2016/01/15

புத்தாண்டு



        (குளிர்கால வழக்கப்படி) சற்றே கனமான உயர்மட்டச் சாராயங்களின் உட்பரவலால் உந்தப்பட்டு... பொருளாதாரம் அரசியல் தொழில்நுட்பம் இசை இளைய சமூகம் பற்றி நண்பர்களுடன் சுவாரசியமாக அளவளாவும் வாய்ப்பு பதினைந்தின் இறுதி வாரத்தில் கிடைத்தது. மூத்த நண்பர் ஒருவரின் அழைப்பின் பெயரில் அவர் வீட்டில் குழுமியிருந்தோம்.

'தென்னிந்திய சம்பிரதாய இசை மாலை' என்ற அறிவிப்புடன் அழைத்திருந்தார் மூத்த நண்பர். கர்நாடக இசையில் விருப்பமில்லாதவர்கள் விலகிக்கொள்ளலாம் என்ற அவரது பண்பைப் பாராட்டி வெகு சில நண்பர்களே குழுமியிருந்தோம். அப்படியும் பத்து பேருக்கு மேல் கூடிவிட்டது. சில புதுமுகங்கள். சீமைச் சாராயம், சைவப் பலகாரங்கள் (சீடை அளவில் சன்னமாக உருளைக்கிழங்கு போண்டா செய்திருந்தார்கள் - அட்டகாசம்!), பின்னணியில் கர்நாடக இசை. மணி அய்யர், ராதாஜெயலட்சுமி, எம்எஸ், எம்எல்வி, ரமணி, மாலி, சிட்டிபாபு என்ற வரிசையில் இன்றைய கலைஞர்கள் சிலரின் வண்ணமும் சேர்ந்து செவிக்கு விருந்தானது.

ஆர்வலர் என்றால் என்னவென்று தெரியாது, எனினும் ஆர்வமுள்ளவர் என்ற பொருளில்... கர்நாடக இசை ஆர்வலர்கள் ஏறத்தாழ நால்வகைப் பட்டவர்கள் என்று நினைக்கிறேன்.

இனிமையான ராகத்தில் பிரபலமான பாடலாக இருந்தால் எந்தவித பரப்பும் ஆழமும் தேவைப்படாமல் இசைக்காக கேட்டுவைப்பவர்கள் முதலாவது ரகம். உதாரணத்துக்கு சங்கராபரணம் சினிமா வந்த காலத்தில் குழாயடியில் சாமஜவரகமனாவை குத்துப்பாட்டாகப் பாடியவர்கள் பலரை அறிவேன். காலப்போக்கில் ஓரளவுக்கு ஆழமும் பரப்பும் பெற்று சில கலைஞர்களையோ ராகங்களையோ மட்டும் நுட்மாக ரசிப்பவர்கள் இரண்டாவது ரகம். உதாரணத்துக்கு முதல் மழை என்னை நனைத்ததே சினிமாப்பாடல் மோகன ராக சாயலாக இருக்கிறதே என்று ரசித்துத் தள்ளுகிற ரகம். பரவலான அறிவும் ஆழமும் கூடி பலவகை கலைஞர்களையும் ரசிக்கும் கூட்டம் மூன்றாவது ரகம். ஓ! நாலாவது ரகம் ஒன்று இருக்கிறது. தன் பரவலான அறிவை சாமா சாஸ்திரி இருபத்தெட்டாவது மேளகர்த்தா ஆலாபனை துக்கடா ஜாவளி ப்ருகா நளினகாந்தி பீம்ப்லாஸ் தில்லானா அது இதுவென்று பயங்கரமாக விவாதித்து ரசிப்பவர்கள்(?) நாலாவது ரகம். உதாரணத்துக்கு முதல் மழை என்னை நனைத்ததே பாட்டு மோகன ராக சாயல் என்றால் உடனே கெக்கே என்று சிரிக்காமல் சிரித்து, அது தர்பாரி கானடா கோபிகா வசந்தம் என்று திடுக்கிடவைக்கும் ராகப்பெயர் சொல்லிப் பேருரையாற்றும் ரகம்.

நான் இருக்கிறேனே, சரியான ரகமாறி.

முதல் இரண்டாவது ரகங்களினூடே அடிக்கடி மாறுகிறவன். சம்பிரதாய இசைக் கலைஞர்கள் சிலரை மிகவும் பிடிக்கும். உதாரணம் மணி அய்யர், மாலி, சிட்டிபாபு. எம்எல்வி லாண்டரிக்கணக்கைப் பாடியிருந்தாலும் கேட்பேன். நல்லவேளை அவருக்கு லாண்டரிக்கணக்கைப் பாடிவைக்க வேண்டிய கர்வம் எதுவும் இருக்கவில்லை. இசை பிழைத்தது. செவியும். சுமார் பத்து ராகங்கள் போல் விரும்பிக் கேட்பேன். ஐம்பது கீர்த்தனைகள் போல் விரும்பிக் கேட்பேன். அதிலும் 'நீ இரங்காயெனில் புகலேது' என்று நிஷா ராஜகோபால் போல் புரியும்படி பாடினால் இன்னும் ரசித்துக் கேட்பேன். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த நிறைய சினிமாப் பாடல்கள் இன்ன ராகத்தின் அடிப்படையில் அமைந்தவை என்பதை அறிந்து கேட்பேன். அவ்வளவுதான் என் ரசனை.

மூன்றாவது ரக மாந்தரை மதிக்கக் கற்றுக் கொண்டேன் எனலாம். அவ்வப்போது சில nuanceகளை எடுத்துக்காட்டி, தொடர்வது நம் விருப்பம் என்று அத்தோடு நிறுத்திக் கொள்வார்கள். என் மாமா மற்றும் சில நண்பர்கள் இந்த ரகம். சுப்புத்தாத்தா அவர்கள்?

நாலாவது ரகம்.. ஹா! இசையையும் ரசிக்கவிடாமல் கலைஞரையும் அறியவிடாமல் தங்கள் பரந்துபட்ட அறிவைத் திணிக்கும் (ந)ரகம்டா சாமி! இப்படிப்பட்டவர்களை அறிந்ததும் தீயென்று விலகவேண்டாமோ? விட்டிலென விழுந்தேன்.

'உள்மன ரகசியங்களைக் கேட்கக்கூடாதா?' என்று தன் மனதிடமே கோரிக்கைவிடும் தியாகய்யரின் தெலுங்கு வார்த்தைகளை அலுங்காமல் விரல்களால் அறுபது மைல் வேகத்துக்கு விளையாடிக்கொண்டிருந்தார் சிட்டிபாபு. ஆகா தருணம்! சமீப இலக்கிய(?) முயற்சியொன்றுக்காக தியாகய்யரின் க்ருதிகளைப் பற்றி விவரமாகப் படிக்கக் கிடைத்த வாய்ப்பின் பலனாக தியாகய்யரின் ராமச்சந்திரக் காதலைப் பற்றி நானறிந்த மட்டில் பகிரத் தொடங்கினேன். தியாகய்யரின் வீச்சும் வேகமும் பற்றி வியப்புடன் பேசினேன். 'ராமா' எனும் ஒரே ஒரு எண்ணத்தை.. உருவத்தை.. காதலாக்கி அதற்கும் ஒரு படிமேல் கொண்டு சென்று கசிந்து உருகி... அத்தனை பாடல்களைத் தந்திருக்கும் அவரின் prolific படைப்புத்திறனை வியந்தேன். ராமனை எத்தனை விதமாக எத்தனை முறை பாடமுடியும்? அதையே திரும்பத்திரும்பப் பாடி எப்படியோ காலத்தை வென்றிருக்கிறார் என்றால் அவருடை ராமகாதலின் ஆழத்துக்கு எத்தனை பரிமாணங்கள்(?) உண்டென்று கொஞ்சம் கொஞ்சமாக அலசத்தொடங்கினோம்.. இசையுடன் இழைந்திருந்த தியாகய்யரின் obsession பற்றி அலசினோம். அவருடைய வெற்றியின் ரகசியம் கவித்துவமா ராமகாதலா என்று சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருக்கையில்.. தியாகய்யரின் வெற்றி உலகறிந்த வெற்றி அல்ல என்றார் ஒரு நண்பர். புதுமுகம்.

ப்ராம், பாக், மோசார்ட் போல தியாகய்யர் ஏன் உலகப் பிரபலமாகவில்லை என்று புது நண்பர் விவாதம் தொடங்கினார். ப்ராம், பாக், மோசார்ட் பற்றி எத்தனை பேர் தென்னிந்தியாவில் அறிந்திருப்பார்கள் என்று பதிலுக்குக் கேட்டேன். என் கேள்வியின் காரணம் "உலகப்புகழ்" என்பது அவரவர் வரையும் அறிவு மற்றும் கால வரம்புக்குட்பட்டது என்ற எண்ணமே தவிர, இவருடைய உலகப்புகழ் அவருடைய உலகப்புகழை விட மாறுபட்டது என்ற எண்ணமல்ல. நண்பர் உடனே மேற்கத்திய சம்பிரதாய இசையைப் பிட்டு வைத்து தென்னிந்திய சம்பிரதாய இசையுடன் ஒப்பிட்டு சாகித்தியம் வேறு சங்கதி வேறு என்றாக்கினார். தான் ஒரு இசைப் பேராசியர் என்பதையும் அடிக்கடி நினைவூட்ட மறக்கவில்லை. இந்தியாவிலும் சைனாவிலும் பேதோவன் பாக் படிக்கும் மாணவர்கள் போல் மேலை நாட்டில் தியாகய்யரைப் படிப்பதில்லை... தென்னிந்திய சமூகத்தைத் தவிர தியாகய்யரைப் பலரும் இந்தியாவில் கூட அறியவில்லை.. ஏஆர்ரகுமானை அறிந்த அளவுக்குக் கூட மேலையர்.. ஏன் இந்தியர்கள் கூட தியாகய்யரை அறியவில்லை என்பது சாத்தியம் என்று ஒரு கு தூ த போட்டார். இணைய உலகின் ஆதிக்கத்தில் தென்னிந்திய சம்பிரதாய இசை விரைவில் பின்னுக்குத்தள்ளப்படும் என்று சரமாரியாகப் பொழிந்தார். நான் குறிப்பிட்ட சில தியாகய்யர் க்ருதிகளை விவரமாகப் படம் வரைந்து பாகங்களைக் குறித்தார்.

பார்த்தேன். தவித்தேன். பதுங்கிடத் துடித்தேன்.

என் தட்டில் இன்னும் கொஞ்சம் உருளைக்கிழங்கு சீடைகளை அள்ளிக்கொள்ளும் சாக்கில் நழுவினேன். 'க்ருஷ்ணா ரக்ஷஸ்வமாம்' என்று ராதாஜெயலட்சுமி மனமுருகிக் கோரிக்கை விட்டுக்கொண்டிருந்தார். நன்று. இத்தனை விரும்பிக் கேட்கிறேனே தவிர ராதாஜெயலட்சுமி ஒருவரா இருவரா என இன்றுவரை அறியேன். இதுதான் என் ரகம்.

        இந்த வருடத்திய அமெரிக்க தேர்தல் நிலவரம் எங்கள் எல்லாருக்குமே கொஞ்சம் வருத்தத்தைத் தரும் விதத்தில் அமைந்து வருகிறது.

ட்ரம்பின் வளர்ச்சி எதிர்பார்த்ததே. ஒவ்வொரு தேர்தலிலும் இதுபோல் யாராவது சடசடவென்று உயர்வதும் சரியான நேரத்தில் தெளிவு உண்டாகி அடங்குவதும் இயல்பு. இந்த முறை எல்லாருமே சற்று அதிர்ச்சியுடன் வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். "பெண்கள் மோசமானவர்கள்" என்றார். ஆதரவு வளர்ந்தது. "எங்கெங்கெல்லாம் இரத்தம் வருகிறதோ உனக்கு?!" என்று கொச்சையாக பெண் நிருபரைச் சாடினார். ஆதரவு உயர்ந்தது. "நிருபர்களை வெறுக்கிறேன். அதற்காக அவர்களைச் சுட மாட்டேன்" என்றார் தார்மீகத்துடன். ஆதரவு வடக்கே போனது. "மெக்சிகோவினர் கற்பழிப்புக்கும் போதைப்பொருள் விற்பனைக்கும் மட்டுமே லாயக்கு" என்றார். ஆதரவு அதிரடியாக உயர்ந்தது. "முஸ்லிம்கள் யாருக்குமே அமெரிக்கா வர அனுமதி வழங்கக்கூடாது" என்றார். ஆதரவு ராகெட்டில் ஏறியது. "அடிக்கடி ஒன்றுக்குப் போகிறார். அசிங்கம் அசிங்கம்" என்று ஹிலரி க்லின்டனைப் பற்றிப் பொதுமேடையில் பேசினார் ஆதரவு வானைத்தொட்டது. தான் பதவியேற்ற முதல் நாள் முதல் வேலையாக துப்பாக்கி தடை செய்யப்பட்ட இடங்கள் அத்தனையும் நீக்குவேன் என்றார். ஆதரவு சமீப பவர்பால் லாட்டரிப் பரிசுப்பணம் போல் பெருகிக்கொண்டே போனது.

கொஞ்சம் அந்தப்பக்கம் எட்டிப் பார்த்தால் ஹிலரிக்கு கிடைத்துவரும் ஆதரவும் அதே அதே ஸேம் ஸேம். அதிர்ச்சியாக இருக்கிறது. எகிப்து லிப்யாவில் நடந்த தூதரகத் தாக்குதல்களுக்கு சாக்கு போக்கு பூசணிக்காய் என்று எதையெதையோ சொல்கிறார். ஆதரவு அடங்கவில்லை. அரசாங்கத் தகவல் தொடர்புக்கு தனி இமெயில் வசதியைப் பயன்படுத்தியிருக்கிறார் என்றக் குற்றச்சாட்டு ஆதாரத்துடன் பிட்டுவைக்கப்படுறது. ஆதரவு அடங்கவில்லை. ரஷியா வடகொரியா ஈரான் சைனா என்று வரிசையாக வெளியுறவு விவகாரங்களில் அமெரிக்காவின் செல்வாக்கு பாதாளத்துக்கும் கீழே புதைபடுவதை பட்டி தொட்டியெல்லாம் அறிகிறது. ஆதரவு அடங்கவில்லை.

ட்ரம்ப் க்லின்டன் இருவரும் இப்படியென்றால் பிற ரிபப்லிகன் டெமோக்ரேட் வேட்பாளர்கள் வேடிக்கையோ வேடிக்கை. ஜெப் புஷ் பெயர்க்காரணத்தினால் மிகவும் சிரமப்படுகிறார். அது போதாமல் உருப்படியாக எதுவும் பேசாதிருப்பதால் கேலிக்குரியவராக சித்தரிக்கப்படுகிறார். பெயர்க்காரணமாகவும் இருக்கலாம். saturday night liveல் அவரைக் கிழி கிழியென்று கிழிக்கிறார்கள். 'ஜெப்ரா' என்று யூட்யூபில் தேடிப்பார்த்து சிரிக்கவும். பெர்னி சேன்டர்ஸ் வாயைத் திறந்தாலே புட்டுக்குவாரோ என்று பயமாக இருக்கிறது. டெமோக்ரேட் வேட்பாளர்களின் மொத்த வயது எண்ணிக்கை அறுநூறுக்கு மேல் இருக்கும் போலிருக்கிறது. இருப்பதே மூன்று வேட்பாளர்கள் தான்! ரிபப்லிகன் பியோனா அவ்வப்போது தோன்றி பேந்தப் பேந்த விழிக்கிறார். அவருக்குப் போட்டியாக ரூபியோ பேந்தப் பேந்த விழித்து புரியாமல் ஏதோ சொல்கிறார். டெட் க்ரூஸ் "என்னை யாருக்குமே பிடிக்காது என்பது எல்லோரும் அறிந்ததே. அதனால் இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்னை வெறுப்பார்கள். நான் அவர்களை வெறுப்பேன்" என்று குட்டையில் விழுந்து விழுந்து எழுகிறார்... இல்லை விழுகிறார்.

"இதில் மோடியையும் காந்தியையும் கிண்டல் செய்ய என்ன தகுதி இருக்கிறது நமக்கு?" என்றேன். மூத்த நண்பருக்கு மோடி ஆகாது. மோடி மோசடி என்று அடிக்கடி சொல்பவர். இசைப் பேராசிரியர் வழக்கம் போல் எந்தக்கட்சிக்கும் எதிர்க்கட்சியாக. "மோடி செய்து கொண்டிருப்பது அமைதிப்புரட்சி. இப்ப தெரியாது. இன்னும் பத்து வருடங்களில் வெளிப்படையாகத் தெரியப்போகும் பலன்களுக்கான ஆணிவேரை வளர்ப்பதில் குறியாக இருக்கிறார். அது எல்லாருக்கும் எளிதாகப் புரியாது" என்றார்.

"கொஞ்சம் புரியும்படியாகச் சொல்லுங்களேன்?" என்றேன்.

பதிலைக்காணோம். மோடி ஒபாமாவைப் பார்த்து சூடு போட்டுக்கொண்ட பூனை என்றார் மூத்த நண்பர். பேராசியர் நெற்றிக்கண்ணைத் திறந்து பார்வையை வீசினார். "இந்தியப் பாரம்பரியத்தை பெருமையைக் காக்கக் கூடிய ஒரு தலைவர் சமீப நூறு ஆண்டுகளில் உருவாகியிருக்கிறார் என்றால் அது மோடி மட்டுமே" என்றார். உடனே கண்மூடித்தனம் என்றால் என்னவென்று எனக்குப் புரிந்தது.

அதைத்தவிர, ஒண்ணுமே புரியலே அரசியல் உலகத்திலே.

        மிக நெருங்கிய நண்பர் ஒருவர் எங்களுடன் கலந்து கொள்ளாததைப் பற்றிப் பேச்சு வந்தது. இலினாய் மாநிலத்தின் பிரபல கல்லூரியொன்றில் பொறியியல் படித்துவந்த நண்பரின் மகன் காரணம் புரியாமல் இறந்துவிட்டதை மிகுந்த வருத்தத்துடன் பேசினோம். நண்பருக்கு ஒரே குழந்தை. மிகவும் நன்றாகப் படித்து வந்த மகன். படிப்பு மட்டுமில்லாமல் விளையாட்டு பொதுச்சேவை என்று பலவகையில் பெயர் சம்பாதித்து வந்த மகன் திடீரென்று இறந்து விட்டார். இருபத்தொரு வயது! இருபத்தொரு வயது! அத்தனை வயதில் சாவதற்கு அப்படி என்ன அவசரம்? கல்லூரி.. படிப்பு.. பெற்றோர்.. காதல்.. கடன்.. என்ன பிரச்சினை அந்த இளைஞருக்கு என்று தெரியப்போவதே இல்லை.. எந்தப் பிரச்சினையானாலும் பெற்றோரிடமோ அல்லது நெருங்கியவர்களிடமோ பேசித் தீர்க்காமல் ஏன் உயிரைத் தீர்த்துக் கொண்டார்? கல்லூரி விடுதி அருகே அவரது உடல் கிடந்ததை வைத்து தற்கொலை விபத்து இரண்டில் ஏதோ ஒன்று என்று பூசிவிட்டார்கள். எப்படி இறந்தாலென்ன - இழப்பு இழப்பு தானே? இறந்த காரணத்தைப் பற்றி ஆளுக்கொன்று சொன்னாலும் அவர் இறந்து போனது நிஜம். நண்பரும் அவர் மனைவியும் அனுபவிக்கும் சோகம் நிஜம். 'இதற்காகவா அமெரிக்கா வந்தேன்!' என்று நண்பர் ஓவென்று அழுதது நிஜம். "இருபத்துமூன்று வருடங்களுக்குப் பிறகு இந்தியா திரும்பப் போகிறோம்.. எங்கள் பெற்றோரிடம் என்ன சொல்வது? என்ன சாதித்தோம் அமெரிக்காவில் என்று எப்படிச் சொல்வது? இனி வரும் நாட்களை எப்படிச் சந்திப்பது?" என்று நண்பரின் மனைவி கேவியது நிஜம்.

இன்னொரு நண்பரின் இரண்டு பிள்ளைகளும் போதைப்பொருளுக்கு அடிமையாகி லட்சக்கணக்கான டாலர் செலவில் சிகிச்சை பெற்றுவருவது பற்றிப் பேசினோம். இன்னொரு நண்பரின் மகன் படிப்பில் கவனமில்லாமல் எதையெதையோ செய்து.. கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டதைக் கூடத் தெரிவிக்காமல்.. எங்கோ ஓடிப்போனதைப் பற்றிப் பேசினோம்.

அமெரிக்கா வாழ் எங்கள் சந்ததி எங்களிடமிருந்து என்ன கற்றுக் கொண்டிருக்கிறது? ஒரு வேளை அவர்களை அளவுக்கு அதிகமாகப் போற்றிப் பொத்தி வளர்த்துவிட்டோமோ? சிறிய சிக்கல்களைக்கூட தன்னம்பிக்கையுடன் சந்திக்க முடியாமல் செய்துவிட்டோமோ? அல்லது எங்கள் கனவுகளைத் திணித்து அவர்களைச் சுயமாகப் பொறுப்புணர்ந்து வாழ விடாமால் வளர்த்துவிட்டோமோ? அல்லது ஒருவேளை இன்றைய இளையசமூகம் உண்மையிலேயே இளமையில் நாம் சுமந்ததை விட அதிகமாகச் சுமக்கிறார்களோ? அப்படி என்ன பாரம்? நெருங்கிய வட்டத்தில் இத்தனை சரிவுகளைப் பார்த்ததும் இளைய சமுதாயமே சரிவதைப் போல் நினைக்கிறோமோ? இப்படி நிறையப் பேசினோம். எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் மட்டுமல்ல அவர்கள் தலைமுறையின் மொத்த எதிர்காலம் பற்றியும் கவலையுடனும் அக்கறையுடனும் பேசினோம்.

"என்னவோ தெரியவில்லை. எத்தனை சுமையிலும் எத்தனை இறுக்கத்திலும் தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் இழக்காமல் இருக்க வேண்டும் என்பதை என் அம்மா எங்களுக்கு வார்த்தையில் சொல்லித் தரவில்லை. வாழ்ந்து சொல்லிக் கொடுத்தார்" என்றேன்.

நாங்கள் வளர்ந்த சூழல் பற்றி நிறையப் பேசினோம். முதல் முறையாக ஒரு சந்தேகம் என் மனதில் அரும்பியது. நம் பிள்ளைகளை விட நாம் சற்றுத் திடமானவர்களோ என்று. கூடாது. அவர்கள் நம்மை விட உயர்ந்தவர்களாகவே.. எல்லா விதத்திலும் உயர்ந்தவர்களாகவே.. விளங்க வேண்டும். விளங்கட்டும்.

        அமெரிக்கப் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமையதிகாரிகள் நிறைய பேர் இந்தியர்களாக இருப்பதாலா அல்லது அமெரிக்க நிறுவனங்கள் வரிசையாக இந்தியாவில் முதலீடு செய்வதாலா.. மின் தொழில்நுட்பங்களின் அடுத்த உறையுள் பெங்களூரோ என்று சிறிது விவாதித்தோம். இந்தியாவிலிருந்து உருப்படியாக ஏதாவது தோன்றுமா அல்லது வெறும் பேச்சோடு நின்றுவிடுமா என்று நண்பர்கள் ஆளாளுக்குத் தெரிந்ததை எடுத்துச் சொன்னார்கள். என் இந்திய அனுபவம் சொல்லிக்கொள்ளும்படி அமையாததைப் பற்றிப் புலம்பினேன். 'இதைச் சாய்ப்பேன்.. அதைப் பிடுங்குவேன்' என்று சொல்லிச்சொல்லி எதையும் செய்யாமல் என் முதலீட்டையும் நேரத்தையும் வீணாக்கியதைப் பற்றிப் புலம்பினேன். எனக்குத்தான் வேலை வாங்கத் தெரியவில்லை என்று இசைப் பேராசிரியர் சொன்னதும் காலிப்புட்டியால் அவரை அடிக்கலாம் என்று தோன்றினாலும் அவர் சொல்வதில் உண்மை இருக்கலாம் என்பதும் உறைத்தது. தொழில்நுட்பமோ எதுவோ இந்தியாவின் திறனை அசலாக வெளிக்கொண்டு வந்தால் சரிதான்.

        இஸ்லாமியத் தீவிரவாதம் பற்றிப் பேசினோம். இவர்களை வளர்த்தது அமெரிக்காவா? வளர்ப்பது சவுதியா? இன்றைய சிரியா இப்படிச் சீரழிவதும் அடுத்த சிரியா எது என்றும் பேசினோம். 'மற்ற இடங்களை விடுங்கள் இந்தியாவில் தீவிரவாதம் பரவியிருப்பதைப் பாருங்கள்!' என்றார் ஒரு நண்பர். 'ஐஸிஸ் இயக்கத்தில் எத்தனை இந்தியர்கள் - தமிழர்கள் - இருக்கிறார்கள் தெரியுமா?' என்று ஒரு பட்டியல் போட்டுச் சொன்னார். பஞ்சாப் அடுத்த சிரியாவாகும் வாய்ப்பு இருக்கிறது என்று ஒரு குண்டைப் போட்டார் இன்னொரு நண்பர்.

        இதே ரீதியில் தொடர்ந்து கருடபுராணச் சித்திரவதை பற்றிப் பேச்சு வந்தது. சித்திரவதை மூன்றே வகைப்படும் என்றுத் தீர்மானமாகச் சொன்ன என்னைக் கேள்வியுடன் பார்த்தார்கள்.

"உயிருடன் கொளுத்துவதோ அல்லது கொதிக்கும் எண்ணையில் முக்கியெடுப்பதோ முதல் வகை சித்திரவதை. அதைவிடக் கொடுமையானது... இரண்டாவது வகை. உயிருடன் இருக்கையில் உடல் அங்கங்களை முள்சுற்றிய துருப்பிடித்த கத்தியோ அரிவாளோ கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி, வெட்டிய துண்டுகள் மேல் தாண்டவம் ஆடுவது. அடுத்த.."

"நிறுத்துப்பா.. இதைவிடக் கொடுமையானதா..?"

"மூன்றாவது போல் கொடுமையானது இல்லை" என்றேன். "நாற்காலியில் ஆளைக் கட்டிப்போட்டு விஜய்-அஜித் திரைப்படங்களைப் பார்க்கவைப்பது - இதான் மனிதம் வடித்த மிகக் கொடுமையான சித்திரவதை. அத்தனை கருடபுராணங்களின் சாரம்" என்று நான் சொன்னபோது, நானே நடுங்கத் தொடங்கியது நிஜம்.

        இது போன்ற நேரங்களில் யாராவது புத்தாண்டை நுழைத்து அது தவிர்க்க முடியாத தர்க்கமாகிப் போவதும் வாடிக்கையாகிவிட்டது. அதுவரையிலான உடல், மன முதிர்ச்சி மற்றும் வருட இறுதி மனநிலைகளைப் பொறுத்து உறுதிமொழிகள் கட்டப்படுகின்றன என்பது புரிந்தாலும், டிசம்பர் 25ம் தேதி வந்தால் போதும், வருடம் விடாமல் புத்தாண்டு உறுதிமொழிகள் பற்றி ஏதாவதொரு பேச்சோ வாதமோ வந்துவிடுகிறது. பதினாறுக்கான உறுதிமொழிகள் பற்றிய பேச்சும் அப்படித்தான் வந்தது.

அடிச்சுக்க ஆள் பிறக்கவில்லை என்ற ரீதியில் மணி அய்யரைப் பின்னணியில் ரசித்துக்கொண்டிருந்த போது ஸ்டேன்லி கூப்ரிக்கின் பழைய படத்தில் வரும் காலமுரண் கட்டிடம் போல் நிரடி நின்றது - புத்தாண்டு உறுதிமொழிகள் பற்றிய திடீர் பேச்சு! ஒரு நிமிடமாவது சிந்தித்து உறுதிமொழிகளைப் பற்றிச் சொல்லப் பணித்தது குழு.

பின்னணி இசை பாலமுரளியின் நனுபாலிம்ப என்று மாற, சற்று சிந்தைக்கும் ஈய வசதியாகிப் போனது. ஆகா ஓகோவென்று என் இசைவட்ட நட்பு சில இழைந்தாலும் பாலமுரளி எம்எஸ் இருவரின் இசையும் எனக்கு ஊறுகாய் போலத்தான். தேவைப்பட்டால் சுவைப்பேன், அவ்வளவே. என் முறை வரவும் பாலமுரளியை விட்டு புத்தாண்டு உறுதிமொழிகள் இரண்டைப் பகிர்ந்து கொண்டேன்.

"முதலாவது... இனி என் நலனில் கவனம் செலுத்தப் போகிறேன். physical, mental or financial... மூவகை நலங்களிலும் ஒரு குறிப்பிட்ட இலக்கை ஒவ்வொரு மாதமும் அடையப் போகிறேன்" என்றேன்.

"இரண்டாவது?"

சொன்னேன்.

"இதெல்லாம் எப்படி உறுதிமொழி ஆகும்?" என்றார் இசைப் பேராசிரியர்.

"ஏன் ஆகாது?" என்றேன்.

"உறுதிமொழி என்பது ஒரு புதுமுயற்சியைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். ஒரு பரந்துபட்ட நற்பலனைத் தருவதாக இருக்க வேண்டும். தொலை நோக்கு இருக்க வேண்டும்"

சர்க்கரை காரணமாக எனக்கு ஏற்கனவே பார்வை மங்கத் தொடங்கிவிட்டது. சாராயமும் காரணமாக இருக்கலாம். இவர் இந்த நேரத்தில் தொலை நோக்கு என்கிறாரே? "அப்படிப்பட்ட உறுதிமொழிக்கான உதாரணம் சொல்லுங்களேன்?" என்றேன்.

"உறுதிமொழிக்கான உதாரணம் தெரியாமலா இத்தனை வருடங்களைக் கடந்திருக்கிறீர்கள்? உங்கள் உறுதிமொழி முட்டாள்தனமாக கேலிக்குரியதாக இருக்கிறது" என்றார். ouch..below the belt! மூத்த நண்பர் குறுக்கிடாவிட்டால் என் உறுதிமொழியை மட்டுமல்ல என்னையும் தாக்கித் தள்ளியிருப்பார் கனியிருப்பக் காய் கவரும் பேராசியர். "உறுதிமொழிகளை நிறைவேற்றினால்.. அதனால் பலன் பெறுகிறவர்களுக்கும் நிறைவு கிடைக்க வேண்டும், உறுதிமொழியை நிறைவேற்றும் நமக்கும் நிறைவு கிடைக்க வேண்டும்".

"அதுவும் சரிதான்" என்று மறுபடி உகிசீ எடுக்க நழுவினேன். "நான் ப்லாக் எழுதுறதை நிறுத்தினால் படிக்கிறவங்களுக்கு நிம்மதி கிடைக்குமே தவிர அதனால எனக்கு ஒரு நிறைவும் கிடைக்காது" என்று அரை டஜன் உகி சீடைகளை அள்ளிக்கொண்டேன். ஒன்றை மெள்ள வாயிலெறிந்து சற்று உரக்கவே சுவைக்கத் தொடங்கினேன்.