கடைசி வரியை முதலில் படிப்பவர்கள் வாயிலும் மூக்கிலும் சிவப்பாகத் திரவம் ஏதேனும் வரலாம்.
    படியிறங்கும் பொழுது கவனித்தேன். நீச்சல் குளத்தில் நாலைந்து பேர் இருந்தார்கள். இரண்டு பேராவது பெண்கள் போலிருந்தார்கள். கவனித்தபடி இறங்கினேன்.
விரிசல் விழாத கான்க்ரீட் தரையின் நடுவே விரித்து வைத்தக் குடை வடிவில் அழகான நீச்சல் குளம். குளத்தையொட்டி ஏழெட்டு சாய்வு நாற்காலிகள். அருகே ஏழெட்டு வட்ட மேசைகள்.
தோளில் இருந்த டர்கி துண்டை அருகே இருந்த மேசையில் வைத்து, ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்தேன். கால்களை உயர்த்தி நீட்டிக் கொண்டேன், ஆகா! சுகம்! கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். பகல் தூக்கத்தில் நேரம் போனதே தெரியவில்லை.
மதியம் சரியானச் சாப்பாடு. ஒரு கட்டு கட்டியதை எண்ணி நிறைவோடு.. என் திறந்த வயிற்றைத் தடவிக் கொண்டபோது அருகே நிழலாடியது. என்னைப் போல் ஒருவர்.
மேல் துண்டை எறிந்து விட்டு என்னருகே இருந்த சாய்நாற்காலியில் அமர்ந்து கொண்டார். பட்டுக் கால்சட்டை அணிந்திருந்தார். கழுத்தில் தங்கச் சங்கிலி. ரேபேன் கறுப்புக்கண்ணாடி. கையில் அணிந்திருந்தது நிச்சயம் பாதேக் பிலிப் ஆக இருக்கும். புன்னகைத்தார். பதிலுக்கு நானும் புன்னகைத்தேன். "மெக்சிகோ சொர்க்கமா அல்லது சொர்க்கம் மெக்சிகோவா?" என்றார். மறுபடி புன்னகைத்தேன்.
"சிகரெட்?" என்றபடி என்னிடம் ஒரு பாகெட்டை நீட்டினார்.
எம்பெசி சிகரெட். இம்பீரியல் புகையிலைக் கம்பெனியின் அதிக விலை சிகரெட்! பளபளவென்று மின்னிய புத்தம் புது பாகெட். சாதா பார்லிமென்ட் சிகரெட் பிடிக்கும் என் தரத்துக்கும், ஒரு பாடாவதி உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில இலக்கியம் சொல்லித்தர எனக்குக் கிடைக்கும் சம்பளத்தினால் சேர்த்த வசதிக்கும், மிக மீறியது. "இங்கிலாந்திருந்து இறக்குமதி செய்கிறேன். ப்லீஸ். எடுத்துக் கொள்ளுங்கள்" என்றவரை நன்றியுடன் ஏறிட்டு, ஒன்றை உருவிக்கொண்டேன். உதட்டில் வைக்கும் போதே மணந்தது. மென்மையாக வறுத்துச் சுருட்டப்பட்ட உயர்தரப் புகையிலை. சிகரெட் மணத்தை உள்ளிழுத்தேன். பார்லிமென்ட் சிகரெட்டை செருப்பால் அடிக்க வேண்டும்.
என் முகத்தருகே ஒரு லைட்டரை நீட்டிய பக்கத்து நாற்காலிக்காரர், "ஜேம்ஸ்" என்றார். பெற்றுக்கொண்டு என் பெயர் சொன்னேன். லைட்டர் புதுமையாக இருந்தது. பிகினி அணிந்த நடிகையின் படம் போட்ட லைட்டர். பக்கவாட்டிலிருந்த சிறிய விசையைக் கீழிறக்கி லைட்டரைப் பற்ற வைத்தபோது, பிகினி கழன்று இறங்கியதைப் பார்த்தேன். சிகரெட்டைப் பற்ற வைக்காமல் உதட்டைச் சுட்டுக் கொண்டு அவசரமாகவும் அசடாகவும் நெளிந்தேன்.
"அட்டகாசமா அவுக்குறா இல்லே? ஐந்து கோடைகளுக்கு முன் பெய்ரூட் போன போது கிடைத்தது.. மரியா பீலிக்ஸ். எப்படி பிகினி கழல்கிறது பாருங்கள்! இதே மாதிரி லைட்டர் ஏழெட்டு வைத்திருக்கிறேன். ஜீனா லோலப்ரிஜிடா, சிட் செரிஸ், ஜேன் மேன்ஸ்பீல்ட், ஸேரா மான்டியல், கேரொல் பேகர், மர்லின் மன்ரோ.. எல்லாருமே எனக்காக பிகினி கழற்றுவார்கள்.."
"யு மீன்.. லைட்டரில்" என்றேன். "நிறைய விலையோ?"
"ஆமாம்.. ஆனால் எல்லாமே பந்தயத்தில் ஜெயித்தது.."
"பந்தயம்?"
"பெட்.. கேம்பில்.. வேஜர்.. ஏதோ ஒரு வகை சூதாட்டம்..."
"சூதாடி லைட்டர் சேர்க்கிறீங்களோ?" இந்த முறை சுட்டுக்கொள்ளாமல் பற்றவைத்துக் கொண்டேன்.
"சம்திங் எல்ஸ்.. இப்பல்லாம் பந்தயத்துல ஜெயிச்சு சேகரிக்கறது வேறே ஐட்டம்" என்றபடி தன் இருக்கைக்குச் சென்றார்.
சிகரெட் புகையை உள்ளிழுத்து மெதுவாக வெளியேற்றினேன். இதம். இதம். இதான் இதம். மறுபடி ஆழமாக உள்ளிழுத்து மெதுவாக வெளியேற்றிய போது புகை வளையங்கள் ஒன்றையொன்று மேலேறித் துரத்தி காற்றில் கலந்து கலைவது இலவச ஓவியக் கண்காட்சி பார்ப்பது போலிருந்தது. சிகரெட் தீர்ந்ததும் திரும்பி, "நன்றி ஜேம்ஸ்" என்றேன். தலையாட்டினார்.
அமைதியாக இருவரும் எங்கள் எதிரே தெரிந்த நீச்சல்குள இளசுகளைப் பார்த்தபடி இருந்தோம். ஆண்களும் பெண்களும் ஒருவரையொருவர் துரத்தி நீர் தெளித்துப் பெருத்த ஓசையுடன் விளையாடினார்கள். நீச்சல் அடித்தார்கள். அவ்வப்போது வெளி வந்த பெண்கள் பிகினிக்களை சரி செய்து மீண்டும் குளத்தில் இறங்கியது, இன்னமும் படிக்காத புத்தகத்தின் எதிர்பார்ப்புகளைக் கிளறியது.
"அமெரிக்கர்களாக இருக்க வேண்டும். அதான் இப்படி கூத்தடிக்கிறார்கள்.." என்றார்.
"நீங்கள் அமெரிக்கர் இல்லையா?"
"நோ.. நான் பொலிவியாவைச் சேர்ந்தவன்.. அமெரிக்காவிலும் ஜெர்மனியிலும் வளர்ந்தவன்.."
"அமெரிக்கர்களை வெறுக்கிறீர்களா?"
"நோ நோ.. அமெரிக்கர்களை வெறுக்கவில்லை. இளைஞர்களை வெறுக்கிறேன்.. எப்படியெல்லாம் வாழ முடிகிறது.."
"பொறாமை?"
"ஆமாம்.. என் இளமைக் காலத்தில் இவர்களைப் போல் கூத்தடிக்க முடியவில்லையே என்றக் கடுப்பு" என்றபடிச் சிரித்தார்.
நீந்தி ஓய்ந்த ஒரு இளைஞன் எழுந்து எங்களருகே வந்து ஜேம்ஸின் பக்கத்து நாற்காலியில் சாய்ந்தான். சில நொடிகளில் எழுந்து வந்து எங்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு மறுபடி சாய்ந்தான். சதையே இல்லாத அவனுடைய வயிற்றுப் பகுதியைப் பார்த்த போது மதியம் சாப்பிட்ட நிறைவு, ஏனோ நிறைவாகத் தோன்றவில்லை. தொப்பை சினிமா நடிகர் போல் மூச்சை உள்ளிழுத்து இருக்க முயன்று தோற்றேன்.
"இன்னொரு சிகரெட்?" என்றபடி ஜேம்ஸ் என்னிடம் பாக்கெட்டை நீட்டிய போது வெட்கமில்லாமல் எடுத்துக் கொண்டேன். இளைஞனிடம் நீட்ட அவனும் ஒரு சிகரெட் எடுத்துக் கொண்டான். ஜேம்ஸ் கொடுத்த லைட்டரை எடுத்துப் பற்ற வைத்தபோது தவறிக் கீழே விழுந்து விட்டது. அதற்குப் பிறகு எத்தனை முயன்றும் பற்ற வைக்க முடியவில்லை. இளைஞனும் ஏதோ செய்து பார்க்க எதுவும் பயனில்லாமல் போனது. லைட்டரை உடைத்து விட்டக் குற்ற உணர்வில் ஜேம்ஸைப் பார்த்தேன். "பரவாயில்லை என்னிடம் தீப்பெட்டி இருக்கிறது" என்ற ஜேம்ஸ் தன் பட்டுக் கால்சட்டைப் பையிலிருந்து ஒரு தீப்பெட்டியை எடுத்து நீட்ட, இளைஞன் அதை வாங்கிக்கொண்டு "அலோ மி" என்றான். தீக்குச்சி ஒன்றை எடுத்து ஒரே கையில் தீப்பெட்டி தீக்குச்சி இரண்டையும் வைத்துக்கொண்டு சொடக்கு போடுவது போல் ஏதோ செய்தான். தீக்குச்சி பற்றிக் கொண்டு சீராக எரிந்தது வியப்பாக இருந்தது. சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு "நன்றி" என்றேன். ஜேம்ஸிடம் நெருப்பை நீட்டியபோது, "எங்கே இன்னொன்றை அதே போல் பற்ற வை?" என்றார். இளைஞன் இன்னொரு தீக்குச்சியை அதே போல் ஒரு கை சொடக்கு போட்டுப் பற்ற வைத்தான்.
"நல்ல வேடிக்கை" என்றார் ஜேம்ஸ். "மறுபடி செய்ய முடியுமா?"
"நோ பிக் டீல். தீக்குச்சியைத் தீப்பெட்டியின் பக்கவாட்டில் முத்தமிடுறாப்புல இதோ இப்படி வச்சுக்கிட்டு ஒரே சொடுக்.. பத்திக்கிச்சு பாருங்க" என்றபடி ஜேம்ஸிடம் தீயை நீட்டினான்.
"இம்ப்ரெஸிவ்" என்றபடி சிகரெட் பற்றவைத்துக் கொண்டார் ஜேம்ஸ். "குச்சி உடையாமல் கீழே விழாமல் தீப்பற்றுமா?"
"தவறாமல்" என்றான் இளைஞன். மறுபடி அதே போல் செய்து தன் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான்.
"அப்படியா? ஒரு முறை கூட நீ தவறியது கிடையாதா?"
"தவறியதே இல்லை"
"உண்மையாவா? அப்போ ஒரு பந்தயம் வைக்கலாம் போலிருக்குதே?"
"என்ன பந்தயம்?" என்றான் இளைஞன்.
"இப்படி நீ செய்தது போல் தீப்பெட்டியைக் கீழே வைக்காமல், ஒரே கையால் தீக்குச்சியை எடுத்து உரசித் தீப்பற்ற வைக்க வேண்டும்"
"சரி"
"ஒரு தடவை இல்லை. தொடர்ந்து பத்து முறை செய்ய வேண்டும்"
"சரி"
"வேண்டாம். உன்னால் முடியாது"
"என்ன பந்தயம்?" என்றான் இளைஞன்.
"நீ என்ன பந்தயம் கட்டுவாய்?" என்றார் ஜேம்ஸ்.
"நான் மாணவன்.. என்னிடம் நிறையப் பணமெல்லாம் கிடையாது. பத்து சென்ட்?"
"நோ நோ நோ" என்றார் ஜேம்ஸ். என்னைப் பார்த்தார். பிறகு இளைஞனைப் பார்த்தார். "பந்தயம் பரிசுக்குத் தகுதியானதாக இருக்க வேண்டும். பரிசும் பந்தயத்துக்குத் தகுதியானதாக இருக்க வேண்டும்"
"ஓகே.. அப்ப நீங்க சொல்லுங்க.. என்ன பணயம்?" என்றான் இளைஞன்.
"அதோ தெரியுதே.. அதான் என் ரூம்" என்றார் ஜேம்ஸ். "ரூம் கீழே.. பார்க்கிங் கேனபி கீழே நிற்குதே.. கரும்பச்சை நிறக் கார்."
"ஆமாம்.. புது கேடிலேக்"
"அதான் பணயம்".
கேட்டுக்கொண்டிருந்த நான் அதிர்ந்தேன். இளைஞனும். "ஏய்.. என்ன இது? புதுக் காரைப் பந்தயத்தில் பணயமாக வைக்கிறாயே?"
"ஆமாம். பந்தயத்துக்கேற்ற பணயம்"
"என்னிடம் அது போல் எதுவும் இல்லை. மிஞ்சிப் போனால் ஒரு டாலர் கட்டுவேன் அவ்வளவுதான் என்னால் முடியும். என்னிடம் இருப்பதும் அவ்வளவே".
ஜேம்ஸ் அவன் தோளைத் தட்டிப் புன்னகைத்தார். "உன்னிடம் இல்லாததை, உனக்குச் சொந்தமற்றதைப் பணயமாக வைக்க நானே அனுமதிக்க மாட்டேன். ஆனால் உன்னிடம் ஒரு டாலருக்கு மேல் இருக்கிறது. உண்மையைச் சொன்னால்.. டாலரால் மதிப்பிட முடியாதது இருக்கிறது. என் கேடிலேக் காருக்கு இணையானதாக நான் கருதுவது இருக்கிறது" என்றார்.
எனக்குள் ஒரு விபரீத உணர்வு தலையெடுப்பதை உணர்ந்தேன். என்ன சொல்கிறார் ஜேம்ஸ்? இளைஞனும் புதிருடன் பார்த்தான். "என்ன சொல்கிறீர்கள்?"
ஜேம்ஸ் அமைதியாகப் பேசினார். "நான் தோற்றால் இந்த கேடிலேக் கார் உன்னுடையது. நீ தோற்றால்.. "
"தோற்றால்.."
"நீ தோற்றால், உன் இடது கை குட்டிவிரலை எனக்கு வெட்டிக் கொடுத்துவிட வேண்டும்.."
"என்ன?"
"ஆமாம். உன் இடது கை சிறுவிரலை நான் எடுத்துக் கொள்வேன். அதாவது நீ தோற்றால்.."
"விளையாடறீங்களா? விரலை வெட்டிக் கொடுக்கணுமா?"
"நான் விளையாடவில்லை. நீயும் வெட்டித்தர வேண்டாம்" என்ற ஜேம்ஸ் ஒரு கணம் தயங்கி, "நானே வெட்டியெடுத்துக் கொள்வேன். விரலைத் தர வேண்டும் அவ்வளவுதான் பந்தயம்" என்றார்.
"பைத்தியக்காரத்தனமாக இருக்கிறதே?"
"உனக்குப் பயமாக இருந்தால் வேண்டாம்.. ஆனால் நீதானே சொன்னாய்.. தீப்பற்றத் தவறியதே இல்லை என்று..?"
"நிச்சயமாக. ஆனால் விரலை வெட்டித் தருவது.."
"நீ வெட்டித்தர வேண்டியதில்லை. நானே வெட்டிக்கொள்வேன்.."
"எப்படி வெட்டுவீர்கள்?" என்றேன். தேவையற்ற கேள்வி என்பது கேட்ட கணமே புரிந்தது. பந்தயத்தில் நானா கலந்து கொள்ளப் போகிறேன்?
"பந்தயத்துக்கு ஒப்புக்கொண்டால் விவரம் எல்லாம் சொல்வேன்.." என்றார் ஜேம்ஸ். இளைஞனிடம், "காரைத் தர நான் தயார். விரலைத் தர நீ தயாரா?" என்றார்.
"விபரீதமால்லே இருக்குது?" என்ற இளைஞன் தன் நாற்காலிக்குச் சென்றான்.
"விபரீதம் தான். ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அதான் பந்தயம். உனக்குப் பயமாக இருந்தால் வேண்டாம்.. புது கேடிலேக் காரை இழப்பது எனக்கு ஒரு பொருட்டில்லை.. உன் விரல் உனக்கு முக்கியம் என்பதும் புரிகிறது.. பயந்தால் பந்தயம் சிறக்காது.." என்றபடி தன் இருக்கையில் சாய்ந்து கொண்டார் ஜேம்ஸ்.
இளைஞன் அந்த இடத்தை விட்டு உடனடியாக விலகாமல், தன் விரல்களால் தாளம் போட்டபடி ஏதோ சிந்திப்பதைப் பார்த்துக் கலவரப்பட்டேன். ஜேம்ஸ் இளைஞனைத் தூண்டிவிட்டார் என்பதைப் புரிந்து கொண்டு நானும் சாய்ந்தேன். முட்டாள் இளமை! மூளையைக் கட்டாமல் இருக்க வேண்டுமே? இதென்ன இந்த மனிதர்.. விரலை வெட்டிக் கொள்வாராமே? இதான் இவர் பந்தயத்தில் சேர்க்கும் பொருளா? எனக்கு எல்லாமே விபரீதமாகப்பட்டது.
"எந்த வருடத்திய கார்?" என்றான் இளைஞன். 'கெட்டது போ!' என்று எண்ணினேன்.
"இந்த வருடத்தியது. ஸ்டீரியோபானிக் சவுன்ட் ரேடியோவுடன் முழு லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி. இதுவரை பதினேழு மைல் ஓட்டியிருக்கிறேன். வேண்டுமானால் பார்க்கிறாயா? பார்த்து உனக்குப் பிடித்திருந்தால் மட்டும் பந்தயத்துக்கு ஒப்புக்கொள்.. உன் இடது கை சிறுவிரலை நான் பார்த்துவிட்டேன்.. எனக்குப் பிடித்திருக்கிறது.. நாணயமாக உனக்கும் பணயம் பிடித்திருக்க வேண்டும்.." என்றபடி கார் சாவியை அவனிடம் நீட்டினார் ஜேம்ஸ்.
சில நிமிடங்கள் போல் தயங்கிய இளைஞன் திடீரென்று சாவியைப் பெற்றுக்கொண்டான். நீச்சல் குளத்தில் தன் சகாக்களுடன் ஏதோ பேச.. அனைவரும் குதூகலத்துடன் அவனைத் தொடர்ந்து காரைப் பார்க்கப் போனார்கள். பல நிமிடங்கள் அவர்கள் ஏதோ பேசும் ஓசை மட்டும் கேட்டது. இளமைப் புடைசூழ எங்களருகே வந்தான் இளைஞன். ஜேம்ஸிடம் சாவியைக் கொடுத்து, "நான் தயார்" என்றான்.
திடுக்கிட்டேன். "இது மடத்தனம் தம்பி" என்றேன்.
ஜேம்ஸ் என்னைப் பார்த்தார். "அதனால் என்ன? பெட் இஸ் எ பெட். இதோ இந்த இளைஞன் முழு சுய அறிவுடன் பந்தயத்துக்கு ஒப்புக்கொள்கிறான். நான் என் முழு சுய அறிவுடன் ஒப்புக்கொள்கிறேன். இதில் விபரீதம் இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே? வாழ்க்கையே ஒரு வகையில் விபரீதம் தானே?" என்றார். பிறகு இளஞனைப் பார்த்தார். "எனக்கும் சம்மதம். நானும் தயார்" என்றார்.
"விவரங்களைச் சொல்லுங்கள்" என்றான் இளைஞன்.
ஜேம்ஸ் அமைதியாகப் பேசத் தொடங்கினார். "தற்போது மெக்சிகோவுக்கு விடுமுறைக்காக வந்திருக்கும் கொலராடோவைச் சேர்ந்த ஜேம்ஸ் விட்டன்ப்ரிங்க் என்கிற அமெரிக்க பிரஜையான நானும்.. உன் பெயர் என்னப்பா?"
"ரிச்சர்ட் ப்ரீஸ். கால் மி ரிச்.. சிகாகோவிலிருந்து வந்திருக்கிறேன்..அமெரிக்கன்"
"ஓகே ரிச்" என்றார் புன்னகையுடன் ஜேம்ஸ். "தற்போது மெக்சிகோவுக்கு விடுமுறைக்காக மனைவியுடன் வந்திருக்கும் கொலராடோவைச் சேர்ந்த ஜேம்ஸ் விட்டன்ப்ரிங்க் என்கிற அமெரிக்க பிரஜையான நானும், நண்பர்களுடன் வந்திருக்கும் ரிச் என்கிற ரிச்சர்ட் ப்ரீஸ் எனும் சிகாகோவைச் சேர்ந்த அமெரிக்கப் பிரிஜையான இந்த இளைஞரும், முழு மனதுடன் சுய அறிவுடன் இயங்கிக் கலந்து கொள்ளும் பந்தயம். இதற்கு பாஸ்டனைச் சேர்ந்த ஜே பெனட் எனும் இவர் சாட்சியாகவும் ரெபரியாகவும் செயல்படுவார்".
அதிர்ந்தேன். "ஐயையோ.. என் பெயரை ஏன் இழுக்கிறீர்கள்?" என்றேன்.
"நீங்கள் தான் ரெபரி. நோ எஸ்கேபிங்" என்றனர் ஜேம்ஸும் ரிச்சும்.
ஜேம்ஸ் தொடர்ந்தார். "பந்தயத்தில் ஜேம்ஸ் என்கிற நான் என் தரப்பில் என்னுடைய கேடிலேக்.. அதோ தெரிகிற கரும்பச்சை நிற கேடிலேக் காரைப் பணயமாக வைக்கிறேன். காரின் சொந்தக்காரன் என்கிற முறையில் இதைப் பணயம் வைக்க எனக்கு முழு உரிமை இருக்கிறது. ரிச் எனும் இந்த இளைஞர் தன் இடது கைச் சிறுவிரலை, இவருக்குச் சொந்தம் என்ற உரிமையில், பணயமாக வைக்கிறார். பணயம் எனக்கும் இவருக்கும் சம்மதம்" என்றபடி எங்களை ஒரு முறை பார்த்தார். தொடர்ந்தார். "பந்தயம் என்னவென்றால்... இதோ இந்த தீப்பெட்டியில் இந்தத் தீக்குச்சியை இப்படி வைத்து ஒரு கையால் தீப்பற்ற வைக்க வேண்டும். வலது கையை மட்டுமே பயன்படுத்தித் தொடர்ந்து பத்து முறை தீக்குச்சியை எடுத்து உரசிப் பற்ற வைக்க வேண்டும். ரிச் வென்றால் என் கேடிலேக் கார் அவருக்குச் சொந்தம். ரிச் தோற்றால் அவருடைய இடது கை சிறுவிரலை எனக்குச் சொந்தமாக நான் வெட்டியெடுத்துக் கொள்வேன். இந்தப் பந்தய விதிகள் இருவருக்குமே சம்மதம். பந்தயம் அதோ தெரியும் என் அறையில் நடைபெறும்"
"ஏன்? இங்கேயே பந்தயத்தை நடத்தலாமே?" என்றாள் ஒரு பிகினி.
"ஏனென்றால் என் அறையின் அமைதி, இந்தப் பந்தயத்திற்குத் தேவை. மேலும் ரிச் தோற்றக் கணத்தில் உடனே விரலை வெட்டியெடுக்க என் அறையில் ஏற்பாடுகள் செய்ய முடியும். இங்கே முடியாது. சுத்தம் சுகாதாரம் காரணமாகவும் என் அறையில் பந்தயம் நடைபெறும்" என்றார் ஜேம்ஸ்.
"நான் தயார்" என்றான் ரிச்.
"நல்லது. நீ, நான், ஜே.. மூவர் மட்டுமே அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள். உன் நட்புக்குழாம் வெளியே இருக்க வேண்டும்"
"ஓகே"
இளைஞர்கள் ரிச்சர்டை கைகுலுக்கியோ முத்தமிட்டோ வரிசையாக விடை கொடுத்தார்கள். என்னை இழுக்காத குறையாக இழுத்துச் சென்றார் ஜேம்ஸ். மிகுந்த நம்பிக்கையுடன் எங்கள் முன்னே சென்றான் ரிச்.
    ஜேம்ஸின் இருப்பு, என் ஒரு அறை வாடகை இடத்தை விடப் பெரிதாக இருந்தது. படுக்கையறை, வரவேற்பறை, சமையலறை என்று வசதியாக இருந்தது. வரவேற்பறை நாற்காலியில் கிடந்த பெண்களுக்கான இரவு உடையை எடுத்து படுக்கையறைக்குள் எறிந்துவிட்டு வந்தார் ஜேம்ஸ். "என் மனைவியின் நைட்டி. ஒரு ஒழுங்கு கிடையாது. சோம்பேறி. எல்லாவற்றையும் கண்ட இடத்தில் அப்படியே போடுவாள். தன் விருப்பப்படி நடப்பவள். ஆனால் அதுவே எனக்கு அவளிடம் பிடித்த குணம். எங்களுக்குத் திருமணமாகி இருபத்தேழு வருடங்களாகின்றன. இருந்தாலும் அவளுடைய பழைய காதலனைப் பார்த்துவிட்டு வரப் போயிருக்கிறாள்.. ஸீ வாட் ஐ மீன்?" என்றார் சிரித்தபடி.
"வாவ்! நாங்கள் ஆறு பேர் தங்கியிருக்கும் இடம் இதைவிடச் சிறியது!" என்று வியந்தான் ரிச். "உங்கள் இருவரின்... விடுமுறைக்கே இத்தனை பெரிய வீடா?"
"வாழ்க்கை வாழ்வதற்கே" என்ற ஜேம்ஸ், "தயாரா?" என்றார். "சீக்கிரம் பந்தயத்தை முடித்துவிடலாம். என் மனைவியுடன் மாலை ஒரு விருந்துக்குப் போக வேண்டும். ஒரு வேளை நான் தோற்றால் மாலைக்குள் இன்னொரு கார் வாங்கியாக வேண்டும்" என்று பலமாகச் சிரித்தார்.
"நான் தயார். இப்போதே தொடங்கலாமா?" என்றான் ரிச்.
"கொஞ்சம் பொறுங்க" என்ற ஜேம்ஸ் என்னிடம் ஒரு அட்டையையும் பென்சிலையும் தந்தார். "ப்லீஸ்.. நீங்க இதில் ஒன்றிலிருந்து பத்து வரை எண்களை எழுதி... ரிச் ஒவ்வொரு முறை வெற்றி பெறும் பொழுதும் ஒரு எண்ணின் குறுக்கே கோடு போடுங்கள். கணக்கு வைக்க வேண்டும் பாருங்கள்?"
பெற்றுக் கொண்டேன். விந்தையான மனிதராக இருக்கிறாரே!
"இப்படி வாங்க" என்று எங்கள் இருவரையும் சுவரோரமாக இருந்த மரமேசையின் அருகே அழைத்தார். மேசையைச் சுற்றி மூன்று நாற்காலிகள். என்னை ஒரு மூலை நாற்காலியில் உட்காரச் சொன்னார். என் எதிர் மூலை நாற்காலியில் அவர் அமர்ந்தார். நடுவில் இருந்த நாற்காலியில் ரிச்சர்டை உட்காரச் சொன்னார். "நிற்க விரும்புகிறேன்" என்றான் ரிச்.
"உன் விருப்பம்" என்ற ஜேம்ஸ், ரிச்சர்டின் இடது கையை மேசை மேல் வைக்கச் சொன்னார். கை நீட்டினான் ரிச்சர்ட்.
ரிச்சர்டின் முழங்கையிலிருந்து உள்ளங்கை வரை மேசை மேல் குப்புற வைத்தார் ஜேம்ஸ். மேசையின் உள்ளறையை இழுத்து ஐந்து பொருட்களை எடுத்து மேசை மேல் வைத்து, உள்ளறையை மூடினார்.
முதலாவது ஒரு டக் டேப் சுருள். ரிச்சர்டின் முழங்கை அருகிலிலும் மணிக்கட்டின் அருகிலும் டேப்பினால் அழுத்தமாக மேசையுடன் ஒட்டினார். ரிச்சர்டின் விரல்களைப் பிரித்தார். சிறு விரலை வலப்புறமாகவும் மற்ற விரல்களை இடப்புறமாகவும் நகர்ந்த வரையில் நகர்த்தினார். பிறகு ரிச்சின் சிறுவிரல் தவிர பிற விரல்களை ஒன்றாக மேசையுடன் அழுந்த டேப் வைத்து ஒட்டினார். எஞ்சிய டேப்பை சுவரோரமாக ஒதுக்கி வைத்தார்.
இரண்டாவதாக ஒரு குடுவையை எடுத்துச் சிறுவிரலருகே வைத்தார். மூடியைத் திறந்தார். குப்பென்றது மணம்.
"என்ன அது?" என்றோம்.
"பார்மலின். பர்மல்டிகைட் கலவை. வெட்டிய விரலைப் பாதுகாக்கணுமே? அதாவது நான் வென்றால்.."
மூன்றாவது பொருள் ஒரு வெல்வெட் துணியில் சுற்றப்பட்டிருந்தது. வெளியே எடுத்தபோது சற்று நடுங்கிப் போனேன். மரத்தால் ஆன ஒரு சிறு கிலடின்! மரத்தால் செய்யப்பட்ட ∏ வடிவ கிலடின். இரண்டு பக்கவாட்டுச் சட்டங்களுக்கிடையே மிகக்கூர்மையான தங்கக் கத்தி! மேல் சட்டத்தின் நடுவில் ஒரு ஸ்ப்ரிங் விசை கத்தியை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தது. விசையைத் தட்டிவிட்டால் கத்தி படு வேகத்தில் கீழிறங்கி பச்சக்.. நினைக்கும் போதே அச்சமாக இருந்தது.
ஜேம்ஸ் கிலடினை ரிச்சர்டின் சிறு விரலின் அடிப்பகுதியில் உள்ளங்கைக்கு அருகே பொருத்தினார். "பயப்படாதே. இந்த விசை நகர்ந்தால் ஒழிய, கத்தி கீழிறங்காது. நீ தோற்கும் கணத்தில் தாமதிக்காமல் இந்த விசையை நகர்த்துவேன். ஸ்ப்ரிங் தளர்ந்து கத்தி வேகமாகக் கீழிறங்கி உன் விரலை.. இதோ இந்த இடத்தில் துண்டாக்கும். உடனே உன் உள்ளங்கைக்கும் விரலுக்கும் பார்மலின்.. வலி தெரிய சில நொடிகள் ஆகலாம். உனக்கு லேசாக மயக்கம் வரலாம். இதோ இந்தத் துணியினால் உடனே கட்டு போடுவேன்" என்று நாலாவது பொருளை எடுத்துக் காட்டினார்.
கடைசியாக ஒரு உறை போல் இருந்த பொருளைச் சுட்டி, "அது என்ன?" என்றான் ரிச்.
"ஓ.. அது உனக்குச் சேர வேண்டியது.. அதாவது நீ வென்றால்.." என்றபடி உறையைத் திறந்தார். கேடிலேக் காரின் இரண்டாவது சாவி, கேடிலேக் வண்டியின் பத்திரங்கள் இரண்டையும் எடுத்துக் காட்டினார். பிறகு இரண்டையும் உறைக்குள் வைத்துவிட்டு, ரிச்சர்டின் வலது கை ஓரமாக, என்னருகே, உறையை வைத்தார். "தயாரா?" என்றார்.
இந்த மனிதரின் தீவிரமும் விபரீத ஒழுங்கும் என் வயிற்றைக் கலக்கியது.
ஒரு நீண்ட பெருமூச்சை உள்வாங்கி வெளியேற்றிய ரிச்சர்ட், "நான் தயார்" என்றான். தீப்பெட்டியை சற்றே திறந்து உள்ளிருக்கும் தீக்குச்சிகள் தெரிய வலது கைக்குள் பொருத்திக்கொண்டான். தீப்பெட்டியை இரண்டு மூன்று முறை குலுக்கினான். தீக்குச்சிகள் தீப்பெட்டிக்கு சற்று மேலே நீட்டிக்கொண்டு நின்றன. "பந்தயம் தொடங்கலாம்" என்றான்.
"ஓகே.. ஜே.. நீங்க ஒன்றிலிருந்து பத்து வரை வரிசையாக எண்ணி.. ரிச்சர்ட் ஒவ்வொரு முறை தீப்பற்ற வைக்கும் பொழுதும் கணக்கு வைக்க வேண்டும். நான் ரெடி" என்று விசையருகே விரலை வைத்துத் தயாரானார் ஜேம்ஸ்.
எனக்கு நாக்கு ஒட்டிக்கொண்டு வார்த்தை வரவில்லை. கைவிரல் நடுங்கத் தொடங்கியதை அழுத்தி அடக்கிக் கொண்டேன். மெள்ள காற்றிழுத்து "ஸ்டார்ட்" என்றேன்.
வலது கையை ஒரு குலுக்கு குலுக்கினான் ரிச். தலை காட்டியத் தீக்குச்சி ஒன்றைச் சுட்டு விரலால் சீராக நீட்டி கட்டை விரலைச் சேர்த்து லாவகமாக வெளியே எடுத்த வேகத்தில் தீப்பெட்டியின் உரசல் பக்கமாகப் பொருத்தினான். சொடுக்கு போடுவது போல் ஒரு பாவனையில் சடுதியாகப் பற்றவைத்தான். தீக்குச்சி எரிந்து வெளிச்சம் காட்டியது. இரண்டு நொடிகள் போல் எரிய விட்டுத் தீயணைத்து, "ஒன்று, சரியா?" என்றான்.
ஜேம்ஸ் தலையாட்டினார். நான் அரைகுறையாக "ஒன்று" என்றேன். அட்டையில் ஒன்று என்ற எண்ணின் குறுக்கே கோடு போட்டேன்.
ரிச்சர்ட் மறுபடி தீப்பெட்டியைக் குலுக்கி தீக்குச்சி நீட்டி உரசல் பக்கம் பொருத்தி சொடக்கு போட்டு... தீப்பற்ற வைத்தான். இரண்டு நொடிகள் போல் எரிய விட்டு, தீயணைத்து, "இது இரண்டு" என்றான்.
மறுபடி மறுபடி மறுபடி மறுபடி... தீப்பற்ற வைத்து இரண்டு நொடிகள் போல் எரிய விட்டு... "ஆறு" என்றான்.
ரிச்சர்ட் இதை ஏதோ தினப்பழக்கம் போல் சற்றும் கலங்காமல் செய்தது எனக்கு வியப்பாக இருந்தது. ஒரு வேளை ஜெயித்து விடுவானோ? உள்ளூர எனக்கு ஒரு மகிழ்ச்சி உணர்வு பரவுவது போலிருந்தது. ஜேம்ஸ் விசையிலே குறியாக இருந்தார்.
அடுத்து இரு முறை பற்ற வைத்து எரியவிட்டு, "இத்தோடு எட்டு" என்றபோது ரிச்சர்டின் குரலில் வெற்றியின் ஆணவம் மெள்ளக் குடியேறுவது போல் தோன்றியது. அட்டையைப் பார்த்தேன். அவசரமாக ஏழு மற்றும் எட்டு எண்களின் குறுக்கே கோடு போட்டேன். சே! என் பொறுப்பைக் கவனிக்காமல்.. என்று என்னைக் கடிந்து கொண்டேன்.
அதற்குள் இன்னொரு முறை பற்ற வைத்து அணைத்து, "இது ஒன்பது" என்றான் ரிச்சர்ட்.
அப்பொழுது அறைக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார் ஒரு பெண். நடுத்தர வயது. அழகாக இருந்தார். எங்களைப் பார்த்துவிட்டு, "அடக்கடவுளே!" என்று கூவினார். வேகமாக ஓடி வந்து இடது முழங்கையால் ஜேம்ஸை நாற்காலியிலிருந்து இடித்துத் தள்ளினார். வலது கையினால் கிலடினை எடுத்து எறிந்தார். "என்ன நடக்குது இங்கே?" என்றுக் கடிந்தார். ஒட்டியிருந்த விரல்களை டேப்பிலிருந்து விடுவித்தார். முழங்கையில் கட்டியிருந்த டேப்பைப் பிய்த்தெடுத்தார். "ஜேம்ஸ்.. ஜேம்ஸ்... யூ இடியட்.. இடியட்.." என்று ஜேம்ஸை அடிக்கவே போய்விட்டார்.
நானும் ரிச்சர்டும் செய்வதறியாது திகைத்தோம். ரிச்சர்ட் தவறவிட்டிருந்த தீப்பெட்டியின் குச்சிகள் மேசையிலும் தரையிலும் பரவிக்கிடந்தன.
"ஹேய்.. நான் ஜெயித்துக் கொண்டிருந்தேன்.." என்று மெள்ள குரலெழுப்பினான் ரிச்சர்ட்.
"ப்லீஸ்.. உட்காருங்கள்" என்று எங்களை அமைதிப்படுத்த முயன்றார் பெண்மணி.
    உட்கார்ந்தோம். ஜேம்ஸை இழுத்து வந்து தன் வலப்புறத்தில் எங்களெதிரே உட்கார வைத்தார்.
"நான் ஈவா. ஜேம்ஸின் மனைவி. என் கணவர் செய்த செயலுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவருக்கு மன நோய். இது போன்ற விபரீத சூதாட்ட விளையாட்டுக்களில் தீவிரமாக ஈடுபடும் மன நோய். கொஞ்ச நாளாகக் குணப்படுத்தி வருகிறேன் என்றாலும் இப்படி சில சமயம் நான் என் வேலையாகப் போகும் பொழுது பழக்கத்தில் இறங்கி விடுகிறார்..."
"வெறும் பந்தயம்..." என்று முணுத்த ஜேம்ஸை ஈவா சற்றும் தயங்காமல் எழாமல் அலட்சியமாக வலது கையினால் பக்கவாட்டில் ஈ விரட்டுவது போல் பளாரென்று எங்கள் முன்னே அறைந்தது, திடுக்கிட வைத்தது. "கவலைப்படாதீர்கள்.. ஹி அவருக்கு இந்த அதிர்ச்சி தேவை. சில நொடிகளில் தெளிந்து விடுவார்.." என்றார். சொன்னது போலவே சில நொடிகளில் ஜேம்ஸின் கண்கள் தீவிரம் தொலைத்துத் தெளிவாயின.
"லிஸன்.. நான் உங்கள் கணவருடன் நியாயத்துக்கு உட்பட்டுக் கட்டிய பந்தயத்தில் நாணயமாக சாட்சியோடு ஜெயிக்கும் தருணத்தில் நீங்கள் வந்தது... அவர் மேல் நான் மோசடி வழக்கு போட முடியும் தெரியுமா?" என்றான் ரிச்.
வெற்றிக்குப் பக்கத்தில் வந்துவிட்டு புதுக்காரைத் தொலைத்த கடுப்பு புரிந்தது. உள்ளுக்குள் பரபரத்தேன். வேண்டாம் இளைஞனே, விரல் பிழைத்த சந்தோஷத்தில் கிளம்பு. பைத்தியங்களோடு நமக்கென்ன வேலை?
"என்னை மன்னியுங்கள். நீங்கள் கட்டிய பந்தயம் செல்லாது. ஏனெனில் என் கணவருக்கு மன நிலை சரியில்லை. மருத்துவ குறிப்புகள் என்னிடம் உள்ளன. இவருடைய மருத்துவர் சாட்சி சொல்வார்.. வழக்கில் தோற்பீர்கள்"
"அப்போ என் விரலை நான் தொலைத்திருந்தால்? அதே பைத்திய நிலை எனக்குப் பாதகமானது தவறில்லையா? எனக்கு ஏதாவது நஷ்ட ஈடு தேவை"
"தவறுதான். இருந்தாலும் கோர்ட்டில் நீங்கள் விரலையும் இழந்து கேஸையும் இழந்து நின்றிருப்பீர்கள் என்பதே உண்மை. என்ன செய்ய? உங்கள் எரிச்சல் புரிகிறது. மதிக்கத்தக்க ஏதேனும் நஷ்ட ஈடாகத் தர விரும்புகிறேன். பந்தயம் முடியவில்லை என்பதால்.. நூறு டாலர் தரட்டுமா? அதான் என்னால் முடியும். இன்னொன்று, இந்தக் கார் இவருடையதே அல்ல. இது.. இவரிடம் ஒரு பந்தயத்தில் ஜெயித்து நான் பெற்ற கார் தெரியுமோ? உண்மையில் இவரிடம் கைச்செலவுக்கும் காசு கிடையாது. இவர் பென்சன், வங்கிக் கணக்கு, கடிகாரம், புத்தகங்கள், துணியிலிருந்து அத்தனையையும் நானே இவரிடம் பந்தயம் கட்டி ஜெயித்தேன். இப்போது இவர் ஓட்டாண்டி என்றாலும் இவரைப் பந்தயத்தில் ஜெயிக்க நான் எடுத்துக் கொண்ட சிரமங்கள், செய்த தியாகங்கள், எனக்கு மட்டுமே தெரியும்"
"ஆனால்.. நீ இந்தக் காரை எனக்குத் திரும்பக் கொடுத்து, என்னுடையது என்றாயே? அதனால், என் காரை நான் பணயம் வைத்தால்.. " என்றார் ஜேம்ஸ்.
ஈவா மறுபடி பூச்சி தட்டுவது போல் அவர் தலையில் தட்டினார். "முட்டாள்! மன நோயாளி என்றாலும் நீ என் கணவன் என்பதால்.. உன் மேல் இருக்கும் அன்பினால், கரிசனத்தால்.. நான் உனக்கு விட்டுக் கொடுத்த பரிசு. கருணையின் அடையாளம். அதைப் பணயம் வைக்க உனக்கு உரிமை கிடையாது. ஜெயித்த உடனேயே பத்திரம் மாற்றாதது என் பிழை. நீ இனி வாயைத் திறந்தால் கணவன் என்றும் பார்க்க மாட்டேன்.." என்று பொறிந்தார் ஈவா.
ரிச்சர்ட் பொறுமையிழந்தான். "சரி சரி.. எனக்குச் சேர வேண்டிய நூறு டாலரைக் கொடுங்கள்.." என்று எழுந்தான்.
"மிக நன்றி. புரிந்து கொண்டதற்கு என் கணவரின் சார்பாகவும் நன்றி. உங்களுக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன்.. இவரோடு வாழ்வது எத்தனை சிரமமென்று உங்களுக்குத் தெரியாது" என்றபடி தன் கைப்பையிலிருந்து ஒரு புது நூறு டாலர் நோட்டை எடுத்துக் கொடுத்தார். அப்பொழுது தான் நானும் ரிச்சர்டும் அதைக் கவனித்தோம்.
ஈவாவின் இடது கையில் ஒரு விரலும் இல்லை.
இக்கதை Roald Dahl 1948 வாக்கில் எழுதிய 'Man from the South' எனும் சிறுகதையின் தமிழாக்க முயற்சி. அவர் எழுதியதை ஒட்டினாலும் மொழியாக்கத்தில் சில உரிமைகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன். நிறைகள் அத்தனையும் டாலுக்குச் சொந்தம். குறைகள் என்னுடையவை.