'ஏன் எழுதுவதில்லை?' என்று விசாரித்த உள்ளங்களுக்கு நனி நன்றி.
சோம்பல் கொஞ்சம், ஆயாசம் கொஞ்சம், கடுப்பு கொஞ்சம்.. எடுத்துக் கொண்டிருக்கும் ப்ராஜக்டுகள் கொஞ்சம்.. என்று கொஞ்சம் கொஞ்சமாய்க் காரணங்கள். 'பெத்தாபுரம்' கதையைத் தொலைத்தது போதாதென்று 'சிவப்பு வட்டம்' கதையையும் மூடத்தனமாகத் தொலைத்ததும் என் மீதே எனக்கு கடுங்கடுப்பு. இனி கூகிலில் நேராக எழுதுவதில்லை என்று தீர்மானித்துவிட்டேன்.
இந்த இடைவெளி என்னையும் பாதித்திருக்கிறது. நண்பர் போகன் ஒருமுறை சொன்னது போல், எழுத்து (அல்லது அத்தகைய வெளிப்பாடு) வாழ்வின் சோர்வைப் போக்க வல்லது. குறிப்பாக, என் எழுத்து என் சோர்வைப் போக்கி படிப்பவர்களை சோர்ந்து போகச் செய்ய வல்லது. அதனால் தொடர்ந்து எழுத முயல்கிறேன்.
தொடர்ந்து படிப்பதற்காக - மறுபடி நன்றி. மறுபடி.
சமீபத்தில் இந்தியா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சென்னை போகும் பொழுது சிலரை அவசரமாகச் சந்திப்பதுண்டு. சில பதிவர்களைச் சந்திக்க எண்ணியிருந்தேன். இம்முறை சென்னை போகாததால் முடியவில்லை. ஜூன் ஜூலையில் ஒரு பயண வாய்ப்பு அமையுமென்று நினைக்கிறேன், அப்போது முடியுமா பார்ப்போம்.
இந்தியாவில் வேலை எல்லாம் முடிந்து இரவு சுமார் எட்டு மணி போல் ஓட்டலுக்குத் திரும்பினேன். மறுநாள் மாலை விமானமேற வேண்டும். வசதியான டாடா ஓட்டலில் தங்கி நிம்மதியாக ஓய்வெடுக்கலாம் என்று எண்ணியிருந்தேன். என்னையும் உடன் வந்தவர்களையும் 'கண் போல் கவனித்த' விருந்தோம்பல் பேரரசு என்னை விடவில்லை. அருகிலிருந்த ஒரு கோவிலுக்கு என்னை அவசியம் அழைத்துப் போக வேண்டும் என்று ஆறு காலில் நின்றார்.
"ரொம்ப அழுத்தாதீங்க.. நாற்காலி உடைஞ்சுரப் போகுது.." என்றேன். "நான் வரலிங்க.. கொஞ்சம் தூங்கலாம்னு இருக்கேன்..வேணும்னா அவங்களைக் கூட்டிட்டுப் போங்க". உடன் வந்தவர்களைச் சுட்டினேன். லாபியருகே குளிர்ந்த பீர் அருந்திக் கொண்டிருந்தார்கள்.
சட்டென்று முகமிறுகிய பேரரசு, "அய்யயே.. அவங்கள்ளாம் வெள்ளைத்தோலு.. இதெல்லாம் புரியாது.. நீங்க வாங்க.. போயிட்டு வந்துரலாம்.. இந்த பாக்கியம் கிடைக்காது" என்றார். "வேணாம் சார்.. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு" என்ற என்னை அடிக்க வருவது போல் முறைத்தார். "என்ன்ன்ன்ன்ன சார் நீங்க.. இதெல்லாம் லேசுல கிடைக்கக் கூடிய வாய்ப்பா? வர்ர்ருஷக்கணக்கா திட்டம் போட்டா கூட நிறைய பேருக்கு இந்த வாய்ப்பு கிடைக்காது.. உங்களை அவனா கூப்பிடலின்னு வைங்க.. நீங்களா என்ன நினைச்சாலும் இந்த கோவிலுக்கு போக முடியாது.. அவன் கூப்பிட்டிருக்கான்னு நெனச்சுக்குங்க.. முறைக்காம வாங்க சார்" என்று என்னை மூட்டை கட்டாத குறையாக காரில் திணித்தார். போகிற வழியில் அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றார். சாப்பாடு கொடுத்து நல்ல மஞ்சத்தில் உறங்க வைத்தார். மறுநாள் விடியலில் என்னை எழுப்பித் தயார் படுத்தினார். காபி டிபன் கொடுத்து மறுபடி காரில் திணித்தார். கோவிலும் கோவில் சார்ந்த இடமும் சுற்றிக் காட்டினார். மதிய உணவுக்கு டாடா ஓட்டலில் இறக்கிவிட்டு டாடா சொல்லிக் காணாமல் போனார். "மாலை ஏர்போர்ட் பிக்கப்புக்கு வரேன்.. அதுவரை ரெஸ்ட் எடுங்க.."
ரெஸ்ட் எடுக்கவில்லை.
மாறாக, பேரரசு தயவில் லக்னவ் நகரிலிருந்து சுமார் நூற்று நாற்பது கிமி தொலைவில் இருக்கும் 'ராம் ஜென்ம பூமி' சென்று வந்த அனுபவத்தையே நினைத்துக் கொண்டிருந்தேன். இன்னொரு சமயம் இங்கேயோ கலர்சட்டையிலோ விவரம் எழுதுகிறேன்.
அடுத்த வருடம் அவசியம் தயாராக வேண்டிய ஒரு ப்ராஜக்டுக்கான ஆதார வேலைகள் செய்ய, சில புத்திசாலிகள் தேவைப்பட்டார்கள். எங்களிடம் அது பற்றாக்குறையானதால் என் புடலங்காய் கம்பெனிக்கு ஆளெடுக்க சிலரோடு இந்தியா பயணம் செய்தேன். ஐஐடி ஐஐஎம் காரர்களைத் தேர்வு செய்யத் திட்டம். ஐஐடியில் பத்து பேர், ஐஐஎம்மில் இரண்டு என்று கணக்கு போட்டு ஆராய்ச்சி கீராய்ச்சி எல்லாம் செய்து எந்த ஐஐடி ஐஐஎம் போவதென்று எல்லாவற்றையும் பயணத்துக்கு முன்பே தீர்மானித்தாகிவிட்டது.
கடைசியில் எட்டு பேரைத் தேர்வு செய்து திரும்பினேன். எட்டு பேரையும் செக்கு மாடு போல் வேலை செய்ய வைத்துப் பிழிந்து அனுப்பப் போகிறேன். காசில்லாத கம்பெனிக்கு இது போல் அடிமைகள் வேலைக்குக் கிடைத்தால் தான் உண்டு. அவர்களின் கேள்விக்குறி போல் முதுகு வளைந்த உழைப்புக்கு, ஒரு பொன்னான அனுபவம் கிடைக்கப் போகிறது என்ற என் பதிலையே சம்பளமாகக் கொடுக்கப் போகிறேன்.
இந்தியாவில் recruiting மிகக் கடினமாக இருக்கிறது. அனுபவம் உள்ளவர்களுக்கு ஒரு வருடத்துக்கு ஒரு லட்சமோ என்னவோ கொடுக்க வேண்டுமாம். அதற்கு மேல் ஒரு resumeக்கு கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் செலவாகிறது. அப்படி அனுபவஸ்தர்கள் என்ன சாதித்தார்கள் என்பதை என் முகத்தில் இருக்கும் சென்ற வருடத்து சோக வரிகள் சொல்லும். எதற்கெடுத்தாலும் ஒரு defense, எதற்கெடுத்தாலும் ஒரு argument, கடைசியில் வேலையில் ஒன்றும் அப்படி பிரமாத தரம் எதுவும் இல்லை. வேண்டாம். பட்டது போதும். இனி அனுபவம் இல்லாத பட்டதாரிகள் போதும் என்று தீர்மானித்திருக்கிறேன். green resumeக்கே சுமார் 250ரூ செலவாகிறது. லிங்க்டின் நௌக்ரி மான்ஸ்டர் எல்லாம் சரியாக வரவில்லை - வேறு காரணங்களுக்காக. ஆக, இந்தியாவுக்கு வேலை கொண்டு போனாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்காதது வருத்தமாகவும் எரிச்சலாகவும் இருக்கிறது. எழுதத் தெரியாதவன் கீபோர்டைக் குறை சொன்னானாம் என்பது போல் ஒரு வேளை என் பெயரில் தான் தவறோ?
ஜூன் ஜூலையில் இந்தியா வரும்பொழுது மறுபடி ஆள் எடுக்கும் திட்டம் இருக்கிறது. ஐஐடி ஐஐஎம் அல்லது நல்ல யுனிவர்சிடியில் முதுகலை படித்தவர்கள், இளம் பட்டதாரிகள், உங்களுக்குத் தெரிந்தவர்கள் இருந்தால் எனக்கு இமெயில் அனுப்புங்களேன்? உங்களுக்கும் வேலை வாங்கிக் கொடுத்த புண்ணியம் (ஜம்பம்) கிடைக்கும். எனக்கும் காசு மிச்சமாகும். என்ன சொல்றீங்க? operations research, applied mathematics or statistics படித்து 'R'ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவ்வளவு தான் இப்போதைக்கு என்னால் சொல்ல முடியும் :-). ஓ.. மறந்து போனது.. ஆங்கிலம் மிக மிக நன்றாகப் பேச வேண்டும், தயங்காமல் துணிச்சலோடு உரையாட வேண்டும். முக்கியம்.
இந்தியப் பெரும் பல்கலைக் கழகங்களில் மாணவர்களோடு உரையாடிய முதல் அனுபவம். வித்தியாசமான அனுபவம். மாணவர்களில் இத்தனை நிறங்களா!
மும்பை அளவுக்குக் கான்பூர் காரர்களுக்குப் பேச வரவில்லை. மும்பைக்கும் கான்பூருக்கும் நில இடைவெளி மட்டுமா வித்தியாசம்?! மன இடைவெளி - மை குட்நஸ்! மும்பை மாணவர்கள் சிலர் என்னை என்னிடமே விற்று விட்டார்கள். கான்பூர் மாணவர்கள் அத்தனை பேருமே கொஞ்சம் நிதானமாக இருக்கிறார்கள். தயக்கமா தத்தித்தனமா என்று தீர்மானிக்க இயலாத நிதானம்.
இதன் பின்னணியில் நிறைய கவனித்தேன். பள்ளிக்கூடப் படிப்பு, பிறந்து வளர்ந்த சூழல்.. இவை பெருங்காரணங்களாக இருக்கின்றன. கண்ணுக்குப் புலப்படாத ஆனால் மிகப்பெரிய, தலையிலிடிக்கும் பிரிவுச் சுவர் மாணவர்களிடையே காணப்படுகிறது. கான்பூர் ஐஐடி மாணவர் ஒருவர் மொத்த GPA 10/10 எடுத்திருக்கிறார். கொஞ்சம் தூண்டுவோம் என்று கேள்விகள் கேட்டால் வாய் திறக்கவில்லை. தயக்கம். நடுக்கம். இன்னொரு பெண் மாணவர் சுத்தமாகப் பேசவேயில்லை. எதற்காக இவர்கள் படிக்க வந்தார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டு விட்டது. ஒரு மாணவர் ஏதோ இமாசல பிரதேச குக்கிராமத்தில் படித்து ஐஐடி சேர்ந்திருக்கிறார். அவருடைய பேச்சுக்கும் படிப்புக்கும் தொடர்பே இல்லை. 6/10 GPA எடுத்திருக்கிறார், நாங்கள் ஏதோ கேள்வி கேட்டால் அவர் ஏதோ பதில் சொல்கிறார். கஷ்டம் என்றாலும் வருத்தமாக இருந்தது. இவரை எப்படி வேலைக்கு எடுப்பது?
ஐஐஎம் ஆமதாபாத், லக்னௌ போயிருந்தேன். அங்கேயும் அப்படியொன்றும் பிரமாதமாக மாணவத் திறன் காணப்படவில்லை.
மாணவர்களிடம் நிறைய எதிர்பார்க்கக் கூடாது, படிப்பவர்கள் எல்லாருமே இளங்கன்றுகள் என்பது தெரிந்திருந்தாலும், ஐஐடி ஐஐஎம் படிப்பவர்கள் மெத்த புத்திசாலிகள், aggressive ambitous ரகம் என்று ஒரு காலத்தில் நினைத்திருந்தேன். இந்தப் பயணம் அதை அடியோடு அழித்துவிட்டது. ஐஐம் ஆமதாபாத் பெண் மாணவர் ஒருவர் கூசாமல் தனக்கு 'ambition' எதுவுமே இல்லை என்றார். shock of my trip!
நிறைய பெண்கள் ஐஐடி ஐஐஎம்மில் முதுகலை படிப்பது உண்மையிலேயே நிறைவாக இருந்தது. ஆபரேஷன்ஸ் ரிசர்ச், ஸ்டஸ்டிகல் மாடலிங், ரிக்ரஷன், கன்ஸ்யூமர் பிகேவியர் என்று அவர்களில் சிலருடன் விவாதித்தது வாடிக்கிடந்த என் மூளைக்கு நல்ல உரமானது. என்னுடன் வந்திருந்த பு கம்பெனி நண்பர்கள் அசந்து போனார்கள். இன்டர்வ்யூவுக்கு வந்திருந்த பெண்கள் சிலரின் சிந்தனைத் தீவிரம் எங்களைக் கட்டிப் போட்டுவிட்டது. இதற்கு முன் லேசாகக் கேள்விப்பட்டிருந்த தில்லி லேடி ஸ்ரீராம் காலேஜ் மேல் தனி மதிப்பு ஏற்பட்டு விட்டது. எல்லாருமே இப்படி இருந்திருந்தால் எத்தனை சிறப்பாக இருக்கும்!
இன்டர்வ்யூ முடிந்ததும் இதற்கு ஏற்பாடு செய்த placement office புரபசர் மற்றும் மாணவ தொடர்பாளர்களோடு பேசினோம். கான்பூரில் தண்ணியடிக்கக் கூட வழியில்லை. லக்னௌ க்ளப் ஒன்று சற்று வித்தியாசமாக இருந்தது. சில மூத்த புரபசர்கள் மனம் விட்டுப் பேசினார்கள்.
"மாணவர்களிடையே தர வேறுபாடு காணப்படுவது இயல்பு என்றாலும் உங்கள் மாணவர்களிடையே இத்தனை பெரிய இடைவெளி, i mean chasm, காணப்படுகிறதே? ஒரு சிலர் தாம் தூம் என்று அதிரடியாக இருக்கிறார்கள். பெரும்பான்மையினருடன் பேசுவதே கடினமாக இருக்கிறதே? எல்லாரும் ஒரே மாதிரி தேர்வு எழுதித்தானே தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்? ஐஐடி ஐஐஎம் இடம் கிடைப்பது எத்தனை அரிது என்று நிறையக் கேள்விப்பட்டு இங்கே வந்தால் மாணவர்களின் attitude, aptitude மற்றும் knowledge baseல் இத்தனை விரிசல்களா? இத்தனை வேறுபாடா? ஏன்?" என்று கொத்தாக வைத்தேன் என் கேள்விகளை.
முறுமுறு பகோடா, பருப்பு (மிக்ஸர் மாதிரி இருக்கிறது, ஆனால் எல்லாமே பருப்பு - பட்டாணியோ வேர்கடலையோ அல்லாமல் மென்மையான பொட்டுக்கடலை போல ஒரு பருப்பு.. ஹ்ம்ம்ம்.. கீதா சாம்பசிவமே அறிவார்), காலி ப்ளவர் ப்ரை என்று சுவையான திண்டிகளுடன் உரையாடினோம். இந்தியாவில் நல்ல சிங்கில் மால்ட் ஸ்காச் தாஜ் ஹோட்டல்களில் மட்டுமே கிடைப்பது ஏனென்று புரியவில்லை. இவர்கள் எல்லாம் வாட்கா அருந்துகையில் நான் வாட்டர் அருந்தினேன். (மனசே கேக்கலை தெரியுமோ?)
அப்படி இப்படி பேசிக் கொண்டிருக்கையில், திடீரென்று ஒரு புரபசர் "you know what? எல்லாம் இந்த இட ஒதுக்கீட்டினால வந்த பிரச்சினை. there is no proper merit.." என்றார்.
அதற்குப் பிறகு மதிவெ போல் கருத்துக்கள்.
"மாணவர்கள் அத்தனை பேரும் ஒரே இடத்திலிருந்து வருவதில்லையே? இட ஒதுக்கீடு காரணமாக நிறைய பேருக்கு ஐஐடி ஐஐஎம்மில் படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவர்கள் மற்ற மாணவர்களை விட சற்று பின் தங்கியே இருக்கிறார்கள். இவர்களுக்காக 'முன்னேற்பாடு' வகுப்புகள் நடத்தினாலும் இரண்டு/நான்கு வருடக் குறுகிய இடைவெளியில் இவர்களால் மற்ற மாணவர்களுக்கு இணையாக உயர முடிவதில்லை. ஆசிரியர்களும் இவர்களை ஒரு அளவுக்கு மேல் கை கொடுக்க இயலாமல் விட்டு விடுகிறார்கள். இவர்கள் குறைந்த GPAயுடன் தேறி ஐஐடி ஐஐஎம் லேபிலை வைத்துக் கொண்டு ஏதோ வேலைக்குச் சேர்ந்து பிழைத்துக் கொள்கிறார்கள். அல்லது தகுந்த வேலை கிடைக்காமல் ஏதோ பிழைக்கிறார்கள்.."
"ஆசிரியர்கள் நாங்கள் என்ன செய்ய முடியும்? இப்படி அரசாங்கமே எங்கள் கல்வித் தரத்தை கலப்படம் செய்யும் பொழுது நாங்கள் ஒத்து ஊத வேண்டியது தான்.."
"இட ஒதுக்கீடு இல்லையென்றால் சற்று பின் தங்கியவர்களுக்கு ஐஐடி ஐஐஎம் வாய்ப்புகள் கிடைக்காமலே போய்விடும்.. ஆனால் அதை செயல்படுத்திய விதம் சரியில்லை.. மற்றவர்களுக்குக் கிடைக்கும் காலத்தை விட இட ஒதுக்கீட்டில் சேர்பவர்களுக்கு ஒரு வருடம் கூட்டிக் கொடுக்கலாம்.."
"என்ன செய்தாலும் உருப்படாது... இப்ப பாருங்க.. இட ஒதுக்கீட்டுல படிச்சுட்டு வந்தவங்க எல்லாம் லெக்சரராயிட்டு வராங்க.. அவங்க என்ன சொல்லிக் கொடுக்கப் போறாங்க.. என் டிபார்ட்மென்ட் பேகல்டி ஒருத்தர் நீங்க சொல்றாப்புல பேசவே பயப்படுறாரு.. அவரோட பசங்க எப்படி இருப்பாங்க பாத்துக்குங்க.."
"நீங்க சொல்றாப்புல நிறைய ஐஐடிக்கள் திறப்பது போலி எஞ்சினியரிங் கல்லூரிகளை அடையாளம் காட்டும்.. ஆனா ஓரளவுக்குத் தான்.. ஐஐடி படிப்பே போலியாகும் அபாயம் இருக்குன்றதை நிறைய பேர் புரிஞ்சுக்க மாட்றாங்க.. அரசாங்கத்துக்கு நிச்சயம் புரியலே.."
"இட ஒதுக்கீட்டுல சேர்ந்தவங்களை கம்பெனிக்காரங்க கூட அதிகம் எடுக்க மாட்றாங்க.. i tell you.. இந்த I.T மட்டும் இந்தியாவுக்கு வரலின்னா இட ஒதுக்கீட்டுல வந்த மாணவர்கள் நிலமை ரொம்ப மோசமாகியிருக்கும். ஐ.டி கம்பெனிக்காரங்க மந்தை மந்தையா ஆளெடுக்கறாங்களா.. நாங்களும் மந்தை மந்தையா அட்மிஷன் கொடுத்து ஒப்பேத்துறோம்.. இதான் சார் உண்மைல நடக்குது.. தரம் வேணும்னா நீங்க நிட்டி போய் தேடிப்பாருங்க.. அசந்துருவீங்க.."
"திறமை இல்லின்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கு... times have changed.. இப்ப கல்வித்தரம் பத்தி யாரும் கவனிக்கறதில்லே.. எங்களையே நாங்க மெஷர் பண்ணிக்குறதில்லே.. எங்க மெட்ரிக் எல்லாம் இப்ப ப்லேஸ்மென்ட். ஐஐடில ஒரு மாணவருக்கு போன ப்லேஸ்மென்ட் சீசன்ல ஒரு கோடி ரூபாய்க்கு ஆபர் கிடைச்சிருக்கு.. அதைப் பெரிசு படுத்தினோமே தவிர, எண்பதாயிரம் ரூபாய்க்கு வேலைக்கு சேர்ந்த நூத்துக் கணக்கானவங்களை யார் விளம்பரப் படுத்துறாங்க?"
"இப்ப ஐஐஎம் எடுத்தீங்கன்னா.. அது ஒரு கல்வி நிறுவனமாவா இயங்குது? it is a placement casino. அதனால படிக்க வர மாணவருங்களும் ப்லேஸ்மென்டையே குறியா வச்சு இறங்குறாங்க. day zeroல எப்படியாவது சேர்ந்துடனும்னு திறமையுள்ள டாப் ரேங்கர்ஸ் நினைக்கிறாங்க.. day fourல ஒரு வேலை எப்படியும் கிடைச்சுரும் ஐஐஎம் லேபல் வச்சுனு கீழ்த்தட்டு மாணவர்கள் நினைக்கிறாங்க. ஆக மொத்தம் 70-85% ப்லேஸ்மென்ட் முடிச்சுட்டா போதும்னு ஐஐஎம் நினைக்குது.. that's it.. education has been relegated"
"ரிக்ரஷன் டெக்னிக் எப்படி பிசினஸ்ல பயன்படுத்துறதுனு இன்டர்வ்யூல கேட்டீங்களா.. ஹ..ஹ..ஹா.. இதெல்லாம் சிலபஸ்லயே கிடையாது சார்.. ஒரு ஆசிரியரா நான் சொல்லித் தரணும்னு நினைச்சா கூட ஒண்ணு எனக்குத் தோணனும், ரெண்டு என் டிபார்ட்மென்ட் அனுமதி வாங்கணும், அதுக்கு மேலே ஓவரால் கரிகுலம் டெலிவரில ஒத்து வரணும். இல்லின்னா சான்ஸில்லே. பசங்களும் கேட்கலனு வைங்க.. then what is the use?"
"அதுக்காக எல்லா ஆசிரியர் மாணவர்களும் அப்படியில்லே.. சில பேர் have crossed the fence.. என் வகுப்புல ஒரு பெண்.. தப்பா நினைக்காதீங்க.. she is brilliant.. ஆனா பாத்திங்கன்னா she is from merit quota.. இது ஒரு பெரிய விரிசல் சார்.. நான் அந்த பெண்ணின் திறனை டிவலப் செய்ய நினைச்சாலும் முடியாது.. காரணம் என் வகுப்புல இருக்குற மத்த அறுபது பர்சென்ட் ரிசர்வேஷன் க்ரூப்பையும் மனசுல வச்சு பாடம் நடத்தணும்.."
"IIT IIM education has become a LCM proposition.."
"முன்னேற்றம் என்பதே ரெலெடிவ் கான்செப்ட் தானே சார்? முன்னேறணும். முன்னேறும். ஆனா அதுக்குள்ள நாங்க ரிடையராயிடுவோம். இப்ப பாருங்க.. ஆட்சிக்கு வரப்போறவங்க ஒவ்வொரு மாநிலத்துலயும் ஒரு ஐஐடி ஐஐஎம் தொடங்கப் போறாங்களாம்.. where is the push? எண்ணிக்கையிலா தரத்திலா?"
பதினொரு மணிக்குக் கடையடைத்த பின் மைசூர்கார புரபசர் ஒருவர் வீட்டில் தஞ்சம் புகுந்தோம். இரவு வெகு நேரம் வரை பேசினோம். பேசிக் களைத்திருந்த எங்கள் எல்லாருக்கும் அதிகாலை மூன்று மணிக்கு கெட்டித்தயிர், வெள்ளரிக்காய், மோர் மிளகாய் கலந்த தயிர்சாதமும் சுடச்சுட வெண்டைக்காய் சாம்பாரும் கொடுத்தார். சிறிது வயிற்றுக்கும் ஈந்த நல்ல மனிதரை வாழ்த்திக் கலைந்தோம்.
ஐஐடி ஐஐம் பற்றி என் மனதிலிருந்த ஒரு மதிப்பு சறுக்கியிருக்கிறது. இட ஒதுக்கீடு என்ற சாதனத்தை நாம் புரிந்து கொள்ளவில்லையா? அல்லது உதட்டளவில் வரவேற்று மனதளவில் ஒதுங்குகிறோமா? ஒரு வேளை மாணவர்களின் அக்கறை.. படிப்பில் இல்லையா?