2015/12/20

தர்மம்?


னிதக் கலைக்கூடம் விசித்திரமானது. தன்னறிவும் தன்னம்பிக்கையும் சரியான அளவில் கலந்து சீராக வடிவமைத்து அறிவுமுலாம் பூசி அடங்காத வெற்றி விளக்கொளியில் மிளிறும்படி வைத்தாலும், காலத் தூசும் வாழ்க்கைத் துருவும் கருணையின்றித் தொடர்ந்து தாக்கியதால் விளைந்த அவநம்பிக்கை அழுக்கில் பொலிவிழக்கும் பெரும்பான்மை மனிதப் பொம்மைகளின் நடுவே, பண்பை மட்டும் அட்சயபாத்திரப் பருக்கை போல் எப்படியோ பிடித்துக்கொண்டு அவலத்திலும் அழியாத அழகாய்த் தோன்றும் பொம்மைகள் சில... கலைக்கூடத்தின் விசித்திரத்தையும் கொடூரத்தையும் நியாயப்படுத்துவது வேதனையைக் கடந்த வியப்பு.

கும்பகோணத்திலிருந்து இரவுப் பயணம் செய்ய வேண்டியிருந்தது. ரதிமீனா நிறுவனப் பேருந்து ஒன்றில் சீட்டு வாங்கியிருந்தேன். முன்னர் பலமுறை பயணம் செய்திருக்கிறேன். வண்டியும் இருக்கையும் ஓரளவுக்கு வசதியாகவும் சுத்தமாகவும் இருக்கும். இந்த முறை வாய்த்தது பாடாவதி வண்டி. சாய்விசையை அழுத்தினால் பின்னாலிருந்த பெண்மணி மடியில் ஒரேயடியாகச் சாய்ந்து விட்டது. அவர் அலற, தொடர்ந்து நான் அலற... சிரமப்பட்டு எழுந்து இருக்கையை மேலெழுப்பினேன்.. ஜன்னலோரப் பக்கத்து இருக்கைக்கு ஆள் வருவதாகவும் வேறு இடம் இல்லையென்றும் சிப்பந்தி சொன்னதால், என் இருக்கையிலேயே நிமிர்ந்த நெஞ்சும் நிறையாத கண்டனமும் கூடியக் கண்மூடிப் பார்வையுடன் அமர்ந்திருந்தேன். பேருந்து கிளம்பும் தருணத்தில் பக்கத்து இருக்கைக்காரர் ஏறிக்கொண்டார். எழுந்து வழிவிடும் பொழுதே ஒருவரையொருவர் அடையாளம் கண்டு கொண்டோம்.

முரளி என்கிற கோபாலகிருஷ்ணனை நான் சடுதியில் அடையாளம் கண்டதன் பின்னே சில காரணங்கள் உண்டு. என் காரைக்கால் வாழ்வின் மூன்று நண்பர்களில் ஒருவன் முரளி என்பது ஒரு காரணம். என் வாழ்வில் நான் செய்த முதலும் கடைசியுமான திருட்டுக்குக் கூட்டாளி என்பது ஒரு காரணம். திருட்டை விடுவோம். மறக்க முடியாத காரணம் உண்டென்றால் அது அனந்தராமன். முரளியின் அப்பா.

1967ம் வருடம் ஜூன் மாதம் காரைக்காலில் குடிபுகுந்த முதல் நாள். எங்கள் தெருவின் கடைசி வீட்டில் தனியாக வாசலில் உட்கார்ந்திருந்த முரளியிடம் என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன். தன் பெயரைச் சொல்லி, "எங்கப்பாம்மா ஆஸ்பத்திரி போயிருக்காங்க... எங்க தாத்தா இன்னிக்கு காலைல தூக்கு போட்டுக்கிட்டாரு..." என்றான்.

ஒரு கணம் எனக்கு என்ன சொல்வதென்று தோன்றவில்லை.

என் கைகளைப் பிடித்துக் கொண்டு "நல்லா இருக்கியா துரை?" என்றான். "சதாபிஷேகத்துக்கு நீ காரைக்கால் வந்தப்ப பாத்தோம்.. பதினஞ்சு வருஷம் இருக்குமா?"... வசதியாக உட்கார்ந்து கொண்டு... "சாஞ்சுக்கயேன்?". என்றான்.

ஒரேயடியாகச் சாய்ந்ததைச் சொன்னதும் சிரித்தான். "காசு வாங்குறதுல குறியா இருக்கானுங்களே தவிர பயணிகளுக்கு வசதியா ஏதாவது செய்யறாங்களா பாரு"

"விடு. என் துரதிர்ஷ்டம் இந்த மாதிரி சீட் கிடைச்சுது" என்றேன்.

"வேறே சீட் கிடைச்சிருந்தா இப்ப நாம சந்திச்சிருக்க முடியுமா? அதுவும் அதிர்ஷ்டம் தானே?" என்றபடி இருக்கையை நேராக்கிக் கொண்டான். "நானும் இப்படியே உக்காந்துட்டு வரேன்".

இதான் முரளி என்கிற கோபாலகிருஷ்ணன். எதையும் நிறைவுக் கோணத்தில் மட்டுமே பார்ப்பவன். படுபாவி, மாறவே இல்லை.

"மெட்ராஸ் போறியா?" என்றான். இவனாவது மெட்ராஸ் என்கிறான். மெட்ராஸ் எனும் ஒற்றைச்சொல் கால எந்திரம் இன்னும் எத்தனை நாள் பயணத் தகுதியில் இருக்குமோ தெரியவில்லை.

"ஆமாம்.. அம்மாவைப் பார்க்க வந்தேன்" என்றேன்.

"கும்மோணத்துலயா இருக்கா உங்கம்மா? எப்படி இருக்கா? சௌக்கியமா?"

தலையசைத்தேன். "நீ எங்கே இங்கே?" என்றேன்.

"பத்து வருஷமா இங்கதான் வேலை பாக்கறேன். டவுனைஸ்கூல்ல கணக்கு வாத்தியார்...." சற்றுத் தயங்கி, "வேலை பாத்தேன்னு சொல்லணும்" என்றான்.

"ஏன்?"

"இன்னிக்குக் காலைல வேலையை விட்டுட்டேன்"

"ஏன்?"

"அவசரமா மெட்ராஸ் போகணும். இனிமே மெட்ராஸ் வாழ்க்கைதான் போலிருக்கு"

கேள்வி கேட்காமல் அவனைப் பார்த்தேன்.

"என் பையன் ஸ்ரீகிருஷ்ணன்... தீபாவளிக்கு மொதநாள்... முப்பதாவது பொறந்த நாளன்னிக்கு... தற்கொலை பண்ணிக்கறதுக்காக பாதி ராத்திரி எட்டாவது மாடியிலந்து விழுந்துட்டான்.."

அவன் சொன்னது என்னை உறைய வைத்தது.

பிறப்பிறப்பு புரியாத அந்த வயதிலும் செய்தியின் தீவிரம் புரிந்தது. "என்ன சொல்றே? உங்க தாத்தா தூக்கு போட்டுட்டாறா?"

"ஆமாம். திடீர்னு காலம்பற எங்கம்மா கத்தறா. என்னானு நானும் அப்பாவும் எழுந்து பாத்தா... ஹால்ல எங்க தாத்தா சீலிங் பேன்ல தொங்கறாரு. எங்கப்பா என்னை பெட்ரூம்ல தள்ளிக் கதவை சாத்துறதுக்குள்ள நான் பாத்துட்டேன். தாத்தா கால் ஆடிட்டே இருக்கு. தலை சாஞ்சு கிடக்கு. தாத்தாவை கீழே இறக்கி எங்கப்பா டாக்ஸி கூட்டிட்டு வந்து பெரியாஸ்பத்திரிக்கு போயிருக்காங்க..." என்றவன், அதே ஓட்டத்தில் வெண்மையாக "நீ ஊருக்குப் புதுசா? உங்க வீடு மலர் வீட்டுக்குப் பக்கத்துல தானே? உங்கப்பாவை நான் பாத்துருக்கேன். மோட்டார்பைக் வச்சிருக்காரு தானே? எங்கப்பா கிட்டே சைக்கிள் கூட கிடையாது" என்றான்.

எந்த ஓட்டத்துக்கு ஈடு கொடுப்பது என்பது புரியவேண்டிய அவசியமில்லாத வயதின் வசதியில் பொதுவாகத் தலையசைத்தேன். "எங்கம்மாவும் நாங்களும் இன்னைக்குக் காலைல வந்தோம். போன வாரமே நாகூர் வந்துட்டோம். அங்கே எங்க பெரியம்மா இருக்காங்க. எங்க பெரியம்மா பையன் ரகு என்னோட பெரியவன். குடுகுடுபாண்டியோட சண்டை போட்டான் தெரியுமா? அங்கேந்து பஸ்ல நேத்திக்கு ராத்திரி வந்தோம். எனக்கு ஒரு தம்பி மூணு தங்கை. தம்பியும் கடைசி தங்கையும் மெட்ராஸ்லயும் வாசுதேவநல்லூர்லயும் இருக்காங்க. எங்கப்பா அடிக்கடி வேலையை விட்டுடறாருனு அவங்களை எங்க தாத்தா பாட்டி பாத்துக்கறாங்க" என்று செய்திகளைத் தொடர்பில்லாமல் அறிவித்தேன்.

"நிர்மலா ராணி ஸ்கூல் தானே நீயும்?" என்றான்.

"ஆமாம்.. எங்கப்பா என்னையும் என் தங்கையையும் சேத்துட்டாரு. மெட்ராஸ்ல தெரஸா ஸ்கூல்ல க்வாடர்லி வரைக்கும் படிச்சோம். நான் எப்பவும் பர்ஸ்ட் ரேங்க். இங்கே எனக்கு டபுள் ப்ரமோஷன் கொடுத்து சேத்துக்கிட்டாங்க. என் தங்கைக்கு டபுள் ப்ரமோஷன் கிடையாது. அதே க்ளாஸ்லதான் படிக்கணும்." என்றேன். என்ன பெருமையோ தெரியவில்லை.

"படிக்க்க்க்கிற புள்ளையா?" என்றான் இழுத்து. என்னை மேலும் கீழும் பார்த்தான். "எங்கப்பாவுக்குத் தெரிஞ்சா உன் குசுவைக் குடிக்கச் சொல்லுவாரு"

"என்னது?"

"யாராவது பர்ஸ்ட் ரேங்க் பையன் எங்க வீட்டுக்கு வந்தா உடனே குசு குடிரானு ஆரம்பிச்சுடுவாரு"

"ஏன்? நீ நல்லா படிக்க மாட்டியா?"

"படிப்பேன். ஆனா எப்பவும் அஞ்சாவது ஆறாவது ரேங்கு தான்"

திடீரென்று தெருமுனையில் அலாரம் போல் மணி அடிக்க, திரும்பினோம். ஒரு ஆம்புலன்ஸ் வண்டி அவசரமாக வந்து நின்றது. அதிலிருந்து இரண்டு பேர் ஒரு படுக்கையில் வெள்ளைத துணி போர்த்திய உடலை அவசரமாக வெளியே எடுத்து வீட்டு ஹாலில் கிடத்தி வந்த வேகத்தில் வண்டியுடன் காணாமல் போனார்கள். விசை தட்டினாற்போல் அழுகை. ஓலம். திடுக்கிட்டேன். வார்த்தை வராமல் பார்த்துக்கொண்டிருந்தேன். முரளியின் அப்பா அனந்தராமன் என்னிடம் வந்து அன்புடன் "யாருப்பா அம்பி நீ?" என்றார். சொன்னதும், "இதெல்லாம் ஒண்ணுமில்லே. பாத்து பயந்துடாதே. இவனோட தாத்தா வைகுண்டம் போயிட்டார்: நாங்கள்ளாம் இருந்து வழியனுப்பணும். நீ ரெண்டு நாள் கழிச்சு விளையாட வா" என்றார் சாதாரணமாக.

"என்ன இப்படி சாதாரணமா சொல்றே?" என்றேன் சற்று நிலைதடுமாறி.

"ப்ராப்தம். அவனுக்கு என்ன பிரச்சினையோ?. கடன்னு சொல்றா. பொண்டாட்டினு சொல்றா. வேலைன்னு சொல்றா. கொஞ்ச நாளாவே லூசாட்டம் என்னமோ பேத்திண்டிருந்தான்னு சொல்றா... நாங்கதான் யாருமே கவனிக்கலேயோ என்னவோ?"

கேட்பதா கூடாதாவென்று புரியாமல் காத்திருந்தேன். அவனாகவே தொடர்ந்தான். "ஆனா சாகலே பாரு. அவனோட துர்பாக்கியம் கரெக்டா ஒரு காய்கறி லாரி மேலே விழுந்துட்டான். ரோட்டுல விழுந்திருந்தாலாவது பொட்டுன்னு போயிருப்பான். இப்படி மண்டைல அடிபட்டு... லாரிக்கார புண்யவான் உடனே ஸ்ரீக்ருஷ்ணாவை ஆஸ்பத்திரிலே சேர்த்து... நானும் ஸ்வர்ணாவும் தீபாவளியன்னிக்கு அடிச்சுண்டு ஓடினோம். ஆஸ்பத்திரிலே கோமால கிடக்கான்... பத்து பதினஞ்சு நாளாவது தீவிர மருத்துவ கவனிப்புல இருக்கணும்னுட்டாங்க ஆஸ்பத்திரிலே. அவனைத் தினம் போய் கவனிக்கறதுக்காக இவ முடிச்சூர்ல அக்கா வீடு காலியா இருக்கேன்னு அங்க தங்கிண்டு இருந்தா. நான் திரும்பி வந்துட்டேன். அடிச்சுது மெட்ராஸ்ல பத்து நாள் பேய்மழை. வெள்ளிக்கிழமை... நல்ல முகூர்த்த நாளா பார்த்து... வீட்டுல தண்ணி அளவு ஏறிண்டே வந்து வெள்ளத்துல சட்டுன்னு வெளில வர முடியாம... உதவிக்கு ஆள் இல்லாம... வீட்டுக்குள்ளயே மூழ்கிச் செத்துட்டா ஸ்வர்ணா. ரெண்டு நாள் கழிச்சுதான் தெரிஞ்சுதாம். அழுகிக் கிடக்காளாம். நேத்திக்கு ஆஸ்பத்திரிலந்தும் சேதி வந்துது. ஸ்ரீக்ருஷ்ணா கோமாலந்து வந்துட்டான். ஆனா மூளை குழம்பியிருக்கு. வலதுபக்கம் வாதம். பேச்சு வரதுக்கு நாளாகும்னு... அரக்க பறக்க கிளம்பிட்டேன். போய் அவளுக்குக் காரியம் பண்ணனும். அப்புறம் அவனுக்கு கைங்கரியம் பண்ணனும்..."

இன்னும் ஏதாவது விபரீதமாகச் சொல்லப் போகிறானோ என்று விளங்காமல் சில கணங்கள் விழித்தேன். சுதாரித்து "என்ன சொல்றதுனே தெரியலே முரளி.. இத்தனை அதிர்ச்சியை ஒட்டு மொத்தமா கேக்கறதுக்கே எனக்கு சக்தியில்லை... நீ எப்படி யதார்த்தமா இருக்கேன்னு புரியலே... எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குடா" என்றேன்.

"சகடம் உருண்டுட்டே இருக்கு துரை. இன்னிக்கு செத்தா நாளைக்கு ரெண்டு. இதுல வருத்தப்பட்டும் துக்கப்பட்டும் என்ன ஆகப்போறது?" என்றான். "ஒருவேளை நானும் அவளோட நாலு நாள் தங்கியிருந்து.. நானும் போயிருந்தா? பிள்ளையை யார் கவனிக்கறது? இப்ப ஸ்ரீக்ருஷ்ணாவுக்காவது நான் இருக்கும்படி ஆச்சு பாரு? அதுவும் ஒரு ஆசீர்வாதம் தானே?"... சிறு மௌனத்துக்குப் பிறகு... "எங்கப்பா ஞாபகமிருக்கில்லையா உனக்கு? அவர் அன்னிக்கே சொன்னாராம்.. ஸ்வர்ணாவுக்கு ஜலகண்ட ம்ருத்யு சாத்யம்னுட்டு அவ அப்பாகிட்டே... சொன்னமாதிரியே ஸ்வர்ணாவுக்கு தண்ணீல சாவு. அனந்தராமன் நாக்கு அசாத்திய வாக்கு இல்லையோ?"

நான் அனந்தராமனையே பார்த்துக் கொண்டிருந்தேன். "என்ன மாமா இப்படிச் சொல்றீங்க? அதிர்ச்சியா இருக்கு"

"என்னைப் பத்தி உனக்குத் தெரியுமில்லையா? எனக்கு கிடைச்சிருக்குற சக்தி ஒரு மகா ஆசீர்வாதம். அதை ஸ்வயலாபத்துக்கு உபயோகிச்சா நிக்காது. மத்தவா பலனுக்குக்காகக் கிடைச்ச சக்தி. அப்படித்தான் இன்னி வரைக்கும் வாழ்ந்துண்டிருக்கேன். எனக்கோ என் நேர் வாரிசுகளுக்கோ இதைப் பயன்படுத்தக்கூடாதுனு வைராக்கியமா இருக்கேன்..." சற்றுத் தயங்கி..."இருந்தேன்னு சொல்லணும்... இல்லேடா... நீ எங்கந்தோ இங்கே வந்திருக்கே... என்னைப் பாக்க வந்தது ஒரு செய்தி போலப் பட்டுது.. அதான்.. உங்கிட்டே சொல்லலாம்னு தோணித்து... பாரமா நினைச்சுக்காதே.. தயவுசெஞ்சு இதை முரளிகிட்டே நான் சொன்னதா சொல்லிடாதே... நான் உசிரோட இருக்குறவரைக்கும் அவனுக்கு இது தெரியவேண்டாம்... எனக்கு செய்யுற ஒரு உதவியா நினைச்சுக்கோ"

அவர் சொன்னது எனக்குள் இறங்கி என்னவோ செய்தது. முரளியின் திருமணத்துக்குப் போனதோடு சரி. எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து அவனைப் பார்க்க வந்திருந்தேன். அவன் அப்பாவுக்கு சதாபிஷேகம் என்று என்னை வற்புறுத்தி அழைத்திருந்தான். வந்த இடத்தில் இப்படி ஒரு செய்தியை அனந்தராமன் சொல்வார் என்று எதிர்பார்க்கவில்லை.

அவர் எதிரே நின்ற சட்டையற்றச் சிறுவனை குப்புறப் படுக்க வைத்து அவன் கைகளை இறக்கை போல் விரித்துப் பிடித்தார். சிறுவனின் தந்தையிடம் சிறுவனின் இடது கையை அழுத்திப் பிடித்துக் கொள்ளச சொன்னார். அனந்தராமன் சிறுவனின் சூம்பிக் கிடந்த வலது கையை அழுத்திப் பிடித்துக் கொண்டார். சிறுவன் அலறிக் கொண்டிருந்தான். "கண்டுக்காதீங்கோ.. சித்த நாழி அப்படித்தான் இருக்கும்.." என்றார். ஒரு கிண்ணத்தில் குழைத்து வைத்திருந்த வண்ண விழுது ஒன்றை எடுத்து சிறுவனின் முதுகுத் தண்டில் தடவி அழுத்தித் தேய்த்தார். பிறகு தண்டிலிருந்து மேலாகவும் குறுக்காவும் நீவினார். நீவியபடியே சிறுவனின் வலது கையை மெள்ள மெள்ள உயர்த்தினார். சிறுவன் அலறிக்கொண்டிருந்தான். நிறுத்திய அனந்தராமன், "இன்னிக்குப் போறும். புதன் சாயந்திரம் அஸ்தமனத்துல வந்துருங்கோ" என்றார்.

சிறுவனின் தாய் எங்கள் வீட்டில் போல் பல வீடுகளில் வேலை செய்து பிழைப்பவர். தந்தை மாவு மில் அருகே சைக்கிள் ரிக்ஷா வைத்திருந்தார். சிறுவன் பள்ளிக்கூடம் போகவில்லை. விளங்காத வலது கையுடன் எங்கிருந்து படிப்பது? அதைத்தவிர சிறுவனின் சாதி சமூக அந்தஸ்து, கிறுஸ்துவப் பள்ளிகளில் கூட ஏற்கப்படவில்லை.

மூன்றாவது மாதமோ என்னவோ சிறுவனுக்கு எல்லாம் சரியாகி விட்டது. விளங்காதிருந்த கை சுத்தமாகச் சரியாகிவிட்டிருந்தது. ஒரு பைசா பணம் வாங்கவில்லை அனந்தராமன்.

அதே நினைவாக, "உங்கப்பா இருந்தா இந்நேரம் ஸ்ரீக்ருஷ்ணாவைக் குணப்படுத்தியிருப்பார்" என்றேன். அனந்தராமன் என்னிடம் சொன்னதை அவனிடம் சொல்லத் தோன்றியது. "டேய்... சதாபிஷேகத்துக்கு வந்தப்போ உங்கப்பா எங்கிட்டே ஒண்ணு சொன்னாருடா.. எனக்கு அப்போ புரியலே.. இப்போ.."

உடனே என்னைத் தடுத்தான். "வேணாம்டா... என்னைப் பத்தி ஏதாவது சொல்லியிருந்தா தயவுசெஞ்சு சொல்லாதே.." அவன் குரலில் சற்று ஆத்திரம் கலந்திருந்ததை உணர்ந்தேன்.

வண்டி மாயவரம், கடலூர், நெய்வேலி என்று வரிசையாகக் கடந்து கொண்டிருந்தது. எங்கேயாவது காபி டீ சாப்பிட நிறுத்துவார்கள் என்று எதிர்பார்த்தேன். சமீப மழையின் விளைவாக வழியோர கும்பகோணம் டிகிரிக் காபிக்கடைகள் எல்லாம் மூடியிருந்தன. ஏற்கனவே அங்கே காபி சகிக்காது. நல்லது என்று நினைத்துக் கொண்டேன். இருந்தாலும் எங்கேயாவது ஒரு கப் காபி சாப்பிடக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

"கொஞ்சம் கடுப்பா பேசிட்டேன்னு நினைக்காதே... யார் யாருக்கோ எங்கப்பா ஆரூடமும் மருந்தும் வாக்கும் சொல்லியிருக்காரு... ஞாபகம் இருக்கா.. உனக்கு நாலாவது தங்கை பொறந்து உங்கம்மா பொழைப்பாளானு படுத்துக் கிடந்த போது எங்கப்பா நீங்க எல்லாம் அமோகமா இருக்கப் போறேள்னு சொன்னது? உங்கப்பாவை மோட்டார்பைக் ஓட்டுறதை நிறுத்தச் சொன்னது? நீ அமேரிக்கா போவேன்னு அப்பவே சொன்னாரு ஞாபகம் இருக்கா?.."

"ஏன் ஞாபகம் இல்லே?" என்றேன்.

எதிர்பாராததை ஆரூடமாகச் சொல்வதிலும் நிகழ்த்திக் காட்டுவதிலும் அனந்தராமன் வல்லவர். பார்த்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன். நேரிடையாகவும் அனுபவித்திருக்கிறேன். எதிர்கால நிகழ்வுகளைச் சொல்லுவார். குணப்படுத்த முடியாது என்று சொல்லப்பட்ட வியாதிகளைக் குணப்படுத்துவார். எங்கிருந்தெல்லாமோ வருவார்கள். ஜோசியம் கேட்கவும். தேவமருந்து வாங்கவும். மருத்துவம் என்று ஒரு நாளும் சொல்லமாட்டார். தேவமருந்து என்றே சொல்வார். காரைக்காலில் இருந்த போது என் பாட்டி அடிக்கடி சொல்லுவார். "அந்த அதர்வண பிராமணன் வீட்டுக்குப் போகாதேடா... தலைகீழா நடந்து வரப்போறே ஒரு நாளைக்கு. சொல்றதைக் கேளு".

"சொல்லுங்கோ" என்றேன்.

அனந்தராமனுக்கு சதாபிஷேகம் முடிந்த மறுநாள். காரைக்கால் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தொடங்கி திருவாரூர், திருவிடைமருதூர், சுவாமிமலை, திருநள்ளார் கோவில்களுக்கு வசதியான காரில் அழைத்துச் சென்று திரும்பியிருந்தேன். என்னிடம் தனியாகப் பேச வேண்டும் என்று சொல்லியிருந்தார்.

என் கைகளைப் பிடித்துக் கொண்டார். "என் பையன் முரளிக்கு ஆயுசுல நிம்மதியே கிடைக்காதுடா. எங்கப்பாவோட கர்மா என் பேரனைக் கட்டியிருக்கு. ஆனா எனக்குக் கிடைச்ச விடுதலை என் பையனுக்குக் கிடைக்காது போலிருக்கு.. நடக்கும்னு தெரிஞ்சே சில சமயம் நடக்காதுனு ஏதோ ஒரு நம்பிக்கைல சில காரியங்களைச் செஞ்சுடறோம்" என்றார். குரல் விம்ம,"இதுக்கு மேலே என்னால சொல்லமுடியாது. இதையே யார் கிட்டேயாவது சொல்லணும்னு மனசு குடைஞ்சு தள்ளித்து. உன்னோட இத்தனை கோவில்களுக்குப் போயிட்டு வந்தப்போ எனக்கு கிடைச்ச அசாத்திய நிம்மதியிலே துணிஞ்சு இதைச் சொல்லிட்டேன்" என்றார். "என் பேரனால அவனுக்கு நிம்மதி போயிடும். ஒரு உதவி பண்ணு... நாளைக்கு நான் போனப்புறம்.. பேரனுக்கு ஏதாவதுனா முரளி எல்லாத்தையும் விட்டு வடக்கே காசிலயோ கேதாரநாத்லயோ சன்யாசம் வாங்கி ஓஞ்சுடச்சொல்லு. சம்சார பந்தம் அவன் நிம்மதியைக் கொலைச்சு சாகற வரைக்கும் விடாது". அதற்குள் ஸ்வர்ணா காபி கொண்டு வர சுதாரித்தார்.

மோசமான காபி என்றாலும் அப்போதைக்கு அது தேவைப்பட்டது. பாண்டிச்சேரி அருகே எங்கேயோ நிறுத்தியிருந்தார்கள் வண்டியை.

"துரை.. எனக்கும் சில சமயம் தோணிருக்கு. எங்கப்பா கிட்டேயே கேட்டிருக்கேன். இத்தனை பரோபகாரம் பண்றேளே.. எனக்குக் கொஞ்சம் உபகாரம் பண்ணக்கூடாதானு.. என் வாழ்க்கை நதி எப்படியெல்லாம் ஓடும்னு பாதை போட்டுக் காட்டியிருந்தா வேறே முடிவுகள் எடுத்திருப்பேனோ என்னவோனு அடிக்கடி தோணும். அப்புறம்தான் உணர்ந்தேன். எங்கப்பா ஆரூடத்துக்கு ஏத்தமாதிரி நான் முடிவுகள் எடுத்திருந்தா அது மட்டும் எனக்கு நிம்மதியையோ ஆனந்தத்தையோ கொடுத்திருக்கும்னு என்ன நிச்சயம்? அதுவுமில்லாம... அவரோட தர்மத்தை எனக்காக விட்டுக்கொடுத்தாருனு ஒரு பாரம் வேண்டாம் பாரு..."

"எதுடா தர்மம்? ஒரு துரும்பைப் பிடிச்சுட்டாவது கரையேற மாட்டோமானு தினம் தினம் வாழ்க்கைக் கடல்ல நீந்திட்டிருக்குற கோடிக்கணக்கான பேர் மத்தியிலே... அப்படிக் கிடைச்ச துரும்பைக் கூட ஊழல்லயும் அரசியல்லயும் முட்டாள்தனத்துலயும் இழந்துட்டு அல்லாடிட்டிருக்குறவங்க மத்தியிலே.. இப்படியொரு சக்தி கிடைச்சிருக்கு உங்கப்பாவுக்கு. பேராசையெல்லாம் வேண்டாம்.. ஒரு சின்ன வழியாவது காண்பிச்சிருக்கலாம் இல்லையா? ஏழைலந்து அரசியல்வாதி வரைக்கும் அவனவன் பணமா கொட்டிக் கொடுத்தப்ப உங்கப்பா ஒரு காசு கூட வாங்காதது எந்த விதத்துல நியாயம்? அப்படி வாங்கியிருந்தா ஒருவேளை நீ இருந்த இடத்துலயே உன் பையனோட அமோகமா இருந்திருக்கலாமே? தனக்கு மிஞ்சித்தாண்டா தானமும் தர்மமும்"

"நீ சொல்றது உனக்கும் எனக்கும் நியாயமாத் தோணினாலும் அது அவரோட தர்மம் ஆகாதுடா. பரோபகாரம் அவருக்கு நிம்மதியைக் கொடுத்துது. சக்தியை தனக்குச் சாதகமா பயன்படுத்திட்டிருந்தா குற்ற உணர்வு தான் மிஞ்சியிருக்கும். எங்கப்பாவை எனக்குத் தெரியும். அவருக்குக் கிடைச்ச அபூர்வ சக்தியினால எங்க தாத்தா தூக்குப் போட்டுட்டதிலந்து என் பையன் நிலமை வரைக்கும் தெரிஞ்சிருக்காம இருக்கும்னு நான் நினைக்கலே. எனக்குச் சொல்லாத காரணத்தையும் நான் வெறுக்கலே"

"நீ இருக்குற நிலமைல..உன் பையனுக்கு இருக்குற நிலமைல.. உன்னால பாத்துக்க முடியுமா?"

"ஏன்?"

"ஸ்வர்ணா தவறிட்டாங்கறே.. உனக்கும் வயசாயிடுச்சு.. வேலையை விட்டாச்சுன்றே.. உன் பையனுக்கு மூளை குழம்பியிருக்குனு சொல்றே. நீ யாருனு கூட அவனுக்குத் தெரியாதுடா.."

"அதனால என்னடா. என் பிள்ளையை எனக்குத் தெரியுமே?"

"முரளி.. தப்பா நினைக்காதே.. இப்பல்லாம் இதுக்குன்னு தனி இடம் வசதியெல்லாம் கிடைக்குது. மொத்தமா பணம் கட்டி ஸ்ரீக்ருஷ்ணாவை சேத்துட்டா அவங்களே பாத்துப்பாங்க. அப்பப்போ போய் பாத்துட்டு வரலாம்..."

"என்னடா உளறல் இது? எனக்குப் பொறந்த குழந்தைடா. யார் பாத்துப்பாங்க? காசுக்காக வேலை செய்யுறவங்களா? போடா"

"கண்மூடித்தனமா பேசாதடா. உன்னால அவனைப் பார்த்துக்க முடியாது. உங்கிட்ட வசதியும் கிடையாது"

"எனக்கென்ன? ஸ்வர்ணாவோட நகையெல்லாம் வித்து இருக்குற பிராவிடன்ட் பணத்தையெல்லாம் எடுத்து அவனைக் கவனிச்சுக்க வேண்டியதுதான். இதைவிட எனக்கு என்ன வேலை?"

"பணத்தைச் சொல்லலே. நாளைக்கே உனக்கு உடம்புக்கு முடியாமப் போனா? அட.. உனக்கே ஒண்ணு ஆறதுனு வை.."

"அதனால என்ன? நான் இருக்குற வரைக்கும் அவனைப் பாத்துண்ட திருப்தியும் நிம்மதியும் போறுமே. பணம் கட்டித் தனியாச் சேத்திருந்தாலும்... எப்படியிருந்தாலும் எனக்கப்புறம் அவனுக்கு என்ன நடக்கும்னு என்ன உத்தரவாதம் இருக்கு?"

"அதெப்படிடா.. நீ போனப்புறமும் அவன் உன் குழந்தை தானே? யாராவது கவனிக்க வேண்டாமா?"

"துரை.. நான் போனப்புறம் நானே இல்லைடா. எனக்கு ஏது குழந்தை? நான் போனப்புறம் யாராவது கவனிக்கணுங்கறதுக்காக இருக்குறப்ப நான் கவனிக்காம இருக்கலாமா? இருக்குறவரைக்கும் தானே என் தர்மமும் நியாயமும் எனக்கு தைரியத்தையும் நிம்மதியையும் கொடுக்கவோ கெடுக்கவோ முடியும்..? எனக்கப்புறம்.. அந்தப் பார்வதி பரமேஸ்வரன் பாத்துக்கட்டும்.. ஒரு பேச்சுக்கு சொல்றேன்... நாளைக்கு உன் குழந்தைக்கு இப்படி ஆச்சுனா விட்டுப் போயிடுவியா?"

"விட்டுப் போகமாட்டேன். விடாம பிடிச்சிட்டிருக்கவும் மாட்டேன். கண்டிப்பா ஒரு இடத்துல சேர்த்து பணம் கட்டி... என் சக்தியின் வரம்பு எனக்குத் தெரியும்"

"அப்படித் தெரிஞ்சா இத்தனை நாள் எல்லாம் பண்ணினே? சின்னக் குழந்தையா நடை பழகினதுலந்து... கைல நாலணா இல்லாம அமெரிக்கா போனதுலந்து... எந்த சக்தியோட வரம்பு உன்னைக் கட்டுப்படுத்தியிருக்கு?"

என்னால் பதில் சொல்ல முடியவில்லை. வண்டி கிளம்பத் தயாரென்று ஒலிக்க, அவசரமாக ஏறிக்கொண்டோம்.

"எங்கப்பா தெரிஞ்சோ தெரியாமலோ எனக்குக் கொடுத்த ஒரு பெரிய சக்தி என்னன்னா... எதையும் அதன் போக்குல எடுத்துக்கணுங்கிறது மட்டும்தான்... நடக்குறது நடக்கும்... அதிலே நாமளும் நடக்கப் பழகிக்கணும்...அவ்வளவுதான். நான் அப்படிக் கேட்டேன்னு தப்பா நினைக்காதே. ஒரு நாளும் உன் குழந்தைக்கு எதுவும் ஆகாது" என்றான் உட்கார்ந்தபடி.

"சே சே! நான் அப்படியெல்லாம் நினைக்கலேடா. நீ நிம்மதியா இருக்கணும்னுதான் அப்படிச் சொன்னேன"

"தெரியும்டா. இருந்தாலும் அப்படிக் கேட்டதுக்கு என்னை மன்னிச்சுடு. ஒரு கணம் தவறி வரம்பு மீறிட்டேன்" என்று என் கைகளைப் பிடித்துக் கொண்டான். "உன் கூட பேசினதே பெரிய பாரம் இறங்கினாப்புல இருக்கு. நீ ஊருக்கு வந்ததே தெரியாது. இருந்தும் இன்னிக்குப் பார்த்து இதே பஸ்ல ஏறி என் பக்கத்துல உக்காந்து வரணும்னு இருக்கா சொல்லு? இதான் செய்தி. உனக்குப் புரிஞ்சாலும் ஏத்துக்க மாட்டே இல்லையா? கண் அசத்திட்டு வரது. கொஞ்ச நேரம் தூங்கறேன்" என்றபடி கைகளைத் தளர்த்திக் கண்மூடினான். நொடிகளில் குறட்டை.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கண்மூடியவுடன் தூங்குகிறானே? இத்தனை பிரச்சினைகளின் இடையே? எப்படிச் சமாளிக்கப் போகிறான்? ஏதாவது உதவி செய்வதா? அவனுடைய சிக்கல்களைச் சிந்தித்துக் குழம்பி என் தூக்கத்தைத் தொலைத்தேன்.

குரோம்பேட்டையில் நிற்கவேண்டி வண்டி வேகம் குறையத் தொடங்கியது. முரளியை எழுப்பி விடைபெற எண்ணி அவனைப் பார்த்தேன். கவலையில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தான். முகத்தில் சிறு புன்னகை கூட அரும்பியிருந்தது. இவனுக்கெல்லாம் எதற்கு நிம்மதி? அனந்தராமனின் கவலைக்குப் பொருளில்லை என்பது பொட்டில் அடித்தது. தந்தை மகன் இருவரின் தர்மமும் சற்றே புரிந்தது போல் பட்டாலும்.. தர்மமோ நம்பிக்கையோ ஏதோ ஒன்று இவனைத் தொடர்ந்து நடத்திச்செல்லும் என்பது தெளிந்தது. என் தொடர்பு விவர அட்டை ஒன்றை அவன் சட்டைப்பையில் செருகி, இறங்குவதற்காக எழுந்தேன்.