2015/02/22

காதலன்பாகாதலன் உந்தன் கவித்தேன் கவனித்தேன்
போதாதுன் பாத்தேன் பருகினேன் - காதல்
மயக்கத்தில் ஊறுந்தேன் உன்னிடம் தந்தேன்
தயங்காமல் வந்தருந் தேன்.

காதலுக்குக் கண்ணில்லை கண்ணா எனதழகை
ஆதலால் உன்கைவிரல் பட்டறிவாய் - காதலில்நீ
தொட்டதை நானறியத் தோதாக விட்டுப்போ
பட்டுதடு பட்டத் தடம்.

நித்தமும் பேசுவோம் சத்தமாய்க் கூடுவோம்
பித்தராய்க் காணுவோம் பேரின்பம் - முத்தமிட்டு
பேசும் மொழிகளின் ஓசையை மிஞ்சுமே
வீசிய கூடலின் மூச்சு.

ன்னுடலும் உன்னுடலும் ஒட்டும் உறவிலே
இன்ப வெளிகள் தினந்திறக்கும் - என்றாலும்
என்னுயிரில் உன்னுயிர் சேரும் உறவில்தான்
உன்மத்த ஆழம் பிறக்கும்.

னிவாய் நிதமும் நெருங்கிப் பதிப்பாய்
கனிவாய் உதட்டிலே முத்தம் - பனியாய்
விலகும் தனிமை நரகம் இனிமை
உலகம் நமதே இனி.

பொன்னோ புதுப்புடவைப் பூவோ தரவேண்டாம்
அன்பை அளித்துத் தினங்கொஞ்சு - என்னை
மதித்து மனமொன்றி நீவாழ்ந்தால் உன்னைத்
துதிக்கும் தமிழாலென் நெஞ்சு.

2015/02/14

காதலிப்பா


ட்டிக் கரும்பே கனியினிமைக் காதலியே
ஒட்டிக் களிக்கலாம் வாகண்ணே - இட்டு
எழுதலாம் முத்தக் கவிதை தடைகள்
முழுதும் துறந்து விடு.

னியோர் விதிசெய்வோம் இன்பமாய் வாழ்வோம்
நனிவகையில் கூடிக் களிப்போம் - தனிமையில்
யாரும் அறியாமல் ஒன்றுபட்ட நம்முறவை
ஊரும் அறியுமே இன்று.

முனிவோரும் பெறா ரகசிய முக்தி
இனியோர் கணமும் பெறலாம் - கனிவாகத்
தொட்டால் மலரும் மதுமொட்டில் என்னதரம்
பட்டால் தெறிக்குமே தேன்.

முத்த மையினால் காதல் மடலொன்று
பித்தனென் மார்பில் எழுதிவிடு - நித்தம்
புதுக்காதல் செய்திதரும் உன்னுடலை நானும்
மெதுவாய்ப் படிக்க விடு.

னிப்பாலில் தேன்கலந்தக் கன்னலின் சாறுன்
இனிப்பான முத்தமிதைச் சொல்லும் - கனிபிழிந்தப்
பாலில் கலக்கும் கரும்புத்தேன் போலநாம்
மேலும் ஒன்றாவோம் என்று.

ன்றாகும் வேகமெலாம் நின்றாலும் என்கண்ணே
நன்றாகும் நாளெல்லாம் மோகமது - என்றமிழ்
யாப்பினும் மேலாய்ச் சுரந்திடும் நம்காதல்
தோப்பினில் மோக மது.