2015/08/23

தலை சிறந்த தமிழ்ச் சிறுகதை    நான் ஒரு எழுத்தாளன். என்று சொல்லிக் கொள்ளவாவது விரும்புகிறவன்.

கட்டுரைகள் கவிதைகள் என்று எத்தனையோ எழுதினாலும் சிறுகதை எழுதுவது எனக்குப் பிடிக்கும். கலைகளின் ராணி கவிதை என்பார்கள். எனக்குச் சிறுகதை தான் ராணி ராஜா எல்லாம். என் கதையில் வரும் மாந்தர்கள்... அவர்களின் தோற்றம், உருவம், வளர்ச்சி, குணாதிசயம், படிப்பு, வேலை, திருமணம், வெற்றி, தோல்வி, சுகம், துக்கம், மரணம்... என்று அத்தனை நிகழ்வுகளையும் நானே முடிவு செய்து திட்டமிட்டு நானே நடத்திக்காட்டவும் முடிவதால்.. எனக்கு படைப்பின் முழு நிறைவு கிடைக்கிறது. கடவுளுக்குக் கூட இந்த நிறைவு கிடைக்காது என்றே தோன்றுகிறது. காரணம் நல்லது நிகழ்ந்தால் கடவுளின் கருணை, அல்லது நிகழ்ந்தால் மாந்தரின் பாபம் என்று படைப்பாளி - படைப்பின் உரிமைகளையும் சலுகைகளையும் தெளிவு படுத்தியிருக்கிறார்கள். சிறுகதை உலகம் அப்படியல்ல. அந்த ரீதியில் கடவுளை விட நான் அதிகம் பொறுப்புள்ளவன் என்ற ஒரு சிறிய கர்வம் எனக்குண்டு, அதன் நிறைவில் குளிர்காயும் அல்பத்தனமும் எனக்கு உண்டு. பூஜ்யத்தில் சிறிதென்ன பெரிதென்ன.. பூஜ்யப் பெருமை அல்பத்தனம் தானே, என்ன சொல்கிறீர்கள்?

கடவுளைப் போலவே எனக்கும் அங்கீகாரம் தேவைப்படுகிறது. அபிஷேகம், ஆராதனை, பூஜை, நோன்பு, விரதம், யாகம் எல்லாம் செய்து.. படைத்தவன் என்ற அங்கீகாரத்தை அவ்வப்போது தந்து வழிபடாவிட்டால் கண்ணைக் குத்துவதிலிருந்து குடும்ப நாசம் வரை அத்தனை கெடுதல்களையும் செய்து பழி வாங்கும் கடவுள் அளவுக்குச் சிறுகதை எழுத்தாளனான எனக்குத் தோன்றாது.. எனினும் அவ்வப்போது எனக்கான அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறவன். அந்த அங்கீகாரம் பல விதங்களில் கிடைக்கக் கூடுமென்றாலும் பரவலான வரவேற்பைப் பெறும் பத்திரிகைகளில் என் படைப்புகள் வெளிவந்தால் அதை மிகவும் விரும்பி ஏற்றுக்கொள்கிறவன். பெரும்பாலான எழுத்தாளர்கள் என்னைப் போலத்தான். புத்தகமாக வெளிவந்தால் இன்னும் மகிழ்ச்சி அடைவார்கள். திரைப்படமாகவோ நாடகமாகவோ படைப்புகள் நிரந்தரப்படுத்தப்பட்டால் மேன்மையின் உச்சிக்குப் போய் வரங்களை அருளுவார்கள். நாலைந்து விருதுகள் கொடுத்து கௌரவித்தால் மோட்சம் கூட வழங்குவார்கள். புகழ் வெறி அல்லது போதையின் உக்கிரத்தில் கடவுளையும் அரசியல்வாதிகளையும் போல சில நேரம் எழுத்தாளர்கள் நடந்து கொள்வதைப் பார்க்கும் பொழுது எனக்குச் சற்று பயமாகவே இருக்கும். என்னைப் பொறுத்தவரை பத்திரிகைகளில் அவ்வப்போது சில கதைகள் வெளிவந்தால் அந்த அங்கீகாரமே போதுமானது. என் எதிர்பார்ப்புகள் திருப்பதி வெங்கடாஜலபதி அளவுக்கு இல்லையென்றாலும் எல்லை ஐயனார் போல் என்று வையுங்களேன். அங்கீகாரம் மறுக்கப்பட்ட கடவுள் எனில் ஏதாவது கெடுதல் செய்து மக்களை பயமுறுத்திக் கண்மூடி அடிமைப்படுத்தலாம். சிறுகதாசிரியன் பாவம் என்ன செய்ய முடியும்? புலம்ப மட்டுமே முடியும்.

அதைத்தான் செய்தேன்.

என் நண்பன் ரகுவிடம் புலம்பிக் கொண்டிருந்தேன். ரகுவின் கடலோர வீட்டுப் பின்கட்டில் சமீப மாலையொன்றில் பேசிக்கொண்டிருந்தோம். சூரியன் முழுப்பழமாக கடலுள் முங்குவதைப் பார்த்தபடி நான் புலம்பிக் கொண்டிருந்தேன். "ரகு.. நான் எழுதி அனுப்புற கதைகளில் அனேகமா எதுவுமே பிரசுரமாவதில்லை. இரண்டு வருஷங்களா நான் எழுதி அனுப்பிய அறுபத்தேழு சிறுகதைகளில் ஒன்று கூட பிரசுரமாகவில்லை. பத்திரிகை அல்லது பதிப்பக ஆசிரியர் என்ன நினைக்கிறாங்களோ தெரியலியே.. குப்பை கதைகளெல்லாம் பிரசுரமாகுதுப்பா. என் கதைகள் கொஞ்சம் புத்திசாலித்தனமானவை. உள்ளுணர்வுகளைத் தூண்டுபவை. சில கதைகள் முதிர்ந்த வாசகர்களுக்கானவை. டப்பா கதைகளெல்லாம் பிரசுரமாகையில் நான் விழிக்கிறேன்.."

"எத்தனையோ பேர் சிறுகதை எழுதி பிரபலமாறாங்களே? பத்திரிகைகளில் அவர்களின் கதைகள் தொடர்ந்து வருதே? ஜெயமோகன், சாரு நிவேதிதா, ராமகிருஷ்ணன்..."

"அதான் விழிக்கிறேன்.. பிரபலங்கள் என்ன குப்பை எழுதினாலும் பிரசுரமாவுது. பிரபலமாவது எப்படி? பிரபலமாக வாசக ஆதரவு தேவை. ஆனால் பிரசுரிக்கும் ஆசிரியர்களின் கவனத்தைக் கவர்ந்தால் தானே வாசகரைச் அடைய முடியுது?"

"பத்திரிகை ஆசிரியர்களுக்குப் பிடித்தமான முறையில் எழுத வேண்டியது தானே?"

"அதெப்படி தெரியலியே? குங்குமம் ஆசிரியருக்குப் பிடிச்சது குமுதம் ஆசிரியருக்குப் பிடிக்காது. கல்கிக்கு பொருந்தும் கதை விகடனுக்குப் பொருந்தாது. போதாக்குறைக்கு எல்லாப் பத்திரிகைகளிலும் ஒரு பக்கக் கதை என்று படு குப்பையாக எதையோ பிரசுரிக்கிறாங்க. அல்லது முத்திரைக்கதைனு ஒரே ஒரு சிறுகதை வெளியிடுறாங்க. யாரும் பத்திரிகை படிக்கிறதில்லையோனு தோணுது.."

"அப்படிச் சொல்ல முடியாது.. பத்திரிகைகளின் ஒட்டு மொத்த வாசிப்பு அதிகமாயிட்டிருக்குனு ABC புள்ளிவிவரங்கள் சொல்லுது. தங்கள் பத்திரிகை இமெஜ் மற்றும் வாசக வட்டத்தைப் பற்றி ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு கருத்து வச்சிருக்கலாம். அதற்கேற்றபடி கதை எழுதினால் பிரசுரமாகும்"

"சொல்வதற்கென்ன.. வாய் கூட வலிக்காது. எப்படிச் செயலில் காட்டுவது?"

"ஹ்ம்ம்"

"நீ ஏம்பா பெருமூச்சு விடுறே? நானில்லே புலம்பறேன்?"

"பெருமூச்சில்லை. யோசிக்கிறேன். எல்லாப் பத்திரிகை ஆசிரியர்களுக்கும் பிடித்துப் போகிறாப்புல... தானே வடிவமைத்துக்கொள்ளும் ஒரு கதை எழுதினால்?"

நாங்கள் வெறும் காபி குடித்து அரட்டை அடித்துக் கொண்டிருந்ததால் திடுக்கிட்டேன். "என்ன சொல்றே? நீ மட்டும் தனியா தண்ணி கிண்ணி போட்டியா? தானே வடிவமைத்துக்கொள்ளும் கதையா? அதெப்படி சாத்தியம்?"

"ஆமாம். கம்ப்யூடரை வைத்துக்கொண்டு ஒரு க்வான்டம் அலை உருவாக்கினால், இது சாத்தியம்"

மறுபடி விழித்தேன். நீங்களும் விழித்தால் ஒரு சிறிய அறிமுகம் அவசியமாகிறது.

ஸ்டேன்பர்டு-எம்ஐடி பல்கலைக்கழகக் கூட்டுறவில் ஓசைப்படாமல் இயங்கிக்கொண்டிருக்கும் குவான்டம் ஆய்வுக் குழுமத்தில் உப தலையாக பணி புரிகிறான் ரகு. இந்தத் துறையின் வஸ்தாது. குவான்டம் கம்ப்யூடிங்கை வைத்து என்னென்னவோ ஜாலங்கள் செய்யமுடியும் என்கிறார்கள். இப்போ இருக்கிற கணினிகளெல்லாம் ஒன்றுமேயில்லை. தானே ஜனித்து தானே வளர்ந்து தானே உணர்ந்து தானே விரியும் கணினிகளை வைத்து மனிதம் எங்கேயோ போகப் போகிறது என்று அடிக்கடி சொல்வான்.. என்றாலும் இப்போது தான் உருப்படியாக ஏதோ ஒரு பயன் சொல்லியிருக்கிறான். குவான்டம் கம்ப்யூடர் கதை எழுதும் என்று. அதுவும் நம்ப முடியாத விஷயம்.

"என்ன முழிக்கிறே?" என்றான் ரகு.

"இல்லே. சென்னைப் பித்தன்னு ஒரு எழுத்தாளர் இருக்கார். தனித்தமிழ் விரும்பி. அவரு கோவிச்சுக்காம இருக்கணுமேனு தோணிச்சு. குவான்டம் என்கிறதுக்குத் தமிழ் தெரியாதே ரகு?"

"அவரை ஏம்பா இழுக்குறே?"

"இல்லேப்பா. ஒரு வேளை.. இந்த அனுபவத்தை நான் எழுதுறப்ப தமிழில் வார்த்தை தேடணுமில்லே? இதோ பாரு" என்று என் ஐ-போனில் கூகில் மொழிபெயர்ப்பைக் காட்டினேன். quantum என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு குவாண்டம் என்றது தமிழில் கூகில் - தேவையில்லாமல் மூன்று சுழி ண வேறே.. "சரி போகுது. உன் ஜாலவித்தை பத்திச் சொல்லு"

"எங்க அலுவலகக் கணினியில் ஒரு ப்ரோக்ரேம் எழுதுறேன். குவான்டம் வேவ். உன் சிறுகதைக்குத் தேவையான கரு, உரை, நடை, வீச்சு போன்றவற்றைப் பொதுப்படையாகக் கொடுத்து ஒரு குவான்டம் அலை உருவாக்குறேன். கதையைப் படித்து முடிக்கும் வரை.. அலையுடன் தொடர்பு இருக்கும் வரை.. வாசிப்பு அனுபவம் வாசிப்பவரின் எதிர்பார்ப்புக்கு இணங்க மாறிக்கொண்டேயிருக்கும்.. எல்லாவற்றையும் பரோக்ரேம் பார்த்துக் கொள்ளும். கதை படித்து முடித்ததும் அலையும் துண்டிக்கப்படும். ப்ரோக்ரேம் முடிந்ததும் பலனும் கிடைக்கும். படித்தவரின் ரசனைக்கேற்ப கதை அமைந்திருக்கும்"

"நம்பவே முடியலே"

"இப்பவே போகலாம் வா" என்று என்னை இழுத்துக்கொண்டு பேலோ ஆல்டோ விரைந்தான். தன் தனி அலுவலறையில் இருந்த கணினி முன் அமர்ந்து சிறுகதை எழுதுவது பற்றிய நிறைய விவரங்கள் கேட்டறிந்து கொண்டான்.

    றுநாள் மாலை என்னை அலுவலகத்துக்கு அழைத்தான் ரகு. விரைந்தேன். "டேய்.. ப்ரோக்ரேம் தயார். யார் யாருக்கு அனுப்பணும் சொல்லு" என்றான்.

"ஒரு தடவை நான் கதையைப் படிக்கிறேண்டா"

"கூடாது. நீ படிச்சுட்டா வேவ் முடிஞ்சுடும். பத்திரிகை ஆசிரியருக்குப் பொருத்தமா ப்ரோக்ரேம் முடிவுகள் அமையாமல் போயிடும்"

"அப்போ.. என் கதையை நான் படிக்கக் கூடாதா?"

"கணினி எழுதினது.. இருந்தாலும் உன்னதுனு சொல்லிக்கலாம்.. தப்பில்லே.. ஆனா பிரசுரமானதும் படி"

"நீயாவது படிச்சியா?"

"பிரசுரமானதும் நிச்சயம் படிப்பேன்"

"நிச்சயம் பிரசுரம் ஆகுங்கறே?"

"நிச்சயத்துக்கு ஒரு படி மேலே. தமிழில் வந்த சிறுகதைகளிலேயே சிறந்ததாக அமையணும்னு குறிக்கோள் கொடுத்து ப்ரோக்ரேம் செஞ்சிருக்கேன். அனுப்புற கதைகள் எல்லாம் தலைசிறந்த சிறுகதைகள்னு பேர் வாங்கும். துணிஞ்சு அப்படியே பத்திரிகாசிரியர்களுக்கு அறிமுகம் செய்யலாம்"

"அதெல்லாம் வேணாம்.. சும்மா சிறுகதைனே அறிமுகம் செஞ்சு அனுப்பு. குமுதம், கல்கி, விகடன், குங்குமம்.. இது நாலுக்கு அனுப்பு"

"எதுக்கு பயப்படுறே? சரி.. என்னப்பா இது.. ஆயிரக்கணக்கா தமிழ்ப் பத்திரிகைங்க வந்தாச்சு.. இன்னும் அந்த நாலையே பிடிச்சிட்டிருக்கே?"

"அந்த நாலும் தான் லீடர்ஸ்.. அதுல பிரசுரமானா..."

"சரி. உன் இஷ்டம்.." என்று கணினியில் சிறிது நேரம் தட்டினான். எழுந்தான். "அனுப்பியாச்சு. அவ்வளவு தான். இனி மேல் நீ கதை எழுதி அனுப்ப வேண்டியதில்லை. 'கதை அனுப்புங்க சார்'னு ஒவ்வொரு பத்திரிகாசிரியரும் உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கதறுவாங்க பாரு" என்றபடி நாற்காலியில் சாய்ந்தான்.

"அது மரியாதையில்லே, அது மரியாதையில்லே" என்று நானும் விடைபெற்றேன்.

எனக்கு இருப்பு கொள்ளவில்லை. எனினும் பல்லைக் கடித்தபடி நாளை.. வாரங்களைக் கடத்தினேன்.

    று வாரங்களாகியும் எந்தப் பத்திரிகையிலும் என் கதை எதுவும் வரவில்லை. எட்டாம் வாரம் குங்குமம் பத்திரிகை தலைமைப் பொறுப்பாசிரியர் திருமுருகனிடமிருந்து ஒரு இமெயில் வந்தது.
    "அன்பின் அப்பாதுரை. நீங்கள் அனுப்பிய கதை படித்தேன். உங்கள் அறிமுகப்படியே இது தமிழில் மிகச் சிறந்த சிறுகதை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்தக் கதையை அறுபது வருடங்களுக்கு முன்பே கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் என்ற பெயரில் புதுமைப்பித்தன் எழுதிவிட்டாரே? வேண்டுமானால் புதுமைப்பித்தனின் கதையை விமரிசனம் செய்வது போல் அரைப் பக்கத்துக்கு ஒரு கட்டுரை எழுதி அனுப்புங்களேன்? கதையோடு சேர்த்து ஒரு ஓரமாகப் பிரசுரம் செய்துவிடுவோம்?".

எனக்கு ஏற்கனவே பரிச்சயமானவர் என்பதால் மதிப்பு வைத்து இமெயில் அனுப்பியிருந்தார் திருமுருகன். அவர் எழுதாத எண்ணங்கள் என்னை உக்கிரமாகத் தாக்கின. மண்டபத்தில் எழுதிக்கொடுத்ததை விட மோசமாகிவிட்டதே! ரகுவின் அலுவலகத்துக்கு விரைந்தேன்.

"என்னடா! பிரசுரமாச்சா? அவனவன் கதை வேணும்னு லைன் கட்டி நிக்க ஆரம்பிச்சிருப்பானுவளே?" என்றான் ரகு.

"அடிக்காத குறை" என்றேன். "டேய்.. அந்த ப்ரோக்ரேம்.. அது என்னென்ன கதை அனுப்புச்சுனு பாருடா" என்றேன் எரிச்சலுடன்.

"ஆர் யூ ஷூர்?" என்றபடி விவரங்களை அச்சில் பிரதியெடுத்தான். எல்லாமே புதுமைப்பித்தன் கதைகள். பெயர் மட்டும் மாறியிருந்தது.

"தமிழின் தலைசிறந்தச் சிறுகதைனு ப்ரோக்ரேம் வரம்பமைச்சேன்.." என்றபடி கம்ப்யூடரையும் என்னையும் மாற்றி ஏற இறங்கப் பார்த்தான்.

என்ன செய்வதென்று தெரியவில்லை. அமைதியானேன். திடீரென்று உரக்கச் சிரித்தேன். ரகுவைத் தட்டி "உன் கம்ப்யூடர் தவறு எதுவும் செய்யவில்லை. தலைசிறந்த கதைகள் எழுத ஒருவரால் மட்டுமே முடியும்" என்றபடி வெளியேறினேன்.இக்கதை Eric James Stone (EJ) எழுதிய 'the greatest science-fiction story ever written' என்கிற கதையின் அப்பட்டமானத் தழுவல். அத்தனை சிறப்பும் EJவுக்கு. குறைகள் என்னுடையவை. தொடர்ந்து படித்தமைக்கு நன்றி.

64 கருத்துகள்:

 1. போன வார குமுதத்தில என்னோட ஒரு பக்கக் கதை பிரசுரமாச்சா.... என்னை கலாய்ச்ச மாதிரியே இருக்கு பதிவு
  உங்கள் கதை அட்டகாசம் . கடைசியில் சொன்னது உண்மை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா.. உங்க கதையைத் தவிர்த்து மிச்ச கதைகளைச் சொன்னதா வச்சுப்போம். 😆;-)

   நீக்கு
 2. Wow. Enjoyed it.
  Thiruvaiyaru Thiagarajar story - last part is still pending.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சார்.
   ஜபேஷ் கதை முடிச்சாச்சு. இன்னும் இழுத்தா ஸ்ரீராம் திட்டுவாரு.

   நீக்கு
 3. நான் பொதுவாக என் சிறுகதைகளைப் பத்திரிக்கைகளுக்கு அனுப்புவதில்லை. என் ஆக்கத்தை பிரசுரிக்க அவர்கள் மதிப்பீடு செய்வது எனக்கு உடன் பாடில்லை. கதையின் கரு எனது. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு அல்லவா. இருந்தாலும் ஏதாவது போட்டிக்கதைகள் இருந்தால் கலந்து கொள்ளலாம் என்பது அண்மைய நிலைப்பாடு. சிறு கதைகளில் நான் அறிந்தவரை உங்களை அடித்துக் கொள்ள யாருமே இல்லை. உங்கள் ஒரிஜினல் ஆக்கங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சார்.
   பத்திரிகைக்கு எழுதுவது பற்றி பிரபலங்கள் எழுதியிருப்பதை படித்தால் ஏன் எழுதுகிறார்கள் என்று கேட்கத் தோன்றும்.

   நீக்கு
 4. //இக்கதை Eric James Stone (EJ) எழுதிய 'the best science fiction story every written' என்கிற கதையின் அப்பட்டமானத் தழுவல்.//
  அப்பட்டமான தழுவல் என்பதை ஒத்துக்கொள்ள முடியாது.
  ஏன் என்றால் தலைப்பே தவறுதலாக இருக்கிறது.
  best science story ever written NOT every written.
  y அதிகப்படி.
  ஹி ...ஹி .
  அதை வொய் நீ படிக்கிறாய் என்று கேட்டால், அது தான் சுப்பு தாத்தா.

  இருக்கட்டும். நாடக உலகில் இது போன்ற முயற்சிகள் நடைபெறுகின்றன.
  ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஆடியன்ஸ் கிட்ட இனி எப்படி போகவேண்டும் என்று கேட்டு , அதன்படி அவர்களையே லைவ் ஆக நடிக்கச் செய்யும் ரியல்டி ஷோ வந்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Good catch. திருத்திவிட்டேன். நன்றி சார்.

   நீக்கு
  2. உண்மை தான். interactive development இப்போது சினிமாக்களுக்கும் வந்துவிட்டது. சில கேபிள் சேனல்களில் இப்போது கதையின் போக்கை மாற்ற survey செய்து அதற்கேற்ப படத்தை மாற்றுகிறார்கள். உதாரணத்துக்கு சாமி வில்லன் கண்ணைக் குத்த வேண்டும் என்று நீங்கள் தீர்மானிக்கிறீர்கள், சாமி கண்ணை வில்லன் குத்த வேண்டும் என்று நான் தீர்மானிக்கிறேன் - இரண்டு பேருக்கும் திருப்திகரமாக படம் தொடரும். digital magic. ஆனால் இது எந்த அளவுக்கு சூடு பிடிக்கும் என்று தெரியவில்லை.

   நீக்கு
 5. இப்போதெல்லாம் பிரபல எழுத்தாளர்கள் பெயரில் வெளியாகும் சிறுகதைகள் நன்றாக இல்லை என்பதுதான் என் அபிப்ராயமும்.

  பதிலளிநீக்கு
 6. வாழ்க புதுமைப் பித்தன். உங்கள் கதைகளே நன்றாக இருக்கின்றன துரை.

  பதிலளிநீக்கு
 7. //கடவுளுக்குக் கூட இந்த நிறைவு கிடைக்காது என்றே தோன்றுகிறது. காரணம் நல்லது நிகழ்ந்தால் கடவுளின் கருணை, அல்லது நிகழ்ந்தால் மாந்தரின் பாபம் என்று படைப்பாளி - படைப்பின் உரிமைகளையும் சலுகைகளையும் தெளிவு படுத்தியிருக்கிறார்கள். சிறுகதை உலகம் அப்படியல்ல. அந்த ரீதியில் கடவுளை விட நான் அதிகம் பொறுப்புள்ளவன் என்ற ஒரு சிறிய கர்வம் எனக்குண்டு//

  ஒரு விஷயம் மட்டும் இந்த சுப்பு தாத்தா மர மண்டைக்கு புரிய மாட்டேங்குது.

  கடவுள் உடான்ஸ் அப்படின்னு சொன்னப்பறம் கடவுளின் கருணை, உரிமை அதெல்லாம் சொல்லியிருக்காக, அதெல்லாம் காட்டியிலும் நான் ஒரு படி மேலே அப்படின்னு சொல்றது லாஜிகலா தெரியல்ல.
  if a = 0 , then is it a *a > ) ??!!

  யூ கான்ட் டெவலப் ஆன் சம் ஹைபாதெசிஸ் யூ டூ நாட் பிலீவ். .இல்லையா.

  இருந்தாலும் நான் சொல்றது சரியா தப்பா அப்படின்னு கீதா சாம்பசிவம் அவங்க தான் சொல்ல முடியும்.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹிஹி.. அதான் எழுதியிருக்கே? - பூஜ்யத்தில் சிறிதென்ன பெரிதென்ன.. பூஜ்யப் பெருமை அல்பத்தனம் தானே, என்ன சொல்கிறீர்கள்?

   கடவுள்னாலே கண்ணை மூடிக்கிறதாலே சிலதெல்லாம் கவனிக்காம போயிடறோமோ?

   மிச்சத்தை கீதா சாம்பசிவம் சொல்லட்டும்.

   நீக்கு
  2. //பூஜ்யத்தில் சிறிதென்ன பெரிதென்ன..//

   அப்படி சொல்ல இயலும் என்று தோன்றவில்லை.

   ஒரு புள்ளி யும் பூஜ்யம் . ஆரம் கிட்டத்தட்ட 0. இருப்பினும் அந்த புள்ளியை அதன் மையத்தை கண்டு, சற்று முயன்று, அந்த சிறு பூஜ்யத்தின் சுற்றுப்புற எல்லையை விரிவு படித்துக்கொண்டே செல்லுங்கள். பலூன் பெரிதாவது போல, சிறிய பூஜ்யம் பெரிது ஆகிறது, இன்னும் பெரிதாக்குங்கள். இன்னமும் பெரிதாக்குங்க்கள். பூஜ்யம் விரிந்து கொண்டே போகிறது. அதன் விட்டம் கூடப் போகப் போக டூ பை ஆரும் பை ஆர் ஸ்க்யோர்டும் கூட கூடப் போய் , ஒரு கணம் அது, அந்தபூஜ்யம், இந்த அண்டத்தையே உள் அடக்கும் அளவுக்கு பெரிது ஆகிவிடுகிறது.

   அப்போது, அந்த பூஜ்யம், தான் எந்தப் பூஜ்யத்தில் இருந்து வந்தோம் என்பதை மறந்து போய் , தான் பெரிது , தான் தான் பெரிது, எனத் தன தோற்றத்தைப் பார்த்துப் பெருமிதம் கொள்கிறது.

   அந்தப் புள்ளி பூஜ்யமோ நடக்கும் இந்த நாடகத்தைப் பார்த்து மனதுக்குள் சிரிக்கிறது. அதற்குத் தெரியும், எந்த ஒன்று என்னில் இருந்து தோன்றுகிறதோ அது என்றாவது ஒரு நாள் என்னிடமே சங்கமாமக் போகிறது என்று.

   பல பல பெரிய பெரிய பூஜ்யங்களுக்கு இந்த உண்மை புலப்படு முன்னமேயே வாழ்க்கையின் முடிவு ஏற்பட்டு விடுகிறது. புரிந்துகொள்ளும் பூஜ்யங்கள் மௌனிகளாக ஆகிவிடுகின்றனர்.

   நிற்க.

   //கடவுள்னாலே கண்ணை மூடிக்கிறதாலே சிலதெல்லாம் கவனிக்காம போயிடறோமோ?//

   பீமன் அதான் பாண்டவர் லே ஒருவன் கதையை வச்சுண்டு, அவன் ஒரு நாளைக்கு வனத்திலே போயிட்டு இருக்கையிலே ஒரு குரங்கு தான் வாலை குறுக்க போட்டுண்டு படுத்துட்டு இருந்ததாம். அந்த கதை தெரியுமோ ?

   சொல்லனுமா ? சித்த இருங்கோ ... யாரோ செல் லிலே கூப்பிடறா . பதில் சொல்லிட்டு வாரேன் .

   சு தா.


   நீக்கு
  3. சில சமயம் உங்க ஒரு பின்னூட்டத்துக்காக eternally waiting போலத் தோணும். this is one such moment. நன்றி.

   கொஞ்சம் யோசிச்சோம்னா (எனக்கு கண்ணை மூடிட்டு யோசிக்க வராது) பீமன் கதை தான் இந்தக் கதையும். வியாசரோ, சுகப்பிரம்மரோ சொல்லலே - பதிலா EJ சொல்லிட்டு போயிருக்கார். குவான்டம் வால் கதை, அம்புட்டுதேன்.

   நிற்க.

   புள்ளிக்கும் பூஜ்யத்துக்கும் ரூட்டு மாறினாலும் very smart and profound. இந்த மாதிரி பின்னூட்டங்கள் தான் பதிவு எழுதுறதுக்கான டானிக். மறுபடி நன்றி. மறுபடி யோசிச்சோம்னா.. பூஜ்யத்துக்கு க்ரெடிட் தேடிக்கிறதோ கொடுக்கறதோ அல்பத்தனம்னு நான் சொன்னதே திரும்ப வருது - பூஜ்யம் மாதிரி. பூஜ்யத்துக்கு க்ரெடிட் தேடிக்கிறது அல்பத்திலிருந்து அகங்காரம் வரைக்கும் ரேஞ்ச். பூஜ்யத்துக்கு க்ரெடிட் கொடுக்குறது கண்மூடித்தனத்துலந்து அடிமைத்தனம் வரைக்கும் ரேஞ்ச். இந்த இடத்தில் rன் மதிப்பு.. க்கும்.. பூஜ்யம்.

   நீக்கு
  4. haahaahaa @அப்பாதுரை, என்னை வம்புக்கு இழுத்தாச்சா?

   இன்னிக்குத் தான் தற்செயலாக உங்கள் கதையைப் படித்தேன். தழுவல்னு சொல்ல முடியலை. உண்மையிலேயே சிறுகதையின் மன்னர் தான் நீங்கள்

   நீக்கு
 8. படித்தவரின் ரசனைக்கேற்ப கதை அமைந்திருக்கும்"//

  கதையும், பின்னூட்டங்களும் ரசிக்கவைத்தன.பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 9. //தலைசிறந்த கதைகள் எழுத ஒருவரால் மட்டுமே முடியும்"//
  எக்ஜாட்லி .
  அந்த ஒருவன் யார் ?
  புதுமைப் பித்தனா?
  இல்லை . ஆனால் அவனும் ஒரு பித்தனே.


  பித்தா பிறை சூடி, பெருமானே அருளாளா

  எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை

  வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்துறையுள்

  அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனல் ஆமே  அந்த பித்தன் தங்களுக்கு முதல் அடி எடுத்துக்கொடுத்தால் மட்டுமே சாத்தியம்.


  எதுக்கும் மேடம் கீதா சாம்பசிவம் அவர்கள் அட்வைஸ் கேட்டுண்டு ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு ஒரு படி அக்கார வடிசல் நைவேத்யம் பண்ணி, அங்கு இருக்கிற பக்தாளுக்கு தானம் செய்யறதா வேண்டிக்கோங்க..


  அடுத்த கதை கண்டிப்பா, குமுதம், ஆனந்த விகடன் இல்ல, கலைமகள் லே கூட வரும்.


  அது சரி. இதெல்லாம் எதுக்கு ?
  நம்ம ஒரு பத்திரிக்கை ஆரம்பிச்சு, அதுலே வானவில் மனிதரை ஆசிரியரா போட்டுட்டா , நம்ம கதை எல்லாமே வருமே !!
  இல்ல நம்ம ஊரு தேனம்மை மேடம், இல்லேன்னா பெங்களூரு ராமலக்ஷ்மி மேடம் இவர்களையும் நீங்க ஆசிரியர் பொறுப்புக்கு கன்சிடர் பண்ணலாம்.
  காசு இருந்தா, படத்துலே நடிக்கிறேன், நடிக்கிறேன் என்று ஏன் அலையணும்? நம்மளே ஒரு படம் எடுத்துடலாமே !!
  எப்படி !!  சு தா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அந்த பித்தன் தங்களுக்கு முதல் அடி எடுத்துக்கொடுத்தால் மட்டுமே சாத்தியம்

   நிச்சயமாகக் கிடையாது.

   நீக்கு
 10. ஆரம்பமே வெகு அமர்க்களம்! முடிப்பில் யாரெல்லாம் (எதெல்லாம்) எள்ளி நகையாடப் பட்டு இருக்கிறது என்று பிடிபடுகிறது !!
  கடைசியில் தலையை சுத்தி மூக்கை தொட்டால் ஒரு இதழ் தொடங்க இருப்பது (யார்?) வெளிச்சமாகிறது.

  பதிலளிநீக்கு
 11. அடடா! வழக்கம் போல் தாமதமாய்த் தான் வந்திருக்கிறேன். தழுவல் என்று சொன்னாலும், உங்கள் தொனி அதிகமாய் அன்றோ இருக்கிறது? எல்லோரையும் வம்புக்கிழுத்து.... ஹூம்..
  எந்தப் பத்திரிகைக்கு எப்படி எழுத வேண்டும் என்று ஃபார்முலாவுடன் எழுதுவது ஒரு படைப்பாளிக்கு அழகல்ல. எழுத்து ஒரு அந்தரங்கமான வெளிப்பாடு. உள்ளே விழுந்த சிறுபொறி தன்னைத் தானே எழுதிக் கொள்ளும்.எழுதி எழுதி வந்த பயிற்சியினால்,பார்முலா போட்டு இட்டு நிரப்பலாம் தான். ஆனாலும் அதில் ஜீவன் இருக்காது. நுண்ணிய வாசிப்புணர்வு கொண்ட வாசகனால் அதை எளிதில் கண்டுகொள்ள முடியும். இன்னமொன்று... நல்ல எழுத்து எப்படியும் அடையாளம் காணப்படும்.இணையத்தில் எழுதப்படும் சிறுகதைகளில், சட்டையைப் பிடித்திழுத்து சிந்திக்க வைத்த சில கதைகளை நாம் படிக்கவில்லையா என்ன?

  கதையில் நீங்கள் சொல்லியபடி புதுமைப்பித்தன் ஒரு தலையாய முன்னோடி தான். எனினும் நூற்றுக் கணக்கான தலை சிறந்த கதைகள் எழுதப் பட்டே வந்திருக்கின்றன. முந்தைய தலைமுறையில் எழுத்தாளர்கள்/ வாசகர்கள் விகிதாச்சாரம் அதிகம். ஒரு எழுத்தாளருக்கு சராசரியாக 2000 வாசகர்கள் என்று கொள்வோமே. இணையம் வந்தபின்னர் வாசகர்களே எழுத்தாளர்களுமாய் மாறி 'எழுத்தாசகர்களே' இன்று அதிகம். இதுவும் நல்லது தான். வாசிப்பு கடையப் படும் போது கசண்டுகள் கீழே தங்கிவிடும்.

  புது பத்திரிக்கை ஒன்று தொடங்கி என்னை ஆசிரியராய் போடப் பரிந்துரைத்த சுப்பு தாத்தாவுக்கு நன்றி. தன்யனானேன்.

  உங்களுக்கு ஒன்று தெரியுமா சுதா? இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு தரமான மாத இதழ் தொடங்குவதற்கு திட்டங்கள் தீட்டினோம். செதுக்கி செதுக்கி அதை பெருங்கனவாய் ஆக்கிக் கொண்டோம். சில தவிர்க்க இயலாத காரணங்களினால் அம்முயற்சி தள்ளிப் போடப்பட்டது.இன்னமும் கண்ணோரம் அந்தக் கனவு மிச்சமிருக்கிறது.ஆனாலும் கூட' பிராம்மணா! வாக்கு பலித்ததோ' என்று அது கைகூடவும் செய்யலாம். அந்தக் கனவுடன் திரிந்த கெட்ட பையன்களில் நானொருவன்.. மற்ற இருவரை நான் அடுத்த தவணையில் சொல்லலாம்... அல்லது அந்த முயற்சிவிவரமுடன் உப்பு,மிளகாய் சேர்த்து ஒரு சிறுகதையாக உங்கள் தலையிலே கூட அரைக்கலாம்...

  அப்பாதுரை காரு... சிறுகதையின் ட்ரீட்மெண்ட் கச்சிதம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது மாதிரியா கனவு வருது உங்களுக்கு.. மிசல் கீகன், நயா ரிவெரா, சோயி க்ரேவிட்ஸ், கென்டல் ஜெனர், சுகி வாடர்ஹவுஸ்... எல்லாம் பொறந்து என்ன பிரயோஜனம்னேன்?

   (ஆமாமா.. ஏதோ பத்திரிகை தொடங்கறதா சொன்னீங்க இல்லே?)

   நீக்கு
  2. நிறைய பேர் நல்ல சிறுகதைகள் எழுதியிருக்கிறார்கள். உண்மை. தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள்ல டாப் 5 பட்டியலை பத்து இலக்கிய விரும்பிகள் கிட்டே கேட்ட அனேகமா பத்து பேர் தேர்விலும் புபி இருப்பார்னு நம்பறேன்.

   நீக்கு
 12. //அபிஷேகம், ஆராதனை, பூஜை, நோன்பு, விரதம், யாகம் எல்லாம் செய்து.. படைத்தவன் என்ற அங்கீகாரத்தை அவ்வப்போது தந்து வழிபடாவிட்டால் கண்ணைக் குத்துவதிலிருந்து குடும்ப நாசம் வரை அத்தனை கெடுதல்களையும் செய்து பழி வாங்கும் கடவுள் அளவுக்குச் சிறுகதை எழுத்தாளனான எனக்குத் தோன்றாது..//

  சரி, இப்போ என்னை வம்புக்கு இழுத்த பகுதிக்கு வருவோம். சுப்புத்தாத்தா சொல்லி இருக்கிறாப்போல் நீங்க நம்பாத கடவுளைப் பற்றி உங்களுக்கு ரொம்பவே கவலை அதிகமா இருக்கு. முதல்லே ஒண்ணைப் புரிஞ்சுக்குங்க. எந்தக் கடவுளும் அபிஷேஹம், ஆராதனை, பூஜை, நோன்பு, விரதம், யாகம்னு கேட்கிறதில்லை. இவை எல்லாம் மனிதர்கள் ஏற்படுத்தியவையே! அங்கீகாரம் எதுவும் கடவுளுக்குத் தேவையில்லை.

  கடவுள் என்பது ஓர் உணர்வு. உணர்ந்தால் தான் புரிந்து கொள்ள முடியும். உங்களைச் சின்ன வயசில் உம்மாச்சி கண்ணைக்குத்தும்னு சொல்லிப் பயமுறுத்தி இருக்காங்க! :) நல்லவேளையா எங்க வீட்டுப் பெரியவங்க அப்படி இல்லை. சம்பிரதாயம், சடங்குகளைக் கடவுள் வழிபாட்டிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க, இரண்டையும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் இணைக்காமல் இருக்கச் சொல்லிக் கொடுத்துட்டாங்க. ஆகவே எனக்குக் குழப்பமே இல்லை. என்னைப் பொறுத்தவரை இந்த மூட நம்பிக்கைகள் கிடையாது. அதே சமயம் கடவுளின் இருப்பை ஒவ்வொரு கணமும் உணர்கிறேன். நம்புகிறேன். இப்போதைக்கு இது மட்டுமே. திரும்பி வந்தாலும் வருவேன். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வரலட்சுமி முகம் - அதைச் சீர் போல் காத்து விரதம் பேண வேண்டியது - செய்தால் தான் புருஷன் ஆயுசுலந்து லட்சுமி கடாட்சம் வரை எல்லாம் கிடைக்கும் என்று அடிக்கும் விரதக் கூத்து - சடங்கா சம்பிரதாயமா வழிபாடா?

   நீக்கு
  2. இது ஒரு பண்டிகை. பண்டிகையை நிறைவாய்க் கொண்டாடும் சந்தோஷம் மட்டுமே இதில் உள்ளது. கூடவே உளமார, மனமார இவ்வுலகத்து மாந்தருக்கெல்லாம் சேர்த்துப் பிரார்த்தனையும் செய்து கொள்கிறோம். ஒரு வகை நன்றி அறிவித்தல்! வரலக்ஷ்மி முகம் எல்லாம் பின்னால் வந்தது தான். ஆரம்பத்தில் கையால் தான் வரைந்து வந்திருக்கின்றனர். செய்தால் தான் புருஷன் ஆயுசு என்பதெல்லாம் கிடையாது. எங்க புக்ககத்தில் இந்த நோன்பு கிடையாது. நான் செய்வதில்லை. ஆனால் இந்த நோன்பு செய்யப் பிடிக்கும். நோன்புக்கான ஏற்பாடுகள், மலர் அலங்காரங்கள், பூஜை செய்வது எல்லாமும் பிடிக்கும். என்றாலும் புக்ககத்தில் மாமியாரின் அனுமதி கிடைக்காததால் நோன்பு செய்வதில்லை. அதனால் ஒன்றும் குறைந்துவிடவில்லையே! இதெல்லாம் அவரவர் மனதைப் பொறுத்தது. நோன்பு செய்யப் பிடிக்கும் என்பதாலேயே இதை எடுத்துக் கொண்டு செய்பவர்கள், என் உறவினர்கள் எங்க வீடுகளில் உண்டு. இதெல்லாம் அவரவர் மன நம்பிக்கையைப் பொறுத்தது!

   நீக்கு
  3. மற்றபடி எனக்குத் தெரிந்து யாரும் கூத்தெல்லாம் அடிக்கவில்லை. செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. அவரவர் விருப்பம் தான் இதிலே!

   நீக்கு
  4. அப்போ இதை சம்பிரதாயம்னு சொல்லலாமா? (அனுமதி வாங்கிக் கொண்டாடணும்னு சொல்றீங்க:-).

   இந்த விவகாரங்களில் நீங்கள் மிதத்தைக் கடைபிடிப்பது பாரட்டத்தக்கது. ஆனால் நான் நிறைய "கூத்து"களைப் பார்த்திருக்கிறேன். பார்க்கிறேன்.
   'உங்க பரம்பரைல இருந்த முகம் எங்க குடும்பத்துக்கு ஒத்து வராது, அதனால உங்க பொறந்த வீட்டுலயே விட்டுடு, காலைல மூணு மணிக்கெல்லாம் எழுந்து இந்த இந்த இந்த வேலையெல்லாம் செய், உங்க நகையைக் கொஞ்சம் அலங்காரத்துக்குக் கொடுங்க (பிறகு திருப்ப 'மறந்து' போவது - 'மறந்து' போனதும் அடாவடி - "லட்சுமி கடாட்சம்னா திருடறது இல்லே")...
   முப்பது வருடங்களுக்கு முன் கூத்தில் பங்கு கொண்ட அப்பாவிகள் இப்போது கூத்தை முன் நின்று நடத்துகிறார்கள்.. (நானும் வேலைக்குப் போகணும் - ஆறு மணிக்கெல்லாம் உங்க வீட்டுக்கு வந்துடறேன்.. சேர்ந்தே விரதத்தை முடிச்சுடலாம்.. லீவ்னாலும் பசங்களை ட்யூசன் கூட்டிட்டுப் போகணும்.. அதெல்லாம் பிரச்சினையில்லை.. என் ஹஸ்பென்ட் காலைல அஞ்சு மணிக்கெல்லாம் எழுப்பி கொண்டு விடச் சொல்றேன்.. இதைவிட அவருக்கு வேறே என்ன வேலை..)

   இந்த வளர்ச்சிக்குப் பிறகும் பத்து பதினைந்தாயிரம் சம்பளம் வாங்கும் (அதுவே ஆச்சரியம்.. இந்தியாவில் எல்லாரும் அதிகமாக சம்பாதிப்பதாக நினைத்தேன்) குடும்பத்தில் பரம்பரை சம்பிரதாயம் என்று இதற்காக ஆயிரக்கணக்கில் செலவழிப்பது.. கூத்தில்லையெனில் எப்படி விவரிப்பது என்று தவிக்கிறேன்.

   இவையெல்லாம் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது என்று நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. என்னையும் இப்படித்தான் அடக்குகிறார்கள் ("நாங்க என்னவோ செஞ்சுட்டுப் போறோம்.. இதுல எனக்கு ஒரு சந்தோஷம் கிடைச்சா உனக்கு ஏண்டா எரியுது?")

   நீக்கு
  5. அனுமதி என்பது ஒண்ணும் கேவலமான ஒன்றில்லை. வீட்டுக்குப் பெரியவங்களுக்கு நாம் கொடுக்கும் சிறு மரியாதை அவ்வளவே! இப்போ என் மருமகள் இந்த நோன்பை நான் செய்யப் போறேன்னு என்னிடம் சொன்னாள். நானும் உன்னால் முடிந்தால் செய்னு சொல்லிட்டேன்! இது அவரவர் விருப்பம். இதில் கட்டாயம் ஏதும் இல்லை. முன்னெல்லாம் காரடையான் நோன்பு பிராமணர்கள் மட்டுமே கொண்டாடினார்கள். இப்போது அனைத்து இனத்தினவரும் கொண்டாடுகிறார்கள். இப்படியானும் இறை பக்தி, நம்பிக்கை என்பது பரவட்டுமே!

   நீக்கு
  6. பரம்பரையாய் வரும் முகம் மருமகளுக்குத் தான் போக வேண்டும். பிறந்த வீட்டில் மகள் புதிதாக நோன்பு எடுக்கையில் முகமும் புதிதாகத் தான் வாங்கிக் கொடுப்பார்கள். அந்த முகத்தை மாமியாருடைய முகத்தோடு வைத்துத் தான் வழிபடுவார்கள். அநேகமாய்க் கலசம் ஒன்றாகவே இருக்கும், தனித்தனியாகப் போனால் தான் தனித்தனிக் கலசம். இல்லை எனில் ஒரே கலசத்தில் வீட்டில் எத்தனை பேர் நோன்பு செய்கிறார்களோ அனைவருடைய பிறந்த வீட்டில் கொடுத்த முகங்களும் இருக்கும். ஒத்து வராது என்றெல்லாம் சொல்வது அகங்காரத்தின் உச்சம் தான்! வேறென்ன சொல்வது!

   நீக்கு
  7. //இந்த வளர்ச்சிக்குப் பிறகும் பத்து பதினைந்தாயிரம் சம்பளம் வாங்கும் (அதுவே ஆச்சரியம்.. இந்தியாவில் எல்லாரும் அதிகமாக சம்பாதிப்பதாக நினைத்தேன்)//

   இப்போதெல்லாம் ஃப்ரெஷ் எஞ்சினியர்களுக்கே 20,000 சம்பளம். அதற்குக் குறைவில்லை. அதிகமாகத் தான் இருக்கும். மத்திய அரசுப் பணியில் லோயர் டிவிஷன் கிளார்க் எனப்படும் கீழ்நிலை எழுத்தருக்கே மாதம் இருபதாயிரத்துக்குக் குறையாமல் வரும். ஆகவே சம்பளமெல்லாம் பிரச்னை இல்லை. இரண்டு லட்சம் மாசம் வாங்கும் நபர்களும் நடுத்தரக் குடும்பங்களில் உண்டு. அதை விட அதிகமாக வாங்குபவர்களும் இருக்கின்றனர்.

   நீக்கு
  8. சில வீடுகளில் அனாவசியமான பரபரப்பு, இறுக்கமான சூழ்நிலை, அமர்க்களம், பெரிய குரலில் ஏற்பாடுகள் குறித்துப் பேசி அமர்க்களப்படுத்துவது என்பதை எல்லாம் பார்த்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை எல்லாம் ஒரு மணி நேரத்துக்குள்ளாக முடிக்க முடியும். நிவேதனங்கள் செய்யத் தான் நேரம் எடுக்கும். பலருக்கும் அலுவலகத்தில் விடுமுறை கிடைக்காததால் இப்படி எல்லாம் செய்து கொள்கிறார்கள். இதுவும் அவங்க வசதி தான்.

   நீக்கு

  9. கும்பலாக ஒரு வீட்டில் நடந்த பூஜைக்கு ஒருவர் தன்னுடைய நகையை அலங்காரத்துக்காகத் தந்தார். முடிந்ததும் மறுநாள் வாங்கிக் கொண்டு போனார் என்று இவர் சொல்ல, திருப்பித் தரவே இல்லை என்று அவர் சொல்ல்... அதுவரை அத்தனை அன்பும் நேசமும் பாசமும் பிய்த்துக்கொண்டு போன இடத்தில்... அதற்குப் பிறகு திருட்டு லட்சுமி, அடாவடி லட்சுமி, ஏமாத்து லட்சுமி, ஏப்ப லட்சுமி என்று புதுவகை அஷ்டோத்திரம் தொடங்கி.. இன்றைக்கும் தொடர்கிறது!

   நீக்கு
  10. சகோதரி கீதாசாம்பசிவம் சொன்ன கருத்தே எங்களதும்..அதாவது முதல் கருத்து....பூஜை, புனஸ்காரம், அபிஷேகம் இதெல்லாம் மக்களால் ஏற்படுத்தப்பட்டது....அதற்கும் கடவுள் நம்பிக்கைக்கும், ஆன்மீகத்திற்கும் முடிச்சுப் போடுவதில்லை நாங்களும்......

   நீக்கு
 13. //யாரும் பத்திரிகை படிக்கிறதில்லையோனு தோணுது.."//

  உண்மை, வாரப் பத்திரிகைகள் படிக்கிறதை நிறுத்தியே பத்தாண்டுகளுக்கும் மேலாகிறது. நான் படிக்கும் அருமையான சிறுகதைகள் இப்போது இணையத்திலிருந்து தான் வாசிக்கப்படுகின்றன. மோகன் ஜி, அப்பாதுரை போன்றவர்களை விடவாப் பத்திரிகைச் சிறுகதைகள் இருக்கப் போகின்றன?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மோகன் ஜி, அப்பாதுரை ஆகியோரை விடவா மற்ற எழுத்தாளர்கள் பத்திரிகைச் சிறுகதைகளை எழுதி இருக்கப்போகிறார்கள்? என்று திருத்தி வாசிக்கவும். நன்றி.

   நீக்கு
  2. ரொம்ப நன்றி.

   இனிமே கதை எழுதித் தள்ளிட வேண்டியது தான் பாக்கி (மோகன்ஜியைச் சொன்னேன்)

   நீக்கு
 14. //உங்க ஒரு பின்னூட்டத்துக்காக eternally waiting போலத் தோணும்.//
  பிரபஞ்சத்திலே அறியப்படற , அறியப்பட வேண்டிய எல்லாமே இந்த இரண்டு வார்த்தைகளிலே அடங்கி இருக்கு.

  இந்த இரண்டு வார்த்தைகள் சொல்லும் சங்கதியை அனுபவிக்காத ஜீவன் இருக்க முடியுமோ !!

  அன்பு, பாசம், காதல், களவு , காமம், தாகம், மோஹம் , பிரமை, ஈர்ஷ்யா, கர்மம், ஜரா, வியாதி, ம்ருத்யூ இவை எல்லாத்துக்குமே துவங்குற கால கட்டம், முடியுற கால கட்டம் என்று ஒன்று இருந்தாலும் , அதை அனுபவிக்கிறவங்களுக்குத் தான் தெரியும் இந்த எடர்னலி வைடிங்க் தரும் வேதனை.

  கிஷ்கிந்தா காண்டந்த்துலே சுக்ரீவன் மழை காலம் முடிஞ்சப்பரம் தனது சேனையை அனுப்பிச்சு ஸீதையைத் தேடித் தருவதாக அஷ்யூர் சொல்லி இருக்கான். இந்த மழை காலம் முடிஞ்சா மாதிரி தானே இருக்கு. இன்னமும் சுக்ரீவன் தாமதம் செய்யறானே என்று நினைச்ச ராம பிரான் அந்த வைடிங் எடர்னலாப் போயிண்டிருக்கே, நான் எப்ப என்னோட சீதையைக் காணப்போறேன் அப்படின்னு புலம்பற காட்சி.

  மார்கழி மாசம் அதிகாலைலே குளிச்சுட்டு, பொட்டிட்டு, பூ வச்சுண்டு, எல்லா கோபிகைகளும் அந்தக் கண்ணன் வாசல்லே நின்னூண்டு,மாலே மணி வண்ணா, மணிக்கதவம் தாள் திறவாய் அப்படின்னு சத்தமா பாடினப்பறமும், கதவு திறக்காம இருக்கும்பொழுது, எப்பத்தான் இந்த வாசல் திறக்குமோ என்று கண்களில் நீர் சொறிய நிற்கும் கன்னிகைகள் மனசுலே யும் எடர்னலா வைட் பண்ர ஃபீலிங்.

  இந்த ஒரு சொற்தொடரை பௌராணிகமா பார்க்கவேண்டாம், லோகாயதமா பார்த்து , நமக்கு ஒரு பதவி, ப்ரமோஷன் செய்யற தொழில் லே ஒரு ரிகக்னிஷன் வரணும் என்று ஆசைப்பட்டு, பொறுத்து, ஏங்கி , வரவேண்டியது வல்லையே, யாருக்குத் தகுதி இல்லயோ அவங்களுக்கு நமக்குச் சேரவேண்டியது கிடைக்கிறதே அப்படிங்கற எண்ணத்திலே மனசு லயிச்சு, நொந்து போயி, தொடர்ந்து, பொறாமை சேர்ந்து கோபமா மாறி, கிடைத்தவங்களை வைவது எல்லாமே ...


  இந்த எடர்ணலி வைடிங் குள்ளே அனுபவிக்கறது தான்.

  (வாயார வாழ்த்துவதும் நொந்த பேர் வைவதும் எங்கள் உலக வாய்பாடு )

  மனுஷ்யன் வந்ததுலே திருப்தி அடையாம, வராத ஒண்ணுலே மனசு லயிச்சு இருக்கும்போது, இந்த வைடிங் இனெவிடபிள் .
  இருந்தாலும், சொல்லலாம்.
  எடர்னல் வைடிங் இஸ் எ வே ஆஃப் லைஃப்
  அதுலேயும் ஒரு அஹம் இருக்கு, சுகமும் இருக்கு.

  சாமுவேல் பக்கெட் எழுதிய வைடிங் ஃபார் கோடாட் படிச்சுருப்பீங்க. எதுக்காக வைட் பண்றோம் அப்படின்னே தெரியாம பேசிக்கினே காலத்த கழிக்கிற வ்லாடிமீர், இன்னொத்தன் பேரு என்ன மறந்து போச்சே, எச்ட்ரோகன் நா?

  இது பத்தி பத்தி பத்தியா எழுதலாம் . ஆனா, படிக்கிறதுக்கு ஆடியன்ஸ் இருக்காது.

  ஆடியன்சை கவர் ப்ண்ணி எழுதணும்னா, கவர்ச்சியா எழுதக் கத்துக்கணும்.
  அதுலேயும் ஒரு சங்கடம் இருக்கு.
  கவர் காலியாகும்போது, சீ அப்படின்னு ஆயிடும். .

  அப்பரம் வரென். மார்க்கெட் ஓபன் ஆயிடுத்து.

  சு தா.

  பதிலளிநீக்கு
 15. தமிழ்ப் பத்திரிகைகள், அவற்றின் கதைப் பிரசுரங்கள், பிரசுர காரணங்களுக்கான நமது அறியாமைகள் என்று தொடங்கிய அற்புதம்,, பின்னூட்டங்களில் விலகிப் போனாலும் 'கதை சொல்லும் கலை'யை நீங்கள் கதையாக்கிய சாமர்த்தியம் ஓகோ ரகம்.

  இணையத்தைப் பொறுத்தமட்டில் எழுதுவோர் என்னத்தைத் தான் எழுதினாலும் பின்னூட்டங்களின் வழி நடத்தல் தான் வழிதப்பல்கள் நேரிட்டாலும் எழுதியவனையும் வழி நடத்திப் போகும் வேடிக்கையாய் போகிறது. பதிவுகளின் சாரம் விவாதங்களுக்கு உட்படுப்படுத்தப் பட்டு எழுதியவனும் வாசித்தவரும் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பினும் சமமான அலைவரிசையில் பயணம் செய்வது ஒரு வரம். அதுவே எழுத்து மொட்டுக்கான மலர்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவ்வளவாக இலக்கியப் பயிர் மேயாத எருமை என்கிற அளவில் நானறிந்த வரையில் என்னை மிகவும் கவர்ந்த புதுமைப்பித்தனுக்கு நான் சுரந்த பாராட்டு அஞ்சலிப்பால் இது. ஒரு கற்பனைக் கதையைப் படித்துத் தோன்றிய இன்னொரு கற்பனைக் கதை. அவ்வளவே.முற்றிலும் படர்க்கைப் படுத்தாமல் சுவாரசியத்துக்காக சுய சாயல் கலந்தேன். அது ஒருவகையில் ஆதங்கப் பின்னூட்டங்களுக்கான வேராகிப் போனது நீங்கள் குறிப்பிட்டுள்ள வேடிக்கையானது. இணைய இயல்பான இது தான் பல நேரம் படைப்பை விட சுவாரசியமாகிறது என்றும் நினைக்கிறேன். எத்தனை நேரம் தான் படைப்பை அலசுவது? (அலசுவதற்கு ஏதாவது வேணாமோ முதலில்?)

   நீக்கு
  2. EJவின் கதையைப் படித்ததும் 'அட, இதை நம்ம பாஷையில் தரலாமே' என்று தோன்றி எழுதத் தொடங்கிய நேரத்தில் என் மனதில் உதித்த எழுத்தாளர் சுஜாதா. பாதி எழுதும் போதே சுஜாதாவின் படைப்புகளில் முத்திரையாக எதைச் சொல்வது என்று எதுவுமே தோன்றாமல் போனது ஒரு வியப்பு என்றால் மனம் திடீரென்று என்னை அறைந்து நான் படித்த புதுமைபித்தனின் கதைகளில் பலவற்றை வரிசையாக முன்னிறுத்தி என்னைத் திருப்பியது இன்னொரு வியப்பு. கதையையும் இலேசாக மாற்றி 'ஒருவர்' என்பதில் மிக மெல்லிய பொதுச் சரிகையைச் சேர்த்து முடித்தேன்.

   சிறுகதையாக எழுதாமல் எண்ணச்சிதறலாகப் பதிவெழுதி தமிழின் மிகச் சிறந்த சிறுகதை எது என்ற போட்டிக் கேள்வியுடன் முடிக்கும் எண்ணமுமிருந்தது. கதை விடுவது சுலபம் என்று கடைசியில் கதையாகிப் போனது.

   நீக்கு
  3. //பின்னூட்டங்களின் வழி நடத்தல் தான் வழிதப்பல்கள் நேரிட்டாலும் எழுதியவனையும் வழி நடத்திப் போகும் வேடிக்கையாய் போகிறது//

   கதையின் உட்கரு , கதையின் போக்கு,
   அக்கதையின் சொல் வளம், பொருள் செறிவு
   ஆங்காங்கே கதாசிரியரின் கருத்து இவற்றிக்கெல்லாம்
   பின்னூட்டம் இடும் பொழுது, கதாசிரியர்
   சொல்லாமல் சொல்லும் கருத்துக்களுக்கும்
   கதையின் மணத்தை உணரும் வாசகன்
   மறுமொழி சொல்லும்போது,
   அதை வழி தப்பல் ( தவறுதல் என்ற பொருளிலா !!)
   என வர்ணிக்க இயலுமா என்று தெரியவில்லை.

   அப்படி வழி தப்பினாலும், கம்னு கிட என்று சொல்லவும்,
   கதாசிரியருக்கு உரிமை இருப்பதாகவே நினைக்கிறேன்.

   சிலதை கண்டுக்காம இருக்க, பலதுக்கு நன்றி என்ற ஒத்தை வார்த்தையிலே முடிச்சு வச்சு,

   சிலதுக்கு மட்டும் கதாசிரியர் தனது எதிர் வாளை எடுத்து வீசும்போது, அதை
   வழி தப்பல் என்று ..... ???

   அப்பாதுரை சார் வரலக்ஷ்மி பூஜை விவகாரத்துலே ரொம்ப பிசி ஆ இருக்கார். அப்பம், வடை, பாயசம் எல்லாம கீதா அம்மா வீட்டுலே சாப்பிட்டு விட்டு,
   பாக்யாதா லக்ஷ்மி பாரம்மா பாட்டு கேட்டுட்டு,

   இதற்கான நல்லதொரு தீர்ப்பை வழங்குவார்

   சரியா ?

   சு தா

   நீக்கு
  4. அதெல்லாம் இல்லை சார். க்லூகோஸ் கட்டுப்பாட்டில் கவனமாக இருக்கிறேன். கீதாம்மாவே அப்படித்தான்னு நினைக்கிறேன். இதையெல்லாம் கண்டுக்கவே கண்டுக்காமல் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்ற அசகாய துணிச்சல் வை.கோ அவர்களிடம் மட்டுமே பார்த்திருக்கிறேன். (அவரை மட்டும் விட்டு வைப்பானேன்?)

   நீக்கு
  5. ஜீவி என்ன பொருளில் சொன்னாரோ.. வழித்தப்பல்கள் (அழகான வார்த்தையே எனக்கு இப்பத்தான் அறிமுகம்) என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. பதிவின் தாக்கம் பின்னூட்டங்களில் தெரிவது என்பது ஒரு வாய்ப்பே தவிர விதி அல்ல. அச்சில் கிடைக்காத வாய்ப்பு. ஆனால் அதை விதியாக ஏற்றுக்கொண்டால் ஒட்டு மொத்த சுவாரசியம் குறையுமென்றே நினைக்கிறேன். நிறைய ஆங்கில பதிவர்கள் puristகளாக இருப்பதைப் பார்க்கும் பொழுது தமிழில் கும்மியடிக்கவும் முடிவது ஒரு வரவேற்கப்பட வேண்டிய மாறுதலாகவே நினைக்கிறேன்.

   பதிவு சார்ந்த பின்னூட்டங்களினால் பதிவைப் பற்றிய அறிவு (சட்டியில் இருந்து அகப்பையில் வந்தால்) பெருகலாம். சார்பற்ற பின்னூட்டஙளினால் படிப்பவர்கள் (பதிவரையும் சேர்த்து) பற்றிய அறிவு.. ஒரு psyche... பெருகுவதை தினம் அனுபவிக்கிறேன்.

   ஜீவியுடைய பதிவையே எடுத்துக் கொள்வோம் (அட ஒரு பேச்சுக்கு சொன்னேன் மக்களே.. அது அவருடைய பதிவு.. அப்படியெல்லாம் நாம எடுத்துக்கொள்ள முடியாது.. தப்பு தப்பு..ஏற்கனவே திருட்டை பத்தி எழுதியாச்சு.. வரலட்சுமி நகையைப் பத்தி இல்லே.. இணையத்தில் எழுத்து திருட்டுப் பத்தி சொன்னேன்). மனம் பற்றிய பதிவிலே எத்தனை பின்னூட்டங்கள் எப்படிப்பட்ட கனத்தைச் சேர்க்க இயலும் என்ற கேள்வி அவர் எழுதியதைப் படிக்கும் பொழுதெல்லாம் எழும்.

   ஹிஹி.. இன்னொரு பின்னூட்ட கறார்காரர் ஜியில் தொடங்கி பியில் முடியும் பதிவர். வாயையும் விரலையும் கிளறிட்டிங்களே? மீசையை முறுக்கிக்கிட்டு வந்துடுவார் சார் விடுங்க.. அப்புறம் அவங்க வீட்டுல கேரள பாயசம் - சட்டுனு பெயர் மறந்து போச்சே - கிடைக்காது (சுகராவது கிகராவது).

   நீக்கு
  6. இருப்பதிலேயே கண்டிப்பு ஹெட்மாஸ்டர் யாருனா எங்கள் ப்லாக் தான். கொஞ்சம் அப்படி இப்படி கமென்ட்டினா போதும் சட்டுனு வெட்டிறுவாங்க.. கமென்டைத்தான்.

   நீக்கு
  7. பலரின் பதிவுகள் படிச்சதுமே ஒரு நிறைவு உணர்வில் என்ன பின்னூட்டம் எழுதுவது என்று தோன்றாமல் அப்படியே வெளிவந்திருக்கிறேன். சில பதிவ்களில் ஏன் படித்தோம் என்ற கடுப்பில் இருந்தாலும் ஒற்றைச் சொல் பாராட்டை பின்னூட்டமாக்கிவிட்டு கழண்டிருக்கிறேன்.

   படிக்க நேரமும் பொறுமையும் எடுத்து வருகிறார்கள் (அதுவும் என் பதிவுகளுக்கு) என்பதே பெரும் நிறைவு. இத்தகைய பின்னூட்டம் எனும் எதிர்பார்ப்பு இல்லை. (இருந்தாலும் மோகன்ஜி எழுதினா மட்டும் என்னமோ பெரிய மேக்னா கார்டா எழுதின மாதிரி பின்னூட்டங்களைக் குவிக்கிறாங்களேனு தோணும்).

   நீக்கு
 16. //கடவுளைப் போலவே எனக்கும் அங்கீகாரம் தேவைப்படுகிறது. //

  இருக்கப்படாதா என்ன?
  இருந்தா அதுலே என்ன தப்புங்கறேன் !

  அப்படி நினைச்ச

  சிசுபாலன், கம்சன், இரண்யாக்ஷன் வாழ்ந்த விதமும் அதானே !!

  ஜமாயுங்க...

  ஆனா ஒரு விசயம் கீது.
  ஏதாவது ஒரு கூட்டத்துலே அங்கீகாரம் வேணும். அப்படின்னு ஒரு வேகத்துலே
  அங்கீகாரம் கிடைக்கும் என்று எங்கனாச்சும் போய், , இருக்கிற
  அங்க வஸ்த்ரமும் உருவிட்டாக அப்படின்னா என்ன ஆகிறது ??  "வழித் தப்பல்" (அபரேஷன் ) இந்த கோணத்திலே பார்த்தா ???

  எங்க
  போகணும் அப்படின்னு மனசுலே ஒரு உறுதி இல்லைன்னா,
  எல்லா வழியும் ஒன்று தான்.


  அது இருக்கட்டும்.
  மோகன்ஜி யைப் பார்த்து என்ன அப்படி ஒரு பொருமல் !!

  சு தா

  பதிலளிநீக்கு
 17. அருமை, அப்பாதுரை.

  அது ஒரு புறம் இருக்கட்டும். "கடவுளை போலே எனக்கும் அங்கீகாரம் தேவைப்படுகிறது". ஆஹா, கடைசியில் கடவுள் என்று ஒருவர் இருப்பதை ஒரு வழியாக ஒப்பு கொண்டுள்ளீர்கள். சந்தோஷம் தான் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @Expatguru, இருப்பை சர்வ நிச்சயமாகப் புரிந்து கொண்டதாலேயே அனைத்தும் கடவுளால் நடைபெறுகின்றன என்பதையும் ஒத்துக் கொள்வதோடு, அந்தக் கடவுள் இல்லை என்று நிரூபிக்கவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார் அப்பாதுரை. இல்லை என்றால் அப்படியே விட்டுடணும் தானே! இல்லை என்பதை நிரூபிக்க முயல்கிறார் அல்லவா? :))))))

   நீக்கு
  2. கடவுள் பக்தி கொண்டவர்களை விட அப்பாதுரை போன்றவர்களே அதிகம் கடவுள் நினைவில் இருக்கிறார்கள். கொடுத்து வைத்தவர்கள். :)

   நீக்கு
  3. ஹிஹி.. நல்லாவே புரட்டுறீங்க குரு.

   நீக்கு
  4. அதை ஏன் கேக்குறீஙக.. நான் படுற பாடு இருக்கே..

   நீக்கு
 18. @கீதா சம்பசிவம், மிகச்சரியாக சொன்னீர்கள். அதனால் தான் அன்று காவிகளை சாடிய பேனா இன்று கடவுளை தன்னையறியாமலேயே போற்றுகிறது. இதுவும் கடவுள் செயல் தான். உண்மைதானே அப்பதுரை?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடவுளைப் போற்றாத நாளே இல்லை குரு. போற்றித் தள்ளிவிட வேண்டியது தான்.

   நீக்கு
 19. மிகச் சிறந்த ஆக்கம்... இதை உருவாக்கிய கதை ஆசிரியருக்கும் எங்களிடம் பகிர்ந்து கொண்ட எழுத்தாளர் அப்பாதுரை சாருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 20. கடவுளைப் போற்றாத நாளே இல்லை குரு.//
  குரு வந்தார் .என்ன அற்புதம் நிகழ்கிறது !!

  சும்மாவா சொன்னார்கள் ?

  கு என்றால் இருட்டு.
  ரு என்றால் அந்த இருட்டைப் போக்குபவர்.

  கு ஷப்தஹா அந்தகாரஹ; ரூ ஷப்தஹ தன்நிரோதகஹ என்பது சமாசம்
  //போற்றித் தள்ளிவிட வேண்டியது தான்.//
  அதுவும் சரியே:

  போற்றிப் புகழ்ந்திருந்து பொய் கேட்டு மெய்யானார்.. என்பது திருவாசகம்.

  எல்லாம் நல்ல படியா முடிஞ்சது..

  உபா கர்மா வைப் பத்தி கீதா அம்மா மிகவும் நன்றாக ஒரு பதிவு எழுதி இருக்கிறார். அதைக் கண்டிப்பா சார் படிச்சுட்டு,
  1008 காமோகரஷித் ஜபம் பண்ணிட்டு, மகா சங்கல்பம் எடுத்துண்டு, யக்ஞோபவீதம் போட்டுண்டு, காண்டரிஷி தர்ப்பணம் பண்ணி முடிச்சுட்டு, கீதா அம்மா ஆத்துலே வட பாயசத்தோட ஒரு தஞ்சாவூர் மீல்ஸ் சாப்பிட்டு விட்டு
  இன்னிக்கு காயத்ரி ஜபம். 1008 பண்ணி விடறது என்ற சங்கல்பத்தோட உட்கார்ந்துண்டு இருக்கார்.


  சத் சங்கம் கிடைச்சாச்சு.

  நம்ம ஆரம்பிக்கற பத்திரிகைக்கு ஆசிரியரும் கிடைச்சாச்சு.

  பின்ன என்னே !!

  சமஸ்த மங்களானி பவந்து.

  மாம் ரக்ஷந்து.


  சு தா.

  பதிலளிநீக்கு
 21. சார் உங்கள் இந்த ஃபிக்ஷன் அருமை சார்...கணினி தன்னிடம் உள்ளதைத்தான் எடுக்கும் என்பதைச் சொல்லி...சூப்பர்...இப்போது சிறுகதைகள் பஞ்சமாகி வருகின்றதுதான்..

  இதை நீங்கள் இங்கு சொல்லி இருக்கும் பத்திரிகைகளுக்கு அனுப்பினீர்களா?!!! நிச்சயமாகப் பிரசுரமாகும்! ஹஹஹஹ்

  நீங்கள் ஆவிக்கு அனுப்பியக் கதையை வாசித்திருக்கின்றோம்...ஆவி - ஆனந்த விகடன் இல்லை...நம்ம நண்பர் ஆவி....போட்டிக்கு நீங்கள் அனுப்பிய கதை ..நன்றாகவே இருந்தது.....போலீஸ்காரன் கதை...முடிவு இப்போது நடப்பதுவே....

  இந்தக் கதை சூப்பர் சார்...உங்கள் பழைய கதைகளைத் தேடி வாசிக்க வேண்டும் என்றும் ஆர்வம் மேலிடுகிறது....

  பதிலளிநீக்கு
 22. நான் முதலில் கீழ்கண்டவாறு எதிர்பார்த்தேன்.
  திருமுருகனுக்கு நீங்கள், அதாவது கதையின் கதாநாயகன், எழுதியது அவருக்கு பிடித்த புதுமை பித்தன் பாணியில் அமைந்து போய், அதனால் கதை புதுமை பித்தன் பாணியில் தன்னைதானே எழுதிக் கொண்டது. கல்கி, ஆவி, ஆகியவற்றின் ஆசிரியர்கள் அழைத்து சுஜாதாவின் கல்கியின் கதைகளைக் காப்பி அடித்ததாய் சொல்லப் போகிறார்கள் என்று நினைத்தேன்.
  நான் எதிர்பாராத முடிவு. நன்றாக இருந்தது.

  பதிலளிநீக்கு