2013/06/20

சங்க சொப்பனம்



    திகாலை சுமார் மூன்று மணிக்கு அலறியடித்து விழித்து எழுந்தேன். மறுபடி தூங்கப் பயந்து.. கொஞ்சம் மோர் நானே கலந்து குடித்து.. வேப்பிலை (ப்லேஸ்டிக்) அடித்து.. விபூதி ஸ்டாக் இல்லாததால் medicated powder சிறிது பூசி.. காக்கக் காக்கக் கனகவேல் காக்க.. டகுடகு டிகுடிகு டிங்கு டிங்கு டமுக்கு டப்பா அய்சலக்கா படபடபடபடபடப்பில் இரண்டு மணி நேரம் போல் வியர்த்திருந்தேன்.

இது தான் நான் கண்ட கனவு:

உயர்நிலைப் பள்ளி. தமிழ் இரண்டாம் தாள் தேர்வு எழுதுகிறேன். கேள்வித்தாளைப் பார்க்கிறேன்.

'மாவடு கண்' என்ற உவமை ஆளப்படும் சங்கப் பாடலையும் அதற்கானப் பொருளையும் விளக்கி எழுதுக. 10 மதிப்பெண்.

சங்கப் பாடலா? எனக்கோ சினிமாப் பாட்டு தவிர வேறெதுவும் நினைவுக்கு வர மறுக்கிறது. பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல, சங்கத்துக்குப் பதில் சினிமாவை நைசாகத் தள்ளிவிட நினைத்தபடி அடுத்தக் கேள்வியைப் பார்க்கிறேன். ஆடிப்போகிறேன்.

'பண்புத்தொகை புறத்துப் பிறந்த அன்மொழியை உதாரணத்துடன் விளக்குக'.

'இன்னா எயவுடா இது முருகா?' என்று எண்ணி, முதல் நாளிரவு எழுதி மறைத்து வைத்த பிட்டை நாடுகிறேன். பேன்டுக்குப் பதில் அங்கே வேட்டி. ஆ! வேட்டியா கட்டியிருக்கிறேன்?! அதிர்ச்சியடங்கி, மீண்டும் கேள்விகளைப் படிக்கிறேன்.

'10 மதிப்பெண்' என்றிருந்தது, ஸ்பிடாமீடர் போல கிடுகிடுவென உருண்டு, '50 மதிப்பெண்' என்று என் கண் முன்னே மாறுகிறது. இரண்டு கேள்விகளைத் தவிர மற்றக் கேள்விகள் மறைந்து, அங்கே என் தமிழாசிரியரின் முகம் தோன்றுகிறது. பவர்ஸ்டார் போலச் சிரிக்கிறார்.

அலறியடித்து எழுந்தேன்.

இப்படி ஒரு கனவு வந்தால் நீங்கள் மட்டும் அலறாமல் என்னவாம்? இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே என்றா பாடுவீர்கள்?


    மினி மனைவி. சமீபத்தில் படித்த புத்தகம் #1. மேனுவல் கன்சாலெஸ் எழுதிய பதினெட்டு சிறுகதைகள். பதினெட்டில் பதினொரு கதைகளை ரசித்தேன். இவரின் கதைத்தளங்கள், கொஞ்சம் மூளையைக் கசக்கிப் பிழியும் அசாதாரணத் திகில் கலந்த வக்கிரக் குறும்புத் தளங்கள் (அப்படியென்றால்?). படித்து முடித்ததும், கதையின் விபரீதம் வக்கிரம் இவற்றின் பின்னால் இருக்கும் யதார்த்தம் புரிந்து திடுக்கிடுகிறோம்.

இரண்டு வகை தினசரி முரண்களின் comic extrapolation, இவர் கற்பனையின் வேர்.

ஒன்று: உறவுகள்.
ஆழ்ந்த நேசிப்புகளின் காரணமாகவோ, அந்த நேசிப்புகள் மெள்ள அரிக்கப்பட்ட அல்லது ஒட்டு மொத்தமாக நிராகரிக்கப்பட்டதன் ஆழ்ந்த வெறுப்பை நேசிக்கும் விபரீதம் காரணமாகவோ, சில உறவுகளையும் நினைவுகளையும் பற்றித் திண்டாடுகிறோம்.

இரண்டு: சமூகம்.
வகைசார் எதிர்பார்ப்பு வட்டங்களுக்குள் அடங்கி வாழ வேண்டிய எதிர்பார்ப்பை ஏற்றோ ஏற்காமலோ வாழும் காரணத்தால், நாமோ சமூகமோ எதிர்பார்த்தது முற்றிலும் எதிர்பாராததாக மாறும்
பொழுது நமக்கு என்ன ஆகிறது? சமூகத்துக்கு என்ன ஆகிறது? எதிர்பார்ப்புகளுக்கு என்ன ஆகிறது? (தளம் பற்றிச் சொன்னது இப்போது புரிகிறதா?)

ஒவ்வொரு சிறுகதையும் நம்மை இணையுலகுக்கு இட்டுச் சென்று ஏமாற்றி அங்கேயே தொலைத்து வருகிறது. இவருடைய முதல் புத்தகமாம். நம்பவே முடியவில்லை. புது ப்ரேட்பரியை வரவேற்று ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பி வைத்தேன்.

வாய்ப்பு கிடைத்தால் அவசியம் படியுங்கள். என்னைக் கவர்ந்த சில கதைகளின் துண்டுகள் அதுவரையில் தூண்டிலாய் உங்கள் மனதில் அலையட்டும் ;-)

பைலட்டும் எழுத்தாளனும்
சுமார் பத்தாயிரம் அடி உயரத்தில் நகரை வட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம், இருபது வருடங்களாக - இப்படித் தொடங்குகிறது கதை.

கடத்தப்பட்ட விமானம் ஒன்றில் பயணியாக நகரை வலம் வரும் எழுத்தாளனுக்கு மெள்ள மெள்ளத் தன் நிலை பழகிவிடுகிறது. இருபது வருடங்களாக ஒரு விமானத்துக்குள் அடைபட்டுக் கிடந்தால் என்ன ஆகும்? எப்பொழுது தரை தொடுவது? பிற பயணிகள் பைலட் சேவகர் அனைவரையும் தெரிந்து கொண்டாகி விட்டது. இனி? எழுத்தாளனுக்கு பழைய நினைவுகள் துணையாகின்றன. இந்த விமானம் என்றைக்காவது தரையிறங்குமா? முதலில் கவலைப்படுகிறான். நாளாக அந்தக் கவலையையும் துறக்கிறான். இறங்கத்தானே வேண்டும் ஒரு நாள்? பயணிகளுக்கும் தினம் வயதாகிக் கொண்டே போகிறதே? யாருமற்ற விமானம் தரை தொடத்தானே வேண்டும்? யாருமற்ற விமானம் தரை தொடுவதை கற்பனையில் ரசிக்கிறான். அனுபவிக்கிறான்.

தரைதொடாத கடத்தப்பட்ட விமானம் ஒரு படிமம். நம் வாழ்வு நாம் விரும்பியபடியா அமைகிறது? இந்த வாழ்வுக்குள் நாம் புகுத்தப்பட்டவர்களா? எனில், அது கடத்தல் தானே? என்றைக்குத் தரை தொடுவோம்?
கலைஞன்
tinnitus தெரியுமோ? அக்கம்ப்பக்கத்தில் எந்த ஒலியெழும்பாவிட்டாலும் காதிலும் மண்டையிலும் கிர்ர்ர்ர்ர் ஒலி கேட்குமே, அதான் tinnitus. இந்தக் கதையின் நாயகன் கார்ல், tinnitus extremus :). அதாவது கார்ல் தன் காதுகளால் பேசக் கூடியவன். in fact, காதுகளால் மட்டுமே பேசக் கூடியவன்.

ஏழு வயதில் பேசத் தொடங்கிய கார்லின் உதடுகள் அசையாமல், ஒலி மட்டும் வருவதைப் பார்த்துப் பேய் பிசாசென பயந்து போன பெற்றோரில் தொடங்கி, கார்லின் பள்ளி வாழ்வு, பின் டீனேஜ், நடுத்தர வயது அனுபவங்கள் என்று விவரமாகப் போகிறது கதை. கார்லின் நிலை பற்றிய மருத்துவக் குறிப்புகள் கொஞ்சம் இழுவையென்றாலும், புதிதாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. கார்ல் தன் இயலாமையே தன்னுடைய சிறப்பான திறமை என்று உணரத் தொடங்குவதாக முடிகிறது கதை.

நம்மில் எத்தனை பேர் வாயிருந்தும் பேசாமல் வாழ்கிறோம்? காதால் பேசுவது ஒரு படிமம். மனதைப் பேசத் துணிவின்றி மனதுள் பேசித் திரிகிறோம். பலவீனங்களை பலமாக மாற்றுவதன் அவசியத்தை எத்தனை பேர் உணர்ந்து வாழ்கிறோம்?

மினி மனைவி
அளவுச்சுருக்க விற்பன்னன் ஒருவன் தவறுதலாகத் தன் மனைவியை கட்டை விரல் அளவுக்குச் சுருக்கி விடுகிறான். அவளைப் பழைய உருவத்துக்குத் திருப்ப முயலுகையில் அவன் மனதில் வக்கிரம் தலைதூக்குகிறது. மனைவியை அதே நிலையில் விடுகிறான். ஒரு பொம்மை வீடு கட்டி அங்கே அவளை குடிவைக்கிறான். சிறையிருக்கப் பிடிக்காத மனைவி, பழி வாங்கத் தீர்மானிக்கிறாள். 'என்னை நீ பழி வாங்குவதா?' என்று சிரிக்கிறான் கணவன்.

இருவருக்கிடையிலான கார்கில் ஆரம்பம். கணவனும் மனைவியும் முறையெடுத்துக் கொண்டு ஒருவரையொருவர் சித்திரவதை செய்கிறார்கள். சோர்ந்து போகிறார்கள். எதிர்பாரா விதத்தில் கணவனைப் பழிவாங்குகிறாள் மனைவி. பதிலுக்கு வீடெங்கும் அரையடி உயரத்துக்குத் தண்ணீர் நிரப்புகிறான் கணவன். போர் தொடர்கிறது.

அளவுச் சுருக்கம் ஒரு படிமம். உருவகம். சுடுசொல்லால் தினமும் நாம் எத்தனை பேரைச் சுருக்குகிறோம்? தினம் எத்தனை சுருங்குகிறோம்? எத்தனை வதைக்கிறோம்? வதைபடுகிறோம்?


கடுகி யதரலைக்கும் கல்சூழ் பதுக்கை
விடுவி லெயினர்தம் வீளையோர்த் தோடும்
நெடுவிடை அத்தஞ் செலவுரைப்பக் கேட்டே
வடுவிடை மெல்கின கண்
.

சமீபத்தில் படித்த புத்தகம் #2. பதினென்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான கைந்நிலை. ஏனென்று கேட்காதீர்கள், படித்தேன். சங்குப்புலவர் எழுதிய உரை, இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. நீங்களும் படியுங்கள், ஏனென்று கேட்க மாட்டேன்.

மான்விழி மீன்விழி என்றெல்லாம் படித்துக் கேட்டிருக்கிறேன். முதல் முதலாக 'மாவடு கண்ணல்லவோ?' என்றச் சினிமாப் பாடல் வரியைக் கேட்டதும் திகைத்தது நினைவிருக்கிறது.

பெண் இலக்கணம் பற்றி நிறைய எழுதப்பட்டிருக்கிறது, சொல்லப்பட்டிருக்கிறது. முக்கியமானவை மூக்கும் கண்களும். ("மூக்கும் முழியுமா அழகா இருக்கா பொண்ணு" - இதில் முழியைத் தொடர்ந்து வரும் 'அழகு' என்பதற்கான பொருளறிய விரும்புவோர் 'சாமுத்ரிகா லட்சணம்' படிக்கவும். பெண்ணிலக்கணத்தில் இத்தனை நுட்பம் இருக்கிறதா எனத் திடுக்கிட வைக்கும்). ஒரு சினிமாப் பாட்டில்* கூட 'மூக்கும் விழியும் பார்க்கப் பார்க்க மோகத்தைத் தருமோ, இல்லை முன்னழகைப் பார்த்தவுடன் மூச்சு நின்றிடுமோ?' என்று வருகிறது. [நானறிந்த மட்டும், அன்றும் சரி, இன்றும் சரி - ஆண்கள் பெண்களை மோகிப்பதன் காரணம், பெண்களுக்குக் கண்கள் இரண்டு இருப்பதால் அல்ல, kapish?]

பின்னாளில் 'மாவடு கண்' என்று நிறைய புலவர்கள் பாடியிருக்கிறார்கள் என்பது தெரிந்து வியந்தேன்.

வஞ்சி நகரில் வாழும் தலைவியின் முகத்தை அழகு செய்த கண்கள் எப்படிப்பட்டவை? 'புறத்தன, ஊரன, நீரன, மாவின் திறத்தன' என்கிறது ஒரு தண்டியலங்காரப் பாடல்.

காட்டில் வாழும் மான்களின் கண்களைப் போன்றவை (புறத்தன). விரையும் அம்புகளைப் போன்றவை (ஊரன). நீரில் உள்ள குவளை மலர்களைப் போன்றவை (நீரன). and finally.. மாவடுக்களைப் போன்றவை (மாவின் திறத்தன).

திருவாசகத்திலும் வருகிறது. வழக்கம் போல் ஆணாத்திகப் புலம்பல் என்றாலும் தமிழை ரசிக்க முடிகிறது. 'பெண் எனும் பிசாசிடமிருந்து என்னைக் காத்தருளிய பெருமானே!' எனும் மாணிக்கவாசகர், தான் மாவடு கண்களில் சொக்கியதாகவும் சொல்கிறார். 'மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத்திடவுடைந்து தாழியைப் பாவு தயிர்போல் தளர்ந்தேன்' என்கிறார். மாழை = மாவடு. 'மாவடெனப் பருத்த மையிட்ட அழகானக் கண்களையுடையவர் மேல் கொண்ட ஆசை, மத்தின் சுழற்சி வேகத்தில் பானையெங்கும் அலைபாயும் தயிர் போல் என்னை நிலைகொள்ளாதுத் தளர வைத்தது' என்கிறார். (துய்க்குமட்டும் துய்த்துப்பின் பிய்த்துக் கொண்டோடும் புலவரே, மிஸ்டர் மாணிக், சற்று நில்லும். 'ஆணெனும் அரக்கனிடமிருந்து என்னை விடுவித்தாயே!' என்று பெண்கள் எந்தப் பெருமானிடம் வேண்டிப் பாடுவார்கள்.. ம்?)

சங்கப் பாடலின் மாவடு கண் சுவையானது.

இங்கே தலைவி கிடந்து தவிக்கிறாள். "என் தலைவரே, யாது மொழிந்தீர்?!" என்கிறாள். தலைவனின் முரட்டு உதடுகளைத் தன் மலரன்ன விரல்களால் பொத்தித் துடிக்கிறாள்.

ஏன் துடிக்கிறாள்? தலைவன் அப்படி என்ன சொன்னான்? நம் எண்ணத்தைப் புரிந்தவன் போல் தலைவனும் "அப்படி என்ன சொன்னேன் கண்ணே?" எனறு கேட்க எண்ணுகிறான். ஆனால் உதட்டில் பட்டத் தலைவியின் விரல்கள் சுவையாகவும் சுகமாகவும் இருப்பதால் அமைதி காக்கிறான். தலைவன் இருக்கிறானே, ர..சி..கன்.

தலைவி தொடர்கிறாள்.

"எமது காதலரே! பாலை வழிப் போவதாகச் சொல்கிறீரே! இது அடுக்குமா? பாலையை நானறியேனா? பாலை வழியெங்கும் ஆங்காங்கே புதைந்திருக்கும் பெரும்பாறைகளின் பின்னே பதுங்கியிருக்கும் கொடுமையான வேடர்களைப் பற்றி நானறியேனா? வழியில் வருவோரை அடித்து அவர் பொருள் பறிக்கும் கொடுமையானவர்களாயிற்றே? அப்பாவி வழிப்போக்கர்கள் நன்கு உள்ளுக்குள் வரும்வரை பாலையின் பற்பாறைகளில் பதுங்கியிருந்து, தப்பும் வழியின்றி அப்பாவிகள் சிக்கியதும் மிகக் கடூரமான சீழ்க்கையொலியினை எழுப்பி சுற்றியிருக்கும் வேடர்களையெல்லாம் அழைப்பதை நானறியேனா? எத்தகைய வீளையொலி? வலிய காட்டெருமைகள் கூட அந்தச் சீழ்க்கையொலியினைக் கேட்டு அஞ்சிக் கலங்கி ஓடுமே! அத்தகைய இன்னல் நிறைந்த பாலை வழியே போவதாகச் சொல்கிறீரே?!" என்று விரல்களைத் தலைவன் உதட்டிலிருந்து விலக்கிக் குவித்து அவன் நெஞ்சில் குத்துகிறாள். செல்லமாகத்தான்.

இப்படித் தலைவி பிரிவாற்றாமையில் துடிக்கும் பொழுது, அவள் மாவடுக் கண்கள் கண்ணீர் மல்கின. there you go!

மாவடு கண் இங்கே மிகச்சிறந்த உவமையாகிறது என்பது என் கருத்து. அழுத கண்கள் இடுங்கிச் சுருங்கியிருக்கும். அதனால் இங்கே மாவடு கண் என்றார் புலவர். பருத்த சிரித்த தெளிந்த கண்களுக்கு மாவடு பொருந்தினாலும், அழுத கண்களுக்கு மிகச் சிறப்பாகப் பொருந்துவதாக நினைக்கிறேன். இந்தப் பாடலைப் படிப்பவர்களுக்கு மாவடு கண் உவமை மிகுந்த நிறைவைக் கொடுக்குமென நம்புகிறேன். நெடுவிடை அத்தஞ் செலவுரைப்பக் கேட்டே வடுவிடை மெல்கின கண். ஆகா! bravo!

அலோ பிரதர், சிஸ்டர்.. அப்பால இந்த 'பண்புத்தொகை புறத்துப் பிறந்த அன்மொழி'னா இன்னானு தெர்ஞ்சுக்க கைந்நிலையின் 'ஓங்கல் விழுப்பலவி' பாடலைப் படியுங்க தெர்தா?

நிற்க, சங்கப் பாடல்கள் படித்தால் கெட்ட கனவு வராது. கனவே வராது. நாலு பக்கம் படித்தால் அப்படி அடித்துப் போடுகிறது தூக்கம். எளிமையோ கற்பனையோ நயமோ இல்லாத அருஞ்சொற்பொருளுரை கொண்ட சங்கப்பாடல்கள் ஆர்கேனிக் வேலியம் போல. முதல் பாடலில் கொட்டாவி. இரண்டாவதில் கண் செருகல். மூன்றாவதில் மயக்கம். நான்காவதில் REM.

போகிற போக்கில்: தமிழ் சாதி, தமிழ்க் குருதி (நிதானமாகப் படிக்கவும்), தமிழ் மண், தமிழ் மூச்சு என்றெல்லாம் கொடிபிடிக்கும் கூட்டம், இது போன்ற சங்க இலக்கியங்களை சுலபமான தமிழில் எளிமைப்படுத்தி எழுதலாமே? வரும் சந்ததியும் சிந்திக்குமே? ம்ம்.. அதுவும் சரி. 'எளிய அறிமுகம்' செய்கிறேன் பேர்வழி என்று இலக்கியத்தைத் தொலைத்தாலும் ஆபத்து. பிறகு நிச்சயம் கெட்ட கனவு வரும்.

* அது என்ன சினிமாப் பாட்டு? (எங்களுக்கு மட்டும் சினிமாப் பாட்டுப் புதிர் போட வராதான்னேன்?)

30 கருத்துகள்:

  1. சங்கம் சொப்பனத்தில் வந்து இப்படியும் பயமுறுத்துமோ? எனக்குல்லாம் பள்ளி வயசுல கணக்குதான் இப்படி கனவுலயும் பயமுறுத்திச்சு. அந்த வயசுல கணக்குப் போட வரலை; வாலிப வயசுல கணக்குப் பண்ண வரலை! ஹி... ஹி...! பைலட்டும் எழுத்தாளனும் அப்படின்னு நீங்க குடுத்திருக்கற ஜிஸ்ட்டும், காதுகளால் பேசுபவனும் ரொம்பவே யோசிக்க வெச்சாங்க. கூடவே அந்தப் புத்தகத்தைப் படிக்கணும்னும் ஆசை வந்துடுச்சு. ஆனா இங்கிலீஈஈஈஷ் புக் போலத் தெரியுது. அதனால நீங்களே ‘முழி’ பெயர்த்து முழுசாப் போட்டுட்டா நல்லாருக்குமேன்னும் தோணுது. ஹும்..!

    பதிலளிநீக்கு
  2. அது என்ன சினிமாப் பாட்டு? (எங்களுக்கு மட்டும் சினிமாப் பாட்டுப் புதிர் போட வராதான்னேன்?)
    ராதைக்கேற்ற கண்ணணோ! சீதைக்கேற்ற ராமனோ!கோதைக்கேற்ற கோவலன் யாரோ!

    சுமைதாங்கியில் ஜானகி பாடும் பாடல்.

    பதிலளிநீக்கு
  3. பின்னூட்டத்தில் கண்ணனோ! தவறு ஏற்பட்டு விட்டது.

    பதிலளிநீக்கு
  4. பலவீனங்களை பலமாக மாற்றுவதன் அவசியத்தை எத்தனை பேர் உணர்ந்து வாழ்கிறோம்?//
    ஏதாவது குறையை சொல்லிக் கொண்டு த்ன்னையும் வதைத்துக்கொண்டு மற்ற்வர்களையும் வதைப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். குறையை நிறைவாக மாற்ற தெரிந்தவர்கள் பாக்கியவான்கள்.

    தன் இயலாமையே தன்னுடைய சிறப்பான திறமை என்று உணர்ந்த கார்ல் கதை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. பயங்கர கனவு...

    மாவடு கண் - ஆகா... நல்ல ரசனை...! + விளக்கம்...!

    பதிலளிநீக்கு
  6. நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் முத்தன முத்தல்லவோ !மிதந்து வந்த முத்தல்லவோ! பாடலில் வரும் மாவடு கண். குட்டி பத்மினியின் கண்ணை அவ்வாறு குறிப்பிடுவார் தேவிகா.

    பதிலளிநீக்கு
  7. //தரைதொடாத கடத்தப்பட்ட விமானம் ஒரு படிமம். நம் வாழ்வு நாம் விரும்பியபடியா அமைகிறது? இந்த வாழ்வுக்குள் நாம் புகுத்தப்பட்டவர்களா? எனில், அது கடத்தல் தானே? என்றைக்குத் தரை தொடுவோம்?//

    இது தான் நானும் நினைச்சேன். :)))) ஆனால் நாம் தரை தொடுவது நம்மையும் அறியாமல் நடக்குமோ?????

    மாவடுக்கண்ணல்லவோ, மைனாவின் மொழியல்லவோ, பூவின் மணமல்லவோ, பொன் போன்ற முகமல்லவோ,

    முத்தான முத்தல்லவோ, முதிர்ந்து வந்த முத்தல்லவோ!

    பதிலளிநீக்கு
  8. தமிழ் இலக்கணமே படிச்சதில்லை. :( உங்களோட இலக்கணக் கேள்வியைப் படிச்சதும் தூக்கி வாரிப் போட்டது. நல்லவேளையா பதிலைச் சொல்லச் சொல்லிக் கேட்கலையோ, பிழைச்சேன். :)))

    மற்றபடி ஆங்காங்கே கந்த சஷ்டி கவசம், திருவாசகம் போன்றவற்றை உங்கள் பாணியில் வாரி விட்டிருப்பதை ரசிச்சேன். :)))))

    பதிலளிநீக்கு
  9. "ஆணாத்திகப் புலம்பல்" ஆஹா, அருமையான சொல்லாக்கம்.

    பதிலளிநீக்கு
  10. முடிவில் அருமையாக சொன்னிங்க. எளிமை படுத்துகிறேன் என்று சில இடங்களில் பார்த்திருக்கிறேன். புணர்ச்சி இலக்கணம் படித்ததையே அல்லது இருப்பதையே மறக்கடித்து விடுவது போல் எழுதுறாங்க.
    மாவடு கண் என்ன ஒரு அழகான உவமை.
    சங்க இலக்கிய பகிர்வுகளை இப்படி தொடர்ந்து பதிவிடுங்கள். நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  11. பொறமையா இருக்கு சார், சங்கப் பாடல்கள் பத்தி யார் பேசினாலும் பொறாமையா இருக்கு... தமிழ் தான் என்றாலும் வார்த்தைகள் புரிய மறுக்கிறது... உம்மைப் போன்ற நல்ல வாத்தியாரிடம் டியுசன் செல்ல வேண்டும்

    பதிலளிநீக்கு
  12. நான் ரசிக்கும் எழுத்துக்கள்ன்னு, உங்களைப் பத்தி இப்பதான் எழுதிட்டு வர்ரேன் அப்பாதுரை.

    இப்படி அசர அடிச்சா எப்படி?

    ஒரு சுவாரஸ்யமான எஸ்.கே.சி.

    பதிலளிநீக்கு
  13. //அன்மொழியை உதாரணத்துடன்....//

    எனக்குக் கனிமொழியைத்தான் தெரியும்!

    படிமங்களை நீங்கள் கடைசியில் சொல்லவில்லையென்றால் எனக்குப் புரிந்திருக்காது!

    புதிர்ப்பாடல் 'கண்ணும் கண்ணும் கலந்திடவா ஜாலியாகவே' பாடலா?

    பதிலளிநீக்கு
  14. மாவடுக் கண்ணைப் பற்றி நீங்கள் சொல்வது மாவடுவைப் போலவே சுவையாக இருக்கிறது. நன்றி :)

    பதிலளிநீக்கு
  15. பட்டுனு சொல்லிட்டாங்க கோமதி அரசு. மாவடு கண் பாட்டு எந்த படம்னு எனக்கே தெரியாது - ரொம்ப தேங்க்ஸ்.

    பதிலளிநீக்கு
  16. பின்னூட்டங்களுக்கு நன்றி.

    நிறைய சங்கப் பாடல்கள் ரொம்ப போரடிக்கும் என்பது என் கருத்து சீனு. எனக்கு நேரம் இருப்பதால் பூனையை ஐமீன் சங்கப் பாடல்களை.. இதில் பொறாமைப் பட என்ன இருக்கு?

    பதிலளிநீக்கு
  17. சங்கப் பாடல்கள் போரடிக்கும் என்றாலும் அதை உங்கள் போன்றவர்கள் எளிமையாக விளக்கும் பொழுது ஏற்படும் சுவை அதன் மீது ஒரு தனி ஈர்ப்பை வரச் செய்கிறது.... போரடிக்காத சங்கப் பாடல்களாகா நானும் படிக்கத் தொடங்க வேண்டும் :-)

    பதிலளிநீக்கு
  18. சரியான பாயின்டு பிடிச்சீங்களே சசிகலா!
    இந்த 'புணர்ச்சி இலக்கணம்' (ப் வருமா?) ஊழல்ல நான் தாங்க முதல்ல மாட்டணும். அவ்ளோ மோசம். கவிநயாவைக் கேட்டுப் பாருங்க, ஒற்றொற்றா சொல்வாங்க.

    நானறிந்த (சில) மொழிகளிலே தமிழ்மொழி போல் ஒட்டுவது எங்கும் காணோம். தமிழ்ல மட்டும் தான் இப்படி ஒரு சொற்கள் சேரும் போது ஒரு ஒற்று தேவைப்படுகிறது. ஏனென்றே தெரியவில்லை. தேவையா என்றும் புரியவில்லை.

    பதிலளிநீக்கு
  19. // சரியான பாயின்டு பிடிச்சீங்களே சசிகலா!
    இந்த 'புணர்ச்சி இலக்கணம்' (ப் வருமா?) //

    இன்னும் முழுசா பார்க்கல்ல... உங்க பதிவைச் சொன்னேன்.

    இப்ப ந்யூ யார்க் க்கு தியேட்டர் ஷோவுக்கும் பிறகு அதில் ஏற்படும் தோஷங்களுக்கு நிவர்த்தியாக, சித்தி ( ராதிகா இல்ல )இது ஸித்தி வினாயகர் கோவிலுக்கும் கிளம்பிண்டு இருக்கிறேன். இன்னிக்கு சனிக்கிழமை. அனுமாரைப் பார்க்கணும் அப்படின்னு கிளம்பும்போது . அப்பாதுரை சார் கண்ணிலே படறார். குட் மார்னிங் சார். ஹௌ ஆர் யூ ?

    போயிட்டு வந்த பிறகு எல்லா பாயின்டுகளுக்கும் விலா வாரியா கருத்து சொல்லணும். வைட் பண்ணுங்க.

    இருந்தாலும் இமீடியட்டா ஒரு பாயின்டு சொல்லணும்.

    ப் வருமா ? ச் தான் அடிக்கடி வரும்.

    ஸுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  20. மினி மனைவி - என்ன ஒரு வாழ்க்கை விவரிப்பு! அதேபோல தரையிறங்காத விமானத்தில் எழுத்தாளனும்!

    உங்கள் சங்க சொப்பனம் வாய்விட்டுச் சிரிக்க வைத்தது. எப்படி இத்தனை அனாயாசமாக நகைச்சுவை வருகிறது உங்களுக்கு? உங்களின் எழுத்தில் 'அப்பாவி'யையும் ரசிக்க முடிகிறது.

    சங்கப்பாடல்களையும் ரசிக்க முடிகிறது.மிகவும் ரசிக்க வைத்தது மாவடு கண்கள் விவரிப்பு தான்.

    பதிலளிநீக்கு
  21. "கொஞ்சம் மூளையைக் கசக்கிப் பிழியும் அசாதாரண திகில் கலந்த வக்கிரக் குறும்பு தளங்கள்(அப்படியென்றால்.?).... உங்கள் எழுத்துக்களைப் போல என்று சொல்லலாமே. இண்டர்நெட் கிடைக்காததால் இதை என் மகன் வீட்டில் இருந்து எழுதுகிறேன். வீட்டுக்குப் போய் மறுபடியும் வாசித்து கருத்த்ரைக்க வருகிறேன்

    பதிலளிநீக்கு
  22. 'ச்' வருமென்ற சுப்புத் தாத்தா ஏன் ஸூப்புத் தாத்தா ஆனார்? :)

    பதிலளிநீக்கு
  23. // சுப்புத் தாத்தா ஏன் ஸூப்புத் தாத்தா ஆனார்? ://

    காரணம் வேறு ஒன்றுமில்லை. அந்த மினி மனைவி கதையைப் படித்ததில்
    மூளை ( ??? !!!!)குழம்பிப்போய் சூப் ஆகிவிட்டது. கதையின் தாக்கத்தில் இருந்து
    வெளி வருவதற்கு சற்று நேரம் பிடித்தது. பௌராணிகர்களும் இது போன்ற கதைகளை
    ஆங்காங்கே உதிர்த்திருக்கிறார்கள். சித்தர்கள் பற்றிய நூல்களைப் படிக்கும்போதும் இது நடக்கக்கூடியது தான் என்று தெரிகிறது. வாமனன் தன்னையே மினி ஆக்கிக்கொண்டு தானே மஹாபலி போல நிற்கின்றான்.!!

    இதையே நினைத்துக்கொண்டிருந்தபோது ந்யூயார்க் ப்ராட்வே தியேட்டரில் நான் பார்த்த ஒரு நாடகத்திலும்..
    ( விக்கட் )

    கணவனே கண் கண்ட தெய்வம் என்று எண்ணிப் பாவம்..
    அதை என்ன சொல்ல !! அந்த பெண்ணும் தன் கணவன் கொடுத்த பச்சை பானகத்தை
    அருந்த, அவள் குழந்தையும் பச்சையாய்ப் பிறக்க ( ப் கவனிக்க) அந்தப் பச்சையைப் பார்த்துப் பார்த்துப்
    பிற மக்களெல்லாமேயவளையொரு பிசாசாக எண்ணி வெறுக்க, நல்லதொரு பெண் வாழ்வு எவ்வாறு
    வீணாகிறதென்னுமொரு கருத்தினைக்கொண்டதொரு நாடகத்தை நேற்று நான் ப்ராட்வே த்யேட்டரில்
    பார்த்தேன்.


    ப், ச், க், ற், இவை பற்றிய
    பவனந்தி முனிவரின் புணர்வு இலக்கணம் இன்னொரு முறை படிக்க வேண்டும். நானல்ல.

    சுப்பு தாத்தா. ( எங்க தாத்தா வச்ச பெயர் சுப்பு ரத்தினம். அதை சூப்பு என்று மாத்திக்க மனசு வரலை)
    www.subbuthatha72.blogspot.com
    www.subbuthatha.blogspot.in

    பதிலளிநீக்கு
  24. மாவடு கண்ணல்லவோ, என்ற வரிகள் உள்ள பாடல் ஶ்ரீதரோட நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் இல்லை வந்தது? சுமைதாங்கி???????

    பதிலளிநீக்கு
  25. ரைட்டு மாவடு கண்ணல்லவோ நெ ஓ ஆ. ராதைக்கேற்ற கண்ணனோ சு தா.

    பதிலளிநீக்கு
  26. "ஆணாத்திகப்புலம்பல்" என்பதை படித்ததும் முதலில் தட்டெழுத்து பிழையோ என்று தான் நினைத்தேன். அடுத்த வரியை படித்த பின் தான் தெரிந்தது நீங்கள் வழக்கம் போல நாத்திக குப்பையை அள்ளி வீசி ஹிந்து சாமியார்களை ஒரு பிடி பிடிக்க போகிறீர்கள் என்று. நல்ல வேளை தமிழ் இலக்கியத்துக்கு தாவிவிட்டீர்கள். மாணிக்கவாசகர் பிழைத்தார், சுழி வாசகரும் பிழைத்தார்.

    'பவர் ஸ்டார் போல சிரிக்கிறார்' - இதை படித்த உடனேயே சிரித்து விட்டேன். இந்த ஆளை இதற்கு மேல் யாராவது கிண்டலடிக்க முடியுமா?

    மற்றபடி தங்களது தமிழறிவுக்கும் என்னை போன்ற பாமரர்களுக்கும் புரிகிற மாதிரி எழுதியதற்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். நசிகேத வெண்பா மாதிரி சங்க பாடல்களை பற்றி ஒரு அருமையான தொடர் ஆரம்பியுங்களேன். நல்ல தமிழை படிக்க மனம் ஏங்குகிறது.

    பதிலளிநீக்கு
  27. என்னாச்சர்யம்! நான் எழுதின கமென்ட் என் ப்லாக்லயே spamக்கு போகிறதே? இது என்ன சதி? ஏதோ ஒரு சக்தி இதை நிகழ்த்துகிறதா?

    பதிலளிநீக்கு
  28. வாங்க expat guru!
    நல்ல ஐடியாவா இருக்கும் போலிருக்குதே? நன்றி.

    (நாத்திகம் குப்பையா? ரைட்டு)

    பதிலளிநீக்கு