2010/10/22

புகை



        பேயோட்டம் பார்த்தே தீருவது என்று நான், சுரேஷ், வயலின், தேசி நால்வரும் ஓலக்காரிகளுக்குப் பின்னால் உட்கார்ந்தோம். பத்தாம் வகுப்புக் கோடை விடுமுறையின் அந்த விடலைச்செயல், எங்களை வாழ்நாள் முழுதும் துரத்தும் என்று அறியவில்லை.

ஓலக்காரிகளுக்கு அப்பால் சிந்தாளம்மன் சன்னதிக்கெதிரே குழி வெட்டியிருந்தது. சுற்றி மாக்கோலம், சில சட்டிப்பானைகள், வேப்பிலைக் கொத்துகள். நள்ளிரவில் கோயில் கதவு திறந்து வந்த இரண்டு பூசாரிகள், குழிக்கருகில் நின்றனர். அவர்கள் பின்னே ஒரு ஆட்டை இழுத்துக் கொண்டு வந்தவனைப் பார்த்து, "பால்காரத் தாமுடா!" என்று வியந்தான் தேசி. ஒரு சட்டியிலியிருந்து மஞ்சள் பொடியை எடுத்து, குழியின் குறுக்கே கட்டியிருந்தக் கயிற்றுப்பந்தல் மேல் பூசாரிகள் அள்ளி வீசினர். இன்னொரு சட்டியிலிருந்து மண்ணெண்ணையைக் குழியில் தெளிக்க, குப்பென்று நாலடிக்கு எழுந்தடங்கியது நெருப்பு. "வந்துட்டா, சிந்தாளம்மா வந்துட்டா" என்று ஒரு பூசாரி, வேறொரு சட்டியிலிருந்த குங்குமத்தை நாலுபுறமும் வீசினான். கூட்டம் "ஆத்தா, ஆத்தா" என்றது. இரண்டாவது பூசாரி உள்ளிருந்து ஒரு அகண்ட இரும்புச்சட்டியை எடுத்து வந்து குழிமேல் வைத்தான். ஆட்டைக் கட்டியிருந்த கயிற்றைப் பால்காரத் தாமு கயிற்றுப்பந்தல் மேலெறிந்து இழுக்க, ஆடு கிணற்றுக்குடம் போல் மெள்ள உயரே எழும்பி இரும்புச்சட்டிக்கு மேலாக நின்றது. ஒரு பானையை மூடி விலக்கி முகர்ந்து பார்த்தப் பூசாரி, பானை நீரை ஆட்டின் மேல் வீசினான். ஒலக்காரிகள் "ஊலஊலஊல" என்று பின்னோலமிட, ஆடு பதிலுக்குப் "பேஏஏஏஏ" என்றது. எதிர்பாராத வகையில் தாமு ஒரு வெட்டறிவாளை எடுத்து "பகவதி!" என்றபடி இரண்டடி உயரத்துக்குத் துள்ளிக் குதித்து ஆட்டின் தலையை ஒரே வீச்சில் வெட்டியெறிந்தான். தலை கீழே சட்டியில் விழுந்தபோது வெளிவந்த ரத்தம் எங்கள் மீதும் தெறித்தது. ஓலக்காரிகளின் இடைவிடாத ஓலத்திற்கு மேல் இப்போது கூட்டம் "ஆத்தா, ஆத்தா" என்று அலறத் தொடங்கிவிட்டது. நான் நடுங்கி தேசியைப் பார்த்தபோது அவன் உதட்டோரத்தில் ஆட்டுரத்தம் தெறித்துக் காட்டேறி போல் தெரிந்தான். தாமு ஆட்டை இறக்கி, தலையையும் முண்டத்தையும் எடுத்துக் கொண்டு விலகினான். பூசாரிகள் இருவரும் சட்டியின் எதிரெதிரே உட்கார்ந்தனர். ஆட்டிலிருந்து இறங்கிய ரத்தம் முழுதும் சட்டியில் கொதிக்கத் தொடங்கி, ரத்தக்கறி வாடை வயிற்றைக் குமட்டியது. கொட்டிய ரத்தம் சூட்டில் இறுகிச் சிறிய உருண்டைகளாக மாற, "ஆத்தா வயிறு நெறஞ்சிடுச்சி" என்றபடி சட்டியை எடுத்துச் சென்றனர். கூட்டம் அவர்கள் சொன்னதை நம்பி ஆரவாரம் செய்தது. ஒரு ஓலக்காரி, "ஆத்தா அப்படியே குடிச்சிட்டா, கொட்டின ரத்தம் எங்கே போவும்?" என்றாள். "ஆத்தா, ஆத்தா" என்றான் சுரேஷ் என்னைப் பார்த்துக் கண்சிமிட்டியபடி. என் நிஜார் நனைந்தது அவனுக்கு நிச்சயமாகத் தெரியும். திரும்பி வந்த பூசாரிகள் ஒரு பானையிலிருந்து நீரை எடுத்துக் குழியில் கொட்ட, நெருப்பு அணைந்து புகைந்தது. அதன் மேல் மண்ணையும் மஞ்சளையும் அள்ளிக் அள்ளிக் கொட்டினர். மூடிய குழிமேல் ஆண், பெண் என்று வரிசையாக நிற்கவைத்துப் பேயோட்டத் தொடங்கினர். "ஓடு, ஆத்தா சொல்லுறா ஓடு" என்று வேப்பிலைக் கொத்தினால் அடி அடி என்று அடிக்க, அவர்கள் அலறினர். நான் பயத்தில் கண்களை மூடிக்கொண்டேன்.

"கண்ணைத் தொறடா, ஒம்போது" என்று என்னைத் தட்டி எழுப்பினான் சுரேஷ்.

எதிரே ஒரு சிறு பெண்ணை, பத்து வயது இருக்குமென்று தோன்றியது, பேயோட்டிக் கொண்டிருந்தனர். அருகிலிருந்தக் கிழவர், "மவ வயித்துப் பொண்ணு, என் மவ வயித்துப் பொண்ணு, வாடி பவிசு, என் மவளே" என்று கூச்சல் போடத் தொடங்கினார். "ஓடுறீ நீலி, ஆத்தா ரத்தம் குடிச்சு கோவமா இருக்கா. மலையேறு காட்டேறி, அப்பன் மனசு குளிற இறங்கிவா ஆத்தா" என்று பூசாரிகள் வேப்பிலை அடிக்கத் தொடங்கினர். ஓலக்காரிகள் கூச்சல் போட, கிழவர் சட்டென்று தேசியையும் என்னையும் எழுப்பிக் கட்டிக்கொண்டு ஆடத்தொடங்கினார். வயலினும் சுரேஷும் கூட்டத்துடன் கலந்து, "இறங்கிவா ஆத்தா இறங்கிவா" என்று டப்பாங்குத்து ஆடினார்கள். திடீரென்று அந்தப் பெண் "டேய், நிறுத்துடா" என்று அலறினாள், கிழக்கட்டைக் குரலில். திடுக்கிட்ட ஒரு பூசாரி கையிலிருந்த வேப்பிலைக் கொத்தைத் தவறவிட்டு எடுக்கக் குனிந்தபோது, எகிறி அவன் கழுத்தைப் பிடித்துக்கொண்டாள். "தாயத்து எங்கடா?" என்று பூசாரியின் தலையைத் தட்டித்தட்டி ஆடத் தொடங்கினாள்.

"யாரு நீ? சூலியா, காட்டேறியா அடையாளம் சொல்லு தாயே" என்றான் பூசாரி.

"ஆத்தா, ஆத்தா, தாயத்து என்னாண்ட இருக்குது தாயே" என்று அலறினார் கிழவர். தன் பையிலிருந்து எடுத்துக் காட்டினார்.

அதற்குள் தன்னை விடுவித்துக்கொண்டப் பூசாரி, ஒரு பானையை எடுத்துக் கோபத்துடன் அவள் மேல் கவிழ்த்தான். தண்ணீரோ என்னவோ அதிலிருந்து கொட்ட, பேய்ப்பெண் இன்னும் அலறினாள். எட்டி எட்டிக் குதித்தாள். பூசாரி மேல் காறித் துப்பினாள். ஏற்பட்ட கடுப்பில், "மலையேறு, குடுப்பாரு" என்று வேப்பிலைக் கொத்தினால் ஓங்கி அடித்தான் பூசாரி.

கிழவர், நான் திடுக்கிடும்படியாக என்னை இழுத்து என் சட்டைப் பையில் தாயத்தைப் போட்டார். "இதோ, தாயத்து இவங்கிட்டே இருக்கு ஆத்தா. சரியான எடத்துல சேந்துடுச்சு தாயே. மலையேறு, பவிசு மலையேறு" என்றார்.

நடுங்கிப்போய் என்னை விடுவித்துக் கொண்டேன். பாக்கெட்டில் விழுந்த தாயத்தை எடுத்து வயலினிடம் தர முயன்றபோது அவன் விலகினான். தவறிக் கீழே விழுந்தது. ஓலக்காரிகள் பலமாகப் பின்னோலமிட, கிழவர் மயங்கி விழுந்தார். கூட்டத்தில் பரபரப்பு. திரும்பிப் பார்த்தால் தேசியைக் காணோம். சுரேஷ் கழன்றுகொண்டிருந்தான். "ஆத்தா ஆத்தா" என்று அவரவர் எழுந்து அருகில் வர, நாங்கள் எடுத்தோம் ஓட்டம்.

    றுநாள். வழக்கம் போல் பம்மல் மலை வரை அரட்டை அடித்தபடி நடந்து, மலையுச்சியிலிருந்து சிறு பாறைகளை உருட்டி ரேஸ் விளையாடிக்கொண்டிருந்த பொழுது சுரேஷ் திடீரென்று, "டேய், இன்னி காலைல பால்காரத் தாமுட்ட கேட்டண்டா. நம்மள அவன் கவனிக்கவே இல்லை போல. நேத்து மண்டபத்துல ரகளைனான். அந்தக் கெழம் பாலாஜி நகராம். நெனச்சதை நடத்திக் கொடுக்கும் தாயத்தக் கொடுத்துட்டு காட்டேறிப்பேய் மலையேறிடுச்சு, தாயத்தோ மாயமா மறைஞ்சிடுச்சுனு சொன்னான்" என்றான்.

"ஆ..மடா, நெனச்சத நடத்திக்காட்டுற தாயத்தாவது மயிராவது. போடாங்க... இதெல்லாம்" என்று இழுத்த வயலினை மறித்தான் சுரேஷ். "இது என்னா தெரியுதா?" என்றான். அவன் கையில், முதல் நாளிரவு அந்தக் கிழவர் கொடுத்த தாயத்து! ஜோதிலட்சுமி போல் இடுப்பை ஒடித்து, "ஆத்தா, ஆத்தா" என்றான்.

"அடப்பாவி! நீயா சுட்டே? வேணாம்டா, தூக்கியெறிடா" என்றேன்.

"நிறுத்துறா". தாயத்தைப் பிடுங்கி எறியப்போன என்னைத் தடுத்தான் சுரேஷ். "டேய், வயலின். அந்த திலகம் மேல ஒனக்கு ஒரு இது தானே? தாயத்த வச்சு அவள வசியம் பண்ணிடு, இந்தா பிடி" என்றான். "அவ உன்னை விட ஒரு கிளாஸ் பெரியவடா. வசியம் பண்ணா தான் உண்டு. இல்லையினா உன் பக்கம் தாவணி கூட காட்ட மாட்டா" என்றான்.

"போடா. தண்டக்கருமாந்திரம்" என்றான் வயலின்.

சுரேஷ் விடாமல் திலகம் போல் பின்புறத்தை அசைத்துக் காட்டினான். "தொடணும் போல இருக்குல்ல..?" இடது கையால் பின்புறத்தைத் தட்டிக் காற்றில் முத்தம் ஊதி வயலினைச் சீண்டினான். "இந்தா தாயத்து".

என்ன தோன்றியதோ, "நாம நாலு பேரும் ஆளுக்கு ஒண்ணு வேண்டுறதா இருந்தா சரி" என்றான் வயலின். "சரி" என்ற சுரேஷ் தாயத்தை என்னிடம் கொடுத்து, "துரை, நீதாண்டா மொதல்" என்றான். வயலின் விழுந்து சிரித்தான். "மாட்னான் பாரு" என்றான்.

எனக்கு பயமிருந்தாலும் நம்பிக்கையில்லை. தாயத்தை எடுத்து ஒரு கணம் மௌனமாயிருந்துவிட்டு, திருப்பிக் கொடுத்தேன். "ஓலாக்குதே? என்ன வேண்டிக்கிட்டேனு ஓபனா சொல்லணும்" என்றான் சுரேஷ்.

"அத மொதவே சொல்லியிருக்கணும். புது ரூல் போடாதே. நான் வேண்டியாச்சு, அவ்ளோ தான்" என்றேன். "இனி உங்க டர்ன். இந்தாடா" என்று தேசியிடம் தாயத்தைக் கொடுத்தேன். சுரேஷ் மறித்தான். "என்ன வேண்டுறோம்னு உரக்க சொல்லணும். இந்த சும்பக்கூ வேலையெல்லாம் வேணாம். துரை, நீ திலகத்தை டாவடிக்கணும்னு தானே வேண்டினே? எனக்குத் தெரியும்" என்றான் விஷமத்துடன்.

வயலினுக்குக் கோபம் வந்தது. "டேய், துரோகி" என்றான். "இல்ல்ல்லடா" என்றேன்.

தேசி முன்வந்து, "அவன விடுங்கடா" என்றான். தாயத்தை ஹீரோ போல் உயர்த்தி, "எனக்கு லட்ச ரூவா கிடைக்கணும்" என்றான். சுரேஷிடம், "தடியா, நீ வேண்டிக்கடா" என்றான்.

"வேண்டுறதெல்லாமே ஒரு லெவல்ல இருக்கணும்டா" என்ற சுரேஷ், "அமெரிக்கா போய் செட்டில் ஆவணும்" என்றபடி தாயத்தை முத்தமிட்டான். "இந்தாடா" என்று வயலினிடம் கொடுத்தான்.

எதிர்பார்த்தபடி, "திலகம் எனக்கு பொஞ்சாதியாவணும்" என்று உரக்க வேண்டினான் வயலின்.

பிறகு ஏதோ சடங்கு போல எங்கள் ஒவ்வொருவர் தலையையும் தாயத்தால் சுற்றி விட்டு உள்ளங்கையில் தாயத்தைக் காட்டியடி, "டேய், இதுல எது பலிச்சாலும் யார் கிட்டயும் எதுவும் செத்தா கூடச் சொல்லக்கூடாது. சத்தியம் பண்ணுங்க" என்றான் வயலின். "செத்தா எப்படிறா சொல்ல முடியும்?" என்ற என்னிடம், "புடுங்கி.. முக்கியமா நீதான். சத்தியத்துல நம்பிக்கையில்லேனு ஓல்பஜனை வேண்டாம்" என்றான். நாங்கள் எல்லோரும் வயலின் கையில் சத்தியமடித்தோம்.

தாயத்தைத் தூக்கி எறிந்து இறங்கத் தொடங்கினோம். "இதெல்லாம் நடக்குற கதையாடா? எனக்கு லட்ச ரூவா கெடச்சாலும் கெடக்கும், திலகம் உனக்கு எப்டிரா கழுத்த நீட்டுவா?" என்றான் தேசி.

"புளுத்தியப் பாரு, அமெரிக்காவுல செட்டிலாவணுமாம். த்த.. நமக்கு பம்மல் தான் கதி" என்று வயலின் ஒரு உருளைக்கல்லைக் கால்பந்து போல் உதைத்தபடி வந்தான்.

"திலகம் உன்னை கிஸ்ஸடிப்பானு நம்பிக்கையாத்தானே வேண்டிக்கிட்டே? உடாதமா கண்ணா" என்று சுரேஷ் அவனைச் சீண்ட, வீடு சேரும் நேரத்தில் பேச்சு திசைமாறி விட்டது.

   விடுமுறை முடிந்து நானும் சுரேஷும் ப்ளஸ்டூ படிக்க ஆலந்தூர் போக வேண்டியிருந்தது. தேசி பல்லாவரத்தில் படித்தான். வயலினுக்கு எங்கும் இடம் கிடைக்காமல் குன்றத்தூரோ மாங்காடோ சென்று படித்தான். இடையில் என் அப்பா இறந்து போனதும் ஏற்பட்ட வீட்டு நெருக்கடி, க்ருஷ்ணா நகர் பெண்கள், 'யௌவனம்' கையெழுத்துப் பத்திரிகை என்று பல திசைகளில் என் கவனம் திரும்பியது. சனி ஞாயிறில் மட்டுமே சந்தித்தவர்கள், மெள்ள அதையும் குறைத்துக் கொண்டோம். தெரு நண்பர்களுடன் என்னால் முன்போல் பழக முடியவில்லை. சுரேஷ் என்சிசியில் சேர்ந்து அடிக்கடி காணாமல் போகத்தொடங்கினான். தேசி எங்களை விட்டு பாலாஜி நகர், கோகுலம் காலனி ஆட்களுடன் பழகத் தொடங்கிவிட்டான்.

ப்ளஸ்டூ விடுமுறை தொடங்கிய முதல் வாரம். திடிரென்று வயலினைக் காணோம். திலகமும் வயலினும் ஊரை விட்டு ஓடித் திருமணம் செய்து கொண்டது பற்றி பம்மல் முழுவதும் ஒரே பேச்சு. இரண்டு மூன்று மாதங்களுக்குத் தலைமறைவாகிவிட்டார்கள்.

நான் கல்லூரி சேர்ந்த பின், முதல் விடுமுறையில் பம்மல் வந்தபோது வயலினைச் சந்தித்தேன். திலகத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதாகச் சொன்னான். "எல்லாம் தாயத்து மகிமைடா" என்றான்.

"உளறாதடா. என்ன ஆச்சு, உண்மைய சொல்லுடா? உனக்கு பதினெட்டு வயசு கூட ஆவலையே? அவளை எப்படிரா காப்பாத்துவ?" என்றேன்.

அதற்குள் திலகம் ஒரு சிறு தட்டில் இனிப்பும் காபியும் கொண்டு வந்து கொடுத்தாள். அவளைப் பார்த்து மனதுக்குள் அதிர்ந்து, வயலினைப் பார்த்தேன். திலகம் விலகியதும், "ஆமாடா, முழுகாம இருக்கா" என்றான்.

"டேய், கவனமா இருடா. இதெல்லாம் சட்டவிரோதம் மட்டுமில்லே ரொம்ப ரொம்பச் சீக்கிரம்டா" என்று சொல்லிவிட்டு வந்தேன். வீட்டுக்கு வரும் வழியில் தாயத்து நினைவுக்கு வந்தபடி இருந்தது.

பொங்கல் விடுமுறைக்கு வீடு திரும்பியபோது மீண்டும் வயலினைச் சந்தித்தேன். திலகம் அவனைவிட்டு ஓடிவிட்டதாகச் சொன்னான். அதிர்ச்சியாக இருந்தது.


➤புகை: 2

31 கருத்துகள்:

  1. பேய், தாயத்து, குடுகுடுபாண்டி என்று நீ எழுதும்
    கதைகள் மிகவும் ஸ்வாரஸ்யம். பம்மல் கதாபாத்திரங்களும், சிந்தாளம்மன் கோவிலும் நினைவுகளைக் கிளறின. ஒரு முறை சாமி வந்துவிட்டது என்று ஒருவர் ஆட வேதாசலமும் எதிர் சாமியாடியது நினைவிற்கு வந்தது. அடுத்த பகுதியைப் படிக்க ஆவலாக இருக்கிறேன்.--கீதா

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லாஅக்டோபர் 22, 2010

    I don't know how you end this but sila visayangalai amukki vaasikkarathu ellarukkum nalladhu. vayalin visayam theriyum illaya?

    பதிலளிநீக்கு
  3. அப்பாஜி! கொஞ்ச நேரம் நானும் அரைடிராயருடன் உங்கள் ஜமாவில் கலந்து கொண்டு உடனிருந்தது போல் ஒரு உணர்வு. சென்னையின் புற நகர் விடலைகளின் பேச்சு வழக்கும், உற்சாகமுமாய் ஒரு துள்ளல் நடை..பேயோட்டும் காட்சி வர்ணனை என் எதிலும் விரவி நிற்கும் யதார்த்தம்..
    சபாஷ்! சபாஷ்!!

    பதிலளிநீக்கு
  4. கதையில் பேயாட்டம் ,சாமியாட்டத்தில் கிராமம் ஒன்றி வருகிறது..

    முழு நடிப்பாக சாமி ஆடுகிறவர்களையும் பார்த்துள்ளேன்..முழுக்க முழுக்க தன்னிலை மறந்து எதோ ஒன்று ஆட்டுவிப்பதையும் பார்த்திருக்கிறேன்

    சேர்த்து வைத்த தாயத்து எப்படி பிரித்தது எனும் ஆர்வத்தை தூண்டிவிட்டு விட்டீர்கள்..

    பதிலளிநீக்கு
  5. எனக்கு சாமி வந்துவிட்டது. சாமியை மலையேற்ற பார்ட் டூ சீக்கிரம் போடவும். நிஜார் பசங்க வசனம் சூப்பர். தத்ரூபம். நன்றி!

    பதிலளிநீக்கு
  6. நினைச்சதை நடத்தி வைக்கற தாயத்து நம்பிக்கை! இன்டரஸ்டிங்... ஒரு வேளை, நாலு பேர்ல ஒருத்தர் அபபடி ஒருவேளை இவங்க ஒண்ணு சேர்ந்தா அப்புறம் பிரிஞ்சிடணும்னு வேண்டிகிட்டு இருப்பாங்களோ!!

    பதிலளிநீக்கு
  7. கதை நன்றாக இருந்தது நீங்கள் பம்மல் ஊரிலா இருக்கீறீர்கள்

    பதிலளிநீக்கு
  8. நன்றி கீதா.

    "சூலியா காட்டேறியா அடையாளம் சொல்லு", "பாப்பாரப் பேய், தயிர் கேக்குது பார்" போன்ற உன்னியுருகும் முத்துக்களை உதிர்த்த வேதாசலத்தை மறக்க முடியுமா?

    ஒற்றைப் பனைமரத்தின் கீழே இருந்த உட்காரும் கல்லில் பூசாரி மண்டையை முட்டிக்கொண்டது நினைவிருக்கிறதா? எல்லாரும் ஒரே ஓட்டமாக போர்வைக்குள் பயந்து உடுக்கு சத்தம் அடங்கும் வரை நடுங்கிக் கொண்டிருந்த நிகழ்ச்சி அது. என் செட்டில் நானும் சுரேஷும் மட்டும் ஜன்னல் வழியாகப் பார்த்தோம். (பேயோட்டம் பார்ப்பதென்றால் எங்கள் வீடு பாக்ஸ் டிகெட் மாதிரி. எங்கள் வீட்டு ஜன்னல் அடைத்திருந்தாலும் கதவில் கை விடும் அளவுக்கு விரிசல்கள் இருக்கும். )

    பம்மல் ஏரிக்கரையில் தான் பேயோட்டம் நடந்து கொண்டிருந்தது. எழுபத்தெட்டு வாக்கில் வீடுகள் நிறைய வரத்தொடங்கியதும் ஏரிக்கரையிலிருந்து சிந்தாளம்மன் எல்லையம்மன் கோவிலுக்கு இடமாற்றினார்கள். அறுபதுகளில் இளங்கோ/சாஸ்திரிகள் வீட்டு மாடியில் பேரெபட் சுவருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு பார்த்த காட்டேறி ஓட்டம் இன்னும் த்ரில். ஏரிக்கரையில் நடந்த பேயோட்டம் மாதிரி கோவில் பேயோட்டம் அத்தனை த்ரில் இல்லை. என்ன செய்ய?!

    பதிலளிநீக்கு
  9. நன்றி மோகன்ஜி, பத்மநாபன், RVS, ஸ்ரீராம், பாலாஜி சங்கர்...

    நிறைய பேர் போதை தலைக்கேறி ஆடுகிறவர்கள் என்பதே என் கணிப்பும் பத்மநாபன். (ஆறு/ஏழு வயதிலிருந்து பேயோட்டம் பார்த்திருக்கிறேன் - ஆட்டம் ஆடுகிறவர்களில் சுத்தப் பொய், போதை, கடும்போதை என்று வகை பிரிக்கிற அனுபவம் உண்டு :) சித்திரை, வைகாசிப் பௌர்ணமிகளில் கஞ்சா அடித்துவிட்டு பேயோட்டுவார்கள் - இந்த விஷயம் பதினஞ்சு வயசு வாக்கில் தான் தெரிந்து கொண்டேன். இதில் என்னை நடுங்க வைத்தது பேய்ப் பெண்களையும் ஆண்களையும் வேப்பிலை, உடுக்கு, தொடப்பம், பனையிலை போன்றவற்றால் விளாசு விளாசு என்று விளாசுவார்கள். அடிபட்டர்வர்கள் வலியால் அலறுவது சில சமயம் உலுக்கியெடுக்கும். இருப்பதிலேயே மோசம் பெண்ணை (ஏன் என்று தெரியவில்லை, ஆண்களை இந்த நிலையில் பார்த்ததில்லை) இழுத்து முடியைக் கோர்த்து கல்லிலோ கட்டையிலோ ஆணியடிப்பார்கள். ஐயோடா! சினிமா பார்க்கக் காசில்லாமல் இது best thriller alternative!

    exorcist படம் வந்த நேரம். பொய் மீசை வைத்துக் கொண்டு ஈகா தியேடரில் பார்த்துவிட்டு வந்திருந்தோம். படப்பை க்ளேஸ்மேட் சொன்னான் என்று தாம்பரம் எம்ஆர் தியேட்டர் அருகில் ஒருமுறை நானும் நண்பர்களும் இது போல் ஒன்றைப் பார்த்துவிட்டு ஒரு வாரம் போல் நடுங்கிக் கொண்டிருந்தோம். eeek!

    பதிலளிநீக்கு
  10. வாங்க பாலாஜி சங்கர். நான் இப்பொழுது பம்மலில் இல்லை, ஆனால் பம்மலில் 'தொன்று தொட்டு' இருந்த குடும்பம். என் பம்மல் வேர்கள் எல்லாமே அனேகமாகக் கருகிவிட்டன.

    பதிலளிநீக்கு
  11. நீங்க ஆடுங்க RVS, நான் எதிர்சாமி ஆடுறேன்.

    பதிலளிநீக்கு
  12. அனானி யாரென்று யூகிக்க முடியவில்லை. (அடக்கி வாசிக்குறதுக்கும் அமுக்கி வாசிக்குறதுக்கும் 'வித்தியா'சம் சொன்னவரா?) வயலின் பற்றி சமீபச் சென்னைப் பயணத்தில் அறிந்தேன். அப்பொழுது தோன்றிய கதைதான் இது. விடலை நினைவுகளை வைத்துப் புனையப்பட்ட வெறும் கதை. அவ்வளவு தான். நிஜ வாழ்வின் அவலங்களைக் கதைகளால் கூட கைப்பற்ற முடியாது.

    பதிலளிநீக்கு
  13. மோகன்ஜி..கருத்துக்கு நன்றி. உங்களுக்கு ஒரு பெஞ்ச் போட்டா போவுது. ஜமாவுல சேந்துருங்க.
    என் வளரும் பருவத்தில் விபரீதங்கள் தான் அதிகம். (சுவையானதும் கூட). இவற்றை வைத்து சில விபரீதக் கதைகளை இந்த blogல் எழுதியிருக்கிறேன்/ எழுத இருக்கிறேன், as a release. போகன் சொன்னது போல வாழ்வின் 'சோர்வைப் போக்க எழுதும்' எழுத்து. என்னுடைய மாமாக்கள், இந்திரமோகன் ஆசிரியர் - இவர்கள் இல்லையென்றால் என் வாழ்வு எந்தப் பாதையில் போயிருக்கும் என்ற விபரீத எண்ணம் அடிக்கடி தோன்றும். வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறேன் என்ற நினைப்பு மேலோங்கி இதெல்லாம் மறையும். மறுபடி தோன்றும். மறையும். No regrets or complaints. பனிக்கட்டி மேல் நின்று கொண்டு நீரில் நடக்கும் வித்தை கற்றவன். (my epitaph :)

    பதிலளிநீக்கு
  14. அப்பாஜி! பேயோட்டத்துக்கு அடுத்த படியாக சாமி அருள் வந்து ஆடுவது.. சின்ன வயதில் இருந்தே இன்று வரையிலும் கூட கார்த்திகையில் மாலையிட்டு, விரதமிருந்து வருடம் தவறாமல் பெருவழி நடந்து சபரி மலை சென்று வருகிறேன்.
    பல சுவையான சந்திப்புகள், அனுபவங்கள்,மனித மனக் கூறுகளை கூர்ந்து கவனிக்க வாய்த்த தருணங்கள் என பலவும் சபரிமலை யாத்திரைகளின் போது.

    என் இள வயதில், ஐயப்ப பூஜை, பஜனைகளின் போது ஸ்வாமி வந்து ஆடும் பேர்களைப் பார்த்து, பயமும் ஆர்வமும் சேர,நிஜமா வேஷமா எனப் புரியாமல் திகைத்திருக்கிறேன்.

    என் சொந்த அனுபவத்தில் கூட,ஆவேசம் வந்து உத்தரவாய் எனக்கே சொல்லப் பட்டவை..நிகழ்ந்ததை கண்டு வியந்திருக்கிறேன்..

    பெரும்பாலும் உணர்ச்சிப் பெருக்கிலும், சாமியாடுபவனுக்குக் கிடைக்கும் முக்கியத்துவமும் சராசரியான மனிதர்களை சாமியாடத் தூண்டுகிறது..

    அருள் வந்தவன் மேல் ஆவிற்பவித்த ஸ்வாமி எவ்வகை? அதற்கு என்னென்ன உபச்சாரங்கள் செய்ய வேண்டும் எனவும் பல குருமார்கள் எனக்கு எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.. அவ்வகை ஸ்வாமி வருகை
    இப்போதெல்லாம் ரொம்பவே குறைவு என்பதையும் கண்டு வருகிறேன்.

    இருபது வயதில், இந்த சாமியாட்டத்தைப் பற்றி நான் ஒரு கதை எழுதி.. வாங்கிக்கட்டிக் கொண்டதுமுண்டு. தேடித் பார்க்கிறேன். கிடைத்தால் பதிவிட்டு விடலாம்..

    வாழ்வின் எந்த தருணத்திலும்,தான் கவனிக்கப் படவேண்டும் என்ற உந்துதலில், எல்லோரும் ஏதோ ஒருவகையில் சாமி ஆடிக் கொண்டே தானே இருக்கிறோம்?!

    பதிலளிநீக்கு
  15. அறிவு அடங்கி புலன் ஆக்கிரமிக்கும் நிலை.. உளவியல் ரீதியில் இதற்கு விளக்கம் இருக்கிறது மோகன்ஜி. சாமி பேய் விவகாரங்களில் மட்டுமல்ல, இதன் மிக நெருங்கிய உறவின உணர்வு நம் வீடுகள் பலவற்றில் நாமே பார்க்கலாம். என் அப்பா, பல சமயம் எனக்கு, என் சில நண்பர் உறவினர்களுக்கு.. கோபம் வந்துவிட்டால் சில சமயம் அறிவு மறைந்து விடும். என்ன செய்கிறோமென்றே தெரியாமல் ஒரு கோபநிலை வரும் பாருங்கள் - ஒன்றிரண்டு நிமிடங்களில் முடிந்ததும் அடங்கி, நிகழ்ந்த சேதத்தின் சுமை தாங்க முடியாமல் மனதுக்குள் வெம்பியிருக்கிறேன். என்னைக் கேட்டால் அதுவும் சாமி வந்த நிலை அல்லது பேய் பிடித்த நிலை தான். நல்ல வேளை வேப்பிலை அடி விழுவதில்லை. விழுந்திருக்க வேண்டுமோ?

    பதிலளிநீக்கு
  16. அப்பாஜி! அழகாகச் சொன்னீர்கள். மேலும் தொடர்வதற்கு முன் என் முந்தைய பின்னூட்டத்தில் ஒரு விளக்கம்..
    //என் சொந்த அனுபவத்தில் கூட,ஆவேசம் வந்து உத்தரவாய் எனக்கே சொல்லப் பட்டவை..நிகழ்ந்ததை கண்டு
    வியந்திருக்கிறேன்..//
    இந்த வரிகளை "பிறருக்கு வந்த ஆவேசத்தில் எனக்கு உத்தரவாய் சொல்லப் பட்டவை" என்று புரிந்து
    கொள்ளவும்..
    எனக்கு ஆவேசம் என்றும் இவ்வாறு வந்ததில்லை.. பொய்யும் புனைந்துரையுமே பெரும்பாலும்
    எனக்கு ஆவேசம் தரும்!
    அந்த தார்மீகக் கோபம் கூட கட்டுக் குள்ளேயே இருக்கும். பாரதி சொன்ன பலவற்றை ஆதர்சமாய்க் கொண்டேன்.ஆனாலும் அவன் சொன்ன "ரௌத்திரம் பழகு"எனக்கு கைவரவில்லை.

    நீங்கள் குறிப்பிட்ட நிலை ஒரு உன்மத்த நிலை.. பெரும் பான்மையான வன்முறையும் குற்றங்களும் அந்த சில நிமிடங்களுக்குள்ளேயே நடந்து விடும்.

    நான் கடலூரில் உள்ள கேப்பர் க்வாரி ஜெயிலுக்கு மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் போனதுண்டு. தமிழ் நாட்டிலுள்ள ஆயுள் தண்டனை மற்றும் தூக்கு தண்டனைக் கைதிகள் அங்கு இருப்பர்.பெரும்பாலான குற்றங்கள் முன் கூட்டியே திட்டமிடப் படாமல் ஓர் உணர்ச்சிக் கொந்தளிப்பில் நிகழ்ந்தவையே என்பதை அங்கு உணர்ந்தேன். "சினம் சேர்ந்தாரைக் கொல்லி" என்பது என்ன அனுபவ பூர்வமான வாக்கியம்?!

    எப்போதும் கோபம் கொள்ளும் மகனை
    வீட்டு வேலியில் ஆணி அடிக்க சொன்ன அப்பாவின் கதை உங்களுக்கு தெரியும் அல்லவா?

    பதிலளிநீக்கு
  17. //வாழ்வின் எந்த தருணத்திலும்,தான் கவனிக்கப் படவேண்டும் என்ற உந்துதலில், எல்லோரும் ஏதோ ஒருவகையில் சாமி ஆடிக் கொண்டே தானே இருக்கிறோம்?// மோகன்ஜியின் வரிகளிலும்

    //அறிவு அடங்கி புலன் ஆக்கிரமிக்கும் நிலை..// உங்கள் வரிகளிலும்

    மனவியல் கற்றுக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. //என் அப்பா, பல சமயம் எனக்கு, என் சில நண்பர் உறவினர்களுக்கு.. கோபம் வந்துவிட்டால் சில சமயம் அறிவு மறைந்து விடும். என்ன செய்கிறோமென்றே தெரியாமல் ஒரு கோபநிலை வரும் பாருங்கள் - ஒன்றிரண்டு நிமிடங்களில் முடிந்ததும் அடங்கி, நிகழ்ந்த சேதத்தின் சுமை தாங்க முடியாமல் மனதுக்குள் வெம்பியிருக்கிறேன். என்னைக் கேட்டால் அதுவும் சாமி வந்த நிலை அல்லது பேய் பிடித்த நிலை தான்.//

    அட அப்ப, நானும் "அம்மனோ சாமியோ அப்பனோ மாமியோ தானா" !!

    எனக்கு வரும் கோவத்திற்கு வேப்பமரத்தை கொண்டு அடித்தாலும் பேப்பே தான் !! அனகேமாக அப்பாதுரை ஒரு கதையில் சொல்லி இருப்பது போல் போட்டுத்தள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  19. மோகன்ஜி,

    நீங்கள் வருடம் தவறாமல் பெரிய பாதையில் ஐயப்ப மலை போவது சந்தோஷம். நான் போனதில்லை. இந்தியா திரும்பி வந்தபிறகு போக எண்ணம்.

    இந்த வருடம் இங்கே என் அம்மா / அப்பா வருவதால் - இந்த வருடமும் அலுவலகத்தில் மீட்டிங் இருந்தாலும் "பெப்பர் - சாலட்டு தாடியுடன்" முழு விரதம் இருக்க எண்ணம். என் அம்மா அட்லீஸ்ட் என்ஜாய் பண்ணுவார்கள் என்று நம்புகின்றேன்.

    போன வருடம் கடவுளின் அருளால் இருந்தேன். வார இறுதியில் இரண்டு நாளும் பஜனை, இந்த ஊரின் குளிரில் / ஸ்நோவில் வெறும்காலுடன் நடப்பது ரத்தத்தை உறைய வைக்கும்.

    நாங்கள் இங்கே "மேரிலாண்ட் சிவா விஷ்ணு" கோவிலில் உள்ள ஐயப்ப கோவிலுக்கு நியூஜெர்சியில் இருந்து செல்வோம்.

    பதிலளிநீக்கு
  20. சாய்! அவசியம் விரதம் இருங்கள். மனதுக்கு தெளிவு பிறக்கும்.
    இந்தியா வரும் போது மலைக்கு சேர்ந்து போவோம்..
    வர வர எனக்கு எது என் பிளாக், எது அப்பாஜி பிளாக்,எது ஆர்.வீ.எஸ் பிளாக் எனத் தெரிவதேயில்லை.. கடை பரப்பி விடுகிறேன் உரிமையுடன்..
    என் பழைய சாமி சரணம் கவிதை ஒன்று!
    நம் கும்மிக்கு இடம் கொடுத்த அப்பாஜிக்கு இந்தக் கவிதையை
    டெடிகேட் செய்கிறேன்!!


    அங்கலாய்ப்பு

    சேற்றுச் சகதியிலே
    சாக்கடை ரோட்டிலே,
    நடக்கேன்
    செருப்பில்லா காலோடே ....

    மழிக்காத முகத்தினிலே
    முப்பது நாள் தாடியோடே........

    நல்ல சட்டைப் பேண்ட்டில்லே
    நாலு முழ கருப்பு வேட்டி

    மூணு நாளா
    அலமேலு ‘வீட்டில்’ இல்லே.....
    நான் வச்சக் குழம்பிலோ
    உப்புமில்லே சப்புமில்லே....

    சாமி சரணம் சாமி சரணம்
    இன்னிக்கு பூஜை செய்ய டயமில்லே.......

    பதிலளிநீக்கு
  21. மோகன்ஜி ... தலைவரே... ஐயப்ப கவிதை அபாரம். "வீட்டில்" இல்லை "ஆத்தில்" இல்லை என்றால் இன்னும் ரைமிங்கா வருமோ? எங்க ஊர் மாரியம்மன் கோவிலில் குறி சொல்வது கூட ஞாபகம் வருகிறது. இந்தக் கும்மியில் நானும் முடிந்தால் அதைப் பதிகிறேன். ;-) ;-)

    பதிலளிநீக்கு
  22. ஆர்.வீ.எஸ்!அந்த சாமி அய்யர் சாமி இல்லை அதான் "வீட்டில்"

    பதிலளிநீக்கு
  23. நாட்டுப் பாடல் போல இருக்கிறதே மோகன்ஜி? மலைப் பயணத்தின் போது பாடுவீர்களா? பரவாயில்லையே? நான் ஒரு முறை பெருவழியில் நடந்தும் மறுமுறை டோலியிலும் மலையேறியிருக்கிறேன் (?!). டோலி was a pulsating adventure. வழியெல்லாம் 'பள்ளிக்கட்டு' 'நெய்யபிஷேகம்' போன்றவை தவிர வேறு கோஷம் கேட்டதில்லை. மனிதரை எளிமைப்படுத்தும் மகத்தான அனுபவங்களுள் ஒன்று சபரிமலை நடைப்பயணம். தொடர்ந்து செல்லும் உங்கள் commitment பாராட்டுக்குரியது.

    பம்பா எனக்கு வம்பா.

    பதிலளிநீக்கு
  24. பரம்பரையே அம்மனோ சாமியோ தான்.:)
    >>>அட அப்ப, நானும் "அம்மனோ சாமியோ அப்பனோ மாமியோ தானா" !!

    பதிலளிநீக்கு
  25. நாட்டுப் பாடல் இல்லை.. அடியவனின் சேட்டைப் பாடல் தான். மாலை போட்டுக் கொண்டு அங்கலாய்த்த என் நண்பனைக் கிண்டலடித்து எழுதியது.. அவன் மனைவி பெயர் கூட மாற்றாமல்.
    1976ல் தொடங்கினேன்..ஓரிரு வருடம் தவிர இந்த பெருவழியினை மட்டும் விடவில்லை. எத்தனை வகை மனிதர்கள் .. எத்தனை அனுபவங்கள்..கார்த்திகை முதல் நாளுக்காய் காத்திருப்பேன்..

    தமிழில் வழிநடை சிந்து பலவும் உள்ளனவே..

    தற்சமயம் ஐய்யப்ப ஸ்வாமி பற்றி ஒரு புத்தகம் விரிவான முறையில் எழுதும் வேலையைத் தொடங்கி இருக்கிறேன்.. பல சம்ஸ்கிருத சுலோகங்கள்,தமிழ் விருத்தங்கள், வழக்கில் இல்லாது போன பல குறிப்புகளும் பல ஆண்டுகளாய் சேகரித்து வைத்துள்ளேன். பூஜை வழிமுறைகள்,சுலோகங்களின் எளிமையான தமிழாக்கமும் செய்து வெளியிட விருப்பம்.அவன் செயல்.

    ஏன் டோலி? வாரும்! ஒருமுறை தோளில் தூக்கி செல்கிறேன்!

    சபரி மலையில் கூட நகைச்சுவைக்கு பஞ்சமில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்னால்,நான் மலையேறிக் கொண்டிருந்தபோது பக்கத்திலேயே ஒரு டோலியும் வந்தது.அதில் அய்யனாரைப் போல் ஆரோகணித்து அமர்ந்திருந்த ஒரு பக்தர் பெரும் குரலில் சரணம் போட்டு வந்தார்.. அதுவும் ஒரே வரியை மீண்டும் மீண்டும்...
    "கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை!
    டோலி சுமப்பவர்களை பார்த்து சிரித்தவண்ணம் நடந்தேன்.

    பதிலளிநீக்கு
  26. பேயோட்டுவதில் உச்சக்கட்ட அனுபவத்தை நீங்கள் சோட்டானிக்கரை பகவதி[கேரளா]அமன் கோயிலில் காணலாம்.குருதி பூஜை என்று நள்ளிரவில் நடக்கும் சில விசயங்களைப் பார்த்தால் நமது பகுத்தறிவு நிறையவே ஆட்டம் காணலாம்.உங்கள் இந்தியப் பிரவேசத்தின் போது இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.கதை டெர்ரர் என்றால் அவன் கதை தெரியுமில்லையா என்று அனானி போடும் கமென்ட் இன்னும் திகிலாய் இருக்கிறதே...

    பதிலளிநீக்கு
  27. மோகன்ஜி, உங்கள் ஆசிகளை சேமித்துக் கொள்ளுங்கள். காரணம், உங்களைப் போல் சிலர் பிறக்கும் போதே மனிதராய்ப் பிறக்கிறார்கள், மனிதராய் வாழ முயற்சி செய்கிறார்கள். என்னைப் போல் பலர் பிறக்கும் போதே மிருகமாய்ப் பிறக்கிறார்கள், மனிதராய் மாற முயற்சி செய்கிறார்கள்.

    >>>"ரௌத்திரம் பழகு"எனக்கு கைவரவில்லை.

    பதிலளிநீக்கு
  28. சோட்டானிக்கரை நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன், bogan. ஒரு ட்ரிப் அடிச்சுற வேண்டியது தான்.

    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மோகினி புத்தகம் ஆர்வத்தைக் கிளறிவிட்டது. இந்தப் புத்தகங்களெல்லாம் மின்வடிவில் கொண்டு வரக்கூடாதோ?

    பதிலளிநீக்கு
  29. ஆகா, மோகன்ஜி! (நான் என்ன பத்து பவுண்டுனு நெனச்சிட்டீங்களா?)
    சபரிமலை தரிசனமும் அவசரமாகி விட்ட நாளில் டோலி கைவருகிறது.
    >>>ஒருமுறை தோளில் தூக்கி செல்கிறேன்!

    (அந்த நபர் ஒரு வேளை டோலி சுமக்குறவங்களுக்கு உற்சாகமா இருக்கட்டும்னு பாடினாரோ?)

    பதிலளிநீக்கு
  30. :) bogan.
    சுற்றம் உற்றம் பற்றி எழுதும் பொழுது சிலருக்கு சங்கடமாகி விடுகிறது. அனானியாகி விடுகிறார்கள். நீங்க சொன்னது போல அனானி கமென்ட் இந்தக் கதையில திகிலைச் சேத்துக்கூட்டுது. வாழ்க அனானி!

    பதிலளிநீக்கு