2017/07/21

வந்தவள்



        ப்போதெல்லாம் இரவில் தூக்கம் சரியாக வருவதில்லை தவறி வந்தாலும் மூன்றரை மணிக்கே விழிப்பு வந்துவிடுகிறது. உதவியில்லாமல் படுக்கையை விட்டு எழுந்து நடமாடக்கூடாது என்று விதியிருப்பதால் படுத்திருப்பேன். ராம ராம என்று ஏதாவது சொல்வேன். சரியாக ஆறு மணிக்குச் செவிலிப்பெண் வந்து எழுப்புவது போல் எழுப்பி, நான் காலைக்கடன் முடிக்க உதவி செய்து, சிறிய டம்ளரில் சொட்டுப் பால் கலந்து சர்க்கரையில்லாத காபி கொடுப்பாள். இரண்டு பிரிட்டானியா பிஸ்கெட் கொடுத்து என்னை சாய்நாற்காலியில் உட்காரவைத்துப் போவாள். சில நேரம் பெரிய எழுத்து பாகவதம் படிப்பேன். கண்ணன் கதைகள் பிடிக்கும். அலமாரியில் வரிசையாக இருக்கும் மெடல்களைப் பார்ப்பேன்.. என் நேர்மைக்கும் திறமைக்கும் கிடைத்த பரிசுகள்.. சில நேரம் ஆல்பத்தைப் புரட்டிப் பிள்ளைகள் பேரக்குழந்தைகள் படங்களையோ அவர்களனுப்பிய கடிதங்களையோ பார்ப்பேன். படிக்க முடிவதில்லை. பல நேரம் கண்மூடியிருப்பேன். அன்றைக்கும் அப்படியே.

சலசலப்பு கேட்டு விழித்தேன்.

விழித்தேன் என்பது சரியான சொல்லா தெரியவில்லை. கண் திறந்தேன் எனலாமா? அப்படித்தான் வைத்துக் கொள்ளவேண்டும். விழிப்பது புறச் செய்கையெனில் நான் தூங்கினால் தானே விழிப்பதற்கு? அகத்தைப் பற்றியதெனில் விழிப்பதற்கான வாய்ப்பே இல்லை. மூன்று வருடங்கள் முன்பு தூங்கிய அகம் இனி விழிக்கப் போவதில்லை.

வெளியே சலசலப்பு பெரிதாகக் கேட்டது. அவளாகவே இருக்க வேண்டும். யாருக்கு அதிர்ஷ்டமோ? இன்றைக்கு என்னைப் பார்க்க வந்தால் நன்றாக இருக்குமே என்று உள்ளத்தின் ஏதோ ஒரு மூலையில்…. சரி வரும் போது வரட்டும்… என்று நினைக்கும் போதே அறைக்கதவைத் தட்டும் ஓசை. தொடர்ந்து உள்ளே வந்தாள். அவள்தான்.

பதினைந்து பதினாறு வயதிருக்குமா? தினமும் பதினாறாகவே இருக்கிறாளே? இன்றைக்குப் பாவாடை தாவணி அணிந்திருந்தாள். குழந்தைத்தனமும் விலகாமல் குமரித்தனமும் பரவாமல் ஒருவிதக் குதூகலமான முகம். வெகுளியும் விவேகமும் கலந்த அறிவார்ந்த முகம். நெற்றியில் கருங்கீற்று. அதன் கீழே சிறிய குங்குமப் பொட்டு. கருணைக் கடலாய் கண்கள். கழுத்தில் ஒரு கண்ணாடி மாலை. இரண்டு கைகளிலும் கண்ணாடி வளையல்கள். ஒரு கையில் சிறிய துணிப்பை. பளிச்சென்று இருந்தாள். பார்வைக்குப் பரவசம் தந்தாள். ஆறேழு மாதங்களாக அவ்வப்போது வருகிறாள். எப்போது வந்தாலும் அதே தோற்றம். அதே முகம். அதே பரவசம்.

“தாத்தா” என்று ஓடிவந்து என் கைகளைப் பிடித்துக் கொண்டாள். “எப்படி இருக்கீங்க தாத்தா? இந்தாங்க உங்களுக்காக..” என்று தன் பையிலிருந்து ஒரு பிடி பவழமல்லிப் பூக்களை எடுத்துத் தந்தாள். “பாவாடை தாவணி உங்களுக்காகக் கட்டிக்கிட்டேன். அழகா இருக்கா? பவளமல்லியும் உங்களுக்குத்தான் தாத்தா.. இன்னிக்கு உங்க பிறந்த நாள் இல்லியா? வாழ்த்துக்கள் தாத்தா”

“சந்தோஷம்”. புன்னகைத்தேன். “நாளைக்கு வருவியா?” என்ற என் கேள்விப் பார்வையைப் புரிந்துகொண்டவள் போல் “அவசியம் இருந்தா வருவேன் தாத்தா..” என்ற வழக்கமான பதிலைச் சொல்லிக் கிளம்பி மறைந்து விட்டாள்.

ஆல்பத்தைப் புரட்டி மகன் பேரன் பேத்தி படங்கள் சிலவற்றைப் பார்த்தேன். பிறகு கண்களை மூடி பவழமல்லிப் பூக்களை என் முகத்தில் அப்படியே கவிழ்த்துக் கொண்டேன். மணம் மனத்தை இழுத்தது.

        ன் மனைவி பூரணியின் எழுபதாவது பிறந்தநாள். பூரணி என் உயிர். என் அகம். என் எல்லாம். எங்களுக்கு ஆறு பிள்ளைகள். முதல் ஐந்தும் வரிசையாக ஆண், கடைசியில் ஒரு பெண். எல்லாரையும் வளர்த்து, படிக்க வைத்து முன்னேற்றப் பாதையில் வழியனுப்பிவிட்டு என்னுடய ஹைகோர்ட் நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்று ராஜா அண்ணாமலை புரத்தில் இருந்த என் குடும்ப வீட்டில் என் மூன்றாவது மகன் குடும்பத்துடன் இருந்தோம். அங்கேதான் விழா. சிகாகோ, லசான், துபாய், டோக்கியோ, மும்பையிலிருந்து எங்கள் மற்றப் பிள்ளைகளும் குடும்பத்துடன் வந்து ஆச்சரியப்படுத்தினார்கள். பூரணி பிறந்த நாளுக்கு ஹோமம், அன்னதானம், துணிதானம் என்று அமர்க்களப்படுத்தியிருந்தார்கள்.

மறுநாள் காலை சிற்றுண்டி முடித்ததும் பேரக்குழந்தைகள் அனைவரும் மருமகனுடன் வெளியே பிக்னிக் கிளம்பினார்கள். மருமகள் ஐவரும் அதிகாலையிலேயே மொத்தமாக வெளியே கிளம்பியிருந்தார்கள். மகன் ஐவரும் மகளும் நாங்களும் மட்டும் இருந்தோம். “அப்பா அம்மா.. உங்களுட பேசணும்" என்றார்கள்.

மூன்றாவது மகன் தொடங்கிவைத்தான். “அப்பா.. அம்மா.. நீங்க ரெண்டு பேருமே நல்ல வாழ்க்கை வாழ்ந்தீங்க.. எங்களுக்கும் வழி செஞ்சீங்க.. இனி அடுத்த நிலையைப் பத்தி யோசிக்க வேண்டாமா.. அப்பா.. உங்களுக்கு எழுவத்தெட்டு வயசாகுது.. அம்மாவுக்கு எழுபதாயிடுச்சு.. எனக்கும் என் மனைவிக்கும் இருக்குற வேலை குழந்தை வளர்ப்பு சமூக ஈடுபாடுகள்ல உங்களைக் கவனிக்க முடியலே.. குழந்தைகளுக்கும் நீங்க கொஞ்சம் பழைய நடத்தைகளைக் காட்டுறது என் மனைவிக்குப் பிடிக்கலேபா.. எனக்கும் கஷ்டமா இருக்கு”.

“வீடு வேறே பழசாயிடுச்சுப்பா..” என்றான் இரண்டாமவன்.

“டேய்.. இது எங்க தாத்தா காலத்து வீடுரா”

“அதனாலதாம்பா..” என்றான் முதல்வன். “இதுல எங்களுக்கும் பங்கு இருக்குல்ல?”

“என்ன சொல்றே?” என்றாள் பூரணி.

“அம்மா. நீ கொஞ்சம் சும்மா இரும்மா” என்று அடக்கினாள் மகள்.

“உங்க ரெண்டு பேரையும் முதியோர் இல்லத்துல சேர்த்து விட்டா எல்லாருக்குமே வசதியா இருக்கும்னு தோணுதுபா” – இது நான்காவது மகன்.

“அதனாலதான் எல்லாரும் சேர்ந்து பேசலாம்னு ஒண்ணா வந்தோம்.. அம்மாவோட எழுபதாவது பொறந்த நாளையும் தவறவிடாம வந்துட்டோம்” கடைசி மகன்.

“ஆமாம்பா.. இந்த வீட்டை இடிச்சு ஆறு பேரும் ஜேவி போட்டு பனிரெண்டு ப்ளாட் கட்டுறதா திட்டம்.. ஜனாவே ஏற்பாடு செய்துடுவான்..” என்றான் மூத்தவன். ஜனா என் மூன்றாவது மகன். நகரின் மிகப்பிரபல கட்டிட நிறுவனம் ஒன்றின் முதலாளி. எங்களுடன் தினம் வாழ்ந்து வருபவன். “நாங்க ஆளுக்கு ஒரு ப்ளாட் எடுத்துக்குறோம். மிச்ச பிளாட்டை வித்து பணத்துலந்து ஒரு நல்ல முதியோர் இல்லத்துல வைப்புத்தொகை கட்டி உங்க ரெண்டுபேரையும் ஆயுசுக்கும் பாத்துக்கும்படி செய்துடறோம்.. மீதிப் பணத்துல உங்க பேரக் குழந்தைகளுக்கு ஒரு டிரஸ்ட் உருவாக்கிடறோம்”. அடப்பாவிகளா.. இதற்குத்தான் ஒன்றாக வந்தீர்களா எல்லாரும்?

“ஏண்டா.. எங்களை கவனிக்க கஷ்டமா இருக்குதா?” பூரணி மறித்தாள்.

“அம்மா.. சும்மா இருக்கியா? உங்க நனமைக்குத்தான் சொல்றோம். உங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சுனு வை, அவசரத்துக்கு நாங்க யாருமே இல்லியேமா? முதியோர் இல்லத்துல நல்லா கவனிப்பாங்க.. நாங்க யாராவது அப்பப்ப வந்து பார்ப்போம். உங்களுக்கு ஒரு குறையும் வைக்க மாட்டோம். பெத்தவங்க இல்லியா?” ஏறக்குறைய முடித்து வைத்தாள், என் செல்ல மகள். “என்னப்பா சொல்றீங்க?”

நான் என்ன சொன்னேன் என்று நினைவில்லை. அவர்கள் என்ன பேசினார்கள் என்று நினைவில்லை. எதிலெதிலோ கையொப்பமிட்டேன். ஒரு வருடத்துக்குள் இங்கே பவானி பக்கம் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு எங்களுடன் சில நாட்கள் தங்கினார்கள். பிரிந்தார்கள்.

        து நடந்தது பதினொரு வருடங்களுக்கு முன்பு.

எனக்கு இன்றைக்கு தொண்ணூறாவது பிறந்த நாள். பூரணி இருந்தால் ஏதாவது செய்வாள். இனிப்பு ஆகாது என்பதால் கொஞ்சம் தேன் எடுத்து என் நாவில் தடவி முத்தம் தருவாள். என் கைகளைப் பிடித்துக் கொண்டே ஏதாவது சினிமா பாட்டு பாடுவாள். எனக்கு சினிமாப் பாடல்கள் தான் பிடிக்கும்.

பூரணி இல்லை. மூன்று வருடங்களுக்கு முன் அதிகாலையில் பூரணி பூரணி என்கிறேன்…

என் பிள்ளைகள் பேரக்குழந்தைகள் யாரும் வரவில்லை. அவர்களுக்கு என்ன முடக்கமோ வேலையோ.. பாவம். ஒரு மாதம் பொறுத்து ஜனா வந்து பூரணிக்கான வைப்புப் பணத்தை வாங்கிக் கொண்டு போனான். “உனக்கு ஏதும் வேணுமாப்பா?” என்றான்.

அகம் தூங்கியது என்றேனே, அன்றைக்குத் தூங்கியது இனி விழிக்காது. மூன்று வருடங்களாக நானும் என் நலிந்து வரும் உடலும் மனமும் எதற்காகவோ காத்திருக்கிறோம். அவ்வப்போது செவிலிப்பெண் அக்கம்பக்கத்து முதியோர் பற்றிச் சொல்வாள். அனேகமாக எல்லார் கதையும் இப்படித்தான் போலிருக்கிறது.

சென்ற இரண்டு வருடங்களாகவே நான் வெளியே போவதில்லை. அனுமதியில்லை. எலும்புச் சேதம் என்கிறார்கள். அல்சைமர்ஸ் என்கிறார்கள். மயொபிஜியா பராக்சிஸ்மாலிஸ் என்கிறார்கள். பொடேசியப் பற்றாக்குறை என்கிறார்கள். என்னைப் பார்க்கவும் யாரும் வருவதில்லை. ஆக, அறைவாசம் சிறைவாசம்.

ஆறு மாதங்களுக்கு முன் ஒரு இரவு மிக அழுதேன். உடல்வலியை மிஞ்சும் மனவலி. மனவலியை மிஞ்சும் இயலாமை. இயலாமையை மிஞ்சும் உயிர்ப்பிடிப்பு. எத்தனை நேரம் அழுதேனோ?

மறு நாள் காலையில் திடீரென்று அறைக்கதவைத் தட்டி அவள் வந்தாள். முதல் முறை. “தாத்தா.. இந்தாங்க பிடிங்க” என்று ஒரு கை மல்லிகை மொட்டுக்களைத் தந்தாள். என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போல் அப்படி ஒரு களை முகத்தில். “யாரம்மா நீ?” என்று கேட்பதற்குள் கிளம்பிவிட்டாள்.

அதற்குப் பிறகு வந்தபோதெல்லாம் என் கைகளைப் பிடித்துக் கொள்வாள். இல்லையெனில் நெற்றியை வருடி விடுவாள். ஒரு பிடி உதிரி மலர் ஏதாவது கொடுத்து விலகுவாள். “நாளைக்கு வருவியா?” என்றால் சிரித்தபடி “அவசியம் இருந்தால் வரேன் தாத்தா..” என்பாள்.

ஒரு முறை செவிலியிடம் கேட்டேன் அவளைப் பற்றி. “என்னவோ அய்யா.. எங்க கண்ணுக்குத் தெரிய மாட்டேங்குதே அந்தப் பொண்ணு?” என்று சிரித்தாள்.

“மாயப் பொண்ணா?”

“இல்லே ஐயா.. நான் வரப்ப அந்தப் பொண்ணு வரலேனு சொல்றேன்.. அக்கம்பக்கம் அந்தப் பொண்ணு வரான்னு சொல்றாங்க. நான் பார்த்ததே இல்லை. அதான்”.

"என்ன செய்யுது அந்தப் பொண்ணு மத்தவங்க கிட்டே?"

"என்னய்யா பொறாமையா?" சிரித்தாள் செவிலி. "உங்களைப்போலத்தான் ஐயா. யாரும் இல்லாதவங்க கிட்டே வந்து பேசுது. ஆறுதலா சிரிக்குது. ஏதோ பூவோ பழமோ குங்குமமோ தருதாம் சிலருக்கு.. கேள்விதான்.. நான் கண்டதில்லே.. ஆனா அந்தப் பொண்ணு வந்து போனா சந்தோசமா இருக்குதுனு சொல்றாங்க.. உண்மை தானே ஐயா.. நான் இங்க கூலிக்கு வேலை பாக்குறேன்னு இருந்தாலும் உங்க முதிய மனசுங்களோட வலி புரியுது ஐயா.. உங்களுக்கு எத்தினி ஆறு புள்ளைங்களா.. உங்க விருந்தாளி ரெஜிஸ்டர்ல அஞ்சு வருசத்துல ஒரே முறை பதிவாயிருக்கு அதும் அம்மா காணாத போன பிறகு.. பன்னீர் செல்வம் அய்யா பாருங்க.. மகன் எம்எல்எ மந்திரி ஆனா ஊழல் செய்யுறது பிடிக்கலேன்னு இங்க வந்து உக்காந்திருக்காரு.. ராகவனய்யா ஒரே பையனை பறிகொடுத்துட்டு.. ராமநாதன் சாருக்கு ரெண்டு பசங்க.. ரெண்டாமவனுக்கு கல்யாணம் கட்டின ஒரு மாசத்துல இங்க அனுப்பிட்டாங்க.. காலம் மாறிட்டு வருதே? இப்படி இங்க வந்த நாதியில்லாத மன்னிச்சுக்குங்க ஐயா வயசானவங்களை அப்பப்ப வந்து விசாரிச்சுட்டுப் போகவும் நல்ல மனசு வேணும்.. அந்தப் பொண்ணு நல்லாருக்கட்டும்".

        செவிலி சமீபமாக இல்லத்தில் முதியவர்கள் ‘காணாமல்’ போய்விடுவதாக அடிக்கடி சொல்லி வருகிறாள். “காணாம போறாங்களா?” என்று நான் அதிர்ந்தால் சிரிப்பாள். “இடக்கரடக்கல் ஐயா. கண் காணாத இடத்துக்கு போயிட்டாங்க”.

என் பூரணியும் காணாமல் போய் மூன்று வருடங்களாகின்றன. எனக்கும் காணாமல் போகும் துடிப்பு இருந்துகொண்டே...
ஏனோ அவளைப் பார்க்கும்பொழுது மட்டும் துடிப்பு சற்று அடங்குவது போல..

பார்த்திருந்தாலும் அவள் பெயரைத் தெரிந்து கொண்டதேயில்லை. ஏனோ கேட்கும் நினைப்பும் வரவில்லை. அவளைப் பார்ப்பதில் கிட்டும் குறுநேரப் பரவசத்தில் எல்லாமே மறந்துவிடும். அடுத்த முறை கேட்கவேண்டும்.

அடுத்த சில நாட்களுக்கு அவள் வரவில்லை. வாரங்களாகவும் இருக்கலாம். நேற்று முன்தினம் ராகவன் காணாது போனதாகச் செவிலி சொன்னாள். ராகவன் எங்களுக்கு ஐந்து வருடங்கள் பின்னால் வந்தவர். இன்று காலை பிஸ்கெட் தின்றுகொண்டே பன்னீர்செல்வம் காணாது போய்விட்டதாகச் சொன்னாள். வலித்தது. கண்களில் லேசாக நீர் திரையிடுவது தெரிந்தாலும் உணரமுடியாதது முரணாக இருந்தது. இன்று அந்தப் பெண் வந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்.

வந்தாள். வந்த போது நான் கண் மூடியிருந்தேன். "தாத்தா" என்ற குதூகலக் குரல் கேட்டுக் கண் திறந்தேன். என் முன் நின்றாள். அதே பரவசமூட்டும் முகம். புன்னகைக்க முயன்றேன். என் கை விரல்களை மிக மிக மென்மையாகப் பிடித்தாள். "ரொம்ப முடியலியா தாத்தா?" என்றபடி என் நெற்றியைத் தடவினாள்.

"என்ன கொஞ்ச நாளா வரலே?"

"வந்தேனே தாத்தா? நீங்க கண்மூடியிருந்தீங்க.. பார்த்துட்டு போயிட்டேன்.. ஆனா இன்னிக்கு உங்க கண் திறந்து உங்களைப் பாத்து பேசிட்டுப் போகலாம்னு வந்தேன்.." என்று இனிமையாகப் பேசினாள்.

"நாளை வருவியா?"

"அவசியம் இருந்தா வருவேன் தாத்தா"

"அவசியம் உண்டா இல்லியானு எப்படி தெரியும்?"

மென்மையாகச் சிரித்தாள். "எனக்கு எல்லாம் தெரியும்" என்றபடி என் கைகளை விடுவித்தாள். "பயப்படாதீங்க தாத்தா". கிளம்பினாள்.

"ஏய்.. இரு.. இரு.." என்றேன்.

"என்ன தாத்தா?"

"கோவிலுக்குப் போவியா?"

ஆச்சரியத்தோடு பார்த்தாள். "ஏன் கேக்குறீங்க?"

"இந்தா" என்று என் ஆல்பத்தைக் கொடுத்தேன்.

"என்ன இது தாத்தா?"

"என் சந்ததி படங்கள்.. எனக்குத் தேவையில்லை.. ஏன் பிடிச்சு வச்சிட்டிருந்தேனோ.. அவங்க நல்லா இருக்கணும்னு அம்மன் கிட்டே நீ எனக்காக வேண்டிக்கிட்டு அங்கயே வச்சுடு.. அதோ அந்த பெட்டிக்குள்ள நிறைய காசும் பணமும் இருக்கு.. எடுத்து அர்ச்சனைக்குப் போக உண்டியல்ல போட்டுரு.. அந்த அலமாரியில என்னுடைய புத்தகங்கள்.. வந்தப்ப கொண்டு வந்தது.. யாருக்காவது கொடுத்துடு.. ஏன் இன்னும் இதையெல்லாம் பிடிச்சிட்டிருக்கேனோ.. இன்னொரு உதவி செய். அப்புறம்.. அதோ அந்த மெடல்கள்.. அப்புறம்.. அந்தப் பெட்டிய.. அதான்.. எடுத்துவா"

வந்தாள்.

"அம்மா.. நீ யாரோ எனக்குத் தெரியாது.. ஆனா நான் சோர்ந்த நேரத்திலெல்லாம் வந்திருக்கே.. எனக்கு இனம் புரியாத பிடிப்பைப் கொடுத்திருக்கே.. அதுக்கு நன்றினு நினைக்காதே.. இந்த மெடல்கள் அசல் தங்கம்.. என் திறமையே அவன் போட்ட பிச்சைனு மறந்துட்டு தங்க மெடல் கிடல்னு பிடிச்சிட்டிருந்தேன் பாரு.. இந்த பெட்டியில என் மனைவியோட நகைகள் இருக்கு.. மெடல்.. நகை.. இதை அத்தனையும் நீ எடுத்துக்க"

அவள் மறுக்கவில்லை. என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். "வேறே ஏதாவது தாத்தா..?"

"ஆமாம்.. கேட்கணும்னு இருந்தேன்.. இங்க வா.. எல்லாம் தெரிஞ்ச பெண்ணே.. உன் பேரென்னம்மா?"

"என் பேரு ஈஸ்வரி" என் முகத்தருகே நெருங்கி "எனக்கு மெய்யாவே எல்லாம் தெரியும் தாத்தா" என்றாள்.
■ ■


குறிப்பு [-]

இக்கதையின் கரு, ரே ப்ரேட்பரி எழுதியதாக நம்பப்படும் "The dog in the red bandana" எனும் சிறுகதை. 'காணாமல்' போவதற்கு இரண்டு வருடங்கள் முன்பு ரே எழுதியதாகச் சொல்கிறார்கள். ஐம்பது சதவிகிதம் சாத்தியம் என்பேன். குறைந்த பட்சம் முடிவையாவது யாரோ மாற்றியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இந்தக் கதை வெளியாகவில்லை எனினும் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கம் போல் அசைபோட்டுத் தமிழில் தழுவியதில் ஆக்க உரிமைகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன். பிழைகளுக்கு நானே பொறுப்பு. தொடர்ந்து படித்தமைக்கு நன்றி.

இன்னும் சில ப்ரேட்பரி கதைகள், என் எழுத்தில்:
கொலகார பேஷன்ட் | (The Murderer)
ஆஸ்மா கிணறு | (The one who waits)
சிவப்பு வட்டம் | (The last night of the world)
பரணறையில் நன்னாரி மணம் | (A scent of sarasparilla)
மனதிற்கினிய மேரி டீச்சர் | (A story of love)
மகிழ்ச்சி எந்திரம் | (The happiness machine)




26 கருத்துகள்:

  1. வாழ்க்கையின் யதார்த்தத்தைச் சொல்லும் அர்த்தமுள்ள அருமையான கதை.

    ஒவ்வொரு வரிகளையும் மனதில் வாங்கிக்கொண்டு மிகவும் ரஸித்துப்படித்தேன்.

    என் மனம் அப்படியே இதில் லயித்துப்போனது.

    தெளிவான என் மனதில் மேலும் ஸ்படிகமாக ஓர் தெளிவு ஏற்பட்டது.

    வாழ்க்கையென்றால் என்னவென்று எதுவுமே புரியாத இன்றைய சீனியர் சிடிஸன்கள் அவசியம் படித்துப் புரிந்துகொள்ள வேண்டிய நல்லதொரு கதை.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. சாக்ஷாத் ஈஸ்வரியாக இன்று வந்தவள் ........... மூன்றாண்டுகளுக்கு முன்பு விடைபெற்றுச்சென்ற அவரின் பூரணியே தான் என நான் நினைத்துக்கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  3. வயதாக வயதாக ஒவ்வொருவருக்கும் ’ஞானமும் வைராக்யமும்’ ஏற்பட வேண்டும்.

    குடும்பத்தில் இருக்கும்போதே, சாஸ்வதமில்லாத இந்த வாழ்க்கையிலும், சொந்தம், பந்தம், சொத்து, சுகம் போன்ற மாயைகளிடமிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக அட்டாச்மெண்ட்ஸ்களைக் குறைத்துக்கொள்ளப் பழக வேண்டும்.

    என்றும் நிரந்தரமான வஸ்து என்பது ஒன்றே ஒன்று மட்டும் தான். அதுதான் பரமாத்மா. அதனிடம் மட்டுமே டோட்டல் சரண்டர் ஆகி விடப் பழகிக்கொள்ள வேண்டும். மீதியெல்லாம் அவன் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கை வர வேண்டும்.

    அந்தப் பரம்பொருளான பரமாத்மாவை நம்பிக் கெட்டவர்கள் இதுவரை யாரும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சார்.

      நேற்று காலையில் தான் உங்களை நினைத்தேன்.. இந்தக் கதை எழுதும் போதே அடை செய்து கொண்டிருந்தேன்.. உங்கள் அடை பதிவு நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது.. இங்கே வந்து இந்தக் கதைக்கு நீங்கள் பின்னூட்டமும் இட்டிருப்பது கொஞ்சம் சிலிர்க்க வைக்கிறது. uncanny.

      நீக்கு
  4. வயதான காலத்தில் இப்படி முதியோர் இல்லங்களில் இருப்பவர்களின் நிலை பரிதாபமானது தான். ஈஸ்வரி.... நல்ல பெயர் வைத்து இருக்கிறீர்கள் - முதியவரின் மனதுக்கு மருந்திட்ட பெண்ணுக்கு!

    பதிலளிநீக்கு
  5. ரொம்பவும் ரசித்துப் படிக்கும்படி எழுதியிருக்கிறீர்கள். ஒரு சில இடங்களில், வாக்கியத்தில் குறைபோன்று தோன்றியது, ஆனால் கதையும் நடையும் ரொம்ப நல்லா இயல்பா இருந்தது.பொதுவாக, தளர் பருவத்தில் மற்றவர்களிடம் பெற்றதை, தளர்ந்த பருவத்தில் திருப்பிக் கொடுக்க மனம் வருவதில்லை, அவர்கள் பெற்ற தளிர்களின்மீது கவனம் செலுத்துவதால். வாழ்க்கை ஒரு வட்டம்தானே. அதிலும் நெடு'நாள் வாழ்க்கை என்று எழுதியிருந்தால், காலம் தள்ளுவது கடினம்தான்.

    மேற்கத்தைய நாடுகளில், ஒருவனின் கடமை, அவனின் குழந்தைகளின் 18-20 வயதுவரைதான். அதிலும் அவர்களின் மணத்திற்கும் பெரிய ரெஸ்பான்ஸிபிலிட்டி கிடையாது. அதற்கப்புறம், தாங்கள்தான் தங்கள் வாழ்க்கையை வகுத்துக்கொள்ளவேண்டும். வாழ்க்கையில் பாசப் பிணைப்புகளுக்கு அத்தனை வேலையில்லை. அதனால் ஏமாற்றமும் இல்லை.

    நாம் கூட்டுக்குடும்பத்திலிருந்து, மேற்கத்தைய வாழ்க்கைமுறை நோக்கிய பயணத்தில் இருக்கிறோம். அதனால் வருத்தமும், ஏமாற்றமும், வெறுமையும் சகஜம்.

    கதை மனதை மயக்கியது. அதிலும் பொயடிக் ஜஸ்டிஸ் போன்று ஒரு சிறுமி முதியவருக்கு ஆறுதலாக இருப்பது மனதிற்கு மலர்ச்சி தந்தது.

    (கோபு சார் சொல்லித்தான் இந்த இடுகைக்கு வந்தேன். நல்ல தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி கோபு சார்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. உங்களுக்கும் வைகோ அவர்களுக்கும்

      நீக்கு
  6. சில செய்திகள் வயதானவர்களை சிந்திக்க வைக்கும் எனக்கும் வயதாகிறதல்லவா

    பதிலளிநீக்கு
  7. எனக்கு ஏனோ தெரியவில்லை மனம் பாரமாகி விட்டது இருப்பினும் சிறிய படிப்பினை பெற்றேன் என்பது உண்மை நாளை எனது நாட்கள் கண்முன் நிழலாடுகிறது சற்றே கலக்கத்துடன்...... கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  8. அழகிய நடையில் ஒரு நல்ல கதையை படித்த திருப்தி... ஆனால் அதே நேரத்தில் இப்படியும் பல நிகழ்வுகள் உண்மையில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்று நினைக்கும் போது மனசு வலிக்கின்றது......

    பதிலளிநீக்கு
  9. உங்கள் அழகான நடையில் நல்ல கதை. இப்படித்தான் நடக்கிறது எனவது தெரிந்தாலும் மனம் நொந்துவிட்டது. 12 பிளாட் போட்டவங்களுக்கு ஒரு பிளாட் கூடவா பெத்தவங்களுக்குக் கொடுத்து அங்கு வாழ வைக்க முடியல?...அவர்களோடு சேர்ந்து வைத்துக் கொள்ள முடியலைனா.....அட்லீஸ்ட் பக்கத்துல ஒரு பிளாட்...ஹூம்...கொடுமை

    கீதா

    பதிலளிநீக்கு
  10. /ஈஸ்வரி என்பது உருவகம். தாத்தாவின் மனக்குழப்பத்தில் எண்ணங்களின் வடிகால்!

    இந்தக் கதையைப் படித்துப் பாருங்கள்...

    https://tinyurl.com/yd4ynvg7

    பதிலளிநீக்கு
  11. மிக அருமையான கதை! நேற்றெல்லாம் பார்த்தேன். உங்கள் பதிவு ஒண்ணும் தெரியலை. இன்னிக்குப் பார்த்தால் வந்து இரண்டு நாட்கள் ஆகி இருக்கு! ஒரு விதத்தில் இந்த நிலைமையில் தான் பெரும்பாலான பெற்றோர் இருக்கிறோம். என்றாலும் மனதில் வேதனை! பிள்ளைகள் அனைவருமேவா இப்படிப் பொருளாதாரச் சிந்தனையோடு இருக்கணும்? கூடவே இருந்த மூன்றாம் மகன் கூடவா நினைத்துப் பார்க்கவில்லை? கொடிது கொடிது முதுமை கொடிது அதனினும் கொடிது நீண்ட வருடங்கள் தனிமையில் வாழ்வது! ஆயுசு நீட்சிக்கு ஒருபக்கம் மனது ஆசைப்பட்டாலும் இந்த வேதனையை நினைத்தால் அச்சமாகவே இருக்கும்! :( ஆனால் இது தான் உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையிலும் சரி நடைமுறையிலும் சரி பொருளாதாரச் சிந்தை குறைவு என்றே நினைக்கிறேன். கதையின் நாயகர் வீட்டை விற்க மறுத்திருந்தால் கதை வேறு மாதிரியாக முடிந்திருக்கும். இருந்தாலும் முதிய நிலையின் உணர்வுகள் அப்படியே தான் இருந்திருக்கும். ஆயுள் நீட்சியும் வளர்ச்சியின் வினைதான்.

      வைகோ கோடிட்டிருப்பது போல் தேவைக்குறைப்பு முதுமையை ஆளும் கருவியோ? சமீபத்தில் இப்படி ஒரு வைராக்கியத்தைப் பார்த்து திடுக்கிட்டிருக்கிறேன். படிப்படியாக (விரைவான படி) எல்லாவற்றையும் குறைத்து கடைசியில் பேச்சையும் உணவையும் தவிர்த்து தன முடிவைத் தேடிக்கொண்ட ஒருவரை அறிவேன். வாழ்ந்த நிறைவு போதும் என்று சொல்லியே செய்தாராம். இந்த முறை பண்டைகாலத்தில் சகஜம் என்று படித்திருக்கிறேன். (எங்கே.. நேற்று ஒருவர் தட்டை செய்து கொண்டு வந்தார்.. அரை டஜன் நொறுக்கினேன்.. வைராக்கியமாகாது வெண்டைக்காயாவது)

      நெல்லை சுட்டியிருப்பது போல மேற்கத்திய கலாசாரத் தழுவலின் விளைவாகவும் இருக்காலாம். எனினும் இனியெல்லாம் முப்பது வயதிலிருந்தே முதுமைக்கான ஆயத்தங்களை (மனம் முதல் ஆயத்தம்) செய்து வருவது நல்லது என்று தோன்ருகிறது. (இது எனக்கு அப்பவே தோணியிருக்கப்ப்படாதோ?)

      மேற்கத்திய தாக்கம் என்றும் சொல்வதற்கில்லை. நம்மூரிலேயே நடந்திருக்கிறதாம். கூட்டுக் குடும்பத்தில் கூட சில பயங்கரங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த நாட்களில் தொண்ணூறு நூறு வயதானவர்களை பரணில் உட்கார வைத்துவிடுவார்களாம். (ஐயோ!) முதுமை கொடிது பல விதங்களில். நீண்ட ஆயுள் என்று ஆசீர்வதிக்கிறோமே? :-)

      நீக்கு
    2. //(எங்கே.. நேற்று ஒருவர் தட்டை செய்து கொண்டு வந்தார்.. அரை டஜன் நொறுக்கினேன்.. வைராக்கியமாகாது வெண்டைக்காயாவது)//

      அதானே ..... சும்மா வைராக்யமாக ஏதேனும் பேசலாமே தவிர எதுவும் நடைமுறைக்கு ஒத்து வராது. தட்டை + சூடான பஜ்ஜி வாங்கிவர இதோ நானும் இப்போது கடைக்குக் கிளம்பிவிட்டேன். :)

      நீக்கு
    3. எனக்கும் சேர்த்து ஒன்னு எக்ஸ்ட்ரா. :-)

      நீக்கு
    4. //எனக்கும் சேர்த்து ஒன்னு எக்ஸ்ட்ரா. :-)//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! ஒன்னு பத்தாது ஸார். ஆளுக்கு ஒரு டஜன் வீதம் வாங்கி வந்து விடுகிறேன். நீங்கள் இங்கு வராவிட்டாலும் எனக்கு ஆச்சு .... அந்த இரண்டு டஜனுக்காச்சு :)

      நீக்கு
  12. ஶ்ரீராம் கொடுத்த சுட்டியிலும் போய்ப் படித்தேன் அருமையான கதை!

    பதிலளிநீக்கு
  13. "அவசியம் இருந்தா வருவேன் தாத்தா"//

    முதுமையில் தேவைகள், ஆசாபாசங்கள் எல்லாம் குறைய தொடங்கி கடைசி பயணத்தை எதிர்பார்க்கும் போது வருவாளோ ஈஸ்வரி.

    வாழ்க்கை துணையை இழந்து தன்னுடைய தேவைகளுக்கும் பிறரை எதிர்ப்பார்த்தல் கொடுமை.
    அது யாருக்கும் வரக்கூடாது.

    பதிலளிநீக்கு
  14. ஸ்ரீராம் சுட்டி கொடுத்து இருந்த கதையை படித்தேன்.
    ந்டைமுறையில் சாத்தியமா என்று தெரியவில்லை.
    அப்படி கதை நாயகி பாலாம்மாள் மாதிரி இருக்க மனபக்குவம், மனதைரியம் இரண்டும் வேண்டும்.
    இருப்பதை குழந்தைகளிடம் கொடுத்து விட்டு கஷ்டப்படும் அம்மாக்கள்தான் நிறைய பார்த்து இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  15. அப்பாதுரை, மீண்டும் இணையத்தில் பார்க்க மிக்க மகிழ்ச்சி! இப்போதே பார்த்தேன். கதையை
    மிக அருமையாக. உங்கள் பாணியில் சொல்லி உருக்கி விட்டீர்கள்.

    பெரும்பாலான பிள்ளைகளுக்கு நேரமோ மனமோ இருப்பதில்லை.
    மேலும் சிலர் பெற்றோருக்கு பணம் செலவு செய்யத் தயார் தான்; கூட இருக்க விரும்புவதில்லை.

    இது இப்படித்தான் இருக்கும் என்ற பக்குவத்துடன் ஆரோக்கியமாக மனதைப் பேணும் முதியவர்களையும் பார்த்திருக்கிறேன். ஈஸ்வரியை, அவர் ஆழ்மனத்தின் நம்பிக்கைரேகைகளின் குறியீடாகவே காண்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பெரும்பாலான பிள்ளைகளுக்கு நேரமோ மனமோ இருப்பதில்லை

      அப்படி நேரமோ மனமோ இருக்க வேண்டும் என்பது பெற்றோரின் (உற்றோர் சுற்றோர்) எதிர்பார்ப்பா தெரியவில்லை. முதியோர் இல்லங்கள் உலகெங்கும் ஒரே கதை தான் என்று தோன்றுகிறது. தன்னைத் தானே கவனித்துக்கொள்ளும் முதுமை நம் கலாசாரத்துக்கு புதிது. பழக வேண்டும்.

      நீக்கு
  16. குழந்தைப் பருவம் பட்டாம்பூச்சியாய் மிதந்து சென்றிட
    விடலைப் பருவம் சிட்டுக்குருவியென பறந்து சென்றிட
    வாலிபப் பருவம் பனித்துளியில் வானவில்போல தோன்றி மறைய
    முதுமை மட்டும் ஏனோ நத்தையாய் நகர்கின்றது....

    பதிலளிநீக்கு
  17. மனதைத் தொட்ட கதை. இது போன்ற நிகழ்வுகளை இப்போதெல்லாம் அடிக்கடி அறிய நேருகின்றது. எல்லா வசதிகளும் கூடிய முதியோர் இல்லங்கள் பெருகி விட்டன. உறவுகளே உலகம் என வாழ்ந்தவர்கள் உண்மையை எதிர் கொள்ள முடியாமல் தவிக்கும் தவிப்பை மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  18. வயதானவர்களின் இன்றைய நிலை.

    பதிலளிநீக்கு