2013/09/28

கண்பிடுங்கி நீலன்

3


1     2


    "ப்லெசன்டா சிக்கல்கள் உருவானால் அம்மா பிள்ளைங்க மூணு பேருக்குமே ஆபத்து.. எமர்ஜென்சி சி-செக்சன் செய்யணும் வென் வி ஸ்டில் ஹெவ் எ சேன்ஸ்" என்று டாக்டர் சொன்னதும் 'விமலா பிழைத்தால் போதும்' என்ற எண்ணமே ரகுவின் மனதில் இருந்தது. "ஐயோ! எத்தனை காதலித்தேன் இவளை! இப்படி என்னை ஏமாற்றித் தவிக்கவிட்டுப் போய்விடுவாளா?" என்று உள்ளுக்குள் துடித்ததை மறைத்து விமலாவின் கைகளைப் பிடித்தபடி ஏதும் பேசாதிருந்தான். விமலா லேசாகப் புன்னகைத்து தலையசைத்தாள். "வி கெட் இட்" என்றாள்.

"ஐ'ம் ஸோ சாரி விமி" என்றான் ரகு.

"இப்ப வருந்தி என்ன பலன்? இப்படியாகும்னு தெரிஞ்சா தினம் முரட்டுத்தனமா செஞ்சிருப்போமா? போகட்டும் விடு" என்று சிரித்த விமலாவின் கண்களில் தெரிந்த நம்பிக்கையில் அவனுக்கு மன்னிப்பு கிடைத்தாற் போலிருந்தது. எத்தனை சலுகைகளை வாழ்க்கை தகுதியற்ற ஆண்களுக்கு வாரி வழங்கியிருக்கிறது!

"குட்.. வி ஹெவ் டு செக் அனஸ்திசியா ரிஸ்க்ஸ்.. மொதல்ல விமலாவை டெஸ்ட் செஞ்சுருவோம்.." என்ற டாக்டர், இன்னும் பிரமை பிடித்திருந்த ரகுவைத் தோளில் தட்டினார். "வேகப் மாசோ மேன்! உங்க பெண்டாட்டி எத்தனை தைரியமா இருக்காங்க.. வாட்ஸ் வித் யூ? ட்ரையிங் டு ப்ரூவ் மென் ஆர் மெலோ? கமான்.. நாட் இன் திஸ் தியேடர்" என்றபடி வெளியேறியவர் திரும்பினார். "ஹேய்" என்றார். இதமாக ரகுவின் தோளை அழுத்தி, "கவலைப்படாதீங்க ரகு. ஷி வில் பி பைன். மேயோவிலிருந்து ஸ்பெசலிஸ்ட் இஸ் ஆன் ஹிஸ் வே. உங்க ஊர்க்காரர். டாக்டர் மனி இஸ்வர். ஹை ரிஸ்க் ப்ரெக்னென்சி சிகிச்சைகளில நிபுணர். உங்க விமலாவை உங்க கிட்டே பத்திரமாக ஒப்படைப்பது என் பொறுப்பு" என்றார்.

    அறுவைச் சிகிச்சை அரங்குள் சென்றதும் ஆடை மாற்றிக் கொண்டான். விமலாவைச் சுத்தமாகத் துகிலுரித்துக் கிடத்தியிருந்தார்கள். மல்லாந்து கிடந்து நிலையிலும் வயிற்றின் பருமன் புலப்பட்டது. மேலுக்கு ஒரு நீலப் போர்வை போர்த்தியிருந்தார்கள்.. ஏற்கனவே வாங்கிக் கொண்ட பத்தாயிரம் கையெழுத்துகளுக்குக் கொசுறாக இன்னும் இரண்டு கையெழுத்துக்களை ரகுவிடம் வாங்கிக்கொண்டு இதோ வருவதாகச் சொல்லிச் சென்ற நர்சுகளுக்காகக் காத்திருந்தார்கள்.

"என்னை ஏமாத்திட்டுப் போயிராதடி" என்றுத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்த ரகுவையே பார்த்துக் கொண்டிருந்தாள் விமலா. 'காதலிப்பதாயிருந்தால் இந்தக் கோழையையே மீண்டும் மீண்டும் மீண்டும் காதலிக்க வேண்டும்' என்று நினைத்துக்கொண்டாள்.

"ஆர் வி ரெடி?" என்றபடி நர்சுகளுடன் உள்ளே வந்த டாக்டரைப் பார்த்துத் தலையசைத்தார்கள்.

"ரகு.. இப்ப விமலாவுக்கு அனஸ்திஸ்யா டெஸ்ட் எடுக்கப் போறோம். சிக்கலான கர்ப்பங்கிறதால பரிசோதனைகள் செய்ய வேண்டியிருக்கு.. சோதனைகள் முடியுறப்ப டாக்டர் மனியும் வந்துருவாரு.. லுக்.. இது போல சர்ஜரிகளில் உங்களை உள்ளே அனுமதிக்கத் தயக்கமா இருக்கு.. மருத்துவச் சட்டப்படி உங்களை வெளியே நிற்கச் சொல்லணும்.. ஆனா உங்க மனைவி வற்புறுத்துறாங்க.. நீங்க இங்கே இருக்கலாம்.. என்ன செய்யப்போறோம்னு சொல்லிடறேன்.. வாங்க" என்று ரகுவைப் பார்த்தபடி விமலாவின் அடிவயிற்றைச் சுட்டினார் டாக்டர்.. "வி வில் பி கட்டிங் ரைட் அபவுட் ஹியர்.. கேன் யு ஹேன்டில் த விசுவல்?"

ரகுவுக்குக் குமட்டியது. "ப்லீஸ் பி வித் மி" என்றாள் விமலா.

"ஓகே.. என் விமலாவுக்காக என்னால் எதையும் தாங்க முடியும் டாக்டர்" என்றான் ரகு.

தொடர்ந்த சில நிமிடங்களில் மயங்கி விழுந்தான். டாக்டர் மனியைப் பார்த்தக் குழப்பத்திலும்.. விமலாவின் தொப்புளுக்கு மேலும் கீழும் சிறிதாகக் கோடிட்டும் அங்குலங்கள் கீழிறங்கி அடிவயிற்றில் மூன்றாம் பிறையாகக் கீறியும் தோன்றிய ரத்தக் கோடுகளைப் பார்த்துப் பயந்தும்.

    தெளிந்து எழுந்த ரகு, எதிரில் தெரிந்த நர்சைப் பார்த்து அசடாகச் சிரித்தான். நர்ஸ் அவனைப் புரிந்து கொண்டு, "ஹேபன்ஸ் எவ்ரி டைம்" என்றாள். "மயக்கம், களைப்பு எல்லாம் சேர்த்து நாலு மணி நேரம் தூங்கியிருக்கீங்க" என்றாள்.

"என் மனைவி?"

"ஆல் வெல். ஷி இஸ் ரெஸ்டிங். ரெண்டு குழந்தைகளும் அழகுப் பொம்மைகள் மிஸ்டர் ரகு... வாங்க. உங்க வைடல்ஸ் செக் செஞ்சுட்டு உள்ளே கூட்டிப் போறேன்" என்ற நர்ஸ் ரகுவை அழைத்துச் சென்றாள்.

"அடடே! எல்லாத்தையும் தாங்குற முகமா? வருக வருக.." என்று சிரித்து வரவேற்ற டாக்டருக்கு நன்றி சொன்னான் ரகு. "என்னை மன்னிச்சுருங்க டாக்டர். என்னால் எவ்வளவு தொந்தரவு!"

"எங்கே அதிர்ச்சியில உங்களுக்குக் கார்டியாக் அரெஸ்ட் வந்துருச்சோனு பயந்துட்டோம்.. ஆஸ்பத்திரியிலே ஆள் கூடக் கிடையாது.. ம்ம்ம்.. ஹேப்பி டு ஸீ யு அகெய்ன்" என்று ரகுவின் கைகளைக் குலுக்கி மெள்ளத் தோளணைத்த டாக்டர், "குழந்தைகளைப் பாக்கறீங்களா, இல்லை மனைவியையா? யார் முதலில்?" என்றார்.

"விமலா தான் டாக்டர். ஷி இஸ் ஆல் அன்ட் எவ்ரிதிங் டு மி"

"ஹ்ம்ம்ம்.. இதைக் கேட்கும் நிலையில் அவங்க இல்லைனு தெரிஞ்சு சொல்றீங்களா?" என்ற டாக்டர் மறுபடி சிரித்தார். "விமலா இஸ் ரெஸ்டிங். எழ இன்னும் ரெண்டு மூணு மணி நேரமாவது ஆகும். எழுந்ததும் குழந்தைகளைப் பத்திக் கேட்டா நீங்க பதில் சொல்ல வேணாம்? அதனால் லெட்ஸ் ப்ரேக் யுர் ரிசால்வ். முதல்ல குழந்தைகளைப் பார்ப்போம், என்ன சொல்றீங்க?"

    இருவரும் நடந்தார்கள். இரண்டு காரிடார்கள் தாண்டி, அமைதியாக இருந்த பெரிய ஹாலுக்குள் நுழைந்தார்கள். உள்ளே வேலி போல் நான்கு புறமும் கண்ணாடித் தடுப்புச் சுவர் கொண்ட அறை. அறைக்குள் பார்வையாளர் வசதிக்காகச் சுவரோரமாக வரிசையாக அமைக்கப்பட்டிருந்த சிறு கண்ணாடிப் பெட்டிகள். பெட்டிகளுள் சிறு மரப்பாச்சிகளாக சிசுக்கள். ."அதோ!" என்றார் டாக்டர் எதிரே சுட்டி. "கங்கிராசுலேசன்ஸ் ரகு! தேர் தெ ஆர்! உங்க ரெண்டு குழந்தைகளும் ஆர் ட்ரேக்கிங் வெல்.."

ரகு கண்ணாடிச் சுவர் வழியாகப் பார்த்தான். எதிரே சுவருக்கு அந்தப்புறம் இரண்டு கண்ணாடிப் பெட்டிகள். ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு குழந்தை. ஆண் குழந்தை சற்றுப் பருத்தும் பெண் சற்றுச் சூம்பியும் இருந்தார்கள். பென்சிலால் வரைந்தாற்போல் இருந்தார்கள். குழந்தைகளின் வலது காலிலிருந்து ஐவி பம்புக்கு ஒரு குழாய். இடது காலிலிருந்து ஆக்சிஜன் மானிடருக்கு ஒரு குழாய். தொப்புளிலிருந்து ஆர்டரி மானிடருக்கு வந்தக் குழாய், நடுவில் இரண்டாகப் பிரிந்து ஐவி பம்பிலும் ஈசிஜி மானிடரிலும் இணைக்கப்பட்டிருந்தது. வாய்க்குள் உணவுக் குழாய் பக்கவாட்டில் தொங்கிக் கொண்டிருந்தது. மூக்குத் துவாரங்களிலும் வாயிலும் வென்டிலேடர் குழாய்கள். மார்பிலிருந்து இரண்டு குழாய்கள் ஈசிஜி மானிடருக்குள் சென்றன. காதருகே இருந்த ஒரு குழாய், மேலே டெம்பரேசர் மானிடரில் செருகப்பட்டிருந்தது. கண்களைச் சுற்றிக் கறுப்புத் துணி போல் மிக மென்மையான கண்ணாடி. இது போதாதென்று இரண்டு குழந்தைகளின் மீதும் கண்ணாடிக் கூரையின் பிலி விளக்குகள் நீல ஒளியைப் பாய்ச்சின. எதையும் பொருட்படுத்தாமல் பரிதாபமாகப் படுத்துக் கிடந்த குழந்தைகளின் கண்கள் மூடியிருந்தன.

சற்று அச்சமூட்டுவதாகவும் அருவருப்பாகவும் தோன்றும் பச்சைக் குழந்தைகளை, பெற்றவர்களால் மட்டும் அழகுப் பதுமைகளாக எப்படிப் பார்க்க முடிகிறது? இதில் எதுவுமே தங்கள் விருப்பமோ தவறோ அல்ல என்று அந்தப் பச்சைக் குழந்தைகள் சொல்வது போல் தோன்றுவதாலா? அவர்களுடைய அந்தக் கணத்தின் நிராதரவும் நாதியற்ற நிலையும், காணும் மனிதர்களின் கருணைச் சுரப்பிகளைத் தட்டுவதாலா? ஏற்று அருள்பாலிப்பதாய் நாடகமாட வசதியாக தெய்வீக ஆணவத்தை உருவாக்குவதாலா? அல்லது, எதற்கும் உதவாத தனக்குக் கூட இப்படி ஒரு பொறுப்புள்ள அந்தஸ்து கிடைக்கிறதே என்றக் கேவலமான கழிவிரக்கம் காரணமா?

ரகுவின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. "ப்யூடிபுல்" என்றான். "டாக்டர்.. இத்தனை அழகை ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில் சில நேரம் கடவுள் நம்பிக்கை வந்து விடுகிறது" என்றான். "தேங்க் யூ டாக்டர்"

"ஹாஹா!. டோன்ட்! இது நீங்களும் விமலாவும் எழுதின கவிதைகள். தேவையில்லாமல் யாருக்கும் க்ரெடிட் குடுக்காதீங்க"

"தேங்க்ஸ்" என்றான் ரகு. தயங்கினான். "டாக்டர்.. பிள்ளையோட வலது கண்ணுக்குக் கீழே ஏதோ கறுப்பா.."

"அது ஒண்ணுமில்லே.. சின்ன காயம்னு நினைக்கிறேன்.. தேமல் அல்லது மச்சமா இருக்கலாம். அப்படி ஏதாவது ப்லெமிஷா இருந்தா பின்னால நிறைய ஆப்ஷன் இருக்கு". டாக்டர் தயங்கிப் புன்னகைத்தார். "டிஸ்டென்ட் தியரி ஒண்ணு கேக்கறீங்களா? பையன் கைகள், பெண் கழுத்தை நெறிக்குறாப்புல இருக்குதுனு சொன்னேன் இல்லையா? ஹ..ஹ.. க்ரேஸி.. பெண் பதிலுக்கு பிள்ளையோட கண்ணைக் கீறப் பாத்திருக்கலாம்..பெண்ணோட கழுத்துலயும் இப்படி ஒரு காயம் இருக்கு.. இங்கிருந்து பார்த்தா தெரியலே உங்களுக்கு.. பட் இட் இஸ் தேர்.. யு ஷூட் னோ..ம்ம்ம்.. சிப்லிங் ரைவல்ரி.. கருப்பைக்குள் சண்டை..."

"புரியலியே டாக்டர்?"

"எது.. கருப்பைக்குள் சண்டையா? ஜஸ்ட் கிடிங் ரகு. நான் சொல்லலே. இந்த சிசுச் சண்டை தியரி.. அது டாக்டர் மனியோட தியரி. ஹி இஸ் அவுட் தேர் அட் டைம்ஸ்.."

"டாக்டர் மனி.." ரகுவுக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது. மீண்டும் மனதுள் அதிர்ந்து குழம்பினான்.

"அவர் தான். இன்னும் கொஞ்சம் தாமதிச்சிருந்தா உங்க பையன் கண்ணுக்கு ஆபத்து வந்திருக்கும்னு சொல்றாரு.. ஐ டோன்ட் திங் ஸோ" என்ற டாக்டர், கைக்கடிகாரத்தைப் பார்த்தார். "ஓகே.. பேக் டு எர்த்.. குழந்தைகள் ரெண்டு பேரும் எங்க கண்காணிப்புல இன்னும் பனிரெண்டு வாரங்களாவது இருக்கணும். அதிலும் பெண் குழந்தை மே நீட் மோர் கேர். உங்க மனைவியும் இங்கயே ஒரு மாசம் இருக்கட்டும். க்ரிடிகல் ரெகவரிக்காக இதை சிபாரிசு செய்யுறேன். இன்சூரன்ஸ் கவரேஜ் எத்தனை தெரியாது, விசாரிக்கறோம், மிச்சதுக்கு நீங்க பொறுப்பு. சர்ஜரி சார்ஜ், அப்புறம் டாக்டர் மனியோட செலவு எல்லாம்.." என்றபடி ரகுவை அழைத்துக்கொண்டு தன் அலுவலகத்துக்கு நடக்கத் தொடங்கினார்.

"டாக்டர் மனி.. இப்போ எங்கே?"

"அவரு எப்பவோ கெளம்பிப் போயாச்சு ரகு. யு னோ, ஹி கம்ஸ் வித் எ ப்ரீமியம். உங்க மனைவியின் க்ரிடிகல் நிலையினால அவரை வரவழைச்சேன். அவரோட சம்பளம் மூணு மணி நேரத்துக்கு இருபதாயிரம் டாலர். ப்ரைவெட் ப்ளேன் சார்ஜ் ஏழாயிரம். ப்ரேக்டிஸ் அலவன்ஸ் ரெண்டாயிரம். எல்லாம் போதாதுனு அவருக்கு விருப்பமான அறக்கட்டளைக்கு ஐநூறு டாலர். இதுல இன்சூரன்சு அஞ்சாயிரமோ ஆறாயிரமோ தான் தரும். மிச்சம் உங்க பொறுப்பு.. எல்லாம் ஆபீஸ்ல ஸ்டேட்மென்ட் குடுப்பாங்க.."

"அதில்லே டாக்டர்.. அவரு.. டாக்டர் மனி... ஹிஸ் லுக்ஸ்.. அவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன்.."

"டிவி, ந்யூஸ் போட்டோக்கள்ல பார்த்திருப்பீங்க.. நானே இன்னிக்குத்தான் நேரில முதல் தடவையா சந்திச்சேன்.. நேரில் ஹி டஸ் நாட் லுக் ஏஸ் யங்க்.. பாக்குறதுக்கு அப்படின்னாலும், அவர் விரல் வித்தையில் எத்தனை நளினம்!" என்றபடி டாக்டர் தன் அலுவலகக் கதவைத் திறந்தார். "ஓகே ரகு.. நான் கிளம்பணும்.. அட்மின்ல மிச்சத்தை கவனிச்சுக்குவாங்க. ஒரு மணி பொறுத்து நீங்க உங்க மனைவியைப் பார்க்கலாம்" என்று ரகுவை எதிரே இருந்த சோபாவில் உட்காரச் சொல்லி நர்சை அழைத்தார். "ப்லீஸ் ஸிட் ரகு"

'மனி இல்லே, ஹி இஸ் முனி' என்று தனக்குள் சொல்லியவாறு உட்கார்ந்தான் ரகு.

"டாக்டர் முனிஸ்வரன்" என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டவரை நினைவில் நிறுத்தினான். அவருடைய உடல் நாற்பது வயதின் இறுக்கத்தில் இருந்தாலும் முகம் அறுபதின் சுருக்கங்களில் தவித்தது. "உங்க பெண்ணைக் காப்பாத்துறது என் பொறுப்பு" என்றவரை வியப்புடன் ஏறிட்டதும் சட்டென்று ஆங்கிலத்துக்கு மாறி, "வி வில் டே கேர்.." என்று பொதுவாகச் சொல்லிப் பிற டாக்டர் நர்சுகளுடன் கலந்து கொண்ட அவசரத்தை உணரும் பொழுதே ரத்தம் பார்த்து மயங்கி விழுந்தது நினைவுக்கு வந்தது. அவரைச் சந்திக்க வேண்டும். "டாக்டர் முனியின் கான்டேக்ட் தரீங்களா?" என்றான் உரக்க.

"இந்தாங்க.." என்ற டாக்டர், அவனிடம் ஒரு பிஸினஸ் கார்டைத் தந்தார். கதவைத் திறந்து நுழைந்த அட்மின் பெண்ணையும் நர்சையும் வரவேற்றார். "ரகு.. நான் கிளம்பணும்.. இவங்க கவனிச்சுக்குவாங்க"

"ஐயம் ஸோ சாரி டாக்டர்.. உங்க பெயரைக் கூட நான் சரியா கேட்டுத் தெரிஞ்சுக்காம.. ப்லீஸ் லெட் மி தேங்க் யு ப்ராபர்லி"

"இன் டைம் ரகு, இன் டைம். என் பெயர் லீலா சிம்ஸ்கோ. கால் மி லீலா.. மை குட்னஸ்! உன் குடும்பத்துல ஒருத்தர் மாதிரி பீல் பண்ணுறேன். வரட்டுமா? ஐ'ம் டைர்ட்" என்று வெளியேறினார்.

அட்மின் சிப்பந்தியுடன் ரகுவும் கீழ்த்தளத்துக்கு வந்தான். ஆஸ்பத்திரி அலுவலகத்தில் மேலும் சில படிவங்களில் கையெழுத்துக்களும், வரிசையாகக் க்ரெடிட் கார்ட் விவரங்களும் தந்தான். விமலாவை ஒரு கிங் பெட்ரூம் சிறப்பறைக்கு மாற்றச் சொன்னான். அறை வாடகையும் சேவைத் துணையும் தன் கணக்கில் சேர்க்கச் சொன்னான். மறுபடி க்ரெடிட் கார்ட். மறுபடி கையெழுத்து. தினம் பிள்ளைகளை வந்து பார்ப்பதற்கான நேரங்களைக் குறித்துக் கொண்டான். ஆஸ்பத்திரியில் வேலை பார்த்த அனைவருக்கும் பிட்சா சாக்லெட் கேக் வரவழைத்தான். எல்லோருக்கும் நன்றி சொல்லி மறுபடி மேலேறி விமலாவின் அறைக்குள் நுழைந்தான்.

அரை மணி பொறுத்து எழுந்த விமலாவிடம் மெள்ள அத்தனை விவரங்களையும் சொல்லி அவள் தலைக்குக் தோள் கொடுத்து அணைத்துக் கொண்டான். இரண்டு மணி நேரம் அவளுக்கு ஆதரவாக இருந்தான். வீட்டுக்குப் போய் மறு நாள் காலை திரும்புவதாகச் சொல்லிக் கிளம்பினான்.

இந்தியாவுக்குத் தொலைபேசி அக்காவிடம் விவரம் சொல்ல வேண்டும். அக்காவுடன் பேசி ஒரு வருடமாவது ஆகியிருக்கும். அழுவாள். சந்தோஷப்படுவாள். பெய்ஜிங்கிலிருக்கும் விமலாவின் அண்ணனுக்குச் செய்தி அனுப்ப வேண்டும். விமலாவின் ஆபீசுக்கும் தன்னுடைய ஏஜன்டுக்கும் சொல்ல வேண்டும். இனி தினம் விமலாவைக் கவனிக்க வேண்டும். பிள்ளைகளைக் கவனிக்க வேண்டும். இன்னும் எத்தனை மாதங்களுக்குத் தன்னால் வேலை செய்யாதிருக்க நேரிடும் என்று மனக்கணக்குப் போட்டான். வீட்டு வேலை உதவிக்கு ஆள் தேடவேண்டும். ஏதோ சிந்தனைகளில் படியிறங்கி வந்தவன் கடைசிப் படியில் சிலையாக நின்றான். முதல் நாள் பார்த்த வீல் சேர் முதியவர்! தலை குனிந்து இருந்தாலும் தன்னைக் கவனிப்பது போல் உணர்ந்தான். சட்டென எதிரே ஸ்டார்பக்சிலும் சுற்றிலும் நோட்டமிட்டான். வேலையாட்களைக் காணோம்.

அமைதியாக முதியவரைக் கடந்து போக முயற்சித்தவனை அவர் குரல் தடுத்தது. "பையன் போயிடுவான்".

"வாட்?". நின்று முதியவரை எதிர்கொண்டான். "யார் நீங்க?" என்று அவர் முகத்தை உயர்த்திப் பார்த்தவன், உறைந்தான். "டாக்டர் முனி! நீங்களா?"

முதியவர் பேசவில்லை. ரகுவுக்கு ஆத்திரம். "ஹூ ஆர் யூ? ஹூ ஆர் யூ?" என்று அவரை உலுக்கினான். அதற்குள் சிப்பந்திகள் வந்து அவனைத் தடுத்தார்கள். "ஸ்டாப் இட். ஒரு வயதான நோயாளியை நீங்க துன்புறுத்துறீங்க.." என்று ரகுவைக் கீழே தள்ளினர். செக்யூரிடி வந்ததும் விவரம் சொல்ல விரும்பாமல் மன்னிப்பு கேட்டு வெளியே வந்தான்.

    மறுநாள் மினியெபொலிசுக்குப் பறந்தான் ரகு. மேயோவில் விசாரித்து டாக்டர் முனிஸ்வரனின் அலுவலகத்துக்கு விரைந்தான். ஐந்து நிமிட அனுமதி வாங்கி உள்ளே நுழைந்ததும், தன்னை வரவேற்றவரைப் பார்த்து அதிர்ந்தான். "யு லுக்.. யு லுக்.. யங்.." தடுமாறினான்."..யங்"

சிரித்தார் முனிஸ்வரன். "தேங்க்யு. குட் டு ஸீ யு டூ.. எல்லாம் சரிதானே? அதற்குள் என்னைப் பார்க்க வந்துட்டீங்களே?"

"ஐ மீன்.. யு லுக் டிபரன்ட்.. நேத்து பார்த்தப்ப முகமெல்லாம் சுருங்கி.. வயதான தோற்றம்.."

"நோ.. இப்ப இப்படித்தான் இருக்கேன்.. இன்னும் வயசானா அதெல்லாம் தானா வந்துரும்.. ஆர் யு ஆல்ரைட்?"

ரகு சுதாரித்தான். "என்னை மன்னிச்சுருங்க. ஐ'ம் நாட் ஆல்ரைட் ஐ கெஸ்". முதல் நாள் நடந்த விவரங்களைச் சொன்னான். "உங்க பொண்ணைக் காப்பாத்துறது என் பொறுப்புனு தெளிவா எங்கிட்டே வந்து தமிழ்லே சொன்னீங்க..அப்புறம் பொதுவா ஆங்கிலத்துல பேசினீங்க.."

"எனக்கு தமிழ் தெரியவே தெரியாது ரகு. என் பெற்றோர்கள் அகதிகளாகக் கொழும்பிலிருந்து கேனடா வந்து சந்தித்து திருமணமானவர்கள். எனக்கு ஆங்கிலம் தவிர எந்த மொழியும் தெரியாது. எனக்கு கேனடா அமெரிக்கா தவிர வேறு எந்த இடமும் தெரியாது.. குழம்பிப் போயிருக்கீங்க.. ரெஸ்ட் எடுக்கறீங்களா? காபி குடிக்கறீங்களா?"

"பொண்ணைக் காப்பாத்துறேன்னு சொன்னது? இரட்டைப் பிள்ளைங்களைப் பத்தி டாக்டர் லீலா உங்க கிட்டே சொல்லியிருந்தும்.."

"அதான் சொல்றேனே ரகு? நான் தமிழ் பேச வாய்ப்பே கிடையாது.. உங்களைச் சந்திக்க ஆர்வம் காட்டினதுக்குக் காரணம் உங்க அனுமதியோட இந்த சர்ஜரி பத்தி ஜர்னல்ல எழுதலாம் என்கிற சுயவிளம்பர எண்ணத்தோடே தான்.. இல்லையின்னா பொதுவா நான் என்னை அறிமுகம் கூட செய்துக்கறது கிடையாது.."

"என்னை மன்னிச்சுருங்க டாக்டர் முனி" என்று விடைபெற்றான். மிகக் குழம்பியிருந்தான்.

    மறுநாள் விமலாவையும் பிள்ளைகளையும் பார்க்கப் போயிருந்தபோது டாக்டர் லீலாவைச் சந்தித்து விவரம் சொன்னான். "பாக்குறதுக்கு நாப்பது வயசு கூட சொல்ல முடியாது டாக்டர்.. அப்படி இருக்காரு. அதுவும் தமிழே தெரியாதுனு சொல்றாரு டாக்டர்.."

"வெல்.. மே பி அன்னிக்கு பயணத்துனால கொஞ்சம் ப்ரேஸ்ல்டா இருந்திருக்கலாம்.. ஆனா யாரோ வயசான பேஷன்ட் போல முக ஜாடை.. ஐ டோன்ட் திங்க் ஸோ. நீங்க ரொம்ப ஸ்ட்ரெஸ்டா இருக்கீங்க. இதெல்லாம் பெரிசு படுத்தாதீங்க.. ஐ'ம் சர்ப்ரைஸ்ட் உங்க மாதிரி இன்டலெக்ட்.."

வீல் சேர் முதியவர் பற்றிச் சொன்னான் ரகு. "டாக்டர்.. அன்னிக்கு நைட் எல்லாம் முடிஞ்சு கிளம்புறப்ப நான் அவரை.."

"ஓகே.. லெட்ஸ் செக் இட் அவுட்" என்ற டாக்டர் லீலா, அட்மின் ஆபீசுக்கு செய்தியனுப்பினார். சில நிமிடங்களில் வந்த சிப்பந்தியுடன் இருவரும் கீழே போனார்கள். சர்ஜரி நடந்த அன்று இரவு ஆஸ்பத்திரியில் இருந்த அத்தனை முதியவர் விவரங்களையும் பார்த்த டாக்டர் லீலா, "ரகு.. என்னால் எல்லா விவரங்களையும் உங்க கிட்டே பகிர முடியாது. ஆனால் நீங்க சொல்ற அடையாளப்படி இருபது பேராவது இருப்பாங்க போலிருக்கு. வீல் சேர்ன்றதால ஸ்டார்பக்சுக்குப் பின்னால இருக்குற முதியவர் ஓய்வில்லத்துல பார்க்கலாம். அங்கே அன்னிக்கு நாலே பேர் தான் இருந்திருக்காங்க. அதுல மூணு பேர் பெண்கள்"

"நாலாமவர்?"

"அவரைப் பார்க்க முடியாது. அவர் இறந்து.." என்ற டாக்டர் சற்று சுதாரித்து, "கொஞ்சம் இருங்க ரகு. திஸ் மேன்.. இவர் சர்ஜரி நடந்த அன்னைக்கு இறந்திருக்காரு. குட்னெஸ்.." என்றார்.

"என்ன டாக்டர்?"

"கொஞ்சம் இருங்க ரகு" என்று எதிரே கணினியில் எதையோ பார்த்துத் திரும்பினார். "ரகு.. இதை எப்படிச் சொல்றதுனு தெரியலே.. வெரி பிஸார். இந்த முதியவர் இறந்த நேரம் மதியம் 3:37. உங்க பெண் பிறந்தது 3:36"

"வாட்?"

"இதோ இருக்கு பாருங்க டீடெய்ல்ஸ்.. இருந்தாலும் இவரை நீங்க எப்படி இரவு பத்து மணி போல பார்த்திருக்க முடியும்?

"பார்த்தேன் டாக்டர்" என்றான் ரகு. "பையன் போயிடுவான்னு அவர் சொன்னதும் ஏற்பட்ட கடுப்புலே அவரை உலுக்கினேன். ரெண்டு சிப்பந்திகள் ஓடிவந்து என்னை விலக்கிக் கீழே தள்ளினாங்க. செக்யூரிடில ரிபோர்ட் கூட செஞ்சேன். லெட்ஸ் செக் இட் அவுட்"

"ஓகே.. ரிலேக்ஸ் ரகு" என்ற லீலா, எக்சக்யுடிவ் செக்யூரிடி தலைவரை அழைத்தார்.

"சார் நீங்களா?" என்று மறுபடி அறிமுகம் செய்து கொண்டார் செக்யூரிடி தலைவர். "ரூம்வாச் உபயோகிக்கிறீங்களா? மனைவி நலமா?"

லீலா குறுக்கிட்டு விவரங்களைச் சொன்னார். "ரகு.. நீங்க வேணும்னா இவருடன் போய் விவரங்களை செக் பண்ணிட்டு வாங்க"

"தேவையில்லை டாக்டர்" என்றார் செக்யூரிடி தலை. "அன்னிக்கு ராத்திரி இவர் ஒரு பேஷன்டை உலுக்கினது நிஜம். முதிய பெண் பேஷன்டைப் பிடித்து ஹெரேஸ் செய்ததாக புகார் கூட கொடுத்திருக்காங்க. மன்னிப்பு கேட்டு இவரு வெளியேறினாரு.. ஐம் ஸாரி மிஸ்டர் ரகு. நீங்க நிறைய ஓய்வெடுக்கணும்"

"பெண் பேஷ்ன்டா? நோ.. ஹி வாஸ் தி ஓல்ட் மேன். என் கண்ணால பார்த்தேன்"

"சார்.. இந்த விங்லே இருந்த ஒரே முதிய ஆண் இறந்துட்டாரு.."

"அவங்க உறவினர் யாராவது..?" என்றார் லீலா.

"நோ டாக்டர்.. லைப் டைம் கேர் பணத்தைக் கட்டிச் சேர்ந்தவர். உறவு யாருமில்லாததால அவர் எழுதிக் கொடுத்தபடியே பிணத்தை எரிச்சுட்டோம். எரிச்சது சரியா ஏழு மணிக்கு. அதனால பத்து மணிக்குப் பார்த்ததா சொல்றதுக்கெல்லாம் அர்த்தமே இல்லை. மேக்ஸ் நோ சென்ஸ்.. சாரி மிஸ்டர் ரகு". செக்யூரிடி தலை கிளம்பினார்.

"வாங்க ரகு.. நானும் விமலாவைப் பார்க்கணும்" என்று ரகுவை முடுக்கினார் லீலா. அமைதியாகப் படியேறி நடந்தார்கள். லீலா திடீரென்று, "யு னோ ரகு.. சிப்லிங் சண்டை பத்தி டாக்டர் மனி சொன்னதுல அமானுஷ்யம் எதுவும் இல்லை.. கருவுக்குள்ளே இருக்கும் சிசுக்களின் நிலை பற்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.. டூ தே திங்க்? சிசுக்களுக்கும் தற்காப்பு உணர்வு சாத்தியம்.. வி டோன்ட் னோ" என்றார்.

"ஐ'ம் டைர்ட்" என்றான் ரகு.

"ஹேவ் எ லைட் ட்ரிங்க். இட் வில் பி ஆல்ரைட். ரகு, உங்களுக்கு வீட்டுல ஹெல்ப் இருக்கா? என் தங்கை நேனிஹெல்ப்.காம் நடத்துறா. உங்க சார்புல அவ கிட்டே சொல்லியிருக்கேன். இரண்டு மூணு பேரை அனுப்புறதா சொல்லியிருக்கா. உங்களுக்குப் பிடிச்சா வேலைக்கு வச்சுக்குங்க. உங்களுக்கும் வசதி, என் தங்கைக்கும் கஸ்டமர் கிடைச்சாப்புல.. இந்தாங்க அவ பிஸினெஸ் கார்ட்" என்று ஒரு அட்டையைக் கொடுத்தார். விமலாவின் அறை முன் நின்றார்கள்.

"நன்றி டாக்டர். உதவிக்கு ஆள் நிச்சயம் தேவை. மூணு பேரையும் வேலைக்கு எடுத்துக்குறேன். நாளைக்கே வரசொல்லிடறேன்" என்று புன்னகைத்தான் ரகு.

தயாராக இருந்த விமலாவை மேலோட்டமாகப் பரிசோதித்துவிட்டு அகன்றார் லீலா.

"பிள்ளைகளைப் பார்க்கப் போலாமா விம்?" என்றான் ரகு. சாய்வுப் படுக்கை சக்கர நாற்காலியில் அமர உதவி செய்தான். மெள்ளத் தள்ளியபடி இங்குபேஷன் விங் வந்தார்கள். கதவுகளைத் திறந்து கண்ணாடிச் சுவரறையைச் சுற்றித் தங்கள் பிள்ளைகளின் கூண்டருகே வந்தார்கள்.

பெண் குழந்தை ரதி கண்ணாடிப் பெட்டிக்குள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அடுத்தப் பெட்டியில் இருந்த ஆண் குழந்தை நீல், கை கால் உடலெங்கும் குழாய்கள் புடைக்க இரு கைகளையும் பெட்டியின் மூடி மேல் வைத்தபடி நின்று கொண்டிருந்தான். சகோதரி ரதியைக் கண்கள் தெறிக்க வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

(தொடரும்)

2013/09/21

கலவை



    கூடியிருக்கும் புராண வித்தகர்களுக்கு ஒரு புதிரான புதிர்.
1. குபேரனுடைய 'அழிவில்லாத' செல்வத்தை ஒரு பகலில் அழித்தவர் யார்?
    அ)அகத்தியர் ஆ)வினாயகர் இ)பார்வதி ஈ)ராவணன்
2. 'சிரஞ்சீவி'யான அனுமானை ஒரு முறை கொன்றது யார்?
    அ)சூரியன் ஆ)இந்திரன் இ)கருடர் ஈ)கார்த்திகேயர்
3. ஒரு யானை பலம் கொண்ட பீமனுக்கு ஆயிரம் யானை பலம் கொடுத்தது யார்?
    அ)வாயு ஆ)அனுமான் இ)பரமசிவன் ஈ)நாகராணி


    மீபத்தில் ரசித்த பாடல், காட்சி. சுசீலா கொஞ்சுகிறார். சரோஜாதேவி கெஞ்சுகிறார். சிவாஜி ம்ம்.. கிறார்.


    "ஹலோ.. நல்லா இருக்கீங்களா..? நான் தான் பேசுறேன்" என்று பெயர் சொன்னதும், அரை நொடி தயங்கி முகத்தில் அடித்தாற் போல் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்படுகிறது.

இந்த நிலையில் மனதில் சில எண்ணங்கள் தோன்றுகின்றன. ஒருவேளை லைன் கட்டாகியிருக்குமோ? ஒரு வேளை ராங்க் நம்பரோ? பிறகு சமாதானமாகி, "வேண்டுமென்றே தான் துண்டித்திருக்கிறார்கள்" என்ற உணர்வு வந்ததும் மேலும் சில எண்ணங்கள். ஏன்? 'நல்லா இருக்கீங்களா?' என்றுதானே கேட்கிறோம்? எதிரியாக இருந்தால் கூட ஒரு கண்ணியத்துக்காகவோ அல்லது கோபத்தினாலோ "பேச விருப்பமில்லை.." என்றோ, "கட்டையிலே போறவனே.. இனி போன் செய்தால் செருப்பாலடிப்பேன்" என்றோ சொல்லும் நேர்மை கூட இல்லாமல் போனதேன்? அல்லது, "ஹலோ.. ஹலோ.." என்று வேண்டுமென்றே காதில் விழாதது போல் இழுத்தடிப்பது பொறுக்காமல் நாமாகவே துண்டித்து மீண்டும் அழைக்கையில், "தற்சமயம பிஸியாக.." என்றோ "சுவிச் ஆப் செய்யப்பட்டுள்ளது" என்றோ.. செய்திக்குப் பின் தப்பிக்கும் கயமைத்தனம் கூட தோன்றாமல் போனதேன்? "நல்லா இருக்கீங்களா?" என்று கேட்டவரிடமா இப்படிப் பண்பில்லாமல் நடந்து கொள்வது? இன்னும் நிறைய எண்ணங்கள் தோன்றி சற்றே வதைத்து வாட்டுகின்றன.

உங்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறதா?

நண்பர் அரசனுக்கு இந்த நிலை ஒரு முறை ஏற்பட்டது. என்னிடம் விவரங்களைச் சொன்னார்.

"கீழ்த்தரமானவங்க அப்படித்தான் இருப்பாங்க" என்றேன்.

"ஏன் அப்படிச் சொல்லுறே?" என்றார்.

"பின்னே என்ன சார்? ஒருத்தரை வெறுக்கிறோம்னா அதை வெளிப்படையா சொல்லலாமே? அந்த நேர்மை கூட இல்லாம... நீங்க என்ன தொந்தரவு கொடுக்கவா போன் செஞ்சீங்க? அப்படியே இருந்தாலும் நல்லா இருக்கீங்களானு கேட்ட உடனே இப்படியா நடந்துக்குவாங்க.. ப்ரூட்"

அரசன் புன்னகைத்தார். "என்னைக்கும் மனசுல பட்டதை சொல்லி இப்படியே இருடா என் ராசா" என்றார். பிறகு, "இதுல அவங்க செஞ்சது ஒண்ணும் கீழ்த்தரம் இல்லை அய்யா.. பிழை என் பேரில் தான்" என்றார்.

அரசனிடம் இந்தக் கெட்டப் பழக்கம் இருந்தது. எல்லாவற்றையும் சமன் தூக்கிப் பார்ப்பது. கேள்வியோடு பார்த்தேன்.

"இல்லய்யா.. அவங்களுக்கு நான் போன் செஞ்சது பிடிக்கலே.. பிடிக்காதவங்க போன் செஞ்சா நீ சொல்லுறாப்புல நாசமாப்போறவனேனு திட்டியோ.. இல்லே பலமா எச்சரிக்கை செஞ்சோ.. அவங்க பேசியிருக்கலாம்தான். ஆனா அப்படி எதுவும் செய்யாமே சட்டுனு போனை முகத்திலடிக்குறாப்புல வைக்குற கீழ்த்தரம் அவங்களுக்கு வந்ததுக்கு நான் தானே.. என்னுடைய குரல் தானே.. என்னுடைய பெயர் தானே காரணம்? அவங்க என்னை மறந்து இருந்த நேரத்துல என்னை நானே அவங்க நினைவுல நுழைச்சு அவங்க மனதுல வெறுப்பைத் தூவினது.. நான் தானே? அதனால அவங்க கீழ்த்தரமா நடந்துக்கிட்டாங்களேன்றதை விட, நான் அவங்களைக் கீழ்த்தரமா நடக்க வச்சுட்டனேனு எனக்கு வருத்தமா இருக்கப்பா.. அவங்களோட அன்றைய தின வாழ்க்கையிலே கீழ்த்தரமான பண்பற்ற நடத்தை வெளிப்பட நான் காரணமாயிட்டனேனு வருத்தம்"

"உங்களைப் புரிஞ்சுக்கவே முடியலே ஐயா" என்றேன்.

"ஒரு நாள் புரிஞ்சுக்குவே.. புரியாத போனாலும் பரவாயில்லே" என்றார்.

நண்பர் அரசனின் நினைவு நாள் அடுத்த மாதம் வருகிறது. "புரிந்து கொண்டேன் நண்பரே" என்று சொல்ல வேண்டும்.

ஒரு சிக்கலை, சிக்கலின் வேர் புரியாமல், என்னுடைய கோணத்திலேயே பார்த்து அடுத்தவர்களைப் பாதிக்குபடியான முடிவெடுக்கும் பழக்கத்திலிருந்து என்று விடுபடுவேன்?

நல்ல ஆசான்களை இழப்பது கொடுமையானது.


    'கோர்பரெட் ஸ்ட்ரேடஜி' பற்றி அவரவர் கிழிகிழி என்று கிழித்திருக்கிறார்கள். கிழிக்க எதுவும் இல்லையென்றால் கிழிந்ததை இன்னும் நையக் கிழித்திருக்கிறார்கள். என்னாலேயே நம்பமுடியவில்லை எனினும், நானும் இந்த வகையில் கொஞ்சம் கிழித்திருக்கிறேன்.

இது ரொம்ப சுளுவான விஷயம், யார் வேண்டுமானாலும் தங்கள் எண்ணங்களைச் சொல்லலாம். செயல்பாட்டில் தானே இருக்குது சூட்சுமம்? செயலில் இறங்க வேண்டியத் தேவையில்லாத வரையில், சொல் சித்தர்களுக்குக் குறைவே இல்லை. உதாரணத்துக்கு.. இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே போவதைத் தடுக்க எத்தனை பேர் என்னிடம் ஸ்ட்ரேடஜி சொல்லியிருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? (ஏழாம் வாய்ப்பாட்டின் கீழ் வரிசையில் வருகிறது விடை).

எழுபதுகளில் ஜபேன், ஜெர்மனி, கேடர்பில்லர், கோமாட்சூ என்றார்கள். எண்பதுகளில் சைனா, ஆப்பில், மோடரோலா, என்றார்கள். தொண்ணூறுகளில் ஆப்பிலை வெறுத்தார்கள். நோகியா, மைக்ரோசாப்ட், இன்டெல், நெட்ஸ்கேப், அமெரிக்க ஐக்கிய சபை, கோர்பசேவ் என்றார்கள். முதல் பத்தில் டெல், மறுபடி ஆப்பில், கூகுல் என்றார்கள். பின் பத்தில் இதுவரை மீண்டும் சைனா, இஸ்ரேல், பேஸ்புக், வால்மார்ட் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த பத்தில் ஆப்பில், பேஸ்புக் எல்லாம் காணாமல் போகும்.. சைனா கூட தடுமாறலாம்.

எல்லாமே அந்தக் கணத்தின் அறிவை ஒட்டிப் பிறக்கும் சிந்தனைகள். பத்தே நிமிடங்களில் புஸ்வாணமாகும் சிந்தனைகள். அதனால் பெரும்பாலான ஸ்ட்ரேடஜி புத்தகங்களை நான் படிப்பதே இல்லை. முன்போல் ஓசியில் நிறைய புத்தகங்கள் கிடைப்பதில்லை. எப்பவாவது கிடைத்தாலும் சிரித்துக் கொண்டே அவசியம் படிப்பதாகப் பொய் சொல்லி அடுத்த வாரமே யாருக்காவது பரிசாகக் கொடுத்து விடுவேன்.

சமீபத்தில் படித்த புத்தகம் - தலைப்பு காரணமா, இல்லை இதை எனக்கு அன்பளிப்பாக வழங்கிய முன்பின் அறியாத பக்கத்து இருக்கையில் என்னுடன் பறந்த பயணியின் அறிவுக் களை காரணமா, தெரியவில்லை, படிக்கத் தோன்றியது, படித்தேன். அட! என் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமோ என்று எண்ண வைத்தது. கால் ஹேமரிக் மற்றும் ரிசர்ட் லூயிஸ் இணைந்து எழுதியிருக்கும் மேலாண்மைத் தந்திரம் பற்றிய புத்தகம் "Fish can't see water". இந்தப் புத்தகம் இன்னும் அமெரிக்காவிலேயே பரவலாக வெளிவரவில்லை என்பதைத் தெரிந்து கொண்ட போது ப.இ.பயணிக்கு மனதார நன்றி சொன்னேன்.

தானிருக்கும் நீர் நிலையைப் பற்றி அதில் நீந்தும் மீனுக்குத் தெரிய வாய்ப்பில்லை (என்று வைத்துக் கொள்வோம்). அதே போல் ஒரு வளரும்/வளர்ந்த நிறுவனத்துக்கு, அதன் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த (ஊழியர்களின்) பண்பு கலாசாரம் போன்றவற்றைப் பற்றிய பார்வை கிடைக்க வாய்ப்பில்லை. இந்தக் கருத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருக்கும் புத்தகம். ஒரு தந்திரம் பலன் தருமா தராதா என்பதைத் தீர்மானமாகச் சொல்லவே முடியாது என்ற துணிச்சலான கருத்தை உலகத்தின் பல நிறுவனங்களின் வரலாற்றை ஒட்டி எழுதியிருக்கிறார்கள். ஆசிரியரின் சொந்தக் கண்டுபிடுப்பான 'cultural dynamic model' என்னும் குழப்படிக் கருவியை வைத்து ஆறுவித கோர்பரேட் கலாசாரங்களை ஆராயும் சுவையான புத்தகம். ஒரு நிறுவனத்தின் உலகளாவிய வெற்றி தோல்விகளை அதனுள் நிரவியிருக்கும் கலாசாரக் கடலின் போக்கே தீர்மானிக்கிறது என்று நம்பும்படி சொல்லியிருக்கிறார்கள்.

எம்பிஏ படிப்பவர்களும் மேலாண்மைக் கலையில் விருப்பமுள்ளவர்களும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். குறிப்பாக, பங்குச் சந்தையில் விளையாடுவோர், கம்பெனிகள் வாங்க விற்க என்று எல்.ஆர்.சுவாமி (இன்னும் இருக்கிறதா?) பாணியில் அலையும் இன்வெஸ்ட்மென்ட் ஆசாமிகள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். அவர்களைத் தவிர நம்மைப் போல - சரி, உங்களைச் சேர்க்கவில்லை - என் போல, பொழுது போகாதவர்களும் படிக்க வேண்டிய பு.


    லர்சட்டைக்காக வைத்திருந்தேன். இங்கேயே வம்படித்து விடுகிறேன்.

1. ஹெர்பர்ட்-கேதரின் தம்பதியரின் முதல் குழந்தை 2009ல் இறந்தது. அதற்காகப் பெற்றோர்களுக்குத் தண்டனை கிடைத்தது. ஏன்? சளி, பசி, காய்ச்சலில் கிடந்த பிள்ளையை மருத்துவரிடம் அழைத்துச் செல்லாமல் கடவுளிடம், அதாவது கடவுள் அருளை நம்பி, சர்ச்சில் விட்டார்களாம். தினசரி பைபிலும் தோத்திரங்களும் படித்தார்களாம். பிள்ளை இறந்ததும் அது இறைவனின் ஆணை என்று இருந்தார்களாம். சும்மா விடுமா பிலடெல்பியா சட்டம்? பிடித்துத் தண்டித்தார்கள்.

அறிவு வந்ததோ ஆத்திகருக்கு? இல்லை. போன வருடம் இரண்டாவது குழந்தையும் இதே போல் இறந்தது.

கேட்டால் அதையே சொன்னார்கள் மறுபடி. பிணியும் மருந்தும் இறைவனின் ஆணை என்றார்கள். "பிடிச்சு உள்ளே போடுங்கடா ரெண்டு கேனக்.." என்றது பிலடெல்பியா அரசு.

"நிறுத்துங்கள் அரசே!" என்று ஒரு கொடி. 'தேரா மன்னா!' என்பவர் யாரென்று பார்த்தால்... மைத்ரி ஜெயராமன்! அட, நம்ம ஊர்க்கார லாயரு! என்ன சொல்றாரு? "ஆடாப்ஸி விவரங்கள் கிடைக்கும் வரை பெற்றோர்களை எதுவும் செய்யக்கூடாது" என்கிறார். ஓகே. பட்சவங்க இல்லியா? அப்பால தான் வளுக்குறாங்க தமிழம்மா. இன்னா சொல்றாங்க? "இந்தப் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் பெரும் அன்பும் கனிவும் செலுத்தி வந்திருக்கிறார்கள்.. இவர்கள் குற்றவாளிகள் அல்ல". ம்ம்ம்.. யம்மா மைத்ரி.. காய்ச்சலான கொளந்தையை ஒரு தபா கூட டாக்டராண்ட இட்டுகினு போவலியாமே அவங்க? அதுங்களையா பெரும் அன்பும் கனிவும்னு சொல்றே? இன்னாம்மே நீ?

ஹெர்பர்ட் கேதரினுடன் மைத்ரியையும் உள்ளே தள்ள வேண்டும். முட்டாள்தனம் சட்டப்படி குற்றமாகாமல் போனதே, என்ன செய்ய?!

இவர்களின் சர்ச்சான 'first gospel church of philadelphia'வின் இணைய தளத்தில் "மருந்து மாத்திரைகளை நம்புவது பாவம்; யேசுவே குணமளிப்பவர், அவரை நம்புவது மட்டுமே உண்மையான ஆத்திகம்' என்று மே மாதம் வரை இருந்ததாம். (அடச்சே! ஒரு சான்சு போச்சே!)

என்னதான் சொல்லுங்கள், நாத்திகத்தில் இது போன்ற முட்டாள்தனங்கள் நடக்க வாய்ப்பே இல்லை.

2. சமீபத்தில் நடந்து முடிந்த வினாயக சதுர்த்தியின் விளைவாக நிறைய ஆத்திகர்கள் திருடர்களாக மாறியிருக்கிறார்கள். டைம்ஸ் ஆப் இன்டியாவில் வந்திருக்கும் செய்திப்படி நிறைய இடங்களில் ஆத்திகர்கள் எத்தனையோ ஆயிரம் வாட் கணக்கில் பொது மின்சாரம் திருடி வினாயகப் பெம்மானைக் கோலாகலமாக வழிபட்டிருக்கிறார்கள். திருட்டில் வினாயகருக்கும் பங்களித்திருக்கிறாகள் என்பது தெரிந்து செய்திருக்கிறார்களா? இல்லை 'வினாயகர் தானே,, நேரிலா வரப்போகிறார்?' என்ற சமாதானத்துடன் செய்தார்களா? ஆக மொத்தம் நாட்டுக்கு நஷ்டம்.

விடுங்க, அதைப் பற்றி யாருக்கு என்ன கவலை? அதை மோடி பாத்துக்குவாரு. இப்பத்திக்கு வினாயகரை நல்லா லைட் வச்சு கூட்டிக்கிட்டுப் போய் கடல்லே கரைச்சா போதும். என்னா சொல்றீங்க?

என்னதான் சொல்லுங்கள், நாத்திகத்தில்..
கொஞ்சம் இருங்க, யாரோ வேகமா வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்றாப்ல இருக்குதே?


    மோடி என்றதும் நினைவுக்கு வந்தது. நரேந்திர மோடி நிச்சயம் வெற்றி பெறுவார் என்கிறார்கள். ந.மோடி வருவதால் இந்தியா "எங்கியோ போவப் போவுது" என்கிறார்கள். "என்ன செய்வார் மோடி?" என்று சிலரிடம் கேட்டேன். எல்லோரும் ஏதோ ஒரு எதிர்பார்ப்பில் (குஜராத்?) அப்படி இப்படி சொல்கிறார்களே தவிர, காங்கிரசை விட மோடி எந்த விதத்தில் மேலான ஆட்சியைக் கொண்டு வருவார் என்று யாராலும் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. ஊழலை ஒழிப்பதிலிருந்து இஸ்லாமியரை விரட்டுவது வரை ஆளாளுக்குத் தோன்றியதைச் சொல்கிறார்கள்.

'இந்துக்களுக்கு நல்லது' என்ற காரணத்துக்காக மோடிக்கு ஓட்டு விழுந்தால் வெட்கக் கேடு.


    பாமா சிரியா பற்றிய பதிவுக்கு வந்த பின்னூட்டங்களை வைத்துப் பார்க்கையில் அமெரிக்காவை மட்டம் தட்டிவிட்டேனோ என்று தோன்றுகிறது. ஒபாமா உதவாக்கரை என்பதைச் சொல்ல வந்தேன்.. அவருக்கு ஓட்டுப் போட்டதை வைத்து அமெரிக்காவை எடை போடுவது சரியாகத் தோன்றவில்லை. சிரியா பிரச்சினை பற்றிய என் கருத்தை விரிவாகப் பிறகு எழுதுகிறேன். இப்போதைக்கு சுருக்கம்: அசாத்தை ஒரு அரபு நாட்டுக்கும் பிடிக்கவில்லை. நேரடியாக எதுவும் சொல்ல/செய்ய முடியாத நிலையில், அமெரிக்காவின் பின்னால் நின்று போராடுகிறார்கள். இது தான் பிரச்சினை. இதை அமெரிக்கா எந்த அளவுக்குத் தனதாக்கிக் கொள்கிறது என்பதில் தான் சிக்கல்.

சரியான தலைமையில்லாமல் அதை அணுகுவதில் இருக்கிறது ஆபத்து.


    ஸ்திரேலியாவில் ஒரு பெண்மணி கோர்ட்டில் கேஸ் போட்டு ஜெயித்திருக்கிறார். வேலை விஷயமாக வெளியூரில் தங்கியிருந்தாராம். படுத்துக் கொண்டிருந்த போது மேலே விளக்கு விழுந்து அடிபட்டதால் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போட்டார். வேலை நேரத்துக்கு அப்பால் விபத்து நடந்ததாகச் சொல்லி அவருடைய கம்பெனியும் இன்சூரன்சு கம்பெனியான காம்கேரும் மறுத்துவிட்டதால் வழக்கு தொடர்ந்தார். ஐந்து வருடங்கள் வழக்காடி ஜெயித்தார்.

என்ன பெரிய விசேஷம்? விளக்கு விழுந்த போது பெண்மணி படுத்துக் கொண்டிருந்தார் என்றாலும் அவர் மேல் இன்னொருவரும் படுத்துக் கொண்டிருந்தாராம். ஹிஹி.


    புதிரான புதிருக்கு விடை: ஆ, ஆ, ஈ. (சுவாரசியமான கதைகள்)

2013/09/10

பாக்கெட்டுல காசில்லே ராக்கெட்டு கேக்குதோ?



சட்டமறிந்தவர்கள் முட்டாள்களா? முட்டாள்கள் சட்டமறிந்தவர்களா?

கேள்வி ஒருவரைப் பற்றியதென்றால் இரண்டு ம்.

        ஒபாமா என்றழைப்பதா ஒரு ம..க்கும்
            ஒதவாதான் என்றழைப்ப்ப்பதா
        ஓத்தான் என்றழைப்பதா
            ஒளறு வாயா என்றழைப்பதா?

சட்டத்துக்கு வருகிறேன்.

அமெரிக்காவில் புழங்கும் முட்டாள்தன சட்டங்கள் பற்றிச் சமீபத்தில் படித்தேன். டெமொக்ரேட்ஸ் ஆட்சியைப் பற்றிச் சொல்லவில்லை. கீழ்க்கண்டவை நான் இணைய மேய்ச்சலில் கண்ட புல்வெளி. அல்லது புல்ஷிட் வெளி. அமெரிக்காவில் இவை சட்டப்படிக் குற்றங்களாகும், கவனம்:
    • ஞாயிற்றுக் கிழமை ஹேம்பர்கர் சாப்பிடுவது மினசோடாவில்
    • பிணத்தை ஆபாசமாகத் திட்டுவது ஜோர்ஜியாவில்
    • ஐந்து நிமிடத்துக்கு மேல் முத்தம் கொடுப்பது ஐயொவாவில்
    • கோழிக்குஞ்சைத் தலையில் சுமந்து செல்வது விஸ்கான்சினில்
    • யானைகளை வைத்து உழுவது வட கரோலைனாவில்
    • கள் கடையில் பால் விற்பது இன்டியேனாவில்
    • குறுந்தாடி வைப்பது பாஸ்டனில்
    • பைஜாமா அணிந்து மீன் பிடிப்பது சிகாகோவில்

முட்டாளுக்கு வருகிறேன்.

சிரியாவைப் பற்றித் தினமொரு கொள்கையும் அறிக்கையும் விடும் கன்னுக்குட்டி.

தான் தோன்றித்தனமாக முடிவெடுத்தாகி விட்டது. பிறகு 'இன்றைக்கு அடித்தாலும் அடிப்பேன்; இரண்டு நாள் கழித்து அடித்தாலும் அடிப்பேன்; இரண்டு மாதம் கழித்து அடித்தாலும் அடிப்பேன்' என்ற பேச்சு தேவையா? அதையும் கடந்து "காங்கிரஸ் முடிவெடுக்கட்டும்" என்று சொல்வது அறிவுக்கொழுந்தாக இல்லையோ?

காங்கிரஸ் எப்படித் தீர்மானித்தாலும் பழி சுமத்த வழி கிடைத்துவிட்டது - என்று ஒபாமை எண்ணிக் கொண்டிருக்கிறது. அட அரைலூசுக் கொன்றவட்டை! நாட்டு மக்கள் சொல்றதைக் கேளு. அம்மாம் பெரிய காது ரெண்டு இருந்து என்ன பிரயோஜனம்? வந்த ஆறு வருசத்துல கிளப்பின பிரச்சினை பத்தாதுனு வூட்டுக்கு ரிடையராகிப் போற டயத்துல இன்னும் இழுத்து வுடுறியா?

உள்ளூர்ல அவனவன் சாப்பாட்டுக்கே வழியில்லாம சாவுறான் - இவுரு சிரியா மேலே ராகெட் வுடுறாராமுல்லே ராக்கெட்டு?

சிரியாக்கார அசாத்துப்பய அசுரனாவே இருக்கட்டுமே? அதைக் கேட்க அல்லாவும் யேசுவும் க்ருஷ்ணரும் யுகே யுகே சம்பவிக்குறதா சொல்லியிருக்காங்கள்ள? ஒனக்கென்னய்யா வந்துச்சு? ஒன்னை நம்பி ஓட்டுப் போட்டவங்களுக்கு எதுனா உபயோகமா செய்யச் சொன்னா ராக்கெட்டா விடப்போறே? ராக்கெட்டு விடுற முகறயப் பாரு? எப்பனாச்சும் மாஞ்சா போட்டுப் காத்தாடி விட்டிருக்கியாயா நீ?

பட்டம் வாங்கணும்னு கடன் வாங்கிப் படிக்கிற பிள்ளைங்க கிட்டே அதிக வட்டி வாங்க உள்ளூர்ல சட்டம் போட்டு நல்லா குறட்டை விடுறே.. ஆனா வெளியூர்ப் பிள்ளைங்க பாடு உன் தூக்கத்தைக் கெடுக்குதா?

அட, ஆட்சிக்கு வந்து ஒண்ணாச்சும் உருப்படியா செஞ்சிருக்கியா அய்யா?

ஆட்சிக்கு வந்த முதல் நாள் க்வான்டனமோ சிறை மூடப்படும்னு சொன்னே? அய்யா, ஆட்சிக்கு வந்து ஆறு வருசமாச்சுய்யா.. ஒண்ணும் புடுங்கலேய்யா.

ஆட்சிக்கு வந்த ஒரு வருசத்துல வேலையில்லா திண்டாட்டம் காணாமப் போயிடும்னு சொன்னே. அய்யா ஆறு வருசமாச்சுய்யா.. ஒண்ணும் புடுங்கலேய்யா.

ஆட்சிக்கு வந்த இரண்டே வருசத்துல நிதி நிலமை சீராகும்னு சொன்னே. அய்யா ஆறு வருசமாச்சுய்யா.. ஒண்ணும் புடுங்கலேய்யா.

ஆட்சிக்கு வந்த மூணு வருசத்துல அத்தனை போரையும் நிறுத்தி அமைதியான அமெரிக்கா உருவாக்குறதா சொன்னே. அய்யா ஆறு வருசமாச்சுய்யா.. ஒண்ணும் புடுங்கலேய்யா.

இராக்கும் சரியில்லே, ஆப்கானும் சரியில்லே, இடையிலே சிரியாவுல சிரிப்பாச் சிரிக்க வைக்கப் பாக்குறே.. அய்யா புடுங்காமணி.

அறிக்கை விடுறதுக்கு மட்டும் இந்த ஆட்சியில் குறைச்சலில்லே. நடுவுல ஹிலரியம்மா அறிக்கை விடுறாங்க. வாம்மா ஞானக்கிழம், ஐ மீன், ஞானப்பழம். நாலு வருசமா அம்மா என்ன புடுங்கினீக? லிப்யாவை நீங்க மறந்தாலும் நாங்க மறப்போமுங்களா? இப்ப என்ன பெரிய தீவிரவாத ஆதிக்கம், கொடுமை அப்படி இப்படினு அறிக்கை விடுறீக? யாரை ஏமாத்தப் பாக்குறீங்க? பதினாறுல வந்துறணும்னு பிடிவாதமா இருக்கீக.. பாத்துரலாம் ஒரு கை. ஒரு ஓட்டு கூட கிடைக்காம ஓட ஓட விரட்டினாத்தான் மனசு ஆறும்.

ஏதோ என் அத்தைப் பையங்காரன் ஒரு ஜோக் அனுப்பினானோ பிழைச்சனோ. இல்லையின்னா சிரிப்பே காணாமப் போயிருக்கும்.

இறந்து போன இருவர் மேலுலகில் சந்தித்துக் கொண்டார்களாம். எப்படி இறந்தார்கள் என்று ஒருவருக்கொருவர் விசாரித்தார்கள். முதலாமவன், "நான் குளிரில் நடுங்கி செத்தேன்" என்றான்.

"குளிரில் நடுங்கிச் சாவதா? எப்படி இருந்தது?" என்றான் இரண்டாமவன்.

"முதலில் கை கால் எல்லாம் நடுங்கியது. பிறகு மெள்ள உடம்பெல்லாம் பனிக்காயத்தில் இறுகி விறைத்துப் போய் கடைசியில் இதயம் நின்றது. ரொம்ப சிரமமான மரணம்" என்றான் முதலாமவன். "நீ எப்படி இறந்தாய்?"

"மாரடைப்பு"

"அதெப்படி இருந்தது?"

"என் பெண்டாட்டி எனக்கு துரோகம் செய்கிறாள் என்று ரொம்ப நாளாகச் சந்தேகம். ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் வீடு வந்தேன். அவளுடைய காதலன் வீட்டில் இருப்பானென்று ஒவ்வொரு அறையாகத் தேடினேன். ஒருவேளை பரணில் இருக்கிறானோ என்று வேகமாகப் போனவன் குறுக்கே போன எலியைப் பார்த்துப் பயந்து அலறி தடுக்கி விழுந்த அதிர்ச்சியில் மாரடைப்பு"

"அட லூசு! உங்க வீட்டுல இருந்த பெரிய ப்ரீஸரைத் தொறந்து பார்த்திருந்தா இன்னேரம் ரெண்டு பேரும் உயிரோட இருந்திருப்போமே?".

ஹ்ம்ம்ம்.. எனக்கென்னவோ இதுல ஒருத்தரு ஒபாமை இன்னொருத்தரு அவிசகெரினு தோணுது.