2012/11/24

அவல் என நினைத்தால்..





            ன்னொரு இந்திய நண்பர் மூட்டை கட்டத் தொடங்கியிருக்கிறார். மகள் முதுகலைக் கல்லூரியில் சேர்ந்த இரண்டே மாதங்களில் நட்புத் தம்பதிகள் இருவரும், "போதும்டா ஆசாமி! (நாத்திகத் தம்பதிகள்) இத்தனை நாள் அமெரிக்காவில் இருந்ததும் சேர்த்ததும் போதும்" என்று வேலையை உதறினார்கள், வீடு கார் என்று தொடங்கி ஐபாட் வரை அத்தனை வசதிப் பொருட்களையும் விற்றார்கள் (கராஜ் சேல் எனும் சுலபமான சந்தைமுறை இன்னும் இந்தியாவைத் தொடவில்லை என்று நினைக்கிறேன்). பெண் பெயரில் பாதிப் பணத்தைப் போட்டார்கள், மீதிப்பணத்தில் கோயமுத்தூர் அருகே முதியோர் இல்லம் ஒன்றில் இடம் வாங்கினார்கள்.. கிளம்பத் தயாராகி விட்டார்கள். புதுவருடத்தை இந்தியாவில் கொண்டாடப் போகிறார்கள். நீடித்த மின்சாரத் தடையுடன் வாழப் பழகிக் கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்க நினைவாக ஒரு சிறிய விழா வைத்து அழைத்திருந்தார் நண்பர். போனதும் என்னை ஆறத்தழுவி, "எல்லாம் முடிஞ்சாச்சு அப்பாத்துரை" என்று என் பெயர் உடைய அழுத்தினார். "இனிமே பொண்ணு கல்யாணம் கில்யாணம்னு ஏதானு செஞ்சுகிட்டு, அதும் கல்யாணத்துக்குக் கூப்பிட்டா இங்கே வருவோம்.. இல்லாட்டி அவ்ளோ தான்.. இந்தப் பக்கமே தலைவச்சுப் படுக்கப் போறதில்லே.." என்றார். எனக்கு மட்டுமே கேட்டப் பெருமூச்சுடன் வாழ்த்தினேன்.

விழாவுக்கு வருகிறேன். இந்த ஊரில் நட்புக்கூட்டம் சேர்ந்தால் 'இந்த மேரதான் அந்த மேரதான்' என்று ஏதாவது செய்வார்கள். இது ஓடுகிற மேரதான் அல்ல. சொல்கிறேன்.

நண்பர் எம்ஜிஆர் ரசிகர். ஊருக்குக் கிளம்புமுன் தன் முப்பது வருட ஆசை ஒன்றைத் தீர்த்துக் கொண்டார். எம்ஜிஆர் சினிமா மேரதான் ஒன்றைத் தன் ஊர்திரும்பல் விழாவின் மையக் கொண்டாட்டமாக அமைத்தார் (மோகன்குமாரின் பதிவுப்பெயர், பொருள் புரிந்து நெற்றியில் அடித்தது).

ஒரு புறநகர் சினிமா அரங்கை வார இறுதிப் பேகேஜ் என்று புதன் கிழமை முதல் ஐந்து நாள் வாடகைக்கு எடுத்திருந்தார் நண்பர். அவர் அழைத்திருந்த சுமார் இருபது குடும்பங்களும் தினம் அரங்கிலேயே தஞ்சம். அரங்கில் இரண்டு சினிமா தியேட்டர்கள். இரண்டு தியேட்டரிலும் தினம் சுமார் பதினெட்டு மணி நேரம் எம்ஜிஆர் படங்கள் ஓட, அரங்கிலேயே விருந்து, அரட்டை, விடியோ விளையாட்டு, கேரம், சீட்டாட்டம்... எங்கிருந்தோ பல்லாங்குழி புளியங்கொட்டை கூட கொண்டு வந்திருந்தார்கள்!.. அண்மை ஓட்டலில் ஐந்து ரூம்கள் குட்டித்தூக்கம் மற்றும் பிற வசதிகளுக்கு என அருமையாக ஏற்பாடு செய்திருந்தார்.

எத்தனையோ வருடங்கள் கழித்து முதல் வரிசையில் அமர்ந்து விசில் அடித்தேன். சுகமான அனுபவம். ஒரு அமெரிக்க நண்பர் அத்தனை எம்ஜிஆர் படங்களையும் பார்த்தார். கிளம்பும் பொழுது தமிழ் சினிமா ஆச்சரியம் அவர் கண்களில் ஒட்டிக் கொண்டிருந்தது. "you guys make films, we only make movies" என்றார் எங்களிடம். புரிந்தது போல் தலையாட்டினோம்.

வித்தியாசமான thanksgiving. அரட்டை அமர்க்களத்தில் எங்கள் தூக்கம் போனது. எனினும் நட்புத் தம்பதியருக்குப் பெரும் நிறைவு. அதுதான் முக்கியம்.

Thanksgiving என்றதும் ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது.

அமெரிக்கா வந்த புதிது. ஒரு தமிழ் நண்பர் என் போன்ற சோற்றுக்கு லாட்டரியடித்த மாணவர்களை அழைத்து வருடந்தோறும் விருந்து கொடுப்பார். ஒருமுறை விருந்துக்கு ஒரு பிரிடிஷ் பேராசிரியரை அழைத்திருந்தார். சும்மா இருக்காமல் ஒரு கேனை அமெரிக்க மாணவன் அவரிடம், "இங்கிலாந்தில் தேங்ஸ்கிவிங் எல்லாம் கொண்டாடுவீர்களா?" என்றான்.

பேராசிரியர் அமைதியாக, "ஜூலை நாலாம் தேதி கொண்டாடுவோம்" என்றார்.


            னித இனம் மூளை மழுங்கி வருவதாக - நம்முடைய புத்திசாலித்தனம் குறைந்து வருவதாக - கண்டுபிடித்திருக்கிறார்கள் ஸ்டேன்பர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள். மனித அறிவாளுமையை நிர்ணயிக்கும் ஏறத்தாழ ஐந்தாயிரம் மரபணுக்களை வகைப்படுத்தி ஆராய்ந்தவர்கள், இந்தப் பேரதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்கள்.

'இது என்ன பெரிய கண்டுபிடிப்பு - என் அப்பா அம்மாவுக்கும் மனைவி கணவருக்கும் இன்ன பிறருக்கும் எப்போதோ தெரிந்த விஷயமாச்சே?' என்று நீங்கள் எண்ணினால் நானும் துணை. எனினும், இவர்கள் கண்டுபிடித்திருப்பது உங்களையும் என்னையும் பற்றியல்ல. பொதுவாகச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது, மனித இனம் தன்னுடைய மூளை வளர்ச்சியின் உச்சத்தை எப்போதோ அடைந்துவிட்டதாம்.

எப்போது அடைந்ததாம்? மனித இனம் கூட்டாக வாழும் நாகரீகத்தைத் தழுவிய போது என்கிறார்கள். அதாவது, ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பாம்.

கூட்டாக வாழத்தொடங்கியதால் மனித அறிவு அந்த வாழ்க்கைக்குத் தேவையான மாற்றங்களுக்குத் தன்னைத் தயார் செய்வதிலேயே மூளையைச் செலவழிக்கத் தொடங்கியதால், மூளை தொடர்ந்து வளரவேயில்லையாம்.

இதை எதிர்த்து ஒரு ஆய்வாளக்கூட்டம், "அதெப்படி? இன்றைக்குக் காணப்படும் இத்தனை வளர்ச்சிகளும் மூளை வளராமல் ஏதாவது கடவுள் கொண்டு வந்து போட்டதா?" என்று வம்புக்கு வர, முதல் ஆய்வாளக் கூட்டம், "அப்படியில்லை.. மனித இனம் தன் மூளையை lateral developmentஆகப் பயன்படுத்தி வருகிறது. மூளையின் பயன்பாடு வளர்ந்தாலும் மூளையின் அளவு ஆயிரக்கணக்கான வருடங்களாக வளரவேயில்லை" என்று விளக்கியது. எதிர்கூட்டம் விடாமல் "இது போன்ற ஆய்வில் நேரத்தையும் பணத்தையும் செலவழிப்போருக்குத் தான் மூளை வளரவில்லை" என்று இடித்தது.

என்னுடைய ஓட்டு எதிர்க்கட்சிக்கு (எப்போதுமே).

போகட்டும், நம்முடைய மூமூமூமூமூ...மூதாதையரின் மூளை நம் மூளையைவிட ஒரு சைஸ் பெரிதாக இருந்திருக்கலாம். அதைக் கண்டுபிடிக்கும் அளவுக்கு நமக்கு மூளை இருக்கிறது. அதுதான் முக்கியம்.

மூளை அளவு என்றதும் ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது.

மூளை மியூசியம் ஒன்றில் உலகத்தின் அத்தனை நாடு/இன மக்களின் மூளை அளவுகளையும் விவரங்களையும் தொகுத்துக் காட்சியில் வைத்திருந்தார்களாம். மற்ற இனங்களை விட சர்தார்களின் மூளை மிகப்பெரிதாக இருந்ததாம். அதை மனைவி மக்களிடம் காட்டிப் பெருமைபட்ட ஒரு சர்தார், "நல்ல வேளை நாம மூளையை பொறுப்பா அப்படியே வச்சிருக்கோம், மத்தவங்களைப் போல செலவழிக்காம.." என்றாராம்.


            ந்தப் பக்கம் அப்படியென்றால், இந்தப்பக்கம் இப்படி ஒரு ஆராய்ச்சி.

மரணத்தை வெல்ல முடியும் என்றுத் தீர்மானமாகச் சொல்கிறார்கள் marine வேதியல் ஆராய்ச்சியாளர்கள்.

நிறையச் சிரிக்க வேண்டும், கவலை இல்லாமல் இருக்கவேண்டும், பற்றறுக்க வேண்டும், அரை வயிறு சாப்பிட வேண்டும் போன்ற 'சும்மா இலக்கியத்தனப்' பேச்சு இல்லை. திருமூலரின் 'காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாளர்க்குக் கூற்றை யுதைக்குங் குறி'யுமல்ல.

இது அசலில் நோ டெத். சாவுக்குச் சாவு. கயாவுக்கு ஒரு கயா. மரணத்தை எண்ணிக் கலங்காத விஜயனின் ரகசியம். இந்த ரகசியம் கெமிஸ்ட்ரியில் புதைந்திருப்பதாகச் சொல்கிறார்கள் ஸ்மித்சோனியன் ஆய்வாளர்கள். அப்படி என்ன ரகசியம்?

செசியம் க்லோரைட், செசியம் க்லோரைட் என்று ஒரு உப்பு. இந்த உப்பின் ஒரு முக்கிய பாதிப்பு, RD என்று செல்லமாக வழங்கப்படும் Reversed Development. உடனே நாம் குரங்காவோம் என்று பயப்படவேண்டாம். இந்த RD ரொம்ப நல்ல RD.

நீரினங்களில் இந்த உப்பின் பாதிப்பை ஆராய்ந்தவர்கள், 'turritopsis nutricula' எனப்படும் jelly fish வகை தாமாக இறப்பதே இல்லை என்று கண்டுபிடித்தார்கள். செசியம் உப்பின் பாதிப்பினால் இந்த மீன் வகையின் உயிரணுக்கள் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்கின்றனவாம்.

alright! அங்கிருந்து மனித இனத்துக்குக்கானப் பயன்பாடு, தொட்டு விடும் தொலைவு தானே?

நமது உடலின் திசு மற்றும் உயியரணுக்களை 'பிறந்த நிலைக்கு' மீண்டும் எடுத்துப் புதுப்பிக்க வைக்கும் RD உப்பை வருக வருக என்று வரவேற்கிறேன். நமது செல்கள் இயற்கையாகத் தம்மைத்தாமே தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டால், என்றைக்கும் இளமை தானே? மரணபயமே லேதே? ..காலருகே வாடா, சற்றே உன்னை மிதிக்கிறேன். எல்லோரும் பாடலாம். மீசை optional.

காலனை வெல்லும் இந்த உப்பு, என் வாழ்நாளில் தெருமுனை முருகன் கடையில் கிடைக்கப் போவதில்லை. இந்த நூற்றாண்டு முடிவுக்குள் கிடைக்கலாம், முருகன் கடைகள் மூடினாலும். சின்ன சிக்கல்கள் தீர வேண்டும் முதலில். இது முழுக்க முழுக்க கதிரியக்க உப்பு என்பதால் கட்டுப்பாட்டுடன் nuclear medicineஆக மட்டுமே பயன்படுகிறது. இப்போதைக்கு 'அருகிலிருந்தும் தொடப்பயந்தேனே' கதை.

மரணத்தை வென்றால் 'கடவுள் சொர்க்கம் நரகம் எல்லாம் என்னாவது?' என்றக் கவலைகள் கிடக்கட்டும், மனிதம் மரணத்தை வெல்ல ஒரு சாத்திய வழி தெரிந்திருக்கிறது. அதுதான் முக்கியம்.
மரணம் கடவுள் சொர்க்கம் நரகம் என்றதும் ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது.

ஒரு பூசாரி, ஒரு மருத்துவர் - ஒரே நேரத்தில் இறந்த பின் எமனைச் சந்திக்கிறார்கள். எமன் இருவரையும் வரவேற்று "இருவருக்குமே சொர்க்கம்" என்று தீர்ப்பளித்து அனுப்புகிறான்.

சொர்க்கத்தில் ஒரு பெரிய வசதியான இடத்தில் மருத்துவருக்கு இடம் கிடைக்கிறது. பரமசிவனுக்குப் பக்கத்து வீடு.

பூசாரிக்கோ முப்பத்து இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து சொச்ச தேவர் ஒருவருடைய வீட்டின் பின்கட்டில் ஒரு இலையில்லா மரத்தடியில் சிறிய கூரை போட்டுக் கொடுக்கிறார்கள்.

மருத்துவருக்குப் புரியவில்லை. பரமசிவனிடம், "என்ன இது மிஸ்டர் பரமசிவம்? இந்தப் பூசாரி நாள் முழுதும் உம் போன்றக் கடவுள்களையே வழிபட்டு புகழ்பாடி வந்தார். அவருக்கு இப்படி ஒரு இடம். நாளும் பணம் தேடிக்கொண்டிருந்த டாக்டரான எனக்கு இத்தனை வசதியான இடமா, புரியவில்லையே!?" என்று கேட்டார்.

பரமசிவன், "ஐயா.. இங்கே பூசாரிகள் கணக்கில்லாமல் வராங்க.. ஆனால் பாருங்க.. சொர்க்கத்துக்கு வந்திருக்கும் முதல் டாக்டர் நீங்கள் தான். அதனால் இந்த வரவேற்பு" என்றார்.


            மெரிக்கத் தேர்தல் பரபரப்பினிடையே ஒரு கொடிய செயல் ஊடகங்களில் பின்தங்கிவிட்டது. பத்து மாதச் சிறுமியைக் கடத்திச் சென்றுக் கொன்றக் குற்றத்துக்காக ரகுநந்தன் எனும் கயவன் பிலடெல்பியாவில் கைது செய்யப்பட்டுச் சிறையிலிருக்கிறான். வழக்கு நடைபெற்று வருகிறது.

கிராதகன் ரகுநந்தன் சிறுமியை மட்டும் கொல்லவில்லை. சிறுமியைப் 'பார்த்துக் கொண்டிருந்த' அவளுடையப் பாட்டியையும் கொன்றிருக்கிறான். எதற்காக? ஐம்பதாயிரம் டாலர் பணத்துக்காக!

இந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்தால் கயவனும் திருந்துவானே?

தற்காப்புக்கான அனைத்து சக்தியும் இழந்த முதியவரை.. தற்காப்பு எண்ணம் கூடத் தோன்ற இயலாதக் குழந்தையை.. this.. this monster... this demon.. ரகுநந்தன் ராட்சசன் ஆனதேன்?

கொலைகளையும் செய்துவிட்டு, 'குழந்தையைக் காணவில்லை' என்று வஞ்சிக்கப்பட்டக் குடும்பத்துடன் 'தேடலில்' பங்கெடுத்துக் கொண்டானாம். இவன் மனிதன் தானா?

அனேகமாக இவனுக்கு மரண தண்டனை கிடைக்கும். கிடைக்க வேண்டும். ரகுநந்தனின் கொட்டைகளை அந்தக்காலத் துருப்பிடித்தப் பாக்குவெட்டியால் உயிர் போகும் வரை நசுக்கி நறுக்கிக் கொல்லவேண்டும் என்று கனம் கோர்ட்டாரைப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

சிறுமியின் பெற்றோருக்கு என் உளமார்ந்த அனுதாபங்கள், வருத்தங்கள். எத்தனையோ கனவுகளுடன் அமெரிக்கா வந்து அத்தனையும் சிதைந்துத் திரும்பிய இந்தியத் தம்பதிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இவர்களுடைய இழப்புக்கு அளவில்லை. மிகக் கொடுமை.

இந்த வேளையில் உற்றார் உறவினரின் அன்பும் ஆதரவும் இவர்களுக்குத் தொடர்ந்து கிடைக்க வேண்டும். துயரினின்று மீள்வது முக்கியம். பணத்தாசைக்குச் சுலபமாகப் பலியாகும் நமக்கு ரகுநந்தன் போன்றக் கொலைகாரர்கள் பாடமாவதும் முக்கியம்.
கொலைகாரன் என்றதும் ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது. (எங்கே என் கண்ணியம்?)

ஒரு சிறுமியைக் கொலை செய்ய எண்ணிய ஒரு கொலைகாரன், அவளைக் கடத்தி ஒரு இருண்ட காட்டுக்குள் அழைத்துச் சென்றானாம்.

வேண்டாம்.. மேலே சொல்ல மனம் வரவில்லை.


            ந்த வாரம் அத்தனை எம்ஜிஆர் படங்களைப் பார்த்ததும், ஏற்கனவே தெரிந்திருந்த ஒன்று தீர்மானமானது.

சரோஜாதேவியே எம்ஜிஆருக்கு மிகப் பொருத்தமான ஜோடி. 'ஆயிரத்தில் ஒருவன்' மட்டும் விதிவிலக்கு.

கொஞ்சம் கூடப் பொருந்தாத இணை நடிகைகள் பாரதி, வாணிஸ்ரீ, மற்றும் லதா. தேவிகா சற்று ஆச்சரியமான பொருத்தம். எம்ஜிஆர் அருகில் இருந்தாலும் பானுமதி, சாவித்திரி இருவரும் ஏதோ தனியாக நடிப்பது போலிருந்தது. சந்திரகலா, மஞ்சுளா இருவரையும் ஏன் தன் ஜோடியாக நடிக்க வைத்தார் எம்ஜிஆர் என்பது புதிர்.

பின்னாள் படங்களைப் பார்க்கையில் எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்குப் பலமா அல்லது ஜெ எம்ஜிஆருக்குப் பலமாக இருந்தாரா என்றக் கேள்வி அடிக்கடித் தோன்றியது.

பாடல் காட்சிகளில் சரோஜாதேவி சளைக்காமல் எம்ஜிஆரையே கணக்கு பண்ணுகிறார்! எம்ஜிஆர் பானுமதியிடம் பயந்து நடிக்கிறார். பத்மினி எம்ஜிஆர் படங்களில் அழகாக இருக்கிறார். சௌகார் ஜானகிக்கு அட்டகாசமான பாடல்கள் கிடைத்திருக்கின்றன. கேஆர்விஜயா ஜெயலலிதா இருவருடனும் எம்ஜிஆர் 'நெருங்கி' நடித்திருக்கிறார்.

வில்லன்களில் நம்பியாருக்குத் தனியிடம் கொடுத்திருக்கிறார். மற்றவர் படங்கள் போல் நாகேஷ் காமெடி எம்ஜிஆர் படங்களில் அத்தனை சிறப்பாக இல்லை.

எம்ஜிஆரைப் போல் நடனமாட தமிழ்ச் சினிமாவில் யாரும் இல்லை. 'ஆடலுடன் பாடலைக் கேட்டு' போல் ஒரு வேக நடனக் காட்சியை நான் பார்த்ததில்லை என்றே நம்புகிறேன். விஜயலட்சுமியுடன் போட்டியாட்டம் சில நேரம் கேமரா ட்ரிக்கோ என்று நினைக்க வைத்தது. நடனத்தை ரசித்த இன்னும் சில பாடல்கள் 'பல்லவன் பல்லவி', 'நல்ல வேளை'.

ஜெமினி சிவாஜியைப் பார்க்கையில் எம்ஜிஆர், பாடலுக்கேற்ற உடையலங்காரத்தில் மிகுந்த கவனம் எடுத்துக் கொண்டிருக்கிறார். 'வனமேவும் ராஜகுமாரி' பாட்டில் ராஜேந்திரனுக்குத் துணைவரிகளைப் பாடுகிறார் என்றாலும் எம்ஜிஆரின் உடையும், நடன அசைவில் பெண் பாவனையும் மறக்கவே முடியவில்லை.

கேவிஎம் எம்ஜிஆருக்கு நிறைய ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார். மிகவும் ரசித்த கேவிஎம் பாடல்கள்:'உன்னை அறிந்தால்', 'அழகுக்கு மறு பெயர்'. இரண்டு பாடல்களிலும் சவுன்டுக்கு ராஜன் சொக்க வைக்கிறார். எம்எஸ்வி எம்ஜிஆருக்கு உபரியாக உழைத்தார் என்றுச் சொல்வார்கள். உண்மைதானோ என்றுத் தோன்றியது. அனைத்து டூயட்களிலும் டிஎம்எஸ்-சுசீலா அனுபவித்துப் பாடியிருக்கிறார்கள். 'தஞ்சாவூரு சீமையிலே', 'நாங்க புதுசா' பாடல்களில் சுசீலா டிஎம்ஸை லபக் என்று விழுங்கியிருக்கிறார்.

இந்த வாரம் பார்த்தப் படங்களில் மிக மோசமானது நவரத்தினம். மிக மோசமான பாடல் படமாக்கம்/வரிகள்: 'பச்சைக்கிளி முத்துச்சரம்'. எப்பேற்பட்ட பாடல் மெட்டை எப்படி வீணாக்கியுள்ளார் எம்ஜிஆர்... எண்ணித் தாங்கவில்லை. முதல் முறையாகப் பார்த்து, சற்றும் எதிர்பாராமல் ரசித்த படம்: பெற்றால் தான் பிள்ளையா.

எம்ஜிஆர் டூயட்களில் நிறைய 'சிப்பி/முத்து' உவமை வருகிறது. அதற்கு ஏற்ற நடன அசைவுகள் தணிக்கைக்குத் தப்பியது ஆச்சரியம். 'நீ வெட்கத்தை விட வேண்டும், நான் சொர்க்கத்தைத் தொட வேண்டும்' போன்றப் பாடல் வரிகளை மட்டும் பருப்பு ரசமாக மாற்றி என்ன பயன்? மிகவும் ரசித்த டூயட்கள்: 'பாட்டு வரும்', 'நாணமோ'. விடாமல் திருப்பித் திருப்பிப் போட்டுப் பார்த்த டூயட்: 'வளர்வது கண்ணுக்குத் தெரியலே'.

தனிப்பாடல்களில் 'ஒரு கை பார்ப்பேன்' என்ற பொருள் அடிக்கடி வருகிறது. 'உலகம் பிறந்தது எனக்காக' 'நான் உங்கள் வீட்டுப் பிள்ளை' 'வெற்றி மீது வெற்றி' என எம்ஜிஆருக்கு அமைந்தாற்போல் கொள்கை/தனிப்பாடல்கள் பிறருக்கு அமையாதது ஆச்சரியம். பார்த்ததில் மிகவும் ரசித்தத் தனிப்பாடல்கள்: 'போயும் போயும்', 'தைரியமாகச் சொல்'.

கணக்கில்லாமல் எம்ஜிஆர் படம், பாட்டு, நட்புடன் அரட்டை என நாட்கள் போனதே தெரியவில்லை. நண்பரை நானும், இந்த விழாவை அவரும், எங்கள் மரணம் வரை மறக்கப் போவதில்லை. அதுதான் முக்கியம்.
எம்ஜிஆர் என்றதும் ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது.

எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி மூவரும் சொர்க்கத்தில் சந்திச்சாங்களாம். 'கதாநாயகிங்களை ரம்பை ரதினு பாடினமே, அவங்க எப்படித்தான் இருக்காங்க பார்ப்போம்'னு தேவகன்னிகை குவார்டர்சுக்குப் போனாங்களாம். அங்கே ரதி, ரம்பை, மேனகை, திலோத்தமை எல்லாம் ஒரு ஓடையில உல்லாசமா குளிச்சிட்டிருந்தாங்களாம். அவங்க நடுவுல யாரது தெரிஞ்ச முகமா இருக்குதேனு பாத்தா.. நாகேஷாம். மூணு பேருக்கும் கடுப்பாயிடுச்சாம். நேரே போய்..

மேலே சொன்னால் மக்கள் உதைக்க வருவாங்களோ? அப்ப ஜோக்கை இன்னொரு சமயம் சொல்றேன். இப்ப நான் ரசித்துப் பார்த்த சில வாத்தியார் டூயட்களைப் போட்டுச் சமாதானமாப் போயிடறேன்.

வாத்தியார் டூயட் பாடல்கள்
சற்று ஒதுங்கி, புத்தாண்டில் சந்திக்கிறேன். அனைவருக்கும் விழாக்கால மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

2012/11/08

சூர்ப்பனகை






    சிறுகதைகள் ஆக்சிஜனைப் போன்றவை. தினசரி யதார்த்தத்தின் வேகத்திலும் அயர்விலும் விதியென்றுத் தொலைந்து போகும் பரிதாபத்துக்குரிய ஆயிரக்கணக்கான சபிக்கப்பட்ட மாந்தரைப் போல் தொலையாமல்.. குலையாமல்.. வாழ்வின் நுகர்ச்சிகளை அறிந்தே அடைந்தே தீருவது என்ற உறுதியுடன் சோர்வை விரட்டத் துணியும் சிலருக்கு, சிறுகதை வாசிப்பு ஆக்சிஜன். துரித ஆகஸ்டு பதினைந்து. அப்படித்தான் நினைக்கிறேன். மொழி, மக்கள், நாடு, இனம், கலாசாரம், பண்பாடு என்று வகை கடந்த, அல்லது வகை சார்ந்த, சிந்தனைப் பிரதேசத்துக்கான உடனடிப் பயணம் சிறுகதை. இலக்கியம் அலக்கியம் போன்றப் பாசாங்கு அளவுகோலோடு திரியாமல்,'படிப்பவர் உணர்வுகளைச் சுண்டியிழுத்தால் அது சிறுகதையின் வெற்றி' எனும் பக்குவத்தோடு படிக்கும் பொழுது அடிக்கடி இலக்கியத்தைத் தொட முடிகிறது.

ம்ம்.. எனக்குச் சிறுகதைகள் பிடிக்கும் என்று எப்போதாவது சொல்லியிருக்கிறேனோ? இல்லையெனில் இப்போது சொல்கிறேன். எனக்குச் சிறுகதைகள் பிடிக்கும்.

சமீபத்தில் பல முறை படித்தப் புத்தகம், 'சூர்ப்பனகை'. கெ.ஆர்.மீரா எழுதிய மனதைப் பிசையும் மலையாளச் சிறுகதைகளை மொழிமாற்றித் தமிழில் வழங்கியிருக்கிறார் கே.வி.ஷைலஜா.

'புத்தகம் படிப்பது எப்படி?' என்று virginia woolf எழுதியக் கட்டுரையைக் கல்லூரி நாளில் படித்திருக்கிறேன். இதற்கு ஒரு கட்டுரையா என்று கேலி செய்ததன் பலனை சூர்ப்பனகை புத்தகம் படிக்கும் பொழுது அனுபவித்தேன். கட்டுரையில், 'புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது புத்தகம் படிப்பதன் முக்கிய சவால்' என்பார் வர்ஜினியா. நுண்மையைக் கண்டுணரும் தேடல் இருக்கிறது பாருங்கள்.. சாகா எழுத்தின் அடையாளம். இந்தத் தொகுப்பில் நிறைய கதைகள் அந்தத் தவிப்பைத் தந்தன.

தொகுப்பில் மொத்தம் எட்டுச் சிறுகதைகள். அனைத்துமே கனமானக் கதைகள். கதைத் தலைப்புகள் ஒவ்வொன்றும் கவிதை. தலைப்புக்காக ஒரு முறை, கதைத்தளத்துக்காக ஒரு முறை, கதைக்காக ஒரு முறை, நடைக்காக ஒரு முறை, சொல்லாட்சிக்காக ஒரு முறை, புரியாத தவிப்பைப் பெற ஒரு முறை, புரிந்த அதிர்ச்சியைப் பெற ஒரு முறை, கதையின் பாதிப்புக்காக ஒரு முறை, பாதிப்பிலிருந்து விடுபட ஒருமுறை என்று பல முறை படிக்க வைக்கின்றன. எட்டில் ஆறு கதைகளாவது படித்த பின் ஆவி போல் நம்மைச் சுற்றிக் கொண்டேயிருக்க வல்லவை.

பொதுவாக, மனதை வருடியோ உலுக்கியோ செல்லும் கதைகள் நிறைய கிடைக்கின்றன. படித்திருக்கிறேன். இத்தொகுப்பில் கதைத் தளமும் சொல்லிச் சென்றப் பாங்கும் அறிவைக் குடைந்தெடுத்து விடுகின்றன. அறிவைக் குடையும் படைப்புகளுக்கு ஆயுள் அதிகம். இது மீராவின் வெற்றி, ஷைலஜாவின் சாதனை. ஷைலஜாவின் ஆக்கத்திறனுக்கு சிறிது நேரத்தில் வருகிறேன். முதலில் புத்தகத்திலிருந்து எனக்குப் பிடித்த நான்குக் கதைகளைப் பற்றி.

சூர்ப்பனகை
அனகா. பெண்ணின் சமூக அடையாளம் அந்தஸ்து அங்கீகாரங்களுக்காகப் போராடும் பெண்ணியவாதி. கணவனைப் பிரிந்து சுதந்திரமாகத் தன் பெண் சீதாவைப் வளர்ப்பவர். தன்னிலையை விட்டுக்கொடுக்காமல் போராடும் கல்லூரி விரிவுரையாளர். 'பெரிய மார்புகள் வைத்து வரைந்த படங்களுக்கும் சுவரெழுத்துக்களுக்குமிடையே பணி புரியும்' அவரை 'சூர்ப்பனகை' என்று அழைக்கிறார்கள். பெயர்க்காரணம் மறுபடியும் கதையின் இறுதியில் நம்மைத் தாக்கும் பொழுது ஒரு கணம் மூச்சுத் திணறுகிறது. கதையின் இறுதியில் அனகாவுக்கு மார்புப் புற்று நோய் வந்து மார்பை அறுத்தெறிய வேண்டி வருகிறது. சிகிச்சைக்கு முன் சீதாவை அழைத்து, "உனக்கு என்ன வேண்டும் கேள்" என்கிறார். 'லேக்டோஜன்' குடித்து வளர்ந்த அனகாவின் பெண், "முலைப்பால்" என்கிறாள். சிறுகதை இங்கே முடிந்துவிடுகிறது என்று நான் நினைத்தேன். ஆனால் அதைத் தொடர்ந்து சில வரிகள் எழுதி கதையை முடித்த விதம் அதிர்ச்சியூட்டும் வகையில் பிரமாதம். கதையின் ஆதார ஆண்-பெண் சமத்துவ வாதங்களும் நுண்பிரசாரங்களும் சொல்லாட்சியும் நடையும் திகைக்க வைக்கின்றன. 'இனிப்பூட்டப்பட்ட வார்த்தைகள் கட்டுப்பட்டியானப் பெண்களுக்கே பொருந்தும். வீழ்ச்சிகளை அறிந்துகொண்டே செய்யும் சாகசம் தான் பெண்ணியம்' என்ற வரிகள் சிந்திக்கத் தூண்டின. ஒரு கட்டத்தில், 'ஆணால் எப்படிக் கட்டுப்பட்டியாக வாழமுடிகிறது?' என்ற அனகாவின் கேள்வியைப் படித்ததும் சத்தியமாகத் திடுக்கிட்டேன்.

செய்திகளின் நாற்றம்
தலைப்பின் கவிதைத்தனத்தை ரசித்தபடி படிக்கத் தொடங்கினால் நொடிகளில் கதைத் தளம் நம்மைக் கட்டிப் போடுகிறது. ஜர்னலிசத்தில் முனைவர் பட்டம் பெற்ற அன்னா ஒரு சாதாரணப் பத்திரிகையில் இரங்கல் செய்தி, மரண அறிவிப்பு, சவ அடக்க விவரங்கள் எழுதுபவராகப் பணிபுரிகிறார். அன்னா, மகன் சன்னி, காதலன் சந்தோஷ் என்ற மூன்று பாத்திரங்களினூடே சொல்லப்பட்டிருக்கும் இறுக்கமான கதை. சூர்ப்பனகை போலல்லாமல் இந்தக் கதையின் முடிவோடு என்னால் ஒத்துப் போக முடிந்தது. ஆனால் எதிர்பார்க்கவில்லை. தில்லிக்குப் பெயரும் பொழுது, 'மரணச்செய்திகளின் வாடையை மட்டுமே உன்னால் அறிய முடிகிறது; வேறு ஜர்னலிச வேலைகளுக்கு நீ லாயக்கில்லை' என்றப் பொருளில் கிண்டலடிக்கும் சந்தோசின் வரிகள் அன்னாவின் தன்மானத்தை அப்போதைக்கு ரணப்படுத்தினாலும், கதையின் இறுதியில், அன்னாவின் கணுக்கால் நாற்றத்தைப் படிக்கையில் சம்மட்டியாக நம்மைத் தாக்குகின்றன.

அர்த்த ராத்திரிகளில் ஆத்மா
'ஹெட்மிஸ்ட்ரஸ் சரளா தூங்க ஆரம்பித்தவுடன் அவளுடைய ஆத்மா விழித்துக் கொண்டுவிடும். உடலிலிருந்து மெதுவாக இறங்கி.. வேட்டைக்காரன் போல் சோம்பல் முறித்து வெளியே வரும்' என்றுத் தொடங்கும் முதல் பத்தியில் தொலைந்து போனவன், கதை முடிந்து வெளியே வர ஒவ்வொரு முறையும் மிகவும் சிரமப்பட்டேன். உறங்கும் பொழுது உடலை விட்டுப் பிரிந்து உலவும் ஆத்மாவின் பயண அனுபவங்கள், விழித்த நிலையில் பாதிக்குமானால் என்னாகும்? உன்னதமான கதைத்தளம். கற்பனை. 'கனவுகளென்றால் என்னவென்று எத்தனை பேருக்குத் தெரியும்?' என்று முடித்திருக்கும் விதம் பிரமாதம் என்றாலும், நுட்பத்தை முகத்தின் எதிரே நிறுத்திக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. தொகுப்பில் என்னை மிகக் கவர்ந்தக் கதை.

இறந்தவளின் கல்யாணம்
'இறந்தவளின் கல்யாணம் இப்படியாக மங்களமாக நடந்தேறியது' என்று முடிகிறது கதை. முடிவை முதலில் படித்து அது வழங்கிய மெல்லிய ஆச்சரியத்தில் தூண்டப்பட்டு முழுக்கதையும் படித்தேன். ஆதர்ச நிலையிலிருக்கும் ஒருவருக்கும் அவரை அப்படி நிறுத்தியவருக்கும் இடையிலான கோழைத்தனம் பூசிய அபாண்டமான நிழலுறவின் விளைவுகளை அற்புதமாகச் சொல்லியிருக்கிறார். படித்ததும் சிலந்தி வலையில் எதிர்பாராமல் விழுந்துச் சிக்கியச் சிறு பூச்சி போல், நாற்புறமும் எச்சில் அமிலத்தால் தன்னை வாட்டிப் புரட்டும் சிலந்தியைத் தடுக்க முடியாமல் தவிப்பது போல், உணர்ந்தேன். ஹா! என்ன கற்பனை! எப்படிப்பட்ட நடை! திருமணமும் சிலருக்கு மரணச்சடங்காகவே அமைகிறது என்ற எண்ணத்தைத் தடுக்க முடியவில்லை.

    மொழிமாற்றம் எளிதேயல்ல. மூலப்படைப்பின் வெற்றியில் அந்த மொழிக்குப் பெரும் பங்கிருக்கிறது. மூலப்படைப்பின் உயிர்த்துடிப்பில் அந்த மொழிக்குப் பெரும் பங்கிருக்கிறது. அந்த துடிப்பை இன்னொரு மொழியில் வெற்றிகரமாக வழங்குவது எப்பேற்பட்ட ஆற்றல்! ஷைலஜாவின் தமிழாக்கத்தை மட்டுமே படித்த நான், மூலத்தின் தாக்கத்தைப் பெறும் அறிவில்லையே என்று ஏங்கினேன் என்றால் அது ஷைலஜாவின் சாதனை. தமிழில் இப்படியெல்லாம் எழுத முடியுமா என்று வியக்க வைத்திருக்கிறார். அவருடைய ஒவ்வொரு எழுத்தையும் 'கைபிடித்து அழைத்துப் போய் மலையுச்சியில் வைத்து அழகு பார்க்கும் பிரபஞ்சன்' போலவே நானும் உணர்கிறேன்.

சூர்ப்பனகை
மலையாள மூலம் கெ.ஆர் மீரா | தமிழில் கே.வி.ஷைலஜா
வம்சி புக்ஸ் வெளியீடு, டிசம்பர் 2009, ரூ.50