2010/05/30

மெல்லிசை நினைவுகள்

குருட்டு ஆய்வு



பாடல் காட்சியில் கேமரா வேலை பற்றி முன் பதிவில் கோடிட்டிருந்தேன். பின்னூட்டத்தில் பாலு மகேந்திரா பற்றியும் அவரது கேமரா கலைத்திறமை, கற்பனையற்ற காட்சிகளில் வீணானது பற்றியும் எழுதியிருந்தேன். என் நெருங்கிய நண்பர் என்னை இனிமேல் சென்னை வந்தால் பார்க்கப் போவதில்லை என்றும், சின்ன வயதில் எனக்கு அவர் கொடுத்த அதே சாக்லெட்டைத் திருப்பித் தரவேண்டும் என்றும் இமெயில் போட்டிருக்கிறார். பாலு மகேந்திரா பிரியர்.

சிறப்பாக அமைந்த பாடல் காட்சிக்கு உதாரணமாக ஒரு பாடலைப் பற்றி எழுத நினைத்ததன் விளைவு இந்த இடுகை. பதிவு போடத் தேர்வு செய்து வைத்த நான்கு பாடல்களில், கையோடு கையாக மூன்றாவது. நான் எதிர்பார்க்காமலே உதாரணமாக அமைந்து போனது.

பாடல் காட்சிகளைப் படமாக்குவதில் விற்பன்னர்கள் என்று இந்தியச் சினிமாக்களில் சிலரைச் சொல்லலாம். தமிழ்ப் படமென்றால் உடனே நினைவுக்கு வருபவர் ஸ்ரீதர். (நண்பருடன் இந்தப் பதிவைப் பற்றிப் பேசும் பொழுது 'ஏன், ஷங்கர் இல்லையா?' என்றார். ம்யூசிக் விடியோவுக்கும் திரைப்படப் பாடல் காட்சிக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை அவருக்குத் தொலைபேசியில் விளக்கிக் கொண்டிருக்கையில் எப்போது லைனை கட் செய்தாரென்றே தெரியவில்லை)

ஸ்ரீதரின் நெஞ்சிருக்கும் வரை படத்திலிருந்து இந்தப் பாடல் காட்சி. (கல்லூரி நாட்களில் பாலசந்தர்-ஸ்ரீதர் விவாதங்களில் இந்தப் பாட்டுக்கு இணையாக பாலசந்தர் ஒரு காட்சியாவது அமைக்கட்டும் பார்க்கலாம் என்று நண்பர்களிடம் அடித்துப் பேசியிருக்கிறேன். இதை விட அருமையாக ஒரு பாடல் காட்சியை பாலசந்தர் அமைத்ததையும் பின்னாளில் ஒப்புக் கொள்ள நேர்ந்தது.)

மனைவியின் நடத்தையில் சந்தேகம். நண்பனும் மனைவியும் சேர்ந்து தனக்குத் துரோகம் செய்கிறார்கள் என்ற நம்பிக்கை. வற்றிப் போன மண உறவு. இடையில் புது உறவு. காட்சி நாயகனுக்குப் பெருங்குழப்பம், ஆத்திரம், வெறி. நண்பனைக் கொலை செய்ய முயன்று துப்பாக்கி இயங்காமல் திரும்பி விடுகிறான். புதுத்துணையின் எதிரில் இயலாமையின் அவமானம். குடி போதையில் துணையுடன் வீட்டுக்குத் திரும்புகிறான். இதற்கிடையில் நண்பனோ நாயகன் விட்டுப்போன துப்பாக்கியில் குண்டுகள் இருப்பதை உறுதி செய்து கொண்டு இவனைக் கொன்று தீர்க்க ஓடி வருகிறான். துணையுடன் வீட்டுக்குத் திரும்பி வரும் நாயகனைக் கண்ட வீட்டிலிருக்கும் மனைவி, அவமானத்துடனும் வேதனையுடனும் வெட்கி விலகிப் போகிறாள். அடுக்கடுக்கான அதிர்ச்சியில் புதுத்துணை செய்வதறியாமல் திகைக்கிறாள். எரிச்சலில் நாயகன் அவளை ஆடச் சொல்கிறான். 'இந்த நிலையில் எப்படி ஆடுவது?' என்று தயங்கும் துணையை வற்புறுத்துகிறான். குடித்துக்கொண்டிருந்த புட்டியைத் தரையில் வீசி எறிகிறான். அவனை அமைதிப்படுத்த அவள் ஆடிப் பாடுகிறாள்.

இது தான் காட்சி.

காட்சியின் பின்னணியில் கொந்தளிப்பு இருக்கிறது. சோகம் இருக்கிறது. சோகத்தின் அடிப்படையில் காட்சி அமைக்காமல் கொந்தளிப்பை மையமாக வைத்துப் பாடல் காட்சியை எடுத்த ஸ்ரீதரை சிறந்த இயக்குனர் என்பதா வேண்டாமா? காட்சியை எப்படி அமைத்திருக்கிறார் என்று பார்ப்போம்.

காட்சிக்கான பாடல், 'நினைத்தால் போதும் பாடுவேன்'.

பாடல் காட்சியில் நாயகன்/நாயகியாக முத்துராமனும் கீதாஞ்சலியும் நடித்திருக்கிறார்கள். கீதாஞ்சலி இந்தக் காட்சிக்காகவே பிறந்தவர் போல் ஆடியிருக்கிறார். (இவரை இந்தப் படத்துக்குப் பின் பார்க்கவில்லை). 'அந்தஸ்தில்லாத' இடத்தில் காதலனையும் விட்டுக் கொடுக்காமல் ஆடிப் பாட வேண்டும் என்ற இக்கட்டான நிலையை ஆட்டத்தில் காட்டியிருக்கிறார். புயல் போல ஆடியிருக்கிறார். அவராகவே சுழல்வது போதாது என்று முத்துராமன் அவரைச் சுற்றி விடுகிறார் அடிக்கடி. காட்சியின் கொந்தளிப்பை கீதாஞ்சலியின் நடனத்தின் மூலம் எடுத்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர். கேமராக் கலைஞர் யாரென்று தெரியவில்லை - அடுத்த முறை படம் பார்க்கும் பொழுது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கேமராக்கள் வைத்து இயக்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது. சில வரிகளை ஒரே டேக்கில் எடுத்திருப்பது புரிகிறது - பிரமிக்க வைக்கிறது. வேகம் மட்டும் போதாது என்பது போல் காமெராக் கோணங்களும் அங்கங்கே மாறுபட்டு 'fast cut' செய்திருக்கிறார்கள். 'எங்கும் பறந்தோடும் இளந்தென்றல் அல்ல - ஏக்கம் வரும் போது எல்லோர்க்கும் சொல்ல' என்ற வரிகளைப் படமாக்கியிருக்கும் விதத்தைக் கவனித்தால் நான் சொல்வது புரியும். முத்துராமன் ஒரு தூணில் சாய்வார். சாய்வதால் அவர் உடலில் இயற்கையாகத் தோன்றும் வளைவுக்குள் வருவார் கீதாஞ்சலி. பாடி விட்டு உடனே ஒரு சுற்று சுற்றி நாற்காலியில் விழுந்த முத்துராமனின் வலப்பக்கம் வந்து க்ளோசப்பில் வரிகளை முடிப்பார். முழு வட்டம். இதை ஒரே டேக்கில் எடுத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. கீதாஞ்சலி புயல் வேகத்தில் நடனமாட, முத்துராமன் தடுமாறி மெள்ள நடப்பது முரண்பாட்டை இன்னும் அழுத்தமாக எடுத்துச் சொல்கிறது. இது போல நிறைய உதாரணங்களை எடுத்துச் சொல்லலாம்.

பாடலும் இசையும் கொந்தளிப்பைக் கொண்டு வர வேண்டுமே?

'நினைத்தால் போதும் பாடுவேன்... சலங்கை துள்ளும் ஓசையில் கலங்கும் கண்ணை மாற்றுவேன்' எனும் அருமையான வரிகளுடன் கண்ணதாசனின் பாடல் தொடங்குகிறது. ஆடுவேன், பாடுவேன் என்று தொடங்கி 'கலங்கும் கண்ணை மாற்றுவேன்' என்று முடிக்கும் பொழுது இங்கே நடப்பது மகிழ்ச்சி நிரம்பிய நிகழ்ச்சியல்ல என்று எடுத்த எடுப்பிலேயே சொல்லி விடுகிறார். கலங்கும் கண் யாருக்கு? காதலனுக்கா காதலிக்கா? கவிஞரின் கற்பனை அற்புதம். 'அணைத்தால் கையில் ஆடுவேன்' என்ற வரிகளில் கதாபாத்திரத்தின் நிலையைச் சொன்னாலும், இந்தப் பெண்ணின் மனதை 'எங்கும் பறந்தோடும் இளந்தென்றல் அல்ல' என்ற வரிகளில் சொல்லியிருக்கிறார். சிந்திக்க வைக்கும் பாடல். '(கேள்வி) கேட்க நினைக்காத மனம் ஒன்று வேண்டும்' மற்றும் 'மனதை மனதாக நீ காண வேண்டும்' என்ற வரிகளில் புதைந்திருக்கும் வலிகளை விளக்கத் தனிப்பதிவு போடலாம். பாடலின் வரிகளில் கதாபாத்திரங்களின் இக்கட்டான நிலையை எவ்வளவு அருமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்!

இசை பாடலுக்கு மேலே ஒரு படி செல்கிறது. 'உடைந்தது புட்டியல்ல, மனம்' என்பது போல் வயலினிசையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து உச்ச ஸ்தாயியில் பல்லவி. அங்கே பிடித்த டெம்போ பாடல் முழுதும் பரவி நிற்கிறது. எடுத்த எடுப்பிலேயே இசையில் கொந்தளிப்பைக் கொண்டு வந்து விட்டார் எம்எஸ்வி. இந்தப் பாடலை ஜானகியைப் பாட வைத்ததற்காக அவரைப் பாராட்ட வேண்டும். அற்புதமான தேர்வு. ஜானகி இசையை இன்னும் ஒரு படி மேலே கொண்டு சென்றிருக்கிறார் என்பேன். உச்ச ஸ்தாயியில் இவர் நிறைய பாடல்கள் பாடியிருக்கிறார் என்றாலும் இந்தப் பாடலைப் பிசிறில்லாமல் பாடியிருக்கிறார். பாட்டு முழுமைக்கும் சீரான modulation. சலங்கை, தபலா, மிருதங்க ஒலிகள் அசுர வேகம். ஒரு மாற்று குறைந்த வேகத்தில் ஒலிக்கும் சிதார், குழல். இடையில் சிவாஜி ஓடிவரும் காட்சிகளில் சீரான வேகத்தில் வயலின். ஜானகியோ இந்த முரண்பாடுகளையெல்லாம் இணைப்பது போல் பாட வேண்டும். என்ன செய்திருக்கிறார் எம்எஸ்வி? சலங்கையும் தபலாவும் சூபர் சானிக் வேகத்தில் போய்க்கொண்டிருக்க, வயலின் சீராக ஒலித்து நிற்க அல்லது சற்றே குறைந்த டெம்போவில் சிதார், குழல் ஒலித்து முடிக்க - ஜானகியின் குரல் 'ஆ' என்று சுவரம் இழுத்து முரண்பட்ட வேகங்களை இணைத்து சரணங்களைப் பாடுகிறது. தனித்தனியாக இவற்றைப் பிரித்துக் கேட்டுப் பார்த்தால் முரண்பாடு விளங்கும். இசையில் கொந்தளிப்பைக் கொண்டு வர முடியாது என்று யார் சொன்னது? அனுபவித்துக் கேட்கலாம். அலுக்காமல் கேட்கலாம்.

எம்எஸ்வி-8 | 2010/05/30 | நினைத்தால் போதும்

2010/05/29

மெல்லிசை நினைவுகள்



மெல்லிசை. திரைப்படங்களில் மூன்று வகை காட்சிகள் பொதுவாக இத்தகைய இசையமைப்புக்கு ஒத்து வரும். முதலாது தனிமையின் வெளிப்பாடு. தனிமையில் இனிமையும் இருக்கலாம் (காதல் சுக நினைவு) அல்லது வெறுமையும் இருக்கலாம் (பிரிவு, சோகம்). இன்னொன்று தாலாட்டு. மூன்றாவது முறையீட்டுடனான வழிபாடு. பழைய திரைப்படங்களில் இது போன்ற காட்சிகளில் ஒரு மெல்லிசைப் பாடல் இருக்கும். அதுவும் பெண்கள் இடம்பெறும் காட்சிகளானால் கண்டிப்பாக மெல்லிசை அடிப்படையில் ஒரு இனிமையான பாடல் இருக்கும். உள்ளத்தை இளக வைக்கும், சில சமயம் உருக வைக்கும் பாடல்களாக அமையும்.

எம்எஸ்வி இந்த genreவின் மன்னர்.

இந்தப் பதிவுக்கான பாடலும் காதல் பாட்டு.

இனிமையான மெட்டு, குறைவான இசைக்கருவிகள் துணையுடன் நல்ல குரல் வளத்தை மட்டும் நம்பி இசையமைக்கப்பட்ட பாடல். மெல்லிசைக்கு ஒரு சிறந்த உதாரணம் என்று இந்தப் பாடலைச் சொல்லலாம்.

குரல் வளத்தை மட்டும் நம்பி இசையமைப்பதாக இருந்தால் வெகு சில பாடகர்களே அதற்கு ஒத்து வருவார்கள். அதில் முதன்மையானவர் பி.சுசீலா என்பது என் கருத்து. சுசீலாவுக்கு இணையான மெல்லிசைப் பாடகி/பாடகர் எவருமே இல்லை என்று நம்புகிறேன். நடிகர்களுக்கேற்றபடி பாடும் திறமை சுசீலாவுக்கு உண்டு என்றாலும், இன்னொரு திறமை இவரைத் தனிப்படுத்துகிறது என்று நினைக்கிறேன். இசையே இல்லாமல் ஒருவருடைய குரலை மீண்டும் மீண்டும் கேட்க முடியுமென்றால் இவருடையது தான்.

காதலன் காதலை வெளிப்படுத்தி விட்டுச் சென்றதும் தனிமையில் நாயகி பாடுவதாகக் காட்சி. காதல் வெளிப்படும் வரை நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னணியாக வைத்துக் காதலி பாடுவதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. சிறையிலிருந்து தப்பி வந்து சுவரேறிக் குதித்து அடைக்கலம் கேட்ட நாயகனுக்கு உதவி செய்கிறாள் நாயகி. அடைக்கலம் கேட்டவன் அப்பாவி என்று தெரிந்ததும் ஆத்திரம் அடங்குகிறது. பிறகு அவன் பண்புள்ளவன் என்று புரிந்ததும் காதல் ஏற்படுகிறது. ஆனால் நாயகனோ சிறை சென்ற காரணத்தால் காதலை வெளிப்படுத்தத் தயங்குகிறான். இடையில் நாயகிக்குத் திருமண ஏற்பாடு நடக்கிறது. நாயகன் தன் நிலையைச் சொல்லி விலகிச் செல்ல நினைக்கும் பொழுது நாயகி திருமண ஏற்பாட்டில் தனக்கு விருப்பம் இல்லை என்பதை ஜாடையாகத் தெரிவிக்க, நாயகன் நெகிழ்ந்து தன் காதலைத் தெரிவிக்கிறான். நாயகி பதில் சொல்லாமல் வெட்கத்துடனும் மகிழ்ச்சியுடனும் விலகுகிறாள். இந்தியச் சினிமாக்களில் இந்த இடத்தில் ஒரு பாடல் இருந்தே தீரும். பல சமயம் டூயட் பாடல்களாக இருக்கும். இந்தக் காட்சியில் காதலனின் இயலாமையைக் கருத்தில் வைத்துப் பார்க்கும் பொழுது டூயட் பொருந்தாது என்று தோன்றுகிறது. தனிப்பாடலைச் சேர்த்த இயக்குனரைப் பாராட்ட வேண்டும்.

பாடலின் வரிகளை அழகு படுத்திக் காட்டுவது தான் மெல்லிசையின் சிறப்பு என்று நினைக்கிறேன். பாடலின் கடைசி வரிகளில் கவிஞரின் முத்திரை இருக்கிறது. காதலியின் நெஞ்சத்தில் இருப்பதை அருமையாக வெளிப்படுத்தும் வரிகள். தன் நாயகனைப் பற்றி அவள் என்ன நினைக்கிறாள் என்பதை, தைப்பது போல் சொல்லும் பட்டிழை வரிகள். மெல்லிசையினால் இதை அழகுபடுத்திக் காட்ட எம்எஸ்வியால் தான் முடியும். குழல், வயலின், விட்டு விட்டு வரும் பியேனோ, ஒரே ரிதமில் தபலா - இவ்வளவு தான் இசை. இரண்டாவது சரணத்திற்கு முன் ஹிந்துஸ்தானி பாணி வயலினில் (சரங்க்?) ஒரு இழு இழுக்கிறார் பாருங்கள்... மனதை ரப்பர் பேன்ட் போட்டுக் கட்டும் உருக்கம். 'என் இறைவன் திருடவில்லை' என்று அருமையாகச் சொல்ல சுசீலாவால் தான் முடியும்.

முந்தைய பதிவுக்கு முதலில் தேர்வு செய்திருந்தது இந்தப் பாடலைத் தான். ஒளிவடிவத்தையும் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்ததால் தாமதிக்க நேர்ந்தது. தொழில்நுட்பக் கோளாறு. (கோளாறு தொழில் நுட்பத்துல இல்லைனு மட்டும் சொல்லிக்க அனுமதி தாரேன், என் பேர்ல பழியைப் போட்டீங்கன்னா விசயமே வேறேயாயிடும், கவனம்)

எம்எஸ்வி-7 | 2010/05/28 | ஒரு நாள் இரவில்

2010/05/27

மெல்லிசை நினைவுகள்




எங்கள் பிளாக்கில் வாசகர் பேராதரவுடன் வெற்றிகரமாகவும் பரபரப்பாகவும் நடைபெற்று வரும் 'படைப்பாளர் பயிற்சி' பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். விவாதித்து என்றால் - நான் கேட்டுக் கொண்டிருந்தேன், சொல்பவர் என்னைப் பேச விடாமல் சொல்லிக்கொண்டே இருந்தார். (என்னடா இது கக்கூஸ் படத்துக்கு மாதவன் இப்படி ஆதங்கப்படுறாரேனு பேசிக்கிட்டிருந்தோம். செல்லமாத்தான் மாதவன், கோவிச்சுக்காதீங்க). ஒரே நேரத்தில் பலருக்கு ஒரே எண்ணம் தோன்றுவது மிகச்சாதாரண சாத்தியம் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. உளவியல் நண்பர் ஹேமாவுக்குத் தெரியும். விட்டால் ரோர்சேக் முறையைப் பற்றிப் பதிவெழுதக் கிளம்பிவிடுவார். (விட்டுத்தான் பார்ப்போமே? ஆளையே காணோமே?)

இந்தப் பதிவு அதைப்பற்றியல்ல. ரோஜாவையும் பேரிக்காயையும் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில், 'என்ன, மெல்லிசை நினைவுகள் எதையும் காணோமே? மெல்லிசையில்லையா? நினைவில்லையா?' என்று நக்கலடித்தார். என்ன பதிவு போடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தவனுக்கு ஐடியா கொடுத்து விட்டார். எம்எஸ்வி பாடல்களை வைத்து நாலு வருடம் ஓட்டி விடலாம் என்பதெல்லாம் மறந்தே விட்டது! (ஆனா நீங்க சொன்ன பாட்டைத் தேடிப்பிடிச்சு இன்னொரு பதிவுல எழுதுறேன், மன்னிச்சுருங்க).

புதுத் தமிழ்ப்படங்கள் பார்க்க வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் பாடல் காட்சிகள் சகிக்கவில்லை. எதற்கெடுத்தாலும் பத்து பேருடன் குத்து பாடுகிறார்கள். மென்மையான, இனிமையான, வித்தியாசமான பாடல்களோ காட்சிகளோ காண முடிவதில்லை.

மெல்லிசை என்றால் எம்எஸ்வி தான். சந்தேகமிருந்தால் அடுத்த வரியைப் பத்து முறை படிக்கவும். மெல்லிசை என்றால் எம்எஸ்வி தான்.

பழைய படங்களில் பாடல்கள் பலவற்றுக்குக் காட்சிக்கேற்றபடியோ (அபூர்வ ராகங்கள்: அதிசய ராகம், பூவா தலையா: பாலாடை மேனி), அல்லது மெட்டை முதலில் சிந்தித்து விட்டு அதற்கேற்றபடி பாடல் காட்சியையோ (சாந்தி: நெஞ்சத்திலே நீ, ஊட்டிவரை உறவு: தேடினேன் வந்தது) அமைப்பது வழக்கமாக இருந்தது. இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர்களும் படத்தில் ஈடுபட முடிந்தது. பாடல் காட்சிகள் வித்தியாசமாக சிந்திக்கப்பட்டு அதற்கேற்றபடி பாட்டெழுதி இசையமைத்த காலம் இனி வருமா தெரியவில்லை.

பாடல் காட்சியை அமைக்க ஐடியா கொடுத்த இசையமைப்பாளர்களில் எம்எஸ்வி முதல் தட்டுக்காரர் என்று நம்புகிறேன். இது என் கருத்து மட்டுமல்ல, சிவாஜி எம்ஜிஆர் கண்ணதாசன் ஸ்ரீதர் பாலசந்தர் முதலியவர்கள் எம்எஸ்வியைப் பற்றி அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். (நம் நாடு படத்தின் 'நினைத்ததை நடத்தியே', 'நான் ஏழு வயசுலே எளனி வித்தவ' பாடல் காட்சிகளைப் பற்றி ஜெயலலிதா பழைய குமுதத்தில் நிறைய சொல்லியிருக்கிறார். எம்எஸ்வியின் இசை அந்தப் படத்தின் பாடல் காட்சிகளை எந்த அளவுக்குப் பாதித்தது என்பது அவருடைய பேட்டியிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. நம் நாடு படம் ஸ்ரீதரின் சிவந்த மண் படத்தை மண்ணைக் கவ்வ வைத்தது, வேறு கதை. பாடல்கள் அருமையாக இருந்தாலும் சிவந்த மண் படு தோல்வியடைந்ததற்குக் காரணம் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா, மற்றும் நம் நாடு படத்தின் இரண்டு பாடல்கள்: ஆடை முழுதும் நனைய நனைய, நினைத்ததை நடத்தியே முடிப்பவன்.)

சரி, பதிவுக்கு வருவோம்.

டென்னிஸ் ஆடும் போது டூயட் பாடுவது போல் பாடல் காட்சி. எம்எஸ்வி மெட்டு போட்டுவிட்டாராம். ஆனால் பாடல் எழுத முடியவில்லை. அதனால் எம்எஸ்வியே பல்லவியும் போட்டுக் கொடுத்தாராம். பெருமையுடன் சொல்லிக் கொள்வார்: இந்தப் பாட்டுக்குப் பல்லவி கொடுத்ததே நான் தான் சார் என்று. பறக்கும் பந்து பறக்கும் என்ற பாடல். எம்ஜிஆர்-சரோஜாதேவி, டிஎம்எஸ்-சுசிலா உயிர் கொடுத்த பாடல். 'இவர் தான் கொஞ்சம் கவனி' என்று சுசீலாவும், 'இல்லை இது முல்லை' என்று டிஎம்எஸ்சும் சொக்குவதைக் கேட்கும் போதெல்லாம் கிக்கு. அருமையான பாடல். அருமையான பாடல் காட்சி. பந்தைத் தூது விட்டுக் காதல் பேசிய குளுமையான பாடல் காட்சி. மறக்க முடியவில்லை.

அதையே ரிபீட் செய்யச் சொன்னால். மறுபடி ஹிட்டாகுமா? பாடல், காட்சி என்று அதையே மறுபடி செய்யத் துணிவு வருமா? எம்எஸ்வி மட்டும் தான் இந்த மாதிரி சாதனைகளைச் செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

இங்கேயும் பந்து விளையாடுவது போல் டூயட். இந்தப் பாட்டிலும் இனிமையின் ஆதிக்கம். பந்து விடு தூது. எனினும் வார்த்தை விளையாட்டு வேறுவிதம். 'லவ் ஆல்' என்று நாயகனும் 'லவ் ஒன்' என்று நாயகியும் ஊடித் தொடங்கும் பாடல். கிடார், ட்ரம்ஸ், குழலுக்காகப் பலமுறை கேட்கலாம். ஜேசுதாஸ்-வாணி ஜெயராமின் முத்திரைப் பாடல்களுள் ஒன்று.

தொடக்கூடாது, முத்தம் கூடாது என்று எதற்கெடுத்தாலும் திருமணம் வரை தடை போட்ட காதல் இந்த நாளில் குறைந்து விட்டது என்றாலும், அந்த நாளில் அதுவும் ஒரு கிக். ஐந்தங்குல இடைவெளியில் உட்கார்ந்து கொண்டு வேர்கடலை கொறிப்போமே தவிர சட்டென்று உதடு இணைக்க முயன்றதில்லை. 'எண்ணுவதெல்லாம் நேரினில் காணும் புண்ணியம் இருந்தால் அது எங்கு போகும்' என்ற வரிகள், அந்த நாள் காதலர்களின் ட்ரேட் மார்க் வசனம். கவிஞரின் வரிகளில் நிரந்தரம்.

முதல் பாடல் மறக்க முடியாத பாடல் என்றால் இது மறந்து போகாத பாடல்.
சேர்ந்து ரசிப்போமே இன்னொரு தரம்?!
எம்எஸ்வி-6 | 2010/05/27 | செண்டு மல்லிப்பூ போல்

2010/05/20

கிணற்றுக்குள் பூதம்

போக்கற்ற சிந்தனை



அலோ, அல்லோ...ஒபாமா அண்ணனா, நான் தாண்ணே தம்பி பேசுறேன்... சும்பி இல்லண்ணே, தம்பி...வணக்கம்ணே.

எண்ணைக் கிணறு வெடிப்பை நீங்க கையாண்ட விதத்தைக் கன்னா பின்னானு பேசுறாங்கனு வருத்தப்படாதீங்க. வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்குறதுக்கு ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடலனு... நான் இல்லிங்க... மக்கள் சொல்றாங்கனு மனசு ஒடஞ்சு போயிடாதீங்க. பொருளாதார வளர்ச்சிக்கு ஒண்ணும் புடுங்கலைனு.. அய்யோ நான் இல்லிங்க, மக்கள்.. மக்கள் புலம்புறாங்கனு ஒடிஞ்சு போயிராதீங்க. இடைதேர்தல் தோல்விக்கு நொந்து போயிராதீங்க.

அனுபவமில்லாத ஆளை ஆட்சியில வைச்சதுக்கு எங்களைத் தானுங்க குத்தம் சொல்லணும். உங்களை யாருனா எதுனா சொன்னா, மக்களுக்கு அறிவு இல்லனு சொல்லி மழுப்பிடுங்க. சரியா? உங்க மேலே இருந்த நம்பிக்கைலயா ஓட்டு போட்டோம்? நீங்க வேறே? அந்த ஆளு புஷ்ஷூ மேலே இருந்த வெறுப்புல ராவணன் வந்தா கூட பரவாயில்லனு... நான் இல்லிங்க... எத்தினியோ பேருங்க ஓட்டு போட்டாங்கனு சொல்ல வந்தேன்.

இல்லாகாட்டி ஐரோப்பா போயிடுங்க. அங்க இன்னொரு பரிசு எதுனா கொடுப்பாங்க. ஆமா... என்ன கேட்டீங்க? ராவணன் யாரா? ராமனோட பொண்டாட்டிய... என்னா, ராமன் யாரா? சரிதான், வேணாம் விடுங்க... அந்த நாட்டுல உங்கள காந்தினு கொண்டாடிக்கிட்டிருக்காங்க. அடுத்த எலக்சனுல நீங்க அங்கே போயி நிக்குறது நல்லதுனு தோணுதுங்க.

அது வரைக்கும் எங்க ஊரு பாணியில ஒரு கும்மிப் பாட்டு சொல்லித் தாரேனுங்க. நீங்களும் மிசலம்மாவும் கும்மி அடிச்சிக்கிட்டே பாடிக்கிட்டிருங்க. இன்னும் ரெண்டு வருசம், அதா, ஓடியே போயிறும்.

கும்மிங்களா? கைத்தட்டத் தெரியுங்களா? ரெண்டு கையையும் சேத்து தலைக்கு மேலே ஒரு தரம், குனிஞ்சு கால்கிட்டே ஒரு தரம் தட்டணுங்க... பாடிக்கிட்டே தட்டணுங்க. தட்ட சொல்ல ஒரு காலால குதிச்சுக்கிட்டே தட்டினீங்கன்னா இன்னும் கிக்குங்க. அவ்வளவுதாங்க கும்மி ரகசியம். ரெடிங்களா? மிசலம்மாவும் ரெடிங்களா? இந்தாங்க பாட்டு.

போட்டு வச்சேனே, உத்தரவப் போட்டு வச்சேனே
    ஓட்டு வாங்கும் ஆசையிலே உள்ளூரில் கெணறு வெட்ட (போட்டு வச்சேனே ...)

வேட்டு வச்சானே, மொத்தமா வேட்டு வச்சானே
    ஊருபக்கம் கிணறு வெட்ட பொல்லாத பூதங் கெளம்பி (வேட்டு வச்சானே ...)

சிரிக்கி றாங்களே, ரகசியமா சிரிக்கி றாங்களே
    புச்சு சேனி கான்டலீசா பொக்கவாயி அப்பனுஞ் சேந்து (சிரிக்கி றாங்களே ...)

கரிக்கி றாங்களே, கட்சியிலே கரிக்கி றாங்களே
    கருப்பன் ஆட்சி காளான் ஆச்சென கண்டதுஞ் சொல்லி (கரிக்கி றாங்களே ...)
சேந்து பாடுங்க... மறுபடியும் சொல்லித்தாரேன்... என்ன? போனை வக்கவா? என்னங்கண்ணே திட்டுறீங்க? மக்கள் உங்களைத் திட்டுறாங்கன்னு நான் வருத்தப்பட்டா...

பிரிடிஷ் பெட்ரோலியம் தலைமையதிகாரி வாக்குமூலம்

நான் சொல்றதெல்லாம் உண்மைங்க; உண்மையைத் தவிர வேறொன்றுமில்லைங்க.

ம்ம்ம்ம்.. இந்த உண்மையை சொல்றதா, அந்த உண்மையைச் சொல்றதா?

விபத்துகள் நேர்வது அரசியலில் தவறுகள் நிகழ்வது போல் சாதாரணம் என்றாலும், எண்ணைக்கிணறு சம்பவத்தை ஒபாமா கையாண்ட விதம் அறிவற்ற விதமாக எனக்குப் படுகிறது. அரசியல் ஆதாயத்துக்காக கொஞ்சம் கூட சிந்திக்காமல் எண்ணைக் கிணறு வெட்ட உத்தரவு கொடுத்து விட்டு பிறகு பொறுப்பை ஏற்க இயலாத கோழைத்தனத்தை நினைத்தால் எரிச்சலும் வருத்தமும் பொங்குகிறது. பிரிடிஷ் பெட்ரோலியம் மற்றும் டெமொக்ரேட் கட்சிக்காரர்கள் சேர்ந்து நடத்தும் கூத்து சிரிப்பாய்ச் சிரிக்கிறது. இதனால் ஏற்பட்டிருக்கும் உயிர் மற்றும் பொருளிழப்பு, இன்னும் பத்து வருடங்களுக்கு தொடரப் போகிறது என்பதை எண்ணும் பொழுது ஆத்திரமாக மாறுகிறது.

ஏற்கனவே 2050 வாக்கில் உலக மகாக்கடல்களில் மீனினம் அழிந்துவிடும் என்று சொல்லி வருகிறார்கள். இதில் நாம் இன்னும் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டால் வெட்கமாக இல்லையா என்று கேட்கத் தோன்றுகிறது. அமைதிக்காவலன் அறிவாளி என்ற போர்வையில் உலா வரும் ஒபாமா, எண்ணைக் கிணறு வெட்டுவதற்கான உத்தரவுக்குப் பதில் மாற்று எரிசக்திகளை உற்பத்தி செய்ய அல்லவா உத்தரவு போட்டிருக்க வேண்டும்? பித்தலாட்டக்காரர்கள் எல்லா நிறத்திலும் வருகிறார்கள்.

இழப்பைப் பற்றி அரிய விவரங்களை அறிய, இங்கே செல்லுங்கள். மிக அருமையான தெளிவான விளக்கம்.

தண்ணீரில் மிதக்கும்/கலக்கும் எண்ணையை எடுக்க என்னென்னவோ முயற்சி செய்தார்கள்; செய்து வருகிறார்கள். நடுவே இந்த முயற்சி அல்லோலகல்லோலப் பட்டு, உள்ளூரே திருப்பதியானது.

எத்தைத் தின்னா..

என்ன கிண்டலா? யாரு கிட்டே என்ன கேக்குறதுனு ஒரு லிமிட்டு வேணாமா? போங்கடி சர்தான்.

2010/05/14

ராம கணக்கு

போக்கற்ற சிந்தனை



னக்குப் பிடித்தப் புத்தகங்களுள் ஒன்று ராமாயணம். இந்திய, இந்தோனேசிய, தாய்லந்து, மற்றும் ஆங்கில,ஜெர்மன், தமிழ், வடமொழி, தெலுங்கு, மராத்தி, வங்காள ராமாயண வடிவங்களைப் படித்திருக்கிறேன். ஒன்றிரண்டைச் சேர்த்தும் வைத்திருக்கிறேன். சமீபத்தில் நண்பர் ஒருவர் எனக்கொரு புத்தகத்தைப் பரிசாகக் கொடுத்தார். "எப்பேற்ப்பட்ட கலாசாரம், எப்பேற்ப்பட்ட இதிகாசம், எத்தனை தொன்மையான.. எத்தனை ஆழமான இலக்கிய வட்டம்" என்று நண்பர் புகழ்ந்து தள்ளினார். 'ஹிஹி' என்று ஆமோதித்து நண்பரும் நடுநிலைப்பள்ளி வரலாறு ஆசிரியருமான டேனியல் ஜீன்மோர்கனுக்கு நன்றி சொல்லி புத்தகத்தைப் பெற்றுக் கொண்டேன். வெட்டிக்கொண்ட என் வேர்களை ஆழம் பார்க்கும் ஆயிரமாவது வெளியாள்.

புத்தகத்துக்கு வருகிறேன். ராமாயணக் கதைச் சுருக்கமும் (200 பக்கக் கதைச் சுருக்கம்!) தொடர்ந்து, ராமாயணம் இந்தியக் கலாச்சாரத்தை எப்படி பாதித்திருக்கிறது (கொண்டிருக்கிறது) என்ற நீண்ட ஆய்வும், படிக்க மிகச் சுவையாக இருந்தது.

ராமன் கடவுளென்றோ கடவுளின் அவதாரமென்றோ எனக்கு நம்பிக்கையில்லையென்றாலும், ராமாயணம் எனும் உண்மைக்கதையின் சாத்தியத்தை என்றைக்குமே நம்பியிருக்கிறேன். இந்தப் புத்தகத்தில் ராமாயணக் காலத்தையும் ராமாயண விவரங்களையும் தோராயமாகவோ சில இடங்களில் தேதி வாரியாகவோ விளக்கி இருக்கிறார்கள். விண்ணியல் விதிகளைப் பயன்படுத்தி நட்சத்திரங்களின் பெயர்ச்சியையும் பாதையையும் வைத்து, காலக்கணக்கையும் தேதிகளையும் விவரித்திருக்கிறார்கள். (astronomy என்று ஆங்கிலத்திலும் வான சாஸ்திரம் என்று கழகங்களுக்கு முற்பட்ட தமிழ் வழக்கிலும் சொல்வார்களே, அதே)

விண்ணியற் கணிதம் எனக்குப் புரியவில்லை. ஆனால் விவரங்கள் புரிகின்றன. (ரத்தக்கறை படிந்த கர்சீபுன்னதும் நாக்கைத் தொங்கப் போட்டுண்டு படிக்கிற நேக்கு, அஸ்ட்ரானமி புஸ்ட்ரானமில்லாம் எங்கேந்து புரியப்போறது மாமி? நீங்களே சொல்லுங்கோ?)

உண்மை நிகழ்ச்சிகளைச் சாகசப்படுத்தி எழுதப்பட்டக் கதை ராமாயணம் என்பதற்கான சாத்தியம் இன்னும் வலுப்படுகிறது. நான் ரசித்த விவரங்களை இங்கே கொடுத்திருக்கிறேன். அறிவுப் பார்வையோ ஆன்மீகப் பார்வையோ - கண்ணோட்டம் உங்கள் வசதிக்குட்பட்டது.

ராமாயணக் காலம்
மகாபாரதம் நூலில் ராமாயணத்தை ஒட்டியப் பல குறிப்புகள் இடம்பெற்றிருப்பதாலும், ராமாயணத்தில் மகாபாரதத்தைப் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லாததாலும், ராமாயணம் மகாபாரதத்துக்கு முற்பட்டதாகவே இருக்க வேண்டும். மகாபாரதம் எழுதப்பட்டக் காலம் கி.மு 6000 - கி.மு 5000 என்று மேக்ஸ் ம்யுல்லர் உள்ளிட்ட பல அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இவர்களுள் குறிப்பிடத்தக்க வகையில், டாக்டர் வார்தக் எனும் மராத்திய ஆய்வாளர் எழுதிய 'சுயம்பு' என்ற ஆய்வு நூலில் மகாபாரதத்தின் காலம் கி.மு.5561ம் ஆண்டு என்று திண்ணமாகத் தெரிவித்திருக்கிறார். மேக்ஸ் ம்யுல்லரையும் வார்தக்கையும் ஏற்றுக் கொண்டால், ராமாயணக் காலம் கி.மு 6000க்கும் முற்பட்டது என்று புரிகிறது. டாக்டர் வார்தக்கை ஏன் குறிப்பிடத்தக்க வகை என்றேன்? நம்ம நாட்டுக்காரராச்சே, விட்டுக் கொடுக்கலாமா?

மகாபாரதத்தில் விசுவாமித்திரரைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது (ஆதி பர்வம்). நம்ம வியாசர் விருந்துக்கும் மகாபாரதத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும் போல. உதாரணத்துக்குச் சொல்லப் போனால், வியாசர் விருந்து புரிகிறது. பூமத்திய ரேகையைச் சூரியன் கடக்கும் தினங்களை அறிவோம். (equinox - இதற்கு எளிமையான தமிழ்ச்சொல் இருக்கிறதா?) பூரேசூகதி அடிப்படையில் நட்சத்திர நிலையையும் பாதையையும் வைத்துக் காலத்தைக் கணக்கிடும் வித்தையைச் சொல்லிக் கொடுத்தது விசுவாமித்திரர் தானாம். அவர்தான் முதன் முதலாக வேனில் காலத்து பூரேசூகதியை மையமாக வைத்து, நட்சத்திரப் பாதையைக் கவனித்து, காலக்கணிப்பு வித்தையைச் சொன்னவர். கடக, மகர ரேகைகளுக்கு நேராகச் சூரியன் இருக்கும் தினங்களை வைத்து (solstice), முறையே தட்சிணாயண மற்றும் உத்தராயண புண்ணியக் காலங்களை (ஹிஹி) எடுத்துச் சொன்னவரும் விசுவாமித்திரர் தான். இன்றைக்கும் இது உபயோகிக்கப்படுகிறது. இவரைப் பற்றித் தெரியாமல் போய்விட்டதே? அடுத்த partyன் போது பேசிக்கொள்ள ஒரு விஷயம் கிடைத்து விட்டது.

இந்த விசுவாமித்திரர் சொல்லிக் கொடுத்த வித்தையை வைத்து ராமாயணக் காலவாக்கு கி.மு.7600 என்று கண்டுபிடிக்க முடிகிறது. எப்படி? இங்கே தான் கணக்கு எனக்கு பிணக்கு அது ஆமணக்கு விவகாரம் தொடங்குகிறது.

மகர சங்கிரமணப் பொழுதில் (winter solstice), அதாகப்பட்டது உத்தராயணப் புண்ணியகாலப் பொழுதில், அசுவினி நட்சத்திரத்துக்கு நேரே சூரியன் இருந்ததாக ராமாயண யுத்தக்காண்டத்தில் விவரிக்கப்ப்பட்டிருக்கிறது. ஒரு நட்சத்திரப் பாதையிலிருந்து இன்னொரு நட்சத்திரத்துக்கு சுத்தமாகப் பெயர ஏறக்குறைய 960-980 ஆண்டுகள் பிடிக்கும். இன்றைய மூல நட்சத்திரத்திலிருந்து பின்னோக்கி அன்றைய அசுவினி வரைக் கணக்கிட்டால் பத்து பெயர்ச்சிகள், அதாவது, 9600-9800 ஆண்டுகள் பிடித்திருக்க வேண்டும். அதனால், கி.மு.7500-7300 வாக்கில் ராமாயணம் நடந்ததாகச் சொல்ல முடிகிறது. ஜோ ஜிம்பிள்!

எப்படி வித்தை?

மரங்களின் குறுக்களவில் இருக்கும் வட்டங்களை வைத்து மரத்தின் வயதையறிவதைப் பற்றிப் படித்திருக்கிறேன். ஒரு புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் குறிப்பை வைத்துப் புத்தகத்தின் காலக்கட்டத்தை அறிய முடியும் என்றும் படித்திருக்கிறேன். ஆனால் இத்தனைத் திட்டவட்டமாகவா? அதற்காகத்தான் எழுதும் பொழுது இப்படிப்பட்டக் குறிகளை வைத்தார்களா? வால்மீகியின் கற்பனையென்றே வைத்துக் கொண்டாலும் பிரமிக்க வைக்கிறது.

இந்தப் புத்தகத்தில் 'precession of equinox' என்னும் விண்ணியற்கணித முறையை ஒட்டி நிறைய ராமாயணத் தேதிகளை எடுத்துக் கொடுத்திருக்கிறார்கள். அங்கங்கே வார்தக்குக்கு நன்றி சொல்லியிருக்கிறார்கள். Precession of Equinoxஐத் தமிழில் விளக்க முடியுமா பார்ப்போம் என்று புத்தகத்தின் பின்னட்டவணையில் இருந்த விளக்கத்தைப் படித்தேன். "The earlier occurrence of the equinoxes in each successive sidereal year because of a slow retrograde motion of the equinoctial points along the ecliptic, due to a gradual change in the direction of the earth's axis caused by the gravitational pull of the sun and moon on the mass of matter accumulated about the earth's equator" என்று போட்டிருக்கிறது. முடி ஏன் கொட்டாது என்கிறேன்!

கணிதத்தை விட்டு, கதைக்கு வருகிறேன். இந்தப் புத்தகத்திலிருந்து சில ராமாயண நிகழ்வுகளுக்கான தேதிகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.

ராமாயணத் தேதிகள்
ராமன் பிறந்த நாள்: கி.மு. டிசம்பர் 4, 7323 (ராமநவமி ஏப்ரலில் அல்லவா கொண்டாடப்படுகிறது?)
ராமன்-சீதை திருமண நாள்: கி.மு. ஏப்ரல் 7, 7307
ராமன் வனவாசம் புறப்பட்ட நாள்: கி.மு. நவம்பர் 29, 7306
ராவணனுடன் போர் தொடங்கிய நாள்: கி.மு. நவம்பர் 3, 7292
அயோத்தி திரும்பிய நாள்: கி.மு. டிசம்பர் 2, 7292
ராம பட்டாபிஷேக நாள்: கி.மு. டிசம்பர் 14, 7292

பயனுள்ள செய்தியோ இல்லையோ, இதை ஆய்வு செய்து தலையணை சைசில் புத்தகம் எழுதியவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. விண்ணியல் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ள முடிந்தது. கொஞ்சம் தான். அதற்கே தா தீ தோழரே.


பிற்சேர்க்கை: நியோவுக்காக