2015/08/23

தலை சிறந்த தமிழ்ச் சிறுகதை



    நான் ஒரு எழுத்தாளன். என்று சொல்லிக் கொள்ளவாவது விரும்புகிறவன்.

கட்டுரைகள் கவிதைகள் என்று எத்தனையோ எழுதினாலும் சிறுகதை எழுதுவது எனக்குப் பிடிக்கும். கலைகளின் ராணி கவிதை என்பார்கள். எனக்குச் சிறுகதை தான் ராணி ராஜா எல்லாம். என் கதையில் வரும் மாந்தர்கள்... அவர்களின் தோற்றம், உருவம், வளர்ச்சி, குணாதிசயம், படிப்பு, வேலை, திருமணம், வெற்றி, தோல்வி, சுகம், துக்கம், மரணம்... என்று அத்தனை நிகழ்வுகளையும் நானே முடிவு செய்து திட்டமிட்டு நானே நடத்திக்காட்டவும் முடிவதால்.. எனக்கு படைப்பின் முழு நிறைவு கிடைக்கிறது. கடவுளுக்குக் கூட இந்த நிறைவு கிடைக்காது என்றே தோன்றுகிறது. காரணம் நல்லது நிகழ்ந்தால் கடவுளின் கருணை, அல்லது நிகழ்ந்தால் மாந்தரின் பாபம் என்று படைப்பாளி - படைப்பின் உரிமைகளையும் சலுகைகளையும் தெளிவு படுத்தியிருக்கிறார்கள். சிறுகதை உலகம் அப்படியல்ல. அந்த ரீதியில் கடவுளை விட நான் அதிகம் பொறுப்புள்ளவன் என்ற ஒரு சிறிய கர்வம் எனக்குண்டு, அதன் நிறைவில் குளிர்காயும் அல்பத்தனமும் எனக்கு உண்டு. பூஜ்யத்தில் சிறிதென்ன பெரிதென்ன.. பூஜ்யப் பெருமை அல்பத்தனம் தானே, என்ன சொல்கிறீர்கள்?

கடவுளைப் போலவே எனக்கும் அங்கீகாரம் தேவைப்படுகிறது. அபிஷேகம், ஆராதனை, பூஜை, நோன்பு, விரதம், யாகம் எல்லாம் செய்து.. படைத்தவன் என்ற அங்கீகாரத்தை அவ்வப்போது தந்து வழிபடாவிட்டால் கண்ணைக் குத்துவதிலிருந்து குடும்ப நாசம் வரை அத்தனை கெடுதல்களையும் செய்து பழி வாங்கும் கடவுள் அளவுக்குச் சிறுகதை எழுத்தாளனான எனக்குத் தோன்றாது.. எனினும் அவ்வப்போது எனக்கான அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறவன். அந்த அங்கீகாரம் பல விதங்களில் கிடைக்கக் கூடுமென்றாலும் பரவலான வரவேற்பைப் பெறும் பத்திரிகைகளில் என் படைப்புகள் வெளிவந்தால் அதை மிகவும் விரும்பி ஏற்றுக்கொள்கிறவன். பெரும்பாலான எழுத்தாளர்கள் என்னைப் போலத்தான். புத்தகமாக வெளிவந்தால் இன்னும் மகிழ்ச்சி அடைவார்கள். திரைப்படமாகவோ நாடகமாகவோ படைப்புகள் நிரந்தரப்படுத்தப்பட்டால் மேன்மையின் உச்சிக்குப் போய் வரங்களை அருளுவார்கள். நாலைந்து விருதுகள் கொடுத்து கௌரவித்தால் மோட்சம் கூட வழங்குவார்கள். புகழ் வெறி அல்லது போதையின் உக்கிரத்தில் கடவுளையும் அரசியல்வாதிகளையும் போல சில நேரம் எழுத்தாளர்கள் நடந்து கொள்வதைப் பார்க்கும் பொழுது எனக்குச் சற்று பயமாகவே இருக்கும். என்னைப் பொறுத்தவரை பத்திரிகைகளில் அவ்வப்போது சில கதைகள் வெளிவந்தால் அந்த அங்கீகாரமே போதுமானது. என் எதிர்பார்ப்புகள் திருப்பதி வெங்கடாஜலபதி அளவுக்கு இல்லையென்றாலும் எல்லை ஐயனார் போல் என்று வையுங்களேன். அங்கீகாரம் மறுக்கப்பட்ட கடவுள் எனில் ஏதாவது கெடுதல் செய்து மக்களை பயமுறுத்திக் கண்மூடி அடிமைப்படுத்தலாம். சிறுகதாசிரியன் பாவம் என்ன செய்ய முடியும்? புலம்ப மட்டுமே முடியும்.

அதைத்தான் செய்தேன்.

என் நண்பன் ரகுவிடம் புலம்பிக் கொண்டிருந்தேன். ரகுவின் கடலோர வீட்டுப் பின்கட்டில் சமீப மாலையொன்றில் பேசிக்கொண்டிருந்தோம். சூரியன் முழுப்பழமாக கடலுள் முங்குவதைப் பார்த்தபடி நான் புலம்பிக் கொண்டிருந்தேன். "ரகு.. நான் எழுதி அனுப்புற கதைகளில் அனேகமா எதுவுமே பிரசுரமாவதில்லை. இரண்டு வருஷங்களா நான் எழுதி அனுப்பிய அறுபத்தேழு சிறுகதைகளில் ஒன்று கூட பிரசுரமாகவில்லை. பத்திரிகை அல்லது பதிப்பக ஆசிரியர் என்ன நினைக்கிறாங்களோ தெரியலியே.. குப்பை கதைகளெல்லாம் பிரசுரமாகுதுப்பா. என் கதைகள் கொஞ்சம் புத்திசாலித்தனமானவை. உள்ளுணர்வுகளைத் தூண்டுபவை. சில கதைகள் முதிர்ந்த வாசகர்களுக்கானவை. டப்பா கதைகளெல்லாம் பிரசுரமாகையில் நான் விழிக்கிறேன்.."

"எத்தனையோ பேர் சிறுகதை எழுதி பிரபலமாறாங்களே? பத்திரிகைகளில் அவர்களின் கதைகள் தொடர்ந்து வருதே? ஜெயமோகன், சாரு நிவேதிதா, ராமகிருஷ்ணன்..."

"அதான் விழிக்கிறேன்.. பிரபலங்கள் என்ன குப்பை எழுதினாலும் பிரசுரமாவுது. பிரபலமாவது எப்படி? பிரபலமாக வாசக ஆதரவு தேவை. ஆனால் பிரசுரிக்கும் ஆசிரியர்களின் கவனத்தைக் கவர்ந்தால் தானே வாசகரைச் அடைய முடியுது?"

"பத்திரிகை ஆசிரியர்களுக்குப் பிடித்தமான முறையில் எழுத வேண்டியது தானே?"

"அதெப்படி தெரியலியே? குங்குமம் ஆசிரியருக்குப் பிடிச்சது குமுதம் ஆசிரியருக்குப் பிடிக்காது. கல்கிக்கு பொருந்தும் கதை விகடனுக்குப் பொருந்தாது. போதாக்குறைக்கு எல்லாப் பத்திரிகைகளிலும் ஒரு பக்கக் கதை என்று படு குப்பையாக எதையோ பிரசுரிக்கிறாங்க. அல்லது முத்திரைக்கதைனு ஒரே ஒரு சிறுகதை வெளியிடுறாங்க. யாரும் பத்திரிகை படிக்கிறதில்லையோனு தோணுது.."

"அப்படிச் சொல்ல முடியாது.. பத்திரிகைகளின் ஒட்டு மொத்த வாசிப்பு அதிகமாயிட்டிருக்குனு ABC புள்ளிவிவரங்கள் சொல்லுது. தங்கள் பத்திரிகை இமெஜ் மற்றும் வாசக வட்டத்தைப் பற்றி ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு கருத்து வச்சிருக்கலாம். அதற்கேற்றபடி கதை எழுதினால் பிரசுரமாகும்"

"சொல்வதற்கென்ன.. வாய் கூட வலிக்காது. எப்படிச் செயலில் காட்டுவது?"

"ஹ்ம்ம்"

"நீ ஏம்பா பெருமூச்சு விடுறே? நானில்லே புலம்பறேன்?"

"பெருமூச்சில்லை. யோசிக்கிறேன். எல்லாப் பத்திரிகை ஆசிரியர்களுக்கும் பிடித்துப் போகிறாப்புல... தானே வடிவமைத்துக்கொள்ளும் ஒரு கதை எழுதினால்?"

நாங்கள் வெறும் காபி குடித்து அரட்டை அடித்துக் கொண்டிருந்ததால் திடுக்கிட்டேன். "என்ன சொல்றே? நீ மட்டும் தனியா தண்ணி கிண்ணி போட்டியா? தானே வடிவமைத்துக்கொள்ளும் கதையா? அதெப்படி சாத்தியம்?"

"ஆமாம். கம்ப்யூடரை வைத்துக்கொண்டு ஒரு க்வான்டம் அலை உருவாக்கினால், இது சாத்தியம்"

மறுபடி விழித்தேன். நீங்களும் விழித்தால் ஒரு சிறிய அறிமுகம் அவசியமாகிறது.

ஸ்டேன்பர்டு-எம்ஐடி பல்கலைக்கழகக் கூட்டுறவில் ஓசைப்படாமல் இயங்கிக்கொண்டிருக்கும் குவான்டம் ஆய்வுக் குழுமத்தில் உப தலையாக பணி புரிகிறான் ரகு. இந்தத் துறையின் வஸ்தாது. குவான்டம் கம்ப்யூடிங்கை வைத்து என்னென்னவோ ஜாலங்கள் செய்யமுடியும் என்கிறார்கள். இப்போ இருக்கிற கணினிகளெல்லாம் ஒன்றுமேயில்லை. தானே ஜனித்து தானே வளர்ந்து தானே உணர்ந்து தானே விரியும் கணினிகளை வைத்து மனிதம் எங்கேயோ போகப் போகிறது என்று அடிக்கடி சொல்வான்.. என்றாலும் இப்போது தான் உருப்படியாக ஏதோ ஒரு பயன் சொல்லியிருக்கிறான். குவான்டம் கம்ப்யூடர் கதை எழுதும் என்று. அதுவும் நம்ப முடியாத விஷயம்.

"என்ன முழிக்கிறே?" என்றான் ரகு.

"இல்லே. சென்னைப் பித்தன்னு ஒரு எழுத்தாளர் இருக்கார். தனித்தமிழ் விரும்பி. அவரு கோவிச்சுக்காம இருக்கணுமேனு தோணிச்சு. குவான்டம் என்கிறதுக்குத் தமிழ் தெரியாதே ரகு?"

"அவரை ஏம்பா இழுக்குறே?"

"இல்லேப்பா. ஒரு வேளை.. இந்த அனுபவத்தை நான் எழுதுறப்ப தமிழில் வார்த்தை தேடணுமில்லே? இதோ பாரு" என்று என் ஐ-போனில் கூகில் மொழிபெயர்ப்பைக் காட்டினேன். quantum என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு குவாண்டம் என்றது தமிழில் கூகில் - தேவையில்லாமல் மூன்று சுழி ண வேறே.. "சரி போகுது. உன் ஜாலவித்தை பத்திச் சொல்லு"

"எங்க அலுவலகக் கணினியில் ஒரு ப்ரோக்ரேம் எழுதுறேன். குவான்டம் வேவ். உன் சிறுகதைக்குத் தேவையான கரு, உரை, நடை, வீச்சு போன்றவற்றைப் பொதுப்படையாகக் கொடுத்து ஒரு குவான்டம் அலை உருவாக்குறேன். கதையைப் படித்து முடிக்கும் வரை.. அலையுடன் தொடர்பு இருக்கும் வரை.. வாசிப்பு அனுபவம் வாசிப்பவரின் எதிர்பார்ப்புக்கு இணங்க மாறிக்கொண்டேயிருக்கும்.. எல்லாவற்றையும் பரோக்ரேம் பார்த்துக் கொள்ளும். கதை படித்து முடித்ததும் அலையும் துண்டிக்கப்படும். ப்ரோக்ரேம் முடிந்ததும் பலனும் கிடைக்கும். படித்தவரின் ரசனைக்கேற்ப கதை அமைந்திருக்கும்"

"நம்பவே முடியலே"

"இப்பவே போகலாம் வா" என்று என்னை இழுத்துக்கொண்டு பேலோ ஆல்டோ விரைந்தான். தன் தனி அலுவலறையில் இருந்த கணினி முன் அமர்ந்து சிறுகதை எழுதுவது பற்றிய நிறைய விவரங்கள் கேட்டறிந்து கொண்டான்.

    றுநாள் மாலை என்னை அலுவலகத்துக்கு அழைத்தான் ரகு. விரைந்தேன். "டேய்.. ப்ரோக்ரேம் தயார். யார் யாருக்கு அனுப்பணும் சொல்லு" என்றான்.

"ஒரு தடவை நான் கதையைப் படிக்கிறேண்டா"

"கூடாது. நீ படிச்சுட்டா வேவ் முடிஞ்சுடும். பத்திரிகை ஆசிரியருக்குப் பொருத்தமா ப்ரோக்ரேம் முடிவுகள் அமையாமல் போயிடும்"

"அப்போ.. என் கதையை நான் படிக்கக் கூடாதா?"

"கணினி எழுதினது.. இருந்தாலும் உன்னதுனு சொல்லிக்கலாம்.. தப்பில்லே.. ஆனா பிரசுரமானதும் படி"

"நீயாவது படிச்சியா?"

"பிரசுரமானதும் நிச்சயம் படிப்பேன்"

"நிச்சயம் பிரசுரம் ஆகுங்கறே?"

"நிச்சயத்துக்கு ஒரு படி மேலே. தமிழில் வந்த சிறுகதைகளிலேயே சிறந்ததாக அமையணும்னு குறிக்கோள் கொடுத்து ப்ரோக்ரேம் செஞ்சிருக்கேன். அனுப்புற கதைகள் எல்லாம் தலைசிறந்த சிறுகதைகள்னு பேர் வாங்கும். துணிஞ்சு அப்படியே பத்திரிகாசிரியர்களுக்கு அறிமுகம் செய்யலாம்"

"அதெல்லாம் வேணாம்.. சும்மா சிறுகதைனே அறிமுகம் செஞ்சு அனுப்பு. குமுதம், கல்கி, விகடன், குங்குமம்.. இது நாலுக்கு அனுப்பு"

"எதுக்கு பயப்படுறே? சரி.. என்னப்பா இது.. ஆயிரக்கணக்கா தமிழ்ப் பத்திரிகைங்க வந்தாச்சு.. இன்னும் அந்த நாலையே பிடிச்சிட்டிருக்கே?"

"அந்த நாலும் தான் லீடர்ஸ்.. அதுல பிரசுரமானா..."

"சரி. உன் இஷ்டம்.." என்று கணினியில் சிறிது நேரம் தட்டினான். எழுந்தான். "அனுப்பியாச்சு. அவ்வளவு தான். இனி மேல் நீ கதை எழுதி அனுப்ப வேண்டியதில்லை. 'கதை அனுப்புங்க சார்'னு ஒவ்வொரு பத்திரிகாசிரியரும் உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கதறுவாங்க பாரு" என்றபடி நாற்காலியில் சாய்ந்தான்.

"அது மரியாதையில்லே, அது மரியாதையில்லே" என்று நானும் விடைபெற்றேன்.

எனக்கு இருப்பு கொள்ளவில்லை. எனினும் பல்லைக் கடித்தபடி நாளை.. வாரங்களைக் கடத்தினேன்.

    று வாரங்களாகியும் எந்தப் பத்திரிகையிலும் என் கதை எதுவும் வரவில்லை. எட்டாம் வாரம் குங்குமம் பத்திரிகை தலைமைப் பொறுப்பாசிரியர் திருமுருகனிடமிருந்து ஒரு இமெயில் வந்தது.
    "அன்பின் அப்பாதுரை. நீங்கள் அனுப்பிய கதை படித்தேன். உங்கள் அறிமுகப்படியே இது தமிழில் மிகச் சிறந்த சிறுகதை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்தக் கதையை அறுபது வருடங்களுக்கு முன்பே கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் என்ற பெயரில் புதுமைப்பித்தன் எழுதிவிட்டாரே? வேண்டுமானால் புதுமைப்பித்தனின் கதையை விமரிசனம் செய்வது போல் அரைப் பக்கத்துக்கு ஒரு கட்டுரை எழுதி அனுப்புங்களேன்? கதையோடு சேர்த்து ஒரு ஓரமாகப் பிரசுரம் செய்துவிடுவோம்?".

எனக்கு ஏற்கனவே பரிச்சயமானவர் என்பதால் மதிப்பு வைத்து இமெயில் அனுப்பியிருந்தார் திருமுருகன். அவர் எழுதாத எண்ணங்கள் என்னை உக்கிரமாகத் தாக்கின. மண்டபத்தில் எழுதிக்கொடுத்ததை விட மோசமாகிவிட்டதே! ரகுவின் அலுவலகத்துக்கு விரைந்தேன்.

"என்னடா! பிரசுரமாச்சா? அவனவன் கதை வேணும்னு லைன் கட்டி நிக்க ஆரம்பிச்சிருப்பானுவளே?" என்றான் ரகு.

"அடிக்காத குறை" என்றேன். "டேய்.. அந்த ப்ரோக்ரேம்.. அது என்னென்ன கதை அனுப்புச்சுனு பாருடா" என்றேன் எரிச்சலுடன்.

"ஆர் யூ ஷூர்?" என்றபடி விவரங்களை அச்சில் பிரதியெடுத்தான். எல்லாமே புதுமைப்பித்தன் கதைகள். பெயர் மட்டும் மாறியிருந்தது.

"தமிழின் தலைசிறந்தச் சிறுகதைனு ப்ரோக்ரேம் வரம்பமைச்சேன்.." என்றபடி கம்ப்யூடரையும் என்னையும் மாற்றி ஏற இறங்கப் பார்த்தான்.

என்ன செய்வதென்று தெரியவில்லை. அமைதியானேன். திடீரென்று உரக்கச் சிரித்தேன். ரகுவைத் தட்டி "உன் கம்ப்யூடர் தவறு எதுவும் செய்யவில்லை. தலைசிறந்த கதைகள் எழுத ஒருவரால் மட்டுமே முடியும்" என்றபடி வெளியேறினேன்.



இக்கதை Eric James Stone (EJ) எழுதிய 'the greatest science-fiction story ever written' என்கிற கதையின் அப்பட்டமானத் தழுவல். அத்தனை சிறப்பும் EJவுக்கு. குறைகள் என்னுடையவை. தொடர்ந்து படித்தமைக்கு நன்றி.