2009/11/27

தீப்பெட்டியில் கால எந்திரம்

போக்கற்ற சிந்தனை

தீப்பெட்டி அட்டைகளைச் சேகரித்தது நினைவிருக்கிறதா? எளியவரின் தபால்தலை, தீப்பெட்டி அட்டை என்பேன்.

நண்பர் அடிபட்டு மருத்துவமனையிலிருந்தார் என்றேனே, சிகிச்சைக்குப் பின் ஒரு மாதமாக வீட்டிலிருக்கிறார். கழுத்தில் ஒன்றை மாட்டிக் கொண்டு நிதானமாகச் சுற்றிச்சுற்றிப் பார்க்க வேண்டிய நிலை. எனக்கும் வேறு வேலை இல்லையா? முடிந்த போதெல்லாம அருகிலிருக்கும் அவரைச் சந்திக்கும் போக்கில் அவர் வீட்டு வரவேற்பரையிலிருக்கும் coffee-table book ஒன்றைப் புரட்டிக் கொண்டிருப்பேன். அவர் குனியவோ திரும்பவோ முடியாமல் சொகுசு நாற்காலியில் என் எதிரே அமர்ந்து கொண்டு, இன்சூரன்சு இல்லாமல் இடித்துத் தள்ளியவனின் பரம்பரையைக் கலர் கலராகத் திட்டிக் கொண்டிருப்பார். ஒரு கையால் புத்தகம் புரட்டிப் படிக்க வேண்டிய நிலையை நினைத்து நான் இன்னும் சில கெட்ட வார்த்தைகளைப் போட்டுக் கொடுப்பேன். திட்டுப் படலம் நின்றதும், சில சமயம் அவரைக் கிண்டல் செய்வதற்காக அவர் பின்னால் நின்று கொண்டு அழைப்பேன். கழுத்தைத் திருப்பமுடியாமல் திட்டிக்கொண்டே நூற்றெண்பது டிகிரி திரும்புவார். திரும்பிய பின் இன்னும் திட்டுவார். நன்றாகப் பொழுது போனது. (ஹி..ஹி.. இரண்டாவது பதிவுங்க, ஸ்ரீராம்).

அவரைச் சந்திக்கத்தான் சென்றேன் என்றாலும், அந்த coffee-table book என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. தீப்பெட்டி அட்டைகளைப் பற்றிய பீமசேனன் சைஸ் புத்தகம். அத்தனை உலக நாடுகளிலிருந்தும் இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்துச் சேகரித்தத் தீப்பெட்டி அட்டைகளின் படங்களை வெளியிட்டு, சமகால வரலாறு மற்றும் கலாசாரத்தைப் பற்றி எழுதியிருந்தார்கள். Fascinating. நாகேஷ் பாணியில், simply wonderful... hello? simply wonderful!

தீப்பெட்டி அட்டைப்படங்களில் தமிழ்நாட்டின் பங்கு பிரமிக்க வைத்தது. கேள்விப்படாத அல்லது கேள்வி மட்டுமே பட்டிருந்த ஊர்களின் பெயர்களைப் பார்த்தபோது, உள்ளம் முறையாகச் செய்த திருவாதிரைக் களி போல் நெகிழ்ந்து போனது. (எங்கள் வீட்டில் செய்த களியை அம்மா அந்தப்பக்கம் நகர்ந்ததும் எடுத்து யாருக்கும் அடிபடாதபடி வேலி ஓரமாக உருட்டி வைப்போம். நாங்கள் தான் அப்படியென்றால் பக்கத்து வீட்டிலும் அதே கதை. எங்கள் வீட்டுப் பொது வேலிச்சுவரின் தோற்றம்.)

தீப்பெட்டி அட்டைப்படங்கள் தான் சிவகாசியின் அச்சுத் தொழில் வளரக் காரணம் என்று புரிந்தது. குடிசைத் தொழில் என்று நிறைய படித்திருந்தாலும், முதல் முறையாக குடிசைத் தொழிலின் பரந்த பொருளாதார பாதிப்பைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. தீப்பெட்டி அட்டைப்படங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்தவற்றையொட்டி வடிவமைக்கப்பட்டிருந்தன. சுதந்திரப் போராட்டத்தை ஒட்டியும் சுதந்திர இந்தியாவின் முதல் வருடங்களைப் பற்றியும் தீப்பெட்டி அட்டைகள் வழியாக அறிந்துகொள்ள முடிந்தது. பூக்கள், விலங்குகள், பெண்கள், பறவைகள், திருவிழாக்கள், அரசியல், சமூகம், கடவுள் என்று விதவிதமாகத் தீப்பெட்டி அட்டைகள் கதை சொல்கின்றன.

அந்த நாளில் தீப்பெட்டி அட்டைகளால் இரண்டே உபயோகம் தான். 'மேச்சீஸ் விளையாடலாம்' என்று கிளம்பி பேந்தா கோலி, கிட்டிப்புள், மரக்குரங்கு விளையாட்டுக்களில் பணத்துக்குச் சமமாகப் பந்தயம் கட்டி விளையாடப் பயன்பட்டது. இரண்டாவது உபயோகம், புது நட்புக்களை வலுப்படுத்திக் கொள்வது. என்னிடம் 'லால் பகதூர் சாஸ்திரி மேச்சீஸ் இருக்கு, உன்னிடம் என்ன இருக்கு?' என்று சொல்லி நட்பு ஏற்படுத்திக்கொண்டு மழை நாட்களில் வீட்டுக்குள் பெரியவர்களின் சீட்டு விளையாட்டுக்கு இணையாக மேச்சீஸ் ட்ரேடிங்! ebayல் இன்றைக்கு நான்கு டாலர் வரை ஏலம் போகிறது தீப்பெட்டி அட்டை!

தீக்குச்சியை உலகுக்கு வழங்கிய நாடு - ஒன்று இரண்டு மூன்று... தெரியாவிட்டால், இதோ: சைனா. கிழக்கிலிருந்து மேற்கே போன கண்டுபிடிப்புகளுள் ஒன்று. இன்றைய தொழில்நுட்பங்களைப் பார்க்கும் பொழுது தீப்பெட்டியை மிகச்சாதாரணமாக எண்ணத் தோன்றும். ஆனால் இந்த எளிய தொழிலில் தமிழ்நாட்டு மக்கள் புகுத்திய புதுமை உலகக் கவனத்தை ஈர்த்தது. இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கம் வரை ஸ்வீடன் நாடு தான் தீப்பெட்டித் தொழிலில் முன் நின்றது. 1920 வாக்கில் தொடங்கி, படிப்படியாக சிவகாசி தீப்பெட்டி ஏற்றுமதியில் முக்கிய அந்தஸ்தைப் பெற்றது. சிவகாசி வளர வளர தீப்பெட்டித் தொழிலில் ஸ்வீடன் நாட்டில் வேலைவாய்ப்பு குறைந்து ஏறக்குறைய அழிந்து போனது. சிவகாசி மற்றும் தமிழ்நாட்டுத் தீப்பெட்டி குடிசைத் தொழிற்சாலைகள் உலகமெங்கும் ஏற்றுமதி செய்தார்கள். அந்த நாளைய அவுட்சோர்சிங்? (சோறு தண்ணீர் போடாமல் தொழிலாளிகளைக் கொத்தடிமையாகச் சிறுவர்களையும் சேர்த்து வேலை வாங்கியதாகச் சொல்லப்படும் தீப்பெட்டித் தொழிற்சாலை முதலாளிகளைப் பற்றி ஒன்றும் எழுதக் காணோம்!).

ஒரு வருடத்துக்கு 243 பிலியன் தீக்குச்சிகள் சிவகாசியில் தயாராகின்றனவாம். (243,600,000,000. இது எத்தனை கோடி? கோடிக்கணக்குத் தெரிந்தவர்கள் உதவி! உதவி!) இவையத்தனையும் கைத்தொழிலாம். இதைத் தவிர இயந்திரம் உபயோகித்து கல்கத்தா போன்ற இடங்களில் தீக்குச்சிகள் தயாரிக்கிறார்களாம். எந்த வித இயந்திரமும் இல்லாமல் கையை நம்பிப் பிழைக்கும் சிவகாசித் தொழிலாளிகளைக் கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது. என்றாலும், இயந்திர உதவி பெறக்கூடாதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

தீப்பெட்டி அட்டை இன்றைக்கு இன்னொரு பெருமையை தமிழ்நாட்டுக்கு (சிவகாசிக்கு) வழங்கியிருக்கிறது. வண்ண அச்சுத்துறையில் உலகத்திலேயே இரண்டாவது இடத்தை சிவகாசி பெறுவதற்குக் காரணம் தீப்பெட்டி அட்டை அச்சுக்கலை தான். குடிசைத்தொழிலை ஆதரிக்க வேண்டும் என்று சொன்ன அரசியல்வாதி யார்? காந்தியா? (காந்தி அரசியல்வாதியா?). சொன்னவரையும் செய்து காட்டியவரையும் (சிவகாசி நாடார்கள்) கும்பிடுகிறேன்.

சிலத் தீப்பெட்டி அட்டைகளைப் பார்ப்போம்.

முதலாவதைச் சேகரித்தது நினைவிருக்கிறது. நாலு காசுக்கு விற்கப்பட்ட இரண்டாவது தீப்பெட்டியின் அட்டையைப் பாருங்கள். எத்தனை அற்புதமான வண்ணம்! நாலு பைசாவுக்கு தீக்குச்சி, தீப்பெட்டி, வண்ண அட்டைப்படத்துடன் எப்படி விற்க முடிந்தது? நாலு பைசாதானே? ஒரு வேளை நாலணாவா?


வில்லிப்புத்தூர் தீபலட்சுமிக்கும் இந்திக்காரப் பெண்ணுக்கும் எத்தனை வித்தியாசம்! தீபலட்சுமி முகத்தில் களையே காணோமே? சாமி கும்பிடுவதானால் இத்தனை சோகமா? சைனா லேடி ஜப்பான் லேடி போலிருக்கிறார். இரண்டாவது முறை பார்த்தால் கொஞ்சம் பயமாக இல்லை? லேடியா கேடியா?


நிச்சயம் இதில் ஒன்றைச் சேர்த்திருக்கிறேன். அரிவாளை எடுத்துக் கொண்டு சிறுத்தையை விரட்டும் உழவன் எம்ஜிஆராக இருந்தாலொழிய அன்றைக்கு சிறுத்தைக்குப் பசி தீர்ந்தது என்பேன். என்ன? முறத்தை எடுத்துப் புலியை விரட்டினாளா தமிழ்ப்பெண்? அரிவாள் எவ்வளவோ மேல் என்கிறீர்களா?


வெங்கடாசலபுரம், சத்தியநகரம், புதுச்சுராங்குடி... இந்த ஊர்ப் பெயர்களையெல்லாம் நான் தெரிந்துகொண்டிருக்க வேறு வாய்ப்பே இல்லை. தங்கப்பூ தமிழ்ப்பூவென்பதால் புதுச்சுராங்குடி மேல் மையல் தோன்றினாலும், வெங்கடாசலபுரப் பூக்களைப் பாருங்கள் - என்ன கலர், என்ன கலர்! பூவைச் சொன்னேன்.


பலவகைப் பூக்களை நிறையத் தீப்பெட்டி அட்டைகளில் பார்த்தாலும், மொழிபேதமில்லாமல் தாமரை தான் சூபர் பூ போலிருக்கிறது. வடமொழிக் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது. பூக்களில் தாமரை தான் உயர்ந்ததாம். 'புஷ்பேஷூ கமலம், புருசேஷூ விஷ்ணு, நாரீஷூ ரம்பா, நகரேஷூ காஞ்சி' என்று தொடங்கும் பாடல். ஐ! வடமொழிக்கவிதையில் நம்ம ஊர் காஞ்சீபுரம்! காசியைத் தான் காஞ்சி என்று (ஏ)மாற்றிச் சொல்லிவிட்டார்கள் என்று என் வடமொழி ஆசிரியர்கள் சொன்னதும், இனிமேல் மாற்றமுடியாது ஆட்டம் குளோஸ் என்று வாதாடியதும் நினைவுக்கு வருகிறது. வடமொழிப் பாடலாசிரியர் யாரென்று நினைவில்லை - காளிதாசன்? நம்ம ஊர் கண்ணதாசன் வடமொழிக் கருத்தை இறக்குமதி செய்து 'மலர்களிலே அவள் மல்லிகை' என்று தமிழ்ப்படுத்தியதும் நினைவுக்கு வருகிறது. தாமரையா மல்லிகையா, எந்தப்பூ சொந்தப்பூ? எங்கள் ஓட்டு மல்லிகைக்கே.

சாத்தூர், மாஞ்சேரி, கந்தசங்கடவு என்று புது ஊர்ப்பெயர்களைப் பார்த்தாலும், சென்னையைத் தீப்பெட்டி அட்டையில் பார்த்ததும் சிலிர்த்தேன். சென்னையில் தீப்பெட்டித் தொழில் இருந்ததா இல்லை சும்மா பேருக்குப் பெயரா? கிளிவிளக்கிலிருந்து டேபிள் லேம்ப் வரை பரிணாமத்தைப் பாருங்கள். ராமலிங்கபுரத் தீப்பெட்டி அட்டையில் மின்னொளிக் கம்பம் பழைய நினைவுகளைக் கொண்டு வருகிறதே சாமி? விளக்கடியில் நின்றபடி நண்பர்களுடன் அரட்டையடித்த அந்த நாட்கள்!

தேடித்தேடிப் பார்த்தும் பொங்கல், தீபாவளி தவிர வேறெந்தப் பண்டிகையையும் காணோம். தீப்பெட்டி அட்டைகள் பிள்ளையார் சதுர்த்தியை மறந்ததேன்? வடநாட்டில் 'கண்பதி பப்பா' என்று கூத்தாடுவார்களே, ஒரு தீப்பெட்டி அட்டை போடும்படி சொல்லக் கூடாதோ?வானொலி, தொலைபேசியின் வடிவமைப்பு வளர்ச்சியை நினைவூட்டும் அட்டைகள். அந்த மின்விசிறியின் நடுவில் இருக்கும் கண்ணைப் பார், சிரி! (அல்லது நடுங்கு).
நிறையக் கடவுள்கள் தீப்பெட்டி அட்டையில் தோன்றினாலும், கிருஷ்ணர் தான் அதிக ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெறுகிறார். மறுபடியும் புருசேஷூ விவகாரம். புத்தரைத் தீப்பெட்டி அட்டையில் பார்ப்பது சற்றே பேதமான நகைச்சுவையாக இருக்கிறது. தோழர்களே, இப்போது இந்த புத்தர் தீப்பெட்டியிலிருந்து குச்சியெடுத்துக் கொடும்பாவிகளைக் கொளுத்துவோம்.

திருநெல்வேலி ஜங்சன், புதுக்கோட்டை, நாமக்கல், கோவில்பட்டி என்று பரவுகிறது தீப்பெட்டித் தொழில். சுதந்திரப் போராட்டம், ஜஸ்டிஸ் கட்சி கலைப்பு போன்ற நிகழ்ச்சிகளைத் தீப்பெட்டி அட்டையில் சித்தரித்திருக்கிறார்கள். நேதாஜியை இன்றைக்கு யாராவது நினைத்துக் கொள்கிறார்களா?

மூன்று பைசா நாணயத்தை எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறேன் - படத்தில் தான். இரண்டு பைசா ஒரு பைசா நாணயங்கள் இருக்கும் போது, மூன்று பைசா நாணயத்துக்கு என்ன அவசியம் என்று கேள்வி கேட்டு பதில் சொன்ன தொடக்கப்பள்ளி ஆசிரியர் நினைவுக்கு வருகிறார். அவர் சொன்ன பதில்: பார்ப்பனர்கள் வேலை. மூன்று பைசாவைத் தயாரிக்காமலிருந்தால் எத்தனை சேதத்தைத் தவிர்த்திருக்கலாமென்று நிறைய நினைத்திருக்கிறேன்.


குட்டி மிருகக்காட்சி சாலை பாருங்கள். நிறைய புது ஊர்ப்பெயர்கள் என்றாலும், நம்ம ஊர் காரைக்காலுக்கு ஜே! அங்கே கூடத் தீப்பெட்டித் தொழில் இருந்ததா என்ன?பீரங்கி அட்டை சேகரித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். வாளைப் பார்த்தால் வெண்டைக்காய் மாதிரி இல்லை?
தாயின் மணிக்கொடி கொஞ்சம் சிலிர்க்க வைக்கிறது. சுதந்திரத்துக்கு முந்தைய அட்டைகள் என்றாலும், நடுவில் இருப்பது கொடியைக் கொளுத்துவது போல் தோன்றுகிறது. அல்லது நாடே சுதந்திர வெறியில் தீப்பற்றி எரிகிறது என்ற பாலசந்தர் பாணி டைரக்சனா?


சுதந்திரம் கிடைத்த முதல் ஆண்டு விழாவை தீப்பெட்டி அட்டையில் கொண்டாடியிருக்கிறார்கள். நாட்டுப்பற்று வாழ்க.
ரொட்டி, காபி என்ற மேல்நாட்டு இறக்குமதிகள் எந்த அளவுக்குப் பரவியிருக்கின்றன பாருங்கள். மேலையர் ஆதிக்கத்துக்கு முன் நாம் காபி குடித்தோமா? 'காபியைச் சீக்கிரம் கண்ணுல காட்டுறா' என்று காலையில் பொறுமையிழக்கும் என்னருமை அம்மா, உனக்கு இருபது சந்ததி மூதாதையர் காபியே குடிக்கவில்லை தெரியுமோ?
அசர வைத்தது - ஸ்வீடன் நாட்டுத் தீப்பெட்டி அட்டை.


ஸ்ரீராம் ஸ்பெஷல்.
புத்தகம்:
Matchbox Labels, Jane Smith