2009/03/29

மெல்லிசை நினைவுகள்எம்எஸ்வி எனக்குப் பிடித்த தமிழ்த் திரையிசைக் கலைஞர்.

இசைச்சக்கரவர்த்தி, இசைத் திலகம், இசைப்புயல், இசை இளவல், இசையாளுனர், இசைமாமன்னர், இசை இன்னார், இசை அன்னார் என்று இந்நாளில் பலர் பலவாறாகப் பட்டம் பெற்றாலும் கொடுத்துக் கொண்டாலும், பட்டத்துக்கு ஒரு படி மேலேயே தன்னை இருத்திக் கொண்டவர், பட்டத்துக்கு தகுதியேற்படுத்திக் கொடுத்தவர், மன்னர் எம்.எஸ்.வி ஒருவர் தான் என்பது என் கருத்து. எம்.எஸ்.வி அபிமானம் என் வயதைச் சுட்டிக் காட்டுகிறது என்று ஒரு கண்ணோட்டத்தில் கொண்டாலும், எம்.எஸ்.வியின் இசை மட்டும் தான் என்னை இளமையாக்கி எங்கோ கொண்டு சென்று இன்ப வேகத்தில் இயங்க வைக்கிறது. அந்த வகையில் எனக்கு நூறு வயதானாலும் எம்.எஸ்.வியின் இசையைக் கேட்க முடிந்தவரை இளமையின் ரகசியத்தை அறிந்தவனாவேன்.

போட்ட மெட்டையே திருப்பிப் போடுவதில் எம்.எஸ்.வி் வல்லவர். ஒரு எம்.எஸ்.வி பாட்டைக் கேட்டால், அதே மெட்டில் ஏறக்குறைய ஐந்திலிருந்து பத்து பாடல்களை என்னால் எடுத்துச் சொல்ல முடியும். நானறிந்தவரை இது இசையமைப்பாளர்கள் அனைவருமே கையாளும் ஒரு யுத்தி என்பேன். இசையமைப்பாளர்கள் அனைவருமே தங்கள் தனித்தன்மை வெளிவரும் ஒரு மெட்டுக் களஞ்சியம் ஒன்றை உருவாக்கிப் பயன்படுத்துவார்கள் என்று எண்ணுகிறேன். மற்ற இசையமைப்பாளர்களின் மெட்டுக் களஞ்சியத்தில் அதிகபட்சம் நான்கைந்து வகையிருக்குமென்றால், எம்.எஸ்.வியின் மெட்டுக் களஞ்சியத்தில் எட்டுக்கு மேலிருக்கும் என்று நினைக்கிறேன். எட்டு வித தனி மெட்டுகளை, என் அனுபவத்தில் கேட்டு வகைப்படுத்தி இருக்கிறேன். அதற்கு மேலும் இருக்கலாம்.

தமிழ்த் திரையிசையமைப்பாளர்கள் பிற மொழிகளில் பணிபுரிந்தாலும், குறிப்பாக இந்தித் திரையிசையில் வெற்றி பெறவில்லை எனலாம் - ஏ.ஆர்.ரகுமான் அடியெடுக்கும் வரை. இப்போது ஏ.ஆர்.ஆர் இசை, உலக அளவில் பெரும் புகழ் பெற்று இருக்கிறது.

தமிழ்த் திரையிசைப்பாளர்களின் தமிழ்த்திரை மெட்டுகள் இந்தியில் அப்படியே வந்திருக்கின்றன - ஏ.ஆர்.ஆரின் வெற்றி அந்த வகை தான். ஆனால் ஒரே திரைப்படக் காட்சிக்கு தமிழில் ஒரு மெட்டு இந்தியில் ஒரு மெட்டு என்று வரும் போது, பெரும்பாலும் இந்தித் திரைப்படக் காட்சிக்கான மெட்டுகள் தான் பெரும் வெற்றி பெற்று மனதில் நிலைக்கின்றன எனலாம். அந்த வகையில் தமிழில் தனிக் கொடியேந்தியவர் எம்.எஸ்.வி.

தமிழில் வெற்றி பெற்றத் திரைப்படங்களை இந்தியில் எடுக்கும் போது தமிழில் இசையமைத்தது எம்.எஸ்.வி என்றால், இந்தி இசையமைப்பாளர்கள் - நவுசத்திலிருந்து ஆர்.டி.பர்மன் வரை - ஒரு முறைக்குப் பல முறை சிந்திப்பார்களாம். இந்தியில் தங்கள் இசையில் பாடல் வெற்றி பெற வேண்டுமே என்று ஐயப்படுவார்களாம். இந்திப் படத்தைத் தமிழில் எடுக்கும் போது, தான் இசையமைக்க நேர்ந்தால் எம்.எஸ்.வியும் அப்படி நினைப்பார் என்று படித்திருக்கிறேன். இந்தியில் வெற்றி பெற்ற படங்களைத் தமிழில் எடுக்கும் போது எம்.எஸ்.வி இசையமைத்து வெற்றி பெறத்தவறிய பாடல்கள் மிகக் குறைவு.

எம்.எஸ்.வி இசையமைத்து தமிழில் வெற்றி கண்ட படப்பாடல்களில் ஒன்றை இந்தப் பதிவுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். தமிழில் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா நடித்த 'நம் நாடு' என்ற படத்தில் வரும் 'நினைத்ததை நடத்தியே முடிப்பவன்' என்ற பாடல். அதற்கு இணையாக இந்தியில் வெளிவந்த பாடலை ஒப்பிட எண்ணுகிறேன். இந்தியில் ராஜேஷ் கன்னா-மும்தாஜ் நடித்த 'அப்னா தேஷ்' என்ற படத்தில் வரும் 'துனியா மே லோகோன் கோ' என்ற பாடல்.

ஆர்.டி.பர்மன் அவர்கள் எனக்குப் பிடித்த இசையமைப்பாளர். அவரது இசையில் வந்த இன்னொரு பாடலைத் தமிழில் வழங்குவதற்கு எம்.எஸ்.வி கஷ்டப்பட்டிருக்கிறார் என்றாலும், இந்தப் பாடலைப் பொருத்தவரை, எம்.எஸ்.வி எங்கேயோ போய் விட்டார்.

பாட்டு எழுதியவர் வாலியா கண்ணதாசனா தெரியவில்லை, பாடலில் ஜெயலலிதாவுக்கு வரும் வரிகளில் சொக்கும் சிங்காரம், இந்தியில் இல்லை. இசையும் சுமார் தான். போதாக்குறைக்கு ஆர்.டி.பர்மன் எழுப்பும் ஓசைகள், பாடல் வரிகளின் குறைவை வெளிப்படுத்துகின்றன. ஆஷா போன்ஸ்லேயின் குரல் வளமில்லாவிட்டால் இந்திப் பாடலை ரசிக்க முடியுமா என்பது சந்தேகம் தான். தமிழில் எல்.ஆர்.ஈஸ்வரி டி.எம்.எஸ் வேறு, களை கட்டக் கேட்கவே வேண்டாம். பாடல் படமாக்கப் பட்ட விதமும் தமிழில் அருமை. தமிழ்ப்பாடலில் உணர முடிந்த ஜெயலலிதாவின் கிளுகிளுப்பு மும்தாஜிடம் இந்திப்பாடலில் தென்படவில்லை. பத்து கன்னா வந்தாலும் ஒரு எம்.ஜி.ஆரின் நளினத்துக்கு இணையாக முடியாது, அதனால் ஒப்பீடே தேவையில்லை. பாடல், இசை, குரல், படமாக்கப்பட்ட விதம் எல்லாவற்றிலும் தமிழ் வடிவம், இந்தி வடிவத்தை விட ரசிக்கும் படி இருந்தது. ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குப் பிறகு, இன்றைக்கும் ரசிக்க முடிகிறது.

வயலின், ட்ரம்ஸ், கிடார், சேக்சபோன், ட்ரம்பெட், பியேனொ, பேங்கோஸ், கிடார், பின்னணிக் கோரஸ், புல்லாங்குழல், ட்ரம்பெட் என்று மயிர்க்கூச்செறியும் அசுர வேகத்தில், நாற்பத்திரண்டு நொடிகளுக்கு வரிசையாக உபயோகித்து, பிரமிக்கத்தக்க 'பிராட்வே ஷோ' ஸடைல் முழக்கத்துடன் துவங்கும் தமிழ்ப் பாடல், ஒரே ஒரு பேஸ் கிடாரின் இழுப்புடன் சொக்கி நிற்க, தன்னம்பிக்கை தொனிக்கும் டி.எம்.எஸ்சின் குரலுடன் தொடங்குகிறது. சற்று விட்டு, துள்ளித் துள்ளி வரும் கிடார், வயலினின் பின்னணியில் எல்.ஆர்.ஈஸ்வரி கொஞ்சிக் கொஞ்சித் தொடர, பேங்கோஸ், கிடார், கோரஸ், ட்ரம்பெட், டி.எம்.எஸ், புல்லாங்குழல், வயலின், எல்.ஆர்.ஈஸ்வரி, ட்ரம்ஸ் - மறுபடி பேங்கோஸ், கிடார், கோரஸ்,....கடைசி வரை தொய்வே தென்படாத பாடல்.

இன்னொரு பாடலில் எம்.எஸ்.வி கஷ்டப்பட்டிருக்கிறார் என்று சொல்லியிருந்தேன். அது ஆர்.டி.பர்மன் இசையில் வெளிவந்த மிகப் பெரிய வெற்றி பெற்ற இந்திப்படத்தின் தமிழ் வடிவத்தில், எம்.எஸ்.வி இசையமைத்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் தோன்றிய எண்ணம். அந்தப் பாடலைப் பற்றிப் பிறகு எழுதுகிறேன்.

இந்தப் பதிவுக்காக நான் தேர்ந்தெடுத்த, மிகவும் ரசித்த, பாடல்கள் இதோ:

மெல்லிசை நினைவுகள் | 2009/03/29