2009/10/15

நாகூர் 2012, கசம் சே!

5


◄◄   (1)   (2)   (3)   (4)  


    காரைக்கால் வந்து விட்டது. இறங்கினோம். "நல்லா தூங்கிட்டேன். நீ தூங்கினியா?" என்றான்.

"இல்லடா. நடந்ததையெல்லாம் நினைச்சுக்கிட்டே வந்தேன். அதுக்குள்ள இங்கே வந்துட்டோம்"

பாரதியார் வீதியில் பேரிஸ் இன்டர்னேசனல் என்று ஒரு டொக்கு ஓட்டலில் தங்கினோம். இரவு சாப்பிடும் போது, "ரகு, எதுக்குடா இத்தனை வருசமா நாகூர் வந்துக்கிட்டிருக்கே? அப்ப நமக்கு சின்ன வயசு, விவரம் தெரியலைனு சொல்லலாம். இன்னுமா அவளை நினைச்சுக்கிட்டிருக்கே? அவ பேர் கூட எனக்கு மறந்துடுச்சு" என்றேன்.

"ஷ்யாமி" என்றான்.

"ரைட். பட் ஒய்? என்ன லாஜிக்குல நீ வருசா வருசம் வந்துக்கிட்டிருக்கே?"

"துரை..நீ மெட்ராஸ் போனப்புறம் நாம நிறைய சந்திக்கலை இல்லியா... என்னைப் பத்தி நீ நிறைய கேள்விப்பட்டிருக்கலாம்" என்று இழுத்தான்.

"அதெல்லாம் எதுக்கு இப்போ? உன்னைப் பார்த்ததுல எனக்கு சந்தோசம் தாண்டா"

"காலேஜ் படிக்கிறப்ப நான் டெல்லி போய் அவளைத் தேடினேன் தெரியுமோ? அம்மாகிட்டே பொய் சொல்லிப் பணம் வாங்கிக்கிட்டு அவளைத் தேடிப் போனேன். ஒண்ணும் கிடைக்கலே" என்றான். "அங்கே இங்கே சுத்தினாலும் அவளை மறக்க முடியலே. அவளோட நினைவா, இல்லை அப்படி என்ன தான் ஆச்சு அன்னிக்கு ராத்திரினு தெரிஞ்சுக்க வேண்டிய உந்துதலா, என்னனு தெரியலடா ஒரு அப்செசனாயிடுச்சு."

மௌனமாக இருந்தேன்.

"நான் இப்போ புத்த மதத்துல சேர்ந்துட்டேன் தெரியுமோ?" என்றான்.

புன்னகைத்தேன். "சிரிக்கிறே?" என்றான்.

"நம்ம குடும்ப வட்டாரத்துல 'கிறுக்கு'னு பேர் வாங்கின முதல் ஆள் நீ தான். சரியாத்தான் இருக்கு. புத்த மதமா? ஏண்டா?"

"சஞ்சலம் அடங்கணும்டா. புத்தர் வழி எனக்குப் பிடிச்சிருக்கு. சாவைப் பத்தி புத்த மதத்துல என்ன சொல்லியிருக்கு தெரியுமா?" என்றான்.

"எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லைடா. செத்தப்புறம் என்ன ஆனா என்ன? சரி, நாகூருக்குக்கும் புத்த மதத்துக்கும் ஏன் முடிச்சு போடறே?"

"நம்ம வாழ்க்கைல நடக்குற எல்லாத்துக்குமே ஒரு அடிப்படை தத்துவம், அடிப்படை சக்தியின் உந்துதல், இருக்குனு நம்புறவன் நான்" என்றான். "பங்க்ளாதேஷ்ல சோமவிகார் புத்தர் கோவில் இருக்கு தெரியுமா?".

"தெரியாது"

"உலகத்துலயே பெரிய புத்த சரணாலயம் அது தான். கல்கத்தாவிலந்து அடிக்கடி போவேன். கொஞ்ச நாள் முன்னாடி அங்கே ஒரு துறவியைச் சந்திச்சேன். எனக்கு துறவியாவணும்னு ஒரு ஆசை இருக்கு. பன்னிரண்டு என்கிற எண்ணுக்குப் பின்னால இருக்குற தத்துவத்தைப் பத்திப் பேசிக்கிட்டிருந்தாரு. அதையும் இதையும் சொல்லிக்கிட்டிருந்தவரு, 'புது நூத்தாண்டு தொடங்கியாச்சு. ஆனா இந்த நூறு வருசத்துல பனிரெண்டு நாள் தான் ரொம்ப சிறப்பு'ன்னாரு. 'என்ன?'னு கேட்டேன். அவரு விளக்கிச் சொன்னதும் எனக்கு பட்டுனு எல்லாமே வெளங்கிடுச்சுடா. ஷ்யாமி மேலே புது நம்பிக்கை வந்துடுச்சு. அதான் நாகூர் வர ஆரம்பிச்சேன்"

"புதிர் போடாதடா"

"இல்லடா. புது நூத்தாண்டுல, முதல் பனிரெண்டு வருசங்கள்ல தான் நாள், மாசம், வருசம் எல்லாம் ஒண்ணா வரும். நூறு வருசத்துல பனிரெண்டு நாள் மட்டும் தான் இப்படி ஸ்பெஷல். குடுகுடுப்பை என்ன சொன்னான் ஞாபகமிருக்கா?"

தலையாட்டினேன். "ஒரே நாள்ல ஒரே மாசத்துல ஒரே வருசத்துல துஷ்டப் பொண்ணு வருவா"

"ரைட். ஜனவரி ஒண்ணு இரண்டாயிரத்தொண்ணிலிருந்து டிசம்பர் பனிரெண்டு இரண்டாயிரத்துப் பனிரெண்டு வரை... இந்தப் பனிரெண்டு நாள்ல ஒரு நாள் அவ வருவாடா. எனக்கு நம்பிக்கை இருக்குடா. அதான் வருசா வருசம் வரேன்" என்றான்.

மறுநாள் ஜூன் ஆறாம் தேதி. 06.06.06. அவனை உதைப்பதா, கேலி செய்வதா, இல்லை அவன் மேல் பரிதாபப்படுவதா என்று புரியாமல் விழித்தேன். "டேய், அப்படியே வந்தாலும் இத்தனை வருஷமாச்சேடா? நாகூர்ல தான் வருவானு என்ன நிச்சயம்? வந்தாலும் நீ என்ன பண்ணப் போறே?" என்றேன் பொறுமையாக.

"ஒரு முடிவு, அவ்வளவு தான். ஐ நீட் எ க்லோஷர்" என்றான்.

    மறுநாள் நாகூர் வந்தோம். நாகூர் அவ்வளவாக மாறவில்லை. இணைய யுகத்தின் பாதிப்பு தெரிந்தது. 'சிகாகோ பீட்சா' என்று ஒரு கடையில் பீட்சா விற்றுக் கொண்டிருந்தார்கள். மொய்தீன் பிள்ளைத் தெரு, ரயிலடி எல்லாம் நிறைய மாறுதல். நாகூரிலிருந்து சென்னைக்கு பிராட்கேஜ் ரயில் வருவதாக ஒரு ஓரமாக அறிவிப்பு தொங்கியது. தர்கா இப்போது பகலிலேயே பளபளத்தது. அங்கே இங்கே நடந்து ஒரு வழியாக சிவன் கோவில் தெருவுக்கு வந்தோம். பழைய தெருவே இல்லை. வீடுகள் மாறியிருந்தன. ஒட்டு வீடு எல்லாம் போய் இப்போது தனி வீடுகள். ரகுவின் குடும்பத்தில் யாரும் இங்கே இல்லையென்றாலும், ஷ்யாமியின் பெரியம்மா குடும்ப வழியில் வந்தவர்கள் இன்னும் நாகூரில் அதே வீட்டில் இருப்பதாகச் சொன்னான்.

அங்கே போனோம். வீடு அடையாளம் தெரியாமல் மாறி இருந்தது. வாசல் திண்ணையைக் காணோம். நாங்கள் வந்ததும் வீட்டுக்காரர் வரவேற்றார். ரகு அவரிடம் என்னை அறிமுகப் படுத்தினான். அவர் என்னைப் பார்த்த பார்வையில், 'குடும்பமே லூசுக் குடும்பம் போல' என்ற செய்தி இருந்தது. "அதனால் என்ன சார், வருசா வருசம் வரீங்களே? கொஞ்ச நேரம் தானே, பாத்துட்டுப் போங்க" என்றார்.

ரகு நன்றி சொல்லிவிட்டு வீட்டைச் சுற்றி நடந்தான். பக்கத்து வீட்டை இணைத்த கிணற்றை இடித்து மூடி விட்டிருந்தார்கள். குறுக்கே சுவர் கட்டியிருந்தாலும் கிணறு இருந்த இடத்தில் மழை நீர் வடிகால் போல் இரும்பினால் வட்டமாக மூடியிருந்தார்கள். மற்றபடி கிணற்றுக்கான அறிகுறி ஒன்றும் தெரியவில்லை. அவன் இரும்புத்தட்டுக்கு அப்பால் பூமிக்குள் பார்த்துக் கொண்டிருந்தான். வீட்டுக்காரரும் சற்று தள்ளி ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். நான் மெள்ள நகர்ந்து அவருடன் பேசப் போனேன்.

"நீங்க எங்கிருக்கீங்க?" என்றார் தயங்கியபடி.

"சிகாகோல இருக்கேன் சார்.. இந்த வருசம் எங்கம்மா பிறந்த நாளுக்காக வந்தேன். சின்ன வயசுல நாகூர் நாகப்பட்டினம் எல்லாம் சுத்தியிருக்கேன். கொஞ்சம் கொஞ்சம் மாறி இருக்கு" என்றேன்.

"ஆமாங்க" என்றார். "செல் போன் எல்லாம் வரும்னு எதிர்பார்த்தீங்களா?" என்றார்.

"டேய், இங்கே வாடா" என்று கூவினான் ரகு. இரண்டு பேரும் விரைந்தோம். "அங்கே பாருடா" என்று கீழே சுட்டிக் காட்டினான்.

"என்னடா?"

"பட்டுப் புடவைடா. வயலெட் சட்டை அங்கே பார். நல்லா கவனிச்சுப் பாரு" என்றான்.

"எனக்கு ஒண்ணும் தெரியலையேடா?"

"டேய், விளையாடாதடா. சரியாப் பாரு. சார், நீங்க பாருங்க. நீங்களே சொல்லுங்க"

அவர் கூர்ந்து பார்த்தார். "என்னவோ துணி போலத்தான் தெரியுதுங்க" என்று ஒதுங்கிக் கொண்டார். ஏதோ சொல்ல வேண்டுமென்பதற்காகச் சொல்கிறார் என்பது எனக்குப் புரிந்தது. 'பாயைப் பிராண்டும் குடும்பம்' என்று எங்களைப் பற்றி நினைத்திருக்க வேண்டும். "வீட்டுல கூப்பிடுறாங்க. நீங்க பாத்துட்டு உள்ளாற வந்து ஒரு கப் காபி சாப்பிட்டுப் போவணும்" என்று கழன்று கொண்டார்.

"டேய், பாருடா" என்றான் ரகு மறுபடியும்.

"என்னை மன்னிச்சுருடா. என் கண்ணுக்கு ஒண்ணும் தெரியலை" என்றேன்.

"இங்கே தெரியுதுடா" என்று நெஞ்சைத் தொட்டுக் காட்டினான். "வா, போகலாம்".

    அங்கிருந்து வெளியேறி நாகூர் பஸ் ஸ்டேண்டில் நின்றோம். டீக்கடையில் ஆளுக்கொரு டீ வாங்கிக் கொண்டோம். "டேய், நான் மாயவரம் போய் அங்கிருந்து கோவிந்தபுரம் போறேன். எங்கம்மாவோட ரெண்டு நாள் இருந்துட்டு ஊரைப் பாக்கப் போகணும்" என்றேன்.

"ஷ்யாமி எப்ப வருவான்னு எனக்குத் தெரிஞ்சு போச்சு. கிணத்துல தெரிஞ்ச செய்தி" என்றான்.

நான் ஒன்றும் சொல்லவில்லை.

"ஷ்யாமி டிசம்பர் பனிரெண்டாம் தேதி கண்டிப்பா வருவா. 12.12.12. அன்னிக்குத் தான் உச்சமான சிறப்பு நாள். அதான். இப்போ புரிஞ்சு போச்சு"

"அப்படியா?" என்றேன்.

"நல்லா யோசிச்சுப் பாருடா" என்றான். அவன் குரலில் உற்சாகமும் வேகமும் கலந்திருந்தன. "ஷ்யாமி என்ன சொன்னா? காத்திருக்கேனு சொன்னா இல்லியா? எனக்கு அறுவது வயசானாலும் காத்திருக்கேன்னு சொன்னா இல்லியா? இரண்டாயிரத்துப் பனிரெண்டுல எனக்கு அறுவது வயசுடா" என்றான்.

எனக்கு மாயவரம் பஸ் இன்னும் வரவில்லையே என்றிருந்தது.

"அறுவதோட மகத்துவம் தெரியுமா? அஞ்சு பனிரெண்டு அறுவதுடா. மனுஷனுக்கு அஞ்சு பிராயம். அறுவது வருசம் ஒரு கால வட்டம். அறுவதுக்கு அப்புறம் ஒண்ணு என்கிறது கால சித்தாந்தம். அறுவது வருஷத்துக்கொரு தடவை வருச சக்கரம் புதுப்பிக்குது. நாம தமிழ் வருசம்னாலும், மூலம் அது தாண்டா. அறுவது வருசத்துக்கு அப்புறம் புதுசா தொடங்கப் போறோம்டா நானும் ஷ்யாமியும்" என்றான்.

நான் துடித்தேன். பஸ், எங்கே பஸ், எங்கே பஸ்?

"நல்லா யோசிச்சுப் பாரு. இந்த வருசம் நான் இங்கே வந்து உன்னைச் சந்திச்சேன். உங்கம்மாவுக்கு ஷஷ்டியப்தம். அறுபது வயசு முடியுது. திஸ் இஸ் எ சைன். உனக்கும் இது க்ளோசர் மாதிரி. உன்னை இங்கே வரவழச்சிருக்கா பாரு. கண்டிப்பா வருவா பாரு. இரண்டாயிரத்துப் பனிரெண்டுல" என்றான்.

மாயவரம் பஸ் வரவில்லை. சிதம்பரத்துக்கு ஒரு பஸ் வந்தது. விட்டால் போதும் என்று கிளம்பினேன். தயங்கித் திரும்பி வந்து, ரகுவை அணைத்தேன். "டேய், ரகு. டேக் கேர்" என்று அவன் தோளைத் தட்டி சிதம்பரம் பஸ்சில் ஏறினேன்.

பஸ்சில் நிற்கும் இடம் தான் இருந்தது. தொற்றிக் கொண்டேன். பஸ் கிளம்பியதும் ரகு எங்கே வந்துவிடுவானோ என்று பயந்து கொண்டே பார்த்தேன். அவன் வரவில்லை. அங்கேயே நின்று கொண்டிருந்தான். என்னைப் பார்த்து கட்டை விரலை உயர்த்திக் கையசைத்தான். மெள்ள மறைந்தான்.

"சுவாமிமலைக்கு ஒரு டிகெட் குடுங்க" என்றேன்.

"இது பாயின்டுபாயின்ட் சார். சிதம்பரம் தான்" என்றார் ரஜனிகாந்த் தோழர்.

சிதம்பரத்துக்கு டிகெட் வாங்கிக் கொண்டேன். ரகுவைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை.


ஒவ்வொரு குடும்பத்திலும் ரகுக்கள் உண்டு. இதுவரை சொன்னது எங்கள் குடும்ப ரகுவின் கதை.

நாகூர் கோடை விடுமுறையில் என்ன தான் நடந்திருக்கும்? ஷ்யாமி என்ன ஆனாள்? என் கண்ணெதிரே நடந்தவற்றை எப்படி இல்லையென்று நம்புவது? அறிவுக்குட்பட்ட விடைகளைத் தேடித் தேடி சலித்திருக்கிறேன். பின்னாளில் உளவியல் வகுப்பில் 'relationships among paranormal beliefs, locus of control and psychiatric symptomatology' என்ற தலைப்பில் வெளிவந்த ஒரு உளவியல் பரிசோதனை முயற்சியின் முடிவுகளைப் படித்த போது, நாகூர் நிகழ்ச்சிகளைப் பற்றி ஓரளவுக்கு அறிந்து கொள்ள முடிந்தது. ரகுவைப் பற்றிய கணிப்பும் அந்த வகையில் தோன்றியது தான்.

சுவைக்காகக் கொஞ்சம் கற்பனை சேர்த்திருக்கிறேன் என்றாலும் இவை அறிவுக்கப்பாற்பட்ட எல்லையில் நடந்த சம்பவங்கள். எனக்கு இவற்றிலெல்லாம் நம்பிக்கை இல்லை. யதேச்சையான நிகழ்வுக்கான அடிப்படை உண்மைகளைத் தேடித் தோல்வியுற்றிருந்தாலும் கைவிடவில்லை. பகுத்தறிவுக்குட்பட்ட யதேச்சையான நிகழ்வுதான் என்று நம்புகிறேன்.

உண்மையறிய முயன்ற என்னுடைய தேடல்களிலிருந்தும், நான் எடுத்துக் கொண்ட உளவியல் ஆலோசனைகளிலிருந்தும், நாகூர் கோடை விடுமுறையின் பாதிப்பைப் பற்றி எழுத வேண்டுமென்று சில வருடங்களாய் நினைத்திருந்தேன். இப்போது வாய்ப்பு கிடைத்தது. இதைப் பற்றிய என் ஆய்வையும் எழுத எண்ணியிருக்கிறேன். இன்னொரு பதிவில்?


தொடரும்> 6

26 கருத்துகள்:

 1. சுவாரஸ்யம். நடந்த கதை என்று சொல்வதா நடக்கின்ற கதை என்று சொல்வதா? கதை என்று விட்டு விடுவதா? ரகு சொல்வது பொய்யா? அப்பா சார் சொல்றதே காட்டேரிக் கதையா? எனி வே, இரண்டாயிரதுப் பனிரண்டாம் வருஷம் எங்களுக்கும் ஷ்யாமி, ரகு, குடுகுடுப்பை ஞாபகம் வருமா? ஜக்கம்மாவுக்குத்தான் தெரியும். வேலைக்கு நேரமாவதையும் ஒதுக்கி விட்டு படிக்கவைத்ததற்கும், அடுத்தடுத்து இடுகை இட்டு முடித்தமைக்கும் (?) நன்றி.

  பதிலளிநீக்கு
 2. /நடந்த கதை என்று சொல்வதா நடக்கின்ற கதை என்று சொல்வதா?/
  சிந்தனையைத் தூண்டும் comment ஸ்ரீராம்.

  இது ஒவ்வொரு வீட்டிலும் வெவ்வேறு வடிவத்தில் நடக்கின்ற கதை தான். இதற்கு psychological மற்றும் psychiatric explanations உண்டு. இந்த மனநிலை பற்றிய கருத்து நிறைய எழுதலாம்.

  எங்க ஏரியாவுக்குள்ளே வந்திருக்கீங்க, அப்பாதுரை.முதலில் உங்க ஆய்வைப் படிக்க ஆவல்.

  வித்தியாசமான படைப்பு.

  பதிலளிநீக்கு
 3. பெயர் தான் ஆய்வே தவிர, i can assure you my perspectives would be amateruish. குறைந்தபட்ச psychology, கேட்டும் படித்துமறிந்த hypnosis, conditions of trance, மற்றும் அவ்வப்போது எடுத்துக்கொண்ட counseling and therapy - இதெல்லாம் கலந்த ஒரு வித மூன்றாம் வகுப்பு rationale. அஷ்டே!
  உளவியல் துறையில் நிபுணத்துவம் பெற்ற உங்கள் கருத்துக்களை அறியத்தான் மிகுந்த ஆவல்.

  பதிலளிநீக்கு
 4. விடாமல் படித்ததற்கு நன்றி ஸ்ரீராம். ஜக்கம்மாவின் அருள் கிடைக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 5. என்னால் நம்பவே முடியவில்லை. இதுவரை என் உறவினர்கள், நண்பர்கள் வட்டத்தில் யாருமே இது போன்ற அனுபவங்கள் ஏற்பட்டதாக சொல்லி, நான் கேள்விபட்டதே இல்லை. வெறும் கதைகளிலும், சினிமாவிலும் பார்த்ததோடு சரி. இதை படித்ததிலிருந்து மனம் அந்த ஷ்யாமிக்கு அப்பொழுது என்ன ஆகி இருக்கும், இப்போது எங்கே இருக்கிறாள், எப்படி இருக்கிறாள் என்று அவள் நினைவிலேயே மனம் சுழன்று கொண்டிருக்கிறது.

  நீங்க எழுதியதை படித்ததிலிருந்து அவள் கொஞ்சம் குறும்பான, துடுக்கான, சற்று தைரியமான பெண்தான் என்று எனக்கு தோன்றுகிறது. என் கணிப்பு சரி என்றால், அவள் எப்படியாவது ரகுவை சந்தித்திருப்பாள். இவ்வளவு வருடங்கள் நிச்சயம் பொறுத்திருந்திருக்க மாட்டாள். என்னை பொறுத்தவரை அவளுக்கு நிச்சயம் வேறு இடத்தில் திருமணம் ஆகி இருந்திருக்கும். ரகுவை நினைத்தால் மனதிருக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. அவர் நம்பிக்கை ஜெயித்தால் எனக்கு மிகவும் சந்தோஷம்தான். அவர் இவ்வளவு நாட்கள் காத்திருப்பதற்கு அவர் நம்பிக்கை ஜெயிக்க வேண்டும் என்று மனம் ஒரு புறம் நினைத்தாலும் இது வெறும் மூட நம்பிக்கை தான் என்று மறுபுறம் நினைக்கிறது. இவர்களை பற்றிய மேலும் விவரங்கள் உங்களுக்கு தெரியவந்தால், எங்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

  அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. பெயரில்லாஅக்டோபர் 17, 2009

  தீபாவளியும அதுவாம நல்ல கதை போட்டீங்க. போர்வையை இழுத்து மூடிக்கிட்டு படுக்க வேண்டியதா போச்சு. கைலே கந்த சஸ்டி கவசம் புக். இது உண்மையான கதையா கதையான உண்மையா? அதையும் சுருக்கம ஆய்வு பண்ணி சொல்லிடுங்க (இழுத்துகிட்டு போவாதிங்க)

  எங்கெங்கே காத்தடிச்சிருக்கீங்கனு சொல்லிடலாம். உங்க ப்ரெண்டுக்கு 2012ல் அறுவது வயதுனு எழுதியிருக்கிறது காத்து. உங்களுக்கே தொண்ணூறோ என்னவோ ஆயிடுச்சு, உங்களை விட 'சில வருடங்கள் மூத்தவன்' எப்படிங்க அறுவது ஆவறது? வருசா வர்சம் குறையுமோ? மத்தபடி மிச்ச கதை உண்மையா இருக்கலாம் (பயமா இருக்குங்க).

  தீபாவளி ஸ்வீட் சாப்பிட்டு அமைதியா இருங்க.

  பதிலளிநீக்கு
 7. //விடாமல் படித்ததற்கு நன்றி ஸ்ரீராம். ஜக்கம்மாவின் அருள் கிடைக்கட்டும்.//

  ஏங்க, என் பேரையும் கொஞ்சம் சேத்துக்கங்க. நானுந்தான் விடாம படிச்சேன். நீங்க பேர் சொல்லாததால, படிச்ச மத்தவங்களுக்கு எல்லாம் அந்த மந்திரவாதி அருள் கிடைச்சிடபோவுது. ஏற்கெனவே படிச்ச பாதி பேர் பயந்து போயிருக்கோம். அதனால நீங்க எதுக்கும் படிச்சு கமெண்ட் போட்டவங்க, படிச்சு கமெண்ட் போடாதவங்க, படிக்காம கமெண்ட் போட்டவங்க, எல்லாருக்கும் ஜக்கம்மாவின் அருள் கிடைக்கட்டும்னு சொல்லிடுங்க. வேணும்னா உங்க பேரையும் சேத்துக்கங்க.

  பதிலளிநீக்கு
 8. Enjoyed reading the moments of angst and horror. I think this is one of your 'little fact mixed with lot of imagination' stories. There is a whole branch of psychoanalytics around illusion and manifestation. But i think you should not analyze this - just leave it as is, as a story.

  (Very funny Murungai.)

  பதிலளிநீக்கு
 9. அப்பா சார் - கதையில - மூன்றாம் சுழியில - சாரி - மூன்றாம் அத்தியாயத்தில் - ஷ்யாமியின் அம்மா - அந்த அரகன்ட் அப்பா மீது புடவையை எறிந்துவிட்டுப் பேசுகின்ற டயலாக் - என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. எனக்குத் தெரிந்த - கணவனைப் பிரிந்து வாழுகின்ற அல்லது கணவனைப் பிடிக்காத மனைவிகள் - இந்த ரீதியில் பேசியதை, நேராகவோ - அல்லது மற்றவர்கள் மூலமாகவோ - கேட்டிருக்கிறேன். அதுதான் என்னை பாதித்தது.
  சுவையாக எழுதப்பட்டுள்ள கதை - இரசித்துப் படித்தேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 10. ஹலோ துரை, நாகூர் நினைவுகள் சூப்பராக இருந்தது. ரெண்டு நாட்களாக நான் யாரவது குடுகுடுப்பைக்கரனுக்கு பைசா போடாமல் துரத்தினேனோ என்று பயந்துகொண்டு இருக்கேன்!!!.
  உன் கதைகளுக்கு நிகராக வரும் கமெண்ட்ஸ் எல்லாம் சுவையாக இருக்கு. geedhu

  பதிலளிநீக்கு
 11. பெயரில்லாஅக்டோபர் 18, 2009

  /kggouthaman சொன்னது… மனைவிகள் - இந்த ரீதியில் பேசியதை, நேராகவோ - அல்லது மற்றவர்கள் மூலமாகவோ - கேட்டிருக்கிறேன். அதுதான் என்னை பாதித்தது/

  உண்மை தான் kgg. வெளிக் காயத்தைக் குணப்படுத்திடலாம்.

  அதுல பாருங்க,
  பெண்களைப் பற்றி பரிந்து பேசி வருத்தம் தெரிவிக்கும் கூட்டம் ஆண்களை மட்டும் மறந்து விடுகிறது. எத்தனை கணவர்கள் திருமணத்துக்கு முன் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருந்து திருமணத்துக்குப் பின் அப்படி ஆனார்கள் என்று ஏதாவது ஸ்டடி பண்ணியிருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

  நை நை என்று பிடுங்கி எடுத்து கன்ற்றோல் ப்ரீக்காக இருக்கும் மனவிகளும் பார்த்திருக்கிறேன். ஒரு வேலையும் செய்யாமல் பிறந்த் வீட்டுப் பெருமை பேசி பெருங்காய டப்பா மனைவிகளும் உண்டு. வெளிய வேலை பாத்துவிட்டு வீடுக்கு வந்த புருசனை அங்கேயும் வேலை பார்த்துக் கஷ்டப்பட வைக்கிற அன்பு மனைவிகள் சில பேர் தெரியும். என்ன செய்தாலும் திருப்தி அடையாத அட்டை மனைவிகலும் இருக்கிறார்கள். 'அப்பா அம்மாவை விட்டு எல்லாத்தயும் விட்டு புருசனை மட்டும் நம்பி வந்தவங்க' என்பது சரி - அதே சமயத்துல அப்பா அம்மாவை எல்லாத்தையும் விட்டு வந்தவ்ங்க புருசனும் தான். கணவன் மனைவி உறவு சுமுகமில்லையின்னா அதுல மனைவிக்கு அதிக பங்கிருக்குனு நான் நினைக்கிறேங்க. டென்சன் உண்டாக்குறது மனைவிகள் தான் என்று நினைக்கிறேன். கண்ணாறக் கண்டும் இருக்கிறேன். கணவனுக்குத் தான் அறிவில்லைனே வச்சுக்குவோம், வந்தவங்களுக்கு அறிவு எங்கே போச்சுங்க?

  கதையில இன்னொரு உண்மையையும் சொல்லியிருக்காரு பாருங்க. "டீக்கடையில் ஆளுக்கொரு டீ வாங்கிக் கொண்டோம்"

  அடேங்கப்போய், இது தாங்க என்னை ரொம்ப பாதிச்சது. டீக்கடையில ஒரு கப் டீ! எங்கயோ போயிட்டீங்க அப்பாதுரை.

  பதிலளிநீக்கு
 12. கீது, 'எண்ணச் சிதறல்' பெயரே ரொம்ப அழகா இருக்கு. நீ எழுத போறத படிக்க ஆர்வமா இருக்கேன். எப்ப ஆரம்பிக்க போற?

  பதிலளிநீக்கு
 13. முருங்கைமரம் கூறுவதை நான் முழுவதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற போதிலும், அதில் - மறுக்கமுடியாத சில வாதங்கள் உள்ளன. கணவன் மனைவிக்குள் வரும் பிரச்னைகளுக்கு - ஏதேனும் ஒருவரை மட்டும் காரணம் என்று முடிவு கட்டிவிட முடியாது. கணவன், மனைவிக்குள் என்ன பிரச்னை வந்தாலும் - அதை மூன்றாம் மனிதர் தலையீடு இல்லாமல் - அவர்களுக்குள்ளேயே பேசித் தீர்த்துக் கொள்ளலாம். குழந்தை பிறந்தபின்பு - கணவன் மனைவிக்குள் ஏற்படும் சிறிய பிரச்னை / வாக்குவாதம் கூட - குழந்தைகளின் எதிர்காலத்தையே பாதிக்கும் அளவுக்குப்போய் விடும் - அதிலும் அந்தக் குழந்தை பெண் குழந்தை என்றால் - ஒரு எதிர்காலச் சந்ததியே பாதிக்கப் படும். யாரேனும் ஒருவர் விட்டுக் கொடுப்பதில் ஒரு இழிவும் வந்து விடாது. கணவன் மனைவிக்குள் வருகின்ற பெரும்பாலான பிரச்னைகளுக்கு - பொதுவாக - ஒருவருக்கு மற்றவர் நடத்தைமேல் ஏற்படும் சந்தேகம், EGO, மற்றவரின் கெட்ட பழக்கங்கள் (குடி, கூத்தி, சூது , ரேஸ் etc etc) போன்றவைகள் தான் - பெரும் பங்கு வகிக்கும். ஆனா பாருங்க முருங்கை - இதில் பல விஷயங்கள் - பெண்களைவிட ஆண்களையே அதிகம் பீடிக்கும் கெட்ட பழக்கங்களாகும். கணவன் மனைவி இருவரும் - ஒருவர் மற்றவருக்கு மதிப்பளித்து, கருத்துகளை காது கொடுத்துக் கேட்டு, தத்தம் அபிப்பிராயங்களை - இனிய வார்த்தைகளுடன் பரிமாறிக்கொண்டால் - பல பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளலாம். முருங்கை - அப்பா சார் டீக் கடையில டீ வாங்கிக் குடித்ததை எழுதியிருந்ததை நீங்க அதுதான் உங்களை ரொம்ப பாதிச்சுதா - கிண்டல் பண்ணியிருக்கீங்க. -- நான் சொல்லறேன் ' டீக் கடையில டீ வாங்கிக் குடிச்சது "சுவை" யான செய்தி - அந்த டீ சுவை அவரை பாதித்திருக்கும்! உங்களை எப்பூடி?

  பதிலளிநீக்கு
 14. நானும் களத்தில் இறங்கி விடுகிறேன். கொஞ்சம் குனி பிராமணா, தோளை விட்டு குதித்து விடுகிறேன்.

  'விட்டுக் கொடுக்கும்' மனப்பான்மையை எவ்வளவு தூரம் கடைபிடிக்கச் சொல்கிறோம் என்பதைப் பொறுத்திருக்கிறது இழிவா இல்லையா என்ற தீர்மானம்.
  முருங்கை சொல்வதை கருத்தளவில் ஒப்புக்கொள்கிறேன் - ஆனால் நான் பார்த்தவரை, என் உற்றார் சுற்றார் அனுபவத்தில் கண்டவரை, ஊமைப் பெண்கள் தான் அதிகம். மனதால் ஊமையானவர்கள்.
  kgg (i like it, murungai) யின் ego மற்றும் 'கெட்ட பழக்கங்கள்' பற்றிய கருத்து இந்தக்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் பொருந்துமா என்று சிந்தித்துப் பார்க்கிறேன். குடி, கூத்தி (கூத்தர் என்பது சரியான வழக்கா?) சூது, ரேஸ் இவை எல்லாம் ஆண் பெண் இரு தரப்பையும் பாதிக்கும் பழக்கங்கள் தான். சமூகத் தட்டைப் பொறுத்தது இல்லையா? இவற்றைக் கெட்ட பழக்கம் என்று என்னால் சொல்ல முடியவில்லை.
  What is 'wrong' here? Morally unacceptable? Socially unacceptable? நீங்களாவது இவற்றைக் கெட்ட பழக்கம் என்கிறீர்கள். எனக்குத் தெரிந்த சில பெண்கள் மாமிசம் சாப்பிடுவதைக் கெட்ட பழக்கம் என்கிறார்கள். அதை விடுங்கள். டிவியில் செக்ஸ் கலந்த சாதாரணத் திரைப்படம் பார்ப்பதைக் கூடக் கெட்ட பழக்கம் என்கிறார்கள்.
  Times are changing. ஆணுக்கு பெண் - பெண்ணுக்கு ஆண் உறவில் காதலும் அன்பும் இருக்க வேண்டும். அது குறைந்த பட்சத்தில் அடிப்படை நம்பிக்கை மரியாதை இருக்க வேண்டும். அதுவும் இல்லாவிட்டால் பிரிந்து விட வேண்டும். ஆணுக்கும் அது தான் நல்லது என்பது என் கருத்து. குழந்தைகளுக்காக வாழ்வது என்பது guilt trip. தங்கள் நிம்மதியைக் குலைத்துக் கொள்வது குழந்தைகளுக்குச் செய்யும் தியாகம் அல்ல - குழந்தைகளுக்குச் செய்யும் துரோகம். 'இப்படித் தான் வாழவேண்டும்' என்ற தவறான எதிர்பார்ப்பை வளர்க்கும் துரோகம். ஆண் குழந்தைகளோ பெண் குழந்தைகளோ - பெற்றோரைப் போலவே வளருவார்கள். 'என் அப்பா என் அம்மாவை இப்படித்தான் நடத்தினார், அதனால் நான் இப்படி இருப்பது சரிதான்' என்று பின்னாளில் மகனும் (மகளும் vice versa) கடைபிடிக்கும் சாத்தியம் மிக மிக அதிகம். It is so far reaching that it can alter DNA - as it has over several centuries. வாக்குவாத சச்சரவுகள் மட்டுமல்ல, ஒருவருக்கொருவர் அன்பில்லாத பெற்றோர்களின் empty toleranceஆலும் பின்னாளில் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள்.
  குழந்தைகளுக்காகத் தியாகம் செய்வதை விடுங்கள். இன்றைய சமுதாயம் மற்றும் பொருளாதாரச் சூழலில் குழந்தைகள், கௌரவம் போன்ற காரணங்களை விட வருமான வரி, மருத்துவ வசதி, பாதுகாப்பு போன்ற காரணங்கள் தான் மகிழ்ச்சியில்லாத பெற்றோரையும் ஒன்றாக இருக்க வைக்கிறது தெரியுமோ? US and European Tax, Social Security, Medical Benefit laws are so draconian and prohibitive that many parents have taken alternate routes to divorce or break-up. "If love won't keep a couple together, a shaky economy just might" என்று சமீபத்தில் ABCலும் BBCலும் வந்த நிகழ்ச்சியைப் பார்த்திருக்கலாம். இந்த நிலை இந்தியாவிலும் சைனாவிலும் வர அதிக நாளாகாது. (ABC, BBC - முதலில் வந்தது எது?)
  அத்தகைய நிலையில் குழந்தைகளிடம் உண்மையைச் சொல்லிவிட்டு சேர்ந்தோ பிரிந்தோ இருப்பது நல்லது. குழந்தைகளுக்கும் மன அளவில் அது ஆரோக்கியமான முடிவு. We teach them continuity options, not terminal options.
  நிம்மதியாக புதுமண சந்தோஷத்துடன் கடைசி வரை வாழ்பவர்களை அறிவோம். நிம்மதியில்லாத மணத்தைத் துறந்து புதுவாழ்வு தொடங்கி மிக மகிழ்ச்சியாக இருப்பவர்களையும் நாம் எல்லோருமே அறிவோம். Take your pick, but know when to cut your loss.

  பதிலளிநீக்கு
 15. கெட்ட பழக்கம் பற்றி இன்னொன்றும் நினைவுக்கு வந்தது. சில வருடங்கள் முன்னால் என்னை 'ராம ஜபம்' செய்யச் சொன்ன என் அம்மாவிடம் நான் 'கடவுள் நம்பிக்கை தொலைந்து விட்டது' என்று சொன்ன போது, அவர் சொன்னது: "சாமி கும்பிட மாட்டியா? என்னடாது புதுசா கெட்ட பழக்கம்?".

  பதிலளிநீக்கு
 16. துரை

  கதை முடிச்சியா இல்லையா ? ஒரு சேர படித்தாலே எனக்கு புரிவதில்லை, விட்டு விட்டு படித்தால் அம்புட்டுதேன் !!

  முடிஞ்சேன்னு சொல்லு, படிக்க ட்ரை பண்ணறேன்

  அ - அம்மா
  ஆ - ஆத்தா
  இ - இரவல்

  "மீனாக்ஷி" அப்படித்தானுங்களே.....

  - சாய்ராம்

  பதிலளிநீக்கு
 17. /meenakshi கூறியது... ஏங்க, என் பேரையும் கொஞ்சம் சேத்துக்கங்க. நானுந்தான் விடாம படிச்சேன்./

  ஏன் அப்படி சொல்றீங்க மீனாக்ஷி? ஸ்ரீராமரு ஸ்பெசலு காதா? அவருக்கு நன்றி சொன்னா எல்லாருக்குமே நன்றி சொன்ன மாதிரி இல்லையா? (அவ்வையே, ஸ்ரீராம் என்றால் என்ன? எல்லாரும் என்றால் என்ன?)

  படிச்ச எல்லாருமே ஸ்பெசலு தான். எல்லாருக்குமே நன்றி. படிச்ச பிறகு, சாய்ராம், உங்களுக்கும் நன்றி. (என்னைக் குற்றம் சொல்லாமலிருந்தால் சரி)

  பதிலளிநீக்கு
 18. இது சற்றே 'விவகாரமான' விவகாரம்.

  ஆணுக்குப் பெண் சமமென்பதன் அங்கீகாரம் முன்பெப்போதையும் விட அதிகமாக வளர்ந்து வரும் இன்றைய சூழலில், உறவு முறைக்குள் ஏற்படும் விரிசல்களின் காரணம் ஒருதலையாகக் கணிக்கப்படக்கூடாது என்பது என் கருத்து. இருந்தாலும், பெண்கள் பரம்பரையாக நம் நாட்டில் அழுத்தப்பட்ட இனம்; அதை நினைவில் வைத்துத்தான் ஆக வேண்டும்.

  அப்பாதுரை, உங்கள் கருத்துக்கள் சொல்வதற்கு எளியவை. செயலாற்ற வலியவை. தவறுகளைப் புரிந்து கொண்டு, திருத்தி, காதலும் களிப்பும் குறைந்தாலும் மறைந்தாலும் ஒருங்கே வாழ்வது குழந்தைகளுக்குச் செய்யும் துரோகமா? என்னய்யா கருத்து இது? காதலும் களிப்பும் தானே அய்யா அந்தக் குழந்தைகளுக்கு முதற்க்காரணம்? ஒருவருக்கொருவர் இழைத்த மகத்தான தவறுகளைத் திருத்திக் கொண்டு பிள்ளைகளின் நலம் கருதி ஒருங்கே வாழ்ந்து, இன்றைக்கும் அமைதியாக இருக்கும் தம்பதிகளை நான் அறிவேன். பிள்ளைகளின் நலனைக் கருதாமல் தன்னிச்சையாகப் பிரிவது சுயநலம்; சினிமாக்காரர்களின் பேடித்தனம். பொறுப்பற்ற விலங்கு மனப்பான்மை.

  வரிச்சுமைக்காக இணைந்திருப்பது தற்காலிக அமைப்பு. நான் வெளிநாடு சென்றதில்லை, எனினும், மேல்நாட்டில் கூட அது உண்மையாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

  நாகரீகம் மாறலாம் நண்பரே, பண்பாடு என்பது மாறாதது, மறையாதது.

  பதிலளிநீக்கு
 19. சமீபத்தில் பட்டிமன்றத்திலோ - அல்லது சுகி சிவம் கூறியதோ - ஞாபகத்திற்கு வருகிறது. குடும்ப உறவுகள் மேம்பட, யாராவது ஒருவர் விட்டுக் கொடுப்பது நல்லது - என்றதும் கணவன் மனைவி இருவருமே அதை அப்படியே ஒப்புக் கொண்டார்களாம்; ஆனா பாருங்க (முருங்கை !!) இருவருமே - தனக்காக மற்றவர்தான் விட்டுக் கொடுக்கவேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றார்களாம்!
  வி.ஜ.ய.ன் - நான் நெனச்சேன் - நீங்க சொல்லிட்டீங்க -- நன்றி.

  பதிலளிநீக்கு
 20. அப்பா சார்,
  தனி பதிவாக வந்திருக்க வேண்டியதை கமென்ட்டி விட்டீர்கள்! பிறகு இந்தக் கடிதங்கள் தொடர்ந்திருக்கலாம். கணவன் மனைவி உறவை இவ்வளவு ப்ளான் பண்ண வேண்டுமா என்ன? அப்பா அம்மா உறவை 'ரத்து' பண்ண முடியுமா? இங்கு அது சாத்தியம் என்பதால் மனம் அதிலேயே நிற்கிறது. இது நம் உறவு என்று ஆன பின் குறைகளை அந்நியன் போல் சிந்திக்கக் கூட்டாது. பெற்றவர்களிடம் பிள்ளைகளும் பிள்ளைகளிடம் பெற்றவர்களும் குறை கண்டாலும் உறவு தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது? "சுவாமி கும்பிட மாட்டியா? என்ன புதுக் கெட்ட பழக்கம்" என்று கேட்ட அம்மா எத்தனை நாள் ஆனாலும் அம்மாதான்...அந்த Mindset மனைவியிடம் ஏன் வரக் கூடாது?

  பதிலளிநீக்கு
 21. பெயரில்லாஅக்டோபர் 20, 2009

  அம்மாடியோவ்... நான் உங்களைக் கிண்டல் செய்யலீங்க kgg. அப்பாதுரையையும் கிண்டல் செய்யலீங்க.

  'டீக்கடையிலே டீ வாங்காம் பின்னே சாராயமா வாங்குவாங்க?'னு எழுத வந்தேன். பிறகு இங்கே ஈரோடு பஸ் ஸ்டேன்ட் பக்கத்துல நம்ம பால்ஜேம்ஸ் டீக்கடையில திரை விலக்கி உள்ளே போனீங்கன்னா பட்டையிலிருந்து சீமை வரைக்கும் எல்லாம் கிடைக்கும். வண்ணான் தெரு ஜோதிலட்சுமி காபிக்கடையில ஜோதிலட்சுமி கூட கிடைக்கும். இதெல்லாம் ஞாபகம் வரவே நான் எழுத வந்ததை மாத்திக்கிட்டேன். நமக்கேன் சாமி வம்பு... அதுவும் பவானி கபாலின்னு வேறே எழுதியிருக்காரு. எனக்கேதுக்குங்க பொல்லாப்பு...நான் ஜோதிலட்சுமி காபிக்கடைக்கே போறேனுங்க.

  பதிலளிநீக்கு
 22. /தனி பதிவாக வந்திருக்க வேண்டியதை கமென்ட்டி... ஸ்ரீராம்/

  தனிப் பதிவா போட்டிருக்கலாம். தோன்றவில்லை. ஐடியா நம்மளுது இல்லையே? முருங்கையும் kggouthamanம் தொடங்கி வச்சது. எனக்கென்னவோ சுவாரசியமாகப் படுது.

  பதிலளிநீக்கு
 23. சமீபத்தில் உறவினரின் உறவினர் - அல்லது பந்தத்தின் சொந்தம் ஒருவர் - கணவனைப் பிரிந்து, பெண் குழந்தையுடன் (ஆறு வயது சிறுமியுடன்) - வந்திருந்தார். கணவன் மனைவி இருவரும் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டார்களாம். கணவன், அவருக்கு தனி வீடு பார்த்துக் கொடுத்து, ஒவ்வொரு மாதமும் - உதவித் தொகை கூட கொடுக்க தயார் என்று கூறி, கொடுக்கவும் செய்தார். அந்த மனைவியின் உடன் பிறந்த சகோதரிகளும், சகோதரர்களும் - அமேரிக்காவில் நல்ல நிலையில் உள்ளனர். அவர் அவருடைய கணவரிடம் மீண்டும் சேரக் கூடாது என்பதில், அந்தப் பெண்ணின் தகப்பனார் மிகவும் பிடிவாதமாக இருந்தார். அவருடைய (தந்தை) பேச்சில் ஒரு இனிமையே இல்லாமல் இருந்தது. அந்தப் பெண் பார்ப்பதற்கு மிகவும் சாதாரணமாக இருந்தார். விவாக ரத்து வேண்டாம் - ஏன் என்றால் எதிர் காலத்தில் ஒரு வேளை - சேர்ந்து வாழ ஒரு சந்தர்ப்பம் அமைந்தாலும் அமையலாம் என்றார். இன்றளவில் பிரிந்து வாழ்ந்து வருகின்றார்கள். இதில் இதுவரை யார் வெற்றி - யார் தோல்வி - எனக்குப் புரியவில்லை.

  பதிலளிநீக்கு
 24. /நாகரீகம் மாறலாம் நண்பரே, பண்பாடு என்பது மாறாதது, மறையாதது. - வி.ஜ.ய.ன்/

  பின்னிட்டீங்க சாரே. என்னைச் சவட்டாம விட்டதற்கு வந்தனம்.

  குழந்தைகளை மறந்து தன் நிம்மதியைத் தேடிக்கொண்டால் சுயநலம் எனலாம். இங்கே நாம் நிம்மதியாக இருந்தால் நம் குழந்தைகளையும் secure and confidentஆக வளர்க்க முடியும் என்ற எண்ணத்தில் சொன்னேன்.

  பண்பாடும் காலத்தால் மாறுவது தான். உடன் கட்டை ஏறும் அன்றைய வழக்கம் பண்பாடா நாகரீகமா? கணவனுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று இன்றைய பெண்களை வளர்ப்பது நாகரீகமா பண்பாடா?

  /இன்றளவில் பிரிந்து வாழ்ந்து வருகின்றார்கள். இதில் இதுவரை யார் வெற்றி - யார் தோல்வி - எனக்குப் புரியவில்லை. -kggouthaman/

  இருவருக்குமே தோல்வி என்பது என் கருத்து. பண்பாடு என்ற பெயரில் உதவாத கௌரவம் வேண்டியும் இல்லாத அவமானத்தைத் தவிர்க்கவும் இரண்டு பேருமே வாழ்வையும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் மீட்கும் வாய்ப்பை இழந்து விட்டார்களோ என்று தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 25. murungaimaram சொன்னது…

  "வண்ணான் தெரு ஜோதிலட்சுமி காபிக்கடையில ஜோதிலட்சுமி கூட கிடைக்கும்."

  பேஷ் பேஷ்

  "எனக்கேதுக்குங்க பொல்லாப்பு...நான் ஜோதிலட்சுமி காபிக்கடைக்கே போறேனுங்க"

  அட கடவுளே, என்னா டேஸ்ட்டுபா !!

  பதிலளிநீக்கு
 26. அப்பாதுரை கூறியது...

  "படிச்ச பிறகு, சாய்ராம், உங்களுக்கும் நன்றி"

  ஒரு வாரம் முன்பு இந்தியா சென்று வந்த ஜெட் லேகில் இன்னும் மப்பாக இருக்கேன்; ஆனால், மறுபடியும் இந்தியாவுக்கு பெட்டியை கட்டுவதால் வந்த பிறகு படிக்கின்றேன் !!

  இந்த முறை மூன்று(!) நாளைக்கு விஜயம், என் சித்தப்பா நேற்று கேட்டார் பின்பக்கம்(!) இருக்கா என்று பார்த்துக்கொள் என்று !!

  - சாய்ராம் கோபாலன்

  PS: ஐயோ, சென்னையில் புத்தகம் கித்தகம் தேட சொல்லாதீர்கள்

  பதிலளிநீக்கு