கூடியிருக்கும் புராண வித்தகர்களுக்கு ஒரு புதிரான புதிர்.
1. குபேரனுடைய 'அழிவில்லாத' செல்வத்தை ஒரு பகலில் அழித்தவர் யார்?
    அ)அகத்தியர் ஆ)வினாயகர் இ)பார்வதி ஈ)ராவணன்
2. 'சிரஞ்சீவி'யான அனுமானை ஒரு முறை கொன்றது யார்?
    அ)சூரியன் ஆ)இந்திரன் இ)கருடர் ஈ)கார்த்திகேயர்
3. ஒரு யானை பலம் கொண்ட பீமனுக்கு ஆயிரம் யானை பலம் கொடுத்தது யார்?
    அ)வாயு ஆ)அனுமான் இ)பரமசிவன் ஈ)நாகராணி
    சமீபத்தில் ரசித்த பாடல், காட்சி. சுசீலா கொஞ்சுகிறார். சரோஜாதேவி கெஞ்சுகிறார். சிவாஜி ம்ம்.. கிறார்.
    "ஹலோ.. நல்லா இருக்கீங்களா..? நான் தான் பேசுறேன்" என்று பெயர் சொன்னதும், அரை நொடி தயங்கி முகத்தில் அடித்தாற் போல் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்படுகிறது.
இந்த நிலையில் மனதில் சில எண்ணங்கள் தோன்றுகின்றன. ஒருவேளை லைன் கட்டாகியிருக்குமோ? ஒரு வேளை ராங்க் நம்பரோ? பிறகு சமாதானமாகி, "வேண்டுமென்றே தான் துண்டித்திருக்கிறார்கள்" என்ற உணர்வு வந்ததும் மேலும் சில எண்ணங்கள். ஏன்? 'நல்லா இருக்கீங்களா?' என்றுதானே கேட்கிறோம்? எதிரியாக இருந்தால் கூட ஒரு கண்ணியத்துக்காகவோ அல்லது கோபத்தினாலோ "பேச விருப்பமில்லை.." என்றோ, "கட்டையிலே போறவனே.. இனி போன் செய்தால் செருப்பாலடிப்பேன்" என்றோ சொல்லும் நேர்மை கூட இல்லாமல் போனதேன்? அல்லது, "ஹலோ.. ஹலோ.." என்று வேண்டுமென்றே காதில் விழாதது போல் இழுத்தடிப்பது பொறுக்காமல் நாமாகவே துண்டித்து மீண்டும் அழைக்கையில், "தற்சமயம பிஸியாக.." என்றோ "சுவிச் ஆப் செய்யப்பட்டுள்ளது" என்றோ.. செய்திக்குப் பின் தப்பிக்கும் கயமைத்தனம் கூட தோன்றாமல் போனதேன்? "நல்லா இருக்கீங்களா?" என்று கேட்டவரிடமா இப்படிப் பண்பில்லாமல் நடந்து கொள்வது? இன்னும் நிறைய எண்ணங்கள் தோன்றி சற்றே வதைத்து வாட்டுகின்றன.
உங்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறதா?
நண்பர் அரசனுக்கு இந்த நிலை ஒரு முறை ஏற்பட்டது. என்னிடம் விவரங்களைச் சொன்னார்.
"கீழ்த்தரமானவங்க அப்படித்தான் இருப்பாங்க" என்றேன்.
"ஏன் அப்படிச் சொல்லுறே?" என்றார்.
"பின்னே என்ன சார்? ஒருத்தரை வெறுக்கிறோம்னா அதை வெளிப்படையா சொல்லலாமே? அந்த நேர்மை கூட இல்லாம... நீங்க என்ன தொந்தரவு கொடுக்கவா போன் செஞ்சீங்க? அப்படியே இருந்தாலும் நல்லா இருக்கீங்களானு கேட்ட உடனே இப்படியா நடந்துக்குவாங்க.. ப்ரூட்"
அரசன் புன்னகைத்தார். "என்னைக்கும் மனசுல பட்டதை சொல்லி இப்படியே இருடா என் ராசா" என்றார். பிறகு, "இதுல அவங்க செஞ்சது ஒண்ணும் கீழ்த்தரம் இல்லை அய்யா.. பிழை என் பேரில் தான்" என்றார்.
அரசனிடம் இந்தக் கெட்டப் பழக்கம் இருந்தது. எல்லாவற்றையும் சமன் தூக்கிப் பார்ப்பது. கேள்வியோடு பார்த்தேன்.
"இல்லய்யா.. அவங்களுக்கு நான் போன் செஞ்சது பிடிக்கலே.. பிடிக்காதவங்க போன் செஞ்சா நீ சொல்லுறாப்புல நாசமாப்போறவனேனு திட்டியோ.. இல்லே பலமா எச்சரிக்கை செஞ்சோ.. அவங்க பேசியிருக்கலாம்தான். ஆனா அப்படி எதுவும் செய்யாமே சட்டுனு போனை முகத்திலடிக்குறாப்புல வைக்குற கீழ்த்தரம் அவங்களுக்கு வந்ததுக்கு நான் தானே.. என்னுடைய குரல் தானே.. என்னுடைய பெயர் தானே காரணம்? அவங்க என்னை மறந்து இருந்த நேரத்துல என்னை நானே அவங்க நினைவுல நுழைச்சு அவங்க மனதுல வெறுப்பைத் தூவினது.. நான் தானே? அதனால அவங்க கீழ்த்தரமா நடந்துக்கிட்டாங்களேன்றதை விட, நான் அவங்களைக் கீழ்த்தரமா நடக்க வச்சுட்டனேனு எனக்கு வருத்தமா இருக்கப்பா.. அவங்களோட அன்றைய தின வாழ்க்கையிலே கீழ்த்தரமான பண்பற்ற நடத்தை வெளிப்பட நான் காரணமாயிட்டனேனு வருத்தம்"
"உங்களைப் புரிஞ்சுக்கவே முடியலே ஐயா" என்றேன்.
"ஒரு நாள் புரிஞ்சுக்குவே.. புரியாத போனாலும் பரவாயில்லே" என்றார்.
நண்பர் அரசனின் நினைவு நாள் அடுத்த மாதம் வருகிறது. "புரிந்து கொண்டேன் நண்பரே" என்று சொல்ல வேண்டும்.
ஒரு சிக்கலை, சிக்கலின் வேர் புரியாமல், என்னுடைய கோணத்திலேயே பார்த்து அடுத்தவர்களைப் பாதிக்குபடியான முடிவெடுக்கும் பழக்கத்திலிருந்து என்று விடுபடுவேன்?
நல்ல ஆசான்களை இழப்பது கொடுமையானது.
    'கோர்பரெட் ஸ்ட்ரேடஜி' பற்றி அவரவர் கிழிகிழி என்று கிழித்திருக்கிறார்கள். கிழிக்க எதுவும் இல்லையென்றால் கிழிந்ததை இன்னும் நையக் கிழித்திருக்கிறார்கள். என்னாலேயே நம்பமுடியவில்லை எனினும், நானும் இந்த வகையில் கொஞ்சம் கிழித்திருக்கிறேன்.
இது ரொம்ப சுளுவான விஷயம், யார் வேண்டுமானாலும் தங்கள் எண்ணங்களைச் சொல்லலாம். செயல்பாட்டில் தானே இருக்குது சூட்சுமம்? செயலில் இறங்க வேண்டியத் தேவையில்லாத வரையில், சொல் சித்தர்களுக்குக் குறைவே இல்லை. உதாரணத்துக்கு.. இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே போவதைத் தடுக்க எத்தனை பேர் என்னிடம் ஸ்ட்ரேடஜி சொல்லியிருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? (ஏழாம் வாய்ப்பாட்டின் கீழ் வரிசையில் வருகிறது விடை).
எழுபதுகளில் ஜபேன், ஜெர்மனி, கேடர்பில்லர், கோமாட்சூ என்றார்கள். எண்பதுகளில் சைனா, ஆப்பில், மோடரோலா, என்றார்கள். தொண்ணூறுகளில் ஆப்பிலை வெறுத்தார்கள். நோகியா, மைக்ரோசாப்ட், இன்டெல், நெட்ஸ்கேப், அமெரிக்க ஐக்கிய சபை, கோர்பசேவ் என்றார்கள். முதல் பத்தில் டெல், மறுபடி ஆப்பில், கூகுல் என்றார்கள். பின் பத்தில் இதுவரை மீண்டும் சைனா, இஸ்ரேல், பேஸ்புக், வால்மார்ட் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த பத்தில் ஆப்பில், பேஸ்புக் எல்லாம் காணாமல் போகும்.. சைனா கூட தடுமாறலாம்.
எல்லாமே அந்தக் கணத்தின் அறிவை ஒட்டிப் பிறக்கும் சிந்தனைகள். பத்தே நிமிடங்களில் புஸ்வாணமாகும் சிந்தனைகள். அதனால் பெரும்பாலான ஸ்ட்ரேடஜி புத்தகங்களை நான் படிப்பதே இல்லை. முன்போல் ஓசியில் நிறைய புத்தகங்கள் கிடைப்பதில்லை. எப்பவாவது கிடைத்தாலும் சிரித்துக் கொண்டே அவசியம் படிப்பதாகப் பொய் சொல்லி அடுத்த வாரமே யாருக்காவது பரிசாகக் கொடுத்து விடுவேன்.
சமீபத்தில் படித்த புத்தகம் - தலைப்பு காரணமா, இல்லை இதை எனக்கு அன்பளிப்பாக வழங்கிய முன்பின் அறியாத பக்கத்து இருக்கையில் என்னுடன் பறந்த பயணியின் அறிவுக் களை காரணமா, தெரியவில்லை, படிக்கத் தோன்றியது, படித்தேன். அட! என் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமோ என்று எண்ண வைத்தது. கால் ஹேமரிக் மற்றும் ரிசர்ட் லூயிஸ் இணைந்து எழுதியிருக்கும் மேலாண்மைத் தந்திரம் பற்றிய புத்தகம் "Fish can't see water". இந்தப் புத்தகம் இன்னும் அமெரிக்காவிலேயே பரவலாக வெளிவரவில்லை என்பதைத் தெரிந்து கொண்ட போது ப.இ.பயணிக்கு மனதார நன்றி சொன்னேன்.
தானிருக்கும் நீர் நிலையைப் பற்றி அதில் நீந்தும் மீனுக்குத் தெரிய வாய்ப்பில்லை (என்று வைத்துக் கொள்வோம்). அதே போல் ஒரு வளரும்/வளர்ந்த நிறுவனத்துக்கு, அதன் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த (ஊழியர்களின்) பண்பு கலாசாரம் போன்றவற்றைப் பற்றிய பார்வை கிடைக்க வாய்ப்பில்லை. இந்தக் கருத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருக்கும் புத்தகம். ஒரு தந்திரம் பலன் தருமா தராதா என்பதைத் தீர்மானமாகச் சொல்லவே முடியாது என்ற துணிச்சலான கருத்தை உலகத்தின் பல நிறுவனங்களின் வரலாற்றை ஒட்டி எழுதியிருக்கிறார்கள். ஆசிரியரின் சொந்தக் கண்டுபிடுப்பான 'cultural dynamic model' என்னும் குழப்படிக் கருவியை வைத்து ஆறுவித கோர்பரேட் கலாசாரங்களை ஆராயும் சுவையான புத்தகம். ஒரு நிறுவனத்தின் உலகளாவிய வெற்றி தோல்விகளை அதனுள் நிரவியிருக்கும் கலாசாரக் கடலின் போக்கே தீர்மானிக்கிறது என்று நம்பும்படி சொல்லியிருக்கிறார்கள்.
எம்பிஏ படிப்பவர்களும் மேலாண்மைக் கலையில் விருப்பமுள்ளவர்களும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். குறிப்பாக, பங்குச் சந்தையில் விளையாடுவோர், கம்பெனிகள் வாங்க விற்க என்று எல்.ஆர்.சுவாமி (இன்னும் இருக்கிறதா?) பாணியில் அலையும் இன்வெஸ்ட்மென்ட் ஆசாமிகள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். அவர்களைத் தவிர நம்மைப் போல - சரி, உங்களைச் சேர்க்கவில்லை - என் போல, பொழுது போகாதவர்களும் படிக்க வேண்டிய பு.
    கலர்சட்டைக்காக வைத்திருந்தேன். இங்கேயே வம்படித்து விடுகிறேன்.
1. ஹெர்பர்ட்-கேதரின் தம்பதியரின் முதல் குழந்தை 2009ல் இறந்தது. அதற்காகப் பெற்றோர்களுக்குத் தண்டனை கிடைத்தது. ஏன்? சளி, பசி, காய்ச்சலில் கிடந்த பிள்ளையை மருத்துவரிடம் அழைத்துச் செல்லாமல் கடவுளிடம், அதாவது கடவுள் அருளை நம்பி, சர்ச்சில் விட்டார்களாம். தினசரி பைபிலும் தோத்திரங்களும் படித்தார்களாம். பிள்ளை இறந்ததும் அது இறைவனின் ஆணை என்று இருந்தார்களாம். சும்மா விடுமா பிலடெல்பியா சட்டம்? பிடித்துத் தண்டித்தார்கள்.
அறிவு வந்ததோ ஆத்திகருக்கு? இல்லை. போன வருடம் இரண்டாவது குழந்தையும் இதே போல் இறந்தது.
கேட்டால் அதையே சொன்னார்கள் மறுபடி. பிணியும் மருந்தும் இறைவனின் ஆணை என்றார்கள். "பிடிச்சு உள்ளே போடுங்கடா ரெண்டு கேனக்.." என்றது பிலடெல்பியா அரசு.
"நிறுத்துங்கள் அரசே!" என்று ஒரு கொடி. 'தேரா மன்னா!' என்பவர் யாரென்று பார்த்தால்... மைத்ரி ஜெயராமன்! அட, நம்ம ஊர்க்கார லாயரு! என்ன சொல்றாரு? "ஆடாப்ஸி விவரங்கள் கிடைக்கும் வரை பெற்றோர்களை எதுவும் செய்யக்கூடாது" என்கிறார். ஓகே. பட்சவங்க இல்லியா? அப்பால தான் வளுக்குறாங்க தமிழம்மா. இன்னா சொல்றாங்க? "இந்தப் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் பெரும் அன்பும் கனிவும் செலுத்தி வந்திருக்கிறார்கள்.. இவர்கள் குற்றவாளிகள் அல்ல". ம்ம்ம்.. யம்மா மைத்ரி.. காய்ச்சலான கொளந்தையை ஒரு தபா கூட டாக்டராண்ட இட்டுகினு போவலியாமே அவங்க? அதுங்களையா பெரும் அன்பும் கனிவும்னு சொல்றே? இன்னாம்மே நீ?
ஹெர்பர்ட் கேதரினுடன் மைத்ரியையும் உள்ளே தள்ள வேண்டும். முட்டாள்தனம் சட்டப்படி குற்றமாகாமல் போனதே, என்ன செய்ய?!
இவர்களின் சர்ச்சான 'first gospel church of philadelphia'வின் இணைய தளத்தில் "மருந்து மாத்திரைகளை நம்புவது பாவம்; யேசுவே குணமளிப்பவர், அவரை நம்புவது மட்டுமே உண்மையான ஆத்திகம்' என்று மே மாதம் வரை இருந்ததாம். (அடச்சே! ஒரு சான்சு போச்சே!)
என்னதான் சொல்லுங்கள், நாத்திகத்தில் இது போன்ற முட்டாள்தனங்கள் நடக்க வாய்ப்பே இல்லை.
2. சமீபத்தில் நடந்து முடிந்த வினாயக சதுர்த்தியின் விளைவாக நிறைய ஆத்திகர்கள் திருடர்களாக மாறியிருக்கிறார்கள். டைம்ஸ் ஆப் இன்டியாவில் வந்திருக்கும் செய்திப்படி நிறைய இடங்களில் ஆத்திகர்கள் எத்தனையோ ஆயிரம் வாட் கணக்கில் பொது மின்சாரம் திருடி வினாயகப் பெம்மானைக் கோலாகலமாக வழிபட்டிருக்கிறார்கள். திருட்டில் வினாயகருக்கும் பங்களித்திருக்கிறாகள் என்பது தெரிந்து செய்திருக்கிறார்களா? இல்லை 'வினாயகர் தானே,, நேரிலா வரப்போகிறார்?' என்ற சமாதானத்துடன் செய்தார்களா? ஆக மொத்தம் நாட்டுக்கு நஷ்டம்.
விடுங்க, அதைப் பற்றி யாருக்கு என்ன கவலை? அதை மோடி பாத்துக்குவாரு. இப்பத்திக்கு வினாயகரை நல்லா லைட் வச்சு கூட்டிக்கிட்டுப் போய் கடல்லே கரைச்சா போதும். என்னா சொல்றீங்க?
என்னதான் சொல்லுங்கள், நாத்திகத்தில்..
கொஞ்சம் இருங்க, யாரோ வேகமா வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்றாப்ல இருக்குதே?
    மோடி என்றதும் நினைவுக்கு வந்தது. நரேந்திர மோடி நிச்சயம் வெற்றி பெறுவார் என்கிறார்கள். ந.மோடி வருவதால் இந்தியா "எங்கியோ போவப் போவுது" என்கிறார்கள். "என்ன செய்வார் மோடி?" என்று சிலரிடம் கேட்டேன். எல்லோரும் ஏதோ ஒரு எதிர்பார்ப்பில் (குஜராத்?) அப்படி இப்படி சொல்கிறார்களே தவிர, காங்கிரசை விட மோடி எந்த விதத்தில் மேலான ஆட்சியைக் கொண்டு வருவார் என்று யாராலும் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. ஊழலை ஒழிப்பதிலிருந்து இஸ்லாமியரை விரட்டுவது வரை ஆளாளுக்குத் தோன்றியதைச் சொல்கிறார்கள்.
'இந்துக்களுக்கு நல்லது' என்ற காரணத்துக்காக மோடிக்கு ஓட்டு விழுந்தால் வெட்கக் கேடு.
    ஒபாமா சிரியா பற்றிய பதிவுக்கு வந்த பின்னூட்டங்களை வைத்துப் பார்க்கையில் அமெரிக்காவை மட்டம் தட்டிவிட்டேனோ என்று தோன்றுகிறது. ஒபாமா உதவாக்கரை என்பதைச் சொல்ல வந்தேன்.. அவருக்கு ஓட்டுப் போட்டதை வைத்து அமெரிக்காவை எடை போடுவது சரியாகத் தோன்றவில்லை. சிரியா பிரச்சினை பற்றிய என் கருத்தை விரிவாகப் பிறகு எழுதுகிறேன். இப்போதைக்கு சுருக்கம்: அசாத்தை ஒரு அரபு நாட்டுக்கும் பிடிக்கவில்லை. நேரடியாக எதுவும் சொல்ல/செய்ய முடியாத நிலையில், அமெரிக்காவின் பின்னால் நின்று போராடுகிறார்கள். இது தான் பிரச்சினை. இதை அமெரிக்கா எந்த அளவுக்குத் தனதாக்கிக் கொள்கிறது என்பதில் தான் சிக்கல்.
சரியான தலைமையில்லாமல் அதை அணுகுவதில் இருக்கிறது ஆபத்து.
    ஆஸ்திரேலியாவில் ஒரு பெண்மணி கோர்ட்டில் கேஸ் போட்டு ஜெயித்திருக்கிறார். வேலை விஷயமாக வெளியூரில் தங்கியிருந்தாராம். படுத்துக் கொண்டிருந்த போது மேலே விளக்கு விழுந்து அடிபட்டதால் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போட்டார். வேலை நேரத்துக்கு அப்பால் விபத்து நடந்ததாகச் சொல்லி அவருடைய கம்பெனியும் இன்சூரன்சு கம்பெனியான காம்கேரும் மறுத்துவிட்டதால் வழக்கு தொடர்ந்தார். ஐந்து வருடங்கள் வழக்காடி ஜெயித்தார்.
என்ன பெரிய விசேஷம்? விளக்கு விழுந்த போது பெண்மணி படுத்துக் கொண்டிருந்தார் என்றாலும் அவர் மேல் இன்னொருவரும் படுத்துக் கொண்டிருந்தாராம். ஹிஹி.
    புதிரான புதிருக்கு விடை: ஆ, ஆ, ஈ. (சுவாரசியமான கதைகள்)