2013/10/15

கனவில் பாடியவர்நேரமும் வாய்ப்பும் கிடைத்தால் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.
ப்ரேங்க் போரன்சிக்கின் எளிய சத்துமா புத்தகத்தைப் படிக்க வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்காவிடிலும் அவசியம் படிக்க/பார்க்க வேண்டிய சுட்டி. புத்தக வலைப்பக்கத்தின் இடதோர வரிசையில் Games and Movementsஐ அவசியம் பார்க்கவும். உங்கள் உடல்/மன வளத்தை சில படிகள் உயர்த்திக் கொள்ளவும். நன்றியெல்லாம் வேண்டாம். ஒரே ஒரு கின்றி போதும். (சமீபத்தில் மாயா பஜார் இரண்டு முறை பார்த்தேன்).


'பத்து கேள்விகள்' என்று ஒரு சமூக அமைப்பு சிகாகோவில் இயங்குகிறது.

பல வருடங்களுக்குப் பிறகு ஒரு மாலைச் சந்திப்பில் கலந்து கொள்ள நேரமும் வாய்ப்பும் கிடைத்தது. அதே இடம் தான். ஆனால் சிகரெட் மது சுத்தமாகக் காணோம். சிக்கன், உருளை வறுவலுக்குப் பதில் பாதாம் பருப்பு, கொழுப்பற்ற யோகர்ட் என்று சைவ மயம். நிறையப் புதுமுகங்கள். இளமுகங்கள். உற்சாகமாகப் பேசுகிறார்கள். கலக்கிறார்கள். என் வட்டத்து ஆட்கள் இன்னமும் கலந்து கொள்வது நிறைவாக இருந்தது.

அறிமுகங்கள் முடிந்ததும் வட்ட இருக்கையில் அமரவேண்டும். யாராவது ஒருவர் நடு மேசை மேல் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் காகித அடுக்கிலிருந்து காகிதத்தை எடுக்க வேண்டும். அதில் பத்துக் கேள்விகள் இருக்கும். மனதில் பட்டதை உடனே சுருக்கமாகச் சொல்ல வேண்டும். பிறகு அவருக்கு வலப்புறம் இருப்பவர் அடுத்த காகிதத்தை எடுக்க வேண்டும். காகிதத்தில் அதே கேள்விகளோ வேறு கேள்விகளோ இருக்கலாம். பதில் சொன்னதும் அடுத்தவர். சுவாரசியமான சில சமயம் சிந்திக்க வைக்கும் பொழுதுபோக்கு. ஊர்ப்பட்ட கின்டில்களும் ஐபேட்களும் இன்னபிற டேப்களும் கிடைக்கையில் ஏனோ இன்னும் இதை மின் வடிவாக்கவில்லை. காகிதத்திலும் ஒரு குணச்சித்திரம் இருக்கத்தான் செய்கிறது.

எனக்குக் கிடைத்தப் பத்துக் கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன். மனதில் பட்டதை உடனே சுருக்கமாகச் சொல்ல வேண்டும். சாக்ரேட்ஸ் போல் யோசித்து, கடைசியில் கமல்ஹாசன் போல் பதில் சொன்னால்.. தொலைச்சுப்புடுவேன் தொலைச்சு!.
    • உங்களின் மூன்றாவது தலைமுறைச் சந்ததிக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? எப்படிச் சொல்லப் போகிறீர்கள்?
    • 'சூபர் பவர்' ஒன்று கிடைக்குமானால் உங்களுக்கு எத்தகைய சக்தி பெற விருப்பம்?
    • இந்த வருட இறுதிக்குள் நீங்கள் செய்து முடிக்க விரும்பும் மிக முக்கியமான செயல் எது?
    • பின்னோக்கிப் போகும் கால எந்திரம் கிடைக்குமானால் எந்தக் காலத்துக்குப் போக விரும்புகிறீர்கள்? ஏன்?
    • நாளை பொழுது விடிந்ததும் ஒரு பெரும் ஏமாற்றம் காத்திருக்கிறது. அது என்னவாக இருக்கலாம்?
    • அத்தனைப் புத்தகங்களும் மின் வடிவானபின், உலகின் அச்சுவடிவக் கடைசிப் பிரதி உங்கள் கையில் கிடைக்கிறது. என்ன செய்வீர்கள்?
    • முட்டாள்தனம் என்றால் என்ன?
    • உங்கள் பிள்ளைகள் எத்தனை வயது வரை வாழ விரும்புகிறீர்கள்?
    • உங்கள் டீனேஜ் மகனையோ மகளையோ அவர்கள் அறையில் 'எக்கச்சக்கமான' நிலையில் பார்க்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்?
    • உங்கள் மதத்தை விடச் சிறந்தது என்று எந்த மதத்தைச் சொல்வீர்கள்?


கல்லூரி படிப்புக்குத் தயாராகிறாள் செல்ல மகள். தினம் ஒரு கல்லூரி விண்ணப்பம், நற்சான்றிதழ் என்று அலைகிறாள்.

அவசியமே இல்லாமல்.

சிறந்தவை என்றுக் கருதப்படும் இரண்டு கல்லூரிகளிலிருந்து முன்னிடத்துக்கான அனுமதியும் முன்பதிவுக்கான அழைப்பும் வந்திருக்கிறது. ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஜனவரி மாதம் பணம் கட்டினால் போதும். இவளோ இரண்டு கல்லூரிகளும் வேண்டாம் என்று அடம் பிடித்துப் பெற்றவர் நெஞ்சில் பால் வார்க்கிறாள். கொதிக்கக் கொதிக்க.

"ஏண்டீம்மா பொண்ணே.. அவனவள் இந்த யூனியில் இடம் கிடைக்க உசிரை விடுறப்ப, நீ வந்த இடத்தை வேணாங்கிறியே?" என்று கேட்டு முறைப்பையும் கடுப்பையும் பதிலாகப் பெற்று, "எல்லாம் நீ கொடுத்த இடம்" என்று நானும் மனைவியும் ஒருவரையொருவர் பழி சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

மகளுடன் அவள் விரும்பும் கல்லூரிச் சுற்றுலா சென்று வந்தேன். தனக்கு என்ன தேவை என்பதில் கவனமாகவும் தீர்மானமாகவும் இருக்கிறாள். இந்தப் பக்குவத்தை எனக்கு முப்பது வருடங்களுக்கு முன் இவள் சொல்லிக் கொடுத்திருக்கக் கூடாதோ?


ஸ்டேன்பர்டு பல்கலைக்கழக வளாகத்தில் இந்தப் போஸ்டரைப் பார்த்ததும் அதிர்ந்து போனேன்.

இந்த நிலைக்கு நம் பிள்ளைகள் பொறுப்பா? அல்லது நாமா? எதையோ தேடி, எதையோ துரத்தி, எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறோமா?


கமல் ஜோக்ஸ்.

வாடிக்கையாளர்: இந்தாப்பா.. 2014 காலென்டர் கொடு.
கடைக்காரக் கமல்: அய்யய்யோ.. மொத்தமே இருபத்திரண்டு காலென்டர் தாங்க இருக்குது கடையில.

செக்ரடரி வேலைக்கான இன்டர்வ்யூவில் கேள்வி: கமல், உங்களுக்கு மைக்ரோசாப்ட் ஆபீஸ் தெரியுமா?
கமல்: தெரியாதுங்க. அட்ரெஸ் சொன்னீங்கன்னா கண்டுபிடிச்சுடுவேன்.

ஆட்டோ மெகானிக் வேலைக்கான இன்டர்வ்யூவில் கேள்வி: இந்த மோட்டார் எப்படி ஓடுதுனு சொல்ல முடியுமா?
கமல்: க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ர்ர்ர்ர்க்டக்க் க்க்ற்ற்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ர்ர்ர்ர்க்டக்க் ப்ர்ர்ர்ம்ம்ம்ம்..
இன்டர்வ்யூ: நிறுத்துபா நிறுத்துபா..
கமல்: க்ய்க்.. ப்ய்ய்ய்ய்ய்ம்.. டப்.
இன்டர்வ்யூ: என்னப்பா நீ?
கமல்: அதுவா.. சடன் ப்ரேக் போட்டா அப்படித்தான் ஆவும்.

கடைத்தெருவில் பக்கத்து வீட்டுக்காரர்:
    என்னப்பா கமல்.. இங்கே நிக்குறே? வீட்டுல உன் ப்ரண்டு உன் பெண்டாட்டியை கொஞ்சிட்டிருக்கான்.. சீக்கிரம் போவியா?!..
அவசரமாக வீடு சென்று திரும்பிய கமல், பக்கத்து வீட்டுக்காரரிடம்:
    பொய் சொல்லி என்னை விரட்டிட்டியே? அந்த ஆளு என் ப்ரண்டு இல்லே.. நான் முன்னே பின்னே பார்த்தது கூட கிடையாது.


விசித்திரமான கனவு. இறக்கும் தறுவாயில் பி.சுசீலா.

மயிலாப்பூர் ஆஸ்பத்திரியில் இருப்பதாகச் செய்தி கிடைத்ததும் ஓடிச் சென்று பார்க்கிறேன். மயிலாப்பூர் ஆஸ்பத்திரி போலவே இல்லை. மல்லேஸ்வரம் ஆஸ்பத்திரி போல இருக்கிறது. படுக்கையில் அமைதியாகப் படுத்திருக்கிறார் சுசீலா. வயதான பெண் டாக்டர் ஒருவர் அவசரமாக என்னைத் தடுத்து, "அவங்க தான் உங்களை பார்க்க விருப்பமில்லைனு சொல்லிட்டாங்களே, ஏன் தொந்தரவு தரீங்க? உங்களால அவருக்கு எத்தனை கஷ்டம் பாருங்க.." என்று வெளியே தள்ளுகிறார். "ப்லீஸ்" என்கிறேன்.

சுசீலா திடீரென்று விழித்து என்னை அருகே வரச் சொல்கிறார்.

அவர் பாடிய பாடல்களில் #1 என்று நான் கருதும், மிகவும் ரசிக்கும், கவிஞர்-மன்னர்-இயக்குனரின் அழகானக் கற்பனையில் அற்புதமாக வெளிப்பட்டு நிரந்தரமாக என் நெஞ்சில் இடம் பெற்றத் துள்ளல் பாடலை - என்னைப் பார்த்தபடி ஹம் செய்து சில வரிகளைப் பாடுகிறார். பிறகு என்னை மிக அருகே அழைத்து ஒரு கேள்வி கேட்கிறார். புன்னகையுடன் கண் மூடுகிறார்.

சுசீலா கேட்ட கேள்வி: உனக்கு மிகவும் பிடித்த பாட்டு இதானே?

காலையிலிருந்து நெஞ்சைப் பிழிகிறது கனவு.