2014/12/27

தகாதவர்


இதற்கு முன்



    ரை மணிக்கு மேலாக வாதிட்டுக் கொண்டிருந்தார்கள்.

"உங்களை என்னால் நம்ப முடியலே" என்றாள் ரமா.

"ஏன்? நான் இயல்பா நடந்துக்குறதாலா?"

"இயல்பா நடக்கறீங்களா? லெட்ஸீ. ஸ்டேஷன் ப்லேட்பாரத்துல ஒரே சட்டையை ஒரு மாசமா போட்டுக்கிட்டு வெளியை வெறிச்சுப் பாத்துட்டு உக்காந்திருந்த ஒருத்தரோட தெனம் பேசிட்டு வரீங்க. அந்தப் பெரியவர் யாருன்னு கூடத் தெரியாது. எங்கேயோ பாத்த ஞாபகம்னு சொல்லி அவருக்கு உதவி செய்ய நினைக்கறீங்க. அஞ்சோ பத்தோ கொடுத்து உதவுறதா? இல்லையே? நகை வாங்கினப்ப வாங்கின பரிசுச்சீட்டை அவருக்குத் தர முடிவு செஞ்சீங்க.. அப்புறம் இப்ப.. பரிசு விழுந்ததும் பல்டி அடிக்கிறீங்க. அவருக்கு நகையோ பணமோ தேவையில்லை, அதனால பரிசு சீட்டை பகிர்ந்துக்க அவசியமில்லைனு சொல்றீங்க.. இதுல எதை இயல்பு நடத்தைனு சொல்றீங்க ரகு?"

"எல்லாமே தான். நானும் ஒரு சராசரி மனிதன் தானே ரமா?"

ரமா முகம் சுளித்தாள். "உங்க பரிசுச்சீட்டு, உங்க பரிசு. டு எஸ் யு லைக். ஆனா ஒரு பாரத்தை சுமக்குற அவசியத்தை ஏற்படுத்திக்காதிங்க.."

"எதுக்கு காம்ப்லிகேட் பண்றே? பரிசுச்சீட்டு வெறும் சீட்டா இருந்தப்ப அதை சுலபமா தானம் செய்யத் தோணிச்சு. இப்ப நிஜமாவே பரிசு விழுந்ததும் இதை அவர்கிட்டே கொடுக்க விரும்பலே. அவரு இதை ஏத்துக்குவாரோனு கூடத் தெரியாது.. நிராகரிச்சார்னா?"

"கொடுத்துப் பார்த்தா தானே தெரியும்?"

"லெட்ஸ் லுக் அட் திஸ் ஒப்ஜெக்டிவ்லி. ப்லேட்பாரத்துல இருக்குற ஒரு ஹோம்லெஸ்... அவர் கிட்டே திடீர்னு போய் இருபது பவுன் தங்கத்தைக் கொடுத்தா அவர் நிலை என்ன ஆகும்?"

"ஏன்? எத்தனையோ ஏழைங்களுக்கு லாட்டரி விழுதில்லையா? அது போலத்தான்"

"நோ.. இட்ஸ் நாட். முதல்ல இந்தப் பரிசுச்சீட்டு தனக்கு தானமா கிடைச்சுதுனு சொன்னா, ஜாயலுகாஸ்காரன் இவரைத் திருடன்னு பிடிச்சுப் போடலாம். இல்லே இவருக்கு திடீர்னு இத்தனை தங்கம் கிடைச்ச அதிர்ச்சியிலே எதாவது ஆகலாம். இல்லின்னா தங்கம் கிடைச்சது தெரிஞ்சு திருட்டுப் பசங்க இவரை அடிச்சுப் போடலாம்.. இந்த பரிசுச்சீட்டு அவரை ஆபத்துக்கு உட்படுத்தும்னு நினைக்கிறேன்"

"ரியலி? அதே ஆபத்து உங்களுக்கும் வரலாமே?". ரமா அவனை ஏற இறங்கப் பார்த்தாள். "மை குட்னஸ்! எப்படியெல்லாம் யோசிக்கிறிங்க! இந்த இருபது பவுனா உங்களை இப்படிப் பேச வைக்குது? பரிசுச்சீட்டைக் குடுத்துட்டு நீங்களே அவரை அடிச்சுப் போட்டுருவீங்க போலிருக்கே?"

"ஸ்டாப் இட்" எரிச்சலானான் ரகு. "நான் பரிசுச்சீட்டைத் தரதா சொன்னப்ப உனக்கு சம்மதமில்லேனு சொல்லலியா? நீ மட்டும் இப்ப எப்படி மனம் மாறினே?"

பதில் சொல்லத் தயங்கி ஒரு கணம் ரகுவை நேராகப் பார்த்த ரமா, "எனக்குத் தினம் தூங்க விருப்பம் ரகு" என்றாள். அருகே வந்து அவன் தோள் தொட்டு, "அதைவிட நீங்க தினம் நிம்மதியா தூங்க விருப்பம் ரகு" என்றாள் சற்றே கலங்கி.

"லெட்ஸ் பி ரேஷனல் ஓகே? பெரியவரோட இன்றைய தேவை இருபது பவுன் தங்கமா?"

"அதே போல யோசிச்சா உங்களுக்கு எதுக்கு இருபது பவுன் தங்கம் இப்போ? வாட் வில் யு டூ?"

"நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம என்னைத் திருப்பிக் கேட்டு என்ன பலன்?"

"ஏற்கனவே தீர்மானிச்ச பதிலை நியாயப்படுத்துறதுக்கான கேள்வியைக் கேட்டு என்ன பலன்?"

"பதில் சொல்லேன்..?"

"ஓகே. அவருடைய இன்றைய தேவை இருபது பவுன் தங்கம் இல்லைதான். அவருடைய இன்றைய தேவை ஒரு கடுகளவு சமூக அங்கீகாரம். ஒரு சின்ன வெற்றி. குளிருக்கு இதமா மூட்டைப்பூச்சி இல்லாத ஒரு போர்வை. சூடா ஒரு வாய் கஞ்சி. அப்பப்போ யாராவது சிந்துற எதிர்பார்ப்பில்லாத கனிவான புன்னகை.. தன் விழுதுகளின் பிடிப்பு.. ஒரு அரவணைப்பு.. சொல்லிட்டே போகலாம்.. இருந்தாலும் ஒரு அடிப்படை கேள்வி.. அந்தப் பெரியவரோட தேவை என்னனு தீர்மானிக்கிற தகுதி நமக்கு இருக்கா?"

"ஏன் இல்லை? அவருக்கு உதவி செய்யுற தகுதி நமக்கு இருக்கறப்ப, அவர் தேவையைத் தீர்மானிக்கிற தகுதி இல்லையா? ஆத்துல போட்டாலும் அளந்து போடுனு படிச்சதில்லையா?"

"உங்களுக்கு எது சரினு தோணுதோ அதைச் செய்ங்க". ரமா சட்டென்று வெளியேறினாள்.

விவாதத்தைத் தவிர்க்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட ரகு வாளாதிருந்தான்.

கல்கத்தாவிலிருந்து திரும்பி மூன்று நாட்களாயிருந்தாலும் பெரியவரை சந்திக்க நேரிடுமோ என்ற உறுத்தலில் ரயில்வே ஸ்டேஷன் பக்கமே போகவில்லை. பரிசு விழுவதும் விழாததும் ஒரு விபத்து தானே? பரிசு விழுமுன் இருந்த பரந்த மனமும் தாராள குணமும், பரிசு விழுந்ததும் பயந்து ஒளிவானேன்? இதென்ன சிக்கல்? யாரோ கொடுத்த பரிசை யாருக்கோ தானம் தருவதில் ஏன் இத்தனை அழுத்தம்? இது நமக்குக் கிடைக்காமலே போயிருக்கலாமே? இல்லாத இருபது பவுன், இல்லாமலே போக மனம் ஏன் அடங்க மறுக்கிறது? தெரியாத்தனமாக வாய்க்கொழுப்பில் தந்த வாக்குறுதியின் எரிச்சலா? இந்தப் பரிசு தன்னைவிட இன்னொருத்தருக்கு அதிகம் பயன்படும் என்ற உண்மை புரிந்தாலும் தன் ஆளுமைக்குட்பட்டது என்ற உரிமையா? எப்படி தன்னுடையதாகும்? இலவசமாகக் கிடைப்பது தன்னுடையதாகுமா? இலவசமாகக் கிடைத்ததை இலவசமாகக் கொடுத்தால் மனம் ஆற மறுப்பதேன்? ஆயுசுக்கும் இதே போல் இருதலை கொள்ளி எறும்பு வாழ்க்கை எல்லோருக்குமேவா இல்லை மத்யமருக்கேயான சாபக்கேடா? சே! இந்தப் பரிசு எதற்காக விழுந்து தொலைக்க வேண்டும்? இன்னும் பின்னோக்கினான். எதற்காக இந்தப் பெரியவரைப் பார்த்துத் தொலைக்க வேண்டும்? சாதாரணமாக இயங்கிக் கொண்டிருந்த வாழ்வில் எதற்கு இப்படியொரு திருப்பம்? தேவையில்லாத ஒழுக்கச் சிக்கல்?

ரகு பலவாறு சிந்தித்தபடி ரமாவை நெருங்கினான். "யு ஆர் ரைட்" என்றான். மௌனமாக நின்ற ரமாவின் கைகளைப் பிடித்தான். "நீ சொன்னது சரிதான் ரமா. என் மனம் மாறினதுக்குக் காரணம் புரியலே. பரிசு சீட்டைக் கொடுனு நான் தான் முதல்ல சொன்னேன். பிறகு நானே மனம் மாறுவேன்னு நினைக்கலே" என்றான்.

"இருபது பவுன் தங்கம்.. உங்க கண்ணை மறைக்குது"

"இருக்கலாம்.. பரிசை அப்படியே கொடுக்க மனசு கேக்கலே. நான் ஒரு சாதாரண மனுஷன். மகான் இல்லை ரமா."

ரமா அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"கொஞ்சம் வெட்கமா இருந்தாலும் நான் செய்யுறது தப்பில்லைனு தோணுது. ஒரு ஹோம்லெஸ் மனிதர், வயதானவர், இருபது பவுன் தங்கத்தை வச்சுகிட்டு என்ன செய்வாருனு தோணிச்சு.. ஐ மீன்.. பரிசுச்சீட்டு வாங்கினது நாம தானே? வேணுமானா பாதியைப் பகிர்ந்துக்கலாம். பத்து பவுன் தங்கத்தையோ அதுக்கான ரொக்கத்தையோ அவர் கிட்டே குடுக்கலாம். என்ன சொல்றே?"

ரமா புன்னகைத்தாள். ரகுவின் தோளில் தட்டி, "மிடில் க்லாஸ் மகராஜா?" என்றாள். "உங்க நிலமை புரியுது. விருப்பம் போல் செய்யுங்க" என்றாள்.

    கு ஸ்டேஷன் வந்த போது காலை பத்து மணியிருக்கும். பெரியவர் தென்படுகிறாரா என்று பார்த்தான். காணவில்லை. கடற்கரை ரயில் வந்ததும் ஏறிக் கொண்டான். ஏதோ வெறித்தபடி இருந்தவன் வண்டி மெள்ள வேகம் பிடிக்கத் தொடங்கியதும் தற்செயலாகக் கவனித்தான். அதிர்ந்தான். பல்லாவரத்தில் இறங்கி அடுத்த ரயிலைப் பிடித்துக் குரோம்பேட்டை வந்தான். அவசரமாக இறங்கி எதிர்புறம் ஓடினான். பெரியவர் தான். ப்லேட்பாரம் கடந்து பாலத்தினடியில் சுருண்டு படுத்திருந்தார். நாடி பிடித்துப் பார்த்தான். அங்கிருந்து கூவி எதிர்புறமிருந்த சிலரை அழைத்தான். ஒரு ஆட்டோ டிரைவர் வந்தார். "என்னா சார், வண்டியா?"

"ஏம்பா.. இங்க ஒருத்தர் இப்படி சுருண்டு படுத்திட்டிருக்காரு.. என்ன ஏதுனு கவனிக்க மாட்டீங்களா?"

"தோடா.. ஏன் சார்.. எத்தினியோ பேரு படுத்திருக்காங்க.. எல்லாரையும் கண்டுக்கவா முடியும்? பெர்சுக்குப் போற வயசு... வூட்ல கள்டி வுட்றுப்பாங்க.. நாதியில்லே.. இங்க வந்து படுத்திருக்காரு.. உனக்கு என்ன சார் வந்திச்சு? உனக்கென்ன அப்பனா பாட்டனா? எதுனா சவாரி கேக்கறீங்கனு வந்தா இன்னாவோ டயலாக் வுட்னுகிறீங்க?"

டிரைவர் பேச்சின் யதார்த்தம் உறுத்த, ரகு அமைதியானான். "தெரிஞ்சவர்பா. இந்தா ஒரு சோடா வாங்கிட்டு வா" என்று இருநூறு ரூபாயைக் கொடுத்தான். "அப்படியே ஒரு பாட்டில் தண்ணி வாங்கிட்டு வாப்பா. இவரை எழுப்பி வீட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போகணும். ந்யூகாலனி. வரியாப்பா?"

    "ரொம்ப தேங்க்ஸ், ரெண்டு பேருக்கும்" என்றார் பெரியவர். "குளிப்பாட்டி வேட்டி சட்டை கொடுத்து சாப்பாடு போட்டு.. அமர்க்களப் படுத்திட்டிங்களே? மறுபடி ப்லேட்பாரத்துக்குப் போக வேண்டியவன் தானே? இன்னிக்குக் கூட்டிட்டு வந்து குளிப்பாட்டி வேஷ்டி சட்டை கொடுத்து சாப்பாடு போட்டீங்க. தினப்படிக்கு நான் என்ன செய்வேன்? வீண் ஜம்பத்தோடு பேசலே.. உங்க உதவிக்கு நன்றி, ஆனா தயவுசெஞ்சு இனிமே இப்படி உதவாதீங்க"

"உங்களுக்கு ஆட்சேபணை இல்லின்னா எங்க கூடவே இருக்கலாம் சார்" என்றான் ரகு.

ரகுவை முறைத்த ரமாவைக் கவனிக்கத் தவறவில்லை பெரியவர். "பயப்படாதமா.. உன் புருஷனுக்கு அறிவில்லைனா எனக்கும் அறிவில்லைனு ஆயிடுமா?"

பெரியவரின் நேர்மையை வியந்து சுதாரித்த ரமா, "தப்பா நினைக்காதிங்க சார். இந்த மாதிரி ஏதாவது விவரம் புரியாம உளறித் தானும் கஷ்டப்பட்டு அடுத்தவரையும் கஷ்டப்படுத்துறது அவரோட சுபாவம். இருந்தாலும் என் காதலர் இல்லையா? விட்டுக் கொடுக்க மாட்டேன்... அவரோட மனம் எனக்குப் புரியும்"

"கணவரைக் காதலர்னு சொல்ற லட்சத்துல ஒருத்திமா நீ.. நல்லா இரு.. நான் வரட்டுமா?" என்று எழுந்த பெரியவரைத் தடுத்தாள் ரமா. "உக்காருங்க சார். விவரம் புரியாம உளறிக் கஷ்டப்படுவார்னு சொன்னனே. அந்த மாதிரி ஒரு கஷ்டத்துல இருக்கோம்.. நீங்கதான் உதவி செய்யணும்"

"நானா? நான் எப்படி..."

"உங்களால தானே சார் கஷ்டமே..?" என்று அன்புடன் அழகாகச் சிரித்த ரமா, பரிசுச்சீட்டு விவரங்களைச் சொன்னாள்.

திடுக்கிட்டார் பெரியவர். "நிஜமாவா சொல்றீங்க ரெண்டு பேரும்? இல்லே இது ஏதாவது பைத்தியக்கார ஆஸ்பத்திரியா?"

"உண்மை சார். இதோ பரிசுச்சீட்டு" என்று பரிசுச்சீட்டைக் காட்டினான் ரகு. "பரிசு விழறதுக்கு முன்னால இதை உங்களுக்குத் தரலாம்னு தாராளமா சொன்னவன், பரிசு விழுந்ததும் மனம் மாறிட்டேன்.. மன்னிக்கணும்"

"ஏன்.. இது உன்னோட பரிசு தானே?"

"இருக்கலாம். ஒரு விசித்திரமான.. தார்மீகச் சவால்னு வைங்களேன்?"

"என்னப்பா.. பெரிசா என்னவோ பேசுறே? நான் எளியவன்பா. அந்தாலத்து சிக்ஸ்த் பார்ம்.."

"சார்.. எனக்கோ ரமாவுக்கோ வாழ்க்கைல எந்தப் பரிசும் கிடைச்சதில்லே சார். அந்தக்காலத்துல லாட்டரி வாங்குவோம். ஒரு நம்பர் கூட விழாது சனியன். அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் எங்க ரெண்டு பேருக்கும். அன்னிக்குப் பாருங்க.. உங்களுக்கு இந்தப் பரிசுச்சீட்டைத் தரணும்னு சொன்னப்போ சத்தியமா பரிசு விழாதுனு ஒரு நம்பிக்கைல சொன்னேன். ஏன்னா, இது என்னோட சீட்டு. தனக்குப் பரிசு விழாதுனு ரமாவுக்கும் தெரியும். அதனாலதான் என்னோட சீட்டுனு இதைத் தனியா எழுதி வச்சா. நாட் தட் ஷி விஷ்ட் டு பி லக்கி. அவளோட சீட்டை நம்பினா சுத்தமா வராதுனு அவளுக்குத் தெரியும். ஆனா அதே நேரம் அவ ரொம்ப யதார்த்தமான பெண். முன்பின் தெரியாத ஒருத்தருக்கு உதவி செய்யறதுக்கு பதிலா பரிசுச்சீட்டைக் குடுத்துட்டுப் போற அகஸ்மாத்தான தர்மத்தில் அவளுக்கு ஒரு ஆட்சேபணையுமில்லே. ஒத்துக்கிட்டா..."

"கொஞ்சம் இருப்பா. எனக்குனு ஒதுக்கினதால தான் பரிசு விழுந்திருக்குனு சொல்றாப்ல இருக்கே?"

"கண்டிப்பா சார். இதை நாங்க ரெண்டு பேருமே நம்பறோம்" என்றாள் ரமா.

"ஆமாம் சார்" என்றான் ரகு. "எனக்கு ஆயுள்ல இது வரை ஒரு சின்ன பென்சில் இரேசர் கூட பரிசு விழுந்ததில்லை சார். எனக்கு மட்டுமில்லே என் பரம்பரையே அப்படித்தான். எங்கப்பா ஒவ்வொரு மாநில லாட்டரி சீட்டுனு வாங்கி வாங்கி எத்தனை வேஸ்ட் பண்ணியிருக்காருனு நினைக்கறீங்க! ஐ டெல் யு. ஐயம் பேங்க்ரப்ட் இன் லக். உங்களுக்குத் தரலாம்னு நினைச்சதால மட்டுமே இந்த சீட்டுக்குப் பரிசு விழுந்திருக்கு"

பெரியவர் சந்தேகத்தோடு பார்த்தார். "என்ன சொல்றீங்க ரெண்டு பேரும்?"

"இது உங்க பரிசுச்சீட்டு சார். என் கைல கிடைச்சது அவ்வளவுதான். எனக்குக் கிடைச்ச உரிமை ஒரு விபத்து. ஆனா என் மனசு பாருங்க, இப்ப இதை உங்க கிட்டே முழுசுமா தரத் தயங்குது. ஆனா உங்க கூட பாதியைப் பகிர்ந்துக்க ஆசைப்படுறேன் சார். முழு மனசா ஆசைப்படுறேன். பாருங்க, அதனாலதான் இன்னும் இதை கேஷ் பண்ணாமலே இருக்கேன். பணத்தையோ தங்கத்தையோ பார்த்ததும் மனசு மறுபடி மாறிடக் கூடாது பாருங்க. இன்னிக்கே போய் ரெண்டு பேரும் இதை பகிர்ந்துக்கலாம் சார். உங்களுக்கும் இப்போ இது உதவியா இருக்கும் இல்லையா?"

சற்று நேரம் அமைதியாக இருந்தார் பெரியவர். "கொஞ்சம் குடிக்கத் தண்ணி தரியாப்பா?" என்றார்.

"நீ சொன்னது கேட்டு என் நாக்கு வரண்டு போச்சுபா" என்றார் டம்ள்ரை அவனிடம் தந்தபடி. "ரொம்ப தேங்க்ஸ். தண்ணிக்கு" என்றார்.

மூவரும் பேசாதிருந்தனர். பெரியவர் மெள்ளத் தொடங்கினார். "பத்து பவுன்னா ரெண்டு லட்சமாவது தேறுமில்லையா?"

ரகு ஆமோதித்தான்.

"ஹ்ம்ம்ம்.. ரெண்டு லட்ச ரூபாயை அப்படியே எனக்கு அன்கன்டிஷனலா தானம் பண்றதா சொல்றே? அதுக்கான புண்யத்தைக் கட்டிக்கலாம்னு ஒரு ஐடியா.."

"அய்யய்யோ.. அப்படியெல்லாம் இல்லை. எங்க ரெண்டு பேருக்கும் பாவ புண்ணியத்துல நம்பிக்கை கூட கிடையாது சார். எங்களுக்குக் கிடைச்ச வெற்றியை உங்களோட பகிர்ந்துக்கறோம். ட்ரூலி, நாங்க விளையாடின காரணத்துக்காக உங்க வெற்றியை நாங்க பகிர்ந்துக்கறோம்னு சொல்றேன்.."

"நான் யாரோ.. நீங்க யாரோ.. எதுக்கப்பா.. இதென்ன உறவா பங்காளியா..."

"அப்படிப் பார்த்தா எல்லாருமே யாரோதான்.. எல்லாருமே உறவுதான் சார். நீங்க நான் ரமா எல்லாருமே ஏதோ ஒரு வட்டத்தில் இணைஞ்சிருக்கறதுனால தான் இப்ப இப்படிச் சந்திக்கிறோம்... ஹ்யுமேனிடி இஸ் எ பிக் சர்கில், ஹ்யூமெனிசம் இஸ் இட்ஸ் சென்டர்"

"இது அந்த மொள்ளமாறிங்களுக்குத் தெரியலியே" என்று முணுத்தார் பெரியவர்.

"என்ன சொல்றீங்க சார்?"

"ஒண்ணுமில்லேமா" என்றவர் திடீரென்று உற்சாகத்துடன், "ஏம்பா.. பரிசு தரப்ப போட்டோ எடுப்பாங்க இல்லே? வா, போகலாம். என் இஷ்டத்துக்கு விடணும், வற்புறுத்தக் கூடாது, சம்மதமா?" என்றார்.

    கைக்கடையில் பரிசுச்சீட்டைக் கொடுத்து ரொக்கமாக வாங்கிக் கொண்டார்கள். நாலு லட்சத்து சொச்சத்துக்கான காசோலையைப் பிடித்தபடி படம் எடுத்துக் கொண்டார்கள். ரமாவின் போலராய்டில் உடனடியாகப் படம் வந்துவிட, பெரியவர் மிகவும் சந்தோஷமாக இருந்தார்.

"நாளைக்கு வருமானவரி எடுத்துட்டு மிச்சத்தை என் பேங்க்ல போடுவாங்க சார்..."

"வரி பிடிப்பாங்களா? என்னப்பா சொல்லவேயில்லையே? அவ்வளவும் போச்சா?"

ரகு சிரித்தான். "இல்லை சார். உங்க ரெண்டு லட்சத்துக்கு வரி கிடையாது, கவலைப்படாதீங்க" என்றான். ரமாவின் முறுவலைக் கவனித்தான்.

"என்னவோ.. உங்க ரெண்டு பேருனால நான் இன்னிக்கு இந்த நிமிஷம் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இதுக்கு எந்தப் பரிசும் ஈடு கிடையாதுப்பா. எனக்கு ஒரு ரெண்டாயிரம் ரூபாய் கொடு, நாளைக்கு மிச்சத்தை வந்து வாங்கிக்கறேன். ஒரு மொள்ளையைப் பாத்துட்டு வந்துடறேன்.."

ரகு இரண்டாயிரம் ரூபாய் எடுத்துக் கொடுத்தான். "சார், நான் கொண்டு விடறேனே?"

"நோ.. நோ.. இது என்னோட தனி வெற்றிக்கான டைம். அலோ மி. ஆனா நீங்க ரெண்டு பேரும் நாளைக்கு ஊரை விட்டு ஓடிற மாட்டிங்களே?"

ரமா சிரித்தாள். "இல்லே சார். மாட்டோம். இன்னிக்கு உங்க உதவியால நிம்மதியா தூங்கப் போறோம்".

பெரியவர் அவர்களை அருகிலழைத்தார். "ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க மாட்டிங்களே? ஒரு பென்சில் கூட பரிசு விழாத அதிர்ஷ்டக்கட்டைனு அடிச்சுக்கறிங்களே ரெண்டு பேரும்? உங்க ரெண்டு பேருக்கு எதுக்கு பரிசு? நீங்கதான் ஒருத்தருக்கொருத்தர் பரிசு! கோடிப்பொன் கொடுத்தாலும் ஈடாகாத பரிசு! எப்பேற்கொத்த ராமசீதையாட்டம் இருக்கிங்க?! எத்தனை முனிவரும் தர்மாத்மாவும் ஆசீர்வாதம் செஞ்சாலும் இப்படியொரு பிணைப்பு கிடைக்குமா? வாழ்க்கையில இதைவிட பரிசு என்னய்யா வேண்டிக்கிடக்கு? இதைப் புரிஞ்சுக்காத எத்தனையோ தம்பதி சனியன்கள் வாழ்க்கையை நாசமாக்கிட்டுத் திரியறதை தினம் பாக்குறேன். இப்படி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு நடக்குறீங்க, இதுதான் மகத்தான பரிசு, மகோன்னத பரிசு. ஞாபகம் வச்சுக்குங்க. பி குட். நாளைக்குப் பார்ப்போம், சரியா?" என்றார். இரண்டாயிரம் ரூபாயையும் போட்டோவையும் வாங்கிக்கொண்டு நடந்தார்.

    வீடு திரும்புகையில், "எனக்கென்னவோ அவர் நாளைக்குத் திரும்புவாரா என்னனு தெரியலே ரமா" என்றான்.

"அதனால என்ன? இன்னிக்கு ஹி வாஸ் ஹேப்பி. நம்மளையும் சந்தோஷப்படுத்தினாரு..."

"இல்லே.. இன்னிக்கே நான் ஒரு செக் கொடுத்திருக்கலாம்.. தோணாம போயிடுச்சே?!"

"வருவாரு வருவாரு.. எல்லாத்துக்கும் டென்ஷன் ஆகாதிங்க" என்று ரகுவின் கைகளை இறுக்கினாள். "அவர் நம்மளைப் பத்தி சொன்னது எத்தனை அழகு இல்லே?"

"நான் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி தான்.. இத்தனை நாள் தெரியாமப் போச்சே!"

"ஆமா..ம்.." என்று இழுத்தாள். "மொள்ளைனு சொன்னாரே? கெட்ட வார்த்தை தானே? என்ன அர்த்தம்?"

சற்று யோசித்த ரகு, "அவர் யாருனு எனக்குத் தெரியப்படுத்தினாருனு அர்த்தம்" என்றான்.

2014/12/02

தகாதவர்



    ட்டையில் கொஞ்சம் புதுக்களை ஒட்டிக் கொண்டிருந்தது போலிருந்தது. போன வாரம் சட்டை சற்றுப் புதிதாகத் தென்பட்டது. அதற்கு முந்தைய வாரம் நிச்சயம் புதிதாக.. அதற்கும் முந்தைய வாரம் அப்போது தான் கடையிலிருந்து எடுத்து வந்தது போல் தெளிவாக...

அணிந்திருந்தவர் முகம் மட்டும் அணிந்திருந்த சட்டையை விட வேகமாகக் களையிழந்து கொண்டிருந்தது வெள்ளைத் தாளில் வரைந்த கரும்பொட்டு போல் தெளிவாக...

    ரகு இந்தியா திரும்பி சில மாதங்கள் ஆகியிருந்தன. ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குப் பிறகு ஊர் திரும்பி புது வீடு, புது வேலை, புதுத் தலைமுறை, புது விதிகள், புது வலிகள் என வித்தியாசமான உணர்வுகளை ஏற்கப் பழகிக் கொண்டிருந்தான். விட்டுப் போன உறவுகளை வரிசையிட்டுப் புதுப்பிக்கும் மும்முரத்தில் ஊர் சுற்றிக் கொண்டிருந்த மனைவி ரமாவை அவ்வப்போது கவனித்தாலும், தினம் அவரைக் கவனிக்கத் தவறவில்லை. சட்டையணிந்திருந்த பெரியவரை.

காசுக்காக அல்லாமல் ஆசைக்காகச் சேர்ந்த புது லெக்சரர் வேலை ரகுவுக்குப் பிடித்திருந்தது. நேரத்தோடு அடித்துப் பிடித்துப் போக வேண்டிய அவசியம் இல்லாமல் நிதானமாகத் தினம் நுங்கம்பாக்கத்துக்குப் பயணம். குரோம்பேட்டையில் அகலப்பாதை ரயில் வந்ததே ரகுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. முதன் முதலாக அகலவழி மின்ரயிலை பார்த்து அசந்து போனவன், தற்செயலாக எதிர் ரயில் நிலைய இருக்கையில் அமர்ந்திருந்தவரைப் பார்த்தான். பளிச்ச்ச்ச்ச்சென்றப் புதுச்சட்டை, புதிதென்று சொல்ல முடியாத பேன்ட். ஆளில்லாத அகலவழி நடைமேடை பெஞ்சில் ஏறக்குறையாக அனாதையாக உட்கார்ந்திருந்தார். நிமிர்ந்த நெஞ்சுடன் நேராக எதையோ பார்த்தபடி. பக்கத்தில் ஒரு சிறிய தோல் பை. அருகே தரையில் ஒன்றிரண்டு நாய்கள் இரவு முழுதும் குரைத்த அசதியில் தூங்கிக் கொண்டிருந்தன. பெரியவரின் தலைக்கு மேல் தொங்கிய விளம்பரப் பலகையில், 'உங்கள் எதிர்காலம் - எங்கள் பாதுகாப்பு' என்ற ஏதோ வங்கியின் அர்த்தமில்லாத விளம்பர வாசகம். அவருடைய நேர்ப் பார்வையில் வந்து விழுந்து விட்டிலானவை நினைவுகளா அல்லது வெற்றுக் காலவரிகளா என்று சொல்ல முடியாதபடி சலனம் துறந்த முகம்.

காலத்தைக் கட்டும் புகைப்படத் தருணம் என்று எண்ணினான். நல்ல கேமரா இல்லாது போனதேயென்று நொந்தான். அதற்குள் தாம்பரம் மின்ரயில் வந்து அவரைப் பார்வையிலிருந்து மறைத்தது. ரயில் விலகியதும் அவரைப் பார்க்க முனைகையில் கடற்கரை ரயில் வந்துவிட, ஆள் குறைவான பெட்டியைத் தேடி ஏறிக்கொண்டான். அப்போது தான் சட்டென்று நினைவு தட்டியது. 'நிச்சயம் இவரைப் பார்த்திருக்கிறேன்!'. அடையாளம் காணும் முயற்சியை தினத்தின் பிற தேடல்களில் தொலைத்தான்.

சென்னை எத்தனை மாறிவிட்டது! குரோம்பேட்டை எத்தனை மாறிவிட்டது!

ந்யூகாலனியில் ஆறாவது குறுக்குத் தெருவின் ஒண்டுக் குடித்தனக் குடியிருப்பு ஒன்றில் இருந்த காலம் இதோ நேற்றிரவு போல் தோன்றுகிறதே! விளையாட்டாகத் துரத்தி வந்த உயிர்நாய் டைகருக்குப் பயப்படுவது போல் மரத்தில் ஏறி உட்கார, நாய் எம்பி எம்பிக் குதித்து தடுமாறி விழுந்ததைப் பார்த்துச் சிரித்துக் கீழே இறங்கி நாயுடன் கட்டிப் புரண்டக் குதூகலம்.. இப்போது நடந்தது போல் தோன்றுகிறதே? இருந்தாலும் உடலிலும் மனதிலும் ஏன் இத்தனை சோர்வு? ஏன் இத்தனை அயர்ச்சி?

அசோக் மணிவண்ணன் சாய் மகேந்திரன் பாபு ரங்கன் ஸ்ரீமதி வேதா மாலதி சுந்தர் விஜி கண்ணன் மனோகர் ஸ்ரீனிவாசன் துரை என்று வேகமாக வளர்ந்த நட்புக் கூட்டத்துடன் வெவ்வேறு தருணங்களில் நடத்திய கூத்துகள்..

க்ரிகெட் விளையாடக் கற்றுக் கொண்டது.. முதல் மேச்சில் அசோக் தன்னை ஓபனிங்க் பேட் செய்ய அனுமதித்ததும் களத்தில் இறங்கி அஸ்தினாபுரம் இஸ்மாயில் எறிந்த பந்துகளை விளாசியது.. தவறாக நோ பால் அறிவித்த அம்பயர் பாபுவுடன் இஸ்மாயில் சண்டை போட உடனே எல்லோரும் மேட்சை மறந்து சண்டையில் இறங்க.. கையிலிருந்த ஸ்டம்பினால் இஸ்மாயில் முதுகில் ஓங்கி அடித்துவிட்டு ஓடியது.. பிறகு இஸ்மாயில் போலீஸ்காரனுடன் வீட்டுக்கு வந்ததும் அங்கேயே பயத்தில் ஒன்றுக்குப் போனது..

தோல் கம்பெனி மைதானத்தில் ஹாக்கி விளையாடிவிட்டு லெதர் கம்பெனி ரோடில் இருந்த சைவ ஓட்டலில்... பத்து பைசாவுக்கு ஒரு தோசை என்றாலும் ரூபாய்க்கு பனிரெண்டு தோசை தருவார்கள்.. அதை டீமில் அத்தனை பேரும் பகிர்ந்து சாப்பிட்டு சாம்பாரைக் குடம் குடமாகக் குடித்து.. "சார்.. பதினொரு தோசை தான் கொடுத்தீங்க" என்று அழிச்சாட்டியம் செய்து.. கடைக்காரர், "ஏம்பா.. வாரா வாரம் இதையே சொல்றீங்களே? ஒரு வாரமாவது நான் எண்ண மாட்டேனா?" என்று சிரித்தபடி இன்னொரு தோசையைத் தயாராக வைத்துக் கொடுத்தது..

தாம்பரத்திலிருந்து பூந்தமல்லிக்கு பஸ் விட்டிருக்கிறார்கள் என்று தெரிந்து அப்பா அம்மாவுடன் முதன் முதலாகக் குன்றத்தூர் முருகன் கோவிலுக்குப் போனது.. தேவர் படம் போலவே கோவில் இருந்ததில் வியந்தது..

வாடர் டேங்க் திடலில் விளையாடிய போது ஏற்பட்ட இன்னொரு சண்டையில் சாய், மணிவண்ணனுடன் சேர்ந்து ரத்தக்காயங்களுடன் திரும்பிய போது.. கண்ணன் கடைக்காரர் சிகரெட் பிடித்தால் வலி தெரியாது என்று ஆளுக்கொரு பில்டரில்லாத சார்மினார் சிகரெட் தர, முதல் முதலாக சிகரெட் பிடித்தது.. எக்கச்சக்கமாக இழுத்து இருமி ஏறக்குறைய இறந்து போன சாயை அங்கேயே விட்டு அவன் வீட்டுக்கு ஓடி "சாய்க்கு என்னவோ ஆயிடுச்சு.. என்னனு தெரியலே" என்று புளுகி குடும்பத்துடன் சாயை ஆளவந்தார் க்ளினிக் கூட்டிப் போனது..

பத்து வருடங்களுக்கு முன் பதிவு செய்த தொலைபேசி வீட்டுக்கு வந்ததும் அப்பா என்னவோ சந்திரனில் இறங்கியது போல் அலட்டிக் கொண்டது..

வயதுக் கோளாறில் மாலதியை வேறு விதமாகப் பார்க்கத் தொடங்கி அவள் வீட்டுக்கு அடிக்கடி போனது.. விவரம் புரிந்து கொண்ட மாலதியின் அப்பா அவனைத் தனியாகக் கூப்பிட்டு 'வயசுல இப்படித்தான் இருக்கும், படிப்புல கவனமா இரு.. எல்லாத்துக்கும் காலம் வரும்' என்று அறிவுரையும், 'மொள்ளமாறியா இருந்தே, ஜோடு பிஞ்சிடும்' என்று கொஞ்சம் அதட்டலும் கலந்து பேசியது.. அதை ஒட்டுக் கேட்ட மாலதியின் சொந்தக்காரப் பையன் மறுநாள் காரணமில்லாமல் தன்னுடன் வம்புக்கு வந்து 'டேய்.. மாலதி வீட்டுக்கு வந்தே.. தொலைச்சுடுவேன்' என்று மிரட்டிக் கன்னத்தில் அறைந்தது.. உடனிருந்த மகேந்திரன் துரை அசோக் மூவரும் அவனுடன் சண்டைக்குப் போனது.. 'டேய்.. எங்கிருந்தோ இங்க வந்துகிறே.. எங்க செட்டு ஆள் மேலயா கை வைக்குறே?' என்று மகேந்திரன் அவன் மூக்கைப் பிளந்தது.. அதைக் கேட்டு ஆத்திரத்துடன் வந்த மாலதியின் அப்பாவிடம் மகேந்திரன். "நான் இல்லிங்க.. ரகு தான் அடிச்சான்.. வேணும்னா துரையைக் கேட்டுப் பாருங்க" என்று புளுக.. "ஆமாம்.. ரகு தான் அடிச்சான்" என்று துரை நம்பிக்கை துரோகம் செய்து, பிறகு "டேய் மன்னிச்சுக்கடா.. விஷயம் தெரிஞ்சா மகேந்திரனோட அப்பா பெல்டை உருவி பின்னிடுவாருடா.. அதான் பொய் சொன்னேன்.. வேணும்னா உங்கூட வந்து மாலதி கிட்டயே பேசிடறேன்.." என்று எத்தனை சொல்லியும் அவனுடன் சில நாட்களுக்குப் பேச்சை வெட்டியது.. தொடர்ந்து பல நாட்கள் மாலதியின் இரண்டு அண்ணன்களும் அந்தத் தெரு பக்கமே வரவிடாமல் தொந்தரவு கொடுத்தது..

தொலைக்காட்சி வந்ததும் நட்பு ஆதாரங்களே அடியோடு மாறி, இதுவரை பழகாதிருந்த டேவிட் அழகுசாமி வீட்டுக்கு டிவி இருந்த ஒரே காரணத்தால் வாரா வாரம் போய் அவருடைய எட்டு வயது மகனுடன் வேண்டா வெறுப்பாகப் பழகியது.. பிறகு ஏதோ கடுப்பில் அழுக்குசாமி என்று அவர் வீட்டுச் சுவரில் எழுதியது.. கிறுஸ்துவர்கள் எல்லாரும் ஹிந்துக்களை மதமாற்றம் செய்யவே வந்தவர்கள் என்ற தீர்மானமான நம்பிக்கையுடன் வளர்ந்தது. சில மாதங்களில் மணிவண்ணன் அசோக் சாய் என்று எல்லோர் வீட்டிலும் டிவி வந்துவிட 'எங்க வீட்டுல வெஸ்டன் எங்க வீட்டுல டெலிரேட் எங்க வீட்ல க்ரௌன் எங்க வீட்டுல கோனார்க்' என்று அவரவர் பீற்றிக்கொள்ள, தன் வீட்டில் மட்டும் டிவி பெட்டி வராத காரணத்தைக் கேட்டு அழுதது...

வகுப்பில் அடித்தார் என்ற கடுப்பில் நண்பர்களுடன் இரவு பதினொரு மணிக்கு மேல் எத்திராஜ் டீச்சர் வீட்டு வாசலில் நின்றபடி அவர் வீட்டுக் கதவு மேல் மூத்திரம் போனது.. அதையெல்லாம் மௌனமாக கண்ணாடி ஜன்னலுக்கு உள்ளிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் எத்திராஜ் என்பது தெரிந்து ரத்தம் உறைந்து ஓடிப்போனது.. மறுநாள் வகுப்பில் ஏதாவது சொல்வார் என்று தினம் பயந்து நடுங்கி உட்கார்ந்திருக்க எத்திராஜ் அதைப் பற்றிப் பேசவில்லை, பேசப்போவதில்லை என்பது புரியத் தொடங்கி.. திடீரென்று வாலிப முறுக்கு மனதுள் நிரந்தரமாகக் கட்டியது..

'ஸ்ரீமதிக்கும் துரைக்கும் இது, என் கண்ணால பார்த்தேன்' என்று கட்டிவிட்டது.. ஸ்ரீமதியின் மாமாவுக்குக் கோபம் வந்து 'இந்த மாதிரி உதவாக்கரைப் பிள்ளையை பெற்றது' பற்றி அப்பாவிடம் சண்டை போட்டது.. பிறகு ஸ்ரீமதி தன்னிடம் மாமாவைப் பற்றி ரகசியமாகச் சொன்னதைக் கேட்டு கொஞ்சம் பயந்து கொஞ்சம் வியந்து.. இதை துரையிடம் சொல்வதா கூடாதா என்று அவதிப்பட்டது.. மூன்று வருடங்களுக்குப் பின் ஸ்ரீமதி காணாமல் போனதும்..கடைசிவரை துரையிடம் சொல்லாமலே போனது எத்தனையோ வருடங்களுக்கு உறுத்தி, ஒரு வேளை அன்றைக்கே சொல்லியிருக்கலாமோ என்று வருந்தியது..

மாலதியின் பெரிய அண்ணனுக்கு டைனோரா என்று ஒரு டிவி கம்பெனியில் வேலை கிடைத்திருப்பது பற்றி ந்யூகாலனியே அதிர்ந்தது..

மணிவண்ணன் அம்மாவிடம் ஒரு முறை "மாமி, தயவு செஞ்சு மணியை எங்கூட அனுப்புங்க.. நாளைக்குக் கணக்கு பரீட்சை.. நான் பாஸானா அது மணிக்குத்தான் புண்ணியம்.." என்று சரடுவிட்டு மணியின் அம்மா உச்சி குளிர்ந்து மணியிடம் "போடா.. போய் சொல்லிக் கொடுறா.. தானத்துல பெரிசு ஞானதானம்" என்று ஏதோ சொல்ல.. வேண்டுமென்றே தடுத்த மணியிடம் "என்னடா பிகு பண்றே? உனக்கு படிப்பு நன்னா வரும்னு தானே அவன் கேட்கறான் பாவம்? போடா.. போய் ஒரு ரெண்டு மணி நேரம் சொல்லிக்கொடு போ" என்று தள்ள.. "இவனுக்கெல்லாம் படிப்பே வராதுமா.. எப்பவும் விளையாடினா படிப்பு எப்படி வரும்?" என்று மணி இன்னும் முறைக்க.. "போடா.. போய் சொல்லிக்குடுறா.. கெஞ்சறான் பாரு ரகு" என்று அவன் அம்மா எங்களை வெளியே தள்ள.. நாங்கள் நேராக லட்சுமிபுரம் ஓடி க்ரிகெட் மேட்ச் விளையாடியது தெரிந்து மணியின் அப்பா என் வீட்டுக்கு வந்து முறையிட.. 'அப்பா.. பேஸ் போலிங்க் போட ஆளில்லை மணியைக் கூட்டிட்டு வானு இந்த ஐடியா கொடுத்தது துரையும் மகேவும் தான்" என்று அவர்களை மாட்டி விட்டது.. பிறகு மணியின் அப்பா தன்னை எங்கே பார்த்தாலும் தெருவில் காறித் துப்பியது பிடிக்காமல் தானும் அவரைப் பார்த்ததும் துப்பத் தொடங்கியது..

ப்ளஸ் டூ என்று புதிதாகக் கல்வி முறை திருத்தம் வந்து என்ன ஆகுமோ ஏதாகுமோ என்று குழம்பியது.. தொடர்ந்து காமர்ஸ் சயன்ஸ் என்று பிரிந்தது.. நட்பு வட்டம் குறுகி விரிந்து குறுகி விரிந்து.. எங்கேயோ பட்டப் படிப்பு என்று மறைந்தது.. எங்கேயோ சுற்றி என்னவோ செய்து மீண்டும் குரோம்பேட்டைக்கே வந்தது..

சென்னையின் மாற்றங்களினூடே தன் வாழ்க்கை மாறியதை தினம் வியப்பது ரகுவுக்கு வாடிக்கையாகிப் போனது. எத்தனை நினைவுகள்! ஒவ்வொன்றிலும் ஒரு கதையெழுதலாம் என்று நினைத்துக் கொள்வான். பெரியவரின் கதை என்ன? நினைவுகளில் பெரியவரைத் தேட முயன்றுத் தோற்றான்.

    அன்று ரயில் நிலையத்துக்கு சற்று சீக்கிரமே வந்துவிட்டான் ரகு. பெரியவர் வழக்கம் போல் உட்கார்ந்து கொண்டிருந்தார். இன்று பேசி விடுவது என்று தீர்மானித்து, ப்ளேட்பாரம் கடந்து அவர் அருகே சென்றான். "ஹலோ சார்" என்றான். பெரியவர் பதில் சொல்லவில்லை.

ரகு விடாமல், "சார், நான் உங்களை தினம் இந்த இடத்துல பார்க்கிறேன். தப்பா நினைக்காதீங்க. நீங்க எங்க இருக்கீங்க? எதுக்காக இங்க வந்து உட்கார்ந்திருக்கீங்க தினம்?" என்றான். பெரியவர் பதில் சொல்லவில்லை.

சற்றுப் பொறுத்த ரகு தயங்கி, "சார்.. உங்களை நாலஞ்சு வாரமா பாத்துட்டிருக்கேன். இன்னிக்கு என்னவோ உங்களோட பேசியாகணும்னு தீர்மானிச்சு இங்கே வந்தேன். தொந்தரவுக்கு மன்னிச்சுருங்க" என்று விலகி நகர்ந்தான்.

"இங்கே தான்" என்றக் குரல் கேட்டுத் திரும்பினான்.

பெரியவர் அவனை நேராகப் பார்த்தார். "ஸ்டேஷன்ல தான் இருக்கேன். எந்த இடம்னு சொன்னா யாரானும் ஏதானு செஞ்சு எனக்குக் கஷ்டமாயிடும்.."

"என்ன சார் சொல்றீங்க? ஸ்டேஷன்லயா இருக்கீங்க?" ரகு திடுக்கிட்டான்.

"நான் சீனியர் சிடிசன். முதியவன். தீண்டத்தகாதவன். பழகத்தகாதவன். வாழத்தகாதவன். போகுற வயசாகியும் போகாத வயசுக்காரன். எப்படி வேணும்னாலும் கூப்பிடலாம். எனக்கு எல்லாமும் வீடு. எல்லாமும் காடு"

"மன்னிச்சுருங்க.. உங்களை பாத்தா.. நெவர் மைன்ட்.."

"என்னைப் பாத்தா என்ன? ஹோம்லெஸ்னு தோண மாட்டேங்குதா? வெல்கம் டு த ந்யூ வொர்ல்ட்... அதை விடுப்பா.. உன் பேர் என்ன? உன்னைப் பாத்தா அம்பது வயசிருக்கும் போலிருக்கு. இருந்தாலும் உன்னை நீ வானு சொன்னா கோவிச்சுப்பியா? ஐயம் செவன்டி செவன், யு ஸீ"

"அய்யோ.. அதெல்லாம் இல்லே சார்.. எனக்கு அம்பத்தஞ்சு... என்னை விட நீங்க ரொம்பப் பெரியவர்.. என்னை டா போட்டு வேணாலும் கூப்பிடுங்க" ரகு சற்று நெகிழ்ந்தான். "உங்களை இந்த நிலைல.."

"என் நிலைக்கென்னப்பா..?"

"இல்லே சார்.. நாலஞ்சு வாரத்துக்கு முன்னால புதுச்சட்டை போட்டுக்கிட்டு இங்க உக்காந்திருந்தீங்க.."

"சட்டை இப்போ பழசாப் போச்சுப்பா. உடம்பும் மனசும் என்னிக்கோ பழசாப் போயிடுச்சு. சில சமயம் பழைய சட்டையைக் கழட்ட முடியுது. சில சமயம் நாம கழண்டுக்கணும். அதுவரை பழைய சட்டை மாட்டிக்க வேண்டியது தான். எஸன்ஸ் ஆஃப் லைப்.. வாழ்க்கையின் சாரம்"

ரகு எதுவும் பேசாதிருந்தான். பெரியவர் தொடர்ந்தார். "பாவமெல்லாம் படாதேப்பா. இது நிதர்சனம். திஸ் டிபைன்ஸ் மி. இதோ இந்த அழுக்கான ஏகாந்தம் என்னை நான் விளக்கும் விளக்கம். யார் மேலாவது பாவப்படணும்னா தினம் கண்ணாடிலே பார்த்து பட்டுக்கப்பா.."

"என் பெயர் ரகு"

"அப்ப ரகுனே கூப்பிடறேன் சுருக்கமா" என்ற பெரியவரின் கண்களின் நக்கல் தொக்கியிருப்பதை இருப்பதைக் கவனித்தான். சற்று இருமலாகச் சிரித்தார். "ஊருக்குப் புதுசாப்பா?"

"இல்லே சார்.. இங்கேதான் வளர்ந்தேன்.. படிச்சு வெளியூர் போய்ட்டு பல வருஷம் கழிச்சுத் திரும்பி வந்தேன்.."

"ரொம்ப மாற்றம்... இல்லையா?"

"ஆமாம்" தலையாட்டினான். "உங்களை எங்கேயோ பார்த்திருக்கேன்.. ஆனா ஞாபகம் வர மாட்டேங்குது"

பெரியவர் தயங்காமல், "நீ யாருனு எனக்குத் தெரிஞ்சு போச்சுப்பா" என்றார்.

"சொல்லுங்க சார்.. என்னைத் தெரியுமா? ஐ ஹவ் பீன் ட்ரையிங் ஹார்ட் டு ப்லேஸ் யு"

"கீப் ட்ரையிங்"

கைக்கடிகாரத்தைப் பார்த்த ரகு, "சார்.. மறுபடி கேக்கறேன்னு தப்பா நினைக்காதீங்க.. உங்களுக்கு வீடு இல்லையா? பிள்ளை பெண் யாரும்..."

"எதுக்கப்பா அதெல்லாம்? அவசியம்னா இன்னொரு நாள் பேசலாம்.. உன் ட்ரெயின் வருது பார்" என்று சுருக்கென்று எழுந்து கொண்டார் பெரியவர்.

"தப்பா கேட்டிருந்தா மன்னிச்சிருங்க சார்.. கண்டிப்பா இன்னொரு நாள் பேசலாம் சார்.. நான் அடுத்த ரயிலைப் பிடிச்சுக்குறேன்" மெள்ள நகர்ந்தான் ரகு.

    அதற்குப் பிறகு அடிக்கடி அவருடன் பேசத் தொடங்கினான் ரகு. எதையும் நேராகச் சொல்லாவிட்டாலும் பெரியவர் நிறைய விவரங்களைப் பகிர்ந்து கொண்டதே ரகுவுக்குப் போதுமென்றிருந்தது.

பெரியவர் குரோம்பேட்டையைச் சேர்ந்தவர். பெரிய வேலையில் இருந்தவர். ந்யூ காலனியிலோ ராதா நகரிலோ வீடு இருந்தது. பிள்ளைகள் நன்கு படித்து பெரிய வேலைக்குப் போனவர்கள். பெண் சில வருடங்களுக்கு முன் மார்பில் புற்று நோய் வந்து இறந்து விட்டாள். பெண் வயிற்றுப் பேரனின் ஒரு சிறிய கசங்கிய போட்டோ காட்டினார். ரகுவுக்கு ஏதோ பொட்டிலடித்தாலும் பிடிபடவில்லை. ஓய்வு பெற்ற அடுத்த வருடமே மனைவி இறந்து விட, சில வருடங்கள் காசி, ரிஷிகேஷ், ஹரித்வார், மானசரோவர், கைலாஷ் என்று சுற்றிவிட்டு வீடு திரும்பினால்... தன் அறையை ஒழித்து விட்டிருந்தான் மகன். பதிலுக்கு ஹாலில் ஒரு தடுப்பு போட்டு படுக்கை போட்டிருந்தான். பெரியவர் எதுவும் சொல்லாமல் ஏற்றுக்கொண்டார். குரோம்பேட்டையில் வீட்டு விலைகள் ஆகாயத்தைக் கிழிக்க, பையன்களின் தொந்தரவின் பேரில் வீட்டை விற்றுக் காசாக்கி மகன்களுக்கு வீடோ மனையோ வாங்கப் பகிர்ந்து கொடுத்தார். ஒவ்வொரு மகனுடனும் சில மாதங்கள் தங்குவதாக ஏற்பாடு. சில வருடங்களுக்குள் மகன்கள் தத்தம் குடும்பக் கவனத்தில் இவரைக் கவனிக்காமல் விட்டனர். மனைவியிழந்து தனிமையில் இருந்தவரை ஒதுக்க இவருக்கு ஏற்பட்ட வெறுப்பில் உடனிருந்தவர்களுக்கும் வெறுப்பூட்டினார். மகன்கள் இவரை முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். திடீரென்று மாப்பிள்ளை ஒரு விபத்தில் இறந்து விட, முதியோர் இல்லத்திலிருந்து விலகிப் பெண் வீட்டில் பெண்ணுக்கும் வளரும் பேரனுக்கும் துணையாகத் தங்கினார். வாழ்க்கை மிதமான மகிழ்ச்சியுடன் துளிர்விட, பெண்ணுக்கு மார்புப் புற்று நோய் வந்த நிலையில் பேரப்பிள்ளையைக் கவனிக்கும் வேலையில் முனைப்பாக இருந்தார். நான்கு வருடங்கள் போல் அவதிப்பட்ட பெண் இறந்துவிட, வளர்ந்த பேரனுடன் சில காலம் இருந்தார். பேரன், "க்ரேம்ப்ஸ்.. நான் படிக்க வெளிநாடு போறேன்.. இந்த வீட்டை விற்கப் போறேன். நீ எங்கயாவது மாமாவுடன் போய்த் தங்கிக்கயேன்? ஐ வில் கிவ் யு சம் மனி" என்று சொல்ல.. மறுபடி ஒவ்வொரு மகன் வீட்டுக்கும் போனவர் அதிக நாட்கள் தாக்கு பிடிக்க முடியவில்லை. சென்னையிலிருந்த ஒரே மகன் அவரை வீட்டுக்கு வர வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்ள.. மறுபடி முதியோர் இல்லம். இடையில் முதியோர் இல்லத்துக்கு யார் பணம் கட்டுவது என்று மகன்களுக்குள் சச்சரவு வந்து ஒரு மாதம் பணம் கட்டாமல் தவறிப் போக... இரண்டாம் இரவில் முதியோர் இல்லத்திலிருந்து நழுவி குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார்.

"ஸ்டேஷன்ல தங்கியிருக்காருனு சொல்றாரே தவிர விவரம் சொல்ல மாட்டேங்கறாரு ரமா" என்றான் ரகு மனைவியிடம். "பாவமா இருக்கு"

"சும்மா இருங்க. இதெல்லாம் பாவம்னு பாக்க முடியாது. அவங்கவங்க வாழ்க்கை அவங்களுக்கு. ஹி குட் ஹெவ் லிவ்ட் வித் ஹிஸ் சில்ரன். "

"என்ன இப்படி பேசுறே ரமா? அவரோட பசங்க அவரை எப்படி ட்ரீட் பண்ணினாங்க பாத்தியா?"

"யாரு அவரை வீட்டை வித்து பசங்களுக்கு தானம் பண்ணச் சொன்னது? ஹி ஷுட் னோ இல்லையா? இந்தக் காலத்துல எல்லாரும் அறுபது எழுபது வயசு சாதாரணமா இருக்குறப்ப அவங்க தானே அவங்க பராமரிப்புக்கான பாதுகாப்பைச் செய்யணும்? இந்தக் காலத்துலயும் பசங்க செய்யணும்னு எதிர்பார்க்க முடியுமா? அந்தக் காலத்துல அவங்க அப்பாம்மா கூட்டுக் குடும்பம்னு இருந்தாங்கனா வெல் அண்ட் குட். இன்னும அதையே எதிர்பார்த்தா எப்படி? அவரோட பசங்க அவரை ஒண்ணும் தப்பா ட்ரீட் செஞ்சாப்புல தோணலிங்க. யாருக்குத் தெரியும்? வயசானா அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்காம ஹி மைட் ஹவ் பின் எ ப்பெஸ்ட். சும்மா தொணதொணனு எங்க தாத்தா பேசிட்டேயிருப்பாரு.. இது குத்தம்.. அது சொள்ளை.. அந்த மாதிரி ஆளா இருந்திருப்பாரு"

"பாவம் பார்க்கக் கூடாதுனு சொல்றியா?"

"இருக்குற பாவத்தைப் பார்க்கவே நேரமில்லே.. அடுத்தவங்களைப் பாவம் பார்த்து பயன் இல்லேனு சொல்றேன். அடுத்த ஜெனரேஷனுக்குக் கவலையில்லே. நம்ம ஜெனரேஷனும் எதிர்பார்ப்பில்லாம முதியோர் இல்லம் அப்படி இப்படினு போயிருவோம். நமக்கு முந்தைய தலைமுறைல அப்பா அம்மா மாமா அத்தைனு இருக்காங்க பாருங்க.. ரொம்ப கஷ்டம்., அதுக்காகப் பாவம் பார்த்தா நமக்குத்தான் கஷ்டம். பாவம்னு பார்த்து பார்த்து என்ன செய்வீங்க? ஹவ் லாங்க் வில் யு பி வொரீட்?"

"அவரை இதுக்கு முன்னால நான் நிச்சயமா பாத்திருக்கேன். யு னோ, ஹி ரெகக்னைஸ்ட் மி. எனக்குத்தான் அவரைப் பிடிபடலே? தெரிஞ்ச மனுஷன்னு உள்ளுக்குள்ள முள் குத்துது ரமா.. அவருக்கு ஏதாவது உதவி செய்யணும்னு நினைக்கறேன்"

"அதனால? சும்மா இருங்க ரகு. எதுனா செஞ்சு தெருக் குரங்கை தலையில ஏத்திக்காதிங்க""

"ஒரு மனிதம் இன்னொரு மனிதத்துக்கு செய்யுற உதவி.. சக மனிதர் மேல ஒரு அக்கறை.. அவ்வளவுதான்"

"வேர் வில் திஸ் ஸ்டாப்? உங்க உதவியை அவர் ஏத்துகிட்டு மேலே எதிர்பார்த்தாருனா? உங்களால தொடர்ந்து உதவ முடியுமா?"

"ஐ டெல் யு வாட். ஜாயலுக்காஸ் தங்கப் புதையல் அதிர்ஷ்டக் குலுக்கலுக்கு ரெண்டு டிகெட் வாங்கச் சொன்னே இல்லே? என் பரிசுச்சீட்டை அவருக்குக் குடுத்தா உனக்குப் பரவாயில்லையா? இட் இஸ் நாட் மனி"

"வாட் நான்சென்ஸ்!. பரிசு விழுந்தா இருபது பவுன் தங்கம்! டேமிட், இட் இஸ் மனி. ஒரு டிகெட் ஆயிரம் ரூபாய்னு வாங்கியிருக்கோம். எனி வே, உங்க டிகெட்டை என்ன வேணும்னாலும் செஞ்சுக்குங்க. ஆனா, டிகெட் குடுக்கறதுக்கு பதிலா பணமா கொடுத்தா பிச்சைக்காரனுக்கு உதவியா இருக்கும்.."

"பி சென்சிடிவ் ரமா.. பிச்சைக்காரன்னு எப்படி கூசாம பேசுறே?"

"ஓகே, லெட் மி ஸி. வீடு வாசல் கிடையாது, பிள்ளைங்க துரத்திவிட்டாங்க, ஸ்டேஷன்ல படுக்குறாரு, ஒரே சட்டையை ஒரு மாசத்துக்கு மேலே போட்டிருக்காரு.. ஸ்மெல்ஸ் லைக் ஷிட். மஸ்ட் பி ஷிட்.."

"மை குட்னஸ்! நீயா இப்படி பேசுறே?" ரகுவுக்குக் கோபம் வந்தது. கோபம் வந்தால் தம்பதிகள் உடனே ஒருவரை விட்டு விலகி சிறிது தனிமை தேடுவது பழகிப்போய், சட்டென்று அறையை விட்டு விலகினான்.

சிறிது பொறுத்து அவனருகே வந்து, "புண்படுத்திட்டனா? சாரி" என்றாள். மனைவியின் இடுப்பை இழுத்துக் கொண்ட ரகு, "நீ ப்ரேக்டிலா பேசினது என்னோட ஐடியல் மனசுக்குப் பிடிக்கலே.. நீ சொல்றாப்புல இது தெருக் குரங்குனாலும்... ஏன்னு தெரியலே எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு"

"டெல் யு வாட்.. பரிசுச் சீட்டுக்குப் பதிலா பத்தாயிரம் பணம் கொடுப்போம்.. ஓகே?"

"இல்லே ரமா. பணம் கொடுத்தா வாங்க மாட்டாரு. பரிசுச் சீட்டைக் கூட வேண்டாம்னுவாரு. எனி வே, கல்கத்தா செமினார் போயிட்டு அடுத்த வாரம் திரும்பி வரேன்ல.. வந்தப் பிறகு அவர் கிட்டே பணமோ டிகெட்டோ கொடுக்கறேன்.. வாங்கிட்டா சரி, இல்லின்னாலும் சரி.."

"அதுக்குள்ளே குலுக்கல் முடிவு தெரிஞ்சுடும். ட்ரா ஒண்ணாம் தேதி. உங்க டிகெட்டை தான் தரதா சொல்லியிருக்கிங்க நினைவுல வைங்க" என்றாள். "இதோ, ரகுனு உங்க பெயரை பென்சில் செஞ்சிருக்கேன் பாத்துக்குங்க.."

    கல்கத்தா மேனேஜ்மென்ட் ஸ்கூல் செமினாரில் இந்தியப் பெண்களின் மேலாண்மைத் திறனை உயர்த்தும் வழிகள் பற்றி ரகு பேசுகையில் செல்போன் ஒலித்தது. பேச்சை முடித்துக் கொண்டு அழைத்தவரை அழைத்தான். "என்ன ரமா?"

"ரகு.. உங்க சீட்டுக்குப் பரிசு விழுந்திருக்கு. இருபது பவுன் தங்கம்".


[தொடரும் சாத்தியம்: 90-100%]

2014/10/31

இன்று போல் என்றும்



    நீண்ட நாட்களாகவே இதை எழுதியாக வேண்டும் என்ற வேகம் இருந்து வந்தது. நானறிந்த பெரும்பாலோர் எழுதிவிட்டார்கள். great mind கீதா சாம்பசிவம் அவர்களும் எழுதிவிட்டார்கள் என்றதும் 'அடடா, நம்மை முந்திக்கொண்டார்களே! உடனே எழுத வேண்டும்' என்று எண்ணினேன். கீதா அவர்கள் எழுதி சில மாதங்களாகிவிட்டன.

மேற்கண்ட வரிகளை எழுதி ஒரு மாதமாவது இருக்கும் :-).

எழுத வேண்டியக் கட்டாயம் எதுவுமில்லை. அவசியம் சிறிது உண்டு. தேவை மிக உண்டு. கட்டாயம் அவசியம் தேவைக்குமான வேறுபாடுகளை ஒட்டி வம்படிக்க ஜீவி அவர்களின் பூவனத்துக்குப் பின்னூட்டமிட வாருங்கள். சொல் விளையாடலாம்.

அப்படி எதைப் பற்றி யாரைப் பற்றி எழுத வேண்டிய தேவை? என்ன அவசியம்?

வை.கோபாலகிருஷ்ணன் அவர்களைப் பற்றித்தான். தேவைக்குப் பிறகு வருகிறேன். முதலில் அவசியம்.

ஒரு வருடம் போல் சிறுகதை விமரிசனப் போட்டி நடத்தி வருகிறார் கோபாலகிருஷ்ணர். விமரிசனப் போட்டி என்று எண்ணினால்... எங்கள் பிளாக் தவளைக்கதைப் போட்டி விதிகள் போல... இடையிடையே அடிக்கடி நினைத்த மாத்திரத்தில் உபரி போட்டிகள் விதிகள் பரிசுகள் என்று அமர்க்களப்படுத்தி விட்டார். பரிசுகளிலும் ஒரு இனியக் குழப்படி. ஒரு அளவைக்கு ஒரு பரிசு என்று இல்லை - மூன்று இடங்களுக்கு எட்டு பரிசுகள் தருவார் சில நேரம். [லாட்டரிச்சீட்டுக் காரர்கள் இவரிடம் கொஞ்சம் கற்றால் எனக்கும் ஏதாவது பரிசு கிடைக்கலாம்]. முத்தான பரிசு, இனிப்பான பரிசு என்று அடைமொழியோடு வழங்குவது போதாமல் ஹேட் ட்ரிக், டபுல் ஹேட் ட்ரிக், ட்ரிபில் ஹேட் ட்ரிக் என்று ட்ரிக் மேல் ட்ரிக் செய்து பரிசு வழங்கி வருகிறார்.

போட்டி, பரிசு என்று அமர்க்களப்படுத்தியது ஒரு புறம் இருக்கட்டும். இதன் பின்னே புலப்படாது புலப்படும் ஒழுங்கும் சீரும் கவனிக்கப்பட வேண்டியவை. பாராட்டுக்குரியவை.

நடுவர் போல் ஓரிருவர் பின்னணியில் இருந்தும், இது தனி மனித உழைப்பு, சாதனையென்றே கொள்கிறேன். தனி மனிதராக வை.கோவின் உழைப்பு மலைக்க வைத்தது. வைக்கிறது. விமரிசனப் போட்டிக்கான அறிவிப்பு, உறுத்தாத தொடர் நினைவூட்டல், விமரிசனம் வரப் பெற்றதற்கான உடனடி அஞ்சல், பரிசு கிடைப்பதாக இருந்தால் மர்மமான முன்னறிவிப்பு, பரிசு விமரிசனங்களை ஒவ்வொன்றாகப் பிரம்மாண்டமான முறையில் பதிவிடல் (இராஜராஜேஸ்வரி அவர்கள் மட்டுமே படம் அனிமேஷன் என்றுத் தேடித்தேடிச் சரமாகத் தொகுத்துக் கொண்டிருந்தார் - அதற்கே அவருக்கு எங்கிருந்து நேரம் கிடைக்கிறது என்று நினைத்ததுண்டு. கோபாலகிருஷ்ணர் நாலு படி மேலே போய்விட்டார்), பதிவுகளைத் தொடர்ந்து 'காணத் தவறாதீர்' அறிவிப்புகள், பரிசுக்கணக்கு விவரங்கள்... இவை எல்லாம் பிறழாதிருக்க ஒரு நாளைக்கு பத்து மணி நேரமாவது உழைக்க வேண்டியிருக்கும்.. இவற்றுக்கும் மேலாக பரிசுகளைக் கிரமமாக வழங்குவதற்கான விதிகள், ஒழுங்குகள் பற்றிய விடாத் தொடர்பு...

முடிந்ததா என்று பார்த்தால் விமரிசனப் போட்டி நிறைவு விழா என்று வரிசையாக அறிவிப்புகள்.

எங்கிருந்து வருகிறது இவருக்கு இத்தனை உற்சாகம்? அவர் வீட்டு ஜன்னல் பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன் - அதற்கு இத்தனை சக்தி கிடையாது என்று எனக்குத் தெரியும். இத்தனை உழைப்புக்கும் முனைப்புக்கும் இவருக்கு எங்கிருந்து நேரமும் தெம்பும் கிடைக்கிறது என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.

இந்த போட்டியினால் இவர் உழைப்புக்கும் முனைப்புக்கும் மீறிய மிக மிகுந்த மாபெரும் நிறைவு, கோபாலகிருஷ்ணருக்குக் கிடைக்கட்டும்.

தேவைக்கு வருகிறேன்.

விமரிசனப் போட்டி பற்றிப் படித்ததும், 'இது என்ன இவருடைய கதையைப் படிக்க வைக்க இப்படி ஒரு தந்திரமா?' என்று தான் நினைத்தேன். முதல் சில கதைகளின் விமரிசனங்களைப் படித்ததும் அவை கதையைப் படிக்கத் தூண்டியதும் நிஜம். கதை தக்கூண்டு என்றால் விமரிசனங்கள் எல்லாம் பி.எச்டி பட்டத்துக்கான தீஸிஸ் போல எழுதப்படுவதைப் பார்த்து நடுங்கிப் போனேன். இந்த விமரிசனங்களினால் வை.கோவுக்கு என்ன பலன்? இவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறார்? இது போன்ற கேள்விகள் தோன்ற, அவரையே கேட்டும் விட்டேன். அவர் சொன்ன சுவாரசியமான பதிலை அவர் பதிவிலேயே படியுங்களேன்?

சில கதைகளுக்கான விமரிசனங்களை எழுதத் தொடங்கி, பாதியிலேயே நிறுத்தியிருக்கிறேன். எழுதிய சிலவற்றை கெடுவுக்குள் அனுப்ப மறந்திருக்க்கிறேன். சமீப விமரிசனம் ஒன்றை பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் பரீட்சை போல அவசர அவசரமாக எழுதி பிழை திருதத்மால் அவருக்கு அனுப்பி வைத்தால், கெடுவுக்கு ஒரு நாள் முன்பே அனுப்பி வைத்ததாகச் சிரித்தார் கோபாலகிருஷ்ணர். அப்படி என்னை மாற்றிய போட்டி என்பேன்.

வை.கோவுக்கு என்ன பலன் கிடைத்தது என்ற கேள்வி இருக்கட்டும். நான் என்ன கற்றேன்?
  1. கதை எழுத ஆழமான கருவோ திருப்பங்களோ தேவையில்லை.
  2. அரை வரி கருவை வைத்துக்கொண்டு எளிமையாகவும் சுவாரசியமாகவும் கதை எழுத முடியும்.
  3. கதை எழுதுவதை விட விமரிசனம் எழுதுவது கடினம்.

இந்த அனுபவத்துக்கு வித்திட்ட வித்தகர் கோபாலகிருஷ்ணருக்கு நன்றி.

இடையில் வந்த நடுவர் யாரென்ற போட்டி சுவை கூட்டியது. க்ரேட் மைன்ட் கீதா அவர்கள் சட்டென்று கண்டுபிடித்து விட்டார். எனக்கு ஒரு சொல் தேவைப்பட்டது - உறுதிப் படுத்திக் கொள்ள. ஜீவி அவர்களால் அந்தச் சொல்லைப் பயன் படுத்தாமல் இருக்க முடியாது என்ற கணிப்புக்கு வந்திருக்கிறேன். ஒரு வருடமாக இந்தப் போட்டிக்கு நடுவராக, அத்தனை விமரிசனங்களையும் படித்து அவ்வப்போது பின்னூட்டங்களும் எழுதி வந்தமைக்கு அவருக்கும் ஒரு சிறிய நன்றி.

விமரிசனம் எழுதியும் பின்னூட்டங்கள் எழுதியும் பங்கு பெற்ற அத்தனை பேருக்கும் நன்றி. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அடுத்து வை.கோ அவர்கள் நடத்தப் போகும் போட்டி என்னவாக இருக்கும்?

முதலில் அவர் விமரிசனம் எழுதிவிடுவார். அவர் எழுதிய விமரிசனத்துக்கேற்ப பிறர் சிறுகதை எழுத வேண்டும். இதுவே போட்டி.

சொல்ல முடியாது, செய்தாலும் செய்வார் கோபாலகிருஷ்ணர். நடுவர் பாவம்.

2014/10/18

அப்பாதுரைக்கு வந்த நகசுத்தி


    நான் என் பாட்டுக்கு இமெயில் பாத்துட்டிருக்கேன். திடீர்னு 'நலந்தானா?'னு தில்லானா மோகனாங்கி ஸ்டைல்ல ஒரு இமெயில். யார் அனுப்பினாங்கனு பார்த்தா மோகன்ஜினு இருக்குது!

மோகன்ஜியை தெரியாதவங்க இருந்தா ஒரு இன்ட்ரோ. மோகன்ஜி இருக்காரே மோகன்ஜி... அதான் இருக்காருனு தெரிஞ்சு போயிடுச்சே பிறகென்ன இழுப்பு... இவரு வருஷத்துக்கு ஒரு பதிவு எழுதுவாரு. அதுக்கே அவருடைய ரசிகக் கூட்டம், 'தலைவர் ஒரு பதிவு எழுதுனா ஆயிரம் பதிவு எழுதின மாதிரி'னு பிகிலடிப்பாங்க. (என்னை மாதிரி ஆளுங்க மாஞ்சு மாஞ்சு எழுதினா இபிகோனு மிரட்டுறாங்க. தலைவிதி பாருங்க).

எனக்கு அனுப்பின இமெயில் மோகன்ஜி எழுதினதுதான்னு எப்படி கண்டுபிடிக்கிறது? சமீபத்தில் வவ்வால் அவர்கள் இன்னொருத்தர் பெயரில் பின்னூட்டமிட முடியும்னு நிரூபிச்சுக் காட்டினாரு. (என் பெயரில் பின்னூட்டம் போட்டு அசத்திட்டாரு). அந்த அனுபவத்துக்குப் பிறகு எல்லாத்தையுமே சந்தேக மூக்குடன் மோப்பம் பிடிக்கிறேன். என் பின்னூட்டமே நான் எழுதியது தானானு சந்தேகம் வருது. அந்த நடுக்கத்துல இவர் மோகன்ஜி தானா இல்லே வேறு யாராவது இவர் பெயரில் இமெயில் அனுப்புறாங்களானு சந்தேகம் வந்திடுச்சு. கொஞ்சம் விட்டு, கூடவே ஒரு கவிதை அனுப்புனாரு (கவிதைனு அவர் சொல்றாருங்க).

கவிதையை படிச்சதும் கொஞ்சம் தெஹிரியம். நிச்சயம் மோகன்ஜியாகத்தான் இருக்கணும்னு தோணிச்சு. பின்னே இப்படியெல்லாம் சிவகுமாரனா எழுதப் போறாரு?

'அண்ணாத்தே? என்ன ஆளையே காணோம்? ஒரு இமெயில் அனுப்பிட்டு வழக்கப்படி காணாமப் போய்டுவீங்களா? உங்களைக் காணாமப் பசலைப் பட்டது போதாதா? ஏன் திரும்பி வந்தீங்க?'னு சங்கமங்கை போல பதில் இமெயில் அனுப்பினேன். 'இல்லை இல்லை.. இனிமே காணாமப் போகமாட்டேன்'னு கீபோர்ட் அடிச்சு சத்தியம் செய்யாத குறையாச் சொன்னாரு.

எதுக்குச் சொல்றேன்னா... நல்லா எழுதுறவங்க, எழுதுறதை நிறுத்திக்கிட்டாங்கனா அது எழுத்துக்கு நஷ்டம்னு நான் நினைக்கறதுண்டு. மோகன்ஜி நல்லா எழுதுறவரு. அவரு திரும்ப எழுத வந்தா அதுவே தீபாவளி தான். வாங்க வாங்கனு சொல்லிக் கம்பளம் விரிப்போம், என்ன சொல்றீங்க? இதுக்கு பேரு மோஸ்தர் கவிதையாம். ஜோரா கை தட்டுவோம், என்ன சொல்றீங்க? மறுபடி இந்த மாதிரி கவிதை எழுதுனாருனா இலக்கிய போலீசு பாத்துக்கட்டும், நாம பத்தடி தள்ளீயே நின்னுக்குவோம், என்ன சொல்றீங்க?

இதோ, மோகன்ஜி எழுதியனுப்பின மோஸ்தர் கவிதை:

அப்பாதுரைக்கு வந்த நகசுத்தி




மோடி அமெரிக்கா வந்த நாளன்றே
அப்பாதுரைக்கு நகசுத்தி வந்திருந்தது.

வலது கை மோதிரவிரலில் அது குத்தலோடு குந்தியிருந்தது
அது வரும்வரை தனக்கு மோதிரவிரல்
ஒன்றிருப்பதே அவருக்கு தெரியாது.

அவரின் வலைப்பூவில் திங்களன்று
'கொக்கோக குமுறல்கள்' தொடங்க இயலாதது குறித்து
அவரிட்ட சிறுபதிவினாலேயே தான்
அனைவருக்கும் அது தெரிய வந்தது.

முதல்கருத்தாய் திண்டுக்கல் தனபாலனின்
'வாழ்த்துக்கள்' வந்தது

'நகசுத்தியும் நாகசக்தியும்' என்ற
ஆர்.வி.எஸ்ஸின் பேஸ்புக் பதிவுக்கு
ஆறாவது நிமிடமே 286 லைக்கும் 7 கமெண்டும் வந்தன.
அதற்கு பத்மநாபன் லைக் போட முனைந்த போது
ஐபாட் ஷட்டவுன் ஆகி முடியாமல் போனது.

நகசுத்தி குறித்து பதிவுபோட ஆதிரா உறுதிபூண்டார்

எலுமிச்சம்பழம் விரலில் சொருக
கீதாசந்தானம்,கோமதி அரசு மற்றும் ஶ்ரீராம்
யோசனை சொன்னார்கள்

கூரியரில் நிலாமகள் அனுப்பி வைத்த எலுமிச்சம்பழம்,
முப்பாத்தம்மன் கோவில் பிரஸாதம் எனத் தெரியாமல்
அதை அப்பாதுரை சொருகிக்கொண்டார்.

அகத்திக்கீரை சூப் ஆறுநாள் சாப்பிடச்சொன்ன சுந்தர்ஜி,
'நகஸ்ய கருணா நாஸ்தி நாகஸ்ய பயானகம் ' என்று
ஏதோ சொன்னது சற்று கலவரமாய் இருந்தது.

நகசுத்தியை 'படுவம்' என்பார்களென்றும்
தாங்கமுடியாத்து தான் 'படுவ வலி' என்றும்
அறிவன் பகிர்ந்தார்.
அதை 'பருவ வலி' என்று படித்துக்கொண்டபோது
அப்பாதுரைக்கு வலியே தெரியவில்லை.

மர்லின்மன்றோவுக்கும் நகசுத்தி வந்த கதையை
மோகன்ஜி சொன்னதன் கவர்ச்சி,
அப்பாதுரையின் அயர்ச்சிக்கு ஆறுதலானது

'கொக்கோக குமுறல்கள்' ஏதேனும்
தெய்வக்குத்தமாக இருக்குமோ என்ற
சுப்புத்தாத்தாவின் பின்னூட்டத்தை
பத்து பதிவர்கள் ஆமோதித்தார்கள்

'விரலுக்கு அதிகவேலை கொடுக்காதீர்கள்' என்ற
அனானியின் கரிசனத்தில்
டபுள்மீனிங் சாத்தியக்கூறுகள் இருப்பதாய்
அப்பாதுரைக்கு பட்டது

நகசுத்திக்கு 'நாக காந்தாரி'அல்லது 'காமவர்தினி' ராக
கீர்த்தனங்கள் சுகம் தருமே என்றார் மூவார்முத்து.
அதற்கு
'உண்மை' 'இருக்கலாம்' 'எதற்கும் கேட்டுப்பார்த்து விடுங்களேன்'
என்று முறையே
ரிஷபன்,வை.கோ,வெங்கட்நாகராஜ் தெரிவித்தார்கள்.

'நகசுத்திக்கு இலக்கியத்தில் சான்று உண்டா அண்ணா?' என்ற
சிவகுமாரன் கேள்விக்கும்,
'ஏன் அண்ணா நகசுத்தி நகத்திலேயே வருது?' என்ற
ஹேமாவின் கேள்விக்கும் பதிலை,
தனிஅஞ்சலில் அனுப்புவதாய் மோகன்ஜி சொன்னார்.

மருந்து போட்டாலும் மாங்காய் சொருகினாலும்
ஆறுநாள் இருந்துவிட்டு தன்னால் போகும் என்று
காஸ்யபன்சார் பின்னூட்டம் வந்தநாளில் வலிகுறைந்து
எலுமிச்சம்பழத்தை எடுத்து விட்டார் அப்பாதுரை.

வெட்கி சிவந்து குன்றியிருந்த விரலைப்பார்த்து
'ரிலாக்ஸ் மேன்' என்றார் வாஞ்சையோடு.
கையோடு அந்த விரலுக்கு
'அமெதிஸ்ட் சுகந்தி' கல் பதித்த
மோதிரம் போடுவதாய்
அதிவீர ராம பாண்டியருக்கு**
வேண்டிக்கொண்டார்

(**ஆண்ட்ரூ கார்னகி என்றும் பாடம்)

2014/10/11

உளமளவாமுலகளவும்


    ருக்குப் போயிருந்தேன்.

முதல் நாள், வழக்கம் போல் பொழுது போனதே தெரியவில்லை. இரண்டாம் நாள், வழக்கம் போல் பொழுதே போகவில்லை. "ஏண்டா இப்டி இருப்பு கொள்ளாம அடைபட்ட மூஞ்சூராட்டம் சுத்தி சுத்தி வரே?" என்றார் பாட்டி.

பாட்டியைப் பார்த்தேன். அவரும் அடைபட்ட மூஞ்சூரு போலத்தான். அவருக்கு நூறு வயதாகிறது. ஆறு தலைமுறை சந்ததிகளைப் பார்த்திருக்கிறார். எத்தனை ஜனனம் எத்தனை மரணம் எத்தனை விவாகம் எத்தனை துக்கம் எத்தனை கேலி எத்தனை குதூகலம் எத்தனை இன்பம் எத்தனை துன்பம் எத்தனை நோய் எத்தனை இழப்பு எத்தனை மழலை எத்தனை மூப்பு எத்தனை வெற்றி எத்தனை ஏமாற்றம்... "எல்லாரும் போயிண்டிருக்கா.. நான் இன்னும் குத்துக்கல்லாட்டம் உக்காந்துண்டு... போக மாட்டேங்கறேனே?!" என்று ஆயாச மூச்சு விட்டபடி, தளர்ந்து போன உடற்கூட்டுக்குள் அடங்காத அனுபவச் சுமையுடன் தடுமாறிச் சுற்றி வரும் எலி, என் பாட்டி. பாட்டியைப் நினைத்தால் இறுக்கமாகவும் வருத்தமாகவும் இருந்தது. எத்தனை கோடி துன்பம் வைத்தாய் இறைவா!

"போரடிக்குதே.." என்றிழுத்தேன் பொதுவாக.

"ஏண்டா.. உன் ப்ரண்டு யாரோ ஒருத்தர் இங்கே எங்கியோ இருக்கார்னு சொல்வியே? அவரைப் பாத்துட்டு வாயேன்?"என்ற குரல் கேட்டுத் திரும்பினேன்.

இது போன்ற மிகத் தெளிவான கருத்துக்களைத் தாராளமாகவும் ஏராளமாகவும் அள்ளி வீசக்கூடிய நானறிந்த இருவரில் ஒருவர், என் அம்மா.

"எப்படிம்மா உன்னால் முடியுது?" என்றேன்.

"அதாண்டா.. சமூக உபன்யாசம் பண்றேன் பேர்வழினு அசடாட்டம் எதையாவது சொல்வாரே.. உன் ப்லாக்ல கூட எழுதுவாரே.. அசுவத்தாமன்? அவர் ஒப்பிலியப்பன் கோவில் கிட்டே இருக்கார்னு சொல்வியே? பாத்துட்டு வரதுதானேனு கேட்டேன், இது கூட புரியலையா?"

போலியாக வியந்து, "ப்ச.. அவரா..?" என்றேன். சொல்லும் பொழுதே அவரைச் சந்திக்க எண்ணினேன்.

"உனக்குத் தெரியுமோ? அவரை யாரோ நாலஞ்சு பேர் சேர்ந்து நன்னா அடிச்சுப் போட்டுட்டாளாம். பேப்பர்ல எல்லாம் வந்துது" என்றார் அம்மா.

"என்னமா சொல்றே? என்னாச்சு?"

"சரியா தெரியலடா. சும்மா இருக்காம எந்த வம்பை விலைக்கு வாங்கினாரோ யார் கண்டா? உன் ப்ரண்டு தானே?"

"சரி.. நான் போய் பார்த்துட்டு வரேன்" என்று ஆயத்தமானேன். என் வட்டம் எல்லாம் வம்பிழுக்கும் காந்தம் போலப் பார்த்த அம்மாவிடம் வேறேதும் சொல்லத் தோன்றவில்லை.

"வரப்போ கும்மோணத்துல கொஞ்சம் காய்கறியும் உதிரிப்பூவும் வாங்கிண்டு வரியா?. ப்ரண்டைப் பாக்கறச்சே அப்படியே கோவிலுக்குள்ளே அடி வச்சுட்டு வா, ஒண்ணும் குறைஞ்சு போயிடமாட்டே"

"ரைட்டு" என்று விலகினேன்.

கும்பகோணம் பஸ் பிடிக்க ஆடுதுறை கலைஞர் பேருந்து நிலையத்துக்கு வந்தேன். எதிரே 'அம்மா'வின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்த சுமார் முப்பது பேரில் பலர், பக்கத்து ரகுராம விலாசிலிருந்து வந்த இட்லி மசால்வடை பொட்டலங்களைக் கவர்ந்து கொண்டு பின் வரிசைக்கு மறைவாக நகர்ந்து கொண்டிருந்தனர். "நீதி தேவதைக்கு தண்டனை தர நீ யார் என்று நான் கேட்கிறேன்?" என்று யாரையோ கேட்டுக் கொண்டிருந்த சில்லறைப் பேச்சாளரின் கண்கள், பொட்டலத்துக்குத் தாவித் திரும்பின. பஸ் வர, ஏறிக்கொண்டேன்.

ஒப்பிலியப்பன் கோவில் பக்கம் போய் வருடக்கணக்காகிறது. எல்லாமே கல்லென்று தீர்மானமாகத் தெளிந்துவிட்ட நிலையில் கோவில்களின் அமைதி, அதிலும் சில கோவில்களின் அமைதி மட்டுமே எனக்குப் பிடிக்கிறது இப்பொழுதெல்லாம்.

திருநாகேசுரத்தில் ஈயடிக்கும், போவேன். திருவிண்ணகரத்தில் கொஞ்சம் கூட்டம் இருக்கும். அதனால் போவதில்லை. ஒப்பிலியப்பன் கோவில் அசுவத்தாமருக்குப் பிடிக்கும். அவரைப் பார்க்கப் போனால் கோவில் ட்ரிப் நிச்சயம். அத்தோடு போகிற வழியில், "ஆஸ்திகன் நாஸ்திகன் எல்லாம் நமக்காக்கும். ஜகன்மாதாவுக்கும் ஜகப்பிதாவுக்கும் தேவையில்லைணா. மிஸ்டர் ஒப்பிலியப்பனுக்கு இதெல்லாம் டோன்ட் கேர் தெரியுமோ? ஆஸ்திகமாவது நாஸ்திகமாவது? இதெல்லாம் தர்க்கத்துக்கான அந்தஸ்து முத்ரைகள். ஸ்டேடஸ் ஸிம்பல்ஸ் பார் இன்டெலெக்சுவல் வேனிடி யு நோ? சர்வேஸ்வரனுக்கு இதெல்லாம் சின்னக்குழந்தை மூச்சா மாதிரி. அசூயையே பட மாட்டான். யு நோ ஸம்திங்? நீங்க அவனைப் பார்க்க வேண்டியதில்லை. அவனுக்கு உம்மைப் பார்க்கணும்னா ஹி வில் சம்மன் யு. தெனம் கோவிலுக்குப் போறவா லட்சக்கணக்குல இருக்கா. அதுல எல்லாரையும் அவனால பார்க்க முடியுமோ? முடியாது. ஹி டஸ் நாட் ஸீ எவரிபடி விஸிடிங் ஹிம். இவா என்னமோ க்யூல நின்னு அர்ச்சனை பண்ணிப் பாத்துட்டு வந்து, 'ஆகா திவ்ய தரிசனம் கிடைச்சது'னு கூத்தாடுவா. கஷ்மல ஸாகரம். இவா பாக்க வராங்கறதுக்காகவும் பெரிய பணத்துல சீட்டு வாங்கி அர்ச்சனை பண்றாங்கறதுக்காகவும் வொய் ஷுட் ஹி ஸீ தெம்? இந்த க்விட் ப்ரொ க்வோவெல்லாம் பகவானிடத்துல பலிக்குமோ? என்னத்தை சொல்றது?! இப்டி கண்மூடிப் போய்ட்டு வர லட்சத்துல பதினாயிரம் பேராவது உம்மை மாதிரி ஸ்கெப்டிகல் டைப்பு. நாலு அட்சரம் படிச்சு நாலு தேசம் பார்த்த கெத்துல கடவுள் கிடையாதுனு பாபுலர் டயலாக் விடறவா.. யு ஸீ.. இவாள்ல சில பேரை அவன் வரவழைக்கறான். ஹி வான்ட்ஸ் டு ஸீ, அவ்ளோ தான். இல்லேன்னா நீங்க சொன்னேளே போனவாட்டி காலேஜ்ல ஆள் எடுக்கப் போனப்போ அப்படியே அயோத்யா போய் ஸ்ரீராம பகவான் பாதம் பட்ட இடங்கள்ள நின்னதாச் சொன்னேளே..அதெல்லாம் உம்மைப் போல ஆசாமிகளுக்கு வாய்க்குமா? வாட் ஐ மீன் இஸ் சில குழந்தைகள் அப்பாம்மாவைப் பாக்க வரா. சில குழந்தைகளை அப்பாம்மா வரவழைச்சுப் பாக்கறா. ஹீப் ஆப் ஸ்டோன்னு நீங்க நெனச்சுண்டு வருவேள். லீப் ஆப் ஓன்னு அவன் நெனச்சுப்பான். நாமா போய் பார்த்தாலும், நம்மை வரவழைச்சு அவன் பார்த்தாலும் என்ன வித்தியாசம்? சர்வம் ஏகம்ணா" என்று ஒரு பிரசங்கம் செய்வார். பிரசங்கம் செய்யட்டும். பரவாயில்லை. என்னை ணா போட்டு பேசுவது எனக்குச் சங்கடமாக இருக்கும். என்னவோ இவர் என்னை விட இளையவர் போல.

கும்பகோணம் டவுன் பஸ் நிலையத்திலிருந்து அநியாயத்துக்குக் கேட்ட ஒரு ஆட்டோக்காரனிடம் பேரம் பேசி ஒருவழியாக அசுவத்தாமன் வீட்டுக்கு வந்தேன். செவ்வாய் கிரகத்துக்குப் போக ஒரு கிலோமீட்டருக்கு ஏழு ரூபாய் மட்டுமே ஆகும் இந்நாளில், ஆறு கிலோமீட்டருக்கு நூற்றைம்பது ரூபாயை அழுதேன். செவ்வாய் கிரகத்துக்குப் போனால் ஆட்டோவில் போகக் கூடாது என்றுத் தீர்மானித்தேன்.

"வாங்கோ வாங்கோ, வரணும்ணா" என்று வரவேற்றார் அசுவத்தாமன். மெலிந்திருந்தார். கண்களில் ஒரு அச்சம். உடலில் ஒரு தளர்ச்சி. வரவேற்றதற்கே வாயைப் பிடித்துக் கொண்டார். உட்காரச் சொன்னார். "காபி சாப்டறேளா? சன்ரைஸ் காபி. இல்லேன்னா பக்கத்துல பீமாஸ்லந்து மைசூர் போண்டா பைனாப்பிள் அல்வா எடுத்துண்டு வரச்சொல்லட்டுமா? பில்டர் காபியும் கொண்டு வருவான்" என்றார்.

"பீமாஸா? நான் பாக்கவேயில்லையே?"

"பக்கத்தாத்துக்காரர். ரிடையர்டு பப்லிக் வொர்க்ஸ் எஞ்சினியர். விடோயர். மாமி வைகுந்தலோகம் போனப்புறம், போன சந்தோஷமோ என்னமோ தெரியலே, நன்னாவே சமைக்கறார். நளபாகம் நாலு பேர் அனுபவிக்கட்டுமேனு, கேஷ் ஒன்லி டேக் அவே மீல்ஸ் டிபன்னு தெனம் ஆத்துலந்து சப்ளை பண்றார். ஏழெட்டு வாடிக்கை என்னை மாதிரி. பீமாஸ்னு நான் பேர் வச்சிருக்கேன். சித்த இருங்கோ" என்று செல்பேசி டிபன் காபி வரவழைத்தார்.

"ரொம்ப நாளாச்சு பாத்து.. இப்பல்லாம் ப்ரசங்கம் பண்றதில்லையா?" என்றேன்.

இல்லையென்று தலையாட்டினார். "ப்ரஸங்கம் பண்றதிலே. ப்லாக்ல எழுதறதில்லே. எதுவுமே பண்றதில்லே. எங்கயும் போறதில்லே. யதாஸ்தானம்னு இருக்கேன்"

"ஏன் சார்? உங்களுக்கு அடி பட்டுதுனு சொல்றாளே? அதனாலயா?"

"அடி படலைணா. இதென்ன மடியா விழுப்பா படறதுக்கு? அடிச்சு நொறுக்கிட்டா. நாலஞ்சு காலிப் பசங்க சேர்ந்துண்டு மொச்சு எடுத்துட்டா. திருடைமருதூர்ல ப்ரஸங்கம் பண்ணிட்டு ஆத்துக்கு வந்தேனா? பசியில்லை. முழுசா லங்கணம் வேண்டாம்னுட்டு ஒரு சுருள் காஞ்ச நாத்தங்கா ரெண்டு மோர் மொளகாவோட நாலு கரண்டி ததியன்னம் போட்டு சாப்டுட்டு, விஸ்ராந்தியா திண்ணைல படுத்துத் தூங்கிண்டிருந்தேன். திடீர்னு நாலு பேர் பரசுராமனாட்டம் வந்து என்னைத் தூக்கத்துல ரணப்படுத்திட்டுப் போய்ட்டா. உக்கார முடியலே. நிக்க முடியலே. அழ முடியலே. சிரிக்க முடியலே. ஆஸ்பத்திரில இருந்த அத்தனை பேண்டேஜும் தீந்து போற அளவுக்குக் கட்டுப் போட்டு, ஏழெட்டு மாசமா தெனம் தெரபினு வந்து, என்னை இந்த நிலமைல விட்டிருக்கா. இன்னிக்கு கை கால் அசஞ்சு கொஞ்சம் பேசறேன்னா ஏதோ ஒரு ஜென்மாந்த்ர புண்யம். ஹ்ம். என்னை மொத்தியெடுத்துட்டானா மொத்தியெடுத்துட்டாணா" என்று இரு சுழிகளை ஒரே வாக்கியத்தில் பயன்படுத்திப் பேசினார்.

"யார் செஞ்சா? என்ன ஆச்சு? போலீசுக்குப் போனேளா?" என்றேன்.

"போலீஸ்ல வந்து கேட்டா. ஆஸ்பத்திரிலே படுத்துண்டிருக்கச்சே வந்தா. அங்க வந்த ஒரு மீசைக்காரப் போலீஸ் கிட்டே இந்த மாதிரிடாப்பானு சொன்னேன்.. நேக்கு சத்ருக்கள் யாரும் கிடையாதுன்னேன்... ஆனா அவா என்னைப் பார்த்த பார்வை இருக்கு பாருங்கோ.."

"ஏன்?"

"ஓய் பெரியவரே..'வாயையும் சூத்தையும் வச்சுகினு சும்மா கெடக்கலாம்ல? உனுகின்னா லொள்ளு வேண்டிகிது இந்த வயசுல? பெர்சுனா இன்னா வேணா பேசுறதா? நீ பேதியாவுறதை நாங்கள்ளாம் பாத்துகிணு இருக்கவா? இன்னும் ரெண்டு தட்டாம விட்டானுவளே..'னு நாக்கூசாம நாராசமா பேசிட்டுப் போறான்! என்ன பண்றதுணா.. இதெல்லாம் ப்ராரப்தம்னு விட்டுட்டேன்"

சுவாரசியமான விஷயம் போலிருந்தது. "என்ன ஆச்சு சொல்லுங்களேன்?" என்றேன்.

"சொல்றதுக்கு என்ன? சொல்றேன் சொல்றேன். இதையெல்லாம் ப்லாக்ல எழுதவேண்டாம்ணா..புரியறதா?"

"சொல்லுங்க"

"திருடைமருதூர்ல ப்ரசங்கம்னேன் இல்லையா? நம்ம கோவில் ஸ்தல புராணங்கள் பத்தின உபன்யாசம். நேக்குத் தெரிஞ்சதைச் சொல்வோம்னு போயிருந்தேன்" என்றபடி கால்களை நீட்டிக் கொண்டார்.

"திருடைமருதூர்க்குள்ளே சமீபத்துல போயிருக்கேள் இல்லையா? இங்கனு இல்லே பொதுவாவே மாயரம் கும்மோணத்தைச் சுத்தி எல்லா இடத்துலயும் பாத்தேள்னா இப்படிக் கொஞ்ச காலமாவே நடந்துண்டிருக்கு. திட்டம் போட்டுப் பண்றானு சொல்லலே.. ஆனா தற்செயலா நடக்கறாப்ல நடக்கறதுனு சொல்றேன்.. வித்யாசம் புரியறதோ?"

"புரியற மாதிரி சொல்லுங்க சார்"

"சொல்றேன். மொதல்ல ப்ரசங்கத்தை ஸங்க்ஷேபமா சுருக்கமா சொல்றேன்"

"ஐராவதேஸ்வரம் புராதனக் கோவில். ஐராவதேஸ்வரம் கதை தெரியுமோ? பிரம்மா கொடுத்த மாலையைத் அலட்சியமா தூக்கியெறிஞ்சதும் இந்த்ரனுக்கும் ஐராவதத்துக்கும் சாபம் குடுத்துடறார் துர்வாசர். இந்த்ரனுக்குப் பதவி போயிடறது, ஐராவதம் கறுப்பாயிடறது. வெளுப்பா இருந்தாத்தான் யானைக்கும் பிடிக்கும் போலருக்கு - சிவபெருமான் கிட்டே ஐராவதம் தவமிருந்து சாப விமோசனம் கிடச்ச இடமாக்கும். அங்க இருக்குற விநாயகருக்குத் தும்பிக்கைப் பாத்தேள்னா விருச்சிகமாட்டம் இருக்கும். தேள் மாதிரி துதிக்கைங்கறதாலே விநாயகருக்கு மருந்தேஸ்வரன்னும் பேருண்டு. லோகத்து அத்தனை பூச்சிக்கடிக்கெல்லாம் இந்த மூஷிகவாகனன் தான் மூலிகை. அப்பனே பிள்ளையாரப்பானு அழுதா அத்தனை கடியும் கரைஞ்சு போயிடும். சத்யம்..

..திருடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் எத்தனை புராதனமான தேவஸ்தானம்! பாடல் பெற்ற ஸ்தலம். கோவிலுக்குள்ளே போனேள்னா சுவர் சித்ரங்கள்ளாம் கண்ணைப் பறிக்கும். ரெண்டாயிரம் வருஷத்துக்கும் புராதனமான கோவில்! அத்தனை கடவுள்களும் இங்கே மகாலிங்கஸ்வாமியை ப்ரார்த்தனை பண்ணியிருக்கா. தபஸ் பன்ணியிருக்கா.. கோவிலுக்குள்ள அம்பாள் சன்னதிலே ரெண்டு நிமிஷம் நின்னேள்னா கண்ல தண்ணி ஊத்தெடுக்கும்.. அப்படிப்பட்ட லக்ஷணம். அப்பர், சுந்தரர், சம்பந்தர் மூணு பேரும் உருகி உருகிப் பாடின ஸ்தலம். ஆதி சங்கரர் ஆராதனை பண்ணின ஸ்தலம். இங்கேதான் அவருக்கு அத்வைத ஞானப்பிரகாசம் கிடைச்சது. வில்வக்காடா இருந்த இடத்துல விஸ்வநாதன் சுயம்புவா வந்த இடம். சுவாரசியமான கதை தெரியுமோ? தபஸ் பண்ணின அகஸ்தியருக்கு ப்ரத்யக்ஷமான உமையாம்பிகை, 'ஓய் அகஸ்தியரே! என்னய்யா வேணும்?'னு கேக்கறார். அகஸ்தியர் உமையாளைத் தரிசனம் பண்ணினதுல திக்குமுக்காடிப் போய், 'ஜகதாம்பிகே! உமா! எனக்கு ஈஸ்வரனை இங்கே தரிசிச்சு தினப்படிக்கு ஆராதனை பண்ணணும் தாயே!'னு கேக்கறார். சரின்னுட்டு பரமேஸ்வரனை வேண்டிக்கறா பார்வதி. அவரோட ஹ்ருதயத்துலந்து ஜோதிர்மயமா வெளிவரார் லோகேஸ்வரன். அந்த அக்னியையும் ப்ரகாசத்தையும் அகஸ்தியரால தாங்க முடியலே. அம்பாள் யாரு? சும்மாவா? அப்படியே ஜோதிர்மயமா வந்த ஈஸ்வரனைச் செல்லமா அடக்கி வழி பண்றா. ஜோதிஸ்வரூபமான ஈஸ்வரன் சுவயம்பு லிங்கமா வரார். லிங்கம்னா அப்பேற்கொத்த மகோன்னத லிங்கம். மகாலிங்கமா வந்த மகேஸ்வரன் முன்னால 'உண்முத்தாட உவகை தந்தாய் தண்முத்தாடத் தடமூன்றுடையாய், உனையுண்ணிக் கண்முத்தாடக் கழற்சேவடி புரிவேன்'னுட்டு ஆனந்தக் கூத்தாடறார் அகஸ்தியர். இதையெல்லாம் பாத்த ஈஸ்வரர், 'என்னடா இந்தாளு, கூத்தாடி கிட்டயே கூத்தாடுறானே? இவனை நம்பி நாளைக்கு காவேரியை எப்படி ஒப்படைக்கறது?'னு கலங்கறார். உமை அப்படியிப்படி பாக்கறா. நேக்கொண்ணும் தெரியாதுங்கறா. சட்னு ஸ்வாமி ஒரு காரியம் பண்றார். மகாலிங்கத்துக்கு முன்னாடி உக்காந்து ஆராதனை பண்ண ஆரம்பிக்கறார் மகாலிங்கம். உமையாம்பிகை ஆச்சரியப்படறா. 'என்ன ஸ்வாமி இது? உங்களை நாங்கள்ளாம் ப்ராத்தனை பண்றோம். நீங்களே உங்களைப் ப்ரார்த்தனை பண்ணிக்கறேளே? இதென்ன சமாசாரம்?'னு, இப்படி இடுப்புல ஒரு கையும் அப்படி கன்னத்துல இன்னொரு கையும் வச்சுண்டு ஆஸ்சர்யத்துல மூழ்கிப் போய்க் கேக்கறா. அதுக்கு அந்த ஒரிஜினல் அசல் உலகநாயகன் என்ன சொல்றார் தெரியுமோ? 'இல்லேடி கண்மணி. இந்த இடம் வில்வக்காடு. உன்னதமான மருதமரம் சூழ்ந்த இந்த இடத்துல என்னைப் ப்ரார்த்தனை பண்றவாளுக்கு சர்வ பாப நாசமும் சர்வ சாப விமோசனமும் உடனடியா கிடைக்கும். அது ரொம்ப சாதாரணமான பலன். அதுக்கு மேலே அஸ்வமேத யாகம் பண்ணின புண்யம் கிடைக்கும். அது போறாதுன்னா அதுக்கு மேலே கைலாசத்துல என்னை தரிசனம் பண்ணின பலன். அதுக்கும் மேலே வேணும்னா மோக்ஷமும் கிடைக்கும். இந்த ஒரு இடத்துல என்னைக் கும்பிட்டா போறும். ஆனா முறையா கும்பிடணும். சாஸ்த்ரோத்ரமா ப்ரார்த்தனை பண்ணினா இத்தனை பலனும் உண்டு.. அதான் நேக்கே.. ஆசை வந்திருச்சு, ஆகையால் ஓடி வந்தேன்'னுட்டு பல்லைக் காட்டறார். அவர் எப்படி சாஸ்த்ரோத்ரமா பண்றார்னு படிச்சுண்ட அகஸ்தியர் நமக்கெல்லாம் அதைக் கத்துக்க வழி பண்ணினார். இப்படி பகவானை எப்படிக் கும்பிடணும்னு பகவானே சொல்லிக் கொடுத்த ஸ்தலம்..

..உப்பிலியப்பன் கதை கேட்டேள்னா ப்ரம்மானந்த புராணத்துல இருக்கு - என்னமோ இன்னிக்கு நேத்திக்கு கட்டிவிட்டதில்லைணா. ஆழ்வாரெல்லாம் இழை இழைனு இழைஞ்சு பாடியிருக்கா, சும்மாயில்லே. மகாலக்ஷ்மி இங்க ஒரு துளசிமாடத்துல பொறந்த இடம். துளசிச் செடி அப்படி ஒரு வரம் கேக்கறது பகவான்ட்ட. ஒரு செடியோட வேண்டுதலை மதிச்சு பிராட்டி பொறக்கறா. கண்மூடித்தனம்னு சொல்லுங்கோ இல்லே க்ரீன் அவேர்னஸ்னும் சொல்லுங்கோ.. எல்லாம் சிம்பாலிக் தானேணா? கதையைக் கேளுங்கோ. என்னமோ துளசிமாடத்துல சப்தம் கேக்கறதேனு மார்க்கண்டேய முனிவர் வரார். துளசி மடிலே குழந்தையைப் பாத்துட்டு பரவசமாயிடறார். மகாலக்ஷ்மி மார்க்கண்டேயரைப் பாத்து லேசா சிரிக்கறா. மழலைச் சிரிப்புக்கு பத்து மோகனத்தைக் கட்டியடிக்கலாம் இல்லையோ? எக்ஸ்ட்ரா பரவசமாயிடறார் மார்க்கண்டேயர். அடடா.. லோகத்துல இப்பேற்பட்ட பெண் குழந்தை பொறக்கறது சாத்யமோ? இதென்ன மனுஷக் குழந்தை மாதிரியே இல்லையே? தெய்வீகத்துக்கு ஒரு படிமேலன்னா இருக்கு இந்தப் பொண்ணோட மந்தகாசம்? உள்ளே எடுத்துண்டு போய் வளக்கறார். வருஷமாறது. சிங்கில் மேனா இருந்த மகாவிஷ்ணு ரொம்ப லோன்லியா பீல் பண்றார். 'போறும்டி என் பட்டு.. நீயும் நானும் தனியா இருந்தது'னு சொல்லிண்டு ஒரு வயோதிகரா வேஷம் போட்டுண்டு வந்து மார்க்கண்டேயர்ட்ட பொண்ணு கேக்கறார். மார்க்கண்டேயர் நாசூக்கா 'ஐயா பெரியவரே. என் பொண்ணு ரொம்ப சின்னவள். அவளுக்கு உப்பு போட்டுக்கூட சமைக்கத் தெரியாது'னுட்டு எதையோ சொல்லி மழுப்பப் பார்க்கறார். மகாவிஷ்ணு விடாம, 'அதனாலென்ன? நேக்கு ரத்த அழுத்தம், யூரியா பிரச்னையெல்லாம் உண்டு.. வயசாறதோன்னோ? உப்பில்லாமலே சமைச்சுப் போடட்டும்.. உங்க பொண்ணு ஜலம் சுட வச்சுக் குடுத்தா கூட அது நேக்கு தேவாம்ருதமா இருக்கும்'னுட்டு படு ரொமான்டிக்கா டயலாக் விடறார். 'இதென்ன கூத்தா இருக்கே?'னுட்டு தவிக்கறார் மார்க்கண்டேயர். 'சித்தே இருங்கோ பெரியவரே'னுட்டு உள்ளே போய் நேரா பெருமாள்ட்டயே உதவி கேக்கறார். அப்பத்தான் சட்னு புரியறது அவருக்கு. ஓடோடி வெளில வந்து பார்க்கறார். சங்கு சக்ரதாரியா ஆகாசத்துக்கும் பூமிக்குமா நின்னுண்டிருக்கார் உலகளந்த பெருமான். மார்க்கண்டேயரைப் பார்த்து பவழமல்லிப்பூவா சிரிக்கறார். 'என்னைத் தெரியுமா.. நான் சிரித்துப் பழகி கருத்தைக் கவரும் ரசிகன் என்னைத் தெரியுமா?'ங்கறார். 'ஆகா தெரிஞ்சுண்டேனே. ஆகாகா! பல்லுருவையெல்லாம் படர்வித்த வித்தா! உன் தொல்லுருவைத் தெரிந்து கொண்டேன். சொல்லித் தெரிவதா உன் சுந்தர ரூபம்? அள்ள முடியாதென்னிரு கண்கள் இருந்தென்ன? கொள்ள முடியாதென்னிரு கைகள் இருந்தென்ன? மனமெலாம் மயங்கித் தவிக்கிறேனே! என் ஞானப்பிரானை அல்லால் இல்லை இனி நான் கண்ட நல்லதுவே'னுட்டு உருகிப்போயிடறார். ஓடோடிப் போய் பிராட்டியைக் கூட்டிண்டு வந்து மகாவிஷ்ணு கைல சேர்த்து 'உப்பிலாத போழ்தும் ஒப்பென்று ஏற்ற ஒப்பிலியப்பா'னுட்டு சாஷ்டாங்கமா தரை தேய தண்டம் பண்றார். இதான் ஒப்பிலியப்பன் சரித்ரமாக்கும். கேட்டவாளுக்குக் கேட்ட க்ஷணத்துல மோக்ஷம் தர புண்ய சரித்ரம். வைகுந்த நகரம்னு பேராக்கும் இந்த க்ஷேத்ரத்துக்கு..

..திருனாகேசுரப் புராணம் இதெல்லாத்துக்கும் ஒரு படி மேலே.."

விருப்பமில்லாமல் அவரை மறித்தேன். "இதுக்காகவா உங்களை அடிச்சுப் போட்டா? புரியலியே?"

"சொல்றேன். வாய்க் கொழுப்புனு இல்லே. நடைமுறைல நிதர்சனமா இருக்குறதைச் சொன்னேன். நான் சொன்ன ஸ்தலபுராணாதிகாசக் கதைகள் ஆயிரக்கணக்கான வருஷத்துக்கு முன்னால நடந்ததா சந்ததி விட்டு சந்ததி கேட்டு அறிஞ்சுண்டது. சத்யம்னு நினைக்கறேளோ ப்ருடானு நினைக்கறேளோ எப்படி எடுத்துண்டாலும் இதுக்கெல்லாம் ஒரு வேர்.. ஒரு மூலம்.. ஒரு ம்ருணாளம் இருக்குங்கறதை ஒத்துப்பேள் இல்லையாணா? இதையெல்லாம் நம்ம கலாசாரத்தோட அணு.. டிஎன்ஏ.. விப்ருஷம்னு சொன்னா ஒத்துப்பேள் இல்லையாணா?"

"சரி..." இழுத்தேன்.

"திருடைமருதூர் கோவிலைச் சுத்திப் பாத்தேள்னா இப்போ அங்கேலாம் நிறைய முஸ்லிம்கள் வீடு வாங்கறானு தெரிஞ்சு போகும். ஐராவதேஸ்வரக் கோவில் தெப்பக்கொளத்துக்குப் பக்கத்துல கிறுஸ்தவ வீடுகள். திருநாகேசுரத்துல அக்ரகாரமே காணோம். இதெல்லாம் தப்பா ரைட்டானு நேக்கு தெரியாது. ஆனா நான் சொல்ல வரது என்னன்னா இதெல்லாம் இந்தப் புராதன இடங்களின் அடையாளங்களை மாத்திண்டிருக்கு. இந்த மாத்தம் உசிதமானு சந்தேகமா இருக்கு. பாருங்கோணா.. இப்பல்லாம் இந்துக் கோவிலுக்கே கூட்டம் வரது குறைஞ்சிண்டிருக்கு இல்லையா? அரசாங்கமோ அறநிலையத்துறை அது இதுனு சொல்றாளே தவிர, பாதிக் காசை எடுத்துண்டுடறா. மீதிக் காசுலயும் பாதியை அப்பப்போ அன்னதானம்னு சொல்லி ஓட்டு வாங்கறதுக்காக இலவச சாப்பாட்டுக் கூடமாக்கிண்டிருக்கா கோவிலையெல்லாம். அறநிலயத்துறைக்காரா சர்ச் தர்கா எல்லாத்தையும் எடுத்துக்கறாளா? இல்லையே, ஏன்? நம்ம கோவிலை மட்டும்தான். கேட்டா இந்து அறநிலையத்துறைங்கறா. விடுங்கோ எடுத்துக்கறா எடுக்காம இருக்கா போயிட்டு போறது. ஆனா நம்ம கோவில் வருமானத்தையும் எடுத்துண்டு, மிச்சமிருக்குறதையும் சுருட்டிண்டு, அக்கம்பக்கத்துலயும் இப்படி சர்ச் தர்கானு வர விட்டு.. ஒரு கேடான சூழல் உண்டாறப்ல இருக்கு. நம்ம மனுஷாளும் கோவிலுக்குப் போறதில்லே.. அப்படியிருக்கச்சே கோவிலை நம்பின அக்கிரகாரக் குடும்பங்கள்.. வைதீகக் காரியங்களையும் தெய்வீகக் கைங்கர்யங்களையும் வயத்துப் பொழப்பா நம்பி வந்தக் குடும்பங்கள் எல்லாம்.. சிதைஞ்சுண்டே போறது. இருந்த ப்ராமணக் குடும்பங்கள் எல்லாம் கடல் தாண்டிப் பரதேசம் போயிட்டா, இல்லேன்னா போயிண்டிருக்கா. இந்த லாஸ்ட் ட்வன்டி பைவ் இயர்ஸுல இந்த மாதிரி கலைஞ்சு போன ப்ராமணக் குடும்ப சந்ததிகள் யாரும் ஊருக்குத் திரும்பி வரப் பிடிக்காம அமெரிக்கா துபாய் ஜெர்மனினு இருக்கா. பணம் பேயாட்டம் ஆடறது. பெரிய பெரிய சிடில பங்களாவும் ப்லாட்டுமா வாங்கிப் போடறா. கிராமத்து வீடும் வேரும் யாருக்கு வேண்டியிருக்கு? அப்பாம்மாவை ஏகாந்தத்துலந்து விட்டுப் புரட்டியெடுத்து பெரிய நகரத்துலயோ இல்லேன்னா இப்பல்லாம் சொல்றாளே சீனியர் ஹோம்னுட்டு.. முதியோர் இல்லத்துல விட்டுட்டு போயிடறா. இங்கே இவா பிதாமகர் பிரபிதாமகர் கட்டின பூர்வீக வீடெல்லாம் நலிஞ்சு போய்.. இதெயெல்லாம் மீறி அப்படியும் இங்கதான் இருப்பேன்னு வைராக்யத்தோட இருக்குற குடும்பங்கள் கோவில் கைங்கர்யத்துல பிழைச்சுண்டிருக்கு..

..இதுல கோவிலைச் சுத்தி இருந்த வீடுகளையெல்லாம் பாத்தா, ஒண்ணொண்ணா வாங்கறவா எல்லாம் துபாய் சவுதினு போன நம்ம் ஊர் முஸ்லிம்கள். இல்லேன்னா கிறுஸ்தவா. கோவில் வருவாயும் குறைஞ்சு, பசங்களையும் பிரிஞ்சு, அரசாங்க உதவியும் கொறஞ்ச நிலைமைலே.. வந்த வரைக்கும் லாபம்னு வீட்டை வித்துட்டுப் போயிடறா அக்ரகார பிராமணா"

"நஷ்டத்துக்கு விக்கலியே.. லாபத்துக்குத்தானே விக்கிறாங்க?"

"லாபம் நஷ்டம்னு எதைச் சொல்றதுணா? நூத்திமூணு வருஷமா அக்ராகரத்துல இருந்த தேக்குமரம் இழைச்ச பெரிய வீட்டை இப்போ இவா வறுமைக்காக வித்துட்டு... வாங்கின கையோட அவா இடிச்சு கலர் கலரா கண்ணை உறுத்துற பெயிண்ட் அடிச்சு ரெண்டு மாடி அடுக்கு வீடு கட்டி.. இதுல யாருக்கு நஷ்டம்னு சொல்றது.. யாருக்கு லாபம்னு சொல்றது?"

நெளிந்தேன். இவர் அடி வாங்கிய ரகசியம் புரியத் தொடங்கியது போலிருந்தது.

"அதான் ப்ரசங்கத்துல கேட்டேன். நம்ம ஜனங்களைத்தான் கேட்டேன். ஐயா.. இந்துத்வம், ப்ராமண சங்கம்னு பேசிண்டிருக்கேளே.. இந்த மாதிரி நம்ம இந்துக் கோவில்களை ஒட்டின வீடுகள் இப்படி மதம் மாறாம பாத்துங்கோ. ஐயா.. முஸ்லிம் சகோதரர்களே.. கிறுஸ்தவ சகோதரர்களே.. உங்களுக்கு இருக்கற வசதிக்கு சிவன் கோவிலுக்கு அடுத்த வீட்டைத்தான் வாங்கணுமா? பெருமாள் கோவில் பக்கத்துல வீடு வாங்கி என்ன பண்ணப் போறேள்? சித்த தள்ளி வாங்கப்டாதானு ப்ரஸங்கத்துல பேசினேன். இது இப்படியே போனா நாளைக்கு என்னாகும்னா... நாளைக்கு இந்துக் கோவில்களைச் சுத்தி மத்த மத வீடுகளும்.. அப்றம் அவா வழிபட இடம் வேணுமே.. அந்த ஆலயங்களும் வந்துடும். அப்புறம் கோவில் இருந்து என்ன பிரயோஜனம்? அவாளாவது கோவிலை எதுக்காவது உபயோகிச்சுக்கட்டும்னு இந்துக்கள் நாம விடமாட்டோம். நாப்பது அம்பது வருஷம் கழிச்சு 'இது எங்க கோவில் நிலம்.. இதுக்குள்ள நீங்க எப்படி வரலாம்?'னு, சப்ஜாடா வித்துட்டு ஊரை விட்டு ஓடின நாமளே கொடி பிடிப்போம். இதையெல்லாம் தவிர்க்கலாம்னு பேசினேன். இந்துப் புராதன கோவில்களை ஒட்டின அக்ரகார வீடுகளை இந்துக்கள் நாமதான் பராமரிக்கணும்னு பேசினேன்.. இல்லேன்னா நம்ம கோவில்களைச் சுத்தி பள்ளிவாசலோ சர்ச்சோ வந்தா நாம வருத்தப்படக்கூடாதுனு பேசினேன்.. நம்ம கோவில் அக்ரகார வீடுகளை வாங்கி உதவி பண்றது வெளி நாட்டுல சம்பாதிக்கற இந்துக் குடும்பங்கள் அத்தனை பேருடைய கடமைனு பேசினேன். ஒரு ஆதர்சமான ஸ்பட த்ருஷ்டியோட பேசின பேச்சு.." என்றார்.

"அதிசயம்" என்றேன்.

"என்ன சொல்றேள்ணா?"

"உங்களை உயிரோட விட்டது அதிசயம்"

"மிச்ச காரியமும் ஆகட்டும்னு ஆளைக் கூட்டிண்டு வந்துடுவேள் போலிருக்கே? ஏன் அப்படிச் சொல்றேள்?"

"ஜாதி மதம் ஒழியணும்னு சொல்ற நாள்ல நீங்க இப்படி பேசினது ரொம்ப விஷமத்தனமா தோணுது. யார் கிட்டே வசதியிருக்குதோ அவங்க வீடு வாங்றதுல என்ன தப்பு இருக்கு? எங்க வாங்கினா என்ன? ராமர் கோவில் பக்கத்துல சர்ச் இருந்தா என்ன? விஷ்ணு கோவில் பக்கத்துல ஒரு தர்கா இருந்தா என்ன? நீங்க சொல்றது ஜாதிவெறியோட உச்சம் இல்லையா?"

"உச்சமாவது மச்சமாவது? செல சமயம் நீங்க அமெரிக்கா போய் படிச்சேளா விடிச்சேளானு சம்சயமாறது. பக்கத்து பக்கத்துல இருந்தா யாருக்கு என்ன பலன்? இவாளுக்கும் நிம்மதியில்லே அவாளுக்கும் சந்தோஷமில்லே. ஒவ்வொத்தருக்கும் கல்சர் ஹெரிடெஜ்னு இருக்குணா. பள்ளிவாசலை ஒட்டி ஒரு பிராமணன் வீடு வாங்குவானா? மாட்டான். ஆனா பெருமாள் கோவிலை ஒட்டின தன்னோட வீட்டை மட்டும் ரெண்டு காசு ஜாஸ்தியா வரதுன்னுட்டு எதுக்கு இன்னொரு மதக்காரனுக்கு அதே ப்ராமணன் விக்கணும்னேன்? அவ்வளவுதான். எ ரிக்வெஸ்ட் பார் எதிகல் இந்ட்ராஸ்பெக்‌ஷன். இதுல ஜாதி வெறி எங்க இருக்குணா?"

அவருடைய வாதம் என்னைச் சற்றே மயக்கினாலும், அதன் அடிப்படை என்னை அச்சுறுத்தியது.

"இட்ஸ் எ பிடி" என்றார். "நான் சொன்னதுல ஜாதி மத ஆதாரம் பாத்து என்னை அடிச்சுப் போட்டவா எல்லாம் இந்துவா முஸ்லிமா யாருனே தெரியாது. என்னை மாதிரி அவாளுக்கும் ரெண்டு கால் கை. என்னை அடிச்சுப் போட்ட வலி அப்பவே போயிடுத்து. ஆனா இவா அறியாமை..அஞ்ஞானமும் அசம்போதமும் தான் எனக்கு ரொம்ப ப்ராண சங்கடமா இருக்கு. தீராத பீடை. ஒரு ரோகம் மாதிரி. என்னமோ கிராமத்துல இருக்கறவா நேரோ மைன்ட் மாதிரியும், பட்ணம் விதேசம் போய்ட்டு வந்தவா ரொம்ப முற்போக்கு மாதிரியும் பேசிண்டு திரியறவாளைப் பார்த்தா சிரிப்பா இருக்கு".

நிச்சயம் கொக்கி போடுகிறார் என்பது புரிந்தது. அவரையே பார்த்தேன்.

"விடுங்கோ. எனக்குத் தோணிதை நான் சொன்னேன். அவாளுக்குத் தோணினதை அவா செஞ்சா. உமக்கொண்ணு தெரியுமோ? இந்த வட்டாரத்துல இருக்கற அனேக ப்ராமணர்க்குள்ள ஒரு முஸ்லிம் ரத்தம் ஓடறது. இந்த வட்டாரத்துக்குள்ள இருக்கற அனேக முஸ்லிம்கள் ஒரு ப்ராமண அம்மணியைத்தான் ரொம்ப நாளைக்கு ரகஸ்யமா ஆராதிச்சுண்டு வந்தா"

"என்ன சார் கதை விடறீங்க?"

"கொஞ்சம் உள்ளே போய் ஊர்ல பழந்தின்னு கொட்டை போட்டவாளைக் கேட்டா விவரம் தெரியும்..எல்லாம் இந்தப் பக்கதுல தான் நடந்துது. கபிஸ்தலம் போற வழியிலே வைதீஸ்வர அக்ரகாரம்னு இருந்தது, நூறு இருநூறு வர்ஷங்களுக்கு மின்னாலே பிரசித்தம்னு எங்க பெரிய பாட்டி சொல்வா. இப்போ ஊரையே காணோம். ஊர் காணாமப் போனாலும் அங்க நடந்த சமாசாரம் காணாம போகலே, இந்தப் ப்ரதேச ரத்தத்துல கலந்துடுத்து" என்றபடி என்னைப் பார்த்தார். "நேக்கும் பொழுது போகலே. ஆர அமறக் கேளுங்கோணா".

இவரைப் பார்க்க வந்து ஒரு நாள் பொழுது கழியும் என்று நான் நம்பியது வீணாகவில்லை. தொடர்ந்து நான்கு நாட்கள் அவரைத் தினம் சந்திக்க வேண்டியிருந்தது. அத்தனை சுவாரசியமான சமாசாரம். ஜாதி மதம் கடந்த விவகாரம்.

காதல் விவகாரம்.


[தொடரும் சாத்தியம்: 60-75%]

2014/08/23

அரைவாளி சிந்தனைகள்


    மீபத்தில் "அனியாயத்துக்கு திமிர் பிடிச்சவரு நீங்க" என்றார் என்னிடம் ஒருவர். பழக்கமானவர் என்றாலும் நெருங்கியவர் அல்ல. நான் அவரைப் பொருட்படுத்தாமல் என் வேலையில் கவனமாக இருந்தேன்.

"ஏன் அப்படி சொல்றீங்க?" என்று நான் பதிலுக்குக் கேட்காததால் அவருக்கு இன்னும் கோபம் வந்துவிட்டது. "பாத்தீங்களா, திமிர் பிடிச்சவன்னு சொன்னது சரியா இருக்கு. ஏன் அப்படி சொல்றேன்னு தெரிஞ்சுக்கக் கூட உங்களுக்கு இஷ்டமில்லை" என்றார் மறுபடி.

"தெரிஞ்சுகிட்டு நான் என்னங்க செய்யப் போறேன்? என்னைத் திமிர் பிடிச்சவன்னோ வேறு விதமாவோ நினைக்க உங்களுக்கு இருக்குற உரிமையை நீங்க பயன்படுத்திக்கிறீங்க அவ்வளவு தானே?" என்றேன். "என்னைப் பத்தி நீங்க ஏன் அப்படி நினைக்கறீங்கனு நான் தெரிஞ்சுகிட்டா பிறகு அப்படித்தான் அல்லது அப்படியில்லைனு ஒரு வாதம் செய்யணும். மறுபடி திமிர் பிடிச்சவன்னு தொடங்கிடுவீங்க. அதுக்குப் பதிலா உங்க அபிப்பிராயத்துக்கான உங்க உரிமையை நான் மதிக்கிறேன்னு வச்சுக்குங்க. உங்க மட்டுல திமிர் பிடிச்சவனாகவே இருந்துட்டுப் போறேன். அதனால தப்பில்லையே?"

"அதெப்படி? உங்க திமிர்னால எனக்கும் என் மாதிரி மத்த பேருங்களுக்கும் கஷ்டமா இருக்கே?"

"எப்படினு கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா?" என்று கேட்டுச் சில வாரங்களாகின்றன. "என்னமோ நீங்க தான் புத்திசாலி மாதிரியும் நாங்கள்ளாம் ஆட்டு மந்தைங்க போலவும்.." என்று ஏதோ முணுத்துவிட்டுப் போனாரே தவிர, இதுவரை அவர் விளக்கம் சொல்லவில்லை. நான் கவலைப்படவும் இல்லை. நான் கவலைப்படுவதில்லை என்பதில் அவருக்கு இன்னும் கடுப்பு. விடுங்கள்.

அறிவாளி என்ற கர்வம் எனக்குண்டு. அந்தக் கர்வம் அவசியமும் கூட என்று நினைக்கிறேன்.

அறிவாளி கர்வம் என்பது வெளிப்பார்வைக்கு ஒரு பாசாங்கான தோற்றம் தானே தவிர, இதன் உள் வீச்சையும் பயனையும் அறிவாளிகளே அறிவர். கர்வம் இல்லையெனில் என் கதி அதோகதியாகியிருக்கும். 'வாழ்க்கையில் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க எது தேவை?' என்ற கேள்வி என்னிடம் (என் போல் பலரிடம்) பலமுறை கேட்கப்பட்டிருக்கிறது. படிப்பு, பணம், நல்ல கணவன்/மனைவி, நல்ல பிள்ளைகள், குடும்பம், போதும் என்ற மனம், உழைத்துப் பிழைக்கும் பக்குவம், மனசாட்சி, நேர்மை என்று நிறைய பதில்கள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. என்னைக் கேட்டால் இவையெதுவும் வாழ்வில் மகிழ்ச்சியைத் தராது என்று சொல்வேன். மகிழ்ச்சியும் நிம்மதியும் உள்நோக்கியவை. உள்ளிருந்து பெறவேண்டியவற்றை வெளியில் தேடினால் பலனிலாது போகலாம்..

மகிழ்ச்சி நிம்மதி இவையில்லையென்றால் நாமும் துன்பபடுகிறோம், நம்மைச் சுற்றியிருப்பவரையும் துன்பப்படுத்துகிறோம். எத்தனை பேரை நான் துன்பப்படுத்தியிருக்கிறேன் என்பதை விட, என் செயல்களால் என்னை நான் எத்தனை துன்பங்களுக்கு ஆளாக்கியிருக்கிறேன் என்பது இன்னும் முக்கியமானதாகிறது. இதைச் சுயநலம் என்று சிலர் சொல்வார்கள். சற்று சிந்திப்போம். உங்களைத் துன்பப்படுத்தினால் நான் உடனடியாகவோ தாமதித்தோ மன்னிப்பு கேட்கலாம்; நீங்கள் என்னை மன்னிக்கலாம், மன்னிக்காது போகலாம். மண்டையில் ரெண்டு போடலாம். over. ஆனால் உங்களைத் துன்பப்படுத்திய நினைவை நான் சாகும் வரை சுமக்க வேண்டும். மன்னிப்பு கிடைத்தாலும் மண்டையில் கிடைத்தாலும் இதே கதை, இல்லையா? எத்தனை சுமக்கிறோம் என்பது நமக்கு மட்டுமே தெரியும் என்ற நிலையில் இதன் தீவிர பாதிப்பு விளக்கங்களுக்குட்பட்டதென என்னால் கருதமுடியவில்லை.

நான் மகிழ்ச்சியாக இருக்க இரண்டு நம்பிக்கைகள் அல்லது காரணங்கள் - நான் அறிவாளி என்பது முதலாவது. எதையும் நேசிப்பவன் என்பது இரண்டாவது. இரண்டையும் கலந்தால் ஒருவித சுயதர்மம் வெளிப்படும் என்பது எனக்குப் புரிந்த போது இருபத்தைந்து வயதைக் கடந்திருந்தேன்.

அறிவாளி என்று உணர்வில் உண்மையில் ஆணவம் கிடையாது என்று நம்புகிறேன். உணர்வதால் உண்டாகக் கூடிய வெளித்தீமைகளை விட, உணரத் தவறுவதால் விளையும் உட்தீமைகள் கொடூரமானவை, பயம், தன்னம்பிக்கையின்மை, தாழ்வு மனப்பாங்கு, எதற்கும் பணிந்து போகும் கொடூரம், பேதமை - இவை தவிர கண்மூடித்தனம், என்ன சொல்கிறோம் செய்கிறோம் என்று தெரியாமல் நடப்பது, அடுத்தவர்களின் மதிப்பை இழப்பது, தினசரி சோகம், வருத்தம், அழுத்தம், தற்கொலை மனப்பாங்கு - யாராவது என்னைத் தடுங்களேன், இல்லையெனில் இந்த வரிசை தொடரும் ஆபத்து இருக்கிறது.

நமக்கு அறிவு இருக்கிறது என்ற ஒரு சிறிய உணர்வினால் மேற்சொன்ன அத்தனை தீங்குகளும் மறையுமா? மறையும். மறையும். நிச்சயம் மறையும். அறிவுள்ளவராக நடந்து கொள்கிறோமா என்பது வேறு விஷயம். 'அறிவில்லாமல் நடந்து கொண்டதேயில்லையா?' என்று கேட்காதீர்கள். அடிக்கடி நடந்து கொள்கிறேன். இப்போதும் சில நேரம் 'நானா அப்படி செய்தேன்?' என்று என் முட்டாள்தனத்தை எண்ணி வருந்துவதுண்டு. ஆனால் ஒட்டு மொத்தப் பார்வையில் என் நேர்மைக்கும் நிம்மதிக்கும் மிக முக்கியமான காரணம் என் அறிவு என்பதை என்னால் மறுக்க முடியாது. என்னை விடச் சிறந்த அறிவாளிகள் உண்டு என்ற அங்கீகாரமும் அந்த அறிவில் அடக்கம்.

நேசிப்பதால் நாம் குறைந்து விடுவதில்லை. நமக்கு ஒரு இழப்பும் இல்லை. அன்பும் நேசமும் சுலபமாக வரக்கூடியது. 'யாரையும் எதையும் நேசிக்கப் பழகு' என்பதன் சூட்சுமம் புரிய அறிவு வேண்டும். ஹி. அதான் சிக்கல். நான் இயல்பில் நேசிப்பவன். அதற்காக எதிரிகள் இல்லையா என்று கேட்காதீர்கள். இருக்கிறார்கள். இருப்பார்கள். இருந்துவிட்டுப் போகட்டுமே? எதிரி என்பது கூட்டுறவு என்பார் என் ஆசிரிய நண்பர். 'என்னங்க இது, கூட்டுறவுனா ஒற்றுமையில்லையா?' என்பாள் என் தோழி. இருவருமே செத்து வருடங்களாகின்றன, விடுங்கள். எனக்கே ஆணவம் என்றால் என் ஆசிரியருக்குக் கேட்க வேண்டுமா? 'கூட்டுறவுனா கூட்டுறவின் விளைவு. இது கூடத் தெரியலின்னா நீங்கள்ளாம் அறிவாளிங்கனு சொல்லிக்கிட்டு என்ன பலன்?' என்று எங்கள் காலை வாரிவிடுவார்.

எனக்கொன்றும் புரியாமல் இல்லை. எதிரி என்பது இரு தரப்பினரும் சேர்ந்து எண்ணுவதால் உருவாவது. நான் உங்கள் எதிரியல்ல என்று நான் நினைக்கலாம். ஆனால் நான் உங்கள் எதிரி என்று நீங்கள் நினைத்தால் என்ன செய்வது? சொல்லிப் பார்க்கலாம். சற்று புரிய வைக்க முயற்சிக்கலாம். ஆனால் உங்கள் எண்ணைத்தை என்னால் எப்படி மாற்ற முடியும்? உங்கள் பார்வையில் நான் எதிரியாகவே இருந்துவிட்டுப் போகிறேன் என்று விடவேண்டியது தான். என் மட்டில் உங்களை நேசிப்பதோடு அல்லது நேசிப்பதை நிறுத்திக் கொள்வதோடு ஒதுங்க வேண்டியது தான். இதில் திமிர் இல்லை. உங்களுக்கு என்னைப் பிடிக்க வேண்டும் என்ற வட்டத்தைச் சுற்றிச் சுற்றி வருவதால் எனக்கும் பலனில்லை. உங்களுக்கும் பலனில்லை. வெவ்வேறு orbitகளில் பயணம் செய்யும் கோள்கள் நாம். that's it. அதை உணர்ந்து கொண்டால் உடனடித் தெளிவு.

ஆக, அறிவும் நேயமும் இருந்தால் நிம்மதியும் மகிழ்ச்சியும் உத்தரவாதம்.

எதற்கு இப்படி இழுக்கிறேன்?

போன வாரம் ஒரு முக்கியமான கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியிருந்தது. கேட்டவள் என் மகள். கேட்ட கேள்வி: how to find happiness in life?

தோளுக்கு மேல் வளர்ந்த தோழி என்பதால் மகளுடன் நிறைய விஷயங்களைப் பேச முடிகிறது. என் பெண் சற்று intellectual type. socratesலிருந்து jason mraz ஒபாமா jimmie fallon வரை நிறைய பேசினோம். திடீரென்று மேற் சொன்ன கேள்வியைக் கேட்டாள். அவளுக்குத் தெரிய வேண்டும் என்று அறிவிக்க ஒரு பதிலைச் சொல்வதா, எனக்குத் தெரியும் என்பதை அறிவிக்க ஒரு பதிலைச் சொல்வதா? சற்றுத் தயங்கி, 'be smart. be kind. you will find out' என்றேன், பதிலுக்கு.

'what does being smart got to do with happiness? i don't get it' என்றாள்.

'you will. sooner than you think' என்றேன்.

வீடு திரும்பியதும் "எனக்கு ஒரு mac வேணும்" என்றான் மகன்.

"இப்ப வாங்கித் தர முடியாது" என்றேன்.

"அக்காவுக்கு மட்டும் ஹை ஸ்கூல் போறப்ப தனி லேப்டாப் வாங்கிக் கொடுத்தியே?"

"ஒரு தடவை செஞ்ச தப்பை இன்னொரு தடவை செய்யணுமா என்ன?"

மகன் உடனே மகளைக் கூப்பிட்டு, "dad says you are the first mistake he made!" என்றான்.

"ஹேய்.. நான் எங்கடா அப்படிச் சொன்னேன்?". ..hmm. இவன் என்னை விட அறிவாளி என்று ஒதுங்கிவிட வேண்டியது தான்.

பொழுது போகவில்லை. அறிவாளி சிந்தனைகள் போதும் சிறிது அரைவாளிக்கும் ஈயவெண்ணி எந்தப் பூனையைப் பிடிக்கலாமென்ற கேள்வியுடன் கணினி முன் அமர்ந்தேன். வெளியே இடி மின்னல் மழை. நாய் இரண்டும் இடிக்குப் பயந்து என் காலைச் சுற்றி உட்கார்ந்தன. நகரவில்லை. சரி, யுட்யூபில் வாத்யார் படம் பார்க்கலாம் என்று தட்டினேன். திறந்தது. கேளாமலே கிடைத்தது... ஆச்சரியம்.



2014/08/09

லுக்ரீசின் சாபம்



[அறிமுகம்]     [1]     [2-5]     [6-15]     [16-18]     [19-25]    



லுக்ரீசின் சாபம் [19-25]

19
தடுத்தான் கொலாடின்.
'நில்லுங்கள் ராஜாவே!13 என்றன்
சொல் கேளுங்கள் சற்று!' என்றான்.

மனைவியரைக் காணும் மயக்கம் பலருக்கு. அவரை
மறைவினில் காணும் தயக்கம் சிலருக்கு.
ஊர்நிலம் திரும்பும் உவகை பலருக்கு. கொலாடின் போல்
போர்நிலம் மறக்கும் கலக்கம் சிலருக்கு.

'அரசே! ஆழ்ந்த நட்பின் இலக்கணமே!' என
முரசொலிக்கும் குரல் தணித்து அழைத்தான் கொலாடின்.
'சுற்றிவந்த பகைவர் சோர்ந்தடங்கி நாம் தேடும்
வெற்றிக்கனி கையில் விழும் நேரம். விரைவில்
தங்கநகர்14 வென்றச் சிங்கமென வேடமின்றி
மங்கையரை காண முகங்காட்டிப் போகலாமே?'.

'கலங்காதே கொலாடின்' என்றான் செஸ்டஸ்.
'வெற்றிப்பெண் இடையினில் என் கைகள்
சுற்றித்தான் நாட்கள் பலவானதே? வெற்றுக்
கலவரம் இவையடங்க நாளாகும். அதுவரையில்
புலனடக்கும் கவலையில் முடங்கிப் பயனில்லை.
உம்மகளிர் அனைவரும் உம்மைப் போல் நன்கு
தம்புலன் அடக்கினரா தெரிய வேண்டாம்? நீர் சொன்ன
ஒழுக்கமும் அழகும் உண்மையா அறிய வேண்டாம்?
விழுப்பத்தின் விவரத்தை நேரில் காண வேண்டாம்?
கற்புக்கு அரசிகளா அவர்கள் காமத்தின் அரசிகளா?
சொற்குற்றம் காணாது பொருள் மட்டும் தெளிந்து வருவோம்'.

மனைவியரை நேசித்த மாந்தரும் மன்னன் சொல் கேட்டு
வினையானதோ தனிமை என்று வேண்டாத சந்தேகம் கொண்டு
ஆமென்றனர். அரசர் சொல்படி கொலாடினை வேடம் பூண்டுப்
போமென்றனர். தாமும் புறப்பட்டனர்.

மனங்கலங்கினான் கொலாடின்.
மன்னனோ விடவில்லை.
'புலம்பெயர்ந்தார் படைத்தலைவர் என்பதை
அரிதியா சேனை அறியாது. நாமும்
இரவோடிருளினில் திரும்பிடுவோம்.
மாறு வேடத்தில் நாம் போவது
வேறு யாருக்குத் தெரியப் போகிறது?'
தேவையின்றிக் குரலுயர்த்திக் கூறியதைக் கேட்டுச்
சேவைக்குழுச் சிற்றாள் ஒற்றன் ஒருவன்
மெள்ள விலகியதைக் கண்டு மனதுள்
கள்ளமாய்ச் சிரித்துக் கொண்டான் செஸ்டஸ்.

மறுத்தான் கொலாடின்.
'மன்னியுங்கள் மன்னா!' என்றான்.
'பகைவர் எழும் பயமில்லை எனக்கு. எம் வீரர்
பகையழிக்கவென்றே பிறந்தவராம்.
ஊர் செல்லும் காரணம் தான் எனக்குப்
பேர் சொல்லும் காரணியாய்த் தோன்றவில்லை.
என் மனைவியின் மேல் எனக்கு நேசம் உண்டு. அதைவிட
என் மனைவியின் மேல் எனக்கு நம்பிக்கை உண்டு.
லுக்ரீசின் அழகு உண்மை. எனில்
லுக்ரீசின் ஒழுக்கம் உண்மைக்கும் மேல்.
இனியவள் அகத்தை சந்தேகித்தால்
இனியவள் முகத்தை எப்படிக் காண்பேன்?
நெஞ்சில் என்னை வைத்திருக்கு மட்டும் என் லுக்ரீஸ்
கொஞ்சமும் தயங்காமல் சொல்வேன் என் லுக்ரீஸ்
வஞ்சிக்கமாட்டாள் என்னை. அவளைக்
கிஞ்சித்தும் சந்தேகித்தால் நான் அன்றோ துரோகி? எனவே
வீரருடன் தங்க அனுமதியுங்கள் என்னை. லுக்ரீஸைக் கண்டால்
தீராத என்னன்பைச் சொல்லுங்கள். நகருள் நீர் துணிந்து
பேருவகை பெற்றுப் பொழுதோடு வாருங்கள்' என்றான் பணிந்து.

உளமாற விடைகொடுத்த வீரத்
தளபதியை விட்டு செஸ்டசுடன்
பகை வென்றப் படைவீரர் பன்னிருவர்
நகை வியாபாரி போல் வேடம் பூண்டு
அரிதியா எல்லை கடந்தனர்
ரோம் நகருள் நடந்தனர்.

20
இரவின் போர்வையில் எத்தனை மூடல்கள்!
விழிப்பு அங்கே உறங்கினாலும்
உறக்கம் அங்கே விழித்துக் கொண்டிருந்தது.
உறங்கும் போது நரகமாகிறதா நகரம்?
விழிக்கும் போது நகரமாகிறதா நரகம்?
இயற்கை ஒளியில் மறைக்கப்படும் பாவம்
செயற்கை ஒளியில் நியாயமாகும் மாயம்.
பொது விளக்குகளின் ஜாலம். மதுக் கடைகளில்
எது ஒளி என்று இனம் அறியாக் கோலம்.
மதுவா?
மங்கையா?
பொய்யறிவா?
மெய்யறிவா?
அனுபவமா?
அறிவா?
சுகமா?
ஞானமா?
தட்டுங்கள் திறக்கப்படும். இங்கே எதுவும்
கேளுங்கள் தரப்படும்.
விற்கக் கூடாதவை விற்கப்படும்
வாங்கக் கூடாதவை வாங்கப்படும்
விற்கக் கூடாதவை வாங்கப்படும்
வாங்கக் கூடாதவை விற்கப்படும்.
ஒளிவிளக்குகளின் நிழல் சந்தையில்
களிப்பும் காணலாம். கவனித்தால்
கண்ணீரும் காணலாம்.

21
நகை வியாபாரிகள் நால்வரின் மனைவியர்
தகை மறந்து தங்களை மறந்து
இன்னொரு ஆண் இன்னொரு பெண் என
மின்னலாய்ப் புதுத்துணை தேடி
பொதுச் சந்தையிலே
மதுப் போதையில் இருந்தனர்.

இன்னும் சிலர் தம் மனைவியர்
தன்னை மறந்து தம்முடைய வீட்டுள் தம்முடைய கட்டிலில்
தனிமைக்குத் தனிமை வழங்கிக் கொண்டிருந்தது கண்டு
மனைவியைத் தழுவியக் கைகளை நொந்தனர்.

மாறுவேட வீரர்கள் வரிசையில் ஒவ்வொரு மனைவியின்
மீறல்களையும் துரோகங்களையும் கண்டனர்.
இறுதியில் லுக்ரீஸின் இல்லம் வந்தனர்.

22
இரவின் ஒளியில் லுக்ரீஸ் அங்கே
இன்னொரு நிலவாய் உலவிக் கொண்டிருந்தாள்.
இங்கொரு ஓவியம் அங்கொரு ஓவியம் எல்லாம்
தங்கமகன் காதலன் கணவன் கொலாடினின் முகம்.
நந்தவனத்தின் நடுவே அன்றரைத்த புதுச்
சந்தனத்தின் மணமும் பொலிவும் கூடி
வந்தமர்ந்த லுக்ரீஸ் அருகிருந்த
கொலாடினின் ஓவியத்தைப் பார்த்தபடி
பேசினாள் பாடினாள் பின்னர் அறைக்குள் ஓடினாள்.
வெள்ளை நிறத்தொரு ஆடை பின்
கிள்ளை நிறத்தொரு ஆடை பின்
சென்னிறத்தொரு ஆடை பின்
பொன்னிறத்தொரு ஆடை பின்
லேவன்டர் நிறத்தில் ஆடை பின்
லில்லி மலர் நிறத்திலுமொன்று.
'இது பிடிக்குமா? கண்ணாளா உனக்கு
இது பிடிக்குமா?' என்று ஓவியத்திடம்
மதுவின் குரலில் கேட்டுக் கொண்டிருந்தாள்
மணாளன் பதில் சொன்ன பாவனையில்
மாற்றுடையில் வந்தாள்.
'போர் முடிந்து வெற்றியுடன்
நீர் வரும் வேளையில் நான்
உடையணிந்தால் உமக்குக் கோபம் வருமோ?
தடையாகுமென்றால் வேண்டாம்' என்று
கையிலிருந்த உடையை எறிந்துப்
பொய்யாகச் சீண்டினாள் படத்தில் முகத்தை.
வண்ணப் பந்து போல் இங்குமங்கும் தாவி
கண்ணன் காதலன் கொலாடினின் முகம் தடவினாள்.
முத்தமிட்டாள். சிரித்தாள். அழுதாள்.
பித்தானாற்போல் பேதை.

23
திடுக்கிட்டான் செஸ்டஸ்.
போர்க்களத்திலிருந்து வந்தவன் இங்கொரு
போர்க்களத்தை எதிர்பார்க்கவில்லை.
சீர்க்களமாய் ஓர்க்களம் கண்டும்
போர்க்களமாகும் பார்வையின் காட்சி!
மிரண்டவன் மனதுக்குப் பறப்பதெல்லாம் பருந்து.
பசித்தவன் நாவுக்கு புசிப்பதெல்லாம் விருந்து.
சிரித்தான் செஸ்டஸ்.
என் பிரமையா? இல்லை உண்மை!
லுக்ரீஸ்!
இவள் ஒரு போர்க்களம்.15
இவள் முகம் ஒரு போர்க்களம்.
இவள் இடை ஒரு போர்க்களம்.
இவள் நடை ஒரு போர்க்களம்.
இவள் குரல் ஒரு போர்க்களம்.
இவள் முகத்தில் ரோஜாவுக்கும் லில்லிக்கும் போர்.
இவள் இடையில் மின்னலுக்கும் மலர்க்கொடிக்கும் போர்.
இவள் நடையில் அன்னத்துக்கும் தென்றலுக்கும் போர்.
இவள் குரலில் கன்னலுக்கும் கள்ளுக்கும் போர்.
அழகின் செம்மை.
அடக்கத்தின் வெண்மை.
இவள் உடலில் செம்மைக்கும் வெண்மைக்கும் போர்.
இவள் முகத்தின் செந்தீற்றுக்கள் போரின் ரணம்.
அழகின் ஆணவம்.
ஒழுங்கின் அடக்கம்.
இவள் பொலிவில் ஆணவத்துக்கும் அடக்கத்துக்கும் போர்.
இவளால் அழகுக்கும் ஒழுங்குக்கும் இடைவிடாதப் போர்.
இவளுக்குள் போரிடும் அழகும் ஒழுங்கும்
இவளுக்கே பாதுகாப்பா! பெரிய முரண்!
பலவாறு சிந்தித்த செஸ்டஸ்
நிலைமாறி நின்றிருந்தான்.

24
படைவீரர் பன்னிருவர் பொறாமையில் வெந்தாலும்
தடையின்றிப் போற்றினார்கள் லுக்ரீஸை.
சாகலாம் அவமானத்தால் அல்லது அரிதியா
போகலாம் என்றனர். இங்கிருந்தால் வேதனையில்
வேகலாம் என்றனர்.

விரசலாக அங்குவந்த ஒற்றனொருவன்
அரசனிடம் ஓலை தந்து ஒதுங்கினான்.
கொலாடின் கொடுத்தனுப்பிய செய்தி!
'நேசமிகு அரசே! அருமை நண்பரே!
மோசம் போனோம்.
மாறுவேடம் பூண்டு நீங்கள் போன செய்தி
கூறுகெட்டோர் கேட்டறிந்து சீறிவர
சேறானது நம் வெற்றி. உம் உயிருக்கு
ஊறானது. வஞ்சம் வேண்டித்
திரும்பும் வழியில் உம்மைக் கொல்ல
விரும்பி நிற்கிறார்கள் வில்லர்கள்.
அஞ்ச வேண்டாம். அரிதியாச்
சிறு நரிகளின் சீற்றம் நம்
சிங்கங்களுக்கு சிறு விளையாட்டு.
வீரர்களை அனுப்பிவிட்டு
அரசர் மட்டும் அங்கிருக்கட்டும்.
என் வீட்டில் தங்கி நிற்கட்டும்'.

25
பன்னிரு வீரரும் ஒவ்வொருவராய்த்
தன்னந்தனியே அரிதியா திரும்ப
மன்னன் மட்டும் மாறாப் புன்னகையுடன்
நின்றான், லுக்ரீஸ் இல்லத்து வண்ண வாயிலில்.
திட்டப்படி எல்லாம் நடந்தினித் தொடரும்
கட்டம் யாதென்ற எண்ண வாயிலில்.


[வளரும்]


13 ஹிஹி.. சுஜாதாவுக்கு என் மதிப்படங்கிய அங்கீகாரத்தின் ஒரு சிறிய அடையாளம்.

14 அரிதியா ஒரு துறைமுக நகர். மேற்கு நோக்கிய துறைமுகமானதால் ஸ்பெயின் ப்ரெஞ்சு (குறிப்பாக அந்தக்கால க்ரேக்க) நாடுகளிலிருந்து வணிகம் காரணமாக செல்வமும் நாகரீகமும் மிகுந்த பகுதியாக இருந்தது. ரோம் சற்று உள்தங்கிய (இன்றைய கணக்கில் சுமார் முப்பது கிலோமீடர்) நகரமாயிருந்ததால் அரிதியாவின் செல்வமும் செழிப்பும் ஒரு உறுத்தலாகவே இருந்தது ரோம் அரசர்களுக்கு. மேற்கத்திய கலாசாரமும் பகுத்தறிவும் ஊடுருவத் தொடங்கியிருந்ததால் அரிதியா புரட்சிக்காரர்களின் முகாமாகவும் இருந்தது. ஜூனியஸ் புரட்சிக்காரர்களுடன் தங்க நகரில் தங்கியிருந்தான். பேரரசன் லூசியசின் சேனை அரிதியாவைக் கைப்பற்ற எண்ணியதற்கு அதுவும் ஒரு காரணம். இன்றைய அரிதியா பற்றி விகியில் தேடி அறியலாம் (city of Ardea, Rome)

15 லுக்ரீசின் முகத்தில் தெரிந்த சிவப்புத்தீற்றுகள் செம்மைக்கும் வெண்மைக்கும் இடையிலான போரின் ரணம் என்பதை சேக்ஸ்பியர் மிக எளிமையாகச் சொல்லியிருக்கிறார். 'the silent war of lilies and roses' 'this heradlry in Lucrece's face was seen, argued by beauty's red and virtue's white' என்று எளிமையாக எழுத முடிகிற ஆங்கிலத்தின் அழகா அல்லது என் தமிழின் குறையா தெரியவில்லை, அங்கே கிடைத்த உணர்வை இங்கே கொண்டு வரத் திணறுகிறேன்.

2014/08/02

லுக்ரீசின் சாபம்



[அறிமுகம்]     [1]     [2-5]     [6-15]     [16-18]     [19-25]    



லுக்ரீசின் சாபம் [16-18]

16
'லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
என் காதலி என் மனைவி
என் மகள் என் அன்னை
என் உறவு என் சுற்றம்
என் சொத்து என் சுகம்.

லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
ஒரு சொல்லில் என்
உலகம் அடங்கும் எனினும்
சொல்லியடங்காச் சொல்
அல்லவா உன் பெயர்?
சிறப்பிலடங்கா உன் பெயர் சொல்லி
பிறக்கிறேன் தினமும்
இறக்கிறேன் தினமும்.
வாழ்கிறேன் கணமும்.

லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
எங்கோ தொலைவில் இருந்தபடி
இங்கே என்னை இயக்கி வரும்
மங்கையுன் பெயருக்கு மட்டும் எத்தனை சக்தி?
கனியே, உன்னால்
மனிதனானேன் எனினும் மிருகமானேன்
தனவானானேன் எனினும் திருடனானேன்
கணவனானேன் எனினும் காதலனானேன்
வீரனானேன் எனினும் கோழையானேன்
பேரறிஞனானேன் எனினும் பேதையானேன்.

லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
அன்னைக்கு மனையாளும் பெருமை
அரசனுக்கு உலகாளும் பெருமை
செல்வனுக்குப் பொன்னாளும் பெருமை
கவிஞனுக்குச் சொல்லாளும் பெருமை
நல்லோர் இவருக்கும் இன்னும்
எல்லாம் வல்ல இறைவனுக்கும்
இல்லாத பெருமை ஒன்று
செல்லாக்காசான
எனக்கு மட்டுமே உண்டு.
உன்னால் தினம் அன்னையானேன்
உன்னால் தினம் அரசனானேன்
உன்னால் தினம் செல்வனானேன்
உன்னால் தினம் கவிஞனானேன்.
குறையிலா உன் துணைதரும் தகுதியில்
இறைவனாகும் தேவை எனக்கில்லை.

லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
நீ பேரழகி. உன்
முகம் பளிங்கு
கண்கள் வைரம்
செவிகள் வெள்ளி
மூக்கு மரகதம்
கன்னம் பொன்
உதடுகள் பவழம்.
கூந்தல் சுரங்கத்தில்
நித்தம் நான் தேடும்
ரத்தினச் சுரங்கம் நீ.
கழுத்து வாழைக்கனி
தோளிரண்டும் பலாச்சுளை.
முலைகள் முழுமாங்கனி
மேற்காம்பிரண்டும் முழு திராட்சை.
இளவயிறு வெண் ஆப்பிள்
இடைத்தொப்புள் நாவல்கனி.
இருகை தாங்கி வரும்
அரும் பழக்கூடை நீ.
இடையோ கடவுள் போல
இனிய ஆத்திக நாத்திகக் குழப்பம்.
கனிந்தப் பேரின்ப ஞானம் தரும்
தனிப் பல்கலைக்கழகம் நீ.
தொடைகள் பெரும்பாறை
அடைபட்ட அல்குல் அருஞ்சோலை
முழங்கால் நாகப்படம்
கால்கள் கள்ளிப்பாளை
பாதமெனும் புதைமணல் தாங்கும்
போதைப் பாலைவனம் நீ.

லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
உன்
கூந்தல் கார்டினியா
முகமெங்கும் முல்லைமலர்
கன்னமிரண்டும் டெரகோடா
உதடுகள் மட்டும் ரோஜா இனம்.
கழுத்து சங்குமலர்
தோளிரண்டும் லேவன்டர்
கைகள் மக்னோலியா
கைவிரல் கனகாம்பரம்
முலையிரண்டும் வனிலா
மேற்காம்புகள் மட்டும் விஸ்டரியா வனம்.
இடை செம்பருத்தி
இளவயிறு நாகலிங்கம்
தொப்புள் டயேந்தஸ்
முதுகோ முழுத் தாமரை
பிட்டமேடு செவ்வந்தி
வல் தொடையிரண்டும் தாழம்பூ
அல்குல் மட்டும் மல்லிகை வனம்.
முழங்கால் லில்லிமலர்
காலிரண்டும் வயலட்
கால் விரல்கள் ஆலிசம்
பாதங்கள் மட்டும் பவழமல்லி இனம்.
லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
எனக்காகவென்றே நீ
தினம் மணக்கும் மலர்வனம்!9.

லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
உன்னைப் பனிக் காலமென்பதா?
பனியினும் வெண்மையன்றோ உன் தூய்மை?
நடுக்கத்தை உன் அன்பில் நான் நொடியும் கண்டதில்லை.
நீ பனிக் காலமல்ல.
உன்னை வசந்த காலமென்பதா?
வசந்தப் பூக்களை விட மென்மையன்றோ உன் மனம்?
சீற்றத்தை உன் அன்பில் நான் சிறிதும் கண்டதில்லை.
நீ வசந்தமல்ல.
உன்னைக் கோடையென்பதா?
கோடையின் கதிரைவிட ஒளியானதன்றோ உன் முகம்?
கடுமையை உன் அன்பில் நான் கணமும் கண்டதில்லை.
நீ கோடையல்ல.
உன்னை உதிர் காலமென்பதா?
உதிர்காலக் காற்றைவிட இதமல்லவா உன் அணைப்பு?
சரிவை உன் அன்பில் நான் சத்தியமாய்க் கண்டதில்லை.
நீ உதிர் காலமல்ல.
உன்னை மழைக் காலமென்பதா?
மழைச்சாரலை விட மயக்கவல்லதே உன் முத்தம்?
அழிவை உன் அன்பில் நான் அணுவும் கண்டதில்லை.
நீ மழைக் காலமல்ல.
காலங்களுடன் உன்னை ஒப்பிடுவது என் தவறே.10
காலங்களுக்கு தொடக்கமும் முடிவும் உண்டு.
உன் அழகுக்கு ஏது தொடக்கம்?
உன் அன்புக்கு ஏது முடிவு?
காலத்தைக் கடந்தவள் நீ.
அளக்கவியலும் காலத்தை
அளக்கவா முடியும் உன் அழகை?
அளக்கவியலும் காலத்தை
அளக்கவா முடியும் உன் அன்பை?
அளக்கவியலும் காலத்தை
அளக்கவா முடியும் உன் காதலை?
காலம் பிறந்தழியும் உன்
மேலான கற்பின் வலிமைக்கு அழிவில்லை..
கண்ணே லுக்ரீஸ்!
நீ காலத்தைக் கடந்தவள்.
மூப்பு உன்னை அண்டாது
மரணமும் ஒதுங்கி வழிவிடும்.
மனிதத்தின் இறுதி மூச்சு ஓயும் வரை
இனியாள் உன்னழகு பொலிவுடன் நிற்கும்.

லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
என் காதலி என் கண்மணி.
உன்னைக் கவிதையில் வடிக்க முயலும்
கவிஞரின் கர்வம் அடங்கும்.
உன்னை ஓவியமாகத் தீட்ட முயலும்
ஓவியரின் திறமை முடங்கும்.
கற்பனைகளுக்கு
புசிக்கத் தீனி தந்து
பசியால் வாடவும் வைக்கும்
உன் அழகும் கற்பும்
எனக்கு விளங்காப் புதிர்.
அரசு அழியும்
செல்வம் அழியும்
கவியும் அழியும்
உலகம் அழியும்
மரங்கள் அழியும்
காற்று அடங்கும்
காலம் முடியும்.
கண்ணே லுக்ரீஸ்!
உன் அழகுக்கு மட்டும் அழிவில்லை.
உன் கற்பின் பெருமைக்கு அழிவில்லை.
காலம் என்பதே உன் முன் கருத்தில்லாச் சொல்.11

லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
உன் அழகைக் கண்டால் என் கண்களுக்கு விருந்து.
உன்னை முத்தமிட்டாலோ என் உயிருக்கு மருந்து.
அதனால் நான் என்றும்
அழகை விட முத்தத்தை ஆராதிக்கிறேன்.
உன் பழுத்த உதட்டில் முத்தமிடும் பொழுது உண்டாகும் சிலிர்ப்பில்
அன்பே நான் மிருகமாகிறேன்.
உன்னைக் குதறி வெறிதணிக்க உன்மத்தம் கூடுகிறது.
உன் பருத்த மார்பில் முத்தமிடும் பொழுது உண்டாகும் சிலிர்ப்பில்
பெண்ணே, நான் மனிதனாகிறேன்.
உன் மென்மையும் வனப்புமென் மனதைக் கட்ட அமைதி மேவுகிறது.
உன் பரந்த வயிற்றில் முத்தமிடும் பொழுது உண்டாகும் சிலிர்ப்பில்
கண்ணே, நான் அரசனாகிறேன்.
எந்த அரசனுக்கும் கிடைக்காத இராஜ்ஜியம் நீ.
உன்னை முழுமையாக ஆளும் பேற்றினை பெறும் நான் பேரரசர்களின் அரசன்.
உன் செழித்த அல்குலில் முத்தமிடும் பொழுது உண்டாகும் சிலிர்ப்பில்
உயிரே, நான் இறைவனாகிறேன்.
உன் மாண்பை முன்னிறுத்தி மேலுமிதை விளக்காமல்
இத்தோடு அமைகிறேன் பித்தன் நான் உன் நினைவில்'.

17
கொலாடின் அமைந்ததும் அவையில் கண அமைதி.
தொடர்ந்து பெரும் ஆரவாரம்.

'இறைவனாகும் இரகசியமதை எனக்கு மட்டும்
மறைக்காது சொல்லப்பா' என்று அவையினர்
இடித்தனர், இமைத்தனர்.
துடிப்புடன் பாராட்டினர் கொலாடினை.
'உன் பேச்சைக் கேட்டு
என் மனைவி எனை விட்டு
உன்னோடு ஓடாதிருக்க உபாயமொன்று காண்பேனோ?'
விளையாட்டாய் சிரித்தான் சிற்றரசன் ஒருவன்.
இரகசியம் இரகசியம் என்று விரல் மடக்கி முகம் விரித்து
உரக்கச் சிரித்தனர் வீரர்கள்.
'இதன்றோ மெய்க்காதல்! இவனன்றோ பேறுடையவன்!'
குறையில்லா காதலைக் கேட்டு
மறைவாய் ஏங்கியது அவை.

ஆரவாரத்தின் இடையே
ஓரரவம் இல்லாது
சீராக வீற்றிருந்த செஸ்டசின் மனம்
பேரரசக் கனவா?
பேரரவம் புகுந்த வீடா?12

அமைதியாக இருந்த அரசனை
இமையாது பார்த்தான் கொலாடின்.

18
மெள்ள எழுந்தான் செஸ்டஸ்.
உள்ளமெல்லாம் கள்ளம் பொங்க
அள்ளினான் நண்பனை உவகையோடு.
'உன் பெருமை என் பெருமை' என்றான்
கள்ளம் விளங்கா மொழியில்.
'ஆ! கொலாடின். காதல் பேரரசன்!
இங்கே இறைவனுண்டு. ஏதோ நாடாளும் பேரரசன் உண்டு. அரசனும் உண்டு.
எங்களுக்குப் போட்டியாகத் தங்களை உருவாக்கினாளோ லுக்ரீஸ்?'
சிங்கம் போல் சிரிப்பாய்ச் சிரித்தான் செஸ்டஸ்.

நண்பனின் சிரிப்பில் பெருமை
கொண்டான் கொலாடின்.
மறை பொருள் ஏதும் காணாத
கறை படியா மனதுடையான்.

'உற்சாகம் மிகுந்த உங்கள் பேச்சில்
கற்காசேனும் உண்மை இல்லை'
என்றான் செஸ்டஸ்
முன்னின்ற மக்களிடம்.
'பெண்மையின் உண்மையினை
கண் முன்னே காணவேண்டும்.
வேறுமுகம் பூண்டு
ஊருக்குள் சொல்வோம்.
யாருடைய மனைவி அழகரசி?
யாருடைய துணைவி கற்பரசி?
துணை பிரிந்து
தனிமையில் வாடுவோர் யார்?
துணை மறந்து
இனிமையில் ஆடுவோர் யார்?
பேர் விளங்கும் பாவையர் யாரெனப்
பார்த்து வருவோம்.
சிறிதாக ஒரு கூட்டம்
புறப்படட்டும் என்னுடன்'.

மறைவிலேனும் மனைவியைக் காணும் ஆசையிலும்
குறை காணவியலா மன்னன் சொல் என்பதாலும்
மாறு வேடம் பூண்டு புறப்பட்டது குழு.
வேறு நோக்கம் கொண்டு புறப்பட்டான் செஸ்டஸ்.

லுக்ரீசின் சாபம் [19-25]


9 மயக்கும் அழகுடன் மிகவும் மணமுடைய இந்த மலர்கள் பற்றிய விவரங்களை இணையத்தில் காணலாம்.

10 நடுக்கம், சீற்றம், கடுமை, சரிவு, அழிவு முறையே குளிர், காற்று, வெயில், உதிர், புயல் இவற்றைக் குறிக்கின்றன.

11 சேக்ஸ்பியர் எழுதிய வேறு சில பாடல்களின் (sonnets) கருத்துக்களை, பொருத்தம் கருதி ஆங்காங்கே சேர்த்திருக்கிறேன்.

12 ஓரரவம்: சிறிய ஓசை | பேரரவம்: பெரிய நாகம்.

2014/07/28

லுக்ரீசின் சாபம்



[அறிமுகம்]     [1]     [2-5]     [6-15]     [16-18]     [19-25]    



லுக்ரீசின் சாபம் [6-15]

6
அடங்கியும் அடங்காத
அந்தப்புறக் கிசுகிசுப்பென
அசை போட்டு நடந்தது
அரசினத் தளிர்.

துணை வந்தக் காவலரும்
ஆவலரும் ஏவலரும்
அணைகட்டிய ஆறென
எல்லையில் நின்றனர்.

ஏவல் பேடிகள்4 இருவரை
சேவகராய் வரச்சொல்லி
அஞ்சாமல் முன் சென்றான் செஸ்டஸ். அவனை
ஒட்டிப் பின் தொடர்ந்தான் கொலாடின். விடாமல்
விட்டுத் தொடர்ந்தனர் விடலையர் பிறர்.

நடுவில் நடந்த
ஜூனியஸின் மனதில்
படிந்தது ஒரு கேள்வி.
வலையில் சிக்கியப் பூச்சியை நோக்கிக்
கலையாத கவனம் கொண்ட சிலந்தியின் பயணமாய்
நிலையாக. மெள்ள. தெளிவாக.
ஒரே ஒரு வரம்.

உடன் வந்தோரின்
தீப்பந்தங்கள்
அருகில்
கொள்ளிவாயென எரிந்து
தொலைவில்
மின்மினியாய் மறைந்தன.

நகரம்
கடந்த கிராமம்
கடந்தக் கா
கடந்த காடு
எனச் சுற்றி
பல நாட்கள் நடந்தபின்
பனிமலையின் காலடியில்
காளையரின் காலடி.

நிலவை விழுங்கிய இரவு.
சலவை செய்தத் தரையில்
படர்ந்த வெண்பனி
பரப்பிய வெளிச்சம்.
சிறுத்தைத் தோல் போர்த்தினாற்போல்
கருவானமெங்கும் ஒளிப் புள்ளிகள்.

அடிவாரத்தை
நோட்டமிட்டான் கொலாடின்.
'இங்கே தங்கலாம்' என்றான்.

'ஆகட்டும்!' என்ற
செஸ்டஸின் ஆணையில்
அஞ்சி நடுங்கிய
அடிமை அலிகள்
பள்ளம் வெட்டி
விறகுத்தூள் பரப்பி
அகண்ட தீ மூட்டி
அத்தர் திரவியம் தூவி
அமைதியாய் ஒதுங்கினர்.

படுத்தது தீயைச் சுற்றிப்
பதின்ம வயதுக் கூட்டம்.

உறக்கம் வரவில்லை.
உற்சாகத்தின் எல்லை.

'விடியுமுன் மேலேறி
வேண்டிய குறி கேட்போம்.
பொழுதைக் கழிக்கச் சற்றுப்
பழங்கதை பேசுவோம்'
என்றான் கொலாடின்.

7
'கிரேக்கப் பித்தியாவில்5
தொடங்கியது குறி தேவதை.
சரியாகக் குறி கேட்கத் தவறினால்
கண்களைக் குதறிடுமாம் தேவதை'
என்றான் ஒரு அரசின இளைஞன்.

'என் பாட்டனார்
குறி கேட்டக் கதை கேளீர்.
தூணில் இருந்த மண்டையோடு6
துடிப்போடு அசைந்திறங்கி
தன்முன்னே வந்ததென்றார்'
என்றான் செஸ்டஸ்.
'ஆ!' என்று
அலறியோரை அடக்கி,
'கேளீர்.
அசைந்து வந்த மண்டையோடு
முகத்தை உரசி நகைத்தது.
என் பாட்டனார்
வீரர்களில் உயர்ந்தவர்.
மண்டையோட்டை அழுத்தி
வலது காலில் நசுக்க
அடுத்த மண்டையோடு
அலறியபடி இறங்கியது.
அவரைச் சுற்றி
தீப்பொறியாய்த் துப்பியது.
கலங்காத வீரரான என் பாட்டன்
அடங்காத மண்டையோட்டை
இடது கையால் ஓங்கியடித்து
இடது காலில் இட்டு அழுத்தினார்'
என்றான்.
'மேலும் சொல், மேலும் சொல்' என
நெருங்கியக் கூட்டம் கண்டுப்
பெருமையுடன் செருமினான் செஸ்டஸ்.
'இரு காலால் இரு ஓடுகளை அழுத்தி
நின்ற என் பாட்டனைப் பார்த்து
பெருங்கோபத்துடன் இறங்கியது
மூன்றாவது மண்டையோடு.
முறைத்தது. முன்கோபத்தில் முரண்டது.
'என் நண்பர்களை விடு,
உன்னை உயிருடன் விடுகிறேன்' என்றது.
பாட்டன் சிரித்தார்.
'நீ குறி சொன்னால், அதிலும்
நல்ல குறி சொன்னால்,
உன் நண்பர்களை விடுவேன்.
அன்றேல் அழுத்திப் பொடி செய்வேன்'
என்று பாட்டனார் மேலும் அழுத்தினார்.
மண்டையோடுகள் அஞ்சிக் கெஞ்சின.
'விடியப் போகிறது.
குறி சொன்னால் உன் நண்பர்கள்
பிழைத்துப் போவர்.
தவறினால் விடிந்ததும்
உன்னையும் என் கைகளால்
அழுத்திக் கொல்வேன்'
என்று அஞ்சாநெஞ்சன்
என் பாட்டன்
உறுதியாக நிற்க,
இளகி வந்தது
மூன்றாவது மண்டையோடு.
உயிர்ப் பிச்சை கேட்டு
உன்மத்தமாய் ஓலமிட்டது
குறி தேவதை.
மூன்று மண்டையோடுகளையும்
விடுதலை செய்தார் பாட்டனார்.
ஓடுகளும்
தப்பினால் போதுமெனத்
தூண்களில் ஏறின.
குறிதேவதையின் குரல்
இங்குமங்கும் ஓலமிட்டது.
பின்னர் தெளிவாக,
மூன்று திங்கள் பொறுத்து
மன்னராவாய் என்றது.
தொடர்ந்தது
என் பாட்டனாரின் வரலாறு'
என முடித்தான் செஸ்டஸ்.

'வீரப் பரம்பரை!' என்றுப்
புகழ்ந்தது அரசினம்.

'வீரப் பரம்பரை ஒரு நாள்
விதிப்படி அழியும் என்றும்
விவரமாகக் குறி சொன்னது'7
என்றான் ஜூனியஸ்.
மெள்ள.

'என்ன உளறுகிறாய்?' அரற்றினான் செஸ்டஸ்.

'ஆமாம் சகோ,
பாட்டன் பேச்சை மறந்தாயா?'
என்ற ஜூனியஸைச்
சுற்றியது அரசினக் கூட்டம்.
'அப்படியா? நீ சொல்லு.
அரச பரம்பரை அழியுமா?'.

ஜூனியஸ் அமைதியாகப் பேசினான்.
'ஆம். தேவதையின் குறிப்படி
பைரவன் பேசிடும் கட்டம்
பரம்பரை அழியும் திட்டம்'.8

சொல்லி முடித்த ஜூனியஸை
தயங்கிப் பார்த்தது கூட்டம்.
ஓகோவெனச் சிரித்தது.
'முட்டாள்களின் அரசன்
மூடர்களின் தலைவன்' எனத்
தலையிலும் வயிற்றிலும்
தரையிலும் வானிலும்
அடித்துத் தாளாமல் சிரித்தனர்.
'நாய் பேசினால்
பரம்பரை அழியுமா?
முட்டாள்.
எனில் அழிய வாய்ப்பே
இனியிலையென்று பொருள்.
இதையறியாத நீ
முட்டாள். மூடன்.
உனக்கெதற்கு குறி தேவதை?'
என்று
செஸ்டஸ் இளப்பம் காட்ட
அனைவரும் ஜூனியஸை
வேடிக்கை பாதி வேதனை மீதியெனக்
கூடிக்கூடிக் கேலி செய்தனர்.
கேலியின் களைப்பில்
கண் சாய்த்தனர்.

8
எங்கோ ஊளையிட்ட ஒநாய் ஒன்று
எழுப்பியது அனைவரையும் அவசரமாய் நன்கு.
களைப்பாற
மூலிகை நீர் கொணர்ந்தனர்
அலிகள்.
முகங்கழுவி முடிசீவி
முறையாக உடையணிந்து
குறிகேட்கத்
தயாரானது அரசினம்.
அலிகளை
அடிவாரத்தில் அமரச்செய்து
குருடர் போல் கோல் பிடித்து
இருளில் மலையேறினர்
மன்னர் மக்கள்.

உச்சிக்கு வந்த
கொலாடின்
சுற்றிலும் பார்த்துச்
சமாதானமானான்.
எதிரே தெரிந்த
குறி தேவதைக் கோயிலைக் கண்டான்.
'வாருங்கள்' என்று
மற்றவரை அழைத்தான்.
வந்தனர்.
வாய் பிளந்த குகையைக் கண்டு
வாய் பிளந்தனர்.

9
முப்பெரும் தூண்கள்.
தூண்களிடைப் பாறைச்சுவர்.
சுவற்றுக்குப் பின்புறம் எரிதணல் ஒளி.
மேலெழுந்தப் புகை
தூண்களைச் சுற்றியக் கொடி போல் படர்ந்தது.
தூண்களின் உச்சியில் மேடை.
மேடைகளில் மண்டையோடு.
வாய் பிளந்த மண்டையோடுகளின் வழியே
பேய் நுழைவது போல் வெளியேறிய புகையும் ஒளியும்
பிள்ளைகள் மனதில் பயமூட்டின.
அமைதியாக ஒவ்வொருவரும்
ஒரு காணிக்கையைச்
சுவற்றுக்குப் பின்புறம்
எரிகின்ற தணலில் எறிந்தனர்.
'குறிதேவதைக்கு வணக்கம்' என்றனர்.
அமைதியாகக் காத்திருந்தனர்.

மெள்ள வீசியக் காற்றுடன்
மோக விளையாட்டு ஆடியது புகை.
இங்கொரு தழுவல். அங்கொரு சீண்டல். பின்னொரு விலகல். மீண்டும் தழுவல்.
ஒட்டிவந்தத் தணல் ஒளியில் புகையின் காமம்.
திட்டமின்றிப் பிள்ளைகள் பார்க்கையில் திடுமென
வெட்டறிவாள் விழுந்த கன்று போல்
ஓரகில் தேவதை ஓலமிட்டாள்.
சிங்கத்தின் வாயில் சிக்கிய சிறுநரி.
இறந்து பிறந்த பிள்ளையைக் கண்டத் தாய்.
பிறந்த காரணம் புரியாதப் பிள்ளை.
பாலுக்கு அழும் சேய்.
நூலுக்கு அழும் அறிஞன்.
பொங்கியெழும் பெண்ணின் சீற்றம்.
வெற்றிக் கெக்கரிப்பு.
பற்றறுத்தப் பரதேசியின் மௌனம்.
நீண்ட ஆயுளின் வலி.
நிறைந்த கலவியின் ஆனந்தம்.
அத்தனையும் கலந்து
பித்தியா தேவதை ஓலமிட்டாள்.
மேடையில் ஓடுகள் தாளமிட்டன.

'அரசாளும் தகுதியோடு வந்திருக்கிறேன்.
தரமானக் குறி சொல்ல வேண்டும்' என்றான் செஸ்டஸ்.

'அரசனைக் கேட்டால் ஆண்டி மேலென்பான்
ஆண்டியைக் கேட்டால் அரசு வேண்டுமென்பான்.
ஆண்டியாகும் வலிமையிருந்தால்
அரசையாளும் பொலிவும் பெறலாம்'
என்றுச் சிரித்தது ஓரகில்.

சீறினான் செஸ்டஸ்.
'ஏய்! பிணந்தின்னும் பிசாசே!
நல்ல குறி சொல். இல்லை உன் மண்டையோடுகளை
நான் மண்ணில் புதைப்பேன்!'.

பயமின்றி இளித்தது ஓரகில்.
'பாட்டனின் பேரனா? வந்தாயா?
சொல்கிறேன். குறி சொல்கிறேன்.
முகத்தைப் பார்த்துச் சொல்கிறேன். கேள்.
முத்தத்தில் உள்ளது மகுடம்'.
பித்தச் சிரிப்பு.
பேய்ச் சிரிப்பு.
மண்டையோடுகள் ஆட
மனதை உலுக்கும் சிரிப்பு.
'முத்தமிடு முடிசூடு முத்தமிடு முடிசூடு'.
தணல் தீடீரென்று திக்கெங்கும் தீயாக
அணலைக் கூட்டும் எக்காளச் சிரிப்பு.
கழிந்த ஊழியின் அமைதி.

பழிக்கும் தேவதை குறி கேட்டு
விழித்தான் கொலாடின்.
வெருண்டான் செஸ்டஸ்.
குழம்பினான் ஜூனியஸ்.
தயங்கினர் பிறர்.

முயலின் குட்டி போல்
முனகிய தேவதை
மெள்ளக் குரலுயர்த்தியது.
'ஆம். முத்த மகுடம்.
முடியாளு முன்னே
முத்தமிட வேண்டும்.
தாயைத் தழுவியவள் கட்டியவள்
வாயிலே முத்தமிடுவோன்
விடியலில் உலகை வென்று
துடிப்புடன் தரணியாள்வான்.
உங்களில் ஒரு தங்கம்
முத்தமிடுவார், முடியாள்வார்'.

குறி நின்றது.
தீயும் தணலும் அணைந்தன.
தூணசைய மண்டையோடுகள் மறைந்தன.
அயர்ந்துறங்கும் கிள்ளையின்
மூச்சொலி போல்
முனகல் மட்டும்.
தீயில் வேகும் இறைச்சியின் வாடை
மேவிய காற்றின் ஓசை.
செவிடரின் அமைதி.

அரசினப் பிள்ளைகள்
விரசலாய் விலகினர்.

10
மலையிறங்க முனைந்த
மன்னர் மக்கள்
முத்தக் குறியில்
சித்தம் குழம்பினர்.
'முத்தத்தில் உள்ளது மகுடம்'
பித்தியாவின் குரல் முனகலாய்.

'நானிடுவேன் என் தாயை முத்தம்!' என்று
பதவி வேகத்தில் ஓடத்தொடங்கிய
செஸ்டசைத்
தொடர்ந்தனர் பிறர்.
நடுவில் நடந்த
ஜூனியசைத் தள்ளினர்.
இடறி விழுந்த ஜூனியஸ்
தடுமாறிப் புரண்டு உருண்டான்.
கலங்காமல் அவனை மிதித்து ஓடினர்
அலட்சிய அரசினர்.
ஒருமணி பொறுத்துத்
திரும்பிய கொலாடின்
மண்ணில் கவிழ்ந்து
புண்பட்டுக் கிடந்த
நண்பனைக் கண்டான்.
மேலேறி வந்து
கோல் கொடுத்து கைத்தாங்கலாய் எழுப்பினான்.

ஜூனியசின்
கை ஒடிந்திருந்தது.
முடி குலைந்திருந்தது.
முகம் சிவந்திருந்தது.
முகமெல்லாம் மண்.
மண் மறைத்தப் புண்.
ரத்தக்காயங்கள் நிரவியிருந்தன.

'வா' என்றழைத்த
கொலாடினின் கைபிடித்துக்
காலெடுத்தான்
ஜூனியஸ்.

11
அரச மருத்துவர்
அமைதியாக
விவரம் கேட்டார்.
ஓய்ந்திருந்தப் பிள்ளையின்
காயங்களைக் கட்டினார்.
தாயைத் தனிமையில் அழைத்தார்.

'என்னருமை யூரிதி!
உன் பிள்ளை உன்மத்தனல்ல' என்றார்.
'என்ன சொல்கிறீர் மருத்துவரே?'
என்று கேட்ட அன்னையை அடக்கினார்.
'அமைதி. யூரிதி, அமைதி.
தேவதையின் குறியைக் கேட்டாயா?
தாவி வந்துத் தாயை முதலில்
முத்தமிட ஓடியவர்கள்
மத்தியிலே உன் பிள்ளை மட்டும்
புத்தியினால் பயன் பெற்றான் யுரீதி
புத்தியினால் பயன் பெற்றான்!
அனைவருக்கும் தாயாவாள் பூமி.
அசல் தாய் அவள் ஒருத்தியே.
புவனம் அத்தனையும் ஈன்றெடுத்தாள்.
அவளை இவன் முத்தமிட்டான்.
முகத்தின் காயம் முத்தத்தின் காயம்.
விழுந்தவன் தொழுதவன்.
இவன்
உதட்டின் ரத்தம் நம்
தாயின் முத்தம்'.

திடுக்கிட்டாள் யூரிதி.
திடமாய்ச் சொன்னார் மருத்துவர்.
'ஆம் மகளே!
நீதியின் வேகம்
நத்தையின் வேகம்.
நீண்ட விரல்களின் நிற்காத பொம்மலாட்டம்.
வேண்டியபடி உன் மகன் முடியாளலாம்.
இது நீயும் நானும் நம் தாயும் அறிந்த ரகசியம்.
முத்தமிட்ட இவனை இனி
பித்தனாகவே இருக்கச் சொல்.
சத்தியம் இவனைச் சந்திக்கும் வரையில்
பித்தனுக்குப் பெரும் பாதுகாப்பு'
நன்றுரைத்து மருத்துவர்
சென்று மறைந்தார்.

12
காற்றானது காலம்.
வளர்ந்தனர் பிள்ளைகள்.
வாலிப வேகமும்
வாழ்க்கையின் வேகமும்
நண்பர்களை நெருக்கியது. விலக்கியது.

வளர்ந்து இளவரசான செஸ்டஸ்
பெருமுடி பெறுமுன்
ஒருமுடி அனுபவம் பெறக்
குறுநில மன்னன் ஆனான்.
தந்தையைத் தொடர்ந்து
முடிசூடத் தயாரானான்.
மதுவும் மாதும் மன்னருக்கழகென
புதுப் புதுக் கலைகள் பழகினான்.

இளவலின் தளபதி கொலாடின்.
இணைபிரியா நண்பனுமானான்.
அழகுத் தேவதைக் குழம்பு
இளம் பூக்களின் பிழம்பு
லுக்ரீஸ் என்னும்
இனிமைப் பெண்ணின் இதயக்கனி.
இதய அதர உரிமையாளன்.

மக்களுக்காக மக்களால் மன்னனேயன்றி
மன்னனுக்காக மன்னனால் மக்களல்ல
என்னும் பகுத்தறிவுத்
தத்துவங்கள் பேசித் திரியும்
பித்தனென்று ஊர் சிரித்தாலும்
மன்னர் குலமென்ற மரியாதையுடன்
தன்னந்தனியே வாழ்ந்தான் ஜூனியஸ்.

13
பதவி மோகம்
புறக்குருடனாய் பகை வளர்க்கும்
அகக்குருடனாய் அமைதி கெடுக்கும்
புதைகுழி
பரம்பரையை அழிக்கும்
தீராப்பிணி
நாராசம்
தனிமையின் விதை
மனிதத்தின் விழல்.

சிற்றப்பன் லூசியஸ் பதவி மோகத்தின் அதிபதி.
ஒட்டு மொத்தக் குத்தகையாளன்.

மாபெரும் எனும் அடைமொழி
விளக்காது தன்னை,
அளவிற் சிறியதென்னும்
அகந்தையுடையோன்.

அங்கிருந்தும் இங்கிருந்தும்
நாடுகளை இணைத்து
பெருஞ்சீசரின் கனவில்
இருமாந்திருந்தான்.

அடுத்தவர் நாடும் அடுத்தவர் மனையும்
எடுத்தவர் என்றும் கெடுத்தவர் ஆவர்.

தலைவனை மீறிய நெறிகள் இல்லையென
செருக்குடன் நடந்த லூசியஸ் மன்னன்
இருக்கும் நாடுகள் போதாதென்று
இன்னொன்றன்மேல் ஆசை கொண்டான்.

யுரீதியின் தந்தை மேல் போர் தொடுத்தான்.

முறையிட்டாள் யுரீதி.
மறையோதினான் லூசியஸ்.
'மாறுகிறது காலம்.
ஒரு குடையின் கீழ்
நாடுகள் இருக்க வேண்டும்.
மக்களை அடக்க முடியாமல்
சிக்கித் தவிக்கிறான் உன் தந்தை.
அவனுக்கு இது விடுதலை'.

மனம் வெறுத்த யுரீதி
மகன் நினைவில் ஒதுங்கினாள்.

கடுமையான போர்.
மகன் செஸ்டஸ் முன் நின்று போரிட்டான்.

போர் முடியும் தறுவாயில்
அரிதியா நகருக்கு
இளவலை அனுப்பிய லூசியஸ்
'மகனே, இது உன் பேரரசின் துவக்க விழா.
அரிதியா நகர ஆக்கிரமிப்பு.
இங்கிருந்து தொடங்கு உன் அரசை.
அரிதியாவில் அரியணை அமை.
சுற்றிலும் சீராக்கு.
வெற்றியுடன் திரும்பி வா.
பேரரசின் முடிசூட வா'
என்று ஆசி கூறித் திரும்பினான்.

14
அரிதியா தலைநகர்.
ஆயிரம் வீரர்களுடன் போர்.
அரிதியாவை அசர வைத்தான் கொலாடின்.
யுரீதியின் தந்தையை வென்றான்.

சிறை பிடித்த மன்னவனின்
கறை படிந்த சிரத்தைக் கொய்து
'இந்த வெற்றி உனக்கான என் பரிசு' என்று
முந்தி வழங்கினான் இளவலிடம்.

உயிர் நண்பனின் செய்கையில்
உவகை கொண்ட செஸ்டஸ்
உலகறியக் கூவினான்.
'என் நண்பன்!
என் உயிர்!
இனியவன் இனியிவன்
என் பேரரசின் பெருந்தளபதி!'.
தன் விரலையும் கொலாடின் விரலையும் கீறிக் குருதி கலந்தான்.
உன்னுயிர் என்னுயிரென்றான்.
நட்பின் சங்கமம் என்றான்.
'என் பேரரசின் தலைநகர்
உன் பெயரில் இனி
கொலாடியம் என வழங்கும்'.
நண்பனைக் கட்டினான்.
நாடு காணக் கட்டினான்.

15
எரிந்தது அரிதியா.
போரின் வெப்பம் தணியவில்லை.
மன்னனை இழந்த அரசு
மானத்தை இழக்க மறுத்தது.
இன்னும் போர் என்று இழுத்தது.

செஸ்டஸும் படையும்
இறுதி வெற்றிக்காக
உறுதியாகக் காத்திருந்தனர்.

களைப்பகலக் கூடாரத்தில்
மதுவும் மங்கையும் இருந்தாலும்
மன்னனும் நண்பனும் மக்களும்
மனம் சோர்ந்திருந்தனர்.

போருக்குத் துணைவந்த
ஓரூர் சிற்றரசன்
மாறுதலுக்கு இன்று நம்
மனைவி பற்றிப் பேசுவோமென்றான்.
'இனிமைகளைப் பேசுவோம்.
தனிமையினைப் போக்குவோம்' என்றான்.

வரிசையாகப் பேசினார்கள் வீரர்கள்.
மதுவின் போதையிலே
தத்தம் மனைவியரின்
அழகையும் அறிவையும் கற்பையும் பற்றி
பொழுதெல்லாம் பேசினார்கள்.

அள்ளவியலா லுக்ரீஸின் அழகைச் சொல்ல
மெள்ளத் தொடங்கினான் கொலாடின்.


லுக்ரீசின் சாபம் [16-18]


4 இளவல்களையும் இராணிகளையும் பாதுகாக்கப் பேடிகளை நியமிப்பது எகிப்து, கிரேக்க, ரோம் அரசினர் வழக்கமாக இருந்தது.

5 கிரேக்க வரலாற்றில் பித்தியா எனும் குறிதேவதை ஒரு மிகப்பெரிய மலைப்பாம்பின் உடலில் புகுந்தவள். பாறைகளுக்குப் பின்னால் அருவமாகவும் உருவமாகவும் இருந்து பித்து பிடித்தாற்போல் குறி சொன்னவள்.

6 குறி தேவதையின் இருப்பிடம் பொதுவாக ஒரு குகை வாயில், மூன்று தூண்கள், தூண்களை இணைக்கும் பாறைச்சுவர், மற்றும் தூண்களின் தலைமேடையில் ஒரு மண்டையோடு எனச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

7 நல்ல குறி சொல்லும் தேவதை, சொன்ன வேகத்தில் கெடுதலும் சொல்லும். குறி கேட்டு வந்ததும் நல்லதை அல்லது சாதகமானதை பொதுவில் அறிவிப்பதும், தீய குறிகளை மிக நெருங்கியவர்கள் தவிர யாருக்கும் தெரிவிக்காதிருபப்தும் அரச வழக்காக இருந்தது.

8 ரோம் மன்னரகளின் அழிவை இரண்டு தீய குறிகள் முன் காட்டியதாகச் சொல்லப்படுகிறது.
    - நாய் மனிதக் குரலில் பேசும்
    - தாய் உதட்டில் தனயன் முத்தமிடுவான்
இரண்டும் வெவ்வேறு காலக்கட்டத்தில் சொன்னதாகவும் நடந்ததாகவும் குறிப்புகள் உள்ளன. இடறி விழுந்து அழுந்தி முகத்திலும் உதட்டிலும் அடிபட்டு ரத்தக்காயம் பெற்ற நிகழ்வு, பூமித் தாயைத் தொட்டு முத்தமிட்டதன் குறி. ஷேக்ஸ்பியர் கதையில் இது மட்டுமே வருகிறது. கூடுதல் சுவைக்காக தமிழ்க் கதையில் இரண்டையும் இணைத்துள்ளேன். மனிதக் குரல் நாய் பின்னால் வரும்.