2015/03/28


938


    மைகேல் வீட்டு மாதாந்திர விருந்துக்கு வழக்கம் போல் என் மனைவியின்றித் தனியாகப் போயிருந்தேன். என் மனைவி என்னுடன் வரமாட்டாளே தவிர, மைகேலின் மனைவி மேரி வீட்டில் இல்லாத பொழுதறிந்து வார மதியங்களில் அவனைச் சந்திக்கப் போவதை மறைவாக நின்று கவனித்திருக்கிறேன். கேட்டால் சும்மா பேசிக்கொண்டிருந்தேன் என்பாள்.

பேசட்டும். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதில் பெண்களுக்கு இன்னொரு ஆடவனுடன் பேச உரிமை இல்லையா என்ன? இல்லை என்று சொன்னால் யாராவது கேட்கத்தான் போகிறார்களா? மக்களின் அதிபர் ஐஸன்ஹோவர் அத்தனை வழிமொழிந்தும் ஆதரவு தந்தும் இந்த வருடத் தேர்தலில் நிக்ஸன் தோற்பது சாத்தியம் என்றால், அதற்கு இவள் போல் நாணமின்றிக் கூசாமல் ஆடவருடன் அரட்டை அடிக்கும் பெண்களே காரணம். அத்தனை பெண்களும் இந்தக் கள்ளச் சாராயப் பரம்பரை ஜான் கென்னடியைப் பார்த்து உருகு உருகென்று உருகி.. சே.. காலம் கெட்டு வருகிறது. சும்மா பேசுகிறாளாம். பேசட்டும். இவளுக்கும் இக்கதைக்கும் இப்போதைக்கு இம்மித்தொடர்பும் இல்லையென்பதால் இத்தோடு. (இயில் தொடங்கும் வேறு சொல் கிடைக்கவில்லையென்பதாலும்).

    மைகேல் என் பள்ளி நண்பன். எங்கள் வாழ்க்கைப் பாதைகள் வேறு என்றாலும் அவ்வப்போது சந்திப்பது இது போன்ற மாதாந்திர விருந்துகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் மட்டுமே. நான் கூலிக்கு மாரடிக்கும் ஹைஸ்கூல் ஆசிரியன். மைகேல் புதுப் பணக்காரன். செல்வத்தையும் செல்வாக்கையும் காட்ட விரும்புகிறவன். வீட்டு விருந்துக்கு அழைத்தால் முடிந்தவரை ஏற்றுக்கொண்டு விடுவேன்.

மைகேலின் வீடு அழகாக இருக்கும். நார்வுட் மெயின் ரோடின் சரிவிலிருந்து விலகிச் சட்டென்று ஐம்பது அடி உயரும் மேட்டுப்புறத்தில் ஐந்து காணி நிலம் வாங்கியிருந்தான். ஆங்கே தோற்றத்தில் வலியதாய் தூணில் அழகியதாய் நன்மாடங்கள் துய்ய நிறத்தினவாய் ஓர் மாளிகை கட்டியிருந்தான். மாளிகை கடந்தப் பின்புறத்திலே நாலு மனையளவு நற்கேணியில் அல்லியும் அன்னங்களும் மிதக்க விட்டிருந்தான். பத்துப் பனிரெண்டு பெர்ச் செரி மேபில் மரங்களில் கூடுகட்டிக் கத்துங் குயிலோசை காதில் விழச் செய்திருந்தான். தோட்டத்தை ஒட்டிய பைன் மரத்தோப்பின் பலநூறு மரங்களைத் தழுவி வரும் இளந்தென்றல் வந்திருந்தோர் சித்தம் குளிரச் செய்திருந்தான். பணமே பராசக்தி.

பாஸ்டன் நகர நெரிசல் கூச்சல் மாமிச மணம் நிறைந்த என் ஒண்டுவீட்டில் கிடைக்க வாய்ப்பேயிராத விஸ்தாரமான புறநகர் அமைதி. அத்தனை அமைதியையும் அழகையும் அனுபவிக்க விரும்பி, ஆறு மணி விருந்தென்றாலும் ஐந்தரைக்கே போய்விட்டேன். மைகேலின் சமையலறையிலிருந்து நானே எடுத்துவந்தப் பொன்னிற ஷ்லிட்ஸ் உயிர்மீட்பியை உறிஞ்சியபடி பின் கட்டில் இருந்த சாய்வு நாற்காலிகள் ஒன்றில் அமர்ந்து அழகின் சிரிப்பை அளந்து கொண்டிருந்தேன்.

திடீரென்று அருகே நிழலாடுவதைக் கவனித்துத் திரும்பினால்.. வினிப்ரெட்! மைகேலின் மிக அழகான ஒரே பெண். கோடை கழிந்ததும் யேல் ஹார்வர்ட் என்று நிச்சயம் ஏதாவது உயர் கல்லூரியில் படிக்கப் போவாள். சுட்டி. எனினும் வெகுளி. பயந்த சுபாவம்.

"இயற்கை மிக அழகு இல்லையா, ஜே அங்கில்?" என்றாள்.

"Dark is the ground; a slumber seems to steal o'er vale, and mountain, and the starless sky.
Now, in this blank of things,
a harmony, home-felt, and home-created,
comes to heal that grief for which the senses still supply fresh food
"
என்றேன், சற்றே வலப்புறம் சாய்ந்த சொற்களால்.

"ஐல் டெல் யு அங்கில். இது வந்து கீட்ஸ்.. இல்லை.. நாட் ஹிம்.. முத்தம் என்கிற வார்த்தை இல்லாமல் எழுதத் தெரியாது அவருக்கு... ஷெல்லி எழுதினாரா? நோ.. வெய்ட்.. ஓவ்ர் வேல் அன்ட் மௌன்டென்.. ஹோம் க்ரியேடட் ஹார்மனி.. வர்ட்ஸ்வர்த் போல.. நிச்சயம் வர்ட்ஸ்வர்த், இல்லையா?"

பிரமித்தேன். "வெரி குட் வினி. நல்ல வேளை உங்கப்பன் போல பந்தயம் கட்டாமல் இருந்தியே?"

சிரித்தாள். "கனிந்த மனதில் மட்டுமே விளையும் ஆயிரங்காலப் பயிரல்லவா கவிதை? எழுத்துப் பகடைகளை உருட்டி, விழும் சொல் சேர்த்து வெல்லும் சூதாட்டமில்லையே இலக்கியம்? போய்ட்ரி இஸ் எ டிலைட், அங்கில்."

"well said, my phantom of delight" என்றேன்.

புதிதாக எழும்பிய பிறைநிலவெனப் புன்னகைத்தாள். "என்ன அங்கில்? இன்னிக்கு வர்ட்ஸ்வர்த் மாலையா?" என்றாள். தொடர்ந்து இனிமையான குரலில்,
"She was a phantom of delight when first she gleam'd upon my sight;
A lovely apparition, sent to be a moment's ornament.."
என்று என்னுடன் சேர்ந்து பேல்செட்டோ தொனியில் சில வரிகள் பாடினாள். என் உள்ளம் நிறைந்தது. இவள் என் மகளாக இருந்திருக்கக் கூடாதோ?

"அப்பாவுக்கு இலக்கியத்தில் மனமில்லை. என்னைச் சட்டம் படிக்கச் சொல்கிறார்"

"உன் அப்பா அதிகம் பேசுகிறவன். அவனுக்கு சட்டம் பிடிக்கும். பெண்ணே, உனக்கு எது பிடிக்கிறதோ அதைச் செய். இருந்தாலும் இந்தக் காலப் பெண்கள் நிறைய பேசுகிறார்கள். லிபரேடட் ஜெனரேஷன். இங்கிலாந்தில் தேச்சர் என்று ஒரு பெண்மணி துணிச்சலோடு ஆண் செனடர்களுக்கு இணையாக என்னவெல்லாமோ செய்கிறார், கவனித்தாயோ? ஒரு நாள் இங்கிலாந்துக்கே பிரதமராக வருவார் என்கிறார்கள். போகிற போக்கில் அமெரிக்காவில் பெண் அதிபர் வரும் நாள் தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது. உன் அப்பா பேச்சையும் கேள். உன் விருப்பத்தையும் விட்டுக் கொடுக்காதே. பி ஸ்மார்ட் மை சைல்ட்" என்றேன். "ஸ்டடியில் விளக்கு எரிகிறதே? மைகேல் வந்துட்டானா?"

"ஓ.. அதுவா.. மே பி அங்கில் ஜோன்ஸ். ஹால்ல உக்காந்திருந்தார். ஒருவேளை ஸ்டடிக்குள்ள போயிருந்தா ஸ்விச் ஆன் செஞ்சிருக்கலாம்... நீங்க வரப்ப இருந்தாரே, பார்க்கலியா?"

"நோ.. நான் உங்க வீட்டுக்குள்ள வந்ததும் நேரா சமையலைறைக்குப் போய்.." கையிலிருந்த பீர் புட்டியைக் காட்டினேன்.

"அம்மாவுக்கு பூக்கட்டு வாங்கிட்டு வரதா சொல்லிட்டு அவசரமா போனார்"

வெறும் கையை வீசிக் கொண்டு வந்தேன் என்பது இடித்தது. டூ லேட். "நான் எதுவும் வாங்கி வரவில்லை" என்றேன்.

"ஓ அங்கில்.. கபடமில்லாத உங்க மனமே ஒரு பரிசு தானே?"

"அப்படியா?"

"என்ன செய்ய? இதெல்லாம் தானாகத் தோணிச்சுனா சரி.. தோணலின்னா நல்லெண்ணமே பரிசுனு சொல்லி சமாளிக்க வேண்டியது தான்.." என்று மென்மையாகச் சிரித்தாள். "ஜஸ்ட் கிடிங் அங்கில். நீங்க நீங்களா இருங்க. அம்மா அடிக்கடி சொல்வார். நீங்கள் ஒரு நேச்சுரல் ஜென்டில்மேன் என்று. ஆர் யூ ரியலி, அங்கில்?" என்று என் தோளில் தட்டிக் கண் சிமிட்டினாள். "யு நோ... ஜென்டில்மென் கேன் பி போரிங்". சிரித்தபடி எழுந்தாள். "ஓ.. அப்பா வந்துட்டாரு.. ஸீ யு இன்ஸைட். டின்னருக்கு டேபில் செட்டப் ஹெல்ப் பண்ணனும்" என்றபடி காற்றில் பறக்கும் பூவிதழ் போல் காணாமல் போனாள்.

ஷ்லிட்ஸை விழுங்கியபடி வானைப் பார்த்தேன். காதலியின் ஆடை போல் மெள்ளச் சரிந்து மாலையின் அழகைக் காட்டி அழகூட்டி அடங்கப் பார்த்தது பரிதி. வீசியது காற்று. திண்குன்றைத் தூள் தூளாகச் செயினும் ஓர் துண்துளி அல்லிப் பூவும் நோகாது நுழைந்து நீரில் அளைந்து என்னை அணைத்தது காற்று. சிலிர்த்த்து. சிறிது நேரம் அமர்ந்து அந்திமாலை அழகி இருள் காதலனுடன் இணைவதைக் காணவும் நாணவும் இருவிழிச் சிறகு கொண்டு இதயம் எழும்பியது. உள்ளிருந்து என் பெயரை அழைப்பது கேட்டது. உள்ளே போனால் வழக்கம் போல் மைகேலும் ஜோன்ஸும் ஏதாவது வாதம் செய்வார்கள். பந்தயம் கட்டுவார்கள். கடைசியில் போதை மிகுந்துச் சிரிப்பும் கூச்சலும் அறையை நிறைக்கும். இயற்கையின் அமைதியை இன்னும் கொஞ்சம் உள்வாங்கத் தீர்மானித்தேன்.

ஐந்தாவது முறையாக என் பெயரைச் சொல்லி அழைத்ததும் எழுந்தேன். விட்டில் மின்மினி கொசு என்று இயற்கையும் கொஞ்சம் தொந்தரவு தந்தது. போதும். உழைத்துக் களைத்த மக்களை, உயிர்க்கூட்டத்தை, ஓடியே அணைப்பாய். உன்றன் மணிநீலச் சிறகுகளால் மூடுவாய். உறக்கமெனும் அருமருந்தால் எம் அயர்ச்சி களைவாய். இருளே, அன்பின் முழக்கமே, உனக்கு நன்றி! நன்றி!. மெள்ள உள்ளே சென்றேன்.

    "என்ன அங்கில்.. ஐந்தாறு தடவை கூப்பிட்டேனே?" என்றாள் வினி. புன்னகைத்தேன். என்னருகே வந்த மேரி, பண்புக்கு என்னைக் கட்டி கன்னம் உரசி "ச்" என்றாள். ஹோவென்று அதிரச் சிரித்த மைகேல் என்னைக் கட்டினான். "பெக்கி எப்படி இருக்கிறாள்?" என்றான். "நலம்" என்றேன். என் மனைவி எப்படி இருக்கிறாள் என்று மேரி கேட்கவில்லை, மைகேல் கேட்கிறான். உள்ளறையில் ஜோன்ஸின் தலை தெரிந்தது. சட்டென்று "ஜோன்ஸ் என்ன செய்கிறார்? அது என்ன கலர் கலரா வந்துட்டுப் போவுது?" என்றேன்.

"ஓ.. யு மஸ்ட் ஸீ. உள்ளே போகலாம் வா" என்றான் மைகேல். "கலர் டிவி வாங்கியிருக்கிறேன். இதுதான் மார்கெட்டில் பெரிய டிவி. முழுதாகப் பத்தொன்பது இஞ்ச் ஸ்க்ரீன். ஸ்டிரியோபோனிக் சவுன்ட். சேனல் வால்யூம் கலர் கான்ட்ரேஸ்ட் என்று மானாவாரிக்கு டயல்கள். பூதாகாரமாக இருக்கிறது டிவி. வந்து பாரேன்? எல்லாம் கலரில் தெரிகிறது. ஜான் கென்னடியின் பல் மஞ்சள் கூடத் துல்லியமாகத் தெரிகிறது" என்று என்னைத் தள்ளாமல் தள்ளிச் சென்றான். "எல்லாரும் சேர்ந்து எட் சலிவன் ஷோ பார்க்கலாம்".

லிவிங் ரூமின் புராதன தேக்குமர நாற்காலி சோபாக்கள் கண்ணாடி அலமாரிகள் அரேபியக் கம்பளங்கள் வேலைப்பாடு மிகுந்த சுவர் அலங்காரங்களின் இடையே வெஸ்டிங்ஹவுஸ் கம்பெனியின் புதுப்படைப்பு பளபளவென்று மின்னியது. மைகேல் தனியாக லவ் ஸீட் ஒன்றில் அமர்ந்தான். பரந்த சோபாவில் ஜோன்ஸும் வினியும் மேரியும் அமர்ந்தார்கள். அதையடுத்த சொகுசு மெத்தை மர நாற்காலியில் நான் உட்கார்ந்தேன். டிவிக்கும் எங்களுக்கும் இடையே இருந்த சிங்கத்தலை செதுக்கிய இரண்டடி உயர தேக்குமர வட்ட மேசையில் பாப்கார்ன் சிப்ஸ் பழத்துண்டுகள் என்று வரிசையாகக் கண்ணாடித் தட்டுகள்.

வினியின் தோளில் போடுவது போல் உயர்ந்த ஜோன்ஸின் கைகளை மேரி நாசூக்காகத் தட்டி விடுவதைக் கவனித்தேன். வினியின் பார்வையில் தொனித்த "என்னைப் பாதுகாத்துக் கொள்ள எனக்குத் தெரியும் அம்மா" செய்தியைப் புரிந்து மனதுள் சிரித்தேன்.

சலிவன் ஷோ தொடங்க பத்து நிமிடங்களுக்கு மேலாகும் போலிருந்தது. எலி பாஷாணம் பற்பசை என்று ஏதோ விளம்பரங்கள் ஓடிக் கொண்டிருந்தன. "கொஞ்சம் விளையாடலாமா? ஷோ தொடங்க நேரமாகும்" என்றான் ஜோன்ஸ்.

"என்ன விளையாட்டு?" என்றாள் வினி.

"வெல்.. ஹவ் அபவுட் எ ஸ்மால் வேஜர்?"

மைகேல் நிமிர்ந்தான். பந்தயம் கட்டத் தொடங்கிவிட்டார்களே என்று சலித்தேன். ஜோன்ஸைக் கவனித்தேன்.

சுற்றுமுற்றும் பார்த்த ஜோன்ஸ் எழுந்து ஒரு பென்சில் டப்பாவை எடுத்து வந்தான். பென்சில்களை அப்புறப்படுத்தி காலியான டப்பாவை நடுவில் வைத்தான். எங்களைப் பார்த்தான். "இதோ இந்தத் தட்டுல எத்தனை பாப்கார்ன் இருக்குதுனு சொல்லணும். ஒவ்வொருத்தரும் மூணு நம்பர் சொல்லலாம். ஒவ்வொரு கணிப்புக்கும் ஐம்பது சென்ட் கட்டணம் இந்த பென்சில் டப்பாவுல போடணும். சரியாச் சொன்னவங்களுக்குப் பரிசாக ஒரு டாலர் போனஸ் மத்தவங்க கட்டணும். ஜெயிக்கிறவங்களுக்கு இந்தப் பென்சில் டப்பாவுல இருக்குற பணம்" என்றான்.

ஆளுக்கு மூன்று கணிப்புகளைச் சொல்லிக் கட்டணம் கட்டினோம். எண்ணிப் பார்த்த பொழுது 129 பாப்கார்ன் இருந்தது. 124 என்று சொன்ன வினி வென்றாள். பணத்தை எடுக்கப் போகையில் மைகேல் தடுத்தான். "லெட்ஸ் மேக் இட் இன்ட்ரஸ்டிங்" என்றான். அவனை எல்லோரும் பார்த்தோம். டிவியில் இன்னும் விளம்பரங்கள் ஓடிக்கொண்டிருந்தன.

"டபுள் ஆர் நத்திங்" என்றான். "இந்தப் பெட்டியில் இருக்குற பணத்துக்கு இரண்டு மடங்கு நாங்க எல்லாரும் பணம் போடுவோம். வினி, நீ ஒரு மடங்கு கட்டினா போதும்.."

"என்ன பந்தயம்?" என்றான் ஜோன்ஸ்.

"இந்தத் தட்டுல எத்தனை சிப்ஸ் இருக்குதுனு சொல்லணும்.. ஸேம் ரூல்ஸ்"

இந்த முறை வென்ற மைகேல் பணத்தை எடுக்கப் போன போது ஜோன்ஸ் தடுத்து, "ட்ரிபில் ஆர் நதிங்?" என்றான்.

அதற்குப் பிறகு பழத்துண்டுகள், எதிரே புத்தக அலமாரியின் மேல்வரிசைப் புத்தகங்களின் மொத்தப் பக்கங்கள் என்று இஷ்டத்துக்குத் தொடர்ந்தது பந்தயம். ஒவ்வொரு பந்தயத்துக்கும் பணயப்பணம் கூடியது சங்கடமாக இருந்தது. சலிவன் ஷோ தொடங்குகையில் கிட்டத்தட்ட நூறு டாலருக்கு மேல் சேர்ந்து விட்டது. அடுத்து எட் சலிவன் என்ன கலர் டை அணிவார் என்று பந்தயம். சலிவன் டை அணியாமல் வந்ததால் பணம் அப்படியே தங்கிவிட்டது. டின்னருக்குப் பின் விளையாடலாம் என்றுத் தீர்மானித்து டிவி பார்க்கத் தொடங்கினோம். இடையில் நெருங்கி நெருங்கி அமர முயன்ற ஜோன்ஸைத் தள்ளியபடி இருந்தாள் வினி.

சலிவன் நிகழ்ச்சியில் எல்விஸ் ப்ரெஸ்லி, எவர்லி ப்ரதர்ஸ் என்று வரிசையாக வந்து பாடி ஆடி அட்டகாசம் செய்தார்கள். ப்ரைமெட்ஸ் என்று ஒரு பெண்கள் குழு, அதுவும் கறுப்புப் பெண்கள் குழு, பாடியது அதிர்ச்சியாக இருந்தது. குழுவில் டயனா ராஸ் என்று ஒரு பெண் அற்புதமாகப் பாடியதும் உடற்கட்டு லேசாகத் தெரியும்படி அசைந்ததும் கவர்ச்சியாக இருந்தது. எல்விஸ் வந்ததும் அரங்கில் இருந்த பெண்கள் ஜீசஸைக் கண்டது போல் மெய்சிலிர்த்துக் கூச்சலிட்டார்கள். எல்விஸ் ப்ரெஸ்லியின் பாடல்களும் ஆட்ட அசைவுகளும் ஆபாசமாகப் பட்டது எனக்கு. இதைப் பார்த்து இளய சமுதாயம் எப்படியெல்லாம் கெடுமோ? வினி கண்களை விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். உட்கார்ந்தபடியே அவள் ஆடுவது மட்டும் ஏனோ எனக்கு ஆபாசமாகப் படவில்லை. சமூகம் மாறி வருகிறது. இந்த மாதிரி பாடல்களும் இசையும்தான் இவர்களுக்குப் பிடிக்கிறது. யாரிடம் முறையிட? வினியுடன் சேரும் சாக்கில் ஜோன்ஸ் கையை காலை ஆட்டியது சகிக்க முடியவில்லை. சற்று நேரத்தில் மைகேலும் சேர்ந்து கொள்ள, நடு ஹாலில் எல்லாரும் கும்பலாக ஆடத் தொடங்கியது அதிர்ச்சியாக இருந்தது. ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து அடக்கமாக ஆடும் அமெரிக்கக் கண்ணியம் எங்கே காணாமல் போனது? எல்விஸ் ப்ரெஸ்லி இதற்குப் பதில் சொல்வாரா? ஏதேதோ எண்ணியபடி இருந்த என்னையும் இழுத்தார்கள். முடியாதென்று ஒதுங்கினேன். நல்ல வேளையாக நிகழ்ச்சி நிறைவடைந்தது.

    "சாப்பாடு தயார்!" என்று மேரி அழைக்க, டைனிங் அறைக்குப் போனோம். வினியைத் தொடர்ந்து அவசரமாக எழுந்த ஜோன்ஸ் தவறவிட்டுப் போன மூக்குக் கண்ணாடியைப் பார்த்த நான், அதை எடுத்துக்கொண்டு அவன் பின்னே சென்றேன். அதற்குள் டைனிங் டேபிளில் வினியின் அருகே சட்டென்று ஜோன்ஸ் உட்கார்ந்தது எரிச்சலூட்டியது. கண்ணாடியை என் பைக்குள் போட்டுக்கொண்டு அவர்களுக்கு எதிரே மேரியின் அருகில் அமர்ந்தேன். சொல்லி வைத்தது போல் பந்தயப் பணப்பெட்டியை எடுத்து வந்து டைனிங் டேபிள் மேல் வைத்தான் மைகேல். "சாப்பாட்டோடு கொஞ்சம் பந்தயமும் சேர்த்தால் சுவையாக இருக்கும்" என்றான். "சரிதான். எத்தனை பீன்ஸ் என்று எண்ண வேண்டுமா?" என்றேன் சற்றே சலித்தபடி.

"நோ..நோ.. கொஞ்சம் வளர்ந்துட்டதுனால வேறே பெட்" என்று எங்களிடம் அனுமதி கேட்டு அகன்றான். ஸ்டடியிலிருந்துத் திரும்பி வந்த மைகேலின் கைகளில் ஒரு திராட்சை மதுப்புட்டி. பெயரை ஒரு துணியால் மறைத்திருந்தான். "வினி பேபி, உனக்கு ஒரு வாய் தான். ஜஸ்ட் பார் டேஸ்ட்" என்று நாலைந்து சொட்டுகள் மட்டும் வினியின் மதுக்கிண்ணத்தில் ஊற்றிவிட்டு, எங்கள் கிண்ணங்களில் தாராளமாக ஊற்றினான். "அமெரிக்காவிலயே என் கிட்டே மட்டும்தான் இருக்குது இந்த ஒய்ன். போன வாரம் வாங்கினேன். ஜோன்ஸ், நீ சொன்னது போல ஸ்டடி அறையின் மிதமான ஒளி வெப்பத்தில் பதப்பட வைத்திருந்தேன். எப்படி இருக்கிறது?" என்றான்.

சற்று நுகர்ந்துவிட்டுப் பருகிய ஜோன்ஸ், "பிரமாதம்" என்றான்.

எனக்கும் பிடித்திருந்தது. நாகரீகம் துறந்து "மைகேல், என் கிண்ணத்தை நிரப்பு" என்றாள் மேரி.

புட்டி முழுதையும் எங்கள் கிண்ணங்களில் சரித்துவிட்டு, மறுபடி உள்ளே சென்று இரண்டு புட்டிகள் எடுத்து வந்தான் மைகேல். இரண்டுமே பெயர் மறைக்கப்பட்டிருந்தன. சாப்பாட்டு மேஜையைச் சுற்றியிருந்த எங்களைப் பார்த்தான். "பந்தயத்துக்கு வருகிறேன்" என்றான். "நௌ தட் யு ஹெவ் டேஸ்டட் தி பெஸ்ட் ஒய்ன் ஆன் தி ப்லேனட்... இது எந்த நாட்டு, எந்தத் தோட்டத்து, எந்த வருடத்து மது என்று சொல்லுங்கள். எனக்குத் தெரியும் என்பதால் நான் கலந்து கொள்ளவில்லை. யார் சரியாகச் சொல்கிறார்களோ அவர்களுக்கு இந்தப் பணப்பெட்டி.. என்ன சொல்கிறீர்கள்?"

"அடப்போ மைகேல்.. எனக்கு மது அருந்த மட்டும்தான் தெரியும்" என்று சலித்து விலகினேன்.

"அப்பா.. என்னால் விளையாடக் கூட முடியாது. ஒரு சொட்டுதானே கொடுத்தீங்க?" என்றாள் வினி.

"யூ ஆர் நாட் இன் திஸ் கேம்" என்றான் மைகேல் மகளிடம்.

"நானும் விளையாடவில்லை" என்று மேரி ஒதுங்க, ஜோன்ஸ் மட்டும் களத்தில் இருந்தான். மைகேல் எதிர்பார்த்ததும் இதைத்தான் என்பது அவன் கண்களில் தெரிந்தது.

சற்று அமைதியாக இருந்த ஜோன்ஸ் மெலிதாகப் புன்னகைத்தான். "மைகேல்.. நான் ஒய்ன் கானாஸோர் என்பது உனக்கே தெரியும். திராட்சைமது அறிவு எங்கள் பாரம்பரிய அடையாளம். எதுக்கு இந்தப் பந்தயம்? எப்போதும் போல் தோற்கப் போகிறாய்"

"நோ ஜோன்ஸ். உன்னால இதைக் கண்டுபிடிக்கவே முடியாது.."

"நிச்சயம் முடியும்..ஆனா இந்தப் பணம் நாம எல்லாருமே விளையாடினது.. அவங்கவங்க ஜெயிச்சு சேர்ந்தது.. இதை நான் ஜெயிச்சு எடுத்துட்டுப் போனா நல்லாயிருக்குமா? இது என்ன உன்னோட பணமா? நீயும் நானும் மட்டும் விளையாட?"

"வெல்.. இந்தப் பணத்தை எல்லாரும் பிரிச்சுக்குவோம். தனியாப் பந்தயம் கட்டுறேன். ஐநூறு டாலர்!"

"வேணாம். இந்தப் பணத்தைக் கடைசியா ஜெயிச்ச வினி எடுத்துக்கட்டும். என்ன வினி?" என்று வினியைப் பார்த்து ஜோன்ஸ் கண் சிமிட்டியது எனக்குப் பிடிக்கவில்லை. வினியும் அதை ரசிக்கவில்லை என்பது தெரிந்தது. என்றாலும், "ஓகே!" என்று அவள் பென்சில் டப்பாவைப் பணத்துடன் எடுத்துக் கொண்டது ஆச்சரியமாக இருந்தது. போகட்டும். சின்னப் பெண்.

"வெல். நல்ல தீர்வு. இப்போ இந்தப் பந்தயத்துக்கு வருவோம்.. ஐநூறு டாலர்! வாட் டு யூ ஸே ஜோன்ஸ்?" என்றான் மைகேல்.

"வேண்டாம் மைகேல்" என்ற மேரியைப் புறக்கணித்தான் மைகேல். பென்சில் டப்பாவை தன் அறைக்குள் வைத்துவிட்டு வருவதாகச் சொல்லிச் சென்றாள் வினி. நான் பேந்த விழித்துக் கொண்டிருந்தேன். ஜோன்ஸ் வேண்டுமென்றே அமைதியாக இருப்பது போல் பட்டது.

"வெல்.. என்ன தயக்கம் ஜோன்ஸ்? உன்னால முடியாது என்றால் வேண்டாம்.."

"அப்படியில்லை.." என்று இழுத்த ஜோன்ஸ் இன்னொரு வாய் பருகினான். "ஆகா! பிரமாதமான ஒய்ன். கடவுளின் மது"

"அப்ப பந்தயம் கட்டு.. ஐ டெல் யூ வாட்.. ஆயிரம் டாலர்!" என்றான் மைகேல். நான் அதிர்ந்தேன். ஜோன்ஸ் அமைதியாக இருந்தான்.

அப்போது வந்தமர்ந்த வினி அதைக் கேட்டு, "டேடி.. வாட் இஸ் ராங்? திஸ் இஸ் டூ மச்" என்றாள்.

மைகேல் ஒரு ஸ்டாக் ப்ரோகர். புதுப் பணக்காரன் என்பதால் சமூக அந்தஸ்தைக் கொஞ்சம் கொஞ்சமாக விலைக்கு வாங்கி வருபவன். ஜோன்ஸ் பரம்பரைப் பணக்காரன். பாஸ்டன் நகர பிரபுக் குடும்பம். அதனால் அவன் நடை உடை பாவனையில் பாரம்பரியம் பளிச்சிடும். ஜோன்ஸின் பரம்பரை அந்தஸ்து மைகேலுக்குப் பிடிக்காது என்பது எல்லோருக்குமே தெரியும். "நான் உழைச்சு சம்பாதிக்கிறவன். உன்னைப் போல் பெற்றோர்களின் அல்ப சுக விபத்தினால் பிறந்து அனுபவிக்கிறவன் இல்லை" என்று ஒருமுறை போதையில் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறான். ஜோன்ஸின் பாரம்பரியப் பெருமையினால் கிடைத்த சமூக அடையாளம் அங்கீகாரம் எல்லாம் மைகேலை உறுத்தும். பிகாஸோ கேலரி, ஒய்ன் செலர், சிம்பனி மெம்பர்ஷிப் என்று மைகேல் எத்தனை வாங்கிச் சேர்த்தாலும் பிறப்பால் ஜோன்ஸ் பெற்ற பெருமையை அவனால் பெற முடியாது என்பது அவனை எவ்வளவு பாதித்திருக்கிறது என்பது இப்போது புரியத் தொடங்கியது.

ஜோன்ஸ் மைகேலை நேராகப் பார்த்தான்.

"மைகேல். சூதாடவோ செய்கிறோம்.. கொஞ்சம் சுவாரசியம் கூட்டுவோமா? ஆயிரம் டாலர் யாருக்கு வேண்டும்? என் வேலைக்காரனுக்கு நான் தரும் போனஸ் பணம், தப்பா நினைக்காதே..."

"ஓகே.. அப்ப நீ சொல்லு.. என்ன பணயம்?"

"இந்த ஒய்ன் எனக்குப் பிடிச்சிருக்கு. நூறு கேஸ் பணயம். என்ன சொல்றே?"

"ஆ! மொத்தமே இருபது கேஸ்தான் தயாரிச்சிருக்காங்க. அமெரிக்கால பத்து கேஸ்தான் வித்திருக்காங்க. அத்தனையும் எங்கிட்டே இருக்கு. மிச்சமிருக்குறதை பணயம் வைக்கிறேன்"

"ச்ச்ச்ச்ச்.. நீ இப்ப சொன்னதை வச்சு ஒய்ன் விவரங்களைச் சுலபமா கண்டுபிடிச்சடலாமே மைகேல்.. யூ மேட் எ மிஸ்டேக்"

"வாய்ப்பே இல்லை ஜோன்ஸ். நீ அப்படி சொல்வேனு தெரிஞ்சே உன்னைச் சீண்டினேன். அந்த விவரங்களை வச்சு உன்னால் சொல்ல முடியாதுனு உனக்கே தெரியும்".

மைகேலும் ஜோன்ஸும் இப்போது ஏறக்குறைய பகைவர்கள் போல் பேசத்தொடங்கியது எங்களுக்கு அச்சமூட்டியது.

"மைகேல். போதும். சாப்பிடலாம் எல்லாரும்" என்றாள் மேரி.

மைகேல் கவனிக்கவில்லை. ஜோன்ஸின் பாரம்பரியப் பெருமையில் சேறு பூச ஒரு தருணம் கிடைத்ததில் எல்லாவற்றையும் மறந்திருந்தான்.

"பணயம் போதாது மைகேல். மேரி சொல்வது போல் இதைக் கைவிட்டு சாப்பிடலாம். லெட்ஸ் எஞ்சாய் தி டின்னர்" என்றான் ஜோன்ஸ்.

மைகேல் வெடித்தான். "கோழையாக ஓடாதே ஜோன்ஸ். பணயம் போதாதுனா.. யு டிசைட். என்ன பணயம்னு நீயே தீர்மானம் செய்" என்றான்.

"ஆர் யு ஷீர்?"

"யெஸ். நீயே பணயத்தைத் தீர்மானம் செய். வாடெவர் யு வான்ட்"

"வினிப்ரெட்" என்றான் ஜோன்ஸ் நிதானமாக. "நான் இந்த மதுவின் விவரங்களைச் சரியாகச் சொல்லி வென்றுவிட்டால் உன் மகளை இரண்டு வருடங்களுக்கு என்னுடன் அனுப்பிவிட வேண்டும். ஸ்வீட் வினி இஸ் த பெட். என்ன சொல்றே மைகேல்?"

மைகேல் இதை எதிர்பார்க்கவில்லை என்பது அவன் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது.

[பணயம் இன்றித் தொடரும் சாத்தியம்: 99%]


இக்கதை அடுத்த பதிவில் முடிவுறும். இக்கதை, இதையடுத்து வரும் கதை, இரண்டுமே Roald Dahl 1945-48 வாக்கில் எழுதிய சிறுகதைகளின் தழுவல். மொழியாக்கத்தில் சில உரிமைகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன். நிறைகள் டாலுக்குச் சொந்தம். குறைகள் என்னுடையவை.

மூன்று பந்தயங்கள் கட்டத் தோன்றியது:
1. இக்கதையின் தலைப்பை ஒன்பது பேராவது நிச்சயம் புரிந்து கொள்வார்கள்
2. கதையில் வரும் பாரதி பாரதிதாசன் வரிகளை மூன்று பேராவது நிச்சயம் அடையாளம் காண்பார்கள்
3. அடுத்த கதையைப் படித்து எட்டு பேராவது நிச்சயம் ஆச்சரியப்படுவார்கள்.

2015/03/16

பாடல் பெற்ற பதிவர்
'எண்ணங்கள்' என்றெழுதும் நற்கீதா சாம்பசிவம்
கண்ணன் கதைக்கோர் பதிவிடுவார் - வண்ணச்
சமையலும் சொல்வார் தமிழ்மரபைப் பேணும்
இமயப் பதிவர் இவர்.


நான் தினம் வியக்கும் பதிவர். பதிவுகள், குழுமங்கள் என்று சளைக்காமல் எழுதுகிறார். கண்ணனுக்காக masterpiece.

'உடல்நலமில்லை அதனால் அவசரமாக இப்போது எழுதுகிறேன். முடிந்த போது இன்னொரு பதிவில் தொடர்கிறேன்' என்று தொடங்கி விரிவாக எழுதும் ஒரே பதிவர் இவராகத்தான் இருக்கமுடியும். தன் எண்ணங்களை வெளியே பொதுவில் வைத்துத் தீரவேண்டும் என்கிற இவரின் எழுத்துப் பிடிவாதம் கவர்கிறது.
அடுத்து பாடல் பெறும் பதிவர்: ஜோதிஜி.

முன்னர்:


பாலகணேஷ்
சிவகுமாரன்
ஹுஸைனம்மா
மோகன்ஜி
திண்டுக்கல் தனபாலன்
மெட்ராஸ் தமிழன்
ராமலக்ஷ்மி


2015/03/14

பாடல் பெற்ற பதிவர்
பாலகணேஷ் தந்த சரிதா யணம்படித்தோர்
காலம் மறந்துச் சிரிப்பார்கள் - மேலாகக்
கட்டுரைகள் நூல்வடிவம் குட்டிப் படங்கட்டும்
எட்டுக் கலைஞர் இவர்.

பாலகணேஷுக்காக மைசூர்பா:
கிருஷ்ணா கிராண்டு அடையார் என்றே
வருடம் வரட்டும் கடைகள் - ஒருபோதும்
அம்மா கைவண்ண மைசூர்பா சுவைவருமோ?
சும்மா இவர்கள் சிறப்பு.
குட்டிப்படம்:குறும்படம் - வேறே ஏதாவது நினைச்சுடாதிங்க.
சந்திப்பவரின் களைப்பொழிக்கும் சிரித்த முகம் இவருக்கு.அடுத்து பாடல் பெறும் பதிவர்: கீதா சாம்பசிவம்.

முன்னர்:


சிவகுமாரன்
ஹுஸைனம்மா
மோகன்ஜி
திண்டுக்கல் தனபாலன்
மெட்ராஸ் தமிழன்
ராமலக்ஷ்மி


2015/03/11

பாடல் பெற்ற பதிவர்
ருடம் முழுதும் தமிழ்க்கன்னம் வைப்பான்
திருடன் சிவகுமாரன் தேர்ந்து - திருட்டினில்
கிட்டுந் தமிழ்மொத்தம் கொட்டியே இன்புறுவான்
மட்டின்றி நம்முடன் சேர்ந்து.


ஓசை நயம் கருதி அவன் இவன் என்று குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும்.
சிவகுமாரன் என் பெருமதிப்பிற்குரியவர். இவருடன் தமிழ்க்கொள்ளையடிக்கப் பெருவிருப்பம்.அடுத்து பாடல் பெறும் பதிவர்: பால கணேஷ்.

முன்னர்:


ஹுஸைனம்மா
மோகன்ஜி
திண்டுக்கல் தனபாலன்
மெட்ராஸ் தமிழன்
ராமலக்ஷ்மி2015/03/09

பாடல் பெற்ற பதிவர்
நையாண்டிகள் கட்டுவார் நான்கு வகையில்
பையவே ஹுஸைனம்மா சற்று - மையமாய்
எழுதி மனங்கவரும் மைப்புலி வாலைத்
தொழும் பதிவெழுதிப் பற்று
.

நான்கு வகை நையாண்டி: குறும்பு, கிண்டல், கேலி, கெக்கலிப்பு. ஹுஸைனம்மா பதிவுகளில் நாலும் படிக்கலாம்.
பைய: 'சற்று மெள்ள (தாமதமாக) எழுதும்' என்ற பொருளில்.
முகநூல் கவர்ந்து கொண்ட வலைச்சொத்தா இந்த மைப்புலி?


அடுத்து பாடல் பெறும் பதிவர்: சிவகுமாரன்.

முன்னர்:


மோகன்ஜி
திண்டுக்கல் தனபாலன்
மெட்ராஸ் தமிழன்
ராமலக்ஷ்மி


2015/03/06

பாடல் பெற்ற பதிவர்
ன்று எழுதுவார் என்றறியோம் ஒன்றெழுதி
அன்றே வருவார் வலைதேடி - நன்றெனத்
தேடிவந்தோர் பின்னூட்டம் சேர்த்ததும் மோகன்ஜி
மூடிவைப்பார் வானவில்லைப் போர்த்து.


இதை எழுதிய இளங்காலை வெளியே -51°F. வானவில் மனிதனை வம்புக்கிழுப்பதும் சூடான சுகமே.
அன்றிலாய் எழுதினாலும் என்றும் இவரெழுத்து குன்றிலிட்டச் சுடர்.


அடுத்து பாடல் பெறும் பதிவர்: ஹுஸைனம்மா.


திண்டுக்கல் தனபாலன்
மெட்ராஸ் தமிழன்
ராமலக்ஷ்மி2015/03/04

பாடல் பெற்ற பதிவர்
திருக்குறள் பாடல் தரக்கலைப் பாடம்
ஒருசேர ஊக்குவிக்கும் ஏடு - கருமீசை
மின்னவரும் திண்டுக்கல் தந்த தனபாலன்
பின்னூட்டப் பாரியெனப் பாடு.
தரக்கலை: உலகத்தரங்களான ஐஎஸ்ஓ பற்றிய குறிப்புகளை தனபாலன் பதிவுகளில் படிக்கலாம்.
ஏடு: மின் ஏடு, பதிவு
உழைப்பின் குரலை தனபாலன் பதிவுகளில் அடிக்கடி கேட்டிருக்கிறேன்.அடுத்து பாடல் பெறும் பதிவர்: மோகன்ஜி.


மெட்ராஸ் தமிழன்
ராமலக்ஷ்மி

2015/03/02

பாடல் பெற்ற பதிவர்
சென்னை புதுமும்பை வாழ்வசை போடுகையில்
பன்னுவார் பாடல் பரமன்மேல் - என்னைக்
கவரும் எழுத்தாளர் மெட்ராஸ் தமிழன்
உவகை தரும்பதிவர் தான்.

பதிவர் பெயரில் புதியது:
எக்ஸ்பேட் குருவெழுதும் மெட்ராஸ் தமிழன்
கிக்ஸ்தரும் கற்கண்டுச் சொற்கூட்டு - மிக்ஸர்போல்
சென்னை புதுமும்பை வாழ்க்கை நினைவிடையே
மின்னும் மகேசன்மேல் பாட்டு.


தொட்டுவிடும் தூரத்தில் இருந்தாலும் நான் தொலைவில் நின்று பார்க்கும் விண்மீன் expatguru.


அடுத்து பாடல் பெறும் பதிவர்: திண்டுக்கல் தனபாலன்.


ராமலக்ஷ்மி2015/03/01

பாடல் பெற்ற பதிவர்
புதியது:
ச்சைக் கிளிகள் பனிமுல்லைப் பூக்களின்
அச்சுப் படங்கள் இவர்சிறப்பு - உச்சமிகு
கட்டுரைகள் நீள்கதை நற்கவிதை ராமலக்ஷ்மி
விட்டது உண்டேல் வியப்பு.

பிழையது:
ச்சைக்கிளி முல்லைக்கொடி கண்கண்ட அத்தனையும்
அச்செனச் சுட்டுத்தரும் முத்துச்சரம் - உச்சக்கரு
கட்டுரைகள் நீள்கதை நற்கவிதை ராமலட்சுமி
விட்டது உண்டேல் வியப்பு.

'சூபர்வுமன்' அடைமொழி இவருக்காக உருவானதோ என்று சில நேரம் தோன்றும். திறமையும் உழைப்பும் மலைக்க வைக்கின்றன.


அடுத்து பாடல் பெறும் பதிவர்: மெட்ராஸ் தமிழன்