2010/06/25

முதலில் பெண்; அடுத்தது காமம்த்து நாள் காட்டுக்குப் போயிருந்தேன். உண்மையிலேயே காடு. இணையம், தொலைபேசி எதுவுமே கிடையாது. அவசரத்துக்கு மட்டும் செல்போன். அதுவும் பாதி நேரம் வேலை செய்யவில்லை. வனவாச அனுபவத்தை இன்னொரு பதிவில் எழுதுகிறேன். காட்டின் தனிமையில் நான் படித்தவை பற்றியது இந்தப் பதிவு.

அதான் இப்படி இடுகைத் தலைப்பு. ஹிஹி.

'பெண்', நான் எதிர்பாரா விதத்தில் என்னைத் தாக்கியக் கவிதை. இந்த வருடத்தொடக்கத்தில் சென்னை சென்றிருந்த போது வாங்கிப் படிக்காமல் வைத்திருந்த பல புத்தகங்களிலிருந்து எடுத்துச் சென்ற காலச்சுவடு இதழில் படித்தது. மாயா ஏஞ்சலோவின் ஆங்கிலக் கவிதை - குவளைக்கண்ணனின் மொழிபெயர்ப்பிலிருந்து மாதிரிக்கு:
உனது கசந்த திருகலான பொய்களால்
வரலாற்றில் என்னைக் கீழ்மைப்படுத்தி எழுதிவிடலாம்
என்னைப் புழுதியில் தள்ளி மிதித்து விடலாம்
ஆனால் இருந்தும், புழுதியைப் போல் நான் எழுவேன்.

எனது செருக்கு உன்னைக் காயப்படுத்துகிறதா?
எனது புழக்கடையில் தங்கச் சுரங்கங்களை
தோண்டிக் கொண்டிருப்பதைப் போல
நான் சிரிப்பதை உன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை அல்லவா?

எனது கவர்ச்சி உன்னை நிலைகுலைக்கிறதா?
எனது தொடைகளின் சந்திப்பில்
வைரங்கள் வைத்திருப்பது போல் நான் நடனமாடுவது
அதிர்ச்சியடைய வைக்கிறதா?

உனது சொற்களால் என்னைச் சுட்டு வீழ்த்தலாம்
உனது கண்களால் என்னை வெட்டி விடலாம்
உனது வெறுப்பால் என்னைக் கொன்று போடலாம்
ஆனால் இருந்தும், காற்றைப் போல நான் எழுவேன்.
குவளைக் கண்ணனின் தமிழ் வடிவம் தைக்கிறது. மாயாவின் ஆங்கிலத் தொகுப்பு ஒன்று வீட்டில் இருக்கிறது. தூசி தட்ட வேண்டும்.

காமத்திற்கு வருகிறேன்.

நியூயோர்க் பொது நூலகமும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகமும் இணைந்து தத்துவம், இலக்கியம், அறிவியல், சமூகவியல், பொருளாதாரம் என்று பல்வேறு தலைப்புகளில் அந்தந்த இயலின் தலைசிறந்த அறிஞர்களை அழைத்துத் தொடர் சொற்பொழிவாற்றச் செய்து பின்னர் புத்தகமாக வெளியிடுகிறார்கள். நூறு வருடங்களாக இதைச் செய்து வருகிறார்கள். சமீபகால சொற்பொழிவுகள் வாழ்வியல், சமூகவியலை ஒட்டி அமைந்திருப்பதன் காரணத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. வாழ்வியல் அடிப்படையில் ஆற்றப்பட்ட சொற்பொழிவுகளின் தொகுப்பாக ஒரு புத்தகத்தை என்னுடன் காட்டுக்கு எடுத்துச் சென்றிருந்தேன். ஏழு பெரும்பாவங்களில் ஒன்றாகச் சொல்லப்படும் 'காமம்' என்பதைப் பற்றியப் புத்தகம். சைமன் ப்ளேக்பர்ன் காமத்தைப் பற்றி ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு. (LUST | Simon Blackburn | New York Public Library/ Oxford University Press Lecture Series).

அவருடைய வாழ்வியல் புத்தகம் இன்னொன்றை (Being Good: An Introduction to Ethics) முன்பே படித்திருந்ததாலும், இந்தப் புத்தகத்தின் கரு பலானதாக இருப்பதாலும் எடுத்துச் சென்றிருந்தேன். இதையெல்லாம் ஆளில்லாத இடத்தில் தான் படிக்க முடிகிறது. என்ன செய்ய? அறிவை வளர்க்கத்தான் படிக்கிறேன் என்றாலும் முறைக்கிறார்கள்.

Lust என்பதற்கு காமம் பொருத்தமான தமிழா தெரியவில்லை. காதல், அன்பு போன்ற உணர்வுகள் தீவிரமடையும் பொழுது காமம் என்றாவது போலும், மனதைத் தொட்டால் காதல், உடலைத் தொட்டால் காமம் என்பது போலும், புணர்ச்சி என்றாலே காமம் தான் என்பது போலும் நம்முடைய சமூக போதனையில் வளர்ந்தவன் என்ற முறையில் என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன். அந்த வகைக் கண்ணோட்டத்தில், காமம் என்பது பாவம் என்றாகிறதே? காமம் பாவமா? பாவம் புண்ணியம் இவற்றில் சற்றும் நம்பிக்கையில்லாதவன் என்ற முறையில் பாவமாவது மயிராவது என்று ஒதுக்க நினைத்தாலும், பெரும்பாலான பாவ/புண்ணிய முத்திரைகளும் கோட்பாடுகளும் மனித ஒழுக்கத்தின் காரணமாகச் சொல்லப்பட்டவை என்பதையும் உணர்ந்திருப்பதால் ஒதுக்கவில்லை.

காமம் என்பது தகாத நெறியா? காமம் என்றதுமே மனதுக்குள் ஒரு ஹைகூ படிக்கும் படபடப்பு தோன்றினாலும், முகத்தளவில் ஒரு சுளிப்பை ஏற்படுத்திக் கொள்கிறோமே, ஏன்? காதல் என்றால் நெறி, காமம் என்றால் வெறி என்பது போல் வெளியில் நடந்து கொள்கிறோமே, ஏன்? 'உன்னை இன்ன இடத்தில் முத்தமிடப் போகிறேன்' என்றால் வெறியெனப் பட்டம் கட்டும் நாம், 'உன்னை அணைத்துக் கொள்ளப் போகிறேன்' என்றால் மட்டும் நெறியென ஏற்கிறோம். ஏன்? திரைக்குள் நடந்தால் காமம் நெறியாகுமா? சட்ட சமுதாய வட்டத்துக்குள் நடந்தால் நெறி; அதே நெறி வட்டங்களின் இடையில் நடந்தால் வெறி என்கிறோம்.

மதங்களுக்குட்பட்ட பாவ/புண்ணிய கண்ணோட்டத்திலோ அல்லது மதிக்குட்பட்ட மனித நேயக் கண்ணோட்டத்திலோ எப்படிப் பார்த்தாலும், காமம் என்பது ஒரு சாதாரண உணர்ச்சியின் மிகை வடிவம் என்பது தான் உண்மை. மிகை என்பதும் இங்கே ரெலெடிவ். இதைப் புரிந்து கொண்டால் பசி தாகம் தலைவலி போல் காமத்தையும் இயல்பாகப் பழகிக் கொள்ளலாம் என்பதே புத்தகத்தின் சாரம்.

பதினைந்து சொற்பொழிவுகளின் தொகுப்பான இந்த நூற்று முப்பது பக்கப் புத்தகத்தை எடுத்தால், முடிக்காமல் கீழே வைக்க முடியவில்லை. ஆசை என்றச் சொற்பொழிவில் தொடங்கி, அமைதி (விடை) என்றச் சொற்பொழிவில் முடித்திருக்கிறார் சைமன். சொற்பொழிவுகளில் அவர் எடுத்தாண்டிருக்கும் கருத்துக்களும், எடுத்துச் சொல்லியிருக்கும் விவரங்களும் சுவை, சுவை, சுவை.

தொடக்கமே அபாரம். ஷேக்ஸ்பியரின் வரிகளுடன் தொடங்குகிறார்: before, a joy proposed; behind, a dream. எண்ணி எண்ணிக் காமுற(!) வேண்டிய வரி.

புத்தகம் முழுதும் கதைகளும் மேற்கோள்களும் ஏராளம். ஆதி மனிதனிலிருந்து ஏசு உள்பட, விக்டோரியா அரசி சேர்த்து, சமீப பில் க்லின்டன் வரை... ஒருவரை விடவில்லை. என்னைக் கவர்ந்த ஒரு குட்டிக்கதை புத்தகத்தின் தொடக்கத்தில் வருகிறது:

அலெக்சேந்தர் அரிஸ்டாடிலின் மாணவன் என்பது தெரிந்திருக்கும். அலெக்சேந்தர் பிலிஸ் எனும் நாட்டியக்காரியுடன் நெருக்கமாக இருந்த பொழுது, காமத்தின் தீமையை அரிஸ்டாடில் தன் மாணவனுக்கு விளக்கிச் சொல்லி பிலிஸை விட்டு விலகச் சொன்னாராம். அலெக்சேந்தரும் "காமம் என் குறிக்கோள்களை அடைய முடியாமல் செய்து விடும்; இனி நெருக்கமாக இருக்க முடியாது" என்று பிலிஸிடம் சொல்லி விலகினானாம். தன் ஆசிரியரான அரிஸ்டாடிலே சொல்லியிருப்பதால் இனி நெருக்கமாக இருக்க முடியாது என்றானாம். மனமுடைந்த பிலிஸ் பழி வாங்கத் தீர்மானித்தாளாம். அரிஸ்டாடில் தனிமையில் இருக்கும் பொழுதுகளில் தினமும் அவர் முன் சென்று நிர்வாணமாகவும் அரை குறை ஆடையுடனும் பல் வேறு நிலைகளில் ஆடியும் பாடியும் அவரைக் கவர முயற்சித்தாளாம். முதலில் பிலிஸைப் பொருட்டாக எண்ணாத அரிஸ்டாடில் நாளடைவில் தளர்ந்து போய், பிலிஸை நாடினாராம். தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு உடைகளைக் களைந்து பிலிஸின் முன்னே சென்று மன்றாடினாராம். அரிஸ்டாடிலின் உடலழகைக் கண்ட பிலிஸும் அவரை ஏற்றுக் கொள்வதாகச் சொல்லி, ஒரு நிபந்தனை விதித்தாளாம். இருவருமே நிர்வாணமாக இருக்கையில், அரிஸ்டாடில் பிலிஸை தன் முதுகில் ஏற்றிக்கொண்டு அலெக்சேந்தரின் தோட்டத்தை வலம் வர வேண்டும் என்பதே நிபந்தனை. அரிஸ்டாடில் தயங்காமல் உடனே அவளுடைய உடைகளைக் களையச் சொல்லி, பிலிஸை முதுகில் ஏற்றிச் சுமந்து தோட்டத்தை வலம் வந்தாராம். பிலிஸ் கேட்டுக் கொண்டிருந்தபடி அலெக்சேந்தர் அங்கே வந்து நின்றதை அவர் எதிர்பார்க்கவில்லை. ஆடை துறந்தது மட்டுமில்லாமல், தன்னைத் துறக்கச் சொன்ன அதே பெண்ணை உடையில்லாது உப்பு மூட்டைத் தூக்கி வந்த ஆசிரியரைக் கண்டானாம்! அரிஸ்டாடிலுக்கு வெட்கமாகி விட்டதாம். ஒரு கணம் யோசித்த அலெக்சேந்தர், "நீங்கள் சொன்னது சரிதான் குருவே. காமம் படுத்தும் பாட்டை இப்போது நன்றாகப் புரிந்து கொண்டேன்" என்று பெருந்தன்மையுடன் அரிஸ்டாடிலிடம் சொன்னாலும் அன்றிலிருந்து அவரின் மாணவனாகப் பழகுவதை நிறுத்திக் கொண்டானாம்.

உலகின் ஒவ்வொரு கலாசாரத்திலும் காமத்தை எப்படி அணுகுகிறார்கள் என்பதை அருமையாகச் சொல்லியிருக்கிறார். கலைக் கண்ணோடு பார்க்க, கிளுகிளு படங்களும் உண்டு.

காமம் இல்லாமல் உடலுறவு கொள்வதும் இயற்கை என்று சொல்லும் பொழுதெல்லாம் வாதாடத் தோன்றும். உடலுறவு என்பதே காமம் என்று நம்புவதால் இந்த எண்ணம் என்கிறார். காமம் இல்லாத புணர்ச்சி பற்றிய முரண்பாட்டை, அது முரண்பாடென்றால், சந்ததி பெருக்கத்திலிருந்து மருத்துவ சோதனை வரை பல காரணங்களை எடுத்துக் காட்டி விவரமாகவும் மிக நளினமாகவும் சொல்லியிருக்கிறார். காம உணர்வு இல்லாமலே புணர்ச்சி எனும் உடல் செயல்பாட்டைப் பற்றி எழுதி, அதை காமம் எனும் 'பாவ'க் கண்ணோட்டத்திலிருந்து வேறுபடுத்திச் சொல்லியிருப்பது சுவை.

காமம் என்றதும் பொதுவில் முகம் சுளித்து தனிமையில் நாக்கைத் தொங்கப் போடும் கூட்டம் தன்னம்பிக்கையில்லாத கூட்டம் என்கிறார். காமம் இயற்கை மட்டுமல்ல அவசியம் கூட என்று சொல்கிறார். காமம் புணர்ச்சியில் முடியவேண்டிய அவசியமில்லை என்பதையும் அடிக்கடி எடுத்துச் சொல்கிறார். மேற்சொன்ன அரிஸ்டாடில் கதை ஒரு உதாரணம்.

இன்றைக்குக் காமம் என்றால் பாவம் என்று நடுங்குவதற்குக் காரணம், கிறுஸ்தவ மதம் தான் என்கிறார். கிறுஸ்தவ மதம் உலகெங்கும் பரவத்தொடங்கிய ஆயிரம் ஆண்டுகளில் இத்தகைய எண்ணம் உலகத்தின் மற்ற மத/சமூகங்களிலும் பரவியது என்கிறார். ஒழுக்கம் என்பது எல்லா மதங்களிலும் அடிப்படை நெறியாகச் சொல்லப்பட்டிருப்பதால் கிறுஸ்தவ நெறியான 'காம அடக்கம்' மெள்ள எல்லா சமூகங்களிலும் ஒரு மதக் கோட்பாடாக ஏற்றுக் கொள்ளப்பட்டது என்கிறார். காமத்தையும் சேர்த்து ஏழு பெரும்பாவங்கள் என்று தொகுத்திருப்பதைச் செயற்கை என்று சாடுகிறார். நூற்றுக்கணக்கான வருடங்களாக நடைபெற்று வந்த/வரும் கத்தோலிக்கப் பாதிரிகளின் முறையில்லா பாலுணர்வின் அடிப்படையே இப்படி இயல்பான உணர்ச்சியைப் பாவ முத்திரையிட்டுத் தடுத்ததனால் உருவான விகாரம் தான் என்கிறர்.

'காமம் கண்ணை மூடும்' என்று நாம் சொல்வது போல், காமத்தினால் அறிவிழந்த செயலைச் செய்யும் பொழுது மனிதன் மிருகமாகிறான் என்று சொல்கிறார். காமம் என்பது இயல்பான உணர்ச்சி என்று உணர்ந்து பழகும் பொழுது 'கண்ணை மூடி மிருகமாகிற' சாத்தியங்கள் குறைகின்றன என்று சொல்லி முடிக்கிறார்.

முதிர்ந்த வாசகருக்கான புத்தகம். கண்களோடு மனதையும் திறந்து வைத்துக் கொண்டு படிக்க வேண்டிய புத்தகம்.

2010/06/11

நிழலின் ஒளிஅயர்ச்சி.
அப்போது பூத்த மலர் உடனே வாடுவது போல் அயர்ச்சி.
காற்றிலே வெப்பம். கண்களில் இருள்.
அமர்ந்திருந்தேன். அருகில் வந்தது ஒளி.
பேசும் ஒளி ஏனென்றது.
கவலை என்றேன்.
அடித்து நொறுக்கும் அப்பனிடமிருந்து விடுதலை கிடைக்காதா?
ஒளி மௌனமானது.
கண்களை மூடினேன். இருளைக் காணவில்லை.
காற்று வீசியது.
அடுத்த வாரம் அப்பன் இறந்தான்.

தளர்ச்சி.
அப்போது சேர்த்த ஊட்டம் உடனே கரைவது போல் தளர்ச்சி.
காற்றிலே வெப்பம். கண்களில் இருள்.
அமர்ந்திருந்தேன். அருகில் வந்தது ஒளி.
பேசும் ஒளி ஏனென்றது.
கவலை என்றேன்.
எத்தனை படித்தும் வேலை கிடைக்கவில்லையே?
ஒளி மௌனமானது.
கண்களை மூடினேன். இருளைக் காணவில்லை.
காற்று வீசியது.
அடுத்த வாரம் வேலை கிடைத்தது.

அதிர்ச்சி.
அப்போது பறித்த கனியை அடுத்தவன் பிடுங்கும் அதிர்ச்சி.
காற்றிலே வெப்பம். கண்களில் இருள்.
அமர்ந்திருந்தேன். அருகில் வந்தது ஒளி.
பேசும் ஒளி ஏனென்றது.
கவலை என்றேன்.
காதலித்தப் பெண்ணுக்கு இன்னொருவனை முடிக்கிறார்களே?
ஒளி மௌனமானது.
கண்களை மூடினேன். இருளைக் காணவில்லை.
காற்று வீசியது.
அடுத்த வாரம் காதலியுடன் ஓட்டம்.

உழற்சி.
அப்போது படித்த தமிழ் உடனே மறப்பது போல் உழற்சி.
காற்றிலே வெப்பம். கண்களில் இருள்.
அமர்ந்திருந்தேன். அருகில் வந்தது ஒளி.
பேசும் ஒளி ஏனென்றது.
கவலை என்றேன்.
பாசப் பிள்ளைகளுக்கு பகிர்ந்தளிக்கச் செல்வமில்லையே?
ஒளி மௌனமானது.
கண்களை மூடினேன். இருளைக் காணவில்லை.
காற்று வீசியது.
அடுத்த வாரம் லாட்டரியில் பரிசு.

அதிர்ச்சி.
அப்போது பிறந்த உயிர் உடனே பிரிவது போல் அதிர்ச்சி.
காற்றிலே வெப்பம். கண்களில் இருள்.
அமர்ந்திருந்தேன். அருகில் வந்தது ஒளி.
பேசும் ஒளி ஏனென்றது.
கவலை என்றேன்.
அன்பு மனைவியின் நோய் என்று தீரும்?
ஒளி மௌனமானது.
கண்களை மூடினேன். இருளைக் காணவில்லை.
காற்று வீசியது.
அடுத்த வாரம் மனைவியின் மரணம்.

தளர்ச்சி.
அப்போது குடித்த நீர் உடனே வரண்டது போல் தளர்ச்சி.
காற்றிலே வெப்பம். கண்களில் இருள்.
அமர்ந்திருந்தேன். அருகில் வந்தது ஒளி.
பேசும் ஒளி ஏனென்றது.
கவலை என்றேன்.
எத்தனை சிறந்தும் எத்தனை வளர்ந்தும் கவலை தீரவில்லையே?
ஒளி சிரித்தது.
கண்களை மூடினேன். இருள்.
காற்று நின்றது.
அடுத்த வாரம் இன்னொரு யுகம்.

அயர்ச்சி.

2010/06/03

மெல்லிசை நினைவுகள்

குருட்டு ஆய்வுவித்தகர் சேர்க்கை யினால் இசை முத்திரையாய் வரும்
சித்திரப் பூவிழியோ - இது
எல்லார் ஈசுவரி அவள் வல்லார் சுசீலாவுடன் தரும்
இல்லாப் புதுமலரோ?

எம்எஸ்வி-9 | 2010/06/03 | சித்திரப் பூவிழி