2013/06/02

பொய்நகக் கீறல்கள்


சில போலி நகங்கள் அசலில் காயப்படுத்துவதை அனுபவித்திருக்கிறீர்களா?


கவிதைக்குள் நுழைகிறாய்

ஒரு அறைக்குள் நுழைவது போலவே
இக்கவிதைக்குள் நுழைகிறாய்.
கதவைத் திறந்ததும் நீ காண்பதென்ன?
ஒரு கழுவுந்தொட்டி,
ஒரு குளியல்தொட்டி, அல்லது கழிவறை..
கவிதையில் கழிவறை உண்டா என்ன?
'அட! இது கவிதையல்ல, குளியலறை' என்று விலகுகிறாய்.
      மறுமுறை
      கவிதைக்குள் நுழைகையில்
      இது குளியலறை என்று
      உனக்கு ஏற்கனவே புரிந்திருக்கிறது.
      சுவரலமாரியில் அடுக்கப்பட்ட சில
      துவட்டுந்துண்டுகளைப் பார்க்கிறாய்.
      அதன் வண்ணங்களை..
      சுவற்றின் கண்ணாடியை.. தரையின் பளிங்கை..
      அறையோர சொகுசு இருக்கையை.. எதிரே
      கண்ணாடி உருண்டைக் கைப்பிடி புதைந்த சிற்றலமாரியை..
      சிற்றலமாரியுள் அடுக்கப்பட்ட அவசியங்ளை.
      'அட, இது வேறு மாதிரிக் குளியலறை' என்று விலகுகிறாய்.
மீண்டும்
கவிதைக்குள் நுழைகையில்
சுவரலமாரியில் கலைந்த.. தரையில் விழுந்து சுருண்ட..
துவட்டுந்துண்டுகளைப் பார்க்கிறாய்.
ஆ!
கண்ணாடியில் நீர்க்கறை.. பற்பசை.. அழுக்குத் தீற்றுகள்..
பளிங்குத் தரையோரம்.. நடுவில்.. எங்கும் விரிசல் ரேகைகள்.. சற்றே விலகிய கற்களின் பற்கள்.
அவசரமாகச் சிற்றலமாரியைத் திறக்கிறாய்.
நசுங்கிய கலைந்த உடைந்த ஒழுகிய விலகிய
பல்துலக்கும் முகம்பொலிக்கும் உடல்விளக்கும்
அழகுசாதன மிச்சங்கள்..
இதென்ன?
மறந்து போன மாத்திரைப் புட்டியைப் பார்த்ததும்
ஓ..
உனக்கு இப்போது புரிந்துவிட்டது
இது கவிதையே என்று.

    - நேற்றிரவு படிக்கத் தொடங்கிய ராபின் ஹர்ஷ் எழுதிய 'Stupid poems for the Intelligent' எனும் சுவாரசியமானக் கவிநூலின் 'you enter a poem' கவிதையைப் படித்ததும், உடனே தமிழில் தரத் தோன்றியது. 'அறிவு வளர்ந்தக் குழந்தைகளுக்கானக் கவிதைகள்' என்று முகப்பில் சொல்லியிருக்கிறார்கள். நான் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுகிற ஆளில்லை.

தினப் பிராணிகள்

இவர்கள்
அதிகாலையில் எழுந்துவிடுகிறார்கள்.
அவர்களுக்குப் பற்பசை
    குளியல் துணிமணி புத்தகப்பை
      ஷூ சாப்பாடு கையில் டிபன்..
அவருக்கு காலையுதவி
    காப்பி
      அலுவல் புறப்பாட்டுச் சேவை
        சாப்பாடு கையில் டிபன்..
எல்லோருக்கும் வாசலில் நின்று
    சிரித்துச் சிரித்து
முகமனும் விடையும் தருகிறார்கள்.
ஓடியாடி நின்று நடந்து
எல்லோரும் உட்கார்ந்த பின்னரே உட்காருகிறார்கள்.
வீட்டுவேலை வெளிவேலை என்று சுழல்கிறார்கள்
வழியில் காய்கறி
    பால்பழம் மளிகை
      சட்டைப் பித்தான்
        கிழிந்த உடைக்கு ஊசி நூல்
வாங்கி வருகிறார்கள்
    மொழி பாட்டு நடனம் ட்யூஷன்
      கோவில் மருந்துக்கடை
என்று தினம் போகிறார்கள்.
ஓரங்கட்டிய தூசுபடிந்த வயலினைப் பார்த்தும்
எப்போதேனும் பிடித்தவர் குரல் கேட்டும்
பெருமூச்சு விடுகிறார்கள்.
        வாக்கு தவறாமல் நடக்கிறார்கள்
        தவறான வாக்கெனினும்.
அடுத்தவர் சோகத்தில் பங்கெடுத்து
'எல்லாம் சரியாகிவிடும்' என்று
புன்னகைத் துண்டால் கவலை துடைக்கிறார்கள்.
        எல்லோரும் திருப்தியானதும்
      எல்லாம் அடங்கியதும்
    விளக்கணைத்த நள்ளிரவில்
  அமைதி கலைக்காத ஓசையுடன்
தங்கள் கவலைகளில் உரக்க அழுகிறார்கள்.

    - தாரியா தொமித்ரொவிச் எழுதிய 'sad women' எனும் முன்பு படித்தக் கவிதையை ஏனோ மீண்டும் தேடிப் பிடித்துச் சேர்க்கத் தோன்றியது.

45 கருத்துகள்:

  1. தங்களின் வாசிப்புப் பழக்கமும், கால அவகாசமும், பரந்துபட்ட ஞானமும் பொறாமைப் பட வைக்கிறது.

    எனக்கும் பிற மொழிக் கவிதைகளை மொழிபெயர்க்க ஆசை. நேரமும் ஞானமும் இல்லை. வயித்தெரிச்சல் படத் தான் முடிகிறது.

    பதிலளிநீக்கு
  2. தினப் பிராணிகள் கவிதை என்னைக் கவர்ந்தது. ஒரு காலத்தில் நான் ஓடிய ஓட்டத்தை எல்லாம் கவிதையாக வடித்தாற்போன்றதொரு உணர்வு. திருப்தியாகவும் இருக்கு. ஆனாலும் சிறு மாற்றம். எனக்கென மதியம் ஒரு மணி நேரமாவது ஒதுக்கிடுவேன். அந்த நேரம் எனக்குப் பிடித்த தையல், புத்தகம் படித்தல், பாட்டுக் கேட்பது என வைத்துக் கொள்வேன். ஆகவே கீழே சொல்லி இருக்கிறாற்போல் தன்னிரக்கம் தோன்றியதில்லை. பலரும் அதைக் குறித்து என்னிடம் நேரிலேயே கேட்டிருக்காங்க. :)))


    //ஓரங்கட்டிய தூசுபடிந்த வயலினைப் பார்த்தும்
    எப்போதேனும் பிடித்தவர் குரல் கேட்டும்
    பெருமூச்சு விடுகிறார்கள்
    வாக்கு தவறாமல் நடக்கிறார்கள்
    தவறான வாக்கெனினும்.
    அடுத்தவர் சோகத்தில் பங்கெடுத்து
    'எல்லாம் சரியாகிவிடும்' என்று
    புன்னகைத் துண்டால் கவலை துடைக்கிறார்கள்.

    எல்லோரும் திருப்தியானதும்
    எல்லாம் அடங்கியதும்
    விளக்கணைத்த நள்ளிரவில்
    அமைதி கலைக்காத ஓசையுடன்
    தங்கள் கவலைகளில் உரக்க அழுகிறார்கள்.//

    எதுக்கு அழணும்?? கவலைகள் நிறையவே இருந்தன. முக்கியமாகப் பொருளாதாரம். எனினும் சமாளிக்க மனதில் தெம்பு இருந்தது. அந்த நேரம் தான் எங்கள் கவலைகள் பகிர்ந்து கொள்ளப்படும். அரை மணி நேரமாவது பேசிக் கலந்து கொண்ட பின்னரே தூங்கப் போவோம். இதை இன்றைய தலைமுறை தெரிந்து கொள்வது அவசியம் என்பதாலேயே எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. தினப்பிராணிகள் கவிதையை மீண்டும், மீண்டும் படிக்கத் தோன்றுகிறது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. எல்லோரும் திருப்தியானதும்
    எல்லாம் அடங்கியதும்
    விளக்கணைத்த நள்ளிரவில்
    அமைதி கலைக்காத ஓசையுடன்
    தங்கள் கவலைகளில் உரக்க அழுகிறார்கள்

    .கண்ணீரே வார்த்தைகள்
    கவிதைதான் அழுகை எனப்படுகிறது
    நிஜத்திற்குப்பின் வரும் நிழல் போல் அல்லாது
    நிழலுக்குப் பின் வரும் நிஜமாகப் பட்டது
    அந்தக் கடைசி வரிகள்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்//

    பதிலளிநீக்கு
  5. மனதில் ஆயிரம் கவலைகள் இருந்தாலும், அடுத்தவர்களுக்கு புன்னகைத் துண்டை வீசுவதே பெரிய விசயம் தான்...

    பதிலளிநீக்கு
  6. //எதுக்கு அழணும்?? கவலைகள் நிறையவே இருந்தன. முக்கியமாகப் பொருளாதாரம். எனினும் சமாளிக்க மனதில் தெம்பு இருந்தது. அந்த நேரம் தான் எங்கள் கவலைகள் பகிர்ந்து கொள்ளப்படும். //

    அதுதான் முக்கியம் அம்மா! பகிர்ந்து கொள்ளுதல். அதற்கு யாரும் இல்லாதவங்களுக்குக் கண்ணீர்தான் துணை :)

    Sometimes crying is the best relief one can get. Sometimes even that is a luxury!

    பதிலளிநீக்கு
  7. //entering a poem// என்கிற கருத்தே அழகாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு


  8. //எதுக்கு அழணும்??

    நீங்க சொல்றாப்புல மனதுல தெம்பு (அதிலும் தினம் பேசிக் கொள்வதால் கிடைக்கும் தெம்பு) இருந்தா எதற்கும் அழத் தேவையில்லை. உண்மை தான்.

    அப்படிக் கஷ்டப்படும் பொழுது ஆதரவான பேச்சோ செயலோ காட்ட சுற்றம் துணையிருந்தும்.. கஷ்டமே இல்லாமல் ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்.. ஓசைப்படாமல் அழும் நிறைய பேரை நான் அறிவேன். (என்னையும் சேர்த்து).

    எனக்கென்னவோ இந்தப் பிராணிகளின் அழுகை கஷ்டங்களைச் சமாளிக்க நேர்வதால் அல்ல, கனவுகளைப் புதைக்க நேர்ந்ததால் என்று தோன்றுகிறது. எல்லாருமே ஒருவகையில் தினப் பிராணிகள் தானோ?

    பதிலளிநீக்கு
  9. தமிழ்ல மட்டும் புத்தகங்கள் படிக்கக் கூடிய என் மாதிரி ஆசாமிகளுக்கு உங்களைப் போன்றவர்கள் இப்படி படித்து ரசித்து மொழிபெயர்த்துத் தருவது நிச்சயம் வரம்தான்! மிக்க நன்றி அப்பா ஸார்!

    பதிலளிநீக்கு
  10. இரண்டு கவிதையும் நன்றாக இருக்கிறது.

    தினப்பிராணிகள் கவிதை மிக அருமை. என் அம்மாவை கண் முன்னே கொண்டு வருகிறது.
    தினப்பிராணி கவிதையில் சொல்வது போல் என் அம்மா ஓடி ஓடி உழைத்தார்கள்.
    என் அம்மாவின் ஆர்மோனிய பெட்டி தூசி படிந்து இருந்தது. அதை வாசிக்க சொல்லி கேட்க ஆள் இல்லை.

    எங்களில் யாருக்காவது தன் வித்தையை சொல்லிக் கொடுக்க ஆசைபட்டார்கள் யாரும் கற்றுக் கொள்ள வில்லை. பள்ளி பருவத்தில் விளையாட்டு தான் முக்கியமாக பட்டது.
    வாய்ப்பாட்டு நவராத்திரி சமயம் பாட ஒரு சில பாடல்கள் அம்மாவிடம் கற்றுக் கொண்டோம்.

    என் பெண் என்னை எனக்காக நேரம் ஒதுக்க சொல்லி பதிவு எழுத தூண்டியது போல் அம்மாவை ஆர்மோனியம் வாசிக்கச்சொல்லி உற்சாகப்படுத்தி இருக்கலாமோ என்று என்னத் தோன்றுகிறது.
    தன் ஆர்மோனியம் வாசிக்க படாமல் அதை யாரும் விரும்பி கேட்கவில்லையே என்று என் அம்மா அழுது இருப்பார்களா? என்ற கேள்வி மனதை குடைகிறது.
    என் அப்பா எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் ரசிகர். என் அம்மாவை பாடச்சொல்லி கேட்ட நினைவு இல்லை. பெண்பார்க்க வந்த போது ஆர்மோனியம் வாசித்து பாடி இருப்பதாய் அம்மா சொல்லி இருக்கிறார்கள். ஓய்வாய் அம்மா இருந்ததே இல்லை ஊசி நூல் வைத்து ஏதாவது பித்தான் போனது வந்தது தைப்பது, கைவேலைகள், கலைநயத்தோடு மிக அருமையாக பூ வேலை என்று ஏதாவது செய்து கொண்டே இருப்பார்கள்.


    பதிலளிநீக்கு
  11. முதல் கவிதை சுத்தம் எனக்கு பொருள் பிடிபடவில்லை ஒருவேளை அவை அறிவுசார் கவிதைகள் என்பதாலா...

    இரண்டாம் கவிதை சூப்பர் சூப்பரோ சூப்பர்...

    பதிலளிநீக்கு
  12. தினப்ப்ராணிகள் ரசிக்க வைக்கிறது. கூடவே கீதா மேடத்தின் அருமையான பின்னூட்டமும். சில சமயங்களில் அல்லது பெரும்பாலானோர் ஒரு சுயபரிதாபம் சார்ந்த சோகத்தையே விரும்புகிறார்களோ! அந்த நேரத்தில் கலந்து பேசி என்றோ, மதியம் எனக்காக எப்படியும் 1 மணி நேரம் ஒதுக்கி விடுவேன் என்றோ, தன்னை அறிந்து, மேம்படுத்திக் கொள்ளுதலும் தனக்காக, தன் ரசனைகளைத் தியாகம் என்ற பெயரில் துறக்காமல் இருத்தலும் எத்தனை பேருக்கு வரும்? வாழ்வும் ஒரு கலைதான்! :)))

    பதிலளிநீக்கு
  13. வாங்க ஸ்ரீராம், உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தால், பலரும் தனக்கென நேரம் ஒதுக்கறதில்லை என்று புரிகிறது. ஆனால் அப்படி நேரம் ஒதுக்கறவங்களும் தங்களைப் பகிர்ந்துக்கறாங்களா என்றால் இல்லை என்றே சொல்லணும். பகிர்ந்துக்க யாரும் இல்லாதவங்கனு கவிநயா சொல்றாங்க. யாரானும் இல்லாமல் போக மாட்டார்கள். நாம் தான் நம்மை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. கொஞ்சம் கூச்சம், அல்லது நம்முடைய இந்தக் கஷ்டம் தெரிஞ்சால் என்ன நினைப்பாங்களோ என்ற தயக்கம். சுய கெளரவம் எனச் சொல்லலாமா? கணவன், மனைவிக்குள்ளேயே இந்த சுய கெளரவம் தான் பெரும்பாலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் தடுக்கிறது. வாய் விட்டுச் சொல்ல வேண்டும். உன்னோடு பேசணும்; பேசியே ஆகணும்னு சொல்லிப் பேசணும். புரிஞ்சுக்க முயற்சி செய்யணும், நாமும் புரிஞ்சுக்கணும். நீங்க ஏற்கெனவே சொன்னாப்போல் குறைகள் இல்லாத மனிதரே கிடையாது.

    பதிலளிநீக்கு
  14. ஸ்ரீராமன் பேரிலேயே வாலியை மறைந்திருந்து கொன்றதற்கும், சீதையை அக்னிப்ரவேசம் செய்ய வைத்தததற்கும் காட்டுக்கு கர்ப்பிணியாய் அனுப்பியதற்கும் குறைகள் சொல்லும் நாம் சாமானிய மனிதர்களிடம் கண்டு பிடிக்காத குறையா இருக்கப் போகிறது. ஆனாலும் அவற்றையும் பொறுத்துக் கொண்டே வாழப் பழகியாக வேண்டும். இதான் நிதரிசனம். நான் கவிநயா சொன்னதை மட்டும் குறிப்பிடவில்லை.

    அப்பாதுரையும் சொல்றார். யாரிடமாவது மனம் விட்டுப் பேசணும். அந்தரங்கம் என்பது சிலரிடம் தான் பகிர்ந்துக்க முடியும். அப்படியானவங்க கிட்டே பகிர்ந்துக்கணும். குறைந்த பக்ஷமாக இறைவனிடமாவது வாய் விட்டுப் பேசணும். சண்டை போடணும். நம்ம ஆசைகளை, நிராசைகளை, கவலைகளைத் தெரிவிக்கணும்.(இது கவிநயாவுக்குக் கை வந்த கலை. அவங்களுக்கு எப்போவும் அம்பாள் துணை இருக்கு)அப்பாதுரை தான் பாவம்! :P :P :P :P

    இப்படி எல்லாம் சொல்றதாலே எனக்குக் கவலையே இல்லைனு முடிவு செய்துடாதீங்க. அவங்க அவங்க லெவல்லே உள்ள கவலைகள், கோபங்கள், தாபங்கள், தீர்க்க முடியாத பிரச்னைகள்னு எனக்கும் உண்டு. எல்லாத்தையும் மீறி வாழத் தான் வேண்டும் என்பதே என் கருத்து.

    பதிலளிநீக்கு
  15. ஒரு காலத்தில் நானும் எதுக்கெடுத்தாலும் அழுவேன். நிறைய அழுதிருக்கேன். இப்போக் கண்ணீரே வற்றிப் போச்சுனு நினைக்கிறேன். நம்மை மட்டம் செய்பவர்களைப் பார்த்துச் சிரிக்க கத்துக்கணும். :)))))

    பதிலளிநீக்கு
  16. அழுவதெல்லாம் சின்னக் குழந்தைகள் செய்வது என்று தோணினப்புறம் அழுவதில்லை. எதுக்கு அழணும்??

    பதிலளிநீக்கு
  17. எதுக்கு அழணும்?

    பெரும்பாலும் அழுகை நாம் நினைத்து வருவதில்லை. சம்பவங்களின் தாக்கத்தில், உணர்ச்சிகளின் வடிகாலாக உடனடி வெளிப்பாடு. அழுது விடுவதுதான் நல்லது. அழுத்தம் ஏற்றிக் கொள்ள வேண்டிய தேவை இல்லை. ஆனால் அழுவதையே ஒரு வழக்கமாகக் கொள்வது?

    சொல்லி அழ ஆளில்லாமல் இருப்பவர்கள் நிறையப் பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். பேசாமல் கண்ணாடி முன்னாள் நின்று பேசி விட வேண்டியதுதான் (தனிமையில்!!)

    பதிலளிநீக்கு

  18. அறிவு வளர்ந்த குழந்தைகளுக்கான கவிதைகள்.....!என் போன்றோருக்கல்லவா.?I felt it a stupid poem for me also.!(Should I consider myself stupid or .....?)

    /எல்லோரும் திருப்தியானதும்
    எல்லாம் அடங்கியதும்
    விளக்கணைத்த நள்ளிரவில்/ இன்னும் ஒரு பணி(?) சொல்லவில்லையே..” அணைக்கும் கரங்களுக்குள் அடங்கி” ஓஓ..அப்போது sad women ஆகியிருக்க முடியாதோ.? அப்பாதுரை சார் மனதுக்குப் பிடித்ததைச் செய்யாமல் இருக்க நிறையவே alibis சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
  19. தங்களின் வாசிப்புப் பழக்கமும்,, பரந்துபட்ட ஞானமும் , மொழி அறிவும் பெருமைப்பட வைக்கின்றது அய்யா.

    பதிலளிநீக்கு
  20. தினப் பிராணிகள் -

    தினமும் காட்சிப்படும்
    விசித்திரமான பிராணிகள்..

    பதிலளிநீக்கு
  21. தங்களின் வாசிப்புப் பழக்கம் வியக்கவைக்கின்றது. பகிர்ந்த இரண்டு கவிதகளும் சிறப்பு.
    அதிலும் தினப்பிராணிகள் இன்றும் இன்னும் இருக்கத்தான் செய்கின்றதையா.

    மிக அருமை! பகிர்விற்கு மிக்க நன்றி!

    ஐயா அங்கு வந்து வாழ்த்துக் கூறியமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  22. DINAPRANIGAL
    Every word conveys the exact feeling being undergone by the housewife. Very nice poem. As usual, my heart becomes very heavy after reading this.

    பதிலளிநீக்கு
  23. பின்னூட்டங்களுக்கு நன்றி.

    'தினப்பிராணிகள்', படித்த காலத்தில் நான் நீண்ட நாட்கள் அசை போட்டக் கவிதை. 'கவிதைக்குள் நுழைகிறாய்' படித்ததும் நினைவுக்கு வந்தது. இரண்டுக்கும் ஒரு மெல்லிய நூலிழையில் இணைப்பிருப்பதாகப் பட்டது. இசைக்கக் காத்திருக்கும் எத்தனையோ தூசு படிந்த ஆர்மோனிய ஸ்ருதிப் பெட்டிகள், வயலின் வீணைகள், குரல்கள்... காத்திருக்கும் வரையில் இவை வாசிக்கப்படாத கவிதைகள். தூசு படிந்த நிலையில் இவை கலைந்த குளியலறைகள்.

    இனி, கொஞ்சம் வனவாசம்.

    பதிலளிநீக்கு
  24. When will you be back after vanavasam - 14 days or 14 weeks or 14 months or 14 years. Let me know please.

    பதிலளிநீக்கு
  25. எல்லாம் அடங்கியதும்
    விளக்கணைத்த நள்ளிரவில்
    அமைதி கலைக்காத ஓசையுடன்
    தங்கள் கவலைகளில் உரக்க அழுகிறார்கள்//


    இல்லை.


    தங்கள் கவலைகளின் அரவணைப்பிலே

    தனை மறந்து துயில் உறும்போதும்

    அடுத்து வரும் நாளின் இடுக்குகளிலே

    இன்பம் வருமோ என

    கனவு காண்கிறார்கள்.



    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு

  26. பெரும்பாலும் அழுகை நாம் நினைத்து வருவதில்லை. சம்பவங்களின் தாக்கத்தில், உணர்ச்சிகளின் வடிகாலாக உடனடி வெளிப்பாடு. அழுது விடுவதுதான் நல்லது. அழுத்தம் ஏற்றிக் கொள்ள வேண்டிய தேவை இல்லை. ஆனால் அழுவதையே ஒரு வழக்கமாகக் கொள்வது?

    சொல்லி அழ ஆளில்லாமல் இருப்பவர்கள் நிறையப் பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். பேசாமல் கண்ணாடி முன்னாள் நின்று பேசி விட வேண்டியதுதான் (தனிமையில்!!)//
    இது சரி.

    கீதா சொல்ல முடியாத துக்கங்கள் எத்தனையொ.
    உடல் உபாதையோ மன உபாதையோ,, அருகில்ல் இருப்பவர்கள் பற்றின கவலையோ
    இவற்றுக்கெல்லாம் ஏனக்குத் தெரிந்த மருந்து பிரார்ர்த்த்தனையும் , சில நேரம் அழுகையும் தான்.
    தினப் பிராணிகள் ''ஒரு நிஜம்.
    அற்புதமான கவிதை மொழிபெயர்ப்பு.

    இதையெல்லாம் படிக்க இணையமும், தொலைக்க்காட்ச்சியும், இசைஇயும்,புத்த்ஹகங்களும் எனக்கு ஒதுக்கிவைத்துக் கொள்ளுகிறேன்.
    கணவரும் நானுமாக வெளீய்யே போகும் நேரங்களைப் பேச்சுப் பரிவர்த்தனைக்கு உபயோகப் படுத்திக் கொள்கிறோம்.
    அவர் எதையும் கவலையில்லாமல் எதிர்கொள்வார். நாஅன் இக்குணியூண்டு விஷயத்துக்கும் யோசிப்பேன்.
    எல்லாம் அவரவர் ஜீன்ஸ் போறுத்த விஷயம்.
    துரை மிக மிக நன்றிமா.
    your Blog has become a forum. I LIKE IT:)

    பதிலளிநீக்கு

  27. //எதுக்கு அழணும்??

    நீங்க சொல்றாப்புல மனதுல தெம்பு (அதிலும் தினம் பேசிக் கொள்வதால் கிடைக்கும் தெம்பு) இருந்தா எதற்கும் அழத் தேவையில்லை. உண்மை தான்.

    அப்படிக் கஷ்டப்படும் பொழுது ஆதரவான பேச்சோ செயலோ காட்ட சுற்றம் துணையிருந்தும்.. கஷ்டமே இல்லாமல் ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்.. ஓசைப்படாமல் அழும் நிறைய பேரை நான் அறிவேன். (என்னையும் சேர்த்து).

    எனக்கென்னவோ இந்தப் பிராணிகளின் அழுகை கஷ்டங்களைச் சமாளிக்க நேர்வதால் அல்ல, கனவுகளைப் புதைக்க நேர்ந்ததால் என்று தோன்றுகிறது. எல்லாருமே ஒருவகையில் தினப் பிராணிகள் தானோ?//
    YES YES.

    பதிலளிநீக்கு
  28. //கீதா சொல்ல முடியாத துக்கங்கள் எத்தனையொ.
    உடல் உபாதையோ மன உபாதையோ,,//

    வல்லி, எல்லாருக்கும் உண்டு. எனக்கும் நிறைய உண்டு. ஆனால் அதையே நினைத்துக் கொண்டு நிகழ்காலத்தைப்புண்ணாக்கிக்க முடியுமா? அதனால் எனக்கு மட்டுமில்லாமல் இருக்கிறவங்களுக்கும் கஷ்டம் இல்லையா? அடுத்து என்னனு தான் பார்க்கணும். :)))))

    பதிலளிநீக்கு
  29. //your Blog has become a forum.

    எல்லாம் உங்க தயவு.. இதுக்காகத்தான் எழுதவே தோணுது பலநேரம்.

    பதிலளிநீக்கு
  30. //ஆனால் அதையே நினைத்துக் கொண்டு நிகழ்காலத்தைப் புண்ணாக்கிக்க முடியுமா?

    அழுவது ஒரு வடிகால்? ஒரு இழப்பை நினைவுபடுத்திக்கொள்ள ஒரு வாய்ப்புனு தோணுது. கஷ்டத்தை நினைத்து அழுறதுக்கும் துயரம்/இழப்பை நினைத்து அழறதுக்கும் வித்தியாசம் இருக்கு இல்லையா? regardless, சும்மா அழுதுட்டே இருந்தா எதுவும் ஆகப்போறதில்லே என்பது நீங்க சொல்றாப்புல யதார்த்தம் தான்.

    இந்தக் கவிதை 'sad women' என்றில்லாமல் 'sad people' என்று தலைப்பிட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்? கவிதை (எழுதியவர் பெண் என்பதாலும்?) படித்ததும் உடனே பெண்கள் தான் மனதில் படுகிறார்கள். ஆண்களாக இருந்தால் எப்படி முடித்திருப்பார் என்று அலசியிருக்கிறோம். ஆண்கள் இப்படி அழுவதாக முடித்திருப்பாரா? இதை தாரியாவிடம் கேட்ட போது அவர் சொன்னது: "ஆண்களுக்கு இழப்பு என்றால் என்னவென்றே தெரியாது.. சாகும் பொழுது கூட இந்த அற்புதமான உலகத்தை இழக்கிறோம் என்ற எண்ணம் அவர்களுக்குத் தோன்றாது.." அவர் சிரித்துக் கொண்டே சொன்னாலும் எங்களுக்கெல்லாம் கொஞ்சம் எரிச்சலாக இருந்தது உண்மை :)

    பதிலளிநீக்கு
  31. இயலாமையினால் அழுவதும் பிராணிகளின் characteristic இல்லையா?. பிராணி என்று literal ஆகவே எடுத்துக் கொள்வோம்..

    எங்களுக்குத் தோன்றியதை நாங்கள் எங்கள் வீட்டு நாய் சொல்வதாக நாங்கள் புரிந்துகொண்டு ஏதாவது செய்வோமே தவிர.. நாய்க்கு என்ன தேவை என்ன சொல்கிறது என்பதை எங்களுக்கு புரியாத புரிந்து கொள்ள முடியாத காரணத்தை எண்ணி நாய் நிச்சயமாக முனகுவது தெரியும்.. சில நேரம் ஓரமாக உட்கார்ந்து அழும்.. எதை நினைத்து அழுகிறது? தடவிக்கொடுத்தால் உடனே வாலாட்டும்.. ஆனால் அழுததும் அழுவதும் தினம் நடக்கிறது தான். எங்கள் முதல் நாய் தன்னைச் சாகவிடச் சொல்லி அழுததாக நான் சொல்வேன், என் வீட்டில் 'பணம் பார்க்காமல்' நாயின் வாழ்வை நீட்டிக்கச் சொல்லி நாயோடு சேர்ந்து அழுவார்கள் - கடைசியில் அந்த நாயை உயிர்பிரித்த போது நான் மட்டும் தான் இருந்தேன் - எனக்கு நன்றி சொன்னதாகவே பட்டது.

    பிராணிகளும் தங்கள் போக்கில் வாழத்தான் செய்கின்றன.. தங்களுக்குள் நில்லாது இன்னொரு வகை இரண்டு கால் உயிரினத்துடன் தினசரி அரைகுறைப் புரிதலோடாவது வாழ வேண்டியிருக்கிறது.. எல்லாவற்றையும் ஏற்று சகித்து வாலைக்குழைத்து துள்ளி ஓடி விளையாடும் அந்த நாலு கால் பிராணி ஏன் அழுகிறது என்பது மட்டும் விளங்கவே விளங்காது..

    தாரியா நம்மை பிராணிகள் என்று அழைத்தது அதனால் தானோ என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  32. இரு கவிதைகளும் நேர்த்தி.

    அவை சொல்பவற்றைப் புரிந்து கொள்ள நேரும்போது, அதை மொழிபெயர்த்த நீங்களும் வெளிப்படுகிறீர்கள் அப்பாதுரை.

    பதிலளிநீக்கு
  33. புன்னகைத் துண்டால் கவலை துடைக்கிறார்கள்.//

    அடடா...!

    பதிலளிநீக்கு
  34. அறைக்குள் நுழைவதும் கவிதைக்குள் நுழைவதும் மறுபடி மறுபடி நிகழும் போது தான் இரண்டுமே பரிச்சயமாகிறது நன்கு.

    அடுத்தடுத்த நுழைவில் முதல் தடவையின் அழகு சற்றே பின் தள்ளப் பட்டு பார்வையில் பிறவும் பட வாய்ப்பு கிடைக்கிறது.

    பதிலளிநீக்கு
  35. எப்போதேனும் பிடித்தவர் குரல் கேட்டும்
    பெருமூச்சு விடுகிறார்கள்.//

    எல்லோரும் திருப்தியானதும்
    எல்லாம் அடங்கியதும்//

    எனக்கென்னவோ இந்தப் பிராணிகளின் அழுகை கஷ்டங்களைச் சமாளிக்க நேர்வதால் அல்ல, கனவுகளைப் புதைக்க நேர்ந்ததால் என்று தோன்றுகிறது. எல்லாருமே ஒருவகையில் தினப் பிராணிகள் தானோ?//

    என் பெண் என்னை எனக்காக நேரம் ஒதுக்க சொல்லி பதிவு எழுத தூண்டியது போல் அம்மாவை ஆர்மோனியம் வாசிக்கச்சொல்லி உற்சாகப்படுத்தி இருக்கலாமோ என்று என்னத் தோன்றுகிறது.//

    என் அப்பா எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் ரசிகர். என் அம்மாவை பாடச்சொல்லி கேட்ட நினைவு இல்லை. //

    அழுவது ஒரு வடிகால்? ஒரு இழப்பை நினைவுபடுத்திக்கொள்ள ஒரு வாய்ப்புனு தோணுது. கஷ்டத்தை நினைத்து அழுறதுக்கும் துயரம்/இழப்பை நினைத்து அழறதுக்கும் வித்தியாசம் இருக்கு இல்லையா? regardless, சும்மா அழுதுட்டே இருந்தா எதுவும் ஆகப்போறதில்லே என்பது நீங்க சொல்றாப்புல யதார்த்தம் தான்.
    //

    பிராணிகளும் தங்கள் போக்கில் வாழத்தான் செய்கின்றன.. தங்களுக்குள் நில்லாது இன்னொரு வகை இரண்டு கால் உயிரினத்துடன் தினசரி அரைகுறைப் புரிதலோடாவது வாழ வேண்டியிருக்கிறது.. எல்லாவற்றையும் ஏற்று சகித்து வாலைக்குழைத்து துள்ளி ஓடி விளையாடும் அந்த நாலு கால் பிராணி ஏன் அழுகிறது என்பது மட்டும் விளங்கவே விளங்காது..

    தாரியா நம்மை பிராணிகள் என்று அழைத்தது அதனால் தானோ என்று நினைக்கிறேன்.//

    இச் சிந்தனைகளுக்குப் பின்னால் வாலாட்டி செல்லும் மனசில் என்னென்னவோ வெளிச்சங்கள்.

    பதிலளிநீக்கு
  36. கீதா சாம்ப சிவம் மேம் தெளிவாக தெம்பளிக்கும் படியாக அணுகியமை பாராட்டுக்கு உரியது.

    பதிலளிநீக்கு
  37. வாங்க நிலாமகள்.. காணவில்லையேனு நினைத்தேன்..:)
    பின்னூட்டச் சரத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  38. பெயரில்லாஆகஸ்ட் 05, 2013

    Very good poem. Please read email to msuzhi@ymail.com and response please.

    பதிலளிநீக்கு
  39. பெயரில்லாஆகஸ்ட் 06, 2013

    //பெயரில்லா சொன்னது…

    Please read email to msuzhi@ymail.com and response please.//

    ?????

    பதிலளிநீக்கு
  40. பெயரில்லாஆகஸ்ட் 07, 2013

    //?????
    Asking me? You can hide my face if you want, but you are not good. You think who you are? Why ask me when you not know any purpose?

    பதிலளிநீக்கு
  41. பெயரில்லாஆகஸ்ட் 07, 2013

    What is your problem? I am not concerning you.

    பதிலளிநீக்கு