2013/06/29

இதுவும் காதல்

2


◀   1



    "மை ப்லஷர்.. இந்திய விருந்துச் சாப்பாடு கிடைக்குது.. என்னோட சிறந்த மாணவன் வீட்டுல.. மோரோவர் உன் ஆராய்ச்சி முடிஞ்சு ரெண்டு மாசத்துல நீ ஊர் திரும்புறே.. அபவ் ஆல், மூணு மாச ஆராய்ச்சினு கணவன் மனைவியா ட்ரெஸ்டன் வந்த நீங்க, இங்கே இரண்டு வருஷம் தங்கி ஒரு குழந்தை பெத்துட்டிருக்கீங்க.. அத்தனையும் கொண்டாட வேண்டாமா? நீ பல முறை அழைச்சப்பவே வந்திருக்கணும். இப்பத்தான் எனக்கும் வாய்ப்பு கிடைச்சுதுனு வச்சுக்குவோம். அதனால இது பெரிய விஷயமில்லே ரவி. எனக்கும் சந்தோஷம் தான். என்னை வற்புறுத்தி அழைத்து வந்ததுக்கு நன்றிகள்".

வண்டியோட்டி வந்த புரபசரிடம், "உங்களுக்கு நல்ல மனசு" என்றான் ரவி. "இரண்டாவது பிளாக்குல வலப்புறம் பொது பார்க்கிங் போர்டிகோ இருக்கு. பார்க்கிங்லந்து என் அபார்ட்மென்டுக்கு கால் மைல் நடக்கணும் சார்.. பொருட்படுத்தாம வரணும்"

"தட்ஸ் ஓகே.. சாப்பிடறதுக்கு முன்னால ஒரு எக்சர்சைஸ்னு வச்சுக்குவோம்" என்று வண்டியை நிறுத்திய புரபசர், பின்னிருக்கையிலிருந்து ஒரு கலர் பெட்டியை எடுத்துக் கொடுத்தார். "ரவி, இது உன் குழந்தைக்கான அன்பளிப்பு. இங்கயே கொடுத்துடறேன், ஸோ யு கேன் கேரி இட்" என்றுச் சிரித்தார். இறங்கி நடந்தார்கள்.

"ஊர்லந்து உங்கம்மா வந்திருக்காங்க இல்லையா? அவங்களுக்கு இங்கே பொழுது போகுதா? தெர் இஸ் நாட் மச் ஹியர்"

"அவங்களுக்கு இங்கே கொஞ்சம் கூடப் பிடிக்கலே. பிறந்த குழந்தைக்காக வந்தாங்க.. எப்ப ஊர் போவலாம்னு வெயிட்டிங்.."

"புரியுது. அவங்களோட சுதந்திரம் இங்கே கட்டுப்படுத்தப்படுது இல்லையா? ஷாப்பிங், சுத்திப் பார்க்குறது.. இதெல்லாம் சலிச்சுரும். சொந்த ஊர் போல வராது. இந்த ஊர்ல மொழி வேறே ஒரு சிக்கல்"

"எங்கம்மா நல்லா இங்லிஷ் பேசுவாங்க. படிச்சவங்க, இந்தியாவுல பெரிய வேலைல இருந்தவங்க.. ஆனா ஜெர்மன் தெரியாம வீட்டுக்குள்ள கிடந்து போரடிக்குது. டிவி சேனல்களும் போரடிக்குது"

"ஹாஹா.. வெல்கம் டு ஜெர்மனி. என்னதான் எஜுகேடடா, கெரீர்ல சக்ஸஸ்புல்லா இருந்தாலும் தன்னுடைய பிள்ளைகளை அண்டி வரப்ப வயதான பெற்றோர்கள் அனைவரும் அப்பாவியாட்டம் நடந்துக்குறாங்க இல்லையா?" என்ற புரபசர், ரவியின் தோளை விளையாட்டாக இடித்தார். "என்னப்பா இது? கால் மைல்னு சொன்னே, முக்கா மைலுக்கு மேலே இருக்கும் போலிருக்குதே நடை?"

"நாலு காம்ப்லெக்ஸ் சுத்தி வரதால தொலைவா தோணுது.. இதா வந்துடுச்சு.. வாங்க சார். ஆறாவது மாடி"

"லிப்ட் வேணாம்பா.. படியேறியே போவோம்.. ஆறு மாடி தானே?" என்ற புரபசரை வியப்புடன் தொடர்ந்தான் ரவி. ஆறு மாடிகள் ஏறுமுன் மூச்சுத் திணறியது. வீட்டு அழைப்பு மணியை அழுத்தினான்.

கதவைத் திறந்த அம்மா, "ஏண்டா இப்படி மூச்சு வாங்குது ரவி?" என்றார் பதட்டத்துடன்.

புரபசரை உள்ளே அழைத்த ரவி, "படியேறி வந்தேன்மா. எனக்கு மூச்சு வாங்குது. இவரு சின்னப் பிள்ளையாட்டம் இருக்காரு" என்றான்.

ரவியின் அம்மாவை முகம் பார்த்துச் சிரித்தபடி வணக்கம் சொன்னார் புரபசர்.

"அம்மா.. இவர் என் புரபசர் ராஜ்குமார்" என்ற ரவி, புரபசரிடம் "சார், இவங்க என் அம்மா, வந்தனா" என்றான்.

அறிமுகம் தேவையில்லாமல், பார்த்தக் கணத்திலேயே இருவரும் அதிர்ந்திருந்தார்கள்.

    வந்தனாவைப் பெண் கேட்டு நிறைவேறாமல் வெளியேறிய ராஜ்குமாரும் அம்மாவும் மிகுந்த வருத்தத்துடன் திரும்பினார்கள். ஆலந்தூர் பெண் வீட்டுக்குத் திருமணத்தில் விருப்பமில்லை என்று இங்கிதமாகச் சொல்லியனுப்பினார்கள். இரண்டு மூன்று வாரங்களில் அம்மாவின் போக்கே சரியில்லாமல் போக, ராஜ் கலங்கினான். வந்தனாவைப் பற்றி அடிக்கடி பேசினார் அம்மா.

"போகுதுமா.. வந்தனா வராத போனா என்ன? வேறே பொண்ணு பார்க்கலாம்.. எனக்கு ஒண்ணும் கல்யாணத்துக்கு அவசரமில்லே"

"உனக்கு அவசரமில்லேடா.. அந்தப் பொண்ணுக்கு அவசரம்.. அவங்கப்பா செஞ்சு வச்சுடுவாரு"

"அதனால?"

"அதனாலவா? உனக்கு எப்படியோ தெரியாது ராஜூ, என்னைப் பொறுத்தவரை வந்தனா தான் என் மருமகள். அவளை மருமகளா நினைச்ச பிறகு வேறே பெண்ணை அந்த இடத்தில அமர்த்த முடியாது"

"என்னம்மா இது.. நான் தானே கல்யாணம் செஞ்சுக்கணும்? உன் மருமகள் ஸ்தானம்னு என்னென்னவோ சொல்றியேமா?"

"ஆமாடா.. உன் மனசுல ஒருத்திய நீ நெனச்சா எப்படியோ அப்படித்தான் எனக்கும். இனி உன் விருப்பத்துக்கு யாரை வேணுமோ கல்யாணம் செய்துக்க.. வர பெண் கூட அன்பா பழகுவேன்.. ஆனா மருமகள்னு நினைக்குறப்ப வந்தனா தான்.. நான் சாகுற வரைக்கும் மாறாது"

"உனக்கு வந்தனா பைத்தியம் பிடிச்சிருக்கும்மா.. இதுக்கு வைத்தியம் கிடையாது" என்ற ராஜ் அதற்குப் பிறகு அந்தப் பேச்சை எடுக்கவில்லை.

அடுத்த ஆறு மாதங்களில் சென்னை ஐஐடி சார்பில் ஜெர்மனி சென்ற குழுவில் ராஜ்குமாருக்கு இடம் கிடைத்தது. ட்ரெஸ்டன் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்திய ஆராய்ச்சிகளின் குழுத்தலைவர் பொறுப்பு கிடைக்க, ஜெர்மனி-இந்தியா என்று நான்கைந்து வருடங்கள் சுற்றினான். அதன் பின் நிரந்தரமாக ட்ரெஸ்டன் பல்கலைக்கழகத்திலேயே வேலைக்குச் சேர்ந்து விட்டான். இந்தியாவில் சில வரன்களும் ஜெர்மனியில் சில உறவுகளும் தொடர்ந்து, மனதளவில் நிரந்தரமாக எதையும் ஏற்க முடியாமல் திருமணத்தைத் தவிர்த்து விட்டான். அவ்வப்போது வந்தனாவின் நினைவு வந்து போகும் என்றாலும் அதைப் பற்றித் தொடர்ந்து சிந்தித்ததில்லை.

    பெண் பார்த்துப் போனவர்கள் வந்தனாவைப் பிடிக்கவில்லை என்று சொல்ல, அடுத்து வந்த இரண்டு வரன்களும் அப்படியே சொல்லிவிட, வந்தனாவின் பெற்றோர்கள் கலங்கத் தொடங்கினர். இடையில் வங்கித்தேர்வு எழுதி வெற்றி பெற்ற வந்தனா தேசிய வங்கியில் ஆபீசர் வேலைக்குச் சேர்ந்தாள். வந்தனாவின் அப்பா மும்முரமாக வரன் தேடி, அடுத்த வருடமே வந்தனாவுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தார். மணமான வந்தனா, கணவன் முரளியின் பண்பிலும் அன்பிலும் மூழ்கி மிகவும் மகிழ்ச்சியோடு இருந்தாள். வந்தனாவின் பெற்றோருக்கும் நிம்மதியாக இருந்தது.

நான்காம் வருடம் வந்தனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து வந்தனாவின் கணவனுக்கும் அவளுக்கும் வேலையில் பதவி உயர்வுக்கு மேல் உயர்வாகக் கிடைத்து வசதியும் பெருகியது. பிள்ளை ரவியை சீராட்டி வளர்த்தார்கள். வந்தனாவின் முன்னேற்றத்தில் முரளிக்கு மிகுந்த பெருமை. முரளியின் வெற்றியில் வந்தனாவுக்குக் கர்வம்.

ரவியின் எட்டாவது பிறந்த நாளுக்கு சென்னையின் பெரிய ஹோட்டலில் விழா நடத்திவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். எதிர்புறம் குடிபோதையில் மிக வேகமாகக் கார் ஓட்டிக்கொண்டிருந்தவர், தடுமாறி தடம் மாறி முரளியின் வண்டியை நோக்கி வந்தார். முரளி தன் பிள்ளையை மனதில் எண்ணிப் பயந்து அவசரமாக வண்டியை ஒடிக்க முயன்றும், வந்த வண்டி வேகமாக முரளியை இடித்து நின்றது. ரவியும் வந்தனாவும் அடிபடாது பிழைத்தாலும், விபத்தில் முரளிக்கு அடிபட்டது.

விபத்தினால் ஏற்பட்ட இரண்டு மாத கோமாவிலிருந்து விடுபட்ட முரளி நாளாவட்டத்தில் பேச்சிழந்து, சுயமாகச் சிந்தித்துச் செயல்படும் திறனிழந்தான். ஒரு வருடத்தில் வந்தனாவையும் ரவியையும் கூட அடையாளம் அறியும் நிலையிழந்தான். அவன் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததாலும், தன் வேலை பிள்ளை என்று கவனிக்க வேண்டியிருந்ததாலும், முரளியை வேலூர் அருகே தனியார் மருத்துவப் பாதுகாப்பில் விடவேண்டிய அவசியமானது. தவறாமல் வாராவாரம் ரவியுடன் சென்று முரளியைப் பார்த்து வந்தாள் வந்தனா. நாளடைவில் வந்தனாவின் பெற்றோர்களும் முரளியின் குடும்பத்தாரும் வந்தனாவை விவாகரத்து பெற்று மறுமணம் செய்துகொள்ள வற்புறுத்தினாலும், வந்தனா மறுத்துவிட்டாள்.

ரவி வளர்ந்து ஐஐடியில் சேர்ந்தபின் அடையார் வரும்பொழுதெல்லாம் வந்தனாவுக்கு ராஜ்குமாரின் நினைவு வரும். ஒதுக்கி விடுவாள். ரவியின் பட்டமளிப்பு விழாவுக்கு ஐஐடி போன போது, ராஜ்குமார் தன்னைப் பெண் கேட்டுப் போன சம்பவத்தைச் சொன்னாள். "ஒருவேளை அவர் உங்க காலேஜூல இருந்தா என்னடா செய்ய?" என்றாள் கிண்டலாக.

"ஆமாம்மா.. எப்பவோ இருவத்தஞ்சு வருசத்துக்கு முன்னால நடந்ததை இன்னும் யார் ஞாபகம் வச்சுட்டிருக்கப் போறாங்க? அதுவும் அந்தப் பெயரில் யாரும் எங்க காலேஜ்ல இல்லம்மா.. கவலைப்படாதே"

"கவலையில்லடா"

"அப்ப?" என்ற வந்தனாவை கவனமாகப் பார்த்தான் ரவி. "ஏம்மா.. அந்தாளை நினைச்சுட்டிருக்கியா?"

"சேசே.."

"அம்மா.. நீ ஏன் இன்னொரு கல்யாணம் செய்துக்கலே?"

"பையனே அம்மாவைக் கேக்குற அளவுக்கு சமூகம் முன்னேறிடுச்சா.. பலே"

"பதில் சொல்லும்மா"

"அப்புறம் உன்னை யாரு பார்த்துப்பாங்க?"

"நோ.. அதை நான் ஏற்கமாட்டேன். என்னை தாத்தா பாட்டிங்க தான் பார்த்துக்கிட்டாங்க.. நீ பாதி நேரம் ப்ரமோசன் டெபுடேசன்னு அங்க இங்கே போய்ட்டிருந்தே"

"ஐ லவ் யுர் டேடி. அதனால தான்"

"அப்பாவுக்கு தான் யாருன்ற விவரமே தெரியலே. இதுல உன்னோட லவ்வை எப்படிப் புரிஞ்சுப்பாரு? நீயும் இதை எப்படி லவ்னு சொல்றே?"

"லவ் என்பது எப்படி வருது, எப்படி நிலைக்குது, எப்படி மறையுதுனு யாருக்குமே தெரியாதுடா. நிச்சயமா எனக்குத் தெரியாது. அந்த ராஜ்குமாரைப் பார்த்ததும் எனக்குப் பிடிச்சுது. உங்க அப்பாவைப் பழகினதும் பிடிச்சுது. வெந்த காய்கறியா உங்கப்பா மாறினபிறகு கூட எனக்கு அவர் மேலிருந்த காதல் குறையவில்லை.. உங்கப்பாவுக்கு என்னோட காதல் புரிஞ்சா தான் அது காதலா?"

"அடுத்தவங்களுக்கு நம்ம காதல் புரிஞ்சு அவங்க அதைத் திருப்பலேன்னா அங்கே காதல் அழிஞ்சுடுதுமா. மேலும் காதலுக்கும் பரிவுக்கும் வித்தியாசம் தெரியலியாம்மா உனக்கு? அப்பா கிட்டே நீ காட்டுறது கொஞ்சம் பரிவு, கொஞ்சம் பரிதாபம், கொஞ்சம் தியாகம், கொஞ்சம் நன்றினு கூட சொல்லலாம்.. ஆனா அது காதல் இல்லேம்மா. தெரிஞ்சே இப்படிப் பேசுறியேமா?"

"சரி அப்படியே வச்சுக்குவோம். காதலோ கருணையோ, தான் யாருனே தெரியாத பரிதாப நிலையில் நானும் அவரைக் கைவிட்டா என்னை நானே மன்னிக்க முடியாதுடா" என்ற வந்தனா, ரவியைச் சீண்டினாள். "ஆமா.. காதலைப் பத்தி உனக்கென்னடா தெரியும்? என்ன விஷயம்.. யாரையாவது லவ் பண்றியா?"

சொன்னான். "படிப்பு முடிஞ்சப் பிறகு சொன்னாப் போதும்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டா, அதான்" காதலியைப் பற்றிச் சொல்லிச் சிரித்தான்.

"இப்பவே உன்னை கன்ட்ரோல் செய்றாளா? இந்தப் பெண்ணை எனக்குப் பிடிக்காது போலிருக்குதே ரவி?" வந்தனாவும் சிரித்தாள்.

"நாங்க மேலே படிக்க விரும்புறோம். ஐஐடின்றதால ட்ரெஸ்டன் யூனிவர்சிடில மேற்படிப்பும் ஆராய்ச்சியும் செய்ய மூணு மாச பெலோஷிப் கொடுத்திருக்காங்க. எங்க ரெண்டு பேருக்குமே கிடைச்சிருக்கு. அங்கே போன பிறகு நிச்சயம் எக்ஸ்டன்ட் ஆவும். கல்யாணம் செஞ்சுகிட்டுப் போலாம்னு இருக்கேன்மா. நீ அவங்க வீட்ல வந்து பெண் கேட்கணும். ப்லீஸ் ப்லீஸ்மா"

திக்கென்றது வந்தனாவுக்கு. ஒருவேளை முடியாது என்று சொல்வார்களோ? தன் கணவனைப் பற்றிக் கேட்பார்களோ? கலங்கினாள். மாறாக எல்லாம் இனிதாக முடிந்ததில் நிம்மதியடைந்தாள்.

ஆனால் மகனும் மருமகளும் ஜெர்மனி போன இரண்டு வருடங்களுக்குள் தான் அங்கு போக நேரிடும் என்று எதிர்பார்க்கவில்லை. அங்கே ராஜ்குமாரை சந்திக்க நேரிடும் என்பதைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

    திர்ந்த ராஜ்குமாரும் வந்தனாவும் சில நொடிகளில் சுதாரித்தார்கள். தங்களைப் பற்றிப் பேசிக்கொண்டார்கள். தங்கள் குடும்பத்தைப் பற்றிப் பேசிக்கொண்டார்கள். திருமணம் செய்துகொள்ளாத ராஜ்குமாரை ஓரிருமுறை கிண்டல் செய்தாள் வந்தனா. பதிலுக்கு ராஜ்குமாரும் கேலி செய்தான். சாப்பாட்டிலும் நிறைவு கிடைக்க, அன்றைய மாலை கழிந்ததே தெரியவில்லை. கிளம்பும் பொழுது வந்தனாவை மறுபடி சந்திக்க விரும்புவதாகச் சொல்லி விடை பெற்றான் ராஜ்குமார். போர்டிகோ வரை உடன் நடந்து வந்த ரவியுடன் எதுவும் பேசவில்லை. காரில் ஏறுமுன் தயங்கி, "ஹௌ மச் டு யூ னோ ரவி?" என்றான்.

"சார்.. என்னை மன்னிச்சுருங்க.. எனக்கு எல்லாம் தெரியும். எங்கம்மா உங்களைப் பத்தி நிறைய சொல்லியிருக்காங்க. அதனால இங்க வந்த புதுசுல உங்க பெயரைப் பார்த்ததும் கொஞ்சம் சில்லிட்டுச்சு. கொஞ்சம் உங்க பின்னணியை ரிசர்ச் செஞ்சேன். கடைசியில் அம்மா சொன்ன ராஜ்குமார் நீங்களாத்தான் இருக்கணும்னு வந்த நாலு மாசத்துக்குள்ள தெரிஞ்சு போச்சு.. ஐ ஜஸ்ட் வான்டட் யு டு மீட் மை மதர்.. தப்பா நினைக்காதீங்க" என்றான்.

"இல்லப்பா. என் வாழ்நாளில் மிகச் சிறந்த நாளை எனக்குக் கொடுத்த உனக்கு, நான் சொல்ல வேண்டிய நன்றிக்கு அளவே இல்லை. தேங்க் யூ" என்ற ராஜ்குமார் ரவியை இறுக அணைத்து விடைபெற்றான்.

வீட்டுக்குள் நுழைந்ததும் வந்தனாவைப் பார்த்து, "அம்மா.. என்னை மன்னிச்சுடுமா.. முதல்லயே சொல்ல வேணாம்னு தான்.. பட் லுக்ஸ் லைக் யு ஹேட் எ குட் டைம்" என்றான் ரவி.

"நீ இவரைக் கூட்டிவருவேனு எனக்குத் தெரியாது ரவி. சொல்லியிருக்கணும். மூட்டைகட்டிப் பூட்டி வச்சிருந்த நினைவுகளையும் உணர்வுகளையும் எதுக்குப்பா இப்படி வெளில கொண்டு வந்தே? என்ன பயன்? பழைய நினைவுகளைப் புரட்டி நாங்க ரெண்டு பேரும் கலகலப்பா பேசினோம் என்றாலும் அது ஒரு வலி தானே ரவி? நீ யோசிக்க வேணாமா?"

"அம்மா.. போதும்மா உன்னோட இல்லாஜிகல் ரீசனிங். நீ தனிமைல இருக்கேன்றது எனக்குத் தெரியாதாம்மா? அப்பாவுக்கு துரோகமா செய்யச் சொல்றேன்? தான் யாருனு கூட அவருக்குத் தெரியாது. இருவது வருசமாகப் போகுது.. இன்னும் ஹி இஸ் எ வெஜிடபில். உன்னோட வாழ்க்கையில நீ ஏன் கொஞ்சம் சந்தோஷமா இருக்கக் கூடாது?"

"நான் சந்தோஷமாத்தானே இருக்கேன்?"

"காலைல கண் முழிக்கறதுக்கு ஒரு காரணம், இரவுல கண் மூடுறதுக்கு ஒரு காரணம் - பக்கத்துல இருக்குற துணை தானேம்மா? அந்தக் காதல் துணை, அந்த சந்தோஷம் எல்லாருக்கும் கிடைக்கணும் அம்மா. வி ஆல் நீட் இட். டிசர்வ் இட். வாழுற ஒரு வாழ்க்கைல காதல் துணையின் சந்தோஷம் கூட இல்லாத போனா அது என்ன வாழ்க்கைமா? புரபசர் பைன்ஸ் பார் யு. இப்பத்தான் என்னைக் கட்டிப் பிடிச்சு தேங்க்யூனு சொல்றப்ப அவர் கண்கள்ல ஈரத்தைப் பார்த்தேன். உன்னை மறுபடி சந்திச்ச இந்த நாள், வாழ்க்கையின் இனிமையான நாள்னு சொன்னாரு. மே பி ஹி வான்ட்ஸ் டு ரெஸ்யூம் வேர் யு லெப்ட் ஆப்"

"போடா.. அதெல்லாம் நடக்காத விஷயம்"

"நடக்கக் கூடாத விஷயம்னு நீ நினைச்சா, அது நடக்காத விஷயம் ஆகுமா அம்மா? இதோ பாரும்மா. அப்பாவைக் கவனிக்குற பொறுப்பு இனிமே என்னுடையது. அந்தப் பொறுப்பிலருந்து உனக்கு நிரந்தர விடுப்பு குடுத்தாச்சு. ஐ மீன் இட். அதுக்குத்தான் நாங்க இந்தியா போகத் தீர்மானிச்சோம். இனியாவது நீ குற்ற உணர்வில்லாமல் உன் மனசு போல வாழணும் அம்மா. அதான் எனக்கும் என் குடும்பத்துக்கும் நீ தரும் ஆசீர்வாதம். உன்னோட மகிழ்ச்சி மட்டுமே எங்களை வாழ வைக்கும். உன் மனதின் எந்த ஓரத்திலயும் எந்த வலியும் உனக்கு இருக்கக் கூடாதுமா. இதான் என் விருப்பம். உங்க ரெண்டு பேருக்கு நடுவுல மறுபடி காதலை வளர்க்கத் தீர்மானிச்சீங்கன்னா, உன்னோட சங்கடங்களை நான் பார்த்துக்குறேன்மா. கையெழுத்து மட்டும் போட்டா போதும். திங்க் இட் ஓவர் ப்லீஸ்"

அன்றிரவு படுக்கையில் நிறையப் புரண்டாள் வந்தனா.

    தொடர்ந்த வாரங்களில் ராஜ்குமாரும் வந்தனாவும் தினம் சந்தித்தார்கள். எல்ப நதிக்கரையில் நிறைய நடந்தார்கள். ட்ரெஸ்டன் தியேடர்களில் நாடகங்களும் ஆபராக்களும் பார்த்தார்கள். நிறைய யோசித்தார்கள். பேசினார்கள். திட்டமிட்டார்கள்.

இரண்டு மாதங்கள் கழித்து ரவியும் அவன் மனைவியும் குழந்தையும் இந்தியா திரும்பிய பொழுது ஜோடியாக வழியனுப்பினார்கள். "உனக்கு நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கோம் ரவி" என்று ராஜ்குமார் சொன்ன பொழுது மகனைப் பற்றிப் பெருமையாக எண்ணினாள் வந்தனா.

ராஜ்குமாருடன் கை கோர்த்து மெள்ள நடக்கையில், "என்னை மணந்து கொள்வாயா வந்தனா?" என்று மேற்கத்திய முறைப்படி ராஜ்குமார் கேட்க, வந்தனா முடியாதென்றாள்.

"ஏன்?" என்று திடுக்கிட்டான் ராஜ்.

"கொஞ்ச நாள் காதலிப்போமே?" என்றாள் குறும்புடன்.

"ரைட். நீ கல்யாணத்துக்கு சம்மதிச்சதும் முதல்ல செய்ய வேண்டியது ஒண்ணு இருக்குது" என்ற ராஜைக் கேள்வியோடு பார்த்தாள்.

"சம்மதம்னு சொன்னால் தான். அவசரம் இல்லை" என்றான் அவனும் குறும்புடன்.

    அடுத்த சில மாதங்களில் இருவரும் சென்னை வந்தார்கள். தாம்பரம் முதியோர் நிலையத்தில் இருந்த ராஜ்குமாரின் அம்மாவைச் சந்தித்தார்கள். சக்கர நாற்காலியில் இருந்தவரைத் தள்ளிக் கொண்டு வந்த ராஜ், "அம்மா.. உன் மருமகளைக் கூட்டி வந்திருக்கேன்" என்றான்.

கைகளை நீட்டி, "வந்தனாவா?" என்றார் ராஜின் அம்மா.

சற்றும் தயங்காமல் அவர் சொன்னதைக் கேட்ட வந்தனா, அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதாள்.

2013/06/24

இதுவும் காதல்



    காந்தி நகர் பஸ் நிலையத்தில் கூட்டம் சேரத் தொடங்கியிருந்தது. பிற்பகல் வேளைக்கு சற்று அதிகமான கூட்டம். அவ்வப்போது காலனிக்குள்ளிருந்து வந்து போன ஒன்றிரண்டு லூனாவைத் தவிர அதிகம் போக்குவரத்து இல்லை. வெயில் தகித்தது. கிழிந்து தொங்கிய சுவரோர சினிமா போஸ்டர் ஒன்றில் ஐ.வி.சசி என்பது மட்டும் தெரிந்தது. எதிரே ரிகரி போர்ட் தொங்கிய டீக்கடை ரேடியோவில் ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி அலறியது. எதையும் பொருட்படுத்தாத எருமை மாடு ஒன்று பஸ் நிலைய நிழலில் படுத்திருந்தது.

வந்தனா பதட்டத்தை அடக்கிக் காத்திருந்தாள். பஸ் வரணுமே! சாலிடேரில் வேலை பார்த்த வந்தனாவை அன்று மாலை பெண் பார்க்க வருகிறார்கள். லீவ் கிடைக்காமல் அரை நாள் வேலைக்குப் போனவள், மதியம் கிளம்பி, கிண்டிக்கு பஸ் பிடிக்கக் காத்திருந்தாள். வீட்டுக்குப் போய், குளித்து, புடவை நகை அணிந்து, நாலு மணிக்குள் தயாராக வேண்டும்.

மனவாடு ராஜ்குமார் அமைதியாகக் காத்திருந்தான். ஐஐடியில் வேலைக்குச் சேர்ந்து ஆறு மாதமாகிறது. அன்று மாலை பெண் பார்க்கப் போகிறான். ஆலந்தூரில் ஒரு ரெட்டிக் குடும்பத்தில் எப்படியோ வரன் பிடித்து வந்திருந்த அம்மாவுடன் கிளம்பி, கிண்டிக்கு பஸ் பிடிக்கக் காத்திருந்தான்.

ராஜ்குமார் நோக்கினான். வந்தனாவும் நோக்கினாள். காத்திருந்த கண்கள் ஒரு கணம் சந்தித்து நின்றன.

சில நிமிடங்களில் வண்டி வந்தது. கூட்டமோ கூட்டம். நிற்காமலே போய்விட்டது. அடுத்து வந்த மூன்று பஸ்களும் அப்படியே. பிறகு முக்கால் மணி நேரத்துக்கு ஒரு பஸ் கூட வரவில்லை. அரைமணி முன்பு வந்த இரண்டு ஆட்டோக்களையும் தவிர்த்தது தவறோ என்று நினைக்கத் தொடங்கினான் ராஜ்.

இருந்திருந்து ஒரு ஆட்டோ வர, வந்தனா துணிச்சலுடன் அதை நிறுத்த முயலுகையில் ராஜ்குமாரின் அம்மா முந்திவிட்டார். "ஆலந்தூர்" என்று ஊர்ப்பெயரைச் சொல்ல, ஆட்டோக்காரன் நக்கலாகச் சிரித்துக் கொண்டே கிளம்பிப் போனான். "மதராஸ்வாளு அந்தரு அரவாளு.. தொங்கரு" என்றுச் சலித்துக் கொண்டார் அம்மா.

வந்தனா கலங்கியதைக் கண்ட ராஜ், "நீங்க அவசரமா போவணுமா?" என்றான்.

"பழவந்தாங்கல். பெண் பார்க்க வராங்க. பஸ் காணோம். லேட்டாயிடுச்சு" என்றாள் வந்தனா தந்திமொழியில்.

"ஏமாயிந்தி அம்மயிகி..?" என்று விசாரித்த அம்மாவுக்கு வந்தனாவின் நிலையை விளக்கினான் ராஜ். ஏனோ தெரியவில்லை, அம்மாவுக்குக் குளிர்ந்து போனது. "பாகுன்னாலமா நுவ்வு.." என்று தெருவிலே பொதுவில் வந்தனாவின் முகத்தை வாஞ்சையுடன் கைகளால் சுற்றி நெட்டி முறித்தார். ராஜிடம் அவசரமாகத் தெலுங்கில் சுந்தரமாக ஏதோ சொன்னார்.

ராஜ்குமார் சற்று வெட்கத்துடன், "மேடம்.. நாங்க ஆலந்தூர் போறோம். நானும் பெண் பார்க்கத்தான் போறேன்" என்றான். "உங்களுக்கு சம்மதம்னா கூட வாங்க. உங்களை வீட்ல விட்டுப் போவலாம்னு அம்மா சொல்லச் சொன்னாங்க.. பயப்படாம வாங்க.. நீங்க மகாலட்சுமி மாதிரி நேரில் வந்தது நல்ல சகுனம்னு நம்புறாங்க"

"அவுனம்மா.." பண்புடன் சிரித்தார் அம்மா. திகைத்த வந்தனா, புன்னகையால் நன்றி சொன்னாள்.

அடுத்தப் பதினைந்து நிமிடங்களில் காந்தி நகரிலிருந்து ஒரு டேக்சியைப் பிடித்து வந்தான் ராஜ்குமார். தயக்கமும் தவிப்பும் கலந்த உணர்வுடன் பின்னிருக்கையில் அம்மாவுடன் அமர்ந்தாள் வந்தனா.

வழியெங்கும் அம்மாவும் பிள்ளையும் தெலுங்கில் பேசிக்கொண்டிருந்தார்கள். டிரைவர் அருகே ராஜ்குமார் உட்கார்ந்திருந்த காரணத்தால் இவர்களை நோக்கிச் சற்றுத் திரும்பிப் பேச வேண்டியிருந்தது. அவ்வப்போது வந்தனாவுடனும் தமிழில் பேசி மாப்பிள்ளை பார்ப்பது பற்றி பண்புடன் கேலி செய்தான். பழவந்தாங்கல் வந்தது தெரியவில்லை.

வந்தனாவைப் அவள் வீட்டில் இறக்கி விட்டான். வழியில் வாங்கிய ஒரு கூடை மல்லிகைப்பூவை அப்படியே வந்தனா வீட்டில் கொடுத்தார் ராஜ்குமாரின் அம்மா. ஆளாளுக்கு வாழ்த்து சொல்லிக் கொண்டார்கள். முகம் முழுதும் புன்னகையுடன் ஆசி வழங்கி, மகனுடன் ஆலந்தூர் கிளம்பத் தயாரானார் ராஜ்குமாரின் அம்மா.

"நீங்க வண்டிச்சத்தமாவது வாங்கிக்கணும்..", வந்தனாவின் அப்பா வற்புறுத்தினார். தன் அப்பாவிடம் இருபது ரூபாய் வாங்கி ராஜ்குமாரிடம் கொடுத்த வந்தனா, "சார்.. தயவுசெஞ்சு வாங்கிக்குங்க.. இல்லின்னா எங்கப்பாவுக்கு மனசு தாங்காது" என்றாள். தன் பெற்றோருடன் வாசல் வரை வந்து வழியனுப்பிய வந்தனா, ராஜ்குமாரிடம் "ரொம்ப தேங்க்ஸ்" என்று உரக்கச் சொல்லிக்கொண்டு வந்தாள். "எதுக்குங்க இத்தனை தேங்க்ஸ்?" என்று கூச்சப்பட்ட ராஜ்குமார் வண்டியருகே வந்ததும், வந்தனா மென்மையாக, "மிஸ்டர் ராஜ், உங்கம்மாவுக்கு தமிழ் தெரியாது. ஆனா எனக்கு தெலுங்கு நல்லா தெரியும். பஸ் ஸ்டேன்ட்லயும் வழியிலயும் நீங்க பேசினதெல்லாம் கேட்டேன். நீங்க நல்ல மனுஷங்க. அதுக்குத்தான் இத்தனை தேங்க்ஸ்" என்றாள்.

திடுக்கிட்டதை சாமர்த்தியமாக மறைத்த ராஜ், "ரொம்ப நன்றி வந்தனா. உங்க மனம் போல் வாழ்வு அமைய எங்க வாழ்த்துக்கள்" என்றபடி தன் அம்மாவுக்கு வண்டியேற உதவினான்.

உள்ளே வந்ததும் வந்தனாவின் அம்மா, "வந்தனா.. என்ன சொன்னே அந்தாளு கிட்டே.. என்ன பேசிக்கிட்டாங்க தெலுங்குல?" என்றார்.

"ஷ்!" என்று செல்லமாக அதட்டிய வந்தனா, "அம்மா.. உன் பொண்ணு எவ்ளோ அழகா இருக்கானு அந்தம்மா தன் பையன் கிட்டே வழியெல்லாம் சொல்லிட்டே வந்தார்.. அதான்" என்று லேசாகச் சிரித்தாள். வழியில் அவர்கள் பேசியதைச் சுருக்கமாகச் சொன்னாள்.

"உனக்கென்னடி ராஜாத்தி.." என்றார் வந்தனாவின் அம்மா. "ம்ம்ம்.. அந்தப் பையனும் மகாராஜாவாட்டம் தான் இருக்கான்.. ஆனா வேறே ஜாதியாப் போச்சே?!" என்றவர், கணவர் வருவதைப் பார்த்ததும் அடங்கி, "வந்தனா.. குளிச்சு ரெடியாகு சீக்கிரம்" என்று சமையலறைக்குள் மறைந்தார். புன்சிரிப்புடன் குளிக்கப் போன வந்தனா, கடந்த இரண்டு மணி நேர நினைவுகளையும் கழுவத் தொடங்கினாள்.

    வண்டி மீனம்பாக்கம் கடந்ததும் அம்மாவிடம், "அம்மா.. அந்தப் பெண்ணுக்கு தெலுங்கு நல்லா வருமாம். நாம பேசினது, நான் எங்கே பேசினேன், நீ வழியெல்லாம் எங்கிட்டே சொன்னது அவளுக்கு தெரிஞ்சு போச்சு.. எத்தனை அவமானம்!" என்றான் ராஜ்குமார்.

"எந்துகு? அந்தப் பொண்ணு அழகா லட்சுமிகரமா இருக்குறா, நம்ம குலதெய்வம் மங்களாம்பிகா போல இருக்குறானு தானே சொன்னேன்?"

"இந்தப் பெண்ணுக்கு யார் புருஷன்னு எழுதியிருக்குதோ? உனக்குப் பாக்கப் போற பெண்ணு எப்படியோனு வேறே சலிச்சுக்கிட்டியே..?"

"அதனால என்ன ராஜு? அந்தப் பெண்ணையோ, உன்னையோ, இப்ப நாம பாக்கப் போற பொண்ணையோ தப்பா சொல்லலியே? என்னவோ அந்தப் பெண்ணைப் பாத்ததும் எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு.. அவ என் மருமகளா வரக்கூடாதானு ஆசை வந்துருச்சு.. அது தப்பா?"

"இல்லம்மா.. நீ ஆசைப்பட்டதுல தப்பே இல்லே.. ஆனா.."

"ஆனா லேது பானா லேது.. கம்முன்டுரா" என்று அடக்கினார் அம்மா. "போனி.. அதான் நாம பாக்க போற பொண்ணோட போட்டோ பாத்திருக்கமே? நேரில எப்படி இருப்பாளோனு எப்படி நடந்துக்குவாளோனு அப்படி சொன்னேன்.. தப்பாயிருந்தா மன்னிச்சுக்கப்பா.."

"அதில்லம்மா.. அந்தப் பெண்ணு நம்ம பேச்சையெல்லாம் கேட்டுக்கிட்டிருந்தான்றது.. தெலுங்கு தெரியும்னு அவ நம்ம கிட்டே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமோனு கூட தோணுது.. இருந்தாலும் இது ரொம்ப சங்கடமா போயிருச்சுமா.."

"நீ கூடத்தானே அந்தப் பொண்ணு அழகா இருக்கானு சொன்னே? அதைக் கூடத்தானே அவ கேட்டிருப்பா?"

"ஆமாம்.. அதான் சங்கடம்னு சொன்னனே?". சிரித்தார்கள்.

    ஆலந்தூர் பெண்ணைப் பார்த்துவிட்டுத் திரும்பும் பொழுது மணி ஏழிருக்கும். கிண்டி வரும் வரை இருவரும் எதுவும் பேசவில்லை.

"ஏன்ரா.. பெண்ணு பிடிச்சிருக்கில்லே?" என்றார் அம்மா.

"உனக்கு?"

"ஏன்ரா.. நானா கல்யாணம் செஞ்சுக்குறேன்? உனக்கு பிடிச்சிருக்கா?"

ராஜ் பதிலேதும் சொல்லவில்லை. சிறிது நேரம் பொறுத்து ராஜின் தோளை ஆதரவாக மெள்ளத் தொட்டார் அம்மா. "ராஜூ.. உன் மனசுல என்ன ஓடுதுனு எனக்குத் தெரியும்டா"

"நான் நினைக்கறதைத் தான் நீயும் நினைக்கிறியாம்மா?"

அம்மா புன்னகைத்தார்.

"எனக்கு இந்தப் பெண் பிடிச்சிருக்குனு பொய் சொல்ல விரும்பலமா. அப்படி சொன்னா இந்தப் பெண்ணுக்குத் துரோகம் செய்யுறாப்புலாவும். என் மனசுல அந்தப் பொண்ணு, வந்தனா, அவளே சுத்தி சுத்தி வரா. பெண் பார்க்குறப்ப கூட.. அவ முகத்தைத்தான் பார்த்தேன்.. எனக்கே கொஞ்சம் அசிங்கமா இருக்குமா.."

"உன் மனசுக்கு விருப்பம் போல நடந்துக்கப்பா, அதுதான் சரி. அந்தப் பெண்ணை மனசுல நெனச்சுட்டு இந்தப் பெண் வாழ்க்கையோட விளையாடக் கூடாதுனு நீ நெனச்சது எனக்கு ரொம்பப் பெருமையா இருக்குப்பா.." என்ற அம்மாவின் கண்கள் லேசாகப் பனித்தன. "ராஜூ.. உனக்கு அந்தப் பெண்.. வந்தனாவைப் பிடிக்குதுனா.. நாம போய் கேட்டுப் பார்ப்போமா?"

"அதெப்படிமா.. அவங்க தமிழாளுங்க.. நாம தெலுங்கு.. வேறே ஜாதி.. வேறே கலாசாரம்.. பரம்பரை.. இதெல்லாம் எப்படி ஏத்துக்குவாங்க?"

"ஜாதி பரம்பரை கலாசாரம் எல்லாத்தியும் கொளுத்திப் போடுவோம் அடுத்த சங்க்ராந்தியப்போ. உனக்கு அந்தப் பெண்ணைப் பிடிச்சிருக்கு. அந்தப் பெண்ணுக்கும் உன்னைப் பிடிச்சிருந்தா எதுவுமே தேவையில்லே.. வாழ்க்கைலே சந்தோஷம் முக்கியம். அந்தப் பெண்ணைப் பத்திப் பேசுறப்பவே உன் கண்ணு திருப்பதி லட்டாட்டம் பெரிசாவுதே?" என்ற அம்மா, வண்டியை நிறுத்தச் சொன்னார். "வண்டியை முன்ன போனமே, பழவந்தாங்கல்லோ, அந்த வீட்டுக்கு ஓட்டிப் போ" என்றார்.

"என்னம்மா இது.. என்ன செய்யுறே?"

"என் மருமகளைப் பாக்கப் போறேன்"

அம்மாவின் துணிச்சலைக் கண்டு திகைத்தான் ராஜ். "உன்னை மாதிரி எனக்கொரு அம்மா கிடைக்க நான் என்ன புண்ணியம் செய்தேனோ தெரியலேமா"

"வந்தனா போல ஒரு மருமகள் கிடைக்க நான் எதுனா புண்ணியம் செஞ்சிருக்கனா தெரியலியே ராஜூ? என்னோட செல்ல மகன் அவளைப் பத்தி சும்மா கனவு கண்டுட்டிருந்தா எப்படி? நேரில பாத்து இன்னிக்கே பேசி முடிச்சுடலாம்" என்று மகனைத் தட்டிக் கொடுத்தார் அம்மா.

வந்தனா தன்னை ஏற்க வேண்டுமே என்ற ஆசையும் ஏக்கமும் கலந்த எதிர்பார்ப்புடன் அம்மாவுக்கு நன்றி சொன்னான் ராஜ். வண்டி ஊர்ந்து செல்வது போல் தோன்றியதால் லேசான எரிச்சல் வந்ததை உணர்ந்து சிரித்துக் கொண்டான். "வந்தனா" என்று மனதுள் சொல்லிப் பார்த்தான்.

    அப்பொழுது தான் சாப்பாடு முடிந்து அன்றைய மாலையின் விவரங்களை அலசத் தொடங்கியிருந்தது வந்தனாவின் குடும்பம். வாசலில் வண்டி வந்து நிற்பதைப் பார்த்த வந்தனாவின் தம்பி உள்ளே ஓடி வந்தான். "அம்மா.. அந்த கொல்டி ஆளு அம்மாவோட மறுபடி வரான்.."

"சும்மா இருடா ப்ரூட்" என்ற வந்தனா, "அப்பா.. அவங்க கதவைத் தட்டுறாங்க" என்றாள்.

"நீங்கள்ளாம் உள்ளே போங்க" என்றபடி அவசரமாக ஒரு சட்டையை அணிந்து வாசல் கதவைத் திறந்து வரவேற்றார் வந்தனாவின் அப்பா. "வாங்க.. எதுனா மறந்துட்டீங்களா? இப்படி உட்காருங்க" என்றபடி வாசலறை சோபாவைச் சுட்டினார்.

"இல்லே.. மறக்கக் கூடாதுனு தானே வந்திருக்கோம்?" என்றபடி ஒரு கூடை பழமும் பூவும் கொடுத்தார் ராஜின் அம்மா. வசதியாக அமர்ந்து, மகனின் உதவியுடன் வந்த விவரத்தைச் சொன்னார்.

வந்தனா அப்பாவின் முகத்தில் ஆச்சரியத்திலிருந்து கோபம் வரை அத்தனை உணர்வுகளும் மின்னலாய் வந்து போயின. உள்ளே இதைக் கேட்டுக்கொண்டிருந்த வந்தனாவின் முகத்தில் கோபத்திலிருந்து ஆச்சரியம் வரை அத்தனை உணர்வுகளும் மின்னலாய் வந்து போயின. வந்தனா அம்மாவின் முகத்தில் சந்தோஷம் மட்டும் வந்து போனது. 'அப்பா என்ன சொல்லப் போகிறார்?!' என்று தவித்தார்கள்.

"வந்து.." என்றார் வந்தனாவின் அப்பா. "என் பொண்ணை நீங்க பிடிச்சிருக்குனு சொன்னது சந்தோஷம்.. ஆனா இந்தக் கல்யாணம் எப்படி.."

"ஐயா.. உங்க பெண்ணுக்குப் பிடிச்சிருக்கானு ஒரு வார்த்தை முதல்ல கேட்டுருங்களேன்.." என்றான் ராஜ்.

"எம் பொண்ணை பத்தி எனக்குத் தெரியும்" என்று அமைதியாகச் சொன்னாலும் வந்தனா அப்பாவின் குரல் ஆத்திரத்தில் நடுங்கியது.

"ஐயா" என்றார் வந்தனாவின் அம்மா. "நாங்க வேறே மொழி.. வேறே ஜாதி.. வேறே கலாசாரம்.. எல்லாம் இருக்கலாம்.. ஆனா வேறே மனுஷங்க இல்லே.. நீங்க நாங்க எல்லாரும் அதே சாமியைத்தான் கும்பிடுறோம்.. அதே சாப்பாட்டைத்தான் சாப்பிடுறோம்.. அதே ரத்தம் அதே சதை அதே உணர்வு.. எல்லாம் ஒண்ணுதானே? வந்தனா என் மருமகளா வர நான் தான் கொடுத்து வச்சிருக்கணும்.. என் பையன் நல்லா படிச்சவன், பெரிய வேலை. நாளைக்கு நல்லா வருவான். உங்க பெண்ணும் அவனும் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க.. அதோ அந்தப் படத்துல இருக்காங்களே ஸ்ரீனிவாசனும் தாயாருமாட்டம் இருப்பாங்க.. பெரியவங்க நாமதான் நடத்தி வைக்கணும்"

வந்தனாவின் அப்பா சட்டென்று, "இல்லிங்க.. இது நடக்காது" என்றார்.

"ஐயா.. அப்படிச் சொல்லாதீங்க" ராஜ்குமார் அம்மாவின் குரல் கெஞ்சியது. "உங்கப் பொண்ணைக் கேட்டுச் சொல்லுங்க.. எனக்கு புருஷன் இல்லே.. ஒரே மகன்.. அத்தனை சொத்தும் சுகமும் இருக்கு.. இதை வச்சுக்கிட்டு என் பையனுக்கு என்னால தர முடியாத மன நிம்மதியை ஒரு பார்வையிலயோ புன்சிரிப்புலயோ உங்க பெண் தினமும் தர முடியும்.. உங்க பெண்ணுக்கு என் பையனைப் பிடிக்கலின்னா வேணாம்.. ஆனா அவங்க ரெண்டு பேருக்கிடையில அன்பிருந்தா அதை நாம தடை செய்ய வேண்டாம்.. தயவுசெஞ்சு கொஞ்சம் யோசனை பண்ணிச் சொல்லுங்க.. ஜாதியெல்லாம் பாக்காதிங்க"

வந்தனாவின் அப்பா அமைதியாக, "அப்படி எதுவும் கேட்க வேண்டியதில்லிங்க...ஜாதியெல்லாம் பார்க்கலே. இன்னிக்கு சாயந்திரம் பெண் பார்க்க வந்தவங்களுக்கு வந்தனாவைப் பிடிச்சுப் போச்சு. நாங்க வெத்திலை பாக்கு மாத்திக்க சம்மதிச்சுட்டோம். தயவுசெய்து இந்த பழம் பூவெல்லாம் எடுத்துட்டுப் போயிருங்க. உங்க பையனுக்கு வேறே பெண் கிடைப்பாங்க" என்றார்.

"உங்க பெண்ணை ஒரு வார்த்தை.."

"ப்லீஸ்.. இடத்தைக் காலி பண்ணுங்க".

    அவர்கள் அகன்றதும், "ஏம்பா பொய் சொன்னே? பெண் பார்க்க வந்தவங்க ஊருக்குப் போய் லெடர் போடுறோம்னு தானே சொன்னாங்க?" என்றான் வந்தனாவின் தம்பி. அவனைச் சுட்டெரிப்பது போல் பார்த்தார் வந்தனாவின் அப்பா.

[வரும் பதிவில் நிறையும்]▶ 2

2013/06/20

சங்க சொப்பனம்



    திகாலை சுமார் மூன்று மணிக்கு அலறியடித்து விழித்து எழுந்தேன். மறுபடி தூங்கப் பயந்து.. கொஞ்சம் மோர் நானே கலந்து குடித்து.. வேப்பிலை (ப்லேஸ்டிக்) அடித்து.. விபூதி ஸ்டாக் இல்லாததால் medicated powder சிறிது பூசி.. காக்கக் காக்கக் கனகவேல் காக்க.. டகுடகு டிகுடிகு டிங்கு டிங்கு டமுக்கு டப்பா அய்சலக்கா படபடபடபடபடப்பில் இரண்டு மணி நேரம் போல் வியர்த்திருந்தேன்.

இது தான் நான் கண்ட கனவு:

உயர்நிலைப் பள்ளி. தமிழ் இரண்டாம் தாள் தேர்வு எழுதுகிறேன். கேள்வித்தாளைப் பார்க்கிறேன்.

'மாவடு கண்' என்ற உவமை ஆளப்படும் சங்கப் பாடலையும் அதற்கானப் பொருளையும் விளக்கி எழுதுக. 10 மதிப்பெண்.

சங்கப் பாடலா? எனக்கோ சினிமாப் பாட்டு தவிர வேறெதுவும் நினைவுக்கு வர மறுக்கிறது. பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல, சங்கத்துக்குப் பதில் சினிமாவை நைசாகத் தள்ளிவிட நினைத்தபடி அடுத்தக் கேள்வியைப் பார்க்கிறேன். ஆடிப்போகிறேன்.

'பண்புத்தொகை புறத்துப் பிறந்த அன்மொழியை உதாரணத்துடன் விளக்குக'.

'இன்னா எயவுடா இது முருகா?' என்று எண்ணி, முதல் நாளிரவு எழுதி மறைத்து வைத்த பிட்டை நாடுகிறேன். பேன்டுக்குப் பதில் அங்கே வேட்டி. ஆ! வேட்டியா கட்டியிருக்கிறேன்?! அதிர்ச்சியடங்கி, மீண்டும் கேள்விகளைப் படிக்கிறேன்.

'10 மதிப்பெண்' என்றிருந்தது, ஸ்பிடாமீடர் போல கிடுகிடுவென உருண்டு, '50 மதிப்பெண்' என்று என் கண் முன்னே மாறுகிறது. இரண்டு கேள்விகளைத் தவிர மற்றக் கேள்விகள் மறைந்து, அங்கே என் தமிழாசிரியரின் முகம் தோன்றுகிறது. பவர்ஸ்டார் போலச் சிரிக்கிறார்.

அலறியடித்து எழுந்தேன்.

இப்படி ஒரு கனவு வந்தால் நீங்கள் மட்டும் அலறாமல் என்னவாம்? இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே என்றா பாடுவீர்கள்?


    மினி மனைவி. சமீபத்தில் படித்த புத்தகம் #1. மேனுவல் கன்சாலெஸ் எழுதிய பதினெட்டு சிறுகதைகள். பதினெட்டில் பதினொரு கதைகளை ரசித்தேன். இவரின் கதைத்தளங்கள், கொஞ்சம் மூளையைக் கசக்கிப் பிழியும் அசாதாரணத் திகில் கலந்த வக்கிரக் குறும்புத் தளங்கள் (அப்படியென்றால்?). படித்து முடித்ததும், கதையின் விபரீதம் வக்கிரம் இவற்றின் பின்னால் இருக்கும் யதார்த்தம் புரிந்து திடுக்கிடுகிறோம்.

இரண்டு வகை தினசரி முரண்களின் comic extrapolation, இவர் கற்பனையின் வேர்.

ஒன்று: உறவுகள்.
ஆழ்ந்த நேசிப்புகளின் காரணமாகவோ, அந்த நேசிப்புகள் மெள்ள அரிக்கப்பட்ட அல்லது ஒட்டு மொத்தமாக நிராகரிக்கப்பட்டதன் ஆழ்ந்த வெறுப்பை நேசிக்கும் விபரீதம் காரணமாகவோ, சில உறவுகளையும் நினைவுகளையும் பற்றித் திண்டாடுகிறோம்.

இரண்டு: சமூகம்.
வகைசார் எதிர்பார்ப்பு வட்டங்களுக்குள் அடங்கி வாழ வேண்டிய எதிர்பார்ப்பை ஏற்றோ ஏற்காமலோ வாழும் காரணத்தால், நாமோ சமூகமோ எதிர்பார்த்தது முற்றிலும் எதிர்பாராததாக மாறும்
பொழுது நமக்கு என்ன ஆகிறது? சமூகத்துக்கு என்ன ஆகிறது? எதிர்பார்ப்புகளுக்கு என்ன ஆகிறது? (தளம் பற்றிச் சொன்னது இப்போது புரிகிறதா?)

ஒவ்வொரு சிறுகதையும் நம்மை இணையுலகுக்கு இட்டுச் சென்று ஏமாற்றி அங்கேயே தொலைத்து வருகிறது. இவருடைய முதல் புத்தகமாம். நம்பவே முடியவில்லை. புது ப்ரேட்பரியை வரவேற்று ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பி வைத்தேன்.

வாய்ப்பு கிடைத்தால் அவசியம் படியுங்கள். என்னைக் கவர்ந்த சில கதைகளின் துண்டுகள் அதுவரையில் தூண்டிலாய் உங்கள் மனதில் அலையட்டும் ;-)

பைலட்டும் எழுத்தாளனும்
சுமார் பத்தாயிரம் அடி உயரத்தில் நகரை வட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம், இருபது வருடங்களாக - இப்படித் தொடங்குகிறது கதை.

கடத்தப்பட்ட விமானம் ஒன்றில் பயணியாக நகரை வலம் வரும் எழுத்தாளனுக்கு மெள்ள மெள்ளத் தன் நிலை பழகிவிடுகிறது. இருபது வருடங்களாக ஒரு விமானத்துக்குள் அடைபட்டுக் கிடந்தால் என்ன ஆகும்? எப்பொழுது தரை தொடுவது? பிற பயணிகள் பைலட் சேவகர் அனைவரையும் தெரிந்து கொண்டாகி விட்டது. இனி? எழுத்தாளனுக்கு பழைய நினைவுகள் துணையாகின்றன. இந்த விமானம் என்றைக்காவது தரையிறங்குமா? முதலில் கவலைப்படுகிறான். நாளாக அந்தக் கவலையையும் துறக்கிறான். இறங்கத்தானே வேண்டும் ஒரு நாள்? பயணிகளுக்கும் தினம் வயதாகிக் கொண்டே போகிறதே? யாருமற்ற விமானம் தரை தொடத்தானே வேண்டும்? யாருமற்ற விமானம் தரை தொடுவதை கற்பனையில் ரசிக்கிறான். அனுபவிக்கிறான்.

தரைதொடாத கடத்தப்பட்ட விமானம் ஒரு படிமம். நம் வாழ்வு நாம் விரும்பியபடியா அமைகிறது? இந்த வாழ்வுக்குள் நாம் புகுத்தப்பட்டவர்களா? எனில், அது கடத்தல் தானே? என்றைக்குத் தரை தொடுவோம்?
கலைஞன்
tinnitus தெரியுமோ? அக்கம்ப்பக்கத்தில் எந்த ஒலியெழும்பாவிட்டாலும் காதிலும் மண்டையிலும் கிர்ர்ர்ர்ர் ஒலி கேட்குமே, அதான் tinnitus. இந்தக் கதையின் நாயகன் கார்ல், tinnitus extremus :). அதாவது கார்ல் தன் காதுகளால் பேசக் கூடியவன். in fact, காதுகளால் மட்டுமே பேசக் கூடியவன்.

ஏழு வயதில் பேசத் தொடங்கிய கார்லின் உதடுகள் அசையாமல், ஒலி மட்டும் வருவதைப் பார்த்துப் பேய் பிசாசென பயந்து போன பெற்றோரில் தொடங்கி, கார்லின் பள்ளி வாழ்வு, பின் டீனேஜ், நடுத்தர வயது அனுபவங்கள் என்று விவரமாகப் போகிறது கதை. கார்லின் நிலை பற்றிய மருத்துவக் குறிப்புகள் கொஞ்சம் இழுவையென்றாலும், புதிதாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. கார்ல் தன் இயலாமையே தன்னுடைய சிறப்பான திறமை என்று உணரத் தொடங்குவதாக முடிகிறது கதை.

நம்மில் எத்தனை பேர் வாயிருந்தும் பேசாமல் வாழ்கிறோம்? காதால் பேசுவது ஒரு படிமம். மனதைப் பேசத் துணிவின்றி மனதுள் பேசித் திரிகிறோம். பலவீனங்களை பலமாக மாற்றுவதன் அவசியத்தை எத்தனை பேர் உணர்ந்து வாழ்கிறோம்?

மினி மனைவி
அளவுச்சுருக்க விற்பன்னன் ஒருவன் தவறுதலாகத் தன் மனைவியை கட்டை விரல் அளவுக்குச் சுருக்கி விடுகிறான். அவளைப் பழைய உருவத்துக்குத் திருப்ப முயலுகையில் அவன் மனதில் வக்கிரம் தலைதூக்குகிறது. மனைவியை அதே நிலையில் விடுகிறான். ஒரு பொம்மை வீடு கட்டி அங்கே அவளை குடிவைக்கிறான். சிறையிருக்கப் பிடிக்காத மனைவி, பழி வாங்கத் தீர்மானிக்கிறாள். 'என்னை நீ பழி வாங்குவதா?' என்று சிரிக்கிறான் கணவன்.

இருவருக்கிடையிலான கார்கில் ஆரம்பம். கணவனும் மனைவியும் முறையெடுத்துக் கொண்டு ஒருவரையொருவர் சித்திரவதை செய்கிறார்கள். சோர்ந்து போகிறார்கள். எதிர்பாரா விதத்தில் கணவனைப் பழிவாங்குகிறாள் மனைவி. பதிலுக்கு வீடெங்கும் அரையடி உயரத்துக்குத் தண்ணீர் நிரப்புகிறான் கணவன். போர் தொடர்கிறது.

அளவுச் சுருக்கம் ஒரு படிமம். உருவகம். சுடுசொல்லால் தினமும் நாம் எத்தனை பேரைச் சுருக்குகிறோம்? தினம் எத்தனை சுருங்குகிறோம்? எத்தனை வதைக்கிறோம்? வதைபடுகிறோம்?


கடுகி யதரலைக்கும் கல்சூழ் பதுக்கை
விடுவி லெயினர்தம் வீளையோர்த் தோடும்
நெடுவிடை அத்தஞ் செலவுரைப்பக் கேட்டே
வடுவிடை மெல்கின கண்
.

சமீபத்தில் படித்த புத்தகம் #2. பதினென்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான கைந்நிலை. ஏனென்று கேட்காதீர்கள், படித்தேன். சங்குப்புலவர் எழுதிய உரை, இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. நீங்களும் படியுங்கள், ஏனென்று கேட்க மாட்டேன்.

மான்விழி மீன்விழி என்றெல்லாம் படித்துக் கேட்டிருக்கிறேன். முதல் முதலாக 'மாவடு கண்ணல்லவோ?' என்றச் சினிமாப் பாடல் வரியைக் கேட்டதும் திகைத்தது நினைவிருக்கிறது.

பெண் இலக்கணம் பற்றி நிறைய எழுதப்பட்டிருக்கிறது, சொல்லப்பட்டிருக்கிறது. முக்கியமானவை மூக்கும் கண்களும். ("மூக்கும் முழியுமா அழகா இருக்கா பொண்ணு" - இதில் முழியைத் தொடர்ந்து வரும் 'அழகு' என்பதற்கான பொருளறிய விரும்புவோர் 'சாமுத்ரிகா லட்சணம்' படிக்கவும். பெண்ணிலக்கணத்தில் இத்தனை நுட்பம் இருக்கிறதா எனத் திடுக்கிட வைக்கும்). ஒரு சினிமாப் பாட்டில்* கூட 'மூக்கும் விழியும் பார்க்கப் பார்க்க மோகத்தைத் தருமோ, இல்லை முன்னழகைப் பார்த்தவுடன் மூச்சு நின்றிடுமோ?' என்று வருகிறது. [நானறிந்த மட்டும், அன்றும் சரி, இன்றும் சரி - ஆண்கள் பெண்களை மோகிப்பதன் காரணம், பெண்களுக்குக் கண்கள் இரண்டு இருப்பதால் அல்ல, kapish?]

பின்னாளில் 'மாவடு கண்' என்று நிறைய புலவர்கள் பாடியிருக்கிறார்கள் என்பது தெரிந்து வியந்தேன்.

வஞ்சி நகரில் வாழும் தலைவியின் முகத்தை அழகு செய்த கண்கள் எப்படிப்பட்டவை? 'புறத்தன, ஊரன, நீரன, மாவின் திறத்தன' என்கிறது ஒரு தண்டியலங்காரப் பாடல்.

காட்டில் வாழும் மான்களின் கண்களைப் போன்றவை (புறத்தன). விரையும் அம்புகளைப் போன்றவை (ஊரன). நீரில் உள்ள குவளை மலர்களைப் போன்றவை (நீரன). and finally.. மாவடுக்களைப் போன்றவை (மாவின் திறத்தன).

திருவாசகத்திலும் வருகிறது. வழக்கம் போல் ஆணாத்திகப் புலம்பல் என்றாலும் தமிழை ரசிக்க முடிகிறது. 'பெண் எனும் பிசாசிடமிருந்து என்னைக் காத்தருளிய பெருமானே!' எனும் மாணிக்கவாசகர், தான் மாவடு கண்களில் சொக்கியதாகவும் சொல்கிறார். 'மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத்திடவுடைந்து தாழியைப் பாவு தயிர்போல் தளர்ந்தேன்' என்கிறார். மாழை = மாவடு. 'மாவடெனப் பருத்த மையிட்ட அழகானக் கண்களையுடையவர் மேல் கொண்ட ஆசை, மத்தின் சுழற்சி வேகத்தில் பானையெங்கும் அலைபாயும் தயிர் போல் என்னை நிலைகொள்ளாதுத் தளர வைத்தது' என்கிறார். (துய்க்குமட்டும் துய்த்துப்பின் பிய்த்துக் கொண்டோடும் புலவரே, மிஸ்டர் மாணிக், சற்று நில்லும். 'ஆணெனும் அரக்கனிடமிருந்து என்னை விடுவித்தாயே!' என்று பெண்கள் எந்தப் பெருமானிடம் வேண்டிப் பாடுவார்கள்.. ம்?)

சங்கப் பாடலின் மாவடு கண் சுவையானது.

இங்கே தலைவி கிடந்து தவிக்கிறாள். "என் தலைவரே, யாது மொழிந்தீர்?!" என்கிறாள். தலைவனின் முரட்டு உதடுகளைத் தன் மலரன்ன விரல்களால் பொத்தித் துடிக்கிறாள்.

ஏன் துடிக்கிறாள்? தலைவன் அப்படி என்ன சொன்னான்? நம் எண்ணத்தைப் புரிந்தவன் போல் தலைவனும் "அப்படி என்ன சொன்னேன் கண்ணே?" எனறு கேட்க எண்ணுகிறான். ஆனால் உதட்டில் பட்டத் தலைவியின் விரல்கள் சுவையாகவும் சுகமாகவும் இருப்பதால் அமைதி காக்கிறான். தலைவன் இருக்கிறானே, ர..சி..கன்.

தலைவி தொடர்கிறாள்.

"எமது காதலரே! பாலை வழிப் போவதாகச் சொல்கிறீரே! இது அடுக்குமா? பாலையை நானறியேனா? பாலை வழியெங்கும் ஆங்காங்கே புதைந்திருக்கும் பெரும்பாறைகளின் பின்னே பதுங்கியிருக்கும் கொடுமையான வேடர்களைப் பற்றி நானறியேனா? வழியில் வருவோரை அடித்து அவர் பொருள் பறிக்கும் கொடுமையானவர்களாயிற்றே? அப்பாவி வழிப்போக்கர்கள் நன்கு உள்ளுக்குள் வரும்வரை பாலையின் பற்பாறைகளில் பதுங்கியிருந்து, தப்பும் வழியின்றி அப்பாவிகள் சிக்கியதும் மிகக் கடூரமான சீழ்க்கையொலியினை எழுப்பி சுற்றியிருக்கும் வேடர்களையெல்லாம் அழைப்பதை நானறியேனா? எத்தகைய வீளையொலி? வலிய காட்டெருமைகள் கூட அந்தச் சீழ்க்கையொலியினைக் கேட்டு அஞ்சிக் கலங்கி ஓடுமே! அத்தகைய இன்னல் நிறைந்த பாலை வழியே போவதாகச் சொல்கிறீரே?!" என்று விரல்களைத் தலைவன் உதட்டிலிருந்து விலக்கிக் குவித்து அவன் நெஞ்சில் குத்துகிறாள். செல்லமாகத்தான்.

இப்படித் தலைவி பிரிவாற்றாமையில் துடிக்கும் பொழுது, அவள் மாவடுக் கண்கள் கண்ணீர் மல்கின. there you go!

மாவடு கண் இங்கே மிகச்சிறந்த உவமையாகிறது என்பது என் கருத்து. அழுத கண்கள் இடுங்கிச் சுருங்கியிருக்கும். அதனால் இங்கே மாவடு கண் என்றார் புலவர். பருத்த சிரித்த தெளிந்த கண்களுக்கு மாவடு பொருந்தினாலும், அழுத கண்களுக்கு மிகச் சிறப்பாகப் பொருந்துவதாக நினைக்கிறேன். இந்தப் பாடலைப் படிப்பவர்களுக்கு மாவடு கண் உவமை மிகுந்த நிறைவைக் கொடுக்குமென நம்புகிறேன். நெடுவிடை அத்தஞ் செலவுரைப்பக் கேட்டே வடுவிடை மெல்கின கண். ஆகா! bravo!

அலோ பிரதர், சிஸ்டர்.. அப்பால இந்த 'பண்புத்தொகை புறத்துப் பிறந்த அன்மொழி'னா இன்னானு தெர்ஞ்சுக்க கைந்நிலையின் 'ஓங்கல் விழுப்பலவி' பாடலைப் படியுங்க தெர்தா?

நிற்க, சங்கப் பாடல்கள் படித்தால் கெட்ட கனவு வராது. கனவே வராது. நாலு பக்கம் படித்தால் அப்படி அடித்துப் போடுகிறது தூக்கம். எளிமையோ கற்பனையோ நயமோ இல்லாத அருஞ்சொற்பொருளுரை கொண்ட சங்கப்பாடல்கள் ஆர்கேனிக் வேலியம் போல. முதல் பாடலில் கொட்டாவி. இரண்டாவதில் கண் செருகல். மூன்றாவதில் மயக்கம். நான்காவதில் REM.

போகிற போக்கில்: தமிழ் சாதி, தமிழ்க் குருதி (நிதானமாகப் படிக்கவும்), தமிழ் மண், தமிழ் மூச்சு என்றெல்லாம் கொடிபிடிக்கும் கூட்டம், இது போன்ற சங்க இலக்கியங்களை சுலபமான தமிழில் எளிமைப்படுத்தி எழுதலாமே? வரும் சந்ததியும் சிந்திக்குமே? ம்ம்.. அதுவும் சரி. 'எளிய அறிமுகம்' செய்கிறேன் பேர்வழி என்று இலக்கியத்தைத் தொலைத்தாலும் ஆபத்து. பிறகு நிச்சயம் கெட்ட கனவு வரும்.

* அது என்ன சினிமாப் பாட்டு? (எங்களுக்கு மட்டும் சினிமாப் பாட்டுப் புதிர் போட வராதான்னேன்?)

2013/06/14

காதில் மெல்ல..



காதல் கடிதங்கள். என் பங்குக்கு நானும் பதிவிடுகிறேன் - அடுத்தவர்கள் எழுதியவற்றை.


1. ஆர்சன் வெல்ஸ் ரீடா ஹேவர்துக்கு எழுதிய கடிதம் (1943)     ன் அன்பினும் இனிய தேவதையே ரீடா,

தனிமை ஒரு கொடூரமான நோய். இந்தப் பரந்த உலகில் நம்மில் பெரும்பாலானோர் தனிமையிலே தவிக்கிறோம். 'தனிமையில் தவிக்கிறோம்' என்பதைக் கூடத் தீவிரமாகக் காதல் வயப்பட்டால் மட்டுமே புரிந்து கொள்ளமுடிகிறது, இது எப்படிப்பட்ட முரண்! காதலற்ற துணையும் கொடூரமானத் தனிமை தானோ?

தனிமைப் பிணிக்கான மருந்து, தகுதியான துணை. நீயும் நானும் சேர்ந்த பின்னரே தகுதியான துணை என்றால் என்ன என்பதே நம்மிருவருக்கும் புரிந்தது. நாம் சந்தித்த நாளிலிருந்து ஒருவரையொருவர் அறிந்துகொண்ட தருணங்களின் அடிப்படையில் பார்க்கும் பொழுது, 'தகுதியான துணை' என்பதன் சிறப்பு, 'நானும் நீயும்' என்றத் தொடருக்குள் அடங்கிவிடுகிறதே?

தகுதியான துணையின்றி மனிதம் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் - காதலினால் அவை அத்தனையும் வெறுமையாகி விடுகின்றன என்பதை உன்னைக் காதலிக்கத் தொடங்கிய பிறகே புரிந்து கொண்டேன். உன் துணையின்றி நான் அனுபவிக்கும் இன்பங்கள், துன்பங்களை விடக் கொடியவை கண்ணே.

பேரழகியே, என் காதலியே, சூரியனைச் சற்று விரட்டேன்? நாம் சேரும் நாளுக்கான இடைவெளி குறையட்டும்.

நீ என் வாழ்க்கை. நீ மட்டுமே என் வாழ்க்கை. நீ என் வாழ்வை எத்தனை பாதிக்கிறாய் என்பதைக் கற்பனை செய்யாதே, வேண்டாம், உன் கணிப்பு என் உணர்வின் அண்மையில் கூட வராது. நீ என் வாழ்க்கை. நீ மட்டுமே என் வாழ்க்கை. நான் உன்னை அத்தனை காதலிக்கிறேன்.

உன் காதலன் ஆர்சன்.


2. நெபோலியன் தன் மனைவி யோசபினுக்கு எழுதிய கடிதம் (1796)     பேரழகியே,

நான் உன்னைக் காதலிக்கவில்லை. சற்றும் காதலிக்கவில்லை. உன்னை மனமாற வெறுக்கிறேன். நீ ஒரு திமிர் பிடித்த, குறும்பு மிகுந்த, பண்பற்ற முட்டாள் சின்டெரல்லா.

நீ எனக்கு எழுதுவதேயில்லை. உன் கணவனான என்னை நீ காதலிப்பதில்லை. உன் கடிதங்கள் எனக்கு எத்தனை இன்பமளிக்கின்றன என்பது தெரிந்தும் எனக்காக ஆறு வரிகள் எழுத மறுக்கிறாய்.

உன் காதல் கணவனைப் பற்றி எண்ண முடியாமல் உன் பொழுதுகளை ஆக்கிரமித்துக் கொள்ளும் கொடூரமான அந்தப் புதிய காதலன் யார்?

ஒரு நல்லிரவில் உன் கதவுகள் உடைபட்டுத் திறக்கும், என்னைக் காண்பாய்.

உன்னை வெறுக்கும் காதல் கணவன்.


3. பிரபல நடிகர் தன் காதலிக்கு எழுதியது (1970கள்)

யார் எழுதியது, கண்டுபிடிக்க முடியுமா?
    ண்ணே,

சோம்பும் மனம் சாத்தானின் பட்டறை என்கிறார்கள்.

சாத்தானின் இந்தப் பட்டறையை உனக்கு சமர்ப்பிக்கிறேன். தயங்காமல் உடனே எடுத்துக் கொள். உன் நினைவுகளை நிரப்பி சாத்தானை விரட்டு.


4. சிட் விஷஸ் தன் காதலி நேன்சி ஸ்பஞ்சனுக்கு எழுதிய கடிதம் (1976)

(செக்ஸ் பிஸ்டல்ஸ் ராக் குழுவில் கிடார் வாசித்தவர், சிட் விஷஸ்)
    ன் நேன்சி,
நீ உலகிலேயே சிறந்தவள் என்பதற்கான பத்து காரணங்கள் இதோ:

நீ
1. அழகானவள்
2. கவர்ச்சியானவள்
3. நேர்த்தியான உடலழகைக் கொண்டவள்
4. தேர்ந்த நகைச்சுவை உணர்வு மிக்கவள்
5. சுவாரசியமான உரையாடல்களை இயல்பாகத் தொடங்குகிறவள்
6. சிரிக்க வைப்பவள்
7. அழகான கண்கள் உடையவள்
8. உடை ரசனை மிக்கவள்
9. உலகின் மிக ஈரமான அல்குலுக்குச் சொந்தக்காரி
10. உலகின் மிகச் சிறந்த அறிவாளி

ரைட். பத்தாவது சும்மா பேருக்குச் சேர்த்திருப்பாரோ? கடிதம் எழுதியக் காதலன் இரண்டு நாள் கழித்து என்ன செய்தார் தெரியுமோ? நேன்சியை கத்தியால் கண்ட இடத்தில் குத்திக் கொன்றார். ஹ்ம்ம்.. என்ன காதலோ?!


5. மார்லன் ப்ரேன்டோ விமானப் பணிப்பெண் ஒருவருக்கு எழுதியது (1966)     ன்புமிக்கப் பெண்ணே:

உன் முகத்தின் பொலிவை என்னால் விளக்க முடியவில்லை. அழகு என்ற பாரம்பரிய விளக்கத்துக்கு அப்பாற்பட்டிருக்கிறது அது. ஒய்யாரம், சிங்காரம், மென்மை, கம்பீரம், கண்ணியம் எல்லாம் கலந்த ஒரு சீர்மை, உன் முகத்தின் பொலிவானதோ?

நீ சிறுமியாக இருந்த பொழுது உன் பெற்றோரும் உற்றோரும் உன்னை சீராட்டி வளர்த்திருக்க வேண்டும். அல்லது ஏதோ ஒரு பரிணாம மாயம் உனக்கு அந்தக் குணங்களை ஆசீர்வதித்ததோ?

எது காரணமாயினும், உன் நடை உடை பாவனை பேச்சு இவை அனைத்தாலும் நீ வெளிப்படுத்தியிருக்கும் ஒழுங்கு பாங்கானது, உன்னதமானது, கௌரவமானது.

நம் தொடர்பு மிகக் குறுகிய காலமே நிலைத்ததெனினும், நம் கண்கள் மீண்டும் சந்திக்க விரும்புகிறேன்.

அன்புடன்
மார்லன்


6. லுட்விக் பேதோவன் தன் காதலிக்கு எழுதியது (1812)

காதலி பெயரை சங்கேதமாகக் குறிப்பிட்டிருப்பதால் கள்ளத் தொடர்பாக இருக்கலாம் என்கிறர்கள். தன்னுடைய பெயரையும் 'L' என்று மட்டுமே குறிப்பிட்டிருக்கிறார். My favorite.
    ன் தேவியே, என்னவளே, எனக்கு எல்லாம் ஆனவளே,

என்னால் இன்று சில வார்த்தைகளே எழுத முடியும். என் நிலமை சில நாட்கள் வரைச் சீராக வாய்ப்பில்லை.

தியாகங்கள் புரியாமல் நம் காதல் வளராதா? காதலின் அத்தனை பலன்களும் உடனே பெற வேண்டும் என்ற ஆசையினால் மட்டுமே ஏன் நம் காதல் வளரக்கூடாது? நீ முழுமையாக என்னுடையவள் அல்ல, நான் முழுமையாக உன்னுடையவன் அல்ல என்ற இந்த நிலையை உன்னால் மாற்ற முடியாதா? உன்னைச் சுற்றியிருக்கும் இயற்கையின் இயல்பினைக் கவனித்தாவது, நாம் காலத்துக்கும் இணையப் பிறந்தவர்கள் என்றத் தவிர்க்க முடியாதத் தீர்வுக்கு உன் மனதைத் தயார் படுத்திக் கொள்ளக் கூடாதா?

காதல் முழுமையை எதிர்பார்க்கிறது. காதலுக்கு சமரசங்கள் பிடிப்பதில்லை.

உன் முழுமை எனக்கு, என் முழுமை உனக்கு, நம்மைச் சுற்றியதே உலகு என்ற காதலின் அடிப்படை எதிர்பார்ப்பை நீ மிகச் சுலபமாக அடிக்கடி மறந்துவிடுகிறாய். நீ எனக்காகவும் நான் உனக்காகவும் வாழவேண்டும் எனும் இந்த ஒருமை மனப்பாங்கை, அது இயலாதெனில் உண்டாகும் கொடிய துன்பத்தை.. என்னுடன் இருக்கும் கணங்களில் நீ உணருவதில்லை. என்னுடன் இல்லாத கணங்களில் நான் உணருகிறேன்.

விரைவில் நாம் சந்திக்கக் கூடும். என்னால் அதிகமாகச் சொல்ல முடியவில்லை. சொன்ன வார்த்தைகளைக் காட்டிலும் வெளிப்படுத்தாத எண்ணங்களில் என் இதயம் கனக்கிறது. நமக்கானதை அந்தக் கடவுள் விரைவில் வழங்கட்டும்.

நீ என்னவள், நான் உன்னவன்.

என்றும் நமக்காக
L


1, 2, 6: ரீடர்ஸ் டைஜஸ்ட் 2013 வேலன்டைன் சிறப்பிதழிலிருந்து
3: குமுதத்தில் படித்த நினைவிலிருந்து. இன்னும் யார் என்று கண்டுபிடிக்கவில்லையா? கமல்ஹாசன் வாணி கணபதிக்கு எழுதியது.
4, 5: செலப்ரிடி லவ் லெடர்ஸ், டைம் பத்திரிகை ஆவணம்




காதல் கடிதம் எழுதுங்கள்

2013/06/11

அப்பாவி

4


◀   1   2   3



    ஸ்டார்பக்ஸ் வாசலில் காத்திருந்த ஜீனாவைக் கண்டு காரை நிறுத்தி, தானியங்கிக் கதவு விசையை அழுத்தினேன். கதவு திறந்து உள்ளே ஏறிக்கொண்டாள். என்னிடம் ஒரு கோப்பையைக் கொடுத்து, "உன்னோட டோபியோ இன்னேரம் சூடு தணிஞ்சிருக்கும்.. என்னைத் திட்டாதே" என்றபடி வசதியாக முன்னிருக்கையில் உட்கார்ந்தாள். கதவு மூடிக்கொள்ள, காபிக்குச் சைகையால் நன்றி சொல்லிக் காரைக் கிளப்பினேன். பொன்னேசனை அவர் வீட்டில் சந்திப்பதாகத் திட்டம். இருபது நிமிடப் பயணம்.

தெரு தாண்டி நெடுஞ்சாலையில் சேர்ந்ததும், "மௌன விரதமா பாஸ்?" என்றாள்.

கீழுதட்டைக் கடித்தேன். "எத்தனையோ ஆசைகள் உலகில். மனிதனை சாத்தானாக்கக் கூடியவை மூன்று மட்டுமே தெரியுமா?" என்றேன்.

"காபி நல்லால்லியா பாஸ்?"

"பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை.. இந்த மூணும் தான் ஒரு மனிதனை சாத்தானுக்கு அண்மையாக்குது"

"கவலை விட்டது.. எனக்குப் பெண்ணாசையே கிடையாது" என்ற ஜீனா, என்னை ஒரு கணம் கவனித்து, "யு ஆஆஆர் சீரியஸ்" என்றாள். பிறகு, "காலங்காலைல எதுக்கு இந்த பிலாசபி?"

"நெவர் மைன்ட்" என்று அடங்கினேன்.

முதல் நாள் கண்டுபிடித்த விவரங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சொன்னேன். ஜீனா திடுக்கிட்டதை மறைக்க முயன்றது புரிந்தது.

அதற்குப் பிறகு வழியில் நாங்கள் பேசவில்லை. சிறிது நேரத்துக்குப் பின் ஜீனா என் வலது தோளைத் தொட்டு, "சாத்தானுக்கு அடிவருடுவதும் நாம எடுக்குற முடிவு தானே பாஸ்?" என்றாள். என் மனதில் ரோர்ஷேக் படிமங்கள் போல் எண்ணங்கள் வந்து போயின.

    பொன்னேசனை அவருடைய வீட்டு அலுவலக அறையில் சந்தித்தோம். எளிய மேசை நாற்காலி. சுவரில் இரண்டு கடவுள் படங்கள். ஒரு குடும்பப் படம். ஓரமாக ஒரு பூந்தொட்டி. ஜரிகையுரை திண்டுக்களுடன் இரண்டு லெதர் சோபாக்கள். என் அத்லெடிக் கட் அர்மானி சூட், அந்த இடத்துக்குப் பொருந்தவில்லை. ஜீனா கிளிப்பச்சையில் முழங்கால் மறைக்கும் ஸ்கர்ட்டும், மெல்லிய வெள்ளைப் பனியன் மேல் கறுப்பில் அரைக்கை வலைச்சட்டையும் அணிந்திருந்தாள். எந்த இடத்துக்கும் அவளுடைய உடை பொருந்துவதை எண்ணி வியந்தேன். எங்களை ஒன்பது நிமிடங்கள் காக்க வைத்து உள்ளே வந்தார் பொன்னேசன். நீல ஜீன்ஸ் பேன்ட், இந்தியப் பட்டுக் குர்தா. கால் நகம் தெரியும் தோல் செருப்பு. நான் இந்தச் சந்திப்புக்கேற்ற உடை அணியாதது உறுத்தியது. வெறும் உடையலங்காரம் தான்.. இருந்தாலும் தொடக்கமே சரியாக அமையாதது போல் உணர்ந்தேன்.

அவருக்கென தனி நாற்காலி இருந்தும், பொன்னேசன் சற்றும் கூச்சப்படாமல் ஜீனாவின் அருகே நெருக்கமாக அதே சோபாவில் அமர்ந்தார். உடனே விலகாமல், மெள்ள இடம் கொடுப்பது போல் ஜீனா சாமர்த்தியமாக நகர்ந்ததை பொன்னேசன் ரசித்தது அப்பட்டமாகத் தெரிந்தது. "என்ன சாப்பிடுறே ஜீனா?" என்று அவளை மட்டும் கேட்டார். அவள் தோளைக் குலுக்க, என்னைப் பார்த்தார். "யூ?"

நான் தயங்க, உடனே மனைவியை அழைத்தார். "எல்லாருக்கும் ஜூஸ் கொண்டா நிர்மலா" என்றார். சிஇஓ.. அத்தனை வசதியான வீடு.. பெண்டாட்டியை விருந்தோம்பல் வேலை வாங்கியது, சற்றுச் சங்கடமாக இருந்தது. நிர்மலா எங்களுக்கு அன்னாசி ஜூஸ், வறுவல் என்று ஒரு தட்டில் கொண்டு வந்து கொடுத்தார். உற்சாகம் வடிந்த முகம். அவர் கண்களில் இருந்தது பயமா, ஆயாசமா புரியவில்லை.

பேசத் தொடங்கிய என்னை "பொறுங்க" என்றுத் தடுத்த பொன்னேசன், மனைவியிடம் "நிர்மலா.. நாங்க பிசியா இருப்போம்.. தொந்தரவு செய்யாதே தெரியுதா?" என்றார். ஏன் சொன்னார் என்பது புரியவில்லை, ஆனால் நிர்மலா சத்தியமாகத் தொந்தரவு செய்யப் போவதில்லை என்பது எங்களுக்கு புரிந்தது. தலையசைத்த நிர்மலா அவசரமாக விலகியதும், "ஓகே, என்ன செடில்மென்ட் ப்ளான்?" என்றார் பொன்னேசன்.

    ஜீனா ஒரு கோப்பை அவரிடம் கொடுத்து விவரிக்கத் தொடங்கினாள். "இரண்டு ப்ரொபோசல் கொடுத்திருக்கிறோம் மிஸ்டர் பொன்னேசன். முதலாவது, கோர்ட் கேஸ் என்று போகாமல் பேச்சுவார்த்தையில் முடித்துக் கொள்ளும் சாத்தியம். இரண்டாவது, பேச்சு வார்த்தை முறிந்து வழக்கு போடும் சாத்தியத்தையொட்டி தயாரிக்கப்பட்டது. பேச்சு வார்த்தையில் முடிவதானால் நூறு மிலியனும், வழக்கு போடுவதானால் இருநூறு மிலியனும் நஷ்டஈடு கோரிக்கையாகக் கணித்திருக்கிறோம். இதில் 85% வரை ஏற்றுக் கொள்ளலாம் என்பதும் எழுபத்தைந்துக்குக் குறைவாக ஏற்க வேண்டாம் என்பதும் எங்கள் பரிந்துரை. இடைப்பட்ட பத்து சதவிகிதத்தில் எத்தனை தூரம் இழுத்துப் பிடிக்கலாம் என்பது உங்கள் விருப்பம்"

பொன்னேசன் தயங்கவேயில்லை. "இரண்டுமே எனக்குப் பிடிச்சிருக்கு" என்றபடி ஜீனாவின் மார்பிலிருந்து பார்வையை உயர்த்தி, அவள் முகத்தைப் பார்த்துப் பேசினார். பாலியல் மீறலின் மிகச் சாதாரணமான டெக்னிக் என்று மனதுள் குறித்துக் கொண்டேன். பொன்னேசன் தொடர்ந்தார். "நோ காம்ப்ரமைஸ். அவுட் ஆப் கோர்ட்னா நூறு, கோர்ட்னா இருநூறு. ஒட்டக் கறந்துடனும். ஒரு சென்ட் குறைஞ்சாலும் உங்க ஜட்டியை உருவிடுவேன்". மறுபடியும் மீறல். இவருக்கு வக்கிரக் கொச்சை இயற்கையாக வருகிறது.

அவர் பேச்சையும் பார்வையையும் பொருட்படுத்தாமல், "வழக்கு அணுகுமுறையைக் கீழே கொடுத்திருக்கிறோம் பாருங்கள்.." என்றாள் ஜீனா மிக அமைதியாக. "நூறோ இருநூறோ, செடில்மென்ட் மற்றும் வழக்குச் செலவுகள் போக, எங்கள் சம்பளம் இரண்டரை மிலியன். எல்லாவற்றையும் சிலிகான்கேட் தருவதால் உங்கள் செலவு எதுவுமில்லை. வழக்கு முடியும் வரை நாங்கள் தான் ட்ரஸ்டி. தோற்றால், வழக்குச் செலவுகளுக்கும் எங்கள் சம்பளத்துக்கும் நீங்கள் பொறுப்பு. அதனால் முதல் தவணையாக ஐந்து லட்சம் டாலர் ட்ரஸ்ட் கணக்கில் சேர்ப்பிக்க வேண்டும். நீங்கள் பணம் கட்டியவுடன் வழக்கு ஏற்பாடுகளைத் தொடங்குவோம்"

"ஐந்து லட்சம் இன்னைக்கு ட்ரேன்ஸ்பர் செய்யுறேன்.. அதுக்கு முன்னால இந்த அணுகுமுறை விவரங்கள்.."

ஜீனா அவரிடமிருந்து கோப்பைத் திரும்ப வாங்கினாள். உள்ளிருந்த ப்ரொபோசல் காகிதங்களைச் சுக்கலாகக் கிழித்துக் கோப்புக்குள்ளேயே போட்டு, என்னிடம் தந்தாள். நான் அதை என் ப்ரீபில் வைத்தபடி, அன்னாசி ஜூசை எடுத்து ஒரு மிடறு விழுங்கினேன். குரல் நனைந்ததும், "ஸ்டேன்டர்ட் ப்ரொசிஜர். இது யார் கையிலும் சிக்கக் கூடாது என்பதனால். இந்தக் கேஸ்ல நீங்க சொன்னது போல மூளையை உபயோகிச்சா போதும். இதையெல்லாம் யோசிச்சு எல்லா ஏற்பாடுகளையும் நீங்களே செஞ்சிருக்கீங்கனு எங்களுக்குப் புரியத் தாமதமானாலும், உங்களைப் பத்தி நல்லாப் புரிஞ்சுக்கிட்டோம்" என்றேன். என் உள்ளுணர்வை இவர் படிக்காமல் இருக்க வேண்டும்.

பொன்னேசன் பேசவில்லை.

தொடர்ந்தேன். "உங்க எம்ப்லாய்மென்ட் கான்ட்ரேக்ட் படி கம்பெனி லாபம், பெரிய கான்ட்ரேக்ட் வருமானம் - இவை ரெண்டு மட்டுமே உங்க நிர்வாக அளவைகள். நீங்க இரண்டிலும் அதிகமாகவே சாதிச்சிருக்கீங்க. கம்பெனி பங்கு விலை ஒரு இலக்காக இருந்தாலும், தெரியாமலோ அல்லது வேண்டுமென்றோ, நீங்க உங்க கான்ட்ரேக்டில் அதை ஒரு அளவையாகச் சேர்க்கவில்லை. உங்க போர்டும் அதை அஞ்சு வருசமா மாற்றக்காணோம். இதை சாக்கா வச்சுக்கிட்டு நீங்க பங்கு உரிமைகளைக் குவிச்சுக்கிட்டீங்க. பங்குவிலை இலக்கைத் தொடாமல் இருக்கும் வரை உங்களுக்குக் கொண்டாட்டம். லாபம் உருவாக்குற சிஇஓவை உடனடியாக யாரும் வெளியேற்றப் போவதில்லை. அப்படி செஞ்சா நீங்கள் சட்டவிரோத வேலை நீக்கம்னு கேஸ் போட்டு மொத்தத்தையும் சுருட்டிக்குவீங்கனு பயம்.. யு வேர் இன் எ குட் ஸ்பாட் மிஸ்டர் பொன்னேசன்..

.. நாங்க விசாரிச்ச வரையில் உங்க போர்டு ஆபீசர்கள் அனில் மற்றும் சூரியை உங்களுக்கு முதலிலிருந்தே பிடிக்காது. அவர்களுக்கும் உங்களை பிடிக்காது. எனினும் கம்பெனி நஷ்டத்தில் இருந்ததால் உங்கள் திறமைக்காக உங்களை நியமித்தார்கள். நாளடைவில் உங்கள் தந்திரம் அவர்களுக்குப் புரிந்துவிட்டது. விரைவில் கன்ட்ரோலிங் இன்ட்ரஸ்ட் கிடைக்கும் அளவுக்குப் பங்குகளைச் சுருட்டிக் கொள்வீர்களோ என்று பயந்தார்கள். லாபமும் கேஷ் ரிசர்வுகளும் பிஇவும் மிகச் சாதகமாகக் கூடி வரும் வேளையில், வளர்ச்சி வருமானம் என்று பல காரணங்கள் காட்டி சிலிகான்கேட்டை விட நாலுமடங்கு பெரியதான பாட்னா சிஸ்டம்ஸ் கம்பெனியைக் கடன் கூட்டி வாங்கியது உங்க புத்திசாலித்தனம் போல் தெரிந்தாலும், உண்மையில் அது கம்பெனியின் பங்கு விலையைக் கட்டுப்படுத்த நீங்கள் செய்த தந்திரம் என்பது அனேகருக்குத் தெரிந்திருக்காது.. பாட்னா சிஸ்டம்சின் கடன் சுமை இருக்கையில் உங்களை தவறான வேலை நீக்கம் செய்து, நீங்கள் கேஸ் போட்டு உள்ளதையும் சுருட்டிக் கொண்டால், கம்பெனி நிதி நிலை தரைமட்டமாகி விடும் என்ற உண்மை நிலை புரிந்ததும் வயிற்றுக்கடுப்பு வந்துவிட்டது உங்கள் போர்டுக்கு, குறிப்பாக அனில், சூரி இருவருக்கும்..

.. அதனால் ஏற்கனவே பரவலாகத் தெரிந்த கள்ள உறவுப் புகையை நன்றாகத் தூண்டிவிட்டு அதைப் பயன்படுத்தி உங்களை எரிக்கப் பார்த்தார்கள்.. அதன் விளைவுதான் டேனிகாவின் செக்சுவல் ஹெரேஸ்மென்ட் வழக்கு இல்லையா?" கேள்வியைக் கேட்டு சட்டென்று பொன்னேசன் முகத்தைக் கவனித்தேன்.

"எக்சலன்ட்" என்றார் பொன்னேசன். "ஆனால் இங்கே ஹெரேஸ்மென்ட் எதுவும் இல்லை என்பது டேனிகாவுக்கு நல்லாத் தெரியும்.. அவளா என் கூடப் படுத்தப் பிறகு எப்படி ஹெரேஸ்மென்ட் ஆகும்?" என்று ஜீனாவைப் பார்த்தார். "ஜீனா.. நீ அன்னிக்கு சொன்னது புரியுது.. பிலீவ் மி.. ஐ லவ் விமன்.. பெண்களை மதிப்பவன்.. ஒரு வற்புறுத்தலோ அத்துமீறலோ கிடையாது.. நான் மென்மையானவன்.. என்னைப் பற்றித் தெரிந்தால் உனக்கு இது புரியும்.."

திடீரென்று பொன்னேசன் தலையில் ஜீனா சம்மடியால் ரத்தம் பீறிடத் திரும்பத் திரும்ப அடித்தாள் - என் கற்பனையில். பொன்னேசன் தொடர்ந்தார். ".. அதனால டேனிகா பணத்துக்கு ஆசைப்பட்டு எனக்கெதிரா திரும்பிட்டா.. பட் ஐ டோன்ட் ப்லேம் ஹர்.. இப்பவும் அவள் மேல் எனக்கு மதிப்பு உண்டு.. அவளை நான் விரும்பித்தான் பழகினேன்.. தெர் வாஸ் எவர் நோ ஹெரேஸ்மென்ட்.. என் மனைவியை எப்படி நேசிக்கிறேனோ அதே போல்.."

நான் திடுக்கிட்டு அவரைப் பார்த்தேன். என்ன சொல்கிறார் இந்த ஆள்?

"வெல்.. உண்மையைத் தான் சொல்றேன்.. நானொரு பொம்பளை பொறுக்கி.. எ பிலேன்டரர், ப்ரம் யுவர் பெர்ஸ்பெக்டிவ்.. இதையே கைல சங்கு சக்கரம் வச்சுக்கிட்டு பல பெண்களோட சல்லாபிச்சா என் ஸ்டேடசே வேறே இல்லையா? நான் இப்படிப்பட்டவன் என்பது எனக்கு நல்லா தெரியும்.. நிர்மலாவுக்கும் தெரியும்.. பட் ஐ டைக்ரஸ்.. வழக்குக்கு வருவோம்.. ஜீனா என்னைத் தப்பா புரிஞ்சுக்ககூடாதுனு சொன்னேன்.. ப்ரோசீட்.."

என்ன உளறுகிறார்? சில நொடிகள் பிடித்தது எனக்குப் பேச்சு திரும்ப. "உங்க அந்தரங்கம் கேசுக்கு சம்பந்தமில்லே.. அதனால அதைப் பத்திப் பேச வேண்டாம் மிஸ்டர் பொன்னேசன். இந்தக் கேசை ராங்க்புல் டெர்மினேசனா மாத்துறது தான் எங்கள் அணுகுமுறையின் முக்கிய தந்திரம். அதுக்கு டேனிகா தன் கேசை வாபஸ் வாங்குறதோடு, தான் சொன்னதைத் அவங்களுக்கு எதிரா திருப்பணும்.. ஜீனா ஏற்கனவே டேனிகாவைப் பார்த்துப் பேசி ஒப்பந்தம் செய்து விட்டாள்.. ஒரு மிலியன் ரொக்கமும், ஐந்து வருடங்களுக்கு மாதம் பத்தாயிரம் டாலர் உதவிப்பணமும், டேனிகா பிள்ளை கல்லூரி நிதிக்காக கால் மிலியன் டாலரும் நிழல் செடில்மென்டாகக் கொடுத்தால் கேசை வாபஸ் வாங்குவதோடு, 'லட்சம் டாலர் லஞ்சம் கொடுத்து உங்கள் மீது பழி சுமத்தச் சொல்லி வற்புறுத்தியதாகவும் இல்லாவிட்டால் வேலையை விட்டு நீக்குவதாக பயமுறித்தியதாகவும்' அனில்-சூரி மேல் புகார் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்.. இது உங்களுக்குச் சம்மதமானால் ஒப்பந்தம் தயார் செய்கிறோம். இந்த ஒப்பந்தமோ பணம் கைமாறியதோ உங்கள் இருவரையும் எங்களையும் தவிர யாருக்கும் தெரியாது..

.. உங்க மனைவி உங்களுக்காக உதவியதும் யாருக்கும் தெரியாது. அவங்க டேனிகாவைப் பார்த்து கேசை வாபஸ் வாங்கச் சொல்லி உங்க சார்புல ஏதாவது செடில்மென்ட் செய்யமுடியுமானு தொடர்ந்து கேட்டு வந்தது எங்களுக்கு உதவியாக இருந்தது.." என்றபடி பொன்னேசனின் முகத்தைப் பார்த்தேன். புன்னகை. ராஸ்கல். தொடர்ந்தேன். "பாலியல் மீறல் புகாரை டேனிகா வாபஸ் வாங்கியதும் உங்கள் பெயரில் தவறே இல்லையென்றாகிவிடும்.. புகார் தொலைந்தால் உங்களை வேலை நீக்கம் செய்தக் காரணமே செல்லாதாகிவிடும்.. உடனே சட்டவிரோத வேலை நீக்கம் பற்றி சிலிகான்கேட் மீதும் போர்ட் மீதும் வழக்கு போடுவோம்.. அனில், சூரி மீது தனியாக மான நஷ்ட வழக்கு.. திறமைசாலி சாதனையாளர் சிஇஓ ஒருவர் மீது அபாண்டமாகப் பாலியல் பழி சுமத்தி அவருடைய கேரீரையே நாசம் செய்ய முயன்றதாக அவர்களை கோர்ட்டில் நிறுத்தி கடைசி முடியையும் உருவிடலாம்.. நூறு இருநூறு எல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை பொன்னேசன். சமரசமா அல்லது முழு வழக்கா என்பதே கேள்வி.. உங்கள் விருப்பம்.."

"சபாஷ்!" என்றார் பொன்னேசன். உற்சாகமும் வெற்றிச் சாத்தியத்தின் போதையும் அவருடைய தலைக்கேறியது எனக்குத் தெளிவாகப் புரிந்தது. இன்னும் கொஞ்சம்.

"உன்னை ரிடெய்னரில் வைத்தபோதே எனக்குத் தெரியும்.. நீ புத்திசாலி என்று.. நான் கோடு போட்டதை ரோடு போட்டுக் காமிச்சுட்டியே.. சபாஷ்.. என்னை நல்லாப் புரிந்த உன்னை மாதிரி ஒரு ஆளுதான் எனக்கு வேணும்.. அடுத்து ஒரு கம்பெனி வச்சிருக்கேன்.. அதுல நான் போர்டு சேர்மன்.. நான் வச்சது தான் சட்டம்.. கம்பெனி ஐபிஓ ஆவும்னு எல்லாரையும் நம்ப வச்சிட்டிருக்கான் என் சிஷ்யன் சிஇஓ.. அவனுக்கும் சேத்து வச்சிருக்கேன் ஆப்புத்திட்டம்.. நீதான் அதுக்கும் என்னுடைய நெகோசியேட்டர்.." பொன்னேசன் பலமாகச் சிரித்தார். "வெரி குட்.. உடனே செயல்படுத்து.. வீ ஆர் எ டீம்.."

"இல்லை சார். வீ ஆர் நாட் எ டீம். இந்த ப்ரொபோசலும் அணுகுமுறையும் உங்களிடம் தந்ததோடு என் வேலை முடிந்தது. உங்களிடம் இதுவரை வாங்கிய ரிடெய்னருக்கான வேலை. ஐ கேனாட் ரெப்ரசென்ட் யூ எனி லாங்கர் மிஸ்டர் பொன்னேசன்" என்றேன் நிதானமாக.

ஜீனாவின் முகத்தில் ஈயாடவில்லை. பொன்னேசன் முகத்தைப் பலவாறு சுருக்கினார். "என்ன சொல்றே? வை நௌ? அதிகம் பணம் வேணுமா? ஆர் யூ ப்லேக் மெயிலிங் மீ?"

"இல்ல சார். இந்த மீடிங் முடிஞ்சு நான் வெளியேறிய பிறகு என்னைப் பார்க்கக் கூட உங்களுக்கு வாய்ப்பிருக்காது.. ஐ'வ் நோ இன்ட்ரஸ்ட் இன் திஸ் கேஸ் எனிமோர்"

"பட் ஒய்?" என்றார் பொன்னேசன். ஜீனாவின் மனதிலும் அதே கேள்வி ஓடியதை அவள் முகம் சொல்லியது.

"உங்க நேர்மையைப் பத்தி இது நாள் வரை நான் கவலைப்படவில்லை. என் கண் முன்னே நீங்கள் ஒரு டாக்கெட். அவ்வளவு தான். ஆனால் இப்போ நீங்க நேர்மையற்றவர்னு தெரிஞ்சு போனதும் நீங்க.. யு ஆர் நாட் ஜஸ்ட் எ டாக்கெட் எனி மோர்.."

"என்ன சொல்றே?"

"உங்க மனைவி நிர்மலா, டேனிகாவிடம் பேரம் பேசி உங்களுக்கு உதவியதாகச் சொன்ன போது நீங்க புன்னகையோட இருந்தீங்க. தட் இஸ் வென் இட் ஹிட் மி. பாருங்க சார்.. உங்க மனைவி டேனிகாவை அடிக்கடிச் சந்தித்துப் பேசியதாக ஜீனா கண்டுபிடித்ததும் முதலில் நானும் அப்படித்தான் நினைத்தேன். வரம்பு மீறினாலும் கணவனுக்கு உதவ வேண்டுமென்று அவர் தியாகம் செய்வதாக.. ஆனால் ஏதோ பொறி தட்டி உங்க பழைய கேசைத் தேடிப் பார்த்தேன். இன்போசயன்ஸ் கேஸ். அங்கேயும் பெண் பித்து, பாலியல் புகார். வெளியுலகைப் பொறுத்தவரை சிலிகான்கேட் தந்த உங்க ரெண்டாவது சான்ஸையும் நீங்க பொம்பளை வெறி பிடிச்சுக் கெடுத்துக்கிட்டீங்கனு சொல்வாங்க.. பட் எனக்கு வித்தியாசமா தோணிச்சு, மிஸ்டர் பொன்னேசன்..

..உங்க கேஸ் விவரங்களை எடுத்துட்டு அந்தப் பெண்ணையும் சந்தித்துப் பேசினேன். என் போலீஸ் நண்பன் உதவியோடு மிரட்டினேன். உடனே விஷயத்தை எல்லாம் சொல்லிட்டாங்க. நீங்களும் உங்க மனைவியும் இதில் கூட்டு. உங்கள் பெண்பித்தை அவர் தனக்குச் சாதகமாகவும் பயன்படுத்திக்கிட்டார். நீங்க ஒரு பெண்ணுடன் பழக வேண்டியது. கொஞ்ச நாளில் அந்தப் பெண் கேஸ் போடுவதாக மிரட்ட வேண்டியது.. பிறகு செடில்மென்ட் என்று எல்லாவற்றையும் அமுக்கிவிடுவது.. அடுத்த டார்கெட்.. உங்க மோடிவ்களை இன்போசயன்ஸ் காரங்க கண்டுபிடிக்காதது உங்க லக்.. சுலபமா உங்களை உள்ளே தள்ளியிருக்கலாம்..

.. ஏன் இப்படி செய்யறீங்க, என்ன மோடிவ்னு ரொம்ப யோசிச்சேன்.. பேராசைக்கு மோடிவ் கிடையாதுனு சாக்ரேட்ஸ் காலத்துலந்து சொல்லிட்டிருக்குறது எத்தனை உண்மைனு இன்னைக்குப் புரிஞ்சுக்கிட்டேன். நீங்க உங்க மனைவி.. ரெண்டு பேருமே பேதலாஜிகலி க்ரீடி.. உங்களுக்கு இது ஒரு வியாதி போல.. திட்டம் போட்டு செய்யுறீங்க.. கல்லூரியில் ஒண்ணா படிச்ச காலத்துலந்து நீங்க ரெண்டு பேரும் சின்ன சின்ன திருட்டுக்கள் செய்து வந்திருக்கீங்க.. எல்லாத்தையும் விசாரிச்சேன். ஐ கேன் கோ இன்டு டீடெய்ல்ஸ்.."

பொன்னேசன் முகம் கறுத்திருந்தது.

தொடர்ந்தேன். "மிஸ்டர் பொன்னேசன்.. இது தெரிஞ்ச பிறகும் நான் உங்க கேசை எடுத்துக்கிட்டேன்னா அது என் தொழில் தர்மப்படி தப்பு. இருபத்து நாலு மாநிலத்துல பார் எக்சேம் எழுதி, நாயா உழைச்சு, கஷ்டப்பட்டு சேர்த்த பெயரும் போயிரும்.. மன்னிச்சுருங்க.."

"அப்படி என்னய்யா தப்பு செஞ்சுட்டேன்? புரூவ் பண்ண முடியுமா? அந்தப் பொண்ணு தான் ஹெரேஸ்மென்ட் புகார் கொடுத்தா.. இப்பவும் பொண்ணு தான் எம்பேர்ல புகார் கொடுத்து செடில்மென்டுக்கு ஒப்புக்குறாங்க.."

"எதையும் ப்ரூவ் பண்ணமுடியாது.. உண்மை தான். உங்க அணுகுமுறையில் ஒரு பிழையும் இல்லை.. எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு கீழ்த்தரமான செய்கையை மையமாக வைத்து உங்க குற்றங்கள் நடக்குறதால, கீழ்த்தரத்தின் பரபரப்பில் குற்றங்களின் விவரங்கள் யாருக்கும் தெரிவதில்லை. ஆனா இந்த முறை செடில் ஆனதும் யாருக்காவது சந்தேகம் ஏற்படலாம்.. அல்லது ஏதோவொரு விவகாரத்தில் நீங்க பிடிபடுவீங்க.. எல்லாக் குற்றவாளிக் கதைகளும் இப்படித்தான் முடியுது.. உண்மையைச் சொல்லணும்னா, என் சந்தேகங்கள் பொய்யாக இருக்கவேண்டுமே என்று விரும்பினேன்.."

"லுக்" என்று இதமாகச் சிரித்தார் பொன்னேசன். "லெட்ஸ் பர்கெட் இட்.. உன்னோட சம்பளத்தை ரெட்டிப்பாக்குறேன். அஞ்சு மிலியன்.. இந்த டயத்துல வேறே நெகோசியேடர் தேடிப் போயிட்டிருக்க முடியாது.. இதை முடிச்சுக் குடுத்துட்டுப் போ.. இல்லின்னா ஊர்ல நீ பிசினஸ் செய்யமாட்டே"

"மன்னிச்சிருங்க.."

"இந்த விஷயங்கள் வெளியில தெரிஞ்சா உன்னைக் கொன்னுருவேன்"

சிரித்தேன். "யு கெனாட் டச் மீ பொன்னேசன். கவலைப் படாதீங்க.. நான் ஒரு வக்கீல்ன்றதுனால இது ப்ரிவிலஜ்ட் இன்பர்மேசன். குட் பை" என்று எழுந்தேன். ஜீனாவுடன் வெளிவந்தேன்.

    நாங்கள் கெட்டால் ஸ்டார்பக்ஸ்.

என் வழக்கமான டோபியோவின் மணத்தை அனுபவித்துக் கொண்டிருந்தேன். எதிரே ஜீனா புலம்பிக் கொண்டிருந்தாள். "என்ன பாஸ்.. கடைசி நிமிசத்துல இப்படிக் காலை வாரிட்டியே? தட் மேன் ஆபர்ட் பை மிலியன்.. அஞ்சு மிலியன்! அந்தாளு எந்த மாதிரிப் பொறுக்கியா இருந்தா என்ன பாஸ்.. பிழைக்கத் தெரியாதவரா இருக்கியே?"

"நாளைக்குக் கம்பி எண்ணவும் தயாரா இல்லே ஜீன். காலைல தத்துவம் சொன்னேனில்லே? மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை. இந்தாளு சாத்தானுக்கு அண்மையில்லே ஜீன். இந்தாளு சாத்தான். ஹி இஸ் எ டிஸ்ட்ரக்டிவ் போர்ஸ். சாதாரணமா தெருவுல போயிட்டிருக்குற ஒரு அப்பாவியைத் திடீர்னு ஒரு கார் இடிச்சு குத்துயிரா போட்டா எப்படி இருக்கும்? தட் இஸ் வாட் ஹி இஸ் டூயிங் டு கம்பெனிஸ். சபல ஊழல் பேர்வழிகளாகப் பார்த்து தன்னோட கீழ்த்தர ஆசையையும் தணிச்சுக்குறான்.. இடையில, சாதாரணமா இயங்கிக்கிட்டிருந்த லட்சக்கணக்கான பேருக்கு சம்பளம் கிடைக்க வழியாயிருந்த அப்பாவிக் கம்பெனி நாசமாகுது.. இன்போசயன்ஸ் காரங்களால சமாளிக்க முடிஞ்சது.. சிலிகான்கேட் காரங்களால முடியுமா சந்தேகம் தான்.. இதுக்கு அடுத்து என்ன கேட்டோ நெட்டோ யார் கண்டது! அப்படியே சமாளிச்சாலும் கம்பெனிக்கு உண்டான அவப்பெயர் மற்றும் பொருள் நஷ்டம் என்னிக்கும் மாறாதே? சிலிகான்கேட் கம்பெனியில வேலை பார்க்குறவங்களுக்கு எப்படி இருக்கும்னு உன்னால கற்பனை செய்ய முடியுதா? 'உன் மேலே கை வச்சானா உன் சிஇஓ?'னு ஒரு கணவனோ அப்பாவோ சந்தேகத்தோட கேட்க மாட்டாங்கனு, பார்க்க மாட்டாங்கனு, சொல்ல முடியுமா உன்னால?"

"கூல் இட் பாஸ்.. என் டயலாக் அது"

சிறிது நேரம் ஒருவர் முகத்தை ஒருவர் வெறித்துப் பார்த்தோம்.

"என்ன யோசிக்கிறே ஜீன்?" என்றேன்.

"உன்னை விட்டு அந்தாளோட போய் சேந்துரலாம்னு தோணுது. செக்சுக்கு செக்ஸ். செடில்மென்டுக்கு செடில்மென்ட். பிசினஸ் க்ளாஸ்ல நெக்கியடிக்காம ப்ரைவெட் ப்லேன்ல வெகேசன் போகலாம். உன்னை மாதிரி கொள்கை குடமிளகாய்னு இருந்தா செலவுக்கு என்ன செய்ய பாஸ்?"

"தாராளமா போ ஜீனா"

"அப்புறம் காலைலயும் பகல்லயும் சாப்பிடாம கிடந்து வேலை செய்யுறியோனு வருத்தமா இருக்குமே..?" சிணுங்கினாள். "போவுது போ! பிசினஸ் க்ளாஸ்னு என் தலையில எழுதியிருக்குது.."

சிரித்தேன். "தேங்க்ஸ் ஜீன். நீயில்லாமல் நான் ரொம்ப சிரமப்படுவேன்"

"என்ன செய்யப் போறே? எப்பிஐ எஸ்இசில சொல்லேன்?"

"நோ. அடர்னி-க்லையன்ட் சமாசாரம். என் தொழிலே போயிரும். உனக்குத் தெரியாதா?"

"அப்ப ஆர் யு கொனா லெட் ஹிம் ப்ரீ?"

நான் பதில் சொல்லாமல் எழுந்தேன். "ரொம்ப டயர்ட் ஜீனா. நாளைக்குப் பார்ப்போம்" என்று கிளம்பினேன். ஜீனா காரில் ஏறி மறையும் வரை என் காரில் உட்கார்ந்திருந்தேன். பிறகு என் ஐபோனை எடுத்து ஒரு எண்ணைத் தேடித் தொட்டேன்.

மறுமுனையில் குரல் வரும் வரைக் காத்திருந்து, "டேய் துரை.. நாந்தான்.. பிஸியா?" என்றேன்.

"என்ன பிஸி? ஒரு புண்ணாக்கும் இல்லை. மூணாம் பேஜுக்கு ஒரு பில்லர் வேணும்னு ந்யூஸ் எடிடர் தொந்தரவு செஞ்சுட்டிருக்காரு.. செவ்வாய்க் கிரகத்துலந்து ஒரு வண்டி தன் வீட்டுத் தோட்டத்துல இறங்கினதா ஒரு அம்மா சத்தியம் செய்யுறாங்க.. அதைப் பேட்டி எடுத்து இப்பத்தான் ந்யூஸ் கம்போஸ் செஞ்சுட்டிருக்கேன்.. என்ன விஷயம்?"

"என் தொழில்லந்து ஒரு கதைக்கான விஷயம் சொல்லுனு என்னை அடிக்கடி கேப்பியே..?"

[முற்றும்]



காதல் கடிதம் எழுதுங்கள்


2013/06/09

அப்பாவி

3


◀   1   2  



    ன் தொழில் விசித்திரமானது. பிற தொழில்களில் 'சரி தவறு' என்றுத் தீர்மானித்து ஏதோ ஒரு வழியில் போக முடியும். என் கட்சிக்காரர் அல்லது வாடிக்கையாளர் நல்லவரா கெட்டவரா என்பதைத் தீர்மானிக்கும் தகுதி இருந்தாலும், தொழில் தர்மப்படி எனக்கு உரிமை இல்லை. இன்னவர் எனத் தீர்மானிக்கும் அக்கணத்திலே, நான் பழகும் குருட்டுச் சட்டத்துக்கு கண்களைக் கொடுத்தக் குற்றத்தைச் செய்தவனாகிறேன். எனக்குத் தெரிந்த விவரங்களின் அடிப்படையில், அவை உண்மையா பொய்யா என்றக் கவலையில்லாமல், என் கட்சியை நிரபராதியென்று வாதம் செய்கிறேன். கட்சிக்காரர் எப்படிப்பட்டவர் என்பது அவருக்கு மட்டுமே தெரியும், எனக்கு அக்கறையில்லை. நான் பிரபல வக்கீலாக இருந்த நாட்களில் ஒரு கொலைக் குற்றத்தில் எக்கச்சக்கமாகச் சிக்கியிருந்த என் கட்சிக்காரரை நிரபராதி என்று வாதாடி வெற்றி பெற்றேன். தீர்ப்பு வெளியான அன்று மாலை லாஸ்வேகஸ் ஹோட்டலில் பேட்டி கொடுத்த என் கட்சிக்காரர், வெற்றிக் களிப்பில் தன் எதிரிகள் மூன்று பேரை பொதுவில் சுட்டுக் கொன்றார். வழக்கு என்னிடம் வர, அன்று தினசரி வக்கீல் தொழிலுக்கு முழுக்கு போட்டவன் - திரும்பவில்லை.

என் இப்போதைய தொழிலிலும் உத்தமர்கள் என்று எவரும் இல்லை. ஒழுக்கச் சிக்கல் விளைவுகளைத் தீர்த்து வைக்கும் தொழிலில் நான் உத்தமரை ஏன் தேடப்போகிறேன்? எனினும், என் வாடிக்கைகளின் எல்லைகளைப் புரிந்து வைத்திருக்கிறேன். செல்வத்துக்கு அப்பாற்பட்ட சில நாலெழுத்துத் தேடல்களுக்கு இந்த எல்லைகளின் புரிதல் முக்கியம் என்று உணர்ந்திருக்கிறேன்.

மாருதி பொன்னேசன் முதல் முறையாக என்னைச் சீண்டிவிடுவதாகத் தோன்றியது. 'இந்த ஆளின் எல்லைகள் என்ன?' என்று யோசித்துத் தடுமாறினேன்.

"என்ன பாஸ்.. ரொம்ப யோசிக்கிறே?" என்றாள் ஜீனா. வாசனையாக இருந்தாள். கறுப்பு மினிஸ்கர்டும் இளஞ்சிவப்பில் கையில்லாத ஷர்டும் அணிந்திருந்தாள். இன்னொரு சமயமாக இருந்தால் மேலும் தேடியிருப்பேன். பார்வையில்தான்.

அவள் என் முன் வைத்த ஸ்ட்ராபெரி கெபீரைக் கலக்கி ஒரு வாய் அருந்தினேன். "இந்தப் பொன்னேசனைப் பத்தி யோசிச்சிட்டிருந்தேன்.."

"அதான் என்ன யோசிக்கிறேனு கேட்டேன்?"

"இந்தாளு எப்படிப்பட்டவர்? புத்திசாலி. நிறைய சாதிக்கிறார். அற்ப விஷயத்துல அத்தனை சாதனைகளையும் அழிக்கிறார்னு தெரிஞ்சே செய்யுறாரா? அவர் மனைவி.. யாரிவர்? இன்னொரு பெண்.. அதுவும் தன் கணவனின் வேலை போகக் காரணமாகக் கூடியவள் என்று தெரிந்து.. அதற்கும் மேலாக தன் வாழ்க்கை.."

"ஸ்டாப் ரைட் தேர், பாஸ். வீ ஆரின்ட் ப்ரைவேட் டிக்ஸ். திஸ் இஸ் நாட் அவர் த்ரில். இந்தக் கவலையெல்லாம் கதை எழுதுறவங்களுக்கு. நமக்கில்லே. நாம யாரு? வீ ஆர் பார்ட் டைம் லாயர்ஸ் அன்ட் புல் டைம் ஸ்பின்னர்ஸ். நமக்குத் தேவை அழுக்கு வாடிக்கை, தொழிலில் வெற்றி, சுதந்திர வாழ்வுக்கானப் பணம். பொன்னேசன் ஒரு அழுக்கு வாடிக்கையாளர். வெற்றிக்கும் பணத்துக்கும் ஒரு சாதனம். அதுக்கு மேலே அனாவசியமா கவலைப்படாதே பாஸ், எனக்குக் கவலையாயிருக்கு.."

"யு ஆர் ரைட். தேவையில்லாத விஷயம்.. லெட்ஸ் ரிவ்யூ த நம்பர்ஸ்.." என்றேன்.

2005, 2006 வருட சிலிகான்கேட் வருடாந்தரக் கணக்குகளை முதலில் ஆய்ந்தோம். குறைந்து கொண்டிருந்த வருமானம், 2005ல் பத்து சதவிகித மொத்த லாபம், நெகடிவ் கேஷ் ப்லோ. 2006ல் தேங்கிய வருவாய், ஒரு சதவிகித மொத்த லாபம், பெரும் நிகர நஷ்டம், நெகடிவ் கேஷ் ப்லோ. 2007ல் பொன்னேசன் வருகை. 2007ல் அதே வருவாய், ஆனால் தீவிர ஆள்குறைப்பின் காரணமாக பாசிடிவ் கேஷ் ப்லோ, சிறிய மொத்த லாபம். 2008ல் வருவாய் முன்னேற்றம், தொடர்ந்த ஆள் குறைப்பு, பாசிடிவ் கேஷ் ப்லோ, பதினாறு சதவிகித மொத்த லாபம். தொடர்ந்து 2009ல் முன்னேற்றம். 2010-12ல் பெரும் முன்னேற்றம். மூன்று வருடங்களிலும் இருபது சதவிகித நிகர லாபம்.

கம்பெனி நிகர லாபத்தின் அடிப்படையில் 2007லிருந்து 2012 வரை, பொன்னேசனுக்கு எழுபது லட்சத்து ஐம்பதாயிரம் பங்கு உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. 2007ல் ஐந்து லட்சமும், 2008ல் ஒன்பது லட்சமும், 2009லிருந்து மிச்ச பங்குகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் சரியாக ஏழரை லட்சம் பங்குகளின் முழு உரிமையும் அவருக்குக் கிடைத்துவிட்டது. மிச்ச பங்குகளில் அவருக்கு முழு உரிமை கிடைக்கவில்லை. கம்பெனி ரூல்ஸ்படி உடனடியாக அவர் அத்தனை உரிமைகளையும் இழக்கிறார்.

2012 மற்றும் இந்த வருடத்து எதிர்பார்த்த லாபக்கணக்கு என்று ஏதாவது இழுத்தாலும் ஊக்கத்தொகை இரண்டு மூன்று மிலியனுக்கு மேல் தாண்டாது. ஒரு வருட உபரி சம்பளம் என்று சேர்த்தாலும் அரை மிலியன். கம்பெனி ரகசியம் அது இது என்று மிரட்டியோ புரட்டியோ எடுத்தால் கூட அதிக பட்சம் ஐந்தைத் தாண்டாது.

"ஒண்ணும் சரி வரலியே ஜீனா?" என்றேன். "ஐந்து மிலியன் - அதுவே ரொம்பக் கஷ்டம்"

"புரியுது. அந்தாளு கொட்டைய நசுக்குறதா சொன்ன பயமா?" சிரித்தாள் ஜீனா. "சாரி பாஸ்.."

"ஹி வாஸ் சீரியஸ் அபவுட் த மனி.. நாம என்ன தவற விட்டிருக்கோம்?"

"நான் நினைக்கிறேன்.. இழக்கப் போற பங்குரிமைகள்.. அதைச் சொல்றாரோ? பாரு பாஸ்.. அந்தாளு உரிமை இழக்கப் போவது அறுபத்து மூன்று லட்சம் பங்குகள். இன்றைய பங்கு விலையான பதினொரு டாலரின் அடிப்படையில் அது சுமார் அறுபத்தொன்பது மிலியன் டாலர். மிகப் பெரிய தொகை. அதைத் தான் சொல்றாருனு நினைக்கிறேன்.."

"ஆனால் அந்த வாதம் செல்லாதுனு அவருக்கே தெரியுமே? கான்ட்ரேக்டில் 'தகாத நடத்தையில் வெளியேற்றப்பட்டால் வழங்கப்படாத அத்தனை ஊக்கத்தொகையும் இழக்க நேரிடும்'னு சொல்லியிருக்குதே.. கையெழுத்துப் போட்டிருக்காரே? நிச்சயம் இங்க தான் ஏதோ விஷயம் இருக்கு"

"பாஸ்.. ஒண்ணைக் கவனிச்சேன்.. 2007ல் இந்தாளு வந்தபிறகு லாபம் கிடுகிடுனு ஏறிச்சே தவிர, பங்கு விலை அவ்வளவா முன்னேறல பாஸ்.. 2007ல மூணு டாலர் இருந்த பங்கு இப்ப பதினொரு டாலருக்கு வந்திருக்கு.. இருபது சதவிகிதம் நிகர லாபம் பார்க்கும் மிச்ச கம்பெனிங்க முப்பதிலிருந்து நூறு டாலர் வரை பங்கு விலையேற்றம் பார்க்குறப்ப, இவங்க கம்பெனி பத்து டாலர்ல ததிங்கிணத்தோம் போடுறது கொஞ்சம் ஆச்சரியமா இல்லே?"

"ரைட். பிஇ ரேஷியோ பாரு? பனிரெண்டைத் தாண்டவில்லை..ஹ்ம்ம்.. ரிசீவபில்ஸ், டெட் ரேஷியோ, எல்லாமே ஆரோக்கியமாத்தான் இருக்கு.. தன்னை விடப் பெரிய பாட்னா சிஸ்டம்ஸ் வாங்கியும் கடன் நிலமை ஆரோக்கியமாத்தான் இருக்கு.. இருந்தாலும் சம்திங் இஸ் ஹோல்டிங் பேக்."

"எனக்கென்னவோ இந்த ஆளு பங்கு விலை முன்னேற்றத்துல அதிகமா அக்கறை காட்டலேனு தோணுது பாஸ்"

பட்டென்று அறைந்தாற் போலிருந்தது. "மறுபடி சொல்லு" என்றேன்.

"இந்தாளு லாபத்துல அக்கறை காட்டின மாதிரி பங்கு விலைல அக்கறை காட்டலியோனு.."

"ஜீனா.. என் ஸ்வீட்.. என் கண்ணு" என்று அவள் கன்னத்தைக் கிள்ளினேன்.

"என்ன பாஸ்..?"

"எனக்கு ஒரு கப் ஜூஸ், அப்புறம் சேன்ட்விச் எடுத்துட்டு வாயேன் ப்லீஸ்.. உனக்கு ஏதும் வேணாமா? பசிக்குது.. சாப்பிட்டுக்கிட்டே இந்தாளோட கான்ட்ரேக்ட்டை மறுபடி படிச்சுரலாம்.."

அவசரமாக உணவை உள்ளே தள்ளத் தொடங்கினேன். கான்ட்ரேக்டை வேகமாகவும் உரக்கவும் படித்தாள் ஜீனா.

"ஹோல்ட் இட்" என்றேன், அரை சேன்ட்விச்சை கையில் பிடித்தபடி. "ரிபீட் தட் ப்லீஸ்"

ரிபீட்டினாள்.

"இப்ப புரியுது அனில் குருமாவும் சூரி சம்சாவும் நம்மாளை ஏன் வெறுக்கிறாங்கனு" என்றேன்.

"புதிர் போடாதே பாஸ்"

"நீ படிச்ச கான்ட்ரேக்ட்படி மாருதியோட பர்மார்மன்ஸ் அளவைகள் ரெண்டு தான் - கம்பெனி லாபம், பெரிய கான்ட்ரேக்ட் வருமானம். பங்கு விலை அறுபது டாலர் என்பது ஒரு இலக்கே தவிர, அது அவருடைய பர்மார்மன்ஸ் அளவை இல்லை. பங்கு விலை உயர்வு அளவைக்கு மாருதி ஒப்பவில்லை. அன்றைய மூணு டாலர் விலை, இன்னும் நிரூபிக்கப்படாத இவருடைய திறன், அல்லது கம்பெனி நிதி நிலவரம்.. எல்லாமே காரணமா இருந்திருக்கலாம்.. ஆனால் அடுத்து வந்த வருடாந்திர கான்டிரேக்டுகளில் ரெண்டு குடாக்குங்களும் பங்கு விலையைப் பத்தின விவரத்தை மாத்தவேயில்லே. நம்மாளு கில்லாடி. லாபத்தையும் வருமானத்தையும் மட்டும் கூட்டி மெள்ள மெள்ள பங்குகளை அநியாயத்துக்குச் சேத்துக்கிட்டாரு.."

"பங்கு விலையேற்றம் பர்பார்மன்ஸ் அளவையாக இல்லாததால இவரை வெளில தள்ள முடியலே அவங்களாலே.. ஆனா ஸ்டாக் ஆப்ஷன் அள்ளிக்கிறதையும் தடுக்க முடியலே"

"எக்சாக்ட்லி.. வருசா வருசம் பங்கு விலையைப் பத்திக் கவலைப்படாம நம்மாளு பங்கு உரிமை குவிக்குறதுல கவனம் செலுத்தினாரு"

"ஆனா.. என்ன ப்ரயோஜனம் பாஸ்? பங்கு விலை உசந்தாத் தானே எல்லாருக்கும் கொள்ளை லாபம்?"

"ரைட்.. இந்தாளு பங்கு விலையை உயர்த்தும்படி எதுவும் செய்யமாட்டாரு. சம்சாவுக்கும் குருமாவுக்கும் இந்தாளை வெளியில தள்ள முடியலே.. பாத்தாங்க.. எல்லாருக்கும் தெரிஞ்ச கதையான பொன்னேசன்-டேனிகா கள்ள உறவை வச்சு இவரை வெளியேத்த ப்லேன் போட்டாங்க.. அவங்களே டேனிகாவைத் தூண்டிவிட்டு.."

"பொன்னேசனை வேலையை விட்டு நீக்க ஒரு சுலபமான வழி.. அந்தம்மாவுக்கும் கணிசமான செடில்மென்ட்.. இவங்களுக்கும் பங்கு மிச்சம்.. இன்னொரு ஆளைக் கொண்டு வந்து.."

"எக்சாக்ட்லி.. அதான் நம்மாளு தொலைஞ்சு போன பங்கு உரிமைகளோட விலையைப் பத்திக் கவலைப்படறாரு"

"ப்ச.. என்னவோ பாஸ்.. இந்தாளோட நடத்தை எனக்குப் பிடிக்கலே.. சுத்த அயோக்கியன்.. அவன் பக்கம் நியாயம் இருக்குறதா தோணுறது எனக்குப் பிடிக்கலே பாஸ்"

"ஏய்.. நீ தானே சொன்னே? அழுக்கு, வெற்றி, பணம்னு? இந்தாளு லூஸ் பேன்ட் தான். ஆனா தொழிலில் கெட்டி. தனக்கு வேண்டியதை சாதித்துக்கொள்ளும் புத்திசாலி. நம்மளைப் பொருத்தவரை, அந்தாளோட அந்தரங்கம் அந்தாளுடையது.."

"ஸ்டில்.. அறுபது மிலியன் செடில்மென்டுக்கு எங்கே போறது பாஸ்? கான்ட்ரேக்ட்ல தகாத நடத்தை பற்றி தெளிவா போட்டிருக்காங்களே? இந்தம்மா தகாத நடத்தைனு பாலியல் மீறல் அடிப்படையில் புகார் கொடுத்திருக்காங்களே? அதன்படி அத்தனை உரிமையையும் இழக்க வேண்டிவருமே? சட்டப்படி ஏற்கப்படுமே?"

"அங்க தான் நீ முந்தா நாள் சொன்ன விஷயம் பொருந்தி வருது.."

"என்ன விஷயம்?"

"நிர்மலா பொன்னேசன்.. டேனிகா வீட்டுக்கு அடிக்கடி வரதா சொன்னியே.."

திடீரென்று விளங்கியக் குதூகலத்தில், "பாஸ்!" என்று கூவினாள் ஜீனா. "யூ ஆர் ப்ரிலியன்ட். ஒரு முத்தம் குடுக்கலாம்னு பாத்தா அப்புறம் நீ கையை வச்சுட்டு சும்மா இருக்க மாட்டே, அதான்"

"தேங்க்ஸ்.. ஆனா அது ஒரு ஹஞ்ச். அவ்வளவு தான். நீ விசாரிக்க வேண்டியது இன்னும் கொஞ்சம் இருக்கு" என்று விவரம் சொன்னேன். "இப்பவே கிளம்பு. நான் செடில்மென்ட் ஸ்டேட்மென்ட் தயார் செய்யுறேன்.. போறதுக்கு முன்னால பொன்னேசனுடன் வெள்ளிக்கிழமை மீடிங் செடப் செஞ்சுட்டுப் போ ப்லீஸ்.. ஐ திங்க் வி ஆர் ஹிட்டிங் பே டே"

"நீ என் மேலே எங்கே கை வச்சாலும் பரவாயில்லே" என்று என் உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டாள் ஜீனா. "புத்திசாலி.. கொட்டையைக் காப்பாத்திக்கிட்டே.. நான் வரட்டா?".

சற்று நேரத்தில் ஜீனா கிளம்பியதும், நான் செடில்மென்ட் கணக்குகளில் மூழ்கினேன். பொன்னேசனைப் பற்றிக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத் தொடங்கியது. நான் புரிந்து கொண்டது எனக்கே அச்சமூட்டியது. சட்டென்று ஏதோ தோன்ற, பழைய கோப்புக்களைப் புரட்டினேன். தேடியது கிடைத்தது. எடுத்துக்கொண்டு கிளம்பினேன். 'நான் சந்தேகப்படுவது சரியாக இருக்கக் கூடாதே! அனாவசியமான சந்தேகமாக இருக்கட்டுமே. உண்மையாக இருக்கக்கூடாதே!' என்றக் கலக்கத்துடன் காரைக் கிளப்பினேன்.

[வளரும்]▶ 4



காதல் கடிதம் எழுதுங்கள்


2013/06/08

அப்பாவி

2


◄◄   1  



    "நீ எதுக்கு வருத்தப்படுறே? ஐ டோன்ட் நீட் எனி சிம்பதி" என்றார் பொன்னேசன், காபி பருகியவாறு.

எனக்கு வேண்டும். ஒரு பேச்சுக்காக சொல்லி வைத்தேன், அவர் நிலமைக்கு வருந்துவதாக. மனிதர் சிறிதும் அவமானனோ வருத்தமோ படவில்லை என்பது புரிந்ததும் சற்று அதிர்ச்சியாக இருந்தது. ஜீனா ரகசியமாக என்னைக் கிண்டல் செய்தாள்.

அடுத்த சில நிமிடங்களில் பொன்னேசன் தன் பார்வையில் நடந்ததை விளக்கி முடித்தார். "ஸீ.. தெர் இஸ் நோ ஹெரேஸ்மென்ட்.. அந்தப் பொம்பிளை ஹெரேஸ்மென்ட்னு சொன்னா நான் எதிர் கேஸ் போடுணும்.. என்ன சொல்றீங்க? என் மேலே பாலியல் மீறல் வழக்கு போட அந்தம்மாவுக்கு உரிமையில்லே.. கம்பெனி ரூல்ஸ்படி இந்தக் காரணத்துக்காக என்னை வெளியேறச் சொன்னதே என்னைக் கேட்டா தப்பு.. இது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உண்டான கன்சென்சஸ் உறவு.. வீட்டுக்கு வெளிய இப்படி ஒரு உறவு வச்சதுக்காக, என் பெண்டாட்டி என் மேலே அடல்ட்ரி கேஸ் போடட்டும்.. இல்லே அந்தப் பொண்ணு எதுனா செய்யட்டும்.. அதை விட்டு பாலியல் மீறல்னு சொல்றது அபாண்டம்.. மூணு வருசமா தானா வந்து தானே என் பக்கத்துல படுத்தா? புருசனுக்குத் தெரிஞ்சோ தெரியாமலோ தானே எங்கூட ஊர் ஊரா சுத்தினா? ஓட்டல் ஓட்டலா படுத்தா? இப்ப ஹெரேஸ்மென்ட்னு சொன்னா?"

"சார்.. செக்சுவல் ஹெரேஸ்மென்ட்னா என்னனு நினைக்கிறீங்க?" என்றாள் ஜீனா. சரியாக வாங்கிக் கட்டிக் கொள்ளப் போகிறாள் என்று அஞ்சினேன். ஜீனா கவலைப்படவில்லை. "மிஸ்டர் பொன்னேசன்.. ஒரு பொண்ணு உங்ககூட படுத்த பிறகு கூட பாலியல் மீறல்னு புகார் தரலாம்.. இட் இஸ் நாட் ஜஸ்ட் த ஆக்ட்.. ஒரு பொண்ணைத் தொடாமலே கூட ஹெரேஸ் பண்ணலாம்.. ஒரு புருஷனோ பெண்டாட்டியோ கூட தங்களுக்குள்ளே செக்சுவல் ஹெரேஸ்மென்ட் அனுபவிக்க முடியும்.."

"இதை நீ தெளிவா சொல்லுறப்ப என்னால் ஏற்க முடியுது.." சிரிக்காமல் சொன்னார் பொன்னேசன்.

"வொர்க்ப்லேஸ் ஹெரேஸ்மென்ட் சட்டம் என்ன சொல்லுதுனா.. ஒருவரின் பதவி, பதவியினால் கிடைக்கும் அதிகாரம், செல்வாக்கு.. இவை தன்னுடன் அல்லது தனக்குக் கீழே வேலை செய்வோரிடையே தெரிந்தோ தெரியாமலோ வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ பாலியல் மீறலைத் தூண்டினால், அது ஹெரேஸ்மென்ட். நீங்க ஒரு சிஇஓ என்கிறதால உங்க கம்பெனியில இருக்குற அத்தனை பேரும் இந்த விதிக்கு உட்பட்டவங்க.. இன்னொரு விதத்துல சொல்லணும்னா, அவங்க அத்தனை பேரும் உங்க கீழே இருக்குறதால நீங்க இந்த விதிக்கு உட்பட்டவர். உங்க செயலுக்குப் பின்னால இருப்பது உங்க பதவி, அதனால் கிடைக்கிற அதிகாரம், அதனால் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ நடக்கக்கூடிய மீறல்.. லெட் மி டெல் யு.. உங்க கம்பெனி ஆட்கள்னு மட்டுமில்லே, உங்க கஸ்டமர் சப்லையருங்க கூட பாலியல் மீறலை உங்க அதிகாரத்தின் அடிப்படையில் உணரமுடியும்".

பொன்னேசன் விளையாட்டு அதிர்ச்சியுடன் ரிக்லைனரில் சாய்ந்தார். கைகளைக் குறுக்கி பாசாங்குப் பயத்துடன், "மை குட்னஸ், போற போக்குல பொம்பளை சாமிங்களைத் தவிர யாரையும் விட்டு வைக்கலே போலிருக்கே?" என்றார். அடுத்த நொடியில் நிமிர்ந்தமர்ந்து எங்களை நேராகப் பார்த்தார். "குட் ஜீனா. ஒண்ணு செய், என்னோட அடுத்த கம்பெனியில் பாலியல் மீறல் பத்தி நீ வந்து லெக்சர் குடு.. ஹோல்ட் ஆன் டு தட் ப்ரோமைட் அன்டில் தென். இப்ப வந்த வேலையைக் கவனிப்போமா?" என்றார் மிக இயல்பாக.

ஜீனா சுதாரித்து, "சாரி மிஸ்டர் பொன்னேசன்.. ஐ நெவர் மென்ட் டு சவுன்ட் ரைஷ்சியஸ்" என்றாள்.

பொன்னேசன் கண்டுகொள்ளவில்லை. "லுக்" என்றார் என்னைப் பார்த்து. "இந்த விவகாரத்தை நீங்க ஹேண்டில் பண்ணுங்க.. கோர்ட் கேஸ்னு போக வேண்டிய அவசியமில்லே.. அப்படித் தேவைப்பட்டா யு கேன் டேக் கேர்.. இதைக் கொஞ்சம் யோசிச்சுப் பாத்தீங்கன்னா அபாண்டமா என்னை வேலையை விட்டு நீக்கியிருக்குறது தெரியும்".

ஜீனா ஒரு பவர்பாயின்ட் ஸ்லைடை அவர் முன் நகர்த்தினாள். எனக்கொன்று தந்தாள். மிதமாகக் கனைத்து, "சார்.. உங்க எம்ப்லாய்மென்ட் கான்ட்ரேக்ட் படி நீங்க மூணு இலக்குகளை ஏத்துக்கிட்டீங்க.. நஷ்டத்துல ஓடிட்டிருந்த சிலிகான்கேட் கம்பெனியை லாபகரமா மாத்துறது, ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்த பெரிய கான்ட்ரேக்டுகளின் வருமான அளவை முப்பது சதவிகிதத்துக்கு உயர்த்துறது, கம்பெனி பங்கு விலையை அறுபது டாலருக்கு எடுத்துட்டுப் போறது. இந்த மூணுல பங்குவிலை ஒரு மென்னிலக்கு. முதல் இரண்டு இலக்குகளை ஏற்கனவே சாதிச்சிட்டீங்க.. இன் பேக்ட்.. கடந்த மூணு வருசமா சிலிகான்கேட் இருபது பர்சென்ட் நிகர லாபத்துக்கு ஓடிட்டிருக்கு.. பிலியன் டாலர் கம்பெனியாவணும்னு நீங்க சமீபத்துல வாங்கின பாட்னா சிஸ்டம்ஸ் சேர்த்து மொத்த வருமானம் கூடினாலும்.. பங்கு விலை குறையவும் அதுவே காரணமாயிருக்கு.. உங்க இலக்குகளை அடையவில்லைனு உங்களை வேலை நீக்கம் செஞ்சா அது அபாண்டம்.. ராங்க்புல் டெர்மினேசன்.. ஆனா.."

ஜீனாவை அடக்கினேன். "ஜீனா என்ன சொல்றாங்கன்னா.. இதைக் காரணம் காட்டாம எதையோ சொல்லி உங்களை வேலையை விட்டு எடுத்தது தப்புதான்.. தே ஹேவ் டு பே" என்றேன். பொன்னேசனின் முகம் சற்று அமைதியானது.

'இனி வாயைத் திறக்காதே' என்று ஜீனாவுக்கு சைகை காட்டினேன். பொன்னேசனை நேராகப் பார்த்தேன். "இந்தக் கணத்துலந்து நாங்க உங்க ஸ்போக்ஸ் டீம். நான் எல்லாத்தையும் கவனிச்சுக்குறேன். டூ கன்டிஷன்ஸ். ஐ'ம் யுர் நெகோசியேடர் அன்ட் லாபியிஸ்ட், அதனால நான் சொல்றதை நீங்க கேட்கணும்.. நோ மோர் இன்டர்வ்யூஸ்.. பத்திரிகை, டிவி, இன்டர்னெட் எதுக்கும் என்னைக் கேட்காமல் பேட்டி தராதீங்க.. ஏற்கனவே கொடுத்த பேட்டிகளை நாங்க பார்த்துக்குறோம். சிலிகான்கேட் கார்பரேட் போர்ட், இல்லே வக்கீல் நோட்டீஸ், கோர்ட் சம்மன், எதுவானாலும் எங்கிட்டே அனுப்பிருங்க. அனேகமா யாரும் நாளைலந்து உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டாங்க". ஜீனாவை நோக்கித் தலையசைத்தேன். ஜீனா நாலைந்து படிவங்களை அவர்முன் வைத்தாள். "இந்தப் பேப்பருங்கள்ள கையெழுத்துப் போடுங்க.. இந்த கேஸ் தொடர்பா அந்தம்மா, சிலிகான்கேட் போர்ட், எதிர்தரப்பு வக்கீல்கள் அத்தனை பேருடனும் உங்கள் சார்பில் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்த நீங்கள் தரும் சம்மதம்.." என்று விளக்கினாள்.

சமாதானமாக, "திஸ் வில் நாட் கோ டு கோர்ட்.. ஒரு வாரத்துல இதை மக்கள் மறந்துருவாங்க.. ஒரு மாசத்துல மறைஞ்சே போயிரும்.." என்றேன்.

"ஐ நீட் எ செடில்மென்ட்.. எவ்வளவு எதிர்பார்க்கலாம்? எல்லாத்தையும் பிடுங்கிக்கிட்டாங்களே?" என்றார் பொன்னேசன்.

அவர் குரலில் தொனித்தது கலவரமா கேலியா புரியவில்லை. எனினும் கவனமாக, "உங்க செவரென்ஸ் அஞ்சு இல்லே ஆறு மிலியன்? அந்தப் பெண்ணோட அமைதிக்கும் ஒத்துழைப்புக்கும் மிஞ்சிப் போச்சுனா அரை மிலியன். அதைத் தவிர எங்க சமபளம். அத்தனையும் சிலிகான்கேட் கம்பெனிகிட்டே வாங்கிடறேன்.." என்றேன். ஆறுதலாகத் தொனிக்காமல் அதே நேரம் கரிசனத்தோடு, "பொன்னேசன்.. இந்தக் கேஸ் அமுங்கிரும். இந்தக் கையெழுத்துங்களுக்குப் பிறகு நீங்க யார் கிட்டேயும் முகம் கொடுத்துப் பேச வேண்டிய அவசியமே இல்லை, லீவ் இட் டு அஸ். நான் பார்த்துக் கொள்கிறேன். ஒரு வாரத்துல செடில்மென்ட் டேபிலுக்கு எடுத்து வந்துடறேன்.."

பொன்னேசன் சிரித்தார். "ஆனா அஞ்சாறு மிலியன் இல்லே ப்ரதர்.. ட்ரை அம்பது அறுபது.. டு யு கெட் இட்? நீ எதுவுமே செய்ய வேண்டாம், மூளையை உபயோகிச்சா போதும். அதுக்குத்தான் உனக்கு வருசாந்தர ரிடெய்னர் கொடுத்தேன்.. யோசிக்காம சும்மா ஏதானும் குட்டையைக் குழப்பினே, கொட்டையை நசுக்கிறுவேன், ஓகே?" என்றார். கையெழுத்திட்டு எழுந்தார். ஜீனாவிடம், "இந்த ஆளோட ஏன் டயத்தை வேஸ்ட் செய்யுறே? கம் வித் மி" என்றார்.

விருட்டென்று எழுந்து என்னைப் பார்த்து, "கீப் மி போஸ்டட்" என்றார். நொடிகளில் எஸ்கலேடரில் மறைந்தார்.

    டுத்த அரைமணி நேரத்துக்குள் மாருதி பொன்னேசன் விவகாரம் முழுதும் எங்கள் அலுவலகத்துச் சொந்தமாகிவிட்டது. இந்த வழக்கு சம்பந்தமாக அவர் சார்பில் இனி எங்களை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டுமென்று அத்தனை பேருக்கும் செய்தி சொல்லியாகிவிட்டது.

தொடர்ந்து செய்ய வேண்டியவற்றை ஜீனாவும் நானும் பட்டியல் போட்டோம்.
- சிலிகான்கேட் போர்ட் அதிகாரிகளான அனில் குமார், சூரி அகர்வாலுடன் பேட்டி - நான்
- பாலியல் மீறல் வழக்கு போட்டிருக்கும் பெண்ணான டேனிகா ஹிக்ஸுடன் பேட்டி - ஜீனா
- பொன்னேசன் சேருவதற்கு முந்தைய இரண்டு, சேர்ந்த பின்னர் வெளியான அத்தனை, வருடங்களின் சிலிகான்கேட் வருடாந்தர வரவு செலவு அறிக்கைகளின் ஆய்வு - ஜீனா
- இந்த வருடத்தின் இடைக்கால கணக்கறிக்கையை சிலிகான்கேட் கம்பெனியிலிருந்து பெறுவது - ஜீனா
- சிலிகான் கேட் கம்பெனியின் ஹெச்.ஆர் தலைமையுடன் பேச்சு - நான்
- டேனிகா ஹிக்ஸின்  வக்கீலுடன் பேச்சு வார்த்தை - நான்
- பொன்னேசனுக்குச் சேரவேண்டிய தொகையின் முதல் கட்ட கணக்கெடுப்பு - நானும் ஜீனாவும்
- பொன்னேசன் அனுமதியுடன் செடில்மென்ட் திட்டம் - நானும் ஜீனாவும்
- செடில்மென்ட் பேச்சுவார்த்தை - நானும் ஜீனாவும்
- தீர்வு, சுபம், எங்கள் சம்பளத்துக்கான செக் - சிலிகான்கேட்

பேட்டிகளுக்கான ஏற்பாடுகளைத் துரிதமாகச் செய்தாள் ஜீனா.

    டுத்த மூன்று நாட்களில் அனில் குமாரையும் சூரி அகர்வாலையும் தனித்தனியாகச் சந்தித்தேன். அவர்கள் தங்களுக்குள் பேசி வைத்துக்கொண்டு என்னுடன் பேசியது சுலபமாகப் புரிந்தது. ஒரு வக்கீலோ பிஆரோ இல்லாமல் என்னுடன் நேராகப் பேசியது இன்னும் ஆச்சரியமாக இருந்தது. இருவருக்குமே மாருதி பொன்னேசனை அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்பது தெரிந்தது.

"அவருக்கு நாங்க கொடுத்தது செகன்ட் சான்ஸ். வேறே யார் கொடுப்பாங்க? அதை மதிக்காம மறுபடி இப்படி செக்ஸ் வெறி பிடிச்சு அலஞ்சு கம்பெனி பெயரையே நாசம் பண்ணிட்டாரு"

"அவரை நீங்க வேலைக்கு எடுக்குறப்ப இந்த பின்புலம் தெரிஞ்சு தானே எடுத்தீங்க..? இது மறுபடி நிகழாம தடுக்க என்ன செஞ்சீங்க?"

பதிலில்லை.

"அவரை நீங்க வேலைக்கு எடுத்த காரணம் அவரோட திறமை. இரண்டு தரப்புலயும் ஒத்துக்கிட்ட இலக்குகள். அதுல ஏதும் சந்தேகம் இல்லையே?"

"இல்லை"

"கம்பெனி லாபம், வருமான உயர்வு இரண்டையும் அவர் பல மடங்கு அதிகமா சாதிச்சுக் காட்டியிருக்காரு, உண்மை தானே?"

"உண்மை"

"அதனால் அவருக்குச் சேர வேண்டியதைக் கொடுக்கத்தானே வேண்டும்?"

"அதை நாங்க மறுக்கலியே? ஆனா அதே நேரம் அவர் கான்ட்ராக்டை சரியாப் படிச்சுப் பாருங்க.. தகாத நடவடிக்கையின் காரணமாக வேலை நீக்கம் செய்யப்படுமானால் ஊக்கத்தொகை அத்தனையும் மறுக்கப்படும்னு தெளிவா சொல்லியிருக்கு பாருங்க.. திஸ் இன்க்லூட்ஸ் அன்வெஸ்டட் ஸ்டாக்"

"தகாத நடவடிக்கைனு எதைச் சொல்றீங்க?"

"வாட் மிஸ்டர்? அந்தப் பொண்ணு செக்சுவல் ஹெரேஸ்மென்டுனு புகார் கொடுத்திருக்காங்க.."

"புகார் தானே? இன்னும் நிரூபணமாகலியே?"

"வாட்? ஏற்கனவே பாலியல் மீறல் பின்புலம் இருக்குற ஒரு சிஇஓவை வச்சுக்கிட்டிருக்குறது போதாதுனு, இப்ப புகார்கள் வரத்தொடங்கிய பிறகும் எப்படி இவரைத் தொடர்ந்து வேலையில் வச்சிருக்க முடியும்? எங்க எம்ப்லாயீஸ் என்ன நினைப்பாங்க? கஸ்டமர்ஸ் ரெண்டு பேர் ஏற்கனவே விளக்கம் கேட்டு இமெயில் அனுப்பியிருக்காங்க.. வேணும்னா உங்களுக்கு அந்த இமெயிலை காட்டுறோம். ஒரு ஒழுங்கீனம் நடந்துச்சுன்னா அதை உடனடியாக முறைக்குக் கொண்டு வரது தான் போர்டின் கடமை. அதைத்தான் நாங்க செஞ்சோம்.."

"போர்ட்ல அதிக வாக்குரிமை உங்க ரெண்டு பேருக்குத்தானே இருக்கு? மிச்ச போர்ட் மெம்பர்ஸ் எல்லாரும் விசாரிச்சாங்களா?"

"லுக் ஹியர்.. அதிக வாக்குரிமை இருக்குற நாங்க ரெண்டு பேர்தான் மாருதியை உள்ளாற கொண்டு வந்தோம்.. இப்ப எங்க கடமையைச் செய்யுறோம்.."

"பொன்னேசனுக்குச் சேர வேண்டியதை தர மறுத்தா நீங்க கோர்டுக்கு வரவேண்டியிருக்கும்.. இன்னும் நிறைய கணக்கு வழக்குகளை பொதுவில் கொண்டு வரவேண்டியிருக்கும்"

"வி வில் ஸீ அபவுட் தட்.. மொதல்ல பொன்னேசன் ஜெயிலுக்குப் போகாம இருக்காரா பார்க்கலாம்.."

"ஹி வில் நாட். அவசியமேயில்லை. இங்கே நடந்திருக்குறது ஒரு குற்றம் அல்ல. தவறு, அவ்வளவுதான். ஒரு முதிர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்பட்டிருக்குற ஒழுக்கச் சிக்கல். அந்தம்மா பாலியல் மீறலை நிரூபிக்கவே முடியாது. இத்தனை வருஷங்களுக்குப் பிறகு. அதுவும் இப்ப ஒரு குழந்தை மாருதியுடையதுனு சொல்றாங்க.. விச் இஸ் கவுன்டர் டு ஹர் க்லெய்ம். இது கோர்ட்ல பத்து நிமிசம் கூட நிக்காது. உண்மையைச் சொல்லணும்னா, உங்க கம்பெனிக்கு எதிரான சிவில் கேஸ் தான் ஜெயிக்க சான்ஸ் இருக்கு. உங்க கம்பெனியில வேலை பார்த்த அந்தம்மாவுக்குத் தகுந்த பாதுகாப்பு கொடுக்கத் தவறிய காரணத்துனால உங்க கம்பெனி தான் அவங்களுக்கு பெரிய நஷ்ட ஈடு தரவேண்டியிருக்கும்.."

"ஹெரேஸ்மென்ட் கேசை நாங்க பாத்துக்குறோம். பொன்னேசன் செய்தது எங்க கம்பெனி ரூல்ஸ்படி அத்துமீறல். பாலியல் அத்துமீறலுக்கு உடனடி வேலை நீக்கம் என்பது கம்பெனி ரூல். அதைத்தான் செய்திருக்கிறோம். வேறே ஏதாவது வேணும்னுனா பிறகு பேசுவோம்".

அத்துடன் அவர்களின் பேச்சு வார்த்தை முடிந்தது. ஹெச்.ஆர் தலைமையுடன் பேசியதில் பிரமாதமாக ஒன்றும் தெளிவாகவில்லை. அந்தப் பெண்மணியே கொஞ்சம் நடுங்கிக் கொண்டிருந்தார். கம்பெனிக்கு என்ன ஆகுமோ என்றக் கவலை. தற்செயலாக சிலிகான்கேட் விற்பனைக் குழுவில் இருவரைச் சந்தித்துப் பேசியதில், இரண்டு மூன்று வாட்காவுக்குப் பிறகு, சூரி அனில் இருவருக்குமே பொன்னேசனைப் பிடிக்காது என்பது தெரிய வந்தது. மெள்ளப் பேச்சுக் கொடுத்தேன். விழுந்தார்கள்.

"பொன்னேசனின் திறமைக்காக உள்ளே கொண்டு வந்தார்கள், ஆனால் தொடர்ந்து லாபம் காட்டியதில் லட்சக்கணக்கில் ஸ்டாக் ஆப்ஷன் பார்த்துவிட்ட பொன்னேசனைக் கண்டால் இருவருக்கும் வயிற்றெரிச்சல்.. நல்ல வேளையாக பொன்னேசனின் பெண்பித்து ஒரு வழி காட்டி விட்டது.. உடனே வேலை நீக்கம் செய்து விட்டார்கள்.."

"அதுமட்டுமில்லே.. என்னைக்கேட்டா சூரியும் அனிலும் அந்தம்மாவைப் புகார் தரச்சொல்லித் தூண்டியிருப்பாங்கனும் தோணுது"

"பொன்னேசன் பொம்பளைப் பொறுக்கி சார்.. இன்போசயன்சுலயே வெள்ளாண்டவன் தானே? இங்க வந்து சும்மா இருப்பானா? பொம்பளைப் பொறுக்கித்தனம் ஒரு வியாதி மாதிரி.."

எல்லாவற்றையும் மனதுள் குறித்துக்கொண்டேன். குடிக்கும் சாப்பாட்டுக்கும் பணம் கட்டி அவர்களுக்கு நன்றி சொல்லி வெளியே வந்தேன். ரெஜினாவுக்கு போன் செய்தேன்.

"டேனிகா நிச்சயம் கேஸ் போடுவதாகச் சொல்லுறா" என்றாள் ஜீனா. "அவளுக்குக் கல்யாணமாயிடுச்சே தவிர அவளும் கணவரும் லீகலி செபரேடட். கேதலிக் சமாசாரம். இங்கே அடல்ட்ரி கொஞ்சம் கொழகொழ விவகாரம். ஷி இஸ் டெக்னிகலி சிங்கில். பொன்னேசனைத் தவிர அவளுக்கு ரெண்டு சினேகிதர்கள் இருக்காங்களாம். ஒருத்தனோட ஸ்டெடியா வேறே இருந்தாளாம். பக்கத்து வீட்ல சொன்னாங்க. நான் போனப்ப அவ வீட்டுல ஒரு ஆம்பிளை இருந்தான். கேட்டா உறவுக்காரப் பையன்னு ஏதோ சொல்றா. ரொம்ப குழப்பமான விஷயம், பாஸ். ஆனா இந்தக் குழந்தை நிச்சயம் பொன்னேசனதுனு அடிச்சு சொல்றா. இத்தனை நாள் ஏன் பேசாம இருந்தேனு கேட்டப்ப, பயம்னு சொல்றா. இப்ப ஏன் வெளில வந்து எல்லாத்தியும் சொல்றேனு கேட்டா.. தான் செய்யுறது தப்புனு தோணுறதாவும் பிறந்த குழந்தைக்கு பொருளாதார சமூக ரீதியில் பாதுகாப்பு வேணும் என்கிற காரணத்துனாலயும் அதை பொன்னேசன் தர மறுத்த காரணத்துனாலயும்னு சொல்றா.. இந்த மாதிரி கேஸ்ல வழக்கமா வர பதில்கள்"

"நம்புறியா?"

"பிப்டி பிப்டி. உன் மீடிங்லாம் எப்படிப் போச்சு பாஸ்?"

சொன்னேன். "கம்பெனி போர்டே அந்தம்மாவைத் தூண்டிவிட்டிருக்கும்னு சொல்றாங்க என் குடிகார இன்பார்மர்ஸ்" என்றுச் சிரித்தேன்.

"இன்ட்ரஸ்டிங்"

"ஏன்?"

"பிகாஸ்.. நான் ஒரு நம்ப முடியாத விஷயம் தெரிஞ்சுக்கிட்டேனே!"

"என்னனு கேட்டாதான் சொல்வியா?"

"என்ன விஷயம்னு பணிவா கேளேன் பாஸ்?"

"என்ன விஷயம் சொல்லுங்க ரெஜினா, ப்லீஸ்"

"பெடர். டேனிகா வீட்டுக்கு திருமதி பொன்னேசன் அடிக்கடி வந்திருக்காங்க.."

"வாட்?"

"பக்கத்து வீட்டுக்காரங்க கிட்டே போட்டோஸ் காட்டினேன். பொன்னேசனைப் பார்த்ததே இல்லை, ஆனா நிர்மலா பொன்னேசனை அப்பப்போ பாக்குறதா சத்தியம் செய்றாங்க".

[வளரும்]➧ 3



காதல் கடிதம் எழுதுங்கள்


2013/06/06

அப்பாவி



    ஸ்டார்பக்ஸ் டிரைவ்-இன் வரிசையில் கலந்து, முகமறியா பரிஸ்டா பெண்ணிடம் 'டோபியோ' என்று என் தேர்வைச் சொல்லி, பணம் கட்டும் ஜன்னலுக்கு ஏறக்குறைய ந்யூட்ரலில் நகர்ந்தேன். கதவைத் திறந்து என் அமெக்ஸ் கார்டைப் புன்னகையுடன் விரல்படப் பிடுங்கி நொடிகளில் திருப்பினாள். 'என்ன பற்பசை உ..?' என்ற என் நினைப்பை முடிக்குமுன் காபி மணக்கும் ஒரு அட்டைக் கோப்பையைத் தந்து, இன்னொரு புன்னகையுடன் "போய்வா" என்றாள். வரிசையில் ஊர்ந்து வெளியேறுமுன் காபியை உதட்டில் வைத்தேன். வயிற்றில் இறங்கிய காபியின் கேபீன் பிரிந்து ரத்தத்தில் கலந்து மூளை நரம்புகளை இடிக்க, அவசரமாக வரச்சொல்லி ரெஜீனா அனுப்பிய செய்தியுடன் ஐபோன் விட்டுவிட்டு உறும, மூன்றாம் கியரில் இரண்டு Zக்கள் செய்து ஏறத்தாழ அறுபது மைல் வேகத்தில் என் ஆபீஸை நெருங்கினேன்.

ஆபீஸ் என்றால் ஏதோ எள்ளுருண்டை. மூன்றாந்தர இரண்டடுக்குக் கண்ணாடிக் கட்டிடத்தில் முதல்தர வசதிகளுடன் ஒரு சிறிய ஸ்விட். என் காரியதரிசி தொழில் துணை ஆபீஸ் மேனேஜர் அகவுன்டன்ட் பேராலீகல் காபிரைடர் ஸ்போக்ஸ்பெர்சன் ஆல்-இன்-ஆல் அழகு ராணி, மினி ஸ்கர்ட் மேக்சி மூளை, ரெஜீனாவுக்கு பெரிய முன்னறை. கதவற்ற ஸ்க்ரீன் மறைவுக்கு பிந்தைய சிற்றறை எனது. ஆபீஸ் முழுதும் மிதமான லேவன்டர் காற்றைப் பரப்பும் குளிர்சாதனம், நாலங்குல அடர்த்தியில் மெத்தை போல் பெர்பர் கார்பெட் - நிறுவிய அன்று மாலை கார்பெட் மெத்தரையினால் வேறேதும் உபரிப் பயனுண்டா என்றப் பரிசோதனை நோக்கத்தில் ஒரு முறை ரெஜீனாவும் நானும் உருண்டு... ஒரே ஒரு முறை தான்... அதற்குப் பிறகு கறாராகத் தொழில்முறை நெருக்கம் மட்டுமே.. அல்ட்ரா மினி ஸ்கர்ட் என்று தெரிந்தாலும் நான் பென்சில் பேனா தவறவிட்டதில்லை.. சில நாட்கள் கருநீலத்தில் லியொடார்ட் அணிந்து, "பாஸ், இன்றைக்கு நான் கமான்டோ" என்பாள் வேண்டுமென்றே.. தேவையில்லை, தற்சமயத்துக்கு வருகிறேன் - தலா ஒரு அன்சல் ஆடம்ஸ், பிகாசோ, மோனே தொங்கும் மிக இளநீல பெயின்ட் அடித்த மூன்று சுவர்கள், இரண்டு கூரை-டு-தரை ஜன்னல்களைத் தழுவிய இந்தியப் பட்டு மஸ்லின் திரைகள், ட்ரேன்சுலசன்ட் பயோ-செக்யூர் வாயிற்கதவு, நுழைந்ததும் வலப்புறம் சுவரோரமாக ஒரு தண்ணீர் கூலர், ஒரு மினி ப்ரிட்ஜ், டோஸ்டரவன், ஒரு ப்லேஸ்மா டிவி, ப்லூ ரே டிவிடி, எதிரே இரண்டு சொகுசான இதாலியன் ரிக்லைனர்கள், எங்கள் அறைகளின் க்ரெசன்ட் மேஜை, மேகின்டாஷ், ப்ரின்டர், சிராக்ஸ்.. என் புடலங்காய் அலுவலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

என்ன பிடுங்குகிறேன் என்கிறீர்களா? எமக்குத் தொழில் நெகொசியேசன் அன்ட் லாபியிங். அது என்ன என்கிறீர்களா? நான் ஒரு மாஜி வக்கீல். ஒரு பெரிய நிறுவனத்தில் பார்டனராக இருந்து, விலகி வந்து இப்போது வக்கீலாகத் தொழில் செய்வதில்லை என்றாலும் அவ்வப்போது என் பயற்சியையும் அனுபவத்தையும் பயன்படுத்தி, ஒழுக்கச் சிக்கல் பிடித்த பணக்கார சிஇஓ அரசியல்வாதி மெகாஸ்டார்களின் ஊழல்களைத் திசைதிருப்பி, ஒரேயடியாகத் தடுக்கி விழாமல் அவ்வப்போது காப்பாற்றி வருகிறேன். ஐம்பது வாடிக்கையாளர்களுக்கு மேல் போவதில்லை. ஆளுக்கு ஐம்பதாயிரம் டாலர் வருடாந்தர ரிடெய்னர். அது தவிர, அசல் நிகழ்வுகளுக்கான தனி சம்பளம். வரிசையாக பூஜ்யங்கள் தொடரும் ஒரு ஒற்றைப்படை எண்ணை, டாலரில் வருடந்தோறும் கறந்து விடுகிறேன். ரெஜீனா வருடா வருடம் ஒரு புதுக் காதலனுடன் லக்சம்பர்க், கய்ரோ, யாங்ட்சி பள்ளத்தாக்கு என்று பிசினஸ் க்ளாஸ் விடுமுறை போகக் கட்டுப்படியாகிறது. பழைய புத்தகங்கள் வாங்குவதிலும் ஸூஷி பார்களிலும் என் பங்கில் கொஞ்சம் செலவழிக்கிறேன். என் அடாவடி மாஜி மனைவி பிடுங்கியது போக எஞ்சியதை, என் போர்ஷ டீலர் கார் சர்வீசுக்காக எடுத்துக் கொள்கிறான். ஏதோ காலட்சேபம் நடக்கிறது.

    "என்ன ஜீனா?" என்று கேட்டு உள்ளே நுழைந்த என்னை என் அறைக்குள் தள்ளினாள். "ஹேய்.." என்றேன்.

"மாருதி இன்னும் அரைமணியில் வருவதாகச் சொன்னார்.."

"யாருடா அது, ஜீனா கண்ணா ?"

"மாருதி பொன்னேசன். சிலிகான்கேட் சிஇஓ. நம்ம ரீடெய்னர் க்லையன்ட்.."

உடனே நினைவுக்கு வந்தார். "ஓகே..?" என்று இழுத்தேன்.

"விஷயம் தெரியாதா?" என்ற ஜீனா, என் பதிலுக்குக் காத்திராமல் ஒரு சிறிய மஞ்சள் கோப்பை என் முன் வைத்தாள். "இணையச் செய்திகள்"

"ஜீன், விஷயத்தைச் சொல்லு"

"வெல்.. பொன்னேசன் இஸ் அட் இட் அகெய்ன். ஆபீஸ் பெண்ணோட அவருக்கு இருந்த பலவருடத் திருட்டு சகவாசம் இப்ப வெளில வந்துருச்சு.. போர்ட் கவர்னென்ஸ்னு இழுத்துட்டிருந்தாங்க.. நேத்து அவரை வேலையை விட்டு எடுத்துட்டாங்க.. இப்ப ஹி நீட்ஸ் அஸ்.."

"டேமேஜ் கன்ட்ரோல்?"

"அன்ட் க்ரைசிஸ் கன்ட்ரோல். ஹி இஸ் ஆல் ஓவர் த மீடியா. சிலிகான்கேட் போர்ட் மெம்பர்ஸ் சூரி அகர்வாலும் அனில் குமாரும் மாத்தி மாத்தி அறிக்கை விட்டிருக்காங்க.. பாலியல் அத்துமீறல்களை தீவிரமாக எடுப்பதாகவும், யாராக இருந்தாலும் பொறுக்கமுடியாது என்றும், உடனே மாருதி பொன்னேசனை வேலையை விட்டு நீக்குவதாகவும் அறிக்கை விட்டிருக்காங்க"

"ஹெரேஸ்மென்ட் புகார் எதுனா இருக்கா?"

"சம்பந்தப்பட்ட பெண் அவருடைய காரியதரிசி. மூணு வருசமா ரெண்டு பேரும் உலகம் முழுக்க மீடிங் அப்படி இப்படினு சுத்தியிருக்காங்க. கொஞ்சம் விசாரிச்சேன். சிலிகான்கேட் வட்டத்துள்ளயே இது அரசல் புரசலா தெரிஞ்சிருக்கு. மெனி பீபில் நோ தேர் பெட்ரூம் பிகேவியர்.."

"கோல்ட் டிக்கர்?"

"தெரியாது. ஆனா அந்தப் பெண் திடீர்னு ஹெரேஸ்மென்ட் புகார் கொடுத்திருக்காங்க.."

"அந்தப் பெண் பற்றி என்ன தெரியும் நமக்கு?"

"பொன்னேசனின் காரியதரிசி. 41 வயசு. கல்யாணமானவ. ரெண்டு குழந்தைங்க. இரண்டாவது குழந்தை சமீபத்துல பிறந்தது.."

"யு மீன்?"

"பாஸிபில்" என்றுத் தோள் குலுக்கினாள் ஜீனா. "அந்தக் குழந்தை பொன்னேசனுடையது என்கிறாள் இப்போ.."

"பொன்னேசனோட மனைவி?"

"பாரம்பரியப் பெண்மணி. மஞ்சள் மகிமை.. மணாளனே மங்கையின் பாக்கியம்.. கல்லானாலும் கணவன் கேஸ்.."

சிரித்தேன்.

"ஏன் சிரிக்கிறே பாஸ்?"

"இவனுக்குனு மாட்டுறாங்க பார்.. வீட்டிலே ராமன் வெளியிலே கிருஷ்ணன்.."

"ஆண்கள் காட்டுப் பன்றிகள் பாஸ்"

"எல்லா ஆண்களும் அப்படியில்லை ஜீன். நீ மட்டும் வருசத்துக்கு ஒரு காதலனை சட்டை மாத்துறாப்புல மாத்தலியா?"

"ஒரு சமயத்துல ஒரு காதலன் தான்.. ஸ்டில்.. பன்னிங்களோட என்னைக் கம்பேர் பண்ணாதே பாஸ்.. வாந்தி வருது.. திஸ் மேன் இஸ் மேரீட்.. இருபத்தஞ்சு வருடத் திருமணம்.. படிச்ச, கண்ணியமான மனைவி.. இருபது வயசுல காலேஜ் போற ஒரு பையன், பனிரெண்டு வயசுல ஒரு பொண்ணு.. சைடுல இப்படி ஒரு செட்டப்.. வாட் ஏ ராட்டன் பிக்!"

சிரித்தேன். "நீ ஏன் இமோசனலாவுறே ஜீன்? இட் இஸ் நாட் யுர் ஸ்ட்ரெஸ்"

"யூ மென் ஆர் ஆல் அலைக். சாமானைக் கைலயே பிடிச்சிட்டு அலைவீங்க போல. உனக்கு சிரிப்பாவா இருக்குது பாஸ்? ஒரு லீடர்னா ஒரு கண்ணியம், நெறிமுறை, கட்டுப்பாடு வேணாம்? முப்பதாயிரம் பேர் வேலை பாக்குறாங்க.. எத்தனை பெற்றோர்கள் தங்கள் பெண்களை.. எத்தனை கணவர்கள் தங்கள் மனைவிகளை அனுப்புறாங்க.. இந்த ஆள் சிஇஓ என்கிற முறையில நெருங்கி வந்தா எந்தப் பொண்ணு என்ன செய்யும்? அதை விடுங்க பாஸ்.. கீழே வேலை பாக்குறவங்களுக்கும் இளைஞர்களுக்கும் இவனெல்லாம் எந்த மாதிரி முன்னுதாரணமா இருப்பான்? இவனோட கஸ்டமர்கள் என்ன நினைப்பாங்க இவங்க கம்பெனியப் பத்தி? வாட் எ சீப் மேன்! சாக்கடைப் பீப்புழு இவனை விட மேல்.. பொறம்போக்கு நாய்... தேவடியா பையன்.. பன்னாடை.. துண்டா வெட்டியிருப்பேன் நானா இருந்தா.."

"ஐ'ம் சாரி.. உன் எரிச்சல் புரியுது.. காம் டௌன் ஜீன்.. காம் த ஷிட் டௌன்.. ஐ ரிபீட், திஸ் இஸ் நாட் யுவர் ஸ்ட்ரெஸ்" என்று அழுத்தமாகச் சமாளித்தேன். அவள் தந்த கோப்பைப் புரட்டுவது போல் சில நொடிகள் பாவித்து.. ஒரு புகைப்படத்தைக் காட்டி, "இந்த மாருதி பொன்னேசன் ஆசாமி.. முன்னால ஒரு தடவை மாட்டினார்ல?" என்றேன்.

"ஐ'ம் சாரி" என்றாள் ரெஜீனா சுதாரித்து. "நாமதான் அப்பவும் டேமேஜ் கன்ட்ரோல் சர்வீஸ்.."

"நினைவிருக்கு.. ஐபிஎம்ல ரைட்?"

"நோ.. இன்போசயன்ஸ்.. அப்போ டெபுடி சிஇஓவா இருந்தாரு பொன்னேசன். அங்கே வேலை பார்த்த ரெண்டு பொண்ணுங்க கிட்டே ஒரே டயத்துல கள்ளத்தொடர்பு வச்சிருந்தாரு. இந்தியப் பொண்ணை கேஸ் வருமுன்னமே அமுக்கிட்டோம். வெள்ளைக்காரப் பொண்ணை அவுட் ஆப் கோர்ட் செடில் செஞ்சோம். மொத்தம் நாலு மிலியன் செடில்மென்ட். நம்ம சம்பளம் அரை மிலியன் ப்லஸ் எக்ஸ்பென்ஸ்" என்றபடி, எனக்கு ஒரு பீங்கான் தட்டில் ஆம்லெட் சேன்ட்விச்சும் ஆரஞ்சூஸ் ஒரு கப்பும் கொண்டு தந்தாள். நன்றியுடன் பார்த்தேன். தொடர்ந்தாள். "அதுக்குப் பிறகு ரெண்டு வருசம் கழித்து சிலிகான்கேட்ல சிஇஓ.. நாலு வருசமா நம்ம வாடிக்கை.. அம்பது கே வருடாந்தர ரீடெய்னர் கொடுத்திட்டிருக்காரு.. நோ இன்சிடென்ட்ஸ் அன்டில் நௌ"

போன் அலறியது. எடுத்து என்னிடம், "ஹி இஸ் ஹியர்.. நான் போய் கூட்டி வரேன்" என்றாள்.

"நோ நோ.. நீ கொஞ்சம் ரிலேக்ஸ் பண்ணிக்க.." என்று நான் வெளியேறி, கராஜுக்கான எஸ்கலேடரில் இறங்கினேன்.

    றுப்பு பீமர் எம் சீரீஸ். தானே ஓட்டி வந்திருந்தார். என்னைப் பார்த்ததும் அடையாளம் கண்டு கதவைக் கீழிறக்கிக் கையசைத்தார். புகைப்படத்தை விட இளமையாக இருந்தார். வேகமாகச் சென்று கைகுலுக்கினேன். "நானே உங்களைப் பார்க்க வந்திருப்பேனே?" என்றேன். கார்க் கதவைத் திறந்தேன்.

"நோ.. திஸ் இஸ் எ டிஸ்க்ரீட் விசிட்.." என்று வெளியே இறங்கினார். காத்திருக்காமல், "உன் ஆபீசுக்குப் போகலாமா? இஸ் இட் ப்ரைவேட்?"

"என் பார்டனர் ஜீனா தவிர வேறு யாரும் இல்லை.. வாங்க போலாம்"

"ஜீனா, இஸ் இட்? அழகா இருப்பாளா?" கம்பீரமாக நடந்த மாருதி பொன்னேசனின் குரலில் தொனித்த இயல்பான அமைதி, என் முதுகில் குறுகுறுத்துப் புரியும் நேரத்தில் எஸ்கலேடர் ஏறி ஆபீசுக்குள் நுழைந்துவிட்டோம்.

[வளரும்] ➧ 2



காதல் கடிதம் எழுதுங்கள்