மெல்லிசை மன்னரின் பாடல்களை இன்றைய இளைஞர் குரலில் கேட்டு ரசிக்கும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. (நன்றி, எங்கள் பிளாக்).
இந்தச் சிட்டுக்களின் குரல் வளமும் உழைப்பும் மலைக்க வைத்தது. இவர்கள் இன்றைய இசை மன்னர்களின் கண்ணிலும் கருத்திலும் படவேண்டும் என்று மனதார விரும்பினேன். வாழ்த்துகிறேன். 'சொல்லத்தான் நினைக்கிறேன் படம் பார்த்ததில்லை', என்றார் பாடலைப் பாடிய பெண். (சுமாரான படம் தான், ஒன்றும் குறைந்து போகவில்லை பெண்ணே. பாட்டு பிரமாதம்; நீங்கள் பாடியதும் பிரமாதம்).
வெற்றியின் உச்சத்திலும் சரி, பின்தங்கிய பொழுதும் சரி, மெல்லிசை மன்னர் புதுக்குரல்களை அதிகம் அறிமுகப்படுத்தவில்லையே என்ற வருத்தம் தோன்றியது. நினைத்துப் பார்க்கையில் எம்எஸ்வி, பிறமொழியிலோ பிறர் இசையிலோ வெற்றி பெற்றபின் தன் இசையில் வாய்ப்பளித்தாரே தவிர, ஒரு புதுக்குரலையாவது அறிமுகப்படுத்தினாரா தெரியவில்லை.
மெல்லிசை மன்னரின் ஆடம்பரமே இல்லாத எளிய பாடல்கள் மூன்றை இங்கே தொகுத்திருக்கிறேன். இந்தப் பாடல்களை இன்றைய தலைமுறையினர் கேட்டிருப்பார்களா?
எம்எஸ்வி-10 | 2010/09/29
பெருமூச்சு நினைவுகள்: 'தங்கச்சிமிழ்' பாட்டை அந்த நாளில் ஆயிரம் தடவையாவது கேட்டிருப்பேன். குரோம்பேட்டை நாட்களில்... ஆறாம் கிராஸ்-ஜிஎஸ்டி தெருமுனை வீட்டொன்றில் ஒவ்வொரு கோடை விடுமுறையும் வந்து தங்கி, பக்கத்து வீட்டில் இருந்த தோழி தேஜாவதி வீட்டுக்கு நான் காரணமில்லாமல் போகும் பொழுது, காரணமில்லாமல் வந்து காம்பவுன்ட் சுவர் மேல் உட்கார்ந்து ஒரு வார்த்தை கூடப் பேசாமல் கண்களால் வெட்டி வெட்டி ரணப்படுத்திய தங்கச்சிமிழே, இப்போது எங்கே எப்படிப் பொலிகிறாயோ?
2010/09/29
மெல்லிசை நினைவுகள்
2010/09/24
ரசமன்பு
ஆந்தை தன் தலையை முன்னூத்தறுபது டிகிரி திருப்பும் தெரியுமோ?
காந்திக்கு வலது காலில் ஆறு விரல் தெரியுமோ?
மௌன்ட்பேடனுக்கு மலாய் கோப்தா என்றால் உயிராமே?
தண்ணீர் குடிப்பதை விட பால் குடிப்பது காரத்தின் தாக்கத்தைத் தணிக்கும் என்கிறார்களே, உண்மையா??
பக்கத்து வீட்டுக்காரருக்கு ஒரு கண் நொள்ளைக்கண் தெரியுமோ?
பக்கத்து வீட்டுக்காரர் நொள்ளைக்கண் தவிர, பொது அறிவு என்ற சாக்கில் இது போன்ற மேதாவித்தனமான கேள்விகளும் ஞான உபதேசங்களும் கேட்காமலே தருவதற்கும் பெறுவதற்கும் நம்மில் நிறைய பேர் உண்டு. 'எல்லாம் தெரிந்த' பெருமிதத்தில் ஒரு போதை இருக்கிறது; நானும் இதற்கு அடிமை. 'எங்கே நிரூபி பார்க்கலாம்?' என்று எவராவது பதில் கேள்வி கேட்டால் சைடு வாங்குவோரைப் பார்த்திருக்கிறேன். 'ஒரு புத்தகத்தில் படித்தேன்', 'என்னுடைய பள்ளிக்கூட நண்பன் சொன்னான்; ஆனா இப்ப அவன் உயிரோட இல்லை' என்று சமாளித்தோரைப் பார்த்திருக்கிறேன். விடாப்பிடியாக நிரூபித்தவர்களைச் சந்திக்கும் பொழுது, எங்கிருந்து கிடைத்தது ஞானப்பழம் இவர்களுக்கு என்று நினைப்பேன். இனி நினைக்க அவசியமில்லை, மரத்தையே பார்த்து விட்டேன்.
ஆன்ட்ரேயா பேரம் எழுதிய இரண்டு தொடர் புத்தகங்களைப் படித்தேன்.
கீரையில் இரும்புச் சத்து உண்டு என்பது உண்மையா பொய்யா? சிசேரியன் முறைக்கு சீசர் தொடங்கி வைத்ததால் அப்படிப் பெயர் வந்ததாமே? பெண்களுக்கு adams apple இல்லையா? தண்ணீரில் மூழ்கும் உடல் மூன்று முறை மேலே வரும் என்கிறார்களே உண்மையா? வௌவாலைக் கபோதி என்கிறார்களே? கண்களைக் குழியிலிருந்து எடுத்து பாலிஷ் மாலிஷ் போட்டு மீண்டும் உள்ளே வைக்க முடியும் என்கிறார்களே, உண்மையா? ஆந்தை தன் தலையை முழு வட்டமாய்த் திருப்புமா? குளிர் காய்ச்சலைத் தவிர்க்க வைடமின் சி உகந்தது என்கிறார்களே? ரோம் பற்றி எறியும் போது நீரோ வயலின் வாசித்தானாமே, உடான்சு போலத் தோணுதே? தும்மும் பொழுது உயிர்த் துடிப்பு நிற்கிறது என்கிறார்களே, உண்மையா? அடுத்தவர் மனைவி/கணவனோடு உறவு வைத்துக்கொள் என்று பைபிளில் சொல்லியிருக்கிறதாமே, அட பரவாயில்லையே நிசமாவா? வானவில்லில் ஏழு வண்ணம் என்பது ந்யூடன் விட்ட உடான்சா? விக்டோரியா அரசியின் கணவன் கண்ட (காணாத?) இடத்தில் துளை போட்டுக் கொண்டானாமே, உண்மையா?
இது போல் நூற்றுக்கணக்கான, சுவையான, 'உண்மையா பொய்யா' துணுக்குகளை ஆராய்ந்து (?) சுவையான விளக்கங்களோடு எழுதியிருக்கிறார். விளக்கங்கள் அரை பக்கத்துக்கு மிகாமல் இருப்பதால் விறுவிறுப்பாகவும் செல்கிறது. சில துணுக்குகள் மனம் விட்டுச் சிரிக்க வைக்கின்றன. ('வாய் விட்டுச் சிரித்தான்' என்கிறோமே, ஏன்? புத்தகத்தைப் படியுங்கள் தெரியும்)
மாதிரிக்கு சிலவற்றைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறேன். மழை நாளில் காபி, சீடை, முறுக்கு, உருளைக்கிழங்கு போண்டா, மிளகாய் பஜ்ஜி என்று அவரவருக்குப் பிடித்தத் தீனியுடன் தனிமையில் ஒதுங்கத் தோதான புத்தகங்கள்.
• வைடமின் சி குளிர் காய்ச்சல் தீர உதவும்
• ஆரியர்கள் கிழக்கிலிருந்து வந்தவர்கள்
    (வட இந்தியா என்று இரண்டு ஆணி அடித்துச் சொல்லியிருக்கிறார். வட இந்தியா இரான் இராக் வரை பரவியிருந்தது என்கிறார் - கல்லெறிந்தால் யூரோப்)
• கோகோ கோலாவில் 1905 வரை கொகேய்ன் போதைப் பொருள் கலந்திருந்தது
• சிசேரியன் முறை ஜூலியஸ் சீசர் காலத்தில் தொடங்கியது
    (பிரசவ முறையாக அல்ல; 'கைப்பற்றிய எதிரி நகரங்களை அழிக்குமுன், இறக்கப் போகும்/இறந்த நிறைமாதப் பெண்களின் வயிற்றிலிருந்து சிசுவை அகற்றவேண்டும்; சிசுக்களைக் கொல்லக்கூடாது' என்ற சீசர் ஆணையின் செயல்பாட்டிலிருந்து தோன்றிய முறை. போருக்குப் போனால் சிப்பாய்களுடன் பிரசவ மருத்துவச்சிகளையும் அழைத்துப் போவார்களாம். பாம்பெய் போரில் மருத்துவச்சிகளுக்கே பிரசவம் பார்க்க வேண்டி வந்துவிட்டதும், இனி ஆண்களைப் பிரசவம் பார்க்க அழைத்துப் போவது என்று சீசர் முடிவெடுத்தானாம். புராணமல்லாத ஓரினச்சேர்க்கையின் பரவலுக்கு, சீசரின் போர்ப்படை ஆதாரமாகக் காட்டப்படுகிறது.)
• நகரம் பற்றி எரிகையில் நீரோ வயலின் வாசித்தானாம்
    (பின்னணிக் கதை சுவாரசியமானது. நீரோ நன்றாக வயலின் (லைர்) வாசிப்பானாம்; தீப்பற்றி வருவது தெரிந்ததும், எச்சரிக்கை தரவேண்டி அரண்மனைக் காவல்கூண்டின் மேல் ஏறிக்கொண்டு 'ட்ரோய் நகர அழிவு' என்ற பாடலை உரக்கவும் வேகமாகவும் வாசித்தானாம். ட்ரோய் நகரம் தீயில் அழிந்த கதை தெரிந்திருக்கும். தவறாகப் புரிந்து கொண்டு கைகொட்டி ரசித்துக் கொண்டிருந்த மக்கள், பின் பக்கம் சுடத் தொடங்கியதும் குய்யோ முய்யோ என்று கத்தி நீரோவைத் திட்டிக் கொண்டே ஓடினார்களாம். மனம் நொந்த நீரோ தற்கொலை செய்து கொண்டானாம்.)
• 'ரிங் அரௌன்ட் தி ரோசி' எனும் பாப்பாப் பாட்டு, 1700களில் பிணத்தைச் சுற்றிப் பாடிய பாடல்
    (பின்னணி: ரோசி எனும் பெண் பிளேக் நோயால் இறந்ததும் அவள் மேல் வைத்த மலர்வளைய அடையாளம், பிளேகினால் இறந்தவர்களின் அடையாளமாகத் தொடர்ந்தது. ரிங்கைப் பார்த்தால் ரோசி என்று ஓட்டமெடுப்பார்களாம். ரோசி என்ற பெயரும் பல நாள் வரை பிளேக் நோயுடன் தொடர்பாக நினைக்கப்பட்டதாம்)
• ஆப்பிள் விதையில் சயனைட் இருக்கிறது
    (த்த்த்த்துளியூண்ண்ண்டு)
• விக்டோரியா அரசியின் கணவன் அங்கே துளை போட்டு வளையம் அணிந்திருந்தானாம்
    (தேவையா?)
• வானவில்லின் நிறங்கள் ஆறு தான்
    (கண்டுபிடித்த ந்யூடன் 'ஏழு' எண்ணிக்கையின் மகத்துவத்தை நம்பியதால் நீல நிறத்தின் கிளையான இன்டிகோவை சேர்த்து ஏழு என்றாராம். அறிவித்த பொழுது ஏழு சுரம், ஏழு நிறம் என்று உரையாற்றினாராம்.)
• 'சோரம் போ' என்று கடவுளின் பத்துக் கட்டளைகளில் ஒன்றாக பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது
    (பின்னணி: கிங் ஜேம்ஸ் பைபிளின் 1631ம் வருடப் பதிப்பில் 'Thou shall commit adultery' என்று அச்சுப்பிழை காரணமாக வந்துவிட்டதாம். முன்னூறு பவுன் அபராதம் கட்டச் சொன்னதாம் வேடிகன். ம்ம்ம்... பாவத்தின் சம்பளம் பொருளிழப்பா?)
• பெண்களால் ஆண்களை விட அதிக உடல்வலியைப் பொறுக்க முடியும்
    (பிரசவ வேதனையை விடக் கொடுமையான வலிகளை ஆண்கள் பொறுத்துக் கொண்டிருக்கிறார்களாம். இதைச் சொல்லும் ஆன்ட்ரேயா பிரசவ வேதனை கண்டவரா தெரியாது. இருந்தாலும், ஆண்கள் சார்பில் நன்றி.)
• சர்க்கரையை விடத் தேன் ஆரோக்கியமானது
• ஆந்தை தன் தலையை முழு வட்டமாய்த் திருப்பும்
    (270 டிகிரி திருப்புமாம்)
• ஹிட்லர் சுத்த சைவம்
    (பெரும்பாலும் சைவம். மீன், முட்டை, மட்டன், மாடு எதுவும் சாப்பிட மாட்டானாம். சிக்கன், பன்றி மட்டும் சாப்பிடுவானாம்; சிக்கபன்னிடேரியன்.)
• ஆப்பிள் விழுவதைப் பார்த்துப் புவியீர்ப்புத் தத்துவத்தைக் கண்டுபிடித்தார் ந்யூடன்
    ('ஐயோ அம்மா' என்று அலறிக்கொண்டு ஓடினானாம் சிறுவன் ந்யூடன்; பின்னாளில், 'எத்தனை பலமானக் காற்றிலும் மழைநீர் கீழேயே விழுவதை'ப் பார்த்து யோசிக்கத் தொடங்க.. ஆப்பிள் விழுந்த நினைவு வர... கணக்குப் போட்டு கண்டுபிடித்தாராம்)
• நாய் வருடம் ஒன்று, ஏழு மனித வருடங்களுக்குச் சமம்
• நகங்களில் வெள்ளைத் திட்டுகள் இருந்தால் கேல்சியம் குறை
    (நகத்தின் உள்காயமாம்)
• மூளையின் சக்தியில் பத்து சதவிகிதம் தான் நாம் பயன்படுத்துகிறோம்
    (இதை நம்புவோரைக் கன்னா பின்னாவென்று திட்டியிருக்கிறார், நூறு சதவிகிதம் மூளையை உபயோகித்து)
• நீரில் மூழ்குமுன் மூன்று முறை உடல் மேலே வரும்
• தும்மும் கணத்தில் உயிர்துடிப்பு நிற்கிறது
அடித்தது யோகம். இந்தப் புத்தகத்தில் இருக்கும் சரக்கை வைத்துக் கொண்டு இந்தப் பிறவி முழுவதும் ஓட்டுவேன்.
2010/09/17
விடாமல்
    வினோத் எண்பது மைல் வேகத்தில் காரைச் செலுத்திக் கொண்டிருந்தான். தாமதாகி விட்டது. மேலதிகாரி எர்வின் முதல் நாள் தன்னையும் தன் ப்ளூமூன் குழுவையும் கலர் கலராய்த் திட்டியது நினைவுக்கு வந்தது. 'இன்றைக்கு நிச்சயம் பின்பகுதியைக் குத்திக் கிழிக்கப் போகிறான்' என்ற கடுப்பில் வேகத்தைக் கூட்டினான்.
பழைய மனைவியை நினைத்துக் கொண்டான். ராட்சசி! அவள்தான் தாமதத்துக்குக் காரணம். உலகத் துன்பங்களுக்கெல்லாம் காரணம் மனைவிகள். பொருமினான். அதிகாலையில் இரண்டு குழந்தைகளையும் வினோதின் வீட்டில் முன்னறிவிக்காமல் கொண்டுவிட்டு, பதிலுக்குக் காத்திராமல் போய்விட்டாள். பத்து வயது மீரா, எட்டு வயது ஜே. குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்குத் தயார் செய்து, காலை உணவு கொடுத்து, தானும் குளித்து உடையணிந்து வெளி வந்தபோதே தாமதமாகி விட்டது. மீரா ஜேயுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள். வினோத் இருவரையும் தன் காரில் ஏற்றிக்கொண்டான். "நீங்க இரண்டு பேரும் ஒற்றுமையா இருக்கக் கூடாதா?" என்றான்.
"ஐ'ம் ட்ரையிங் டாடி, இவன் தான்..." என்றாள் மீரா.
"ட்ரை என்கிற வார்த்தையே சொல்லாதே. செய் அல்லது செய்யாமலிரு. முயற்சி செய்றேன்னு சொல்றது பாசாங்கு" என்று வினோத் அறிவுரை வழங்க, "வாடெவர்" என்றனர். அவனுக்குத் தெரியாமல் நாக்கில் விரல் வைத்து குமட்டுவது போல் பாவனை செய்தனர். அப்பாவைக் கிண்டல் செய்வதென்றால் ஒற்றுமை எங்கிருந்தோ வந்துவிடும்.
அவர்களைப் பள்ளிக்கூடத்தில் இறக்கிவிட்டதும் "ஸ்கூல் அரை நாள் தான். முடிஞ்சதும் மறக்காம கேம்ப் போக பிக்கப் பண்ணு டாடி" என்று நினைவு படுத்தினாள் மீரா. நாலு நாள் வார இறுதி என்பதால் இருவரையும் அழைத்துக் கொண்டு கேம்ப் போக ஏற்பாடு செய்ததை அனேகமாக மறந்துவிட்டிருந்தவன், "கண்டிப்பா" என்றான்.
  பள்ளிக்கூடத்திலிருந்துக் காரைக் கிளப்பி நெடுஞ்சாலையில் நுழைந்து, வழி நெரிசலில் எல்லோரையும் திட்டித் தீர்த்துவிட்டு, தன் அலுவலகத்துக்கு வந்தபோது இரண்டு மணி நேரத்துக்கு மேல் தாமதமாகி விட்டிருந்தது. காரியதரிசியை அழைத்து, "கான்பரன்ஸ் ரூம் மூன்றில் யாரிருந்தாலும் வெளியே துரத்தி ப்ளூமூன் குழுவை அங்கே வரச் சொல். எனக்கு ஒரு கப் காபி ஏற்பாடு செய். தீவுத்திடலில் மூன்று நாள் கேம்ப் போட அனுமதிப் பணம் கட்டி என் பேரில் ரசீது வாங்கிக்கொண்டு வா" என்று வரிசையாக ஆணைகளிட்டான்.
காபியுடன் வந்தக் காரியதரிசி, எர்வின் கொடுத்த இரண்டு சீட்டுக்களை அவனிடம் கொடுத்தாள். படித்து விட்டு எரிச்சலுடன் கான்பரன்ஸ் அறைக்கு விரைந்தான். ப்ளூமூன் குழு காத்துக் கொண்டிருந்தது. எர்வின் கொடுத்த முதல் சீட்டைக் குழுத்தலைவி மேரிபெத் ஜான்சனிடம் வீசியெறிந்தான். "என்ன ஆச்சு?" என்றான்.
சீட்டைப் படித்துவிட்டு, "புது மாடலுக்கான மாதிரி, இன்னும் ஆறு நாளைக்குத் தயாராகாது" என்றாள் மேரிபெத். தன்னருகே இருந்தவர்களைச் சுட்டினாள். "இவர்கள் விடாமுயற்சி செய்தும் சைனாவிலிருந்து சப்ளை வரவில்லை. அசெம்ப்ளி முடியும் வரை சாப்ட்வேர் டெஸ்டிங் தொடங்க முடியாது" என்றாள்.
அருகிலிருந்தவன், "இன்னும் ஆறு நாளில் முடித்துவிட முயற்சி செய்கிறோம்" என்றான்.
காலையிலிருந்து அதிகரித்துக் கொண்டே வந்த எரிச்சலில் வினோத் கத்தினான். "எந்தப் புடுங்கியக் கேட்டாலும் முயற்சி செய்றேன், திட்டம் போடுறேன்னு சொல்றாங்களே தவிர, எதையும் முடிச்சு வைக்க ஆளில்லை. முயற்சி பண்றதுக்கா உங்களுக்கு சம்பளமும் போனசும் கிடைக்குது? ஏற்கனவே டிலே ஆகியிருக்கு, இன்னும் ஆறு நாளில் முடிக்க முயற்சி பண்றீங்களா? வெட்கமாக இல்லை?"
"வினி, நாங்க எல்லோருமே இதுல தீவிரமா உழைச்சுக்கிட்டிருக்கோம். இன்னும் ஆறு நாளில் தயாராயிடும்" என்றாள் மேரிபெத்.
"டிசைன் சிக்கல் ஒரு காரணம். சிக்ஸ் சிக்மா தொந்தரவு இன்னொரு காரணம், அவசரமாக புதிய உத்தி எதையும் கையாள முடியாது. பார்ட்ஸ் எதுவுமே வேலை செய்யவில்லை. ஹீட் ட்ரேன்ஸ்பர் டெஸ்டிங்கில் எல்லாமே பஸ்பமாகிவிட்டது" என்று இரண்டாமவன் சேர்ந்து கொண்டான்.
அடுத்த நாலு மணி நேரம் குழுவுடன் விவாதம் செய்து, செயல்படுத்த வேண்டிய முறைகளைப் பற்றியத் தீர்மானத்துக்கு வந்ததும், "இன்னும் நாலு நாளில் இது தயாராக வேண்டும். அவ்வளவு தான் கெடு" என்றான் வினோத்.
"முயற்சி செய்றோம்" என்ற குழுவைப் பார்வையால் பொசுக்கிவிட்டு, "மேரிபெத், நாலு நாளில் தயாராகவில்லையென்றால் இருவரையும் வேலையிலிருந்து நீக்கி விடு" என்றான். "முடிக்கிறவங்களுக்குத்தான் இங்கே வேலை, முயற்சி செய்கிறவர்களுக்கு இல்லை".
தன் அறைக்குத் திரும்பியதும் எர்வினின் இரண்டாவது சீட்டை மறுபடி படித்தான். 'அடுத்த வாரம் உனக்கு வர வேண்டிய ஸ்டாக் ஆப்ஷனை நிறுத்தட்டுமா?' என்று எழுதியிருந்த சீட்டைக் கசக்கிக் குப்பையில் எறிந்தான். உள்ளே வந்த காரியதரிசி கேம்ப் ரசீதைக் கொடுத்துவிட்டு, "நேரமாகி விட்டது" என்றாள்.
தலையாட்டிவிட்டுக் கிளம்பினான். திரும்பி வந்து, குப்பையிலெறிந்தச் சீட்டைப் பொறுக்கிச் சீராக்கி, தன் மேஜைக் கண்ணாடியின் கீழே செருகிவிட்டு வெளியேறினான். ஸ்ட்ரெஸ் அதிகமானால் அவனுக்கு வழக்கமாக வரும் ஒற்றைத் தலைவலியில் துடித்தான். என்ன வாழ்க்கை இது? எத்தனை வெற்றி கிட்டினாலும் எனக்குத் திருப்தி ஏற்படவில்லையே? திட்டப்படி எதுவும் முடியவில்லையே? தேவைக்கு மேலே எதிர்பார்க்கிறேனா? ஏதோ நினைத்தபடி காரில் ஏறினான். காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடவில்லை என்று நினைவுபடுத்தியது பசி மயக்கம். குழந்தைகள் டீச்சருடன் காத்திருப்பார்கள். தாமதத்திற்கு ஏதாவது சாக்கு சொல்லி அபராதம் கட்டி, டீச்சரிடம் வேறு வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டும். விரைந்தான்.
  தீவுத்திடல் ஏரியும் உள்ளடங்கிய நூற்றுக்கணக்கான சிறிய தீவுகளும் ஒரு நல்ல கவிதைக்காகக் காத்திருந்தன. படகிலிருந்திறங்கி வாடகை ஜீப் எடுத்து கேம்ப் பொருளெல்லாம் ஏற்றி, அவர்கள் வாடகைக்கு எடுத்திருந்த தீவுக்கு வந்த போது மாலை ஆறு மணிக்கு மேலாகிவிட்டது. மரங்களடர்ந்த இடமாகத் தேடிக் கூடாரம் அமைக்கத் தொடங்கினான் வினோத். அடுத்த ஒரு மணி நேரத்தில் தனியறைகளுடன் கூடாரம் தயாராகிவிட்டது. உணவு, உடை, மீன் பிடிக்கும் கழி, விலங்குகளை விரட்டும் நுண்ணொலிக்கருவி, இரண்டு விளக்குகள், டிவி, பார்பெக்யூ சட்டி, சிறிய ஜெனரேடர், குளிர்பெட்டி என்று மீரா, ஜே உதவியுடன் வரிசையாக ஜீப்பிலிருந்து கொண்டு வந்தான். ஜீப்பிலிருந்து மின்கம்பி கட்டி ஜெனரேட்டரை இயக்கி, கொண்டு வந்திருந்த குளிர்பெட்டியை இணைத்தான். பால், சோடா, சாசெஜ், பழச்சாறு, குச்சி ஐஸ் என்று எல்லாவற்றையும் உள்ளே வைத்தான். விளக்குகளில் பல்ப் பொறுத்தி அறைக்கு ஒன்றாய் வைத்து விட்டு, அவற்றையும் ஜெனரேட்டரில் இணைத்தான். கடைசியாக டிவி, டிவிடியை இணைத்ததும் பிள்ளைகள் சண்டையும் தொடங்கிவிட்டது.
"என் ரூம்ல இருக்கு டிவி, நான் சொல்ற டிவிடி தான் பார்க்கணும். இல்லைனா டிவி கிடையாது" என்றாள் மீரா.
"ஜெனரேடர் என் ரூம்ல இருக்கு, நான் சொல்ற டிவிடி தான் பார்க்கணும். இல்லைனா கரன்டே கிடையாது" என்றான் ஜே.
"நீங்க ரெண்டு பேரும் சமாதானமா இல்லைனா இரண்டு பேருக்குமே டிவிடி கிடையாது" என்றான் வினோத்.
குளிர்பெட்டியைத் திறந்து குச்சி ஐஸ் எடுக்கப் போன மீரா, கைதவறிக் கீழே விழுந்ததை எடுத்து ஜேயிடம் கொடுக்க, மறுபடி சண்டை. "தவறி விழுந்திடுச்சு. இன்னும் பிரிக்கக் கூட இல்லை டாடி.. வேண்டாங்கிறான்"
"டாடி? நான் ஏன் கீழே கிடந்ததைத் திங்கணும்?" என்று ஜே அதைத் தூக்கி எறிய மீராவின் காலில் பட்டுத் தெறித்தது. குண்டடி பட்டது போல் அழுகையை வரவழைத்துக் கொண்டு அலறினாள் மீரா. "ஹி இஸ் எ ப்ரூட் டாடி. கேவ்மேன்"
இரண்டு குச்சி ஐசையும் வெளியே எறிந்தான் வினோத். "பத்து நிமிஷம் சண்டை போடாமலிருக்க முடியாதா உங்களால்? இதுக்குத் தான் குழந்தைகளே வேண்டாமெனு இருந்தேன். இப்படிக் கழுத்தறுக்கிறீங்களே?" என்று கத்தினான். இருவரையும் பிடித்திழுத்து அடுத்த அறையில் ஒரு ஒரமாக உட்கார வைத்தான். "நான் சொல்லும் வரை நீங்கள் இங்கேயே ஒண்ணா உட்கார்ந்திருக்கணும்; எழுந்தா எனக்கு கெட்ட கோபம் வந்துரும்" என்று அதட்டினான்.
"நல்ல கோபம்னு வேறே தனியா இருக்குதா?" என்று ஒற்றுமையாகக் கிண்டல் செய்து சிரித்தவர்களைக் கவனிக்காதது போல் வெளியே வந்தான். சற்று தொலைவிலிருந்த மறைவில் ஒன்றுக்குச் சென்றுத் திரும்பியவன், திடுக்கிட்டான்.
முரட்டுக் கருங்கரடி ஒன்று கூடார வாசலில் உட்கார்ந்தபடி, அவன் எறிந்த ஐஸ் குச்சிகளைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தது.
  நிலையைப் புரிந்துகொள்ள வினோதுக்குச் சில கணங்களாயின. குழந்தைகளை அதட்டி உள்ளே ஓரமாய் உட்கார வைத்தது ஓரளவுக்கு நல்லது என்று தோன்றினாலும் கரடி எழுந்து உள்ளே செல்ல அதிக நேரம் பிடிக்காது என்பதையும் புரிந்து கொண்டான். யாரையாவது கூப்பிடலாமென்றாலும் செல்போன் இல்லை. ஜீப்புக்குள் ஆயுதம் ஏதும் இருக்கிறதாவென்று பார்க்க நினைத்து, கரடி பார்த்து விடப்போகிறதே என்று அச்சத்தில், தரையில் கைகளை ஊன்றி அடி மேல் அடி வைத்து நகர்ந்தான்.
கைகளைத் தரையில் ஊன்றி நடந்து வந்தவனைப் பார்த்துவிட்ட கரடி, நாலு கால் பிராணி என்று நினைத்து சாப்பாடு கிடைத்த சந்தோஷத்தில் வீறிட்டது. 'கரடியாட்டம் ஏன் கத்துற?' என்றவர்களெல்லாம் கரடி கத்துவதைக் கேட்டதில்லையென்று நேரம் கெட்ட நேரத்தில் புரிந்தது. கரடி பாயுமுன் எழுந்து கொண்டான். அவன் எழுந்து ஆறடி உயரத்துக்கு நின்றதும், கரடியும் திகைத்துப் பின்வாங்கி இரண்டு காலில் நின்று அவனை அளவெடுத்தது.
இதையெல்லாம் பார்த்துவிட்ட மீராவும் ஜேயும் "டாடீ" என்று அலறினார்கள்.
வினோத் கத்தினான். "மெதுவா ஒரு ஓரமா போய் நில்லுங்க" என்றபடி, கீழே கிடந்த பெரிய கல்லை எடுத்து ஜீப் மேல் வீசியெறிந்தான். ஜன்னல் கண்ணாடி உடைந்துத் தெறித்தது. குரலும் ஒலியும் வந்த திசையை நோக்கித் திரும்பிய கரடி, குழம்பி நின்றது. சத்தம் கேட்டு ஓடிவிடும் என்று அவன் நினைக்க, கரடி முன்னங்கால்களைத் தரையில் ஊன்றி, வாயிலிருந்து எச்சில் ஒழுக, கூர்மையான பற்கள் தெரிய, காதைப் பிளக்கும்படி கர்ஜனை செய்தது. வேகமாக நகர்ந்து ஜீப்பை உருட்டிக் கீழே தள்ளியது. ஏற்கனவே சரிவில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் பல முறை உருண்டு கீழே ஏரியருகே ஒரு மரத்தில் சாய்ந்து நின்றது. ஜீப்பிலிருந்த ஜெனரேட்டர் கம்பி அறுந்து கூடாரத்தில் அங்குமிங்கும் பொறி பறந்து மின்சாரம் நின்று போனது.
பின் கால்களில் எழும்பி நின்று முன்னங்கால்களால் தன் நெஞ்சில் அறைந்து கொண்ட கரடி மின்பொறிகளைப் பார்த்ததும் கொஞ்சம் அசந்து நின்றது. வினோதைத் தெளிவாகப் பார்த்துவிட்டு வேகமாக அவனை நோக்கிப் பாய்ந்து வந்தது. என்ன செய்வதென்று தெரியாமல், அவன் முடிந்தவரை குரலில் ஒலியைக்கூட்டி "சூ" என்றான்.
"டாடி, அது என்ன நாய்க்குட்டியா சூ சொன்னா விலக?". நேரமறியாத கிண்டல் என்றாலும் மீராவின் குரலில் நடுக்கமும் பயமும் மிகையாக இருந்தன. இருவரும் கூடாரத்தை விட்டு வெளியே வந்தனர். வினோத் அவர்களைப் பார்த்துத் திரும்பி "ஓடுங்க ரெண்டு பேரும்... இந்த இடத்தை விட்டு ஓடுங்க... மீரா, உதவி கேட்டு குரல் கொடு" என்றான். மூச்சு வாங்கியது. வியர்த்தது. 'தனித்தீவுக்கு வந்திருக்கக் கூடாது' என நினைத்து அலைபாய்ந்தான்.
மீரா "வாடா" என்று ஜேயின் கைகளைப் பற்றி இழுக்க, அவன் பயத்தில் வர மறுத்தான்.
"ஜே, மீராவோட போ, ஓடு... நௌ" என்று வினோத் அலறினான். அதற்குள் அருகே வந்து நின்ற கரடி அவனை அறைய, குப்பை போல் காற்றில் பறந்து விழுந்தான்.
அதிர்ச்சியில் மீராவும் ஜேயும் அசையவில்லை. விடாமல் அலறிக் கொண்டிருந்தார்கள். வினோத் வலியுடன் எழுந்தபடியே சலித்தான். தீவுக் காவல் துறை எங்கே? மணிக்கொரு முறை ரோந்து சுற்றுவார்களே? "உதவி" என்று அலறத் தொடங்கினான். யாராவது வர மாட்டார்களா? பக்கத்துத் தீவில் யாராவது இவர்கள் அலறலைக் கேட்க மாட்டார்களா? இடுப்பு வலித்தது. உடைந்து போயிருக்குமா? கால் சுளுக்கிக் கொண்டுவிட்டது. கன்னத்தில் ரத்தம் வருவதைக் கவனித்த வினோத் பயந்தான். குழந்தைகளுடன் ஊர் திரும்ப வேண்டுமே? வெளியே இருட்டத் தொடங்கிவிட்டதே? மின்சாரம் வேறு இல்லையே?
வினோதையும் அலறிக்கொண்டிருந்தக் குழந்தைகளையும் குழப்பத்துடன் திரும்பத் திரும்பப் பார்த்துவிட்டு, மோப்பம் பிடித்து கூடாரத்தின் உள்ளே செல்லத் தொடங்கியது கரடி. மீரா ஜேயின் கையைப் பிடித்துக்கொண்டு மெள்ளப் பின்வாங்கினாள். கரடி அவர்களைப் பார்த்து உறுமிக்கொண்டே இருந்தது. "டாடி. ஹெல்ப்! ஏதாவது செய் டாடி, சும்மா நிக்கிறியே?" என்று அலறிய மீராவையும் ஜேயையும் கீழே தள்ளியது.
வினோதுக்கு ஆத்திரம் வந்தது. "சும்மாவா நிற்கிறேன்?" என்று கத்த நினைத்தவன், குழந்தைகள் கீழே விழுந்ததைப் பார்த்து உறைந்து போனான். திடீரென்று ஜீப்பின் அலாரம் ஒலி கேட்டுத் திரும்பினான். விழுந்த வேகத்தில் கீழே கிடந்த ஜீப் சாவியை ஜே அறியாமலே அழுத்த, உருண்டு கிடந்த ஜீப் விளக்குகளைச் சிமிட்டிக்கொண்டு இடைவிடாத ஓசை எழுப்பிக்கொண்டிருந்தது. வினோத் ஆத்திரம் தாங்காமல் "ஏய்.. என் குழந்தைகள்" என்று கத்தியபடி நொண்டிக் கொண்டே கரடியைத் தடுக்க டென்டுக்குள் ஓடினான். "எழுந்து நில்லுங்க, உடனே எழுந்து நில்லுங்க" என்று கத்திக் கொண்டே ஓடினான்.
எழுந்திருக்கப் பயந்த குழந்தைகள் பந்து போல் சுருண்டு கொண்டனர். அருகே நின்ற கரடி கர்ஜனை செய்தது. டென்டில் கிடந்த பொருட்களைத் தாறுமாறாக வீசிக் கொண்டிருந்தது. சுற்றுமுற்றும் பார்த்த வினோத், கீழே கிடந்த ஜெனரேடரை எடுத்துக் கரடியின் தலையில் வேகமாக எறிந்தான். அடிபட்ட கரடி, குழந்தைகளை விட்டு அவனைத் துரத்தியது. தடுமாறி விழுந்த வினோத், விலங்குகளை விரட்டுவதற்காகக் கொண்டு வந்திருந்த அல்ட்ரா சௌன்ட் கருவியைப் பார்த்தான். அதன் உச்ச ஒலி விசையைத் தட்டினான். கரடி வினோதை மறுபடியும் அறைந்தது. நுண்ணொலிக் கருவி உடைந்து நொறுங்கியது. வினோதின் வாய் கிழிந்து நாலைந்து பற்கள் கீழே விழுந்தன. மயங்கி விடாதே. குழந்தைகளுக்காவது விழிப்புடன் இருக்க முயற்சி செய். தனக்குத் தானே சொல்லிக்கொண்டான்.
ஜேயின் கால்களைக் கவ்வித் தரதர என்று இழுத்துக் கொண்டு உள்ளே ஓடத்தொடங்கியது கரடி. ஜேயின் கால், கை, முகமெல்லாம் ரத்தம். வீறிட்டலறினான். மீரா டிவியை எடுத்து கரடியின் தலையில் அடித்தாள். கண்கள மறைத்தாலும் தடுமாறியபடியே எழுந்த வினோத், அருகில் கிடந்தக் குளிர்பெட்டியை எடுத்து ஓடிச் சென்று கரடியின் தலையில் ஓங்கி அடித்தான். இரண்டு விளக்குகளையும் எடுத்து கரடியின் முகத்தில் குத்தினான். ஜேயை விட்டு விலகிய கரடி உக்கிரத்துடன் வினோதின் மேல் பாய்ந்தது. கீழே விழுந்து கிடந்த பார்பெக்யூ சட்டியை எடுத்து பாய்ந்து வந்த கரடியின் வாயில் அடித்து, டார்சேன் போல் கர்ஜனை செய்தான். அடித்த வேகத்தில் பார்பெக்யூ சட்டியின் தடித்த கம்பிகள் அதன் வாயுள் செருகிக்கொண்டன. முகத்தை இப்படியும் அப்படியும் அசைத்துக் கம்பிகளை விடுவிக்க முயன்ற கரடி, முடியாமல் முன் கால்களால் தரையில் ஓங்கி அடித்தது. குழந்தைகளுடன் ஒரு ஓரத்துக்குப் புரண்டான் வினோத். இனி எங்கேயும் போக வழியில்லை. கடிபட்டுச் சாகப்போகிறோம் என்று நினைத்துக் குழந்தைகளுக்கு வேலியாக நின்று கொண்டான். 'வெறும் கையே ஆயுதம், இன்றைக்கு உன்னை விடுவதில்லை' என்று உறுமினான். வெறி பிடித்தது போல் கரடிக்கு இணையாகக் கத்தினான்.
அவர்கள் மேல் பாய்ந்த கரடி, சரிந்து விழுந்தது. வினோத் புரியாமல் விழிக்கையில், தீவுத்திடல் காவலர்கள் விலங்குகளுக்கான மயக்க மருந்துத் துப்பாக்கியுடன் அவர்களை நோக்கி ஓடி வந்தனர்.
  தீவுத்திடல் பெரிய மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு வினோதும் குழந்தைகளும் வெளியேறத் தயாராக இருந்த போது டிஸ்சார்ஜ் செய்ய வந்த மருத்துவர், "நீங்கள் ஜீப் அலாரத்தை புத்திசாலித்தனமாக உபயோகித்தீர்கள். பக்கத்துத் தீவிலிருந்தவர்கள் ஜீப் விளக்குகளையும் ஒலியையும் கவனித்துவிட்டு, காவலர்களை வரவழைத்தனர்" என்றார்.
"எல்லாம் என் தம்பியின் வேலை" என்றாள் மீரா பெருமையுடன். ஜே அவள் கைகளைப் பிடித்தபடி ஒட்டிக்கொண்டு நின்றான்.
அன்றிரவு வீட்டில் குழந்தைகளைப் படுக்க வைத்துக் கதை சொல்லிப் போர்வையை இழுத்துப் போர்த்தினான் வினோத். "கேம்ப் அனுபவம் இப்படி ஆயிடுச்சே, சாரி" என்றான்.
அவன் கழுத்தைக் கட்டிய ஜே, "யூவர் க்ரேட் டாடி, சூபர்மேன்" என்றான். அவர்களுடைய தலையை வருடியபடி "உங்க இரண்டு பேர் மேலேயும் கோபப்பட்டதற்கு என்னை மன்னிச்சுடுங்க" என்றான் வினோத்.
மறுநாள் அவனெதிரில் ப்ளூமூன் குழுவினர் நின்று கொண்டிருந்தனர். புது மாடலுக்கான கெடு முடிந்தும் தயாராகவில்லை. வினோத் அமைதியாக, "முயற்சி பண்ணியிருக்கீங்க... அதான் முக்கியம்" என்றான்.
2010/09/09
இன்பவெறியைத் தூண்டும் சைவ உணவு
            தமிழ்நாட்டு உணவு வகைகளில் செட்டிநாட்டுச் சமையல் மேல் எனக்கு என்றுமே ஒரு மையல். என் செட்டிநாட்டு நண்பர்கள் வீட்டில் உண்டு களித்த நாட்கள் அதிகம். அய்யர் வீட்டுப் பையன் இப்படி வெட்டுகிறானே என்று என் நண்பர் குடும்பத்தார் வியந்து போவார்கள். சுவையான சாப்பாட்டைப் பொறுத்தவரை, 'யாதும் ஊரே யாவரும் கேளிர் எம்மதமும் சம்மதம்' என்பது என் கொள்கை. அப்பம், இடியப்பம், மசாலாக் கூட்டுக்கறிகள் (கத்தரிக்காய் முருங்கைக்காய் கலந்து ஒரு மசாலா செய்வார்கள் பாருங்கள், வாரியார் தமிழ் கேட்ட மாதிரி இருக்கும்; பெரிய சமாசாரம்), வெள்ளைப்பணியாரம், மாங்காய்-மீன் குழம்பு (சைவ மீன்குழம்பு என்று ஒரு வகை), நண்டுக்கறி, பலாக்காய்ப் பிரட்டல், கோழி ரசம், மட்டன் பொடிமாஸ், பூண்டுக் காரக்குழம்பு, அரிசிப் பாயசம் என செட்டிநாட்டுக்கென்று தனிப்பட்ட உணவுகளை அடையாளமாகச் சொல்லலாம்.
இவற்றையெல்லாம் இனிக் கண்ணால் கூடப் பார்க்க வாய்ப்பு கிடைக்காது என்று நினைத்திருந்தபோது நண்பர் ஒருவர் அஞ்சப்பர் செட்டிநாடு உணவகத்தை அறிமுகம் செய்து வைத்தார். உள்ளே நுழைந்ததுமே தாக்கிய பூண்டு மசாலா நறுமணம் என்னைக் காரைக்குடிக்கு எடுத்துச் சென்று விட்டது. தாமரையாவது பவளமல்லி மல்லிகையாவது, செட்டிநாட்டு மசாலா நறுமணத்துக்கு ஈடாகுமா ஐயா? இடியப்பம், முட்டை போண்டாவில் தொடங்கினோம். தொடர்ந்து செம்மீன் வறுவல், சிக்கன்கறி, காரக்குழம்பு, ரசம் என்று முழுச்சாப்பாடு. பூண்டு காரக்குழம்பைத் தனியாக வரவழைக்க வேண்டியிருந்தது. பருப்புப்பொடியும் நெய்யும் தனியாகக் கொடுத்தார்கள். கடைசியில், என்னால் நம்பவே முடியவில்லை - அரிசிப் பாயசம் கூட கிடைத்தது (கவுனியரிசி?). 2012ல் உலகம் அழியப் போகிறதாமே? பூண்டு காரக்குழம்பை ஒரு பிடி பிடித்தேன்.
சமீபத்தில் மறுபடியும் பூண்டுக்குழம்பு சாப்பிட ஆசை வந்துவிட்டது. கவலை இல்லாத மனிதர் யார்? என்னைக் கேட்டால் சமைக்கத் தெரிந்தவர் கவலையில்லாதவர் என்பேன். சாப்பாட்டுக்காக மட்டும் சொல்லவில்லை, சமைப்பதே அமைதியைக் கொடுக்கும் ஒரு செயல் என்று நம்புகிறேன். எட்டு ஊருக்கு சமைப்பேன் என்றாலும் செட்டிநாட்டு உணவு செய்து பார்த்ததில்லை. முதல் முறையாகப் பூண்டு காரக்குழம்பு செய்தேன். இந்திய உணவு சமைக்கிறேன் என்றாலே வீட்டுக்கதவு ஜன்னல் எல்லாம் திறந்து வைத்துவிட்டு மனைவி குழந்தைகள் வெளியே ஓடி விடுவார்கள். பூண்டு, காரமசாலா என்றால் கேட்க வேண்டுமா? ஒரு வாரம் கழித்துத்தான் அவர்களையே பார்த்தேன்.
வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரைக் காரக்குழம்பு.
            சிலர் பிரமிக்க வைக்கிறார்கள் என்றாலும், தும்மினால் இணையத்தில் காதல் அல்லது தீண்டல் பற்றிக் கீழ்க்கண்டவற்றுள் ஒன்றைப் போல் பத்து வரிகளுக்கு மிகாமல் கவிதை எழுதத் தொடங்கி விடுகிறார்கள்:
    நீ                                                   கண்ணே தமிழரசி!                               ஆடையில்லாதவர்
    கண் திறந்து                                   பொருள் சேர்த்து விட்டேன்                  அரை மனிதராம்.
    பார்க்கும் பொழுதெல்லாம்              அறம் காத்திருக்கட்டும்                        நீயும் நானும்
    நான்                                              உன்                                                   ஒரு மனிதராகும்
    மின்சாரம்                                      ஈர இதழ் தரும்                                    கணக்கு பழகலாம்
    சேமிக்கிறேன்.                               இன்பமே இன்றையத் தேவை.              வாயேன்.
ஓரினக் காதல், கள்ளக்காதல் பற்றிக் கவிதைகளைக் காணோம். தேடிப் பார்க்க வேண்டும். என்ன காரணமோ தெரியவில்லை, காதல் புலம்பல் அதிகம் காணப்படுகிறது.
    அடி
    நீயும் நானும்
    அந்தரங்கமானதற்கு
    நிலவே சாட்சியென்றாய்.
    நிலவைப் போல்
    நீயும் மறைவாய்
    எனப் புரியாமல் போனதே?
        அங்கே
        உன்னுடன் வளர்பிறையாகப் பூத்திருப்பது
        இன்னொரு காதல்.
        இங்கே
        என்னுடன் தேய்பிறைக்காகக் காத்திருப்பது
        இன்னொரு காயம்.
என்று சோகமும் விரக்தியும் கலந்து தாளிக்கிறார்கள். எப்படியோ, காதலித்தால் சரிதான்.
புதுக்கவிதையில் ஒரு வசதி. நாம் எழுதுவது தான் கவிதை.
            கலைஞர் கருணாநிதியின் 'முத்துக்குளியல்' புத்தகம் படித்து முடித்தேன். முதல் பாகம் சுவை. அவசியம் படியுங்கள். இரண்டாம் பாகத்தை, அவர்களே காசு கொடுத்தால் கொஞ்சம் யோசித்து விட்டு வாங்கி, வடாம் காய வைக்க கித்தானுக்குப் பிடிச்சுமையாகப் பயன்படுத்துங்கள். அவருடைய சொற்பொழிவு, கட்சிப் பேச்சுக்களைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள். அண்ணாதுரை இறந்ததும் வானொலியில் ஒலிபரப்பான கலைஞரின் 'மூன்றெழுத்து' இரங்கல் பேச்சைக் கேட்ட நாள் முதல் அவருடைய பேச்சுத் திறனைக் காதலித்திருக்கிறேன். தமிழ்நாட்டில் பிறந்தவர்கள், தமிழை விரும்புகிறவர்கள், எந்தச் சமூகமானாலும் அவருக்குக் கொஞ்சம் கடமைப் பட்டிருக்கிறார்கள் என்று நம்புகிறேன். சென்ற ஐம்பது ஆண்டுகளில் தமிழுக்குப் பெருமை சேர்த்தவர்கள் வரிசையில் முன்னணியில் இருப்பவர் கலைஞர்.
இருக்கும் பொழுதே அவருக்கு ஒரு வணக்கமும் வாழ்த்தும்.
            க்ரைசிஸ் கால அமெரிக்க அதிபர்கள் என்று கணக்கெடுத்தால் ஒபாமா அதில் மிக மோசமானவராக வருவார் என்று நம்புகிறேன். இன்னும் ஆறு ஆண்டுகள் ஒபாமா ஆட்சி என்று நினைக்கும் பொழுதே கலங்குகிறது. படிப்புக்கும் திறமைக்கும் தொடர்பே இல்லை என்பதற்கு ஒபாமா ஒரு மோசமான உதாரணம். எம்ஜிஆரின் கவர்ச்சியை நம்பி ஓட்டு போட்டு ஏமாந்தது போல் உணர்கிறேன். இன்வெஸ்டர்ஸ் பிசினஸ் பத்திரிகை ஆசிரியர் மைகேல் ரேமிரசின் கேலிச்சித்திரங்களை மிகவும் ரசிப்பேன். அவருடைய படைப்புகள் சில:
பத்து அத்தியாயங்களோ என்னவோ எழுதி முடித்திருந்த போது பிரபல நடிகர்களுக்குச் சொந்தமான ஒரு திரைப்படக் கம்பெனியிலிருந்து சந்தித்துப் பேச அழைப்பு விடுத்தார்கள். இந்தியா சென்ற பொழுது அவர்களுடன் தொடர்பு கொண்டேன். அடையார்(?) செனடேப் ரோட் அருகில் இருக்கும் ஹோட்டலில் நிரந்தரமாக இரண்டு ரூம் புக் செய்திருக்கிறார்கள். என்னையும் அங்கே வரச்சொல்லி கதையை அலசினார்கள். அப்போது தான் புரிந்தது ரூம் போட்டு யோசிக்கும் விவகாரம். சுவரிலும் மேசையிலும் எழுதவும் ஸ்டோரிபோர்ட் செய்யவும் வசதி. காலையில் வந்து விடுகிறார்கள். இரண்டு மூன்று மணிக்கொரு தடவை டிபன், காபி. அறைக்குள் பிஸ்கெட், பழத்தட்டு. அவ்வப்போது சிகரெட் பிரேக் என்று போய்விடுகிறார்கள். மதியம் கேரியர் சாப்பாடு எப்படியோ திருட்டுத்தனமாக அறைக்குள் வந்து விடுகிறது. தினம் ஓட்டல் சாப்பாடு ஒத்துக்கொள்ளாதாம். பிறகு நாலு மணி போல் மறுபடியும் டீ காபி பகோடா என்று வருகிறது. யோசித்து யோசித்துக் களைப்படைந்து விட்டோமென்று வையுங்கள், பக்கத்து ரூமில் ஒரு குட்டித் தூக்கம் போட வசதி இருக்கிறது. கடைசியில் மாலை ஆறு மணி சுமாருக்கு ஓட்டல் பாரில் கிங்பிஷர் சாப்பிடுகிறார்கள். ஏழு மணிக்கு வண்டி வந்து அழைத்துக் கொண்டு போகிறது. எனக்கோ அங்கே திரிந்து கொண்டிருந்த அழகான பெண்களையும் ஆண்களையும் பார்ப்பதற்கே நேரம் போதவில்லை. எங்கிருந்து யோசிப்பது?
கதையை கொஞ்சம் இங்கே மாற்றச் சொன்னார்கள். பிறகு அங்கே மாற்றச் சொன்னார்கள். பிறகு கதாபாத்திரத்தை மாற்றச் சொன்னார்கள். வில்லனை வேறு விதமாகச் சித்தரிக்கச் சொன்னார்கள். இந்தக் கேரக்டர் வேண்டாம் என்றார்கள். இன்னொரு சப் பிளாட் எழுதச் சொன்னார்கள். வசனங்களை மாத்திரம் பிரித்தெடுத்து 'பஞ்ச்' சேர்க்கச் சொன்னார்கள். கதை சின்னாபின்னமாகி விட்டது. அப்படியும் அவர்களுக்குத் திருப்தி இல்லை. கடைசியில், 'உங்களுக்கு அப்ஜக்சன் இல்லையின்னா எங்க கதை இலாகாவை வச்சு ரீரைட் பண்ணிக்கறோம்; பேசிக் ட்ரீட்மென்ட் மட்டும் கொடுங்க' என்றார்கள். அந்த நிலையில் கதை என்னுடையதே இல்லை என்றாகிவிட்டதால், 'தாராளமாக' என்று நான் முதலில் நினைத்திருந்த முழுக்கதையையும் சொல்லிவிட்டு வந்தேன். கதை போனாலும் ஒரு நட்பு கிடைத்த நிறைவு நிஜம். இருந்தாலும், கதையைக் கொன்ற சலிப்பிலும் வருத்தத்திலும் தொடங்கியதை முடிக்கவே இல்லை.
ஒரு ரூம் போட்டு யோசித்து முடிக்க வேண்டும்.
            இணையப் பதிவுகள், நான் கண்ட வரை, பதிவு ஆசிரியரின் பிரதாபங்களை விவரிக்க, திறமை-வக்கிரங்களை வெளிப்படுத்த ஒரு சாதனமாகவே இருக்கின்றன. 'எங்கள் பிளாக்'கில் மட்டும் வித்தியாசமாக ஏதாவது செய்து கொண்டே இருக்கிறார்கள். பின்னூட்டத்துடன் நிற்காமல், வாசகர்களையும் பங்கேற்கச் செய்வதில் எபி அளவுக்குப் பிற பதிவுகள் வெற்றி கண்டுள்ளனவா, தெரியவில்லை. சமீப எபி ஆசிரியர் தினப்பதிவு சில நினைவுகளைத் தூண்டி விட்டது. என்னுடைய உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் டாவடித்ததைப் பற்றி எழுதி அனுப்பியிருக்கிறேன் எபி ஆ'சிரி'யர்களுக்கு. ஆசிரியர் தினம் என்ற ஒரு moral high groundல் டீச்சர்கள் கசமுசா பற்றி எழுதினால் பிடிக்குமா தெரியவில்லை, பார்ப்போம்.
என்னுடைய ஆசிரியர்களில் முக்கால் வாசிக்கு மேல் வேறு வேலை கிடைக்காமல் படிப்பு சொல்லிக் கொடுக்க வந்தவர்கள். மணியடித்ததும் எங்களுக்கு முன்னால் நடையைக் கட்டிய ஆசிரியர்களும் உண்டு. கடைசி பீரியட் போது 'லட்சுமிபுரம் பஸ் வருதா பாரு' என்று தினம் ஒரு மாணவனை தெருவோர பஸ் ஸ்டேன்டுக்கு அனுப்பிய மகான் எனக்கு ஆசிரியர். எட்டாம் வகுப்பு சயன்ஸ் டீச்சர் ரொம்ப மோசமான பெண் என்று நினைவு. துரைசாமி என்று தமிழ் வாத்தியார், நாத்திகர். விபூதிக் கீற்றைப் பார்த்து விட்டு அவர் அடிக்கும் கமெண்டுக்கு பயந்து அவர் வந்த உடனே முதல் வேலையாக நெற்றியைத் அழுத்தித் தடவிக் கொள்வோம். 'இன்னிக்கு சாப்பாட்டுல ஒரே சாமியா இருந்துச்சுபா' என்பார். பிள்ளையார் சுழி போட்டால் இரண்டு மார்க் குறைத்து விடுவார். அத்தனை பந்தா செய்தவர் தமிழில் ஒன்றும் பந்தாவாகச் சொல்லிக் கொடுக்கவில்லை. ஞான சூனியம். அம்பாசங்கர் என்று ஒரு ஆசிரியர். குள்ளமென்றால் குள்ளம். நம்மை அடிக்க உயரம் போதாது என்பதால் நம்மைக் குனியச் சொல்வார். 'குனிடா குனிடா' என்று தரைக்குள் தலை புகும் அளவுக்கு குனிய வைத்து வான்கோழியாய் நாம் இருக்க, அவர் நம் முதுகைத் தடவிக் கொண்டே இருப்பார். எப்போது அடிப்பார் என்று தெரியாமல் எதிர்பார்ப்புடன் கலங்கிய சித்திரவதை இருக்கிறதே... ! ஏழாம் வகுப்பு என்று நினைக்கிறேன். சரித்திரம் பூகோளம் இரண்டுக்கும் ஒரே ஆசிரியர். மியூசியம் அழைத்துப் போகிறேன் பேர்வழி என்று எங்களிடம் மூன்று ரூபாய் வசூலித்துவிட்டு மொத்த பணத்தையும் சுருட்டிக் கொண்டு போனவர் அளவுக்கு வேறு யாரும் மோசமில்லை.
ஆசிரியர் தினத்தை நினைவுபடுத்தி மனச்சுமையைக் குறைத்த எபி வளர்க!
            அன்புக்கரசன் வீட்டு மொட்டை மாடியில் முப்பத்து மூணு ஆர்பிஎம் இசைத்தட்டுக்களைப் போட்டு ரா முழுக்கக் கூத்தடிப்போம். எம்எஸ்வி-இளையராஜா, பாலசந்தர்-பாரதிராஜா என்று பைசாவுக்குப் பயனில்லாத வாக்குவாதம் செய்வோம். 'இளையராஜா காபி அடிச்சதே இல்லை; அத்தனையும் அசல்' என்று என் நண்பன் வாதாடுவான். ஒரு பாரதிராஜா படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே ஹார்ட் அட்டேக்கில் இறந்த நண்பனின் நினைவு நாள் சமீபத்தில். பதின்ம வயதின் அதிர்ச்சி இன்னும் பாதிக்கிறது.
அவன் நினைவில் இந்த ABBA பிட்டு. எந்த இளையராஜா மெட்டு, நினைவிருக்கிறதா?
            கடவுள் நம்பிக்கை இல்லையென்று சொல்லிக்கொண்டு 'அபிராமி அந்தாதி' விளக்கம் எழுதுகிறீர்களே என்று சிலர் இந்தப் பதிவுக்கான மின்னஞ்சலில் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். திட்டவில்லை, நயமாகத்தான் கேட்டிருக்கிறார்கள், ஒருவரைத் தவிர (வேஷம் போடும் பார்ப்பான் என்றார்). கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களிடம் ஒரு கெட்டப் பழக்கம். என்னவென்று கேளுங்கள். கேட்டீர்களா? கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை முட்டாள்கள் என்று நினைப்பதே அந்தக் கெட்டப் பழக்கம். பார்ப்பான், மூடன் என்று ஸ்பீக்கர் போட்டு அலறுகிறார்கள். கடவுள் எனக்குத் தேவையில்லை என்பதால் நம்பவில்லை. கடவுள் நம்பிக்கையினால் ஏற்படும் விரயத்தை உங்களோடு சேர்ந்து நானும் வெறுக்கிறேன். அத்தோடு விடுங்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், நம்பிக்கை உள்ளவரின் படைப்புகளைப் பற்றி எழுதக்கூடாது என்ற சட்டம் வந்தது எனக்குத் தெரியாது.
உள்ளே கிள்ளே தள்ளிடாதீங்க.
            பிளாக் எழுதத் தொடங்கியதிலிருந்து இணையம் வழியாக புது நட்புகள் கிடைத்திருக்கின்றன. சிலரின் எழுத்துக்களைப் படிக்கும் பொழுது பிரமிப்பாக இருக்கிறது. சுஜாதா போன்றோர் இணையச் சூழலில் அத்தனை பிரபலமாகி இருப்பார்களா என்று அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன். சமீப இணைய நட்புகளில் போகனின் எழுத்துப்பிழையைப் படித்து விட்டு மூக்கின் மேல் விரல் வைத்தேன். அனியாயத்துக்குத் துணிச்சலாக எழுதுகிறார் போகன். இன்னொரு அசத்தல்காரர் செந்தில்.
நிறைய எழுதட்டும்.
            'ஆண்மையும் செக்ஸ் உணர்வும் பெருக்க சைவ உணவு' என்ற தலைப்பைப் பார்த்து விட்டு உடனே விரைந்தேன் (நீங்கள் மட்டும் என்னவாம்?). பதிவில் இப்படி எழுதியிருக்கிறார்கள் (http://ayurvedamaruthuvam.blogspot.com):
2010/09/02
காதல் இனாம்
சினிமா-2 | 2010/09/02 | Cyd Charisse-Gene Kelly |   கா   த   லை   க்   கா   சு   வெ   ன்   ற   க   வி   தை |