2009/12/15

தடங்களுக்கு வருந்தவில்லை

போக்கற்ற சிந்தனை


என் உயிர் என்று சொல்லும் வகையில் பழகிய தோழி, புதன்கிழமை இறக்கப் போகிறாள். சென்ற வருடக் காலக் கணக்கில்.

இத்தகைய காலக்கணக்கு செயற்கையாகவும் முட்டாள்தனமாகவும் தோன்றினாலும், அவள் இறந்த தினம் வருகிறது என்பதை நினைக்கையில் இது போல் சென்ற வருடம் தோன்றியிருந்தால் ஏதாவது செய்திருக்க முடியுமா என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. பொன் போனது; புதன் இருக்கிறது. சரியாகத் தான் சொன்னார்கள்.

அவளுடைய பிறந்த தினங்கள் சிலவற்றை அவளுடன் கொண்டாடி இருக்கிறேன். அவளுடைய இறந்த தினங்கள் சிலவற்றை எஞ்சியிருக்கும் நண்பர்களுடன் கொண்டாட நினைக்கிறேன்.

சாவி. பாதை வகுத்துக் கொண்டே பயணம் செய்த விசித்திரமான பெண். இடையே தொலைந்து போனாலும் கலைந்து போகாத நட்பு எங்களுடையது. இத்தகைய நட்புகளில் தான் என் வாழ்வின் நிறைவை உணர்கிறேன்.

சாவியின் நினைவில் ஏதாவது எழுத வேண்டும் என்று தோன்றியது. பிறகு அவள் எழுதியதைப் பொதுவாகப் பகிர்வதே ஒரு வித அஞ்சலி என்று பட்டது. சாவியின் நினைவில் இரண்டு கவிதைகளைக் கொடுத்திருக்கிறேன்.

முதல் கவிதை, சாவி எழுதியது. தள்ளாத முதுமையில் ஓய்ந்து கிடந்த தன் பெற்றோருக்குத் திருமண தினப்பரிசாக சாவி எழுதி வழங்கிய கவிதை. கலைமுகில் பதிப்பகம் வெளியிட்ட 'கண்ணைப் பார் சிரி' என்ற சாவியின் கவிதைத் தொகுப்பிலும், அரசன் ஆதரவில் வெளிவந்த பூத்தூரிகை வலைப்பூவிலும் வெளிவந்தது.

அடுத்த கவிதை - அரைவேக்காடு முயற்சி - சாவியின் நினைவில் பூத்தூரிகை வலைப்பூவில் நான் எழுதியது. அடுத்த வாரம் அவளை மறந்து விட்டால்? நினைவிருக்கும் போதே நினைத்து விடுகிறேன்.


கண்ணைப் பார், சிரி

கரைபுரண்ட காவிரி,
  இன்று
வறண்டுபோன ஓடை.

ஒளிதந்த விளக்கு,
  இன்று
சுடரிழந்த திரி.

மலர் தந்த வனம்,
  இன்று
கருகான பூங்கா.

வழி காட்டிய மண்,
  இன்று
புதரான பாதை.

பாடல் சொன்ன குயில்,
  இன்று
பேச்சில்லாத சிலை.

ஆட்டுவித்த சிம்மம்,
  இன்று
அசையாத பொம்மை.

உடல் தந்து உயிர் தந்து
    உணவோடு உணர்வீந்து
      கடல் வற்றும் கனிவோடு
        எனை வளர்த்த அம்மா,
        இன்று நீ
      காய்ந்து போன கனி.
    ஆனால் என்றும்
தேய்ந்து போகாத நிலவு.

கடவுளுக்குப் பொருள் சொன்ன
    என்னருமை அப்பா,
      இன்று நீ
      ஆட்சி இல்லா அரசன்.
    ஆனால் என்றும்
மாட்சி குறையா மகான்.

வந்த வழி மறந்துவிட்டு
  போகும் வழி தெரியாமல்
    பரிதவிக்கும் பயணிகள்.
    ஆனாலும் நீங்கள்
  போகும் இடம்
எனக்குத் தெரியும்.

புறப்படும் நேரம்
  புலப்படும் வரை
துணை இருப்பேன்.

வாழ்க்கைப்
  பயண வலி
    வாட்டும் போது,
  மெள்ளக் கால் பிடிப்பேன் அம்மா,
நல்லக் கவி படிப்பேன் அப்பா.

முதுமைத் துயரம்
  மறந்து போக
    உன் இளமைப் பிம்பம்
    என்னைப் பார்.
  வருத்தம் தீர,
என் கண்ணைப் பார், சிரி.


தொலையட்டும்

வானத்துக் காவிரி
கடலில் விழும்,
கூவத்திலும்.
  விடு,
  உன் கூவம்
  இனிக் கடல்.

காட்டுத் தீ வடிந்தால்
கரி உண்டு,
பொன்னும்.
  விடு,
  உன் கரி
  இனிப் பொன்.

சுவாசக் காற்றிலே
மணம் உண்டு,
கிருமியும்.
  விடு,
  உன் கிருமி
  இனிப் பூமணம்.

அழுதபின் சிரிக்க
பின் அழ, இருத்தும்
வாழ்க்கை வட்டம்.
  விடு,
  உன் வட்டம்
  இனி வெளி.

ஏனோ
காலப் புத்தகத்தின்
கடைசிப் பக்கத்தைப்
புரட்டி விட்டாய்.
முடிவறியும் அவசரமா?
  விடு,
  நீ படித்ததால்
  காலப் புத்தகத்துக்கு
  கௌரவம்.

2009/12/02

நினைத்தாலே நடுங்கும்


ஞாயிற்றுக்கிழமைக் காலை. வழக்கமான சோம்பலுடன் மனைவி குழந்தைகளுக்கான அன்றைய காலை dose கொஞ்சலோ திட்டோ கொடுத்துவிட்டு, கணினி எதிரே அமர்ந்து இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கிறீர்கள். சில நொடிகளில் வாசல் கதவை யாரோ தட்ட, குழந்தைகளை ஏவித் திறக்க வைக்கிறீர்கள். FBI மற்றும் உள்ளூர் காவல்துறையினர் துப்பாக்கியைச் சுட்டியபடி உள்ளே நுழைகிறார்கள். சிறுவர் தொடர்பான ஆபாசப் புகைப்படம் மற்றும் திரைப்படங்களைச் சேகரித்ததாகவும் இணையத்தில் பரப்பியதாகவும் குற்றம் சாட்டி உங்களைக் கைது செய்கிறார்கள். பிள்ளைகளும் மனைவியும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க, நீங்கள் [அதிர்ச்சி * 2]வுடன் அதிகாரிகளைப் பார்க்கிறீர்கள்.

உங்கள் எதிரிலேயே உங்கள் கணினியிலிருந்து மெகாபைட் மெகாபைட்டாக பலான ஆபாசப் படங்களையும் விடியோக்களையும் எடுத்துக் காட்டுகிறார்கள் அதிகாரிகள். எது எங்கே எப்படி வந்தது என்று தெரியாமல் விழிக்கிறீர்கள். அதிர்ச்சியில், எப்போதோ யூட்யூபில் நமிதாவோ குமிதாவோ "ஈரமான காட்சி"யை ஒரு கணம் சலனப்பட்டுப் பார்த்து ஏமாந்தது நினைவுக்கு வருகிறது. 'அதற்காக இப்படியா?' என்று நினைக்கிறீர்கள். 'மனைவியா மக்களா யார் செய்த வேலை?' என்று பதறுகிறது மனம். எதோ சொல்ல வாயெடுக்கிறீர்கள்.

அதற்குள், "என் புருசன் உத்தமன். கந்தசஷ்டிக் கவசம் தவிர எதுவும் படிக்க மாட்டார். பக்திப்படங்கள், மலேசியா சுப்ரமணியஸ்வாமி கோவில், உள்ளூர் சாய்பாபா கோவில் பற்றி அப்பப்போ இணையத்துல படிப்பார். அதைத் தவிர இந்த குமுதம்... தினமலர்.. தமிழ் ஓவியா.. எங்கள் பிளாக்... இமெயில் அவ்வளவு தான் படிப்பார். எப்பவாவது ஒண்ணு ரெண்டு திருட்டு சன் டிவி, இங்லிஷ் தமிழ் சினிமா படங்கள் பார்ப்போம். குடும்பப் படங்கள் தான். அதுலயும் கூட இங்லிஷ்காரி டிரசை அவுத்தா உடனே டக்குனு கண்ணை மூடிப்போம். இது என்ன விபரீதமா போச்சே? யாரோ சதி பண்ணியிருக்காங்க" என்று உங்கள் மனைவி உங்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார்.

"சூ, கம்னிருமா" என்ற அதிகாரி, உங்களுக்கு மிரான்டா உரிமைகளை அறிவித்துவிட்டு விலங்கு மாட்டி வெளியே அழைத்துச் சென்று, காவல் வண்டியில் ஏறச் சொல்கிறார்.

"அவரை ஒண்ணும் செய்யாதீங்க. என் புருசன் அரிச்சந்திரன், காந்தி.... அவங்க யாருனு உங்களுக்குத் தெரியாதோ? என்ன கண்றாவி, உள்ளூர் ஆளுங்க எதுவும் நினைவுக்கு வரலையே? யேசுன்னு சொன்னா அடிக்க வருவானோ? அமெரிக்காலே யோக்யனா ஒரு பய நினைவுக்கு வரமாட்றானே.. ம்ம்ம்... ஆம்பிளை மதர் தெரசா மாதிரி... இல்லே, மேன்டேலா மாதிரி... அய்யயோ...அவரை விட்டுறுங்க" என்று புலம்பிக் கொண்டு உங்கள் மனைவி பின்னாலேயே ஓடி வருகிறார்.

கணினியையும் கைக்குக் கிடைத்த ஒன்றிரண்டு டிவிடிக்களையும் எடுத்துக் கொண்டு தொடர்ந்த மற்ற அதிகாரிகள், உங்கள் மனைவி பிள்ளைகளை தடுத்து வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு, வண்டியில் ஏறுகிறார்கள். என்ன ஆகப்போகிறதோ என்று தெரியாமல் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் திகிலுடன் திகைக்கிறீர்கள்.

உங்கள் நிலையை நினைத்துப் பார்க்க முடிகிறதா?

நண்பர் மைகெலுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் அப்படித்தான் ஒரு ஞாயிற்றுக்கிழமை படு சாதாரணமாக விடிந்து பெருஞ்சிக்கலில் முடிந்தது.

ஆபாசப் போக்குவரத்தே பெருங்குற்றம். அதிலும் சிறுவர் தொடர்பான ஆபாசமென்றால் மாபெருங்குற்றம். தான் நிரபராதியென்று நம்பியதால் மைகெல் வக்கீல் உதவியுடன் அரசாங்கத்தை எதிர்த்துப் போராட முடிவு செய்தார். குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடங்கியதும் மைகெலை வீட்டுக் காவல் என்ற ஜாமீனில் விட்டார்கள். வழக்கு முடியும் வரை எப்பொழுதும் அவருடன் ஒரு காவல்காரர் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை.

மைகெலுக்கு அடுத்த வாரமே வேலை பறிபோனது. எல்லாவற்றுக்கும் மேலாகக் குடும்ப, சுற்றுவட்டார அவமானம். பள்ளிக்கூடத்தில் விவரம் தெரிந்து, இரண்டு பிள்ளைகளும் அவமானம் தாங்க முடியாமல் பள்ளிக்குப் போவதையே நிறுத்தி விட்டார்கள். சுற்றுவட்டக் குடும்பங்கள் பொதுவாகவே விலகியிருந்தாலும் இப்பொழுது இன்னும் மோசமாகி விட்டது. மைகெல் வீட்டில் அடிக்கடி கல்லெறி நடக்கத் தொடங்கியது. "வெளியேறு" என்று சீட்டு ஒட்டத் தொடங்கினார்கள். தொலைபேசியில் மிரட்டல்கள் வரத் தொடங்கின. விவாகரத்து கோரிய மனைவியிடம் வழக்கு முடியும் வரை தன்னை நம்புமாறும் உதவி செய்யுமாறும் கெஞ்சி, உறவுத்தவணை வாங்கினார். பிள்ளைகளின் நலனைக் கருதி மைகெலின் மனைவி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு வழக்கு முடிந்ததும் பார்க்கலாம் என்று அவருடைய தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். ஒன்றிரண்டு நண்பர்கள் தவிர மற்ற எவருமே ஆறுதலுக்குக் கூடப் பேச்சு வார்த்தை வேண்டாமென்று ஒதுங்கி விட்டனர்.

வக்கீலோ தன்னால் இதற்கு மேல் ஒன்றும் இயலாது என்றும், குற்றத்தை ஒப்புக்கொண்டு குறைந்தபட்ச சிறைத்தண்டனையைப் பெறுமாறும், வற்புறுத்தத் தொடங்கினார். மைகெல் தன் பக்கம் உண்மை இருப்பதாக நம்பியதால் வேறு வக்கீலை வைத்துப் போராட முடிவு செய்தார். புது வக்கீல் இதற்குச் செலவு அதிகமாகும் என்றும் வழக்கு முடிய இரண்டு மூன்று வருடங்கள் ஆகக்கூடுமென்றும், ஒரு லட்சம் டாலர் முன்பணமாகத் தரவேண்டும் என்றும் நிபந்தனை போட்டார்.

உடைந்து போனாலும், மைகெல் செலவைச் சமாளிக்க வீட்டை அடகு வைத்தார். மெர்சடீஸ் காரை அடிமாட்டு விலைக்கு விற்றார். தன்னுடைய வங்கி மற்றும் 401கே சேமிப்புகளை எடுத்தார். ஒரு பெரும்பகுதியை மனைவிக்கு அனுப்பினார். மிச்சப் பணத்திலிருந்து நூறாயிரம் டாலரை வக்கீலிடம் கொடுத்தார். தன்னம்பிக்கையை இழக்காமல் வழக்குத் தொடர்ந்தார்.

அரசுத் தரப்பிலிருந்து சாட்சி மேல் சாட்சியாகக் கொண்டு வந்தார்கள். மைகெல் வீட்டு இணைய இணைப்பிலிருந்து மற்ற அண்மை வீட்டு இணைப்புகளை விட நாற்பது மடங்கு அதிகமாகத் தரவுப்பறிமாற்றம், தொடர்ச்சியாகப் பல நாட்கள் நிகழ்ந்ததற்கான ஒரு வருடத் தொலைபேசி விவரங்களை ஆதாரமாகக் காட்டியதும், வழக்கு ஏறக்குறைய முடிந்து விட்டது. மைகெலுக்கு ஐந்தாண்டுக் கடுங்காவலும் பெரும் அபராதமும் தண்டனையாக விதிக்கப் பட்டது.

சிறையிலடைபட்ட மைகெல் விடவில்லை. தீர்ப்பை எதிர்த்து முறையிடலாமென்ற வக்கீலிடம் எப்படியாவது பணம் புரட்டித் தருவதாகச் சொல்லி அப்பீல் செய்யச் சொன்னார். வீட்டை விற்றார். தன்னுடைய ரோலக்ஸ் கடிகாரங்களிலிருந்து சட்டி பானை வரை எல்லாவற்றையும் விற்றார்.

ஐந்து வருடங்களுக்கான க்ரெடிட் கார்ட் விவரங்கள், மற்ற செலவு விவரங்கள், தொலைபேசி நிறுவனத்திலிருந்து அவர் வீட்டு இணைய இணைப்பு உபயோக விவரங்கள், இன்னும் பல விவரங்கள் தேவையென்றும் அவற்றைப் பெற மைகெலின் அனுமதி வேண்டும் என்றும், அவ்வப்போது வக்கீல் வருவாரே தவிர மைகெல் நிலையில் முன்னேற்றம் எதுவும் இல்லை. அப்பீல் செய்து மூன்று மாதங்களுக்குப் பிறகு தொடங்க வேண்டிய வழக்கு, இப்பொழுது ஏழு மாதங்களுக்குப் பிறகு தொடருமென்று அறிவிக்கப்பட்டது. அடுத்த நான்கு மாதங்களுக்கு வக்கீலிடமிருந்து தகவலே இல்லை.

அப்பீல் வழக்கு தொடங்கிய முதல் நாளிரவு மைகெல் இருந்த சிறைக்கு வந்தார் வக்கீல். மறுநாள் அவருக்கு நிச்சயம் விடுதலை கிடைக்கும் என்றார். விவரம் எதுவும் சொல்லவில்லை.

மறுநாள் நீதிமன்றத்தில் மைகெலின் ஐந்து வருடத் தொலைபேசி மற்றும் இணைய உபயோக விவரங்களையும் மற்ற க்ரெடிட் கார்ட் விவரங்களையும் சுட்டிக் காட்டினார் வக்கீல். "அண்மை வீட்டுக்காரர்களை விட அதிகத் தரவுப்பறிமாற்றம் செய்ததாகச் சொல்லப்படும் நாட்களில், பத்து நாட்கள் மைகெலும் அவர் குடும்பமும் வீட்டிலோ ஊரிலோ இல்லை. அதற்கு ஆதாரமாக இந்தக் க்ரெடிட் கார்ட் விவரங்களைப் பாருங்கள்" என்று நாள் பட்டியலிட்டு விவரங்களை எடுத்துக் காட்டினார். அவர் எடுத்துக் காட்டிய நாட்களிலும் நேரங்களிலும் மைகெலும் அவர் குடும்பமும் வெளியே சாப்பிடவோ, சினிமா போகவோ, டிஸ்னிலேன்ட், கொலராடோ என்று சுற்றுலா செல்லவோ உபயோகித்த க்ரெடிட் கார்ட் விவரங்களைக் காட்டினார். ஒரு முறை மைகெல் தொழில் தொடர்பாக இங்கிலாந்து சென்றிருந்ததையும் சுட்டிக் காட்டினார். அதே நேரங்களில் மைகெல் வீட்டு இணைய இணைப்பில் அசாதாரண தரவுப்பறிமாற்றம் நடந்ததையும் சுட்டிக்காட்டி, "ஊரிலோ வீட்டிலோ இல்லாதவர் எப்படி இந்த இணைப்பை உபயோகித்திருக்க முடியும்? இப்படிப்பட்ட விவரங்களின் பின்னணியிலும், மைகெல் கணினியின் அருகே இருந்திருக்கவே முடியாத நிலைமையின் அடிப்படையிலும், அவரை விடுதலை செய்ய வேண்டும்" என்று வாதாடினார்.

"அப்படியென்றால் அவருடைய கணினியைப் பயன்படுத்தியது யார்?" என்றார் அரசுத் தரப்பு வக்கீல். "அதானே?" என்றார் FBIக் காரர். "அதானே, நானும் கேட்கிறேன்?" என்றார் உள்ளூர்க் காவலர்.

"அதைக் கண்டுபிடிக்க வேண்டியது உங்கள் வேலை. நிரபராதிக்குத் தண்டனை வழங்க நேர்ந்ததற்கு வருந்துகிறேன்" என்றபடி வழக்கை ரத்து செய்து மைகெலை விடுதலை செய்தார் நீதிபதி.

மைகெலுக்கு பெரும் மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைத்தாலும், பழைய வேலையும் உறவுகளும் திரும்பக் கிடைக்கவில்லை. அரசை எதிர்த்து வழக்கு போட்டு பணம் பெற வேண்டும் என்றார். வக்கீலோ "அது சுலபத்தில் நடக்காத காரியம். விடுதலை கிடைத்த வரைக்கும் லாபம் என்று ஊர் போய்ச் சேர். புது வாழ்வு தொடங்கு" என்று மிச்சப்பணத்தை மைகெலிடம் கொடுத்து விட்டு விலகினார்.

மைகெல் நிரபராதியாக வெளியே வந்து மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. சென்றவார விடுமுறை நாட்களில் அவருடன் ஒரு மாலைப் பொழுதைக் கழித்தேன். நூறு பவுண்டுகளாவது எடை குறைந்திருப்பார் போல் பட்டது. முகமெங்கும் தேமல். கண்களை அடிக்கடிச் சுருக்கிக் கொண்டு பேசினார். மனைவி மக்கள் திரும்பி வந்துவிட்டாலும் உறவு முறையில் விரிசல் இருப்பதைப் பற்றிப் பேசினார். வாடகை வீட்டில் இருப்பதாகச் சொன்னார். குற்ற நிழலில் இருக்கும் அவருக்கு இப்போதைக்கு வேலை கிடைப்பது அரிதென்பதால் வீட்டு நிலமை மோசமாகியிருப்பதைப் பற்றிப் பேசினார். விடுதலைக்குப் பின்னரும் FBIகாரர்களுடன் ஒத்துழைப்பது பற்றிப் பேசினார். ஸ்ட்ரெஸ் பற்றிப் புலம்பினார். ஹேமாவின் பதிவைப் பற்றிச் சொன்னேன். கணினிப் பக்கமே இனித் தலைகாட்டப் போவதில்லை என்றார். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். நிச்சயம் அரசாங்கத்துக்கு எதிராக மானநஷ்ட வழக்கு போடப்போவதாகச் சொன்னார். அவருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு இரவு பனிரெண்டு மணிக்கு மேல் கிளம்பினேன்.

மைகெல் சொன்ன விவரங்களிலிருந்து:
  • இணையத்தில் இன்றைக்கு நிறைய தானியங்கி மென்கள் (bots) கிடைக்கின்றன. சரியான பாதுகாப்பில்லாமல் இணையத்தில் கலந்திருக்கும் கணினிகளை இந்தத் தானியங்கி மென்கள் அடையாளம் கண்டு, அவற்றை ஆபாசப் படங்களின் சேமிப்புக் கிடங்குகளாக உபயோக்கின்றன.
  • நம்மில் பெரும்பாலானவர்கள், கணினியில் என்ன இருக்கிறது என்று சோதனை செய்வதில்லை. முன்னூறு கிகாபைட் இருக்கிறது என்ற நினைப்பில் சுத்தம் செய்வதும் இல்லை. அதனால் இந்தத் தானியங்கிகள் இருபது முப்பது கிகாபைட் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு இணைய இணைப்பு கிடைக்கும் போதெல்லாம் "இங்கிருக்கிறேன்" என்று அடையாளம் காட்டிச் செயல்படுவதை நாம் கவனிக்கத் தவறுகிறோம்.
  • இப்படி நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான கணினிகள் இணையத்தில் கலந்திருக்கும் போது, கணினிக்கு ஐந்து பத்து கிகாபைட் என்ற கணக்கில் பிரித்துச் சேமிக்கப்பட்ட ஆபாசப் படங்களை வினியோகம் செய்வதில் எந்தவிதச் சிக்கலும் இல்லை.
  • அகப்பட்டுக் கொண்டால், கணினியின் சொந்தக்காரர்கள் தான் சிக்குவார்களே தவிர, இந்தப் படங்களைப் பரப்பும் அசல் குற்றவாளிகளுக்கு எந்தக் கெடுதலும் நேருவதில்லை.

அப்படிப் பார்த்தால் kggம் மீனாட்சியும் முருங்கையும் நீங்களும் நானும் அகப்பட்டுக் கொள்ள வாய்ப்பிருக்கிறதே? அய்யய்யோ! என்ன செய்வது?

சில அடிப்படைச் சுகாதாரங்களையும் பாதுகாப்பு விதிவகைகளையும் கடைபிடிக்கலாம்.

0. நிச்சயமாக கடவுச்சொல் உபயோகிக்க வேண்டும். பாஸ்வேர்ட் இல்லாமல் கணியை உபயோகிக்கவே கூடாது. கடவுச்சொல்லும் சுலபமாகத் திருட முடியாததாக இருக்க வேண்டும்.
1. வீட்டில் இருப்பவர்கள் பொதுவான கணியை உபயோகித்தால், தனித்தனி கடவுச்சொல் உபயோகியுங்கள். ஒவ்வொருவருக்கும் தனிப்பகுதி (folder or some partition) ஒதுக்குங்கள்
2. வாரம் ஒரு முறை (முடியாவிட்டால் மாதம் ஒரு முறையாவது) கணினியில் இருப்பதைக் கவனியுங்கள். மேலோட்டமாகப் பார்த்தால் கூடப் போதும். disc properties சோதனை செய்து மிகுந்திருக்கும் வெற்றிடங்களை ஒப்பிடுங்கள். திடீரென்று வெற்றிடம் வெகுவாகக் குறைந்திருந்தாலோ அதிகரித்திருந்தாலோ கவனியுங்கள்.
3. இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரர் உபயோகிப்பதை முடிந்தவரைத் தவிருங்கள். பைர்பாக்ஸ் அல்லது க்ரோம் உலாவிகளை உபயோகியுங்கள்.
4. இணைய இணைப்புக்கென்றுத் தனியாக வைரஸ் தடுப்புகளை உபயோகியுங்கள்
5. இணையப் போக்குவரத்தை விவரிக்கும் மென்பொருள் ஒன்றை உபயோகித்து, உங்கள் கணினியின் இணையப் போக்குவரத்தைக் கண்காணியுங்கள்.
6. தேவையில்லாத பொழுது, இணைய இணைப்பை நிறுத்தி விடுங்கள்
7. எந்தவிதக் கோப்பிணைப்பையும் (file attachment) முற்றும் நம்பினாலொழியத் திறக்காதீர்கள். நண்பர் பாட்டு அனுப்பினால் கூட, 'ஆகா, கேட்டேனே, நன்றாக இருக்கிறது' என்று பொய் சொல்லி பதில் போடுங்கள். சகோதரி புகைப்படம் அனுப்பினால் கூட"அடடா, என்ன அழகு" என்று கூசாமல் பொய் சொல்லுங்கள். தொடவே தொடாதீர்கள். டிலீட். டஸ்ட்பின்!
8. USB விசைகள் பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள். வின்டோஸ் இன்றைக்கு USB குச்சிகள் வழியாக வரும் வைரஸ்களைத் தடுக்க எந்தப் பாதுக்காப்பும் அளிப்பதில்லை.
9. பிள்ளைகளின் கணினி உபயோகத்திற்கு வரைமுறையும் விதிகளும் கடைபிடியுங்கள்
10. இணையதள அடையாளச்சீட்டுகளை (cookies) முடிந்தவரை ஏற்காதீர்கள்
11. தரவிறக்கங்களைக் கண்காணியுங்கள்; சோதனையிடுங்கள்
12. தானியங்கித் தளமாற்றங்களை அனுமதிக்காதீர்கள் (automatic reloading, routing or opening of additional popups or sites)
13. வீட்டுக் கணினியிலும் வைரஸ் தடுப்பு மென்பொருட்களை உபயோகியுங்கள். இணையத்தில் இலவசமாக நிறைய கிடைத்தாலும் நோர்டன் போன்ற மென்பொருட்களை நிறுவுங்கள். கூகுள் இலவசமாக சாதா நோர்டன் வழங்குகிறது. நெய் மசாலா ஸ்பெசல் நோர்டன் கொஞ்சம் செலவுதான் என்றாலும் முடிந்தவரை நிறுவி உபயோகியுங்கள்
14. திடீரென்று கணினி வேகம் குறைந்தது போலவோ, அல்லது ஏதாவது தேடுவது போலவோ காரணமில்லாமல கரகர என்றால் கொஞ்சம் கவனியுங்கள்
15. பேஸ்புக், லிங்க்டின், மைஸ்பேஸ் உபயோகிக்கும் பொழுது கவனமாக இருங்கள். குறிப்பாக, யூட்யூபில் நூதன் நடித்த படத்தைத் தேடும் போது 'மலையாள மங்கை' என்று ஏதாவது தோன்றினால் விலகுங்கள். நூதன் மலையாளப் படத்தில் நடிக்கவில்லை.

2009/11/27

தீப்பெட்டியில் கால எந்திரம்

போக்கற்ற சிந்தனை

தீப்பெட்டி அட்டைகளைச் சேகரித்தது நினைவிருக்கிறதா? எளியவரின் தபால்தலை, தீப்பெட்டி அட்டை என்பேன்.

நண்பர் அடிபட்டு மருத்துவமனையிலிருந்தார் என்றேனே, சிகிச்சைக்குப் பின் ஒரு மாதமாக வீட்டிலிருக்கிறார். கழுத்தில் ஒன்றை மாட்டிக் கொண்டு நிதானமாகச் சுற்றிச்சுற்றிப் பார்க்க வேண்டிய நிலை. எனக்கும் வேறு வேலை இல்லையா? முடிந்த போதெல்லாம அருகிலிருக்கும் அவரைச் சந்திக்கும் போக்கில் அவர் வீட்டு வரவேற்பரையிலிருக்கும் coffee-table book ஒன்றைப் புரட்டிக் கொண்டிருப்பேன். அவர் குனியவோ திரும்பவோ முடியாமல் சொகுசு நாற்காலியில் என் எதிரே அமர்ந்து கொண்டு, இன்சூரன்சு இல்லாமல் இடித்துத் தள்ளியவனின் பரம்பரையைக் கலர் கலராகத் திட்டிக் கொண்டிருப்பார். ஒரு கையால் புத்தகம் புரட்டிப் படிக்க வேண்டிய நிலையை நினைத்து நான் இன்னும் சில கெட்ட வார்த்தைகளைப் போட்டுக் கொடுப்பேன். திட்டுப் படலம் நின்றதும், சில சமயம் அவரைக் கிண்டல் செய்வதற்காக அவர் பின்னால் நின்று கொண்டு அழைப்பேன். கழுத்தைத் திருப்பமுடியாமல் திட்டிக்கொண்டே நூற்றெண்பது டிகிரி திரும்புவார். திரும்பிய பின் இன்னும் திட்டுவார். நன்றாகப் பொழுது போனது. (ஹி..ஹி.. இரண்டாவது பதிவுங்க, ஸ்ரீராம்).

அவரைச் சந்திக்கத்தான் சென்றேன் என்றாலும், அந்த coffee-table book என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. தீப்பெட்டி அட்டைகளைப் பற்றிய பீமசேனன் சைஸ் புத்தகம். அத்தனை உலக நாடுகளிலிருந்தும் இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்துச் சேகரித்தத் தீப்பெட்டி அட்டைகளின் படங்களை வெளியிட்டு, சமகால வரலாறு மற்றும் கலாசாரத்தைப் பற்றி எழுதியிருந்தார்கள். Fascinating. நாகேஷ் பாணியில், simply wonderful... hello? simply wonderful!

தீப்பெட்டி அட்டைப்படங்களில் தமிழ்நாட்டின் பங்கு பிரமிக்க வைத்தது. கேள்விப்படாத அல்லது கேள்வி மட்டுமே பட்டிருந்த ஊர்களின் பெயர்களைப் பார்த்தபோது, உள்ளம் முறையாகச் செய்த திருவாதிரைக் களி போல் நெகிழ்ந்து போனது. (எங்கள் வீட்டில் செய்த களியை அம்மா அந்தப்பக்கம் நகர்ந்ததும் எடுத்து யாருக்கும் அடிபடாதபடி வேலி ஓரமாக உருட்டி வைப்போம். நாங்கள் தான் அப்படியென்றால் பக்கத்து வீட்டிலும் அதே கதை. எங்கள் வீட்டுப் பொது வேலிச்சுவரின் தோற்றம்.)

தீப்பெட்டி அட்டைப்படங்கள் தான் சிவகாசியின் அச்சுத் தொழில் வளரக் காரணம் என்று புரிந்தது. குடிசைத் தொழில் என்று நிறைய படித்திருந்தாலும், முதல் முறையாக குடிசைத் தொழிலின் பரந்த பொருளாதார பாதிப்பைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. தீப்பெட்டி அட்டைப்படங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்தவற்றையொட்டி வடிவமைக்கப்பட்டிருந்தன. சுதந்திரப் போராட்டத்தை ஒட்டியும் சுதந்திர இந்தியாவின் முதல் வருடங்களைப் பற்றியும் தீப்பெட்டி அட்டைகள் வழியாக அறிந்துகொள்ள முடிந்தது. பூக்கள், விலங்குகள், பெண்கள், பறவைகள், திருவிழாக்கள், அரசியல், சமூகம், கடவுள் என்று விதவிதமாகத் தீப்பெட்டி அட்டைகள் கதை சொல்கின்றன.

அந்த நாளில் தீப்பெட்டி அட்டைகளால் இரண்டே உபயோகம் தான். 'மேச்சீஸ் விளையாடலாம்' என்று கிளம்பி பேந்தா கோலி, கிட்டிப்புள், மரக்குரங்கு விளையாட்டுக்களில் பணத்துக்குச் சமமாகப் பந்தயம் கட்டி விளையாடப் பயன்பட்டது. இரண்டாவது உபயோகம், புது நட்புக்களை வலுப்படுத்திக் கொள்வது. என்னிடம் 'லால் பகதூர் சாஸ்திரி மேச்சீஸ் இருக்கு, உன்னிடம் என்ன இருக்கு?' என்று சொல்லி நட்பு ஏற்படுத்திக்கொண்டு மழை நாட்களில் வீட்டுக்குள் பெரியவர்களின் சீட்டு விளையாட்டுக்கு இணையாக மேச்சீஸ் ட்ரேடிங்! ebayல் இன்றைக்கு நான்கு டாலர் வரை ஏலம் போகிறது தீப்பெட்டி அட்டை!

தீக்குச்சியை உலகுக்கு வழங்கிய நாடு - ஒன்று இரண்டு மூன்று... தெரியாவிட்டால், இதோ: சைனா. கிழக்கிலிருந்து மேற்கே போன கண்டுபிடிப்புகளுள் ஒன்று. இன்றைய தொழில்நுட்பங்களைப் பார்க்கும் பொழுது தீப்பெட்டியை மிகச்சாதாரணமாக எண்ணத் தோன்றும். ஆனால் இந்த எளிய தொழிலில் தமிழ்நாட்டு மக்கள் புகுத்திய புதுமை உலகக் கவனத்தை ஈர்த்தது. இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கம் வரை ஸ்வீடன் நாடு தான் தீப்பெட்டித் தொழிலில் முன் நின்றது. 1920 வாக்கில் தொடங்கி, படிப்படியாக சிவகாசி தீப்பெட்டி ஏற்றுமதியில் முக்கிய அந்தஸ்தைப் பெற்றது. சிவகாசி வளர வளர தீப்பெட்டித் தொழிலில் ஸ்வீடன் நாட்டில் வேலைவாய்ப்பு குறைந்து ஏறக்குறைய அழிந்து போனது. சிவகாசி மற்றும் தமிழ்நாட்டுத் தீப்பெட்டி குடிசைத் தொழிற்சாலைகள் உலகமெங்கும் ஏற்றுமதி செய்தார்கள். அந்த நாளைய அவுட்சோர்சிங்? (சோறு தண்ணீர் போடாமல் தொழிலாளிகளைக் கொத்தடிமையாகச் சிறுவர்களையும் சேர்த்து வேலை வாங்கியதாகச் சொல்லப்படும் தீப்பெட்டித் தொழிற்சாலை முதலாளிகளைப் பற்றி ஒன்றும் எழுதக் காணோம்!).

ஒரு வருடத்துக்கு 243 பிலியன் தீக்குச்சிகள் சிவகாசியில் தயாராகின்றனவாம். (243,600,000,000. இது எத்தனை கோடி? கோடிக்கணக்குத் தெரிந்தவர்கள் உதவி! உதவி!) இவையத்தனையும் கைத்தொழிலாம். இதைத் தவிர இயந்திரம் உபயோகித்து கல்கத்தா போன்ற இடங்களில் தீக்குச்சிகள் தயாரிக்கிறார்களாம். எந்த வித இயந்திரமும் இல்லாமல் கையை நம்பிப் பிழைக்கும் சிவகாசித் தொழிலாளிகளைக் கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது. என்றாலும், இயந்திர உதவி பெறக்கூடாதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

தீப்பெட்டி அட்டை இன்றைக்கு இன்னொரு பெருமையை தமிழ்நாட்டுக்கு (சிவகாசிக்கு) வழங்கியிருக்கிறது. வண்ண அச்சுத்துறையில் உலகத்திலேயே இரண்டாவது இடத்தை சிவகாசி பெறுவதற்குக் காரணம் தீப்பெட்டி அட்டை அச்சுக்கலை தான். குடிசைத்தொழிலை ஆதரிக்க வேண்டும் என்று சொன்ன அரசியல்வாதி யார்? காந்தியா? (காந்தி அரசியல்வாதியா?). சொன்னவரையும் செய்து காட்டியவரையும் (சிவகாசி நாடார்கள்) கும்பிடுகிறேன்.

சிலத் தீப்பெட்டி அட்டைகளைப் பார்ப்போம்.

முதலாவதைச் சேகரித்தது நினைவிருக்கிறது. நாலு காசுக்கு விற்கப்பட்ட இரண்டாவது தீப்பெட்டியின் அட்டையைப் பாருங்கள். எத்தனை அற்புதமான வண்ணம்! நாலு பைசாவுக்கு தீக்குச்சி, தீப்பெட்டி, வண்ண அட்டைப்படத்துடன் எப்படி விற்க முடிந்தது? நாலு பைசாதானே? ஒரு வேளை நாலணாவா?






வில்லிப்புத்தூர் தீபலட்சுமிக்கும் இந்திக்காரப் பெண்ணுக்கும் எத்தனை வித்தியாசம்! தீபலட்சுமி முகத்தில் களையே காணோமே? சாமி கும்பிடுவதானால் இத்தனை சோகமா? சைனா லேடி ஜப்பான் லேடி போலிருக்கிறார். இரண்டாவது முறை பார்த்தால் கொஞ்சம் பயமாக இல்லை? லேடியா கேடியா?






நிச்சயம் இதில் ஒன்றைச் சேர்த்திருக்கிறேன். அரிவாளை எடுத்துக் கொண்டு சிறுத்தையை விரட்டும் உழவன் எம்ஜிஆராக இருந்தாலொழிய அன்றைக்கு சிறுத்தைக்குப் பசி தீர்ந்தது என்பேன். என்ன? முறத்தை எடுத்துப் புலியை விரட்டினாளா தமிழ்ப்பெண்? அரிவாள் எவ்வளவோ மேல் என்கிறீர்களா?






வெங்கடாசலபுரம், சத்தியநகரம், புதுச்சுராங்குடி... இந்த ஊர்ப் பெயர்களையெல்லாம் நான் தெரிந்துகொண்டிருக்க வேறு வாய்ப்பே இல்லை. தங்கப்பூ தமிழ்ப்பூவென்பதால் புதுச்சுராங்குடி மேல் மையல் தோன்றினாலும், வெங்கடாசலபுரப் பூக்களைப் பாருங்கள் - என்ன கலர், என்ன கலர்! பூவைச் சொன்னேன்.






பலவகைப் பூக்களை நிறையத் தீப்பெட்டி அட்டைகளில் பார்த்தாலும், மொழிபேதமில்லாமல் தாமரை தான் சூபர் பூ போலிருக்கிறது. வடமொழிக் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது. பூக்களில் தாமரை தான் உயர்ந்ததாம். 'புஷ்பேஷூ கமலம், புருசேஷூ விஷ்ணு, நாரீஷூ ரம்பா, நகரேஷூ காஞ்சி' என்று தொடங்கும் பாடல். ஐ! வடமொழிக்கவிதையில் நம்ம ஊர் காஞ்சீபுரம்! காசியைத் தான் காஞ்சி என்று (ஏ)மாற்றிச் சொல்லிவிட்டார்கள் என்று என் வடமொழி ஆசிரியர்கள் சொன்னதும், இனிமேல் மாற்றமுடியாது ஆட்டம் குளோஸ் என்று வாதாடியதும் நினைவுக்கு வருகிறது. வடமொழிப் பாடலாசிரியர் யாரென்று நினைவில்லை - காளிதாசன்? நம்ம ஊர் கண்ணதாசன் வடமொழிக் கருத்தை இறக்குமதி செய்து 'மலர்களிலே அவள் மல்லிகை' என்று தமிழ்ப்படுத்தியதும் நினைவுக்கு வருகிறது. தாமரையா மல்லிகையா, எந்தப்பூ சொந்தப்பூ? எங்கள் ஓட்டு மல்லிகைக்கே.

சாத்தூர், மாஞ்சேரி, கந்தசங்கடவு என்று புது ஊர்ப்பெயர்களைப் பார்த்தாலும், சென்னையைத் தீப்பெட்டி அட்டையில் பார்த்ததும் சிலிர்த்தேன். சென்னையில் தீப்பெட்டித் தொழில் இருந்ததா இல்லை சும்மா பேருக்குப் பெயரா? கிளிவிளக்கிலிருந்து டேபிள் லேம்ப் வரை பரிணாமத்தைப் பாருங்கள். ராமலிங்கபுரத் தீப்பெட்டி அட்டையில் மின்னொளிக் கம்பம் பழைய நினைவுகளைக் கொண்டு வருகிறதே சாமி? விளக்கடியில் நின்றபடி நண்பர்களுடன் அரட்டையடித்த அந்த நாட்கள்!

தேடித்தேடிப் பார்த்தும் பொங்கல், தீபாவளி தவிர வேறெந்தப் பண்டிகையையும் காணோம். தீப்பெட்டி அட்டைகள் பிள்ளையார் சதுர்த்தியை மறந்ததேன்? வடநாட்டில் 'கண்பதி பப்பா' என்று கூத்தாடுவார்களே, ஒரு தீப்பெட்டி அட்டை போடும்படி சொல்லக் கூடாதோ?







வானொலி, தொலைபேசியின் வடிவமைப்பு வளர்ச்சியை நினைவூட்டும் அட்டைகள். அந்த மின்விசிறியின் நடுவில் இருக்கும் கண்ணைப் பார், சிரி! (அல்லது நடுங்கு).








நிறையக் கடவுள்கள் தீப்பெட்டி அட்டையில் தோன்றினாலும், கிருஷ்ணர் தான் அதிக ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெறுகிறார். மறுபடியும் புருசேஷூ விவகாரம். புத்தரைத் தீப்பெட்டி அட்டையில் பார்ப்பது சற்றே பேதமான நகைச்சுவையாக இருக்கிறது. தோழர்களே, இப்போது இந்த புத்தர் தீப்பெட்டியிலிருந்து குச்சியெடுத்துக் கொடும்பாவிகளைக் கொளுத்துவோம்.





திருநெல்வேலி ஜங்சன், புதுக்கோட்டை, நாமக்கல், கோவில்பட்டி என்று பரவுகிறது தீப்பெட்டித் தொழில். சுதந்திரப் போராட்டம், ஜஸ்டிஸ் கட்சி கலைப்பு போன்ற நிகழ்ச்சிகளைத் தீப்பெட்டி அட்டையில் சித்தரித்திருக்கிறார்கள். நேதாஜியை இன்றைக்கு யாராவது நினைத்துக் கொள்கிறார்களா?





மூன்று பைசா நாணயத்தை எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறேன் - படத்தில் தான். இரண்டு பைசா ஒரு பைசா நாணயங்கள் இருக்கும் போது, மூன்று பைசா நாணயத்துக்கு என்ன அவசியம் என்று கேள்வி கேட்டு பதில் சொன்ன தொடக்கப்பள்ளி ஆசிரியர் நினைவுக்கு வருகிறார். அவர் சொன்ன பதில்: பார்ப்பனர்கள் வேலை. மூன்று பைசாவைத் தயாரிக்காமலிருந்தால் எத்தனை சேதத்தைத் தவிர்த்திருக்கலாமென்று நிறைய நினைத்திருக்கிறேன்.






குட்டி மிருகக்காட்சி சாலை பாருங்கள். நிறைய புது ஊர்ப்பெயர்கள் என்றாலும், நம்ம ஊர் காரைக்காலுக்கு ஜே! அங்கே கூடத் தீப்பெட்டித் தொழில் இருந்ததா என்ன?



















பீரங்கி அட்டை சேகரித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். வாளைப் பார்த்தால் வெண்டைக்காய் மாதிரி இல்லை?








தாயின் மணிக்கொடி கொஞ்சம் சிலிர்க்க வைக்கிறது. சுதந்திரத்துக்கு முந்தைய அட்டைகள் என்றாலும், நடுவில் இருப்பது கொடியைக் கொளுத்துவது போல் தோன்றுகிறது. அல்லது நாடே சுதந்திர வெறியில் தீப்பற்றி எரிகிறது என்ற பாலசந்தர் பாணி டைரக்சனா?


சுதந்திரம் கிடைத்த முதல் ஆண்டு விழாவை தீப்பெட்டி அட்டையில் கொண்டாடியிருக்கிறார்கள். நாட்டுப்பற்று வாழ்க.








ரொட்டி, காபி என்ற மேல்நாட்டு இறக்குமதிகள் எந்த அளவுக்குப் பரவியிருக்கின்றன பாருங்கள். மேலையர் ஆதிக்கத்துக்கு முன் நாம் காபி குடித்தோமா? 'காபியைச் சீக்கிரம் கண்ணுல காட்டுறா' என்று காலையில் பொறுமையிழக்கும் என்னருமை அம்மா, உனக்கு இருபது சந்ததி மூதாதையர் காபியே குடிக்கவில்லை தெரியுமோ?




அசர வைத்தது - ஸ்வீடன் நாட்டுத் தீப்பெட்டி அட்டை.










ஸ்ரீராம் ஸ்பெஷல்.








புத்தகம்:
Matchbox Labels, Jane Smith

2009/10/24

புலம்பல் பாதி; புடலங்காய் நீதி

போக்கற்ற சிந்தனை


    சென்ற வாரம் நடந்த கூத்தை என்னவென்று சொல்வது? கூத்து சரி, அதை விடத் தாக்கமாக வேறு ஏதாவது சொல் கிடைக்கிறதா பார்க்கிறேன். ஆறு வயதுக் குழந்தையை மாடிக்குள் பூட்டி வைத்து விட்டு, ஒரு ஹைட்ரொஜன் பலூனைப் பறக்க விட்டு குழந்தையைக் காணோம் என்று போலீசுக்கும் டிவிக்கும் தகவல் கொடுத்தார்கள் பெற்றோர்கள். அமெரிக்காவே அல்லோல கல்லோலப் பட்டது. குழந்தை ஒரு வேளை அந்த பலூனில் இருக்கிறதோ என்று நிமிடத்துக்கொரு முறை "சற்று முன் கிடைத்த தகவல்". மத்திய மாநில காவல்துறை மற்றும் அவசரப் பாதுகாப்புக் குழு, ஹெலிகாப்டர் படை என்று இழுத்தடித்து விட்டு பலூன் தரையிறங்கியதும் உள்ளே ஒன்றும் காணோம். வீட்டுக்கு வந்ததும் 'ஐஸ்பை' என்றதாம் பிள்ளை. அங்கே இங்கே என்று டிவியில் நேர்முகம். பொய் சொல்லிக் கொடுத்தாலும் ஒழுங்காகச் சொல்லிக் கொடுக்க வேண்டாமோ? சிஎன்என் லேரி கிங் கிழத்திடம் உளறி விட்டது ஆறு வயது குழந்தை, "எங்கப்பா குதிருக்குள் இல்லை" கணக்கில். இரண்டு நாளாக அப்பனையும் அம்மையையும் கைது செய்து சிறையிலடைக்க திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். கேட்டால், ரியேலிடி டிவிக்காக அவர்கள் போட்ட திட்டமாம். இதில் குழந்தையின் எதிர்காலம் தான் ரியேலிடி டிவிக்கான விஷயமாகி விட்டது. இவர்களையெல்லாம் பெற்றோர்கள் என்று எப்படி சொல்வது?

நீதி: சீனாவிலும் இந்தியாவிலும் போல் ஆறு வயது குழந்தைக்குப் படிப்பையும் பண்பையும் சொல்லிக் கொடுத்துப் பிழைத்துக் கொள்ளலாம். அமெரிக்கா போல் ஆறு வயதுக் குழந்தைக்கு பொய்யையும் புரட்டையும் சொல்லிக் கொடுத்து மாட்டிக் கொள்ளலாம்.
புலம்பல் பாதி; புடலங்காய் நீதி | 2009/10/24


    ந்த மாதம் ஒபாமா பாராயணம் கொஞ்சம் அதிகமாகி இருக்கிறது. ஓசியில் கிடைத்த நொபெல் பரிசு ஒரு காரணம். எந்தக் கேனக்.... நொபெல் பரிசு வழங்கத் தீர்மானித்தானோ தெரியவில்லை, வக்காலத்து வாங்க இன்னொரு கேனக்.... தயாராக வந்து விட்டான். கேட்டால் ஒபாமா புது நம்பிக்கையைக் கொண்டு வந்திருக்கிறாராம். நம்பிக்கை என்றைக்கு ஐயா சாதனையானது? நாய்பாடு பேய்பாடு பட்டுப் பரிசு வாங்கிய மற்றத் துறையினர் ஒன்றும் பிடுங்காமலே இருந்திருக்கலாம். உலக அமைதிக்கான இந்த நொபெல் பரிசு வழங்கும் விவகாரமே கேள்விக்குறியாக இருந்து வந்திருக்கிறது. ஒன்றும் பிடுங்காதவர்களுக்கு இதற்கு முன்பும் பரிசு கொடுத்திருக்கிறார்கள். யாசர் அராபத், இஷ்டாக் ரபின், சிமோன் பெரெஸ் கும்பலுக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டம் இன்னும் அடித்துக் கொண்டிருக்கிறது. ஒரே ரத்த களம். ஜிம்மி கார்டருக்கு கொடுத்தார்கள். ஹி ஹி ஹி. அல் கோர் - இன்டர்னெட்டைக் கண்டுபிடித்ததாக மார் தட்டிய மகான் - அவருக்குக் கொடுத்தார்கள். நாளைக்கு கோள் வெப்பத்தைக் கண்டு பிடித்ததாகச் சொல்வார். தலையாட்டி தலையாட்டி மாயும் இடதுசாரிக் கூட்டம். இன்னொரு நொபெல் கிடைத்தாலும் கிடைக்கும். சமாதானம் அமைதி என்றதும் உங்கள் நினைவுக்கு வருபவர் யார்? ம்ஹூம்... அவருக்குக் கிடைக்கவில்லை.

இந்தக் கூத்தில் ஓசைப்படாமல் சாதனை படைத்து பரிசும் வாங்கியிருக்கிறார் நம்ம நாட்டுக்காரர். ஊர்க்காரர். ஊர் பாட்டுக்காரர். வெங்கடராமன் ராமகிருஷ்ணன். ரசாயனத் துறையில் நாய்பாடு பேய்பாடு பட்டு உழைத்து அசலாகச் சாதனை புரிந்த அசல் டாக்டர். டிஎன்ஏவின் அடிப்படையான ரிபோசோம் பற்றி ஆராய்ந்து, உலகம் அறிந்து கொள்ள வழி வகுத்தமைக்குப் பரிசு பெற்ற மூவரில் ஒருவர். வெங்கடராமன் ராமகிருஷ்ணன் வாழ்க. அவர் குலம் வாழ்க.

நீதி: கெமிஸ்ட்ரி பிஎச்டி படித்து உழைத்து முன்னேறி ஆராய்ச்சி செய்து சாதனை செய்து நொபெல் பரிசு பெற்று வாழலாம்; கெக்கே பிக்கே என்று எதையாவது சொல்லி, உழைக்காமல் சாதனை செய்யாமல் நொபெல் பரிசு பெற்று வாழலாம். இரண்டும் கெட்டானாக என்னைப் போல் புலம்பிக் கொண்டும் வாழலாம்.
புலம்பல் பாதி; புடலங்காய் நீதி | 2009/10/24


    லிம்பிக் பந்தயங்களை உள்ளூருக்குக் கொண்டு வர சிகாகோ நகரம் முப்பது மிலியன் டாலருக்கு மேல் செலவழித்திருக்கிறது. அமெரிக்காவிலேயே மோசமான இடமாக சிகாகோ இரண்டாவது வருடமாகத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. இது ஒரு வேளை ஒலிம்பிக் கமிட்டிக்கு தெரிந்து விட்டதோ என்னவோ? அமெரிக்காவிலேயே அதிகமாக வேலையில்லாத் திண்டாட்டம் பரவியிருக்கும் சிகாகோ நகரப் பொதுமக்களுக்கு இந்த முப்பது மிலியனைக் கொடுத்திருந்தால் சில வருடங்களுக்குப் பிழைத்துக் கொண்டிருப்பார்கள். இந்த முப்பது மிலியன் போதாதென்று, பெருஞ்சாதனையாளர் ஒபாமா அரசாங்க செலவில் ஒரு சுற்று போய் வந்தது தான் மிச்சம். 'சீ போயா!' என்று புறக்கணித்து விட்டார்கள் ஒலிம்பிக் தேர்வுக் குழுவினர். நொபெல் பரிசு வழங்கிய ஆட்களின் மாமா மச்சான் பேரன் பேத்தி எவரும் ஒலிம்பிக் குழுவில் இல்லை. நொபெல் பரிசு வழங்கப்பட்டதன் காரணத்தை வலியுறுத்திய புறம்போக்கு மீடியா ஒலிம்பிக் தோல்வியைப் பற்றி கப்பென்றார்கள் சிப்பென்றார்கள். ஒபாமாவை ஒன்றும் சொல்லாதது இருக்கட்டும். சென்ற நான்கு வருடங்களாக எத்தனை வேலை எத்தனை செலவு! சிகாகோவுக்கு பந்தயங்கள் வழங்கப்பட சாத்தியம் உண்டோ இல்லையோ அதைக் கூட விடுங்கள். இப்போது ஒலிம்பிக் பந்தயங்களை இங்கே கொண்டு வந்து என்ன ஆகப்போகிறது? ஒலிம்பிக் பந்தயங்களை ஒட்டி வரக்கூடிய சாத்திய வருமானம் ஒரு தூண்டுதல் என்றாலும், முதலில் கையிலிருப்பதை அசலாகச் செலவழிக்க வேண்டுமே? இதனால் பயன் பெறுபவர்கள் யார்? அரசியல்வாதிகள் தான். சிகோகோ 2001லிருந்து வறுமையை நோக்கி வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 2002லிருந்து 2007 வரை சிகாகோ பொருளாதார வளம் 22% அழிந்திருக்கிறது. இதையெல்லாம் பார்க்க வேண்டாமோ? இப்போது போலீசுக்கு சம்பளம் கொடுக்கப் பணமில்லையாம்.

நீதி: இருக்கிற காசை சேர்த்து வைக்கலாம். இருக்கிற காசை செலவழிக்கலாம். இல்லாத காசை செலவழித்து என்னைப் போல் புலம்பலாம்.
புலம்பல் பாதி; புடலங்காய் நீதி | 2009/10/24


    மீபத்தில் ஒரு புள்ளிவிவரம் வெளியிட்டார்கள். கொலைக் குற்றம் சாட்ட்பட்டவர்களில் 46% குறைவாகத்தான் அதற்கான தண்டனை பெறுகிறார்களாம். அதிலும் 28% தான் முழு தண்டனையை அனுபவிக்கிறார்களாம். ஆனால் என்னருமை இலினாய் மாநிலத்தின் ஆளுநராகப் பதவி ஏற்றவர்களுள் 52% ஊழல் குற்றத்துக்கு தண்டனை பெற்றிருக்கிறார்களாம். கொலைக் குற்றம் செய்தவர்களை விட இலினாய் மாநில ஆளுநர்கள் ஜெயில் தண்டனை அனுபவிக்கும் சாத்தியம் அதிகம் என்று நிரூபித்திருக்கிறார்கள். குறிப்பாக, சமீபத்தில் குற்றம் சாட்டப்பட்டு தூக்கி எறியப்பட்ட ப்ளெகெயோவிச், ஒபாமாவின் இலினாய் தொகுதிக்கு ஆளை நியமிக்கப் பேரம் பேசியவர் என்பது தெரிந்திருக்கும் - ஒலிம்பிக் பந்தயங்கள் வராததில் அவருக்கு கொஞ்சம் வருத்தம் என்றாலும் நிறைய மகிழ்ச்சி தான். பந்தயங்களை வைத்துப் பணம் பண்ணக் காத்திருந்தவர் தானே? வெளியே மகான் போல் பேசிக்கொண்டு இந்த ஆள் அடித்திருக்கும் கொள்ளையை நம் ஊர் அரசியல்வாதிகள் தெரிந்து கொள்ளாமல் இருந்தால் சரி. இந்த ஆளுக்கு அடி வருடிய தென்னிந்தியக் கூட்டம் இப்போது முக்காடு போட்டுக் கொண்டு திரிகிறது.

நீதி: பட்ட காலிலே படும். தமிழ்நாட்டிலிருந்து குடிபெயர்ந்தால் இலினாய் வாசம் கிடைக்கும்.
புலம்பல் பாதி; புடலங்காய் நீதி | 2009/10/24


    'ஒரே தந்திரக் குதிரைக்கன்று' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். தவறு, 'one trick pony' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். தாண்டிக் குதிப்பதை வெவ்வேறு விதமாக செய்து கொண்டிருக்குமாம். குதிரைக்கு ஒரு தந்திரம் தெரிவது இருக்கட்டும். பிரபல கதாசிரியர்களும் அப்படித் தான் என்று சில சமயம் தோன்றுகிறது. டேன் ப்ரௌன் எழுதிய 'Lost Symbol' படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கொடுமை. அடையாளக்குறி மற்றும் மதங்களை வைத்துக் கொண்டு எத்தனை உப்புமா கிளறுவார் மனிதர்?! ஒரு விவஸ்தை வேண்டாம்? Lost Symbol பணம் கொடுத்து வாங்க வேண்டியிருந்ததால் ஏமாற்றம் இன்னும் அதிகமாக வலிக்கிறது. பணத்தைத் திருப்பும்படிக் கேட்டேன். புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தால் பணம் தரமாட்டார்களாம். 'படித்துப் பெற்ற அறிவை எப்படித் திருப்பிக் கொடுப்பீர்கள்?' என்கிறார்கள் டேன் ப்ரௌன் மற்றும் வால்மார்ட் நிறுவனத்தார். 'அறிவைப் பெறவில்லை ஞான சூனியங்களே, இருந்த அறிவைப் போக்கடித்துக் கொண்டேன்' என்றேன். 'அது உங்கள் தவறு' என்றார்கள். உண்மை தான். அறிவிருந்தால், இந்தப் புத்தகத்தை வாங்கியே இருக்க மாட்டேன். வாங்கியிருந்தாலும் என் விரோதி யாருக்காவது பரிசளித்திருப்பேன். புத்தி வரும் என்கிறீர்களா? அடுத்த புத்தகத்தையும் விலை கொடுத்து வாங்கிப் படித்து புலம்புவேன்.

நீதி: அறிவுக்காகக் கஷ்டப்பட்டுப் படிக்கலாம். பகட்டுக்காகக் கஷ்டப்பட்டுப் படிக்கலாம். என்னைப்போல் பொழுது போகாமல் படித்துக் கஷ்டப்படலாம்.
புலம்பல் பாதி; புடலங்காய் நீதி | 2009/10/24


    புத்தகம் பரிசளிப்பது என்றதும் நினைவுக்கு வருபவர்கள் என் மாமாவும் என் ஆசிரிய நண்பர் அரசனும். என்னுடைய மாமா எனக்குக் கணக்கற்ற P.G.Wodehouse புத்தகங்ககளைப் பரிசளித்திருக்கிறார். எட்டு புத்தகங்கள். இருந்தாலும் அவர் மகிழ்ச்சிக்காக கணக்கற்ற என்றேன். அரசன் எனக்கு வழங்கிய தமிழ்ப் புத்தகங்கள் உண்மையிலேயே கணக்கிலடங்கா. அவர் பரிசளித்த சில புத்தகங்களைப் படித்த போது இவர் உண்மையிலேயே எனக்கு நண்பர் தானா என்று தோன்றும் - விடுங்கள், நான் தானப்பசுவின் பற்களை எண்ணிப் பார்ப்பவன். சமீபத்தில் ஸ்ரீராம் தூண்டுதலால் 'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' படிக்கும் ஆவல் வந்தது. அந்தப் பெயரில் ஒரு புத்தகம் இருப்பதே ஸ்ரீராம் சொல்லித்தான் தெரியும். 'கிடையவே கிடையாது, நான் முன்பே உங்களுக்குக் கொடுத்த போது இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டதாகச் சொன்னீர்கள்' என்று மீனாட்சி அடித்துச் சொன்னார் (நல்ல வேளை, தொலைவிலிருந்தேன்). எனக்குப் கௌரவப்பொய் சொல்ல வரும் என்பதைக் கண்டுபிடித்து விட்டார் மீனாட்சி. க்ரிகெட் பற்றி எழுதப்போய் சுஜாதா பிடித்த கதையாகிவிட்டது. சுஜாதா என்னுடைய அபிமான எழுத்தாளர்களில் ஒருவர். அவர் கருத்துக்களில் பெரும்பாலானவை இறக்குமதி என்பது பின்னாளில் தெரிந்தாலும் அவர் எழுத்தில் சொக்குப்பொடி இருந்ததை மறுக்க முடியாது. அவர் எழுதியவற்றில் நான் படித்துப் பிரமித்தது அனிதா இளம் மனைவி, காயத்ரி, விபரீதக் கோட்பாடு, மேகத்தைத் துரத்தினவன், மற்றும் பல சிறுகதைகள். அவர் எழுதிய விஞ்ஞானப் புத்தகங்கள் சுமார் தான். சிலப்பதிகாரத்தை எளிமையாக்குகிறேன் பேர்வழி என்று அவரிழைத்த ஒரு கொடுமையைத் தவிர்த்திருக்கலாம். எண்பதுகளின் தொடக்கத்தில் சுஜாதா படிப்பது விட்டுப்போனது. சிறு வயதில் எழுதத் தொடங்கிய போது சுஜாதாவைப் போல எழுத வேண்டும் என்று நினைப்பேன். நான் விரும்பிப் படித்தத் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரை மீண்டும் என் வட்டத்துக்குள் கொண்டு வந்த நண்பர் கௌதமனுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். அவர் பரிசளித்த மின்புத்தகத்தில் ஸ்ரீரங்கத்து தேவதைகளைத் தவிர இன்னும் நிறைய சிறுகதைகள் இருக்கின்றன. மிக்க நன்றி, கௌதமன். 'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' சுமாரை விடக் குறைவு தான். அதான் என்னப் பற்றிச் சொன்னேனே, தானப்பசு, பல் ... என்று.

நீதி: தேடிப்போனாலும் வேண்டிய நண்பர்கள் சில சமயம் ஓடிப்போவார்கள். ஓடிப்போனாலும் வேண்டாத நண்பர்கள் சில சமயம் தேடிவருவார்கள். சோம்பியிருந்தாலும் சில சமயம் நண்பர்கள் தானாகவே கிடைப்பார்கள். நட்பை அனுபவிக்கும் குணமும் நன்றி சொல்லும் மனமும் இருந்தால் போதும்.
புலம்பல் பாதி; புடலங்காய் நீதி | 2009/10/24

பாட்டுக்கும் பதிவுக்கும் என்ன தொடர்பென்று தேட வேண்டாம். எனக்குப் பிடித்த பாடல். நாற்பது வருடங்களுக்கு மேலாகக் கேட்டும் சலிக்காத பாடல். நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது இன்னும் சுவைக்கிறது. ஒரு நன்றி தான்.

    ன்றி என்றதும் இன்னொரு நினைவு. கொஞ்சம் அவமானப்பட வைத்த நிகழ்ச்சி. இணையத்தில் உலாவுவது எனக்குப் பிடிக்கும். ஆனால் இமெயில் படிப்பது என்றாலே தயக்கம். அதுவும் இப்போதெல்லாம் 'ஸ்பேம்' என்று குப்பையாக வரும் மின்னஞ்சல்களுக்கிடையே மாணிக்கத்தைத் தேடிப் படிக்க இன்னும் சோம்பல். பத்திரிகைகளுக்கு கதை கட்டுரை அனுப்பினால் சில சமயம் பிரசுரமாகும். பல சமயம் பதிலே வராது. பிரசுரமாகும் படைப்பைப் பற்றி முன்னறிவிப்பு தரும் ஆசிரியரை என் அனுபவத்தில் கண்டதில்லை (அப்படி ஒன்றும் பிரசுரித்துக் கிழித்து விடவில்லை என்பது வேறு விஷயம்). ஆகஸ்டு மாதம் குங்குமம் ஆசிரியர் எனக்கனுப்பிய மின்னஞ்சலை இன்று காலை பார்த்தேன். குறுகிப் போய்விட்டேன். என்னுடைய கதை ஒன்றைப் பிரசுரிப்பதாகவும், தொடர்ந்து எழுதியனுப்புமாறும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இது நாள் வரை அவர் அனுப்பிய மின்னஞ்சலைப் படிக்கக் கூட இல்லை. நன்றி சொல்லி மன்னிப்பு கேட்டேன். என்னுடைய முதல் சிறுகதை 1979 வாக்கில் குமுதத்தில் வெளியான போதும் இதே கதை தான். ரா.கி.ரங்கராஜன் எனக்கு ஊக்கமளித்து ஒரு கடிதமெழுதியிருந்தார். பதில் கூட எழுதத் தோன்றவில்லை. அது அன்றைக்கு என்று விட்டால், இன்று? நாலு கழுதை வயதாகியும் அறிவு வரவில்லையே? குங்குமத்துக்கு் நன்றியுடனும் கதைக்கு வெட்கமில்லாமலும் ஒரு plug. கதையைப் படிக்க விரும்பினால் படத்தை அழுத்துங்கள். (சொடுக்கு வேண்டாமென்றாகிவிட்டதே?:-)



நீதி: சாய்ராம் போல் கணந்தவறாமல் இமெயில் படித்துப் பதிலெழுதலாம். அரசன் போல் இமெயில் வைத்துக் கொண்டு உபயோகிக்காமலே இருக்கலாம். என்னைப் போல் எப்போதாவது படித்து காலங்கடந்து விட்டதே என்று வருத்தப்படலாம்.

2009/10/22

நாகூர் 2012, கசம் சே! (முடிவு )

6


◄◄   (1)   (2)   (3)   (4)   (5)


    நாகூர் விவகாரம் பற்றிய பதிவைப் படித்தும் கருத்து தெரிவித்தும் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி. நான் எழுதிப் பதிவு செய்த எந்த இடுகைக்கும் வராத அளவுக்கு இந்தக் குறிப்பிட்ட இடுகைக்கு எனக்கு மின்னஞ்சல்கள் வந்து குவிந்தன. இரண்டு இமெயில்களையும் அனுப்பியவர்களுக்கு மிக்க நன்றி.

ஆயலாமா ஓயலாமா என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு கருத்துக்களும் இமெயில்களும் தூபம் போட்டு விட்டன. ஆய்ந்தபின் ஓயலாமென்றிருக்கிறேன்.

    கே: இது உண்மையான கதையா, கதையான உண்மையா? (choice words, Murungai)

     : இது கதையான உண்மை. பெயர்களும் சம்பவங்களும் கொஞ்சம் கற்பனையும் கலந்து (okay Priya, i agree; lot of imagination) எழுதப்பட்ட கதை.

ரகு:
    அந்த நாளில் கொஞ்சம் பிசகாக நடந்து கொண்டால் 'மூளைக் கோளாறு' அல்லது 'வசியம்' என்ற கணிப்புக்கு வந்து விடுவார்கள், என்னருமை முதிய தலைமுறையினர். ரகுவின் கதையும் அந்த வகை தான். ரகு, எங்கள் குடும்பத்தில், என் தலைமுறையின் 'கிறுக்கு' என்று பட்டம் கட்டப்பட்டவன். அவனைப் புரிந்து கொள்ளாமல், "அவன் ஒரு மாதிரி போயிட்டாண்டா" என்று அவனை முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பே ஒதுக்கிவிட்டோம் என்பதை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.

அந்த நாகூர் விடுமுறைக்குப் பின் நான் சென்னை வந்து விட்டேன். ரகுவுடன் பிறகு ஒட்டவில்லை. அவ்வப்போது அவனைப் பற்றிய செய்திகள் காதில் விழும். ஒன்றிரண்டு முறை என் உறவுத் திருமணங்களில் பார்த்திருக்கிறேன். தனியாக உட்கார்ந்திருப்பான்.

ஷ்யாமி விவகாரம் முடிந்ததும் பெரியம்மா அவனை மசூதி, வைதீஸ்வரன் கோவில், வேளாங்கன்னி என்று ஒரு இடம் விடாமல் அழைத்துக் கொண்டு மந்திரித்ததாகச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். பிறகு திருச்சி சென்று கல்லூரிப் படிப்பைத் தொடங்கிய ரகு, பி.எஸ்.சி முடிக்க ஐந்து வருடங்கள் எடுத்துக் கொண்டதாகக் கேள்வி. கல்லூரிப் படிப்பு முடிந்ததும் தன்னை விடப் பத்து வயது மூத்த விதவைப் பேராசிரியருடன் ஓடிவிட்டதாகப் பரப்பரப்பான தகவல். அதற்குப் பிறகு, சுவாமி சுக்லா த்ருஷ்டா என்று ஏதோ ஒரு பெயரில் ரகு காசியில் சன்னியாசியாகி விட்டதாகவும் தான் பார்த்ததாகவும் என்னுடைய மாமா சொல்ல, அதைச் சுற்றி சில நாட்கள் குடும்ப வாய்களின் நமநம. இடையில் அவன் நகசல்பாரியாகிவிட்டான் என்று ஒரு செய்திச் சுற்று.

எண்பதுகளின் தொடக்கத்தில் அவன் அம்மா இறந்ததும் சென்னைப் பக்கம் வந்திருந்தான். நாங்கள் பம்மலில் குடியிருந்தோம். மீனம்பாக்கத்தில் மறுநாள் அதிகாலை விமானம் பிடிக்க வந்திருப்பதாகச் சொல்லி, முதல் நாள் எங்கள் வீட்டில் தங்கினான். "பிளேன்ல போறதாச் சொல்றானேமா, இவனையா லாயக்கில்லைனு சொன்னோம்?" என்றேன், என் அம்மாவிடம் ரகசியமாக. உடன் இருந்த என் மாமா, "டேய், அதெல்லாம் புருடா. எதுக்கும் நீ அவன் கிட்டே போகாம தள்ளியே நில்லு" என்று எனக்கு அறிவுரை வழங்கினார்.

அதற்குப் பிறகு என் அம்மாவின் அறுபதாவது பிறந்த நாளின் போது தான் அவனைச் சந்தித்தேன்.

ஒரு சுற்று சுற்றி விட்டு மறுபடி ரகுவுக்கு வந்து ஆய்வை முடிக்கிறேன்.

ஷ்யாமி:
    ஷ்யாமி அழகாக இருப்பாள். (சிவப்பாக இருந்தால் தான் அழகு என்று அந்த நாளில் நினைத்திருந்தேன்).

ஷ்யாமியைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ரகுவுக்கு ஷ்யாமி மேலிருந்தது அபிமானமா காதலா என்பது அந்த நாளில் எனக்குப் புரியாவிட்டாலும், ஷ்யாமி ரகுவை உபயோகிக்கிறாள் என்று அப்போழுதே எனக்குச் சந்தேகம். ரகுவுடன் தான் பெரும்பாலான நேரத்தை அவள் செலவழித்தாள் என்றாலும், அவனில்லாத போது என்னுடன் பேசுவாள். நான் அவளை விடச் சிறியவன் என்பதில் அவளுக்கு ஒரு வினோத கௌரவம். என்னை விட உயர்ந்தவள் போல் நடந்து கொள்வாள். அவளைப் பற்றிய என் கணிப்பு, அவளுடன் நான் தனியாகப் பேசிய பழகிய ஒரு சில சந்தர்ப்பங்களில் உருவானது.

ஒரு முறை, "பெரியவனானதும் என்ன வேலை பார்க்கப் போறே?" என்றாள்.

"தெரியலை. சிஏ படிக்கலாம்னு நினைச்சிருக்கேன்" என்றேன்.

"சிஏ அரசாங்கத்தை ஏமாத்தி பணம் பண்ணுற வேலை. ஜெயிலுக்குத் தான் போவே" என்றாள்.

"உனக்கெப்படி தெரியும்? எங்க மாமா ஒருத்தர் சிஏ படிச்சுட்டு பெரிய பணக்காரரா இருக்கார்"

"பாத்தியா? என்ன சொன்னேன்? எங்கிருந்து பணம் வருதுனு நினைச்சே? சீக்கிரமே ஜெயிலுக்குப் போவார் பாரு"

சிஏ படிக்கும் ஆசையை அன்றைக்கு விட்டொழித்தேன் என்று நினைக்கிறேன். "ஆமாம், நீ என்ன பண்ணப் போறே?" என்றேன் வீம்புக்கு.

"நான் பெரிய மாடலா வரப் போறேன். சினிமாலே நடிக்கப் போறேன். சாய்ராபானு மாதிரி. படோசன் பாத்திருக்கியா?" என்றாள்.

"அப்படீன்னா?"

'க்யா கரூன் ஹாய்' என்று ஒரு பிடி பிடித்து விட்டு நிறுத்தினாள். "இந்தி சினிமாடா. நான் சாய்ராபானுவை விட அழகு" என்றாள்.

"அதெல்லாம் உங்கம்மா அப்பாவுக்குப் பிடிக்காது. நீ வேணா பாரு" என்றேன்.

"எங்கம்மா அப்பாவுக்கு பிடிக்காட்டா எனக்கென்ன வந்துது? பதினாறு வயசுல ஸ்கூல் முடிச்சதும் நான் வீட்டை விட்டு ஓடிடுவேன். எங்க தெருவில ஒரு சினிமா ப்ரொடியூசர் இருக்கார். நான் ரொம்ப அழகு, என்னை சினிமால நடிக்க வைக்கறதா சொல்லியிருக்கார் தெரியுமில்லே?"

எனக்கு பயமாக இருந்தது. "வீட்டை விட்டு ஓட உனக்கு பயமா இல்லே?" என்றேன்.

"வீட்டுல இருக்குறதுக்கு தான் பயம். என் அப்பா அம்மா சண்டையைப் பாத்துட்டு இருக்குறதுக்கு, ஓடறது எவ்வளவோ மேல். சரி, சரி, நீ இதை யார் கிட்டேயும் சொல்லாதே" என்றபடி ஓடிவிட்டாள்.

இன்னொரு நினைவு.

அவர்கள் நாகூர் வந்த முதல் நாளோ அல்லது குடுகுடுப்பை முதலில் வந்த நாளோ என்று நினைக்கிறேன். "பக்கத்து வீட்டில் கொடுத்து விட்டு வா" என்று சொல்லி என்னிடம் ஒரு தட்டு நிறைய இட்லி கொடுத்தனுப்பினார் பெரியம்மா. அனுமதி கேட்காமல் பக்கத்து வீட்டுள்ளே சென்றவன் சற்றே திடுக்கிட்டேன் என்று தான் சொல்ல வேண்டும். இட்லித் தட்டை சமையலறையில் வைத்து விட்டுத் திரும்பியவன், சாத்தியிருந்த அறையிலிருந்து வினோதமான குரல் கேட்கவே கதவை விலக்கித் தள்ளினேன். உள்ளே ஷ்யாமி தரையில் படுத்திருக்க, கோலப்பொடியினால் அவளைச் சுற்றி ஒரு வட்டம் வரைந்து கொண்டிருந்தார் அவளுடைய அம்மா. மந்திரம் போல் ஏதோ சொல்லிக் கொண்டே இரண்டு வரிகளுக்கொரு முறை கொஞ்சம் அரிசி எடுத்து, ஷ்யாமியின் நடுத்தலையில் அர்ச்சனை போல் எறிந்தார். என்னைப் பார்த்ததும் இருவரும் எழுந்தனர். ஷ்யாமியின் அம்மா கதவை அடைத்து விட்டு, "ஷ்யாமிக்கு த்ருஷ்டி சுத்திப் போடுறேன். அவ்வளவு தான். இதையெல்லாம் ஆம்பிளைங்க பாக்கக் கூடாது. நீ தெரியாம் உள்ளே வந்துட்டே. யார் கிட்டேயும் சொல்லாதே, உனக்குத் தான் பழி வரும்" என்றார்.

நான் ஏன் சொல்கிறேன்? I think Shyami had issues. No, her entire family had issues.

நான்:
    சென்னை வந்ததும் குரோம்பேட்டை பம்மல் வாழ்க்கையில் நடந்ததெல்லாம் மறந்துவிட்டது. புது உறவுகள் புது உற்சாகங்கள். சில இரவுகள் ஷ்யாமியின் கிணற்றடி விவரங்கள் வந்து பயமுறுத்தும். என் அம்மா சொற்படி கொஞ்சம் விபூதி தடவிக்கொண்டு மறக்க முயற்சிப்பேன். பின்னாளில் நிறைய புரிந்து கொண்டேன். நம்பிக்கையை ஒழித்த போது தான் நம்ப முடிந்தது - there's irony!

உளவியல் படித்த போது என் ஆசிரியரிடம் நடந்ததைப் பற்றி விவாதித்திருக்கிறேன். (ஷ்யாமி விவகாரத்தைப் போலவே இன்னொரு மாமி விவகாரமும் உண்டு. Real மாமி. அந்தக் கதை இப்போது வேண்டாமே?) அதற்குப் பிறகு ஒன்றிரண்டு முறை உளவியல் ஆலோசனைக்காகப் போன போதும் இந்த விவரங்களைப் பற்றி விவாதித்திருக்கிறேன்.

அந்த விவாதங்களில் நான் அறிந்தவை:

எங்களுக்கு ஏற்பட்டது illusion. Visual and Auditory hallucination. குடுகுடுப்பை தூவியதில் குரூர வகை nitrous oxide கலந்திருக்க வேண்டும். அதனால் வந்திருக்கக் கூடிய மயக்கத்தின் விளைவு தான் நாங்கள் பார்த்த கபாலத்தின் தோற்றமும் மறைவும். Retinaவின் blind spotல் விழுந்தெழுந்த சாதாரண மாயவித்தை. முழு விவரமும் சொல்லத் தெரியவில்லை, nevertheless, I believe it is a variation on the popular illusion/mainfestation/disappearance magic technique. கண்ணெதிரே வீனஸ் சிலையைத் தோன்ற வைத்தும் மறைத்தும் காட்டும் தந்திரம் போலத்தான் இதுவும். சென்னை நாட்களில் சந்தித்த சாம்பார் சாதத் தொப்பைக் குடுகுடுப்பை இல்லை நான் நாகூரில் சந்தித்த குடுகுடு. அவன் உடை அணிந்திருந்த விதமும், எங்களையும் மற்றவரையும் எடுத்தெறிந்துப் பேசிய விதமும், makes me want to believe that he descended from the 'thug' community abolished by the British when they took over. நிச்சயமாக வட நாட்டுக் குடுகுடுப்பை. He knew how to intimidate and was probably a base magician.

இந்தப் படத்தைப் பாருங்கள். இதில் தீட்டப்பட்டிருப்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின் வருடங்களில், கத்தரிக்காய் வாங்க சாதுவாகத் தெருவில் நடந்து போன நம் போன்றோருக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த நிகழ்ச்சி.
குடுகுடுப்பை இப்படித் தான் தோற்றமளித்தான். (குடுகுடுப்பையை விவரிக்க ஒரு சித்திரம் தேடிய போது, 'Ancient Wisdom and Secret Sects' என்ற Time-Life புத்தகத்தில் நம்ம ஊர் காளி, குடுகுடுப்பை பற்றி எழுதப்பட்டிருப்பதை அறிந்து வியந்தேன்).

நள்ளிரவில் ஊஞ்சல் பலகை மேல் ஷ்யாமி தோன்றி மறைந்ததைப் பற்றியும் ஒரு விளக்கம் வைத்திருக்கிறேன். Psychiatric symptomatology பற்றிப் படித்த போது parallel hallucination மற்றும் asynchronous and asyndetic somatic response பற்றி அறிந்து கொண்டேன். ஷ்யாமியை ஊஞ்சல் பலகை மேல் நானும் ரகுவும் பார்த்தது என்னவோ உண்மை தான் (the hallucination). ஆனால் எனக்கு ஏற்பட்ட hallucinationம் ரகுவுக்கு ஏற்பட்ட hallucination விவரமும் வேறு வேறு. உதாரணமாக, 'எனக்குப் பசிக்குது' என்று ஷ்யாமி சொன்னதாக நான் மட்டும் தான் நினைத்திருக்க வேண்டும். அதனால் தான் கீழே ஓடிச் சென்று பெரியம்மாவை அழைத்து வந்தேன். ரகுவும் நானும் ஷ்யாமியைப் பார்த்ததைப் பற்றிப் பேசிக்கொண்டோமே தவிர, அவள் எங்களுடன் என்ன பேசினாள் என்பதைப் பற்றி நாங்கள் பேசிக் கொள்ளவில்லை. அவள் சொன்னதை ரகுவும் கேட்டிருப்பான் என்று அன்றைக்குத் தோன்றியிருந்தாலும், அது சாத்தியமில்லை என்று பின்னாளில் புரிந்தது. என்னிடம் பேசுவதாக நினைத்ததற்கு நானும் அவனிடம் பேசுவதாக நினைத்ததற்கு ரகுவும் பதில் சொன்னோம். We both had the same trauma induced hallucination about Shyami, but we responded separately. அடிபட்டு ரத்தம் கசியக் கீழே விழுந்தவளைப் பார்த்ததன் விளைவும், அவசரமாக அந்த இடத்தை விட்டு அகற்றப்பட்டதன் விளைவும், ஒரு முடிவு கிடைக்காததாலும் எங்களுக்கு ஏற்பட்ட தனித்தனி மயக்கம். அவ்வளவு தான். (அப்படித் தான் நான் நம்புகிறேன்).

இரண்டாவது முறையாகக் கிணற்றடியில் நாங்கள் பார்த்த கபாலமும் முடியும் ரகுவின் வேலை என்று இப்போது நம்புகிறேன். He wanted attention. அதை விட்டால் எனக்கு வேறு விளக்கம் சொல்லத் தோன்றவில்லை. குடுகுடுப்பையின் நோக்கம் பயமுறுத்தல், திருட்டு. அதற்கு மேல் குடுகுடுப்பைக்கு இதில் பங்கில்லை என்று நினைக்கிறேன். ரகுவாகத் தான் இருக்க வேண்டும்.

ஷ்யாமிக்கு என்ன நடந்திருக்கும்?
    என் கணிப்பு: (100% hypothesis, 0% substantiation).

கிணற்றடியில் அடிபட்ட ஷ்யாமி இறந்திருக்க வேண்டும். அதிர்ச்சியில் அப்பனும் அம்மையும் கூட்டு சேர்ந்திருக்க வேண்டும். மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்வதாக ஒரு கதை கட்டி ஷ்யாமியை எடுத்துக் கொண்டு ஓடியிருக்க வேண்டும். அந்தக் கணத்தில் தாலிபாக்கியம் கருதி வழக்கம் போல் புருஷனை விட்டுக் கொடுக்காத மனைவி ஒத்துழைத்திருக்க வேண்டும். அல்லது இனிமேல் எதற்கு இந்தக் கூட்டணி என்று தனித்தனியே பிய்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

I believe Shyami was killed. It was an accident - she did not survive - that is my guess. இல்லாவிட்டால் ரகுவும் ஷ்யாமியும் சந்தித்திருப்பார்கள் என்றே நம்புகிறேன். ஒருவருக்கொருவர் மேலிருந்த அபிமானம் மறைந்திருந்தாலும் கூட இருவரும் சந்தித்திருப்பார்கள்.

மீண்டும் ரகு:
    பிறந்த நாளில் ரகுவைச் சந்தித்த போது நிறைய பழைய கதை பேசினோம். ஷ்யாமியைப் பற்றிப் பேசினோம்.

"அப்புறம் என்ன ஆச்சுடா அவளுக்கு? எப்பவானும் பாத்தியா?" என்றேன்.

"இல்லேடா. நான் அங்கே இங்கே சுத்தி ஒரு வழியா செட்டில் ஆனதே பெரிய பாடு" என்றான்.

"சில சமயம் அவ அங்கே இருக்காளோனு தோணும்"

"எனக்கும் சில சமயம் அந்த எண்ணம் வரும். நாகூர் போய்ப் பாக்கலாமானு கூடத் தோணும்"

"சும்மா நாகூர் போய் பார்ப்போமா?" என்றேன்.

"வேணாண்டா. எனக்கு வேலை இருக்கு" என்றான்.

"எனக்கும் தான். சும்மா தான் கேட்டேன்" என்றேன்.

ரகு கிளம்பிய மறுநாள் கோவிந்தபுரம் சென்றேன். பழம் வாங்கிக் கொண்டு போகலாம் என்று அருகே கடையில் தொங்கிக் கொண்டிருந்த வாழைப்பழங்களை நோட்டம் விட்ட போது இரண்டு கண்ணாடி ஜாடிகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டிருந்த அன்றைய தினமலர் பத்திரிகையை எடுத்தேன். பொழுது போகாமல் புரட்டிய போது, ஒரு உள்பக்கத்தில் புத்தாண்டில் பனிரெண்டு வருடங்களுக்குத் தொடர்ந்து நாள்-மாதம்-வருடம் ஒரே எண்ணாக வரும் தேதிகளைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்தேன். குறிப்பாக, 06.06.06 மற்றும் 12.12.12 தேதிகளின் மகத்துவம் பற்றியும் நடக்கக்கூடிய விபரீதங்கள் பற்றியும் எழுதியிருந்தார்கள். இறந்தவர்கள் உயிருடன் எழுவதிலிருந்து உலக அழிவின் தொடக்கம் வரை எழுதப்பட்டிருந்த விபரீதங்கள் சுவையான கற்பனையாகப் பட்டது.

அதைப் படித்ததிலும் ரகுவை மீண்டும் சந்தித்துப் பேசியதிலும் தோன்றியது தான் மிச்சக் கதை. கசம் சே!


2009/10/15

நாகூர் 2012, கசம் சே!

5


◄◄   (1)   (2)   (3)   (4)  


    காரைக்கால் வந்து விட்டது. இறங்கினோம். "நல்லா தூங்கிட்டேன். நீ தூங்கினியா?" என்றான்.

"இல்லடா. நடந்ததையெல்லாம் நினைச்சுக்கிட்டே வந்தேன். அதுக்குள்ள இங்கே வந்துட்டோம்"

பாரதியார் வீதியில் பேரிஸ் இன்டர்னேசனல் என்று ஒரு டொக்கு ஓட்டலில் தங்கினோம். இரவு சாப்பிடும் போது, "ரகு, எதுக்குடா இத்தனை வருசமா நாகூர் வந்துக்கிட்டிருக்கே? அப்ப நமக்கு சின்ன வயசு, விவரம் தெரியலைனு சொல்லலாம். இன்னுமா அவளை நினைச்சுக்கிட்டிருக்கே? அவ பேர் கூட எனக்கு மறந்துடுச்சு" என்றேன்.

"ஷ்யாமி" என்றான்.

"ரைட். பட் ஒய்? என்ன லாஜிக்குல நீ வருசா வருசம் வந்துக்கிட்டிருக்கே?"

"துரை..நீ மெட்ராஸ் போனப்புறம் நாம நிறைய சந்திக்கலை இல்லியா... என்னைப் பத்தி நீ நிறைய கேள்விப்பட்டிருக்கலாம்" என்று இழுத்தான்.

"அதெல்லாம் எதுக்கு இப்போ? உன்னைப் பார்த்ததுல எனக்கு சந்தோசம் தாண்டா"

"காலேஜ் படிக்கிறப்ப நான் டெல்லி போய் அவளைத் தேடினேன் தெரியுமோ? அம்மாகிட்டே பொய் சொல்லிப் பணம் வாங்கிக்கிட்டு அவளைத் தேடிப் போனேன். ஒண்ணும் கிடைக்கலே" என்றான். "அங்கே இங்கே சுத்தினாலும் அவளை மறக்க முடியலே. அவளோட நினைவா, இல்லை அப்படி என்ன தான் ஆச்சு அன்னிக்கு ராத்திரினு தெரிஞ்சுக்க வேண்டிய உந்துதலா, என்னனு தெரியலடா ஒரு அப்செசனாயிடுச்சு."

மௌனமாக இருந்தேன்.

"நான் இப்போ புத்த மதத்துல சேர்ந்துட்டேன் தெரியுமோ?" என்றான்.

புன்னகைத்தேன். "சிரிக்கிறே?" என்றான்.

"நம்ம குடும்ப வட்டாரத்துல 'கிறுக்கு'னு பேர் வாங்கின முதல் ஆள் நீ தான். சரியாத்தான் இருக்கு. புத்த மதமா? ஏண்டா?"

"சஞ்சலம் அடங்கணும்டா. புத்தர் வழி எனக்குப் பிடிச்சிருக்கு. சாவைப் பத்தி புத்த மதத்துல என்ன சொல்லியிருக்கு தெரியுமா?" என்றான்.

"எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லைடா. செத்தப்புறம் என்ன ஆனா என்ன? சரி, நாகூருக்குக்கும் புத்த மதத்துக்கும் ஏன் முடிச்சு போடறே?"

"நம்ம வாழ்க்கைல நடக்குற எல்லாத்துக்குமே ஒரு அடிப்படை தத்துவம், அடிப்படை சக்தியின் உந்துதல், இருக்குனு நம்புறவன் நான்" என்றான். "பங்க்ளாதேஷ்ல சோமவிகார் புத்தர் கோவில் இருக்கு தெரியுமா?".

"தெரியாது"

"உலகத்துலயே பெரிய புத்த சரணாலயம் அது தான். கல்கத்தாவிலந்து அடிக்கடி போவேன். கொஞ்ச நாள் முன்னாடி அங்கே ஒரு துறவியைச் சந்திச்சேன். எனக்கு துறவியாவணும்னு ஒரு ஆசை இருக்கு. பன்னிரண்டு என்கிற எண்ணுக்குப் பின்னால இருக்குற தத்துவத்தைப் பத்திப் பேசிக்கிட்டிருந்தாரு. அதையும் இதையும் சொல்லிக்கிட்டிருந்தவரு, 'புது நூத்தாண்டு தொடங்கியாச்சு. ஆனா இந்த நூறு வருசத்துல பனிரெண்டு நாள் தான் ரொம்ப சிறப்பு'ன்னாரு. 'என்ன?'னு கேட்டேன். அவரு விளக்கிச் சொன்னதும் எனக்கு பட்டுனு எல்லாமே வெளங்கிடுச்சுடா. ஷ்யாமி மேலே புது நம்பிக்கை வந்துடுச்சு. அதான் நாகூர் வர ஆரம்பிச்சேன்"

"புதிர் போடாதடா"

"இல்லடா. புது நூத்தாண்டுல, முதல் பனிரெண்டு வருசங்கள்ல தான் நாள், மாசம், வருசம் எல்லாம் ஒண்ணா வரும். நூறு வருசத்துல பனிரெண்டு நாள் மட்டும் தான் இப்படி ஸ்பெஷல். குடுகுடுப்பை என்ன சொன்னான் ஞாபகமிருக்கா?"

தலையாட்டினேன். "ஒரே நாள்ல ஒரே மாசத்துல ஒரே வருசத்துல துஷ்டப் பொண்ணு வருவா"

"ரைட். ஜனவரி ஒண்ணு இரண்டாயிரத்தொண்ணிலிருந்து டிசம்பர் பனிரெண்டு இரண்டாயிரத்துப் பனிரெண்டு வரை... இந்தப் பனிரெண்டு நாள்ல ஒரு நாள் அவ வருவாடா. எனக்கு நம்பிக்கை இருக்குடா. அதான் வருசா வருசம் வரேன்" என்றான்.

மறுநாள் ஜூன் ஆறாம் தேதி. 06.06.06. அவனை உதைப்பதா, கேலி செய்வதா, இல்லை அவன் மேல் பரிதாபப்படுவதா என்று புரியாமல் விழித்தேன். "டேய், அப்படியே வந்தாலும் இத்தனை வருஷமாச்சேடா? நாகூர்ல தான் வருவானு என்ன நிச்சயம்? வந்தாலும் நீ என்ன பண்ணப் போறே?" என்றேன் பொறுமையாக.

"ஒரு முடிவு, அவ்வளவு தான். ஐ நீட் எ க்லோஷர்" என்றான்.

    மறுநாள் நாகூர் வந்தோம். நாகூர் அவ்வளவாக மாறவில்லை. இணைய யுகத்தின் பாதிப்பு தெரிந்தது. 'சிகாகோ பீட்சா' என்று ஒரு கடையில் பீட்சா விற்றுக் கொண்டிருந்தார்கள். மொய்தீன் பிள்ளைத் தெரு, ரயிலடி எல்லாம் நிறைய மாறுதல். நாகூரிலிருந்து சென்னைக்கு பிராட்கேஜ் ரயில் வருவதாக ஒரு ஓரமாக அறிவிப்பு தொங்கியது. தர்கா இப்போது பகலிலேயே பளபளத்தது. அங்கே இங்கே நடந்து ஒரு வழியாக சிவன் கோவில் தெருவுக்கு வந்தோம். பழைய தெருவே இல்லை. வீடுகள் மாறியிருந்தன. ஒட்டு வீடு எல்லாம் போய் இப்போது தனி வீடுகள். ரகுவின் குடும்பத்தில் யாரும் இங்கே இல்லையென்றாலும், ஷ்யாமியின் பெரியம்மா குடும்ப வழியில் வந்தவர்கள் இன்னும் நாகூரில் அதே வீட்டில் இருப்பதாகச் சொன்னான்.

அங்கே போனோம். வீடு அடையாளம் தெரியாமல் மாறி இருந்தது. வாசல் திண்ணையைக் காணோம். நாங்கள் வந்ததும் வீட்டுக்காரர் வரவேற்றார். ரகு அவரிடம் என்னை அறிமுகப் படுத்தினான். அவர் என்னைப் பார்த்த பார்வையில், 'குடும்பமே லூசுக் குடும்பம் போல' என்ற செய்தி இருந்தது. "அதனால் என்ன சார், வருசா வருசம் வரீங்களே? கொஞ்ச நேரம் தானே, பாத்துட்டுப் போங்க" என்றார்.

ரகு நன்றி சொல்லிவிட்டு வீட்டைச் சுற்றி நடந்தான். பக்கத்து வீட்டை இணைத்த கிணற்றை இடித்து மூடி விட்டிருந்தார்கள். குறுக்கே சுவர் கட்டியிருந்தாலும் கிணறு இருந்த இடத்தில் மழை நீர் வடிகால் போல் இரும்பினால் வட்டமாக மூடியிருந்தார்கள். மற்றபடி கிணற்றுக்கான அறிகுறி ஒன்றும் தெரியவில்லை. அவன் இரும்புத்தட்டுக்கு அப்பால் பூமிக்குள் பார்த்துக் கொண்டிருந்தான். வீட்டுக்காரரும் சற்று தள்ளி ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். நான் மெள்ள நகர்ந்து அவருடன் பேசப் போனேன்.

"நீங்க எங்கிருக்கீங்க?" என்றார் தயங்கியபடி.

"சிகாகோல இருக்கேன் சார்.. இந்த வருசம் எங்கம்மா பிறந்த நாளுக்காக வந்தேன். சின்ன வயசுல நாகூர் நாகப்பட்டினம் எல்லாம் சுத்தியிருக்கேன். கொஞ்சம் கொஞ்சம் மாறி இருக்கு" என்றேன்.

"ஆமாங்க" என்றார். "செல் போன் எல்லாம் வரும்னு எதிர்பார்த்தீங்களா?" என்றார்.

"டேய், இங்கே வாடா" என்று கூவினான் ரகு. இரண்டு பேரும் விரைந்தோம். "அங்கே பாருடா" என்று கீழே சுட்டிக் காட்டினான்.

"என்னடா?"

"பட்டுப் புடவைடா. வயலெட் சட்டை அங்கே பார். நல்லா கவனிச்சுப் பாரு" என்றான்.

"எனக்கு ஒண்ணும் தெரியலையேடா?"

"டேய், விளையாடாதடா. சரியாப் பாரு. சார், நீங்க பாருங்க. நீங்களே சொல்லுங்க"

அவர் கூர்ந்து பார்த்தார். "என்னவோ துணி போலத்தான் தெரியுதுங்க" என்று ஒதுங்கிக் கொண்டார். ஏதோ சொல்ல வேண்டுமென்பதற்காகச் சொல்கிறார் என்பது எனக்குப் புரிந்தது. 'பாயைப் பிராண்டும் குடும்பம்' என்று எங்களைப் பற்றி நினைத்திருக்க வேண்டும். "வீட்டுல கூப்பிடுறாங்க. நீங்க பாத்துட்டு உள்ளாற வந்து ஒரு கப் காபி சாப்பிட்டுப் போவணும்" என்று கழன்று கொண்டார்.

"டேய், பாருடா" என்றான் ரகு மறுபடியும்.

"என்னை மன்னிச்சுருடா. என் கண்ணுக்கு ஒண்ணும் தெரியலை" என்றேன்.

"இங்கே தெரியுதுடா" என்று நெஞ்சைத் தொட்டுக் காட்டினான். "வா, போகலாம்".

    அங்கிருந்து வெளியேறி நாகூர் பஸ் ஸ்டேண்டில் நின்றோம். டீக்கடையில் ஆளுக்கொரு டீ வாங்கிக் கொண்டோம். "டேய், நான் மாயவரம் போய் அங்கிருந்து கோவிந்தபுரம் போறேன். எங்கம்மாவோட ரெண்டு நாள் இருந்துட்டு ஊரைப் பாக்கப் போகணும்" என்றேன்.

"ஷ்யாமி எப்ப வருவான்னு எனக்குத் தெரிஞ்சு போச்சு. கிணத்துல தெரிஞ்ச செய்தி" என்றான்.

நான் ஒன்றும் சொல்லவில்லை.

"ஷ்யாமி டிசம்பர் பனிரெண்டாம் தேதி கண்டிப்பா வருவா. 12.12.12. அன்னிக்குத் தான் உச்சமான சிறப்பு நாள். அதான். இப்போ புரிஞ்சு போச்சு"

"அப்படியா?" என்றேன்.

"நல்லா யோசிச்சுப் பாருடா" என்றான். அவன் குரலில் உற்சாகமும் வேகமும் கலந்திருந்தன. "ஷ்யாமி என்ன சொன்னா? காத்திருக்கேனு சொன்னா இல்லியா? எனக்கு அறுவது வயசானாலும் காத்திருக்கேன்னு சொன்னா இல்லியா? இரண்டாயிரத்துப் பனிரெண்டுல எனக்கு அறுவது வயசுடா" என்றான்.

எனக்கு மாயவரம் பஸ் இன்னும் வரவில்லையே என்றிருந்தது.

"அறுவதோட மகத்துவம் தெரியுமா? அஞ்சு பனிரெண்டு அறுவதுடா. மனுஷனுக்கு அஞ்சு பிராயம். அறுவது வருசம் ஒரு கால வட்டம். அறுவதுக்கு அப்புறம் ஒண்ணு என்கிறது கால சித்தாந்தம். அறுவது வருஷத்துக்கொரு தடவை வருச சக்கரம் புதுப்பிக்குது. நாம தமிழ் வருசம்னாலும், மூலம் அது தாண்டா. அறுவது வருசத்துக்கு அப்புறம் புதுசா தொடங்கப் போறோம்டா நானும் ஷ்யாமியும்" என்றான்.

நான் துடித்தேன். பஸ், எங்கே பஸ், எங்கே பஸ்?

"நல்லா யோசிச்சுப் பாரு. இந்த வருசம் நான் இங்கே வந்து உன்னைச் சந்திச்சேன். உங்கம்மாவுக்கு ஷஷ்டியப்தம். அறுபது வயசு முடியுது. திஸ் இஸ் எ சைன். உனக்கும் இது க்ளோசர் மாதிரி. உன்னை இங்கே வரவழச்சிருக்கா பாரு. கண்டிப்பா வருவா பாரு. இரண்டாயிரத்துப் பனிரெண்டுல" என்றான்.

மாயவரம் பஸ் வரவில்லை. சிதம்பரத்துக்கு ஒரு பஸ் வந்தது. விட்டால் போதும் என்று கிளம்பினேன். தயங்கித் திரும்பி வந்து, ரகுவை அணைத்தேன். "டேய், ரகு. டேக் கேர்" என்று அவன் தோளைத் தட்டி சிதம்பரம் பஸ்சில் ஏறினேன்.

பஸ்சில் நிற்கும் இடம் தான் இருந்தது. தொற்றிக் கொண்டேன். பஸ் கிளம்பியதும் ரகு எங்கே வந்துவிடுவானோ என்று பயந்து கொண்டே பார்த்தேன். அவன் வரவில்லை. அங்கேயே நின்று கொண்டிருந்தான். என்னைப் பார்த்து கட்டை விரலை உயர்த்திக் கையசைத்தான். மெள்ள மறைந்தான்.

"சுவாமிமலைக்கு ஒரு டிகெட் குடுங்க" என்றேன்.

"இது பாயின்டுபாயின்ட் சார். சிதம்பரம் தான்" என்றார் ரஜனிகாந்த் தோழர்.

சிதம்பரத்துக்கு டிகெட் வாங்கிக் கொண்டேன். ரகுவைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை.


ஒவ்வொரு குடும்பத்திலும் ரகுக்கள் உண்டு. இதுவரை சொன்னது எங்கள் குடும்ப ரகுவின் கதை.

நாகூர் கோடை விடுமுறையில் என்ன தான் நடந்திருக்கும்? ஷ்யாமி என்ன ஆனாள்? என் கண்ணெதிரே நடந்தவற்றை எப்படி இல்லையென்று நம்புவது? அறிவுக்குட்பட்ட விடைகளைத் தேடித் தேடி சலித்திருக்கிறேன். பின்னாளில் உளவியல் வகுப்பில் 'relationships among paranormal beliefs, locus of control and psychiatric symptomatology' என்ற தலைப்பில் வெளிவந்த ஒரு உளவியல் பரிசோதனை முயற்சியின் முடிவுகளைப் படித்த போது, நாகூர் நிகழ்ச்சிகளைப் பற்றி ஓரளவுக்கு அறிந்து கொள்ள முடிந்தது. ரகுவைப் பற்றிய கணிப்பும் அந்த வகையில் தோன்றியது தான்.

சுவைக்காகக் கொஞ்சம் கற்பனை சேர்த்திருக்கிறேன் என்றாலும் இவை அறிவுக்கப்பாற்பட்ட எல்லையில் நடந்த சம்பவங்கள். எனக்கு இவற்றிலெல்லாம் நம்பிக்கை இல்லை. யதேச்சையான நிகழ்வுக்கான அடிப்படை உண்மைகளைத் தேடித் தோல்வியுற்றிருந்தாலும் கைவிடவில்லை. பகுத்தறிவுக்குட்பட்ட யதேச்சையான நிகழ்வுதான் என்று நம்புகிறேன்.

உண்மையறிய முயன்ற என்னுடைய தேடல்களிலிருந்தும், நான் எடுத்துக் கொண்ட உளவியல் ஆலோசனைகளிலிருந்தும், நாகூர் கோடை விடுமுறையின் பாதிப்பைப் பற்றி எழுத வேண்டுமென்று சில வருடங்களாய் நினைத்திருந்தேன். இப்போது வாய்ப்பு கிடைத்தது. இதைப் பற்றிய என் ஆய்வையும் எழுத எண்ணியிருக்கிறேன். இன்னொரு பதிவில்?


தொடரும்> 6

நாகூர் 2012, கசம் சே!

4


◄◄   (1)   (2)   (3)


    ன்று மதியம் ஷ்யாமியின் அம்மா எங்கள் வீட்டுக்கு வந்தார். என் பெரியம்மாவிடம் மன்னிப்பு கேட்டார். "ரகுவுக்கு ஒண்ணும் அடியில்லையே?" என்று விசாரித்தார். பெரியம்மா சமாதானமாக ஏதோ சொல்ல, ஷ்யாமியின் அம்மா அழத்தொடங்கி விட்டார்.

"போலீசுல சொல்ல வேண்டியது தானே?" என்று பெரியம்மா கேட்டார். "நான் வேணா பேங்க் மேனேஜர்ட சொல்லி ஏதாவது பண்ணட்டுமா?"

நானும் ரகுவும் உள்ளிருந்து வந்தோம். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்க வேண்டுமே? ரகுவைப் பார்த்ததும் ஷ்யாமியின் அம்மா, "ரகு, உனக்கு ஏன் இந்தக் கஷ்டம்? நீ அடி வாங்கணுமா?" என்று கண் கலங்கினார்.

"விடுங்கோ மாமி.. ஷ்யாமிக்கு எப்படி இருக்கு?"

"ஷ்யாமியைக் காணலியாம்" என்றார் பெரியம்மா.

அதிர்ந்தோம். "என்ன சொல்றேள்?"

ஷ்யாமியின் அம்மா தலையாட்டினார். "ஆமாம். முகத்தில அடிபட்டிருக்கு, டாக்டர்டே கூட்டிண்டு போறதா சொல்லிட்டு கார்த்தால ஷ்யாமியோட போனவர் திரும்பி வரலை. ஷ்யாமியைக் கூட்டிக்கிட்டு ஓடிப்போயிட்டார்னு நினைக்கிறேன்".

"ஷ்யாமி போனாளா?" என்ற ரகுவின் குரல் ஏமாற்றமா, ஏக்கமா, வருத்தமா, ஆத்திரமா என்று அறிய முடியாமல் கதம்பமாகத் தொனித்தது.

"சின்னப் பொண்ணு தானே? அப்பாவாச்சே? சமாதானமாவோ இல்லை கோபமாவோ இல்லை பயமுறுத்தியோ கூட அழைச்சுண்டு போயிருக்கலாம். அவளுக்கும் டெல்லி பிடிக்கும். எனக்குத்தான் இப்போ நாதியில்லாமே போயிடுத்து" என்றார் ஷ்யாமியின் அம்மா.

ரகுவின் குரலில் இப்போது ஆத்திரம் தொனித்தாலும் அவன் வயதுக்கு மீறிய விவேகமும் இருந்தது. "ஷ்யாமி கண்டிப்பா வருவா" என்றபடி உள்ளே சென்று சட்டை மாற்றிக் கொண்டு வந்தான்.

"எங்கேடா போறே?" என்றார் பெரியம்மா.

"ஷ்யாமியைத் தேடி" என்றவன், என்னைப் பார்த்தான். "என்னடா நீ வரியா? இல்லை இங்கே இருக்கப் போறியா?" என்று கேட்டான். விழித்தேன்.

"சும்மா இருடா" என்ற பெரியம்மாவைப் பொருட்படுத்தாமல் ரகு பேசினான். "நீ சும்மா இரும்மா. இந்த மாதிரி ஆட்களாலே தான் எங்க எல்லாருக்குமே கெட்ட பேரு. ஷ்யாமியை அடிச்சுப் போட்டிருந்தா நீங்க ரெண்டு பேரும் என்ன பண்ணுவேள்? அவளுக்கு என்ன ஆச்சுன்னாவது தெரிய வேண்டாமா? இந்த நாகூர்ல எங்கே போயிருக்க முடியும்? பஸ், ட்ரெயின் கூட இப்போ கிடையாது. நான் போய் பாத்துட்டு வரேன்" என்று விர்ரென்று சைக்கிளை எடுத்துக் கொண்டு விரைந்தான். "என்னடா வரியா?" என்றான் திண்ணையிலிருந்து. ஓடினேன்.

நாள் முழுதும் சைக்கிளில் கடைத்தெரு, பஸ் ஸ்டேண்ட், ரயிலடி என்று நாகப்பட்டினம் வரையிலும் தேடினோம். "ஒரு வேளை மாயவரம் போயிருப்பாங்கடா, அங்கே போலாம் வா" என்றான்.

"சைக்கிள்ள அவ்ளோ தூரம்லாம் போக முடியாதுடா. பெரியம்மா கவலைப் படுவா. ஒரு வேளை ஷ்யாமி வீட்டுக்கு வந்திருந்தாலும் வந்திருப்பா" என்று அவனைச் சமாதானப்படுத்தி வீட்டுக்கு வரும் போது இரவு ஒன்பது மணியாவது இருக்கும்.

பெரியம்மாவிடம் திட்டு வாங்கிக் கொண்டே ஆறிப்போன சாப்பாட்டையும் மாவடுவையும் ஒரு கை பார்த்தோம். "இனிமே அந்தப் பக்கம் போகாதீங்கடா. உங்களுக்கு எதுக்கு இந்த கஷ்டம்? அவ வீட்டுல ஏதோ போறாத வேளை, எப்படியோ போயிட்டு போறான்னு விடு. உனக்கு வயசாச்சு. எஸ்எல்சி வேறே. படிச்சுட்டு உருப்படற வேலையைப் பாரு" என்ற பெரியம்மாவிடம், காலையில் குடுகுடுப்பை சொன்னதைச் சொன்னான் ரகு. "இந்த வீட்டுல இனிமே நிம்மதி இல்லனு சொன்னாம்மா. அவன் ஏதோ பண்ணியிருக்கான்" என்றான்.

"நாளன்னிக்கு நாலாம் பிறையாச்சே?" என்று ஒரு கணம் தயங்கிய பெரியம்மா, "நாலாம்பிறையாவது பலி கேக்கறதாவது? ஏண்டா, ஒரு வேளை அந்தக் குடுகுடுப்பையும் ஷ்யாமியோட அப்பாவும் கூட்டா இருப்பாளோ?" என்றார். "எதுக்கும் நீங்க இனிமே அந்தப் பக்கம் போக வேண்டாம், சொல்லிட்டேன்". நான் தயிர்சாதம் மாவடு மோர்மிளகாயில் கருத்தாக இருந்தேன்.

சாப்பிட்டுவிட்டு மொட்டை மாடிக்கு வந்து படுத்தோம். அயர்ந்து தூங்கி விட்டோம். நள்ளிரவுக்கு மேலிருக்கும். "ரகு ரகு" என்ற குரல் கேட்டு விழித்தோம்.

ஷ்யாமி தான். சந்தேகமில்லை. ஊஞ்சல் பலகை மேல் நின்று கொண்டிருந்தாள். ரகு எழுந்தான். "இருடா" என்று அவனைத் தடுத்தேன். கேட்காமல் "ஷ்யாமி, கவனம். கீழே விழுந்துடப் போறே" என்றபடித் தொடர்ந்தவனைத் தொடர்ந்தேன். மாடி விளக்கை இயக்கி விட்டு அவர்களருகே சென்றேன்.

வயலெட் கலரில் சட்டை போட்டிருந்தாள். சட்டையெல்லாம் கசங்கியிருந்தது. திட்டுத் திட்டாய் ரத்தக்கறை. அவளை உட்காரச் சொன்னான். அவள் முகமெல்லாம் அடி பட்டு வீங்கியிருந்தது. ரகு அவளைத் தொட முயன்ற போது விலகினாள். "வேண்டாம், எனக்கு உடம்பெல்லாம் வலிக்குது" என்றாள். "ஏன் இப்படி இருக்கே?" என்ற ரகுவின் குரலில் ஆற்றாமை. "உங்கப்பாவை என்ன பண்றேன் பாரு" என்றான்.

"எங்கப்பாவை உன்னால ஒண்ணும் பண்ண முடியாது" என்றாள். "ரகு" என்றாள் மெதுவாக. "ஆமாம் என்னைக் கட்டிப்பேன்னு சொன்னியே? கல்யாணம் பண்ணிப்பியா?"

"நிச்சயமா. எஸ்எல்சி முடியட்டும். அது வரைக்கும் பொறுமையா காத்துண்டிருப்பியா?" என்றான். 'அடேய்' என்றேன் மனதுள்.

"நானும்" என்றாள். "உனக்கு அறுவது வயசானாலும் பொறுமையா இருப்பேன். நீ காத்துண்டிருப்பியா?"

"நிச்சயமா" என்றான். "சரி, உள்ளே போ. உங்கம்மா உன்னைத் தேடப் போறா"

"நான் இங்கே வந்தது யாருக்கும் தெரியாது" என்றாள். பிறகு, "ரகு.. எங்கம்மாவை நம்பாதே" என்றாள். கண அமைதிக்குப் பிறகு, "எனக்குப் பசிக்குது" என்றாள்.

எனக்குப் பொறுக்கவில்லை. "என்னடா இது ராத்திரிலே இப்படி? கீழே போலாம் வாங்க. பெரீம்மா பெரீம்மா" என்று ரகுவைப் பொருட்படுத்தாமல் கீழே ஓடினேன். "இருடா டேய்" என்று ரகு தொடர்ந்து வந்தான். பெரியம்மாவை எழுப்பி விவரம் சொன்னேன். அவருக்கு ஒரே கோபம். வேகமாக மாடியேறி எங்களுடன் வந்தார்.

ஷ்யாமியைக் காணோம். "இங்கதான் இருந்தாம்மா" என்றான் ரகு.

விளக்கைப் போட்டு பக்கத்து வீட்டிற்குத் தாவி மாடிக் கதவைத் தட்டினோம். ஷ்யாமியின் பெரியம்மா ஓடி வந்தார். விவரம் சொன்னோம். "அதெப்படி சாத்தியம்? அவ அப்பா இழுத்துண்டு போறச்சே ஷ்யாமி அவன் பிடியை உதறிட்டு ஓடி வந்தாளாம். எதிரே வந்த பஸ்லே மோதி அடிபட்டு விழுந்துட்டாளாம். ரத்தம் ரத்தமா கொட்றதுன்னுட்டு அங்கயே டாக்சி போட்டு மாயவரம் பெரியாஸ்பத்திரிக்கு அழைச்சுண்டு போயிருக்கா. தையல் போட்டு கண் முழிக்கலையாம். இங்கே எப்படி வருவா?" என்றார்.

ரகுவும் நானும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். "இல்லே.. இங்கே தான் இருந்தா. நாங்க ரெண்டு பேரும் பாத்தோம். என்னடா?" என்றான், என்னிடம்.

"ஆமாம், நானும் பார்த்தேன்" என்றேன்.

"மகமாயி, துர்க்கா பரமேஸ்வரி" என்று பெரியம்மா உடனே கீழே இறங்கி ஓடினார்.

"ஷ்யாமியோட அம்மா எங்கே?" என்றான் ரகு.

"மாப்பிள்ளை இங்கே வந்து விவரம் சொன்னதும், அவளும் கூடப் போயிருக்கா" என்றார் ஷ்யாமியின் பெரியம்மா. மாயவரம் ஆஸ்பத்திரியின் விலாசம் சொன்னார்.

    மறுநாள் பெரியம்மாவிடம் மாயவரம் போகவேண்டுமென்று அடம் பிடித்துப் பணம் வாங்கிக் கொண்டான் ரகு. பணம் கொடுத்த பெரியம்மா என்னிடம், "டேய்.. நீ வயசுல சின்னவன்னாலும் இந்திராவோட புத்திசாலித்தனமும் பொறுமையும் உங்கிட்டே இருக்கு. இந்த விடலையைக் கொஞ்சம் பாத்துக்கோடா. கூடப் போ. அவன் ஏதாவது பைத்தியக்காரத்தனமா பண்ணிடாம பாத்துக்கோ" என்றார். நள்ளிரவில் கண்ணால் பார்த்த ஷ்யாமிக்கு என்ன ஆச்சு என்று அறிந்துகொள்ள எனக்கும் ஆவல் - இருந்தாலும் புத்திசாலி என்று பட்டம் கொடுத்து விட்டதால் நான் எல்லாம் புரிந்தது போல் தலையாட்டினேன். "நான் பாத்துக்கறேன் பெரீமா. போயிட்டு உடனே வந்துடறோம்".

மாயவரம் போய் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. ரகுவுக்கு மீசை அரும்பியிருந்தது என்றாலும் எங்களைப் பார்த்தால் பொடிப் பயல்கள் என்று நினைத்து ஒருவருமே சரியாகப் பதில் சொல்லவில்லை. சும்மா ஏவிசி காலேஜ், அரசாங்க ஆஸ்பத்திரி, சினிமா தியேடர், தனியார் மருத்துவமனை அங்கே இங்கே என்று அலைந்து விட்டு ஓய்ந்து போய்த் திரும்பினோம். "ஆஸ்பத்திரில அப்படி யாருமே வரலைனு சொல்லிட்டா" என்றோம்.

"எல்லாம் கெட்ட நேரம். நாளைக்கு மந்திரிக்கச் சொல்லி மரைக்காயர் வாஞ்சூர் கூட்டிட்டுப் போறதா சொல்லியிருக்கார். போயிட்டு வந்துடுங்கோ ரெண்டு பேரும்" என்றார் பெரியம்மா.

"வேறே வேலை இல்லேம்மா" என்றான் ரகு. எனக்கு மந்திரித்துக் கொள்ளலாம் போலிருந்தது. ஷ்யாமியைக் கண்ணால் பார்த்தேனே? "பசிக்குது" என்றாளே?

அன்றிரவு ஏதேதோ பேசியபடி மொட்டை மாடியில் விழித்திருந்தோம். ஒரு வேளை ஷ்யாமி வருவாளா? எப்போது தூங்கினோம் என்று தெரியாது. பெரியம்மா வந்து எழுப்பிய போது நன்றாக விடிந்து விட்டிருந்தது. "ரகு, காபி சாப்பிட்டு மரைக்காயர் கடைக்குப் போ. சொல்றதக் கேளு. மந்திரிக்கச் சொல்லி விபூதி வாங்கிண்டு வா. எனக்காக பண்ணு போ. வரும்போது இளசா ரெண்டு வாழைக்காய் வாங்கிண்டு வா. இந்தா. சாப்பிட வந்துடுங்கோ ரெண்டு பேரும். துரை சாயந்திரம் பஸ் பிடிச்சு திரும்ப காரைக்கால் போகணும் மறந்துடாதே" என்றார்.

பெரியம்மா கொடுத்த இரண்டு ரூபாயை வாங்கிக் கொண்டு ரகு வெளியேற, நான் அவனைத் தொடர்ந்தேன். பக்கத்து வீட்டுத் திண்ணையைக் கடக்கும் போது, "இன்னிக்கு நாலாம் பிறை இல்லே?" என்றான்.

"அதை ஏண்டா ஞாபகப் படுத்துறே?" என்றவன் திடுக்கென்று ரகுவிடம் "டேய், அங்கே பாருடா" என்றேன்.

திண்ணைக்குக் கீழே வாசல்படியில் முதல் நாளிருந்த கபாலத்தையும் காணோம். ரத்தத் திட்டையும் காணோம். கறுப்புப் பொட்டையும் காணோம். சுத்தமாக இருந்தது.

ரகு சிலையாக நின்றான். "அதெப்படிரா?" என்றான்.

"டேய், வாடா மந்திரிச்சுக்கலாம்டா" என்றேன்.

"இருடா. என்னடா இது பித்தலாட்டமா இருக்கு? ஷ்யாமியை நீயும் தானே பாத்தே?" என்றான். "இங்கே வா பாக்கலாம்" என்று இரண்டு வீடுகளுக்குமிடையே இருந்த கிணற்றின் வெளிச்சுவர் பக்கம் போனான். ஆமோதித்தபடி அவனைத் தொடர்ந்தேன். கீழேயிருந்து பார்தத போது ஊஞ்சல் பலகை வானத்தை மறைத்தது. "இந்த ஓரமா தானேடா நின்னுண்டிருந்தா?" என்றான். மேலேயும் கீழேயும் கிணற்றைச் சுற்றி வந்தபோது கவனித்தேன். அவனும் கவனித்திருக்க வேண்டும். தரையில் கபாலம். கபால நெற்றியில் நான்கு பொட்டுகள். கபால வாயில் கறுகறுவென்று தலைமுடிக் கற்றை. கபாலத்தின் இரண்டு பக்கமும் கூழாங்கற்கள். திடுக்கிட்டுப் பின் வாங்கினோம். மெள்ள நகர்ந்து கிணற்றுள் எட்டிப் பார்த்தோம். கீழே கீழே கீழே பம்புசெட்டு மோட்டார் இருந்த கிணற்றுச் சுவர் உள்ளடுக்கில் பளபளவென்று பட்டுப் புடவை. ஷ்யாமியின் அம்மா தரையிலெறிந்த புடவை கிழிக்கப்பட்டு பம்புக் குழாய், மோட்டார் என்று படர்ந்திருந்தது. பக்கத்தில் வயலெட் கலரில் சட்டை ஊஞ்சல் போல் ஆடிக்கொண்டிருந்தது.

வழக்கம் போல் இரண்டு வீட்டு பெரியம்மாக்களையும் அழைத்து வந்தேன். "இது யாரோ வேணுமென்னே பண்ணியிருக்கா" என்ற பக்கத்து வீட்டுப் பெரியம்மா வேலைக்காரிகளை விட்டு இடத்தைச் சுத்தம் செய்யச் சொன்னார். "நேத்திக்கு மத்தியான சண்டையிலே புடவையைக் கிழிச்சுப் போட்டுட்டா. இங்கே தான் விழுந்திருக்கா புடவை?" என்றார் சாதாரணமாக.

மாயவரம் போய் வந்ததைப் பற்றிச் சொன்னான் ரகு. "அங்கே ஆஸ்பத்திரிலே யாருமே வரலைன்னா மாமி"

ஷ்யாமியின் பெரியம்மா தலையிலடித்துக் கொண்டார். "என்ன கூத்தோ போ. இவாளைக் கூட்டிண்டு போகணும்னு இப்படி ஏதாவது திட்டம் போட்டானோ என்னவோ? என்ன பண்றது சொல்லு? எங்காத்து மாப்பிள்ளை அப்படி. அப்பா இருக்கும் போதே சொன்னார், உன்னை நன்னா வச்சுக்கலைனா வந்துடுனு. அப்போல்லாம் குழந்தை குழந்தைன்னுட்டு இப்போ ஓடி வந்துட்டா. அப்பாவும் இல்லாம புருஷனும் போய் ஒண்டிக்கட்டையா நான் எப்படி அவளை வச்சுக்க முடியும்? அதான் அடிச்சாலும் புடிச்சாலும் உனக்குப் புருஷந்தாண்டினு அவளை அவனோடயே துரத்தி அனுப்பிச்சுட்டேன். அப்போ ஷ்யாமிக்கு அடிகிடி படலையா? இவளை அழைச்சுண்டு போகப் பிளானா? எல்லாரும் டெல்லி ஓடிட்டாளோ என்னவோ? இந்த மாதிரி திராபையெல்லாம் கல்யாணம் பண்ணிண்டா இதான். ரகு இதெல்லாம் நீ ஒண்ணும் பட்டுக்காதேப்பா. நீயுண்டு படிப்புண்டுன்னு ஒப்பேறு" என்றபடி உள்ளே சென்று விட்டார்.

எனக்கே இடி விழுந்த மாதிரி இருந்தது. ரகு நிலைகுலைந்திருந்தான். என்ன குடும்பம் இது?

    மரைக்காயரைப் பார்த்துவிட்டு வரும்போது, மொய்தீன் பிள்ளைத் தெருவில் குடுகுடுப்பையைப் பார்த்தோம். ரகு ஓடிச் சென்று அவன் கைகளைப் பிடித்து விட்டான். குடுகுடுப்பை அவனை உதறி விட்டு, "கையை விளங்காமே பண்ணிடுவேன், உஷார்" என்றான்.

ரகு விடாமல், "நீ தானே கிணத்தடியில வரைஞ்சுட்டு போனே? உனக்கு நாங்க என்ன கெடுதல் செஞ்சோம்? உன்னால் இப்போ ஒரு சின்னப் பொண்ணு என்ன ஆச்சோ ஏது ஆச்சோனு தெரியாம இருக்கா. நல்லா இருப்பியா? தூ!" என்றான்.

குடுகுடுப்பை ஒதுங்கிக் கொண்டு, "பவானி" என்றான். பிறகு ரகுவை உற்றுப் பார்த்தான். தன்னுடைய மேற்சட்டைப் பையிலிருந்து விபூதி போல ஏதோ எடுத்து ரகுவின் முகத்தருகே ஊதினான். "சரி தான், போயா" என்று விலகிய ரகுவைக் கையைப் பிடித்து நிறுத்தினான். "பவானி சொல்றா. ஒரே நாளு ஒரே மாசம் ஒரே வருசத்துலத் தேடி வருவா துஷ்டப் பொண்ணு" என்றான். ரகு அவனைப் பொருட்படுத்தாமல் என்னுடன் நடந்தான்.

காய்கறிக்கடையில் வாழைக்காய் எடுத்துக் கொண்டு பணம் கொடுக்கச் சட்டைப் பையில் கை விட்டு, "டேய், அம்மா கொடுத்த ரெண்டு ரூபாயைக் காணோம்டா" என்றான்.

"குடுகுடுப்பை" என்றேன்.

தொடரும்> 5

நாகூர் 2012, கசம் சே!

3


◄◄   (1)   (2)


    ள்ளே ஓடி ஷ்யாமியின் பெரியம்மாவிடம் நடந்ததைச் சொன்ன போது அவர் நம்பவில்லை. 'சரி, சரி, உள்ளயே வந்து படுங்க' என்றபடி தூங்கப் போய்விட்டார். ரகுவும் நானும் பூஜையறை பக்கத்தில் படுத்துத் தூங்கினோம். பூஜையிலிருந்து சிறிய வெண்கல அனுமார் விக்கிரகம் ஒன்றை எடுத்து, பக்கத்தில் வைத்துக் கொண்டுப் படுத்தது நினைவிருக்கிறது.

எழுந்த போது பத்து மணியிருக்கும். வாசலில் சச்சரவு. ஷ்யாமியின் அம்மா யாரையோ விரட்டிக் கொண்டிருந்தார். ஷ்யாமியின் பெரியம்மா சமாதானமாக ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். எழுந்து பாயைச் சுருட்டி வைத்த போது ஷ்யாமியைப் பார்த்தோம். அவள் கண்கள் கலங்கியிருந்தன. "ஏன் அழுறே?" என்றான் ரகு.

"எங்கப்பா ஊர்லந்து வந்திருக்காரு. அம்மா அவரை உள்ளே விடக்கூடாதுனு அடம் பிடிக்கிறா. பத்து நிமிஷமா வாசல்லயே சண்டை".

ஷ்யாமியின் அம்மா அழுது கொண்டே உள்ளே வந்தார். "ஷ்யாமி, கெளம்புடி. நீயும் நானும் தெருவிலயாவது நின்னு பொழச்சுப்போம். இனிமே இந்த வீட்டுல நான் இருக்க மாட்டேன். பொறந்தாத்துல கூட மனுஷாள் இல்லனு ஆயாச்சு" என்று அவசரமாக ரேழி ஓரமாக இருந்த மர பீரோவைத் திறந்து உள்ளிருந்த ஒரு பெரிய சூட்கேசை எடுத்துப் போட்டார்.

ஷ்யாமியின் பெரியம்மா பின்னால் வந்து, "அதுக்காக ஊர்லந்து வீடு தேடி வந்தவாளை இப்படி வெளில நிக்க வச்சு வம்பு பண்ண முடியுமா? நாலு பேர் பாத்தா நல்லா இருக்குமா? அவசரப்படாதடி" என்று சமாதானம் செய்தார்.

அவரைத் தொடர்ந்து வந்தவரைப் பார்த்துக் கொஞ்சம் தயங்கினோம். ஷ்யாமியின் அப்பா. எங்களைப் பார்த்து "யாருடா நீங்க?" என்றார். ரகுவை அடையாளம் கண்டு கொண்டது போல் "நீ பக்கத்து வீட்டுப் பையன் தானே? இங்கே என்ன செஞ்சிட்டிருக்கே?" என்றார். பிறகு, "ஷ்யாமி, உங்கம்மாவால ஒரு காரியம் ஆகாது. நீ போய் எனக்கு காபி கொண்டா போ" என்று ஏவினார்.

பிறகு ரேழி பக்கமாகக் கத்தினார். "மூதேவி! என்ன அழுகை வேண்டிக்கிடக்கு? புருஷனை விட்டு ஓடி வந்துட்டு என்ன அதிகாரம்? என்ன திமிர்? இந்த நிமிஷமே ரெண்டு பேரும் கெளம்புங்கோ சொல்றேன். ஓடுகாலி, தனியாப் போறாளாம். ஷ்யாமி, காபி எங்கேடி?"

தாழ்வாரத்துக்கு அந்தப்பக்கத்திலிருந்து என் பெரியம்மா எங்களை அழைத்தார். அது காதில் விழாதது போல் ரகு சமையலறைக்குள் ஷ்யாமிக்கு உதவி செய்ய ஓடினான்.

ஷ்யாமியின் அப்பா அறையின் மூலையிலிருந்த மரச்சாய்வு நாற்காலியில் வசதியாக உட்கார்ந்து கொண்டார். "நாள் முழுக்க ட்ரெயின்ல வந்திருக்கானேனு கணிசம் அக்கறை கூட இல்லை. வந்தவாளை வானு சொல்றதுக்குக் கூடத் தோணலை. என்ன திமிர்! என்னோட சம்பாத்தியம் இல்லேன்னா உன் கதி என்ன ஆகும்? தொலச்சுடுவேன் தொலச்சு. தாலி கட்டினவன்னு கொஞ்சம் கூட மரியாதை இல்லையே? கெளம்புங்கோ ரெண்டு பேரும்" என்று பொருமினார்.

ஷ்யாமியின் அம்மா கோபமாக ஒரு பட்டுப் புடவையை எடுத்து அவர் பக்கமாக எறிந்தார். "இந்தாய்யா, உன் சம்பாத்தியத்துல எனக்கு இந்த பதினஞ்சு வருஷத்துல கிடைச்ச சன்மானம். பட்டுப் புடவை. ஒரே ஒரு தடவை இதைக் கட்டிக்கிட்ட போது, யாருக்காகடி சிங்காரிச்சுண்டு நிக்கறேனு கட்டின பொண்டாட்டியக் கேட்டவர் தானே அய்யா நீ? இந்தா, இதை எடுத்துக்கோ. உன்னால எனக்குக் கிடைச்ச எல்லாத்தையும் திருப்பி எடுத்துக்க முடியுமா? நீ என்னை முதுகுலயும் மூஞ்சிலயும் அடிச்சதையும் திருப்பி எடுத்துட்டுப் போக முடியுமா? உடம்புலயும் மனசுலயும் உண்டான காயங்களைக் கலைச்சுட்டுப் போக முடியுமா? உன் கூடத் திரும்பி வரதுக்குப் பதிலா தூக்குல வேணா தொங்குவேன். உன் பேச்சைக் கேட்டு உயிர் வாழணும்னு எனக்கு இனிமே அவசியமே இல்லை. நானும் என் பெண்ணும் எப்படியாவது பொழச்சுக்குறோம். தாலி கட்டினவன்னு தனியா மரியாதை கொடுக்கணும்னா தாலி கட்டிண்டவளுக்கு மரியாதை கொடுத்தா தானே? மரியாதை கூட வேண்டாம், மனுஷாள்னு மதிச்சா போறாதா?"

கடைசி வரிகளின் தாக்கம் இன்னும் பரவியிருக்க, "வாங்கடா... வந்து பல் தேயுங்கோ" என்றது கிணற்றடியிலிருந்து பெரியம்மாவின் குரல். எங்களையோ இந்தச் சண்டையின் சுவாரசியம் இழுத்தது.

ஷ்யாமி கொண்டு வந்த காபியைத் தூக்கி எறிந்தார் அவளுடைய அப்பா. சூடான காபி அறையெங்கும் சிதறி ஷ்யாமியின் கையிலும் காலிலும் கொட்டியது. டமளர் உருண்டு அவள் அம்மா அருகே வந்து விழுந்தது. "என்னடி சொன்னே நாயே?" என்று சீறிக் கொண்டு எழுந்து வந்தார். "உன்னை மனுஷியா மதிக்கலையா? முண்டச்சி. என்ன திமிர் உனக்கு, எதிர்த்தா பேசறே?" என்று ஷ்யாமியின் அம்மாவை கன்னத்தில் அறைந்தார்.

ரகு சும்மா இருக்காமல் அவரைத் தடுத்தான். "என்ன மாமா இது, பொண்டாட்டி புள்ளையை அடிக்கலாமா? இங்கே பாருங்கோ, ஷ்யாமி கையெல்லாம் கன்னிப் போயிருக்கு. எதுக்கு இப்படி கோபம்?" என்றான்.

அவ்வளவு தான். அவருக்கு இன்னும் கோபம் வந்து விட்டது. என்னுடைய அப்பா இப்படித் தான். கோபம் வந்துவிட்டால் எதிரில் இருப்பவர் சொல்வது செய்வது எதுவும் அவருக்குத் தெரியாது. அந்த அனுபவத்தால் நான் கிணற்றடி பக்கமாக நகர்ந்தேன்.

விவேகத்தை எல்லாம் காற்றில் உதறிவிட்டு ஷ்யாமியின் அப்பா, ரகுவைப் பளாறென்று அறைந்தார். "யாருடா நீ? ப்ளேக்காட். என் பொண்ணு பக்கத்துல எதுக்குடா நிக்குறே? ஓடுறா, அடுத்த அறை விழறதுக்குள்ள ஓடுறா" என்றார்.

ரகு பெரிய பயில்வான் போல் அவரை முறைத்தான்.

"என்னடா முறைக்கிறே? நீ என்ன என் பொண்ணைக் கட்டிக் காப்பாத்தப் போறியா? யாருடா நீ? உனக்கென்ன் அருகதை இந்த வீட்டுல?" என்று ரகுவைக் கீழே தள்ளி முதுகில் இன்னொரு அடி கொடுத்தார். காலால் அவன் இடுப்பில் உதைத்தார்.

"நிறுத்துங்கப்பா" என்று ஷ்யாமி அலறிக்கொண்டு வந்தாள். கீழே கிடந்த ரகுவைக் கட்டிக் கொண்டாள். "இப்படிக் கண் மண் தெரியாம அடிக்கிறீங்களே? ரகு என்னை கட்டிக் காப்பாத்தத்தான் போறான்" என்றாள் அழுதபடி.

"என்னடி சொன்னே? கூறு கெட்டவளே" என்று அவளை அடிக்கப் போனார். அதற்குள் ஷ்யாமியின் அம்மா குறுக்கே வந்துவிட்டார். "அவாளை விடுங்கோ. உங்களுக்கு என் மேலே தானே கோபம்? என்னை வேணும்னா இன்னும் ரெண்டு அடி அடிச்சுட்டுப் போயா. இந்தப் பதினஞ்சு வருசத்துல கேக்காத பேச்சா, படாத கஷ்டமா... பெத்த பொண்ணை அடிக்காதங்கோ.." என்றார்.

"என்னடி வேஷம் போடறே? பதினஞ்சு வருஷமா நான் மாடு மாதிரி உழைச்சு வீடு நகைனு கொட்டினா இது தான் பதில் மரியாதையா? கெளம்புங்கோ ரெண்டு பேரும் பதில் பேசாம. இனிமே பொறுத்துண்டிருக்க மாட்டேன்" என்றார்.

"நீங்க பொறுத்துண்டது போறும். நாங்க உன் கூட வர முடியாது..என்னையும் என் பெண்ணையும் விட்டுடுங்கய்யா...போறும்..." என்று கும்பிட்டார் ஷ்யாமியின் அம்மா.

ரகுவுக்கு என்ன தோன்றியதோ, சட்டென்று கீழே கிடந்த காபி டம்ளரை எடுத்து ஷ்யாமியின் அப்பா முகத்தில் எறிந்தான். டம்ளரின் விளிம்பு அவர் மூக்கில் கீறி உடனடியாக ரத்தம் வரத் தொடங்கியது. அவருக்கு அநியாயக் கோபம் வந்து விட்டது. "இன்னிக்கு இந்த வீட்டுல கொலை விழப்போகுது" என்று பக்கத்திலிருந்த கொடிக்கம்பைத் தூக்கிக் கொண்டு ரகு மேல் பாய்ந்தார்.

அதற்குள் பெரியம்மாவின் கோபக்க்குரல் கிண்ற்றடியிலிருந்து வந்தது. "ரெண்டு பேரும் உடனே வாங்கடா இங்கே"

ரகு கிணற்றடி பக்கமாக ஓடத் தொடங்க, நான் அவனுக்கு இரண்டடி முன்னால் ஓடினேன். ஷ்யாமி ரகுவைத் துரத்திக் கொண்டு வந்தாள். "ரகு, ஓடாத நில்லு". ஷ்யாமியின் அப்பா கொடிக்கம்பைச் சுழற்றி ரகு மேல் எறிந்தார். அது ரகுவைத் தவறிவிட்டு, கிணற்றுச் சுவரில் பட்டுத் தெறித்துக் கீழே விழவும் ஷ்யாமி அதில் தடுக்கிக் கீழே விழவும் சரியாக இருந்தது. உருண்டு கொண்டிருந்த கொடிக்கம்பில் கால் வைத்துச் சறுக்கி விழுந்தாள். விழுந்த வேகத்தில் கிணற்றுச் சுவரில் தலையை மோதிச் சரிந்தாள். ரகு, "ஷ்யாமி" என்று கூவி நிற்க, பெரியம்மா அவன் கையைப் பிடித்துத் தர தரவென்று உள்ளே இழுத்துக் கொண்டாள்.

ஷ்யாமியின் அம்மா இரண்டு கைகளாலும் தலையிலடித்துக் கொண்டாள். "கொலைகாரப் பாவி, பொண்ணைக் கொன்னுட்டியா.." என்று ஷ்யாமியை அணைத்துக் கொண்டாள். ஷ்யாமிக்கு நெற்றியிலும் உதட்டிலும் அடிபட்டு ரத்தம் கசிந்தது.

ரகு பெரியம்மாவின் பிடியிலிருந்து திமிர, பெரியம்மாவுக்குக் கோபம் வந்து விட்டது. ரகுவை உள்ளே தள்ளினார். "கட்டேலே போறவனே.. உனக்கென்னடா வந்துது? உள்ளே போடா" என்றார். பிறகு ஷ்யாமியின் அப்பாவிடம், "என்னய்யா மனுசன் நீ? கோபம் வந்தா இப்படியா அறிவு மழுங்கிப் போகும்? ஊரான் கொழந்தையை அடிக்கிறியே? வெக்கமா இல்லே?" என்று ஏசி தட்டிக்கதவை இழுத்து மூடினார். உள்ளே நின்று கொண்டிருந்த எங்களிடம் "இனிமே அவாத்துப் பக்கமே போகக் கூடாது" என்றார்.

"இனிமே இந்த வீட்டுல நிம்மதி போயிடுச்சு. நாலாம் பிறை பலியெடுக்கும்" என்ற குடுகுடுப்பையின் வரிகள் மனதுள் எதிரொலித்தன.

தொடரும்> 4

2009/10/11

நாகூர் 2012, கசம் சே!

2


◄◄   (1)


    கிணற்றடி வழியாக ஓட எத்தனித்து விட்டு, பிறகு வெளிவாசல் வழியாகப் போனோம். பக்கத்து வீட்டு வாசல் திண்ணையில் ஒரு குடுகுடுப்பைக்காரன் நின்று கொண்டிருந்தான். உள்கதவைப் பாதி திறந்தபடி ஷ்யாமி நின்று கொண்டிருந்தாள். உள்ளிருந்து அவளுடைய அம்மா கத்திக் கொண்டிருந்தார். "அந்தர் ஆ..ஷ்யாமி. இது என்ன தடியாம்பிளைத்தனம்? கதவைச் சாத்து. ஆம்பிளை இல்லாத வீடு. யோவ் குடுகுடுப்பை, போயா.."

குடுகுடுப்பை போவதாக இல்லை. "நல்ல காலம் பொறக்குதுனு சொன்னா பொண்ணு நம்பளை வம்புக்கு இழுக்குது. ஒரு ரூபாய் கொடு"

"ஒரு ரூபாயா? போடா தாடிக்காரா! வேணும்னா உங்கூட நானும் வரேன். எனக்கும் இந்த தில்லுமுல்லைச் சொல்லிக் கொடு. ரெண்டு பேரும் பாதி பாதி எடுத்துக்குவோம் கசம் சே" என்றாள் ஷ்யாமி.

ரகு சேர்ந்து கொண்டான். "என்னய்யா இது அக்கிரமம்? ஒரு ரூபாய்க்கு எங்கய்யா போறது? இந்தா இன்னொரு பத்து பைசா தரேன், எடுத்துக்கிட்டு போ" என்றான்.

"முடியாது. இன்னிக் காலைல மசான பூசை முடிச்சு நேரா வரான். ஞாயித்து கிழமை எரிஞ்ச மூத்த பையனோட கபால மை எடுத்து விளக்கேத்தி பவானிக்கு பூசை செஞ்சு வந்திருக்கான். நேரா இங்கே வந்து அம்மாவுக்கு நல்ல காலம் பொறக்குதுனு மை வச்சு வாக்கு சொன்னா ஒரு ரூபாய் தரணும்" என்றபடி, அவளைப் பிடிப்பது போல் கதவருகே விரைந்தான் குடுகுடுப்பை.

"என்னய்யா கதை வுடுறே? மூத்த பையன்னு உங்கிட்டே சொல்லி வச்சு எரிச்சாங்களா? மையாவது கிய்யாவது, யார் கிட்டே பயம் காட்டுறே? க்யா சம்ஜா அப்னே ஆப் கோ? கசம் சே உன்னை மாதிரி எத்தனை பேரை பாத்திருக்கேன்? போறியா இல்லை சப்பல் மாரூம் க்யா?" என்று ஒரு செருப்பை எடுத்துக் கொண்டு வந்துவிட்டாள் ஷ்யாமி. எனக்குக் குலை நடுக்கம். ரகு அவளைத் தடுக்கப் போனான்.

ஷ்யாமிக்குக் கோபம் தலைக்கேறி விட்டது. "ரகு, நீயெல்லாம் ஆம்பிளையா? சும்மா பாத்துட்டு நிக்கறியே?" என்று அவனைத் திட்டத் தொடங்கி விட்டாள். என்ன வெறியோ தெரியவில்லை, செருப்பை ஓங்கித் தரையில் எறிந்து கதவை ஓங்கிச் சாத்தி விட்டு உள்ளே சென்று விட்டாள். செருப்பு ரகுவின் காலில் பட்டுத் தெறித்து குடுப்பையின் காலை உரசி அருகே விழுந்தது.

ரகு குடுகுடுப்பையிடம் மன்னிப்பு கேட்டான். இன்னொரு எட்டணா எடுத்துக் கொண்டு வருவதாகச் சொன்னான். குடுகுடுப்பையின் கண்கள் சிவந்திருந்தன. ரகு கொடுத்த நாலணாவை அவன் முகத்தில் விட்டெறிந்தான்.

குடுகுடுப்பை அடுத்து செய்ததை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

தன் கையிலிருந்த உடுக்கையின் மூடியைக் கழற்றினான். உள்ளிருந்து சிவப்பு நிறப்பொடியை எடுத்து திண்ணையின் கீழே வாசல் படியில் கபாலத்தின் படத்தை வரைந்தான். கபாலப் படத்திற்கு எதிரே தரையில் உட்கார்ந்தான். பிறகு தன் முண்டாசை அவிழ்த்தான்.

ஒரு குடுகுடுப்பை முண்டாசு அவிழ்த்து அது வரை நான் பார்த்ததே இல்லை. ஏழடி நீளத்துக்கு அவர்களுக்குக் கூந்தல் இருக்கும் என்றும் எலும்புத்துண்டை பொடித்துக் குழைத்த எண்ணை தடவிக் கூந்தலை முடிப்பார்கள் என்றும் மற்றவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அவன் தலை முடி என்னவோ மற்றவரது போல் தான் இருந்தது. கூந்தலையும் காணோம் எலும்புப்பொடியையும் காணோம். ஆனால் அவனுடைய நடு மண்டையில் வட்டமாகச் சவரம் செய்யப்பட்டிருந்தது. சவரம் செய்யப்பட்ட இடத்தில் வட்டம், நட்சத்திரம், ஜன்னல் என்று கறுப்பு மையால் தீட்டப்பட்டச் சிறு சித்திரங்கள், சில எழுத்துக்கள்.

குடுகுடுப்பை தன் வலது கையை உயர்த்தி தலைக்கு மேலே நிறுத்தினான். நடுவிரலை உள்ளே அடக்கிகொண்டு மற்ற நான்கு விரல்களையும் ஒரு குட்டி பிரமிட் போல் சேர்த்துக் கொண்டான். விரல்களின் பிரமிட் நுனியால் தன் நடு மண்டையில் இருந்த மைச்சித்திரங்களைக் கலைத்தான். பிறகு தன் கையில் பதிந்திருந்த மையைக் கபாலத்தின் மேல் பதித்தான். சிவப்பு கபாலத்தின் நெற்றியில் நான்கு கறுப்புப் பொட்டுகள். கபாலத்தையும் பொட்டுகளையும் சில கணங்கள் பார்த்துக் கொண்டிருந்தவன், எங்களைப் பார்த்தான். நாங்கள் இருப்பதை அவன் உணர்ந்ததாகவே தெரியவில்லை. மறுபடி கபாலத்தைப் பார்த்தபடி கண்களை மூடினான். குனிந்து, ஐயர்கள் செய்யும் நமஸ்காரம் போல் தரையில் கை ஊன்றி நீண்டான். பிறகு சட்டென்று தன் நெற்றியால் அந்த கபாலத்தின் மீது ஓங்கி ஓங்கி முட்டிக்கொண்டான். 'கிட் கிட்'டென்று தேங்காய் உடைப்பது போல் சத்தம். நெற்றி வீங்கி லேசான ரத்த காயம் உண்டானதும் ஒன்றும் சொல்லாமல் முண்டாசை எடுத்துக் கொண்டு விருட்டென்று கிளம்பி விட்டான்.

இதை எழுதி முடிக்க எடுத்துக் கொண்ட நேரத்தை விட சடுதியில் எல்லாம் நடந்து விட்டது.

திடுக்கிட்டுப் போயிருந்த எங்களுக்குப் பேச்சு வரவில்லை. நான் ஒன்றுக்குப் போய்விட்டேன். கை கால் எல்லாம் நடுங்க 'பெரீம்மா' என்று கத்திக் கொண்டு ஓடினேன். பெரியம்மாவுடன் நான் திரும்ப வந்து சேர எடுத்துக் கொண்ட சில நிமிடங்களில் பக்கத்து வீட்டு வாசலில் சிறிய கூட்டம் சேர்ந்து விட்டது. எல்லோரும் கபாலத்தையும் புள்ளிகளையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஷ்யாமி திண்ணையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள். அவள் அம்மா அவளைத் திட்டிக் கொண்டிருந்தார்.

பெரியம்மா கபாலத்தைப் பார்த்து விட்டு நடுங்கிப் போய்விட்டார். பிறகு சுதாரித்துக் கொண்டு, "கவலைப்படாதே. இதெல்லாம் சும்மா மிரட்டல், அவ்வளவு தான்" என்றார்.

"என்ன ஒரு ரூபாயைக் கொடுத்திருக்கலாம் போலிருக்கே?" என்றார் ஷ்யாமியின் அம்மா.

"எதுக்கு? அப்புறம் இதே பழக்கமாயிடும். நான் பேங்கு மேனேஜர்ட சொல்லி போலீசை வரவழைக்கிறேன். இந்தப் பக்கம் வந்தா தோலை உரிச்சுடச் சொல்றேன். ரகு, மரைக்காயர் கடைக்குப் போய் நடந்ததைச் சொல்லி ரெண்டு ஆளைக் கூட்டி வரச் சொல்லு. நீ ஒண்ணும் பயப்படாதே ஷ்யாமி" என்றார் பெரியம்மா.

அதற்குள் உள்ளேயிருந்து இரண்டு வாளி நிறைய தண்ணீர் கொண்டு வந்த வேலைக்காரி, கபாலத்தைப் பார்த்ததும் அப்படியே சிலை போல நின்றாள். "யம்மா.. வாணாம்மா. இது மந்திரிக்கணும்மா" என்றாள்.

ரகுவுக்குக் கோபம் வந்து விட்டது. "மந்திரியாவது, முந்திரியாவது. கொண்டா இங்கே" என்று ஒரு வாளி தண்ணீரை எடுத்து கபாலத்தின் மேல் கொட்டினான். எண்ணையில் கொட்டியது போல் அத்தனை நீரும் வழுக்கி ஓடியதே தவிர கபாலமோ பொட்டோ கலையக்கூட இல்லை. ஒரு சுருணையை எடுத்து வந்து இரண்டாவது வாளி நீரில் நனைத்து, ஈரத்தோடு கபாலத்தைத் 'தேய் தேய்' என்று தேய்த்தான். சோப்பு போட்டுக் கழுவினான். கபாலம் லேசாகக் கலைந்ததே தவிர அழியக் காணோம். நான்கு பொட்டுகளோ கலையவே இல்லை.

"விடு ரகு, போலீஸ் வந்து பாக்கட்டும்" என்றார் பெரியம்மா.

"என்னடீ இது, போலீசெல்லாம் வந்தா என்ன ஆறது?" என்று ஷ்யாமியின் பெரியம்மா புலம்பத் தொடங்கினார். "சரி, சரி, எல்லாரும் போங்க" என்று சேரத்தொடங்கியிருந்த சிறு கூட்டத்தைக் கலைத்தார். "நான் உள்ளே போய் அபிராமி அந்தாதி சொல்லி, யந்திர பூஜை பண்றேன். எல்லாம் சரியாயிடும்" என்றபடி உள்ளே போனார்.

கூட்டம் கலைந்தது. ஷ்யாமி இன்னும் விசும்பிக் கொண்டிருக்க, ரகு அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டிருப்பதைக் கவனித்தேன். அவன் என்னைக் கவனித்த போது தலை குனிந்தேன். கண்ணெதிரே கபாலத்தில் இப்போது கண்களைப் போல் இரண்டு வட்டங்கள் இருந்தன. "டேய் ரகு, இங்கே பாருடா" என்றேன்.

அன்று மாலைக்குள் நடந்ததை எல்லாம் அனேகமாக எல்லாரும் மறந்து விட்டார்கள். நாகப்பட்டினத்திலிருந்து ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்து பார்த்து விட்டு, "ஒண்ணும் பயப்படாதீங்க. எல்லாம் எண்ணைப் பசை. தானா போயிறும். அந்த ஆளு வந்தான்னா இன்ஸ்பெக்டர் கிட்டே சொல்லியிருக்கிறதா சொல்லுங்க. பணம் எல்லாம் கொடுத்து பழக்கப் படுத்திடாதீங்க" என்றார்.

ஆம்பிளை துணைக்கு நாங்கள் படுத்துக் கொள்கிறோம் என்று பக்கத்து வீட்டுத் திண்ணையில் ரகுவும் நானும் அன்றிரவு படுத்துக் கொண்டோம். நான் "முடியாது, பயமா இருக்கு" என்று எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ரகு என்னைக் கட்டாயப் படுத்தியிருந்தான். கதவைத் தாளிடும் சாக்கில் வெளியே வந்து ஷ்யாமி ரகுவின் கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டுப் போனதை நான் கவனிக்கவில்லை என்று நினைத்தார்கள். ரகுவிடம் சொன்னதும் அவனுக்கு ஒரே பெருமையாக இருந்ததே தவிர வெட்கமோ கூச்சமோ தென்படவில்லை. நாங்கள் இருவரும் கபாலத்தைப் பார்த்தபடியே தூங்கினோம்.

மறுநாள் காலை பொழுது கூட விடியவில்லை. அவர்கள் வீட்டு வாசலில் அதே குடுகுடுப்பை. மறுபடியும் முண்டாசை அவிழ்த்து உட்கார்ந்தான். "ஏய்" என்று ரகு அவனை எட்டித் தள்ள முயன்ற போது 'ஷ்!' என்று கையை வீசினான் குடுகுடுப்பை. கண்கட்டு வித்தை என்பார்களே, அது போல ரகு ஒரு கணம் சிலையாக நின்றான். ஏற்கனவே வைத்திருந்த நான்கு பொட்டுகளை மறுபடி உச்சந்தலை மையினால் டச்சப் செய்துவிட்டு எழுந்தான். ரகுவும் விழிப்பு வந்தது போல் நின்றான். குடுகுடுப்பை ரகுவிடம் "இது நாலு பொட்டு இல்லே. நாலாம் பிறை. இனிமே இந்த வீட்டுல நிம்மதி போயிடுச்சு. நாலாம் பிறை பலியெடுக்கும்" என்றான்.

"இந்தாங்க" என்றான் ரகு மரியாதையுடன். "உங்களுக்கு ஒரு ரூபாய் தானே வேணும். நான் குடுத்துடறேன். ரொம்ப கோபிக்காதீங்க. அந்தப் பொண்ணு தெரியாம ஏதோ சொல்லி.. எதுக்கு அனாவசியமா.." என்று இழுத்தான்.

"க்யா சம்ஜானு கேக்குது துஷ்டப் பொண்ணு. செருப்பு தூக்கி எறியுது. நான் மரக்காணம் குடுகுடுப்பை இல்லே. நம்பள் பாட்டன் குலம் மீரான் சாயிபு கிட்டே போவுது. அசுவத்தாமன் கிட்டே போவுது. அயோத்திலே பொறந்த குலம். நம்ம உடம்புலே பலராமன் ரத்தம் ஓடுது. பவானி ரத்தம் ஓடுது. பவானி பலி கேக்குறா. பவானி பலி கேக்குறா. நாலாம் பிறைக்கு நான் திரும்பி வருவேன்" என்று தன் முண்டாசிலிருந்து சாம்பலை எடுத்துத் தரையில் எறிந்தான். சட்டென்று காணாமல் போய்விட்டான்.

நான் வெருட்டென்று எழுந்துத் திண்ணை விளக்கைப் போட்டேன். நாற்பது வாட் பல்பொளியில் ஒன்றும் சரியாகத் தெரியவில்லை என்றாலும் எனக்கென்னவோ அரையிருட்டில் யாரோ ஓடுவது போல் தோன்றியது. "எப்படிரா மறைய முடியும்?" என்று ரகு திண்ணையைச் சுற்றித் தேடிவிட்டு வாசலுக்குச் சென்று இரண்டு பக்கமும் பார்த்து விட்டு வந்தான். ஆனால் குடுகுடுப்பையைக் காண முடியவில்லை.

அலறியடித்துக் கொண்டு கதவைத் தட்டினோம்.

தொடரும்> 3