2009/10/15

நாகூர் 2012, கசம் சே!

3


◄◄   (1)   (2)


    ள்ளே ஓடி ஷ்யாமியின் பெரியம்மாவிடம் நடந்ததைச் சொன்ன போது அவர் நம்பவில்லை. 'சரி, சரி, உள்ளயே வந்து படுங்க' என்றபடி தூங்கப் போய்விட்டார். ரகுவும் நானும் பூஜையறை பக்கத்தில் படுத்துத் தூங்கினோம். பூஜையிலிருந்து சிறிய வெண்கல அனுமார் விக்கிரகம் ஒன்றை எடுத்து, பக்கத்தில் வைத்துக் கொண்டுப் படுத்தது நினைவிருக்கிறது.

எழுந்த போது பத்து மணியிருக்கும். வாசலில் சச்சரவு. ஷ்யாமியின் அம்மா யாரையோ விரட்டிக் கொண்டிருந்தார். ஷ்யாமியின் பெரியம்மா சமாதானமாக ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். எழுந்து பாயைச் சுருட்டி வைத்த போது ஷ்யாமியைப் பார்த்தோம். அவள் கண்கள் கலங்கியிருந்தன. "ஏன் அழுறே?" என்றான் ரகு.

"எங்கப்பா ஊர்லந்து வந்திருக்காரு. அம்மா அவரை உள்ளே விடக்கூடாதுனு அடம் பிடிக்கிறா. பத்து நிமிஷமா வாசல்லயே சண்டை".

ஷ்யாமியின் அம்மா அழுது கொண்டே உள்ளே வந்தார். "ஷ்யாமி, கெளம்புடி. நீயும் நானும் தெருவிலயாவது நின்னு பொழச்சுப்போம். இனிமே இந்த வீட்டுல நான் இருக்க மாட்டேன். பொறந்தாத்துல கூட மனுஷாள் இல்லனு ஆயாச்சு" என்று அவசரமாக ரேழி ஓரமாக இருந்த மர பீரோவைத் திறந்து உள்ளிருந்த ஒரு பெரிய சூட்கேசை எடுத்துப் போட்டார்.

ஷ்யாமியின் பெரியம்மா பின்னால் வந்து, "அதுக்காக ஊர்லந்து வீடு தேடி வந்தவாளை இப்படி வெளில நிக்க வச்சு வம்பு பண்ண முடியுமா? நாலு பேர் பாத்தா நல்லா இருக்குமா? அவசரப்படாதடி" என்று சமாதானம் செய்தார்.

அவரைத் தொடர்ந்து வந்தவரைப் பார்த்துக் கொஞ்சம் தயங்கினோம். ஷ்யாமியின் அப்பா. எங்களைப் பார்த்து "யாருடா நீங்க?" என்றார். ரகுவை அடையாளம் கண்டு கொண்டது போல் "நீ பக்கத்து வீட்டுப் பையன் தானே? இங்கே என்ன செஞ்சிட்டிருக்கே?" என்றார். பிறகு, "ஷ்யாமி, உங்கம்மாவால ஒரு காரியம் ஆகாது. நீ போய் எனக்கு காபி கொண்டா போ" என்று ஏவினார்.

பிறகு ரேழி பக்கமாகக் கத்தினார். "மூதேவி! என்ன அழுகை வேண்டிக்கிடக்கு? புருஷனை விட்டு ஓடி வந்துட்டு என்ன அதிகாரம்? என்ன திமிர்? இந்த நிமிஷமே ரெண்டு பேரும் கெளம்புங்கோ சொல்றேன். ஓடுகாலி, தனியாப் போறாளாம். ஷ்யாமி, காபி எங்கேடி?"

தாழ்வாரத்துக்கு அந்தப்பக்கத்திலிருந்து என் பெரியம்மா எங்களை அழைத்தார். அது காதில் விழாதது போல் ரகு சமையலறைக்குள் ஷ்யாமிக்கு உதவி செய்ய ஓடினான்.

ஷ்யாமியின் அப்பா அறையின் மூலையிலிருந்த மரச்சாய்வு நாற்காலியில் வசதியாக உட்கார்ந்து கொண்டார். "நாள் முழுக்க ட்ரெயின்ல வந்திருக்கானேனு கணிசம் அக்கறை கூட இல்லை. வந்தவாளை வானு சொல்றதுக்குக் கூடத் தோணலை. என்ன திமிர்! என்னோட சம்பாத்தியம் இல்லேன்னா உன் கதி என்ன ஆகும்? தொலச்சுடுவேன் தொலச்சு. தாலி கட்டினவன்னு கொஞ்சம் கூட மரியாதை இல்லையே? கெளம்புங்கோ ரெண்டு பேரும்" என்று பொருமினார்.

ஷ்யாமியின் அம்மா கோபமாக ஒரு பட்டுப் புடவையை எடுத்து அவர் பக்கமாக எறிந்தார். "இந்தாய்யா, உன் சம்பாத்தியத்துல எனக்கு இந்த பதினஞ்சு வருஷத்துல கிடைச்ச சன்மானம். பட்டுப் புடவை. ஒரே ஒரு தடவை இதைக் கட்டிக்கிட்ட போது, யாருக்காகடி சிங்காரிச்சுண்டு நிக்கறேனு கட்டின பொண்டாட்டியக் கேட்டவர் தானே அய்யா நீ? இந்தா, இதை எடுத்துக்கோ. உன்னால எனக்குக் கிடைச்ச எல்லாத்தையும் திருப்பி எடுத்துக்க முடியுமா? நீ என்னை முதுகுலயும் மூஞ்சிலயும் அடிச்சதையும் திருப்பி எடுத்துட்டுப் போக முடியுமா? உடம்புலயும் மனசுலயும் உண்டான காயங்களைக் கலைச்சுட்டுப் போக முடியுமா? உன் கூடத் திரும்பி வரதுக்குப் பதிலா தூக்குல வேணா தொங்குவேன். உன் பேச்சைக் கேட்டு உயிர் வாழணும்னு எனக்கு இனிமே அவசியமே இல்லை. நானும் என் பெண்ணும் எப்படியாவது பொழச்சுக்குறோம். தாலி கட்டினவன்னு தனியா மரியாதை கொடுக்கணும்னா தாலி கட்டிண்டவளுக்கு மரியாதை கொடுத்தா தானே? மரியாதை கூட வேண்டாம், மனுஷாள்னு மதிச்சா போறாதா?"

கடைசி வரிகளின் தாக்கம் இன்னும் பரவியிருக்க, "வாங்கடா... வந்து பல் தேயுங்கோ" என்றது கிணற்றடியிலிருந்து பெரியம்மாவின் குரல். எங்களையோ இந்தச் சண்டையின் சுவாரசியம் இழுத்தது.

ஷ்யாமி கொண்டு வந்த காபியைத் தூக்கி எறிந்தார் அவளுடைய அப்பா. சூடான காபி அறையெங்கும் சிதறி ஷ்யாமியின் கையிலும் காலிலும் கொட்டியது. டமளர் உருண்டு அவள் அம்மா அருகே வந்து விழுந்தது. "என்னடி சொன்னே நாயே?" என்று சீறிக் கொண்டு எழுந்து வந்தார். "உன்னை மனுஷியா மதிக்கலையா? முண்டச்சி. என்ன திமிர் உனக்கு, எதிர்த்தா பேசறே?" என்று ஷ்யாமியின் அம்மாவை கன்னத்தில் அறைந்தார்.

ரகு சும்மா இருக்காமல் அவரைத் தடுத்தான். "என்ன மாமா இது, பொண்டாட்டி புள்ளையை அடிக்கலாமா? இங்கே பாருங்கோ, ஷ்யாமி கையெல்லாம் கன்னிப் போயிருக்கு. எதுக்கு இப்படி கோபம்?" என்றான்.

அவ்வளவு தான். அவருக்கு இன்னும் கோபம் வந்து விட்டது. என்னுடைய அப்பா இப்படித் தான். கோபம் வந்துவிட்டால் எதிரில் இருப்பவர் சொல்வது செய்வது எதுவும் அவருக்குத் தெரியாது. அந்த அனுபவத்தால் நான் கிணற்றடி பக்கமாக நகர்ந்தேன்.

விவேகத்தை எல்லாம் காற்றில் உதறிவிட்டு ஷ்யாமியின் அப்பா, ரகுவைப் பளாறென்று அறைந்தார். "யாருடா நீ? ப்ளேக்காட். என் பொண்ணு பக்கத்துல எதுக்குடா நிக்குறே? ஓடுறா, அடுத்த அறை விழறதுக்குள்ள ஓடுறா" என்றார்.

ரகு பெரிய பயில்வான் போல் அவரை முறைத்தான்.

"என்னடா முறைக்கிறே? நீ என்ன என் பொண்ணைக் கட்டிக் காப்பாத்தப் போறியா? யாருடா நீ? உனக்கென்ன் அருகதை இந்த வீட்டுல?" என்று ரகுவைக் கீழே தள்ளி முதுகில் இன்னொரு அடி கொடுத்தார். காலால் அவன் இடுப்பில் உதைத்தார்.

"நிறுத்துங்கப்பா" என்று ஷ்யாமி அலறிக்கொண்டு வந்தாள். கீழே கிடந்த ரகுவைக் கட்டிக் கொண்டாள். "இப்படிக் கண் மண் தெரியாம அடிக்கிறீங்களே? ரகு என்னை கட்டிக் காப்பாத்தத்தான் போறான்" என்றாள் அழுதபடி.

"என்னடி சொன்னே? கூறு கெட்டவளே" என்று அவளை அடிக்கப் போனார். அதற்குள் ஷ்யாமியின் அம்மா குறுக்கே வந்துவிட்டார். "அவாளை விடுங்கோ. உங்களுக்கு என் மேலே தானே கோபம்? என்னை வேணும்னா இன்னும் ரெண்டு அடி அடிச்சுட்டுப் போயா. இந்தப் பதினஞ்சு வருசத்துல கேக்காத பேச்சா, படாத கஷ்டமா... பெத்த பொண்ணை அடிக்காதங்கோ.." என்றார்.

"என்னடி வேஷம் போடறே? பதினஞ்சு வருஷமா நான் மாடு மாதிரி உழைச்சு வீடு நகைனு கொட்டினா இது தான் பதில் மரியாதையா? கெளம்புங்கோ ரெண்டு பேரும் பதில் பேசாம. இனிமே பொறுத்துண்டிருக்க மாட்டேன்" என்றார்.

"நீங்க பொறுத்துண்டது போறும். நாங்க உன் கூட வர முடியாது..என்னையும் என் பெண்ணையும் விட்டுடுங்கய்யா...போறும்..." என்று கும்பிட்டார் ஷ்யாமியின் அம்மா.

ரகுவுக்கு என்ன தோன்றியதோ, சட்டென்று கீழே கிடந்த காபி டம்ளரை எடுத்து ஷ்யாமியின் அப்பா முகத்தில் எறிந்தான். டம்ளரின் விளிம்பு அவர் மூக்கில் கீறி உடனடியாக ரத்தம் வரத் தொடங்கியது. அவருக்கு அநியாயக் கோபம் வந்து விட்டது. "இன்னிக்கு இந்த வீட்டுல கொலை விழப்போகுது" என்று பக்கத்திலிருந்த கொடிக்கம்பைத் தூக்கிக் கொண்டு ரகு மேல் பாய்ந்தார்.

அதற்குள் பெரியம்மாவின் கோபக்க்குரல் கிண்ற்றடியிலிருந்து வந்தது. "ரெண்டு பேரும் உடனே வாங்கடா இங்கே"

ரகு கிணற்றடி பக்கமாக ஓடத் தொடங்க, நான் அவனுக்கு இரண்டடி முன்னால் ஓடினேன். ஷ்யாமி ரகுவைத் துரத்திக் கொண்டு வந்தாள். "ரகு, ஓடாத நில்லு". ஷ்யாமியின் அப்பா கொடிக்கம்பைச் சுழற்றி ரகு மேல் எறிந்தார். அது ரகுவைத் தவறிவிட்டு, கிணற்றுச் சுவரில் பட்டுத் தெறித்துக் கீழே விழவும் ஷ்யாமி அதில் தடுக்கிக் கீழே விழவும் சரியாக இருந்தது. உருண்டு கொண்டிருந்த கொடிக்கம்பில் கால் வைத்துச் சறுக்கி விழுந்தாள். விழுந்த வேகத்தில் கிணற்றுச் சுவரில் தலையை மோதிச் சரிந்தாள். ரகு, "ஷ்யாமி" என்று கூவி நிற்க, பெரியம்மா அவன் கையைப் பிடித்துத் தர தரவென்று உள்ளே இழுத்துக் கொண்டாள்.

ஷ்யாமியின் அம்மா இரண்டு கைகளாலும் தலையிலடித்துக் கொண்டாள். "கொலைகாரப் பாவி, பொண்ணைக் கொன்னுட்டியா.." என்று ஷ்யாமியை அணைத்துக் கொண்டாள். ஷ்யாமிக்கு நெற்றியிலும் உதட்டிலும் அடிபட்டு ரத்தம் கசிந்தது.

ரகு பெரியம்மாவின் பிடியிலிருந்து திமிர, பெரியம்மாவுக்குக் கோபம் வந்து விட்டது. ரகுவை உள்ளே தள்ளினார். "கட்டேலே போறவனே.. உனக்கென்னடா வந்துது? உள்ளே போடா" என்றார். பிறகு ஷ்யாமியின் அப்பாவிடம், "என்னய்யா மனுசன் நீ? கோபம் வந்தா இப்படியா அறிவு மழுங்கிப் போகும்? ஊரான் கொழந்தையை அடிக்கிறியே? வெக்கமா இல்லே?" என்று ஏசி தட்டிக்கதவை இழுத்து மூடினார். உள்ளே நின்று கொண்டிருந்த எங்களிடம் "இனிமே அவாத்துப் பக்கமே போகக் கூடாது" என்றார்.

"இனிமே இந்த வீட்டுல நிம்மதி போயிடுச்சு. நாலாம் பிறை பலியெடுக்கும்" என்ற குடுகுடுப்பையின் வரிகள் மனதுள் எதிரொலித்தன.

தொடரும்> 4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக