2017/07/28

மீண்டும் சுழி



        யாருடைய கெட்ட கனவோ, எனக்கு திடீரென்று மீண்டும் எழுதத் தோன்றியது. தொடர்ந்து எழுதும் பொழுது தோன்றாத பாரம் விட்டு மீளும் பொழுது உறைக்கிறது. சுழியைச் சுற்றிவந்த ஐம்பது தெரிந்த வாசகரை ஏமாற்றி விட்டது போலவும் ஒரு உணர்வு. எழுத்து ஒரு பொழுதுபோக்கு, சோர்வகற்றி என்றே எண்ணிக் கொண்டிருந்தேன். எழுத்து ஒரு போதை, புலிவால் என்றும் புரிந்து கொண்டிருக்கிறேன். இப்போதைக்கு மறுபடி பற்றியிருக்கிறேன். ஒரு வருடம் போல் காணாமல் போனதைப் பொருட்படுத்தாமல், என்னை மறந்துவிடாமல், மீண்டும் வந்து படிப்பதற்கு மனமார்ந்த நன்றி.

ஆதியில் விட்ட சில: பேயாள்வான் புராணம், அந்தக்கடை, பெத்தாபுர மலர்
பாதியில் விட்ட சில: லுக்ரீசின் சாபம், திரவியம், கண்பிடுங்கி நீலன்
மீதியில் விட்ட சில: பல்கொட்டிப் பேய்
இன்னும் இருக்கலாம். மேற்சொன்னவை என் நினைவிலிருந்து.

கர்மயோகிகளிடம் ஒரு சிக்கல். கர்மமே யோகமாகப் பழக வேண்டியவர்கள் அப்படி இருக்கத் தவறினால் கர்மச்சுமை கரையும் வரை மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து அதே சுமையைக் கரைப்பார்களாம். என்று அந்தக் கிஸ்டப்பிரபு சொன்னதாக என் சகோதரி தன்னுடைய ‘பேட்ட கீதை’யில் விளக்கமாகச் சொல்லியிருக்கிறாள். நாம் எல்லோருமே கர்மயோகிகளே என அடித்து வேறு சொல்லிவிட்டாள்.

ஆத்தாடி! இதுக்கு இன்னொரு பிறவியா? வேணாம்மா ஈஸ்வரி! சுழியில் எத்தனை விட்டுப் போயிருக்குதோ அத்தனையும் சட்டு புட்டு ப்ளைட்டுக்கு டயமாச்சுனு மஞ்சு பாணில முடிச்சுர வேண்டியதுதான்.

கானல் புகழுக்குக் கண் இழந்து திரவியம் கண்பிடுங்கி இரண்டையும் நேரே சினிமாவுக்கும் டிவிக்கும் கொடுத்து விட்டதால் ஏவெகோகோகோ. வேறு வழியில்லை. இதில் கண்பிடுங்கி மீண்டு வர கொஞ்சம் வாய்ப்பிருக்கிறது. பெத்தாபுர மலர் ஏன் தடைபட்டுக் கொண்டே போகிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. லுக்ரீசின் சாபம் ஆதர்சம், முடிக்க வேண்டும். அந்தக்கடை, பல்கொட்டி விரைவில். பேயாள்வான் புராணம் பெரிய ப்ராஜக்ட், தொடரும் சாத்தியம் இல்லை. அதுக்காக இன்னொரு பிறவி வேணாம்மா.. படிக்கிறவங்க பாவம் இல்லையா? அவங்களை நினைச்சு ஒண்ணு ரெண்டை டீல்ல விட்டுருவம், என்ன சரியா?

கர்மச்சுமை, பிறவி என்ற பாதையில் சிந்தனை ஓட, சட்டென்று நினைவுக்கு வந்த பாடல்:
    மாதா உடல்சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
    வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா
    இருப்பையூர் வாழ்சிவனே இன்னுமோர் அன்னை
    கருப்பையூர் சேராமற் கா.

'வாழாமற் கா' என்று பட்டினத்தார் பாடியதாகச் சொல்கிறார்கள். எனகென்னவோ 'சேராமற் கா' பொருத்தமாகத் தோன்றுகிறது. சமீபத்தில் இந்த பாடலை ஒருவருக்கு விளக்க நேர்ந்தது. 'வேதாவும் கைசலித்த'தை விளக்கும் போதுதான் இந்த பாடலின் எளிமை - ஏறக்குறைய அலட்சிய அற்புதம் - என்னைத் தாக்கியது. பட்டினத்தாருக்கே கர்மச்சுமை என்றால் ‘புட்டி’னத்தார் ஆசாமி கேவலம் நான் குறைபட்டுக் கொள்வானேன்? போனால் போகட்டும் போடா. சரி, இருப்பையூர் எங்கிருக்கிறது? கோமதி அரசுக்குத் தெரிந்திருக்கும். புனுகீஸ்வரர் மாதிரி கோவில்களை பிடித்தவருக்கு இருப்பையூர் தெரிந்திருக்காதா? :-)

இத்தனை புலம்புகிறேனே, ஏதாவது உணர்ந்து உருப்படப் பார்க்கிறேனா? இல்லை. வலை நண்பர்கள் சிலருடன் இணைந்து கணிசமான ப்ராஜக்ட் செய்யலாம் (எழுதலாம்) என்ற நப்பாசையில் சில ஐடியாக்களைச் சேர்த்து வருகிறேன். பிரசவ வைராக்கியம் என்பது இதானா?

        ணையம் விசித்திரமானது. ஒன்றைத் தேட ஒன்று கிடைக்கிறது. என் வீட்டைப் போலத்தான். பாருங்கள்.. கசிந்து ஒழுகிக் கொண்டிருந்த தண்ணீர்க் குழாயை இறுக்க வேண்டி முறுக்கியைத் தேடினால் என்றைக்கோ தேடிக்கொண்டிருந்த கையுறை கிடைத்தது.. பர்சைக் காணோமே என்று தேடினால் என் மகளின் நூலக உறுப்பினரட்டை கிடைத்தது.. இணையத்தில் ஏதோ ஒன்றைப் பற்றிய விவரம் தேடினால் இந்தத் தேவாரப் பாடல் கிடைத்தது . பாடலின் நயத்தில் தேடலை மறந்தேன்.
    கிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுறக்
    கிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக்
    கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையு மேங்கவே
    கிடந்துதா னகுதலைக் கெடில வாணரே.

'கிடந்த'வை நீக்கிப் படித்தால் சட்டென்று புரிந்துவிடும். எதுகை மோனைக்காக கிடக்க விட்டிருக்கிறார் நாவுக்கரசர். வாகீசர் இல்லையா? அவருக்கு எல்லாவித உரிமையும் உண்டு. நீங்களும் நானும்.. சரி.. நானெல்லாம் இப்படி ஏதாவது எதுகைக்காக சேர்த்து கவி எழுதினால் 'அதெல்லாம் நல்லா தமிழ் தெரிஞ்சவங்க எழுதணும்.. உனக்கு எதற்கப்பா வேண்டாத வேலை?' என்பார்கள். எப்படியிருந்தாலும் நாவுக்கரசர் நயத்துக்கு என்னை அவர் காலில் கட்டி அடிக்கலாம், விடுங்கள். பொருள் நயம் முக்கியம்.

இதே வி.கே.ராமசாமியா இருந்தா 'கிடந்து கிடந்துனா? களுத என்னா புரியுது?'னு கேட்டிருப்பாரு. அதுபோல நீயும் கேட்டுகினா வாய் மேல ரெண்டு போட்டு அர்த்தம் சொல்றேன் கெவுனி. நம்ம சிவம் யாரு? உமையொரு பாகன்.. அதாம்பா.. சிவன் பாதி சக்தி பாதி.. ஒரே பாடி.. லெப்டுல சிவன்.. ரைட்டுல சக்தி.. எப்டினு கேக்காதே.. கம்னு கேளு. இந்த சிவனோட தலைல பாம்பு கீதுல்ல.. அதுக்கு வந்த லொள்ள பாரு.. சொம்மா தலைலயோ கயுத்துலயோ குந்திகினு கீராம பாம்பு இன்னா பண்ணுதுனு கேளு.. நைசா சிவனோட மார்புல எறங்கி ரோந்து வுட்டுகுனு வருது.. நம்ம பார்வதிம்மா அதாம்பா சக்தி.. பாடில ரைட்டு ஆப்லக்குதுல? அது பாம்பைக் கண்டுகினதும் டர் ஆவுது.. இன்னாடாது.. பாம்பு ஊந்துகினே வருது.. நம்ம பார்டருல வருதுள்ளாற எஸ் வுடுவம்னா இந்தாளு புர்சங்காரன் பாதி உடம்பை வேறே புட்ச்சி வச்சிங்கிறான்.. பேஜாரா போச்சேனு மெய்யாலுமே பயந்துடிச்சிபா.. இந்தப் பொம்பள பாம்பைப் பாத்து டர் ஆவுதா? அந்தப் பாம்பு கதையை கேட்டுகினியா? அதுக்கும் பேதியாவுது.. ஏன்னு கேளு.. பாம்பு இந்தப் பொம்பள கலரையும் அயகையும் பாத்து மயில்னு நினைச்சுகிச்சுபா.. அட.. பாம்புக்கு மயில்னா பயமாச்சே.. இன்னாடா.. இந்த மன்சன்.. நம்மளை தலைல தூக்கி வச்சுகினானேனு அல்டாப்பா இருந்தா இந்த மயிலுக்கு காவு குட்த்துருவான் போலக்குதேனு அப்படியே ஷாக்காயிடுச்சு.. இங்க பார்வதியும் பாம்பும் மெர்சலாயினிருக்க சொல்ல இன்னொரு கூத்து கேளு.. சிவன் தலைல சந்திரன் இருக்குதுல்ல.. அதும் நடுங்குது.. ஏன்னு கேளு.. தோடா.. ஏற்கனவே ஒட்ச்சி போட்ட முறுக்காட்டம் இந்தாள் தலையில குந்தினுகுறோம்.. பாம்பு வேறே பயந்தாப்புல இருக்குது.. கபால்னு ரூட் மாறி நம்மளை முயுங்கிடுச்சுனா இன்னாவும் கெதினு அதுக்கு ஒரே பெஜாரு.. ஆத்தங்கரைல குந்திகினு இத்தையெல்லாம் பாத்துகினே சொம்மா சிரிச்சினிகுதுபா இந்த சிவம்..! இதான் அர்த்தம் பிரியுதா? அதான் படிக்க சொல்ல ஒயுங்கா தமிளு படின்றது.. அத்தவுட்டு இன்னாத்தையோ படிச்சினிகிறீங்கோ இந்தக்காலத்துப் புள்ளிங்கோ..

அப்படி என்ன இணையத் தேடல் என்கிறீர்களா? நண்பர் ஒருவர் சமீபத்தில் மயில் கறி சாப்பிட்டதாகச் சொன்னார். மயில் மாமிசம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் என்றாலும் நம்ப முடியவில்லை. தேசியப் பறவை, முருகன் வாகனம் என்று ஒருபக்கம் இருந்தாலும் - என்னவோ மயில் கறி பரிமாறுவார்கள் என்று நினைக்கவில்லை - மயில் மாமிசம் ஐக்கிய நாடுகளால் தடை செய்யப்பட்டது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இல்லையாம். சரி, மயில் கறி எப்படியிருக்கும்.. கோழி போலவா வான்கோழி போலவா எப்படிச் சுவைக்கும் என்று அறிய விரும்பி கூகிலில் தேடினால் முதல் வரிசையிலேயே மேற்சொன்ன தேவாரப் பாடல் வருகிறது!

மயில் கறியை மறந்து தேவாரப்பாடலில் லயித்து முடித்தால் இரண்டு வரிசை கீழே டாக்டர் கன்னியப்பன் என்பார் மயில்கறி பற்றி நேரிசை வெண்பா எழுதியிருப்பதைக் கண்டேன். 'அட! என்னே என் தமிழ்த்தேடலின் பாக்கியம்' என்று அதையும் படித்தேன்.
    சூலைப் பிடிப்புகளைச் சோரிவளி யைப்பித்த
    வேலைச்சி லேட்டுமத்தை வீட்டுங்கால் – நூலொத்த
    அற்பவிடை மாதே அனலா மயிலிறைச்சி
    நற்பசியுண் டாக்கு நவில்.

பொருள்:
நூல் போன்ற சின்னஞ்சிறு இடையை உடைய பெண்ணே! மயில் இறைச்சியை உண்பவர்களுக்கு உஷ்ணத்தைக் கிளப்பும். நல்ல பசியை உண்டாக்கும். வலி தரும் மூட்டுப் பிடிப்பு, சோரிவளி, பித்தம், அதிக கபம் இவைகளை விரட்டும்.

மயில் கறிக்கும் அற்ப இடைப் பெண்ணுக்கும் என்ன தொடர்பு?

        செவிக்குணவு போதும். இனி கண்ணுக்கு. சமீபத்தில் இரண்டு நாள் கொட்டித் தீர்த்தது மழை. அக்கம்பக்க விளையாட்டுத் திடல்கள் எல்லாம் குட்டைகளாக அவதாரம் எடுத்திருந்தன. ஒரு மாலைப் பொழுதில்:
இவர்களுடன் நடந்த போது இவற்றைக் கண்டேன்
பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது. வெண்பா கிண்பா எழுதவோ தேடவோ தோன்றவில்லை.

2017/07/21

வந்தவள்



        ப்போதெல்லாம் இரவில் தூக்கம் சரியாக வருவதில்லை தவறி வந்தாலும் மூன்றரை மணிக்கே விழிப்பு வந்துவிடுகிறது. உதவியில்லாமல் படுக்கையை விட்டு எழுந்து நடமாடக்கூடாது என்று விதியிருப்பதால் படுத்திருப்பேன். ராம ராம என்று ஏதாவது சொல்வேன். சரியாக ஆறு மணிக்குச் செவிலிப்பெண் வந்து எழுப்புவது போல் எழுப்பி, நான் காலைக்கடன் முடிக்க உதவி செய்து, சிறிய டம்ளரில் சொட்டுப் பால் கலந்து சர்க்கரையில்லாத காபி கொடுப்பாள். இரண்டு பிரிட்டானியா பிஸ்கெட் கொடுத்து என்னை சாய்நாற்காலியில் உட்காரவைத்துப் போவாள். சில நேரம் பெரிய எழுத்து பாகவதம் படிப்பேன். கண்ணன் கதைகள் பிடிக்கும். அலமாரியில் வரிசையாக இருக்கும் மெடல்களைப் பார்ப்பேன்.. என் நேர்மைக்கும் திறமைக்கும் கிடைத்த பரிசுகள்.. சில நேரம் ஆல்பத்தைப் புரட்டிப் பிள்ளைகள் பேரக்குழந்தைகள் படங்களையோ அவர்களனுப்பிய கடிதங்களையோ பார்ப்பேன். படிக்க முடிவதில்லை. பல நேரம் கண்மூடியிருப்பேன். அன்றைக்கும் அப்படியே.

சலசலப்பு கேட்டு விழித்தேன்.

விழித்தேன் என்பது சரியான சொல்லா தெரியவில்லை. கண் திறந்தேன் எனலாமா? அப்படித்தான் வைத்துக் கொள்ளவேண்டும். விழிப்பது புறச் செய்கையெனில் நான் தூங்கினால் தானே விழிப்பதற்கு? அகத்தைப் பற்றியதெனில் விழிப்பதற்கான வாய்ப்பே இல்லை. மூன்று வருடங்கள் முன்பு தூங்கிய அகம் இனி விழிக்கப் போவதில்லை.

வெளியே சலசலப்பு பெரிதாகக் கேட்டது. அவளாகவே இருக்க வேண்டும். யாருக்கு அதிர்ஷ்டமோ? இன்றைக்கு என்னைப் பார்க்க வந்தால் நன்றாக இருக்குமே என்று உள்ளத்தின் ஏதோ ஒரு மூலையில்…. சரி வரும் போது வரட்டும்… என்று நினைக்கும் போதே அறைக்கதவைத் தட்டும் ஓசை. தொடர்ந்து உள்ளே வந்தாள். அவள்தான்.

பதினைந்து பதினாறு வயதிருக்குமா? தினமும் பதினாறாகவே இருக்கிறாளே? இன்றைக்குப் பாவாடை தாவணி அணிந்திருந்தாள். குழந்தைத்தனமும் விலகாமல் குமரித்தனமும் பரவாமல் ஒருவிதக் குதூகலமான முகம். வெகுளியும் விவேகமும் கலந்த அறிவார்ந்த முகம். நெற்றியில் கருங்கீற்று. அதன் கீழே சிறிய குங்குமப் பொட்டு. கருணைக் கடலாய் கண்கள். கழுத்தில் ஒரு கண்ணாடி மாலை. இரண்டு கைகளிலும் கண்ணாடி வளையல்கள். ஒரு கையில் சிறிய துணிப்பை. பளிச்சென்று இருந்தாள். பார்வைக்குப் பரவசம் தந்தாள். ஆறேழு மாதங்களாக அவ்வப்போது வருகிறாள். எப்போது வந்தாலும் அதே தோற்றம். அதே முகம். அதே பரவசம்.

“தாத்தா” என்று ஓடிவந்து என் கைகளைப் பிடித்துக் கொண்டாள். “எப்படி இருக்கீங்க தாத்தா? இந்தாங்க உங்களுக்காக..” என்று தன் பையிலிருந்து ஒரு பிடி பவழமல்லிப் பூக்களை எடுத்துத் தந்தாள். “பாவாடை தாவணி உங்களுக்காகக் கட்டிக்கிட்டேன். அழகா இருக்கா? பவளமல்லியும் உங்களுக்குத்தான் தாத்தா.. இன்னிக்கு உங்க பிறந்த நாள் இல்லியா? வாழ்த்துக்கள் தாத்தா”

“சந்தோஷம்”. புன்னகைத்தேன். “நாளைக்கு வருவியா?” என்ற என் கேள்விப் பார்வையைப் புரிந்துகொண்டவள் போல் “அவசியம் இருந்தா வருவேன் தாத்தா..” என்ற வழக்கமான பதிலைச் சொல்லிக் கிளம்பி மறைந்து விட்டாள்.

ஆல்பத்தைப் புரட்டி மகன் பேரன் பேத்தி படங்கள் சிலவற்றைப் பார்த்தேன். பிறகு கண்களை மூடி பவழமல்லிப் பூக்களை என் முகத்தில் அப்படியே கவிழ்த்துக் கொண்டேன். மணம் மனத்தை இழுத்தது.

        ன் மனைவி பூரணியின் எழுபதாவது பிறந்தநாள். பூரணி என் உயிர். என் அகம். என் எல்லாம். எங்களுக்கு ஆறு பிள்ளைகள். முதல் ஐந்தும் வரிசையாக ஆண், கடைசியில் ஒரு பெண். எல்லாரையும் வளர்த்து, படிக்க வைத்து முன்னேற்றப் பாதையில் வழியனுப்பிவிட்டு என்னுடய ஹைகோர்ட் நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்று ராஜா அண்ணாமலை புரத்தில் இருந்த என் குடும்ப வீட்டில் என் மூன்றாவது மகன் குடும்பத்துடன் இருந்தோம். அங்கேதான் விழா. சிகாகோ, லசான், துபாய், டோக்கியோ, மும்பையிலிருந்து எங்கள் மற்றப் பிள்ளைகளும் குடும்பத்துடன் வந்து ஆச்சரியப்படுத்தினார்கள். பூரணி பிறந்த நாளுக்கு ஹோமம், அன்னதானம், துணிதானம் என்று அமர்க்களப்படுத்தியிருந்தார்கள்.

மறுநாள் காலை சிற்றுண்டி முடித்ததும் பேரக்குழந்தைகள் அனைவரும் மருமகனுடன் வெளியே பிக்னிக் கிளம்பினார்கள். மருமகள் ஐவரும் அதிகாலையிலேயே மொத்தமாக வெளியே கிளம்பியிருந்தார்கள். மகன் ஐவரும் மகளும் நாங்களும் மட்டும் இருந்தோம். “அப்பா அம்மா.. உங்களுட பேசணும்" என்றார்கள்.

மூன்றாவது மகன் தொடங்கிவைத்தான். “அப்பா.. அம்மா.. நீங்க ரெண்டு பேருமே நல்ல வாழ்க்கை வாழ்ந்தீங்க.. எங்களுக்கும் வழி செஞ்சீங்க.. இனி அடுத்த நிலையைப் பத்தி யோசிக்க வேண்டாமா.. அப்பா.. உங்களுக்கு எழுவத்தெட்டு வயசாகுது.. அம்மாவுக்கு எழுபதாயிடுச்சு.. எனக்கும் என் மனைவிக்கும் இருக்குற வேலை குழந்தை வளர்ப்பு சமூக ஈடுபாடுகள்ல உங்களைக் கவனிக்க முடியலே.. குழந்தைகளுக்கும் நீங்க கொஞ்சம் பழைய நடத்தைகளைக் காட்டுறது என் மனைவிக்குப் பிடிக்கலேபா.. எனக்கும் கஷ்டமா இருக்கு”.

“வீடு வேறே பழசாயிடுச்சுப்பா..” என்றான் இரண்டாமவன்.

“டேய்.. இது எங்க தாத்தா காலத்து வீடுரா”

“அதனாலதாம்பா..” என்றான் முதல்வன். “இதுல எங்களுக்கும் பங்கு இருக்குல்ல?”

“என்ன சொல்றே?” என்றாள் பூரணி.

“அம்மா. நீ கொஞ்சம் சும்மா இரும்மா” என்று அடக்கினாள் மகள்.

“உங்க ரெண்டு பேரையும் முதியோர் இல்லத்துல சேர்த்து விட்டா எல்லாருக்குமே வசதியா இருக்கும்னு தோணுதுபா” – இது நான்காவது மகன்.

“அதனாலதான் எல்லாரும் சேர்ந்து பேசலாம்னு ஒண்ணா வந்தோம்.. அம்மாவோட எழுபதாவது பொறந்த நாளையும் தவறவிடாம வந்துட்டோம்” கடைசி மகன்.

“ஆமாம்பா.. இந்த வீட்டை இடிச்சு ஆறு பேரும் ஜேவி போட்டு பனிரெண்டு ப்ளாட் கட்டுறதா திட்டம்.. ஜனாவே ஏற்பாடு செய்துடுவான்..” என்றான் மூத்தவன். ஜனா என் மூன்றாவது மகன். நகரின் மிகப்பிரபல கட்டிட நிறுவனம் ஒன்றின் முதலாளி. எங்களுடன் தினம் வாழ்ந்து வருபவன். “நாங்க ஆளுக்கு ஒரு ப்ளாட் எடுத்துக்குறோம். மிச்ச பிளாட்டை வித்து பணத்துலந்து ஒரு நல்ல முதியோர் இல்லத்துல வைப்புத்தொகை கட்டி உங்க ரெண்டுபேரையும் ஆயுசுக்கும் பாத்துக்கும்படி செய்துடறோம்.. மீதிப் பணத்துல உங்க பேரக் குழந்தைகளுக்கு ஒரு டிரஸ்ட் உருவாக்கிடறோம்”. அடப்பாவிகளா.. இதற்குத்தான் ஒன்றாக வந்தீர்களா எல்லாரும்?

“ஏண்டா.. எங்களை கவனிக்க கஷ்டமா இருக்குதா?” பூரணி மறித்தாள்.

“அம்மா.. சும்மா இருக்கியா? உங்க நனமைக்குத்தான் சொல்றோம். உங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சுனு வை, அவசரத்துக்கு நாங்க யாருமே இல்லியேமா? முதியோர் இல்லத்துல நல்லா கவனிப்பாங்க.. நாங்க யாராவது அப்பப்ப வந்து பார்ப்போம். உங்களுக்கு ஒரு குறையும் வைக்க மாட்டோம். பெத்தவங்க இல்லியா?” ஏறக்குறைய முடித்து வைத்தாள், என் செல்ல மகள். “என்னப்பா சொல்றீங்க?”

நான் என்ன சொன்னேன் என்று நினைவில்லை. அவர்கள் என்ன பேசினார்கள் என்று நினைவில்லை. எதிலெதிலோ கையொப்பமிட்டேன். ஒரு வருடத்துக்குள் இங்கே பவானி பக்கம் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு எங்களுடன் சில நாட்கள் தங்கினார்கள். பிரிந்தார்கள்.

        து நடந்தது பதினொரு வருடங்களுக்கு முன்பு.

எனக்கு இன்றைக்கு தொண்ணூறாவது பிறந்த நாள். பூரணி இருந்தால் ஏதாவது செய்வாள். இனிப்பு ஆகாது என்பதால் கொஞ்சம் தேன் எடுத்து என் நாவில் தடவி முத்தம் தருவாள். என் கைகளைப் பிடித்துக் கொண்டே ஏதாவது சினிமா பாட்டு பாடுவாள். எனக்கு சினிமாப் பாடல்கள் தான் பிடிக்கும்.

பூரணி இல்லை. மூன்று வருடங்களுக்கு முன் அதிகாலையில் பூரணி பூரணி என்கிறேன்…

என் பிள்ளைகள் பேரக்குழந்தைகள் யாரும் வரவில்லை. அவர்களுக்கு என்ன முடக்கமோ வேலையோ.. பாவம். ஒரு மாதம் பொறுத்து ஜனா வந்து பூரணிக்கான வைப்புப் பணத்தை வாங்கிக் கொண்டு போனான். “உனக்கு ஏதும் வேணுமாப்பா?” என்றான்.

அகம் தூங்கியது என்றேனே, அன்றைக்குத் தூங்கியது இனி விழிக்காது. மூன்று வருடங்களாக நானும் என் நலிந்து வரும் உடலும் மனமும் எதற்காகவோ காத்திருக்கிறோம். அவ்வப்போது செவிலிப்பெண் அக்கம்பக்கத்து முதியோர் பற்றிச் சொல்வாள். அனேகமாக எல்லார் கதையும் இப்படித்தான் போலிருக்கிறது.

சென்ற இரண்டு வருடங்களாகவே நான் வெளியே போவதில்லை. அனுமதியில்லை. எலும்புச் சேதம் என்கிறார்கள். அல்சைமர்ஸ் என்கிறார்கள். மயொபிஜியா பராக்சிஸ்மாலிஸ் என்கிறார்கள். பொடேசியப் பற்றாக்குறை என்கிறார்கள். என்னைப் பார்க்கவும் யாரும் வருவதில்லை. ஆக, அறைவாசம் சிறைவாசம்.

ஆறு மாதங்களுக்கு முன் ஒரு இரவு மிக அழுதேன். உடல்வலியை மிஞ்சும் மனவலி. மனவலியை மிஞ்சும் இயலாமை. இயலாமையை மிஞ்சும் உயிர்ப்பிடிப்பு. எத்தனை நேரம் அழுதேனோ?

மறு நாள் காலையில் திடீரென்று அறைக்கதவைத் தட்டி அவள் வந்தாள். முதல் முறை. “தாத்தா.. இந்தாங்க பிடிங்க” என்று ஒரு கை மல்லிகை மொட்டுக்களைத் தந்தாள். என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போல் அப்படி ஒரு களை முகத்தில். “யாரம்மா நீ?” என்று கேட்பதற்குள் கிளம்பிவிட்டாள்.

அதற்குப் பிறகு வந்தபோதெல்லாம் என் கைகளைப் பிடித்துக் கொள்வாள். இல்லையெனில் நெற்றியை வருடி விடுவாள். ஒரு பிடி உதிரி மலர் ஏதாவது கொடுத்து விலகுவாள். “நாளைக்கு வருவியா?” என்றால் சிரித்தபடி “அவசியம் இருந்தால் வரேன் தாத்தா..” என்பாள்.

ஒரு முறை செவிலியிடம் கேட்டேன் அவளைப் பற்றி. “என்னவோ அய்யா.. எங்க கண்ணுக்குத் தெரிய மாட்டேங்குதே அந்தப் பொண்ணு?” என்று சிரித்தாள்.

“மாயப் பொண்ணா?”

“இல்லே ஐயா.. நான் வரப்ப அந்தப் பொண்ணு வரலேனு சொல்றேன்.. அக்கம்பக்கம் அந்தப் பொண்ணு வரான்னு சொல்றாங்க. நான் பார்த்ததே இல்லை. அதான்”.

"என்ன செய்யுது அந்தப் பொண்ணு மத்தவங்க கிட்டே?"

"என்னய்யா பொறாமையா?" சிரித்தாள் செவிலி. "உங்களைப்போலத்தான் ஐயா. யாரும் இல்லாதவங்க கிட்டே வந்து பேசுது. ஆறுதலா சிரிக்குது. ஏதோ பூவோ பழமோ குங்குமமோ தருதாம் சிலருக்கு.. கேள்விதான்.. நான் கண்டதில்லே.. ஆனா அந்தப் பொண்ணு வந்து போனா சந்தோசமா இருக்குதுனு சொல்றாங்க.. உண்மை தானே ஐயா.. நான் இங்க கூலிக்கு வேலை பாக்குறேன்னு இருந்தாலும் உங்க முதிய மனசுங்களோட வலி புரியுது ஐயா.. உங்களுக்கு எத்தினி ஆறு புள்ளைங்களா.. உங்க விருந்தாளி ரெஜிஸ்டர்ல அஞ்சு வருசத்துல ஒரே முறை பதிவாயிருக்கு அதும் அம்மா காணாத போன பிறகு.. பன்னீர் செல்வம் அய்யா பாருங்க.. மகன் எம்எல்எ மந்திரி ஆனா ஊழல் செய்யுறது பிடிக்கலேன்னு இங்க வந்து உக்காந்திருக்காரு.. ராகவனய்யா ஒரே பையனை பறிகொடுத்துட்டு.. ராமநாதன் சாருக்கு ரெண்டு பசங்க.. ரெண்டாமவனுக்கு கல்யாணம் கட்டின ஒரு மாசத்துல இங்க அனுப்பிட்டாங்க.. காலம் மாறிட்டு வருதே? இப்படி இங்க வந்த நாதியில்லாத மன்னிச்சுக்குங்க ஐயா வயசானவங்களை அப்பப்ப வந்து விசாரிச்சுட்டுப் போகவும் நல்ல மனசு வேணும்.. அந்தப் பொண்ணு நல்லாருக்கட்டும்".

        செவிலி சமீபமாக இல்லத்தில் முதியவர்கள் ‘காணாமல்’ போய்விடுவதாக அடிக்கடி சொல்லி வருகிறாள். “காணாம போறாங்களா?” என்று நான் அதிர்ந்தால் சிரிப்பாள். “இடக்கரடக்கல் ஐயா. கண் காணாத இடத்துக்கு போயிட்டாங்க”.

என் பூரணியும் காணாமல் போய் மூன்று வருடங்களாகின்றன. எனக்கும் காணாமல் போகும் துடிப்பு இருந்துகொண்டே...
ஏனோ அவளைப் பார்க்கும்பொழுது மட்டும் துடிப்பு சற்று அடங்குவது போல..

பார்த்திருந்தாலும் அவள் பெயரைத் தெரிந்து கொண்டதேயில்லை. ஏனோ கேட்கும் நினைப்பும் வரவில்லை. அவளைப் பார்ப்பதில் கிட்டும் குறுநேரப் பரவசத்தில் எல்லாமே மறந்துவிடும். அடுத்த முறை கேட்கவேண்டும்.

அடுத்த சில நாட்களுக்கு அவள் வரவில்லை. வாரங்களாகவும் இருக்கலாம். நேற்று முன்தினம் ராகவன் காணாது போனதாகச் செவிலி சொன்னாள். ராகவன் எங்களுக்கு ஐந்து வருடங்கள் பின்னால் வந்தவர். இன்று காலை பிஸ்கெட் தின்றுகொண்டே பன்னீர்செல்வம் காணாது போய்விட்டதாகச் சொன்னாள். வலித்தது. கண்களில் லேசாக நீர் திரையிடுவது தெரிந்தாலும் உணரமுடியாதது முரணாக இருந்தது. இன்று அந்தப் பெண் வந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்.

வந்தாள். வந்த போது நான் கண் மூடியிருந்தேன். "தாத்தா" என்ற குதூகலக் குரல் கேட்டுக் கண் திறந்தேன். என் முன் நின்றாள். அதே பரவசமூட்டும் முகம். புன்னகைக்க முயன்றேன். என் கை விரல்களை மிக மிக மென்மையாகப் பிடித்தாள். "ரொம்ப முடியலியா தாத்தா?" என்றபடி என் நெற்றியைத் தடவினாள்.

"என்ன கொஞ்ச நாளா வரலே?"

"வந்தேனே தாத்தா? நீங்க கண்மூடியிருந்தீங்க.. பார்த்துட்டு போயிட்டேன்.. ஆனா இன்னிக்கு உங்க கண் திறந்து உங்களைப் பாத்து பேசிட்டுப் போகலாம்னு வந்தேன்.." என்று இனிமையாகப் பேசினாள்.

"நாளை வருவியா?"

"அவசியம் இருந்தா வருவேன் தாத்தா"

"அவசியம் உண்டா இல்லியானு எப்படி தெரியும்?"

மென்மையாகச் சிரித்தாள். "எனக்கு எல்லாம் தெரியும்" என்றபடி என் கைகளை விடுவித்தாள். "பயப்படாதீங்க தாத்தா". கிளம்பினாள்.

"ஏய்.. இரு.. இரு.." என்றேன்.

"என்ன தாத்தா?"

"கோவிலுக்குப் போவியா?"

ஆச்சரியத்தோடு பார்த்தாள். "ஏன் கேக்குறீங்க?"

"இந்தா" என்று என் ஆல்பத்தைக் கொடுத்தேன்.

"என்ன இது தாத்தா?"

"என் சந்ததி படங்கள்.. எனக்குத் தேவையில்லை.. ஏன் பிடிச்சு வச்சிட்டிருந்தேனோ.. அவங்க நல்லா இருக்கணும்னு அம்மன் கிட்டே நீ எனக்காக வேண்டிக்கிட்டு அங்கயே வச்சுடு.. அதோ அந்த பெட்டிக்குள்ள நிறைய காசும் பணமும் இருக்கு.. எடுத்து அர்ச்சனைக்குப் போக உண்டியல்ல போட்டுரு.. அந்த அலமாரியில என்னுடைய புத்தகங்கள்.. வந்தப்ப கொண்டு வந்தது.. யாருக்காவது கொடுத்துடு.. ஏன் இன்னும் இதையெல்லாம் பிடிச்சிட்டிருக்கேனோ.. இன்னொரு உதவி செய். அப்புறம்.. அதோ அந்த மெடல்கள்.. அப்புறம்.. அந்தப் பெட்டிய.. அதான்.. எடுத்துவா"

வந்தாள்.

"அம்மா.. நீ யாரோ எனக்குத் தெரியாது.. ஆனா நான் சோர்ந்த நேரத்திலெல்லாம் வந்திருக்கே.. எனக்கு இனம் புரியாத பிடிப்பைப் கொடுத்திருக்கே.. அதுக்கு நன்றினு நினைக்காதே.. இந்த மெடல்கள் அசல் தங்கம்.. என் திறமையே அவன் போட்ட பிச்சைனு மறந்துட்டு தங்க மெடல் கிடல்னு பிடிச்சிட்டிருந்தேன் பாரு.. இந்த பெட்டியில என் மனைவியோட நகைகள் இருக்கு.. மெடல்.. நகை.. இதை அத்தனையும் நீ எடுத்துக்க"

அவள் மறுக்கவில்லை. என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். "வேறே ஏதாவது தாத்தா..?"

"ஆமாம்.. கேட்கணும்னு இருந்தேன்.. இங்க வா.. எல்லாம் தெரிஞ்ச பெண்ணே.. உன் பேரென்னம்மா?"

"என் பேரு ஈஸ்வரி" என் முகத்தருகே நெருங்கி "எனக்கு மெய்யாவே எல்லாம் தெரியும் தாத்தா" என்றாள்.
■ ■


குறிப்பு [-]

இக்கதையின் கரு, ரே ப்ரேட்பரி எழுதியதாக நம்பப்படும் "The dog in the red bandana" எனும் சிறுகதை. 'காணாமல்' போவதற்கு இரண்டு வருடங்கள் முன்பு ரே எழுதியதாகச் சொல்கிறார்கள். ஐம்பது சதவிகிதம் சாத்தியம் என்பேன். குறைந்த பட்சம் முடிவையாவது யாரோ மாற்றியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இந்தக் கதை வெளியாகவில்லை எனினும் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கம் போல் அசைபோட்டுத் தமிழில் தழுவியதில் ஆக்க உரிமைகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன். பிழைகளுக்கு நானே பொறுப்பு. தொடர்ந்து படித்தமைக்கு நன்றி.

இன்னும் சில ப்ரேட்பரி கதைகள், என் எழுத்தில்:
கொலகார பேஷன்ட் | (The Murderer)
ஆஸ்மா கிணறு | (The one who waits)
சிவப்பு வட்டம் | (The last night of the world)
பரணறையில் நன்னாரி மணம் | (A scent of sarasparilla)
மனதிற்கினிய மேரி டீச்சர் | (A story of love)
மகிழ்ச்சி எந்திரம் | (The happiness machine)




2017/07/14

கொலகார பேஷன்ட்



        “டாக்டர் குரு, உங்கள் நாலு மணி பேஷன்ட் தயார். பாதுகாப்பு அறை ஏழு, புது பேஷன்ட். கைதி. மேலாய்வுக்காக டாக்டர் ஸ்னேகா வித்யுத் அனுப்பி வைத்தார்” என்று ப்லூடூத் ஹெட்செட்டில் வந்த தேன்குரல் கேட்டு “ஓகே” என்றான். கணினியில் தெரிந்த விவரங்களைப் படித்தான். இரண்டு அவசர உதவி வாக்கி டாக்கி ரேடியோக்களை எடுத்துக் கொண்டான். ஒன்றை இடது கால் சாக்ஸில் மறைவாகப் பொருத்திக் கொண்டான். மற்றொன்றை கோட் பாகெட்டில் போட்டுக் கொண்டான். ஐபேடை கணினி முன் நீட்ட பேஷன்ட் விவரங்கள் தானாகவே நகலாகின. ஐபேடை பார்த்தபடி பாதுகாப்பு அறை ஏழுக்கு நடந்தான். பேஷன்ட் பெயர் பாதித்தது.

அறைக்குள் நுழையுமுன் பாதுகாப்பு ரேடியோக்களை இயக்கிக் கொண்டான். அறைக்குள் நுழைந்ததும் கதவு தானாகப் பூட்டிக்கொண்டது.

நீண்ட மேஜையின் எதிரெதிரே இரண்டு வசதியான சாய்வு நாற்காலிகள். ஒரு நாற்காலியில் ஒருவன் அமர்ந்திருந்தான். நாற்பது வயதிருக்கும். கைகள் கட்டப்பட்டிருந்தன. மறு நாற்காலிக்குச் சென்ற குரு மனம் மாறி ஆளிருந்த நாற்காலியருகே வந்தான். கோட்டிலிருந்த ரேடியோ, ஐபேட் இரண்டையும் மேஜை மேல் வைத்தான்.

லேசானப் புன்னகையுடன் பேஷன்ட் கைக் கட்டை அவிழ்த்தான். “என் பெயர் டாக்டர் குரு” என்றான். “நீங்க?”

“என் பெயர் கொலகாரன்”

“பார்த்தேன். உங்க நிஜப்பெயரா?”

“கொல செய்யுறவன் கொலகாரன் தானே? நாம எல்லாருமே கொலகாரங்க தான். இனி உங்களையும் கொலகாரன்னே கூப்பிடவா?”

“டாக்டர் குருனே கூப்பிடுங்க…. மிஸ்டர் கொலகாரன்” தயங்கினான் குரு.

“சரி” என்ற பேஷன்ட் சட்டென்று எழுந்து மேஜையிலிருந்த ஐபேடை எடுத்து சிதறு தேங்காய் போல் தரையில் ஓங்கி அடித்தான். சுக்கு நூறான ஐபேடைப் பார்த்துச் சிரித்தான். மேஜை மேலிருந்த ரேடியோவைப் பற்களால் கடித்துக் குதறி சின்னாபின்னமாக்கித் துப்பினான். நாற்காலியில் நிதானமாக அமர்ந்தான்.

திடுக்கிட்ட குரு மெள்ள சுதாரித்தான். எதிர்புறமிருந்த நாற்காலியைப் பலத்த ஒலியுடன் பேஷன்ட் அருகே இழுத்து வந்து உட்கார்ந்தான். “நீங்க உடைச்ச ஐபேடும் ரேடியோவும் எழுவத்தஞ்சாயிரம் ரூபாய்” என்றான்.

“சட்டி சுட்டதடா கை விட்டதடா” என்று உரக்கப் பாடினான் பேஷன்ட்.

கோட் பாகெட்டிலிருந்த குறிப்பேட்டையும் பென்சிலையும் எடுத்தான் குரு. “மன்னிச்சுக்குங்க.. மிஸ்டர் கொலகாரன்… உங்களுக்கு இந்த மாதிரி கருவிகள் எந்திரங்கள் பிடிக்காதுனு மறந்துடுச்சு..” என்றான். புன்னகைத்தான். “போன வெள்ளிக்கிழமை கைது ஆயிருக்கீங்க. டாக்டர் வித்யுத் உங்களை மேற்பரிசோதனைக்காக எங்கிட்டே அனுப்பியிருக்காங்க”

“தெரியும் தெரியும் விஷயம் தெரியும் காலம் வந்தால்..” பாடினான் பேஷன்ட்.

“நல்லாருக்கு. அந்தக்காலத்து சினிமா பாட்டா?” தொடர்ந்தான் குரு. “நான் உங்களுக்கு உதவி செய்ய முடியும்னு நம்பறேன். உங்க மனசிலிருக்குறதை தைரியமா சொல்லுங்க.. என் கிட்டே சொல்லுற எதுவும் உங்களுக்கு எதிரா கோர்ட்டுலயோ பொதுவிலயோ சாட்சியமா பயன்படாது. தைரியமா எதுவானாலும் சொல்லுங்க”

“தைரியமா எதுவானாலும் கேளுங்க” என்றான் பேஷன்ட். “என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே..” பாடினான்.

“மிஸ்டர் கொலகாரன்… போன வெள்ளிக்கிழமை மட்டும் அறுபது செல்போனை உடைச்சிருக்கீங்க, முப்பது டிவி உடைச்சிருக்கீங்க, நூறு லேப்டாப்களை அடிச்சு நொறுக்கியிருக்கீங்க.. பதினேழு எக்ஸ்பாக்ஸ்.. முப்பது ப்லேஸ்டேஷன்.. இருநூறு ஹெட்செட்டைப் பிடுங்கி எறிஞ்சிருக்கீங்க..”

“சும்மாவா என்னைக் கொலகாரன்னு சொல்றாங்க?”

“செல்போன் மேலே உங்களுக்கு ஏன் வெறுப்பு? நீங்க போன் உபயோகிச்சிருக்கீங்க இல்லையா?””

“இருக்கேன்., போன் எதுக்கு? ஒரு அவசரத்துக்கு பேச. நேர்ல பேச முடியாதப்பவும் ரொம்ப தொலைவுல இருக்குறவங்க கூட அப்பப்ப இருக்கியா போயிட்டியானு விசாரிச்சுப் பேச. இப்ப பாருங்க.. யாரும் நேர்ல பேசிக்குறதே இல்லே.. மாடியிலிருந்து என் பையன் டெக்ஸ்ட் பண்ணுறான் “சாப்பாடு ரெடியா”னு கேட்டு. வந்து சாப்பிட்டதும் ரூமுக்கு ஓடி விடியோ விளையாடுறான். ஹெட்செட் மாட்டிக்கிட்டா எதுவுமே காதுல விழாது.. அப்புறம் வாட்சப் யூட்யூப்.. இப்படியே போகுது அவன் வாழ்க்கை.. வெளியில எத்தனை மரங்கள்.. எத்தனை குருவிகள்.. எல்லாம் காணாம போச்சு.. இவங்க செல்போன்ல வாழுறதுக்காக இயற்கை தினம் சாகுதய்யா…”

பார்வை விலக்காமல் குரு குறிப்பெடுத்துக் கொண்டிருந்தான். பேஷன்ட் தன்னை மறந்துப் பேசிக்கொண்டிருந்தான்.

“என் மனைவியைப் பாருங்க.. அந்த நாள்ல எங்கம்மா பாட்டி எல்லாம் சமையல் செய்து அன்போட குழந்தை கணவருக்குப் பரிமாறி சாப்பிடுறதைப் பார்த்து சந்தோஷப்படுவாங்க.. எங்க கூட விளையாடுவாங்க.. சாப்பிடுறப்ப கலகலப்பா இருக்கும். கதை பேசுவோம்.. வம்படிப்போம்.. இப்ப பாருங்க.. யாரும் ஒண்ணா சாப்பிடுறதே இல்லை.. என் மனைவி பசங்களோட சாப்பிட்டு நினைவேயில்லை.. பாதி நேரம் ஆனந்த பவன் கோணங்கி பவன்லந்து டேக் அவுட், ஸ்விக்கி பக்கினு யாரோ டிலிவரி பண்றாங்க.. அரிசி கூட வக்கறதில்லே பல நேரம்.. வாட்சப் ஃபேஸ்புக் ப்லாக்னு கலாய்ப்பா.. இல்லின்னா டிவி சீரியல்.. குடும்ப உணர்வே யாருக்கும் இல்லாமப் போனதுக்கு இந்தக் கருவிகளும் எந்திரங்களும் தானே காரணம்..”

“நீங்க சொல்றது ஒரு விதத்துல உண்மைனாலும் நாகரீகம் வளர்ச்சி இதெல்லாம் நமக்கு பல வசதிகளைக் கொடுக்குது இல்லையா மிஸ்டர் கொலகாரன்? இப்ப பாருங்க.. இணையம் வந்ததுலந்து நம்ம சமூக உணர்வுகள் எவ்வளவு விரிஞ்சிருக்கு? தொழில் நுட்பத்தினால எத்தனை முன்னேற்றங்கள். ஃபேஸ்புக் வாட்சப் வழியா புரட்சியெல்லாம் நடக்குதே? ஊழல் மந்திரிங்க மாட்டுறாங்க.. மதுரை மாணவர் அமெரிக்க எம்ஐடியில் இங்கிருந்தே படிக்க முடியுதே..” என்றான் குரு.

“ஆ.. என்று மடியும் இந்த அடிமையின் மோகம்” என்று பாடினான் பேஷன்ட். “ஐயா.. முன்னாலயும் படிச்சிட்டுத்தான் இருந்தாங்க. அப்ப இல்லாத மேதைங்களா? போஸ், சிவிராமன், தாகூர், ராஜகோபாலாச்சாரி, பாரதி, அம்பேத்கர், காந்தி.. இவங்கள்ளாம் என்ன பாமரங்களா? செல்போனும் டிவியும் ஐபேடும் இணையமும் இல்லாம இவங்க புரட்சி செய்யலியா? புதுமை செய்யலியா? தொழில் நுட்பத்துக்கு என்ன விலை கொடுக்குறோம்னு யாருக்குமே தெரிய மாட்டேங்குதே..”

“அதுனால இதையெல்லாம் போட்டு உடைக்குறது சரினு நினைக்கறீங்களா?”

“தெரியாது. ஆனா அந்த அளவுக்கு எந்திரங்கள் புழக்கத்தில் இருக்காதே? அதான்..”

“இதனால எத்தனை சேதம்னு உங்களுக்குப் புரியுதா? அதுவுமில்லாம நீங்க உடைச்சிருக்குற பொருட்கள் பெரும்பாலும் அடுத்தவங்களுக்குச் சொந்தமானது. இது குற்றம்னு உங்களுக்குத் தோணலியா?”

“கொன்றவன் கண்ணன்.. கொல்பவன் கண்ணன்..” பாடினான் பேஷன்ட். “எது சேதம் டாக்டர்? இன்னிக்கு மகன் மனைவி நட்பு என்னும் அத்தனை உணர்வுகளும் மின்னணுவில் சிக்கிச் சின்னாபின்னமாகுதே அதானே சேதம்? பசுமை வரண்டு பில்டிங்கா வளர்ந்திருக்கும் சிமென்ட் காடு.. இதுவா வளர்ச்சி? யாராவது முன்னோடியா வரணும் இல்லையா? நான் தொடங்கி வைக்கிறேன் அவ்வளவு தான்.. பாருங்க.. இன்னும் ஒரு மாசத்துல ஆறு மாசத்துல வருசத்துல எத்தனை பேர் என்னைப் போல வராங்கனு பாருங்க.. இது ஒரு இயக்கம். இந்த எந்திர மோகம் அழியும் வரை விடமாட்டோம். உலகம் முழுதும் எங்க இயக்கம் பரவும். வீடு வீடா வருவோம். கட்டிடம் கட்டிடமா தேடுவோம்.. மனித நேயம் மறுபடி மலரும் வரை எந்திரங்களைத் தேடி அழிப்போம்..”

“மிஸ்டர் கொலகாரன்..” கால் சாக்ஸிலிருந்த ரேடியோ பித்தானை அழுத்தினான் குரு. “உங்களுக்கு ஓய்வு தேவை. அதுக்கு மருந்து தருகிறேன்”

“எல்லாத்துக்கும் மருந்து மாத்திரை. இயற்கையை நேசிச்சப்ப இதெல்லாம் தேவையே இல்லாம இருந்துச்சே? தூங்க மாத்திரை.. விழிக்க மாத்திரை.. யாருக்கு வியாதி டாக்டர்? உங்களுக்கா எனக்கா? என்ன வேடிக்கை உலகம்யா இது? எந்திரங்கள் நம்மை எந்திரங்களாக்கிடுச்சே.. எழுந்திருங்க டாக்டர்.. எப்ப விழிக்கப் போறீங்க?” என்று சட்டென்று குருவின் தோள்களைக் குலுக்கிக் கையிலிருந்த ஐவாச்சை அவிழ்க்கப் போனான். “என்னோட வந்துருங்க டாக்டர்.. என் இயக்கத்துல சேர்ந்துடுங்க.. நான் உங்களைக் குணப்படுத்துறேன்..”

அதற்குள் உதவியாட்கள் வந்து பேஷன்டைக் கட்டுப்படுத்தி இழுத்துப் போனார்கள். சற்றே கலங்கியிருந்த குரு ஆயாசத்துடன் வெளியேறினான். உதவியாளரை அழைத்து, “நான் வீட்டுக்குப் போறேன். என் மிச்ச பேஷன்ட்களை இன்னொரு நாள் வரச்சொல்லுங்க”.

அலுவலகத்திலிருந்து வெளியேறி மூலைக்கு நடந்தான். கீழிறங்கிய நகர்படியில் பிறருடன் சேர்ந்து மூன்று மாடிகள் இறங்கி நடந்தான். பார்க்கிங் கராஜ் வந்ததும் கார்ச்சாவியின் பித்தானை அழுத்தினான். ஏழாம் வரிசையில் இருந்த கார் மின்னி பீப் என்றது. எஞ்சின் தானே விழித்தெழுந்து தயாரானது. ஏசியை இயக்கியது.

        வீடு வந்த போது ஆறு மணி. காரை நிறுத்திவிட்டு பதினைந்தாவது மாடி ப்ளாட்டிற்கு விரைந்தான். ஐவாச்சின் ப்லூடூத் இணைப்பில் உந்தப்பட்டுத் திறந்த துடிப்பூட்டுக் கதவைத் தள்ளி உள்ளே நுழைந்தான். சலனமறிந்த அறை விளக்குகள் தானாக எறிந்தன. மேலே மாட்டியிருந்த சான்டலியர் துடிவிளக்கு இள நீலத்தில் ஒளிர்ந்தது. விளக்குள் பொருந்தியிருந்த ஒலிபெருக்கி ஐவாச்சுடன் தானாகவே ப்லூடூத்தில் இணைந்து கூகில் டிரைவிலிருந்து பாடல்களை ஒலிக்கத் தொடங்கியது.

ஐவாச்சின் செயலி ‘900 காலொரி’ எனும் வரை யோகா ட்ரெட்மில் வெயிட்ஸ் என்று பயிற்சி செய்தான் குரு. குளியலறைக்குள் நுழைந்தான். சலனமறிந்த குளியலறை விளக்குகள் தானாக எரியத் தொடங்கின. மின்சாரத்தில் இயங்கிய பல்விளக்கியில் அவசரமாகச் சுத்தம் செய்துகொண்டான். முன்பதிவிலிருந்த கணக்கி இரண்டு நொடிகள் தயங்கி இயங்க, தானாக வெளிவந்த மிதமான சுடுநீர்ச்சாறலில் குளித்தான். வெளியே வந்து உடையணிந்து சமையலறைக் குளிர்பெட்டியிலிருந்து கின்வா பீன்ஸ் புலவ் எடுத்து மைக்ரோவேவில் சுடவைத்தான். ப்ரொடீன் ஷேக் ஒன்றை எடுத்துக் கோப்பையில் ஊற்றினான். சாப்பிட்டபின் ஐவாச்சின் ஹெல்த் செயலியைத் தட்டி 462 காலொரி என்றான்.

வரவேற்பறையின் சொகுசுத் துடி நாற்காலியில் சாய்ந்தான். மசாஜுக்கான பித்தான்களைத் தட்டினான். அரை மணி போல் சாய்ந்து டிவியில் சானல் புரட்டினான். மனைவியிடமிருந்து வாட்ஸப் செய்தி பார்த்தான். அம்மாவைக் கூகில் டுவோவில் கூப்பிட்டுப் பேசினான்.

ஒன்பது மணி. ஐவாச் “உறக்க நேரம்” என்றது. புதிதாக அறிமுகமான உப்பு கலந்த டூத்பேஸ்டில் மறுபடி பல்விளக்கி, புதிதாக அறிமுமான வேம்பும் கிராம்பும் கலந்த மவுத்வாஷில் வாய் கொப்பளித்துச் சுத்தம் செய்து கொண்டான். படுக்கையில் விழுந்தான்.

அறை விளக்குகள் தாமாக அணைந்தன. ஐவாச் ப்லூடூத் இணைப்பில் படுக்கை தலைப்பக்க ஸ்பீக்கர்களில் இதமான மெல்லிசை ஒலிக்கத் தொடங்கியது. குருவுக்கு ஏனோ மாலையின் நினைவுகள் மீண்டன. “என்னோட வந்துருங்க டாக்டர்.. என் இயக்கத்துல சேர்ந்துடுங்க.. நான் உங்களைக் குணப்படுத்துறேன்..”. புரண்டு படுத்தான்.
■ ■


குறிப்பு [-]

இக்கதையின் கரு, ரே ப்ரேட்பரி எழுதி 1953ல் வெளியான 'The Murderer' எனும் சிறுகதை. அசை போட்டுத் தமிழில் தழுவியதில் சில ஆக்க உரிமைகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன். பிழைகளுக்கு நானே பொறுப்பு. தொடர்ந்து படித்தமைக்கு நன்றி.

இன்னும் சில ப்ரேட்பரி கதைகள், என் எழுத்தில்:
ஆஸ்மா கிணறு | (The one who waits)
சிவப்பு வட்டம் | (The last night of the world)
பரணறையில் நன்னாரி மணம் | (A scent of sarasparilla)
மனதிற்கினிய மேரி டீச்சர் | (A story of love)
மகிழ்ச்சி எந்திரம் | (The happiness machine)






2017/07/10

பாத்திரம்



        “என்னிடம் பணம் இல்லை” என்று அன்றைக்கு மட்டும் பத்தாவது முறையாகச் சொன்னாள் லிசா.

“என்னம்மா இது.. அடுத்த வருசம் நான் காலேஜ் போக வேணாமா? ஸேட் பயிற்சிக்குத் தானே கேக்குறேன்? உன் புருஷன் டானி கிட்டே வாங்கிக் கொடேன்?” என்றாள் கேதரின்.

டானி லிசாவின் இரண்டாவது கணவன் என்பதாலும், வரும் ஆகஸ்டில் தான் பதினெட்டு வயதைத் தொடும் காரணத்தாலும் டானியை அப்பா என்றழைக்க மறுத்திருந்தாள் கேதரின். மேலும் லிசாவின் திருமணம் முடிந்து ஒரு வருடம் கூட ஆகாததால் டானியுடன் அதிகமாகப் பழகவும் இல்லை. “ஏம்மா.. உன் புருஷன் டானி பணம் தரமாட்டானா? கடனா வாங்கித்தரியா?”

லிசா ஏற்கனவே டானியைக் கேட்டிருந்தாள். கேதரினைப் பற்றிய அத்தனை விவரங்களையும் அறிந்த டானி பணம் தர மறுத்துவிட்டான். “லிசா.. இதப்பாரு.. உன் பெண் கேட் படிக்குறதுக்காக பணம் கேக்கலே.. அவ காதலன் ப்ரையனுடன் பிறந்த நாள் கூத்தடிக்கக் கேக்குறா.. ஏற்கனவே இந்த எட்டு மாசத்துல ரெண்டு தடவை அப்பானு கையெழுத்து போட்டு அவளையும் ப்ரையனையும் ஜாமின்ல எடுத்திருக்கேன்.. இனி அவ பாடு.. அடுத்த முறை ஜாமினும் எடுக்க மாட்டேன்.. புத்தி சொல்லிவை.. பதினெட்டு வயசு கூட ஆவலே.. படிப்பு வரலேனா பர்கர்கிங்ல இறைச்சி புறட்டுலாம்ல? கூலியாவது கிடைக்கும்.. கவுரவத்தோட இருக்கலாமே? என்ன பொண்ணு வளத்திருக்கே?”.

டானி அத்துடன் நிற்கவில்லை. “லிசா.. உனக்கே இத்தனை கடன் இருக்குதுனு என் கிட்டே சொல்லாமலே கல்யாணம் கட்டியிருக்கே.. க்ரெடிட் கார்ட்ல எட்டாயிரம் கடன் வச்சிருக்கியே? இத நான் எப்படி கட்டுவேன்? உன் செலவையெல்லாம் பாக்குறப்ப ஏன் கல்யாணம் கட்டினோம்னு தோணிடுச்சு.. காசுக்குத்தான் என் பின்னாடி சுத்தி என்னை வளைச்சுப் போட்டியா? வேலைக்குப் போவியோ என்ன செய்வியோ நீயேதான் அடைக்கணும்.. எங்கிட்டே ஒரு டாலர் கூட எதிர்பார்க்காதே” என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டான்.

மகளிடம் எல்லாவற்றையும் சொல்லி அழுதாள் லிசா. “தினம் கலெக்சன் ஆசாமிங்க வராங்க கேட்.. இந்த சின்ன ஊர்ல எல்லாருக்கும் எல்லாம் தெரியுது இல்லே? காருக்குப் பணம் கட்டலேனு வந்த டீலர்காரன் நேத்து என்ன கேட்டான் தெரியுமா?” என்று கையைக் குவித்து வாயில் வைத்துக் காட்டினாள். “..செஞ்சா இந்த மாசம் தவணைப்பணம் கட்டுறதா சொன்னான்”. மறுபடி அழுதாள்.

“ஏம்மா.. டானிக்கு இன்சூரன்சு இருக்குதுல்ல?” என்றாள் கேட் நிதானமாக.
*
படுக்கையில் நெருக்கமாக அணைத்துக் கொண்டிருந்தார்கள்.

“ப்ரை.. எனக்காக இதை நீ செய்தே ஆவணும்” என்றாள் கேட்.

“என்ன பேபி இது.. உங்கப்பனைக் கொலை செய்யச் சொல்றியே?” அதிராமல் கேட்டான் ப்ரையன்.

“டானி எங்கப்பன் இல்லே, இடியட்! இன்னொரு முறை அப்படிச் சொல்லாதே” சட்டென்று எழுந்த கேதரின் தணிந்து, “என் அம்மா நிறைய கடன்ல இருக்கு.. எனக்கும் பணம் வேணும்.. எங்கம்மா கிட்டே எல்லாம் பேசிட்டேன்..”

ப்ரையன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். கேதரின் தொடர்ந்தாள். “டானிக்கு இருநூறாயிரம் இன்சூரன்சு இருக்கு.. அவன் செத்தா எங்கம்மாவுக்கு வரும். இருவத்தஞ்சாயிரம் எங்கம்மாவுக்கு, மிச்சம் எல்லாம் நமக்கு.. எங்கம்மா உடனே ஒத்துகிட்டா. அவளுக்கென்ன.. பணம் கிடைக்குது இல்லே? டானி போனா வேறே ஜானி கிடைப்பான்”. அவன் முழங்காலருகே குனிந்தாள். “கொஞ்சம் யோசிச்சுப் பாரு ப்ரை.. நாம இங்கிருந்து ஓடிறலாம்.. உனக்கும் கேனடா ஓடிறனும்னு ஆசை.. கைல பணத்தோடு ஓடிறலாம்.. ஒன் செவன்டி பை தௌ.. உனக்கு எழுவத்தஞ்சு.. எனக்கு நூறு.. என்ன சொல்றே?”

ப்ரையன் அசையாமல் “ரொம்ப ரிஸ்க் கேட்” என்றான்.

“உன்னால முடியும் ப்ரை.. லுக் அட் தி மனி..” ப்ரையன் கன்னத்தைத் தொட்ட கேதரின் “இதப் பாரு நீ ஒத்துழைச்சா நானும் ஒத்துழைப்பேன்” என்றாள்.

“என்ன சொல்றே?”

அவன் கைகளை இழுத்த கேதரின் சட்டென்று தரையில் குனிந்து நின்று தன் இடுப்பை இரண்டு கை விரல்களாலும் தட்டினாள்.

சிரித்தபடி எழுந்த பரையன் “ஸ்டுபிட்.. கொலை செய்வது பெரிசில்லே.. நம்ம மேலே பழி வராம தப்பிக்கணும்ல?” என்று கேதரினை இழுத்துத் தன் மடி மேல் அமர்த்தினான். “அடையாளம் தெரியாத துப்பாக்கி, நம்ம மேலே பழி வராதபடி சாட்சிகள், டானியைக் கூட்டி வர தூது.. எல்லாம் பத்துக்கு மேலே செலவாகுமே.. பணம் யார் கிட்டே இருக்கு?”

“என்னை நம்பி நீ செலவு செய்.. வேணுமுன்னா என் பங்குலந்து பத்து எடுத்துக்க.. இல்லின்னா எங்கம்மாவுக்கு பதினஞ்சு கொடுத்தா போதும்”

“நோ.. இந்த நம்பிக்கை விவகாரம் எல்லாம் வேண்டாம்.. இன்சூரன்சு பணத்துல எனக்கு நூறு.. உனக்கு எழுவத்தஞ்சு.. செலவெல்லாம் நான் பாத்துக்குறேன் சரியா?” என்றான் ப்ரையன்.
*
ஒரு வாரத்தில் டானி இறந்தான்.

சேம்பர் சந்தையின் கழிவறையில் கழுத்திலும் இடுப்பிலும் சுடு காயங்களுடன் கிடந்ததாகப் போலீஸ் சொன்னதும் துடித்துப் போனாள் லிசா. அலறினாள். கதறினாள்.
*
முப்பது நாட்களாகியும் இன்சூரன்சு ஆசாமி யாரும் வராததால் கேதரினை அழைத்துக் கொண்டு சேம்பர் சந்தையில் இன்சூரன்சு ஏஜன்ட் அலுவலகத்துக்குப் போனாள் லிசா.

விவரங்கள் கேட்டுக்கொண்ட இன்சூரன்சு அலுவலக கண்ணாடி ஆசாமி, “கொஞ்சம் இருங்க லிசா” என்று கணினியில் தட்டினான். “இனசூரன்சு பணம்.. அகால மரண போனஸ் சேர்த்து இருநூத்துப்பத்தாயிரம்.. பட்டுவாடா ஆயிருச்சே.. போன வாரம்.. முப்பதாம் தேதி..” என்றான் மெள்ள.

“இல்லியே.. எனக்கு அறிவிப்பு கூட வரலியே.. பணம் கட்டாயம் வரலே.. மறுபடி பாருங்க" பதைத்தாள் லிசா.

“இருங்க” கண்ணாடி ஆசாமி இம்முறை நிறைய கணினி தட்டினான். “ஆ.. விளங்கிருச்சு” என்றான். “பாருங்க.. டானி இன்சூரன்சு பாலிசில உங்க பேரை சேர்க்கவே இல்லே.. அவரு உங்க பேர்ல உரிமையை மாத்தாம விட்டதால பழைய மனைவியே இன்சூரன்சு பணத்துக்கு… அவங்களுக்குத்தான் பணம் போயிருக்கு.. இதப் பாருங்க... கொலராடோ பேங்க் கணக்குல பணம் போயிருக்கு பாருங்க…”
* * *



அசல் லிசா கேதரின் ப்ரையன் டானி கதை இன்னும் விவகாரமானது. விரும்பினால் ‘க்லீவ்லன்ட் யுலோமா’ என்று இணையத்தில் தேடித் தெரிந்து கொள்ளலாம்.