்க சிங்காரம்.. கொஞ்சம் வல்லினமா பேசினாலும் அவ காது நோகும்.." என்றபடி ரகு வேறு திசையில் கோவிலைச் சுற்றி நடக்கத் தொடங்கினான்.

    "அங்கிள் எங்கே சிங்காரம்? என்னை வரச்சொன்னாரே? மணி மூணாவுது, கோவில் திறக்க இன்னும் ஒரு மணியாவது ஆகும்.. இப்படிக் கழுத்தறுக்குறாரே?" என்றாள் மைத், அருகில் வந்த சிங்காரத்திடம்.

"வருவாரும்மா.. அவரு கார் டைர் பஞ்சராயிடுச்சு.. அதான் உங்களை வெயிட் பண்ணச் சொல்லியனுப்பினாரு.. கூல் ட்ரிங்ஸ் எதுனா வாங்யாரட்டுமா?"

"வேணாம்..."

"அப்ப இங்கயே இருங்க.. நான் போய் ஒரு சோடா குடிச்சுட்டு வரேன்.. தாகம் தாங்கலே" என்ற சிங்காரம் அவசரமாகக் கிளம்பி கோவிலின் பின்புறம் பீச் ரோட் பக்கமாக நடக்கத் தொடங்கினான்.

    ன்புமல்லி தன்னைத் தனியாக வரும்படி மைத் மூலம் சொல்லியனுப்பியதன் காரணத்தை அசைபோட்ட வாசு, பீச் ரோடில் இறங்கிக் கோவிலை நோக்கி நம்பிக்கையோடு நடந்தான். ஒருவேளை தன்னைத் தேர்ந்தெடுக்கவில்லை என்று சொல்லிவிட்டால் அன்புமல்லியை என்ன செய்யலாம் என்றுத் தயங்கி யோசித்தான். கையை உடைத்து வயிற்றை நசுக்குவதா அல்லது முதுகை உடைத்துப் பிறகு மூக்கை நசுக்குவதா என்று வரிசையைத் தீர்மானிக்க முடியாமல் தவித்தான். தவிப்பைக் குறைக்க அவசரமாகக் காற்றில் தை க்வான் தோ பழகினான். ஒரு குத்துக்கு இரண்டு பல் விழுந்தால் முப்பத்திரண்டு பல் விழ எத்தனைக் குத்துக்கள் தேவைப்படும் என்ற உபரிக் கணக்கு மனதில் தோன்ற, கைவசம் கேல்குலேடர் இல்லாமல் மிகவும் நொந்து போனான். அமைதிப்படுத்திக் கொள்ள மணல் தரையில் தண்டால் எடுக்கத் தொடங்கினான். பதினேழாவது முறையாக எழும் போது முகத்தில் ஈரமாக ஏதோ உணர்ந்து தலை நிமிர்ந்தான். முகத்திற்கு நேராக முகம் வைத்து மூச்சு விட்டுக் கொண்டிருந்தது ஒரு கரிய நாய். சங்கத்தில் பார்த்த அதே தினேஷ்குமார்.

அடுத்து நிகழ்ந்தவற்றை விவரிக்கப் புலவரின் தமிழ் போதாது.

நரன் ஐயோ எனவில்லை, நாய் வள் எனவில்லை. வாசுவும் நோக்க வைரவரும் நோக்க அங்கே வாய்ச்சொற்கள் பலனிலாது போயின.

கம்பன் வாசுவைப் பார்த்திருந்தால் 'எடுத்தது இற்றது' என்றெல்லாம் எழுதாமல், 'பல் கண்டனன் பாதம் கண்டனன் அன்ன' என்று வாசுவின் வேகத்துக்கு மாற்றுக் குறைவாகவே ராமனின் வில்முறித் திறனை வர்ணித்திருப்பார். புறநானூற்றுப் பட்டினிப் புலவர் யாராவது பார்த்திருந்தால், 'பரியுட னிரியும மரியதுஞ் சரியுமே' என்று புரியும்படி விவரமாகப் பாடியிருப்பார். கண்ணதாசன் பார்த்திருந்தால் 'வாசுக்கென்ன வேலி' என்று பாடியிருப்பார், அல்லது 'கண்ணெதிரே தோன்றிநாய் கடுமுகத்தைக் காட்டிநாய்' என்றும் பாடியிருக்கக் கூடும். வைரமுத்து பார்த்திருந்தால் 'கண்கள் கோப ஜன்னல், கால்கள் ராஜ மின்னல்' என்று பாடியிருப்பார். வாலி பார்த்திருந்தால் 'இட்டாலக்கடி உய்!' என்று பாடியிருப்பார்.

கற்பனைக்குக் கட்டுப்படாதவனாக ஓடத் தொடங்கினான் வாசு. இதைச் சற்றும் எதிர்பாராத நாய், சுதாரித்துப் பாய்ந்து அவனை அதே வேகத்தில் தொடர்ந்தது. ஒரு கணம் நாய் அவனை நெருங்கிக் காலைக் கவ்விடும் போலத் தோன்றும். மறு கணம் வாசு உயரத்தாண்டல் நீளத்தாண்டல் சாதனைகளை வரிசையாக முறியடித்து வாகை சூடுவான். அவன் நோக்கும் காலை நோக்கும் நாயும், நோக்காக்கால் நைசாய் உறுமிப் பாயும்.

பார்த்துக் கொண்டிருந்தப் பொதுஜனம் உற்சாகமடைந்தது. கைகள் தட்டின. உதடுகள் விசிலடித்தன. குதிரைப் பந்தயம் பழகிய ஒரு சிலக் கண்கள், 'இது போட்டோ பினிஷ்' என்று பதட்டப்பட்டன. ஒரு தாடி, 'வெறிநாய் துரத்தினா வடிவேலும் உசைன் போல்டு தான்' என்று சொறிவுக்கிடையே தத்துவம் பேசியது. அருகிலிருந்தக் காக்கிச்சட்டை, 'இதை என் ஆட்டோல எயிதிக்கவா சார்?' என்றது. ஒரு புடவை அருகிலிருந்த சல்வாரிடம், 'இந்த நாய் வாடகைக்குக் கிடைக்குமா தெரியலியே? தீபாவளிக்கு ஊர்லந்து மாமியார் வராங்க' என்று அக்கறையுடன் விசாரித்தது. ஒரு லுங்கி மற்ற லுங்கிகளிடம் 'இன்னிக்கு அந்தாளு கோயிந்தா.. இன்னான்ற நீ?.. கட்னா வெட்டு ராஜா.. கட்னா மூணுக்கு ஒண்ணு.. வெட்னா ஒண்ணுக்கு மூணு.. வை ராஜா வை' என்று உற்சாகமாக ஐந்து ரூபாய் எறிந்து பெட் கட்டியது.

இடையே, திடீரென்றுக் குறுக்கே வந்த நபர் மீது இடித்து விழுந்து புரண்டு எழுந்தான் வாசு. நபரைப் பார்த்ததும் நாயும் நின்றது.

"என்ன தம்பி, இப்படி ஓடியாறீங்க?" என்றார் நபர்.

"யோவ் சிங்காரம்.. நீதான்யா எனக்கு எமன்.. எருமைக்குப் பதிலா நாயோடு சுத்துறே.. நாய்க்கரடி என்னைத் துரத்துறதை இத்தனை நேரம் பாத்துட்டா இருந்தே? உன்னை முதல்ல சுளுக்கெடுக்கணும்"

"ஐயையோ தம்பி.. தெரியாதுங்களே.. மல்லி ஐயாவோட கார் டைரு பஞ்சராயிடுச்சுங்க.. வர லேட்டாவும்னு உங்க கிட்டேயும் மைதிலியம்மா கிட்டயும் சொல்லச் சொன்னாரு.. அவங்க கோவில்ல இருந்தாங்க.. போய் சொல்லிட்டு வரதுக்குள்ள நாய் ஓடிருச்சுங்க.. அதை எப்படியோ தெரிஞ்சுகிட்டு உங்களைத் துரத்தவிட்டு என் கிட்டே கொணாந்து சேர்த்ததுக்கு ரொம்ப நன்றிங்க. கஸ்டமரோட நாய்.."

"இப்ப மட்டும் ஏன்யா கரடி ரெண்டடி விட்டு செலயாட்டம் நிக்குது?"

"வசியம் தம்பி, வசியம்"

"வசியமா?"

"தம்பி.. உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்றேன். சிறுவசியம் பெருவசியம்னு ரெண்டு இருக்குங்க. நாய் துரத்துதுனு வைங்க. உடனே ஓடக்கூடாது. அதுக்குப் பதிலா நின்னு நிதானமா நாயுருவி இலை, எருக்க இலை ரெண்டையும் கசக்கி நாய் முகத்தில எறிஞ்சீங்கன்னா அந்த வாடையில நாய் அடியெடுக்க முடியாம மயங்கிரும். இது சிறுவசியம்"

"யோவ் சிங்காரம்.. உனக்கு வெங்காயம்னு பேர் வச்சிருக்கணும்யா. இந்த நாயோட பல்லைப் பாத்த பிறகும் பச்சிலை மூலிகைனு பேசுவியாய்யா நீ? அடங்கிடுமோனு உயிரையும் அவுந்துருமோனு பேன்டையும் பிடிச்சுக்கிட்டு நாய்க்குப் பயந்து நானே பேயாட்டம் ஓடுறப்ப, எருக்க இலைக்கு எங்கய்யா போவேன்? நாயுருவின்னா என்னான்னே தெரியாதேய்யா? நின்னு ரெண்டுத்தையும் கசக்கி எறியுற மட்டும், நாய் என்னா பாத்துட்டா நிக்கும்? அப்படியே நீ சொல்றாப்புல கசக்குனா, அந்த வாடையில நானே மயக்கம் போட்டுருவேன்யா. என்னய்யா ரீல் வுடுறே? ஐடியா குடுக்குற மூஞ்சியைப் பாரு. சரி, அது என்னா பெரு வசியம்?"

"இதாங்க" என்று சிங்காரம் தன் பையிலிருந்து ஒரு கல்லை எடுத்தான். "தம்பி.. நாய்க்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? நாம நாயைக் கல்லால அடிக்கலாம். ஆனா நாய் நம்மளைக் கல்லால அடிக்க முடியாது. நாய் பல்லைக் காட்டினா நாம பயந்துடறோம். நாம கல்லைக் காட்டினா நாய் பயந்துரும். இந்தாங்க, சும்மா ட்ரை பண்ணுங்க" என்று வாசுவிடம் கல்லைக் கொடுத்தான் சிங்காரம். "சும்மா ஓங்குங்க சொல்றேன்.."

வாசு கல்லெறிவது போல் கை ஓங்கியதும், தினேஷ்குமார் முனகிப் பயத்துடன் அடங்கி உட்கார்ந்தது. "சிங்காரம்! பிரமாதம்யா.. என்னா தத்துவம், என்னா உண்மை, என்னா டெக்நிக்! கல்லைக் காட்டி ஓங்கினதும் அடங்கிடுச்சே? இதான் பெரு வசியமா? தெரியாமப் போச்சே? நீ பெரிய ஆள்யா"

"இதுக்கும் கேக்கலின்னா குறி வச்சு கல்லை எறிஞ்சுருங்க.. ஒண்ணு அடங்கும், இல்லே ஓடிறும். கவலையே படாதீங்க. கடவுள் ஏன் கல்லானான்? நாயை அடிக்கத்தான்" என்றபடி தன் பையிலிருந்து இரண்டு கற்களை எடுத்து வாசுவிடம் கொடுத்தான் சிங்காரம். "கவனம் தம்பி. ரொம்ப நாளா தேச்சு வழவழப்பா வச்சிருக்கேன். என் கண்ணு ரெண்டையும் உங்க கிட்டே ஒப்படைக்கிறாப்புல.. இந்தாங்க.. கைவசம் வச்சுக்குங்க. அவசியமுன்னா ஒரு கல்லை மூக்குலயும், மத்ததைக் கால்லயும் பாத்து அடிங்க. இதப் பாத்தீங்களா..? இது மூக்குல அடிக்க. இந்தா பாருங்க, தட்டையா இருக்குற இந்தக் கல்லு, கால்ல அடிக்கறதுக்காவத் தேச்சதுங்க. வீசினமுன்னா நாலு கால்ல எதுனா ஒரு கால்லயாச்சும் படுங்க.. ஆண்டவன் நாய்க்கு நாலு கால் படைச்சதும் அதுக்காவத்தான்.. இந்தாங்க, பிடிங்க. நீங்க தைரியமா கோவிலாண்ட போய் மைத்தம்மாவோட பேசிட்டிருங்க.. நான் ஐயா வராரானு பாத்துட்டிருக்கேன்"

"சிங்காரம்.. சிங்காரம்.. உன்னைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்ட இந்தப்பாவியை மன்னிச்சுடு சிங்காரம். நீ ஒப்பற்ற ஞானி சிங்காரம்.." என்று கண்களில் நீர் முட்ட, கற்களை வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டான் வாசு. கைக்கு ஒரு கல்லாக எடுத்து இரண்டு கைகளையும் ஓங்கினான். கையிலிருந்தக் கற்களைப் பார்த்த தினேஷ்குமார், தன் வாலைச் சுருட்டி கால் கட்டி முடங்கிக் கெஞ்சலாய் முனகியது. மறுமுறை உயர்த்த, ஏறக்குறைய அழுதது. கற்களைப் பையில் போட்டு, புது நம்பிக்கையுடன் கோவிலை நோக்கி நடந்தான் வாசு.

    கோயிலருகே மைத்தைக் காணாது சுற்றுமுற்றும் பார்த்த வாசு, தொலைவில் அலையருகே மைத் தனியாக அமர்ந்திருப்பதைக் கவனித்தான். வேகமாக அருகே சென்று "மைத்.. உங்கிட்டே முக்கியமா பேசணும்" என்றான். திரும்பியவள் கண்களில் வழக்கமான காதலைக் காணாமல் கோபத்தைக் கண்டவன் நிதானித்தான். "ஏன் ஒரு மாதிரியா இருக்கே?"

"வாசு" என்று அவனைத் தழுவிக் கொண்டாள். பிறகு விலகி, "உனக்குக் குழந்தைகள் பிடிக்குமா?" என்றாள்.

"ஏன் கேக்குறே?" என்றான் வாசு திகைப்புடன்.

மைத் அப்படிக் கேட்டதன் காரணம் வாசுவுக்குத் தெரியாது. அவன் தினேஷ்குமாருடன் ஓடிக்கொண்டிருந்த போது நடந்து முடிந்த நிகழ்ச்சி.

    வசரமாக வந்த ஜே, தனியாக நின்றுகொண்டிருந்த மைத்தை நெருங்கி "என்ன மைத், எதுக்காக வரச்சொன்னே?" என்றான்.

"நான் வரச்சொல்லலே ஜே, என் அங்கிள் தான் வரச்சொன்னாரு.. அவரைப் பாத்துப் பேசினே இல்லே?"

"ம்" என்றான். "எங்கே அந்த ஆளு? என்ன சொன்னாரு உங்கிட்டே?"

"டயர் பஞ்சராயிடுச்சுனு வர லேட்டாகுமாம். சிங்காரம் இப்பத்தான் சொல்லிட்டு போனாரு.."

"மைத்.. நானே உங்கூட பேசணும்.. அங்க வா.. அலையோரமா மேட்டுல உக்காந்து பேசுவோம்" என்று அவளை இழுத்துக் கொண்டு நடந்தான்.

இருபது அடி நடந்திருப்பார்கள். திடீரென்று ஒரு சிறுவன் "அப்பா! அப்பா!" என்று கூவிக்கொண்டு அவர்களை நோக்கி ஓடி வந்தான். ஏதும் புரியாமல் இருவரும் திரும்பிப் பார்க்க, ஓடி வந்தச் சிறுவன் சட்டென்று ஜேயைக் கட்டிக் கொண்டான். "அப்பா, என்னை விட்டு எங்கப்பா போனே? இதோ வரேன்னு சொல்லிட்டுப் போனியே?" என்றான்.

"என்னது? அப்பாவா? யார் அப்பா? யாருக்கப்பா? யாருப்பா நீ? விடுப்பா" என்று ஜே வலுக்கட்டாயமாகக் கால்களை உதறியதில் கீழே விழுந்தான் சிறுவன். எழுந்து மறுபடி அணுகினான். "அப்பா!"

"ஏய்.. யார்பா நீ?" என்று ஜே எரிச்சலுடன் சிறுவனைத் தடுத்தான். அக்கம்பக்கம் பார்த்தான். யாருமில்லை. "அப்பா.. அப்பா!" என்று குதித்தான் சிறுவன். மைத்தைச் சுட்டி, "இது யாருப்பா? புது அம்மாவா?" என்றான். "புது அம்மா.. ஐ.." என்று மைத்தைக் கட்டிக் கொண்டான். "நீ ரொம்ப அழகா இருக்கே, புது அம்மா"

"அடச்சீ அவளை விடுறா.." என்றான் ஜே.

"இரு ஜே. சின்னப் பையன் கிட்டே எரிஞ்சு விழாதே. தம்பி, யாருப்பா நீ?" என்றாள் மைத் அமைதியாக.

"என்னைப் பாத்தா தம்பி மாதிரியா இருக்கு? எம்பேரு மணி. எனக்குப் பத்து வயசு. இது எங்கப்பா. பீச்சுக்குக் கூட்டிவந்தாரு. இதோ வரேனு சொல்லிட்டு ஓடிட்டாரு"

"பல்லை உடைப்பேன்.. யாருடா அப்பா?"

"நீ தான். நீ தான் அப்பா"

"ஐயையோ.. இந்த வயசுலயே இப்படி அடாவடி பண்றானே? மைத்.. இந்தப் பையனை நான் பார்த்ததே இல்லை.."

"நான் ஏன் பொய் சொல்லணும்? பத்து வயசுப் பச்சைப் பிள்ளைக்கு எங்கயாவது அப்பாவைத் தெரியாம இருக்குமா? நீங்களே சொல்லுங்க புது அம்மா"

"பாத்தியா பாத்தியா.. இப்ப உன்னை அம்மான்றான்.. விடாதே இவனை"

மைத் ஜேயை ஆழமாகப் பார்த்தாள். ஜே பதறினான். "மைத்.. சத்தியமா எனக்குத் தெரியாது. அடப்பாவி.. டேய். டேய்.. யாரு பெத்த பிள்ளையோ நீ? பத்து வயசுலயே இப்படி பாதகனா இருக்கியே"

"அப்பா.. என்னை விட்டுப் போகாதப்பா.. தங்கச்சி அழுவுதுபா"

"என்ன.. தங்கச்சியா?" என்றாள் மைத்.

"ஐயோ, அது வேறேயா?" என்றான் ஜே.

"ரெண்டு தங்கச்சி. ரெட்டையாக்கும். ஷீலா மாலா"

"யாரு.. என்ன.. ரெட்டைத் தங்கச்சியா? டேய்.. டேய்.. எத்தினி பேர்டா கெளம்பியிருக்கீங்க?" என்று ஜே குதித்தான்.

"எங்கப்பா உன் தங்கச்சிங்க?" என்றாள் மைத் கனிவுடன்.

"ஷீலா ஆஸ்பத்திரில இருக்கா. நேத்து அப்பா கோவத்துல அவளை அடிச்சுட்டாரு. மண்டை வீங்கியிருக்கு. இப்பத்தான் டாக்டர் வீட்டுக்குக் கூட்டிப்போனாரு இந்தப்பா.."

"என்ன.. இந்தப்பாவா? பல்லை உடைப்பேன்"

"அதான் நேத்து ஷீலாவோட மண்டையை உடைச்சுட்டியேப்பா.. இன்னிக்கு என் பல்லை உடைக்கப் போறியா? ஏற்கனவே எனக்கு பல்லு கம்மி.."

"ஆ! இப்படிப் பேசுறானே? ஐயையோ.. எனக்கு எதுவுமே தெரியாது. சனியன். மூஞ்சைப் பாரு"

"உன் இன்னொரு தங்கை மாலா எங்கேப்பா?" என்றாள் மைத் அன்புடன்.

"புது அம்மா. உன் குரல் தேனாட்டம் இருக்கு.. நீ ரொம்ப நல்லவ"

"டேய்.. டேய்.. நிறுத்துடா. கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுடா சில்லறை. எங்கடா உன் தங்கை? கதை வுடறான்"

"மாலா.." என்று பையன் கூச்சலிட, அண்மையில் இருந்த ஒரு சில பெண்கள் குழம்பித் திரும்பிப் பார்த்தனர். பையன் தொடர்ந்து கூப்பிட்டான். சில நிமிடங்களில் ஒரு சிறு பெண் கோவிலருகிலிருந்து ஓடி வந்தாள். ஏழெட்டு வயதிருக்கும். "அப்பா.. அப்பா" என்று ஜேயைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் குதித்தாள். "எங்கப்பா போனே? இதோ வரதா சொல்லிட்டு எங்களை அந்தக் கடை வாசல்ல.. எனக்குப் பயமா இருந்துச்சுபா"

"என்னங்கடா.. குடும்பத்தோட கிளம்பிட்டீங்களா? யாருடீ அப்பா?"

"நீ தான். நீ தான் அப்பா"

"சனியங்களா.. எனக்குக் குழந்தைங்கள்னாலே ஆவாது.. அதுவும் உங்களை மாதிரி ஊரை ஏமாத்துற.." என்ற ஜேயின் கால்களைக் கட்டிக் கொண்டாள் மாலா. "அப்பா!" என்று தன் மூக்கை உறிந்து ஜேயின் பேன்டில் துடைத்தாள்.

"ஐயையோ.. புதுப் பேன்ட்ல சளியைத் தடவுதே சனியன்.. எந்திரிடி.. யாருடி நீ?"

"ஜே.. என்ன இது?" என்றாள் மைத் கடுப்புடன்.

"ஐயையோ மைத்.. இந்த சனியனுங்க யாருனே எனக்குத் தெரியாது. இதுக்குத்தான் நான் குழந்தைங்களே வேணாம்னு இருக்கேன். குழந்தைங்களா இதுங்க... ஏய்.. அரை டிகெட்.. நவுறுடி.. உங்கண்ணனை இழுத்துக்கிட்டு எங்கனா ஓடு.. இந்தா அஞ்சு ரூவா.. ஐஸ்க்ரீம் வாங்கித் தின்னுங்க போங்க.. ஆளை விடுங்க.."

"அப்பான்னா அப்பா தான்" என்று ஐந்து ரூபாயைப் பிடுங்கிக் கொண்டான் பையன்.

அதற்குள் ஒரு ஜீன்ஸ் பெண் வேகமாக ஓடிவந்தாள். ஜே, மைத் இருவரையும் கும்பிட்டாள். "மன்னிச்சுருங்க.. இதுங்க ரெண்டும் என் பிள்ளைங்க. சினிமால நடிக்கிறாங்க.. குழந்தைங்களை வெறுக்குற அப்பாவோட வசனம் பேசணும்.. டயலாக் ட்யூடர் இப்படி தற்செயலா யாரையாவதுப் பார்த்துப் பேசினா தைரியமா இயல்பா நடிக்க வரும்ணு ஐடியா குடுத்தாரு.. தொந்தரவுக்கு மன்னிச்சுருங்க" என்றபடி இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு போனார்.

ஜே நிம்மதியுடன் "அஞ்சு ரூவாய சுட்டுகிட்டுப் போயிட்டான் பாத்தியா மைத்? எப்படியெல்லாம் கிளம்பிடறாங்க நாட்டுல.." என்றான்.

மைத் பதில் சொல்லவில்லை. எதுவும் பேசாமல் மௌனமாக நடந்தாள்.

"என்ன மைத்.. பேச மாட்டேங்குறே" என்று பத்து முறை கேட்டதும், மைத் வெடித்தாள். "குழந்தைங்க பிடிக்காதுனு சொன்னியே?"

"ஆமாம்.. என்ன இப்ப?"

"என்ன இப்பவா? உன் உண்மையான குணம் தெரிஞ்சிடுச்சு. குழந்தைங்க பிடிக்காதுன்றத ஏன் மறைச்சே? பச்சப் பிள்ளங்களை சனியன்னு திட்டறப்பவே நினைச்சேன்"

"சனியனைச் சனியன்னு திட்டாம எப்படித் திட்டுறது மைத்? அந்தக் குழந்தைங்களைத் திட்டினதால என் குணம் மோசமாயிருமா? நீ கூடத்தான் என் கிட்டே உண்மையை மறைச்சே.."

"என்ன சொல்றே?" மைத் தீர்க்கமானாள்.

"ரெண்டு பேரைக் காதலிக்கிற உண்மையை"

"அதனால?"

"ஒரு பொண்ணு.."

"ஸ்டாப் இட். என்ன சொன்னே? ஒரு பொண்ணா..? பொண்ணுன்னா அதெல்லாம் கூடாதா? ஆம்பிளங்கனா பரவாயில்லையா? ஷேம் ஆன் யூ" என்று பொரிந்தாள். "நீ சொல்றது சரிதான். உன்னையும் சேத்து காதலிச்சிருக்கக் கூடாது. ஐ டோன்ட் லவ் யூ. கெட் லாஸ்ட்"

"ஐயோ மைத்.."

"போதும் ஜே. எப்படியிருந்தாலும் நாளைக்கு இது நமக்குப் பிரச்சினையா முடிஞ்சிருக்கும். உனக்குக் குழந்தைங்களையும் பிடிக்கலே. பொண்ணுன்னாலும் கீழ்த்தட்டுல பாக்குறே. ப்லீஸ். லீவ் மீ" என்று வேகமாக அலைகளைப் பார்த்து நடந்தாள். சிறிது உலாத்திவிட்டு ஒரு மேட்டில் உட்கார்ந்தபடி அலைகளைக் கவனித்து சற்று அடங்கினாள்.

    "மைத்.. உன்னைத்தான். கேக்குறேன் இல்லே? ஏன் குழந்தைங்க பிடிக்குமானு கேட்டே?" என்று வாசு அவளை சற்றே உலுக்க, "ஒண்ணுமில்லே" என்றாள்.

"மைத்.. உங்கிட்டே ஒண்ணு கேக்கணும்.. நீ என்னையும் ஜேயையும்.." என்றபடி அவளருகே அமர்ந்தான்.

"ஓவர். ஜேயைப் பத்தி இனிமே பேசாதே" என்றாள் மைத். வாசுவின் கைகளை இழுத்துக் கொண்டாள். "எவ்வளவோ கனவுகளைத் தேக்கி வச்சிருந்தேன். ரெண்டு கணவன், நாலு குழந்தைங்க, ஆளுக்கு ஒரு நாய்.. ஹ்ம்ம். இப்ப ஒரு கணவன்னு ஆயிடுச்சு. அதான், உனக்குக் குழந்தைங்க பிடிக்குமானு கேட்டேன்"

வாசு குளிர்ந்தான். இன்றைக்கு எல்லாம் கனிந்து வருவதாக உணர்ந்தான். முதலில் நாய் வசியம். இப்போது மைத் வசியம். குளிர்ச்சியில் மைத் கேட்டதைச் சரியாகக் கவனிக்கவில்லை. மைத் பேச்சுவாக்கில் ஏதோ நாய் என்றது போல் தோன்றியது. "குழந்தைங்க தானே? அதுக்கென்ன அவசரம்?" என்றான்.

"ரைட். கல்யாணத்துக்கப்புறம் குழந்தைங்க. இப்ப முதல்ல நாய் வளப்போம். ஐ லைக் இட்" என்றாள். அவன் கைகளைப் பிணைத்துக் கொண்டாள். "நல்ல சகுனம் வாசு. நாய்னதும் பாரேன்.."

பார்த்தான். அவர்களுக்கு பத்தடி தொலைவில் அலைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த கறுப்பு நாய் நின்று இவர்களைப் பார்த்தது. பல்லைக் காட்டியது. தன்னைக் கிண்டல் செய்துச் சிரித்தது போல் பட்டது வாசுவுக்கு. "தினேஷ்குமார்!" என்றான் உரக்க.

"யாரு?"

"உனக்குத் தெரியாது" என்று கைகளை விடுவிக்க முயன்றான் வாசு. "ஏன் கையை இழுக்குறே?" என்றாள் மைத்.

தினேஷ்குமார் நெருங்கியது. "உர்ர்" என்றது.

"இந்த நாய் நம்மளைக் குதறிடும் மைத். கையை விடு" என்று உதறினான் வாசு. "ஆனா நீ பயப்படாதே. நானிருக்கேன். எனக்கு நாய் வசியம் தெரியும்" என்று பையிலிருந்தக் கற்களை எடுத்து ஓங்கினான்.

"வாசு.. நிறுத்து.. வாயில்லாப் பிராணியைக் கல்லால அடிக்காதே.."

"இதா வாயில்லாப் பிராணி? இதோட பல்லைப் பாத்துட்டுப் பேசு" என்று இன்னும் ஓங்கினான்.

நாய் நிற்கவில்லை. வாலை ஆட்டியபடி வேகமாக அவர்களை நோக்கிப் பாய்ந்து வந்தது.

ஒரு கல்லை நாயின் முகத்தைக் குறி வைத்து வீசினான் வாசு. கல் குறி தவறி முகத்தோரமாக உரசி விழுந்தது. லேசாக முனகிய நாய் வாலை ஆட்டியபடி இன்னும் நெருங்கியது. அடுத்தக் கல்லை எடுத்தான். காலுக்கு குறி வைத்தான்.

"வாலை ஆட்டுது வாசு.. ஸ்டாப் இட். என்ன இது? பாகெட் நிறையக் கல்லோட ரெடியா வந்திருக்கே? நாய் அடிக்குறது வழக்கமோ?"

"உனக்கு எதுவும் தெரியாது மைத். இந்த தினேஷ்குமார் சாதாரண பிராணி இல்லே.." என்று கால்களைக் குறிபார்த்து வீசினான். கல் சரியாக அதன் இடது கால்களில் பட்டுத் தெறிக்க, நாய் வலியுடன் குரைத்துத் தடுமாறி விழுந்தது. பிறகு மெள்ள எழுந்து இருவரையும் பார்த்தது. அடிபட்ட ஊனத்துடன் மெள்ளத் தேய்த்து நடந்து அவர்களருகே வந்தது. மைத்தை நெருங்கி அவள் கைகளை முகர்ந்து லேசாக நக்கியது. வாசுவை ஏக்கத்துடன் பார்த்தது.

"ஏய்.. ஓடு" என்றான் வாசு பயத்துடன்.

நாய் மறுபடி மைத்தை நக்கிவிட்டு, தடுமாறித் தடுமாறி அலைகள் அருகே சென்றது. ஒரு முறை திரும்பி அவர்களைப் பார்த்தது. புரண்டு விழுந்தது.

மைத் துடித்து எழுந்தாள். "வாசு.. யூ ப்ரூட்"

"ஐயையோ.. மைத்.. இது அத்தனையும் நடிப்பு. தேவர் பிலிம்ஸ்ல இருந்த நாய். இப்ப படம் எடுக்குறதில்லேன்றதுனால இப்படி பீச்ல சுத்திட்டு இருக்கு. சத்தியமா சொல்றேன், என்னைத் துரத்தியெடுத்த நாய்.."

"சே! என்ன மனுசன் நீ? ஆதரவில்லாத உயிரை இப்படித் துன்பப் படுத்துறியே?"

"ஐயோ மைத்.. ஆதரவாவது மண்ணாவது.. சொன்னாக் கேளு.. ஆஸ்காருக்குப் போக வேண்டிய நாய் இது.. நம்பாதே.. எல்லாம் வேஷம்". சிங்காரத்தை நினைத்துக் கொண்டான். "டேய் வெங்காயம்.. உன்னை என்ன செய்யுறேன் பாரு"

"யாரு வெங்காயம்?" என்று மைத் கேட்டு முடிப்பதற்குள் ஒரு வாலிபன் வேகமாக வந்து, கீழே கிடந்த நாயைக் குழந்தை போல் இரு கையாலும் அள்ளி எடுத்தான். அலையில் இறங்கி நாயின் முகத்தில் நீர் தெளித்தான். வெளியே கொண்டு வந்து கிடத்தித் துடித்து அழுதான். "ஐயோ.. ஒரு நிமிசம் உன்னை விட்டுப் போனா இப்படி அடிபட்டு கிடக்கிறியே!" என்று புலம்பினான். "ஏன் சார், கல்லாலயா அடிச்சீங்க? பெரிய கல்லா சார்?" என்றான் வாசுவிடம்.

"யோவ்.. என்னைத் துரத்தி எடுத்துச்சுயா உன்னோட நாய். அப்புறம் என் மேலே பாயுற மாதிரி வரப்ப நான் என்னய்யா செய்ய முடியும்? வேணும்னா ஐம்பது ரூவா நஷ்ட ஈடு குடுத்துடறேன்.. இந்தா"

மைத் அவனை நெருங்கி, "மிஸ்டர்.. ரொம்ப சாரி.. இது என் தப்பு. உடனே நாயை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டுப் போங்க.. என்ன செலவானாலும்.." என்று அவனைப் பார்த்தாள். "உங்களை எங்கியோ.."

"நேரமில்லே மேடம்.. நான் உடனே ஆஸ்பத்திரிக்குப் போகணும்.. சார்.. உங்க தாராள மனசுக்கு ரொம்ப நன்றி. என்னோட நாய் குடுத்தத் தொந்தரவுக்கு மன்னிச்சுருங்க" என்று நாயை எடுத்துக் கொண்டு ஓடத் தொடங்கினான். நாலடி ஓடிவிட்டுத் திரும்பி வந்து வாசுவின் கையிலிருந்த ஐம்பது ரூபாய் நோட்டை உருவிக்கொண்டு மீண்டும் ஓடினான்.

"விட்டது சனி.. வா மைத்" என்றான் வாசு.

மைத் அவன் கைகளை உதறினாள். "நாய் மேலே கல்லெறிய உனக்கு வெட்கமாயில்லே வாசு?"

"மைத்.. விவரம் தெரியாமப் பேசாதே"

"எல்லாம் தெரிஞ்சுதான் பேசுறேன். கைல கல்லோட அலையுறதைப் பாத்தாலே தெரியுதே விவரம்? எங்கெங்கே நாய் கிடைக்கும் அடிக்கலாம்னு அலைவே போலிருக்கு. உன் முகத்திலயே இனி முழிக்க மாட்டேன்.." என்று நடந்தாள்.

"யா? உன்னைக் கல்யாணம் கட்டிக்கிட்டு அரை டஜன் நாயுங்களுக்குத் தினம் பயந்துத் தண்டம் அழுவணும்னு எனக்கு மட்டும் தலையெழுத்தா? நானும் உன் முகத்தில முழிக்கலே" என்று வேகமாக எதிர் திசையில் நடந்தான்.

    திரே உட்கார்ந்திருந்த மைத்தை அமைதியுடன் பார்த்துக் கொண்டிருந்தார் அன்புமல்லி.

"போனாப் போவுது விடு மைதிலி. எனக்கு அப்பவே தெரியும் அந்தப் பசங்களைப் பத்தி. ஆனா நீ காதலிக்கறதா சொன்னதால.."

"அங்கிள். நீங்க சொன்னது ரொம்ப சரி. இனிமே யாரையுமே காதலிக்கப் போறதில்லே. ஆம்பிளைங்க எல்லாருமே ஏமாத்துக்காரங்க.."

"இப்படித்தான் என் மருமகன் ஒருத்தன் காதல் வேணாம்னு கவிதை எழுதிட்டிருந்தான்"

"என்ன அங்கிள், என் பிரச்சினைக்கு பதிலா கண்டவனைப் பத்திப் பேசுறீங்களே?"

"கண்டவன் இல்லம்மா, கபிலன். என் ஒண்ணு விட்ட அக்கா பையன்.. அவன் கதை சொல்லியிருக்கேனோ?"

"என் கதையே எப்படி முடியும்னு தெரியலே, இதுல கண்டவன்.."

"கபிலன்மா கபிலன்"

"அங்கிள்.. காதல்ன்றது இனிமே என் அகராதியிலயே கிடையாது" என்று மைத் சொல்லி முடிக்கவும், சிங்காரம் ஒரு வாலிபனுடன் அருகே வரவும் சரியாக இருந்தது.

வாலிபன் நேராக மைத்தைப் பார்த்தான். படபடவென்றுப் பேசினான். "மேடம்.. சாரி, அவசரமா ஓட வேண்டியதாப் போச்சு. என்னோட நாய்க்கு என்ன ஆச்சோனு ஒரே பயம், அதான். இப்ப ஒண்ணுமில்லேனு வெட் சொல்லிட்டாரு. கால்ல லேசாக் கட்டு போட்டிருக்காரு. ரெண்டு நாள்ல சரியாயிடும். உங்களுக்கும் உங்க ஹஸ்பென்டுக்கும் - எங்கே அவர் - தொந்தரவு கொடுத்ததுக்கு மன்னிச்சுருங்க. அதைச் சொல்லத்தான் வந்தேன்"

"இவளுக்கு இன்னும் கல்யாணம் ஆவலே" என்றார் அன்புமல்லி.

"ஓ.. அப்ப உங்களுக்கும் உங்க காதலருக்கும்.."

"ஹி இஸ் நாட் மை லவர் ப்ரென்ட ஆர் எனிதிங்" என்றாள் மைதிலி.

"ஓ.. அப்ப உங்களுக்கு.."

"தம்பி.. யாருப்பா நீ? சும்மா பேசிட்டிருக்கியே.. உக்காரு" என்றார் அன்புமல்லி.

"நன்றி சார். எம்பேரு ரகுராம். சுருக்கமா ரகுனு கூப்பிடுவாங்க. நீங்க மேடம்?"

"என் பேர் மைதிலி"

"என் பேர் அன்புமல்லி.. சுருக்கமா"

"இருக்கட்டும் சார். மேடம், உங்களைச் சுருக்கமா மைத்னு கூப்பிடவா?"

மைத் குளிர்ந்தாள். "இதுக்கு முன்னால் உங்களை.."

"பாத்திருக்கோம் மிஸ் மைத். காலைல உங்க பேரைக் கேட்டப்ப, அழகான குரல்ல, தேன் சொட்டச் சொட்டச் செருப்பு பிஞ்சிரும்னு சொன்னீங்க. ஆனா அது உன் பேரா இருக்காதுனு அப்பவே நெனச்சேன் மைத்"

சிரித்தாள். "உங்க நாய்க்கு அடிபட நானும் ஒரு காரணம்.. ப்லீஸ் என்னை மன்னிச்சுருங்க"

"நோ நோ. அப்படி நடக்கலின்னா ரகுராம்-மைதிலி சேர்ந்திருக்க முடியுமா? ஐ மீன் நாம இப்படி அறிமுகமாகியிருக்க முடியுமா? தட்ஸ் ஆல் ரைட். பேர் பொருத்தம் எப்படி? அட்டகாசமா இல்லே?"

"நாய்னா உங்களுக்குப் பிடிக்குமா?"

"மை டியர் மைத். எனக்கு உலகத்துல ரெண்டே ரெண்டு தான் பிடிக்கும். ஓகே, மேக் இட் மூணு. ஒண்ணு காதல். இன்னொண்ணு குழந்தைங்க. மூணாவது நாய். பொதுவா எல்லாமே ப்லூரலா வேணும் எனக்கு. பல குழந்தைகள். பல நாய்கள். ஆனா காதல் மட்டும் சிங்குலர். ஒரே காதல். உனக்கு எப்படி வசதி?"

"எனக்கும்" என்ற மைதிலி சிரித்தாள். "ரொம்ப விட்டா பேசுறீங்க ரகு"

"விட்டா ரொம்ப பேசுவான் போலிருக்கே.." என்று குறுக்கிட்டார் அன்புமல்லி. "தம்பி.. உங்க ஊர் எது? அப்பா அம்மா யாரு? என்ன படிச்சிருக்கீங்க? என்ன வேலை? சும்மா காதல் நாய்க்குட்டினு பட்டாசு வெடிச்சா எப்படி? என்னா விசயம்ன்றேன்.."

"ஓல்ட் மேன். ப்லீஸ் டோன்ட் பாதர்" என்ற ரகு, மைத்தின் கையைப் பிடித்து எழுப்பினான். "மைத். இனிமே என்னை ஒருமையில கூப்பிடு. நீங்கனு கூப்பிட்டா நெருக்கமா தோணலே. வாயேன், பேசிட்டே போவோம்?" என்று அவளுடன் நடந்தான். சற்றுத் தொலைவு நடந்ததும், தலையைத் திருப்பி அன்புமல்லிக்குக் கண்களால் நன்றி சொன்னான்.

சிங்காரம் டேபிளைச் சுத்தம் செய்து, "வேறெதும் வேணுமா சார்?" என்றான்.

"சிங்காரம்.. உனக்கு சிலை வைக்க யாராவது நன்கொடை சேக்குறாங்கனா சொல்லு.. நானே முழுச் செலவையும் எடுத்துக்குறேன்"

"உங்களுக்கு உதவ முடிஞ்சதே சந்தோசம்யா.."

"விவரமெல்லாம் நான் கேட்கப் போறதில்லே.. எத்தனை செலவாச்சு சொல்லு, மேலயே கொடுத்துடறேன்"

"நாய், சினிமா எக்ஸ்ட்ரா, குழந்தைங்க.. ஐயா.. நாளைக்குக் கணக்குப் போட்டுச் சொல்றேன்யா.. அவசரம் இல்லே"

"நல்லது சிங்காரம், நல்லது" என்ற அன்புமல்லி மெள்ள அகன்றார். காரை எடுக்கும் பொழுது ரகுவும் மைத்தும் நெருக்கமாக இன்னொரு கார் மேல் அமர்ந்திருப்பதைக் கவனித்தார். 'காதல் வாழ்க' என்று வாழ்த்தியபடி வெளியேறினார்.

முற்றும்.

2012/10/20

மைத் மை டியர்

2


◄◄   1    த்து நிமிடங்களுக்கு முன்னால் நடந்தது அன்புமல்லிக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

வேர்கடலைச் சங்கப் பார்க்கிங் தளத்தில் அனேகமாக எல்லா இடங்களிலும் வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன. நுழைவாயிலருகே இருந்த ஒரு இடத்தைப் பார்த்த இரண்டு சிவப்புக் கார்கள் ஒரே நேரத்தில் அந்த இடத்தை ஆக்கிரமிக்க முனைந்து லேசாக உராய்ந்து நின்றன. உள்ளிருந்து இறங்கிய இரண்டு வாலிபர்கள் முதல் வேலையாக ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டனர். "நான் தான் முதலில் வந்தேன்" என்று வாதிட்டனர். சிவப்புச் சட்டைக்காரன் சற்றுத் தயங்கி, "ஏய்..நீ வாசு இல்லே?" என்றான். நீலச்சட்டை நிதானித்தான்.

"நெய்வேலி டௌன்ஷிப்..?" தொடர்ந்தான் சிவப்புச்சட்டை.

"ஆமாம்.."

"டேய்.. என்னைத் தெரியலே? ஜே..?"

"ஜே? மை காட்! ஜே! ஜோதிக்கா பையன்? பத்துப் பதினஞ்சு வருசம் இருக்கும்ல பார்த்து? சாரி, அடையாளமே தெரியலேடா, எப்படி இருக்கே?"

ஒருவரையொருவர் அரைகுறையாகத் தழுவி விலகினர். "சாரி.. நான் பேக் பண்ணிடறேன்.. நீ எடுத்துக்க இந்த இடத்தை" என்றான் வாசு.

"நோ.. நோ.. நீ தான் முதலில் வந்தே.. யூ டேக் இட்"

"நீ தாம்பா வந்தே.. நான் சண்டை போட்டதுக்கு மன்னிச்சுரு.. ப்லீஸ் ஜே, எடுத்துக்க.." என்ற வாசு தன் காரைப் பின்வாங்கி வேலியோரமாக ஒதுக்கி நிறுத்திவிட்டு வந்தான். ஜேயிடம், "அஞ்சு நிமிசத்துல ஏதாவது இடம் காலியாகும், நான் பார்க் பண்ணிடறேன், அதுவரை பேசுவோம்.. எங்க வேலை பாக்குறே?" என்றான்.

"விப்ரோல எம்பெடட் டெஸ்டிங் க்ரூப் லீடர்"

"அக்செஞ்சர்.. ஈஆர்பி டெஸ்டிங்"

சிரித்தார்கள். "உள்ளே போய் பேசுவோம்... உனக்கு மேரேஜ் ஆயிடுச்சா?" என்றான் ஜே.

"இல்லப்பா.. உனக்கு?"

"இல்லே... பட் ஐ'ம் இன் லவ்"

"நானும்.."

"வெரி குட். இங்கே எங்க வந்தே?"

வாசு பதில் சொல்வதற்குள் வாயிலருகே வந்துவிட்டார்கள். சுழற்கதவருகே உறுமல் கேட்டுத் தயங்கினான் வாசு. மூன்றடி உயர, கறுப்பு நிற ஜெர்மன் செபர்ட் நாய் ஒன்று கால்களை ஊன்றிக் கண்களைத் தீட்டி உறுமிக் கொண்டிருந்தது.

"யாருப்பா கரடியை உள்ளே விட்டது?" என்றான் வாசு.

அதற்குள் அவசரமாக உள்ளிருந்து ஓடி வந்தப் பணியாள், "மன்னிச்சுருங்க. இது கஸ்டமரோட நாய். என்னைக் கவனிச்சுக்கச் சொன்னாங்க.. அவசரமா உள்ளே போனதால இங்கே நிறுத்திட்டேன்.." என்றபடி நாய்க் காலரைப் பிடித்துக் கொண்டு நின்றான். "நீங்க உள்ளே போங்க. தினேஷ்குமார் ரொம்ப சாது"

"கரடியைப் பத்திக் கேட்டா தினேஷ்குமாருன்றே? யார்யா அவன்?"

"நாய் பேருதாங்க. நல்லா இல்லே? ஒண்ணும் செய்யமாட்டான், வாங்க"

"நாய்க்குத் தெரியுமாய்யா ஒண்ணும் செய்யக்கூடாதுனு? தினேஷ்குமாருனு பேரு வச்சவன் தினசரி சோறு வச்சானாய்யா? விரதம் கிடந்த நாய் மாதிரி இருக்குது.." என்று பொருமினான் வாசு. "காலம் கெட்டுப் போச்சுப்பா. நாய்னா ஜிம்மி பப்பினு பேர் வச்சுகிட்டு ஏதோ குட்டியா காலை நக்கிட்டு இருக்கும்.. ஏன்யா.. இந்த நாய்க்கு நாக்கையே காணோமே? எல்லாம் பல்லா இருக்குதே? அந்தப்பக்கம் கூட்டிட்டுப் போய்யா கொஞ்சம். எனக்கு நாய்னா பயம்.. நாட்டுல கரடியை எல்லாம் இப்ப நாய்ன்றாங்க.."

"தினேசு, வா" என்று பணியாள் நாயை இழுத்துக் கொண்டு நடக்க, ஜே தொடர்ந்தான். "வாசு, இங்கே எங்க வந்தேனு சொல்லலியே நீ?"

"அதுக்குள்ள நாய் விவகாரமாயிடுச்சு. அது பெரிய கதை. நான் லவ் பண்றேன்னு சொன்னேனில்லே? என் ஆளோட மாமா, குடும்ப நண்பராம், இங்கே இருக்காரு இப்ப. அவரைப் பாத்துப் பேசச் சொன்னா.. அவர் சம்மதம் இல்லாம கல்யாணம் நடக்காதுன்றா.. அதான் வந்தேன்.. அவரு உள்ளே இருக்காரா கேட்டுருவோம் வா" என்றபடி உள்ளே சென்ற வாசுவைத் தொடர்ந்தான் ஜே.

அடுத்த ஒரு நிமிடத்தில் இருவரும் வெளியே வந்துத் தீவிரமாக வாக்குவாதம் செய்யத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் வாசு ஜேயை நெட்டித் தள்ளிவிட்டான். விழுந்து சுதாரித்த ஜே, வாசுவைத் தாக்க விரைந்தான்.

இதையெல்லாம் பார்த்து அதிசயித்தப் பணியாள், நாயை அருகிலிருந்த காரருகே கட்டிவிட்டு வேகமாக வந்தான். "சார்.. சார்.. என்னாச்சு? சுமுகமா பேசிட்டிருந்தீங்க.. உள்ளே போய் ஒரு நிமிசத்துல இப்படி ஓடியாந்து அடிச்சுக்கறீங்களே?" என்று இருவரையும் பிரித்தான்.

சற்று அமைதியான ஜே, "வாசு.. நாம ரெண்டு பேருமே மைத்தைக் காதலிக்கிறோம்; அவளும் நம்மைக் காதலிக்கிறா. ஒருவேளை நம்ம ரெண்டு பேருல ஒருத்தனை செலக்ட் பண்ண முடியாம, அவ அங்கிள் கிட்டே பேசச் சொல்லியிருக்கலாம். மாமாக்காரன் என்னதான் சொல்றானு கேப்போம். அவரு யாரை செலக்ட் செய்யுறாரோ அவங்களே மைத்தைக் கட்டிக்கட்டும்.. மே த பெஸ்ட் மேன் வின்" என்றான்.

"டீல்" என்ற வாசு, உடைகளைச் சீராக்கிக் கொண்டான். "சாரி ஜே, ஒரு பெண்ணுக்காக நாம சண்டை போடுறது சரியில்லே".

"இங்கே வாப்பா" என்று பணியாளை அழைத்தான் ஜே. "இந்தா" என்று அவனிடம் இருபது ரூபாய் கொடுத்தான். "எங்க சண்டையைப் பிரிச்சதுக்கு".

"நன்றிங்க. டேபிள் ரிசர்வ் செஞ்சிருக்கீங்களா?"

"இல்லே. அன்புமல்லினு சங்க மெம்பர் ஒருத்தரைப் பாக்கணும்.. எங்க உக்காந்திருக்காருனு தெரியுமா?"

"மல்லி சாரா? நல்லாத் தெரியும். வாங்க, நானே கூட்டிப் போறேன். என் பேரு சிங்காரம். நான் தாங்க அவருக்கு ஆல் இன் ஆல் இங்கே. இப்ப ரெண்டு மூணு இடம் கிளியராயிடுச்சு பாருங்க. நீங்க போய் காரைப் பார்க் பண்ணிட்டு வாங்க" என்றான் பணியாள்.

ஆமோதித்துச் சென்ற வாசு, சில நொடிகளில் அலறியடித்துத் திரும்பினான். "யோவ் சிங்காரம்.. என்னய்யா நீ? கரடியை என் கார் கிட்டே கட்டி வச்சிருக்கே? மேலே பாஞ்சிருச்சுயா.. கீழே விழுந்து கார்ல மோதி பல்லு ஒடஞ்சிடுச்சு"

"ஐயையோ.. வாயில்லாப் பிராணி.. தினேசு" என்று ஓட முனைந்த சிங்காரத்தை நிறுத்தினான் வாசு. "யோவ்.. உடைஞ்சது என் பல்லுயா.. நான் தான் பல்லில்லாப் பிராணி இப்ப.. வாய் கூட கிழிஞ்சிருச்சு.. புசு புசுன்னு வீங்க ஆரம்பிச்சுடுச்சு பாருய்யா"

"மன்னிச்சுருங்க.. வேலியோரமா கட்டினேன்.. பக்கத்துல உங்க கார்னு தெரியாதுங்க.. இதா விலக்கிடறேன்.. நீங்க பார்க் பண்ணி உள்ளாற வந்து முகம் கழுவிக்குங்க.. லேசாத்தான் அடிபட்டிருக்கு, சரியாயிரும்" என்று நாயை இழுத்து வர ஓடினான் சிங்காரம்.

    அனுமதி கோராமல் எதிரே வந்தமர்ந்த இருவரையும் வியந்து பார்த்தார் அன்புமல்லி. உள்ளுக்குள் யூகம் உதற, "யாரு நீங்க?" என்றார்.

"அங்கிள்.. நான் ஜே, ஜோதிக்கா மகன்.."

"நீங்க?" என்றார் மற்றவனிடம்.

பெயர் சொன்னான்.

"ராமுவா..?"

வேகமாகத் தலையசைத்து மறுபடியும் பெயர் சொன்னான்.

"பாபுவா?"

ஜே தலையிட்டு, "வாசு.. சந்தானம் மாமா புள்ள" என்றான்.

"ஏன் அடிக்கடி பேர் மாத்துறான்?" என்ற அன்புமல்லியை முறைத்த வாசு, மேசை மேல் குத்தினான். பிறகு தன் வாயைக் காட்டினான்.

அதற்குள் சிங்காரம் ஒரு தட்டில் இரண்டு ஒத்தடப்பைகளும் இன்னொரு சட்டியில் பனிக்கட்டிகளும் கொண்டு வந்தான். பனிக்கட்டிகளைப் பைக்குள் திணித்து, வாசுவிடம் கொடுத்தான். "தம்பி.. இந்தாங்க ஒத்தடம் வச்சுக்குங்க, எறங்கிடும்" என்றான். அன்புமல்லியிடம், "ஐயா.. தம்பிக்கு அடிபட்டு வாயில லேசா வீக்கம்.. அதான் பேச்சு குழறுது.. அஞ்சு நிமிசத்துல சரியாயிடும் பயப்படாதீங்க" என்றான்.

"ஒண்ணும் அவசரமில்லே" என்ற அன்புமல்லி தன் துரதிர்ஷ்டத்தை நொந்தார். 'அஞ்சு வருசம் ஆனால் நல்லா இருந்திருக்கும்' என்று நினைத்தார்.

"ஐயா.. மூணு பேருக்கும் எதுனா எடுத்தாறவா?

"ஏன் நாலாவது ஆளை விட்டு.." என்ற அன்புமல்லி திகைத்தார். ரகுவைக் காணவில்லை. "சிங்காரம்.. சங்கத்துல பேய் ஆவி எதுனா உலாத்துதா?"

"தெரியாதய்யா.. ஏன்?"

"ஒண்ணுமில்லே. சரி, நீ இவங்களுக்கு எதுனா கொண்டா. எனக்கெதுவும் வேண்டாம்".

சிங்காரம் விலகியதும், ஜே நேரே விஷயத்துக்கு வந்தான். "அங்கிள்.. மைதிலி எங்க ரெண்டு பேரையும் காதலிக்கிறான்றதை நாங்களே இங்க வந்தப்பிறகு தான் புரிஞ்சுக்கிட்டோம்"

"அது மட்டுமில்லேபா. உங்க ரெண்டு பேரையும் கல்யாணம் செஞ்சுக்கணும்னு சொல்றா. இல்லின்னா உயிரை விடறதா சொல்லியிருக்கா"

"என்ன அங்கிள் இது.. நீங்க எடுத்து சொல்ல வேணாமா? ஒரு வேளை எங்க ரெண்டு பேர்ல ஒருத்தரை செலக்ட் பண்ணத் தெரியாம தவிக்கிறாளோ என்னவோ?"

அன்புமல்லிக்கு ஜேயின் பேச்சு ஆச்சரியமாக இருந்தது. ஒருவேளை வயதானதும் முதிர்ச்சி வந்துவிட்டதோ? வியப்புடன் ஜேயைப் பார்த்தார்.

"நீங்க குடும்ப நண்பர்ன்றதால அவளை அரை லூசுனு சொல்ல முடியுமா? பாவம், அவ என்ன செய்வா?" என்று ஜே முடிக்க, அன்புமல்லியின் வியப்பும் மறைந்தது.

"இதப் பாருங்க அங்கிள்.." என்றான் வாசு. "..எனக்கு வாய் வலிக்குது. அதனால விஷயத்தை சுருக்கமா சொல்லிடுறேன். நீங்க என்னைத்தான் மைத்துக்குக் கட்டி வைக்கணும். இல்லின்னா விஷயம் விபரீதமாயிடும். உங்களை நான் சும்மா விடமாட்டேன்"

"என்னப்பா இது.. நாம ஒரு முடிவுக்கு ஒத்துக்கிட்டுத் தானே பேச வந்தோம்?" என்றான் ஜே.

"இப்பவும் அதான் சொல்றேன். இவர் யாரை செலக்ட் செய்யுறாரோ அவங்களே மைத்தைக் கல்யாணம் செய்துக்கட்டும்னு ஒத்துக்கிட்டேன். ஆனா இவரை சும்மா விடுறதா நான் ஒத்துக்கலியேபா? அன்பங்கிள், என்னை செலக்ட் செய்யலின்னா உங்களுக்கு நடக்கிறதே வேறே. வாய் வீங்கியிருக்குதுனு பாக்காதீங்க, நான் எப்பவுமே அதிகமா பேசமாட்டேன். எல்லாம் செயல் தான். ஒழுங்கா என்னை செலக்ட் செஞ்சு உங்க உடம்பைத் தேத்திக்குங்க.. ஏற்கனவே வாயு உபத்திரவம்னு அலையுறீங்க.. வயிறே இல்லாமப் போயிடும்" என்றான் வாசு.

பழைய நினைவுகளைக் குத்திக் கிளறியவுடன் அன்புமல்லி காற்றிழந்த பலூனானார்.

"ஓகே.. நீ இப்படிச் சொல்றதுனால நானும் சொல்லிடறேன். அன்பங்கிள், நீங்க என்னை செலக்ட் செய்யலின்னா இவன் கிட்டே அடிவாங்குறதுக்குக் கூட உங்க உடம்பு தேறாது, புரியுதா? போற வயசுல ஒழுங்கா ஒரு முடிவெடுத்துட்டுப் போங்க" என்றான் ஜே.

"ஏம்பா.. நான் போவணும்னே தீர்மானிச்சுட்டியா?"

"பின்னே என்ன அங்கிள்? உங்கள மாதிரி ஆளுங்களால எத்தனை லொள்ளு பாருங்க. ஏதோ காதலிச்சமானு இல்லாம, உங்களைப் போய் மீடியேட் பண்ணச் சொல்லியிருக்கா பாருங்க. அங்கிள், உங்களை மாதிரி ஆளுங்க உலகத்துல இருந்தா முறையான காதலுக்கு அது நல்லதா, நீங்களே சொல்லுங்க. எங்கனா ஓடி சாமியாராவாம இப்படி காதலுக்கும் காதலருக்கும் கஷ்டம் கொடுக்குறீங்களே? நீங்களே கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க அங்கிள்"

"என்ன செய்றீங்க அங்கிள்?"

"யோசிக்கிறேன்" என்ற அன்புமல்லி, "ஏம்பா வாசு.. ஒரு பேச்சுக்கு உன்னை செலக்ட் செய்யுறேன்னு வச்சுக்க. அப்ப இந்த ஜே என்னை அடிக்க வராம பாத்துக்குவியா?" என்றார்.

"அதெப்படி அங்கிள் முடியும்? உங்களுக்கும் ஜேக்கும் நடுவுல நான் தலையிடுறது நியாயமா? ஆனா ஜேகிட்டே அடி வாங்கி உங்களுக்கு கை கால் உடைஞ்சிருச்சுனு வைங்க, உங்களுக்கு சீக்கிரம் குணமாகணும்னு நானும் மைத்தும் நிச்சயமா பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்குறோம் அங்கிள்.. கவலைப்படாதீங்க"

"அதானே.." என்ற அன்புமல்லி ஜேயைப் பார்த்தார். "நீ எப்படிப்பா?"

"என்ன இப்படிக் கேக்குறீங்க? தேங்காய் உடைக்கிறவனா நானு? எத்தனை வருசமா எங்க குடும்பத்துல பழகியிருக்கீங்க? என்ன அங்கிள் நீங்க.. இந்த வாசு உங்களைப் போட்டுத் தள்ளினா நான் சும்மா பாத்துட்டிருக்க முடியுமா? தர்ம அடி கொடுக்க இப்பல்லாம் சான்சே கிடைக்குறதில்லே அங்கிள். அதனால நானும் அவனோட சேர்ந்து உங்களை ரெண்டு தட்டு தட்டுறேன் அங்கிள், ப்லீஸ்.. கூடாதுனு மட்டும் சொல்லிடாதீங்க.. நல்ல அங்கிள், செல்ல அங்கிள்.."

"பலே, பலே!" என்ற அன்புமல்லி அமைதியானார். மைத்தைச் சபித்தார்.

இரண்டு தட்டுக்களில் உருளைக்கிழங்கு பஜ்ஜி கொண்டு வைத்தான் சிங்காரம். "சாப்பிடுங்க தம்பி.. சூடா இருக்கு பாருங்க. இந்தாங்க தக்காளி சட்னியோட தூக்கலா இருக்கும் பாருங்க" என்றான்.

பஜ்ஜியும் சட்னியும் காலியான வேகத்தைப் பார்த்து அதிர்ந்தார் அன்புமல்லி. "பஜ்ஜி சாப்பிடுற ஒலிம்பிக்ஸ் எதுனா இருக்கா சிங்காரம்?" என்றார் மெதுவாக.

"ஓகே அங்கிள். அப்ப நான் வரேன். சொன்னது ஞாபகம் இருக்கட்டும்" என்றான் வாசு.

"எதுக்கும் ஆம்புலன்ஸ் நம்பர் ரெடியா வச்சுக்குங்க அங்கிள், வரட்டா?" என்றான் ஜே. சிங்காரத்தைப் பார்த்து, "பஜ்ஜி சூபர். அங்கிள் கிட்டயே பில் குடுத்துருங்க" என்றான்.

"ஆகட்டும் தம்பி" என்று சிங்காரம் சொல்லி முடிக்குமுன் இருவரும் விலகினர்.

    அன்புமல்லி சோகமாக இருந்தார். "சிங்காரம்.. ஒரு விஸ்கி கொண்டாப்பா".

"இதோ கொண்டாறேன் ஐயா" என்று சிங்காரம் கொடுத்த விஸ்கியை ஒரே வாயில் விழுங்கிய அன்புமல்லி, "சிங்காரம்.. உனக்குப் பெண் குழந்தை உண்டா?" என்றார்.

"இல்லிங்க ஐயா"

"பெத்துக்கிட்டா சின்ன வயசுலந்தே அடிச்சு வளக்கணும், மறந்துடாதே"

"ஆவட்டும் ஐயா"

"உன் பெண்டாட்டி என்ன சொன்னாலும் கேக்காதே"

"அவசியம் இல்லிங்கய்யா. எனக்கு கல்யாணம் ஆவலிங்க"

"ஏம்பா? எதுனா காதல் தோல்வியா?"

"ஆமாய்யா.. ஒருத்தியை உயிருக்குயிரா காதலிச்சேன்.."

"அவ உன்னைக் காதலிக்கலியா?"

"அவளும் என்னை உயிரை விட மேலா காதலிச்சா.."

"பின்னே.. பெத்தவங்களுக்குப் பிடிக்கலியா?"

"இல்லய்யா.. அவ புருசனுக்குப் பிடிக்கலே" என்றபடி சிங்காரம் டேபிளைச் சுத்தம் செய்யத் தொடங்கினான். "நீங்க ஏன் சோகமா இருக்கீங்க?"

"இந்த உடம்பைக் கடைசியாப் பாத்துக்க சிங்காரம். பாத்துக்கிட்டியா?"

"சரிங்கய்யா"

"இனிமே இப்படி முழு உடம்பா.. கை கால் முகம் ஒடம்போட ஒட்டி இங்கே வரமுடியுமானு தெரியலப்பா" என்ற அன்புமல்லி, நடந்ததைச் சொன்னார்.

"அட, இதுக்கா இப்படி கலங்குறீங்க? அந்தப் பொண்ணுக்கு போன் செஞ்சு பெசன்ட் நகர் பீச்சுக்கு இன்னும் அரை மணி நேரத்துல வரச்சொல்லுங்க. அஷ்டலச்சுமி கோவிலாண்ட வரச்சொல்லுங்க. அந்தப் பசங்களை அரை மணி வித்தியாசத்துல தனித்தனியா வரச்சொல்லும்படி சொல்லுங்க. மிச்சத்தை.." என்ற சிங்காரத்தின் பேச்சை

"..நாங்க பாத்துக்குறோம்" என்று முடித்தான் ரகு.

திடுக்கிட்டு அரையடி உயரம் துள்ளிக் குதித்தார் அன்புமல்லி. "அட, ஆவிமனுசா! நீ எப்போ வந்தே?"

"நீங்க விஸ்கி கொணாரச் சொன்னப்பவே வந்துட்டேன் சார்"

"எங்கே உன் காலைக் காட்டு.. நீ பிசாசானு முதல்ல தெரியணும்பா"

"சிங்காரம் சொன்னாப்புல உடனே மை டியர் மைத்துக்குப் போன் செஞ்சு சொல்லுங்க சார்!"

மைத்துக்கு போன் செய்து விவரங்களைச் சொன்னார் அன்புமல்லி. "ஏம்பா.. நீங்க வேறே எதுனா வம்புல மாட்டிவிடப் போறீங்கப்பா.."

"பீச்சுக்குப் போகலாம், வாங்க சிங்காரம்" என்றான் ரகு.

"ஏம்பா.. நான் வர வேணாவா?" என்றார் அன்புமல்லி.

"வேணாமய்யா. நீங்க இங்க ரெஸ்ட் எடுங்க. நாங்க பாத்துக்குறோம். எல்லாம் நல்லபடியா முடிஞ்சுரும் ஐயா, வாங்க தம்பி" என்றான் சிங்காரம்.


வளரும் >>

2012/10/15

மைத் மை டியர்


    திருவான்மியூர் வேர்கடலைச் சங்கமும், அன்புமல்லி செல்வநாயகமும் - ஒரு அறிமுகம்: [-]

அடையாரிலிருந்து திருவான்மியூர் போகும் வழியில் காந்தி நகர் தாண்டி உள்ளடங்கி இருக்கும் வெடரென்ஸ் க்ளப் நிறைய மாறிவிட்டது. எழுபதுகளில் அடையார் அமைதியாக இருந்த காலத்தில், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளும் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று வாதம் புரிந்தப் பெருங்கல்லூரிப் பேராசிரியர்களும் மாலை நேரங்களில் கூடி, வெளிநாட்டு பீர் விஸ்கி வைன் என்று ஆமை வேகத்தில் அருந்திக் கொண்டு, பேருக்கு டென்னிஸ் ஆடிவிட்டு, முக்கியமாக கேன்டீனில் அவ்வப்போது தயாரான உருளைக்கிழங்கு மினி போண்டா, மெதுவடை, முந்திரிப்பருப்பு கிச்சடி, அவியல் சூப், பொடிமாவடு தயிர்சாதம் என்று வரிசையாக உள்ளே தள்ளியபடி இரவு பத்து மணி வரை அரட்டை அடித்த நாளிலிருந்து... நிறையவே மாறிவிட்டது.

இடையில் சில வருடங்கள் கேட்பாரற்று கிடந்த க்ளப், சென்றப் பத்து வருடங்களில் பழைய பொலிவுக்கு வந்துவிட்டது. உறுப்பினர் கட்டணம் நாட்டின் பெரும்பான்மையினருக்கு மாதச் சம்பளமாயிருந்தாலும், சென்னையைச் சுற்றித் திரண்டிருக்கும் செலவம் அதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. பழைய கட்டிடம் என்றாலும் சுவரிலிருந்த இந்தியாவை நினைவுபடுத்தும் சுவர்ச்சித்திரங்கள் அத்தனையும் போய், இப்போது ஒவ்வொரு அறையிலும் ஒரு வெளிநாட்டு நகரத்தின் பின்னணியில் புது அலங்காரம். புதுக் கூட்டம்.

கால் சென்டர் அரை சென்டர் என்று தெருவுக்கு ஒன்றாய்க் கிளம்பியிருக்கும் மென்பொருள், அவுட்சோர்சிங், மற்றும் வெப் 2.0 கம்பெனிகளில், கல்லூரி முடித்த மறுநாளே சேர்ந்து, லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கித் தாய்மொழி மறந்த இளைஞர் கூட்டமே பெரும்பாலும். "செக் அவுட் ஹர் அஸெட்ஸ் மேன்" என்று வாட்கா குடித்து வம்படிக்கும் ஆண்களை, தயங்காமல் "யா? வேரிஸ் யுர்ஸ்?" என்று பதில் சொல்லித் தலைகுனியவைக்கும், இளவயிறு தெரிய மேல்சட்டையணிந்த ஜீன்ஸ் பெண்கள். இவர்களை எல்லாம் பார்த்து வயிற்றெரிச்சல் பட்டு, எங்கேயாவது "அங்கிள்" என்று கூப்பிட்டுவிடப் போகிறார்களே எனப் பயந்து, ஒதுங்கியிருக்கும் என்னைப் போன்ற முப்பத்தைந்து வயதில் முடிகொட்டிப் போன அரைகுறை முதியோர் ஒரு சிலர். இந்த மாறுதல்களுக்கிடையே வெடரன்ஸ் க்ளப் வேர்கடலைச் சங்கமாக மருவியது புதிர்.

சில விஷயங்களில் மட்டும் சங்கம் மாறவேயில்லை. அன்றைக்குப் போலவே இன்றைக்கும் அசைக்க முடியாதபடி சுவையான சிற்றுண்டி வகை. வியாழக்கிழமைகளில் மட்டுமே கிடைக்கும் பாதாம் சட்டினிக்கு மைல் கட்டி நிற்கும் கூட்டம். அன்றைக்குப் போலவே இன்றைக்கும் அரசியல் பேசக்கூடாதென்ற விதிகளுக்குட்பட்டு, பெரும்பாலும் காதல் பிரச்னை பற்றிய வம்பு, அரட்டை, துக்கப் பரிமாறல். அன்றைக்குப் போலவே இன்றைக்கும் இளைய சமுதாயத்திற்கு அறிவுரை சொல்லி, சில சமயம் பிரச்னை தீர்த்து, பல சமயம் குட்டையைக் குழப்பித் தள்ளும் பேர்வழிகள். இவர்களில் தனித்து நின்று சாதனை புரியும் பேராசிரியர் அன்புமல்லி.

சற்றே பெண்மையான பெயராக இருந்தாலும், ஒருவேளை அதனால் தானோ என்னவோ, அன்பு சாருக்குக் காதல் அனுபவம் அதிகம். காதலித்த அனுபவம் குறைவு, காதலிக்கப்பட்ட அனுபவம் அதைவிடக் குறைவு என்றாலும், காதல் தொடர்பான அனுபவம் எக்கச்சக்கம். திருமணம் செய்து கொள்ளவில்லை. அந்தக் காலத்தில் அன்புமல்லியின் அப்பா லன்டனில் இருந்தபோது அவருக்கிருந்த காதல் நெருக்கடியைத் தீர்த்து வைத்த மல்லினர் என்பவரின் நினைவாக, இவருக்கு மல்லி என்ற இடைப்பெயரை சேர்த்து அன்புமல்லி என்ற பெயரைக் கொடுத்ததாகக் கேள்வி. உண்மை விவரம் தெரியாது. அனாவசியமாக வம்பு அரட்டை என்று போக மாட்டார். ஆனால் காதல் பிரச்னை தீர வழி கேட்டு வருபவருக்கு, இல்லை எனாது அறிவுரையும் உதவியும் வழங்கும் வள்ளல். காதல் சாமியார். திருவாளர் அன்புமல்லி செல்வநாயகம்.

இனி, மைத் மைடியர்.


    வேர்கடலைச் சங்கத்துக்குள் நுழைந்து தன் வழக்கமான இடத்தில் உட்கார்ந்த அன்புமல்லிக்கு முழுதுமாக வியர்த்திருந்தது. குளிர் நீரில் நனைத்துப் பிழிந்த கைத்துண்டைக் கொண்டு வந்த சிங்காரத்தை நன்றியுடன் பார்த்தார். கழுத்தையும் முகத்தையும் ஒத்தடம் கொடுத்தபடி, காலையில் வீட்டுக்கு வந்த கிளி ஜோசியக்காரனை நினைத்துக் கொண்டார். "ஐயாவுக்கு வாழ்க்கையிலே ஒரு திருப்பம் காத்திருக்குனு சொல்லுடி மங்கம்மா" என்ற ஒரு வரி ஜோசியத்தை எட்டு வரிப் பாடலில் தேக்கி வாசித்தவனுக்கு இரண்டு ரூபாய் கொடுத்து அனுப்பியிருந்தார். வழியில் பள்ளம் குழிகளினாலும், வெட்டப்பட்டிருந்த சாலைகளினாலும், இரண்டு விபத்துகளினாலும், நெரிசலினாலும்.. ஆலந்தூரிலிருந்து திருவான்மியூர் வருவதற்குள் இருபத்தாறு திருப்பங்களை எதிர்கொண்டார். கொடுத்த இரண்டு ரூபாயைப் பிடுங்கிக்கொண்டு கிளி ஜோசியக்காரனை கூண்டுக்குள் அடைத்து வைக்க வேண்டும் என்று தோன்றியது.

சிங்காரம் தானாகவே கொண்டு வைத்த குளிர்ந்த ஸ்காச்சை ஆசையோடு பருகினார். உடன் கொண்டு வைத்த வறுத்த முந்திரிப்பருப்பில் இரண்டை எடுத்து மென்றபடி ஆசுவாசப் படுத்திக் கொண்டார். "சிங்காரம், என்னுயிரப்பா நீ, என் சொத்தெல்லாம் உனக்குத்தான் எழுதி வைக்கப் போறேன்" என்றார்.

"ரொம்ப நல்லதுங்கய்யா" என்றான் சிங்காரம்.

"இன்னொரு ஸ்காச் கொண்டா. இன்னிக்கு என்ன ஸ்பெஷல்?" என்றார்.

"தயிர்வடை, உருளைக்கிழங்கு பஜ்ஜி, பால்போளி. சரக்கு மாஸ்டர் லீவுன்றதால இன்னிக்கு எல்லாம் ரொம்ப சிம்பிள் சார்"

"சிம்பிளா இருந்தா உலகத்துக்கே நல்லது. அகலக்கால் வச்சு வச்சு எல்லாத்தையும் போட்டு கொழப்பிட்டிருக்கோம். சரி, பொடியா சீவின வெங்காயம், ஒரு ஸ்பூன் சீரகம், அரிஞ்ச கொத்தமல்லி ஒரு பிடி அத்தனையும் லேசா நெய்யிலே வதக்கி, தயிர்வடைல தூவி எடுத்துட்டு வா. நான் கொஞ்சம் ஓய்வெடுக்கணும். என்னைத் தேடி யாராவது வந்தா உடனே இங்கே அனுப்பிராதே" என்ற அன்புமல்லி, மூலையில் முகம் புதைத்து அமர்ந்திருந்த வாலிபனைப் பார்த்தார். தற்செயலாக நிமிர்ந்த வாலிபன் இவரைப் பார்த்துப் புன்னகைத்தான்.

வழியில்லாமல் அன்புமல்லி புன்னகைத்ததும், வாலிபன் சடுதியில் அவரருகே வந்து, "என் பேர் ரகுராம் சார்.. சுருக்கமா ரகுனு கூப்பிடுவாங்க" என்றான்.

"ஏன்? சுருக்கமா ராம்னு கூப்பிட மாட்டாங்களா?" என்ற அன்புமல்லி, "அதை அங்கயிருந்தே அவசரமில்லாம சொல்லியிருக்கலாமேபா? எதுக்கு இப்படி மூச்சு வாங்க மூலைலந்து ஓடியாறே?"

"என் சோகக்கதையை யார் கிட்டயாவது சொல்லணும்னு தோணுது.. ஏன்னு தெரியலே உங்களைப் பாத்த உடனே என் கதையைச் சொல்லத்தோணிச்சு சார்.."

"காதல் சோகமா?"

"ஆமா சார்!"

"உயிர்க் காதலா?"

"அட.. பாத்தீங்களா சார்.. கரெக்டா சொல்லிட்டீங்க!"

"அதானே? சரி.. சொல்லு.. சொல்லு.. இந்தா இப்படி உக்காந்து சொல்லு"

"என்னோட வாழ்க்கை வானத்தின் வானவில் சார் அவள். ஒரே ஒரு சின்ன ஒளிக்கீத்து கூடப் போதும்னு ஏங்கிட்டிருந்த என் இருண்ட மனசுல பத்து சூரியனைப் பத்த வச்சுட்டுப் போயிட்டா சார்"

"ச்ச்சோ.. போயிட்டாளா? அடப்பாவமே?!"

"அதில்ல சார்.. அதுக்குள்ள சாவடிக்கிறீங்களே? மனுசனா சார் நீங்க?"

"அப்ப இருக்காளா? வெரி குட்.. மேலே சொல்லு.. அவ பேர் என்ன?"

"தெரியாது"

"ஊரு?"

"தெரியாது"

"அவளை நேரிலயாவது பாத்திருக்கியா?"

"இப்பத்தான் பத்து நிமிசத்துக்கு முன்னால இங்க பார்க்கிங் லாட்ல முதல் தடவையா அவளைப் பார்த்தேன் சார்"

"பத்து நிமிசத்துக்கு முன்னாலே முதல் தடவையா பாத்தேன்றே.. அதுக்குள்ள வானவில் அது இதுன்றே?"

"உயிர்க்காதலுக்கு நிமிசம் நாள் யுகமெல்லாம் ரெலெடிவ் சார். காலம்ன்றது நாம தீர்மானிக்கிற அறிவுப் பரிமாணம். ஆனா காதல்ன்றது நம்ம யாராலயும் தீர்மானிக்க முடியாத ஆன்மப் பரிமாணம். இவளை எனக்குப் பத்து ஜென்மமா தெரிஞ்சாலும் பத்து நிமிசமா தெரிஞ்சாப்புல இருக்கும்.. அதே போல பத்து நிமிசமா.."

"போதும் நிறுத்துப்பா.. உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்குறேன்.. இந்தா இதை வச்சுக்க" என்று அன்புமல்லி தன் பர்சிலிருந்து நூறு ரூபாய் நோட்டை அவன் கைகளில் திணித்து அவன் கைகளைப் பிடித்துக் கொண்டார். "தத்துவம் தாங்கலப்பா".

சிங்காரம் கொண்டு வைத்த இரண்டாவது விஸ்கியை ஒரு வாய் பருகினார். "அப்பாடி!" என்றார். உற்சாகமானார். சட்டென்று ரகுவின் கைகளிலிருந்து நூறு ரூபாய் நோட்டைப் பிடுங்கிக் கொண்டார். "ஏம்பா ரகுத்தம்பி.. உயிர்க்காதல்னு சொல்றே? யுகம் யுகமா பாத்தேன்னு சொல்றே.. அப்ப பேரைத் தெரிஞ்சுக்க வேணாமா?"

பணம் வந்து போன வேகம் புரியாத ரகு, "கேட்டேன். சொல்லிட்டு சட்டுனு போயிட்டா.. ஆனா அது அவ பேரா இருக்க முடியாது சார்"

"ஏன்?"

"ஒரு அழகான பெண்ணுக்கு 'செருப்பு பிஞ்சிரும்'னு யாராவது பேர் வைப்பாங்களா?"

"வாஸ்தவம்" என்ற அன்புமல்லி, திடீரென்று எழுந்த ரகுவிடம் "ஏம்பா திடீர் மரியாதை.. உக்காரு உக்காரு" என்றார்.

"மரியாதையெல்லாம் இல்லே சார்.. அப்புறம் பேசுவோம்.. அதோ அங்க நிக்குறது அந்தப் பொண்ணு போலவே இருக்கு. இப்போ அந்த முகத்தைப் பார்த்தா எனக்கு ரொம்ப சோகமாயிடும் சார்.." என்றபடி அவர் பதிலுக்குக் காத்திராமல் பழைய மூலைக்குள் காணாமல் போனான், ரகு என்று சுருங்கிய ரகுராம்.

    தயிர்வடையும் இன்னொரு கிண்ணம் முந்திரிப்பருப்பும் கொண்டு வைத்தான் சிங்காரம். தயிர்வடையின் நிறமும் மணமும் கண்ட அன்புமல்லி, "நீயே உனக்கு என்றும் நிகரானவன்" என்று மென்மையாகப் பாடி சிங்காரத்தின் கையில் இருபது ரூபாயைத் திணித்தார். ரகுவை அகற்றிய முகம் தெரியாத பெண்ணுக்கு நன்றி சொன்னார். ஒரு முந்திரிப்பருப்பை எடுத்து மணம் பார்த்தார். "ஆகா!" என்றார். சொன்ன வேகத்தில் சுனாமி வந்தது போல் அதிர்ந்தார், "அங்கிள்" என்ற குரலைக் கேட்டு.

அதிர்ச்சியில் கை தவறிக் கீழே விழுந்த முந்திரிப்பருப்பை வருத்தத்துடன் பார்த்தபடியே, குரலுக்குச் சொந்தக்காரரை முறைத்தார். மறைந்த நண்பன் கேகேயின் பெண்! கேகே மாரடைப்பால் இறந்து போனதற்கு கொலஸ்டிரால் காரணமென்று டாக்டர்கள் சொன்னாலும், மைதிலியின் திடீர் கூக்குரல்களும் காரணமாக இருந்திருக்குமோ என்று இப்போது தோன்றியது. "அங்கிள்!" என்றாள் மறுபடி, பனிரெண்டு கட்டையில்.

ரேடியோ டிவியில் இருப்பது போல் ஒலிக்கட்டுப்பாட்டு விசை மனிதர்களுக்கு இல்லையே என்று ஒரு கணம் வருந்தினார் அன்புமல்லி. பிறகு, 'என்ன இருந்தாலும் கேகே மகள் தன்னுடைய மகள் போல்' என்று நினைத்து அவளைக் கனிவுடன் பார்த்தார். இளவயதில் தாயை இழந்து சமீபத்தில் கேகேயும் இறந்த பிறகு, தனியாக வசித்து வந்த மைதிலி மேல் அவருக்குப் பாசம் பொங்கியது. "என்னம்மா மைதிலி? எப்படி இருக்கே? முந்திரிப்பருப்பு சாப்பிடுறியா?" என்றார்.

"மைத் அங்கிள். என் பேரை கர்நாடகப் படுத்தாதீங்க"

அன்புமல்லி இன்னும் கீழே கிடந்த முந்திரிப்பருப்பைப் பார்த்துக் கொண்டிருந்தார். "திரௌபதி தெரியும்ல அங்கிள்?" என்று மறுபடி அலறிய மைத்தைத் திடுக்கிட்டு அண்ணாந்தார். முந்திரிப்பருப்பை ஒவ்வொன்றாக உயரே எறிந்து வாய் திறந்துப் பிடித்துக் கொண்டிருந்தாள்.

"யாருமா, உன் ப்ரென்டா?"

"இல்லே அங்கிள்" என்றபடி அடுத்த முந்திரிப்பருப்பை உயரே எறிந்தாள். "பாண்டவர் பெண்டாட்டி" என்றபடி வாயுள் பிடித்தாள்.

"ஓ, அந்த திரௌபதியா? தெரியுமே" என்றார். மைத் முந்திரிப்பருப்பு தின்னும் விதத்தை ஏற இறங்கப் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு தலை சுற்றியது. சட்டென்று அவள் கையைப் பிடித்து நிறுத்தி, "முந்திரிப்பருப்புல டென்னிஸ் விளையாடாதம்மா. தலை சுத்துது. அழகா இந்தமாதிரி ஒண்ணொண்ணா எடுத்து வாயில போட்டு சாப்பிடேன்? நல்ல பெண் இல்லே, சொன்னா கேக்கணும்" என்றார்.

"ரைட். அந்த திரௌபதியைப் பத்தி என்ன நினைக்கிறீங்க அங்கிள்?"

"திரௌபதியைப் பத்தி நான் நினைக்கறதே இல்லியே?"

மறுபடியும் கிளி ஜோசியனை நினைத்துக் கொண்டார் அன்பு. ஸ்காச்சை எடுத்தார். தயிர்வடையை மைத் பக்கம் நகர்த்தினார். "சிங்காரம், இன்னொரு ப்ளேட் கொண்டா" என்றவர் மைத்தைப் பார்த்து, "ஏன் திடீர்னு திரௌபதியைப் பத்திக் கேக்குறே? ஏதாவது பரீட்சையா?"

"இல்லே, அஞ்சு பேரைக் கல்யாணம் செஞ்சவளாச்சே பரவாயில்லையானு கேட்டேன்"

"ஏம்மா, அந்த திரௌபதி அஞ்சு பேரை கட்டினா என்ன அம்பது பேரைக் கட்டினா என்ன? அதைப் பத்தி விவாதம் செய்யவா இங்கே வந்து முந்திரிபருப்பு கேச் விளையாடுறே?"

"நான் ரெண்டு பேரைக் கல்யாணம் செஞ்சுக்கலாமானு பாக்குறேன், அதான்" என்றாள் நிதானமாக.

அப்போது விழுங்கிய விஸ்கி தொண்டையில் குத்திப் புரையேற, அன்புமல்லி இருமித் தள்ளினார். "என்னம்மா சொல்றே?"

"ஆ..மாம் அங்கிள்.." என்று கொஞ்சினாள். "நான் ரெண்டு பேரைக் காதலிக்கிறேன். ரெண்டு பேரையுமே பிடிச்சிருக்கு. அதான் என்ன செய்யுறதுனு தெரியலே"

"அவங்க ரெண்டு பேர் கிட்டேயும் இதைச் சொல்லுறது தானே?"

"என்னைப் போல பரந்த மனப்பான்மை அவங்களுக்கு இல்லின்னா? ஏடாகூடமா சொல்லி ரெண்டு பேரையும் இழந்துடக்கூடாதே? அதான் என்ன செய்யறதுனு உங்க கிட்டே ஐடியா கேக்க வந்தேன்"

அன்புமல்லியின் ரத்த அழுத்தம் 150/90ஐத் தொட்டது. மைத்தை அடித்து வளர்க்காத கேகேயை மனதுள் திட்டினார். "ரெண்டு பேரையும் கல்யாணம் செஞ்சுக்கப் போறியா? அது சட்ட விரோதமாச்சே? ஒரு பொண்ணு எப்படிம்மா ரெண்டு ஆம்பிளங்களைக் கல்யாணம் கட்டுறது?"

"பின்ன ஒரு ஆணா ரெண்டு ஆம்பிளங்களைக் கல்யாணம் கட்ட முடியும், என்ன அங்கிள் நீங்க? ஆக்சுவலி.. அதுவும் பாசிபிள் தான். வை நாட்?.."

"என்னவோமா.. என்னை மாதிரி கை நாட் ஆசாமிங்களுக்கு இந்தக் வை நாட் புரியுறது கஷ்டம் தான்.. இந்தக்காலம் ரொம்ப மாறிட்டுது"

"அந்தக்கால திரௌபதிய மறந்துட்டீங்களே அங்கிள்? மிசஸ் தருமன், மிசஸ் பீமன், மிசஸ் அர்சுனன் அப்புறம் மத்த ரெண்டு பேர் பேரு மறந்துடுச்சு.. அவங்களுக்கும் திரௌபதி தானே மிசஸ்?"

"கதைக்கும் வாழ்க்கைக்கும் வித்தியாசம் இல்லியா? சும்மா வெளயாடதம்மா.. ரெண்டு பேர்ல ஒருத்தனை கல்யாணம் கட்டிக்கிட்டு சந்தோசமா இரும்மா. குறும்புக்கா..ஆரி, வெளயாட்டைப்பாரு"

"உண்மையாத்தான் சொல்றேன் அங்கிள். நீங்கதான் எனக்கு அவங்க ரெண்டு பேரையுமே கல்யாணம் செஞ்சு வைக்கணும். இல்லின்னா காதல் சோகம் தாளாம உயிரை விட்டுறுவேன். அப்புறம் அந்தப் பாவம் உங்களுக்குத் தான் வரும்" என்றாள்.

"காதல் சோகமா?"

"ஆமாம் அங்கிள். அதும் டபுள் சோகம். ரெண்டு காதல் இல்லியா?"

"சரியா போச்சு. இந்த மாதிரி உருப்படாத வேலைக்கெல்லாம் நானா கிடைச்சேன்? ரெண்டு காதல் எல்லாம் வேண்டாம், இந்தா, என்னோட ரெண்டு தயிர்வடையும் சேத்து நிம்மதியா சாப்பிட்டு வீடு போய்ச் சேருமா" என்றார் எரிச்சலுடன்.

விசும்பினாள்.

"ஏம்மா.. தயிர்வடை காரமா? பச்சை மிளகாயக் கடிச்சிட்டியா?"

"ஹ்ம்..ஹ்ம்..ஹ்ம்.. எங்கப்பா சாவுறப்போ அவர்கிட்டே நீங்க கொடுத்த சத்தியத்தை மறந்துட்டு பேசறீங்களே அங்கிள்? எங்கப்பா ஆவி இப்போ என்ன துடி துடிக்குதோ?"

"சுச்சு போட்டாப்புல அழுவுறீங்கப்பா... என்னம்மா இது.. நிறுத்து.. பொது இடம் பாரு..."

"ஹ்ம்ம்ம்ம்ம்.. எங்கப்பா ஆத்மா சாந்தியடையாம சுத்திட்டிருக்கணும்னு நினைக்கறீங்க.." சிணுங்கினாள்.

"சரி.. சரி.. அழுகையை நிறுத்து முதல்ல"

"அப்ப என் விருப்பத்தை நிறைவேத்தி வைங்க" என்றபடி முந்திரிப்பருப்பை இரண்டிரண்டாக மேலே எறிந்து வாயில் பிடிக்கத் தொடங்கினாள்.

"ஏம்மா, ரெண்டு புருசன்னா என்ன ரெண்டு முந்திரிப்பருப்பா, இப்படி விளையாட்டா போட்டுப் பிடிக்க? வாழ்க்கைப் பிரச்சினைமா, யோசிச்சுப் பாரு. உங்கப்பா கிட்டே உன்னைக் காப்பாத்துறதா வாக்கு கொடுத்தேன் சரி, அதுக்காக நீ கிறுக்குத்தனமா என்ன செஞ்சாலும் பொறுக்கணுமா? இதெல்லாம் விளையாட்டில்லே. வினையாயிடும். வெயில்லே அதிகமா அலையாம வீட்டுக்குப் போ" என்றார்.

"அதெல்லாம் முடியாது அங்கிள். நீங்கதான் எனக்கு இப்போ அப்பா அம்மா எல்லாம். உங்க அனுமதியோட கல்யாணம் செஞ்சுக்குவேன். ரெண்டு பேர் கிட்டேயும் விவரத்தை சொல்லி ரெண்டு பேரையுமே கல்யாணம் செஞ்சு வையுங்க."

"நானா? அதெப்படி? அவங்க யாருனு கூட எனக்குத் தெரியாதே?"

"அதனால தான் ரெண்டு பேரையும் இங்கே வரச்சொல்லியிருக்கேன்.. உங்களோடப் பேசச் சொல்லியிருக்கேன்"

திடுக்கிட்டார் அன்புமல்லி. 'இதென்ன இருபத்தேழாவது திருப்பமா இருக்குதே இன்னிக்கு?' என்று நினைத்தார். "யாரவங்க, ரெண்டு பேர்? எங்க இருக்காங்க?"

"அங்கிள்... இன்னும் அரை மணி நேரத்துல வருவாங்க.. தே போத் ஆர் மை டியர் லவர்ஸ்.. நீங்கதான் எப்படியாவது என்னோட ஆசையை நிறைவேத்தணும்..அவங்களைக் காதலிக்குறதா தனித்தனியா சொல்லியிருக்கேன். ஒருத்தருக்குத் தெரியாம இன்னொருத்தனை லவ் பண்றேன். ஆனா ரெண்டுமே டிவைன் லவ் அங்கிள். நீங்களே ஏதாவது ஐடியா யோசிச்சு அவங்க கிட்டே உண்மையைச் சொல்லுங்க" என்றாள்.

தேவைக்கதிகமாகச் சுதந்திரம் கொடுத்துப் பெண்ணை வளர்த்து விட்ட நண்பன் கேகேயை மறுபடி மனதுள் திட்டினார் அன்புமல்லி. 'டேய்.. உன் ஆத்மாவுக்கு சளி பிடிக்கட்டும்'. "என்னம்மா இது, விளையாட்டு?" என்ற அன்புமல்லியின் குரலில் கோபம் தொனித்தது. "யார் அவங்கனு சொல்லித் தொலை"

"ரெண்டு பேரையும் உங்களுக்குச் சின்ன வயசுலந்தே தெரியும், அங்கிள்" என்றாள்.

"சின்ன வயசுலந்தா?"

"அதாவது அவங்களோட சின்ன வயசுலந்துனு சொன்னேன். உங்களுக்குத்தான் இப்போ போவுற வயசாயிடுச்சே அங்கிள்?" என்றாள்.

"நீ குடுத்த ஷாக்குல போனாலும் போயிருவேன்.. அதை விடு, யார் அவுங்கன்னு சொல்லு.."

"ஜோதி ஆன்ட்டி பையன் ஜே, சந்தானம் அங்கிள் மகன் வாசு" என்றாள்.

"இதென்ன.. விஸ்கியா வெயிலா வயசா.. என்ன கண்றாவியோ தெரியலே, ரெண்டு காதும் சரியா கேக்க மாட்டேங்குது" என்ற அன்புமல்லி, குடைந்து கொண்டார். "ஜோதிக்கா பையன் ஜே, சந்தானம் புள்ளை வாசுனு சொன்னாப்புல கேட்டுச்சுமா.."

"அவுங்களே தான்"

தயிர்வடையைக் கடிக்காமல் அது இருந்த நாக்கைக் கடித்துக் கொண்ட அன்புமல்லி இடிந்து உட்கார்ந்தார். கெட்டக்கனவிலிருந்து மீண்டது போல் மிரண்டு விழித்தார். வாழ்க்கையில் 'அறவே பிடிக்காதவை' வரிசையில் டி.ராஜேந்தர் திரைப்படம், இந்துஸ்தானி இசை, விளக்கெண்ணெய்க்கு அடுத்தபடி ஜோதிக்கா, சந்தானம் உறவுகளை வைத்திருந்தார். சிறு வயதில் மதுரையருகே சில வருடங்கள் வளர்ந்த போது, ஜோதியும் சந்தானமும் அவருடன் ஒரே பள்ளியில் படித்த அக்கம்பக்கப் பங்காளிகள். ஒரு முறை 'ஐ ஸ்பை' விளையாடுவதாகச் சொல்லிப் பள்ளிக்கூடக் கிணற்றடிக்கு அழைத்துச் சென்று, அன்புமல்லி எண்ணத் தொடங்கியதும் அவர்கள் இருவரும் சைக்கிளில் ஏறி வீடு சேர, அவர் மட்டும் தேடித்தேடி அலைந்து வீட்டுக்கு நடந்து வந்தது நினைவுக்கு வந்தது.

நடுங்கினார்.

வளர்ந்த ஜோதிக்கா சந்தானத்தின் பிள்ளைகள் அவர்களுடைய ராடசசக் குணத்தை அப்படியே கொண்டிருந்தார்கள். அன்புமல்லி லன்டனிலிருந்து திரும்பியதும் ஒரு முறை ஜோதிக்கா வீட்டுக்குப் போயிருந்தபோது அவளுடைய ஐந்து வயது மகன் ஜே, அவரை நிற்க வைத்து இங்கே அங்கே நகர முடியாமல் ஒரு மணி நேரம் போல் அவரைச் சுற்றிச் சுற்றி அதிவேகமாக ஓடியது நினைவுக்கு வந்தது. பிறகு ஜோதி வந்ததும், "அம்மா, மாமா என்னிய நல்லா முதுகுல அடிச்சுட்டாங்க" என்று பொய் சொல்லி அதிரவைத்தது நினைவுக்கு வந்தது. "ஏண்டா அப்படிப் பொய் சொல்லுறே?" என்று தனியாக அவனிடம் கேட்ட போது, "நீ தினம் எனக்கு நாலணா தந்தா சும்மா இருப்பேன். இல்லே இனிமே என்னை அடிச்சதாவும் உதைச்சதாவும் மூக்குல குத்தினதாகவும் சொல்லுவேன்" என்றபடி தன்னைத்தானே மூக்கில் குத்திக்கொண்டு "அம்மா..ஆ" என்று அலறியபடி ஜோதிக்காவைத் தேடி ஓடிய ஜேயின் சதிகாரத் துணிச்சலுக்கு அடிபணிந்தது நினைவுக்கு வந்தது.

மிக நடுங்கினார்.

சந்தானத்தின் தங்கை திருமணத்துக்காக நெய்வேலி சென்றபோது, முதல் நாள் எக்கச்சக்கமாக எதையோ சாப்பிட்டு வாயுத்தொல்லை தாளாமல் தவிக்கையில் அருகிலிருந்த சந்தானத்தின் ஐந்து வயது மகன் வாசு அவர் அருகே வந்து, மிக மெதுவான குரலில், "மாமா, நீங்க சத்தம் போடாம் குசு விடுறது எனக்குத் தெரியும்" என்றான். அதிர்ச்சியில் அசடு வழிந்த அன்புமல்லி சட்டென்று அடுத்த இருக்கைக்கு நகர்ந்தார். வாசு உடனே "அன்பு மாமா ஒவ்வொரு நாற்காலியா குசு விட்டு விட்டு எழுந்து எழுந்து போறாங்க.." என்றுச் சத்திரத்தில் இருந்த ஒவ்வொருவரிடமும் சொல்லத் தொடங்க, அந்த வரிசையிலேயே யாரும் உட்காராமல் அவரை எல்லாரும் வெறுத்து முறைக்க, வாசுவுக்குப் பயந்து சத்திரத்தை விட்டு ஓடியதும், அதற்குப் பிறகு எந்தக் குடும்பக் கல்யாணத்துக்கும் பயந்தபடி போய் வந்ததும் நினைவுக்கு வந்தது.

மிக மிக நடுங்கினார்.

"என்ன அங்கிள்.. உக்காந்துகிட்டே செல்லாத்தா மாரியாத்தா டேன்ஸ் ஆடுறீங்க?" என்றாள் மைத்.

மிச்சமிருந்த விஸ்கியை எடுத்துக் குடித்தார். முகத்தைத் துடைத்துக் கொண்டார்.

"அந்தச் சண்டாளனுங்க.. உனக்குக் காதலிக்க வேறே யாரும் கிடைக்கலியா? அதுவும் ரெண்டு பேத்தையும் காதலிக்கறதா சொல்றியே? நியாயமா? அவங்க எங்கே இங்கே வந்தாங்க?"

"அங்கிள், என் லவர்ஸை அப்படியெல்லாம் கூப்பிடாதீங்க, எனக்கு கோபம் வரும்" என்றாள் மைத் செல்லமாக. "ரெண்டு பேரும் சென்னைல தான் இருக்காங்க. விப்ரோவிலும் அக்செஞ்சரிலும் வேலை பாக்குறாங்க. இப்போ வந்துருவாங்க. பேசி ஒரு முடிவுக்கு வந்து என் கிட்டே சொல்லுங்க" என்றாள். "உங்களைத்தான் நம்பியிருக்கேன்" என்றவள், எழுந்து நொடிகளில் காணாமல் போனாள்.

அதிர்ச்சியிலிருந்து மீளக் கண்களை மூடிப் பெருமூச்சு விட்டார் அன்புமல்லி.

    கண் திறந்த போது எதிரே ரகு உட்கார்ந்திருந்தான். "என்ன சார், தியானம் செய்றீங்களா?" என்றான்.

"அது ஒண்ணு தான் குறை. ஆமா, நீ என்ன திடீர்னு காணாம போறே, திடீர்னு வர்றே.. சாமியா பூதமா?"

"இப்ப உங்ககூடப் பேசினாளே அந்தப்பொண்ணு.. அவ பேர் என்ன சார்?"

"ஏம்பா?"

"அவதான் என்னோட பார்க்கிங் லாட் பைங்கிளி. உங்களை அங்கிள்னு சொன்னாளே? எப்படியாவது என்னை அறிமுகம் செஞ்சு வைங்க சார்"

"நாங்க பேசினத ஒட்டு கேட்டியா?"

"தேவையில்லே.. அவ குரல் எத்தனை கணீர்னு ஒலிக்குது சார்!"

"கணீரா? சரியாப்போச்சு போ. டெலிபோன் கம்பெனிக்காரங்களுக்கு அவளைக் கண்டாலே ஆவாதுபா. டில்லிலே இருக்குற சித்தப்பாவோட போன் இல்லாமலே வடக்குப் பக்கமா உக்காந்து பேசுவானா பாத்துக்க.."

"ஹிஹி.. தமாஷ் சார் நீங்க.. அவ பேர் என்ன சார்?"

"மைத்" என்றார். "மைதிலி என்கிற பேரைச் சுருக்கிட்டா, உன்னைப் போலத்தான்"

"சார்!" என்று அன்புமல்லியின் காலில் விழுந்தான் ரகு. "எப்படியாவது எங்களைச் சேத்து வைங்க சார். இது ஒரு சகுனம். செய்தி. என் பேரு ரகு, அவ பேர் மைதிலி. நானும் சுருக்கிட்டேன், அவளும் சுருக். என்ன பொருத்தம் பாருங்க சார்! என்னைப் பத்தின விவரம் எல்லாம் சொல்றேன். உங்க மைதிலியை மைடியரா காப்பாத்துவேன் சார். ப்லீஸ், எங்களைச் சேர்த்து வையுங்க" என்று கெஞ்சினான்.

"எழுந்திரப்பா.. இதெல்லாம் என் கையில் இல்லை" என்ற அன்புமல்லி அவனை எழுப்பினார். "இதோ பாருப்பா ரகு, அவ ஏற்கனவே இன்னொருத்தனைக் காதலிக்கறா" என்றார்.

"ஒருத்தனை இல்லே ரெண்டு பேரை"

"எல்லாத்தையும் கேட்டியா?"

"கணீர் கணீர்"

"அப்புறம் ஏம்பா என் காலில் விழறே?"

"நீங்க மனசு வச்சா முடியும். நீ காதலிப்பவளை விட உன்னைக் காதலிப்பவளை நம்புனு பொன்மொழி இருக்கு சார்.."

"ஆட்டோல படிச்சியா?"

"ஆமா சார்"

"இதோ பாரு.. இன்னொரு தடவை பொன்மொழினு எதுனா சொன்னே, பொல்லாதவனாயிடுவேன்.."

"அட கேளுங்க சார்.. நான் அவளை யுகம் யுகமா, அட்லீஸ்ட் பத்து நிமிசத்துக்கு மேலா, காதலிக்கிறேன் சார். ஆனா அவ காதலிக்குற ரெண்டு பேரும் அவளை பத்து நொடியாவது காதலிக்குறாங்கனு எப்படிச் சொல்வீங்க?"

"நல்லா கேட்டே, ரகு" என்று அன்புமல்லி வியந்தக் கணத்தில், அவர் எதிரே இரு வாலிபர்கள் வந்தமர்ந்தனர்.


வளரும் >>


நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்புமல்லியை அழைத்து வந்திருக்கிறேன். பழைய அன்புமல்லிக் கதைகளுக்கு:
1. கடத்தல் கல்யாணம்
2. காசிருந்தால் கல்யாணம்
3. மல்லி கடாட்சம்

2012/10/07

கலகத்துலகம்
            ரு வாரமாக இந்த வரி மண்டையைக் குடைகிறது:
குருடன்
  எனக்கு முன் இங்கே ஒரு அறிஞனாவது
  தடம் பதித்திருக்கலாம் என்ற நம்பிக்கையில் தினம்
  அடி வைத்துச் சரிகிறேன்.

            லூபர் என்று ஒரு படம் பார்த்தேன். எனக்குப் பிடித்த சப்ஜெக்ட். காலப் பயணம்.

வருங்காலத்தில் கொடுங்குற்றவாளிகளைச் சட்டம் நீதி என்று படுத்தாமல் லடசணமாகத் துரிதத் தண்டனை கொடுக்கிறார்கள். குற்றவாளி முதுகில் வெள்ளிக்கட்டிகளைச் சேர்த்துக் கட்டி, மரண தண்டனைக்காகக் கடந்தகாலத்துக்கு அனுப்புகிறார்கள். தற்காலத்தில் வந்து இறங்கும் அந்தக் குற்றவாளிகளை வந்தக் கணத்திலேயே சுட்டுக் கொன்று, வெள்ளிக்கட்டிகளை சம்பளமாக எடுத்துக் கொள்கிறார்கள் தற்காலக் கூலிகள்.

கூலி ஒருவன், விரைவில் தொழிலை விட்டு விலகி ப்ரெஞ்சு இலக்கியம் படிக்கும் முனைப்போடு வெள்ளிக்கட்டிகளைச் சேகரிக்கிறான். ஒரு நாள் வந்திறங்கியக் குற்றவாளியின் முதுகில் கண்டத் தங்கக்கட்டிகள் காரணமாக இவனுக்கு இரண்டு சிக்கல்கள் உருவாகின்றன. தங்கக்கட்டியோடு வந்தால், அந்தக் குற்றவாளி தன்னுடைய எதிர்கால வடிவம் என்று பொருள். அந்தச் சிக்கல் போதாதென்று, குற்றவாளி கண்ணிமைக்கும் நேரத்தில் கூலியை அடித்துப் போட்டு ஓடிவிடுகிறான். தன் எதிர்கால வடிவைக் கண்டுபிடித்துக் கொன்று, தங்கக் கட்டிகளை மீட்டு, ப்ரெஞ்சு இலக்கியம் படிப்பானா கூலி? படம் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.

ப்ரூஸ் விலிஸ் வயதானவனாகவும், ஜோசப் கோர்டன் லெவிட் இளைஞனாகவும் அமர்க்களமாக நடித்திருக்கிறார்கள். இந்த மாதிரி அற்புதமான கருவை, அட்டகாசமான நடிகர்களை வைத்துக் கொண்டு ஜவ்வாகப் படமெடுத்திருப்பது சோகம். கதைக்காகவும், காட்சியமைப்புகளுக்காவும், ப்ரூஸுக்காகவும் ஒரு முறை அவசியம் பார்க்க வேண்டிய படம்.

            சென்னையில் வாங்கி வந்த லட்சுமி லலிதா மாலினி படங்கள் சில பார்த்தேன். சொக்கிப் போனேன். மெல்லிசைப் பதிவொன்றில் எழுத எண்ணியிருந்தேன், பொறுமையில்லை, இங்கேயே சேர்த்துவிடுகிறேன். ஜோதிலட்சுமியின் சுழலும் பின்னல்கள் பளாரென்று ரவிச்சந்திரனை அறைவதை ஒரு காட்சியில் கவனிக்கலாம். இடுப்பை வெட்டி ரவிச்சந்திரனையும் என்னையும் எப்படிப் படுத்துகிறார்! 'ஆவணி வந்ததும் தாவணி' போன்றச் சங்கத்தமிழ்ச் சந்தவரிகள் கொண்ட டிஎம்ஸ்-ஈஸ்வரி கலக்கும் படு ஜாலியான பாடல். எஞ்சாய்.

            முகமது நபியைப் பற்றிக் கீழ்த்தரமாகப் படமெடுத்து யுட்யூபில் வெளியிட்டிருக்கிறான் எவனோ ஒரு கிறுஸ்துவத் துக்கிரி. கயவன் எப்போதோ வெளியிட்ட படம், கடந்த செப்டம்பர் மாதம் முழுதும் உலகெங்கும் அமெரிக்கத் தூதரகங்கள் மற்றும் பொது அழிவுக்குக் காரணமாகிவிட்டது.

ஆறு மாதங்கள் போல் சீண்டுவாரின்றிக் கிடந்தப் படத்தை செப் 11 வாக்கில் பரப்பிவிட்டுக் கலவரத்தைத் தூண்டியிருக்கும் அல்கைதா போன்ற மதவெறி அமைப்புகளின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு அவர்களை எதிர்க்காமல்/அடக்காமல், அவர்களோடு இணைந்து ஆர்ப்பாட்டம் செய்தது ஆத்திரத்தையும் வருத்தத்தையும் கொடுத்தது. போதாக்குறைக்கு, கருத்துச் சுதந்திரத்தைக் காரணம் காட்டி கூக்ல் அந்தப் படத்தை நீக்க மறுத்துவிட்டதும் மிகுந்த எரிச்சலைக் கொடுத்தது.

நிற்க, தீவிரவாத இஸ்லாமியரின் உலகளாவிய ரகளை புரிந்தாலும் ஏற்க முடியவில்லை. எவனோ ஒருவன் யுட்யூபில் படமெடுத்து வெளியிட்டால், அதற்கு அமெரிக்கா என்ன செய்யும் என்று யோசிக்க மாட்டார்களா? பொதுமக்களும் இப்படிக் கொடி பிடிப்பார்களா? தூதரகத்தில் வேலை பார்த்த சாதாரணர்கள் என்ன பிழை செய்தார்கள்? அவர்கள் ஏன் சாக வேண்டும்? செப்டம்பர் 11 அன்று லிபியாவின் அமெரிக்கத் தூதரகம் தகர்க்கப்பட்டது. அமெரிக்காவுக்கு எதிரான தீவிரவாதமா அல்லது மதவெறி ஒனாய்களா? எகிப்தின் அமெரிக்கத் தூதரக வாசலில் நடந்த ஆர்ப்பாட்டங்களை டிவியில் பார்த்த போது மனம் கொதித்தது. அமெரிக்காவிடம் அதிகமாக நிதியுதவி பெறும் முதல் ஐந்து நாடுகளில் ஒன்று எகிப்து என்பது நினைவுக்கு வந்து உறுத்தியது. படமெடுத்து வெளியிட்டப் பாதகன் எகிப்தில் பிறந்தவன்! மூளைமழுங்கிப் பிறந்தக் காரணத்துக்காக சிறையில் அடைத்திருக்க வேண்டியவனை இப்போது ப்ரொபேஷன் விதிகள் மீறியக் காரணத்துக்காக அடைத்திருக்கிறார்கள். சிறையிலிருந்தால் சரி.

இந்தக் கலவரங்களைப் பார்த்த சாதாரணப் பொதுஜனம் - இஸ்லாமியர் என்று இல்லை - என்ன நினைக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆவல். எவனோ எடுத்த இந்த விடியோவுக்கு அமெரிக்கா பொறுப்பு என்ற எண்ணம் சரியா? கடவுள் மதம் பற்றி அவதூறு செய்பவர்களைத் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை முறையா?

இந்த நிகழ்ச்சி பற்றிய என் உள்ளூர் நண்பர்களுடனான உரையாடல், நட்புக் குடும்பத்தின் பேரிழப்பு, கடவுள் மதவெறி பற்றிய என்னுடைய இயலாமை கலந்தக் கோழைத்தனத்தின் வெளிப்பாடு,... இவை நான் எழுதியச் சிறுகதையானது. கதை படித்த வெளியூர் நண்பர்கள் சிலர் என்னைத் தொலைபேசியில் அழைத்துத் தயக்கத்தோடு கருத்தைச் சொன்னார்கள். சிலர் இமெயிலில் 'கதை நல்லாத்தான் இருக்கு...' என்று மென்மையாக இழுத்தார்கள். மிகக் கடுமையான மிரட்டல் இமெயில்கள் இரண்டு வந்தன. மற்றபடி எனக்கும் பலருக்கும் பொழுது புலர்ந்துப் பூப்பூத்து, இரவில் இனிய நிலவு காய்ந்து, தினசரி வாழ்வில் நிறைவு கிடைத்து வருகிறது - என் உள்ளூர் நண்பர்கள் வீட்டில் தவிர.

எண்பதுகளில் பெண் கைக்குழந்தையோடு தமிழ்நாட்டிலிருந்து இங்கே வந்தார்கள். இன்னொரு பிள்ளை பெற இயலாத மனைவியின் நிலையை இருவருமே பொருட்படுத்தாமல், பெண்ணைச் சாதனையரசியாக வளர்த்தார்கள். ஹ்யூபர்ட் ஹம்ப்ரி ஸ்காலர்ஷிப்போடு வெளியுறவுக் கொள்கை படித்து முடித்த இருபத்துமூன்று வயதுச் சாதனையரசி, இரண்டு வருட பெலோஷிப்பில் லிபியா அமெரிக்கத் தூதரகம் போய் பத்து மாதங்களாகின்றன. திரும்பி வரப்போவதில்லை. இவள் என் மகனாகவோ உங்கள் மகளாகவோ இருந்திருக்கக் கூடும்.

            மிட் ராம்னி தோற்றுவிடுவாரென்ற சந்தேகம் வலுத்து, இப்பொழுது நம்பத் தொடங்கியிருக்கிறேன். ஒபாமாவின் அகம்பாவக் கையாலாகாத் தலைமையை மீண்டும் ஏற்று வாழத் தயாராகிக் கொண்டிருக்கிறேன். கடைசி நிமிடத்தில் அறிவு வந்து அமெரிக்கர்கள் ஒபாமாவை வீட்டுக்கு அனுப்புவார்களா?

            போகிற போக்கில் இன்னொரு கவதைக் குடைசல்:
துலக்கம்
  விழித்தக் கணத்தில் அவளைக் காணாதுத் தேடினேன்.
  அறையோர இருளில் ஓசையின்றி அழுது கொண்டிருந்தாள்.
  புரியாதப் பதட்டத்துடன்
  "எத்தனை நேரமாக அழுகிறாய்?" என்றேன்.
  புரிந்த அமைதியுடன், "வருடக்கணக்கில்" என்றாள்.

2012/10/01

சம்மதம்

[சற்றே வளர்ந்தப் பாப்பாக்களுக்கு]    டெபொசிஷன் தொடங்கக் காத்திருந்தேன். நான் சொல்லப்போகும் ஒரு கோரமான கொலையின்... ரீவைன்ட்.. தீர்மானிக்க வேண்டியவன் நானல்ல என்பதால் கோர நிகழ்வு என்று கொள்க... நிகழ்வின் விவரங்களைப் பதிவு செய்யப் போகிறார்கள்.

நான், என்னுடைய வக்கீல், டிஏ ஆபீசிலிருந்து இரண்டு பேர், உள்ளூர் காவலதிகாரி ஆக ஐந்து பேர் வசதியாக உட்கார்ந்துப் பேசப் போதுமான இடமில்லை. அறை அடைக்கும் வட்டமேஜையைச் சுற்றி ஒருவரையொருவர் தொட்டும் தொடாமல் அமர்ந்திருந்தோம். எனக்கு இடப்புறம் இருந்த அரசு வக்கீலுக்கு என்னைப் போல் வழுக்கை. என்னிடம் இல்லாத தொப்பை, தொந்தி, ஆண்முலை. அவன் இடதில் ஒரு எல்ஐ - லீகல் இந்டர்ன். சமீபப் பட்டதாரி என்பது அவள் படபடப்பில் புரிந்தது. வெள்ளைச் சட்டையின் இறுக்கத்தில் அவளுடையக் கையடக்க மார்பு அவதிப்பட்டதைப் பார்க்கப் பாவமாக இருந்தது. ஐபேட் புரட்டிய நீள விரல்களில் மரூன் நகப்பூச்சு. இடுப்பின் கீழே என்ன அணிந்திருந்தாள் என்பது, நிச்சயம் அவளிடதில் இருந்த போலீஸ்காரனுக்குத் தெரிந்திருக்கும். போலீஸ்காரனுக்கு இடதில் என் வக்கீல். கேள்விகளுக்கு நான் பதில் சொல்லவும் தவிர்க்கவும் சைகை செயவதற்காக, அவனுடைய ஷூ என் ஷூவை தொட்டுக் கொண்டிருந்தது.

ஐபேடில் பித்தானைத் தொட்டுத் தேதி பெயர் வழக்கு விவரங்களை அறிமுகமாகப் பதிவு செய்து, என்னைப் பேசச் சொன்னாள் எல்ஐ. "எதையும் ஒளிக்காமல் எல்லாவற்றையும் நடந்தது நடந்தபடி சொல்லுங்கள்" என்றாள்.

"அப்படியானால் இன்றைக்கு நாள் முழுதும் ஆகும்" என்றேன்.

"பரவாயில்லை. அதற்குத்தான் எங்களுக்குச் சம்பளம் தருகிறார்கள்" என்றான் அரசு வக்கீல்.

"ஹ்ம்ம்.. எனக்கு ஒரு முத்தம் கூட யாரும் தருவதில்லை" என்றேன்.

"உங்கள் வக்கீலுக்கு நீங்கள் சம்பளம் தருகிறீர்கள், நினைவிருக்கட்டும்" என்றாள் எல்ஐ, தார்க்குச்சிப் பார்வையுடன்.

என் பெயர் முகவரி வயது அன்றையத் தேதி சுய அறிவு வாக்குறுதி என்று குருமாவாக விவரங்களைச் சொல்லிவிட்டுத் தொடங்கினேன்.

    தினேழாம் தேதி, ஞாயிறு மதியம். 'இரண்டாம் வழிபாட்டுச் சேவையும் முடிந்து, சர்ச் நடை அடைத்து, மக்கள் இந்நேரம் சாப்பிடப் போயிருப்பார்களே? யாரையும் காணோமே?' என்று எண்ணியபடி ஆண்களுக்கான லவுஞ்சுள் நுழைந்த போது ஜமாலைத் தவிர எவரையும் காணவில்லை. "ஹேய்" என்றேன். என் லாக்கரைத் திறந்து இரண்டு எக்லிப்ஸ் வில்லைகளை வாயுள் வீசிச் சுவைக்கத் தொடங்கினேன். ஷூ, உடை களைந்தெறிந்து லாக்கரை மூடினேன். வேர்வையையும் சோர்வையும் கழுவ, வெந்நீர்த் தொட்டிக்கு விரைந்தேன். ஆறு மைல் ஓட்டம் தொடர்ந்த அத்லெடிக் கன்டிஷனிங்கில் டிரெய்னர் என்னை மிக நோகடித்திருந்தாள். நரம்புகள் வெந்நீர் இதம் கேட்டுப் போராடின. எண்பது டிகிரி பேரந்ஹைட் நீரில் நிர்வாண உடலை மெள்ள மெள்ள இறக்கிக் கழுத்துவரை நனைத்து.. தோளையும் கழுத்தையும் நிதானத்தைவிட மெதுவாகச் சுழற்றிக் குலுக்கி.. பறவை போல் கைகளை நீட்டி.. தொட்டிச் சுவரோரம் சாய்ந்தேன். சுவற்றின் அதிவேக ஊற்றுக் குழாய்கள் நேர்த்தியாக வெந்நீரைப் பாய்ச்சி என் முதுகெங்கும் மசாஜ் செய்தன. ஆகா! புணர்ச்சியில் கூட இந்த இதம் வராது, உத்தரவாதம். கழுத்தைப் பின்புறம் சாய்த்து இடம் வலமாக, பிறகு வலம் இடமாக, மெள்ள அசைத்தேன். ஊற்றுகள் என் கழுத்தைப் பிடித்துவிட, மீண்டும் உத்தரவாதம்.

சில நிமிடங்களில் வில், ரான், எமிலியோ, ஜமால் என்று வரிசையாக ஸானாப்பெட்டிக்குள் நுழைவதைப் பார்த்து, சற்றுப் பொறுத்துச் சேர்ந்து கொள்வதாக இங்கிருந்தே கையசைத்தேன். இந்த வெந்நீர் மசாஜில் இன்னும் சிறிது மெய் மறப்போம் என்றுக் கண்களை மூடினேன். பின்னால் இப்படியெல்லாம் நிகழும் என்று தெரிந்திருந்தால் கண்களைத் திறவாமல் தொடர்ந்து மெய் மறந்திருப்பேன்.

    நாங்கள் ஐவருமே ஐம்பதைத் தொட்டவர்கள் என்றாலும் ரான் எங்களில் மூத்தவன். வெள்ளைக்காரன். கத்தோலிக்கக் கிறுஸ்தவன். உலகத்துப் பிற மதங்களெல்லாம் பாவங்களின் பிறப்பிடம் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் வளர்ந்தவர்களுக்குப் பிறந்து, உள்ளுக்குள் அதே ஆழ்ந்த நம்பிக்கைகளில் வாழ்பவன். வியட்நாம் போரில் அமெரிக்கக் கர்னலாக இருந்தவன். வியட்காங் தலைவன் ஒருவன் பத்து வயதுச் சிறுவர் சிறுமியரை ஒருவருக்கொருவர் வன்புணரச் செய்து ரசித்ததைப் பார்த்துக் கொதித்து, க்ரனேட் எறிந்துத் தலைவன் தலை மட்டும் சிதறச் செய்தக் கதையை அடிக்கடி சொல்பவன்.

வில், ரானை விடச் சற்று இளையவன். அமெரிக்க விமானப்படையிலிருந்து நற்சான்றுடன் ஓய்ந்தவன். முலட்டோ. வெள்ளைக்கும் கறுப்புக்கும் பிறந்த பிராடஸ்டன்டு கிறுஸ்தவக் கறுப்பன். பல நூற்றாண்டு அடிமைத்தன விளைவின் ஆழ்ந்த வெறுப்பும் அச்சமும் இன்னமும் எண்ணங்களில் விரவியிருந்தாலும், செயலில் சமூக முன்னேற்றத்தை மதிப்பது போல் நடப்பவன். நடிப்பவன்? சாகுமுன் ஒரு வெள்ளையனையாவது ரத்தம் வர மூக்கில் குத்த வேண்டும் என்ற ரகசியமாக ஆசைப்படுகிறவன்.

எமிலியோ, சிறுவனாக லத்தீன்-அமெரிக்க நாடுகள் ஒன்றிலிருந்து ஓடி மெக்சிகோவில் போதைப் பொருள் விற்றுப் பிறகு அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்தவன். தொண்ணூறுகளில் சதாம் ஹூசைனைக் குவைத்திலிருந்துத் துரத்திய முதல் அமெரிக்கப் படைகள் ஒன்றில் சார்ஜன்ட். இடது சாரி. அரசாங்கத் தயவில் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவன். இந்தியர்களை வெறுப்பதாக என்னிடமே ஒரு முறை சொல்லியிருக்கிறான்.

எங்களுள் இளையவனான ஜமால், முஸ்லிம் கறுப்பன். ஏமாந்தால் மால்கம்-X பற்றிக் காரசாரமாகத் தொடங்கி ஒவ்வொரு உரையாடலையும் ஆத்திரத்தோடு முடிப்பவன். வெள்ளைப் பெண்கள் அத்தனை பேரும் கறுப்பன் பூலுக்கு ஏங்குவதாகச் சொல்பவன். யூதர்கள் அமெரிக்காவைக் கட்டி வைத்திருப்பதாகப் பொருமுவதுடன், அவர்களை அல்லா ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கிறார் என்று வெளிப்படையாக வருத்தப்படுபவன். இந்தியப் பெண்களுக்கு செக்ஸ் வராதா, ஏன் கறுப்பர்களைப் பார்த்து நடுங்குகிறார்கள் என்று என்னிடம் அடிக்கடிப் பலவாறு சந்தேகம் கேட்பான். பாகிஸ்தானியருடன் சண்டை போடுவதாக எண்ணிக்கொண்டு என்னைத் தன்னுடன் சண்டை போடச் சொல்வான். என் இந்துக் கொட்டையை அவனுடைய முஸ்லிம் கைகள் காகிதம் போல் கசக்கத் துடிப்பதாகச் சொல்வான்.

நான் கடவுள் மத நம்பிக்கையற்றவன் என்பதால் என்னை ஹிந்டம்ப், ஹிந்டூஷ் அல்லது புழு என்று அழைப்பார்கள். நான் மறுத்தாலும் ஹிந்து என்பது என் மேல் ஒட்டிய அழுக்கு என்பார்கள். ஹிந்துக்களே உலகின் மோசமானத் தீவிரவாதிகள் என்பார்கள். அமெரிக்காவில் நாத்திகராய் வாழ்வது கடினம். அதன் காரணமாகவே, இதோ நீங்களும் என் வக்கீலும் கூட என்னை நம்பாமல் போகலாம். மற்றவர்களை விட நான் ஆரோக்கியமானவன், படித்தவன், தொழில்முறையில் வெற்றி பெற்றவன் என்றச் சிறு கர்வங்கள் எனக்கிருப்பதால் அவர்களைப் பீத்துணி போல் பாவிப்பேன்.

இத்தனையும் கடந்து ஒரு நட்புச்சங்கிலி கண்ணுக்குத் தெரியாமல் எங்களைக் கட்டியது. என்று நினைத்தேன்.

அரசியல் மதம் குறித்துப் பேசக்கூடாது என்பது லவுஞ்ச் விதியென்றாலும் நாங்கள் பொதுவாக உள்ளூர் அரசியலும் உலக மதமும் பேசுவோம். ப்லகோயவிச்சின் பொறுக்கித்தனம் பற்றிப் புலம்புவோம். அல்லது முந்தைய தினங்களின் பேஸ்பால், புட்பால் பற்றிப் பேசுவோம். லின்சே, பேரிஸ், ஜஸ்டின் மற்றும் புது இளசுகளின் போலி நீலப்படங்கள் பற்றிப் பேசுவோம். எங்கள் இனங்களின் கொள்கைகள்.. சில நேரம் குறிப்பிட்ட ஏதாவது மதம்.. எதுவும் இல்லையெனில் சாப்பாடு, மனைவி பற்றிப் புலம்புவோம். அரசாங்கம், சமூகம், குடும்பம் என்று பிறருக்காக உழைத்து உழைத்து ஒரு அங்கீகாரமோ நன்றியோ கிடைக்காத வெறுப்பும் சலிப்பும் கலந்த, பல நேரம் விளிம்பைத் தொடும் உரையாடலின் போது எங்கள் குரல்கள் பலமாவதாலும் பேச்சு கொச்சையாவதாலும்... நாங்கள் ஸானாவில் இருந்தால் பிறர் அந்தப் பக்கமே வரத் தயங்குவார்கள்.

    அன்றைக்கு வழக்கத்தை விடச் சற்று அதிகமாகவே வெந்நீர்த் தொட்டியில் முங்கிவிட்டு ஸானாப் பெட்டிக்குள் நுழைந்தபோது, ரான் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். குழுவில் புது நபர் இருப்பதைக் கவனித்தேன். பருத்த உடல், நீண்ட தாடியுடன் இருந்தப் புதியவனுக்கு தலையசைப்பில் 'ஹலோ' சொல்லிக் கதவை மூடினேன். அவனருகே ஒரு பொட்டலம் இருந்ததையும் கவனித்தேன். ஆரவாரத்தோடு என்னை வரவேற்ற மற்றவர்கள், புதியவனை அறிமுகம் செய்தார்கள். "ரஷாத்" என்றான் ஜமால். "என்னுடைய கசின். லன்டனிலிருந்து வந்திருக்கிறான்".

ரஷாத்தைப் பார்த்தேன். பார்த்தேன் என்றால் அவனுடைய பால்குறியைப் பார்த்தேன் என்று பொருள். இந்தக் கலாசார அமைப்பில் நிர்வாணம் ஒரு பொருட்டேயில்லை. அறிவு நிர்வாணத்தை வேகமாக உணர்ந்துப் புறக்கணித்துவிடும் எனினும், கண்கள் மட்டும் பெண்ணைப் பார்க்கையில் மார்பையும் ஆணைப் பார்க்கையில் புடுக்கையும் நோட்டமிடுவது ஏறக்குறையத் தன்னிச்சையாகி விட்டது. தவிர்க்க முடியவில்லை. ரஷாத் இன்னொரு விதத்தில் தனிப்பட்டிருந்தான். நாங்கள் எல்லாருமே அங்கே சிரைத்திருப்போம். இதுவும் அமெரிக்கக் கலாசார ஒற்றுமையா தெரியாது. ஆனால் ரஷாத் புதர் மண்டிக் கிடந்தான். ரஷாத் எனக்காகச் செதுக்கிய முட்டியில் நான், "சாமியார் நலமா?" என்றுச் சிலேடையாகச் சிரித்தபடி முட்டி கட்டி இடித்தேன். "வாஸப்" என்றேன் பொதுவாக. "கொஞ்சம் நகந்துக்க ஜமால்.. உன் பக்கத்துல உக்காரவா?"

"எங்கே வேணும்னாலும் உக்காருப்பா.. இதுல வேணும்னாலும் உக்காரு" என்ற ஜமால், ஸானா அடுப்பைக் காட்டினான். இருநூறு பேரந்ஹைட்டுக்குப் பழுத்துச் சிவந்திருந்த ஸானாக் கற்கள் பயமுறுத்தின.

"வேணாம்பா, எனக்கு ஏற்கனவே ரெண்டு கல்யாணம் ஆயிடுச்சு, மூணாவதா வப்பாட்டி வேறே" என்றபடி அவனருகே ஒண்டினேன். "உன் கசின்.. ரஷாத்.. நம்ம கூட்டு நிர்வாணத்தைப் பாத்துப் பயந்துடப் போறான்.." என்றேன்.

"நாமதான் அவனைப் பாத்துப் பயப்படணும்" என்று ஜமால் கண்ணடித்தான். "ஹேய் ரான்.. சொல்ல மறந்துட்டனே.. ரஷாத் இஸ் கே" என்றான். "ஆண் துளை இல்லாம அவனால் தூங்க முடியாது", என்றுப் பலமாகச் சிரித்தான்.

"தேவனின் ஆணை எதுவோ, அப்படியே நடக்கும்" என்றான் ரான்.

அப்படிச் சொன்னாலும், ரஷாத்தின் தற்பால் உணர்வு ரானுக்குச் சங்கடம் தந்ததைப் புரிந்து கொண்டேன்.

"அப்ப ஏன் சட்டுனு தள்ளி உக்காந்தே? கவனிக்கலேனு நினைச்சியா?" என்று பலமாகச் சிரித்தேன் நான். அவன் முகம் மாறுவதைக் கவனித்து, "மன்னிச்சுக்க ரான்.. நான் உள்ளே வந்தப்போ ஏதோ சொல்லிட்டிருந்த.. குறுக்கே வந்துட்டேன்.." என்றேன்.

"என்னத்தைப் புதுசா சொல்லப் போறாரு..? அமெரிக்கா அமெரிக்கா இல்லின்னா யேசு யேசு.. த்தா.. இதே தானே?" என்றான் ஜமால்.

"அமெரிக்காவோட வளர்ச்சிக்கு நாங்கள்ளாம் உசிரைக் கொடுத்ததனால தானே இப்போ நீங்கள்ளாம் இப்படிப் பேச முடியுது?"

"மசுரைக் கூடத் தரலே நீ.. என்னாத்த உசிரைக் கொடுத்தேன்றே?"

"வாய மூடு. என் சர்வீஸ் ரெகர்ட் பாக்கறியா? DD214 காமிக்கட்டுமா? வியட்காங்ல..."

"ஆரமிச்சுட்டான்யா.." என்றான் எமிலியோ. "ரான்.. இதையே எத்தனை நாள் சொல்லிட்டிருப்பே?"

"இல்லப்பா.. இந்த நாட்டுக்கு நாங்கள்ளாம் எவ்வளவு செஞ்சிருக்கோம்னு புதுசா வந்தவங்களுக்குத் தெரியணுமில்லே? நேத்து வந்துட்டு என்னமோ குதிக்கறானுவ.. இன்னிக்கு அவனவன் எல்லா நாட்டுலந்தும் வந்து இங்க சுதந்திரமா இருக்கானு சொன்னா அதுக்கு அமெரிக்க மதிப்புதானே காரணம்? அந்த மதிப்பைக் காப்பாத்த எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கோம்?! அப்படி உழைச்ச எங்களுக்கு ஒரு நன்றி.."

"..அதனால் தானே உன் மெடிகேருக்கும் சோஷல் செக்யூரிடிக்கும் நாங்க வரி கட்டி அழுவுறோம்? ..க்காலோழிங்க எங்க வயசான காலத்துல சுத்தமா தடவி வச்சுறப்போறீங்க.. எல்லாம் சரியாப் போச்சு கணக்குல" என்றேன்.

"அப்படிச் சொல்லுபா.. இந்த வெள்ளைக் கெழபாடுங்க சாவுற வரைக்கும் புலம்பிட்டிருப்பாங்க.. செத்தப்புறமும் புலம்புவானுக.. அதுக்கும் நாமதான் வரி கட்டணும்" என்று சேர்ந்து கொண்டான் ஜமால்.

அதுவரை அமைதியாக இருந்த ரஷாத், "அமெரிக்காவை வெறுக்கிறேன்" என்றான். "இது உலகத்தின் மோசமான தேசம்".

"ஏன் அப்படிச் சொல்லுறே?" என்ற ரான், ரஷாத்தை இடித்தான். "உன்னை யார் இங்கே வரச்சொன்னது? பிடிக்கலேன்னா ஊருக்கு ஓடிரேன்?"

"அவன் மனசுல பட்டதைச் சொல்றான், உனக்கென்னப்பா? அவனுக்குப் பேச உரிமை இருக்குது, பேசுறான்" என்றான் ஜமால்.

"ஆமாய்யா.. அவனவன் எங்கிருந்துனா வருவீங்க.. இஷ்டத்துக்கு எதுனா சொல்வீங்க.. அமெரிக்கால கால் வச்சதுமே பேச்சுரிமை மசுரும்பிங்க.. யூட்யூப்ல பேதிக்கிருப்பீங்க.. உங்க வாந்தியைப் பாத்துட்டு வெளில எவனா அமெரிக்கா ஒழிகனு தீ வப்பான்.. த்தா.. உங்களுக்கு உரிமையக் குடுத்துட்டு நாங்க இல்லே சாவறோம்?"

"நீங்க சாவுறீங்களா? அப்ப நாங்கள்ளாம் என்ன நாய் மூத்திரமா ரான்?" என்றான் வில், கடுப்புடன்.

"வெள்ளைத்தோல் இல்லே? அப்படித்தான் பேசும்.." என்றான் ரஷாத்.

பலமாகச் சிரித்த ஜமால், "வெள்ளையா இருக்குற வரைக்கும் தான் அமெரிக்கா.. மிச்சவனுங்கெல்லாம் ஊம்பறானுங்கனு நெனப்பு.. இங்கயே பொறந்து வளந்த எனக்கே அப்படித் தோணுறப்ப இவனுக்கு ஏன் தோணாது?" என்று சேர்ந்து கொண்டான்.

"உங்களையும் சேத்துத்தான் சொன்னேம்பா. காலம் மாறிட்டு வருதே? பழைய கதையை ஏன் இழுக்குறீங்க?" என்றான் ரான்.

"என்னா பழைய கதை? தெருவுல போனா என் காரை நிறுத்துறான் போலீஸ்காரன். கடைத்தெருவுல நின்னா எங்களை மட்டும் தனியா கண்காணிக்கிறாங்க. தாயொழிங்க வெள்ளைக்காரனை எதுனா கேக்குறாங்களா? இதெல்லாம் இன்னும் நடந்துட்டு தானே இருக்குது?" என்றான் ஜமால்.

"அதானே?" என்றான் வில். "நான் ஏர் ஃபோர்ஸ்ல இந்த நாட்டுக்காகப் போராடியிருக்கேன். பீமர் ஓட்டுறேன். வண்டில வெட் ஸ்டிக்கர் இருக்குது. அப்பவும் தெருவுல என் காரை நிறுத்தி ட்ரங்கைச் சோதனை போடுறானுங்க.. வெள்ளைப் போலீஸ் ஓத்தானுங்க"

"புதுசா எத்தினியோ பேருங்க வராங்க.. வெளியில எதிரிங்க இருந்தாங்க.. இப்ப உள்ளுக்குள்ளயே வந்துட்டாங்க.. யாரு எதிரினு எப்படித் தெரியும்? இதா.. நம்ம ஆளு கூட டமில் டைகரா இருக்கலாம்" என்று என்னை இடித்தான் எமிலியோ.

"வாயை மூடு லத்தீன் லத்தி" என்றேன் எரிச்சலுடன். எல்டிடிஈ அமைப்பினால் நான் பட்டக் கஷ்டங்களை நிறையச் சொல்லியிருக்கிறேன். வேண்டுமென்றே இடிக்கிறான்.

"..அதுக்கில்லேபா.. யாரா இருந்தாலும் பாதுகாப்பு வேணுமில்லே? ஒரு போலீஸ்காரன் நாலு பேரை நிறுத்துறப்ப ஒரு நல்லவனும் மாட்டத்தான் செய்வான்.. சண்டை போடுறப்ப நாலு சிவிலியன் சாவலியா?" என்றான் ரான்.

"இன்னிக்குத் தெருவுல நடந்தா வெள்ளையனுக்கும் கறுப்பனுக்கும் இருக்குற பாதுகாப்பு லத்தீன், சைனா, இந்தியாக்காரங்களுக்குக் கிடையாது.. காலம் மாறிட்டுத்தான் வருது.." என்றேன். "இந்தியப் பொண்ணுங்களை உங்க ஆட்கள் பாக்குற பார்வையை தினம் நானும் பாத்துட்டுத்தான் இருக்கேன்" என்றேன்.

"எங்கே பார்த்தாலும் இனவெறி. ஒண்ணுக்கு இருக்குறதுலந்து அரசாங்கம் எல்லாத்தையும் கண்காணிக்குது. கேட்டா.. சுதந்திரம்னு கதை உடறாங்க. அமெரிக்காவுக்கு ஏன் வந்தோம்னு தோணுது..." என்றான் ரஷாத்.

"யேசுவை மதிக்கிற நாளில் எல்லாம் சரியாயிடும். இது யேசு பூமி.."

"முண்டம்.. இது யேசு பூமியில்லை. எகிப்திலிருந்து இஸ்ரேல் வரைக்கும் எங்கேயோ யேசு பூமி. இப்போ அதுல தானே அடிதடி? சரித்திரம் படிக்கலியா? இல்லே  ந்யூஸ் புரியலியா?" என்றேன்.

"ஃபக் யூ.. இந்துக்களுக்கு உங்க நாடு இருக்கு. முஸ்லிம்களுக்கு அவங்க நாடுங்க. புத்திஸ்டுக்கு அவங்க நாடு. கம்யூனிஸ்டுக்கு அவங்க நாடு.. அது போல இது கிறுஸ்தவ நாடு.. இங்க வந்துட்டா இந்த நாட்டையும் இந்தக் கடவுளையும் மதிக்கணும்.. திஸ் இஸ் அமெரிக்கா.. திஸ் இஸ் அவர் லேன்ட்.. திஸ் இஸ் அவர் காட். எங்க நாட்டையும் எங்க கடவுளையும் மதிச்சா தாராளமா வாங்க. பிடிக்கலியா? ஊரைப் பாக்க ஓடுங்க.. ஓடுகாலி நாடுங்களுக்கு அள்ளி அள்ளிக் குடுத்து எங்க நாட்டுக்கு என்ன லாபம்? எங்களுக்கு அமெரிக்காவும் யேசுவும் போதும். இது யேசு ஆசீர்வதிச்ச பூமி..".

ரான் உணர்ச்சி வசப்பட்டிருந்தது புரிந்து நாங்கள் சற்று அமைதியானோம்.

திடீரென்று, "ஃபக் யூ, ஃப்க் யுர் ஃபக்கிங் கன்ட்ரி, அந்ட் ஃபக் யுர் ஃபக்கிங் காட்" என்றான் ரஷாத் கோபமாக, நடுவிரலை உயர்த்தி.

நாங்கள் அனைவருமே அதிர்ந்தோம். ஒரு வரியில் இத்தனை ஃபக் சேர்த்துப் பேசிக் கேட்டதில்லை என்று எனக்குத் தோன்றியது. சில நொடிகள் அறையில் அமைதி. ரஷாத்தின் ஆவேசம் ஏற்கப்படவில்லை. ரானின் முகம் ஸானா அடுப்பை விடச் சிவந்துவிட்டது.

தன்னைச் சொன்னாலும் பரவாயில்லை - தன் கடவுளை - இன்னொருவன், அதுவும் முஸ்லிம், தெருவழக்கில் ஓத்தா ஒம்மா என்றால் எந்தக் கேதலிக் வலதுசாரி அமைதி காப்பான்? ரான் வெறியுடன் ரஷாத்தின் முகத்தில் தன் மண்டையால் இடித்தான். திக்குமுக்காடிப் போன ரஷாத் சுவற்றில் சாய்ந்து நிலைபெறுவதற்குள் ஜமால் ரான் மேல் பாய்ந்து, ரானின் இடது முழங்கையை ஸானா அடுப்பில் வைத்துத் தேய்த்தான். நொடிகளில் கை தீய்ந்து எலும்பு வரை ரத்தமும் சதையும் சூட்டில் கருகி, காய்ந்த ரத்தவாடை அறையுள் பரவியது. ரான் அலறினான். வில் ரானையும், நான் ஜமாலையும் பிரிக்கப் பார்த்தோம். ரான் திமிறி ரஷாத்தின் முகத்தில் எட்டி உதைத்தான். "முஸ்லிம் பொறம்போக்கு.. என் நாட்டுக்கு வந்து என் கடவுளையா அப்படிப் பேசுறே? ஹோமோத் துக்கிரி" என்று காறித் துப்பினான். ஜமால் என்னை உதறியதில் நான் தடுமாறிக் கதவில் முட்டி.. இதோ என் வழுக்கைத் தலையில் இங்கே அடிபட்டு ரத்தம் கொட்டத் தொடங்கியது. நான் விழுவதைப் பார்த்த எமிலியோ, ஜமாலைப் பிரித்துத் தனிக்கட்டப் பார்த்தான். ஜமாலுக்கு வந்த எரிச்சலில் வில்லைத் திட்டினான். "..த்தா.. நீயெல்லாம் கறுப்பனா? இந்த வெள்ளைப் பன்னியைக் காப்பாத்துறியே?" என்று வில்லை நோக்கித் துப்பினான். ரான் சும்மா இராமல், "எத்தனை கறுப்பனுக வந்தாலும் வாங்கடா.. வரிசையா வந்து ஊம்புங்க" என்று மறுபடி ஜமாலை உதைக்கப் போக, ஜமால் ரானின் காலைப் பிடித்து ஒரு சுழற்று சுழற்றினான். வில், ரான் இருவருமே தடுமாறி விழுந்தார்கள். அதுவரை ஒத்துழைத்த வில் இப்போது கட்சி மாறி ரானை ஏசினான். நான் என் தலைக்காயத்தை அழுத்தியபடி, "பொறுமை.. தயவுசெய்து நிறுத்துங்க.. இது விபரீதமா போயிட்டுது" என்றேன். "இந்தப் பீ மூஞ்சிய எவன் உள்ளே விட்டது?" என்று என்னைத் தள்ளிவிட்டு, ரான் மறுபடி ஜமாலை இடிக்கப் போனான்.

ரஷாத் அருகேயிருந்தப் பொட்டலத்திலிருந்து ஒரு கைத்துப்பாக்கியை எடுத்து எங்கள் முன் வெறியோடு நின்றான். அசல் யு22 நியாஸ் பெரட்டா! மேன்! யூ நோ.. ஃபக்.. நாங்கள் ஆடிப்போனோம்! அந்தக் கணத்தில் நாங்கள் எல்லோருமே விளிம்பைத் தாண்டி விட்டோம் என்று நினைக்கிறேன்.

எமிலியோ ரஷாத்தை அமைதிப்படுத்த முனைந்தான். நான் கதவருகே நின்றிருந்தேன். 'கடவுள் மதக் கண்றாவி எப்படியெல்லாம் படுத்துது! முட்டாள் சுட்டுருவானா?' என்றுக் கலங்கினேன். ஜமாலும் வில்லும் கூட இதை எதிர்பார்க்கவில்லை. ரஷாத்தின் குரலில் தீவிர ஆத்திரம். "ஜமால், இந்த வெள்ளைச் சூத்தை இன்னிக்குப் பதம் பாக்கப் போறேன். எனக்கு வெள்ளைத் துளை வேணும்" என்றான். துப்பாக்கியை வேகமாக ஆட்டினான்.

"ஸ்டாப் இட்!" என்று நானும் எமிலியோவும் அலறினோம். ஜமால் குரூரப் புன்னகையுடன், "ரான்.. முஸ்லிம் சுன்னி எப்படி இருக்குதுனு பாக்குறியாடா, கேதலிக் பன்னி?" என்றான்.

"வேண்டாம்.. ஜமால்.." என்று வில் அவனைத் தடுத்தான். "எல்லாத்தையும் மறந்துடுவோம்.. ப்லீஸ்.. இன்னிக்கு நாள் சரியில்லனு போயிருவோம்".

"நோ ஷிட்.." என்ற ரஷாத், ரானை வயிற்றில் எட்டி உதைத்தான். இதை எதிர்பார்த்தது போல் ரான் சற்று ஒதுங்கி வயிற்றால் ரஷாத்தின் கால்களைத் தாங்கித் தள்ளினான். ராணுவப் பயிற்சி. ரஷாத்தின் கையிலிருந்தத் துப்பாக்கி எகிறி ஸானாப் பெஞ்சின் மேல் தளத்தில் எங்கேயோ விழுந்தது. நான் ரஷாத்தை அடக்க விரைந்தேன். வில் ரானை அழுத்திப் பிடித்துக் கொண்டான்.

ரான் ஒரு நிலையில் இல்லாமல், கத்தத் தொடங்கினான். முழங்கைப் புண் மூளைக்கேறியிருக்க வேண்டும். "என் நாட்டை விட்டுப்போங்க எல்லாரும். ஃபக் யூ ஆல் ஹீதன்ஸ். பொன்னாள் வரும்போது நீங்க எல்லாருமே என் ஜீசஸுக்கு கைகட்டிச் சேவை செய்வீங்க" என்று காறித் துப்பினான். திமிறினான்.

எமிலியோ "நான் போலீஸைக் கூப்பிடுறேன்" என்று சட்டென்று கதவைத் திறந்து ஓடினான்.

"வில், இவன் கையைப் பிடிச்சுக்க" என்றான் ஜமால். ஜமாலும் வில்லும் ரானைப் புரட்டி நிற்க வைத்துச் சாய்வாகப் பிடித்துக் கொண்டார்கள். என் முகத்தில்.. இதோ இங்கே.. இடித்து என்னை உதறிய ரஷாத், ரானின் பின்புறத்தை நெருங்க, ரான் அலறினான். "ஹெல்ப். கெட் ஹெல்ப்! என்னால் இந்தக் கறுப்புப் பன்றிகளை சமாளிக்க முடியும்" என்று திமிறினான். பின் காலால் வில்லின் ஆண்குறியில் சரியாக உதைத்தான். ஜமால் ரானை வெறியோடு ஸானா அடுப்பின் மேல் தள்ளினான். மறுபடி ரானை பெஞ்ச் அருகே நிற்க வைத்தார்கள். வில் ரானின் கால்களை அகற்றிப் பரப்பினான். "ரஷாத்... வா, வந்து மாடாட்டம் இவனை ஏறு" என்றான் ஆத்திரத்துடன். ரான் மீண்டும் திமிறினான்.

நான் சுற்று முற்றும் பார்த்துவிட்டு செய்வதறியாமல் தவித்தேன். ஏதோ தோன்றியது. உதவி தேடலாமென்று, சட்டென்றுக் கதவைத் திறந்து ஓடினேன். ஸானா அறை, நீச்சல் குளம் எல்லாம் கடந்து மாடியேறி வருகையில் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. நான்கு அல்லது ஐந்து முறை, சரியாகக் கவனிக்கவில்லை. திரும்பலாமா என்றுத் தயங்கினேன். அதற்குள் எமிலியோ செக்யூரிடி ஆட்களுடன் வருவதைப் பார்த்தேன்.

நாங்கள் ஸானா அறைக்குள் நுழைந்த போது, வில் மார்பில் சுடப்பட்டிருந்தான். ஜமால் கழுத்தில் சுடப்பட்டிருந்தான். இருவரும் இறந்து விட்டார்கள் என்று தெரிந்தது. ரான் தொடையில் சுடப்பட்டு, ஸானா அடுப்பின் மேல் விழுந்திருந்தான். செக்யூரிடி ஆள் ஆனை அவசரமாகப் புரட்டித் தள்ளினான். ரானின் மார்பெல்லாம் தீப்புண். சுட்டுப் பொசுங்கியிருந்தது. "ஜீசஸுக்குப் பெருமை" என்று முனகலாக ஜெபித்துக் கொண்டிருந்தான். அருகே ரஷாத் முன் மண்டையில் சுடப்பட்டுக் கிடந்தான். கைகளும் உதடுகளும் துடித்துக் கொண்டிருந்தன.

சொல்லி முடித்து என் வக்கீலைப் பார்த்தேன். எனக்கு மட்டும் புரிகிற பாணியில் புன்னகை செய்தான். அரசாங்க வக்கீல் கொடுத்தத் தண்ணீரை நன்றியுடன் வாங்கிப் பருகினேன். எல்ஐ வெலவெலத்துப் போயிருந்தது அவள் முகத்தில் தெரிந்தது. இன்றிரவு இவள் தூங்கினாற் போல்தான். என்னைத் துணைக்குக் கூப்பிட்டால் போகலாம் என்று நினைத்தக் கணத்தில், போலீஸ்காரன் இன்னும் அவள் இடுப்பைப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கவனித்தேன். குரல் கனைத்த அரசு வக்கீல், "நன்றி" என்றான்.

"அப்ப நான் கிளம்பலாமா? தலைக்காயம் கண்ணைக் கட்டுது. ஓய்வெடுக்கணும்" என்றேன். வக்கீல் சொல்லிக் கொடுத்திருந்தான்.

"நீங்க குடுத்த டெபொசிஷன் நகலை உங்க வக்கீல் கிட்டே சேர்க்குறப்ப ஏதேனும் வேறே கேள்விகள் இருந்தால், உங்க வக்கீல் வழியா சொல்லியனுப்புறோம்" என்ற அரசு வக்கீல், தன் குறிப்புக்களை அவசரமாகப் பார்த்தான். பாவி! நான் சொன்னதை நோட்ஸ் வேறு எடுத்திருக்கிறான். "இப்போதைக்கு ஒண்ணு ரெண்டு கேள்விங்க" என்றான். என் வக்கீலின் ஷூ, என் ஷூவை நெருங்குவதை உணர்ந்தேன்.

"உதவி தேடி ஓடுறதுக்கு முன்னே ஏதோ தோணிச்சுனு சொன்னீங்களே, என்ன நினைச்சீங்க?"

"அ.. அ.. அவங்கள அப்படியே விட்டு ஒடுறதானு ஒரு சந்தேகம்.. பயம்.. அவங்களைப் பிரிக்கலாமா, ஓடி உதவி கேட்கலாமானு தான்.."

என்னை ஆழமாகப் பார்த்தான் அரசு வக்கீல். "துப்பாக்கி எகிறி விழுந்துச்சுனு சொல்றீங்க... எப்படி யார் கைல கிடைச்சிருக்கும்னு நினைக்கிறீங்க?"

ஷூ ஒரு வினாடி அழுத்த, "தெரியாதுங்க" என்றேன்.

"உதவி கேட்டு வரும்போது துப்பாக்கிச் சத்தம் கேட்டுச்சுனு சொன்னீங்க.. விட்டு விட்டுக் கேட்டுச்சா? எத்தனை நொடி இடைவெளி? ஸானா அறையிலந்து மாடிப்படிக்கு ஓடி வர எத்தனை நேரமெடுத்துக்கிட்டீங்க?"

ஷூ சற்று பலமாக அழுத்த, "எனக்கு அப்ப இருந்தப் பதட்டத்துல சரியாக் கவனிக்கலிங்க.." என்றேன்.

"பெரட்டா யு22னு தெளிவா சொல்றீங்க? உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"நான் ரஷாத் பக்கத்துல நின்னுட்டிருந்தேன். கண் முன்னால துப்பாக்கிய ஆட்டிட்டிருந்தான்.. துப்பாக்கி லோகோ பார்த்தேன்"

"ஸானா அறையிலந்து மாடிப்படி வரை ஓடி வந்தாலும் ரெண்டு நிமிஷம் ஆகியிருக்கும்.. நாலஞ்சு தடவை வெடிச்சத்தம் கேட்டும் நீங்க தொடர்ந்து ஓடி வந்தீங்களா? ஏன்?"

"பயம்"

"நீங்க துப்பாக்கி வச்சிருக்கீங்களா? உங்க பேர்ல ரெஜிஸ்டர் பண்ணியிருக்கீங்களா?"

வக்கீல் குறுக்கிட்டு, "இந்தக் கேள்விக்கு என் க்லையன்ட் பதில் சொல்ல வேண்டியதில்லை" என்றான்.

"நீங்கள் கடவுள் மத நம்பிக்கையற்றவர்னு சொன்னீங்க.. அப்படி நம்பிக்கையுள்ளவர்களை நீங்கள் வெறுக்கறீங்களா?"

வக்கீல் மீண்டும் குறுக்கிட்டு, "இந்தக் கேள்விக்கு என் க்லையன்ட் பதில் சொல்ல வேண்டியதில்லை" என்றான்.

'இதென்ன.. என்னைக் குறுக்கு விசாரணை செய்கிறார்களே? போக்கு சரியில்லையே?' என்றுக் கலங்கினேன்.

அதற்குள் என் வக்கீல் எழுந்தான். உடனே நானும் எழுந்தேன். குறிப்புப் புத்தகத்தை மூடி, "நன்றி. டெபோசிஷன் ஓவர்" என்றான் அரசு வக்கீல். "வழக்கு முடியும் வரை உங்க வக்கீல் அனுமதியில்லாம நீங்க வெளியூர் எங்கேயும் போக முடியாது".

    மேற்சொன்ன விவரங்கள் தொடர்பான 'படுகொலைகள்' பற்றி, உங்களில் சிலர் சிகாகோ புறநகர் டிவி பத்திரிகை அல்லது இணையம் வழி அறிந்திருக்கலாம். பெயர்தான் படுகொலையே தவிர, வழக்கு கோர்ட்டுக்குக் கூடப் போகவில்லை. ரானும் ரஷாத்தும் ஆஸ்பத்திரியில் இறந்து போனார்கள். ரானின் வலது கைவிரல்களில் துப்பாக்கி துகள் படிந்திருந்ததால், ரான் மற்றவர்களைச் சுட்டுத் தன்னையும் சுட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்றார்கள். ரஷாத்தின் விரல்களிலும் துகள் இருந்ததால், ரானை ரஷாத் சுட்டிருக்கலாம் என்றார்கள். எத்தனை தேடியும் துப்பாக்கியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஸானா அடுப்பின் நடுவிலிருந்து உருத்தெரியாது உருகிப் போன சில உலோகத்துண்டுகளைக் கண்டெடுத்தார்கள். அது துப்பாக்கியா என்று ஆராய்வதற்குள் ரான் ரஷாத் மரணங்கள் சேர்ந்து கொள்ள, வழக்கை மூடிவிட்டார்கள். "துரதிர்ஷ்டமான இனவெறி விளைவுகள்" என்றார் கமிஷனர். என்றார் மேயர்.

    மூன்று மாதங்கள் கழித்து, இறந்த குடும்பங்கள் சார்பில் பொது இரங்கல் ஏற்பாடு செய்திருந்தார்கள். கேதலிக் ப்ராடஸ்டன்டு பாதிரிகள், ஒரு உள்ளூர் இமாம் என்று வரிசையாக தெய்வச்செய்தி சொன்னார்கள். உள்ளூர் காங்கிரஸ்காரன் தலைமை தாங்கிப் பேசினான். "ரானைக் கொன்றது கொலஸ்டிரால் அல்ல. வில் இறந்த காரணம் அவருக்கு இருந்த டயபடீசோ, அல்லது ஜமாலைக் கொன்றது அவருடைய ப்ராஸ்டேட் தொந்தரவோ அல்ல. வாலிபன் ரஷாத்துக்குத் தலைவலி கூட வந்ததில்லையாம். எனில், இவர்களைக் கொன்றது எந்த வியாதி? அன்பர்களே, சிந்தியுங்கள்! நாம் வணங்கும் கடவுளுக்குப் பல பெயர்கள், பல உருவங்கள். நம்மை வழி நடத்தும் மதங்களுக்குப் பல பெயர்கள், பல வேதங்கள். எனினும், நாம் எல்லோரும் ஒரு கடவுளின் பிள்ளைகள் என்பதை மறக்கும் பொழுது விபரீதங்கள் ஏற்படுகின்றன. மனிதம் எனும் பொதுமதத்தின் உறுப்பினர்கள் என்பதை மறக்கும் பொழுது கேடு விளைகிறது. நமது அமெரிக்காவின் பார்வையில் பேதம் கிடையாது. வீ ஆர் ஒன் நேஷன் அன்டர் காட். எல்லா மதங்களும் இங்கே அமைதியையே பாதையாகக் காட்டுகின்றன. பயணம் போகும் நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்" என்றுப் பேசி அனைவரையும் கவர்ந்தார் மேயர். சில கண்ணீர்க் கண்களைப் பார்த்தேன். ரானின் விதவை, இறந்த அனைவருக்கும் சேர்த்து உரத்தப் பிரார்த்தனை செய்தாள். இதையெல்லாம் ஒதுக்கி ஜமாலின் பிள்ளை வில்லின் பெண்ணுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். சடங்குகளில் தளர்ந்து போன ரானின் பேரப்பிள்ளைகள், ஜமால் உறவினர் ஒருவர் மடியில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

எனக்கு இதெல்லாம் ஆச்சரியமாகவும் அருவருப்பாகவும் இருந்தது. திடீரென்று அல்லாவும் யேசுவும் கூடி உலக சமாதானம் பேசுவது போல் பட்டது. என் கண் முன்னே ரான், ரஷாத், வில், ஜமாலின் மதவெறியும் இனக்காழ்ப்பும் கொலாஜ் கட்டி ஆடின. இங்கே சர்வமதச் சமாதான இரங்கல், அதே வெறியர்களின் நினைவில்! என்னால் பொறுக்க முடியவில்லை. எழுந்து வெளியே வந்து, இரங்கல் விருந்தினருக்குத் தர வேண்டிய பழத்தட்டுகளில் உதிர்ந்த திராட்சை, ஸ்ட்ராபெரி என்று அடுக்கத் தொடங்கினேன்.


[பின் கதை]

    நாலைந்துப் பழத்தட்டுக்கள் அடுக்கியிருப்பேன். அதுவரை என்னுடன் பேசாத எமிலியோ மெள்ள என்னருகே வந்து நின்றான். "ப்ரோ" என்றேன். அவன் எதுவும் சொல்லவில்லை. நான் அவனை உந்தாமல் பொறுமையாக இருந்தேன். ஒன்றிரண்டு பிள்ளைகள் பழத்தட்டு எடுக்க வந்தனர். அவர்கள் விலகியதும் எமிலியோ பலத்தப் பெருமூச்சு விட்டான். புன்னகைத்தேன்.

"ஜிம் பக்கம் போனியா?" என்றான்.

"இல்லை.. அங்கே போனா மனசு ரொம்ப பாதிக்கும்"

"எனக்கும். நேத்து மெம்பர்ஷிப் கேன்சல் செய்யப் போயிருந்தேன். ஸானா அறையை சுத்தமா இடிச்சுட்டாங்க. வேறே ஓபன் வ்யூ ஸானா கட்டப்போறாங்களாம்"

"அப்படியா?"

சிறிது மௌனம்.

"உலோகத் துண்டுகள் துப்பாக்கியினதல்லனு சொல்லிட்டாங்க.." என்றான்.

"படிச்சேன்"

"நாலு பேரும் இறந்துட்டாங்க. துப்பாக்கியும் காணோம். வழக்கே இல்லை"

"படிச்சேன்"

உடைந்தான். "காரணமே இல்லாம.. எதுக்காகச் செத்தாங்கனு ஒரு சின்னம் கூட..", அவன் குரல் கம்மத் தொடங்கியது.

அடங்கிச் சிறிது மௌனத்துக்குப் பிறகு என் மிக அருகில் வந்தான். "தப்பா நினைக்காதே. நாம் இனி நண்பர்களாக இருக்க முடியாது என்று சொல்லத்தான் வந்தேன்" என்றான்.

அதிர்ச்சி கலந்த வியப்புடன் பார்த்தேன்.

என் கண்களை நேராகச் சந்தித்து, "என் மதம் எனக்கு முக்கியம் என்றாலும், அதற்காகச் சாக விருப்பமில்லை" என்று மெள்ள விலகினான். வேகமாக நடந்து மறைந்தான். என் கையில் பழத்தட்டு நடுங்கியது.