2010/10/29

கால் கவிதை

வெத்து வேலை


சினிமா-4 | 2010/10/29 | Fred Astaire

  maestroவின் masterpiece
  (பாலை பாபாவுக்குப் பணிவன்புடன் :-)
...puttin' on the ritz

2010/10/25

புகை


முன் கதை 1 2 3


    ன் பதில் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்ததா என்பது தெரியவில்லை. பாலைவனக்கல் போல் அசையாதிருந்தான். என் அப்பா இறந்த விவரங்கள் கேட்டான். அலுத்துப் போகும் வரை சொன்னேன். 'இது எங்கே போகிறது?' என்று நினைத்தேன். பிறகு, "துரை, உங்க அப்பாவின் உருவம் தோன்றுவது எதனால் என்று நினைக்கிறீர்கள்?" என்றான்.

'அதைக் கண்டுபிடிக்கத்தானே உனக்குப் பணம் தருகிறேன்?' என்று சொல்லத் துடித்தவன் அடக்கிக் கொண்டேன்.

கெவின் சில நிமிடங்கள் அமைதி காத்துவிட்டு, "நீங்க உங்க அப்பா உருவத்தைப் பார்ப்பது, உங்க உள் விகாரம். ஏதாவது குற்ற உணர்வா? கொஞ்சம் யோசித்துப் பதில் சொல்லுங்க" என்றான். இன்னும் சில நிமிட அமைதிக்குப்பின், "தாயத்தைக் கையில் எடுத்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றியது?" என்றான்.

"என் அப்பா சாகவேண்டும் என்று நினைத்தேன்" என்றேன் நிதானமாக.

இருபது வருடங்களாக அடைத்திருந்த கதவு உடைந்துத் தெறித்தது. "எனக்கும் என் அப்பாவுக்கும் சுமுகமான உறவே இல்லை. எதற்கெடுத்தாலும் அடி உதை ஆத்திரம் ஆங்காரம்னு இருந்ததால எனக்கு வேறு எதுவும் தோணல. பேயோட்டிய மறுநாள் காலை தேவையில்லாம, வளர்ந்த பிள்ளைனும் பாராம, என்னைத் திட்டி அவமானப்படுத்தினார். அந்த ஆத்திரத்தில் இருந்தவன், தாயத்து கிடைச்சதும் வேண்டிக்கிட்டேன். அவருடைய கண்மறைக்கும் ஆத்திரம் எனக்குள்ளும் இருக்குதே?" என்றேன்.

கெவின் வேண்டுமென்றே அமைதியாக இருந்தது போல் பட்டது. "துரை, உங்க ஹெலூசினேசனுக்கு ஒரு காரணம் இப்ப புரியுது. குற்ற உணர்வு. நீங்க தாயத்தை வேண்டினதால உங்க அப்பா இறந்துட்டாருனு நம்புறீங்க; அதான் பல வகையில உங்க அப்பாவோட உருவம் கண் முன்னால வந்துகிட்டே இருக்கு. தாயத்தை வேண்டிக்கிட்டதால நீங்க ஒரு தப்பும் செய்யலை. தற்செயலா நடந்த இரண்டு சம்பவங்கள், அவ்வளவுதான். நீங்க குற்றம் செஞ்சதா நினைக்காதீங்க" என்றான்.

"இல்லை" என்று தலையாட்டினேன்.

நோட்பேடில் என்னவோ கிறுக்கினான். "உங்க ட்ரீட்மென்டை ஒரு மைல்ட் ரிலேக்சன்டோட தொடங்கப்போகிறேன். ஆறு வாரத்துக்கு தினம் ஒரு வேளை. ஏங்சைடி சப்ரெசன்ட்" என்ற கெவின், என்னிடம் ஒரு ப்ரிஸ்க்ரிப்ஷன் கொடுத்தான். பிறகு, "நாளைக்குச் சில எலக்ட்ரோ மேக்னடிக் வேவ் ரீடிங் பாத்துடலாம். உங்க ந்யூரோ ஹெல்த் சரியா இருக்கானு பாத்துருவோம்" என்றான்.

"ட்ரீட்மென்ட், மருந்தெல்லாம் வேண்டாம். நமக்குள்ளயே ஏதோ பேசித் தீத்துக்குவோம்" என்றேன். எனக்கு இருப்புக் கொள்ளவில்லை.

சிரித்தான். "துரை, ஐ'ம் நாட் எ தெரபிஸ்ட். பேசித் தீக்குறதுக்கு இது என்ன யுஎன் கவுன்சிலா? நான் ஒரு சைகயேட்ரிஸ்ட். நோய் நாடி நோய் முதல் நாடித் தீர்ப்பவன். உங்க மென்டல் மேகப் தெரியற வரைக்கும் நீங்க ஒரு அட் ரிஸ்க் பேசன்ட்" என்றான். "கண்டிப்பா ட்ரீட்மென்ட் எடுத்துகிட்டுத்தான் ஆகணும். யு ஓ இட் டு யூர்செல்ப்"

அப்போது தான் அவன் மேசை மேல் ஏதோ அசைவதைக் கவனித்தேன். "அது என்ன கெவின்?" என்றேன். "ஓ..சிலந்தி பேபர் வெயிட்! ஸ்பைடர்மேன் படக்குழுவுக்கு நான்தான் சைகயேட்ரிஸ்ட்.." என்றபடி அதை எடுத்து உள்ளங்கையில் வைத்துக்கொண்டான். சிலந்தி சிலிர்த்து அவன் உள்ளங்கையைக் கவ்விக்கிழிக்கத் தொடங்கியது. அவன் அலறக்கூட நேரமில்லை. நொடிகளில் துவண்டு விழுந்தபோது அவன் கண்களில் பெரும் வேதனை தெரிந்தது.

நான் திடுக்கிட்டு அலறினேன். ஓடி வந்தப் பெண் சிப்பந்தி முதலில் அலறிவிட்டு இரண்டாவதாகப் போலீசை வரவழைத்தாள்.

    ழில் சென்னை போக வேண்டி வந்தது. என் விவாகரத்துச் சிக்கல்கள் முடிந்து, அம்மாவுடன் கொஞ்சம் ஓய்வெடுக்கச் சென்றேன். பழைய நட்புகள் சிலவற்றைப் புதுப்பித்தேன். தேசி ஆளைக் காணோம். வயலின் வீட்டை விட்டு ஓடிவிட்டதாகக் கேள்விப்பட்டேன். செ.இலவனுக்குப் பிறகு இந்தியா திரும்பிய சுரேஷ், ஐடி வேலையை விட்டு அவன் மனைவி பெயரில் வீட்டுமனை வியாபாரத்தில் இறங்கி இன்றைக்குப் பெரிய பில்டர். கொழிக்கிறான். குடிப்பதில்லை. பதிலுக்கு நெற்றியில் பட்டை அடிக்கிறான். என் மனநிலையையும் கெவினுடன் பேசி நடந்ததையும் சொன்னேன். அவன் சிவப்பழமாகத் தலையாட்டினான். "அதுக்குப் பிறகு எங்கப்பா உருவத்தைப் பார்க்கலேடா" என்றேன்.

"நல்லதுரா. தாயத்தோ புண்ணாக்கோ, நம்மள ஆட்டிவச்சது தொலஞ்சதுனு இருப்போம்" என்றான். "இந்தாடா, பழனி விபூதி. தினம் ஒரு கீத்து வச்சுக்க" என்று உள்ளிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து வந்து கொடுத்தான். வெளியே வந்ததும் அதை எறிந்தேன். அவனுடைய வீட்டைத் திரும்பிப் பார்த்தபடியே நடந்தேன்.

மறுநாள் செரடன் ஹோடலில் அவளைச் சந்தித்தேன். என்னை அடையாளம் கண்டு அருகில் வந்து புன்னகை செய்தாள். நான் "ஹலோ" என்றேன். சினிமா தயாரிக்கிறாளாம். "எத்தனை வருசமாச்சு பாத்து?! எத்தனையோ நாளா சந்திக்கணும்னு நெனச்சேன், இங்க சந்திக்கணும்னு இருக்கு பாருங்க" என்றாள். "என்ன செஞ்சுட்டிருக்கீங்க?".

"நான் அமெரிகாவுல இருக்கேன்"

"தெரியும், இங்கே என்ன செஞ்சுட்டிருக்கீங்க?"

தோளைக்குலுக்கி உதட்டைப் பிதுக்கினேன்.

"அப்ப, எங்கூட மேலே வாங்களேன். ஒரு சின்ன ஷூடிங் எடுக்குறோம் மூணாவது மாடில. பாத்துகிட்டே பேசுவோமே?" என்றாள். என் கை தொட்டு அழைத்தாள். சென்றேன். மூன்றாவது மாடியில் ஷூடிங் அறைக்குப் பின்னால் தனியறைக்குப் போனோம். தொட்டிலில் ஒரு குழந்தை என்னைப் பார்த்துச் சிரித்தது. வாயெல்லாம் கோரைப்பல். அரையிருளில் அவளைக் கவனித்துப் பார்த்தேன். இருபது வருடங்களுக்கு மேலாகியும் முகத்தில் களையிருந்தது. பொலிவுடன் பளிச்சென்று இருந்தாள் பேய்ப்பெண். பட்டாம்பூச்சிக் கண்களில் அழைப்பிருந்தது. உதட்டின் சிவப்புச் சாயம், நிச்சயம் மேபலீன்.



மாற்று:


    ன் பதில் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்ததா என்பது தெரியவில்லை. பாலைவனக்கல் போல் அசையாதிருந்தான். என் அப்பா இறந்த விவரங்கள் கேட்டான். அலுத்துப் போகும் வரை சொன்னேன். 'இது எங்கே போகிறது?' என்று நினைத்தேன். பிறகு, "துரை, உங்க அப்பாவின் உருவம் தோன்றுவது எதனால் என்று நினைக்கிறீர்கள்?" என்றான்.

நான் பதில் சொல்லவில்லை.

கெவின் சில நிமிடங்கள் அமைதி காத்துவிட்டு, "நீங்க உங்க அப்பா உருவத்தைப் பார்ப்பது, உங்க உள் விகாரம். ஏதாவது குற்ற உணர்வா? கொஞ்சம் யோசித்துப் பதில் சொல்லுங்க" என்றான். இன்னும் சில நிமிட அமைதிக்குப்பின், "தாயத்தைக் கையில் எடுத்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றியது?" என்றான்.

"என் அப்பா சாகவேண்டும் என்று நினைத்தேன்" என்றேன் நிதானமாக.

இருபது வருடங்களாக அடைத்திருந்த கதவு உடைந்துத் தெறித்தது. "எனக்கும் என் அப்பாவுக்கும் சுமுகமான உறவே இல்லை. எதற்கெடுத்தாலும் அடி உதை ஆத்திரம் ஆங்காரம்னு இருந்ததால எனக்கு வேறு எதுவும் தோணல. பேயோட்டிய மறுநாள் காலை தேவையில்லாம, வளர்ந்த பிள்ளைனும் பாராம, என்னைத் திட்டி அவமானப்படுத்தினார். அந்த ஆத்திரத்தில் இருந்தவன், தாயத்து கிடைச்சதும் என்ன செய்றோமுன்னு தெரியாம வேண்டிக்கிட்டேன். அவருடைய கண்மறைக்கும் ஆத்திரம் எனக்குள்ளும் இருப்பதை அன்னக்கு நான் தெரிஞ்சுக்கலே" என்றேன். "இதெல்லாம் நடக்காதுனு தான் நினைச்சேன். ஆறு மாசத்துக்குள்ள சாலை விபத்தில அடிபட்டு, துணிப்பொட்டலமா வந்த அப்பா உடலைப் பாத்ததும் ரொம்ப உடைஞ்சு போனேன். வேண்டுதலின் விளைவா இருக்குமோனு சந்தேகப்பட்டேன். பிறகு வயலின் திலகத்துடன் ஓடிப்போனதும் எனக்குள் இருந்த சந்தேகம் தீந்து பயம், பிராந்தி... வெளிப்படையா இதைக் காட்டிக்கொள்ளாவிட்டாலும் என்னை இந்த உணர்வு அரிச்சுக்கிட்டே இருக்கு".

"நீங்க காண்பதாகச் சொல்லும் உங்க அப்பாவின் உருவம் உங்களை எந்த விதத்திலாவது துன்புறுத்தியிருக்கிறதா? அச்சப்படுத்தியிருக்கிறதா?"

"இல்லை. சொல்லணும்னா கொஞ்சம் பாவமா இருக்கும். ஆனா அடிக்கடி என் முன்னால தோண்றது எனக்கு தொல்லைதான்"

நோட்பேடில் என்னவோ கிறுக்கினான். "உங்க ட்ரீட்மென்டை ஒரு மைல்ட் ரிலேக்சன்டோட தொடங்கப்போகிறேன். ஆறு வாரத்துக்கு தினம் ஒரு வேளை. ஏங்சைடி சப்ரெசன்ட்" என்ற கெவின், என்னிடம் ஒரு ப்ரிஸ்க்ரிப்ஷன் கொடுத்தான். பிறகு, "நாளைக்குச் சில எலக்ட்ரோ மேக்னடிக் வேவ் ரீடிங் பாத்துடலாம். உங்க ந்யூரோ ஹெல்த் சரியா இருக்கானு பாத்துருவோம்" என்றான்.

தலையாட்டினேன்.

"துரை, இதற்கு மருந்து கொடுத்து குணமாக்க முடியும் என்று என்னால் சொல்ல முடியாது. லெட் மி கிவ் யு மை வ்யூ. நீங்க சொல்றது போலவே தாயத்தின் விளைவென்றே வைத்துக் கொள்வோம். உங்க நண்பர்களுக்கு நல்லது நடந்ததும் தொடர்ந்து ஒரு கெடுதல் நடந்ததும் தாயத்தினால்தான் என்றே வைத்துக்கொள்வோம். மே பி யூ ஆர் லக்கி. உங்க நண்பர்கள் வேண்டியது எல்லாமே பாசிடிவ். நீங்க வேண்டிக்கொண்டது நெகெடிவா பாடிசிவா சொல்ல முடியாது, என்றாலும் அடுத்தவர் இறந்து போக வேண்டும் என்று நினைப்பது நிச்சயம் பாசிடிவ் இல்லை என்பேன். சரியா? அதனால அவங்களுக்குத் தொடர்ந்து கெடுதல் நடந்தது போல் உங்களுக்கு நடக்கும் என்று இல்லையே? காரணம் உங்க அப்பா அகாலமாய் இறந்து உங்களுக்கும் உங்கக் குடும்பத்துக்கும் ஏற்கனவே பல கெடுதல்கள் உண்டானதாலே, மே பி, உங்களுக்கு பாசிடிவாக ஏதாவது நடக்குமோ என்னவோ?" என்று ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். "ஒரு வேளை உங்க அப்பாவின் உருவம் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறதோ என்னவோ? பார் ஆல் த இல்ட்ரீட்மென்ட் ஹி'ஸ் சபோஸ்டு ஹவ் டன்?". கடைசி வரிகள் உறைத்தன.

ஒரு வேளை என் அப்பாவின் உருவம் என்னிடம் மன்னிப்புக் கோருகிறதா? என்னை மன்னிக்கச் சொல்கிறதா? கெவினிடம் விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்தேன். அவன் கொடுத்த ப்ரிஸ்க்ரிப்ஷனைக் கிழித்துப் போட்டேன்.

"அப்பா, உன்னை மன்னித்தேன். லெட்ஸ் பர்கெட்" என்றேன் உரக்க.

என்னை ஏக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்த தெருவோர சேக்சபோன் பிச்சைக்காரன் பிஏஜி என்றான். அவன் பையில் ஐந்து டாலர் நோட்டைத் திணித்து நடந்தேன். உளுத்த பெட்டி என் கண்ணெதிரே பொடிப் பொடியாகிக் கரைந்து போனது.

2010/10/24

புகை


முன் கதை 1 2


    லுவல் பயணங்கள், சகோதரிகள் திருமணம் என்று இரண்டு வருடங்கள் ஓடியதே தெரியவில்லை. மூன்றாம் வருடம் அமெரிக்கா போக வாய்ப்பு கிடைத்ததும் உடும்பாகப் பிடித்துக் கொண்டேன். பதவி உயர்வுடன் வெளிநாட்டில் வேலை என்றதும் அப்போதிருந்த காதலையும் கைவிட்டு அமெரிக்கா கிளம்ப ஆயத்தமானேன். விமானநிலையத்திற்கு வயலின் உட்பட என் நண்பர்கள் அத்தனை பேரும் வந்திருந்தார்கள். தனக்குத் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது என்றான் சுரேஷ். "நம்ம செட்ல எல்லாரும் செட்டில் ஆயாச்சு மச்சி. நீ மட்டுந்தான் கிர்கில்ஸ் விட்டுட்டிருக்கே" என்றான். அதுவரை அமைதியாக இருந்த வயலின், "ஏண்டா, அவன் ஒருத்தனாவது நிம்மதியா இருக்கட்டுமேடா?" என்றான் சட்டென்று. "இங்கே நிம்மதிக்கென்னடா குறை? அமெரிக்கா போனா நிம்மதியாயிருமா? அவனவனுக்கு என்ன நடக்கணுமோ அது தாண்டா நடக்கும்" என்ற தேசியைத் தட்டிக்கொடுத்த சுரேஷ், "ரைட், விடுங்கடா" என்றான். எனக்கு இருந்தப் பெருமையிலும் போதையிலும், எல்லாவற்றையும் விட இந்தியாவை விட்டுப் போகும் வேகத்திலும், அவர்கள் பேச்சில் புதைந்திருந்த அச்சத்தை உணரத் தவறினேன்.

எனக்கென்னவோ என்னிடமிருந்தே விடுதலை கிடைத்தது போலிருந்தது. அமெரிக்கா வந்த ஒரு வருடத்துக்குள் தமிழ், தமிழ்நாடு, நண்பர்கள், உறவினர் என்று அத்தனை பேரையும் மறந்து விட்டேன். வருடத்துக்கு ஒன்றிரண்டு முறை அம்மாவுடன் தொலைபேசுவதோடு சரி. வந்து பத்து வருடங்களுக்கு மேலாகியிருக்கும். இரண்டாயிரத்தொன்றில் தாயத்தின் நிழல் என்மேல் மீண்டும் பட்டது.

    டோக்யோவிலிருந்து சேன்ஹோசே திரும்பிக் கொண்டிருந்தேன். நகோயா விமான நிலையத்தில் யாரென்று பார்த்தால், சுரேஷ்! கொஞ்சம் கூட எதிர்பார்க்கவேயில்லை. என்னை அடையாளம் கண்டு பேசினான். அரைமணி காரசாரமாகத் திட்டிவிட்டு பழைய நட்பின் இழைகளைக் காட்டினான். எனக்கும் நட்பை இழந்த வருத்தமேற்பட்டு அவனிடம் மன்னிப்பு கேட்டேன். குடும்பம், தொழில் பற்றிப் பேசினோம். ஐ.டி வெளிச்சேவை பரவலாக அங்கீகரிக்கப்பட்டு வந்த நேரம் அது. ஒரு இந்திய ஐ.டி கம்பெனியின் விற்பனை அதிகாரியாக சேன்ஹோசே வந்திருப்பதாகவும், இனி அமெரிக்காவில் தான் வேலையென்றும் சொன்னான். வீடு பார்த்தபின் மனைவி, மகனை வரவழைப்பதாகவும் சொன்னான். புகைப்படங்கள் காட்டினான். வாழ்த்தினேன்.

விமானம் கிளம்ப நேரமிருந்தது. என் கணக்கில் அவனையும் உயர்வகுப்புக்கு மாற்றிக்கொண்டு, லவுஞ்சுக்கு அழைத்துச் சென்றேன். "என்ன சாப்பிடுறே?" என்றேன். "கல்யாணி கிடைக்குமாடா?" என்றான். "அடச்சே. டோக்யோக்காரன் தண்ணியடிப்போம்டா" என்று ஒரு புட்டி உயர்தர சொச்சு தரவழைத்தேன். "நம்ம ஊர் பட்டைச்சாராயம் போல இருக்கேடா?" என்றான். அங்கேயிங்கே சுற்றிப் பேசி, "மச்சி, அமெரிக்கா வருவேன்னு நினைக்கவேயில்லடா. ஐ.டி மட்டும் வரலின்னா சான்சே இல்ல. இதுல கூட ஒரு இழவும் தெரியாமத்தான் வந்திருக்கேன். ஒரு மணி நேரத்துக்கு முப்பது டாலர்னு தொழில் விக்குற வேலைடா. என்ன வித்தியாசம்னா, இந்த தொழில்ல படுக்க வேண்டாம், அவ்ளோ தான். கெளம்பினதுலந்து கிள்ளி கிள்ளி விட்டிட்டிருக்கேண்டா. அமெரிக்கா!" என்று வியந்து பேசினான். பிறகு அமைதியாக, "தாயத்து தாண்டா" என்றான்.

அதுவரை என் உள்ளத்தின் ஆழ்கிணறுகள் ஒன்றில் சங்கிலிப் பாரம் கட்டிப் புதைந்து கிடந்த உளுத்த பெட்டி மெள்ள எழும்பியது. பெட்டியின் விரிசல்களிலிருந்து கரப்பான்பூச்சி முட்டைகள் சோப் குமிழிகளாக ஆயிரக்கணக்கில் வெளிவந்தன. முட்டை வெடித்து கரப்பான்பூச்சிகள் என் மனம், உடல், மூளையெங்கும் பரவி ஓடத்தொடங்கின. அதிலிருந்து வெளிவந்த ஒரு கரப்பான்பூச்சி சர்ர்ர்ர்ரென்று வெளியே பறந்து எனக்குச் சற்றுத் தொலைவில் இறங்கி மனித உருவில் நடக்கத் தொடங்கியது.

"டேய்" என்று சுரேஷ் என்னை உலுக்கினான். "என்னடா ஆச்சு? பேயடிச்ச மாதிரி பாக்குறே?" என்றான்.

"நதிங்" என்று சுதாரித்தேன். "நீ தாயத்துன்னதும் கொஞ்சம் ஸ்டன்னாயிட்டேன், அதான்" என்றேன். கண்கள் கரப்பான்பூச்சியைத் தேடின.

"அதப்பத்தி பேச விரும்பலைனா, வேணாம்டா. சாரி" என்றான்.

"சேசே! அதுல எல்லாம் எனக்கு நம்பிக்கையே இல்லடா" என்றேன். "ஸோ, தாயத்து பலிச்சுடுச்சுன்றே?"

"வேறே எப்படிறா இதுக்கு விளக்கம் சொல்றது? கம்ப்யூடர்னா என்னனு கூடத் தெரியாதுறா எனக்கு. க்ளூகோஸ் வித்துக்கிட்டிருந்த என்னைச் சுண்ணாம்படிச்சு சட்டை போட்டு இங்கே கொணாந்திருச்சேடா?" என்றான்.

"அப்ப, எஞ்சாய்டா" என்றேன். "புடிக்கலேன்னா க்ளூகோஸ் வியாபாரம் இருக்கவே இருக்கு" என்றேன்.

"அதை விடுறா. தாயத்து வேண்டுதல் பலிச்சு கொஞ்ச நாள்லயே எதுனா கெட்டதும் நடக்குதேடா? அதாண்டா பயமா இருக்கு" என்றான்.

"வயலினை வச்சு சொல்லாதறா. திலகம் அவனை யூஸ் பண்ணினானு உனக்கும் நல்லாத் தெரியும். ஷீ வாஸ் எ ட்ரேம்ப். அழகா கவர்ச்சியா இருந்தா, அந்த வயசுல நம்ம சுரப்பிகளும் ஓவர்டைம் செஞ்சுட்டிருந்துச்சு. தட்ஸ் ஆல். அவ ஓடினது வயலினுக்குத் தான் நல்லது. குட் ரிடன்ஸ்" என்றேன்.

"அவ திரும்பி வந்துட்டா தெரியாதா?" என்றான்.

விமானம் கிளம்பத் தயாராக இருப்பதாகச் சிப்பந்திப்பெண் பணிவாகச் சொன்னாள். "வாடா" என்றேன். மேல்வகுப்புப் பிரயாணிகளுடன் கலந்தபடி, "திரும்ப சேந்துட்டாங்களா? அப்புறம் என்ன? குட்" என்றேன்.

"இல்லடா. அவனை அவ பாடா படுத்தி பெண்டெடுக்குறா. கேரக்டரும் சரியில்லே. வேற கல்யாணமும் கட்ட முடியல, விவாகரத்தும் செய்ய மாட்டுறான். ஆளு இப்ப ரொம்ப நொந்துட்டான்" என்றான்.

இடம் தெரிந்து அமர்ந்து கொண்டோம். "இருக்கட்டுமேடா. ஒரு கேசை வச்சுக் கலங்குறதுல லாஜிக்கே இல்லியே? தேசி சந்தோசமாத் தானேடா இருக்கான்?" என்றேன். கேட்டிருக்கக் கூடாதோ? உளுத்த பெட்டி மீண்டும் மேலே வந்தது.

"விஷயம் தெரியாதா? அவங்களுக்கு ஒரு கொழந்த பொறந்ததும் பிரிஞ்சுட்டாங்க. கொழந்த பொறந்ததுமே அவங்க ரெண்டு பேருக்கும் தகராறாகி அவ கொழந்தையைத் தூக்கிக்கிட்டு தாத்தாகாரனோட ஓடிட்டா" என்றான்.

"ஏன்?". பெட்டி விரிசல்களிருந்து கரப்பான்பூச்சி முட்டைகள் பொங்கி வந்தன.

"எனக்குத் தெரியாதுடா. தேசி தான் சொன்னான். பொறந்த கொழந்தை இவனைப் பாத்து சிரிச்சுதாம்" என்றான். சற்றுத் தயங்கி, "வாயெல்லாம் பல்லா இருந்துச்சாம்டா. கோரப்பல் கூட இருந்துச்சாம். அன்னிக்குப் பொறந்த கொழந்தைக்கு எப்டிறா பல்லு வரும்?" என்றான். முட்டைகள் வெடித்துக் கரப்பான்பூச்சிகள் என் மேல் ஊரத் தொடங்கின. உதட்டோரம் ஆட்டுரத்தம் தெறித்து தேசி காட்டேறி போல் தெரிந்தான். "அவன் டாக்டர்கிட்டே வைத்தியம் செய்யணும்னு சொல்ல, அவ முடியாதுனு சொல்ல, அதுக்குள்ள தாத்தாக்காரன் வந்து, இதைக் கேளுடா.. ரெண்டு பேரும் கொழந்தையோட ஜன்னல்லந்து தவளை குதிக்கிற மாதிரி குதிச்சுப் போயிட்டாங்களாம்". ஒரு பூச்சி சர்ர்ர்ர்ரென்று பறந்து, என்னைப் பார்த்து சிரித்தபடி வந்த விமானப் பணிப்பெண்ணின் கண்ணுக்குள் கலந்தது.

"வாட் நான்சென்ஸ்!" என்று சுதாரித்தேன். "எப்படிரா இதையெல்லாம் நம்புறே? இஸ் ஹி நட்ஸ் ஆர் வாட்?"

"இதையெல்லாம் நம்புறனா நம்பலியா உண்மையா பொய்யா அதெல்லாம் பீராஞ்சுட்டிருக்கலாம். வேறே விஷயம். ஆனா வயலினும் தேசியும் நம்ம ப்ரென்ட்ஸ். அவங்க நம்மள மாதிரிதான். அவங்கள நம்பாம எப்படிரா?"

"தேசி இப்ப எப்படி இருக்கான்?"

"அதையெல்லாம் மறந்துட்டான். புது ஆள் இப்ப. பிலிப்ஸ்ல சீப் மார்கெடிங் ஆபீசர். கம்பெனி ப்ளேன்ல போயிட்டிருக்கான். ரீமேரிட். யூரோப்ல செட்டிலாயிட்டான்."

"அப்புறம் என்னடா? சுபம். விடுறா" என்றேன்.

சேன்ஹோசேவில் அவனுடைய ஹோட்டலில் இறக்கிவிட்டேன். என் செல் நம்பரைக் கொடுத்து, "செட்டிலானதும் போன் பண்ணு" என்றேன். என் ஹோட்டலுக்கு வந்தேன். ரூம் சாவியைக் கொடுத்த நபரைப் பார்த்து ஏறக்குறைய மயங்கி விழுந்தேன். தேசியின் நிச்சயதார்த்தத்தன்று நான் பார்த்த முதிய உருவம்! பனைமரத்தடியில் மீண்டும் பார்த்து அடையாளம் கண்ட அதே உருவம்! சிப்பந்திக்கருகில் தோன்றி மறைந்தது.

செப்டம்பர் பதினொன்றாம் தேதி மாலை சுரேஷிடமிருந்து போன் வந்தது. அரண்டு போயிருந்தான். "டேய், என் பையனைக் காணலடா. உடனே வாடா, ஹெல்ப்" விடாமல் பேசிக்கொண்டிருந்தான். கொஞ்சம் நிதானப்படுத்தியதும், "குடும்பத்தோட ந்யூயோர்க் வந்தேன். இன்னி காலைல நடந்த கலாட்டாலே என் பையனைத் தொலைச்சுட்டம்டா. இங்கே ஒரே கூச்சலும் கொழப்பமாவும் இருக்குடா. பாஸ்போர்ட் பையும் தொலஞ்சுடுச்சுடா. எல்லாரையும் பிடிச்சு உள்ளே போட்டுட்டிருக்காங்கடா. உடனே வாடா" என்று விவரம் சொல்லி மன்றாடினான்.

அன்றிரவே காரில் விரைந்து அவனை மறுநாள் சந்தித்த போது நல்லவேளையாகக் குழந்தை அகப்பட்டச் செய்தி கிடைத்தது. போய் அழைத்து வந்தோம். கூட்டத்தில் சிக்கிய பையனுக்கு உடலெங்கும் சிராய்ப்புகள், காயங்கள். சுரேஷ் மனைவி, "மெட்ராஸ் போலாம், போதும் போதும்" என்று அரிக்கத் தொடங்கினாள். அவளை அமைதிப்படுத்தி, அவன் குடும்பத்துடன் சில நாட்கள் தங்கினேன். சிகாகோ கிளம்புகையில் நன்றி சொன்னார்கள். என்னைக் கட்டிக்கொண்ட சிறுவனை ஆதரவாக அணைத்தேன். "காயமெல்லாம் சரியாயிடுச்சா?" என்றேன். "ஆயிடுச்சு. தழும்பு கூட வந்திருக்கு. இங்க பாருங்க அங்கிள்" என்று முழங்கையைக் காட்டினான். முழங்கைக்குக் கீழே காயம் காய்ந்த வடு. தாயத்து வடிவத்தில் இருந்தது. நானும் சுரேஷும் அதிர்ந்தோம்.

    வீட்டுக்கு வந்ததும் மனைவியிடம் விவரமெல்லாம் சொன்னேன். "யூ நீட் ஹெல்ப்" என்றாள். அவளுடைய சக உளவியல் மருத்துவர் கெவின் ப்லேனகனிடம் சிபாரிசு செய்தாள். மூன்று நாட்களாகத் தினம் ஒரு மணி நேரத்துக்கு பழைய கதையெல்லாம் பேசி, நான் கெவினிடம் தாயத்துப் பின்னணியைச் சொல்லி முடித்தேன். வாங்கும் இன்சூரன்ஸ் காசுக்கு வஞ்சனையில்லாமல் மூன்று நாட்களாய் எழுதிச் சேர்த்த நோட்சையெல்லாம் படித்தான்.

"துரை, தாயத்து நம்பிக்கையெல்லாம் கொஞ்சம் ஒத்தி வைப்போம். மோஸ்ட்லி ப்லெசிபோ. ஆனா நீங்க குழம்பியிருக்கறதுக்கான அடையாளங்கள் நிச்சயமா உங்க பேச்சுல தெரியுது. மைல்ட் பெர்சனாலிடி டிசோர்டர்னு சொல்லத் தோணுது. இருபது வருச ஹெலுசினேடிங் ப்ரொபென்சிடி கவலைப் படவைக்குது. அமானுஷ்யத் தோற்றங்கள் உங்க மனதோட உள் விகாரங்கள்னு நினைக்கிறேன். எல்லா விவரங்களையும் சொன்னீங்கன்னா, கொஞ்சம் சைகோ அனேலிசிஸ் செஞ்சு பார்க்கலாம். உதாரணமா, பனைமரத்தடியில் அடையாளம் தெரிஞ்ச உருவம்னு சொன்னீங்களே, அது யாரு?" என்றான்.

சற்று நிதானித்துவிட்டு, "சாலை விபத்துல மண்டையிலடிபட்டு இறந்து போன என்னோட அப்பா" என்றேன்.


➤புகை: நிறைவு

2010/10/23

புகை


முன் கதை 1



    "அப்புறம் உன்னை ஏண்டா கட்டிக்கிட்டா?" என்றேன்.

"அது வேறே கதைடா" என்றான் வயலின். "ஒரு நா திலகமும் அவ அம்மாவும் எங்க வீட்டுக்கு வந்து, திலகத்தை நான் கெடுத்துட்டதா சொன்னாங்கடா. திலகம் என்னைக் காட்டி நான் அவளைப் படுக்க வச்சதாவும் அதனால கர்ப்பமாயிட்டதாயும் சொன்னா. அதனால காதும் காதும் வச்ச மாதிரி எங்க வீட்லயும் அவ வீட்லயும் பேசி எங்களுக்கு கல்யாணம் கட்டி வச்சுட்டாங்கடா. நீ வந்தப்ப திலகம் கர்ப்பமா இருந்தது, என்னோட கர்ப்பம் இல்லடா" என்றான்.

என் அதிர்ச்சி அதிகமானது. "உனக்கு என்னடா பைத்தியமா பிடிச்சிருந்துச்சு? உண்மையைச் சொல்ல வேண்டியது தானடா?"

"ஒரு பொண்ணு ஒங்க வீட்டுக்கு வந்து, நீ தான் அவளைக் கெடுத்துட்டனு சொன்னா எந்த அப்பா அம்மா நீ சொல்றத கேப்பாங்கடா?" என்றான்.

"இப்ப எங்கடா அவ?"

"தெரியலடா. ஒரு நாள் பொழுது விடிஞ்சு பாத்தப்ப ஆளக்காணோம். எவனோடயோ ஓடிட்டா"

"கொழந்த?"

"அது... அந்த கர்ப்பம் கலஞ்சு போயிடுச்சுரா"

"திலகம் உன்னை நல்லா பயன்படுத்தியிருக்கா" என்றேன். எனக்கு ஆத்திரம் வந்தது.

வயலின் அமைதியாக, "ஆனா, ஓரளவுக்கு அது எனக்கு பிடிச்சு தாண்டா இருந்துச்சு. திலகத்தைக் கட்டிப்பேன்னு நான் கனவுல கூட நினைச்சதில்ல. தாயத்துக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும்" என்றான்.

நாற்பது வயதுக்காரனின் தளர்ச்சியும் முதிர்ச்சியும் அவனுடைய பேச்சில் தென்பட்டது. நண்பனின் நிலை இப்படியானது வலித்தது. "பொடாங்... நீ மூளையிலாம நடந்துகிட்டு தாயத்து தயிர்வடைனுட்டு.." என்றேன் எரிச்சலை அடக்க முடியாமல்.

    தற்குப் பிறகு, படிப்பிலும் ஒன்றிரண்டு காதல் விவகாரங்களிலும் கவனமாக இருந்ததால் கல்லூரி முடியும் வரை பம்மல் போகவில்லை. மேற்படிப்புக்காக ஐஐஎமில் இடம் கிடைத்ததால் உடனே பெங்களூர் கிளம்பிவிட்டேன். படிப்பு முடியுமுன்னரே மேனேஜ்மென்ட் ட்ரெய்னி வேலை கிடைத்து டெல்லி போனேன். டெல்லி கல்கத்தா என்று மூன்று வருடப் பயிற்சி முடிந்து சென்னைக்கு மாற்றம் பெற்று வந்து ஆறு மாதம் ஆகியிருந்தது. புதிதாக வாங்கியிருந்த ராஜ்தூத் யமஹாவில் ஒரு சுற்று சுற்றிவரலாமென்று சும்மா திரிந்த போது, ஜிஎஸ்டி-குரோம் லெதர் கம்பெனி சாலைகளின் முனையில் என் வண்டி காரணமில்லாமல் சட்டென்று நின்றது. புது வண்டி நின்று விட்டதே என்ற கடுப்பிலிருந்த என் எதிரே ஒரு முதியவர் அழுது கொண்டு போனதைப் பார்த்துத் திகைத்தேன். பழகிய முகம். என் முன் கை கூப்பிக்கொண்டே திரும்பிவந்தார். மன்னிப்பு கேட்கிறாரா பிச்சை கேட்கிறாரா என்று புரியவில்லை. திடீரென்று என்னருகில் தோன்றியவரைப் பார்த்து வண்டியை ஒரு கணம் மறந்தேன். என்னிடம் ஏதோ சொல்லவோ கொடை கேட்கவோ போகிறார் என்று நினைத்து வண்டியில் கவனமாக இருப்பது போல் நடித்தேன். என்னை ஏக்கமாகப் பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமலே போனார். பெட்ரோல் தீர்ந்து ரிசர்வுக்கு மாற்ற மறந்தது தெரிந்து என்னைத் திட்டிக்கொண்டே மாற்றினேன். வண்டி கிளம்பிவிட்ட நிறைவில், 'பாவம், பெரியவருக்கு என்ன கஷ்டமோ.. ஐந்தோ பத்தோ கொடுத்திருக்கலாமே' என்று நினைத்து அவர் போன வழியில் திரும்பியவன் திகைத்தேன். சாலையின் இருபுறமும் மைல் நீளத்துக்கு ஆளரவமே இல்லை. இரண்டு முறை இப்படி அப்படி மெள்ள ஓட்டிப் பார்த்தும் கிழவரைக் காணோம். எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்று நினைத்தபடி வீட்டுக்கு வந்தேன்.

தேசியும் அவனுடைய அண்ணா பெண்ணும் வீட்டில் காத்திருந்தார்கள். "டேய், எனக்குக் கல்யாணம்டா. சாயந்திரம் நிச்சயதார்த்தம். கண்டிப்பா வாடா" என்றான். "லவ் மேரேஜுடா. இந்தா போட்டோ".

புகைப்படத்தில் பெண் இளமையாக, மிக அழகாக இருந்தாள். "யார்டா பொண்ணு?" என்றேன். "சொல்லவே இல்லையே? ரொம்ப அழகா இருக்கா". வாழ்த்தினேன். "வேறே யாரைக் கூப்ட? தடியன், வயலின், சேஜோ, காஜூகாரன் யாருனா வராங்களா?" என்றேன்.

"நீ மட்டுந்தாண்டா. வயலின் எதுலயும் கலந்துக்கறதில்லே. தடியன் ஊர்ல இல்லை. கோகுலம் காலனிப் பசங்களைக் கூப்பிடலைடா" என்றான்.

வயலினைப் பற்றிக் கொஞ்ச நேரம் பேசினோம். தாயத்து பற்றிப் பேச்சு வந்தது. கொஞ்சம் தயங்கி, "உங்கிட்டே ஒண்ணு சொல்லணும்டா" என்றான்.

"என்னடா, உனக்கு லட்ச ரூவா கெடச்சுதா, தாயத்து மகிமையாலே?" என்றேன் கிண்டலாக.

அதற்குள் உள்ளிருந்து வந்த அண்ணன் பெண்ணுடன் கிளம்பினான். "சாயந்திரம் நிச்சயதார்த்தத்துக்கு வா. பேசலாம்" என்றான்.

எனக்குக் குழப்பமாக இருந்தது. இதென்ன, தாயத்து மறுபடி தலையெடுக்கிறதா? மாலை அவன் வீட்டிற்குப் போனேன். பத்து பேர் கூட இல்லை. பெண் வீட்டிலிருந்து இரண்டே பேர். பெண், அவளுடைய தாத்தா. எங்கேயோ பார்த்தாற்போலிருந்தது அவரை. தேசியின் அண்ணா எனக்கு ஒரு ரோல் மாடல் என்பதால் அவனுடன் கொஞ்சம் பேசிக்கொண்டிருந்து விட்டு, "யாரு சம்பத் இந்த ஆளு? எங்கயோ பாத்தாப்புல இருக்கே?" என்றேன்.

"பாலாஜி நகர் மச்சான். லஷ்மணன் அவளைத் தள்ளிகினு போறேனு கெளம்னான். நான்தான் அம்மாவாண்ட சொல்லி கட்டிவைனு ஜபர்தஸ்து பண்ணிகினேன்" என்றான். சம்பத் மெத்தப் படித்தவன். இங்லிஷ் ஞானி. தமிழில் மட்டும் ஏனோ சேரிவழக்கில் பேசுவான். தேசியை லஷ்மணா என்றுதான் கூப்பிடுவான். விசித்திர, உயர்தர கேரக்டர். அதற்குள் புரோகிதர் அழைத்ததால் கூடத்திற்குச் சென்றோம். "தண்ணி வாங்கியாந்திருக்கான் லஷ்மணன். ஒயிட் ஹார்ஸ். முட்டை புர்ஜி பண்ணிகிறேன். தட்டு மாத்தினதும் நாம மாடிக்குப் போவலாம். ஓடிறாத மச்சான்" என்றபடி என்னை இழுத்துக் கொண்டு போனான்.

திருமணப் பத்திரிகை படித்துவிட்டு பெண் வீட்டாரும் பிள்ளை வீட்டாரும் பழத்தட்டு மாற்றிக்கொண்டார்கள். சீதன வகைப் பேச்சு வந்ததும், பெண் வீட்டுப் பெரியவர், "எனக்கு இருக்குறது இந்தப் பேத்தி மட்டுந்தான். இவ அப்பன் ஆத்தா சொத்து, நகை, என்னோட சொத்து எல்லாம் சேத்து இதோ இந்தப் பணம் முழுக்க இவளுக்குத் தான். இந்தப் பணத்தை சீதனமாத் தரேன். பாதி பொண்ணு பேர்லயும் மீதி ஒங்க ரெண்டு பேர்லயும் பேங்குல போட்டுறுங்க" என்றார். நூறு ரூபாய் கட்டுக்கள் பத்து எடுத்து வைத்தார். "லட்ச ரூவாங்க. மவ பவிசு மனசு குளிருங்க" என்றார். தேசியைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். பொட்டிலறைந்தாற் போல் பெரியவர் யாரென்று நினைவுக்கு வந்தது.

இருப்புக் கொள்ளாமல் தவித்தேன். சாப்பாட்டில் லயிக்காமல் நானும் சம்பத்தும் மொட்டை மாடிக்குப் போனோம். நாகரீகமாக மூன்று ரவுண்டு விஸ்கி அடித்துவிட்டு புர்ஜியைக் கொறித்துக் கொண்டிருந்தோம். சம்பத் ஹிந்தியில் அருமையாகப் பாடுவான். விஸ்கியும் முழுநிலவும் மொட்டைமாடியும் பம்மல் காற்றும் சேர்ந்தக் கலவையில், "..ஹாமோஷியோங்கி சதாயேன் புலா ரஹீஹை துமேன்.." என்று ரபியைத் தோற்கடித்துப் பாடிக்கொண்டிருந்தான். தேசி வந்து சேர்ந்ததும் கொஞ்ச நேரம் விஸ்கி புர்ஜி வேலை அரசியல் என்று ஏதோ பேசிக்கொண்டிருந்தோம். எம்ஜிஆர் இறந்த வாரமாகையால் அதைப்பற்றிக் கொஞ்ச நேரம் பேசினோம். "தொப்பித்தலையன் பூட்டான் மச்சான்" என்றான் சம்பத். "லஷ்மணா.. துரையைக் கவனிடா. கிவ் ஹிம் எ ட்ரிங் ஐ சே" என்றான்.

"டேய், லட்ச ரூவா கத்தை கத்தையா கொடுக்குறாங்களேடா பொண் வீட்டுல?" என்றேன் தேசியிடம், சம்பத் கவனிக்கிறானா என்று பார்த்தபடி. குரு தத் போல் எழுந்து நின்ற சம்பத் இரண்டு கைகளையும் உயர்த்தி, "யே துனியா அகர் மில் பி ஜாயே தோ க்யா ஹை?" என்று பாடத் தொடங்கினான். சம்பத் அவனுடைய உலகத்தில் ஆழ்ந்துவிட்டது தெரிந்து தேசியைத் தனியாக இழுத்துப் பிடித்துக் கொண்டேன். "டேய், என்னடா இது?! லட்ச ரூவா? பேய்ப்பொண்ணு தானேடா அவ? தாத்தா தானேடா நம்மளைப் பிடிச்சு ஆடினது?" என்றேன்.

"கோச்சுக்காதறா. பாலாஜி நகர் போனதுல பழக்கமாயிடுச்சுடா. நாலு வருசமா அவளோட பழகிட்டிருக்கேண்டா. ப்லஸ்டூ முடிச்சு ரயில்வே க்ளர்க் பரீட்சை பாஸ் பண்ணி வேலைல இருக்காடா. தாயத்து விஷயம் எனக்கு ஒரு பொருட்டா படலைடா. ஷி இஸ் டிவைன். இவளை நான் உண்மையிலயே விரும்புறேண்டா. தாத்தாவும் என் மேலே அன்பா இருக்கார்டா. லட்ச ரூவா கொடுக்குறதா தாத்தா ரெண்டு வருசமா சொல்லிட்டிருக்காருடா. நான் கல்யாணம் செஞ்சுக்காம போயிருவேனோனு பயத்துல ஆசை காட்டுறதா நெனச்சேன். ஆனா போன வாரம் பணத்தைக் காட்டினதும் ஆடிப் போயிட்டேண்டா. கட்ன துணியோட அவளைக் கல்யாணம் பண்ணிக்கத் தயார்டா. எனக்கு அந்தப் பணம் தேவையே இல்லைடா. லட்ச லட்சமா கெடச்சாலும் அவளுக்கு ஈடாகாதுடா" என்றான்.

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவனைக் கட்டிப்பிடித்தேன். "கங்கிராட்ஸ்டா!" என்றேன்.

"ஒரு விதத்துல தாயத்தை வேண்டிக்கிட்டது பலிச்சுடுச்சோனு நெனச்சேன்... இருந்தாலும் பணத்தை அவ பேர்லயே போடச் சொல்லிட்டேண்டா. ஐ லவ் ஹர்" என்றான் மென்மையாய்.

"நல்லா இருடா" என்றேன். "நான் கெளம்புறேண்டா. ஐ நீட் டு ரெகன்சைல். நாளைக்குப் பாப்போம்" என்றபடி கிளம்பினேன். சம்பத் இன்னும் உருகிக் கொண்டிருந்தான். "நயி நயி ரங்க் லேகே..".

நள்ளிரவு போல் தோன்றியது. மேகங்களின் நிழலை முழுநிலவு பூமியில் காட்டிக்கொண்டிருக்க, கொஞ்சம் போதை கொஞ்சம் ஆத்திரம் கொஞ்சம் கலவரம் கலந்தவனாக நடக்கத் தொடங்கினேன். தேசி வீட்டிலிருந்து எங்கள் வீட்டுக்கு மூலைவிட்டப் பாதையில் நடந்தால் இருநூறு அடி கூட இருக்காது. பம்மலின் சென்ற ஐந்தாண்டு துரித வளர்ச்சியில் வீடுகள் வந்து, வரப்புகள் அசல் ரோடுகளாக மாறியிருந்தன. தார்சாலையில் செங்கோணமாக அறுநூறு அடி நடக்க வேண்டியிருந்தது. சிவன் கோயில் தெருவும் தேசி வீட்டு அண்ணா சாலையும் சந்திக்கும் இடத்தில் உருவத்தைப் பார்த்தேன். மதியம் குரோம்பேட்டையில் பார்த்தக் கிழவர்! திடுக்கிட்டுப் போய்ப் பின் வாங்கினேன். தெருவில் யாருமில்லை. மாலதி கடை மூடியிருந்தது. கைகூப்பி வந்தார் கிழவர். பாவமாக இருந்தது. என்ன கேட்கப் போகிறார் என்று நினைக்கையில் ஆளைக் காணோம். ஓட்டமெடுத்தேன். மபொசி தெருவிறங்கி கொஞ்சம் மூச்சு வாங்கினேன். ஒற்றைப் பனைமரத்தடியில் கிழவர் நின்று கொண்டிருந்ததைப் பார்த்ததும் பக்கென்றது. அவரைத் தாண்டித்தான் வீட்டு வேலிக்கதவைத் திறக்க வேண்டும். "சே! என்ன பிரமை" என்று என்னைத் தேற்றிக்கொண்டு வேலிக்கதவைத் திறந்தேன். எனக்கு நேர் எதிரே கிழவர் நின்று கொண்டிருந்தார். ஏதோ சொல்ல முயற்சிப்பது புரிந்தது. "ஏன்?" என்று கிழவர் கேட்பது போல் பட்டது. கெஞ்சுவது போல் பட்டது. வேகமாக நடந்து கதவைத் தட்டினதும் என் தங்கை கதவைத் திறந்து வெளி விளக்கை இயக்கினாள்.

திரும்பிப் பார்த்த போது வாடர் டேங்க் வரை ஈ காக்கா இல்லை. "ஏண்டா, என்னவோ போலிருக்கே?" என்று முகம் சுளித்தத் தங்கையை லட்சியம் செய்யாமல் உள்ளே சென்றேன். என் அறைக்குச் சென்று படுத்தேன். பத்து நிமிடமோ என்னவோ பொறுத்து ஜன்னல் இடுக்கு வழியாக வெளியே பார்த்தேன். பனைமரத்தடியில் கிழ உருவம் என்னையே பார்த்துக்கொண்டிருந்தது.

திடுக்கென்று அவர் யாரென்பது புரிந்து எழுந்து உட்கார்ந்தேன். போதை முழுதுமாகத் தெளிந்து வியர்த்தது. மறுபடி ஜன்னலிடுக்கு வழியாகப் பார்த்தபோது உருவத்தைக் காணோம்.

➤புகை: 3

2010/10/22

புகை



        பேயோட்டம் பார்த்தே தீருவது என்று நான், சுரேஷ், வயலின், தேசி நால்வரும் ஓலக்காரிகளுக்குப் பின்னால் உட்கார்ந்தோம். பத்தாம் வகுப்புக் கோடை விடுமுறையின் அந்த விடலைச்செயல், எங்களை வாழ்நாள் முழுதும் துரத்தும் என்று அறியவில்லை.

ஓலக்காரிகளுக்கு அப்பால் சிந்தாளம்மன் சன்னதிக்கெதிரே குழி வெட்டியிருந்தது. சுற்றி மாக்கோலம், சில சட்டிப்பானைகள், வேப்பிலைக் கொத்துகள். நள்ளிரவில் கோயில் கதவு திறந்து வந்த இரண்டு பூசாரிகள், குழிக்கருகில் நின்றனர். அவர்கள் பின்னே ஒரு ஆட்டை இழுத்துக் கொண்டு வந்தவனைப் பார்த்து, "பால்காரத் தாமுடா!" என்று வியந்தான் தேசி. ஒரு சட்டியிலியிருந்து மஞ்சள் பொடியை எடுத்து, குழியின் குறுக்கே கட்டியிருந்தக் கயிற்றுப்பந்தல் மேல் பூசாரிகள் அள்ளி வீசினர். இன்னொரு சட்டியிலிருந்து மண்ணெண்ணையைக் குழியில் தெளிக்க, குப்பென்று நாலடிக்கு எழுந்தடங்கியது நெருப்பு. "வந்துட்டா, சிந்தாளம்மா வந்துட்டா" என்று ஒரு பூசாரி, வேறொரு சட்டியிலிருந்த குங்குமத்தை நாலுபுறமும் வீசினான். கூட்டம் "ஆத்தா, ஆத்தா" என்றது. இரண்டாவது பூசாரி உள்ளிருந்து ஒரு அகண்ட இரும்புச்சட்டியை எடுத்து வந்து குழிமேல் வைத்தான். ஆட்டைக் கட்டியிருந்த கயிற்றைப் பால்காரத் தாமு கயிற்றுப்பந்தல் மேலெறிந்து இழுக்க, ஆடு கிணற்றுக்குடம் போல் மெள்ள உயரே எழும்பி இரும்புச்சட்டிக்கு மேலாக நின்றது. ஒரு பானையை மூடி விலக்கி முகர்ந்து பார்த்தப் பூசாரி, பானை நீரை ஆட்டின் மேல் வீசினான். ஒலக்காரிகள் "ஊலஊலஊல" என்று பின்னோலமிட, ஆடு பதிலுக்குப் "பேஏஏஏஏ" என்றது. எதிர்பாராத வகையில் தாமு ஒரு வெட்டறிவாளை எடுத்து "பகவதி!" என்றபடி இரண்டடி உயரத்துக்குத் துள்ளிக் குதித்து ஆட்டின் தலையை ஒரே வீச்சில் வெட்டியெறிந்தான். தலை கீழே சட்டியில் விழுந்தபோது வெளிவந்த ரத்தம் எங்கள் மீதும் தெறித்தது. ஓலக்காரிகளின் இடைவிடாத ஓலத்திற்கு மேல் இப்போது கூட்டம் "ஆத்தா, ஆத்தா" என்று அலறத் தொடங்கிவிட்டது. நான் நடுங்கி தேசியைப் பார்த்தபோது அவன் உதட்டோரத்தில் ஆட்டுரத்தம் தெறித்துக் காட்டேறி போல் தெரிந்தான். தாமு ஆட்டை இறக்கி, தலையையும் முண்டத்தையும் எடுத்துக் கொண்டு விலகினான். பூசாரிகள் இருவரும் சட்டியின் எதிரெதிரே உட்கார்ந்தனர். ஆட்டிலிருந்து இறங்கிய ரத்தம் முழுதும் சட்டியில் கொதிக்கத் தொடங்கி, ரத்தக்கறி வாடை வயிற்றைக் குமட்டியது. கொட்டிய ரத்தம் சூட்டில் இறுகிச் சிறிய உருண்டைகளாக மாற, "ஆத்தா வயிறு நெறஞ்சிடுச்சி" என்றபடி சட்டியை எடுத்துச் சென்றனர். கூட்டம் அவர்கள் சொன்னதை நம்பி ஆரவாரம் செய்தது. ஒரு ஓலக்காரி, "ஆத்தா அப்படியே குடிச்சிட்டா, கொட்டின ரத்தம் எங்கே போவும்?" என்றாள். "ஆத்தா, ஆத்தா" என்றான் சுரேஷ் என்னைப் பார்த்துக் கண்சிமிட்டியபடி. என் நிஜார் நனைந்தது அவனுக்கு நிச்சயமாகத் தெரியும். திரும்பி வந்த பூசாரிகள் ஒரு பானையிலிருந்து நீரை எடுத்துக் குழியில் கொட்ட, நெருப்பு அணைந்து புகைந்தது. அதன் மேல் மண்ணையும் மஞ்சளையும் அள்ளிக் அள்ளிக் கொட்டினர். மூடிய குழிமேல் ஆண், பெண் என்று வரிசையாக நிற்கவைத்துப் பேயோட்டத் தொடங்கினர். "ஓடு, ஆத்தா சொல்லுறா ஓடு" என்று வேப்பிலைக் கொத்தினால் அடி அடி என்று அடிக்க, அவர்கள் அலறினர். நான் பயத்தில் கண்களை மூடிக்கொண்டேன்.

"கண்ணைத் தொறடா, ஒம்போது" என்று என்னைத் தட்டி எழுப்பினான் சுரேஷ்.

எதிரே ஒரு சிறு பெண்ணை, பத்து வயது இருக்குமென்று தோன்றியது, பேயோட்டிக் கொண்டிருந்தனர். அருகிலிருந்தக் கிழவர், "மவ வயித்துப் பொண்ணு, என் மவ வயித்துப் பொண்ணு, வாடி பவிசு, என் மவளே" என்று கூச்சல் போடத் தொடங்கினார். "ஓடுறீ நீலி, ஆத்தா ரத்தம் குடிச்சு கோவமா இருக்கா. மலையேறு காட்டேறி, அப்பன் மனசு குளிற இறங்கிவா ஆத்தா" என்று பூசாரிகள் வேப்பிலை அடிக்கத் தொடங்கினர். ஓலக்காரிகள் கூச்சல் போட, கிழவர் சட்டென்று தேசியையும் என்னையும் எழுப்பிக் கட்டிக்கொண்டு ஆடத்தொடங்கினார். வயலினும் சுரேஷும் கூட்டத்துடன் கலந்து, "இறங்கிவா ஆத்தா இறங்கிவா" என்று டப்பாங்குத்து ஆடினார்கள். திடீரென்று அந்தப் பெண் "டேய், நிறுத்துடா" என்று அலறினாள், கிழக்கட்டைக் குரலில். திடுக்கிட்ட ஒரு பூசாரி கையிலிருந்த வேப்பிலைக் கொத்தைத் தவறவிட்டு எடுக்கக் குனிந்தபோது, எகிறி அவன் கழுத்தைப் பிடித்துக்கொண்டாள். "தாயத்து எங்கடா?" என்று பூசாரியின் தலையைத் தட்டித்தட்டி ஆடத் தொடங்கினாள்.

"யாரு நீ? சூலியா, காட்டேறியா அடையாளம் சொல்லு தாயே" என்றான் பூசாரி.

"ஆத்தா, ஆத்தா, தாயத்து என்னாண்ட இருக்குது தாயே" என்று அலறினார் கிழவர். தன் பையிலிருந்து எடுத்துக் காட்டினார்.

அதற்குள் தன்னை விடுவித்துக்கொண்டப் பூசாரி, ஒரு பானையை எடுத்துக் கோபத்துடன் அவள் மேல் கவிழ்த்தான். தண்ணீரோ என்னவோ அதிலிருந்து கொட்ட, பேய்ப்பெண் இன்னும் அலறினாள். எட்டி எட்டிக் குதித்தாள். பூசாரி மேல் காறித் துப்பினாள். ஏற்பட்ட கடுப்பில், "மலையேறு, குடுப்பாரு" என்று வேப்பிலைக் கொத்தினால் ஓங்கி அடித்தான் பூசாரி.

கிழவர், நான் திடுக்கிடும்படியாக என்னை இழுத்து என் சட்டைப் பையில் தாயத்தைப் போட்டார். "இதோ, தாயத்து இவங்கிட்டே இருக்கு ஆத்தா. சரியான எடத்துல சேந்துடுச்சு தாயே. மலையேறு, பவிசு மலையேறு" என்றார்.

நடுங்கிப்போய் என்னை விடுவித்துக் கொண்டேன். பாக்கெட்டில் விழுந்த தாயத்தை எடுத்து வயலினிடம் தர முயன்றபோது அவன் விலகினான். தவறிக் கீழே விழுந்தது. ஓலக்காரிகள் பலமாகப் பின்னோலமிட, கிழவர் மயங்கி விழுந்தார். கூட்டத்தில் பரபரப்பு. திரும்பிப் பார்த்தால் தேசியைக் காணோம். சுரேஷ் கழன்றுகொண்டிருந்தான். "ஆத்தா ஆத்தா" என்று அவரவர் எழுந்து அருகில் வர, நாங்கள் எடுத்தோம் ஓட்டம்.

    றுநாள். வழக்கம் போல் பம்மல் மலை வரை அரட்டை அடித்தபடி நடந்து, மலையுச்சியிலிருந்து சிறு பாறைகளை உருட்டி ரேஸ் விளையாடிக்கொண்டிருந்த பொழுது சுரேஷ் திடீரென்று, "டேய், இன்னி காலைல பால்காரத் தாமுட்ட கேட்டண்டா. நம்மள அவன் கவனிக்கவே இல்லை போல. நேத்து மண்டபத்துல ரகளைனான். அந்தக் கெழம் பாலாஜி நகராம். நெனச்சதை நடத்திக் கொடுக்கும் தாயத்தக் கொடுத்துட்டு காட்டேறிப்பேய் மலையேறிடுச்சு, தாயத்தோ மாயமா மறைஞ்சிடுச்சுனு சொன்னான்" என்றான்.

"ஆ..மடா, நெனச்சத நடத்திக்காட்டுற தாயத்தாவது மயிராவது. போடாங்க... இதெல்லாம்" என்று இழுத்த வயலினை மறித்தான் சுரேஷ். "இது என்னா தெரியுதா?" என்றான். அவன் கையில், முதல் நாளிரவு அந்தக் கிழவர் கொடுத்த தாயத்து! ஜோதிலட்சுமி போல் இடுப்பை ஒடித்து, "ஆத்தா, ஆத்தா" என்றான்.

"அடப்பாவி! நீயா சுட்டே? வேணாம்டா, தூக்கியெறிடா" என்றேன்.

"நிறுத்துறா". தாயத்தைப் பிடுங்கி எறியப்போன என்னைத் தடுத்தான் சுரேஷ். "டேய், வயலின். அந்த திலகம் மேல ஒனக்கு ஒரு இது தானே? தாயத்த வச்சு அவள வசியம் பண்ணிடு, இந்தா பிடி" என்றான். "அவ உன்னை விட ஒரு கிளாஸ் பெரியவடா. வசியம் பண்ணா தான் உண்டு. இல்லையினா உன் பக்கம் தாவணி கூட காட்ட மாட்டா" என்றான்.

"போடா. தண்டக்கருமாந்திரம்" என்றான் வயலின்.

சுரேஷ் விடாமல் திலகம் போல் பின்புறத்தை அசைத்துக் காட்டினான். "தொடணும் போல இருக்குல்ல..?" இடது கையால் பின்புறத்தைத் தட்டிக் காற்றில் முத்தம் ஊதி வயலினைச் சீண்டினான். "இந்தா தாயத்து".

என்ன தோன்றியதோ, "நாம நாலு பேரும் ஆளுக்கு ஒண்ணு வேண்டுறதா இருந்தா சரி" என்றான் வயலின். "சரி" என்ற சுரேஷ் தாயத்தை என்னிடம் கொடுத்து, "துரை, நீதாண்டா மொதல்" என்றான். வயலின் விழுந்து சிரித்தான். "மாட்னான் பாரு" என்றான்.

எனக்கு பயமிருந்தாலும் நம்பிக்கையில்லை. தாயத்தை எடுத்து ஒரு கணம் மௌனமாயிருந்துவிட்டு, திருப்பிக் கொடுத்தேன். "ஓலாக்குதே? என்ன வேண்டிக்கிட்டேனு ஓபனா சொல்லணும்" என்றான் சுரேஷ்.

"அத மொதவே சொல்லியிருக்கணும். புது ரூல் போடாதே. நான் வேண்டியாச்சு, அவ்ளோ தான்" என்றேன். "இனி உங்க டர்ன். இந்தாடா" என்று தேசியிடம் தாயத்தைக் கொடுத்தேன். சுரேஷ் மறித்தான். "என்ன வேண்டுறோம்னு உரக்க சொல்லணும். இந்த சும்பக்கூ வேலையெல்லாம் வேணாம். துரை, நீ திலகத்தை டாவடிக்கணும்னு தானே வேண்டினே? எனக்குத் தெரியும்" என்றான் விஷமத்துடன்.

வயலினுக்குக் கோபம் வந்தது. "டேய், துரோகி" என்றான். "இல்ல்ல்லடா" என்றேன்.

தேசி முன்வந்து, "அவன விடுங்கடா" என்றான். தாயத்தை ஹீரோ போல் உயர்த்தி, "எனக்கு லட்ச ரூவா கிடைக்கணும்" என்றான். சுரேஷிடம், "தடியா, நீ வேண்டிக்கடா" என்றான்.

"வேண்டுறதெல்லாமே ஒரு லெவல்ல இருக்கணும்டா" என்ற சுரேஷ், "அமெரிக்கா போய் செட்டில் ஆவணும்" என்றபடி தாயத்தை முத்தமிட்டான். "இந்தாடா" என்று வயலினிடம் கொடுத்தான்.

எதிர்பார்த்தபடி, "திலகம் எனக்கு பொஞ்சாதியாவணும்" என்று உரக்க வேண்டினான் வயலின்.

பிறகு ஏதோ சடங்கு போல எங்கள் ஒவ்வொருவர் தலையையும் தாயத்தால் சுற்றி விட்டு உள்ளங்கையில் தாயத்தைக் காட்டியடி, "டேய், இதுல எது பலிச்சாலும் யார் கிட்டயும் எதுவும் செத்தா கூடச் சொல்லக்கூடாது. சத்தியம் பண்ணுங்க" என்றான் வயலின். "செத்தா எப்படிறா சொல்ல முடியும்?" என்ற என்னிடம், "புடுங்கி.. முக்கியமா நீதான். சத்தியத்துல நம்பிக்கையில்லேனு ஓல்பஜனை வேண்டாம்" என்றான். நாங்கள் எல்லோரும் வயலின் கையில் சத்தியமடித்தோம்.

தாயத்தைத் தூக்கி எறிந்து இறங்கத் தொடங்கினோம். "இதெல்லாம் நடக்குற கதையாடா? எனக்கு லட்ச ரூவா கெடச்சாலும் கெடக்கும், திலகம் உனக்கு எப்டிரா கழுத்த நீட்டுவா?" என்றான் தேசி.

"புளுத்தியப் பாரு, அமெரிக்காவுல செட்டிலாவணுமாம். த்த.. நமக்கு பம்மல் தான் கதி" என்று வயலின் ஒரு உருளைக்கல்லைக் கால்பந்து போல் உதைத்தபடி வந்தான்.

"திலகம் உன்னை கிஸ்ஸடிப்பானு நம்பிக்கையாத்தானே வேண்டிக்கிட்டே? உடாதமா கண்ணா" என்று சுரேஷ் அவனைச் சீண்ட, வீடு சேரும் நேரத்தில் பேச்சு திசைமாறி விட்டது.

   விடுமுறை முடிந்து நானும் சுரேஷும் ப்ளஸ்டூ படிக்க ஆலந்தூர் போக வேண்டியிருந்தது. தேசி பல்லாவரத்தில் படித்தான். வயலினுக்கு எங்கும் இடம் கிடைக்காமல் குன்றத்தூரோ மாங்காடோ சென்று படித்தான். இடையில் என் அப்பா இறந்து போனதும் ஏற்பட்ட வீட்டு நெருக்கடி, க்ருஷ்ணா நகர் பெண்கள், 'யௌவனம்' கையெழுத்துப் பத்திரிகை என்று பல திசைகளில் என் கவனம் திரும்பியது. சனி ஞாயிறில் மட்டுமே சந்தித்தவர்கள், மெள்ள அதையும் குறைத்துக் கொண்டோம். தெரு நண்பர்களுடன் என்னால் முன்போல் பழக முடியவில்லை. சுரேஷ் என்சிசியில் சேர்ந்து அடிக்கடி காணாமல் போகத்தொடங்கினான். தேசி எங்களை விட்டு பாலாஜி நகர், கோகுலம் காலனி ஆட்களுடன் பழகத் தொடங்கிவிட்டான்.

ப்ளஸ்டூ விடுமுறை தொடங்கிய முதல் வாரம். திடிரென்று வயலினைக் காணோம். திலகமும் வயலினும் ஊரை விட்டு ஓடித் திருமணம் செய்து கொண்டது பற்றி பம்மல் முழுவதும் ஒரே பேச்சு. இரண்டு மூன்று மாதங்களுக்குத் தலைமறைவாகிவிட்டார்கள்.

நான் கல்லூரி சேர்ந்த பின், முதல் விடுமுறையில் பம்மல் வந்தபோது வயலினைச் சந்தித்தேன். திலகத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதாகச் சொன்னான். "எல்லாம் தாயத்து மகிமைடா" என்றான்.

"உளறாதடா. என்ன ஆச்சு, உண்மைய சொல்லுடா? உனக்கு பதினெட்டு வயசு கூட ஆவலையே? அவளை எப்படிரா காப்பாத்துவ?" என்றேன்.

அதற்குள் திலகம் ஒரு சிறு தட்டில் இனிப்பும் காபியும் கொண்டு வந்து கொடுத்தாள். அவளைப் பார்த்து மனதுக்குள் அதிர்ந்து, வயலினைப் பார்த்தேன். திலகம் விலகியதும், "ஆமாடா, முழுகாம இருக்கா" என்றான்.

"டேய், கவனமா இருடா. இதெல்லாம் சட்டவிரோதம் மட்டுமில்லே ரொம்ப ரொம்பச் சீக்கிரம்டா" என்று சொல்லிவிட்டு வந்தேன். வீட்டுக்கு வரும் வழியில் தாயத்து நினைவுக்கு வந்தபடி இருந்தது.

பொங்கல் விடுமுறைக்கு வீடு திரும்பியபோது மீண்டும் வயலினைச் சந்தித்தேன். திலகம் அவனைவிட்டு ஓடிவிட்டதாகச் சொன்னான். அதிர்ச்சியாக இருந்தது.


➤புகை: 2

2010/10/20

...ஆடவரலாம்

வெத்து வேலை


சினிமா-3 | 2010/10/20 | Cyd Charisse-Fred Astaire

கறுப்பு அங்கிக்குள் சிட் புழுங்கி மூச்சுவிடச் சிரமப்படுவதைப் பார்க்கும் பொழுது பாவமாக இல்லை?

2010/10/15

அதர்மு மாமா (கதை)



    மூஷிகவாகனா, முடிஞ்ச வரைக்கும் காப்பாத்துடாப்பா.

ஸ்மச்ரம்னா தேவபாஷைலே மீசைனு அர்த்தம். பொம்னாட்டிகளுக்கு அந்தக்காலத்துலே மீசை உண்டாக்கும். மீசைக்குச் சின்னதா பட்டுக் குஞ்சலம் கட்டி அலங்காரம் பண்ணுவா. சர்வமும் ஒரு நா காக்கா ஊஷ்னு காணாமப் போயிடுத்து. ஸ்த்ரீகளுக்கு ஸ்மச்ரம் போன கதைதான் இன்னக்குப் பிரசங்கம். கீர்த்தனாரம்பத்துலே டிஸ்கி ஒண்ணைச் சொல்லிடறேன். எசகு பிசகா நெறைய விஷயம் வரும். பால்யரெல்லாம் படிக்கப்படாது, அப்படியே படிச்சாலும் கள்ளத்தனமா படிக்கணும்.

யுகாரம்பத்திலே மாண்டவியர் மாண்டவியர்னு ஒரு மகரிஷி இருந்தார். அவருக்கு அதிசுந்தரியா ஒரு பத்னி இருந்தார். அவா ரெண்டு பேரும் கூடிக் கூடி ரொம்ப சந்தோஷமா இருந்தா. அதனாலயோ என்னவோ அவாளுக்கு சுருக்கவே ஒரு பொண் கொழந்தை பொறந்தது. லாவண்யம்னா லேசுப்பட்ட லாவண்யமில்லே அந்தக் கொழந்தைக்கு. சாக்ஷாத் மகாலட்சுமி, பார்வதி, சரஸ்வதி, திலோத்தமை, மேனகை எல்லாரையும் கரைச்சடிச்ச அழகான அழகு. லாவண்யானு பேரு வச்சு, கொழந்தைய ஆசையும் பாசமும் அளவுச்சாப்பாடும் போட்டு வளத்தா. கொழந்தைக்கு விவாக வயசாறச்சே மாண்டவியருக்கு திடீர்னு லோக சஞ்சாரம் பண்ண ஆசை வந்துடுத்து. பார்யாளையும் அழைச்சுண்டு போக ஆசை. ஆனா ப்ராயக்கன்னியைக் கூட்டிண்டு போகப் பிரியப்படலை. "அதெல்லாம் முடியாதுன்னா. தெறண்ட பொண்ணு, தனியா எப்படி விட்டுட்டுப் போறது?"னு கவலை பிச்சுண்டு போறது தாயாருக்கு. தோப்பனாருக்கு ஒரு ஐடியா தோணறது. "யாராவது நம்பிக்கைக்குப் பாத்திரமா, தர்மானுஷ்டானம் பண்றவாள்ட்டே விட்டுட்டு போகலாம்"னு சொல்றார்.

மாண்டவியர் இப்படி பேபி சிட்டர் தேடறார்னு தெரிஞ்சோடனேயே அத்தனை புருஷ தேவாளும் "ஒங்காத்து லாவண்யாவா? எங்கூட தங்கட்டுமே.. பட்டாட்டம் பாத்துப்பேனே.. உக்கார வச்சு சிஸ்ருஷை பண்ணுவேனே?"னு சமுத்ரமா ஜொள் விட்டுண்டு அலையரா. இவாளைப் பாத்ததும் அப்பா அம்மா ரெண்டும் பேரும் செலக்ஷன் கமிட்டி போட்டு யோசிக்கறா.

"பிறைசூடிப் பெருமானாச்சே பரமசிவன்? அவர் லாவை ஆசையா வச்சுக்கறேங்கறார்.. அவர்கிட்டே விட்டுட்டுப் போவோம்"னு சொல்றார் மிசஸ் மாண்டவியர்.

"அடியே, அடியே. அவர் ஆசையா வச்சுக்கறேங்கறதுக்கு அர்த்தமே வேறேடி. தாருகாவனத்துல திகம்பரமாத் திரிஞ்சு அத்தனை ரிஷி லேடீஸ் மனசையும் கலைச்சு, பின்னாலயே சுத்த வச்சார் அந்தப் பித்தர். வேற ஆளைப் பாப்போம். வாட் அபவுட் மகாவிஷ்ணு?"ங்கறார் மிஸ்டர் மா.

"நன்னா பிடிச்சேளே. போறும் போறும்.. லீலைக்கெல்லாம் நாயகன்னா அவர்? ஒரு பொண்ணா ரெண்டு பொண்ணா? கோபிகாளோட சென்சஸ் லிஸ்ட் எடுத்து வச்சுண்டு ஏழு வயசுலந்தே குஷால் ஆட்டம் போட்டவராக்கும் ஒங்க மகாவிஷ்ணு.. நம்ம கொழந்த லாவண்யா ரொம்ப எளகின சுபாவம்... வெகுளி. லாவை ஏமாத்திடுவாராக்கும் விஷ்ணு. டஸ்ட் பின்" அப்படிங்கறார் மிசஸ் மா.

"தேவராஜனாச்சே இந்திரன், அவனண்ட விட்டுப்போவோமா?"னு மாமா கேட்டு முடிக்கறதுக்கு முன்னாலயே மாண்டவிய மாமி மோவாய்ல இடிச்சுக்கறா. "கண்றாவி. அகலிகை விஷயம் தெரியாதான்னா ஒங்களுக்கு? ஏன் இப்படி புத்தி கெட்டுப் போறேள்?"னு நறுக்குனு கேக்கறா. "நான் சொல்றேன், பிரம்மாவைப் பிடிங்கோ..".

"ஏண்டி, பைத்தியமா பிடிச்சிருக்கு நோக்கு? பெத்த பொண் பின்னாடியே கைல பிடிச்சுண்டு சுத்தின காமாந்தகன்டி பிரம்மா.. நம்ம பொண்ணுக்கு அப்படியொண்ணும் பிராரப்தமில்லே"னு எரிச்சல் படறார் மாண்டவியர்.

இப்படி ஒத்தொத்தரா குத்தம் குறை சொல்லி, கடைசில அத்தனை தேவாளையும் சப்ஜாடா தள்ளி வச்சுடறமாதிரி ஆயிடறச்சே, டக்குனு எமதர்மராஜன் ஞாபகம் வரது மாமிக்கு. சொன்னதும், "சொர்க்கத்தை விட்டு நரகத்துல ஏண்டி ஆள் தேடறே?"ங்கறார் மாமா.

"அதான் கல்யாணம் பண்ணிண்டாச்சே, இப்ப நெனச்சு என்ன பண்றது?"னு நைசா கதலீபலத்துல ஊசி ஏத்தறா மாமி. "எமதர்மராஜன், தர்மத்துக்கு ராஜனாக்கும். பாவ புண்யங்களை அளந்து ஆளற பகவானாக்கும். நரகத்துல உத்யோகம் பாத்தா என்னப்போ? அவர்கிட்டே தப்பு தண்டா நடக்காது. அவர்தான் நம்ம லாவுக்கு சரி"ங்கறார். மாமாவும் "கரெக்டு. நேக்கு அப்பவே தெரியும்"னார். கவனிச்சேளா?.. நன்னாருந்தா பார்யாள் ஐடியாவை தன்னோடதா எடுத்துக்கற பழக்கம் அப்பவே இருந்திருக்கு பாருங்கோ.

ரெண்டு பேரும் லௌகீக புத்ரி லாவண்யாவை சர்வாலங்காரம் பண்ணி எமதர்மனோட குவாடர்சுலே விட்டுட்டுப் போறா. எமனும் "ஆகா, அதுக்கென்ன பாத்துண்டா போச்சு.. நன்னா சஞ்சாரிச்சுட்டு எல்லா தரிசனமும் முடிச்சுண்டு வாங்கோ"னு சொல்றார். லாவண்யாவைப் பாத்துட்டு, "நீ உள்ளே போம்மா லாக்குட்டி... பாத்து, பாத்து"னார்.

மிஸ்டர் அன்ட் மிசஸ் மாண்டவியர் ஷேத்ராடனம் கெளம்பிட்டா. இங்க திருவாளர் தர்மராஜன் தெனம் லாவைப் பாத்துக்க வேண்டிய நெலமை. ஒரு நாள் பாத்துண்டார். ஒரு வாரம் பாத்துண்டார். அப்றம் அவருக்கே பொறுக்க முடியலை. முழுப்பழமாத் தெறண்ட தனம் ப்ருஷ்டத்தோட, ஸ்ருங்கார ஸ்வரூபிணியா ஒரு யுவஸ்த்ரீ கண்ணெதிர இருக்கப்போ, எந்த மடையன் பாவபுண்யக் கணக்குப் போட்டுண்டிருப்பான்னு தோணிடுத்து அவருக்கு. அவளை அப்படியே ஆலிங்கனம் பண்ணிண்டு ஆனந்தமா இருக்கணும்னு ஆசைப்படறார். லா கிட்டே போய் தன்னோட ஆசையைச் சொல்றார். எமனோட தேஜசைப் பாத்துட்டு லாவுக்கும் கிறக்கமா இருக்கு. சரிங்கறா. ரெண்டு பேரும் டக்குனு ஒரு முத்தா கொடுத்துக்கறா. அவசரம் அவசரமா வஸ்திரங்களை அவுக்கும் போது ஏதோ சப்தம் கேக்கறது. எமனுக்கு பயம் வந்துடுத்து. நாமளோ தர்மராஜன். இந்த அதர்மத்தை யாராவது பாத்துட்டா என்ன பண்றது? அதனாலே ஒரு ஐடியா பண்றார். லாப்பொண்ணைப் பலாச்சொளையாட்டம் முழுங்கிடறார். தேவைப்படும் போதெல்லாம் அக்கம்பக்கத்துல ஆளில்லைனு தெரிஞ்சதும் அவளை வெளியே துப்பிடுவார். லா வெளியே வந்த உடனே ரெண்டு பேரும் ப்ரியத்தோடக் கொஞ்சிக் குலாவி சந்தோஷமா இருப்பா. இப்படியாகத்தானே ப்ளானாட்டம் போயிண்டிருக்கு.

ஒரு நாள் கார்த்தால எமன் லாவை வெளில கொண்டுவந்து, "சித்த இங்கயே இருடிம்மா"னுட்டு உத்தரத்தைக் காதுல மாட்டிண்டு போறார். அப்போ அக்னியும் வாயுவும் அந்தப் பக்கமா வாக்கிங் போயிண்டிருக்கா. அக்னி லாவைப் பாக்கறார். கண்டவுடன் காதல்னு சில பேர் சொல்றா. அதெல்லாம் சிலாக்யமில்லாத பேச்சு. பொதுவா ஆம்ப்ளேளுக்கு பொம்னாட்டியைக் கண்டவுடனே தோண்றது லவ்வில்லே, லஸ்டாக்கும். முகஸ்துதிக்கு மேடம் சிஸ்டர்னு சொன்னாலும், மனசுக்குள்ளே இவ்ளோ லட்சணமா இருக்காளே, இவளை மடக்கிப் போட்டா எப்படியிருக்கும்னு ப்ளாட் போட்டுண்டே இருப்பாளாக்கும். இது புருஷ ஸ்வபாவம். அக்னிக்கும் அதே எண்ணம் தான். லாவண்யாவை ஆனந்தபவன் அல்வா மாதிரி பாக்கறார். உடனே வாயுகிட்டே சொல்றார், "நான்தாண்டா மொதல்ல பாத்தேன். மி த பஸ்டு. நீ கொஞ்சம் மந்தமா மயக்கமா வீசுடா... அவளைப் பிக்கப் பண்றேன்"கறார். வாயுவும் போதை வரமாதிரிப் பூமணத்தோட வீசறார். அவ முன்னால நின்னதும் போதைல பொண்ணுக்கு அக்னியை ரொம்பப் பிடிச்சுப் போச்சு. ரெண்டு பேரும் உடனே குலாவறா. தூரத்துல எமன் வர்றதைப் பாத்துட்டு வாயு சிக்னல் கொடுக்கறார். என்னதிது, குக்கர் விசில் கேக்கறதேனு யோசிச்ச பொண்ணு, எமன் வர்றதைப் பாத்துட்டு பயந்துடறா. அக்னிக்கும் கை கால் ஓடலை. லாப்பொண்ணு இப்ப பெரிய வீலர் டீலரோன்னோ? தெரிஞ்ச வித்தையைக் காட்டறா. டக்குனு அக்னியை முழுங்கிடறா. வாயுவோ ஆள விடுறா ராமானு காத்தா மறைஞ்சு போயிடறார். எமனுக்கு இந்தச் சங்கதியெல்லாம் தெரியலை. அன்னைக்கு தர்மசம்ஸ்தாபன சென்டர்லே கஸ்டமர் கம்ப்ளெயின்டு சிவியரிடி ஒன் பிராப்ளமெல்லாம் ஜாஸ்தியானதுனால ஸ்ரத்தையில்லாம வரார். வழக்கம் போல லாவை முழுங்கிட்டு ஜோலியைப் பாக்கப் போறார்.

ரஷ்யப் பொம்மை மாதிரி ஆயிடுத்தில்லையோ? எமனோட வயத்துல லாப்பொண்ணு. லாவோட வயத்துல அக்னி. பொண் புத்தி பொன் புத்தியாச்சே? விடுமா? எமன் வயத்துல இருக்கறப்போ சும்மா இருப்பானேன்னு தோணிடுத்து லாவுக்கு. அக்னியை வெளில கொண்டு வரா. இதாண்டா சான்சுனு எமனோட வயத்துக்குள்ளே அக்னியும் லாவும் ராசலீலைகள் பண்ணிண்டு சந்தோஷமா இருக்கா. எமன் தன்னை வெளில கொண்டு வரப்போ மட்டும் அக்னியை முழுங்கிடுவா. இப்படியே போயிண்டிருக்கு இவா கூத்து.

இதுல பாருங்கோ, லேடீஸ் அன்ட் ஜென்டில்மென், ஒரு சிக்கல் வந்துடுத்து. அக்னியைக் காணலைனா லோகத்துல ஒரு ஸ்ரேஷ்டமான கார்யமும் நடக்காதே? யாகத்தைக் காணோம். விளக்கைக் காணோம். சமையலைக் காணோம். பிரம்மசபை, விஷ்ணுசபை, சிவசபை எல்லாத்துலயும் விவாதம் நடக்கறது. நெலமை மோசமானதும் எல்லாருமா முதல் தேவர் மூவர்ட்ட முறையிடறா. சிவன் விஷ்ணுவைப் பாத்தார். விஷ்ணு பிரம்மனைப் பாத்தார். பிரம்மா சிவனைப் பாத்தார். இது கொஞ்ச நேரம் நடக்கறது. 'பார்த்தது போதும், பொங்கியெழு'னு சபைல யாரோ கத்தறா. சிவன் வாயுவைக் கூப்பிடறார். "இங்க வாடாப்பா, நீயும் அக்னியும் ஜிகிரித் தோஸ்தில்லையோ? எங்க அக்னி?"னு கேட்டார். வாயு பகவானுக்கு விஷயம் தெரியும்னாலும் வாயே தொறக்கலை. பயம். தேவாள் பொய் சொல்லப்படாதே? யோசிக்கிறார். பொய் சொல்லப்படாதுனா அதுக்காக உண்மையைத்தான் சொல்லணும்னு அர்த்தம் பண்ணிக்கப்படாது. "அக்னியைத் தேடிண்டிருக்கேன்"னு சமயோசிதமா சொல்றார் வாயு. விஷ்ணு ஒடனே, "நீ தான் தேடிப் பிடிக்கணும்"னு சொல்றார். சிவனோ ஒரு படி மேலே போய், "இன்னும் ரெண்டு நாழிலே அக்னியைத் தேடிக் கொண்டு வரணுமாக்கும்"னு ஆணை போடறார். பிரம்மன் நன்னா நாலு மண்டையையும் ஆட்டிட்டு, "மீடிங் அட்ஜர்ன்டு"னு சொல்றார்.

'இதேதுடா வம்பாப் போச்சே!'னுட்டு வாயு, லாப்பொண்ணைத் தேடிண்டு போறார். எமன் குவாடர்ஸ் தெருக்குள்ள நுழையும் போது யாரைப் பாக்கறார்? லோக சஞ்சாரம் போன மாண்டவியர் வந்துண்டிருக்கார். சிக்கல் தாண்டி விக்கல்ல மாட்டிப்போம் போலிருக்கேனு நெனக்கறார் வாயு. ப்ரகாசமா ஒரு க்ளைமேக்ஸ் ஐடியா தோணறது. மாண்டவியரைப் பாத்து பவ்யமா சேவிக்கிறார். முனிவரோன்னோ, புஸ்குனு சாபம் கொடுத்துடுவாளே? "நமஸ்காரம் அண்ணா. ஷேத்ராடனம்லாம் எப்படி இருந்தது? ஆத்துல சௌக்கியமா? எங்க இவ்வளவு தூரம்?"னுட்டு குசலம் சாரிக்கிறார். மாண்டவியரும் பதிலுக்கு நம்ஸ்காரம் சொல்லிட்டு, "எங்காத்துப் பொண்ணை எமதர்மர் ஆத்துலந்து கூட்டிண்டு போறதுக்காகப் போயிண்டிருக்கேன்"னு சொல்றார். வாயு விடுவாரா? "அடடா! நானும் அங்கே தான் போயிண்டிருக்கேன். ஒங்களுக்கு ஏன் சிரமம்? எமன் ஆத்தில இருக்காரோ ஆபீஸ்ல இருக்காரோ? அவர் வந்ததும் லாவை நானே கூட்டிண்டு வந்து ஒங்காத்துல விட்டுடறேன்"னு சொல்றார். மாண்டவியரும் "நல்லதா போச்சு. பார்யாள் மத்த ரிஷி லேடீசோட காத்தாலயே கெளம்பிட்டா. நான் ஆத்துக்குக் காவல் இருக்கணும். ரொம்ப தேங்சு வாயுண்ணா, ஜாக்ரதையா கூட்டிண்டு வந்துடுங்கோ"னுட்டு திரும்பிப் போறார்.

மாண்டவியர் அந்தப்பக்கம் போனதும் டாக்கு டாக்குனு நடந்து எமதர்மராஜன் குவாடர்சுக்குள்ளே நுழைஞ்சார் வாயு. அங்கே எமதர்மன் லஞ்சுக்கு ரெடியாயிண்டிருக்கார். மாத்யாஹ்னிகம் பண்ணிட்டு, தயாரா இருக்குற இலை முன்னால் ஒக்காரச்சே, வாயு நுழையறத பாக்கறார். "தேவாள் என்னோட குவாடர்சுக்கு வந்திருக்கேளே! வாங்கோ,வாங்கோ. பையா இன்னொரு இலை போடுறா"ங்கறார். உடனே வாயு, "ரொம்ப சந்தோஷம். ஆனா நாலு பேருக்கு ரெண்டு எலை போறாதே?"னார். "வாட்யூ மீன் வாயு?"ங்கறார் எமன். வாயு நேரா எமனைப் பாக்கறார். "இருக்குற தலைக்கு எலை போட்டுறலாம். இல்லாத தலைக்கு எப்படி எலை போடறதுனு பாக்கறீங்களா?"னு டயலாக் விடறார். "புரியலையா? உங்க வயத்துக்குள்ள ஒளிச்சு வச்சிருக்கேளே, லாப்பொண்ணு அவளுக்கு ஒரு இலை. மொதல்ல அவளை வெளில கொண்டு வாங்கோ"னார். எமன் திருதிருனு முழிக்கிறார், "ஒங்க வாகனமாட்டம் தாமசம் பண்ணாம சட்டுனு கொண்டு வாங்கோ. நேக்கு எல்லாம் தெரியும்"னார். எமன் லாவை வெளில கொண்டு வந்துட்டு வாயுவைப் பாத்து, "ஹிஹி.. நாம ரெண்டு பேருமே தேவலோகம்... அல்ப விஷயம்.. பெரிசு பண்ணாதேங்கோ"னார். அப்புறம், "நாலு பேர்னேளே?"னு கேட்டார். அதுக்கு வாயு லாவைப் பாக்கறார். "ஏண்டீம்மா ஒனக்கு என்ன, படிச்சுப் படிச்சு சொல்லணுமா? ஆகட்டும், ஆகட்டும். அக்னியைக் கொண்டு வா"னு சொல்றார். லாவுக்கு ஒரே பயம். எமன் ஏதாவது சொல்லிடப் போறாரோனுட்டு. அவசர அவசரமா அக்னியை துப்பிடறா. பொசுக்குனு வெளில வந்தார் அக்னி. எமனைப் பாத்துட்டு அசடு வழிஞ்சார். ஆளாளுக்கு அசடு வழியறா. "போறும் நிறுத்துங்கோ எல்லாரும். நடந்தது நடந்து போச்சு. இனிமே லாவை அவ ஆத்துல விட்டுட்டு மறு காரியம் பாக்கணும் நீர் எமதர்மரே"னு மாண்டவியரைப் பாத்ததையும் பிராமிஸ் பண்ணதையும் சொல்றார் வாயு. சரினு எமன் தலையாட்டிண்டே லாவைப் பாத்ததும் அதிர்ந்து போறார். தனக்குச் சமமா அழகா முறுக்கி விட்டிருந்த லாவோட மீசையைக் காணோம்!

"எங்கடீ மீசை?"ங்கறார் எமன். லாவும் அதிர்ந்து போய், "இங்க தானே வச்சேன்?!"னுட்டு உதட்டுக்கு மேலே தடவிப் பாக்கறா. சுத்தமா வழவழனு இருக்கு. "பொம்னாட்டி மீசையில்லாம எப்படி வெளில போறது?"னுட்டு துடிக்கறா. எல்லாம் அக்னியோட கைங்கர்யம். பொசுக்குனு வந்தார் இல்லையா, பொசுக்கிண்டே வந்துட்டார். அவசரத்துலயும் பயத்துலயும் வெளில வந்தாரோன்னோ, லாவோட மீசையை வேரோட பஸ்பம் பண்ணிட்டார். விஷயமெல்லாம் வெளில வந்து மாண்டவியர் சபிச்சுடுவாரே, என்ன பண்றதுனு எல்லாரும் பதறிப் போறா. யோசிக்கறா. பிரம்மாட்ட போறா. எல்லாத்தையும் சொல்லி சமஸ்தாபராதம்னு கால்லே விழறா. பிரம்மா லாவைப் பாக்கறார். 'மீசை இல்லாம ஜோரா இருக்காளே இந்தக்குட்டி!'னு நெனக்கறார். குஞ்சல சப்தம் கேக்கறது. மீசையை முறுக்கிண்டே சரஸ்வதி அந்தப்பக்கம் வரதைப் பாத்துட்டு சட்டுனு நெனப்பை மாத்திக்கிறார். "சரி, அபயம் தந்தேன். இனிமே பொம்னாட்டிகளுக்கு மீசை கிடையாதுனு ரூல் போட்டுடறேன்"னு சொல்றார். அந்தக்ஷணமே ஸ்த்ரீகளுக்கு ஸ்மச்ரம் காணாமப் போயிடுத்து.

ரொம்ப தேங்க்ஸ்னுட்டு லாவை அழைச்சுண்டு கெளம்பறார் எமன். வாயு விடுவாரோ? "சித்தே இருங்கோ மார்சுவரி மேனேஜர்வாள். உங்களை நம்பாம இல்லை, எதுக்கும் கூட வரேன்"னுட்டு எமன் கூடவே வந்து லாவை அவா அம்மா அப்பாட்டே ஒப்படைச்சுட்டு, ஸ்த்ரீ மீசை ஒழிச்ச பிரம்ம ரூல் பத்தியும் சொல்றார். "கவனிச்சேன்"னு கண்ணடிச்சார் மாண்டவியர்.

இப்படியாகத்தானே ஸ்த்ரீகளுக்கு முகக்ஷவர செலவு கொறஞ்சதுனு விப்ரப்புராணத்துல சொல்லியிருக்கு. இந்தப் புராணக்கதையைக் கேட்டவாளுக்கு முகம் பொலிவா இருக்கும்னு பலன் சொல்லியிருக்கு.

பிரசங்கம் சமாப்தம். போய்ட்டு வாங்கோ.

    ந்தப் புராணக்கதையை முதலில் கலைஞர் கருணாநிதியின் உரைத்தொகுப்பான 'முத்துக்குளியல்' புத்தகத்தில் படித்தேன். புராணக்கதை பற்றிய மேலதிக விவரங்களை இணையத்தில் தேடினாலும் அதிகம் கிடைக்கவில்லை. அடுத்த வருடச் சென்னைப் பயணத்தில் தேடவேண்டிய புத்தக லிஸ்டில் விப்ரப் புராணத்தையும் சேர்த்திருக்கிறேன். கதையைக் கலைஞர் அவர் பாணியில் சொல்லியிருந்தார். நான் என் பாணியில் சொல்லியிருக்கிறேன். இயற்கையான உணர்ச்சிகளைச் செயற்கையான உணர்வுகள் கொண்டு அடைத்து வைக்கும் பொழுது, சலன பூகம்பங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்று நினைக்கிறேன். அந்தக் கண்ணோட்டத்தில் இது ஒரு சுவையான ஜாலக்கதை. கலைஞர் கோடு காட்டியிருக்கும் 'தெய்வங்களுக்கே ஒழுக்கமும் கற்பும் கிடையாது' என்கிற சித்தாந்தம் பக்கம் போக விரும்பவில்லை. காமத்தையும் கற்பையும் ஒரே தட்டில் வைத்துப் பார்த்திருக்கும் அவர் உரையை நான் ரசித்தேன் என்றாலும் ஏற்க முடியவில்லை. காமம் என்பது இயற்கையான உணர்ச்சி. கற்பு என்பது செயற்கையான உணர்வு. உணர்வு கூட இல்லை, குறுகிய நெறி என்பேன். ஏற்புடைய நெறியெனில், கற்பு காமத்தையும் கடந்தது என்று நினைக்கிறேன். உணர்வுக்கும் உணர்ச்சிக்கும் வேறுபாடு இருப்பதைப் புரிந்து கொண்டவர்களுக்கு என் கருத்து புரியும். முறையற்ற காமம், அளவுக்கதிகமான காமம் என்றெல்லாம் சொல்கிறார். முறையற்றக் காமம் புரிகிறது. அளவுக்கதிகமான காமம் என்னவென்றே புரியவில்லை. எது அளவுகோல்? நெறி என்றாலும், ஆண்கள் கற்பு என்பது சினிமாச் சிந்தனையுடன் நின்று விட்டது. காமம் என்ற சொல்லில் ஆண்களின் வேகத்தை அடக்கியிருப்பது போல் பெண்களின் வேகத்தைக் கற்பு என்ற சொல்லுக்குள் நாம் அடக்கியிருப்பதாக நினைக்கிறேன். காமம் இருந்தாலும் கற்பு போனாலும் குடி கெட்டது போல் பதைக்கிறோம். (இன்னொரு இடுகைக்கான கரு.)

இந்த இடுகைக்கு வேறு தலைப்பு வைத்திருந்தேன். சமீபப் பின்னூட்டமொன்றில் RVS எழுதியிருந்த சுஜாதாவின் 'தர்மு மாமா' கதை பற்றிப் படித்ததும், இந்த இடுகைக்கு அதர்மு மாமா என்று தலைப்பு வைக்கத் தோன்றியது. சீப் ஸ்ட்ன்ட். தீவிர சுஜாதா ரசிகர்கள் மன்னிக்க வேண்டும். (தொழிலை விட முடியுமா?)

2010/10/08

அப்பாவி

சிறுகதை


ஷாராணிக்கு, உன் புருசன் அற்புதராசன் என்கிற ராசு எழுதியது:

இங்க வந்த நாள்ளந்து உன்ன எப்பவும் நெனச்சுட்டிருக்கேன். என்னையே நம்பி இருந்த உன்னையும், பிள்ளங்களயும் தவிக்கவிட்டது பெரிய குத்தமுனு தெரிஞ்சு போச்சு. இந்த வேலூர் ஜெயில்ல சேர நான் செஞ்ச பாவத்தை விட, உங்களையெல்லாம் தவிக்கவிட்டு வந்தனே அதேன் பெரிய பாவம்.

உனக்கும் நம்ம பிள்ளங்களுக்கும் நம்ம எல்லாரையும் ரட்சிக்கும் மேரிமவனான அந்த மெய்யான அற்புதராசனுக்கும் தெரியும், நான் தப்பேதும் செய்யலனு. இருந்தாலும் சொல்றேன் கேட்டுக்க. நான் என்ன சொல்லியும் கேக்காம தண்டனை கொடுத்து என்னை செயிலுக்கு அனுப்பிட்டாங்க. என்னை அவங்க நம்பாட்டாப் போவுது, நீ நம்புனா போதும். நடந்ததையெல்லாம் சொல்லிடறேன்.

சனிக்கிழமை கடை அடைச்சிட்டிருந்தனா? சின்னானையும், ரப்பரையும் கூலி கொடுத்து வீட்டுக்கு அனுப்பிட்டு, ரிப்பேருக்கு வந்த வண்டிங்களை உள்ளாற தள்ளிட்டு, கைகால் க்ரீஸ் எண்ணை எல்லாம் கழுவி, வேளாங்கன்னி மாதா படத்துக்கு மெழுவேத்தி, உனக்காவ வாங்குன மல்லியப்பூ எடுத்துகிட்டு வெளிசட்டரை இழுத்துப் பூட்டுறப்ப அவிங்க ரெண்டு பேரையும் பாத்தேன். சீமைக் காரிலந்து எறங்கி வந்தானுங்க. "ராசண்ணே, காலைல வந்தாங்கனு சொன்னனே, இவங்கதேன்" அப்படினு ரப்பர் தான் என் முன்னால கூட்டியாந்தான்.

வணக்கம் சொல்லிட்டு, "ஒனக்குத் தெரிஞ்சவங்களா ரப்பரு?"னு கேட்டேன்.

"ஆமண்ணே. இவர் பேரு முத்து. மும்பைல இருக்காரு. இவரு செண்டு, என் மச்சான்"னு ரப்பர் தலையாட்டினான்.

"கடை அடைச்சாச்சுங்க. வண்டி டிரபிளா? எனக்கு கார் பத்தி அவ்வளவா தெரியாது. மோட்டார் பைக்கு எந்த மாடலானாலும் செய்வேன்"னு சொன்னேன்.

"ராசு, உன்னைப் பாக்க வந்தது வேற விஷயமா. நீ மோட்டார் பைக்கு ஓட்டறதுல சேம்பியன்னு சொன்னான் ரப்பர்"னாரு முத்து.

எனக்கு வெக்கமாயிடுச்சு. "அதெல்லாம் கல்யாணம் கட்டுறதுக்கு முன்னங்க. என்னோட புல்லட்டு வண்டிய எடுத்தேன்னா புல்லட்டு கணக்கா பறப்பேன். இப்ப குடும்பம் வந்திருச்சுங்க. நம்பி ஒருத்தி வந்த பிறவு பொறுப்பில்லாம ரேஸ் ஓட்டுறதுல்லனு இருக்கேனுங்க. சும்மா எப்பனா ஊர் சுத்துறதோட சரிங்க"னு சொன்னேன்.

"போன மாசம் ஒரு திருடனைப் பிடிக்க உதவி செஞ்சதா போட்டிருக்குதே? ரப்பர் தான் எடுத்தாந்தான்"னாரு செண்டு. பேப்பர் கட்டிங்கை காட்னாரு. வீட்டுல மாட்டி வச்சியே, போலீசுல மெடல் கொடுத்தாங்களே, அதே போட்டோ.

"ஆமாங்க, எதிர் பேங்குல கொள்ளையடிச்சிட்டு கார்ல தப்பிச்சு ஓடப் பாத்த கும்பலை, தப்பா நெனக்காதீங்க, அதும் சீமைக் கார்னு தோணுது, போலீஸ் ஜீப்பால பிடிக்க முடியலிங்க. இன்ஸ்பெக்டர் ஐயாவை பின்னால வச்சுகிட்டு, என் புல்லட்டுல துரத்திட்டுப் போய் அவங்களை காஞ்சிபுரத்துல புடிச்சோம்"னு சொன்னேன்.

"அதான் உன்னைப் பாக்க வந்தோம். நாளைக்கு நான் பேங்குல ரொக்கமா நிறைய பணம் எடுக்கணும். எனக்கு விரோதிங்க இருக்காங்க. அவங்க இந்த பணத்தைத் திருடி எடுத்துட்டுப் போக வருவாங்கனு எனக்கு தெரியும். என் உயிருக்கே ஆபத்து வந்தாலும் வரலாம்"னாரு முத்து.

"நான் என்னங்க செய்யட்டும்"னு கேட்டுகிட்டே ரப்பரை சந்தேகமா பாத்தேன்.

"சின்ன உதவி, ராசு"னாரு செண்டு. "நாங்க எதிர் பேங்கிலந்து பணத்தை எடுத்துகிட்டு வெளில வரப்ப, நீ கடையிலயே உக்காந்திரு போதும். உன் பைக்கோட காத்துட்டிரு. இவரு கிட்டருந்து பையை வாங்கி உன் வண்டி சைடுபெட்டில போடறேன். அதை எடுத்துகிட்டு நீ எவ்ளோ வேகமா முடியுமோ.. இந்த இடத்த விட்டுப்போயிரு. அவ்ளோதான்"னாரு.

எனக்குப் பதட்டமா போயிட்டுது. "ஐயையோ, பணத்தை எல்லாம் எடுத்துட்டுப் போக முடியாதுங்க, ஆபத்து"னு சொன்னேன்.

"பதறாதே ராசு"னாரு முத்து. "அந்த பைல வெறும் காயிதம் தான் இருக்கும். என் பணத்தை உன் கிட்டே கொடுக்க எனக்கு மட்டும் என்ன பைத்தியமா சொல்லு? என்னைய தேடி வரவங்களை வழி மாத்த ஒரு திட்டம். அவங்க உன்னையத் துரத்திக் கிட்டு ஓடுவாங்க. செண்டும் நானும் பின்பக்கமா ஓடி கார்ல போயிருவோம்".

நான் ஆவாதுனு சொன்னேன். "நீ சொம்மா செய்ய வேணாம் ராசு"னாரு செண்டு. "உன் உதவிக்கு நன்றியா இருபதாயிரம் ரூவா ரொக்கம். இப்பவே தரோம்"னாரு. சொல்லிட்டு கொத்து பணத்தை எடுத்துக் காட்னாரு. "பத்து நிமிச வேலை ராசு, இருபதாயிரம் ரூவா"னாரு.

என்ன பதில் சொல்லனு யோசிச்சப்ப, என் கையைப் பிடிச்சுக்கிட்டாரு முத்து. "இத பாரு ராசு, நான் பரம்பரை பணக்காரன். இப்ப நொடிச்சி போயிட்டிருக்கேன். என் பொண்ணு கல்யாணத்துக்காவ எல்லாத்தியும் வித்து இந்தப் பணத்தை எடுத்துகிட்டுப் போறேன். எனக்கு தொழில் எதிரிங்க இருக்காங்க. எதுனா தவறிடுச்சுனா என் வயசுப் பொண்ணு கல்யாணம் நின்றும்பா. என் உயிர் போனாலும் பரவாயில்லை, தாயில்லா பொண்ணு என் மகள் கல்யாணம் நின்னுற கூடாது. அதுக்கு பயந்துதான் இந்த உதவி கேக்குறேன். எனக்கு உயிர்ப்பிச்சை, என் மகளுக்குத் தாலிப்பிச்சைனு வச்சுக்க. மேலே பணம் வேணும்னாலும் தரேன்"னாரு. பணத்தைப் பாத்ததும் என் மனசு மாறிடுச்சு. உனக்கு பட்டுசேலை, பசங்களுக்கு கான்வென்டு, கடைக்கு வெள்ளையடிச்சு கண்ணாடி கவுன்டர்னு கணக்கு மேலே கணக்கா போடத் தொடங்கிடுச்சு. அதுவும் கல்யாண உதவினு வேறே சொல்றாங்க. படிச்ச பொண்ணு நீ, பத்தாம்பு மெகேனிக் எங்கூட ஓடியாந்து கலியாணம் கட்டிக்கிட்டது நினைவு வந்திடுச்சு. சரினு ஒத்துகிட்டேன்.

பிறவு நடந்தது உனக்குதான் தெரியுமே? நான் எடுத்துகிட்டுப் போனது வெறும் காயிதப்பைனு தெரிஞ்சு வாலாஜாபேட்ல கடாசிட்டு வந்தனா, போலீஸ் நான்தேன் திருடன், பணத்தை எங்கியோ வச்சிருக்கன்னு சொல்லி, என்னய பிடிச்சிகிட்டு திருட்டு குத்தம் சுமத்தி கொணந்து உள்ற தள்ளிட்டாங்க. பேங்குல பணம் எடுக்க போறதா முத்து சொன்னப்ப, அவங்க அகவுன்ட்லந்து எடுத்துட்டு வருவாங்கன்னு நினைச்சேன். எனக்கென்ன தெரியும் திருடிகிட்டு வருவாங்கனு? சத்தியமா சொல்றேன். இதான் நடந்துச்சு.

ரப்பர் ஓடிட்டதா கேள்விப்பட்டேன்.. அவன் திரும்பி வந்தா எடங்கொடுத்து சோறு போடு. பயத்துல ஓடியிருப்பான். மன்னிச்சுட்டதா சொல்லு. உனக்குப் புண்ணியமா இருக்கும். கர்த்தர் துணையும் ஆசியும் உனக்கு உண்டு.
இப்படிக்கு ராசு.

ருமைக் காதலன் அற்புதராசனுக்கு ஆசை மனைவி உஷாவின் கடிதம்.

நீ சிறையில் வாடுவது வேதனையாக இருக்கிறது. வேலூர் சிறையைப் பற்றி பயங்கரமாகப் பேசிக்கொள்கிறார்கள். நீ சிறைக்குப் போன எட்டு மாதங்களில் உனக்கு ஒரு கடிதமும் எழுதவில்லை என்று கலங்காதே. பிள்ளைகளையும் கடையையும் பார்ப்பதற்கே எனக்கு நேரம் போதவில்லை. உன்னைப் பிரிந்த வேதனையில் அடிக்கடி அழுது விடுகிறேன். அதனால் கடிதம் எழுதவில்லை. என் சோகம் உன்னை எவ்வளவு பாதிக்கும் என்று தெரியும்.

இருந்தாலும் என்னால் முடியவில்லை ராசு. அதனால் எழுதுகிறேன்.

எட்டு மாதமாகத் தலைமறைவாக இருந்த ரப்பர் திடீர் என்று போன வாரம் என்னிடம் வந்து, "எனக்கு ஒண்ணும் தெரியாதுமா. என் மச்சானை ராசண்ணன் கிட்டே கூட்டியாந்த பாவத்துக்கு பயந்து ஓடிட்டம்மா, என்னை மன்னிச்சு மறுபடி வேலைக்கு வைங்க, கூலி கூட தேவையில்லை" என்று ஒரு வாரம் போல் தினமும் கெஞ்சினான். முதலாளியாக ஒரு பெண் இருப்பதாலா தெரியவில்லை, வாடிக்கை அதிகமாகி விட்டது. சின்னான் மட்டும் போதவில்லை. ரப்பர் மேலிருந்த கோபத்தைக் குறைத்துக் கொண்டு அவனை வேலைக்கு வைத்திருக்கிறேன்.

சின்னான் முன்னேறி விட்டான். நானும் வேலை கற்றுக் கொண்டேன். கார்பரேடர் சுத்தம் செய்கிறேன். பிரேக் பேட் மாற்றத் தெரியும். இன்னும் நிறைய கற்றுக்கொண்டு, நீ திரும்பி வரும்பொழுது நான் உன்னுடன் கடையிலேயே தினம் வேலை செய்யலாம் என்று இருக்கிறேன். மதிய வேளையில் கடையடைத்து இந்த க்ரீஸ் எண்ணையை உன் மார்பில் தடவ வேண்டும் போலிருக்கிறது.

நிற்க, கடையில் வாடிக்கை மிக அதிகமாகி விட்டாலும் போதுமான வசதியில்லை. பேங்கில் கடன் தர மறுக்கிறார்கள். பிள்ளைகள் கான்வென்ட் பணம் கட்டியது போக கடைக்கு எதுவுமே செலவழிக்க முடியவில்லை. கையில் பணம் இருந்தால் கடையையும் கொஞ்சம் விரிவுபடுத்தி பக்கத்தில் இருக்கும் கடையைக் கூட ஏலத்தில் எடுக்கலாம். பிள்ளைகளுக்கு வருடப் படிப்புச் செலவைக் கட்டி விடலாம். என்ன செய்வதென்றே புரியவில்லை.

இப்படிப் பல சிக்கல்களில் என்னை மறந்து ஆழ்ந்திருப்பதால் உன்னை மறந்து விட்டேனென்று நினைத்து விடாதே. வருத்தப்படாதே. நிற்க, பெரிய வக்கீலைப் போன வாரம் சந்தித்துப் பேசினேன். ஹை கோர்ட்டுக்கு அப்பீல் செய்து உன்னை வெளிக்கொண்டு வரவோ தண்டனை காலத்தைக் குறைக்கவோ வழி செய்கிறேன் என்றார். செண்டு, முத்து ஆட்களைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்கிறார். அவர் உன்னைப் பார்க்க வரும்பொழுது விவரமாக உனக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்லிவிடு.

உன்னையே நினைந்து வாடும்
உயிருள்ளவரை உஷா.
ன்பு உஷா

என்ன மன்னிச்சுரு, என்னால ஒனக்கு எத்தினி தொல்லை!

வேலூர் செயிலைப் பத்திக் கவலைபடாதே. காமராசு, அண்ணா, கலைஞரு, இன்னும் எத்தனியோ பேரு.. பெரிய ஆளுங்கலாம் வந்திருக்காங்க. அந்த அய்யரு சாமியார் கூட ரெண்டு ரூம் தள்ளிதான் அடச்சிருந்தாங்களாம். இடமெல்லாம் சுத்தமா இருக்குது. மணியடிச்சா சோறு கிடைக்குது. மதியம் முழுக்க வேலை. செருப்பு தைக்கவும், மணிமாலை கோக்கவும் கத்துட்டிருக்கேன். உனக்காக ஒரு நீலமணி மாலை செஞ்சு எடுத்தாரேன். க்ரீஸ் தடவுறதா உசுப்பேத்திட்டியா, உன்னை நெனச்சு ஏங்குறன். உன்னையும் பசங்களையும் பாக்க முடியாத குறை. படிச்ச பொண்ணு நீ எங்கூட இப்படிச் சிக்கிட்டியேனு எனக்கு ரொம்ப வருத்தம் கண்ணு. இருந்தாலும் என் மேலே நீ வச்சிருக்குற அன்புக்கு நான் எப்படி நன்றி சொல்லுறது?

இந்த தொல்லை நான் வெளிய வந்ததும் தீந்துடும்; அதுவர பொறுத்துக்க செல்லம். எப்படியாவது நான் நம்மள பழைய நெலக்கு கொணாந்துறுவேன்.

ரப்பரை வேலைக்கு வச்சதுக்கு சந்தோசம். அவனைக் கவனிச்சுக்க, பாவம்.
அன்பான ராசு.

காதல் கணவன் அற்புதராசனுக்கு உஷாவின் உதடுகள்.

உடனே பதில் எழுத முடியவில்லை; தவறாக நினைக்காதே. செலவை எப்படியோ சமாளித்து வருகிறேன். கவலைப்படாதே. உன் அன்பே எனக்குப் போதும்.

ரப்பர் ஒழுங்காக வேலை செய்கிறான் என்றாலும் அவன் நடத்தை கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது. திடீரென்று காணாமல் போய் விடுகிறான். மூன்று வாரங்களுக்கு முன் இப்படித்தான் உன்னுடைய புல்லட் வண்டியை சுத்தம் செய்கிறேன் என்று எடுத்துக் கொண்டு போனவன் நான்கு நாட்கள் கழித்து திரும்பி வந்தான். கேட்டால் ஏதோ சாக்கு சொல்கிறான். அவனை நம்பலாமா? சரி விடு, அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்.

இடையில், செண்டும் முத்துவும் ஹோசூர் ஹோட்டலில் இறந்து போனதாக டிவியில் செய்தி வந்தது. பிணம் அடையாளம் கூடத் தெரியவில்லையாம். இவர்கள் தான் பேங்கு கொள்ளைக்காரர்கள் என்று சொல்கிறார்கள். செண்டும் முத்தும் இறந்துவிட்டதாலும், பேங்கு விடியோ கேமராவில் தெரிந்த முகமூடிகள் இரண்டு பேர் அவர்களாகவே இருக்கலாம் என்பதாலும், உன் மேல் இருந்த சந்தேகம் தீர்ந்து விட்டதென்றும், காணாமல் போன பணமோ குற்றவாளிகளோ மற்ற சாட்சியோ இல்லாத நிலையில் கேசை மூடி உன்னை விடுதலை செய்வார்கள் என்றார் வக்கீல். குற்றம் நடந்த இடத்தில் நீயில்லை, யாரும் உன்னைப் பார்க்கவும் இல்லை, வாலாஜாபேட் போய் குப்பை கொட்டியதற்காக உன்னைத் தண்டித்திருக்கிறார்கள் என்று வாதாடுவதாகச் சொல்லியிருக்கிறார். உன்னைப் பார்க்க வந்தாரா? விவரமெல்லாம் சொன்னாயா?

நீ விடுதலையாகி வரக்கூடும் என்பதே எனக்குப் பெரும் உற்சாகத்தைக் கொடுக்கிறது. அப்பாவிகளுக்கு அன்பும் ஆண்டவரும் தான் துணை. இரண்டுமே உனக்கு என்றைக்கும் உண்டு.
உனக்காக என் காதல்.

ண்ணே உஷா

வக்கீலய்யா நேத்து வந்தாரு. வாய்தா போட்டு இழுத்தாலும் ஆறு மாசத்துல விடுதலையாயிரும்னாரு. எல்லாம் அந்த கர்த்தர் கருணை. மேரிமாதா துணையாலயும் உன்னோட அன்பாலயும் நாம வசதியாக இருக்கப் போற நாள் தொலைவில இல்லை.

மறந்துட்டன் பாரு. ரப்பரை தொடர்ந்து வேலைக்கு வச்சதுக்கு மறுபடி நன்றி. விவரம் தெரிஞ்சவன். ரொம்ப உபயோகமா இருப்பான். அவனை துரத்திடாதே.
உன் ராசு.

2010/10/07

மெல்லிசை நினைவுகள்

போக்கற்ற சிந்தனை



    ஜெயசந்திரனுக்கு ஒரு குட்டி ரசிகர் கூட்டம் கூடியிருக்கிறதே? இத்தனை பாடல்களை வரிசைப் படுத்தியிருக்கிறார்களே, இதில் எதைக் கேட்டிருக்கிறோம் என்று பார்த்தபோது, எனக்குத் தெரிந்த பாடல்கள் சில நினைவுக்கு வந்தன.

பொதுவாக எனக்கு டிஎம்எஸ் போல் கணீர் குரல் தான் பிடிக்கும். கணீர் என்று தெளிவாகப் பாடுவதோடு மட்டுமல்ல, டிஎம்எஸ் குரலை அருமையாக மாடுலேட் (பால்காரன் சொல்லும் சாக்கென்று நினைக்க வேண்டாம்) செய்வார். யார் தருவார் இந்த அரியாசனமும் வரும்; யாரந்த நிலவும் வரும் அவருக்கு. கணீரும் மென்மையும் சுருதி ஏற்ற இறக்கமும் சில பாடகர்களுக்கு மூச்சு விடுவது போல் தன்னிச்சையாக வரும். ரகுதாத்தா வீட்டுக்கு ஒரு நொடி தாவுவோம். அங்கே கிஷோரை விட ரபி எனக்குப் பிடிக்கும். கிஷோர் கணீர். கணீரோடு சரி. மரக்குரல். ஒன்று, ஒரே சுருதி. இல்லையென்றால் யோடலிங். ரபி அப்படியில்லை. மென்மையும் கணீரும் கலந்த குரல். பிரதமன் பாயசத்தில் பொறித்த அப்பளத்தை உடைத்துப் போட்டுக் கையால் அளைந்து அள்ளிக் குடித்த ஐம்புலன் நிறைவு, எனக்கு டிஎம்எஸ் ரபி குரல்களில் கிடைக்கும்.

எஸ்பிபி விலகலாக, மென்மையான குரல் கொண்ட பிபிஸ்ரீ, யேசுதாஸ் போன்றவர்களின் குரலைக் கேட்கும் பொழுதெல்லாம், ரசிப்பேன் என்றாலும், எனக்குத் தூக்கம் வரும். தூங்குமூஞ்சி பிபிஸ்ரீ என்று சொன்னதற்காக ஒரு காதலை இழந்திருக்கிறேன்! என்னவோ தெரியவில்லை, ஜெயசந்திரன் குரலில் கொஞ்சம் உற்சாகமும் வேகமும் இருப்பதாகப் படுகிறது. கணீர், மென்மை இரண்டும் கலந்திருந்த அவரது குரலை தமிழ்த்திரை அதிகம் பயன்படுத்தவில்லை. ஜெயசந்திரன் எஸ்பிபி போலப் பாட முயற்சி செய்தாரோ என்று சில சமயம் எனக்கும் தோன்றும். இந்தப் பாடல்களைக் கேட்டுப் பாருங்களேன்.
ஜெயசந்திரன் குரலில்.. | 2010/10/07


பிரதமன் ஜொள்: 'அங்கே கொஞ்சம் எடமிருக்கு' என்ற வரிகள் அடிக்கடி வரும் 'ஐயாவுக்கு மனசிருக்கு' பாடலில் ஸ்ரீப்ரியா சில இடங்களில் மட்டும் சஜஸ்டிவாக ஆடியிருப்பார். ரசாபாசம். (இல்லைனா அஞ்சு நிமிசம் கூட உட்கார முடியாத படத்தை அஞ்சு தடவக்கு மேலே பாக்க முடியுமா சொல்லுங்க?) இன்றைய சினிமா நடனங்களில் சஜஸ்டிவ் என்று எதுவும் இல்லை; குழாயடி பாணியில் தான் ஆடுகிறார்கள். அன்றைக்கு ஸ்ரீப்ரியா மூவ் கிக் என்று பட்டது.

மௌனமல்ல மயக்கம்: இசையமைத்தது யாரென்று தெரியவில்லை.

2010/10/01

கடவுள் வைரஸ்

சிறுகதை


        புது உலகத்திற்கு முன்பு ஆண்களும் பெண்களும் இணைந்து வாழ்ந்ததைப் பற்றிப் படித்திருக்கிறேன். தாய், தந்தை, கணவன், மனைவி என்று போலி உறவுமுறைகளுடன் வாழ்ந்ததாகப் காலச்செய்திப் படங்களில் பார்த்திருக்கிறேன். தொல்கலை நூலகத்தின் முப்பதாவது அடித்தளத்தில் ஒன்றிரண்டு முறை பார்த்த படங்களில், பெண்கள் கருப்பெட்டிகளை வயிற்றில் சுமந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறேன். 'பெண்களும் ஆண்களும் எப்படி இணைந்து வாழ்ந்தார்கள், எத்தனை பிற்போக்கான வாழ்க்கை நெறி' என்று மற்ற ஆண்களுடன் அடிக்கடி வியந்திருக்கிறேன். நான் வெளிவந்த இருபத்துமூன்று ஆண்டுகளில், பெண்களை நேரில் பார்த்ததில்லை. உலகப் பொதுவிழா விருந்தின் போது, தடுப்புச்சுவருக்கப்பால் இருக்கும் பெண்கள் கூட்டத்தை ஒளிப்படத்தில் காண்பதோடு சரி. நேரில் சந்திக்கும் வாய்ப்பே கிடையாது.

இருபது நாட்களுக்கு முந்தைய நிகழ்ச்சி, எல்லாவற்றையும் அடியோடு மாற்றிவிட்டது.

தொழிலறையிலிருந்து வெளிவந்தவன், வழக்கம் போல் பொழுதுபோக்குத் திரையைச் சுட்டினேன். கோள் செய்திகள், விளையாட்டு என்று வரிசையாக ஒளியலை மாறிக் கொண்டே வர, ஒன்றும் பிடிக்காமல் நிறுத்தச் சொன்னேன். அணைந்த திரை விழித்துக் கொண்டது. நிறுத்து என்றேன். நின்று அணைந்த திரை, மறுபடி நான் சொல்லாமல் சுட்டாமல், தானாகவே விழித்தது. ஏதோ கோளாறு என்று எழுந்து சுவற்றிலிருந்த விசையை அழுத்தி நிறுத்தியும், திரை தானாகவே விழித்துக் கொண்டது. பழுது மையத்திற்குத் தெரிவிக்க நினைத்தேன்.

"உட்கார்" என்றது, திரையிலிருந்து வந்த குரல். அதிர்ந்து போய் அமர்ந்தேன். திரையில் ஒரு நிழலுருவம்.

"யார் நீ?" என்றேன்.

"என்னைக் கடவுள் என்பார்கள்"

"இது புது உலகம். போ, போ, பக்கத்துக் கோள் எங்காவது போய் நிதி கேட்டுப் பார், கடவுள் தேவையில்லை" என்று ஒளியலை மாற்றச் சொன்னேன். நிதி திரட்டுவோர் தொல்லை தாளவில்லை.

அடுத்த ஒளியலையிலும் தோன்றிய அதே உருவம், "தேவை இருக்கிறது. தேவையை வலியுறுத்தும் அதிகாரமும் எனக்கு இருக்கிறது" என்றது.

"நீ யார்? மைய அதிகாரியா? உன் அடையாளம் என்ன, சொல்?" என்றேன் கோபமாக.

"இந்தக் கோள், உலகம், நீ... எல்லாமே என் அடையாளம் தான். நீ எனக்காக ஒரு மகத்தான காரியம் செய்யப் போகிறாய்"

"நானா? என்ன செய்ய வேண்டும்?" சற்றுப் பேச்சு கொடுத்தேன். திசை திருப்ப வேண்டும்.

"இரண்டு நாளில் உலகப் பொதுவிழா வருகிறது அல்லவா? விருந்து முடிந்ததும் நீ அங்கேயே பின்தங்க வேண்டும். அனைவரும் வெளியேறியதும், அறை மூலையில் இருக்கும் தடுப்புச்சுவர்க் கதவை நீ திறக்க வேண்டும்"

"வேண்டாத வம்பு. கதவைத் திறந்து சுவருக்கப்பால் போக எனக்கு அனுமதியில்லை. பூட்டிய கதவை என்னால் திறக்க முடியாது. மேலும், விருந்து முடிந்ததும் நான் தங்கிவிட்டால் தானாகவே செய்தி போய் என்னை வெளியேற்றி விடுவார்கள்"

"பூட்டைப் பற்றிக் கவலைப்படாதே. உன்னைப் பற்றிய செய்தி எதுவும் போகாது"

"எப்படிச் சொல்கிறாய்?"

"சொன்னேனே, நான் கடவுளென்று? எனக்கு சக்தியிருக்கிறது. நீ கதவைத் திறந்தால் போதும், சுவருக்கப்பால் போக வேண்டாம்"

"உனக்கு சக்தியிருக்கிறதென்றால், நீயே கதவையும் திறக்க வேண்டியது தானே?"

"நீ தான் திறக்க வேண்டும். உன்னை ஆட்டுவித்தால் தானே நான் ஆள முடியும்?"

"புரியவில்லையே?"

"புரிந்து கொள்வாய். கதவைத் திறந்தால் போதும். அதுவே மகத்தானது"

"அதிலென்ன மகத்துவம்?"

"திறந்த கதவுகள், மறந்த உண்மைகளுக்கு விடுதலை தரும். அதில் மகத்துவம் வரும்"

"வேறே யாரையாவது கேட்பது தானே?"

"நீ தான் தகுந்தவன்"

"நான் முடியாதென்றால்?"

    மையத்திற்குச் செய்தி அனுப்பியதும் உடனே வரச் சொன்னார்கள். நான் கடவுளைச் சந்தித்த விவரமெல்லாம் கேட்டுக் கொண்டு, பரிசோதனைக்குப் பின், என்னை அடித்தளத்தின் நாற்பதாவது நிலையில் மையத்தலைவரைச் சந்திக்கச் சொன்னார்கள். என்னைப் பெயர் சொல்லியழைத்துப் புன்னகை செய்தார் மையத்தலைவர். "கடவுள் கிடையாது என்று உனக்குத் தெரியுமில்லையா?" என்றார் கனிவுடன். "கவலைப்படாதே. கடவுள் சொன்னதை மறைக்காமல், ஒன்று விடாமல் மீண்டும் என்னிடம் சொல்"

"உலகப் பொதுவிழா விருந்து முடிந்ததும் பின்தங்கி, எல்லோரும் வெளியேறிய பின், மூலைக்கதவைத் திறக்க வேண்டும். அவ்வளவு தான்"

"ஏன்?"

"ஏனென்று சொல்லவில்லை. ஆனால் கதவைத் திறப்பது மகத்தான காரியம் என்று..."

"நீ இதையெல்லாம் மறப்பது தான் மகத்தான காரியம்"

"முடியாதென்றால் தொல்லை கொடுப்பேன் என்றதே உருவம்?"

"ஒரு தொல்லையும் கிடையாது. கடவுளுக்கு சக்தியில்லை என்பது எப்பொழுதோ நிரூபிக்கப்பட்டு விட்டது"

கேட்பதா வேண்டாமா என்று தயங்கினேன். "இதற்கு முன், என்னைப் போல் கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு யாராவது வந்திருக்கிறார்களா?" என்றேன் மெதுவாக.

என்னை நேராகப் பார்த்த மையத்தலைவர், எதிரிலிருந்த திரையைத் தொட்டார். திரையில் தோன்றிய வரிகளைப் படித்துவிட்டு "வந்திருக்கிறார்கள். ஆயிரம் வருடங்களில் நூறு பேர்" என்றவர், எதையோ கவனித்துவிட்டு "உனக்கும் அவர்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது" என்றார். என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு "ஒரு வேறுபாடும் இருக்கலாம்" என்றார்.

"என்ன ஒற்றுமை?"

"நூறு பேருக்கும் உன்னுடைய பெயர் தான்"

"எனக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்?"

"நீ இன்னும் பேசிக்கொண்டு இருக்கிறாய். அவர்கள் எல்லாரும் உடனடியாக உயிர்பிரி நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள்"

கண்கள் இருண்டு, மூச்சு முட்டி, நான் மீண்டுவரச் சில நொடிகளாயின. "என்னையும் உயிர்பிரி நிலையத்திற்கு அனுப்புவீர்களா?" என்றேன்.

"கடவுளைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?" என்றார்.

"ஒன்றும் தெரியாது. கடவுளைப் பற்றி பழங்காலச் சுவடுகளிலும் படங்களிலும் பார்த்திருக்கிறேன். ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன் கடவுளுக்கெதிராக நடந்த எழுச்சியில் மக்கள் கடவுளை மறந்துவிட முடிவு செய்தனர் என்று படித்திருக்கிறேன். திரையில் தோன்றிய உருவம்.." என்று சொல்லிக் கொண்டிருந்த என்னை நிறுத்தினார்.

"நிச்சயமாக வைரஸ். புது உலக முறைகளுக்கும் விதிகளுக்கும் இடையில் எங்கோ முடங்கிக்கொண்டு சில நூறு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே வெளிவந்து தொந்தரவு தரும் கிருமி. ஒவ்வொரு முறையும் உன் பெயர் கொண்ட நபரையே அது தாக்குவது தான் வியப்பு. உன்னை வைத்தே அந்தக் கிருமியைக் கண்டுபிடிக்கலாமோ என்று எனக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. என்றாலும், இதையெல்லாம் மறந்துவிடு. அதுதான் உனக்கும் நல்லது"

"கதவுக்கப்பால் என்ன இருக்கிறது?" என்று கேட்டேன், நிதானமாக.

சற்று யோசித்து விட்டு, "அனைவருக்கும் தெரிந்தது தானே?" என்றார் மையத்தலைவர்.

"எனக்குத் தெரியாது, சொல்லுங்களேன்?"

"பெண்கள்! பூட்டிய கதவுக்கப்பால் பெண்கள் இருக்கிறார்கள். ஆண்களும் பெண்களும் இணைந்து வாழ முடியவில்லை என்பதால் புது உலகத் தொடக்கத்திற்கு முன்பே பெண்களை நம் வாழ்விலிருந்து அகற்றிப் பூட்டி விட்டோம் அல்லவா? ஒருவருக்கொருவர் தேவையில்லை என்பது நிரூபிக்கத் தேவையில்லாமல் தெளிவாகி விட்டதே?" என்றார். நிதானித்து, "இந்தக் கேள்விகள் எல்லாம் உன்னை ஆபத்தில் கொண்டு விடும். கடவுள் வைரஸ் உன்னைப் பாதித்திருக்கிறதோ என்று தோன்றுகிறது. உன் மூளையிலிருந்து வரும் எண்ண அலைகளை பரிசோதனை செய்து பார்த்து விடுவோமா?"

'வைரஸ் என்றால் என் மனதிலிருந்ததை அதனால் எப்படிப் படிக்க முடிந்தது?' என்று கேட்க நினைத்தேன். பயமாக இருந்தது. ஏதாவது கேட்டால் பரிசோதனை என்று தொடங்கி உயிர்பிரி வரை போய்விடப் போகிறதே என்று அமைதியாக எழுந்தேன். "வேண்டாம், நன்றி. நான் வருகிறேன்" என்றேன்.

"பயப்படாதே. நீ இங்கே வந்ததை நான் மறந்து விட்டேன். இங்கு வந்ததை நீயும் மறந்துவிடு" என்றார்.

வெளியேறினேன். வீட்டுக்குள் நுழைகையில் பொறி தட்டியது. நான் பயந்தேன் என்பது மையத்தலைவருக்கு எப்படித் தெரிந்தது?

        லகப் பொதுவிழாவின் போது எல்லாவற்றையும் மறந்துவிட்டேன். மற்ற ஆண்களுடன் விளையாட்டிலும் கேளிக்கையிலும் பொழுதைப் போக்கிவிட்டு விருந்துக்குச் சென்றேன். விருந்து முடியும் நேரம் அருகில் இருந்தவனுடன் பேசிக்கொண்டிருக்கையில், திடீரென்று "அதோ எதிரில் நிற்கிறாரே, அவர் தான் புது மையத்தலைவர். எனக்குத் தெரிந்தவர்" என்றான்.

"பழைய தலைவர் என்ன ஆனார்?" என்றேன்.

"மையத்திற்கு எதிராக நடந்து கொண்டாரென்று சொல்கிறார்கள். நாளைக்குத் தீர்ப்பாம். அவரை உயிர்பிரி நிலையத்திற்கு எடுத்துச் செல்லப் போகிறார்களாம். இரண்டு நாள் முன்பு அவரைச் சந்தித்த நபர் ஒருவரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று செய்தி. கடைசியாகச் சந்தித்த நபர் பற்றிய விவரங்களெல்லாம் முறைப்படி அழிக்கப்பட்டனவாம். என்ன விவரம் என்று எனக்குத் தெரியாது, ஆனால் அவரை உயிர் பிரிக்கப் போகிறார்களென்றால், தீவிரமாகத்தான் இருக்க வேண்டும்" என்று வரிசையாக விவரங்களைக் கொட்டினான்.

நான் திடுக்கிட்டேன். அவன் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான். "கடைசி நபர் பற்றிய விவரம் தெரிந்தால் மையத்திற்குச் செய்தியனுப்ப வேண்டுமென்று திரையில் செய்தி வந்ததே, தெரியாதா?? சரியான துப்பு கொடுத்தால் ஏழு புதுப்பணம் தருவார்களாம்."

மையத்தலைவர் கடைசியாகச் சந்தித்த நபர் யார்? நான் தானா? என்னைப் பற்றிச் சொல்லியிருந்தால்? இருக்காது. இத்தனை நேரம் உயிர்பிரி நிலையத்திலிருந்து தேடிக் கொண்டு வந்திருப்பார்களே? ஏன் என்னைப் பற்றிச் சொல்லவில்லை? இங்கு வந்ததை மறந்துவிடு என்றாரே? நான் அங்கே போனதை மறைத்து விட்டாரா? ஏன்? எனக்குள் கேள்விகள் வெடிக்க, எழுந்து அகன்றேன்.

"எங்கே போகிறாய்?" என்றான்.

"இதோ வந்து விடுகிறேன்" என்று அவனிடமிருந்து விடுபட்டு, மெள்ள தடுப்புச் சுவரை நோக்கி நடந்தேன்.

விருந்து முடிந்து, கூட்டம் கலையத் தொடங்கியிருந்தது. நான் இங்குமங்கும் நடந்து கதவருகே வந்துவிட்டேன். கதவை மெதுவாகத் தொட்டேன். கதவை அழுத்திப் பார்த்தேன். அசையவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தேன். அனேகமாக எல்லாருமே வெளியேறி விட்டார்கள். இதான் கதவா? வேறு ஏதாவது இருக்கிறதா? அதிக ஓசை வராதபடி, கதவைத் தட்டினேன். பயனில்லை. அழுத்தித் திறந்து பார்த்து விடுவோமா? எனக்கு ஆர்வம் அதிகமாகிவிட்டது. சுற்றிலும் பார்த்தேன். யாருமில்லை. என் மனம் முழுவதையும் மூடிய கதவு ஆக்கிரமித்துக் கொள்ள, திறந்தே விடுவது என்று அழுத்தினேன். திறந்தது.

திறந்த கதவில் அழைப்பிருந்தது போல் பட்டது. 'வேண்டாம், போகாதே. கதவுக்கப்பால் போக வேண்டாம் என்று கடவுள் சொல்லவில்லையா? திரும்பி விடு' என்றது என்னுள் ஒரு குரல். 'கதவையோ திறந்தாகி விட்டது. போய்ப் பார்' என்றது இன்னொரு குரல். புதுமையான அனுபவம். எங்கிருந்து வருகின்றன இந்தக் குரல்கள்?

கதவுக்கு அப்பால் தலையை நுழைத்துப் பார்த்தேன். யாருமில்லை. அடியெடுத்து வைத்தேன். வெட்டவெளி போலிருந்தது. இது தானா மகத்துவம்? போய்விடலாமென்று நினைத்துத் திரும்பிய போது அவளைப் பார்த்தேன். திறந்த கதவுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தாள். முதன் முதலாக ஒரு பெண்ணை நேரில் பார்த்தேன். என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தேன்.

அவள் ஓசையின்றிச் சிரித்தாள். "என்னை இங்கே வரச் சொன்னதும் கடவுள் தான்" என்றாள்.

"நான் ஆடம்" என்றேன்.

"என் பெயர் அதிதி" என்றாள். என் அருகில் வந்தாள். "ஆடம், உன்னைத் தொட்டுப் பார்க்கலாமா?" என்றாள்.

பழங்காலத் திரைப் படங்களில் ஆடை களைந்தப் பெண்களைப் பார்த்தது நினைவுக்கு வந்தது. அவள் ஆடையில்லாமல் எப்படி இருப்பாள் என்று தோன்றியது.

"என்ன சிந்தனை?" என்றாள்.

சொன்னேன்.

"நானும் அந்தப் படங்களைப் பார்த்திருக்கிறேன். நீ நிர்வாண நிலையில் எப்படி இருப்பாய் என்று நானும் யோசித்துக் கொண்டிருந்தேன்" என்றாள். என்னைத் தொட்டாள்.

"மையத்திற்கு தெரிந்து விட்டால் ஆபத்து" என்றேன்.

"மையத்திற்கு தெரியாது, பயப்படாதே" என்றாள். என் ஆடையைக் களைந்து விட்டாள்.

"அதையும் கடவுள் சொன்னாரா?"

அவள் பதில் சொல்லவில்லை. தன் ஆடையையும் முழுவதுமாகக் களைந்து விட்டாள். நான் அதுவரை நேரில் பார்த்திராத உடலுறுப்புகளைப் பார்த்துப் பிரமித்தேன். "தொடவா?" என்றேன். தொட்டபோது என்னுள் ஒரு இழப்பை உணர்ந்தேன். 'வேண்டாம் ஆடம், போய் விடு' என்றது குரல்.

அதற்குப் பிறகு பலமுறை அவளைச் சந்தித்தேன். கதவருகே வந்து நின்றதும் அவள் சொல்லிவைத்தாற்போல் கதவைத் திறப்பாள். மையத்துக்கு விவரம் தெரியாதது ஏனென்று புரியவில்லை. அச்சமாக இருந்தாலும், அவளைப் பற்றி நினைத்ததுமே அச்சம் மறைந்து அவளைத் தொட்டுச் சேரும் ஆர்வம் வந்து விடும். மையத்தைப் பற்றி அவளும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

    ன்றிரவும் அவளைச் சந்திப்பதாகத் திட்டம். கடவுளிடம் பேசியதாகவும் என்னிடம் அவசரமாக ஏதோ சொல்ல வேண்டுமென்றும் முந்தைய சந்திப்பின் போது சொல்லியிருந்தாள். நான் அவளுடைய உடல் சரிவுகளில் கவனமாக இருந்ததால் அவள் பேச்சைப் பொருட்படுத்தவில்லை. அவளை மறுபடி சந்திக்கத் துடித்தேன். இது ஒரு தொல்லையாகி விட்டது. அவளைச் சந்தித்த போது பிரிய முடியவில்லை. பிரிந்த போது சந்திக்கத் துடித்தேன். எப்பொழுதும் அவள் சிந்தனையாகவே இருந்தது. இது என்ன உணர்ச்சி? இது என்ன வேதனை? இதை யாரிடமும் சொல்ல முடியவில்லை. நான் ஏதோ தவறு செய்கிறேனேன்று புரிந்தது. இருந்தாலும் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. எல்லாம் கடவுள் கொடுத்த தொல்லை என்று தோன்றியது. அவளை மறக்க எண்ணித் திரையைச் சுட்டினேன். செய்தி, விளையாட்டு என்று ஒளியலை மாற, திடீரென்று திரையில் நான் பார்த்த மையத்தலைவர், "ஆடம்" என்றார். அவர் குரலில் அவசரம் தொனித்தது.

"உன்னை உயிர் பிரித்து விட்டார்கள் என்று சொன்னார்களே?" என்றேன்.

"என்னை உயிர் பிரிக்க முடியாது. நான் கடவுள். நான் உன்னிடம் அவசரமாகப் பேச வேண்டும்"

"நீ பழைய மையத்தலைவர். கடவுள் இல்லை" என்றேன்.

திரையில் மையத்தலைவர் முகம் மறைந்து, நான் முதலில் பார்த்த நிழலுருவம் தோன்றியது. "ஆடம், உனக்கு என்னை எப்படிப் பார்க்க விருப்பமோ அப்படியே பார். ஆனால் நான் சொல்லப் போவதைக் கவனமாகக் கேள்" என்றார்.

எனக்குப் பெருங்கோபம் வந்தது. "உன் பேச்சைக் கேட்டதால் வந்த தொல்லை போதாதா?. எப்பொழுதும் அவள் நினைவாகவே இருக்கிறது. என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அவளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று கவலை. எங்களுக்கு என்ன நேரும் என்ற கவலை. கவலையே இல்லாமலிருந்த நாங்கள், இப்போது ஒருவரைப் பற்றி ஒருவர் நினைத்துக் கொண்டு கலவரப்பட்டு... நில், நீ சொன்ன மகத்துவம் இது தானா?"

பொறுமையாகப் பார்த்துவிட்டு "நான் கதவைத் திறந்தால் போதும் என்றுதான் சொன்னேன். போனது உன்னுடைய செயல்" என்றார்.

"திறந்த கதவில் ஒரு அழைப்பு இருந்தது. என்னையறியாமலேயே அப்பால் போக வேண்டும் என்று தோன்றியது" என்றேன்.

உருவம் சிரித்தது. "அது தான் மகத்துவம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இது நிகழ வேண்டுமென்று காத்துக் கொண்டிருந்தேன்"

"இப்பொழுது என்ன செய்வது? எதற்காக மறுபடி தோன்றினாய்?"

"உனக்கும் அதிதிக்கும் ஆபத்து. ஓடி விடுங்கள், உடனே, உடனே."

எனக்கு நடுக்கமாக இருந்தது. "ஏன்? என்ன ஆபத்து?"

"எல்லாம் சரியாகி விடும். இன்றிரவே தப்பித்து எங்கேயாவது ஓடிவிடுங்கள்."

"ஓடாவிட்டால்?"

"உங்களை உயிர்பிரி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறார்கள். உங்களிருவரையும் விட, அதிதிக்குப் பிறக்கப் போகும் உங்கள் குழந்தைக்குப் பேராபத்து. பல்லாயிரம் வருடங்களுக்குப் பின் இயற்கையாகப் பிறக்கப் போகும் முதல் மனிதக்குழந்தை. புதுச் சமுதாயம். நான் தேவையென்று நம்பப் போகும் சமுதாயம். நீங்கள் தப்பி ஓடாவிட்டால் எல்லாம் அழிந்து விடும். போ, உடனே போ." என்றது.

குழந்தையா? கடவுளை நம்பும் புது சமுதாயமா? "நீ பித்தலாட்டக்காரன். உன்னை நம்ப ஒரு சமுதாயம் வேண்டுமென்பதற்காக எங்கள் நிம்மதியைக் குலைப்பதா? ஏன் எங்களைப் பகடையாக்கி விளையாடுகிறாய்?" என்று கோபமாக ஏசினேன். உருவம் உண்மையிலேயே கடவுள் தானா? அது ஏதோ சொல்லிக் கொண்டிருக்க, அங்கிருக்கப் பிடிக்காமல் திரையை நிறுத்தாமலே நகர்ந்தேன். ஒதுக்க முடிந்தது வியப்பாக இருந்தது. இதே கடவுளை முதல்முறை சந்தித்த போது என்னால் ஒதுக்க முடியவில்லை என்பது நினைவுக்கு வந்தது. கடவுளை நம்பத் தொடங்கி விட்டேனா? அதனால் தான் ஒதுக்க முடிகிறதா?

மையத்தில் சரணடைந்து விடுவோமா? வெளிவந்த இருபத்து மூன்று வருடங்களுக்குள் உயிர்பிரி என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 'கடைசி நபர் இவர் தான்' என்று அதிதியைப் பற்றிப் அனாமதேயப் புகார் கொடுத்தால் அவளை உயிர் பிரித்து விடுவார்கள். மையத்தலைவரின் உயிர்பிரி முடிந்ததும் எல்லாம் அடங்கி விடும். இதைப் பற்றித் தெரிந்தவர்கள் வேறு யாரும் இல்லை. பழைய நிலைக்கு வந்து விடலாம். எண்ணங்கள் விகாரமாக ஒன்றை ஒன்று துரத்தின. அதிதியைக் காட்டிக் கொடுத்து நான் தப்புவதா? இல்லை நான் சரணடைவதா? நான் சரணடைந்தாலும் அவள் சிக்க மாட்டாள் என்பது என்ன நிச்சயம்?

எனக்கு உடலெங்கும் வலித்தது. என்னால் தானே அவளுக்கு ஆபத்து? அவளும் என்னைப் போல் ஏமாற்றப் பட்டவள் தானே? கடவுள் சொன்னது போல் அதிதியுடன் எங்காவது தப்பித்து ஓடிவிடலாமா? தப்பி ஓடினாலும் எங்கே போவது? எப்படி வாழ்வது? புதுச் சமுதாயமாமே? இதற்கு நானா கிடைத்தேன்? இன்னும் பத்தோ நூறோ ஆண்டுகள் பொறுத்து இன்னொரு ஆடம் கிடைத்தால் பிடித்துக் கொள்ளட்டும். ஒதுக்க நினைத்தாலும், அதிதி நினைவு வந்ததும் வேதனையாக இருந்தது. எல்லாம் சரியாகி விடுமென்றாரே, சரியாகி விடுமா? எதற்காகக் கதவைத் திறந்தேன்? எதற்காக உள்ளே சென்றேன்? என் மேல் ஆத்திரமும் கோபமும் வந்தது. புது உலகின் ஆதார நம்பிக்கைகளை அழித்து விட்டதாகத் தோன்றியது. குழம்பினேன். கடவுள் தேவையா? அதிதி தேவையா? சிக்கலற்ற வாழ்க்கை தேவையா? வெகு நேரம் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தேன்.

மையத்திற்குச் செய்தியனுப்பினேன். "மையத்தலைவர் கடைசியாகச் சந்தித்த நபர் யாரென்று எனக்குத் தெரியும்". அன்றிரவு நான் அதிதியைச் சந்திக்கப் போகவில்லை. எனக்காகக் காத்துக் கொண்டிருப்பாள் என்ற நினைவு வாட்டியது. தூங்கத் தொடங்கினேன்.