2010/07/31

கான்டேலே காதல்

போக்கற்ற சிந்தனை'பன்னாட்டுக் கலாசாரப் பார்வைகள்' என்ற தலைப்பில் ஒருவாரக் கண்காட்சி, புத்தகக்காட்சி, ஆய்வுரைகள், கருத்தரங்கம் என்று செவிக்குணவு இல்லாத பொழுது, பலவகை சிற்றுண்டிகள் எனச் சிறிது வயிற்றுக்கும் ஈந்தார்கள் சிகாகோ பொது நூலக நிர்வாகத்தினர். காதல் தொடங்கி கடவுள் வரை பரந்த சிந்தனைக்களம். இலவச உணவென்றார்களே என்று நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு போனேன். நாட் பேட். சாப்பாடும் சரி, சிந்தனையும் சரி. புராண இதிகாசங்கள் பற்றிய கருத்தரங்கில் பின்லந்து நாட்டுப் புராணம் பற்றித் தெரிந்து கொண்டேன்.

'காலேவால' (Kalevala) எனும் புராணக்கதை. வாயில் நுழையச் சிரமப்படும் பெயர்கள், அதனால் சுருக்கியிருக்கிறேன். பின்லந்து புராணக்காரர்கள் அடிக்க வரமாட்டார்கள் என்ற நம்பிக்கையில். நம்ம ஊர் தசரதனை டேஷ் என்று அழைத்தால் நாம் சும்மா இருப்போமா? இருந்தாலும் கதை முக்கியமே தவிர பெயர் அல்ல என்ற சுதந்திரத்தில் உங்களுடன் இந்தப் புராணத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். புராணம் என்பதால் வளவள உபகதைகளுடன் பக்கம் பக்கமாகப் போகிறது - கருக்குலையாமல் சுருக்கிச் சாரத்தைத் தர முயற்சி செய்திருக்கிறேன். நாமறிந்த புராணப் பாத்திரங்களின் பெயர்களை ஒப்பிடலுக்காகக் கொடுத்திருக்கிறேனே தவிர, வேறு எந்த எண்ணமுமில்லை.

            (THE KALEVALA | www.simplyreadbooks.com)
முக்கிய பாத்திரங்கள்/இடங்கள்:
    காலேவா: காலேவா குலத்தலைவன் (:: பரதன், ஜோசப்)
    காலேவால: காலேவா குலம் தழைத்த பூமி (:: பரதக்கண்டம்)
    ல்மாடார்: புனித அன்னை; எல்லாவற்றையும் படைத்தவள் (:: சக்தி)
    அதி: காற்று, கடல் இவற்றின் தலைவன் (வருணன்)
    விபுனன்: இசையின் தலைவன் (சிவன்)
    இமத்ரா: புனித நதி (கங்கை)
    ஐனோ: புராண நாயகி
    யோகைனன்: ஐனோவின் சகோதரன்
    கிபூடூட: பாவம், சோகங்களை ஏற்று நல்வழி அருளும் தலைவி (:: எமன், சக்தி)
    ஆலூயே: எல்லாச் செல்வங்களையும் அடக்கிய மந்திர நீர்நிலை (:: பாற்கடல்)
    லிங்க: மந்திரக் கருத்தரிக்க வைக்கும் ஒரு வகைப் பழம்
    மானு: பூமிக்கு அன்னை (:: பூமாதா)
    கூடார்: ஒளி (::சூரியன், சந்திரன்)
    லோகி: பாவம், இருளின் தலைவி (:: சாத்தான், எமன்)
    மார்யாதா: சக்தி, அன்னை, தலைவி, மந்திரக்கருவுற்று கடவுளின் பிள்ளையைப் பெற்றவள் (:: மாரியாத்தா? யேசுவின் அன்னை மேரி)
    ஸ்காப்: சக்தி வாய்ந்த வாத்து; அண்டங்களை எல்லாம் படைத்த புனித வாத்து அவதாரம் (:: விஷ்ணுவின் அவதாரங்கள்) - skypeன் பெயர்க் காரணம்?
    ஊகோ: ஆதிகடவுள் (:: சக்தி, சிவன், ஜெஹோவா)
    வாயீனமோயன்: புராண நாயகன்
    கான்டேலே: நரம்பு இசைக்கருவி (:: வீணை, ஹார்ப்)
    சம்போ: வேண்டியதை எல்லாம் தரவல்ல யந்திரம், சக்தி, மாயம்

மேற்சொன்னவை தவிர இன்னும் நாற்பது ஐம்பது பாத்திரங்களும் இடங்களும் உள்ளன. தலைசுற்றுமளவுக்கு உபகதைகள். தமிழ் சினிமா காமெடி போல் கதைக்கு வெளியே நிற்கும் உபகதைகள் ஏராளம். அடிப்படைக் கதை சுவையானது என்று நினைக்கிறேன்.

தொடக்கத்தில் ல்மாடார் தனியாக இருக்கிறாள். அழகும் இளமையும் கொண்ட கன்னியாகவே இருந்துவிடுவேனோ என்று வருந்தியவள் ஊகோவிடம் தன் வருத்தத்தைச் சொல்லி அழுகிறாள். இமத்ரா நதியில் இறங்கி நீந்தியபடி கடலில் கலக்கிறாள். அங்கே அதியின் வேகத்தில் (காற்று அலை வேகத்தில்) கற்பமாகிறாள். ஊகோவிற்கு நன்றி சொல்லி வாயீனமோயனைப் பெற்றெடுக்கிறாள். பெற்றதும் அவனை இயற்கையின் வளர்ப்புக்கு விட்டுவிடுகிறாள். வாயீன் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்குகிறான். வீரனாகிறான். அவனுக்கு வயதாகிறது. வாயீனுக்கும் யோகைனனுக்கும் ஒரு நாள் பெரிய சண்டை நடக்கிறது. யோகை வாயீனைக் கிண்டல் செய்ததும் இருவரும் விஷம் தோய்த்த அம்புகளினாலும் தங்கத்தினாலான கதைகளினாலும் போர் புரிகிறார்கள். முதியவனான வாயீன் இளைஞன் யோகையைப் பின்னி எடுத்து விடுகிறான். யோகை பணம், அரசு, நீர், நிலம் என்று பலவற்றைத் தருவதாகச் சொல்லி விடுதலை கேட்கிறான். வாயீன் தன்னிடம் எல்லாம் இருப்பதாகச் சொல்லி இன்னும் வறுத்தெடுக்கிறான். யோகை முடிவில் தன் தங்கை ஐனோவை மணம் செய்து கொடுப்பதாகச் சொல்கிறான். 'சரி, யார் இந்த ஐனோ பார்க்கலாம் வா' என்று யோகையுடன் சென்ற வாயீன், ஐனோவைப் பார்த்ததும் அவளுடைய அழகில் மயங்கி விடுகிறான். யோகையை விடுதலை செய்து அவனுடைய பெற்றோர்களிடம் விட்டு, ஐனோவை மணம் புரிய அனுமதி கேட்கிறான். ஐனோவின் தாய்க்கு ஒரே மகிழ்ச்சி. எப்பேற்பட்ட அறிவாளி, எப்பேற்பட்ட வீரன் தன் மகளை மணம் செய்யக் கேட்டு வந்திருக்கிறான் என்று அவளுக்குத் தலைகால் புரியவில்லை. சரி என்கிறாள். ஐனோ மட்டும் முடியாது என்கிறாள். 'அறிவு, வீரம் எல்லாம் சரி - இளமையில்லையே? நான் முதியவனைத் திருமணம் செய்து கொள்ள முடியாது' என்று மறுத்து விடுகிறாள். வாயீன் பல வகையில் தன் காதலை வெளிப்படுத்துகிறான். ஐனோவின் தாய் அவளை வற்புறுத்தித் திருமண ஏற்பாடுகள் செய்கிறாள். ஐனோ வீட்டை விட்டு ஓடி, இமத்ரா நதியிடம் தன் நிலையைக் கூறி அழுகிறாள். இமத்ரா நதி அவளைத் தன்னுடன் வரச்சொல்கிராள். தன்னுள் வாழும் மீனினத்துக்கு அன்னையாக இருக்கச் சொல்கிறாள். ஐனோவும் சரியென்று இமத்ராவுடன் சென்று விடுகிறாள். நதியில் மூழ்கிய ஐனோவை எண்ணி நொந்து போகிறான் வாயீன். தன் தவறை எண்ணிப் புலம்புகிறாள் ஐனோவின் தாய். 'பெற்றோர்களே, இனியாவது பிள்ளைகள் விருப்பப்படி நடந்து கொள்ளுங்கள்' என்று அறிவுரை சொல்லிவிட்டு உயிரை விடுகிறாள். வாயீன் காதல் சோகத்தில் அங்கே இங்கே என்று திரிகிறான். இடையில் அவன் பிறந்த பூமியான காலேவா வாசிகள் லோகியால் கொடுமைப் படுத்தப் படுகிறார்கள். 'நீ அவர்களை விடுவிக்கப் பிறந்தத் தலைவன், சும்மா காதல் சோகத்தில் புலம்பலாகாது' என்று வாயீனுக்குப் பல தேவதைகள் அறிவுரை வழங்கின. உடனே ஆதிகடவுளான ஊகோவிடம் வேண்டிப் பல சக்திகளைப் பெற்று வருகிறான் வாயீன். நன்றாகக் கான்டேலே வாசிக்கவும் வரம் பெற்று வருகிறான். திரும்பி வந்து கான்டேலே வாசித்து எல்லாரையும் நல்வழிப் படுத்துகிறான். முடியவில்லையென்றால் அடித்து நொறுக்கி நல்வழிப் படுத்துகிறான். 'நீ ஊகோவிடமிருந்து பெற்ற சம்போவைக் கொடுத்தால் உன் மக்களைத் துன்புறுத்தாமல் விட்டு விடுகிறேன்' என்று மிரட்டிய லோகியுடன் அனியாயத்துக்கு நாயடிப் பேயடிச் சண்டை போடுகிறான். லோகி 'இனி எவரையும் துன்புறுத்துவதில்லை' என்று உத்தரவாதம் கொடுத்து உயிர்ப்பிச்சை கேட்கிறாள். உயிர்ப்பிச்சை கொடுத்து, 'போகிற வழியில் கான்டேலே இசையைக் கேட்டு விட்டுப் போ' என்று அவளுக்கு வாசித்துக் காட்டுகிறான் வாயீன். இடையில் லிங்கப் பழத்தைச் சாப்பிட்டு மந்திரக் கருத்தரித்த மார்யாதாவை ஊரில் எல்லாரும் ஒதுக்கி வைக்கிறார்கள். அவளைக் கொல்வது தான் சரி என்று எல்லாரும் துரத்துகிறார்கள். அவள் வாயீனிடம் தஞ்சம் கேட்டு வருகிறாள். வாயீன் கொஞ்சம் யோசித்து விட்டு, 'ஊரார் சொல்வது தான் சரி, உன்னைக் கொன்று விடுகிறேன்' என்று அவளைத் துரத்துகிறான். அவளோ ஒரே ஓட்டமாக ஓடி இமத்ரா நதியிடம் தஞ்சம் அடைகிறாள். இமத்ரா நதிக்கு வந்ததும் வாயீன் தயங்குகிறான். ஐனோ நினைவு வந்து விடுகிறது. அதற்குள் மார்யாதாவுக்கு ஆண்குழந்தை பிறந்து விடுகிறது. சுய நினைவுக்கு வந்த வாயீன் தாயையும் சேயையும் கொல்ல வாளெடுக்கிறான் (கான்டேலேயை அவசரத்தில் வீட்டில் வைத்து விட்டு வந்த காரணத்தால்). உடனே பிறந்த குழந்தை பேசுகிறது. 'வாயீன் கிழவா, ஐனோ இறப்பதற்கு நீ தானே காரணம்?' என்கிறது. மறுபடியும் ஐனோ நினைவு வந்து மனம் மாறுகிறான் வாயீன். இமத்ரா நதியில் தொலைவில் பல வண்ண மீன்கள் துள்ளிக் குதிக்கின்றன. 'வா, கான்டேலே சொல்லித் தருகிறேன்' என்று அவனை அழைத்துக் கொண்டு ஊருக்குத் திரும்புகிறான் வாயீன். எல்லோரிடமும் குழந்தையைக் காட்டி, 'இனி இவன் தான் உங்கள் குலத் தலைவன்' என்று சொல்கிறான். மக்கள் ஜே ஜே என்கிறார்கள். கான்டேலே சொல்லிக் கொடுத்துவிட்டு, இமத்ரா நதிக்குப் போகிறான். மீன்கள் துள்ளிக் கொண்டிருக்கின்றன. நதி சுழன்று சுழன்று ஓடுகிறது. ஐனோ தன்னை அழைப்பது போலிருக்கிறது வாயீனுக்கு.

இது தான் பின்லந்து நாட்டின் பிரதான புராணமாம். கொஞ்சம் என் பாணியில் எடுத்து எழுதியிருக்கிறேன் என்றாலும் மையக்கருவிலிருந்து விலகவில்லை என்று நினைக்கிறேன். தேவ வரம், பாயசம், பழம் என்று மாயமாகக் கருத்தரிக்கும் வித்தை எல்லா நாட்டுப் புராணங்களிலும் வருகிறது. பெயர் சாயல் ஒற்றுமையும் வியப்பைக் கொடுத்தது. சொல்லாமல் சொல்லியிருக்கும் காதல் கரு என்னை மிகவும் கவர்ந்தது. காதலும் இசையும் தான் மகிழ்ச்சி எனும் கருத்தைச் சொல்லும் புராணக் கதையை வாய்ப்பு கிடைத்தால் அவசியம் படியுங்கள்.

2010/07/23

கடைசி வண்டி  'இன்றோடு இந்தத் தொழிலுக்குக் கும்பிடு' என்று அன்றைக்கு மட்டும் அவன் ஐம்பதாவது முறையாக எண்ணிக்கொண்டான்.

பின்னிரவை முட்டிக் கொண்டிருந்தது இளவிடியல். நிலவொளி இனம் புரியாதபடி அச்சமூட்டியது. தேசிய நெடுஞ்சாலை 94ல் சீராகச் சென்று கொண்டிருந்தது அவனுடைய பால்வண்டி. விடிவதற்குள் மினியெபொலிஸ் சேர்ந்துவிடலாம் என்று நினைத்தான். தன் தொழிலுக்கென்றே வடிவமைக்கப்பட்ட இருபதாயிரம் கேலன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பால்தொட்டி பொருத்திய பதினெட்டு சக்கர க்ராஸ்லேன்ட் டிரக்கில், விஸ்கான்சின்-மினசோடா எல்லையருகே வடக்கு நோக்கி விரைந்து கொண்டிருந்தான். பால் ஏற்றி வரும்போது அதிக எடை காரணமாகச் சோதனை அதிகாரிகளிடம் பலமுறை அகப்பட்டுக் கொண்டிருக்கிறான். எடை ஏறக்குறைய இருந்தாலாவது அபராதம் கட்டித் தப்பித்துக் கொள்ளலாம். இந்த முறை அவன் செய்வது கடத்தல். பால்தொட்டிக்குள், பதிமூன்று முதல் பதினெட்டு வயது வரையிலான ஒன்பது இளம் பெண்களைக் கடத்திக் கொண்டு வருகிறான். சிக்கினால் சிறையும் கிடைக்கலாம், கொலையும் நடக்கலாம்.

கழுத்தருகே ரத்தக்காயம் இன்னும் வலித்தது. டொலீடோவில் நிறுத்தி ஒன்பது பெண்களுக்கும் சாப்பாடு வாங்கிக் கொண்டு போனதைக் கவனித்து, அவனைப் பின்தொடர்ந்த டேனியின் இரண்டு ஆட்களையும் ஆண்கள் கழிவறையில் நாறாய்க் கிழித்துப் போட்டிருந்தான். அப்போது ஏற்பட்ட காயம். தவிர்த்திருக்கக் கூடிய சண்டை என்றாலும் டேனிக்குச் செய்தியனுப்பவேண்டி மிகையான வன்முறையைக் கையாண்டிருந்தான். டொலீடோவில் தப்பித்தது அதிசயம். டேனியின் ஆட்கள் விஸ்கான்சின் எல்லையருகே ஹட்சனில் நிச்சயம் காத்திருப்பார்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நினைத்துச் சாலையில் கவனம் செலுத்தினான்.

உள்ளே அடைபட்டுக் கிடந்த பதிமூன்று வயதுப் பெண் நினைவுக்கு வந்தாள். திட்டப்படி எல்லாம் நடந்து முடிந்ததும், இசைந்தால் அவளை இன்றைக்கு வீட்டுக்கு அழைத்துப் போகவேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

  ந்த முறை அவள் தான் முதல் பயணி. பாஸ்டன் அருகே ஊஸ்டரில் அவளைச் சந்தித்தான். 'முலைமுனை' என்று வழங்கப்படும், இளம் பெண்கள் மேலாடையின்றி நட/நடனமாடும், ஆண்களுக்கான பொழுதுபோக்கு அரங்கத்துள் இரண்டங்குல இரும்புத்தூணில் கால்களைப் பிணைத்துக் கொண்டு ஆடிக் கொண்டிருந்தவளை, தனியறையில் சந்திக்க முதலாளியிடம் பேரம் பேசினான். அரை மணி நேரத்துக்கு முப்பத்தைந்து டாலர். பேருக்கு ஏதோ போர்த்திக் கொண்டு தனியறையில் அவனைச் சந்தித்தவள், உடனடியாகப் பயந்தாள்.

"அண்ணே, எனக்கு அது பழக்கமில்லே.. இது வேணும்னா..." என்று கைகளை வாயருகே வைத்துச் சைகை காண்பித்தாள்.

"உனக்கு என்ன வயசு?" என்று கேட்டான்.

"பதினெட்டு" என்றாள்.

"கொன்னுடுவேன், உண்மையைச் சொல்லு" என்றான்.

"பதினெட்டு தான்..." என்றாள் தயங்கியபடி.

"ஜட்டியை அவுடி, பாக்குறேன்" என்றான் கோபத்துடன்.

நடுங்கி விட்டாள். "இல்லண்ணே, எனக்கு பதிமூணு ஆவுது அண்ணே...முதலாளி தான் பதினெட்டுனு சொல்லச் சொன்னாரு... என்னை ஒண்ணும் செஞ்சிடாதீங்க" என்றாள்.

பொறுமையாக அவளை ஏற இறங்கப் பார்த்தவன், "என் கூட வரியா?" என்று கேட்டான். எல்லா விவரமும் சொன்னான். உடன் வராவிட்டால் போலிசிடம் சொல்லி விடுவதாக பயமுறுத்தியதும் இசைந்தாள். "முதலாளி கொன்னுடுவாரு.." என்று தயங்கினாள்.

அடுத்த இருபது நிமிடங்களில் முதலாளியிடம் பேரம் பேசி ஆயிரம் டாலர் கைமாறியதும், அவளைப் பால்வண்டியில் ஏறச் சொன்னான். மேலிருந்து கீழே மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட பால்தொட்டியில், கீழ்ப் பகுதியிலும் மேல் பகுதியிலும் மட்டும் பால் இருந்தது. இடைப்பகுதியில் கடத்தலுக்காகவே பத்து படுக்கைகள், ரெயில்வே பெர்த் போல் வடிவமைக்கப்பட்டிருந்தன. ஓட்டுனர் அறை வழியாக பால்தொட்டியின் இடைப்பகுதிக்குள் நுழைந்தவளை உள்ளே போய் படுக்கச் சொன்னான். பயந்து கொண்டே உள்ளே போனாள். சரக்கு கிடைத்ததாகச் செல்போனில் செய்தி அனுப்பியதும், அடுத்த சரக்கு நியுயார்க் அருகில் பதினாறு பவுண்டு என்று விலாசத்துடன் மறுசெய்தி வந்தது. பதினாறு வயதுப் பெண் என்று புரிந்து கொண்டான். கதவை அடைத்துவிட்டு வண்டியைக் கிளப்பினான்.

  முப்பது வருடமாக இதே தொழிலில் டேனியிடம் நாணயமாக வேலை பார்த்து வந்தான். படிப்பில் விருப்பமில்லாமல் ஓடிப் போன பெண்களும், அப்பனுக்கோ வீட்டில் அத்து மீறி நடக்கும் மற்ற ஆண்களுக்கோ, சில சமயம் கணவனுக்கோ, பயந்து வீட்டை விட்டு ஓடி வழிதவறிப் போன பெண்களும், வேறு எதற்காவது ஆசைப்பட்டு மோசம் போன பெண்களும்... இது போன்ற சிற்றூர்களில் ஆபாச நடனத்திலும் விபசாரத்திலும் ஈடுபட்டிருக்கும் விவரம் டேனிக்குக் கிடைக்கும். அந்தச் சிற்றூர்களிலிருந்து இருபது வயதுக்குட்பட்ட இளம் பெண்களை ஆசை காட்டியோ, பயமுறுத்தியோ, பல சமயம் போதை மருந்து கொடுத்தோ, முதலாளியிடம் பணம் கொடுத்தோ, கடத்திக் கொண்டு போய் லாஸ்வேகசிலும் ரீனோவிலும் தலைக்கு ஐந்தாயிரம் பத்தாயிரம் டாலரென்று வயதுக்கும் வளர்ச்சிக்கும் ஏற்றபடி விற்க வேண்டியது அவன் வேலை. வேலை முடிந்ததும், ஒரு பெண்ணுக்கு ஐநூறு டாலர் என்று கணக்குப் பார்த்து டேனி அவனிடம் பணம் கொடுக்கத் தவறியதே இல்லை. சென்ற நான்கு வருடங்களாக அவன் தனியாக வந்து விட்டான். டேனியையோ மற்ற ஆட்களையோ காட்டிக் கொடுக்காவிட்டாலும், தனியாகத் தொழில் செய்ய வந்தது டேனிக்குப் பிடிக்கவில்லை.

பெண்கள் கடத்தல் வேலை நிறையவே மாறிவிட்டது என்று நினைத்தான். முன்பெல்லாம் வெள்ளைக்காரப் பெண்கள் தான் இப்படிச் சிக்குவார்கள். பிறகு மெக்சிகோ, பொலிவியா என்று தென்னமெரிக்கப் பெண்கள் சிக்கத் தொடங்கினார்கள். பல கிழக்கு ஜெர்மனி, போலந்து, ஆப்பிரிக்கப் பெண்களைக் கடத்தியிருக்கிறான். சமீப காலமாக இளம் இந்தியப் பெண்கள். சீனப் பெண்கள். படிக்க வேண்டிய வயதில் ஏன் இத்தனை இளம் பெண்கள் இப்படி அகப்பட்டுக் கொள்கிறார்கள் என்று நினைத்திருக்கிறான். அவர்கள் வீட்டை விட்டு ஓடாவிட்டால் தனக்கு ஏது பிழைப்பு, எல்லாம் ஆண்டவன் விட்ட வழி என்று அடங்கி விடுவான்.

ஹட்சன் வருவதற்குள் ஏதாவது யோசிக்க வேண்டும். இல்லாவிட்டால் சரக்கையெல்லாம் வண்டியோடு சேர்த்து டேனி எடுத்துக் கொண்டு போய் விடுவான். வலது இருக்கையில் இணைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் சேனலை மாற்றி பால் வண்டிக்குள் நடப்பதைக் கவனித்தான். மற்றப் பெண்கள் தூங்கிக் கொண்டிருக்க ஏழாவது படுக்கையில் இரண்டு பெண்கள் எதிரெதிரே மண்டியிட்டுப் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆல்பெனியில் பிடித்த இரட்டையர்கள். அவர்களைச் சரியாகச் சோதனை செய்யாதது தவறோ? ஏதாவது அசட்டுத்தனம் செய்து வைக்கப் போகிறார்களே என்று நினைத்தான்.

ஆல்பெனியில் பதினேழு பவுண்டு என்று கிடைத்தச் செய்திப்படி விடுதி மேடம் மார்கோவிடம் பேரம் பேசித் தனியறைக்குள் போனதுமே, தான் போட்டிருந்த கால்சட்டையை கழற்றிப் போட்டாள் அந்தப் பெண். அவளைத் தடுத்து நிறுத்தி உடன் வரும்படி அழைத்து விவரமெல்லாம் சொன்னான். அடி உதை கிடையாது, வாரா வாரம் பணமும் கிடைக்கும் என்று ஆசை காட்டியவுடன் "என் தங்கையும் கூட வந்தால் தான்" என்று அடம் பிடித்தாள். அப்போது தான் இரட்டையர் என்ற விவரமே தெரிய வந்தது. வேறு வழி தெரியாமல் இருவரையும் அழைத்துக் கொண்டு வந்ததில் அவனுக்கு ஓரளவு திருப்தி தான் என்றாலும், அவர்களைச் சரியாகச் சோதனை செய்திருந்தால் டொலீடோவில் ஏற்பட்டதைத் தவிர்த்திருக்கலாம் என்று நம்பினான்.

டேனியின் இரண்டு ஆட்களயும் அடித்துப் போட்டுவிட்டு கழுத்தில் ரத்தம் சொட்டச் சொட்ட வண்டிக்குள் போனதும், அந்தப் பெண்கள் இவன் கழுத்தைத் துடைத்த போது, இரட்டையரில் இரண்டாமவள் கையில் கட்டியிருந்த அடையாளத் தகட்டை கவனித்தான்.

"என்ன அது?" என்றான்.

"அதிர்ஷ்ட தாயத்து, கழற்றாதே என்று மார்கோ தான் சொல்லிக் கொடுத்தாள்" என்றாள் இரண்டாமவள்.

"கழற்று. அது தாயத்து இல்லை. ஜிபிஎஸ் அடையாளம். இதை வைத்து டேனி நம்மைத் தொடர்ந்து வந்திருக்கிறான். நீங்கள் இருக்கும் இடம் இன்னும் தெரியாது என்றாலும் கண்டுபிடிப்பது சுலபம். என்னிடம் இந்த வண்டியைத் தவிர எதுவும் கிடையாது" என்றான் கோபத்துடன். ரத்தக்காயத்தைக் கட்டுப்படுத்தக் கூட நேரம் எடுத்துக் கொள்ளாமல் வண்டியை கிளப்பினான்.

ஆல்பெனிக்குப் பிறகு அடிகா, சிரக்யூஸ், ஈரி, ஆக்ரன் என்று பல இடங்களில் பெண்களை ஏற்றிக் கொண்டு சுமுகமாக விஸ்கான்சின் எல்லை வரை வந்து விட்டிருந்தாலும், மார்கோ ஏமாற்றிவிட்டாளே என்று மீண்டும் ஆத்திரம் வந்தது. என்னிடம் பணம் வாங்கிக் கொண்டு டேனியிடம் காட்டிக் கொடுத்துவிட்டாளே? மினியெபொலிஸ் பற்றிச் சொல்லியிருப்பாளோ? அவர்களுக்கு ஏதாவது ஆபத்து வந்திருக்குமோ? மினியெபொலிஸ் ஆட்களுக்கு போன் செய்தான். பதிலில்லை. ஹட்சன் கடந்தபின் மறுபடி போன் செய்து அப்பொழுதும் பதில் வராவிட்டால், திட்டப்படிச் சரக்கை மாற்றிடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். சிக்கல் தான். முதலில் ஹட்சனிலிருந்து தப்பிக்க வழி செய்யத் தீர்மானித்தான்.

  'ஹட்சன்: 3 மைல்' என்ற அறிவிப்புப் பலகையைப் பார்த்ததும் வேகத்தைக் குறைத்தான். குறுக்கு வழியில் போக ஒரு கணம் யோசித்துவிட்டு, எண்ணத்தைக் கைவிட்டான். பொது இடங்களின் பாதுகாப்பு அவனுக்குத் தேவைப்பட்டது. எல்லையருகே நெடுஞ்சாலைப் பயணிகளுக்கான ஓய்வு மையத்துள் நுழைந்து, ஷெல் பெட்ரோல் நிலையத்துள் ஒதுக்குப்புறமாய் வண்டியை நிறுத்தினான். கண்டிப்பாக டேனியின் ஆட்கள் இங்கே இருக்கிறார்கள் என்று உணர்ந்தான். எப்படியாவது தப்பிக்க வேண்டும். கடவுளே, இன்றைக்கு ஒரு முறை எனக்கு உதவி செய். இன்றுடன் இந்த வேலையை விட்டு விடுகிறேன். பால்தொட்டியின் இடைப்பகுதி கதவைத் தட்டினான். இரட்டையர்கள் எழுந்து வந்தனர்.

"என்ன?" என்றார்கள்.

"என்ன ஆனாலும் சரி, போலீஸ் வந்தாலொழிய நீங்க யாரும் வெளியே வரவேண்டாம், புரியுதா? அவங்கள்ளாம் இன்னும் தூங்குறாங்களா?" என்றான்.

"இல்லை, சும்மா தான் படுத்துட்டிருக்காங்க. நாங்க எல்லாம் ஒண்ணுக்குப் போவணும். பசி வேறே"

"நான் எதுனா ஏற்பாடு செய்றேன். திரும்பி வரமட்டும் நான் சொன்னது கவனம் இருக்கட்டும்" என்று திரையை இழுத்து, மூடிய கதவை மறைத்தான். வண்டிக்குள்ளிருந்த ஐந்து கேலன் காலித்தொட்டி ஒன்றை எடுத்துக்கொண்டு நிலையத்திலிருந்த முப்பது பம்புகளில் ஆளில்லாத பம்ப் ஒன்றில் பொறுத்தி, இயக்கிவிட்டு ஒதுங்கினான். ஐம்பதடி நடந்து சிகரெட் ஒன்றைப் பற்றவைத்து இரண்டு இழுப்பு இழுத்துவிட்டுத் தரையில் எறிந்தான். விரைவில் தொட்டி நிரம்பி பெட்ரோல் வழிந்தோடும். அதிர்ஷ்டமிருந்தால் சிகரெட் நெருப்பில் சிக்கி இந்த இடம் தீப்பற்றும். காவல் துறையும் தீயணைப்புத் துறையும் வந்து குட்டையைக் குழப்புவார்கள். அந்தக் குழப்பத்தின் பாதுக்காப்பில் தப்பிவிடலாம் என்று திட்டமிட்டான்.

ஓய்வறைக்குள் நுழைந்து, தெரிந்த முகம் ஏதாவது தென்படுகிறதாவென்று பார்த்தான். மெள்ள நடந்தபடி உணவகத்திலிருந்த பல கடைகளை நோட்டமிட்டான். நூறு பேர் பிடிக்கும் இடத்தில் பத்து பேர் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். கண்டிப்பாக இங்கே இருக்கிறார்கள் என்றது அறிவு. டாகோ பெல் கடைக்குள் நுழைந்தான். கடைக்காரப் பெண்ணிடம், "இரண்டு சிக்கன் பரீடோ, இரண்டு என்சிலாடா" என்றான். ஒவ்வொரு கடையிலும் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிக் கொள்ள நினைத்தான். உணவு வரும் வரை ஓய்வெடுக்கலாம் என்று உட்கார்ந்தவனைச் சுற்றி நான்கு பேர், காற்றிலிருந்து உண்டானது போல், எங்கிருந்தோ வந்து அமர்ந்தனர். நால்வரில் ஒருவன் டேனி.

"டேனியல்.. எங்கே இன்னும் காணோமே என்று பார்த்தேன். நலமா?" என்றான். பயப்படுவதாகக் காட்டிக் கொள்வதில்லை என்று தீர்மானித்திருந்தான்.

"வாயைத் திறக்காம எங்களோடு வா" என்ற டேனி, இடுப்பில் மறைத்து வைத்திருந்தத் துப்பாக்கியைக் காட்டினான்.

இவர்கள் எல்லோரையும் கண்டு சந்தேகப்பட்ட கடைக்காரப் பெண், துப்பாக்கியைப் பார்த்து நடுங்கி துரிதமாக மறைந்து போனாள்.

"நீ கடத்திக்கிட்டு வந்த பொண்ணுங்களை என் கிட்டே கொடுத்துடு" என்றான் டேனி.

"நான் யாரையும் கடத்தலை. என் வண்டியைச் சோதனை போட்டுக்க. பத்தாயிரம் கேலன் பால் தான் எடுத்துட்டுப் போறேன்" என்றவன், ஓரக்கண்ணால் வலது பக்கத்திலிருந்த டேனியின் ஆள் தன்னைக் கத்தியால் குத்த வருவதைக் கவனித்து, புயல் வேகத்தில் பின்வாங்கி இடது பக்கத்திலிருந்தவனைக் கவசமாய் இழுத்து, கத்திக்குத்தைத் தாங்கினான். குத்த வந்தவன் சுதாரிக்குமுன் அருகிலிருந்த நாற்காலியை எடுத்து அவன் மண்டையில் ஓங்கி அடித்தான். அடி வாங்கியவன் மண்டையிலிருந்து ரத்தம் தெறித்துக் கீழே விழுந்தான். டேனியும் எஞ்சியிருந்த மற்றவனும் தன் மேல் பாய்வதைப் பார்த்து, கீழே விழுந்து கிடந்தவனை அப்படியே தூக்கிச் சுழற்றி அவர்கள் மேல் எறிந்து விட்டு ஓடினான்.

டேனி சுட்டான். துப்பாக்கி வெடிச்சத்தம் கேட்டு அவன் உருள, வெளியே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் அலறிக்கொண்டு ஓடினார்கள். டேனி மறுபடி சுட்டான். குண்டு அவன் இடது காலைத் தேய்த்துக் கொண்டு போக, சுருண்டு விழுந்தான். டேனியும் ஆளும் நொடியில் அவனருகில் வந்தனர். அவன் நெற்றியில் துப்பாக்கியை வைத்து அழுத்தி "வீணாச் சாவாதே" என்றான் டேனி. "எழுந்து நட, உன் வண்டிக்கு" என்றான்.

அவர்களுடன் வண்டியை நோக்கி நடந்தான். எப்படித் தப்புவது? பாழாய்ப் போன சிகரெட் என்னவானது? இத்தனை நேரம் இந்த இடமே எரிந்திருக்க வேண்டுமே? யாராவது பார்த்து அணைத்து விட்டார்களா? அவன் மனம் அலைபாய்ந்தது. வண்டியருகே வந்து விட்டார்கள்.

"நீ வெளியே நில்" என்றான் டேனி. அருகிலிருந்தவனிடம் "இவன் நவந்தா சுட்டுத் தள்ளு, நான் வண்டிக்குள்ள பாக்குறேன்" என்றபடி தொட்டியின் இடைப்பகுதியை மறைத்த திரையை விலக்கினான். அவனைப் பார்த்துச் சிரித்தான் டேனி. "நான் சொல்லிக் கொடுத்த வித்தையை என் கிட்டேயே காட்டுறியா?". கதவை உதைத்துத் தள்ளி உள்ளே நுழைந்தான்.

உள்ளே நுழைந்த பத்து நொடிகளுக்குள் வெடிச்சத்தம் கேட்டது. டேனியின் துப்பாக்கி என்று நினைத்து அதிர்ந்தவன், திரும்பிப் பார்த்தான். அவனெறிந்த சிகரெட் துண்டிலிருந்து பற்றி வேகமாகப் பரவிக் கொண்டிருந்த தீயில் சிக்கிய ஒரு டயர் வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தது. அதிர்ச்சியில் இருவரும் தரையில் விழுந்தார்கள். அவனோ விழுந்த வேகத்தில் எழுந்து, அருகிலிருந்த டேனி ஆளின் கழுத்தை நெறித்துப் போட்டான். வேகமாக வண்டியில் ஏறினான். கவனமாக இடைப்பகுதிக்குள் நுழைந்தவன், கீழே குப்புற விழுந்து கிடந்த டேனியைப் பார்த்தான். டேனியின் மண்டையிலிருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது.

"எங்களுக்கு ஒண்ணுக்கு போவ அவசரம். நீ வர்றதுக்குள்ள இரண்டிரண்டு பேரா போவலாம்னு முடிவு செஞ்சு நாங்க இரண்டு பேரும் போனப்ப நீங்க சண்டை போட்டுக்கிட்டிருந்ததைப் பார்த்தோம். அதான் இங்கே வந்து தயாரா இருந்தோம். உள்ளே வந்தவனை இடறிட்டு, அவன் தலையைப் பிளந்துட்டோம்" என்றனர் இரட்டையர். "கீழே விழுந்த டேனி தன்னோட துப்பாக்கியினாலேயே சுட்டுக்கிட்டான்". டேனி முனகினான்.

"உனக்கென்ன.. இப்படி கழுத்திலும் காலிலும் கையிலும் ரத்தமா கொட்டுதே?" என்றாள் அவனைப் பார்த்த இன்னொருத்தி.

"அதெல்லாம் ஒன்றுமில்லை. மொதல்ல டேனியை இங்கிருந்து தூக்கிப் போடணும்.. ஒரு கை கொடுங்க" என்றான். பெண்கள் உதவியுடன் டேனியைத் தூக்கி வெளியே எறிந்தான். தரையில் விழுந்த டேனி துடித்து அலறினான். "வேண்டாம்... தீ.. தீ" என்றான். விழுந்த இடம் அதற்குள் சூடேறிவிட்டது.

அவன் டேனியிடம் "அதிர்ஷ்டமிருந்தால் பிழைத்துக் கொள், இல்லாவிட்டால் கரியாகு" என்றான். வேகமாகப் பரவிக்கொண்டிருந்த தீ பின்தொடர, வண்டியைக் கிளப்பி அங்கிருந்து அவசரமாக விலகினான். பெட்ரோல் பம்பைச் சுற்றியிருந்த தானியங்கி நீர்த்தூறல் கருவிகள் தீயணைக்க முனைய, வந்திருந்த தீயணைப்புக் குழு மற்றும் காவல் துறையினர் தீயணைப்பதிலும் போக்குவரத்தைச் சீர்படுத்துவதிலும் கவனமாக இருந்தார்கள். அவன் பால்வண்டியை பெட்ரோல் பம்பின் பின்புறமாக ஓட்டிச் சென்று வரிசையாக நின்று கொண்டிருந்த நூற்றுக் கணக்கான வண்டிகளுடன் கலந்தான்.

மினியெபொலிஸ் சேரும் போது காலை ஒன்பது மணிக்கு மேலாகிவிட்டது. திட்டப்படி எல்லோரையும் மேரிஜேகப் நிலையத்தில் இறக்கிவிட்டான். வீட்டுக்குக் கிளம்பத் தயாரான போது அவனுக்கு மயக்கமாக வந்தது.

"உடம்பெல்லாம் இப்படி ரத்தக்காயமாக இருக்குதே... டாக்டரை அனுப்புறேன்" என்றாள் கிரேஸ், நிலையத்தின் தலைமையதிகாரி.

"ஓய்வெடுத்தா எல்லாம் சரியாயிடும். மாலை ஆறு மணி போல் திரும்பி வரேன்" என்றான். அவனையே பார்த்துக் கொண்டிருந்த பதிமூன்று வயதுப் பெண்ணைப் பார்த்துச் சிரித்து, அவள் கன்னத்தைத் தட்டினான். "இன்னிக்கு என் வீட்டுல வந்து ராத்தங்கிக்க, புரியுதா?" என்றான். அவள் புரியாமல் தலையாட்டினாள்.

அன்று மாலை இறந்து போனான்.

  டுத்த வாரங்களில் மேரிஜேகப் நிலையத்தைப் பற்றித் தொலைக்காட்சியிலும் செய்திப் பத்திரிகைகளிலும் நிறையவே அடிபட்டது. தொலைக்காட்சிப் பேட்டியில் கிரேஸ் சொல்லிக் கொண்டிருந்தாள் "... சிக்கிக் கொண்ட இளம் அபலைப் பெண்களை விடுதிகளிலிருந்து மீட்டுக்கொண்டு வந்து காப்பாற்றி இருக்கிறோம். சென்ற நான்கு வருடங்களில் இதுவரை ஐம்பது பேரை எங்கள் நிலையம் காப்பாற்றி புதுவாழ்வு அளித்திருக்கிறது. சேவை இயக்கமான எங்களால் இது போல் அபாயகரமான விழிப்புணர்ச்சி முயற்சிகளில் பிறர் உதவியில்லாமல் இறங்கிக் கொண்டிருக்க முடியாது. இவர்களையெல்லாம் காப்பாற்றி எங்களிடம் சேர்த்தவரைப் பற்றிச் சொல்ல விரும்புகிறேன்...."

டிவி பார்த்துக்கொண்டிருந்த பதிமூன்று வயதுப் பெண், அவனுக்காகச் சொட்டுக் கண்ணீர் சிந்துவாள் போலிருந்தது.

2010/07/02

வைகறை

சிறுகதை


    லொட்டை ஸ்ரீமதியை மறுபடி சந்திப்பேன் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை.

உலக இலக்கியப் பராமரிப்புப் பேரவை என்று யுனெஸ்கோவின் ஆதரவில் நடக்கும் ஒரு வாரக் கூத்துக்கு வாடிக்கையாகப் போய்க்கொண்டிருக்கிறேன். சொல்லிக் கொள்ளும்படி இல்லையென்றாலும் இலக்கியப் பராமரிப்பு என்ற பெயரில் இது தான் என் வேலை. எனக்கும் என் இரண்டு பேர் குழுவுக்கும் நாலு வருடத்துக்கு ஒரு முறை சம்பளம் கேட்டு பட்டுவாடா செய்யும் கௌரவப் பிச்சை. இந்த முறை என்னை நிதிக் குழுவின் தலைவராகப் போட்டிருந்ததால் மற்ற பிச்சைக்காரர்களைப் பார்த்துப் பேசிக் கர்வப்பட வாய்ப்பு கிடைத்தது. நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வழக்கம் போல் அரைத்த மாவை அரைத்துக் கொண்டிருந்தக் கூட்டத்தில், வழி தவறிய தேவதையைப் போல் வந்த ஸ்ரீமதியைப் பார்த்தேன்! மறைந்து கொண்டிருக்கும் காளிதாசனின் சம்ஸ்க்ருத இலக்கியங்களை மீண்டும் பொதுவுக்குக் கொண்டு வரும் நோக்கத்துடன் இந்தியாவில் காளிதாசன் படைப்புகளைத் தழுவிய ஒரு இலக்கியச் சுற்றுலாத் திட்டத்தை விளக்கி நிதி திரட்ட வந்திருந்தாள். தன்னால் நீண்ட நேரம் நிற்க முடியாது என்று பணிவாகச் சொல்லிவிட்டு மேடையில் உட்கார்ந்தபடியே பேசினாள். அவளைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது.

எனக்கு மட்டுமே புலப்படுகிற முறுவலை மின்னல் போல் காட்டிவிட்டு, பராமரிப்புத் திட்டத்தை விளக்கத் தொடங்கினாள். முகத்தில் முதிர்ச்சியின் அடையாளங்கள் தெரிந்தாலும், களை மாறவேயில்லை. ஓரக்கண்ணால் சுற்றிலும் பார்த்தபடி அமைதியாகவும் அழுத்தமாகவும் பேசும் அந்த மேனரிசம் இப்போது இன்னும் கவர்ச்சியாகத் தோன்றியது. அந்த முறுவல்! உதடுகள் விரிவது போல் பாசாங்கு செய்து கன்னத்துடன் கலக்கும் இடத்தில் காலரைக்கால் மிலிமீடர் அவசரக் குழி வெட்டி, அடக்கமும் பிடாரித்தனமும் அளவாகக் கலந்த வசீகரம்! அன்றைக்கு விழுந்தது போலவே விழுந்தேன்.

    ஸ்ரீமதி என்னை விட ஒரு வயது மூத்தவள். குரோம்பேட்டையில் குடியிருந்த போது ஒரே பள்ளிக்கூடத்தில் படித்தோம். பக்கத்துத் தெருக்களில் குடியிருந்தோம். குடும்பப் பழக்கம். ஓரளவுக்கு எங்களை விடச் சுமாரான நிலையில் இருந்தாலும், அவள் குடும்பமும் வறுமைக்கோட்டை அண்ணாந்து தான் பார்த்துக் கொண்டிருந்தது. கோடையானதும் அவளுடைய பாடப் புத்தகங்கள் என் வீட்டுக்கு வந்து விடும். என்னிடம் காசு வாங்கவே மாட்டாள். 'இருக்கட்டும் மாமி' என்று அம்மாவும் பெண்ணும் புத்தகத்தைக் கொடுத்து விட்டுப் போய்விடுவார்கள். அதிகம் பேசியது கிடையாது. அவ்வப்போது பார்த்தாலும் ஒதுங்கிப் போய்விடுவோம் என்றாலும், உள்ளுக்குள் ஒரு ஈர்ப்பு இருந்தது. அவளும் வகுப்பில் முதல் ரேங்க். நானும். பள்ளிக்கூட இலக்கியப் போட்டிகளில் அவள் முதல் பரிசென்றால் நான் இரண்டாவது; சில சமயம் நிலை மாறி நான் முதல் பரிசு வாங்கினால் முகமெல்லாம் சந்தோஷப்படுவாள். என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவள் முகத்தில் தோன்றும் முறுவல் எனக்குப் பிடிக்கும். பேச வேண்டிய அவசியமே எனக்குத் தோன்றாது. அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும் போலிருக்கும்.

முதல் முதலாக அவளுடன் பேசியது சம்ஸ்க்ருத வகுப்பில். அம்மாவின் தொல்லை தாளாமல் நானும் என் தம்பியும் வாரத்தில் மூன்று நாள் போவோம். தொடர்ந்து ஆறு வாரம் போனால் ஒரு ரூபாய் கொடுப்பார்கள்; அதற்காகவும். என் தம்பி ஒரு வயது இளையவன் என்றாலும், எல்லா விதங்களிலும் என்னை விட மூத்தவன் என்று சொல்லலாம். அப்போதே சிகரெட் பிடிப்பான். சிக்கன் சாப்பிடுவான். சர்வோதயா பள்ளியின் ஐந்தாம் வகுப்புப் பெண்களை மரத்தடியில் பம்பரம் விளையாடக் கற்றுத் தருகிறேன் என்று அழைத்துக் கொண்டு வந்து தகாத காரியம் செய்வான். என்னுடைய அக்காவின் தோழிகள் கூட அவனைப் பார்த்துப் பேச வருவார்கள். 'நீ எதுக்கும் லாயக்கில்லைடா' என்று என்னைக் கிண்டல் செய்தபடி என்னுடைய சைக்கிள், க்ரிகெட் மட்டை என்று எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போவான். தானமாகக் கிடைத்த, என் அம்மாவின் டிவிஎஸ்-50க்கு ஸ்பார்க் ப்ளக் மாற்றுவான். அந்த சாக்கில் பக்கத்து தெரு வரைக்கும் ஓட்டிப் பார்த்து விட்டு வருவதாகச் சொல்லிக் கண்ணன் கடை பக்கம் ஒதுங்குவான். கண்ணன் கடைக்குப் பக்கத்திலிருந்த வண்ணான் கடையில் என் தம்பியை இசகு பிசகான நிலையில் பார்த்திருக்கிறேன்.

ஸ்ரீமதிக்கு வருகிறேன். சம்ஸ்க்ருத இலக்கண வாத்தியார் லட்சுமி நரசிம்மன் கராறான பேர்வழி. "இஷ்டம் இல்லைனா என்னோட க்ளாசுக்கு வராதேள்" என்று முதலிலேயே சொல்லிவிடுவார். தினம் கேள்வி கேட்பார். அன்றைக்கு நான் மாட்டிக் கொண்டேன். நன்றாக நினைவிருக்கிறது. "ப்ரதம புருஷ த்வீ வசன ஸ்தஹவுக்கும் மத்யம புருஷ த்வீ வசன ஸ்தஹவுக்கும் என்ன வித்தியாசம்?" என்று கேட்டுவிட்டு, என் பதிலை எதிர்பார்த்தபடி கரும்பலகை பக்கம் திரும்பினார். கேள்வி புரிந்தால் தானே பதிலைச் சொல்ல? என் தம்பி சட்டென்று "ஒண்ணு ஓஸ்தஹ, இன்னொண்ணு ஒம்மாலஸ்தஹ" என்றான். ஐந்து நிமிடத்துக்கு வகுப்பில் ரகளை. ல.நவுக்குக் கோபம் குடுமிக்கேறி விட்டது. நான் சொன்னதாக நினைத்து என்னைக் கன்னா பின்னாவென்று திட்டத் தொடங்கினார். என் தம்பியை என்னால் விட்டுக் கொடுக்க முடியாததால் அமைதியாக இருந்தேன். "ஏண்டா அப்படி சொன்னே? கசுமாலம், தரித்ரம்" என்று என்னை அடிக்க வந்து விட்டார். ஸ்ரீமதி அவரைத் தடுத்து நிறுத்தினாள். "அவன் தம்பியாக்கும் சொன்னது" என்று உண்மையைச் சொல்லி விட்டாள். "மேலே கை வச்சே, பட்டா எகிறிக்கும்" என்று என் தம்பி சர்வ சாதாரணமாக எழுந்து நின்றதும் ல.ந கொஞ்சம் நிதானமானார். என் தம்பியை ஒரு வாரம் வகுப்புக்கு வெளியே நிற்கச் சொன்னதை அவன் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. உடனே வெளியே போனான்.

வகுப்பு முடிந்ததும் ஸ்ரீமதிக்கு நன்றி சொன்னேன். அவள் பதில் சொல்வதற்குள் என் தம்பி வந்து விட்டான். "ஏ லொட்டை, என்ன கோள் மூட்டறே? சும்மா இருக்க முடியலியா?" என்றான் ஸ்ரீமதியிடம்.

"நீ பண்ணின காரியத்துக்கு உங்க அண்ணன் மாட்டிக்கறது உனக்கே நல்லா இருக்கா?" என்று பதிலுக்கு அவனைத் தட்டிக் கேட்டவள், "நீ ஏன் இப்படி பணிஞ்சு போறே? நீ தப்பு பண்ணலேன்னு தைரியமா சொல்ல வேண்டாமா?" என்று என்னைக் கடிந்தாள்.

"இருந்தாலும் என் தம்பி தானே? அவனைக் காட்டிக் கொடுத்திருக்க வேண்டாம்" என்றேன்.

"போனா போகுது; அவ சொல்றதும் சரிதான். நானே எழுந்திருச்சு நின்னுருக்கணும்" என்று என் தம்பி சொல்லவும் அன்றைய சிக்கல் தீர்ந்தது.

அதற்குப் பிறகு ஸ்ரீமதியும் நானும் அவ்வப்போது பேசிக் கொண்டோம். பத்தாவது படிக்கும் பொழுது என்று நினைக்கிறேன். பள்ளிக்கூடத்தில் மதிய வேளைப் பட்டிமன்றத்தின் போது ஒரு முறை வேண்டுமென்றே என் மீது இடித்து, என்னைத் தொட விட்டாள். "அங்கே எல்லாம் படறதா?" என்று அவள் சொன்னது, "சரியா படக்கூடாதா?" என்பது போல் தொனித்தது. தீபாவளி ரிலீஸ் படம் குடும்பத்தோடு வெற்றி தியேடரில் பார்த்த போது, என் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். பாடாவதிப் படத்தில் சிவாஜி மஞ்சுளாவைத் தொடும் போதெல்லாம் என் கைகளை அழுத்தினாள். அந்த வருடம் அவளை நினைத்து எத்தனையோ இரவுகளை அறிந்தும் அறியாமலும் ஈரப்படுத்தியிருக்கிறேன். என் தம்பி என்னைக் கிண்டல் செய்திருக்கிறான். "என்னடா வடகலைப் பொண்ணை மனசுக்குள்ள டாவடிக்கிறியா?" என்று கேட்டுவிட்டு என்னுடைய அரை நிஜாரை எடுத்துக் காட்டுவான். மானம் போகும்.

அடுத்த வருடம் ஸ்ரீமதி காலேஜ் போய்விட்டாள். நான் இன்னும் பள்ளிக்கூடத்திலிருந்ததால் அவளை முன் போல் பார்க்க முடியவில்லை என்றாலும், சம்ஸ்க்ருத வகுப்பில் சந்திப்போம். என் வீட்டுக்கு வரும் பொழுது பேசுவோம். ஆனால் எங்களிடையே முன்பிருந்த மானசீக நெருக்கம் குறைந்து கொண்டிருந்தது.

ப்ளஸ் டூ ஸ்டடி ஹாலிடேஸ் என்று பத்து நாள் விடுமுறை. அக்காவும் அம்மாவும் ஒரு டிகெட்டில் ரெண்டு படம் பார்க்கப் போயிருந்தார்கள். வருவதற்கு இரவு பத்து மணியாவது ஆகும். வீட்டில் நானும் என் தம்பியும் தான் இருந்தோம். தம்பி அவனுடைய பொறுக்கி நண்பர்களோடு வேப்பமரத்தடியில் காசு வைத்து பேந்தா ஆடிக்கொண்டிருந்தான். நான் தேர்வுக்கு மும்முரமாகப் படித்துக் கொண்டிருந்த பொழுது ஸ்ரீமதி திடீரென்று கதவைத் தள்ளிக்கொண்டு பதட்டத்துடன் உள்ளே வந்தாள். "உங்கிட்ட முக்கியமா பேசணும்" என்றாள். கேள்விக்குறியுடன் பார்த்த பொழுது, "நான் வீட்டை விட்டு ஓடப்போறேன், எங்கூட வந்துடறியா?" என்றாள்.

அதிர்ச்சியில் வாயடைத்துப் போனேன்.

"எங்கப்பா என்னைக் கல்யாணம் செஞ்சுக்கணும்னு வற்புறுத்தறார். என் அத்தை பையனைக் கல்யாணம் செஞ்சுக்க சொல்றார். வீட்டுல வசதி குறைஞ்சுட்டே வரதால இந்தக் கல்யாண வரன் போச்சுன்னா வேறே கிடைக்காதுனு அம்மாவும் என்னைக் கட்டாயப்படுத்துறா" என்றாள்.

"அ.. நீ.." என்று புதிதாகச் சுரம் பாடினேனே தவிர என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

"என் அத்தை வரதட்சணை எதுவும் வாங்காம செஞ்சுக்கறதா சொன்னாராம். அவங்க பையனை எனக்குப் பிடிக்காது. அப்படியே இருந்தாலும் எனக்குப் படிக்க ஆசை" என்றாள்.

நான் இன்னும் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேனே தவிர, எதுவும் சொல்லத் தோன்றவில்லை. இரண்டு நாளில் ப்ள்ஸ் டூ தேர்வு என்பது தான் என் மனதில் நிறைந்திருந்தது. "உன்னை ரொம்ப நம்பறேன்; நானே உன்னை வச்சுக் காப்பாத்தறேன். எங்கூட வா, ஓடிடலாம்" என்றாள்.

"ஸ்ரீமதி.." என்று நான் இழுக்கத் தொடங்கவும் என் தம்பி உள்ளே வரவும் சரியாக இருந்தது. "எல்லாம் கேட்டுக்கிட்டுத் தான் இருந்தேன். இவனை நம்பி ஓடறேன்றியே? உனக்கு என்ன பைத்தியமா?" என்றான் ஸ்ரீமதியிடம். "அதுமில்லாமே உன் படிப்பு என்னாறது? நல்லா படிக்கிற பொண்ணு வேறே. நான் வேணும்னா உன் கூட ஓடி வந்துருவேன், ஆனா ஒத்து வராதேனு பாக்குறேன்" என்றான். "ஆமா, எதுக்கு ஓடிப் போற தீர்மானத்துக்கு வந்தே? பிடிக்கலேனு சொல்லிட வேண்டியது தானே? நான் வேணும்னா உங்க அத்தை பையனை ரெண்டு தட்டு தட்டவா? அதுக்கெல்லாம் செட் இருக்கு".

திடீரென்று அழத் தொடங்கினாள் ஸ்ரீமதி. சிறிது நேரத்தில் நிதானமடைந்து, "விஷயம் ரொம்ப சீரியஸ்" என்றாள். "எங்கப்பா எங்க அத்தை வீட்டுக்காரர் கிட்டே நிறைய கடன் வாங்கியிருக்காரு. அதுமில்லாம்... அதுமில்லாம..." என்று தயங்கினாள். நாங்கள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தோம். எனக்கோ என் அம்மாவும் அக்காவும் உடனே வரமாட்டார்களா என்றிருந்தது. "என்ன சொல்லு... நிதானமா சொல்லு.. பாத்துக்கலாம்" என்று தம்பி தூபம் போட்டுக் கொண்டிருந்தான்.

"அதுமில்லாம... எங்க அத்திம்பேர் ஒரு மாதிரி. அப்பப்போ அசிங்கமா பேசுவாரு. ரொம்பக் கீழ்த்தரமா நடந்துக்குவாரு. சில சமயம் என்னைக் கட்டிப் பிடிச்சுப்பாரு. ஒரு நா எங்க வீட்டுல நான் குளிச்சுட்டிருந்தப்ப பாத்ரூம் கதவைத் திறந்து உள்ளே வந்துட்டாரு. என் மாரைத் தொட்டு..ரொம்ப கேவலமா இருக்கு சொல்றதுக்கு.. அதனால.. அவங்க பையனை நான் கல்யாணம் செஞ்சுக்கிட்டாலும் நரகம் தான்" என்றாள்.

"பொறம்போக்கு.. லவடா.." என்று தொடங்கிய என் தம்பி திட்டித் தீர்க்க ஒரு நிமிடமானது. "போலீஸ்ல சொல்லேன்?" என்றான்.

"யாருக்கு என்ன லாபம்? என் பேர் தான் கெடும். என் மேலே எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா தனியா ஓடிப்போக மனசு வரலே. நீ வா. நம்ம ரெண்டு பேருக்கு ஒருத்தரை ஒருத்தர் பிடிக்கும்னு எனக்குத் தெரியும்" என்று என் கையைப் பிடித்தாள்.

சரேலென்று அவள் கையை உதறினேன். அவளுக்கு உதவ வேண்டும் என்றோ ஏமாற்ற வேண்டும் என்றோ எந்த எண்ணமும் இருந்ததாகத் தெரியவில்லை. அந்த நேரத்தில் ஓட வேண்டுமென்று தோன்றியது. அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடினேன்.

திரும்பி வந்த போது வீட்டில் யாருமில்லை. இன்னும் சினிமா முடிய ஒரு மணி நேரமாவது ஆகும். நடுங்கிக் கொண்டிருந்த உடலையும் மனதையும் சீர்ப்படுத்தி, மறுபடி கணக்குப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டேன். அரை மணி பொறுத்து என் தம்பி திரும்பினான். அவன் கையில் கத்தி இருப்பதைப் பார்த்து அதிர்ந்தேன். ரத்தக் கறை தெரிந்தக் கத்தியை அவசரமாகக் கழுவப் போனதைக் கவனித்தேன். "என்னடா?" என்றேன்.

என்னைப் பார்த்த பார்வையில் ஆத்திரமும் அவமானமும் கலந்திருந்தது. "நீயெல்லாம் ஆம்பிளையாடா? ..த்தா உன்னை என் அண்ணன்னு சொல்றதுக்கே வெக்கமா இருக்குடா. ஒம்போது.. பாடு.." என்று வரிசையாக வசைந்தான். "போய் படிரா முண்டம்.. அவளைப் பத்திக் கவலைப்படாதே.." என்று கத்தியைக் கழுவித் துடைத்தான்.

"என்னடா செஞ்சே?" என்றேன்.

"உனக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லே" என்றவன், "இதைப் பத்தி எவங்கிட்டயாவது மூச்சு விட்டே, அண்ணன்னு கூடப் பாக்க மாட்டேன்.." என்று கத்தியை என் முன் ஆட்டிவிட்டு சமையலறை அலமாரியில் வைத்தான். வெளியேறினான். நான் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தேன். ரத்தக்கறைக் கத்தியும், ஸ்ரீமதியின் மறைவும் என்னை மிகவும் பாதித்தன. அவளுக்கு என்ன ஆகியிருக்கும்? இவன் ஏன் கத்தியுடன்..? ஸ்ரீமதி அத்திம்பேரைக் கொன்று விட்டானா? படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. புத்தக மூட்டையையும் கொஞ்சம் துணியும் எடுத்துக் கொண்டு சைக்கிளை எடுத்தேன். பம்மலில் மாமா வீட்டுக்குப் போனவன், தேர்வு வரை குரோம்பேட்டை திரும்பவில்லை.

அன்றைக்குப் பிறகு என் தம்பி அதைப் பற்றி மட்டுமல்ல, பொதுவாகவே என்னிடம் அதிகம் பேசுவதில்லை. அன்றைக்குப் பிறகு ஸ்ரீமதியையும் பார்க்கவில்லை. தேர்வு முடிந்த மறுவாரமே பம்மலுக்குக் குடியேறி விட்டதால் எல்லாம் நாளடைவில் மறந்து விட்டது.

   தியம் காபி இடைவேளையின் போது சந்தித்தோம். இந்திய ஏலக்காய் மசாலா டீ வாங்கிக்கொண்டு எதிரெதிரே உட்கார்ந்தோம். அவசரப்பட்டு முதலில் உட்கார்ந்து விட்டவன், உடனே எழுந்து அவளுக்காகக் காத்திருந்தேன். "உனக்குக் கண்டிப்பா க்ரேன்ட் கிடைக்கும்" என்றேன். "காளிதாசன் நல்ல ப்ராஜக்டா இருக்கும் போலிருக்கே?"

"தேங்க்ஸ். நீ கமிட்டில இருக்கே? உன் தயவு தான்" என்றாள்.

"அதெல்லாம் இல்லை. என்னுடையது ஒரு ஓட்டு தான்; இன்னும் ஏழு பேர் இருக்காங்களே?" என்றேன். அவளுக்கு நிதி ஒதுக்கீடு கிடைக்கவில்லையென்றால் என் மேல் பழி போடக் கூடாதே என்று நினைத்தவன், சலித்துக் கொண்டேன்.

"பயப்படாதே. கிடைக்காட்டா போகுது" என்றாள், என்னைப் புரிந்தவள் போல். எனக்குள் குற்ற உணர்வு தோன்ற நெளிந்தேன். "எப்படி இருக்கே? எத்தனை வருசமாச்சு பாத்து?" என்று பேச்சை மாற்றினேன்.

"குரோம்பேட்டையில எழுவத்தொன்பது மார்ச்சுல பாத்தது" என்றாள். தேதி கூட நினைவு வைத்திருப்பாள் போலிருந்தது. "நீ எப்படி இருக்கே? பெண்டாட்டி பிள்ளைங்க...?" என்றாள்.

"பெண்டாட்டி நர்சு. ஒரு பையன். இப்பத்தான் காலேஜ் முடிச்சு மரீன் கோர்ல சேந்திருக்கான். நீ எப்படி இருக்கே? கல்யாணம்னு சொன்னியே.. " என்றவன், அவளை நேராகப் பார்க்க முடியாமல் தவித்தேன்.

"அதெல்லாம் பழைய கதை. இப்ப எதுக்கு?" என்று சர்வ சாதாரணமாக என்னை நிலைக்குக் கொண்டு வந்தாள். "அன்னய கதை அன்னைக்கோட ஓவர். இப்போ டில்லி யூனிவர்சிடிலே ப்ரொபசரா இருக்கேன். கல்யாணம் ஆகலை" என்றாள்.

"ஏன்?" என் கேள்வி என்னையே உறுத்தியது. ஒரு வேளை அவளுடன் ஓடியிருக்கலாமோ?

"விசயம் தெரிஞ்சு என்னை யாரு கல்யாணம் செஞ்சுப்பாங்க? ஒரு விதத்துல நல்லதா போச்சு. உன் தம்பிக்கு நான் என்னிக்கும் கடன் பட்டிருக்கேன்.." என்றாள்.

"நீ என்ன சொல்றே?"

"உனக்குத் தெரியாதாக்கும்.." என்று என்னைப் பார்த்தவளின் முகத்தில் இருந்த கிண்டல், கேள்விக்குறியாக மாறி திகைப்பில் நின்றது. "யு மீன்...?"

அதற்கு மேல் என்னால் அமைதி காக்க முடியவில்லை. "என்னை மன்னிச்சுடு ஸ்ரீமதி... அன்னிக்கு ஏன் அப்படி நடந்துகிட்டேன்னு நிறைய நாள் நெனச்சு வருத்தப்பட்டிருக்கேன். உண்மையிலேயே உனக்கு என்ன ஆச்சுனு தெரியாது. என் தம்பிக்கும் எனக்கும் அன்னிக்கு ராத்திரிக்கப்புறம் பேச்சு வார்த்தையே ரொம்ப கம்மி" என்று தடுமாறினேன். ஓடிப்போய் திரும்பி வந்ததையும் ரத்தக் கத்தியையும் தம்பியின் எச்சரிக்கையையும் சொல்லி விட்டு அடங்கினேன்.

சில அமைதியான நிமிடங்களுக்குப் பிறகுக் கஷ்டப்பட்டு எழுந்தாள். "நான் உன்னை நம்பினதுக்கு நீ என்ன பண்ணுவே?" என்றாள். மறுபடியும் முறுவல். "இப்ப விவரம் தெரிஞ்சுகிட்டு என்ன பண்ணப் போறே? தெரியாமலே இருக்கட்டும். நாம இனிச் சந்திக்க வேண்டாம், நான் வரேன்"

"ஸ்ரீமதி, நில்லு. நானும் வரேன்" என்றேனே தவிர, எழுந்திருக்கவில்லை.

நாலடி சென்றவள் திரும்பி வந்தாள். "கத்தியால குத்தணும்னு நான் தான் சொல்லிக் கொடுத்தேன். உன் தம்பி பேர்ல தப்பில்லே. உண்மையைச் சொல்லணும்னா..எனக்கு விடிவே அவனால தான்" என்று விலகி நடந்தாள். நொண்டுவது தெரியாதபடி சிரமப்பட்டு நடந்தாள். எனக்கென்னவோ புரிந்தது போலிருந்தது.