2012/09/21

கடவுள் கிடையாது பாப்பா

டவுள் கிடையாது பாப்பா இதைநீ
    கருத்தினில் வைத்திடு பாப்பா - தெய்வப்
படங்கள் சிலைகளெல்லாம் பாப்பா முன்னோர்
    மடமையென் றறிந்திடு பாப்பா.

மதங்கள் அத்தனையும் பாப்பா முன்னோர்
    மதிகெட்ட வினையாகும் பாப்பா - தீங்கின்
விதங்கள் பலவாகும் பாப்பா அதில்
    முதலிடம் மதமாகும் பாப்பா.

அல்லாவும் யேசுவும் பாப்பா அதுபோல
    ராமனும் சக்தியும் பாப்பா - எல்லாம்
இல்லாத கடவுளின் வடிவாய் முன்னோர்
    இட்டுக் கட்டியதாம் பாப்பா.

எம்முன்னோர் பொய்களைப் பாப்பா ஏற்று
    மூடராய் நாசமானோம் பாப்பா - எங்கள்
நம்பிக்கை பொய்யான தாகும் இதை
    நீயேனும் புரிந்துகொள் பாப்பா.

பாவப் புண்ணியங்கள் போலி பின்னும்
    சொர்க்க நரகமெம் பிதற்றல் - பொய்யால்
ஆவ தேதுமுண்டோ பாப்பா எமைநம்பி
    அறிவை இழக்காதே பாப்பா.

கண்ணால் காண்பதும் பொய்யாம் அறிந்தும்
    காணாததை மெய்யென்றோம் பாப்பா - நம்பிக்
கண்மூடிக் கருத்தழிந்த நாங்கள் நாளும்
    கண்திறந்தக் குருடரானோம் பாப்பா.

கற்றும் அறிவிலார் எம்மை உனக்
    கடையாளம் காட்டுகிறேன் பாப்பா - உன்
பெற்றோர் உறவினர்போல் இருப்போம் பொய்யைப்
    பூசுவதில் பொல்லாதவர் பாப்பா.

கருணையே வடிவான தென்போம் கோபத்தில்
    கண்குத்திக் கழுவிலேற்று மென்போம் - முரணை
ஒருவரும் அறியாத வரையில் நாங்கள்
    ஊரை ஏமாற்றுவோம் பாப்பா.

பக்தியென்றும் முக்தியென்றும் சொல்வோம் மதம்
    முக்கிய மானதென்போம் பாப்பா - மறுத்தால்
சக்தியுள்ள தெய்வமுன்னைப் பாப்பா வாழ்வுடன்
    சாவிலும் வாட்டுமென்போம் பாப்பா.

அரிமுகம் அவதாரம் என்போம் சிலரை
    ஆண்டவனின் தூதரென்போம் பாப்பா - எமக்குப்
புரியாதப் பொய்தினம் சொல்வோம் நீமட்டும்
    பொய்யுரைக்க லாகாது என்போம்.

விரதமுடன் வேதங்கள் சொல்வோம் நாங்கள்
    வேளைக்கொரு வழிபாடு செய்வோம் - பிறகப்
பரம்பொருள் பெயர்சொல்லிப் பாப்பா எம்முள்
    பைத்தியமாய் அடித்துக் கொல்வோம்.

காணாததைக் கடவுளென்றோம் பாப்பா இன்றுக்
    கண்டதையும் கடவுளென்போம் பாப்பா - எமது
வீணான வெறும்பேச்சை நம்பி நீயுமப்
    படுகுழியுற் போகாதே பாப்பா.

கடவுள் கிடையாது பாப்பா இதைநீ
    கணமும் மறவாதே பாப்பா - மதங்கள்
மடமையின் சிகரம் என்பதை உன்
    மனதில் வைத்திடு பாப்பா.

அச்சமும் மடமையும் பாப்பா எம்மை
    மூடராய் முடக்கிய தென்போம் - இனி
மிச்சமுள்ள தலைமுறைக்குப் பாப்பா எங்கள்
    மனதைச் சொல்லுகிறோம் பாப்பா.

கடவுள் மதங்களில்லா உலகம் எங்கள்
    கனவின் புதையலாகும் பாப்பா - இதைத்
திடமாய் செயலிலே காட்டி நாளை
    நனவாகச் செய்திடு பாப்பா.

2012/09/17

'கருகமணி'

"இன்றையப் பின் நவீனத்துவ வாதிகள் எழுப்பும் இலக்கியக் கூச்சலை இவர் புரியும்படி ஓசைப்படாமல் செய்து வருகிறார். இதுவே இவரது தனி முத்திரை"

- 'கருகமணி' நூலுக்கான அணிந்துரையில் சு.சமுத்திரம்


    திரு.காஸ்யபனின் எழுத்து எனக்கு அறிமுகமானதே.

தனக்கெனத் தனிப்பாணி ஏதுமில்லையென்று காஸ்யபன் சொன்னாலும், 'திடுக்கிடும் வகையில் ஆழமான கருத்துக்களைச் சொல்வது இவருக்கு நன்றாக வருகிறது' என்று நான் நினைப்பதுண்டு. இவர் அளித்தத் தொலைக்காட்சிப் பேட்டியொன்றில் இதே கருத்தை இவரது நண்பர்கள் வெளிப்படுத்தியதாகத் தெரிந்ததும் ஆச்சரியமாக (ஆறுதலாகவும்) இருந்தது.

அவரது வலைப்பூவில் நிறைய படித்தும், பின்னூட்டங்களில் உரசியும், அவருடைய தளம் பற்றிய தெளிவான எண்ணம் எனக்கு உண்டு. இருந்தாலும் எதிர்பாராத அதிர்ச்சியை அவ்வப்போது வழங்குவது அவருடைய பாணி. சிறுகதையாகட்டும், சமூகப் பார்வையாகட்டும் இவர் எழுத்தின் நுட்பம் சாலையோரத் திருப்பத்தில் எதிரில் வந்தவர் மீது எதிர்பாராமல் இடித்துக் கொண்ட அனுபவத்தை ஒத்தது. இடித்தது வலியா இன்பமா என்பது இடிபடும் பொழுது தானே தெரியும்?
தான் கதை எழுதும் முறையை இவர் பேட்டியில் விளக்கியிருக்கிறார். சிறுகதை எழுத விரும்பும் அனைவருக்கும் உபயோகமானத் தகவல். [காஸ்யபன் ஐயா: 'வாத்தியாரைக் குழப்பும் மாணவன்' போல் கதை எழுதுவது எனக்குப் பிடிக்கும். அதில் தவறில்லை என்று நினைக்கிறேன். வாசகரின் கற்பனைக்கும் சிறிது ஈயவேண்டும் என்பது என் கருத்து].

    காஸ்யபன் அவர்களின் 'கருகமணி' சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பதினொறு சிறுகதைகள். அச்சும் பதிப்பு நேர்த்தியும் சுமார். படிக்கக் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. ஆனால், கதைகள் அந்தச் சிரமத்தைச் சடுதியில் மறக்கச் செய்கின்றன.

சமூக நியதிகள் - அதன் வலிமை, நேயம், வேடம், மற்றும் பொய்மைகளினால் உண்டாகும் சிக்கல்களே இவருடையச் சிறுகதைகளின் தளம் என்பேன். சரித்திர மற்றும் புராணப் பின்புலத்தில்
கூட சாதிச் சிக்கல்களைத் தொட்டிருக்கிறார், ஆதிக்க முகமூடிகளை அடையாளம் காட்டியிருக்கிறார். கடவுள் மதம் சடங்கு தொட்ட மூட நம்பிக்கைகளைச் சாடும் பொழுது இவர் எழுத்தின் உக்கிரம் முழுமையாகப் புரிகிறது. சிலிர்க்க வைக்கிறது. சாதி பற்றிய மூட நம்பிக்கைகளைச் சாடுகையில் மட்டும் ஏனோ அரை கிணறு தாண்டுவதாக நினைக்கிறேன். 'ஒடுக்கப்பட்டச் சாதிகளுக்குச் சலுகைகளும் உதவிகளும் வழங்கப்பட வேண்டும்' என்பதை அடிக்கடி வலியுறுத்துகிறார். இது முற்போக்கா என்பதில் எனக்குக் குழப்பம் உண்டு. "தம்பி, நீ தாழ்த்தப்பட்டவன், அதனால் இந்தா உனக்கு அதிகமாக ஐந்து ரூபாய்" என்று தருவது உதவியா, உபத்திரவமா? சலுகைகளை வளர்ப்பது, சாதிகளை வளர்ப்பது போலாகாதோ? (சாதி அடிப்படையிலான சலுகைகளைப் பற்றிய என் கருத்தைப் பின்னூட்டத்திலோ இன்னொரு பதிவிலோ பகிர்ந்து கொள்கிறேன். தொகுப்புக்கு வருகிறேன் :-)).

எல்லாக் கதைகளுமே வாசகரை - சிலிர்ப்போ, நடுக்கமோ, அச்சமோ, கலக்கமோ, வருத்தமோ, சோகமோ, அதிர்ச்சியோ - ஏதோ ஒரு விதத்தில் ஒன்றிரண்டு நிமிடங்களாவது பாதிக்கக்கூடியவை.

    தொகுப்பின் முதல் சிறுகதை, 'அவளும் அந்த அவளும்'. புராணத் திரௌபதியும் பாமரப் பாஞ்சாலியும் சந்தித்து உரையாடுவதே கதையின் கரு. பாஞ்சாலிக்கும் திரௌபதிக்கும் வாழ்வில் நிறைய ஒற்றுமைகள் - ஐந்து பேருடன் படுக்க நேர்ந்தது உள்பட. பேச்சு
வாக்கில் திரௌபதி தன்னுள் புதைத்து வைத்திருந்த சோகம் ஆத்திரம் கோபங்களை வெளிப்படுத்துகிறாள். கதையின் தொடக்கத்தில் இருவரும் சந்திக்கும் பொழுது, திரௌபதி என்று தெரிந்ததும் பாஞ்சாலி கேட்கிறாள், "யாரு தர்மபுத்திரன் பெஞ்சாதியா...?" என்று. திரௌபதி தயங்காமல், "...தர்மபுத்திரனிலிருந்து அவன் சித்தி மகன் சகாதேவன் வரை.." என்று பதில் சொல்கிறாள். கதையை இந்த இடத்தில் ஐந்து நிமிடமாவது அசை போட்டிருப்பேன். திரௌபதி சொல்லும் ஒரு வரி பதிலில் எத்தனை வேகம், எத்தனை ஆழம்! இந்தப் பெண்ணின் எத்தனைக் கனவுகள் குப்பையில் விழுந்திருக்க வேண்டும்! எத்தனைப் பொழுதுகள் ஊமையாக அழுதிருக்க வேண்டும்! ஒவ்வொரு கணவனும் தன் மனைவியைப் பொன் போல் நடத்துகையில் ஒரு புழுவைப் போல் நடத்திய, ஒன்றல்ல ஐந்து கணவர்களையும், ஆன்றோர் சான்றோர்களையும், ஏன் கடவுளெனப்படும் கண்ணனையும் நினைந்து அவள் எத்தனை எரிந்திருக்க வேண்டும் உள்ளுக்குள்! திரௌபதி-பாஞ்சாலி உரையாடலை மையமாக வைத்துத் தன்னுடைய நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். தன் மானத்தைக் கண்ணன் காப்பாற்றவில்லை, கெடுத்தான் என்கிறாள் திரௌபதி, கதையில். 'ஏன் அப்படிச் சொன்னாள்?' என்று தெரிந்து கொள்ள, கதையை
அவசியம் படிக்க வேண்டும். உச்சந்தலையில் ஏறிக் குதிகால் வரைப் பரவும் அதிர்ச்சி. ஆணாதிக்கம் பற்றிய நுட்பமானப் பார்வை, உண்மை தானோ என்று சிந்திக்க வைத்தது. எத்தனை முறை படித்தாலும் எழுச்சியூட்டும் கதையில் குறை என்னவென்றால் முடிவு தெளிவாக இல்லை, தலைப்பும் பொருந்தவில்லை.

    "நாராயணா நாராயணா.." எனும் கதை, சிரார்த்த நாட்களில் இறந்து போனவர்கள் ("பித்ருக்கள்") வந்து உணவருந்திப் போவதான கலாசாரக் கோட்பாட்டை, நம்பிக்கையைக் கொஞ்சம் உடைத்துப் பார்க்கிறது. தந்தைக்குத் திவசம் செய்யும் பிராமணப் பெரியவர், தன் வீட்டுக்கு வந்து உணவருந்திப் போகும் அழகானச் சிறுவனின் பெயர் 'தாவூது' என்று தெரிந்ததும் ஒரு கணம் அதிரும் பொழுது, நானும் அதிர்ந்தேன். அதிர்ந்த வேகத்தில் பெரியவர் அதை ஏற்று நிறைவடையும் பொழுது நானும் நிறைவை உணர்ந்தேன். இது காஸ்யபனின் எழுத்துக்கு வெற்றி.

    'பத்மா நதிக்கரையில்..' சிறுகதை நவகாளிக் கலவரங்களைப் பின்புலமாகக் கொண்டுள்ளது. இந்தியக் கலாசாரத்தின் முகமூடியைக் கிழிக்கும் ஒரு கதை. பெண்களை மதிக்கிறோமா மிதிக்கிறோமா என்றுச் சிந்திக்க வைக்கும் கதை.

    'படிப்பாயாசம்' கதையில் ஒரு பள்ளி ஆசிரியர், 'நன்றாகக் கட்டுரை எழுதிய மேல் சாதி மாணவனுக்குப் பரிசு வழங்குவதற்குப் பதிலாக, கல்வி என்பது மரபணுவிலும் சிதைந்து போனச் சாதாரணப் பாமர மாணவன் சிரமப்பட்டு எழுதிய சுமாரான கட்டுரைக்கு பரிசு வழங்க வேண்டும்' என்றுப் போராடித் தோற்கிறார். கதையின் செய்தி பாதித்த அளவுக்கு என்னை உலுக்கிய இன்னொரு விவரம், 'படிப்பாயாசம்' என்ற சடங்கு! பிரம்ம ராட்சசனாக இருந்த இந்திரன் சாப விமோசனம் பெற்றச் சடங்கின் தொடர்ச்சியாகக் கோவில் படிகளில் பட்டர் பாயசம் ஊற்ற, அதை ஊர்ப்பிள்ளைகள் நக்கிக் குடிப்பார்களாம்! இன்றையக் காலக்கட்டத்து இந்திய அரசியல் கொள்கைகளுக்கும் ஒத்துப் போகும் கதை. அறுபது வருடங்களுக்கு மேலாக அதே இடத்திலா நின்றுகொண்டிருக்கிறோம்? சே, என்ன மனிதர்கள் நாம்! குறுகிப் போகிறேன்.

    மதுரை 'ராஜ்ஜியத்தை' சந்தா சாகிப் அபகரித்த போது, மீனாட்சி கள்ளழகர் திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றுப்புறக் கோவில்களையும் சிலைகளையும் பாதுகாக்க/பராமரிக்க ஏற்பட்ட சிக்கல்களைப் பின்புலமாகக் கொண்ட, ஆதித்ய ஹ்ருதயம் சொல்லும் பக்தர் அல்லாவின் நிழலையும் உணரும் அருமையான கதை 'தேன் கலந்த நீர்!'. (அரைகிணறு தாண்டும் செய்தி :-).

    தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு சிறுகதைகள், 'ஜகதா' மற்றும் 'கருகமணி'. தொகுப்பின் சிறந்த கதையாக இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்ய மிகவும் சிரமப்படுகிறேன். தேர்வுத் தராசில் ஒன்று மாற்றி ஒன்று இறங்கிக் கொண்டே இருக்கிறது. எண்ணங்களை அப்படியே தருகிறேன், என் தேர்வு உங்களுக்குப் புரிந்தால் சொல்லுங்களேன்?

    a. ஜகதா: தினசரிச் சிக்கல்களில் தவித்து நேரமில்லாமல் அல்லாடும் ராகவன்-லட்சுமி குடும்பத்தில் வீட்டு வேலை பார்க்கும், பள்ளிக்குப் போக வேண்டிய, அறிவுள்ள பதினொரு வயதுச் சிறுமி ஜகதா. மழை கசகசக்கும் ஒரு வாரத்தில் ஜகதா தினம் அதிகாலையில் தூக்கம் குறை காரணமாகத் தாமதமாக வருவதால், எரிந்து விழுகிறாள் லட்சுமி. லட்சுமியின் கோபத்துக்கு அஞ்சினாலும் விவரம் புரியாமல் கண்களில் கண்ணீர் தேங்க நிற்கும் சிறுமியான ஜகதா, "இரவு தினம் சினிமாவுக்குப் போனதாக"க் காரணம் சொல்கிறாள். கோப எல்லைகளைக் கடந்து, "இனி வேலைக்கு வர வேண்டாம்" என்று ஜகதாவை நிறுத்திவிடுகிறாள் லட்சுமி. தடுக்கும் கணவனை "..இப்படித் திமிரா இருக்கா.. வாரத்துல நாலு நாள் லேட்டு..அவ்வளவு வேலையும் நான் தான் செய்யணும்... என் தலை விதி! இங்கே வீட்டுலயும் சாகணும்.. அங்கே பள்ளிக்கூடத்துல பிள்ளைகளோட மாரடிக்கணும்!" என்றுப் பொருமி ஒடுக்குகிறாள். "சாயந்திரம் அம்மத்தாக் கிழவியை அழைச்சுட்டு வரச்சொல்லி, கணக்குத் தீர்த்து அனுப்பிடுங்க" என்கிறாள் கணவனிடம். மாலை ஜகதாவும் அம்மத்தாவும் வந்து லட்சுமியிடம் பேசுகிறார்கள். "இத பாரு அம்மத்தா.. நான் வேலை செஞ்சு அவளுக்கு சம்பளம் தர முடியாது" என்று லட்சுமி அவளிடமும் பொருமுகிறாள். "பாவம் தூங்கிட்டுமா.. சின்னப் புள்ள தானே?" என்கிறாள் அம்மத்தா. "தினம் ரெண்டாம் ஆட்டம் சினிமா பாத்தா?" என்று ஆத்திரப்படுகிறாள் லட்சுமி. "ஏம்மா.. இத்தனூண்டுப் பிள்ளையைத் தினம் ராச்சினிமா அனுப்பலாமா?" என்று கேட்டு ராகவன் சேர்ந்து கொண்டதும், அம்மத்தா அடக்க முடியாமல் அழத்தொடங்குகிறாள். "நிர்த்தாட்சண்யமாக" முறைக்கும் லட்சுமியிடம் முறையிடுகிறாள் அம்மத்தா. "நான் என்ன செய்யட்டும்? பேரனுக்கு இப்பத்தான் கல்யாணமாச்சு.. குடிசைல ஒரே ஒரு மறப்புத்தா. நானும் இந்தப் பிஞ்சும் ரோட்டுல படுக்கம். மழைத்தண்ணிக்கு என்ன செய்ய? அதான் கீத்துக் கொட்டாய்க்கு அனுப்புதம்!" என்று அம்மத்தா சொல்ல, லட்சுமி விதிர்த்துப் போகிறாள்.

பதினொரு வயதுச் சிறுமியை இரவுச் சினிமா அனுப்ப வேண்டியக் காரணம் புரிந்த அதிர்ச்சியில் தொண்டை அடைத்து கண்களில் நீர் முட்ட வைத்தக் கதை, இங்கே முடியவில்லை. முடிவைச் சொல்லப் போவதில்லை. அன்று இரவு தங்கள் வீட்டின் கூரை வேய்ந்த வசதியானப் படுக்கையில் லட்சுமி-ராகவன் வெளிப்படுத்தும் எண்ணங்கள் வழியே அற்புதமாகக் கதையை முடித்திருக்கிறார் ஆசிரியர்.

இரவு விளக்கைப் போட்டதும் தலை முதல் கால் வரை பறந்து படபடக்கும் கரப்பான் பூச்சிகள் போல கதையின் கருவும் நடையும் ஒட்டிக் கொண்டு படுத்துகின்றன. அலறியடித்து விலக நினைத்தாலும் சிக்கிக் கொண்ட உணர்வு. உரைநடையின் வழக்கு கொக்கி போட்டு இழுக்கிறது. மதுரை, திருநெல்வேலி வட்டத் தமிழ்வழக்கு என்று நினைக்கிறேன். ரசித்து மாளவில்லை. (அம்மத்தா என்றால் பாட்டியா?)

தெலுங்கு, மராட்டி, வங்காளி, ஆங்கிலம், பிரஞ்சு மொழிகளிலும், ."சார்க்" நாடுகளின் தொகுப்பிலும் சர்வதேசக் கதையாக வந்துள்ளது 'ஜகதா'. காஸ்யபனின் துணைவியார் திருமதி. முத்துமீனாட்சியால் சமஸ்கிருதத்திலும் இந்தியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்தி மொழிபெயர்ப்பு, நல்லியின் "திசை எட்டும்" விருதைப் பெற்றுள்ளது. முத்துமீனாட்சி அவர்களுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். கதை எழுதிய காஸ்யபனுக்குக் கோடி நன்றிகள்.

    e. கருகமணி: திருமணமான ஓராண்டுக்குப் பிறகு மாப்பிள்ளை சுப்பிரமணியனுடன், பிறந்த ஊருக்கு பம்பாயிலிருந்து வந்திருக்கும் பேத்தி வடிவைக் கண்டுத் தாத்தா பிரம்மநாயகம் பிள்ளைக்குப் பெருமிதம். இறந்து போன மனைவியை நினைவுபடுத்தும் முகம், நிறம். வடிவு அடிக்கடி முகம் கழுவிச் சீராக்கும் பழக்கத்தைப் பற்றிச் சலித்தாலும் மாப்பிள்ளை தன் பேத்தியை ஆராதிக்கிறான் என்பது தெரிந்து குளிர்ந்து நெகிழ்ந்து போகிறார் தாத்தா. தான் வாங்கிக் கொடுத்தப் பொன்னில் கோர்த்த கருகமணி மாலை பேத்தி கழுத்தில் மின்னுகிறது. மராத்தியருக்கு கருகமணி மாலை தாலி போல என்று உடனிருந்தவர் அறிவுறுத்தியதன் பேரில் வடிவு அதைக் கழற்றவேயில்லை. வடிவு எழுந்து வருகையில் "அம்பாசமுத்திரம் சின்ன சங்கரன் கோவில் கோமதி அம்மன் தவசுக்கு வருவது போல்" இருக்கிறது தாத்தாவுக்கு. பேத்தியைக் கண்டு "ஆத்தா! ஆத்தா!" என்று நெகிழ்ந்து போகிறார். ஒரு வாரம் ஊட்டி சென்று தங்கி வரலாம் என்று பேத்தியும் மாப்பிள்ளையும் கிளம்புகிறார்கள். சன்னலோரமாகப் பஸ் பயணம் செய்யும் இதத்தில் லயித்துப் போகிறாள் வடிவு. தோளில் சாய்ந்துத் தூங்கும் கணவனிடம், தான் கர்ப்பமுற்றிருக்கும் செய்தியை டாக்டர் உறுதி செய்ததும் சீக்கிரம் சொல்லவேண்டும் என்று உள்ளூர சந்தோஷப்படுகிறாள். கோயமுத்தூர் போகும் வழியில் சூலூரைத் தாண்டி ஒரு இடத்தில் பஸ் நிற்கிறது. அடிக்கடி முகத்தைச் சீர்படுத்திக் கொள்ளும் வழக்கத்துக்கு அடிமையான வடிவு, மேக்கப் பெட்டியை எடுத்துக் குளிர் நீரில் பஞ்சைத் தொட்டு முகம் துடைக்கத் தொடங்குகிறாள். 'வேட்டியைத் துடைக்கு மேலே மடித்துக் கட்டி பனியனும் போட்ட' சிலர் பஸ்சின் பக்கவாட்டில் தடிகளால் தாக்குகின்றனர். ஒரு கும்பல் 'போலீஸ் போலீஸ்' என்று கூவுகிறது. பல குரல்கள், கூச்சல். "ஏன்றே! பாத்துச் செய்யணும்" "மீசை இருக்காது, தாடி வச்சிருப்பான்" "பொம்பளைனா பொட்டிருக்காது, கழுத்துல கருகமணி இருக்கும்"... கூச்சல் கேட்டு வடிவு சன்னல் கதவைத் திறந்து பார்க்கிறாள். பஸ்சை நோக்கி ஒருவன் ஓடிவருவது அவளுக்குத் தெரிகிறது. அவளுடைய பொட்டில்லாத முகமும் கருகமணிக் கழுத்தும் அவனுக்குத் தெரிகிறது.

இவ்வளவு தான் எழுதியிருக்கிறார். ஐந்து பக்கங்களுக்கும் குறைவான கதை எனலாம். இல்லை, ஐநூறு பக்கங்களுக்கும் மிகுந்தக் கதை எனலாம். காரணம், கதையே இதற்குப் பிறகுதான் தொடங்குவதாக நினைக்கிறேன். வாசகர் மனதில் உருவாகும் ஆழமானக் கதை.

கதை ஒரு இந்து-முஸ்லிம் கலவரக் காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. கர்ப்பமுற்றிருக்கும் நற்செய்தியைக் கணவனிடம் பகிர்ந்து கொள்ள விரும்பும் இளம் மனைவி.. பிறந்த ஊரின் அமைதியையும் பாதுகாப்பையும் நாடி பம்பாயிலிருந்து வந்திருக்கும் பெண்.. கணவனுடன் இன்பச் சுற்றுலா செல்லும் நேரம்.. இவற்றையெல்லாம் அழகாக விவரிக்கிறார் ஆசிரியர். ஒரு கட்டத்தில் பேத்தியை விடப் பாட்டி, தன் மனைவி, இன்னும் சிவப்பு என்று தாத்தா நினைப்பதை இப்படி விவரிக்கிறார்:"பாட்டி வெற்றிலை போட்டால் சங்குக் கழுத்தில் சாறு இறங்குவது தெரியும்..".

அத்தனை அருமையாக எல்லாவற்றையும் விவரித்தவர், கதையின் முடிவில் (?) காரணத்தோடு எதையும் விவரிக்கவில்லை.

"பொம்பளைனா பொட்டிருக்காது, கழுத்துல கருகமணி இருக்கும்" என்ற சாதாரண வரிகள் இப்போது அச்சமூட்டுகின்றனவே? வருவோர் இந்துக்களா? முஸ்லிம்களா? வெறியர்களா? கலவரக்காரர்களா? மதப்போர்வையில் முகம் மறைக்கும் சமூக விரோதிகளா? எதற்காக பஸ்சை நிறுத்தினார்கள்? இந்தப் பாவிப்பெண் இப்போதா மேக்கப் போடத் தொடங்க வேண்டும்? ஐயோ, இவளுடைய பொட்டில்லா நெற்றியையும் கருகமணித் தாலியையும் பார்த்துவிட்டானே? முஸ்லிம் பெண் என்று நினைத்து விட்டானா? இவளைக் கொல்லப் போகிறானா? "ஏன்றே.. பாத்துச் செய்யணும்" என்றார்களே? அந்த வண்டியில் பிற முஸ்லிம்களின் கதி? இது என்ன வக்கிரக் கூட்டம்? இனக்கலவரம்? மதக்கலவரம்? இரத்த ஆறு ஓடப்போகிறதா? இவள் வயிற்றில் இருக்கும் இன்னும் தீர்மானிக்கப்படாத, அப்பனுக்குக் கூட விவரம் தெரியாத, உயிர் துடிக்கத் தொடங்கிய, கள்ளங்கபடமற்றச் சிசு.. ஐயோ.. அதற்கு என்ன ஆகும்? வடிவின் தாத்தா எப்படித் துடிப்பார்? யாராவது குறுக்கிட்டு ஒரு வேளை மனித நேயம் வெல்லுமோ? மனம் கலங்குகிறது. தவிக்கிறது.

இத்தனை உணர்வுகளை வாசகர் மனதில் கொண்டு வந்தாலும் அதற்கானப் பின்புலத்தை மட்டுமே கதையாக எழுதியிருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக வாசகரைத் தள்ளிக் கலவரத்தின் விளிம்பில் வைத்துவிட்டுக் காணாமல் போகிறது கதை. படித்ததும் பத்து நிமிடமாவது வடிவுக்காக "ஐயோ ஐயோ!" என்று துடிக்காத, பதறாத, மனமே இருக்காது என்று நினைக்கிறேன். பாழும் மதவெறி! என்னவெல்லாமோ நினைக்கிறது மனம். எதையும் எழுதாமல் எல்லாவற்றையும் படிக்க வைத்த காஸ்யபனின் வித்தை உண்மையில் வியக்க வைக்கிறது.

    சு.சமுத்திரத்தின் ஒற்றை வரியை மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன்.

'கருகமணி' சிறுகதைத் தொகுப்பு, பாவை பப்ளிகேஷன்ஸ் 2002 வெளியீடு, ரூ.30

2012/09/07

சாத்தியம், இது சத்தியம்
    லைப்பைப் படித்ததும், ஏதோ ஏ ஆர் ரெஹ்மான் அறிமுகப்படுத்திய அந்நியத் தமிழ்க்குரல் பற்றியது என்று எண்ண வேண்டாம். இது சாத்தியம் சத்தியமான கதை. அசலில்.

    2004 வருடத்திய ஒரு அமைதியான மார்ச் மாதக் காலை. முகத்திலடிக்கும் பனிக்குளிரைப் பொறுத்துக் கொண்டு, கேதலின் வீட்டுப் படியேறினார் பக்கத்து வீட்டு பியோனா. இரண்டு முறை மணியடித்துக் கதவைத் தட்டிப் பார்த்தவர், கதவு லேசாகத் திறந்திருப்பதைக் கண்டு அழுத்தித் திறந்தார். "கேதலின்" என்று அழைத்தபடி உள்ளே சென்ற பியோனா, சில நொடிகளில் காட்டுத்தனமாக அலறினார்.

குளியற்தொட்டியில் முகம் கவிழ்ந்து இறந்து கிடந்தார் கேதலின். பின் கழுத்தில் அடிபட்டு ரத்தம் வடிந்துக் காய்ந்திருந்தது. பக்கமாகத் திரும்பிய முகத்தின் பாதித் திறந்தக் கண், அழுகியிருந்தது.

'தற்கொலை' என்றுத் தீர்வாகி, கேதலினை அவருடைய பெற்றோர் உடன்பிறப்பைத் தவிர மற்றவர் மறந்துவிட்டனர்.

    அக்டோபர் 2007ல் ஸ்டேசி பீடர்சன் காணாமல் போனார். காணோம் என்றால் 'காணோம்'. என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியவில்லை. தன் மனைவி இன்னொரு ஆணுடன் ஓடியிருக்க வேண்டும் என்றார் கணவர் ட்ரூ பீடர்சன்.

ட்ரூ ஒரு பழுத்த சிகாகோ காவல் அதிகாரி. பத்துச் சினிமா வில்லன் ஹீரோக்களை காலை நாஷ்டாவுக்கு அமுக்கிச் சாப்பிடும் தோரணையும் நடையும் பேச்சும் வீச்சும் கொண்டவர். அவர் மீது சந்தேகம் வலுக்கத் தொடங்கியது.

காரணம், 'காணாமல்' போன ஸ்டேசி அவருடைய நான்காவது மனைவி. அதைவிட முக்கியக் காரணம், குளியற்தொட்டிக் கேதலின் அவருடைய மூன்றாவது மனைவி.

ட்ரூவின் மனைவிமார்கள் அனைவரும் தற்கொலை செய்து கொண்டார்கள் அல்லது 'காணாமல்' போனார்கள் என்பது உறுத்தத் தொடங்கியது. சந்தேகத்தின் அடிப்படையில் எதுவுமே செய்யமுடியாதே? இருந்தாலும் ட்ரூவை நிறைய பேர் வெறுத்தார்கள். அதைவிட நிறைய பேர் பயந்தார்கள். நிச்சயம் கொலை செய்திருப்பான் என்றே சொன்னார்கள். பரபரப்பு. 'பாதகனா நம்மை பாதுகாப்பது?' என்று வசனம் பேசினார்கள். ஒன்றும் செய்ய முடியவில்லை - ட்ரூவின் வேலையைப் பறிப்பதைத் தவிர.

பீடர்சன் கவலைப்படவில்லை. தற்கொலை செய்து கொண்டவர்களும் ஓடிப்போனவர்களும் பற்றி டிவியில் பேட்டிகள் கொடுத்தார். தன் வேலை, வீரம், ஆண்மைக்குப் பெண்கள் அடிமையாவதைச் சாதாரணமாகச் சொல்லிச் சிரித்தார். தன்னுடன் டின்னருக்கு வரும்படி இளம்பெண்களை டிவி நிகழ்ச்சிகளில் அழைத்தார். ஒவ்வொரு பேட்டியிலும் ஒன்றிரண்டு பெண்கள் 'ட்ரூ இஸ் ட்ரூ' என்று D,T மாற்றி உருகினர்.

    சிகாகோ அரசு வக்கீல் ஜேம்ஸ் க்லேஸ்கோ இதை வேறு கண்ணோட்டத்தில் பார்த்தார். இறந்த மனைவிகள், சந்தேகத்திடமான சூழ்நிலை, அக்கம்பக்கத்துப் பேச்சு... போதாக்குறைக்கு ஆணவத் தம்பட்டம். ட்ரூ பீடர்சனை ஒரு கை பார்த்துவிடுவது என்று களத்தில் இறங்கினார் ஜேம்ஸ். கேதலின் வழக்கை மறுபரிசீலனைக்கு எடுத்துக் கொண்டார்.

2008ல் கேதலினின் உடலைக் கல்லறையிலிருந்து எடுத்து மறு பரிசோதனை செய்தார்கள். இம்முறை கொலை என்று தீர்மானமானது.

பீடர்சன் மேல் சந்தேகத்தின் நிழல் சற்று ஆழமாகப் படியத் தொடங்கியது. கேதலினின் தோழிகள், ஸ்டேசியின் சகோதரிகள் என்று ஒவ்வொருவராகத் தங்களுக்குத் தெரிந்ததையும் கேள்விப்பட்டதையும் சொல்லத் தொடங்கினார்கள். "கேதலினை நான் தான் கொன்றேன்" என்று ட்ரூ தன்னிடம் சொன்னதாக ஸ்டேசி தன்னிடம் சொன்னார் என்றார் ஒருவர். "ஸ்டேசியைக் கொல்ல ஆள் தேடச்சொல்லி ட்ரூ தனக்கு 25000 டாலர் தர முன்வந்தார், பிறகு திடீரென்று ஒரு நாள் ஆள் தேட வேண்டாம் என்று சிரித்துக் கொண்டே சொன்னார்" என்றார் அவருடைய நண்பர். "கேதலின் இறந்த அன்று, ட்ரூ ஒரு குப்பைப் பையுடன் நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் நுழைந்தார்" என்று ஸ்டேசி சொன்னதாக அவருடைய சகோதரர் சொன்னார். தனக்கு மிகவும் "பயமாக இருப்பதாகவும்" ட்ரூ தன்னைக் "கொல்லக் கூடும்" என்றும் ஸ்டேசி சொன்னதாக இன்னொரு தோழி சொன்னார்.

2009ல் ட்ரூ கைது செய்யப்பட்டார்.

ட்ரூ மீது எந்தக் குற்றமும் முழுமையாகச் சுமத்தப்படவில்லை. ஸ்டேசி மறைவு குறித்து அவர் சொன்னத் தகவல்களைச் சரிபார்க்க முடியவில்லை என்று 'சந்தேகத்தின்' பேரில் கைது செய்யப்பட்டார்.

"இதெல்லாம் ஒரு கேசா? இவர் சொன்னார் அவர் சொன்னார் என்று வதந்திகளை வைத்து ஜோடித்த கேஸ் நிலைக்காது" என்று ட்ரூவின் வக்கீல் குழு, டிவி மற்றும் உள்ளூர் ஊடகங்களில் தினம் கிண்டல் செய்தார்கள்.

அமெரிக்க டிவி சேனல்கள் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு ட்ரூ கதை பேசின. பிரபல டைரக்டரின் இயக்கத்தில் ட்ரூவின் கதையைப் படமெடுத்து டிவியில் வெளியிட்டார்கள். "கொலை செய்துவிட்டுக் கவலைப்படாமல் டிவியில் கூத்தடிக்கிறான் பார்.. இதெல்லாம் அமெரிக்காவில் தான் நடக்கும்" என்று பொதுஜனம் பொங்கியது, பொறுமியது, புலம்பியது, பயந்தது - தொடர்ந்து டிவி பார்த்தது.

    கேதலின் கொலை வழக்குத் தொடங்கியதும் அரசுத்தரப்பில் வரிசையாகத் தவறு செய்தார்கள். ஏற்க முடியாது என்று சொன்ன சாட்சிகளையும் காரணங்களையும் திரும்பத் திரும்பக் கொண்டு வந்ததால், நீதிபதிக்குக் கோபம் வந்து ஒரு முறை ஜேம்ஸ் குழுவைப் பொதுவில் விளாசினார். "கேதலின் கொலை செய்யப்பட்டார் என்பதே நிரூபணமாகாத நிலையில் இன்னும் சந்தேகத்துக்கிடமான சாட்சிகளை வைத்து, ட்ரூ தன் நான்காவது மனைவியையும் கொலை செய்தார் என்று ஜோடிக்காதீர்கள்" என்று அந்தக் குற்றச்சாட்டைத் தூற எறிந்தார். "கேதலின் கொலை வழக்கு என்றால் ஆட்டத்துக்கு வாருங்கள் இல்லையென்றால் ஓடிப்போங்கள், சூ!" என்று எரிச்சல் பட்டார்.

ட்ரூவின் வக்கீல் குழு ஒரு படி மேலே போய் கூத்தின் இசையும் கூத்தின் முறையும் தாமே என்றது. ரஜினிகாந்தின் பஞ்ச் டயலாகெல்லாம் பிச் வாங்குமளவுக்கு இந்த வழக்கைக் கேலி செய்தது.

தாம் மட்டும் 'சும்மா இருப்பானேன்' என்று ஜூரிக் குழுவினர், சொல்லி வைத்தாற்போல் தினமும் ஒரே கலரில் சட்டை போடுவது அல்லது முடியலங்காரம் செய்வது என்று பலவகையிலும் கூத்தில் கலந்து கொண்டார்கள்.

"அப்பா நிச்சயமாகக் கொலை செய்திருக்க முடியாது. மூன்றாம் மனைவி இறந்துவிட்டாளென்று என் அப்பா அன்றிரவு பனிரெண்டு மணிக்கு மிக அழுதார். எனக்கு அப்போது எட்டு வயது. நன்றாக நினைவிருக்கிறது" என்று புத்திசாலித்தனமாக சாட்சி சொன்னார் ட்ரூவின் டீனேஜ் மகன். சாட்சிக் கூண்டில் ஏறுவார், மாட்டார் என்று தினமொரு சந்தேகத்தையும் சைட் பெட்களையும் கிளப்பிவிட்டார் ட்ரூ.

கேஸ் தள்ளுபடியாகும், ட்ரூ இதைப் புத்தகமாக எழுதுவார், நிறைய பணம் பண்ணுவார் என்று ஐந்தாவது ஆறாவது மனைவிகளைப் பற்றிக் கதைபேசத் தொடங்கியது பொதுஜனம். நானும்.

இந்த வாரம், ட்ரூ பீடர்சன் குற்றவாளி என்று ஜூரிக்குழு தீர்ப்பு வழங்கியது.

    ட்டம் எனக்கு பிடிக்கும். பழைய வழக்குகளை விரும்பிப் படிப்பேன். கிறுக்குத்தனமான வழக்கு ஜோடனைகள் என்றால் இன்னும் விரும்பிப் படிப்பேன். அந்த வகையில் பீடர்சன் வழக்கு எனக்குப் பெரும் பொழுதுபோக்குச் சாதனமானது. வழக்கை விசாரணைக்கு ஏற்றதே வியப்பு என்றால், சாட்சி வாதம் என்று இழுத்துக் கடைசியில் ட்ரூ குற்றவாளி என்ற தீர்ப்பும் கிடைத்தது இன்னும் பெரிய வியப்பு. 'நேர்ந்த அக்கிரமங்களுக்குச் சரியான தீர்வு கிடைத்துவிட்டது' என்று ஒரு சாராருக்கு நிம்மதி. 'இந்த வழக்கு முடியவில்லை, சாத்தியக்கூறு சட்டப்படி செல்லாது சுப்ரீம் கோர்ட் வரை போவோம்' என்று இன்னொரு சாரார்.

நிரூபிக்கப்படாத குற்றம் (கொலை 'சாத்தியம்'), விளங்காத நோக்கம், சம்பவம் நடந்து ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு டிஎன்ஏ மற்றும் தோண்டியெடுத்தப் பிணச் சோதனை, இறந்து போனவர்கள் இறக்குமுன் தங்களிடம் சொன்னதாகச் சொல்லும் சாட்சிகள், 'ஆளைப்பார், நிச்சயம் கொலை செய்திருப்பான்' பாணி சட்டமன்ற வாதங்கள், 'குளியல்தொட்டியில் தடுக்கி விழுந்தால் பின்கழுத்திலும் மார்பிலும் ஒரே நேரத்தில் அடிபடும் சாத்தியம் உண்டு' போன்ற பிரமிக்கத்தக்க பேதாலஜிஸ்ட் வாதங்கள் - எல்லாம் சேர்ந்து, இது சட்ட வரம்புகளுக்குட்பட்ட வழக்கா அல்லது பொதுமக்களை வைத்துச் செய்யும் காமெடியா என்று எவரும் சிறிதும் சிந்திக்கவில்லை.

    விசித்திர வழக்கு. வியப்பான தீர்ப்பு. ட்ரூ குற்றவாளியா இல்லையா என்ற என் கருத்து இங்கே அவசியமில்லை. வழக்கு முடிந்துவிட்டது. எனினும் இந்த வழக்கைக் கவனித்து நான் கற்ற சில பாடங்களும் தோன்றிய இன்னும் சில எண்ணங்களும் சுவாரசியமானவை என்பதால் பகிர விரும்புகிறேன்.

முதலில் சட்டம். ட்ரூவைக் கைது செய்ய இயலாமல் தவித்தது அரசு. எந்த அடிப்படையில் கைது செய்வது? குற்றம் நடந்ததா என்பதே சந்தேகம். ஆனால் ஊரெல்லாம் 'ட்ரூ குற்றவாளி.. தொடர் கொலை செய்தவனை சமூகத்தில் விட்டு வைத்திருக்கிறது அரசு' போன்ற பேச்சுக்கள் வலுக்கத் தொடங்கியதும், அதன் பாதிப்பை உணர்ந்து ஏதாவது செய்யவேண்டும் என்று துடித்தது. 2008 வாக்கில் ஒரு சட்டத்தை அவசரமாக மன்றமேற்றி ஆமோதித்து அமலுக்குக் கொண்டு வந்தது. 'சாத்தியக்கூறு சாட்சிகளை சில குற்றங்களுக்கு அனுமதிக்கலாம்' என்ற அந்தச் சட்டம் இலினாய் மாநிலத்தில் மட்டுமே அமலில் இருக்கிறது. இந்தச் சட்டத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ட்ரூவின் கைது, வழக்கு, விசாரணை, வாதம் எல்லாம் நடந்து இப்போது தீர்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்குக்காகவே ஏற்படுத்தப்பட்ட சட்டம், 'ட்ரூ சட்டம்' என்றே இப்போது வழங்கப்படுகிறது. ட்ரூ குழுவினர் அப்பீல் செய்வது இருக்கட்டும். சாத்தியகூறின் அடிப்படையில் கொலை வழக்குகளைத் தீர்மானிக்கும் precedent ஏற்பட்டிருப்பது ஒரு அபாயம் என்று நினைக்கிறேன். ட்ரூ சட்டம் unconstitutional என்று நினைக்கிறேன். ட்ரூ சட்டம் அமெரிக்காவின் மற்ற மாநிலங்களிலும், பிறகு மற்ற நாடுகளிலும் அமலுக்கு வரும் சாத்தியம் உண்டு என்றும் நினைக்கிறேன்.

இரண்டாவது, 'வக்கீல்தனம்'. வாதாடுவதை விட வக்கீல்தனம் முக்கியம். வழக்கில் வெற்றி பெற எண்ணும் ஒரு வக்கீல் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கும் சொல் வக்கீல்தனம். ட்ரூவின் குழு ஏறக்குறைய வெற்றி பெற்றுவிட்ட நேரத்தில் தடுக்கி விழுந்தது. கேதலினின் விவாகரத்து வக்கீலை சாட்சிக்கு அழைத்தது. "காணாமல் போன ஸ்டேசி ஒரு பேராசைக்காரி, தனக்கு கேதலினைப் போல பெரும் நஷ்ட ஈடு கேட்டு அதே வக்கீலை நாடினார் - ஸ்டேசி ஒரு பணத்தாசைப் பிசாசு" என்று ஜூரிக்குழுவை நம்பவைக்க நினைத்து, கேதலினின் வக்கீலைக் கூண்டில் ஏற்றியது. மாறாக, "ஸ்டேசி ஒரு பிஞ்சுப்பூ, பயந்து நடுங்கிய பைங்கிளி, கேதலின் மீதிருந்த வெறுப்பையும் கொலை செய்ய நேர்ந்ததையும் தன்னிடம் படுக்கையில் பகிர்ந்து கொண்ட பாவி ட்ரூவுடன் வாழ்வது கொலைக்கு உடந்தையாகும் தன்மையது என்று எண்ணிய உத்தமப் பத்தினி" என்று சாட்சி சொன்ன அந்த வக்கீல், பின்னி எடுத்துவிட்டார். கோர்ட் இன்னமும் சும்மா அதிருது என்கிறார்கள். 'சாத்தியக்கூறு' சட்டத்தை முழுதுமாகப் பயன்படுத்திக் கொண்ட சாட்சி வக்கீலுக்கு இருந்த வக்கீல்தனம், அரசுத் தரப்பிலோ ட்ரூ தரப்பிலோ இல்லாதது வேடிக்கை.

மூன்றாவது, பதவி அரசியல். நிச்சயமாகத் தோற்றுவிடுவார் என்றுக் கருதப்பட்ட அரசு வக்கீல் ஜேம்ஸ் க்லேஸ்கோ, வரும் நவம்பர் தேர்தலில் வெற்றி பெறுவது இப்போது உறுதியாகிவிட்டது. ம்ம்ம்.. இதை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே புரிந்து வைத்திருந்தாரோ? கைது செய்த நேரம்..சட்டம் வருவதற்காகக் காத்திருந்தது போல் தோன்றுகிறதே? சட்டம் வந்ததால் வெற்றி வந்ததா? வெற்றி வேண்டியே சட்டம் வந்ததா?

நான்காவது, பொது அரசியல். 'சந்தேகத்துக்கிடமான ஒரு தொடர்கொலைகாரன் சமூகத்தில் நடமாடுகிறான், அதுவும் போலீஸ்காரன்!' என்றப் பொதுமக்களின் பீதியைக் கட்டுப்படுத்தக் கொண்டு வந்த சாமர்த்தியமான அரசியல் செய்கை, இந்தச் சட்டம் என்பது எனக்குப் புரிகிறது. அரசியல் சாமர்த்தியத்தை மெச்சி வியக்கிறேன்.

ஐந்தாவது, வேதாந்தம். 'கடவுள் சாட்சியாக நான் சொல்வதெல்லாம்...' என்பதற்கு இப்போது புதுப் பொருள் கிடைத்திருக்கிறது. சந்தேகத்துக்கிடமான ஒன்றின் சாட்சியாக நான் சொல்லும் சந்தேகத்துக்கிடமானவை எல்லாம் உண்மை. ஆகா! இது தானா மெய்ப்பொருள்? எங்கே என் காவியும் தாடியும்?

கடைசியாகத் தன்னிலைத் தெளிவு: என் மனைவி, மக்கள், முன்னாள் காதலிகள், பின்னாள் காதலிகள், உடன்பிறப்பு, பெற்றோர், சுற்றம் மற்றும் முன்னாள் இன்னாள் நண்பர்கள், அலுவலகத்தில் எனக்குக் கீழும் மேலும் வேலை பார்த்தவர்கள், வீட்டுத் தோட்டக்காரர், எங்கள் வீட்டு நாய், முக்கியமாகச் சமீபத்தில் இறந்து போன நாய் - யாரையும் எதையும் விட்டுவைக்க மனமில்லை, எல்லோருக்கும் சென்ற இரண்டு நாட்களாக என் நிலையைத் தெளிவுபடுத்தி வருகிறேன். விட்டுப்போகச் சாத்தியமுள்ளப் பிறர்க்கு, இந்தப் பதிவின் மூலம் தெளிவுபடுத்துகிறேன். "கொன்னுடுவேன் கொன்னு" என்று நான் எப்போதாவது சொல்லியிருந்தால் அது சாத்தியமாக, சே, சத்தியமாக விளையாட்டுக்கு.

2012/09/01

'மலைப்பாதையில் நடந்த வெளிச்சம்'

    "கவிதைகளைப் புத்தகமாக வெளியிட, நிறையப் பதிப்பகங்கள் விரும்புவதில்லை" என்று சில பதிப்பக உரிமையாளர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். பல்வேறு காரணங்கள் சொன்னாலும், யதார்த்தமானதாகத் தோன்றிய இரண்டு காரணங்களுள் ஒன்று: "கதை, நாவல்னு சொன்னா ஒரு சுருக்கத்தை அட்டையிலயோ கதையோட தொடக்கத்துலயோ போட்டு, படிக்கிறவங்களை கொஞ்சம் ஈர்க்க முடியும். பத்து வரிக் கவிதையில என்னாத்த சுறுக்குறது? பத்து பதினஞ்சு வரின்னு அம்பது கவிதைங்கள எழுதிடறாங்க. அதுல ரெண்டோ மூணோ படிச்சு முடிச்சதும் 'ஆகா'னு சொல்லத் தோணுது. யாருக்கு எந்த ரெண்டு மூணுல 'ஆகா' கிடைக்குமுன்னு சொல்ல முடியாது. கவிதைப் புத்தகம் வாங்குறவங்க மொதல் பக்கங்களைப் புரட்டிப் பாக்குறாங்க. அவங்களோட 'ஆகா' முதல் அஞ்சு கவிதைங்கள்ள வரலின்னா அந்தப் புத்தகத்தை வாங்க மாட்டாங்க.. கவிதை வெளியிடறது வணிக நோக்குல பாத்தீங்கன்னா சொந்த செலவுல சூனியம் வச்சுக்கறாப்புல.. ரொம்ப நஷ்டம்..".

கவிதை எழுதுவது சிரமம் என்றால், படிப்பது இன்னும் சிரமம் என்பது என் கருத்து. கருவை வெளிப்படையாகச் சொன்னால் அதன் எளிமையே கவிதையின் எதிரியாகிவிடுகிறது. கொஞ்சம் மறைபொருளாகச் சொன்னாலோ, புரியாத எழுத்தாகிச் சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது. சிறுகதையின் "ஓட்ட" வசதி, கவிதையில் இல்லை என்று நினைக்கிறேன் - கதையைக் கவிதையாகச் சொன்னாலொழிய. அதனால் கவிதை எழுதுவோர் மீது கொஞ்சம் பரிதாபமும் நிறைய பிரமிப்பும் உண்டாகிறது (எனக்கு).

பத்மஜா நாராயணன் என்னை அடிக்கடி பிரமிக்க வைத்தார் என்பேன்.

    ழுபது கவிதைகளின் தொகுப்பான 'மலைப்பாதையில்..', ஒரு ரயில்/விமானப் பயண அலுப்பு நீக்கியாகவோ அல்லது தூக்கம் கலைந்த மதியப் பொழுதின் தேநீர்த் துணையாகவோ, இதமாக இணைந்து கொள்ளும் புத்தகம். அரை மணியில் புரட்டிவிடலாம். பிடித்த ஆகா கவிதைகளைத் திரும்பி ரசிக்கலாம். நிறைய ஆகா கவிதைகள் இருந்தாலும், என் ஆகா கவிதையை எழுபதாவது கவிதையாகக் கொடுத்திருக்கிறார் பத்மஜா. (நல்ல வேளை, புத்தகங்களை கடைசிப் பக்கத்திலிருந்து மேலோட்டமிடும் வழக்கம் எனக்கிருக்கிறது! :-)

'காலோவியம்' என்ற அந்தக் கவிதையின் கடைசி நான்கு வரிகள் தேவையில்லையோ என்று தோன்றினாலும், மிகவும் ரசித்தக் கவிதை.
        சிறிது மூடியிருந்த
        கதவின் இடையில்
        தெரிந்த
        உன் பாதங்களுக்கேற்ற
        முகத்தை
        நான் மனதில்
        வரைந்துவிட்டேன்.
            வரைந்த அது
            சிதையப்போகிறது
            தயவுசெய்து
            என் கண்படாமல் போ நீ!

    'ஒவ்வொரு புடவையும் நெய்யப்படும் போதே தான் யாருக்கெனத் தீர்மானித்துக் கொள்கிறது' என்று தொடங்குகிறது, 'புடவை' எனும் கவிதை. வாசிப்பை அங்கேயே நிறுத்தி கவிதையை எப்படி முடித்திருப்பார் என்று கற்பனை செய்யத் தோன்றியது. கவிதையை முடித்த விதம் அருமை.

    'வெளிச் சுவர் லவ்' கவிதையில் வெளியிடாக் காதலின் அதிர்ச்சியும் வலியும் சுற்றிச்சுற்றி வந்தது.

    'நாய்க் குடைகள் மலர்ந்த கொல்லை'யில் மேலாக்கில்லாமல் வெளியே வந்த ராஜியின் நிலையைக் கற்பனை செய்து... கவிதையை ரசிக்க முடிந்தது.

    'கதவிலக்கம் தொலைத்த வீடு' கவிதையின் தொடக்கம் அருமை (நல்ல வேளை - முதல் கவிதையாக அமைந்தது).

    'கன்பர்ம்ட்' கவிதை, நல்ல சிறுகதைக்கான தளம். இது போல் ஒரு கிராதக 'அடுத்த வீட்டு மாமியை' நாம் எல்லாருமே சந்தித்திருப்போம் என்று தோன்றுகிறது.

    'எல்லாப் பொறிகளிலும் இலகுவாய் போய்ச் சிக்கிக் கொள்கிறது சுயம்' என்ற கவிதையைப் படித்து வாய் விட்டுச் சிரித்தேன். 'பொறியில் சிக்குதல்', நகைச்சுவைக்காக எழுதப்பட்டக் கவிதையல்ல என்று தெரிந்தும். தன்னிரக்கமா தெரியவில்லை.

    'உடைந்த நகங்களும் கூர் பற்களும்' தலைப்பே கவிதை போல் பட்டது.

    'தேடும் தேடல்' கவிதையின் 'யாருக்காவது யாரோவாக இருக்கும் சாத்தியம் வேண்டும் என ஆசை கொண்டு யாரிலாவது யாரையோ தேடுகிறேன்' வரிகளைப் படித்ததும் இதில் இலக்கியம் இருக்கிறதோ என்ற லேசான பயம் உண்டானது.

    'புரிதல், புரிந்து கொள்ளுதல் என்ற இரண்டு தண்டவாளங்களின் இடையே நகர்கிறது நம் நட்பு' என்ற கவிதையை அதற்குப் பிறகு தொடர்ந்து படிக்க இயலாமல் அங்கே ஏற்பட்ட நிறைவு காலோவியமாய் மனதைக் கட்டியது.

    'மிக மிக மெலிதான தொடுதலுக்கு உன் விரல்கள் ஆயத்தம் கொள்வதை ஏனோ உன் கண்கள் முன்னதாகவே வெளிப்படுத்தி விடுகின்றன' - இன்னொரு காலோவியக் கவிதை.

    'இருளின் நிறம்' கவிதையில் மூக்குத்தியின் ஒளியை மறைக்கத் துடிக்கும் காதலரின் அவசரம், சிருங்காரம். Class.

கலாப்ரியாவின் முன்னுரையும் (அணிந்துரை?) சுவாரசியம்.

மலைப்பாதையில் நடந்த வெளிச்சம், டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு, ரூ.70.