2015/09/18

புத்தகம் சாராயம் கச்சாமி1. புத்தக விமரிசனங்கள்.
2. சாராயம் காய்ச்சுவது எப்படி?
3. பயணத் துக்கடா.


    திருவிழாவுக்கு நண்பர்களுடன் போகிறீர்கள். திடீரென்று பூகம்பம். கடலோரத் திருவிழா என்பதால் சுனாமியும் சேர்ந்து வருகிறது.. என்ன செய்வீர்கள்? அடித்துப் பிடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி எப்படியோ தப்பிக்கிறீர்கள். சற்று அமைதியானதும் புரிகிறது. உடன் வந்த உயிர் நண்பர் மோகனை பூகம்பத்திலோ சுனாமியிலோ விட்டு வந்த விவரம். நீங்கள் திடுக்கிடலாம். வருத்தப்படலாம். அழலாம். வேறே என்ன செய்ய முடியும்? சரி, நடந்தது மோகனின் விதி, எல்லாம் ஆண்டவன் செயல் என்று மெள்ள நடைமுறைக்கு வருவீர்கள். இல்லையா?

திருவிழாவுக்கே இப்படி எனில், நண்பர் மோகனை இன்னொரு கிரகத்தில் தனியாக விட்டு வர நேரிட்டால்? அது தான் நிகழ்கிறது. The Martian கதையில். மோகனுக்குப் பதில் மார்க் வாட்னி.

நான் சமீபத்தில் படித்த மிகச் சுவாரசியமான புதினம்.

ஏரீஸ்-3 கலனில் செவ்வாய்க்கு செல்லும் குழு அங்கே புயலில் சிக்கித் தடுமாறுகிறது. உடன் வந்த பயணி மார்க் இறந்துவிட்டாரென்று நம்பி பூமிக்குப் பயணிக்கிறது. இரண்டு செவ்வாய் நாள் பொறுத்து மார்க், 'நான் செத்துப் பொழச்சவண்டா' என்று பாடி எழுகிறார். அல்லது எழுந்து பாடுகிறார்.

பிழைச்சா போதுமா? பிழைக்க்க்க்க்க வேண்டாமா? நிலை புரிந்த மார்க் திடுக்கிடுகிறார்.

உடனடியாக பூமியுடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார். பூமிக்குப் போன கலனில் தொடர்பு சாதனங்கள் இருப்பதை உணர்ந்து மறுபடி திடுக்கிடுகிறார். பதைக்கிறார். செவ்வாய்ப் பயணத் திட்டப்படி ஏரீஸ்-4 கலன் வர இன்னும் நான்கு ஆண்டுகள் ஆகுமென்பதும், அது செவ்வாயில் தரையிறங்கும் இடம் மார்க் இருக்கும் இடத்திலிருந்து இரண்டாயிரம் மைல் தொலைவில் உள்ளது என்பதும் நினைவுக்கு வருகிறது. உயிர் வாழத் தேவையான ஆக்ஸிஜன், நீர் மற்றும் உணவு இருப்பைக் கணக்கிடுகிறார். குழுவின் ஆறு பேருக்கான உணவு இப்பொழுது தனக்கு மட்டுமே என்று கணக்கிட்டால் முன்னூறு நாட்களுக்குப் போதுமான உணவு இருப்பது புரிகிறது. குறைவாக உண்டாலும் நானூறு நாட்களுக்கு மேல் பிடிக்காது என்பது புரிகிறது.

மார்க் உயிருடன் இருக்கிறார் என்பது பூமிக்குப் புரியாது. அப்படி ஒருவேளை யாராவது கோள் படங்கள் வழியாகக் கவனித்துப் புரிந்து கொண்டால் ஒரு ஆசாமிக்காக தனிக் கலன் அனுப்பிக் காப்பாற்றுவார்களா? அனுப்பினாலும் அது வந்து சேர ஒரு வருடமாகலாம். அதைத் தவிர கார்பன் டையாக்சைடை ஆக்சிஜனாக மாற்றும் ஆக்சிஜனேடர் கருவி பழுதானால் பிழைக்கப் போவதில்லை. தண்ணீர் உற்பத்தி செய்யும் கருவி பழுதானால் பிழைக்கப் போவதில்லை. இன்னொரு புயல் வந்தால் பிழைக்கப் போவதில்லை. அனைத்து ஆபத்துகளிலிருந்து பிழைத்தாலும் பட்டினியால் சாவது நிச்சயம்.

இந்நிலையில் பொதுஜனம் என்ன செய்யும் என்பது ஒரு புறம்.. மார்க் வாட்னி எப்படிப்பட்டவர் என்பதை மெள்ளப் புரியவைப்பதே கதையின் வேர். மார்க் வித்தியாசமானவர். தன் முயற்சியில் சற்றும் மனம் தளராதவர். வாழ்ந்து காட்டுகிறேன் என்று சவால் விடுகிறார். இப்படித் தொடங்குகிறது கதை.

உருளைக்கிழங்கில் என்ன இருக்கிறது? வாயு என்று உடனே சொல்லத் தோன்றலாம். சற்று ஆராய்ந்தால் ஆச்சரியம். குவிந்த கையளவு உருளைக்கிழங்கு ஒன்றை வேகவைத்து (அல்லது அப்படியே) உண்டால் சுமார் நூறு கேலொரிகள் கிடைக்கும். நாளொன்றுக்குத் தேவையான கேல்சியம் அளவில் பாதி கிடைக்கும். ஒரு வாழைப்பழம், கையளவு கீரை இரண்டையும் சாப்பிட்டால் கிடைக்கும் பொடேசியத்தை விட அதிகமாக உருளைக்கிழங்கில் கிடைக்கிறது. உருளைக்கிழங்கு தோலில் ஒரு நாளைக்குத் தேவையான பைபரில் முப்பது சதம். அதைத்தவிர பி6, இரும்புச்சத்து, மெக்னீஸியம் போன்றவை... முக்கியமாக அலர்ஜிகள் மற்றும் மனச்சோர்வு குறையக் காரணமாகும் ஏன்டி-ஆக்ஸிடன்டுகள்... எல்லாம் உள்ளங்கை சைஸ் உருளைக்கிழங்கில் கிடைக்கிறது. (ஸ்..யப்பா.. தமிழ் கலக்காமல் ஆங்கிலத்தில் எழுதுவது சிரமம்! ;-)

பட்டினியால் சாகாதிருக்க உணவு தேவை. ஓரளவுக்கு எல்லாச்சத்தும் அடங்கியதான உணவு, எளிதில் தயாரிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும் இல்லையா? மார்க் வாட்னி தேர்ந்தெடுத்த உணவு? உ.கி.

உருளைக்கிழங்கை எப்படிப் பயிர் செய்வது? செவ்வாயில் உணவு உற்பத்திக்கான சூழல் இல்லையே? மனம் தளரா மார்க் திட்டமிடுகிறார். செவ்வாய் மண்ணை பூமி மண்ணுக்கு இணையாக மாற்றுகிறார். எப்படி என்று புத்தகத்தில் படிக்கவும் (மூக்கை மூடிக்கொண்டு). 'science the shit out' என்ற பஞ்ச் வரி இந்தப் புத்தகத்தினால் பிரபலமாகப் போகிறது.

ஏற்கனவே செவ்வாயில் விடப்பட்ட கலனான பாத்பைண்டர் இருக்கும் இடத்தைத் தேடிப்பிடிக்கிறார். அதை வைத்துக் கொண்டு பூமியுடன் தொடர்பு கொள்கிறார்.

இடையே பூமியில் படா ரகளை. இறந்து போன மார்க் வாட்னி ஒரு ஹீரோ என்று அத்தனை அமெரிக்கரும் புகழ, நேசாவில் வேலை பார்க்கும் மின்டியெனும் மங்கை மார்க் உயிருடன் இருப்பதை ஓசைப்படாமல் கண்டுபிடிக்கிறார். கண்டுபிடித்ததும் ஓசையெழுப்புகிறார். நேசா இயக்குனரான வெங்கட் கபூர் (ஆமாம்!) என்பவரிடம் விவரங்களைச் சொல்கிறார். வெங்கட் மிகுந்த அறிவுடையவர். ஆற்றல் உடையவர். மார்க் வாட்னி பூமிக்குத் திரும்ப முக்கியக் காரணமாகிறார். விவரங்கள் புத்தகத்தில்.

மார்க்கை அம்போவென்று விட்ட குழுவுக்கு ஒருவழியாக விவரம் தெரிகிறது. குழுவுக்கு விவரம் தெரியக்கூடாது என்று தீர்மானமாக இருந்த வெங்கட் கபூரை ஏமாற்றி மார்க் உயிருடன் இருப்பதை குழுவுக்குத் தெரியப்படுத்துகிறார் மிச் எனும் இன்னொரு அதிகாரி. குழு அதிர்கிறது. மார்க்கைக் காப்பாற்ற மீண்டும் செவ்வாயை நோக்கிப் பயணிக்கிறது கலன். க்ரேவிடி அஸிஸ்ட் எனும் அற்புதமான எளிய உத்தியைப் பயன்படுத்தி நேசாவை எதிர்த்துக் கொண்டு நண்பனைக் காப்பாற்ற விரைகிறது. அவர்கள் செய்கையில் கோபம் கொண்டாலும் நேசா.. நேசா மட்டுமல்ல.. சைனா.. உலகமே ஒருங்கிணைந்து உதவுகிறது. க்ளைமேக்ஸில் இன்னும் சில அதிரடிகள். மார்க் ஒருவழியாக பூமிக்குத் திரும்பும் கலனில் ஏறிக்கொள்கிறார். சுபம்.

    பிலியன் கணக்கில் செலவு செய்து மார்க் வாட்னியை மீட்கிறார்கள். ஏன்? ஒரு தனிமனிதனை மீட்க ஏன் இத்தனை வேகம்? இத்தனை ஆர்வம்? இத்தனை முயற்சி? இத்தனை கூட்டணி? இத்தனை ஒத்துழைப்பு? எதற்காக? ஒரு உயிர் போனால் என்ன குறைந்து விடப்போகிறது? வீட்டிலும் வெளியிலும் பக்கத்து வீட்டுடனும் நாட்டுடனும் சண்டை போட்டு உயிரைத் துச்சமாகக் கருதும் நாம் செவ்வாயில் சிக்கிக் கொண்ட ஒரு உயிருக்காக ஏன் அத்தனை செலவு செய்து சிரமப்படுகிறோம்?

கதையின் சாகசங்களுக்கு அப்பால் மனிதம் எனும் மகத்துவத்தை உணரச் செய்யும் புத்தகம். நானூற்றுச் சொச்சப் பக்கங்கள். முதல் பக்கத்தில் தொடங்கிய விறுவிறுப்பு இடையில் சிறிது தொய்ந்தாலும் கடைசிப் பக்கம் வரை மறையாமல் மார்க் எப்படி பூமிக்குத் திரும்புகிறார் என்பதை அறியத் துடிக்கும் நம் வேகத்துக்கிணையாக எழுதப்பட்டிருக்கிறது. பிரமாதம்! Andy Weirன் முதல் புத்தகமாம்! பாராட்டுக்குரியவர்.

கதையைப் படமாக்குகிறார்கள். அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. மேட் டேமன் மார்க் விட்னியாக வருகிறார். வெங்கட் கபூர் யாரென்று பார்த்தால் ச்வெடில் எய்ஜ்போர் எனும் நைஜீரியர். ஏன்? ஹாலிவுட் காரர்களுக்கு ஒரு இந்திய நடிகர் கிடைக்கவில்லையா? ஹாலிவுட்டுக்கு இணையாகப் படமெடுக்கிறோம், உலகநாயகன், அது இது என்று சங்கரரையும் கிங்கரரையும் தலையில் தூக்கி வைக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு இது முகத்தில் அடித்தாற் போல் இல்லையோ? இந்திய நடிகர்களுக்கு உலக அப்பீல் இல்லையா? நிச்சயம் ஹாலிவுட் செய்த பிழை. இதற்காகவே இந்தப் படத்தைப் பார்ப்பதில்லை என்றுத் தீர்மானித்திருக்கிறேன். இருந்தாலும் புத்தகத்தில் வரும் காட்சிகளை, எழுத்தாளனின் கற்பனையை, எப்படிப் படமாக்கியிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆவல். முக்கியமாக ஒரு காட்சியை. தீப்பற்ற வேண்டிய அவசியத்தில் மார்க் அங்கேயும் இங்கேயும் தேடி கடைசியில் மரத்தினாலான ஒரு பொருளைக் கண்டுபிடிக்கிறார். குழுவில் யாரோ விட்டுச் சென்ற சிலுவை. சீவுகிற கத்தியை ஒரு கையில் எடுத்துக் கொண்டு சிலுவையைப் பற்றுகிறார் மார்க்.

சில மாதங்களுக்குப் பின் புத்தகத்தை மீண்டும் படிப்பேன் என்று நினைக்கிறேன்.

    மற்றொரு புத்தகம் ஜான் க்ரிஷம் எழுதிய நிலக்கரி சுரண்டல்காரர்கள் பற்றிய கற்பனையற்றக் கதை. கதையற்றக் கற்பனை. நூற்று எழுபதாவது பக்கத்தில் கதையைத் தொடங்கி வாசகர்களை அவமதிக்கிறார். வளவளாவுக்கு ஒரு அளா வேண்டாமா? மேல் விவரங்களை அடுத்த வரிகளில் படிக்கலாம்.

    ரு மதியம் சீமைச் சாராயம் காய்ச்சினேன். பீர். பொழுது போகவில்லை. வாட் டு டூ?

கல்லூரி நாட்களில் முதல் அனுபவம். மேலாண்மைப் படிப்பில் beer game என்று ஒரு strategy பயிற்சி உண்டு. இந்தக் காலத்தில் அதைவிடக் கொம்பன் பயிற்சியெல்லாம் உள்ளன என்றாலும் அந்தக்காலத்தில் beer game மிகப் பிரபலம். 'சும்மா பயிற்சியில் இறங்காமல் சிறிது அசலுக்கும் ஈன்றால் என்ன?' என்ற எண்ணத்தின் விளைவு, நானும் உடன் படித்த இருவரும் பீர் காய்ச்சினோம். இன்னொரு குழு வைன் காய்ச்சியது. பயிற்சிக்கும் அதற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. மிகவும் சுமாராகத்தான் வந்தது. கையில் இருந்த காசை அதில் செலவழித்து விட்டதால் ஒரு மாதம் போல் இரண்டையும் குடித்துத் தீர்த்தோம். அந்த வயதில் பீர் வைன் எதுவானால் என்ன - சிங்கில் மால்ட் ஸ்காச்சைத் தவிர பிற சோமங்களைத் தொடத் தயங்கும் முதிர்ந்த குடிமகனாவதற்கு முன் - கிடைத்ததைக் குடித்த பருவம். கோல்டன் டேஸ்.

அதற்குப் பிறகு ஒருமுறை விஸ்கி காய்ச்சலாம் என்று பிரிடிஷ் நண்பர் ஒருவருடன் முயற்சி செய்து தண்டச்செலவைப் பாதியிலேயே கைவிட்டோம். நண்பர் குருடாகாமல் பிழைத்தது அவரின் சமயோசிதம்.

சாராயம் காய்ச்சுவது என்ன பெரிய வித்தை? சைக்கிள் விடுவது, நீந்துவது.. போலத்தானே? கற்றுக் கொண்டால் மறந்தா விடும்? ஒன்றை செய்யத் துணிந்தால் அதை அன்றே செய்வது தமிழர் மரபில்லையோ? உடனே அதற்கான பொருட்களை வாங்கினேன்.

சாராயம் காய்ச்ச மூடியுடன் கூடிய ஒரு அண்டா (குண்டா என்றும் சொல்லலாம்), கொஞ்சம் பார்லி மால்ட், சர்க்கரை, ஐம்பது கிராம் யீஸ்ட், சுத்தம் செய்யும் உப்பு, ஐந்து ஒரு லிட்டர் பாட்டில் நல்ல தண்ணீர்... எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு செய்முறையை குறிப்பாக எழுதிக்கொண்டேன். ஒருவேளை சாராயம் நன்றாக வந்தால் எங்கள் பிளாக் திங்கட்கிழமை பதிவொன்றில் போடச் சொல்லலாம் பாருங்கள்?

சுத்தம் செய்ய ஒரு அகண்ட பாத்திரம், காய்ச்சுவதற்காக ஒரு அகண்ட வால்பாத்திரம்.. ஆக இரண்டு பாத்திரங்கள் தேவை.

சாராயம் காய்ச்ச நல்ல தண்ணீர் முக்கியம். பெரியே வகை மேல்தட்டுத் தண்ணீர் மிகவும் உசிதம். இல்லையெனில் அக்வாபினா, பிஸ்லெரி. தெளிந்த சுத்தமான தண்ணீர் அவசியம்.

அகண்ட பாத்திரத்தில் ஒரு பாட்டில் தண்ணீர் ஊற்றி மிதமாகச் சுட வைக்க வேண்டும். அதில் ஒரு பாகெட் சுத்தம் செய்யும் உப்பைக் கலக்க வேண்டும். அந்தக் கலவையில் காய்ச்சுவதற்கான வால்பாத்திரம், சாராய அண்டா, கிளறும் கரண்டிகள் எல்லாவற்றையும் சுத்தம் செய்ய வேண்டும்.

சாராய அண்டாவில் இரண்டு பாட்டில் நல்ல தண்ணீர் ஊற்றித் தயாராக வைக்க வேண்டும்.

வால்பாத்திரத்தில் ஒரு பாட்டில் நல்ல தண்ணீரி ஊற்றி, அதில் மால்ட், சர்க்கரை இரண்டையும் கலந்து நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். பாகு போல் பொங்கி வரும் வேளையில் இறக்கிவிட்டு நன்றாகக் கிளற வேண்டும்.

கிளறிய மால்ட் பாகை சாராய அண்டாவில் இருக்கும் இரண்டு பாட்டில் தண்ணீருடன் கலக்க வேண்டும். பலமாகக் கிளற வேண்டும். பாகு அண்டாவின் பக்கவாட்டிலோ அடியிலோ பிடிக்காமல் தண்ணீரில் நன்றாகக் கலக்கும்படி அல்வா கிளறுவது போல் கிளறவேண்டும். அல்வா கிளறத் தெரியாதவர்கள் அல்லது பலமற்ற கணவர்கள் மனைவிகளின் உதவியை நாடலாம், தவறில்லை. ராமநவமிக்கு பாகுநீர் செய்வதாக கப்ஸா விடலாம். நம்பி விடுவார்கள். பக்தியை மெச்சி வேறு ஏதாவது பரிசு கொடுத்தாலும் கொடுப்பார்கள். ஓகே.. நன்றாக கிளறியதும் மிச்சமிருக்கும் இரண்டு பாட்டில் தண்ணீரையும் ஊற்றி இன்னொரு கிளறல் கிளறியதும், யீஸ்ட் பாகெட்டைப் பிரித்து பாகுநீரில் இடமிருந்து வலமாகவும் மேலிருந்து கீழாகவும் தூவ வேண்டும். பிறகு அண்டாவை இறுக்கமாக மூடி, அதிகம் வெயில் படாத இடமாகப் பார்த்து ஒதுக்கி வைக்க வேண்டும். பாட்டில்களை மூடியுடன் அருகிலேயே பத்திரமாக வைத்துக் கொள்ளவும். காய்ச்சிய சாராயத்தை ஊற்றி வைக்கத் தேவைப்படும். (வாயில் ஊற்றிக் கொள்ளுமுன்).

இரண்டு வாரம் பொறுக்க வேண்டும். அதாவது பொறுமையாக இருக்க வேண்டும்.

ஓ.. மறந்தே போனது. முப்பது வரிகளுக்கு முன்பு அண்டா வாங்கிய போது குழாய் வைத்த அண்டாவாகப் பார்த்து வாங்கியிருந்தால் அடுத்த வரிகளில் வசதியாக இருக்கும். இல்லையென்றால் ஒரு பெரிய துருப்பிடிக்காத கரண்டியைச் சுத்தம் செய்து தயாராக வைத்துக் கொள்ளவும்.

சாராய அண்டாவின் மூடியைத் திறந்து அற்புதமான பீர் மணத்தை ஒரு முறை இழுத்துக் கொள்ளவும். பிறகு குழாயைத் திறந்தோ கரண்டியினாலோ ஒவ்வொரு பாட்டிலையும் மூடியிலிருந்து முக்கால் இஞ்ச் வரை நிரப்ப வேண்டும். ஒவ்வொரு பாட்டிலிலும் அரை ஸ்பூன் நல்ல சர்க்கரை சேர்க்க வேண்டும் (நுரை மிகப்பொங்க பீர் வேண்டுமென்றால் ஒரு ஸ்பூன் சர்க்கரை). பாட்டிலை மூடியினால் இறுக்க மூடி ஒன்றிரண்டு முறை மேலும் கீழுமாக அசைக்க வேண்டும். பிறகு பாட்டில்களை பழையபடி வெயில் படாத இடத்தில் வைக்க வேண்டும்.

மறுபடி இரண்டு வாரம் பொறுக்க வேண்டும். அதாவது பொறுமையாக இருக்க வேண்டும். பூமி ஆள முடிகிறதோ இல்லையோ, பொறுத்தார் பீர் ஆள்வார்.

அவ்வளவு தான். உயர் ரக மேலை நாட்டு சாராயம் தயார். பீர் பாட்டில்களை குளிர்ப்பெட்டியில் வைத்து வெயிலுக்கு இதமாகவோ அல்லது வெத்துக் காரணமாகவோ இனிதே பருகலாம்.

அரசு விளம்பரங்களையும், முரளிதரன் மற்றும் தில்லையகத்துக்காரர்கள் எழுதிய பதிவுகளையும் மறந்து விட வேண்டாம். குடி குடியைக் கெடுக்கும்!

    ந்த வருட வனவாசம் இதமாக இருந்தது

எத்தனையோ வருடங்களாக எண்ணியிருந்த பயணங்களில் ஒன்று இந்த வருடம் நிறைவேறியது. ஒலிம்பிக் நேஷனல் பார்க், போர்ட் ஏஞ்சலீஸ், சிக்வியம் பகுதிகளில் சில நாட்கள் தங்கினேன். குடும்பத்துடன். குடும்ப வனவாசங்கள் பொதுவாக ஒரு சிலருக்கு மட்டும் நிறைவைத் தரும். இது எல்லோருக்கும் நிறைவைக் கொடுத்தப் பயணம்.

அமெரிக்க வாஷிங்கடன் மாநிலம் வடக்கு ஓரம்.. கண்ணெதிரே கேனடா தெரியும் இடம். ஒலிம்பிக் மலைத்தொடர் (பிரம்மாண்டமான மலைகள்).

இந்தப் படங்களை நான் எடுத்ததாகச் சொன்னால் பொய். ஆனால் இந்த இடங்கள் மனதின் அத்தனை கற்பனையுணர்வுகளையும் சுண்டியிழுத்தன என்பது மெய்.

படங்கள் போலவே இருந்தன இடங்கள். காட்டு மரங்களிடையே நடந்த போது எங்களுக்கு இருபதடி அண்மையில் ஒரு பெரிய காட்டுமான் (elkக்குத் தமிழ் தெலியுது) வேகமாக வந்து அப்படியே திடுக்கிட்டு நின்றது. நான் திடுக்கிட்டேன். என் மகன் திடுக்கிட்டான். பெண்ணோ சாதாரணமாக படமெடுத்து இன்ஸ்டெக்ரேம் இட்டாள். பெண்கள்!

அமெரிக்காவையும் கேனடாவையும் இணைக்கும் வான் டி பூகா நீர்நிலையை ஒட்டி ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கினோம். தினம் கடலோர சூரிய உதயம். மலைத்தொடரில் மறைவு. கண் கொள்ளுமட்டும் ரசித்தக் காட்சிகளில் சிலவற்றை படமாக எடுத்து (ஏதோ சுமாராக வந்திருக்கிறது) இங்கே சேர்த்திருக்கிறேன்.

உதயம் இரண்டு, வீட்டின் பின்கட்டுப் பார்வையில். அதிகாலை ஐந்து மணியளவில்.
திடீரென்று தோன்றிய பெரும்படகு

கல்லெறியும் தொலைவில் இருக்கிறதே என்று ஒரு நாள் கேனடா போனோம். போர்ட் ஏஞ்சலீஸ் துறைமுகத்திலிருந்து கேனடாவின் விக்டோரியா நகருக்கு ஓடப்பயணம். வழியில் ஒரு திமிங்கலம் பார்த்தோம். குட்டித் திமிங்கலம். திமிங்கலக் குட்டி? ஓடத்துக்குப் போட்டியாக நீந்திக் குதித்துத் தாவி சில மைல்களுக்கு எங்களுடன் வந்தது. எல்லோருக்கும் ஒரே மகிழ்ச்சி. என்னால் படம் எடுக்க முடியவில்லை. இருநூறு அடி போல் தள்ளியே வந்ததால் செல்போன் கேமராவில் தெரியவேயில்லை.

ஆனால் விக்டோரியா புஷ்சார்ட் தோட்ட வளாகத்தில் எடுத்த இந்தப் படம் மிகுந்த நிறைவைக் கொடுத்தது.

பயணிகளுக்காகக் காத்திருக்கும் படகுத்துறை.

அமெரிக்காவில் இருந்தால் அவசியம் தங்கிப் பார்க்க வேண்டிய இடங்கள். மின்னஞ்சல் அனுப்பினால் விவரங்கள் தருகிறேன். மறக்க முடியாத பயணமாக அமையும் என்று நம்பலாம்.

2015/09/02

பாடல் பெற்ற பதிவர்


சூரியெனும் சித்தரிவர் சிந்தனையில் புத்தரிவர்
வாரியெழும் பின்னூட்டப் பாற்கடல் - சீரிளையோன்
பல்மொழிப் பல்கலைப் பாட்டன் பதிவுலக
நல்வினையின் மொத்தப் பலன்.
    வயது என்பது ஒரு எண்ணிக்கை மட்டுமே என்பதன் ஒட்டு மொத்த பொருளுக்கான உருவம் சூரி அவர்கள். ஆத்திகமும் எழுதுகிறார், ஆன்மிகமும் எழுதுகிறார், அலேக் விஷயமும் எழுதுகிறார், அப்பள சமாசாரமும் எழுதுகிறார். இவரின் பன்மொழிப் பிடிப்பும் பரந்த கலை ரசனையும் என்னை மிகவும் கவர்ந்த விஷயங்கள். கவராத விஷயம்? ஹிஹி.. எதுவும் இல்லை.அடுத்து பாடல் பெறும் பதிவர்: சீனு

முன்னர்:

ஜோதிஜி
கீதா சாம்பசிவம்
பாலகணேஷ்
சிவகுமாரன்
ஹுஸைனம்மா
மோகன்ஜி
திண்டுக்கல் தனபாலன்
மெட்ராஸ் தமிழன்
ராமலக்ஷ்மி