2011/05/27

மெல்லிசை நினைவுகள்

குருட்டு ஆய்வு



சுசீலா, ஈஸ்வரி, ஜானகி என்ற பெயர்களுக்கிடையே முதல் முறையாக இவர் பெயரைக் கேட்டபோது அன்னியமாகத் தோன்றியது நினைவிருக்கிறது. நல்ல வேளை, அந்த எண்ணம் நிலைக்கவில்லை. வளரும் பருவத்தில், ஈஸ்வரி தவிர பெண்கள் பாடிய தனிப்பாடல்களை அதிகம் கேட்காமல் இருந்த நாளிலும் இவரின் 'மல்லிகை' பாடலை ரகசியமாக முணுத்திருக்கிறேன். என் உயர்நிலைப் பள்ளி திராவிட இயக்க ஆசிரியர்கள் என்னை ஒரு மாதிரி பார்த்திருக்கிறார்கள்.

'இளைய சாம்பார்' என்று சலித்துப் படம் பார்த்துக் கொண்டிருக்கையில் திடீரென்று ஒலித்து மனமேறிய பாடல், 'அன்பே உன் பேரென்ன ரதியோ?'. 'கண்ணே, உன் சொல்லென்ன அமுதோ? செந்தமிழ் தந்தது'.. எத்தனை ரசித்திருக்கிறேன் இந்தப் பாடலின் பல்லவியை! இந்தப் பாடலையும், 'பட்டுப் பூச்சிகள்' பாடலையும் அதிகம் கேட்டதற்கு இவர் குரலினிமையும் என் பதின்ம வயதும் ஒரு காரணம். ம்ம்ம்ம். இப்போது கேட்டாலும் நெஞ்சுக்குள் யாரோ பிசைவது போல் இருக்கிறதே!

'எங்கிருந்தோ ஒரு குரல்' பாட்டில் இவருடைய பிசிறே இல்லாத மிக நேர்த்தியான, முதிர்ந்த பிடிப்பை மிகவும் ரசிப்பேன். 'ஏழு ஸ்வரங்களுக்குள்' போன்ற பாடல்களில் இதைவிடப் பல மடங்கு நேர்த்தியான, சீரான, குரல்வளத்தை எடுத்துக் காட்டியிருக்கிறார் என்றாலும், இந்தப் பாடலைப் பாடியிருக்கும் விதத்தில் இடியும் உண்டு, தாலாட்டும் உண்டு - கேட்டால் தொற்றிக்கொள்ளும் அபாயமுண்டு.

இவர் பாடிய 'நீராட நேரம்' பாடலை முப்பது வருடங்கள் போலத் தொடர்ந்து கேட்டு வருகிறேன். சலிக்கவே இல்லை. சிவாஜி-ஸ்ரீதர் கூட்டணியில் ஒரு பாடாவதிப் படம். தீபாவளி ரிலீஸ் என்று நினைக்கிறேன். தாம்பரம் நேஷனல் அல்லது எம்ஆர் தியேடர். நண்பர்களுடன் போயிருந்தேன். அறுவை தாங்க முடியாமல், நண்பன் அன்புக்கரசனின் எரிச்சல் கலந்தத் திட்டுக்களைத் தாங்கியபடி எழுந்து வெளியேறிக் கொண்டிருந்தோம் ("அப்பமே சொன்னனேடா? ஐரு முட்டாக்குங்களா.. கொன்றவட்டைங்களா.. தொந்தி கணேசனைப் பாக்க வேணாம்டா, நல்ல படம் போவம்னு சொன்னா கேட்டீங்களா?"). திடீரென்று இந்தப் பாடல் ஒலித்து அப்படியே உறைந்தது நினைவுக்கு வருகிறது. அதற்குப் பிறகு இந்தப் பாடலுக்காகவே பாடாவதிப் படத்தை எத்தனை முறை பார்த்தோம் என்று சொன்னால் சிரிப்பாகி விடும். நண்பன் சாம்பா சென்னையில் நடத்தும் மெல்லிசைக் கச்சேரிகளில் இன்னும் இந்தப் பாட்டைச் சேர்ப்பதாகக் கேள்வி. என்னுடைய டாப்10 பாடல்களில் ஒன்று.

'சொர்க்கத்திலே முடிவானது' பாடலின் துள்ளலில் மறைந்திருக்கும் சோகத்தை மிக அருமையாகக் கொண்டு வருகிறார். 'வாழ்கின்ற வாழ்வில் அன்பிருந்தால் வெள்ளி விழாக்களும் உண்டு'. இந்த வருடம் எங்கள் குடும்பத்தில் ஒரு தம்பதி தங்கவிழா காண்கிறார்கள். வாழ்க!

'தங்கத்தில் முகம்' பாடலில் ஜேசுதாசையும் எம்எஸ்வியையும் காப்பாற்றியது இவர்தான் என்று நினைக்கிறேன். 'பொன்மனச் செம்மல்' பாட்டை விடாமல் கேட்ட அன்றைய திமுக பிரபலத்தை அறிவேன். "என்னமா போட்டிருக்கான்யா பாட்டு! [பலான தீச்சொல்] தொப்பித்தலையனுக்கு இப்படியெல்லாம் பாட்டு போட்டு வளத்துட்டான்யா உங்க ஐயரு!" என்பார். தீவிர எம்எஸ்வி ரசிகர். கோடை நாட்களில் அவர் வீட்டில் நாங்கள் கழித்த 'எம்எஸ்வி இரவுகள்' சுவையானவை.

மாயமாக ஒரு ஒலி வந்தது, அது வாணி ஜெயராம் என்ற இனிமை.

மெல்லிசை நினைவுகள் | வாணி ஜெயராம் | 2011/5/27

2011/05/15

அழகின் சிரிப்பு



தில்லி விமான நிலையத்தில் காத்திருந்தேன்.

சிகாகோ விமானம் தாமதமாகக் கிளம்புவதால் நிறைய நேரம் இருந்தது. லவுஞ்சில் சாயலாம் என்று ஒதுங்கினேன். பாதி ராத்திரி சாப்பிடப் பிடிக்காத எனக்கு அங்கே வெட்டிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து அதிர்ச்சியாகிவிட்டது. இரவில் இப்படி வெறியோடு சாப்பிடுகிறார்களே என்று பயந்து வெளியே வந்தேன்.

சற்று நடந்த போது 3A கேட் அருகே வரிசையாகச் சாய்விருக்கைகளைக் கண்டு நின்றேன். ஐந்து பேர் கூட இல்லை. ஒரு வரிசையின் ஓரத்தில் ஒரு பெண்மணி புத்தகத்தால் முகத்தை மூடிக் கொண்டிருந்தார். 'இருபுறமும் இரண்டு இருக்கைகளாவது காலியாக இருக்க வேண்டும்' என்பது எனது இடம் பிடிக்கும் கொள்கையானதால், அந்தப் பெண்ணுக்கு எதிர் வரிசையில் அமர்ந்தேன். விமான நிலையத்தில் வாங்கிய புதுப்புத்தகம் ஒன்றைப் பிரித்து வாசனை பார்த்தேன்.

படிக்கத் தோன்றவில்லை. மறுபடி அந்தப் பெண்ணைக் கவனித்தேன். யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். தற்செயலாக அந்தப் பெண்ணின் முகத்தைக் கவனித்தேன். அசந்து போனேன். அப்படி ஒரு அழகு! இருப்பத்தைந்து வயது இருக்கும் என்று நினைத்தேன். இரட்டைப் பின்னல் போட்டிருந்தார். இரட்டைப்பின்னலைக் கடைசியாகத் துவாபர யுகத்தில் பார்த்தது! அழகாக மையிட்ட கண்கள். காதுகளில் சிறு முத்துக்குடைகள் தலைகீழாகத் தொங்கின. தெரிந்த கழுத்தில் சிவப்போ வைலட்டோ மின்னியது. அவ்வப்போது கன்னத்தில் குழி விழ சிரித்தார். வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். எத்தனை நேரம் அப்படிப் பார்த்தேனோ தெரியவில்லை. போன் பேசும் பொழுதே அந்தப் பெண் கடைக்கண்ணால் என்னைக் கவனித்ததையும் கவனித்தேன்.

சுதாரித்து முகந்திருப்பினேன். 'my goodness! என்ன செய்கிறேன்? எனக்கு என்ன வயது! சே! இப்படியா ஒரு பெண்ணைப் பார்வையால் விழுங்குவது?' என்று எனக்குள் நினைத்து குன்றினாலும், மறுபடி அந்தப் பெண்ணைப் பார்த்தேன். இப்போது செல்போனைக் காணோம். சும்மா நோட்டமிட்டுக் கொண்டிருந்தார். அருகே சென்று, "என்னை மன்னித்து விடுங்கள். உங்களை அப்படி வைத்த கண் வாங்காமல்.." என்றேன்.

"ஜொள் விட்டதற்கா?" என்றார் சரளமான ஆங்கிலத்தில்.

"தயவுசெஞ்சு மன்னிச்சுருங்க. உங்களைப் பார்த்ததும் எனக்கு ஒரு நடிகை, என்னுடைய அபிமான நடிகைகளில் ஒருவர், நினைவுக்கு வந்தது. அச்சு அவர் போலவே இருக்கிறீர்கள். i mean.. அச்சு உங்களைப் போலவே அவர் இருப்பார்" என்றேன்.

என்னைக் கண்ணால் வெட்டி, புருவத்தை வலிக்காமல் உயர்த்தி, கன்னத்தில் குழிவிழ இழைப் புன்னகை செய்தார். "i get it all the time" என்றார்

"no wonder"

கொஞ்சம் பொறுத்து, "நீங்கள் சொன்ன movie star, எனக்கு அத்தை பாட்டி முறை" என்றார்.

எனக்குச் சட்டென்று பேச்சு வரவில்லை. அவரை மறுபடி பார்த்து, "முகச்சாயல் அப்படியே இருக்கிறது" என்றேன். ஏன் இப்படி உளறுகிறேன்? சலித்து, "you made me go back in time" என்றேன். "உங்க முகம்... so captivating.. i mean.. in a good way.." மறுபடி வழிந்தேன். "please accept my apologies.." என்றேன்.

"thanks" என்றார். பிறகு அவரே மெள்ளப் பேசத் தொடங்கினார். indy அருகே ஒரு பிரபல பார்மசூடிகல் கம்பெனியில் வேலை பார்ப்பதாகச் சொன்னார். எம்பிஏ முடித்து வேலைக்குச் சேர்ந்து முதல் விடுமுறையில் இந்தியா போய் திரும்புவதாகச் சொன்னார். என்னைப் பற்றிக் கேட்டார். "நீங்களும் எம்பிஏவா? அட, அதே ஸ்கூலா? இவரைத் தெரியுமா அவரைத் தெரியுமா.." என்று கண்களை விரித்து.. ஆச்சரியப்பட்டு.. சிரித்துப் பேசி.. எனக்கு அவருடைய அத்தை பாட்டி நினைவு வந்துவிட்டது.

"என்னை மன்னிச்சுருங்க" என்றேன். "..to gawk at you like that.. i didn't mean to.. you must have thought..". கஷ்டம்! பிறகு தயங்கி, "please, let me make it up to you.. can i get you something?" என்றேன்.

சிரித்து, "well, if you must.. உங்க கிட்டே இருக்கிற புதுப் புத்தகத்தைக் கொடுங்க, வாங்கிக்கிறேன்" என்றார்.

புத்தகத்தைக் கவனித்திருக்கிறார்! அடிப்பாவி! ஜொள்ளுக்குப் பரிகாரம் புதுப்புத்தகமா? ம்ம்ம். "absolutely!" என்றேன். புத்தம்புது வோடவுஸ் ஆம்நிபஸ் தடிப்புத்தகத்தின் முதல் பக்கத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்தேன். "nice meeting you" என்று இடத்தை விட்டு நகர்ந்தேன்.

அவருடைய கண்கள் என்னைப் பின் தொடர்வது போல் தோன்றியது. அந்தக் கண்கள்! அந்தச் சிரிப்பு! அந்தக் கன்னக்குழி! முகத்தின் பொலிவு! என் வழியல்களைக் கொஞ்சம் கூடப் பொருட்படுத்தாத அவரின் demeanorல் இருந்தது தன்னம்பிக்கையா, attitudeஆ, அசாத்தியக் கௌரவமா?

என் கண்களுக்கு வேலியில்லை என்பது உறைத்தாலும், உலகில் அழகுக்கு அழிவேயில்லை என்று தோன்றியது.

குற்ற உணர்வுடன் ஒரு வித நிம்மதியும் பரவ லவுஞ்சுக்குள் நுழைந்தேன். இன்னும் தின்று கொண்டிருந்தார்கள்.

சினிமா-4 | 2011/5/15 | மதுபாலா


2011/05/08

வருகை



சப

அவர்கள் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம், ஆள் துணை சேர்த்துக் கொண்டு, கூட்டமாக மணல் மேட்டிற்கு வந்த போது இருட்டத் தொடங்கிவிட்டது. அமைதியாக இருந்தது இடம். நடந்து முடிந்த விபரீதத்திற்கான அடையாளமோ, தடயமோ தெரியவில்லை.

"இங்க தாங்க" என்றாள், விசும்பியபடி.

"என்னம்மா யாரையும் காணோமே? இன்ஸ்பெக்டரும் ஏட்டையாவும் முதலாளியும் எங்க போனாங்க? நமக்கு முன்னாலயே போனாங்களே?" என்றான், கூட வந்த ஒருவன்.

சற்றுத் தொலைவில் அங்குமிங்கும் விளக்கடித்துப் பார்த்துக் கொண்டிருந்த இன்னொருவன், "ஓடியாங்க, இங்க பாருங்க" என்றான்.

அவன் காலடியருகே, தரையில் வரிசையாகப் பதிக்கப்பட்டிருந்த இரத்தம் வடிந்த விதம் விதமான ஆறு விரல்கள், நீல நிறத்தில், விளக்கொளி போல் பிரகாசித்துக் கொண்டிருந்தன.

"என்னய்யா இது, அக்கிரமம்" என்றார் பொடி போட்டுக் கொண்டிருந்தப் பெரியவர்.

"ஐயா, மேலே பாருங்க" என்றான் இன்னொருவன்.

தொலைவானில் பளிச்சிட்ட வித்தியாசமான சதுர நட்சத்திரங்கள், வளர்ந்து பெரிதாகிக் கொண்டிருந்தன.

"என்னய்யா இது, அக்கிரமம்!" என்றார் பெரியவர், ஆச்சரியக்குறியுடன்.

ரொக்

ஆனைமலையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

பின்னிருக்கையில் படுத்திருந்தப் புது மனைவியைக் கண்ணாடியில் பார்த்தபடி, வண்டியை ஓட்டினான். முகத்தின் இரண்டு நாள் தாடியை வருடிக் கொண்டபோது, அவனால் புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை.

"என்ன இளிப்பு?" என்றாள்.

"நீ தூங்கலியா லட்டு? ஒண்ணுமில்லே. ரெண்டு நாளா சவரம் பண்ணக் கூட நேரமில்லை, அதான்..." சிரித்தான்.

"..க்கும்.. சவரமா? சோறு தண்ணிக்குக் கூட நேரமில்லாம, பொழுதெல்லாம் செஞ்சுக்கிட்டிருந்தா? உடம்பெல்லாம் வலிக்குது. பொள்ளாச்சி வந்ததும் சொல்லு, நான் தூங்கப் போறேன்."

"என்னைப் பாத்தபடி தான் தூங்கேன் செல்லம்? சேலை விலகின அழகைப் பாத்தா, எனக்கும் தெம்பாயிருக்கும்ல?"

"சீ, புதுசா என்ன பாக்கப் போறே? ரோட்டைப் பாத்து வண்டியை ஓட்டுயா" என்றபடி புரண்டு படுத்தாள்.

"அதும் அழகு தான்" என்று சிரித்தபடி, சாலையில் கவனம் செலுத்தினான். 'நெடுஞ்சாலை 27ல் திரும்பி ஒரு மணி நேரத்தில் பொள்ளாச்சி போய்விடலாம். வீட்டில் பெற்றோர் கூட்டம் இல்லாமலிருந்தால், குளித்துச் சாப்பிட்டதும் இன்றிரவு இன்னொரு முறை. விடிந்தால் இருவரும் வேலைக்குப் போக வேண்டும்' என்று நினைத்தபடி வேகம் கூட்டியவனுக்கு, சாலையின் அரவமற்ற அமைதி லேசாய் உறுத்தியது. தொலைவில் தெரிந்த சாலை விளம்பரங்கள் சடுதியில் அருகில் வந்து போயின. பின்னிருக்கையில் ஒயிலாகப் படுத்திருந்தவளைப் பார்த்ததும், ஏதோ தோன்றியவனாக நெடுஞ்சாலையிலிருந்து விலகி ஆளில்லாத மண் சாலையில் திரும்பி, ஒதுக்கமான இடத்தில் வண்டியை நிறுத்தினான். ஓசை வராமல் பின்னிருக்கைக்கு நகர்ந்தான்.

கை பட்டதும், துள்ளினாள். "என்னய்யா இது?" என்றாள்.

"அக்கம் பக்கம் யாருமில்லடா தங்கம். பொள்ளாச்சில, வீட்ல கூட்டமா இருப்பாங்க. அதான் வண்டியிலே ஒரு தடவை" என்று நெருங்கினான்.

"வேணாம்யா, போவலாம். இருட்டிரும்" என்று சொன்னவளின் கைகளை இணைத்துக் கொண்டான். அவள் முகத்தருகே குனிந்து, கழுத்தில் உதடுகளை உரசினான். புதுத் தாலியின் மஞ்சள் மணம் இன்னும் குறையவில்லை. சிறு வைரத்தோடு மினுத்த அவள் காது மடலை, வலிக்காமல் உதடுகளால் பிடித்திழுத்தான்.

"சூ" என்றாள்.

"என்ன?"

"ஏதோ சத்தம் கேக்குதில்ல?" என்றாள்.

"ஒண்ணுமில்ல, வா" என்றான். இடுப்பிலிருந்த சேலைத் தலைப்பை விலக்க முனைந்த அவன் கைகள் வயிற்றில் பட்டதும், அவள் அடிவயிற்று நரம்புகள் கணம் சுருங்கித் துடித்தன. இதமாகச் சுட்ட அவள் வயிற்றில் அவன் ஈர முத்தமிட்டு அழுத்தினான். "ஸ்" என்று இடுப்பையும் முகத்தையும் உயர்த்திக் கொஞ்சலாய் முனகியபடியே வண்டிக் கதவின் கைப்பிடியைப் பற்றியவள், திடீரென்று "என்னய்யா அது?" என்றாள் உரக்க.

"எதுக்கு பதட்டப்படுறே?"

"படபடனு வெளிச்சம்யா, என்ன அது?" மிரண்டாள். "வெளில கொஞ்சம் பாருயா"

கதவைத் திறந்து வெளியே பார்த்தவன், திகைத்தான். வண்டியருகே சில கருநீல விளக்குகள் தரையில் நீர் தெளித்தாற் போல் மங்கலாய் மின்னின. எதிரே மணல் மேட்டில், ஒரு சதுரப்பெட்டி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. என்னவாக இருக்கும் என்று நினைத்து இரண்டடி நடந்தவன், இன்னும் சில விளக்குகள் மணல் மேட்டில் சரிவதைப் பார்த்தான். கிளம்பலாம் என்று வண்டிக் கதவைத் திறக்க நினைத்தவன், தரையிலிருந்த விளக்குகள் ஒளி கூட்டி எழுவதைப் பார்த்ததும் தயங்கி நின்றான்.

பத்துப் பதினைந்து பாம்புகள் ஒன்றானது போல் ஒரு உருவம் எழுந்தது. கைகளா, கால்களா, வால்களா என்று சொல்ல முடியாதபடி நீண்டிருந்த உறுப்புகளின் நுனியில், பள பளக்கும் கருநீல நிறம். அவனைக் கவ்வி இழுத்துக் கொண்டது உருவம்.

"ஓடு, துணைக்கு யாரையாவது கூட்டியா, ஓடிப் போயிரு" என்று மனைவியைப் பார்த்துக் கத்தினான். விளக்குகள் அவன் உடலெங்கும் பரவின. விளக்குகள் என்று நினைத்தவை வாய்கள் என்பது புரிந்ததும், திடுக்கிட்டு அலறினான். மணல் மேட்டில் இறங்கிய இரண்டாவது விளக்குருவம் எழுந்து வருவதைப் பார்த்து விட்டு, இன்னும் அலறினான். "ஓடு, தப்பிச்சுப் போ, ஓடு".

இதையெல்லாம் பார்த்து உறைந்து போனவள், அவன் அலறலைக் கேட்டதும் கதவைத் திறந்து வெளியே ஓடினாள். "காப்பாத்துங்க" என்று கதறியபடி வேகமாக மண் பாதையைக் கடந்து, நெடுஞ்சாலையில் ஓடினாள். "யாராவது காப்பாத்துங்க".

இதற்குள் வண்டியை நெருங்கிவிட்ட இரண்டாவது உருவம், அவனைச் சின்னாபின்னமாகக் கசக்கிப் பிழிந்து கொண்டிருந்த முதல் உருவத்தைப் பார்த்து, "க்ரக் புன்?" என்றது.

"ஊடி ஷூ டுக்" என்றது முதல் உருவம்.

"லே" என்ற இரண்டாவது உருவம், நொடியில் வண்டியைக் கொளுத்தியது. எரிந்து கொண்டிருந்த வண்டியை விட்டு விலகி, முதல் உருவத்தை அடைந்து "க்ரக்?" என்றது.

முதல் உருவம், இன்னும் அலறிக் கொண்டிருந்தவன் உடலிலிருந்த ரத்தம் முழுவதையும் உறிஞ்சிய பின், அருகிலிருந்த புட்டியில் நிரப்பியது. ரத்தம் வடிந்த அமைதியான உடலிலிருந்து, கை விரல் ஒன்றை ஒடித்து, "சொடுக்" என்றது. ஒடித்த விரலை வாயில் சற்று மென்றபின் தரையில் போட்டு, "வூன்" என்றது.

எஞ்சியிருந்த உடலை எரிந்து கொண்டிருந்த வண்டியில் எறிந்த இரண்டாவது, "கின் மெனி?" என்றது.

"ரொக்" என்ற முதல் உருவம், ரத்த புட்டியைச் சுட்டிக் காட்டி "இன் லான்" என்றது.

சற்று அமைதி காத்த இரண்டாவது, மறுபடியும் "க்ரக்?" என்றது.

"நுன் சிப் லல்" என்ற முதல் உருவம், நெடுஞ்சாலையைச் சுட்டிக் காட்டியது.

"லே" என்ற இரண்டாவது உருவம், நெடுஞ்சாலையை நோக்கி நகர்ந்தது.

ரத்தப் புட்டியை எடுத்துக் கொண்டு மணல் மேட்டுக்கு விரைந்தது முதல் உருவம். நீல விளக்குகள் மெள்ள மங்கி மறைந்தன.

லான்

நெடுஞ்சாலையை அடைந்த இரண்டாவது உருவம், சாலையின் இரு புறமும் பார்த்தது. ஆளில்லை, அரவமில்லை. தனிமையில் நின்றது.

எதிரே விளம்பரப் பலகை.

'இன்றைக்கு நீங்கள் இறந்தால் உங்கள் அருமை மகளின் கல்விக்கும் திருமணத்துக்கும் யார் பொறுப்பு?' என்ற ஆயுள் காப்பு நிறுவனத்தின் விளம்பரத்தில் சோகமாக நின்று கொண்டிருந்த இளம் பெண்ணின் படத்தைப் பார்த்தது உருவம்.

அதன் நீல விளக்குகள் மங்கி அடங்கின. நீண்ட உறுப்புகள் சுருங்கத் தொடங்கின. கை, கால், முகம் என்று மனித உறுப்புகளாய் மாறத் தொடங்கின.

தொலைவில் தெரிந்த வாகன விளக்குகள் அருகில் வரக் காத்திருந்தது.

க்வட

நள்ளிரவுக்குள் பரம்பிக்குளம் போய்விட வேண்டுமென்று வேகமாக வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தேன். நான் கிளம்பி அரை மணி விட்டு அவன் கிளம்புவான்.

ஆறு மாதமாக நடக்கிறது எங்கள் கள்ளக் காதல். மாதமொரு முறை வேலை விஷயமாகக் கோவைக்குப் போகும் நாங்களிருவரும், திரும்பி வரும் போது ஆனைமலை வழியில் தனியாக இருக்கும் பழனி லாட்ஜில், உல்லாசமாக இருந்துவிட்டுத் திரும்புவோம். லாட்ஜிலிருந்து ஒன்றாக வருவதும் செல்வதும் யாருக்கும் தெரிந்து விடக் கூடாதென்று தனித்தனியாக வருவோம், போவோம்.

"எத்தனை நாள் தான் இப்படித் திருட்டுக் காதல் செய்வது?" என்று இந்த முறை கோபித்த காதலனுக்குத் தகுந்த பதில் சொல்ல முடிவில்லையே என்று தவித்துக் கொண்டிருந்தேன். அடுத்த மாதம் சந்திப்பதற்குள் நிச்சயமாக ஏதாவது தீர்மானம் செய்ய வேண்டும் என்று வேகமாக வண்டியைச் செலுத்தினேன். எதிரே தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்த பெண், குறுக்கே வந்து விழுந்துவிடப் போகிறாளே என்று வண்டியை சற்று ஒதுக்கி ஓட்டினேன்.

நாங்கள் இருவரும் ஒரே அலுவலகத்தில வேலை பார்ப்பதால், அவனைத் தினமும் பல முறை சந்திப்பேன். அவனைப் பார்க்கும் போதெல்லாம் மனம் பதறும். அவனுடன் ஓடி விடலாமாவென்று தோன்றும். அவன் பேச்சும், அழகும், புத்திசாலித்தனமும் என்னைத் தினம் வாட்டும். அவனை விட்டுப் பிரிந்திருக்க முடியவில்லை. எனக்குத் திருமணமாகிக் குழந்தைகள் இருப்பது தெரிந்தும் என்னுடன் பழகினான். அவனுடன் பழகுவதில் இருந்த கவர்ச்சியும் மகிழ்ச்சியும் எனக்கு என் திருமணத்தில் கிடைக்கவில்லை. இந்த முறை வீட்டில் சொல்லி எப்படியாவது விவாகரத்து வாங்க வேண்டியது தான். தெரிந்தால் துடித்துப் போய்விடுவார்கள். அதுவும் இன்னொரு ஆணைக் காதலிக்கிறேன் என்பது தெரிந்தால், என் மனைவி தற்கொலை கூட செய்து கொள்ளலாம்.

ஒரு இளம்பெண் தனியாக நின்று கொண்டிருப்பதைப் பார்த்து, வண்டியை நிறுத்தினேன்.

சோகமாக நின்று கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து "யாரம்மா நீ? ஏன் இங்கே நடு வழியில் தனியாக நிற்கிறாய்?" என்றேன். "உங்க வீடு பக்கத்தில் இருந்தால் நான் கொண்டு விடுகிறேன்" என்றபடி கீழே இறங்கினேன்.

பதில் சொல்லாமல் என்னையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள் அந்தப் பெண்.

எதிரே இருந்த விளம்பரத்தைத் தற்செயலாகப் பார்த்தேன். "விளம்பரத்திலிருக்கும் பெண்ணைப் போலவே இருக்கிறாயே நீ?" என்று அவளைப் பார்த்துத் திரும்பியவன், திடுக்கிட்டேன். பெண்ணைக் காணோம்.

அவளிருந்த இடத்தில் என்னைப் போலவே ஒருவன் நின்று கொண்டிருந்தான். அருகில், உடலெங்கும் நீல விளக்குகளாய் எரிய, ஏராளமான கை கால்களுடன், ஒரு கோர உருவம்.

"ஏய்" என்று நான் சுதாரிப்பதற்குள் என்னைக் கவ்விக் கொண்ட கோர உருவம், என்னைப் போலவே இருந்தவனிடம் ""ஊடி ஷூ டுக்" என்றது.

"லே" என்றபடி, என் காரை நொடியில் எரித்துவிட்டான் என்னைப் போலிருந்தவன்.

"இன் க்வட" என்ற அந்தக் கோர உருவம், என்னைக் கவ்வியபடி பக்கத்திலிருந்த மணல் மேட்டை நோக்கி விரைந்தது. திமிறித் தப்பிக்க முயன்றேன், முடியவில்லை. என் இரத்தத்தைக் குடிக்கத் தொடங்கியவுடன் அலறினேன்.

மூன்

போதை தெளியத் தரவழைத்தக் காபியின் கடைசிச்சொட்டை நாவில் அழுத்தியபடி எழுந்தேன். கைக் கடியாரத்தைப் பார்த்தேன். அவன் கிளம்பி நேரமாகி விட்டது. அனேகமாக ஆனைமலை அருகே போயிருப்பான். பழனி லாட்ஜ் குளிரறையின் சாத்தியக் கதவுகளுக்குப் பின் சற்று முன் நிகழ்ந்த சுவாரசியங்களை அசை போட்டபடி, 'இனி அடுத்த மாதம்' என்ற பெருமூச்சுடன் வாயிற்புறம் நடந்தேன்.

லாட்ஜ் வரவேற்பறையைத் தாண்டும் போது தலைவிரி கோலமாகப் பதறியடித்துக் கொண்டு வந்தாள் அந்தப் பெண். "ஐயா, ஐயா.. காப்பாத்துங்க" என்றாள்.

என்னிடம் பணம் அதிகமில்லை. அவள் பண உதவி கேட்டு வந்தவள் போல் தெரியாவிட்டாலும், அவளுடன் பேசிக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை. "என் கிட்டே சில்லறை இல்ல. அங்கே கேளுமா" என்று லாட்ஜ் முதலாளியிடம் அனுப்பி வைத்தேன்.

"பணம் வேண்டாங்க. என் புருஷனுக்கு ஆபத்து. ஐயா, காப்பாத்துங்க" என்று அழுதாள்.

இதற்குள் அருகே வந்த லாட்ஜ் முதலாளி, "நீங்க போங்க சார். இங்க வாங்கம்மா. அதோ பாருங்க ஏட்டையா காபி சாப்பிட்டுக் கிட்டிருக்காரு. அவருகிட்ட சொல்லுங்க. ஏதாவது திருடு போயிடுச்சா? " என்றார். நன்றி சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

இருட்டுவதற்குள் ஆனைமலைக்குப் போக வேண்டும். வெளியே வந்து வண்டியைக் கிளப்பி மெள்ள நெடுஞ்சாலையில் கலந்தேன். போதை இன்னும் குறையவில்லை. மெள்ள ஓட்ட வேண்டும்.

சாலையின் அமைதியும் சிலமணிகளுக்கு முன் குடித்திருந்த டீச்சர்சும் சிந்தனைகளைக் கிளப்பின. எத்தனை நாள் இப்படித் திருட்டுத்தனமாகக் காதலிப்பது? ஒருவேளை கடுமையாகப் பேசிவிட்டோமா? இனியும் மனைவியைப் பிரிய மனமில்லையென்றால் அடுத்த மாதம் அவனிடம் சொல்லிக் காதலை முறித்துக் கொள்ள வேண்டும். மனைவி தற்கொலை செய்துகொள்வாள் என்று பைத்தியம் போல் ஏதோ புலம்புகிறான். மனைவி முக்கியமா, காதல் முக்கியமா என்று கேட்டுவிட வேண்டியது தான். இன்னும் இரண்டு மாதங்களில் ஆடிட் முடிந்து விடும். இப்படிச் சந்திக்க முடியுமா என்பது சந்தேகமே. ஏன் இப்படி முதுகெலும்பில்லாத ஆண்களையே தேர்ந்தெடுத்துக் காதலிக்கிறேன் தெரியவில்லையே? ஒருவேளை அவன் வீட்டுக்கே போய் இன்றைக்கு அவன் மனைவியிடம் எங்கள் காதலைப் பற்றிச் சொல்லி விடுவதா?

அவன் நினைவாகவே குழப்பத்துடனும் கலவரத்துடனும் வண்டியைச் சீராகச் கொண்டிருந்தவன், வழியில் அவனைப் பார்த்ததும் திடுக்கிட்டு நிறுத்தினேன். தனியாக நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்து வியந்தபடி இறங்கினேன். "என்ன, தனியா நிக்குறே? வண்டி என்ன ஆச்சு?" என்றேன்.

பதில் சொல்லாமல் என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ஏதோ ஆகிவிட்டது போல் தோன்றியது. அவன் தோள்களை உலுக்கினேன். "என்ன ஆச்சு? உன் வண்டி எங்கே?"

என் இடது தோளை யாரோ தொட்டுத் திருப்பினார்கள்.

துவ

தரையிலிருந்த மூன்று விரல்களைக் காட்டி, "மூன் சொடுக்" என்றது முதல்.

"லே" என்றது இரண்டாவது.

"பி" என்றபடி இரண்டும் சதுரப் பெட்டிக்குள் நுழைந்தன. திரையில் தோன்றிய உருவத்தை வணங்கின. மூன்று ரத்தப் புட்டிகளைக் காட்டின. திரையிலிருந்த உருவம் திருப்தியுடன் "ஜே" என்றது.

"ஜே" என்றன, முதலும் இரண்டாவதும்.

ஒரு ரத்தப் புட்டியை எடுத்து, சிறிய குழாய்க்குள் ஊற்றியது முதல். சற்று பொறுத்து, ஒரு வெள்ளை நிற விசையைத் தொட்டது இரண்டாவது. உடனே பெட்டிக்கு மூச்சு வந்தது போல் எழும்பியடங்கியது. "ஜே" என்றது முதல்.

"ஜே" என்றது திரை உருவம். "ஜே" என்று ஆயிரக் கணக்கில் குரல்கள் வந்தன திரையிலிருந்து.

"கின் மெனி சொடக்?" என்றது, திரை உருவம்.

"ஏலோ, ஏலோ" என்ற முதல், ஒரு செய்திப் பத்திரிகையின் தலைப்புச் செய்தியை ஒளி பரப்பியது. 'உலக மக்கட்தொகை அறுநூறு கோடியைத் தாண்டி விட்டது' என்றது தலைப்புச் செய்தி.

"ரொக் ஏலோ, ரொக் ஏலோ" என்றது இரண்டாவது.

"ஆ வரா?" என்றது திரை உருவம்.

"லே. வரா, வரா" என்று இரண்டு ரத்தப் புட்டிகளை உயர்த்தியபடி ஆரவாரம் செய்தது முதல்.

"லே" என்றது திரை உருவம். அடுத்த சில நொடிகளில் ஆயிரக் கணக்கில் சதுரப் பெட்டிகள் எழும்பிப் பறக்கத் தொடங்கியது திரையில் தெரிந்தது. "ஜே" என்றபடி திரை உருவம் மறைந்து போனது.

முதலும் இரண்டாவதும் வெளியே வந்தன. "இன் மூன்?" என்றது இரண்டாவது.

"இன் மூன்" என்றது முதல்.

"லே" என்றபடி, நெடுஞ்சாலையருகே சென்று நின்று கொண்டது இரண்டாவது. எதிரிலிருந்த ஆயுள் காப்பீட்டு விளம்பரப் பலகையில் தெரிந்த இளம் பெண்ணை மறுபடி உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. நொடிகளில் உருவம் மாறத் தொடங்கியது.

வூன்

வேகமாக வந்து கொண்டிருந்த காவல்துறை ஜீப் மணல் மேட்டருகே வேகம் குறைத்தது. திடீரென்று நிறுத்தச் சொன்னார் இன்ஸ்பெக்டர். "502. அந்தப் பொண்ணு தனியா நின்னுக்கிட்டு இருக்கு, பாரு. என்னானு விசாரி" என்றார்.

வண்டியை நிறுத்திய 502, இறங்கி அந்தப் பெண்ணிடம் வந்தார். "யாருமா நீ? சின்னப் பொண்ணு தனியா இருட்டுல நிக்குறே? உங்கப்பா அம்மா எங்கே?" என்றார்.

"ஊடி ஷூ"

"என்னா சொல்றே நீ, புரியலையே?"

"ஊடி ஷூ"

"சார், இங்கே வாங்க. இந்தப் பொண்ணு இங்கிலீஷ் பேசுது சார்" என்று வண்டியிலிருந்த இன்ஸ்பெக்டரை அழைத்தார் 502. இன்ஸ்பெக்டருடன் இன்னொருவரும் இறங்கி வந்து "என்னமா, யாரு நீ?" என்றனர்.

"ஊடி ஷூ" என்ற அந்தப் பெண், நொடிகளில் ஜீப்பைக் கொளுத்தினாள்.

"ஏய், ஏய்" என்று விரைந்த இன்ஸ்பெக்டரும் மற்ற இருவரும் திடுக்கிட்டு நின்றனர். பெண் உருமாறிக் கோரமானாள். தரையிலிருந்து இன்னொரு உருவம் எழுந்தது.

"மூன் சொடக், மூன் சொடக்" என்றபடி அவர்களைச் சூழ்ந்து கொண்ட இரண்டு உருவங்களின் ஏராளமான கை கால்களில் கருநீல விளக்குகள் மின்னின.

ழூ

ஒடித்துப் போட்ட விரல்களைத் தவிர வேறு தடயமில்லாமல், இடத்தைச் சுத்தம் செய்துவிட்டு சதுரப் பெட்டிக்குள் ஏறி அமர்ந்தன. ஐந்து ரத்தப் புட்டிகளையும் சிறிய குழாயில் ஊற்றியது இரண்டாவது.

"ஆ வரா, இ வூன்ழூ நிமி " என்றது முதல்.

"லல் பி ரொக் சொடுக் நுன்?" என்று கேட்டது இரண்டாவது, தன் இருக்கையில் பரவியபடி.

"லே" என்று உறுப்புகளை அசைத்த முதல், வெளியே தெரிந்த ஆறு விரல்களை, ஜன்னல் வழியே சுட்டிக் காட்டியது. வெள்ளை விசையைத் தொட்டதும் கணங்களில் சதுரப் பெட்டிக்கு உயிர் வந்தது.

"வூன்ழூ, நொய, அக்ட், சப, ரொக், லன், க்வட, மூன், துவ, வூன்" என்று திரையில் எண்ணிக்கை போல் ஒலிக்கத் தொடங்கியது. "ழூ" என்றதும் மெள்ளக் கிளம்பி, உயரே எழும்பியது சதுரப் பெட்டி.


இந்த விபரீதம் போதுமா? இ கொ வே? தத்வாத்ரி   மானிட சேவை