2012/09/07

சாத்தியம், இது சத்தியம்
    லைப்பைப் படித்ததும், ஏதோ ஏ ஆர் ரெஹ்மான் அறிமுகப்படுத்திய அந்நியத் தமிழ்க்குரல் பற்றியது என்று எண்ண வேண்டாம். இது சாத்தியம் சத்தியமான கதை. அசலில்.

    2004 வருடத்திய ஒரு அமைதியான மார்ச் மாதக் காலை. முகத்திலடிக்கும் பனிக்குளிரைப் பொறுத்துக் கொண்டு, கேதலின் வீட்டுப் படியேறினார் பக்கத்து வீட்டு பியோனா. இரண்டு முறை மணியடித்துக் கதவைத் தட்டிப் பார்த்தவர், கதவு லேசாகத் திறந்திருப்பதைக் கண்டு அழுத்தித் திறந்தார். "கேதலின்" என்று அழைத்தபடி உள்ளே சென்ற பியோனா, சில நொடிகளில் காட்டுத்தனமாக அலறினார்.

குளியற்தொட்டியில் முகம் கவிழ்ந்து இறந்து கிடந்தார் கேதலின். பின் கழுத்தில் அடிபட்டு ரத்தம் வடிந்துக் காய்ந்திருந்தது. பக்கமாகத் திரும்பிய முகத்தின் பாதித் திறந்தக் கண், அழுகியிருந்தது.

'தற்கொலை' என்றுத் தீர்வாகி, கேதலினை அவருடைய பெற்றோர் உடன்பிறப்பைத் தவிர மற்றவர் மறந்துவிட்டனர்.

    அக்டோபர் 2007ல் ஸ்டேசி பீடர்சன் காணாமல் போனார். காணோம் என்றால் 'காணோம்'. என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியவில்லை. தன் மனைவி இன்னொரு ஆணுடன் ஓடியிருக்க வேண்டும் என்றார் கணவர் ட்ரூ பீடர்சன்.

ட்ரூ ஒரு பழுத்த சிகாகோ காவல் அதிகாரி. பத்துச் சினிமா வில்லன் ஹீரோக்களை காலை நாஷ்டாவுக்கு அமுக்கிச் சாப்பிடும் தோரணையும் நடையும் பேச்சும் வீச்சும் கொண்டவர். அவர் மீது சந்தேகம் வலுக்கத் தொடங்கியது.

காரணம், 'காணாமல்' போன ஸ்டேசி அவருடைய நான்காவது மனைவி. அதைவிட முக்கியக் காரணம், குளியற்தொட்டிக் கேதலின் அவருடைய மூன்றாவது மனைவி.

ட்ரூவின் மனைவிமார்கள் அனைவரும் தற்கொலை செய்து கொண்டார்கள் அல்லது 'காணாமல்' போனார்கள் என்பது உறுத்தத் தொடங்கியது. சந்தேகத்தின் அடிப்படையில் எதுவுமே செய்யமுடியாதே? இருந்தாலும் ட்ரூவை நிறைய பேர் வெறுத்தார்கள். அதைவிட நிறைய பேர் பயந்தார்கள். நிச்சயம் கொலை செய்திருப்பான் என்றே சொன்னார்கள். பரபரப்பு. 'பாதகனா நம்மை பாதுகாப்பது?' என்று வசனம் பேசினார்கள். ஒன்றும் செய்ய முடியவில்லை - ட்ரூவின் வேலையைப் பறிப்பதைத் தவிர.

பீடர்சன் கவலைப்படவில்லை. தற்கொலை செய்து கொண்டவர்களும் ஓடிப்போனவர்களும் பற்றி டிவியில் பேட்டிகள் கொடுத்தார். தன் வேலை, வீரம், ஆண்மைக்குப் பெண்கள் அடிமையாவதைச் சாதாரணமாகச் சொல்லிச் சிரித்தார். தன்னுடன் டின்னருக்கு வரும்படி இளம்பெண்களை டிவி நிகழ்ச்சிகளில் அழைத்தார். ஒவ்வொரு பேட்டியிலும் ஒன்றிரண்டு பெண்கள் 'ட்ரூ இஸ் ட்ரூ' என்று D,T மாற்றி உருகினர்.

    சிகாகோ அரசு வக்கீல் ஜேம்ஸ் க்லேஸ்கோ இதை வேறு கண்ணோட்டத்தில் பார்த்தார். இறந்த மனைவிகள், சந்தேகத்திடமான சூழ்நிலை, அக்கம்பக்கத்துப் பேச்சு... போதாக்குறைக்கு ஆணவத் தம்பட்டம். ட்ரூ பீடர்சனை ஒரு கை பார்த்துவிடுவது என்று களத்தில் இறங்கினார் ஜேம்ஸ். கேதலின் வழக்கை மறுபரிசீலனைக்கு எடுத்துக் கொண்டார்.

2008ல் கேதலினின் உடலைக் கல்லறையிலிருந்து எடுத்து மறு பரிசோதனை செய்தார்கள். இம்முறை கொலை என்று தீர்மானமானது.

பீடர்சன் மேல் சந்தேகத்தின் நிழல் சற்று ஆழமாகப் படியத் தொடங்கியது. கேதலினின் தோழிகள், ஸ்டேசியின் சகோதரிகள் என்று ஒவ்வொருவராகத் தங்களுக்குத் தெரிந்ததையும் கேள்விப்பட்டதையும் சொல்லத் தொடங்கினார்கள். "கேதலினை நான் தான் கொன்றேன்" என்று ட்ரூ தன்னிடம் சொன்னதாக ஸ்டேசி தன்னிடம் சொன்னார் என்றார் ஒருவர். "ஸ்டேசியைக் கொல்ல ஆள் தேடச்சொல்லி ட்ரூ தனக்கு 25000 டாலர் தர முன்வந்தார், பிறகு திடீரென்று ஒரு நாள் ஆள் தேட வேண்டாம் என்று சிரித்துக் கொண்டே சொன்னார்" என்றார் அவருடைய நண்பர். "கேதலின் இறந்த அன்று, ட்ரூ ஒரு குப்பைப் பையுடன் நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் நுழைந்தார்" என்று ஸ்டேசி சொன்னதாக அவருடைய சகோதரர் சொன்னார். தனக்கு மிகவும் "பயமாக இருப்பதாகவும்" ட்ரூ தன்னைக் "கொல்லக் கூடும்" என்றும் ஸ்டேசி சொன்னதாக இன்னொரு தோழி சொன்னார்.

2009ல் ட்ரூ கைது செய்யப்பட்டார்.

ட்ரூ மீது எந்தக் குற்றமும் முழுமையாகச் சுமத்தப்படவில்லை. ஸ்டேசி மறைவு குறித்து அவர் சொன்னத் தகவல்களைச் சரிபார்க்க முடியவில்லை என்று 'சந்தேகத்தின்' பேரில் கைது செய்யப்பட்டார்.

"இதெல்லாம் ஒரு கேசா? இவர் சொன்னார் அவர் சொன்னார் என்று வதந்திகளை வைத்து ஜோடித்த கேஸ் நிலைக்காது" என்று ட்ரூவின் வக்கீல் குழு, டிவி மற்றும் உள்ளூர் ஊடகங்களில் தினம் கிண்டல் செய்தார்கள்.

அமெரிக்க டிவி சேனல்கள் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு ட்ரூ கதை பேசின. பிரபல டைரக்டரின் இயக்கத்தில் ட்ரூவின் கதையைப் படமெடுத்து டிவியில் வெளியிட்டார்கள். "கொலை செய்துவிட்டுக் கவலைப்படாமல் டிவியில் கூத்தடிக்கிறான் பார்.. இதெல்லாம் அமெரிக்காவில் தான் நடக்கும்" என்று பொதுஜனம் பொங்கியது, பொறுமியது, புலம்பியது, பயந்தது - தொடர்ந்து டிவி பார்த்தது.

    கேதலின் கொலை வழக்குத் தொடங்கியதும் அரசுத்தரப்பில் வரிசையாகத் தவறு செய்தார்கள். ஏற்க முடியாது என்று சொன்ன சாட்சிகளையும் காரணங்களையும் திரும்பத் திரும்பக் கொண்டு வந்ததால், நீதிபதிக்குக் கோபம் வந்து ஒரு முறை ஜேம்ஸ் குழுவைப் பொதுவில் விளாசினார். "கேதலின் கொலை செய்யப்பட்டார் என்பதே நிரூபணமாகாத நிலையில் இன்னும் சந்தேகத்துக்கிடமான சாட்சிகளை வைத்து, ட்ரூ தன் நான்காவது மனைவியையும் கொலை செய்தார் என்று ஜோடிக்காதீர்கள்" என்று அந்தக் குற்றச்சாட்டைத் தூற எறிந்தார். "கேதலின் கொலை வழக்கு என்றால் ஆட்டத்துக்கு வாருங்கள் இல்லையென்றால் ஓடிப்போங்கள், சூ!" என்று எரிச்சல் பட்டார்.

ட்ரூவின் வக்கீல் குழு ஒரு படி மேலே போய் கூத்தின் இசையும் கூத்தின் முறையும் தாமே என்றது. ரஜினிகாந்தின் பஞ்ச் டயலாகெல்லாம் பிச் வாங்குமளவுக்கு இந்த வழக்கைக் கேலி செய்தது.

தாம் மட்டும் 'சும்மா இருப்பானேன்' என்று ஜூரிக் குழுவினர், சொல்லி வைத்தாற்போல் தினமும் ஒரே கலரில் சட்டை போடுவது அல்லது முடியலங்காரம் செய்வது என்று பலவகையிலும் கூத்தில் கலந்து கொண்டார்கள்.

"அப்பா நிச்சயமாகக் கொலை செய்திருக்க முடியாது. மூன்றாம் மனைவி இறந்துவிட்டாளென்று என் அப்பா அன்றிரவு பனிரெண்டு மணிக்கு மிக அழுதார். எனக்கு அப்போது எட்டு வயது. நன்றாக நினைவிருக்கிறது" என்று புத்திசாலித்தனமாக சாட்சி சொன்னார் ட்ரூவின் டீனேஜ் மகன். சாட்சிக் கூண்டில் ஏறுவார், மாட்டார் என்று தினமொரு சந்தேகத்தையும் சைட் பெட்களையும் கிளப்பிவிட்டார் ட்ரூ.

கேஸ் தள்ளுபடியாகும், ட்ரூ இதைப் புத்தகமாக எழுதுவார், நிறைய பணம் பண்ணுவார் என்று ஐந்தாவது ஆறாவது மனைவிகளைப் பற்றிக் கதைபேசத் தொடங்கியது பொதுஜனம். நானும்.

இந்த வாரம், ட்ரூ பீடர்சன் குற்றவாளி என்று ஜூரிக்குழு தீர்ப்பு வழங்கியது.

    ட்டம் எனக்கு பிடிக்கும். பழைய வழக்குகளை விரும்பிப் படிப்பேன். கிறுக்குத்தனமான வழக்கு ஜோடனைகள் என்றால் இன்னும் விரும்பிப் படிப்பேன். அந்த வகையில் பீடர்சன் வழக்கு எனக்குப் பெரும் பொழுதுபோக்குச் சாதனமானது. வழக்கை விசாரணைக்கு ஏற்றதே வியப்பு என்றால், சாட்சி வாதம் என்று இழுத்துக் கடைசியில் ட்ரூ குற்றவாளி என்ற தீர்ப்பும் கிடைத்தது இன்னும் பெரிய வியப்பு. 'நேர்ந்த அக்கிரமங்களுக்குச் சரியான தீர்வு கிடைத்துவிட்டது' என்று ஒரு சாராருக்கு நிம்மதி. 'இந்த வழக்கு முடியவில்லை, சாத்தியக்கூறு சட்டப்படி செல்லாது சுப்ரீம் கோர்ட் வரை போவோம்' என்று இன்னொரு சாரார்.

நிரூபிக்கப்படாத குற்றம் (கொலை 'சாத்தியம்'), விளங்காத நோக்கம், சம்பவம் நடந்து ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு டிஎன்ஏ மற்றும் தோண்டியெடுத்தப் பிணச் சோதனை, இறந்து போனவர்கள் இறக்குமுன் தங்களிடம் சொன்னதாகச் சொல்லும் சாட்சிகள், 'ஆளைப்பார், நிச்சயம் கொலை செய்திருப்பான்' பாணி சட்டமன்ற வாதங்கள், 'குளியல்தொட்டியில் தடுக்கி விழுந்தால் பின்கழுத்திலும் மார்பிலும் ஒரே நேரத்தில் அடிபடும் சாத்தியம் உண்டு' போன்ற பிரமிக்கத்தக்க பேதாலஜிஸ்ட் வாதங்கள் - எல்லாம் சேர்ந்து, இது சட்ட வரம்புகளுக்குட்பட்ட வழக்கா அல்லது பொதுமக்களை வைத்துச் செய்யும் காமெடியா என்று எவரும் சிறிதும் சிந்திக்கவில்லை.

    விசித்திர வழக்கு. வியப்பான தீர்ப்பு. ட்ரூ குற்றவாளியா இல்லையா என்ற என் கருத்து இங்கே அவசியமில்லை. வழக்கு முடிந்துவிட்டது. எனினும் இந்த வழக்கைக் கவனித்து நான் கற்ற சில பாடங்களும் தோன்றிய இன்னும் சில எண்ணங்களும் சுவாரசியமானவை என்பதால் பகிர விரும்புகிறேன்.

முதலில் சட்டம். ட்ரூவைக் கைது செய்ய இயலாமல் தவித்தது அரசு. எந்த அடிப்படையில் கைது செய்வது? குற்றம் நடந்ததா என்பதே சந்தேகம். ஆனால் ஊரெல்லாம் 'ட்ரூ குற்றவாளி.. தொடர் கொலை செய்தவனை சமூகத்தில் விட்டு வைத்திருக்கிறது அரசு' போன்ற பேச்சுக்கள் வலுக்கத் தொடங்கியதும், அதன் பாதிப்பை உணர்ந்து ஏதாவது செய்யவேண்டும் என்று துடித்தது. 2008 வாக்கில் ஒரு சட்டத்தை அவசரமாக மன்றமேற்றி ஆமோதித்து அமலுக்குக் கொண்டு வந்தது. 'சாத்தியக்கூறு சாட்சிகளை சில குற்றங்களுக்கு அனுமதிக்கலாம்' என்ற அந்தச் சட்டம் இலினாய் மாநிலத்தில் மட்டுமே அமலில் இருக்கிறது. இந்தச் சட்டத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ட்ரூவின் கைது, வழக்கு, விசாரணை, வாதம் எல்லாம் நடந்து இப்போது தீர்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்குக்காகவே ஏற்படுத்தப்பட்ட சட்டம், 'ட்ரூ சட்டம்' என்றே இப்போது வழங்கப்படுகிறது. ட்ரூ குழுவினர் அப்பீல் செய்வது இருக்கட்டும். சாத்தியகூறின் அடிப்படையில் கொலை வழக்குகளைத் தீர்மானிக்கும் precedent ஏற்பட்டிருப்பது ஒரு அபாயம் என்று நினைக்கிறேன். ட்ரூ சட்டம் unconstitutional என்று நினைக்கிறேன். ட்ரூ சட்டம் அமெரிக்காவின் மற்ற மாநிலங்களிலும், பிறகு மற்ற நாடுகளிலும் அமலுக்கு வரும் சாத்தியம் உண்டு என்றும் நினைக்கிறேன்.

இரண்டாவது, 'வக்கீல்தனம்'. வாதாடுவதை விட வக்கீல்தனம் முக்கியம். வழக்கில் வெற்றி பெற எண்ணும் ஒரு வக்கீல் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கும் சொல் வக்கீல்தனம். ட்ரூவின் குழு ஏறக்குறைய வெற்றி பெற்றுவிட்ட நேரத்தில் தடுக்கி விழுந்தது. கேதலினின் விவாகரத்து வக்கீலை சாட்சிக்கு அழைத்தது. "காணாமல் போன ஸ்டேசி ஒரு பேராசைக்காரி, தனக்கு கேதலினைப் போல பெரும் நஷ்ட ஈடு கேட்டு அதே வக்கீலை நாடினார் - ஸ்டேசி ஒரு பணத்தாசைப் பிசாசு" என்று ஜூரிக்குழுவை நம்பவைக்க நினைத்து, கேதலினின் வக்கீலைக் கூண்டில் ஏற்றியது. மாறாக, "ஸ்டேசி ஒரு பிஞ்சுப்பூ, பயந்து நடுங்கிய பைங்கிளி, கேதலின் மீதிருந்த வெறுப்பையும் கொலை செய்ய நேர்ந்ததையும் தன்னிடம் படுக்கையில் பகிர்ந்து கொண்ட பாவி ட்ரூவுடன் வாழ்வது கொலைக்கு உடந்தையாகும் தன்மையது என்று எண்ணிய உத்தமப் பத்தினி" என்று சாட்சி சொன்ன அந்த வக்கீல், பின்னி எடுத்துவிட்டார். கோர்ட் இன்னமும் சும்மா அதிருது என்கிறார்கள். 'சாத்தியக்கூறு' சட்டத்தை முழுதுமாகப் பயன்படுத்திக் கொண்ட சாட்சி வக்கீலுக்கு இருந்த வக்கீல்தனம், அரசுத் தரப்பிலோ ட்ரூ தரப்பிலோ இல்லாதது வேடிக்கை.

மூன்றாவது, பதவி அரசியல். நிச்சயமாகத் தோற்றுவிடுவார் என்றுக் கருதப்பட்ட அரசு வக்கீல் ஜேம்ஸ் க்லேஸ்கோ, வரும் நவம்பர் தேர்தலில் வெற்றி பெறுவது இப்போது உறுதியாகிவிட்டது. ம்ம்ம்.. இதை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே புரிந்து வைத்திருந்தாரோ? கைது செய்த நேரம்..சட்டம் வருவதற்காகக் காத்திருந்தது போல் தோன்றுகிறதே? சட்டம் வந்ததால் வெற்றி வந்ததா? வெற்றி வேண்டியே சட்டம் வந்ததா?

நான்காவது, பொது அரசியல். 'சந்தேகத்துக்கிடமான ஒரு தொடர்கொலைகாரன் சமூகத்தில் நடமாடுகிறான், அதுவும் போலீஸ்காரன்!' என்றப் பொதுமக்களின் பீதியைக் கட்டுப்படுத்தக் கொண்டு வந்த சாமர்த்தியமான அரசியல் செய்கை, இந்தச் சட்டம் என்பது எனக்குப் புரிகிறது. அரசியல் சாமர்த்தியத்தை மெச்சி வியக்கிறேன்.

ஐந்தாவது, வேதாந்தம். 'கடவுள் சாட்சியாக நான் சொல்வதெல்லாம்...' என்பதற்கு இப்போது புதுப் பொருள் கிடைத்திருக்கிறது. சந்தேகத்துக்கிடமான ஒன்றின் சாட்சியாக நான் சொல்லும் சந்தேகத்துக்கிடமானவை எல்லாம் உண்மை. ஆகா! இது தானா மெய்ப்பொருள்? எங்கே என் காவியும் தாடியும்?

கடைசியாகத் தன்னிலைத் தெளிவு: என் மனைவி, மக்கள், முன்னாள் காதலிகள், பின்னாள் காதலிகள், உடன்பிறப்பு, பெற்றோர், சுற்றம் மற்றும் முன்னாள் இன்னாள் நண்பர்கள், அலுவலகத்தில் எனக்குக் கீழும் மேலும் வேலை பார்த்தவர்கள், வீட்டுத் தோட்டக்காரர், எங்கள் வீட்டு நாய், முக்கியமாகச் சமீபத்தில் இறந்து போன நாய் - யாரையும் எதையும் விட்டுவைக்க மனமில்லை, எல்லோருக்கும் சென்ற இரண்டு நாட்களாக என் நிலையைத் தெளிவுபடுத்தி வருகிறேன். விட்டுப்போகச் சாத்தியமுள்ளப் பிறர்க்கு, இந்தப் பதிவின் மூலம் தெளிவுபடுத்துகிறேன். "கொன்னுடுவேன் கொன்னு" என்று நான் எப்போதாவது சொல்லியிருந்தால் அது சாத்தியமாக, சே, சத்தியமாக விளையாட்டுக்கு.

36 கருத்துகள்:

 1. அமெரிக்க சட்டதிட்டம் மற்றும் உரிமைகளோடு
  இதைப்படித்தால்தான் புரியும் என நினைக்கிறேன்
  இந்தியாவில் எல்லாம் தலைகீழ்.குறிப்பாக தமிழ் நாடு
  இங்கு அரசு விரும்பினால் யாரையும் எப்போதும்
  கஞ்சா உட்பட எந்த கேஸிலும் உடன் கைது செய்யலாம்
  எத்தனை பெரிய குற்றவாளியையும் நன்னடத்தை என்கிற
  பெயரில் அண்ணா மற்றும் பிற தலைவர்கள்
  பிறந்த நாளில் விடுதலைசெய்து தன் பக்கம்
  வைத்துக் கொள்ளலாம்.
  நீங்கள் கடைசியாகக் கொடுத்த குறிப்பு அருமை
  பயனுள்ளது.இனி யாரும் யாரையும் கொன்று கூட
  போட்டுவிடலாம்.தப்பிக்க ஆயிரம் வழியுண்டு
  வார்த்தையில் மாட்டினால் சிக்கல்தான்.
  நிகழ்வுகளும் சொல்லிச் சென்றவிதமும்
  வெகு சுவாரஸ்யம்.வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. சாத்தியமாய் ---- இல்லை இல்லை சத்தியமாய் நீங்கள் இன்னொரு சுஜாதா தான். என்னவெல்லாம் கிடைக்கிறது உங்களுக்கு எழுத!

  பதிலளிநீக்கு
 3. ஒரு ஆள் மேலே வழக்கு போடுறது இம்புட்டு கஷ்டமா அம்ரீக்காவுல? தமிழ்நாட்டுல இதெல்லாம் தண்ணிபட்ட பாடு!! :-))))

  //"கொன்னுடுவேன் கொன்னு" என்று நான் எப்போதாவது சொல்லியிருந்தால் அது சாத்தியமாக, சே, சத்தியமாக விளையாட்டுக்கு. //

  சிரிக்க வைத்தாலும்.... அப்ப நீங்க ட்ரூ குற்றவாளி இருக்க சாத்தியம் இல்லைன்னு நினைக்கிறீங்களோன்னு தோண வைக்குது. :-)))))

  பதிலளிநீக்கு
 4. பெயரில்லாசெப்டம்பர் 07, 2012

  வழக்கு ரொம்ப சுவாரசியம்னா, நீங்க எழுதி இருக்கறது அதை விட சுவாரசியம். சில வரிகள் கலக்கல்.
  // பொதுஜனம் பொங்கியது, பொறுமியது, புலம்பியது, பயந்தது - தொடர்ந்து டிவி பார்த்தது.// :)

  சட்டம், வக்கீல்தனம் என்று உங்கள் சுவாரசியமான எண்ணங்களை பகிர்ந்து கொண்டதை எழுதி இருக்கும் விதம் அட்டகாசம். மிகவும் ரசித்து படித்தேன்.
  தன்னிலை தெளிவை எதுக்கும் இன்னும் ரெண்டு முறை படிச்சு பாத்துடுங்க. இன்னும் கூட சில பேரை சொல்ல மறந்திருக்க போறீங்க. எதுக்கு வம்பு.

  இப்பதான் சமீபத்துல 'Zodiac' அப்படின்னு ஒரு படம் பாத்தேன். இதுவும் நிஜத்துல நடந்ததுதான். நிஜத்துல சில பேரை கொன்ற அந்த கொலைகாரன் யாருன்னு தெரிஞ்சும் அவனை கைது பண்ண சாட்சி இல்லாம இருந்துதாம். பல வருஷம் கழிச்சு சரியான ஒரு சாட்சி கிடைச்சு, திரும்ப கேஸை இன்வெஸ்டிகேட் பண்ண எடுக்கும்போது அந்த கொலைகாரன் இயற்கையா இறந்து போயிடறான். இந்த படத்தோட பாதிப்பு போகவே எனக்கு ரெண்டு மூணு நாள் ஆச்சு. இப்ப இந்த பதிவு. கொலைகளை கூட சாமர்த்தியமா சாட்சி இல்லாம பண்ணினா மாட்டிக்காம இருக்க முடிவது சாத்தியமே அப்படின்னு ஆயிடுத்து.

  இந்த பதிவை படிச்சதும் 'கௌரவம்' படம் பாக்கணும் போல இருக்கு.

  பதிலளிநீக்கு
 5. அமெரிக்க வழக்கை ஒரு தமிழரின் வார்த்தைகளில் இப்போதுதான் வாசிக்கிறேன்.குற்றங்கள் ஒன்றானாலும் நாடுகளுக்கு நடுவில்தான் எத்தனை வித்யாசங்கள்? தண்டனை எதுவானாலும் அடுத்தவனுக்கு என்ன ஆகும் என்ற வம்பின் மீதான ஆர்வமும், பரபரப்பும் எத்தனை ஒற்றுமை?

  உங்களது வழக்கமான நடையின் க்ரிஸ்ப்னெஸ் கொஞ்சம் குறைந்து கட்டுரை நீண்டுவிட்டதோ என சின்னதாய் ஒரு அலுப்பு.

  ரமணியின் பின்னூட்டம் ஸ்வாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
 6. கடைசி பாரா படித்ததும் சிரிப்பு!
  குமுதத்தில் முன்னர் தொடராக வெளிவந்த, ராண்டார் கை எழுதிய 'புகழ் பெற்ற வழக்குகள், மற்றும் துமிலன்(தானே?) எழுதிய விஷ ஊசி கொலை வழக்கும் நினைவுக்கு வருகின்றன.

  பதிலளிநீக்கு
 7. வித்யாசமான வழக்கு, அதை விட வித்யாசமான தீர்ப்பு. சரி இந்தியாவில் என்ன தீர்ப்பு வந்திருக்கக் கூடும் ??

  பதிலளிநீக்கு
 8. //குமுதத்தில் முன்னர் தொடராக வெளிவந்த .. நினைவுக்கு வருகின்றன.//

  ஸ்ரீராம்! தலைப்பின் பின் பகுதியைப் பார்த்தவுடனேயே, ரா.கி.ர. கூட ஞாபகத்திற்கு வந்திருப்பாரே!

  பதிலளிநீக்கு
 9. What Mr.Appadurai,
  This is nothing. Everybody knows, including the judge in Tamil Nadu, who are the killers of Dinakaran Paper employees; but where is the judgement. Your America takes such a long time and punish the culprits but in Tamil Nadu, everybody knows who are the killers and instantly they also know pretty well that they will never be punished!!!!!! WHAT DO YOU SAY SIR? But you also warn all concerned not to record your statement of 'KONNUDUVEN KONNU' in their tablets / mobiles and other e-gadgets.

  பதிலளிநீக்கு
 10. //ஸ்ரீராம்! தலைப்பின் பின் பகுதியைப் பார்த்தவுடனேயே, ரா.கி.ர. கூட ஞாபகத்திற்கு வந்திருப்பாரே!//

  இது சத்தியம்....! வந்தது!

  பதிலளிநீக்கு
 11. ஒன்று, இரண்டு, மூன்று என்று ஐந்து வரை அடுக்கிக் கொண்டே வந்து, கடைசியிலான அந்த தன்நிலை விளக்கத்தில் வெளிப்பட்ட சத்தியத் தெளிவு கலக்கல்! :))

  பதிலளிநீக்கு
 12. ((சந்தேகத்துக்கிடமான ஒன்றின் சாட்சியாக நான் சொல்லும் சந்தேகத்துக்கிடமானவை எல்லாம் உண்மை. ஆகா! இது தானா மெய்ப்பொருள்? ))

  கடவுள் ???????

  பதிலளிநீக்கு
 13. // "கொன்னுடுவேன் கொன்னு" என்று நான் எப்போதாவது சொல்லியிருந்தால் அது சாத்தியமாக, சே, சத்தியமாக விளையாட்டுக்கு.//

  வாட் அ பஞ்ச் ப்ரோ...

  மிக நேர்த்தியான விவரணை.. எனக்கொரு சரித்திர ஆசிரியர் இருந்தார். வாரம்தோறும் ஒரு அரைமணி நேரம் ஏதோ ஒரு வழக்கை ஸ்வாரஸ்யமாய் கதைப்பார்.. "லக்ஷ்மி காந்தன் கொலை வழக்கு" போன்ற பல வழக்குகளை அவர் விவரித்தத்தை நினைத்துக் கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 14. ட்ரூ பீட்டர்சன் அப்பாவி, குற்றம் செய்யாதவர் என்று எனக்குத் தோன்றவில்லை.

  பதிலளிநீக்கு

 15. இந்தியாவில் ஆருஷி எனும் பதின்வயதுப் பெண் கொலை செய்யப்பட்டு விசாரணையில் இருக்கிறது. பெண்ணின் பெற்றோரே கொலை செய்திருக்கலாம் எனும் சாத்தியக் கூறுகள் மூலம் கைது செய்யப் பட்டிருக்கின்றனர். பெற்றோர் இருவரும் பல் மருத்துவர்கள். சந்தேகம் சாத்தியமா என்று கேட்கவைக்கும். சத்தியம் தெரியாமலேயே போய் விடலாம். இண்டெரெஸ்டிங் பதிவு.

  பதிலளிநீக்கு
 16. பின்னூட்டங்களுக்கு நன்றி.


  //ரா.கி.ர. கூட ஞாபகத்திற்கு வந்திருப்பாரே!
  சரியாப் போச்சு ஜீவி,ஸ்ரீராம்! ராகிரவுக்கு எத்தனை சட்டைகள்!
  இவர் தானா? அவர் தானா?

  //வார்த்தையில் மாட்டினால் சிக்கல்தான்
  நாகாக்க என்று சும்மாவா சொன்னார் தாடிக்காரர்? செல்வாக்கிருந்தால் யாரும் உரிமை மீறலாம், குற்றம் செய்யலாம்.. யாரை வேண்டுமானாலும் அழிக்கலாம். அரசாங்க அளவில் நடந்தவை இப்போது தனிமனித அளவுக்கு முன்னேறியிருக்கிறது (?).
  உரிமை மீறும் தனிமனிதரைக் கட்ட அரசாங்கம் உரிமை மீறலாம்.. உரிமை மீறும் அரசாங்கத்தைக் கட்ட தனிமனிதர்கள் கூட்டாக உரிமை மீறலாம்.. உலக நடப்பைச் சரியாகக் கோடிட்டீர்கள் ரமணி.

  //தண்டனை எதுவானாலும் அடுத்தவனுக்கு என்ன ஆகும் என்ற வம்பின் மீதான ஆர்வமும், பரபரப்பும் எத்தனை ஒற்றுமை?
  மனிதம் சுந்தர்ஜி, மனிதம். மொதல்ல இப்படிப் பழகி, கொஞ்சம் கொஞ்சமா அடுத்தவன் நல்லா இருக்கணும்னும் ஒற்றுமையா நினைக்கத் தொடங்குவோம் இல்லையா :)

  //you also warn all concerned not to record your statement
  ஷ்! mohan baroda..

  //சரி இந்தியாவில் என்ன தீர்ப்பு வந்திருக்கக் கூடும் ??
  எனக்கென்னவோ இது வழக்காகவே ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்காதுனு தோணுது எல்கே.

  ஆருஷி வழக்கு விவரம் தேடிப்படிக்கிறேன் GMB சார். மனிதரில் எத்தனை நிறங்கள்!

  //"லக்ஷ்மி காந்தன் கொலை வழக்கு" போன்ற பல வழக்குகளை அவர் விவரித்தத்தை நினைத்துக் கொண்டேன்
  படிக்க விரும்பி வாய்ப்பில்லாமலே போய்க்கொண்டிருக்கும் ஒரு வழக்கு மோகன்ஜி. புத்தகங்கள் கூட அதிகம் காணோம். இன்னொரு இந்தியப் பயணத்தில் சாவகாசமாகத் தேட வேண்டும்.
  காஸ்யபனுக்கு விவரங்கள் தெரிந்திருக்கலாம். இதைப் பதிவாக எழுதினாரா தெரியவில்லையே?

  //Word speaks better than action
  we live in interesting times, Vasan :)

  //ட்ரூ பீட்டர்சன் அப்பாவி, குற்றம் செய்யாதவர் என்று எனக்குத் தோன்றவில்லை.
  ஹூஸைனம்மாவின் சந்தேகத்தை எப்படிப் போக்குவது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.. ஹா, என்னா ஸ்டேட்மென்டு kgg, நன்றி! (அரசியலுக்குப் போயிருக்க வேண்டியவர்)

  பதிலளிநீக்கு
 17. //அலுவலகத்தில் எனக்குக் கீழும் மேலும் வேலை பார்த்தவர்கள்//

  இது எப்போ !! வெங்கடேஷ் சொல்லுவேன், கேட்கவே நல்ல இருக்கே என்று !

  பதிலளிநீக்கு
 18. இந்த விஷயத்தில் அதாவது வழக்கு நடத்துவதில் சட்டபடி நடந்துகொள்வதில் இந்தியாவை.. இன்னம் சரியாக சொன்னால் தமிழகத்தை அடிச்சுக்க ஆளே இல்லைங்கோ....

  விடுதலை செய்யனும்னு நினைச்சா என்ன குற்றம் இருந்தாலும் சட்டபடி விடுதலை வாங்கிடலாம்... எடுத்துக்காட்டக

  1) விஞ்ஞான முறைப்படி ஊழல் பண்ணியவர், டாலர் வருமானத்துக்கு பெரா , பெமா இல்லை பெரா நடவடிக்கை எடுக்கபட்டவர் எல்லம் அரசுயர் பதவி வகிக்கலாம்.

  2) நாவரசு கொலை ஜான் டேவிட் ஞாபகம் இருக்கா ? துணை வேந்தர் மகனை ராக்கிங் பண்ணி , துண்டு துண்ட வெட்டி பஸ்ஸில் பார்சல் ஏற்றி அனுப்பியவர் இப்பொ நிரபராதின்னு விடுதலையாகி பாதிரியாரகி இருக்காரம்..

  3)..இப்படி சட்டபடி விடுதலை ஆனவங்க வரிசை புத்தகம் போடுமளவு பெரிசு...

  சட்டபடி உடனடி தண்டனை வாங்கியவங்க பார்த்தீங்கனா ..

  1) சென்னை வங்கி என்கவுண்டர் ஞாபகம் வருதா ?..

  2) சந்தண வீரப்பன், மணல் மேடு சங்கர்ன்னு, இன்னம் படமா வந்த மலையுர் மம்பட்டியான், சிவலபேரி பாண்டி எல்லாம் இருக்கங்க...இந்த லிஸ்ட் அந்த புத்தகத்தை விட பெரிசு.. அனக்சர் எல்லாம் போடனும்..

  ஆனால் எல்லாம் இருக்குற சட்டத்தை வச்சே, சட்டபடியே செய்துரலாம்... இதுக்காம ஒரு மாநிலத்துக்கு மட்டும் புது சட்டம் எல்லாம் வேண்டம்..

  இதுக்கு என்ன பண்ணலாம்னா...
  அமரிக்கவில் இருக்கும் டெமக்கிரட்டிக், லிபர்லர் கட்சிகளை சுமார் 5 வருசம் நம்ம தி.மு.க, மற்றும் அ.தி.மு.க விடம் ஒப்படைக்கலாம் ..

  எதுக்கும் Law and enforcement, Home Affairs இந்த டிப்பர்ட்மென்ட்டை அவுட்சோர்ஸ் பண்ண சொல்லுங்க.. நம்ம தமிழ் நாட்டு IAS, IPS அதிகாரிகளை டெப்டேசனில் பார்த்துக்க சொல்லலாம்.

  இல்லை குறைந்த பட்சம் அமரிக்க போலிசு, மேயர், எல்லாரையும் இங்க தமிழ்நாட்டில் ஒரு ஆறு மாசம் டிரைனிங்க் கொடுக்கலாம்.

  இதை மட்டும் பண்ணி பாருங்க... அப்புரம் நீங்க அமரிக்கவில் இருக்குர பீலிங்கே உங்களுக்கு இருக்கது...


  இப்படிக்கு தோழமையுடன்.
  வினொத்

  பதிலளிநீக்கு
 19. //ஹூஸைனம்மாவின் சந்தேகத்தை எப்படிப் போக்குவது//

  அப்பாத்துரை: எனக்கு இந்த வழக்கின் விவரங்கள் எதுவும் தெரியாது. இந்தப் பதிவின் மூலம்தான் அறிந்துகொண்டேன். நீங்கள் எழுதிய இந்தப் பதிவு, வாசித்த எனக்கு(ம்) இந்தக் கொலைகளை அவர்தான் செய்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வரவைத்தது. அப்படியெனில், இதை எழுதிய நீங்களும் அப்படியே நினைக்கிறீர்கள் என்றுதானே அர்த்தம்? அதனால்தான் கடைசி வரியில் அப்படியில்லை என்பது போன்ற வாசகத்தைப் பார்த்ததும் ஆச்சர்யமாயிருந்தது.

  பதிலளிநீக்கு
 20. அப்புறம், நாவரசு கொலை - ஜான் டேவிட், இரட்டை ஆயுள் உறுதி செய்யப்பட்டதால் சென்ற வருடம் சரணடைந்து, சிறையில் இருப்பதாகப் படித்த நினைவு.

  பதிலளிநீக்கு
 21. அப்பாதுரை அவர்களே! தெய்வமேன்னு ஒரு ஓரமா நின்னு பாத்துக்கிட்டு இருக்கேன்.என்ன வம்ம்பில இழுக்குறீரே ஐயா!" ரண்டாற்கை" நு ஒருத்தர் இந்தமாதிரி வழக்குகளை பற்றி நிறைய எழுதிபுத்த்கமா வந்திருக்கு.சமீபத்திலகிழக்கு பதிப்பகம் நடத்தும் "தமிழ் பேப்பர்" என்ற வலை பத்திரிகையில் தோடர்கட்டுரையாகவும் வந்தது. லட்சுமிகாந்தன் கொஞ்சம் பலான பத்திரிகயை நடத்தினாரு. திரப்பட நடிகைகள்.நடிகர்கள்பற்றி "இந்து நேசன்" நு பத்திரிகை நடத்தினாரு. யாறொபொட்டு தள்ளிட்டான். எம்.கெ.டி,என்.எஸ்.கெ,ஸ்ரீராமுலு நாயுடு பெர்ல கேஸ் நடந்தது .கேசை நடத்த குற்றவாளிகள் சார்பா கே.ஏம்.முன்ஷி ஆஜரானார். அவருடைய வாதங்களை கெட்க நீதிபதிகளே தங்கள் மன்ற கேசுகளை ஒத்தி வச்சுட்டு இந்த கோர்ட்ல உக்கந்து கேப்பாங்களாம். ஆனா உண்மைல கொலை செஞ்சது வேற ஆளு! ஒரு பிரபல நடிகை, சில அரசியல் பிரமுகர்கள் பற்றி லட்சுமி காந்தன் அடுத்தவாரம் எழுதுவதாக இருந்ததாகவும் அவங்கதான் போட்டு தள்ளி விட்டதாகவும் பேச்சு உண்டு. அந்த நடிகை,பிரமுகர்கள் பேரெல்லாம் எனக்குத்தெரியும்.ஆனா சொல்ல மாட்டேன்!---கஸ்யபன்.

  பதிலளிநீக்கு
 22. அந்த பிரமுகரும் நடிகையும் இப்ப உயிரோடு இல்லை தானே காஷ்யபன் சார். ?

  பதிலளிநீக்கு
 23. நீங்க சொல்லுறது சரிதான் ஹூஸைனம்மா.. 'ட்ரூ குற்றவாளினு நினைக்கிறேன்' அப்படினு சொல்லலாம். இல்லின்னா kgg மாதிரி சாமர்த்தியமாவும் சொல்லலாம்னு சொல்ல வந்தேன். தெரியாமப் போயிடுச்சே? :)

  பதிலளிநீக்கு
 24. காஸ்யபன் சொல்றது சுவாரசியமுன்னா நீங்க ஒரு படி மேலே மேலே போறீங்களே சிவகுமாரன்.. இப்ப பிரமுகரும் நடிகையும் யாருனு தெரியாம தூக்கம் வராது போலிருக்குதே? (ராணி யாரா இருக்குமுன்னு ஒரு ஐடியா இருக்கு. மந்திரி யாருனு தெரியலியே?)

  பதிலளிநீக்கு
 25. ஐயாமார்களே! 45-47ல நடந்த சமாச்சாரம்! உங்களால சொல்ல முடியாதுனுதான் நினக்கிறேன்! என் வாயை பிடுங்காதீங்க! உளறிப் புடுவேன்!---காஸ்யபன்

  பதிலளிநீக்கு
 26. 45-47ஆ? அப்ப ராணி இல்லை. அந்த நாள்ல எத்தனை பிரபல நடிகைங்க இருந்தாங்க?

  பதிலளிநீக்கு
 27. 45-47-லேயே இப்படியெல்லாம் நடந்திருக்கா, பலே பலே.

  பதிலளிநீக்கு
 28. // "கொலை செய்துவிட்டுக் கவலைப்படாமல் டிவியில் கூத்தடிக்கிறான் பார்.. இதெல்லாம் அமெரிக்காவில் தான் நடக்கும்"//

  நாங்கள் இந்தியாவில் பேசும் டயலாக் இது.அமெரிக்காவிலும் இப்படித்தானா?

  வழக்கு நடந்தபோது இருந்த பரபரப்பு படிக்கும்போதும் இருக்கிறது.
  பதிலளிநீக்கு
 29. இந்தப் பதிவு எனக்கு ஏன் அப்டேட் ஆகலைனு தெரியலை. வழக்கமான கூகிள் சதி.

  ருசிகரமான சுவாரசியமான பல தகவல்கள். லேட்டாப் படிக்கிறதிலே லேட்டஸ்டான பல விஷயங்கள். நன்றி அனைவருக்கும்

  வழக்கம்போல் அப்பாதுரையோட டச்!!! கடைசிப் பத்தியில்.:))))))

  பதிலளிநீக்கு
 30. சூப்பர் கொலைவழக்கை நிதானமாகநடத்திச் சென்றீருக்கிறீர்கள் துரை. கட்டாயம் அந்த ட்ரூ தான் கொ செய்திருக்கவேண்டும். எங்க ஊர்ல இவ்வளவு புத்திசால்த்தனமா கதை எழுதுவாங்க. கொலை தப்பா செய்து மாட்டிப்பாங்க:)

  பதிலளிநீக்கு
 31. //'US household saw its income fall last year to 1989 levels' - Census Report. Thank you, Obama, for your leadership.//

  With all of this, looks like he will still win hands-down against Nov's election against Mitt Romney..

  I guess the legacy of Bush (I read something as Ghost Bush effects in some news) will haunt Republicans for few more elections !!

  பதிலளிநீக்கு
 32. good point சாய், and you may be right. romney's campaign manager needs to fired. how can he not turn the 'worst economic situation in 25 years' into a campaign advantage? beats me.

  பதிலளிநீக்கு
 33. Appaathurai sir ! They say in India Cong. is left of centre. B.J.P.s right of centre.For us licking the bboot of America bOth are same! Similarly Obama or Mit the world situation is not going to change.nor the Anerican peoples plight.---kashyapan

  பதிலளிநீக்கு
 34. @kashyapan
  plight of american people is worse now than it was four years ago. it has changed. odrama is an economy killer.

  பதிலளிநீக்கு